Wednesday, 8 May 2013

 இசை விரும்பிகள் VI - நிற்காத மழை 


       பதினைந்து ஆண்டுகளாக தமிழ்த் திரையில் பல சிலிர்ப்பான இசை அலைகளை உருவாக்கிய விஸ்வநாதன்-ராமமூர்த்தி கூட்டணி 65 இல் வந்த ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்துடன் பிரிந்தது. காதலிக்க நேரமில்லை படத்தில் ஸ்ரீதர்  கூறிய பல மாறுதல்களுக்கு  டி கே ராமமூர்த்தி மறுத்ததால் அவருக்கும் ஸ்ரீதருக்கும் இடையில் மனக் கசப்பு ஏற்பட்டு அது விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பிரிவுக்கு வித்திட்டது என்று ஒரு கருத்து உண்டு.  இதற்கு கண்ணதாசனின் ஆதரவும் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால்  அவர்கள் பிரிவுக்கு இதுவரை என்ன காரணம் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. இந்தப் பிரிவுக்குப் பின் விஸ்வநாதன் தனியாக தன் இசைப் பயணத்தை தொடர்ந்த போது பலர் விஸ்வநாதனால் வெற்றி பெற முடியாது என்றும் அவர் அதிக நாட்கள் இசைத் துறையில் தாக்குப் பிடிக்க மாட்டார் என்றும் கணித்தார்கள்.மெல்லிசை ஒய்ந்து விட்டது மீண்டும் வராது என்று சிலர் ஜாடையாகப் பேசினார்கள். ஆனால் நடந்ததோ வேறுகதை. எம் எஸ் வி  அந்த ஆருடங்களையெல்லாம்  துகள் துகள்களாக உடைத்தது மட்டுமல்லாது மேலும்  ஒரு இருபது ஆண்டுகள் தமிழ்த் திரையில் வெற்றிகரமாக வலம் வந்தார். சிலர் சொல்வதைப் போல 76 இல் இளையராஜா  வந்ததும் எம் எஸ் வியின் காலம் முடிந்து போய்விடவில்லை. உண்மையில் அவர் 76 முதல் 83 வரை இசை அமைத்த படங்களின் எண்ணிக்கை ; 26(76), 24(77), 30(78), 24(79), 18(80), 23(81), 25(82), 18(83). இந்த எண்ணிக்கை சற்று தவறாக இருக்கலாம்.அதாவது படங்களின் எண்ணிக்கை  அதிகமாக  இருக்க வாய்ப்புள்ளது.

     பொதுவாக பழைய பாடல்கள் என்றாலே சில முன்தீர்மானித்தல்கள் நம்மிடையே உண்டு. உதாரணத்திற்கு பாடல் என்றால் எம் எஸ் வி, கவிதை என்றால் கண்ணதாசன்.நல்ல படம் என்றால் பீம்சிங். இது அறியாமையினால் உண்டான கருத்து, இது உண்மை இல்லை என்றாலும் இப்படிப்பட்டஆயத்த   எண்ணங்கள் ஒருவருக்கு ஏற்பட என்ன காரணம்? காரணம் வெகு சுலபமானது. இவர்கள் தமிழ் கிளாசிக் யுகத்தின் பிரதான முகமாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டார்கள் என்பதே அது. எம் எஸ் வி யோ,கண்ணதாசனோ, சிவாஜியோ, டி எம் எஸ்ஸோ, சுசீலாவோ அந்த இனிமையான யுகத்தின் குறியீடுகளாகவே மக்களுக்கு தோன்றுகிறார்கள். சிலர் தவறாக குறிப்பிடும்போது நான் திருத்த நேர்ந்த சமயங்களில் அவர்கள் சொல்வது இதுதான்:"எம் எஸ் வி ன்னா எம் எஸ் வி கிடையாது. கே வீ யாகக் கூட இருக்கலாம்.  அது  அந்த காலம் என்று  அர்த்தம் ". இதுதான் நிதர்சனம். நான்கூட என் சிறு வயதில் கேட்ட பல பாடல்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி யின் படைப்பாக இருந்தாலும் இலகுவாக எம் எஸ் வி பாடல் என்றே தீர்மானிப்பேன். இதை நான் மட்டும் செய்யவில்லை என்பதை பின்னர் தெரிந்து கொண்டேன்.

         விஸ்வநாதன்- ராமமூர்த்தியின் பிரிவு தமிழ்த் திரையிசையில் ஒரு வெற்றிடத்தை உண்டாக்கியது. அதை இருவராலுமே பின்னாட்களில் நிரப்ப முடியவில்லை என்பது கண்கூடாக நாம் கண்ட உண்மை .விஸ்வநாதன் தனியாக இசை அமைத்து  வணிக ரீதியாக ராமமூர்த்தியை விட பல படிகள் மேலே இருந்தாலும் இந்த இரட்டையர்களின் இசையில் இருந்த விவரிக்கமுடியாத அந்த மந்திரச் சுவை அவர்கள்  தனிப்பாதைகளில் பயணம் செய்த போது காணப்படவில்லை. 65க்கு முன் மக்களை மயக்கிய அந்த மெல்லிசையின் ஒரு இழை 65க்குப் பிறகு அறுந்து தொலைந்து போனது.  (இந்த அறுந்த  நூலை அவர்களாலே மீட்டெடுக்க முடியாத போது அவர்களின் இடத்தை இன்னொருவர் அடைந்துவிட்டார் அதையும் தாண்டி விட்டார் என்று சொல்வதெல்லாம் ஒரு அலங்காரமான பேச்சு. அவ்வளவே.)
 
          விஸ்வநாதன்-ராமமூர்த்தி சேர்ந்து அமைத்த பாடல்களில் இருந்த இனிமை அவர்கள் தனித்தனியாக இசை அமைத்தபோது இருந்ததா என்றால் கண்டிப்பாக இல்லை.இரண்டிற்கும் வித்தியாசம் இருந்தது. அதுவே நியாயமும் கூட. அப்படி இல்லையென்றால்  இத்தனை சிறப்புகளும் ஒருவருக்கே உரியதாகிவிடும் அபாயம் இருக்கிறது. இந்த வித்தியாசமே அவர்களின் இசையை சிறப்புச்  செய்கிறது.  ஆனால் இந்த வேறுபாடு  எளிதில் உணரப்படாத அளவில் ஒரு மிக மெல்லிய சப்தம் குறைந்த ஸ்வரம் போலவே இருந்தது. தீவிர இசை விரும்பிகள் மட்டுமே இதை அடையாளம் கண்டுகொண்டனர்.

                65இல் எம் எஸ் வி  கலங்கரை விளக்கம் என்ற படத்திற்கு முதல் முறையாக தனியாக இசை அமைத்தார்.( இந்தச் செய்தி தவறாக இருப்பின் இதைத் திருத்தலாம்) இந்தப் படத்தில் எம் எஸ் வி யின் பாடல்களை சற்று பாருங்கள்; சங்கே  முழங்கு,காற்று வாங்க போனேன்,பல்லவன் பல்லவி,பொன்எழில் பூத்தது, என்னை மறந்ததேன். எல்லா பாடல்களுமே வெகு பிரசித்தி பெற்றவை.  மெல்லிசை என்றால் எம் எஸ் வி என்பதை  மீண்டும் ஒருமுறை நிறுவிய பாடல்கள் இவை. அதன் பின் எம் எஸ் வி அந்த ஆண்டில் இசை அமைத்த படங்கள் :

குழந்தையும் தெய்வமும் (நான் நன்றி சொல்வேன், அன்புள்ள மான்விழியே,குழந்தையும் தெய்வமும், என்ன கோபம் சொல்லு பாமா, பழமுதிர்ச் சோலையிலே, கோழி ஒரு கூட்டிலே)
நீலவானம் (ஒ லிட்டில் பிளவர்,ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே,)
பஞ்சவர்ணக்கிளி (தமிழுக்கும் அமுதென்று,கண்ணன் வருவான்,அழகன் முருகனிடம்,)
பழனி ( ஆறோடும் ,உலகத்திற்குள்ளே)
பூஜைக்கு வந்த மலர்(பளிங்கு மேடையிட்டு , கால்கள் நின்றது)

       குறிப்பாக அன்புள்ள மான்விழியே, ஓடும் எண்ணங்களே, கண்ணன்  வருவான், தமிழுக்கும் அமுதென்று போன்ற பாடல்களைக் கேட்கும் பொழுது, விஸ்வநாதன்-ராமமூர்த்தி  பிரிவின் சுவட்டை நாம் காணவே  முடியாது. அவர்களின் இணைந்திருந்த காலத்தின்  இனிமையான   இறுதி வாசம் இந்தப் பாடல்களில் மிச்சமிருப்பதை நாம் நுகரலாம். அவர்கள் சேர்ந்திருந்த காலத்தில் அமைத்த பல மெட்டுக்களை எம் எஸ் வி 65 க்குப் பிறகு சில படங்களில் பயன்படுத்திக்கொண்டதாக சிலர் சொல்கிறார்கள். இது உண்மையா என்று ஆராய நான் முற்படவில்லை. இருக்கலாம்... ஒரு வேளை.

         66 இல் எம் எஸ் வி இசையில் வந்த  சில முக்கியமான படங்கள்:
அன்பே வா,( நான் பார்த்ததிலே,அன்பே வா, லவ் பேர்ட்ஸ்,ராஜாவின் பார்வை,ஏய் நாடோடி, புதிய வானம்)
ராமு,(நிலவே என்னிடம்,பச்சை மரம் ஒன்று,)
பறக்கும் பாவை,(கல்யாண நாள் பார்க்க,முத்தமோ மோகமோ,யாரைத்தான் நம்புவதோ,உன்னைத்தானே,நிலவெனும் ஆடை)
சந்திரோதயம்,(புத்தன் ஏசு காந்தி,சந்திரோதயம்,எங்கிருந்தோ ஆசைகள்,)
சித்தி,(சந்திப்போமா,காலமிது காலமிது)
கொடி மலர்,(மௌனமே பார்வையால்,)
மோட்டார் சுந்தரம் பிள்ளை,(காத்திருந்த கண்களே, காதல் என்றால் என்ன)
பெற்றால்தான் பிள்ளையா?( நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி,செல்லக்கிளியே, கண்ணன் பிறந்தான்)

            

      அன்பே வா படத்தின் பாடல்கள் மிக இனிமையாக உருவாக்கப்பட்டு பெருத்த வரவேற்பைப் பெற்றன.எம் எஸ் வி வணிக ரீதியில் முன்னேறத் துவங்கினார். இதே சமயம் ராமமூர்த்தியும் சாதுமிரண்டால்,குமரிப் பெண், மெட்ராஸ் டு பாண்டிச்சேரி,தேன் மழை,ஆலயம்,நான்,பட்டத்து ராணி போன்ற படங்களுக்கு இசை அமைத்தார். அவர் தொடர்ந்து இசைஅமைத்த படங்களின் எண்ணிக்கை சொற்பமாகவே இருந்தது.தங்கச் சுரங்கம், கண்மலர் போன்ற படங்களிலும் அவரின் பங்களிப்பு இருந்தது. இருப்பினும் விஸ்வநாதனின் இமாலய பாய்ச்சலுக்கு முன் அவரால் ஈடு கொடுக்க முடியவில்லை. ஒரு பண்பட்டகலைஞனாகிய  ராமமூர்த்தி தானாகவே இசைத் துறையை விட்டு அகன்று சென்று விட்டார். இரட்டையர்கள் இருவரும் பிரிவுக்குப் பின் மற்றொருவரை எந்த சந்தர்ப்பத்திலும் குறைத்தோ அல்லது இழிவாகவோ விமர்சனம் செய்ததே கிடையாது.

           60 களின் இறுதியில்  கே வீ மகாதேவன்,விஸ்வநாதன்,வீ குமார், சங்கர்-கணேஷ்,ஜி கே வெங்கடேஷ்,வேதா போன்ற இசைஞர்கள் தமிழ்த் திரையில் இருந்தார்கள்.இதில் எம் எஸ் வி க்கும்  கே வீ எம்முக்குகே போட்டி நிலவியது.எம் எஸ் வி அன்பே வா கொடுத்தால் கே வீ எம் தில்லானா மோகனாம்பாள் கொடுத்தார். முன்னவர் அபூர்வ ராகங்கள்   பாடினால் பின்னவர் சங்கராபரணம் பாடினார்.எழுபதுகள் வரை தமிழிசையின் தரம் நிமிர்ந்தே இருந்தது.
           
       ஹிந்தியில் ஷம்மிகபூர் நடித்து பெரிய வெற்றியைப் பெற்ற பிரம்மச்சாரி தமிழில் எங்க மாமா என்று மாறியது. இதன் பாடல்கள் எம் எஸ் வி யின் மெல்லிசைக்கு மற்றொரு மகுடமாயின. "செல்லக் கிளிகளாம் பள்ளியிலே"  பாடலின் இசைக்கோர்ப்பு, டி எம் எஸ் சின் அடக்கி வாசிக்கும் தாலாட்டும் குரல், பாடலின் ஏற்ற இறக்கங்கள் இந்தப் பாடலை  நம் ஞாபக அடுக்குகளில் சேமித்து வைத்து விடுகிறது. "எல்லோரும் நலம் வாழ" என்ற பாடல் இப்போது அரிதாகி விட்ட நேர்த்தியான மேற்கத்திய இசையின் தமிழ்ப் பதிப்பு என்றே சொல்லலாம். பாடலில் வரும் கோரஸ், அந்த பியானோ இசை எல்லலாமே ஒன்றைவிட்டு மற்றொன்று மீறிச் செல்லாமல் ஒருங்கே அழகாக ஒலிப்பது நம் காதுகளுக்கு  ஆனந்தமாக இருக்கும்.தமிழ்த்திரையிசையில் பியானோவை எம் எஸ் வி போல் அழகாகவும் இனிமையாகவும் பயன்படுத்தியது வேறு யாரும் இல்லை என்பது தெளிவு. இதை விட மேற்கத்திய இசையை தமிழுக்கு ஏற்றாற்போல் வடிவமைத்து கொடுத்ததில் எம் எஸ் விக்கு  இணையாக வேறு ஒருவரை நாம் குறிப்பிடமுடியாது என்பதையும் இங்கே நான் பதிவு செய்கிறேன். மேலும் இந்த கோரஸ் எம்    எஸ் வி காலத்தோடு முடிவு பெற்று விட்டது. இதன் பிறகு வந்ததெல்லாம் வேறு மாதிரியான ஓசைகள்.

    பாமா விஜயம் படத்தில் வரும் பிரசித்தி பெற்ற வரவு எட்டணா பாடல் மேற்கத்திய ராக் அண்ட் ரோல் பாணியில் அமைக்கப்பட்ட ஆனால் நம் தமிழ் இசையின் அடிப்படைக் கூறுகள்  எந்த விதத்திலும் பாதிக்கப்படாத  வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு இனிமையான பாடல். ஆங்கில  ராக் அண்ட் ரோல் இசையில் பரிச்சயம் உள்ளவர்களுக்கு இது நான்றாகத்  தெரியும்.  எம் எஸ் வி யின் மெல்லிசையில் இது போன்று பெரிதாக அலட்டிக்கொள்ளாத மேற்கத்திய இசையின் இழைகள் ஊடுருவிச் செல்வதை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் புரிந்துகொள்ளலாம்.அடிப்படையில் இவை தமிழிசையாக இருந்தாலும் மேற்கத்திய இசை ஒரு அடிநாதமாக பாடல் முழுவதும் இருப்பதை உணரலாம்.

      மேலும் சில மேற்கத்திய பாணிப் பாடல்கள் இதோ:

எங்கிருந்தோ ஆசைகள், - சந்திரோதயம்
என்னைத் தெரியுமா- குடியிருந்த கோவில்
நான் பார்த்ததிலே, -அன்பே வா
பாடுவோர் பாடினால்,-கண்ணன் என் காதலன்
நான் நன்றி சொல்வேன்,-குழந்தையும் தெய்வமும்
காத்திருந்த கண்களே,-மோட்டார் சுந்தரம் பிள்ளை
உழைக்கும் கைகளே,-தனிப்பிறவி
உலகமெங்கும் ஒரே மொழி,-நாடோடி
தங்கங்களே நாளைத் தலைவர்களே -அவன் ஒரு சரித்திரம்
தேடினேன் வந்தது-ஊட்டி வரை உறவு
காதல் காதல் என்று பேச-உத்தரவின்றி உள்ளே வா (மிக அருமையாக இசைக்கப்பட்ட பாடல்)
நல்ல இடம்-கலாட்டா கல்யாணம்
பொட்டு வைத்த  முகமோ-சுமதி என் சுந்தரி

     அரேபிய சூபி இசை ஹிந்தியில் வெகுவாக பிரசத்தி பெற்ற ஒரு வகை இசை.கவ்வாலி என்று இதை அழைப்பார்கள். தமிழில் இது ஏற்கனவே இடம் பெற்றிருந்தாலும் (பாரடி கண்ணே கொஞ்சம்- வல்லவனுக்கு வல்லவன் இசை-வேதா) குடியிருந்த கோவிலில் வரும் "ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதில்தான்" பாடல் பெரு வெற்றியைப் பெற்றது. எம் எஸ் வி யின் இசை இந்தப் பாடலுக்கு ஒரு புதிய ஒளியைப்  பாய்ச்சியது. இந்தப் பாடலின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இதை கேட்கும் போது நமக்கே ஆடத் தோன்றும்.

          எம் எஸ் வி யின் தொடர்  வெற்றி அவரை தமிழ்த் திரையின் அசைக்கமுடியாத இசைஞராக்கியது. 60 களின் இறுதியிலும் 70 களின் துவக்கத்திலும் அவர் பாடல்கள் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இருந்தது. அவர் இல்லாத படங்கள்  வெகு சொற்பமாகவே இருந்தன. எப்படி ஐம்பதுகள் ஜி ராமனாதனின் கைகளிலும் அறுபதுகள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, மற்றும் கே வி மகாதேவன் கைகளிலும் இருந்தனவோ அதே போல எழுபதுகள் விஸ்வநாதனின் கையசைவில் இயங்கின. அவரின் பாடல்கள் 65 க்கு முன் இருந்த உச்சத்தை எட்ட முடியாவிட்டாலும் தரத்திலோ இனிமையிலோ சற்றும் கீழிறங்கவில்லை. சற்று இந்தப் பட்டியலைப் பார்ப்போம்: பாமா விஜயம் (67),ஒளி விளக்கு (68),உயர்ந்த மனிதன் (68),தெய்வ மகன் (69),சிவந்த மண் (69), சாந்தி நிலையம்(69),எங்க மாமா (70).அவளுகென்று ஒரு மனம்(71),ஞான ஒளி(72), கெளரவம்(73),

      மேற்கண்ட பத்தியில் உள்ள இரண்டு படங்களைப் பற்றி இப்போது பேசலாம். முதலாவது ஒரு பெங்காலி படத்தின் தமிழ்த் தழுவலான "உயர்ந்த மனிதன்". படத்தின் பெயரே காலத்தால் கரைக்க முடியாத ஒரு பசுமையான பாடலை நமக்கு "ஞாபகப்"படுத்திவிடுகிறது. "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே" என்ற இந்தப் பாடல் வெறும் சாதாரணமாக, சம்பிரதாயமாக ஒலிக்காமல் இயல்பான  பேச்சு வார்த்தைகளைக் கொண்டே மிகவும் ரசிக்கத்தக்க வகையில் இசைக்கப்பட்ட ஒரு அபாரமான பாடல். அதே படத்தில் வரும் மற்றொரு சிறப்பான பாடல்  "என் கேள்விக்கென்ன பதில்". இதை சிவாஜிக்கு இல்லாமல் சிவகுமாருக்கு கொடுத்ததில் பல சிவாஜி ரசிகர்கள் அப்போது கொதித்தார்கள் .(அதுவும் சரியே. சிவாஜி இந்தப் பாடலை கண்டிப்பாக வேறு  பரிமானத்திற்கு கொண்டு சென்றிருந்திருப்பார்).நாளை இந்த நேரம் பார்த்து பாடல் இன்னொரு இனிமையான விருந்து என்றால் வெள்ளிக் கின்னந்தான் அடுத்த அதிரடி. உண்மையில் எம் எஸ் வி இந்தப் படத்தில் உயர்ந்துதான் நின்றார். இன்றுவரை பலரை தூங்கச் செய்வதும், தூங்கவிடாமல் அடிப்பதும் இதே தாலாட்டுகள்தான்.

          அடுத்த படம் ஹாலிவுட்டின் பிரபலமான சவுண்ட் ஆப் மியூசிக் படத்தின் தமிழ்ப் பதிப்பான சாந்தி நிலையம். அந்த ஆங்கிலப் படத்தின் இசையின் நிழல் கொஞ்சமும் படியாமல்  அதே சமயம் மேற்கத்திய இசையையும் மெல்லிசையையும் பிசிறின்றி இணைத்து ஒன்றாக வடிகட்டி  எம் எஸ் வி இந்தப் படத்தில் அமைத்த பாடல்கள் ..சுருங்கச் சொல்லவேண்டுமென்றால் ..வெகு அற்புதம். இதோ நீங்களே பாருங்கள்.   சுசீலாவின்  இனிமையான "கடவுள் ஒருநாள் உலகைக் காண", கலாட்டா கானமான " பூமியில் இருப்பதும்", இன்னொரு மென்மையான "செல்வங்களே", எல்லோரையும் முணுமுணுக்க வைத்த  எஸ் பி பி யின் முதல் பாடலான மிகப் புகழ் பெற்ற "இயற்கை என்னும்" (எஸ் பி பிக்கு ஆயிரம் நிலவே வா பாடல் முதலில் பதிவு செய்யப் பட்டது. ஆனால் முதலில் வெளி வந்தது இந்தப் பாடல்தான்).

            சிவந்த மண் படத்தில் வரும் "ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை" பாடலுக்குள்ளே நீங்கள் பலவித மெட்டுக்கள் இருப்பதை உணர்ந்திருக்கிறீர்களா? ஒவ்வொரு சரணத்திற்கு முன்னும் இசைகோர்ப்பு வித்தியாசமாக அமைக்கப்பட்ட சிறப்பான பாடல் இது.

       இதை நான் எழுதும் காரணம் பல இளையராஜா ரசிகர்கள் அவர்கள் அறிந்ததே உண்மை என திடமாக நம்புகிறார்கள். மேலும் உண்மைகள் வெளிப்படும் போது அதை ஏற்றுக்கொள்ளாமல்  சண்டித்தனம் செய்கிறார்கள். உதாரணமாக தமிழில் இளையராஜாதான் முதன் முதலாக இடையிசையை (interlude) உருவாக்கினார் என்று ஆதாரமில்லாமல் கூறுகிறார்கள். 50களிலேயே இடையிசை நமது தமிழிசையில்  பாடலின் ஒரு அங்கமாக ஆக்கப்பட்டு, அவ்வகை இசை மெல்லிசையின் உச்ச காலங்களில் எல்லா ரசிகரின் மனதிலும் கிணற்றில் விழுந்த கல் போல படிந்துபோய் விட்டது.  இரண்டாவது இளையராஜாதான் மூன்று  சரணங்களுக்கும் வெவ்வேறு மாதிரியான இசைக்கோர்ப்பை செய்தார் என்று அவர்கள் சொல்கிறார்கள். இது ஒரு தவறான கருத்து.

       அன்றைய காலகட்டத்தில் ஒரு பாடல் இரண்டுக்கு மேற்பட்ட சரணம் கொண்டிருந்தால் முதல் சரணத்துக்கு  அமைத்த இசைக் கோர்ப்பையே மூன்றாவது சரணத்திற்கும்  வாசிப்பது ஒரு சம்பிரதாயமாகவே கடைபிடிக்கப்பட்டுவந்தது. ஆனாலும் மூன்று சரணங்களுக்கும் வெவ்வேறான இசைக்கோர்ப்பு  இளையராஜாவுக்கு முன்பே செய்யப்பட்டுவிட்டது. இதோ:

காலமகள் கண்திறப்பாள் - ஆனந்த ஜோதி, எம் எஸ் வி -டி கே ஆர்
நான் ஆணையிட்டால்-  எங்கவீட்டுப் பிள்ளை,எம் எஸ் வி -டி கே ஆர்
நினைத்தேன் வந்தாய்- காவல்காரன், எம் எஸ் வி
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து- நினைத்தை முடிப்பவன் , எம் எஸ் வி
பாடுவோர் பாடினால்-  ஒரு தாய் மக்கள் , எம் எஸ் வி
அழகே வா- ஆண்டவன் கட்டளை,எம் எஸ் வி -டி கே ஆர்
பல்லவன் பல்லவி- கலங்கரை விளக்கம் , எம் எஸ் வி
 ராஜாவின் பார்வை- அன்பே வா   , எம் எஸ் வி
நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா  , எம் எஸ் வி -டி கே ஆர்
   
    இது ஒருபிடிச்  சோறுதான். பெரும்பான்மையான எம் எஸ் வி  பாடல்கள் இப்படி அமைந்தவைதான். இது போன்ற முட்டாள்தனமான ஆதாரமில்லாத கருத்துக்களை வெளியிடுவதில் சம்பந்தப்பட்டவருக்கு என்ன நன்மை விளையப் போகிறது  என்பது தெரியவில்லை.  இசைஞானம் கொண்ட சில இளையராஜா பதிவர்களே இப்படிப்பட்டத்  தவறுகளை காணாதது போல அமைதியாக இருந்து விடுகிறார்கள். அவர்கள் நடுநிலை கொண்டு எல்லா இசைஞர்களையும் பாராட்டினாலும் இவ்வாறான பிழைகளை தங்கள் தனி மனித ஆராதனையினால் சரி செய்ய முன் வருவதில்லை. இதுவே என்னை கவலை கொள்ளச் செய்கிறது. இளையராஜா செய்த பல "இசைப் புரட்சிகள்"அவருக்கு முன்பே செய்யப்பட்டுவிட்டதை அவர்களால் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதே உண்மை. என்னுடைய அடுத்த பதிவுகளில் இளையராஜாவைப் பற்றி நிறைய எழுத இருப்பதால் இத்துடன் இதற்கு  முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

         சம காலத்து இசையை எல்லோரையும் போல கேட்டுக்கொண்டிருந்த நான்  திடீரென எனக்கு  பின்னே இருந்த இசையை நோக்கி சென்றது எப்படி என்ற கேள்வி எனக்குள் எழுவதுண்டு.இதற்கான பதிலை ஒரே வரியில் இங்கே சொல்லிவிட இயலாது. இது நடந்தது படிப்படியாக. நான் என் சிறுவயது முதலே சில "பழைய" பாடல்களை கேட்டிருந்தாலும் அவை என்னிடம் பெரிய தாக்கத்தை உண்டாக்கவில்லை. உண்மை இப்படி இருக்க சில பாடல்கள் அதன் காலத்தைத் தாண்டி என் மனதை ஊடுருவிச் சென்று ஒரு புதிய எண்ணத்தை  என்னிடம் உருவாக்கின.அதன் படி இருவகையான இசைவகைகளே இங்கு நமக்கு முன் இருக்கின்றன என்பதை நான் தெரிந்துகொண்டேன்.முதலாவது நல்ல இசை. அது நம்மை மகிழ்ச்சியூட்டக்கூடியது.நம் கற்பனைக்கு இந்த இசை உந்துதலாக இருக்கிறது.  இது எந்தக் காலத்தை சேர்ந்ததாகவும் இருக்கலாம்.ஆனால் அது முக்கியமல்ல.
   
        இரண்டாவது மோசமான இசை. இது நமக்குள் எதிரான,விகாரமான  எண்ணங்களை ஏற்படுத்தி ஒரு கோட்டிற்கு மேல் அவ்விதமான இசையை கேட்கமுடியாமல் செய்துவிடுகிறது. மேலும் ஒரு நிலைக்குப் பிறகு இவ்வகைப் பாடல்களின் இசையையோ கவிதையையோ நாம் கேட்பதில்லை மாறாக இது ஒரு ஒசையாகவே நமக்கு ஒலிக்கிறது.  இந்தத் தீர்மானித்தலின் படி நான் அதுவரை கேட்டுக்கொண்டிருந்த இசை எனக்கு அலுப்பைத் தந்தது. அந்த இசையில் நான் எதையும் புதுமையாக உணரவில்லை. என்னைச் சுற்றி இருந்த என் நண்பர்கள்  அதை புகழ்ந்த போதும் எனக்கு அந்த இசை தரமில்லாததாகவே தோன்றியது. அதன் இசைக்கோர்ப்பா அல்லது பாடல் வரிகளா என்று பிரித்துச் சொல்லமுடியாதபடி எங்கோ என் சம காலத்து இசை என்னை முட்டாளாக்கியது.அதை  தெரிந்து கொள்ளும் முன்பே அதைத் தாண்டி ஆங்கில இசைக்கு நான் வந்துவிட்டேன்.மேற்கத்திய இசையின் பலவித பரிமாணங்களை தேடிப்பிடித்துக்  கொண்டிருந்த அதே சமயத்தில் இங்கே தமிழ் இசையில் எந்தவிதமான முன்னேற்றமும் இனங்காணப்படவில்லை என்பதையும் அறிந்துகொண்டேன். அப்போதே கீழ்க்கண்ட  இந்தப் பாடல்களை வேறு நிலையில் கேட்டிருந்தால் ஒருவேளை என் எண்ணங்கள் மாறியிருக்கலாம்.

   சொன்னது நீதானா?-நெஞ்சில் ஓர் ஆலயம்,எம் எஸ் வி-டி கே ஆர். இந்தப் பாடல் ஒரு அதிசயம் என்றே சொல்வேன். பாடல் முழுவதும் நாம் கேட்பது சுசீலாவின் துயரக் குரலைத்தான். இருந்தும் அந்தக் குரலில்தான் எத்தனை உணர்சிகள்,எத்தனை தாம்பத்ய ரகசியங்கள், எத்தனை வேதனைகள், எத்தனை கண்ணீர்த்  துளிகள்? சுசீலாவின் குரலுக்குப் போட்டியாக ஒலிக்கும் அந்த அபாரமான மிருதங்க இசை கேட்பவரை வேறு எதையும் சிந்திக்கமுடியாதபடி  உறையச் செய்துவிடுகிறது. சட்டென ஒரு அழுகையுடன்  முடியும் இந்தப் பாடல் இன்றுவரை உடைக்கப்படாத வரலாறாகவே இருக்கிறது எந்த விதத்திலும்.
.
      அனுபவம் புதுமை- காதலிக்க நேரமில்லை, எம் எஸ் வி-டி கே ஆர். நான் மேற்கத்திய இசையில் கவனம் செலுத்திக்  கொண்டிருந்தபோது கேட்ட இந்தப் பாடல் என் கன்னத்தில் அறைந்து சென்றது. என் சம காலத்து இசையில் கூட இல்லாத இந்தப் புதிய  இசைமுறை  பல கேள்விகளை எனக்குள் விதைத்தது.முதல்  முறையாக எம் எஸ் வி  என்னும் ஒரு மகா ஆளுமையைப்  பற்றி சிந்திக்கத் துவங்கினேன்.

      மலர்ந்தும் மலராத-பாசமலர் , எம் எஸ் வி-டி கே ஆர். முதன் முதலாக டேப் ரெகார்டர் வாங்கியபோது என் தந்தையின்  நண்பரொருவர் இந்தப் பாடலைப்  பாடி தன் குரலை பதிவு செய்தார். அந்த டேப் என்னிடம் இல்லை ஆனால் அந்த அனுபவம் அப்படியே என்னுள் தங்கிவிட்டது. பாடல் முடியும் போது அவர் அழுதது என்னைத்  திகைக்க வைத்தது. பல வருடங்கள் கழித்து இந்தப் பாடலை தனிமையில் கேட்டபோது எனக்குப் புரிந்தது ஒன்று. அவர் அழுகாமல்  இருந்திருக்க வாய்ப்பில்லை.

       யார் அந்த நிலவு?-சாந்தி, எம் எஸ் வி-டி கே ஆர்.  இந்தப் பாடலுக்கு சிவாஜியே வழக்கத்துக்கு மாறாக நீண்ட அவகாசம்  எடுத்துக்கொண்டதாக ஒரு செய்தி உண்டு.. இது மேற்கத்திய இசையா அல்லது மெல்லிசையா என்று கேட்பவர் வியப்படையும் பாடல். டி எம் எஸ் தன் குரலினாலேயே நடித்துவிடுவதாக ஒரு பேச்சு இருக்கிறது . "தெய்வமே" என்று அவர் பாடுவதும் அதை தொடரும் ஹம்மிங்கை கேட்கும்போது அது உண்மைதான் என்று தெரிகிறது. I would rather say that this song is far ahead of its time.

         கண்ணன் என்னும் மன்னன் பேரை - வெண்ணிற ஆடை,,     எம்    எஸ் வி-   டி கே ஆர். ஒரு பாடல் இன்னொரு உலகத்திற்கான பயணச் சீட்டாக இருப்பதை நீங்கள் நம்புகிறீர்களா? இந்தப் பாடல் அதற்கு ஒரு உதாரணம். வழக்கம் போல எந்தக் குரலும் செய்யாத மாயத்தை செய்யும் சுசீலாவின் இனிமையான சாரீரத்தில் ஒரு ரசிகன் மேற்கொள்ளும் ஒரு  ஆனந்த பயணம் இந்தப் பாடல்.

          மாலைப்பொழுதின் மயக்கத்திலே- பாக்கியலஷ்மி, எம் எஸ் வி-டி கே ஆர். உலகத்தின் மிகச் சிறந்தப் பாடல்கள் துயர இசையே என்ற ஒரு கருத்து இருக்கிறது. அதை நிரூபிக்கும்  இந்தப் பாடல் கேட்கும் எவருக்கும்  துயர இசையின் விவரிக்க முடியாத அழகை  உணர்த்திவிடுகிறது.

             நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்-நெஞ்சில் ஓர் ஆலயம்,எம் எஸ் வி-டி கே ஆர். இந்தப்பாடலை  ரசிக்கும் எல்லோருக்கும் வரும் ஒரு பொதுவான குழப்பம் யாரால் இதை ரசிக்கிறோம் என்பதே. இசை அமைத்த எம் எஸ் வி டி கே ஆரா, கவிதை எழுதிய கண்ணதாசனா, பாடிய பி பி ஸ்ரீனிவாசா என்று தெளிவாகச் சொல்ல முடியாத எல்லாம் ஒன்றாக  நேர்த்தியாக பின்னப்பட்ட ஒரு அற்புதமான பாடல்.

            அன்புள்ள மான்விழியே-குழந்தையும் தெய்வமும், எம் எஸ் வி.  காதலை இப்படிக்கூட நளினமாக வரம்புகள் மீறாமல் வெளிப்படுத்த முடியுமா என்ற எண்ணம் எனக்கு தோன்றுவதுண்டு.
       
      இதைத்தாண்டி பல அருமையான பாடல்கள் என் இசை ரசனையின் திசையைத் திருப்பின.இந்தப் பதிவில் நான் எம் எஸ் வி பற்றி மட்டும் எழுதுவதால் மற்ற இசைமேதைகளின் பாடல்களை இங்கே குறிப்பிடவில்லை.

           70 களில் எம் எஸ் வி மிக அதிகப் படங்களுக்கு இசை அமைத்தார். 73ஆம் வருடம் எம் எஸ் வியின் இசையில் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் வெளிவந்தது. இந்தப் படத்தின் பின்னணியில் ஒரு அநாகரீக அரசியல் மறைந்திருந்து காய்களை நகர்த்தியது அப்போது எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். பலவித தடைகளுக்குப் பிறகு எம் ஜி ஆர் இந்தப் படத்தை வெளியிட்டார். அப்போது அவர் இந்தப் படத்தைப் பற்றி கூறிய ஒரு கருத்து இது: "இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகர்கள். ஒன்று நான். இன்னொன்று இசைஅமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன் ". எம் ஜி ஆரின் கூற்றை  உண்மையாக்கும் விதத்தில்  படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டாசு போல வெடித்தன. இசையைக் கேட்டவர்கள் எம் எஸ் வி யிடம் இந்தப் படத்துக்காகவே சில அருமையான மெட்டுக்களை சேமித்து வைத்திருந்தீரோ என்று  அவரை வினவியதாகவும் சொல்லப்படுகிறது.இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாமே மிகப் பிரபலமானவை.
உலகம் உலகம்  ,
பச்சைக்கிளி முத்துச்சரம்,
அவளொரு நவரச நாடகம்,
நிலவு ஒரு பெண்ணாகி,
பன்சாயி ,
சிரித்து வாழ வேண்டும்,
தங்கதோணியிலே,
சிக்குமங்கு,
லில்லி மலருக்கு கொண்டாட்டம்,

   படத்தின் பாடல்கள் மட்டுமல்ல பிண்ணனி இசையிலும் இந்தப் படம் ஒரு மைல்கல் என்றே சொல்லவேண்டும்.ஒரு அயல் நாட்டை சுற்றிய கதைக்கேற்றாற்போல்  படத்தின் பிண்ணனி இசையும் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது. இதைத்தான் எம் ஜி ஆர் ஊடகமாக எம் எஸ் வியும்   இந்தப் படத்தின் ஒரு கதாநாயகன் என்று சொல்லியிருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.  பொதுவாக 70களுக்கு முன் திரை ரசிகர்களிடம் பாடலைப் பற்றிய சிந்தனையே அதிகமாக இருந்தது.எனவே படத்தின் பிண்ணனி இசையோ அல்லது ஒளிப்பதிவையோ அவர்கள் விமர்சனம் செய்ததாகத் தெரியவில்லை. இதனால் பல படங்களின் சிறப்பான பிண்ணனி இசை வெளியே பேசப்படவில்லை என்பதே உண்மை.   இப்போது பார்க்கும்போது பல கருப்பு வெள்ளை படங்களில்கூட மிகச் சிறப்பான பிண்ணனி அமைக்கப்பட்டிருப்பதை நாம் உணரலாம். உதாரணமாக ஞானஒளி என்ற படத்தின் பிண்ணனி இசையே அந்தப் படத்தை துடிப்பாகக் காட்டியது. இந்தப் படத்தில்தான் மிகப் பிரபலமான "தேவனே என்னைப் பாருங்கள்" பாடல் உள்ளது. (தற்போது எம் எஸ் வி அதிகமாக முனுமுனுக்கும் பாடல் இது என்பது அவரே சொன்ன தகவல்.)

கீழ்க்கண்டவை  70 களில் எம் எஸ் வி கொடுத்த சில இனிமையான பாடல்கள்.

தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன், காதல்  கூட்டம், கேட்டதும் கொடுப்பவனே,(தெய்வ மகன் 69)
 உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்(அவளுக்கென்று ஓர் மனம்),
குயிலாக நான் இருந்ததென்ன(செல்வ மகள்),
ஒ மைனா இது உன் கண்ணா(நான்கு சுவர்கள்),
யமுனை  நதி(கெளரவம்)
நான் என்றால் அது,பரமசிவன் கழுத்திலிருந்து (சூரியகாந்தி)
சொல்லத்தான் நினைக்கிறேன்(சொல்லத்தான் நினைக்கிறேன்),
மல்லிகை என் மன்னன் (தீர்க்கசுமங்கலி)
என் ராஜாவின் ரோஜா முகம், இனியவளே, உள்ளம் ரெண்டும் (சிவகாமியின் செல்வன்),
கல்யாண வளையோசை, விழியே கதை எழுது(உரிமைக் குரல்),
செந்தமிழ் பாடும்(வைர நெஞ்சம்),
இன்பமே (இதயக்கனி),
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்(சிரித்து வாழ வேண்டும்)
 
      இவை  எம் எஸ் வி யின் ராஜாங்கத்தை பறைசாற்றினாலும் 70களில் அவர் பாடல்களில் கண்டிப்பாக எதோ ஒன்று குறைந்திருந்தது.

          எம் எஸ் வியின் இசையில்   கர்நாடக ராகங்களின் ஆதிக்கம் வலுப்பெற்ற காலம் இது.  75இல் இவரது இசையில் வந்த படம்தான் "அபூர்வ ராகங்கள்". அந்தப் படத்தின் பாடல்கள்  கர்நாடக சங்கீதத்தின் திரைக்குரலாகவே ஒலித்தன. கே ஜே ஜேசுதாசின் "அதிசய ராகம்", வாணி ஜெயராமின் "கேள்வியின் நாயகனே","ஏழு ஸ்வரங்களுக்குள்" போன்ற பாடல்கள் எம் எஸ் வி  கர்நாடக சங்கீதத்தில் கொண்டுள்ள புலமையின் சான்றுகளாக இருக்கின்றன. இதில் அதிசய ராகம் பாடல் ஒரு அதிசயமானதுதான். மிகவும் அருமையாக உருவாக்கப்பட்ட இந்தப்  பாடலின் இறுதிச்  சரணம் வெகு புகழ்பெற்றது. எம் எஸ் வி எட்டாவது ஸ்வரத்தையே தொட்டுவிட்டாரோ என்று கூட சிலர் வேடிக்கையாக சொல்வதுண்டு. அதே சமயத்தில் இன்னொன்றையும் இங்கே குறிப்பிடவேண்டும் .இந்தப் படத்தின் இயக்குனர் பனிரெண்டு ஆண்டுகள் கழித்து எடுத்த மற்றொரு சங்கீதப் படைப்பான "சிந்து பைரவி" படத்தின் பாடல்கள் இவ்வளவு தரமானதாக இல்லை என்று ஒரு கருத்து இருக்கிறது.

           அதன் பின் வந்த மூன்று முடிச்சு படத்தின் "வசந்தகால நதிகளிலே",ஆடி வெள்ளி"போன்ற பாடல்கள் வானொலியில் இடைவிடாது ஒலித்தன. வசந்தகால நதிகளிலே பாடலில்  ஒரு வரியின் கடைசி வார்த்தையைக் கொண்டு அடுத்த வரி துவங்கும் அவ்வளவாக கையாளப்படாத ஒரு வித்தையை  எம் எஸ் வி செய்திருப்பார்.(இதற்கு ஒரு பெயர் இருக்கிறது. எனக்கு இப்போது அது நினைவில்லை).

          76 இல் தமிழ்த்திரையிசையில் பெரிய அலை உருவானது. இது பின்னர் வரப்போகும் மிகப் பெரிய மாற்றத்திற்கான அவசியத்தை உணர்த்தியது. இந்த இசை அலையிலும் எம் எஸ் வி அடித்துக்கொண்டு போகப்படவில்லை. 79 ஆம் ஆண்டு "நினைத்தாலே இனிக்கும்"படத்தின் மூலம் எம் எஸ் வி மேற்கத்தியஇசையையும்  மெல்லிசையையும் தன் கை அசைப்பின் வழியே மீண்டும் ஒரே புள்ளியில் இணைத்தார். "எங்கேயும் எப்போதும்' பாடல் ஆயிரம் மலர்களே என்று நாசியால் பாடிய ஒரு பாடலுக்கு  மேலே சத்தமாக ஒலித்தது. சம்போ சிவசம்போ,பாரதி கண்ணம்மா,யாதும் ஊரே, நினைத்தாலே இனிக்கும், நம்ம ஊரு சிங்காரி, சயோனாரா, இனிமை நிறைந்த உலகம் போன்ற பாடல்கள் வீதி எங்கும் கேட்டன.பள்ளிக்கூடங்களில் பையன்கள் இதைப் பற்றியே பேசினார்கள். "எங்கேயும் எப்போதும்" பாடலை முணுமுணுக்காத உதடுகளே அப்போது பெரும்பாலும் இல்லை.இளைய தலைமுறையினர் எல்லோருக்குமே  அப்போது அந்தப் பாடலை பாடும்  ஆசை இருந்தது.

     இவ்வளவு ஆர்ப்பாட்டமாக வெற்றிபெற்ற நினைத்தாலே இனிக்கும் படத்திற்கு இசை அமைத்த எம் எஸ் வி க்கு தமிழக அரசின் அந்த ஆண்டின் சிறந்த இசை  விருது வழங்கப்படவில்லை என்பது ஒரு முரண். மாறாக நிறம் மாறாத பூக்கள் என்ற படத்திற்கு அது வழங்கப்பட்டு (இளையராஜா அப்போது புதிய இசைமைப்பாளராக இருந்ததால் ஒருவேளை அப்படி நடந்திருக்கலாம்)அப்போதைய எம் ஜி ஆர் அரசு அதற்காக விமர்சனம் செய்யப்பட்டது.

         இதன் பின் பட்டினப் பிரவேசம் என்ற படத்தில் எம் எஸ் வி அமைத்த வான் நிலா அது நிலா அல்ல என்கிற பாடல் இசை ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.இதில் வரும் வயலின் இசை மிகவும் புகழ் பெற்றது. இது ஒரு ரம்மியமான பாடல். இதற்கிடையில் பல சிவாஜி கணேசன் படங்களுக்கு எம் எஸ் வி இசை அமைத்திருந்தாலும் இளைய தலைமுறையினரிடம் சிவாஜிக்கு வரவேற்பு இல்லாததால் எம் எஸ் வி யின் பல நல்ல பாடல்கள் அடைய வேண்டிய உச்சத்தை தொடாமலே போய்விட்டன. அவரின் சில பாடல்களே பரபரப்பாகப்  பேசப்பட்டன.

அந்தமானைப் பாருங்கள் ,நினைவாலே சிலை செய்து -அந்தமான் காதலி
அண்ணன் ஒரு கோவில் என்றால்-அண்ணன் ஒரு கோவில்
மை நேம் ஈஸ் பில்லா, -பில்லா
நான் பொல்லாதவன்,நானே என்றும் ராஜா,-பொல்லாதவன்
விடிய விடிய, -போக்கிரி ராஜா
ராகங்கள் பதினாறு, தில்லுமுல்லு,-தில்லுமுல்லு
கடவுள் நினைத்தான் மணநாள் கொடுத்தான் -கீழ்வானம் சிவக்கும்


      வறுமையின் நிறம் சிகப்பு படத்தின் சிறப்பு என்று இப்போது வர்ணிக்கப்படும் சிப்பியிருக்குது என்ற அபாரமான பாடல் எம் எஸ் வி யின் மெட்டமைக்கும் திறமைக்கு  சவாலாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.  ஆனால் அவர் வெகு எளிதாக அந்தக்  காவியப் பாடலைப் படைத்திருந்தார். சிம்லா ஸ்பெஷல் படத்தில் வரும் உனக்கென்ன மேலே நின்றாய் என்ற பாடல் கேட்பவரை சட்டென்று  முணுமுணுக்க வைத்து விடுகிறது.  இது ஒரு அருமையான பாடல் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. 47 நாட்கள் என்ற படத்தில் வரும் மிக நீண்ட பாடலான "மான் கண்ட சொர்கங்கள்" மிகவும் அருமையானது. இதன் இசை அப்போதைய கலப்பிசைக்கு சவாலாக அமைந்திருக்கும். ஆனால் இந்தப் பாடல் பெரிய அளவில் பேசப்படவில்லை என்பது ஒரு வருத்தமான நிகழ்வு.

          இதன் பின் எம் எஸ் வி இளையராஜாவுடன் இணைந்து இசை அமைத்த "மெல்லத் திறந்தது கதவு" படப் பாடல்கள் இன்றுவரை இளையராஜாவின் இசை என்றே சொல்லப்பட்டுவருகிறது. அவர் இதில் ஒரே பாடலுக்குத்தான் இசை அமைத்ததாகவும், எல்லா பாடல்களும் எம் எஸ் வி யாலே மெட்டு போடப்பட்டு, மற்றவரால் இசைக்கோர்ப்பு செய்யப்பட்டதாகவும் அதில் பணியாற்றிய ஒரு அன்பர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தின் மிகப் பிரசித்தி பெற்ற ஊருசனம் பாடல் உண்மையில் எம் எஸ் வி யின் பாடல் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதை உறுதி செய்யும் விதத்தில்  ஊரு சனம் பாட்டில் இளையராஜாவின் நிழலை நாம் காண முடியாது.அவர்கள் எவ்வாறு இசை பங்களிப்பை செய்திருந்தார்கள் என்பதை திரையில் தெளிவாக குறிப்பிடாததால் இன்றுவரை உண்மை அறிந்துகொள்ளப்படவில்லை.

           70 களின் இறுதியில் தமிழக அரசியலில் ஏற்பட்ட  ஒரு மாபெரும் மாற்றம்  தமிழ்த் திரையில் பல புதியவர்களுக்கு கதவைத்  திறந்தது. எம் ஜி ஆர் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும்  நடிப்பதை நிறுத்திக்கொண்டார். தமிழ்த் திரையின் மற்றொரு தூணான சிவாஜியின் "இளமைத்"துள்ளல்  அப்போதைய இளைஞர்களால் அவ்வளவாக ரசிக்கப்படவில்லை. இந்தத் தலைமுறை மாற்றத்தில் சிக்கிக்கொண்ட  எம் எஸ் வி யின் இசை- அது எவ்வளவு நல்லிசையாக இருந்தாலும்- கொஞ்சம் கொஞ்சமாக "பழைய" இசை என்ற  ஒரு சார்பு நிலைக்கு வந்து சேர்ந்தது. இளைய தலைமுறை நடிகர்களாக புதிய அரிதாரம் பூசிக் கொண்ட கமலஹாசன், ரஜினிகாந்த் இருவரும் வேகமாக  புதிய இசையை நோக்கி நகரத் துவங்கினர். (இதைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில் பார்க்கலாம்). இந்த இடத்தில் எதற்காக இந்தப் பதிவுக்கு நிற்காத மழை என்ற தலைப்பு என்று நீங்கள் கேட்கலாம்.நிற்காத மழை என்பது எதிர்பார்த்ததை விட அதிக நேரம்  நீடிக்கும் மழையைக் குறிக்கும் சொல். எனவேதான் இந்தப் பதிவுக்கு அப்படி தலைப்பிட்டேன்.

      எம் எஸ் வி யின் இசைவரலாறு தெரியாத ஒரு தலைமுறை 70 களின்  இறுதியில் தமிழகத்தில் உருவானது. இது எங்கும் நடக்கக்கூடியதே. தான் முதலில் பார்க்கும்  எதையும் பின்தொடர்ந்து செல்லக்கூடிய சிலவகை பறவை இனங்களைப் போல் .இவர்கள் வேறு ஒரு இசையால் வழிநடத்தப்பட்டவர்கள். இவர்களுக்கான தீனி எம் எஸ் வி யின் இசையில் கண்டிப்பாக இல்லை.இவர்கள் எம் எஸ் வி யை புறக்கணித்ததில் வியப்பொன்றும் இல்லை. மேலும் தமிழ்த் திரையில் எம் எஸ் வி போல நீண்ட நாட்கள் ஆட்சி செய்தவர் வேறு யாருமில்லை. ஏறக்குறைய 35 ஆண்டுகள்  இவரின் இசைமழை ரசிகர்களை நனைத்தது. மாறிவிட்ட  காலச் சூழலோ  எம் எஸ் வி இடமிருந்து விலகிச் சென்று இன்னொரு  இசைஞரை அடைந்துவிட்டிருந்தது.

         அடுத்து: இசை விரும்பிகள் VII - அந்நியக் காற்று.

       
   

    

22 comments:

 1. அட்டகாஷ்.

  (ஒரே வார்த்தையில் இவ்வளவு நீளமான,அர்த்தம் சொரிந்த பதிவுக்கு பின்னூட்டம் இடுவதற்கு மன்னிக்கவும்).

  ReplyDelete
 2. கிங் விஸ்வாவுக்கு,
  தங்கள் வருகைக்கு நன்றி. உண்மையில் நான் உங்களை இங்கே எதிர் பார்க்கவேயில்லை.காமிக்ஸ் பிரியரான நீங்கள் இங்கு இப்படி திடும்மென வருவீர்கள் என்று கற்பனை கூட செய்யவில்லை நான்.ஒரே வார்த்தையாக இருந்தாலும் உங்கள் கருத்துக்கு நன்றி.நீங்கள் கூட பழைய பாடல்களை விரும்பிக் கேட்பவரோ?

  ReplyDelete
 3. காரிகன் சார்,

  நான் எப்போதாவது கேட்டால், அது கண்டிப்பாக பழைய பாடல்களை மட்டுமே.

  ஒரு ஆராய்ச்சிக்காக சென்ற ஆண்டு சென்னை புத்தக திருவிழாவில் ஏகப்பட்ட தமிழ் திரை இசை பாடல்கள் பற்றிய புத்தகங்களை வாங்கினேன். ஆனால் இன்னமும் எதனையும் படிக்கவே இல்லை.

  ஓரிரு புத்தகங்களில் வேதா அவர்களை பற்றி மட்டும் தேடித் பிடித்து படித்தேன்.

  மாடர்ன் தியேட்டர்ஸ் பற்றிய எந்த செய்தியாக இருந்தாலும் அவற்றை சேகரித்து வருகிறேன்.

  பழைய சினிமா விளம்பரங்கள், பாடல் புத்தகங்கள். சினிமா புத்தகங்கள் (எல்லாமே 50-60-70ம் ஆண்டுகளை சார்ந்தவை) சேகரித்தும் வருகிறேன்.

  NB: உங்களது இந்த பதிவை டுவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் இணைத்துள்ளேன்

  ReplyDelete
 4. உங்கள் பதிவை படித்தேன். நன்றாக அலசி ஆராய்ந்து மிக நீண்ட கட்டுரையை எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நானும் நீங்கள் கூறியபடி 1976 ஆம் ஆண்டு பள்ளியில் படித்துக்கொண்டிருந்தவந்தான். ஆனால் உலகம் சுற்றும் வாலிபன் பற்றி அதிகமாகத் தெரியவில்லை. இப்படியெல்லாம் கூட நடந்ததா என்று ஆச்சர்யம் வருகிறது. எம் எஸ் வி பற்றி மிகத் தெளிவாக பதிவு செய்து இருக்கிறீர்கள். இன்னொரு சங்கதி எனக்கு இதயக்கனியில் வரும் இன்பமே பாடல் ரொம்பவும் பிடிக்கும். எம் எஸ் வி பற்றி இன்டர்நெட்டில் அதிகமானவர்கள் எழுதுவது கிடையாது. உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்.
  முத்து ராம லிங்கம்
  விழுப்புரம்

  ReplyDelete
 5. " இந்தத் தீர்மானித்தலின் படி நான் அதுவரை கேட்டுக்கொண்டிருந்த இசை எனக்கு அலுப்பைத் தந்தது. அந்த இசையில் நான் எதையும் புதுமையாக உணரவில்லை. என்னைச் சுற்றி இருந்த என் நண்பர்கள் அதை புகழ்ந்த போதும் எனக்கு அந்த இசை தரமில்லாததாகவே தோன்றியது."

  ஏதாவது போதி மரத்தின் அடியில் உட்கார்ந்தீர்களோ? போதி மரத்து புத்தர் போலவே பேசுகிறீர்களே? ஹா ஹா ஹா சும்மா தாமாசுக்கு...

  ReplyDelete
 6. கிங் விஸ்வாவுக்கு,
  நீங்களும் என் போலத்தான் என்பதில் மகிழ்ச்சி. எதோ ஆராய்ச்சி என்று புத்தகங்கள் வாங்கியதாக சொல்லி இருக்கிறீர்கள். இசை அமைப்பாளர் வேதாவை உங்களுக்கு பிடிக்குமோ? நிறைய ஹிந்தி பாடல்களை தமிழுக்கு இறக்குமதி செய்தவர் வேதா. உங்கள் கருத்துக்கு நன்றி மேலும் என் பதிவை ட்விட்டர், பேஸ் புக் போன்ற தளங்களில் இணைத்ததற்கு மற்றொரு நன்றி. அதன் லிங்க் கொடுக்க முடிந்தால் நலம். மீண்டும் சிந்திப்போம் தோழரே.

  ReplyDelete
 7. திரு முத்து ராமலிங்கம் அவர்களுக்கு
  நாம் மீண்டும் சந்திக்கின்றோம். உங்கள் கருத்துக்கு நன்றி. உலகம் சுற்றும் வாலிபன் படத்தை தடுக்க அப்போதைய தி மு க அரசு செய்தவைகளை எழுதினால் நன்றாக இருக்காது. இருவர் படத்தில் "ஒரு மூணு மணிநேர சினிமாவ பாத்து பயப்படற அளவுக்கா நம்ம ஆட்சி இருக்கு?" என்று பிரகாஷ் ராஜ் பேசுவது போல ஒரு வசனம் உண்டு. இது அரசியல் பதிவு இல்லை என்பதால் வேறு விஷயங்கள் பேசவில்லை.

  ReplyDelete
 8. திரு அனானிக்கு,
  உங்கள் கருத்தைப் படித்ததும் சிரிப்புத்தான் வந்தது. எழுதும் போதே எனக்கும் அப்படித்தான் இருந்தது.சரியாக கண்டுபிடித்து விட்டீர்கள். மேலும் ஞானம் வர போதி மரம் தேவை இல்லை என்று நினைக்கிறேன். உங்கள் பெயரையாவது சொல்லிஇருக்கலாம்.

  ReplyDelete
 9. அட்டகாசம் போங்க! சும்மா பிரிச்சுப் போட்டுப் பின்னுறீங்க.இணையத்தில் 'மட்டுமே'தகவல் தேடி அறிந்துகொள்பவர்களுக்கு இவையெல்லாமே புதிய விஷயங்கள்தாம். இன்றைய இளைஞர்கள் எப்படி என்றால் பழைய விஷயங்களைத் தேடிப் படிப்பதில்லை. தொலைக்காட்சியில் பழையவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் வரும்போது அவற்றை உடனடியாகத் தவிர்த்துவிடுகிறார்கள். அப்புறம் தங்கள் வயதொத்த இளையவர்களின் நிகழ்ச்சியை மட்டுமே பார்த்துவிட்டு அவர்கள் உளறுவதைக் கேட்டுவிட்டு இதுதான் உண்மைபோலும் என்று நினைத்துக்கொண்டு அதையே பேசிக்கொண்டு அலைகிறார்கள். அதுமட்டுமல்லாது சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வரும்போது தங்களுக்குத் தெரிந்ததை-அதுவும் அரைகுறையாகத்தான்- வைத்துக்கொண்டு முரட்டுப்பிடிவாதமாக வாதாடுகிறார்கள். இவற்றையெல்லாம் தகர்த்து எறிகிறது உங்கள் பதிவு.
  தொலைக்காட்சிகளில் இளையவர்கள் 'உளறிக்கொட்டுவதைக் கேட்டுவிட்டு' என்று ஏன் சொல்கிறேன் என்றால் பின்னணி பாடவரும் புதிய பெண் பாடகிகள் அத்தனைப்பேரும் 'ஜானகியம்மா பாட்டுன்னா எனக்கு ஐய்ய்ய்யோ....அவங்களைப்போல யாருக்குப் பாடவரும்?' என்றுதான் சிலாகிக்கிறார்கள். சுசீலாவின் அருமை பெருமைகள் அவர்களை எட்டுவதே இல்லை.(அவர்கள் போட்டிகளில் பாடி வெற்றிபெறும் பழைய பாடல் சுசீலாவுடையதாய்த்தான் இருக்கும் என்பது வேறு விஷயம்) இதேபோல பையன்கள் எஸ்பிபி என்பார்கள். முப்பது ஆண்டுகளுக்குமேல் கோலோச்சிய டிஎம்எஸ் என்ற இசையரசனைப் பற்றி இவர்களுக்கு இவர்களுக்கு அரிச்சுவடி கூடத்தெரிவதில்லை. இசையமைப்பாளர் என்று வரும்போதும் இதே கதைதான்.
  இவர்களுக்கெல்லாம் அறிவுத்தெளிவை உண்டாக்கும் பதிவு இது.
  மேற்கத்தியப் பாணிப் பாடல்கள் பற்றிக்குறிப்பிடுகையில் தனிப்பிறவி படத்தில் வரும் உழைக்கும் கைகளே பாடலைக் குறிப்பிடுகிறீர்கள். தனிப்பிறவி எம்ஜிஆர் நடித்த தேவர் பிலிம்ஸ் படம் என்று நினைக்கிறேன். தேவர் பிலிம்ஸ் என்றால் கே.வி.மகாதேவன்தான்.சில படங்களுக்கு மட்டும் சங்கர் கணேஷ் இசையமைத்திருப்பார்கள்.
  விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் பிரிவதற்கு முன்னால் இசையமைக்கபட்டிருந்த பல பாடல்களை, பிரிந்துவந்ததற்குப் பின்னர் விஸ்வநாதன் பயன்படுத்திக்கொண்டார் என்று சொல்லப்படுவதுண்டு. அம்மாதிரியான ஒரு பிரிவின் சமயத்தில் இதெல்லாம் வழக்கமாக நடைபெறுவதுதான்.
  பழனி மற்றும் பூஜைக்கு வந்த மலர் இரு படங்களையும் குறிப்பிடும்பொழுது எம்எஸ்வி தனியாக இசையமைத்த படங்கள் என்றிருக்கிறீர்கள். அவை இரண்டுமே இருவருமே சேர்ந்திருந்தபோது இசையமைத்த படங்களே.பழனியில் ஆறோடும் மண்ணில் பாடல் தவிர, வட்ட வட்டப் பாறையிலே என்ற சீர்காழி,பி.சுசீலாவின் அருமையான பாடல், அந்தப் படத்திலேயே மிகவும் புகழ்பெற்ற அண்ணன் என்னடா தம்பி என்னடா பாடல்,உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா என்ற அற்புதப் பாடல்கள் உள்ளன.
  அதேபோல பூஜைக்கு வந்த மலர் படத்தில்-சீர்காழியின் வெண்பளிங்கு மேடைகட்டி,பிபிஎஸ் சுசீலாவின் மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட...போன்ற பிரமாதப் பாடல்கள் உள்ளன.
  குழந்தையும் தெய்வமும், கலங்கரை விளக்கம்,நீ போன்ற சில படங்களின் சில பாடல்களில் ராமமூர்த்தியின் பங்களிப்பு இருந்ததை நுட்பமாக இசை கேட்கும் சிலரால் புரிந்துகொள்ள இயலும்.
  அவர்கள் இருவரும் பிரிந்தபின்னர் அவர்களின் பாடல்களில் இருந்த 'ஏதோ ஒண்ணு' குறைந்துவிட்டதை எல்லாராலும் உணர முடிந்தது. அந்த ஏதோ ஒண்ணு என்ன என்பதற்கான விடைதான் இத்தனை ஆண்டுகள் ஆனபின்னாலும் பெரிய பெரிய இசை ஜாம்பவான்களால்கூட கண்டுபிடிக்கப்பட முடியாத ரகசியமாக இருக்கிறது.
  அப்புறம் இந்தப் பதிவுக்கான தலைப்பு தவறென்று எனக்குப் படுகிறது.'நிற்காத மழை' என்ற தலைப்பு 'அடுத்தவர்' பற்றிய பதிவுக்கான தலைப்போ? இந்தப் பதிவிற்கான தலைப்பு தீரா நதி என்றுதான் இருந்திருக்கவேண்டும். என்றென்றைக்கும் ஓடிக்கொண்டிருக்கப்போகிற நதி அல்லவா இது!

  ReplyDelete
 10. அமுதவன் அவர்களே உங்களின் வரவுக்காகத்தான் காத்திருந்தேன். வருகைக்கு மகிழ்ச்சியோடு கூடிய நன்றிகள். இந்தப் பதிவில் சில பிழைகள் இருக்கும் என்று நினைத்தேன். சரியாக சுட்டிக்காட்டியதற்கு நன்றி. தனிப்பிறவி கே வி மகாதேவன் இசையில் வந்த படம்தான். அது தேவர் பிலிம்ஸ் என்பது சரியாக ஞாபகமில்லை என்பதால் இந்தப் பிழை. பழனி, பூஜைக்கு வந்த மலர் இரண்டிலும் எனக்கு சற்று சந்தேகம் இருந்தது. அதுவும் ஆறோடும் பாடலில் இரட்டையர்களின் தாக்கம் நனறாகவே தெரியும். அது வெளியான வருடத்தை 66 என்று கணித்ததால் இந்தத் தவறு. மையேந்தும் விழியாட ஒரு அட்டகாசமான பாடல்.எனக்கு சில பாடல்களின் படங்கள் சட்டென தோன்றுவதில்லை. நினைவூட்டலுக்கு நன்றி. அப்பறம் கடைசியாக ஏன் இந்த தலைப்பு என்று கேட்டுள்ளீர்கள். "அடுத்தவருக்கான" எண்ணமெல்லாம் இல்லை. தீரா நதி என்று ஒரு வலைப்பூ உண்டு. மேலும் ஒரு பிரபலமான கதை இருப்பதாக ஞாபகம். உண்மையில் "எம் எஸ் வி என்ற மகா ஆளுமை" என்றே தலைப்பிட இருந்தேன். பின்னர் அது ஒரு சார்பு நிலையை கொடுக்கும் என்பதால் நிற்காத மழை. ஆனாலும் நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடே. இப்போது கூட ஆயிரம் பெண்மை (வாழ்க்கைப் படகு)என்ற ஒரு சிலிர்ப்பான பாடலை கேட்டுக்கொண்டேதான் இதை எழுதுகிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

  ReplyDelete
 11. ஒரு சிறிய உதவி..

  மின்சாரம் பற்றிய ஒரு இடுகை இட்டிருரிக்கிறேன்.

  படித்து பார்த்து ஆவன செய்யுங்கள்

  http://kannimaralibrary.co.in/power9/
  http://kannimaralibrary.co.in/power8/
  http://kannimaralibrary.co.in/power7/
  http://kannimaralibrary.co.in/power6/
  http://kannimaralibrary.co.in/power5/
  http://kannimaralibrary.co.in/power4/
  http://kannimaralibrary.co.in/power3/
  http://kannimaralibrary.co.in/power2/
  http://kannimaralibrary.co.in/power1/

  நன்றி,
  வினோத்.

  ReplyDelete
 12. excellant one .some more songs during 85 Mirudanga chakravarthi - "Abinaya sundari aadukiral en aasai kanalai moodukiral" by sivachidambaram - Ketka thigattadha gaanam - Balamurali krishna - sugamana ragangale - vanijayaram

  ReplyDelete
 13. //அதன் பின் வந்த மூன்று முடிச்சு படத்தின் "வசந்தகால நதிகளிலே",ஆடி வெள்ளி"போன்ற பாடல்கள் வானொலியில் இடைவிடாது ஒலித்தன. வசந்தகால நதிகளிலே பாடலில் ஒரு வரியின் கடைசி வார்த்தையைக் கொண்டு அடுத்த வரி துவங்கும் அவ்வளவாக கையாளப்படாத ஒரு வித்தையை எம் எஸ் வி செய்திருப்பார்.(இதற்கு ஒரு பெயர் இருக்கிறது. எனக்கு இப்போது அது நினைவில்லை).//
  Adhan peyar "ANDHADHI"

  ReplyDelete
 14. திரு சூரிய நாராயணனுக்கு,
  தகுந்த சமயத்தில் உங்கள் பதில் வந்தது. நன்றி. இதே ராகத்தில் இன்னும் சில பாடல்கள் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். முடிந்தால் அதையும் தெரிவிக்கவும்.

  ReplyDelete
 15. ஜெய பாலு (நாகூர் கனி )4 June 2013 at 07:16

  அருமையான பதிவு. நன்றி சகோதரரே .

  msv இசையில் வந்த ஒரு மிக அருமையான பாடல் விடுபட்டுள்ளது என்று நினைகின்றேன்.
  http://www.youtube.com/watch?v=oXOs-ytaqD0

  மேதைகளின் இளவயது தோற்றத்தை பாருங்கள்

  ReplyDelete
 16. ஜெய பாலு (நாகூர் கனி ) அவர்களே,
  வருகைக்கு நன்றி.எம் எஸ் வி யின் பல நல்ல படைப்புக்களை நான் குறிப்பிடவில்லைதான். நீங்கள்தான் மெல்லத் திறந்தது கதவு பற்றி ஒரு சமயம் திரு அமுதவன் அவர்களின் பக்கத்தில் பின்னூட்டம் எழுதி இருந்தீர்கள் என்று நினைக்கிறேன். குறைகள் இருப்பின் தெரிவிக்க தயங்க வேண்டாம் என்று சொல்லிக்கொள்கிறேன். இது என்னை திருத்திக் கொள்ள உதவும்.மீண்டும்உங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 17. நாகூர் கனி4 June 2013 at 11:44

  ஒரு குறையும் இல்லை. MSV தொடர்பாக எவரும் உங்களை போல் எழுதவில்லை. அந்த குறையையும் நீக்கி விட்டீர்கள்.

  ReplyDelete
 18. ஜெய பாலு (நாகூர் கனி )4 June 2013 at 11:53

  சகோதரர் காரிகன்,

  msv ராமமூர்த்தி இணையர்கள் தொடர்பாக இன்னும் எழுதுங்கள். அவர்கள் பற்றி எல்லையற்று எழுதலாம்.
  தயவு செய்து அவர்கள் பற்றி எழுதுவதை நிறுத்தாதீர்கள். பின் எழுதுவதற்க்கு வேறு ஒருவர் வரபோவதில்லை.

  ReplyDelete
 19. திரு.ஜெய பாலு (நாகூர் கனி),
  உங்கள் கருத்துக்கு நன்றி. நீங்கள் கூறுவது உண்மையே. இணையத்தில் நிறைய பதிவர்கள் இளையராஜா,ரகுமான் போன்றவர்களைப் பற்றியே அதிகம் எழுதுகிறார்கள். அதிலும் நேர்மை இல்லை. தான் ரசித்த பாடல்களைக் கொண்டு தனக்கு பிடித்த இசை அமைப்பாளரை இவர்தான் சிறந்தவர் என்று வர்ணிக்கும் ஒரு மோசடிக் கும்பல் போல இவர்கள் அலைந்துகொண்டிருக்கிறார்கள். தமிழ் இசையின் ஆரம்ப கால இசை மேதைகளை வசதியாக மறந்துவிட்டு ரசனையின் அடிப்படையில் பதிவுகள் எழுதுகிறார்கள்.அதை விட அவலம் அதுதான் உண்மை என்று வாதிடுகிறார்கள். இசை ஞானம் அதிகம் உள்ள சிலரே இதற்கு விதிவிலக்கு அல்ல. உங்கள் கருத்துக்கு மதிப்பளிக்கிறேன்.தமிழ் இசையின் பொற்காலம் பற்றி இன்னொரு நீண்ட பதிவு எழுத நினைத்துள்ளேன். என்னுடைய பழைய பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்தை எழுதினால் நலமாக இருக்கும். நன்றி.

  ReplyDelete
 20. காரிகன்,

  மிகத்தாமதமாக கருத்திடுவதற்கு மன்னிக்கவும், முன்னரே படித்துவிட்டேன், நிதானமாக பின்னூட்டமிட வேண்டும் என நினைத்து சென்றேன் மறந்தே விட்டேன்,அதற்குள் அடுத்தப்பதிவும் வந்துவிட்டது :-))

  சமீபக்காலத்தில் படித்த பதிவுகளிலேயே மிகவும் ஆழமாகவும், விஸ்தாரமாகவும் விவரித்து எழுதப்பட்ட ஒரு பதிவு தங்களுடையதே, நீளமாக செல்கிறதே என்றெல்லாம் கவலைப்படாதீர்கள் ,உங்கள் மனஓட்டம் போல ஓடட்டும், நமக்கெல்லாம் பெரிய பதிவுகள் படிக்கத்தான் பிடிக்கும், இரு முறைப்படித்துவிட்டேன் ,ஒரே மூச்சில்!

  கடின உழைப்பு மற்றும்,நிதானமான அனுகுமுறை இருந்தாலன்றி இது போன்ற கட்டுரைகள் எழுதவியலாது, பாராட்டுக்கள் என சொல்வது சம்பிரதாயமாக இருப்பினும் ,அதை தவிர வேறு வார்த்தையில்லையே ,எனவே பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

  // அன்றைய காலகட்டத்தில் ஒரு பாடல் இரண்டுக்கு மேற்பட்ட சரணம் கொண்டிருந்தால் முதல் சரணத்துக்கு அமைத்த இசைக் கோர்ப்பையே மூன்றாவது சரணத்திற்கும் வாசிப்பது ஒரு சம்பிரதாயமாகவே கடைபிடிக்கப்பட்டுவந்தது. ஆனாலும் மூன்று சரணங்களுக்கும் வெவ்வேறான இசைக்கோர்ப்பு இளையராஜாவுக்கு முன்பே செய்யப்பட்டுவிட்டது. இதோ:

  காலமகள் கண்திறப்பாள் - ஆனந்த ஜோதி, எம் எஸ் வி -டி கே ஆர்
  நான் ஆணையிட்டால்- எங்கவீட்டுப் பிள்ளை,எம் எஸ் வி -டி கே ஆர்
  நினைத்தேன் வந்தாய்- காவல்காரன், எம் எஸ் வி
  ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து- நினைத்தை முடிப்பவன் , எம் எஸ் வி
  பாடுவோர் பாடினால்- ஒரு தாய் மக்கள் , எம் எஸ் வி
  அழகே வா- ஆண்டவன் கட்டளை,எம் எஸ் வி -டி கே ஆர்
  பல்லவன் பல்லவி- கலங்கரை விளக்கம் , எம் எஸ் வி
  ராஜாவின் பார்வை- அன்பே வா , எம் எஸ் வி
  நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா , எம் எஸ் வி -டி கே ஆர்
  //

  இதுக்கும் மேல தனியா "விம் போட்டு" ராசாவின் ரசிக சிகாமணிகளுக்கு யாராலும் விளக்க முடியாது.

  நான் ஒரு முறை பழைய எல்.பி ரெக்கார்டுகள், ஆடியோ கேசட்டுகளை , டிஜிட்டலாக மாற்றும் பணியில் ஒருவருக்கு உதவினேன்,அப்பொழுது இது போன்ற பல பழையப்பாடல்களை கேட்டு ,அட அந்தக்காலத்துலவே என்னமா போட்டு இருக்காங்கனு வியந்து போனதுண்டு,நம்ம மக்கள் கடந்தக்கால வரலாறு அறியாமலே ,நுனிப்புல்லாக சிலப்பாடல்களை கேட்டுவிட்டு இதான் இசை,இது மட்டுமே இசைனு அலையுறாங்க :-))

  தொடர்ந்து எழுதுங்கள், வாசிக்க காத்திருக்கிறோம்!
  ------------------

  //தீரா நதி என்று ஒரு வலைப்பூ உண்டு. மேலும் ஒரு பிரபலமான கதை இருப்பதாக ஞாபகம். //

  குமுதம்"தீராநதி" னு ஒரு இலக்கிய பத்திரிக்கை வருது, நாவல் இருக்கானு தெரியலை,லா.ச.ரா எழுதிய புத்தகம் "சிந்தாநதி' அந்தப்பேரிலும் ஒரு பதிவர் இருந்தாங்க.

  நிற்காத மழை- இசைமழை என்பதும் நல்லாத்தான் இருக்கு.

  ReplyDelete
 21. வவ்வால்,
  முதல் முறையாக என் தளத்திற்கு வருகை தந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது நன்றிகள். நீங்கள் கூறுவது போல் நீண்ட பதிவுகள் எழுதவே எனக்கும் ஆசை.
  "இதுக்கும் மேல தனியா "விம் போட்டு" ராசாவின் ரசிக சிகாமணிகளுக்கு யாராலும் விளக்க முடியாது."
  என்னதான் சோப்பு மேலே சோப்பு போட்டாலும் சில அழுக்குக்கறைகள் போய்விடுமா என்ன? இருந்தாலும் உண்மையை சொல்லவேண்டும் அல்லவா?

  "நான் ஒரு முறை பழைய எல்.பி ரெக்கார்டுகள், ஆடியோ கேசட்டுகளை , டிஜிட்டலாக மாற்றும் பணியில் ஒருவருக்கு உதவினேன்,அப்பொழுது இது போன்ற பல பழையப்பாடல்களை கேட்டு ,அட அந்தக்காலத்துலவே என்னமா போட்டு இருக்காங்கனு வியந்து போனதுண்டு,நம்ம மக்கள் கடந்தக்கால வரலாறு அறியாமலே ,நுனிப்புல்லாக சிலப்பாடல்களை கேட்டுவிட்டு இதான் இசை,இது மட்டுமே இசைனு அலையுறாங்க :-))"

  சரியான வார்த்தைகள்.. என் மனதில் இருக்கும் எண்ணங்களை படித்தது போல இருக்கிறது உங்கள் கருத்து. எனக்கும் இப்படியே ஒரு காலகட்டத்தில் தோன்றியதால்தான் இந்தப் பதிவுகளையே எழுதத் துவங்கினேன். இங்கே நுனிப்புல் ஆசாமிகளே அதிகமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு பிடிக்கும் படி எழுத நிறைய பதிவர்களும் இருக்கிறார்கள். உண்மையைச் சொல்லவோ வெகு சிலரே..
  நான் அந்த சிலரில் ஒருவனாக இருப்பதையே விரும்புகிறேன். முடிந்தால் எனது முந்தைய பதிவுகளையும் படித்துவிட்டு உங்கள் கலக்கல் நடையில் கருத்து சொல்லுங்கள். மீண்டும் நன்றி வவ்வால். மீண்டும் சந்திப்போம்.

  ReplyDelete
 22. ஹல்லோ காரிகன் சார்பு நிலை இல்லாதது போல் காட்டிக் கொண்டு விஸ்வநாதன் ராமமூர்த்தி தவிர மற்றவர் இசை பற்றி அதிகம் விமர்சிக்காதது ஒரு குறையே!
  சங்கர் கணேஷ் அவர்கள் இசை அமைத்த 'இதய வீணை ', 'நான் ஏன் பிறந்தேன் ' படங்களில் உள்ள பாடல்கள் மெல்லிசை மன்னர்களின் பாடல்களுக்கு கொஞ்சமும் குறைந்ததில்லை .
  v. குமார் அவர்கள் கொடுத்த அற்புதமான பாடல்களும் உங்களால் வசதியாக மறக்கடிக்கப் பட்டிருக்கின்றன. அவரும் இரட்டையர்களின் இசைக்கு சளைத்தவரில்லை .

  ஆனால் இளையராஜா காலத்தில் அவருக்கு இணையாக யாரும் நிற்க முடியாத அளவிற்கு அவர் இசை பூதாகரமாக உருவெடுத்திருந்தது .அது ஏன்?

  ReplyDelete