Thursday 9 April 2020

உறைந்த உலகம்.

மூன்றில் ஒரு பகுதி உலகம் இன்றைய கணத்தில் நிர்ப்பந்திக்கப்பட்ட தனிமையில் உறைந்து போயிருக்கிறது. கண்டங்கள், நாடுகள், நகரங்கள், வீதிகள், சாலைகள் எல்லாமே ஒரு புகைப்படம் போன்று அசைவுகளற்ற அமைதியில் அடங்கிப் போயிருக்கின்றன. வழிபாட்டுத் தலங்களும், வணிக வளாகங்களும், உணவரங்குகளும், கேளிக்கை விடுதிகளும், திரையரங்குகளும், முகவரியற்ற இடங்களாக மனிதத் தடம் படாத பகுதிகளாக மாறியிருக்கின்றன.  இயற்கையோ செயற்கையோ, விதியோ சதியோ நம் கண்களுக்குப் புலப்படாத இந்த எதிரியின் பின்னிருக்கும் காரணிகளை ஆராயும் நேரம் இதுவல்ல என்றாலும்  உலகம்  முழுவதும் இறந்து  கொண்டிருக்கும் எளிமையானவர்களின்  மரணத்திற்கு இயற்கையையும்  கடவுளையும்   சுட்டிக் காட்டி விட்டு   இதை  நாம் கடந்து சென்று  விடப் போகிறோமா?  

தற்போதைக்கு தனித் தனி தீவுகளாகவும், யாரையும் தொடாமலும், முகம் பார்த்து பேசாமலும், பிறரிடமிருந்து தள்ளி நின்றும் இருப்பதே பாதுகாப்பானது. ஆனால்  இதுவே ஒரு புதிய வாழ்க்கை முறையாக போதிக்கப் படாமலிருந்தால் மிகவும் நலம்.  


Wednesday 29 January 2020

இரண்டு கோமாளிகள்

பொதுவாக அரசியல் பற்றி விவாதங்கள் எழுந்தால் நான் விலகிச் செல்வதே வழக்கம். ஆனால் இது இணையத்தில் மட்டுமே. நேரில் என் அரசியல் கண்ணோட்டம் மிகவும் அழுத்தமானது. இப்போது நான் அதைப் பற்றி விவாதிக்கவில்லை. 

தற்போது தமிழகத்தில் புதிதாக ஒரு கேலிக்கூத்து வடிவம் பெற்றுவருகிறது. அதன் நாயகர்கள் ஒரு காலத்தில் நாம் ரசித்த, விரும்பிய, பாராட்டிய, புகழ்ந்த  இருவர்கள். ஒருவர் உச்ச நட்சத்திரம், மற்றவர் உலக நாயகன். இணையத்தில் நான் சில நெறிமுறைகளை கடைபிடிப்பதால் இந்த இரண்டு கோமாளிகள் பற்றி தரம் தாழ்ந்து பேச முடியாத நிலையில் இருக்கிறேன். வெளிநாட்டில் ஒளிந்துகொண்டு  மனப்பிறழ்வு நோயில் உழன்று கொண்டிருக்கும் சில பயித்தியங்கள் போல ஆங்கில ஆவேசம் கொண்டு  f ... என்று எல்லோரையும் திட்டுவது போன்று எழுத முடிந்தால் இந்தப் பதிவும் அதே தரத்தில் இருக்கும். எனக்கோ அதில் நாட்டமில்லை. 

கருணாநிதி ஜெயலலிதா என்ற இரண்டு ஆளுமைகள் இருந்தவரை சங்கி மங்கி களாக இருந்த இந்த கோமாளிகள் தற்போது அரசியல் போதை கொண்டு தினம் தினம் எதை எதையோ உளறுவது இவர்களையா நாம் அப்போது பெரிதாக நினைத்தோம் என்று நம்மையே குற்றவாளிகள்  போல  எண்ண வைக்கிறது.

ஆஸ்கார் நாயகன் என்று தன்னையே போற்றிக்கொண்டவர் ஆஸ்கர் விருதின் உண்மை தெரிந்தபின்பு உலக நாயகன் என்று அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தவர்  எனக்கு அரசியல் வராது என்று மேதாவித்தனமாக கதைத்தவர், நடிப்பு மட்டுமே எனது வாழ்க்கை என்று நடித்தவர் இன்றைக்கு மிக மலிவான யூ டர்ன் அடித்து பிக் பாஸ் போன்ற அலங்கார மேடைகளில் உலா வந்தபடி நடிப்பும் அரசியலும் பேசுவதைப் பார்க்கையில் நான் எனது காலணியை யோசிக்கிறேன்.

இந்த மேதாவி ஒரு புறம் இப்படி  நம்மை வதைக்க அடுத்த கோமாளி என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் எதை எதையோ ஆதாரம் என்று சொல்லி தேவையில்லாத பாதைகளில் பயணம் செய்கிறார். ஆன்மிக அரசியல் என்று புதிதாக பேசுவதாக இவர் எண்ணிக்கொண்டாலும்  அரசியலில் ஆன்மிகம் செய்யும் ஆட்களுக்கும் இவருக்கும் நூலிழை கூட வித்தியாசம்  இல்லை.

வரும் நாட்களில் இந்த இரண்டு கோமாளிகளும் இன்னும் அதிகமாக நம்மை வியக்க வைக்கப் போகிறார்கள்.  ரஹ்மானின் ஒரு பாடல் போன்று "என் மீது விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?" என்று இவர்களைப் பார்த்து கேட்கத்தோன்றுகிறது.

எதோ ஒரு படத்தில் கவுண்டமணி மற்றவரைப் பார்த்து சொல்வார். "தெரிஞ்சத செய்ங்கடா". சரியான வார்த்தைகள். உச்சத்திற்கும் உலகத்திற்கும் இதை நாம் சமர்ப்பணம் செய்யாலாம் என்று தோன்றுகிறது....





Thursday 23 January 2020

வேடிக்கை இசை ஞானிகள்

திரு சவுந்தர் என்பவரின் இசை பற்றிய பதிவுகளை நான் ஆர்வத்துடன் படிப்பதுண்டு. எனக்கு இப்போது தோன்றுவதெல்லாம் இவர் எதற்க்காக எம் எஸ் வி, கே வி மகாதேவன், சுதர்சனம், லிங்கப்பா, ஜி ராமநாதன் போன்றவர்களைப்  பற்றி  தேவையில்லாமல் எழுதுகிறார் என்பதுதான். திரு சவுந்தர் உங்கள் முகமூடியை கழற்றி விடுங்கள்.  இளையராஜாவை பெரிய இசை சகாப்தம் என்று புகழ எதற்காக இத்தனை நகாசு வேலைகள்? உங்களைப் போன்ற இரா வாசிகள் என்ன எழுதினாலும் இண்றைய இசை வட்டத்தில் உங்கள் இரா இல்லவே இல்லை என்பதே உண்மை. வந்தனம்.





Sunday 7 July 2019

ஆணவத் தூண் - I

"உங்கள் வார்த்தைகளே உங்களை தீர்ப்பிடும்" என்று சொல்லப் படுவது போல சிலரின் மகுடங்கள் இப்போது மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. பேசுபவர் யாராக இருந்தாலும் - ஞானியாகவே இருந்தாலுமே - அகங்காரத்தின் வெளிப்பாடாக அவர்களின் தொனி மாறும்போது அவர்கள் கடுமையான விமர்சனத்தை சந்திக்க நேரிடுகிறது.

இதில் மிக முதன்மையானவர் இளையராஜா. தற்போது அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் பல விதமான எதிர் வினைகளுக்கு காரணமாகின்றன.. மிகத் தீவிரமான இரா ரசிகர்களே இப்போது "அவர் இசை மட்டுமே பிடிக்கும் . அவர் பேசுவது பிடிக்காது" என்ற  நிதர்சனத்திற்கு வந்துவிட்டார்கள். இளையராஜாவின் ஆணவப் பேச்சுக்கள் தொடர்கதையாகி விட்ட தற்போதைய நிஜத்தில் அவர் மீதான விமர்சனங்களை புறம்தள்ளுவதும் அல்லது  ஜஸ்ட் லைக் தட்  நிராகரிப்பதும்  வரவேற்க்கத்தக்கதல்ல.

இரா பற்றிய பேட்டியிலோ அல்லது வாக்குவாதத்திலோ பங்கேற்கும் பலர் அவரை ஒரு புனிதப் பசு போன்ற ஒரு பிம்பத்தை கட்டமைக்க எத்தனிக்கிறார்கள். நான் கண்ட ஒரு செவ்வியில் ஒரு இரா பாதுகாவலர் மிகச் சாதாரணமாக ,' இப்போது இங்கு இளையராஜா வந்தால் இங்கே இருக்கும் எல்லோருமே அவர் காலில் விழுந்து விடுவார்கள்' என்று தன்மானம் தொலைத்த தனி மனித ஆராதனையின் உச்சமாக பேசுகிறார். எனக்கோ வியப்பை விட இந்தத் தரங்கெட்டத் தனத்தின் மீது நூறு பக்கங்கள் வசவுகளாக எழுதவேண்டிய கோபம் வந்தது. பகுத்தறிவை வீதி வீதியாக வீடு வீடாக கொண்டு சேர்த்த ஒரு இனத்தின் இன்றைய பிரதிநிதி இப்படி பேசுவது ஒரு நச்சுப் பேச்சு.

இந்தப் புனிதப் பசு என்ற பிம்பம் ஒரு காலத்தில் எம் ஜி ஆர் துவங்கி ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் என்று பரவி இன்றைய சூழலில் இளையராஜா மீது போர்த்தப்பட்டு வருகிறது. எல்லோரையும் விமர்சனம் செய்யும் உரிமை கொண்ட இந்த நவீன யுகத்தில் புனிதப் பசு பிம்பங்கள் உடைபட வேண்டிய இடத்திற்கு வந்துவிட்டன.

ஒரு இசையமைப்பாளர், பாடல்கள் அமைக்கிறார், சிலருக்கு பிடிக்கிறது. அவர்கள் அவரை கொண்டாடுகிறார்கள். இது இயல்பான ஒரு நிகழ்வு. முடிவின்றி தொடரும் வரலாற்றின் அடுத்த அத்தியாயம். ஆனால் இசை எனக்குப் பிடித்த அந்த ஒருவரோடு முடிந்துவிட்டது என்பதோ, அவர் மட்டுமே இசை சாகசங்கள் நிகழ்த்தினார் மற்றவர்கள் அவருக்கு கீழேதான் என்றோ தனக்குத்  தோன்றுவதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு பொதுவான விதியாக மாற்ற முயல்வது ஒரு ஆபத்தான அரசியல். இரா வாசிகள் இதைத்தான் செய்யத் துடிக்கிறார்கள்.

நான் முன்பே சொன்னது போன்று அவர்களுக்கு இராவின் முன்னே இருந்த இசை பற்றிய அறிவு துளியும் கிடையாது. போலவே இராவுக்கு அடுத்து வந்த இசையின் பால் அவர்களுக்கு மிகக் கடுமையான வெறுப்பு. இந்த இரண்டு உண்மைகளும் அவர்களை மீண்டும் மீண்டும்  பொய்களையே  உரக்கச் சொல்லவைக்கின்றன.

இளையராஜா 75 என்ற நிகழ்ச்சியில் இரா ரஹ்மானை தன் வழக்கமான விஷமத்தனத்துடன் கேலி பேசியது, ரஹ்மானை மட்டம் தட்ட நினைத்து தன் சுய ரூபத்தை காட்டிக்கொண்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகாவிட்டாலும் . இருவரின் அணுகுமுறையையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயத்தை உண்டு பண்ணியது. வயதில் பெரியவர், தன் கீழே பணிபுரிந்த ஒரு இளையவரை இப்படி நடத்துவது இயல்பை மீறிய ஒரு செயல். அதே நிகழ்ச்சியில் அவர் நடிகை ரோஹிணியை ஏசியதும், நடிகர் கார்த்திக் விளையாட்டாக கேட்ட ஒரு கேள்விக்கு பதில் சொல்ல முடியாத இயலாமையினால் அவரை நக்கல் செய்ததும் என்ன விதமான மேடை நாகரீகம்? (அக்கினி நட்சத்திரத்தின் ராஜா ராஜாதி ராஜா பாடல் குறித்து அது என்ன சார் வேறு எங்கும் தூக்காதே கூஜா என்று கார்த்திக் கேட்டிருந்தார்.)

இளையராஜாவின் தலைக்கணம் விளம்பரங்கள் இல்லாமலே பிரபலமானவை. எம் எஸ் வி பற்றி பெருமையாக பேசினாலும் அதன் பின்னே அவர் சொருகும் ஊசி  வேறு வகை. தன்னுடைய இசைப் புரட்சிகளை பட்டியலிடும் சமயங்களில் இரா எம் எஸ் வி யின் மெட்டுக்களை உதாரணம் காட்டி எம் எஸ் வியின் இசை மேதமையை கொஞ்சம் உரசிப் பார்ப்பார். இரா  தன் பல பேட்டிகளில் எம் எஸ் வி அவர்கள் எவ்வாறு ஒரே மெட்டை பல விதமான பாடல்களாக மாற்றியமைத்திருக்கிறார் என்று குறிப்பிடுவது வழக்கம். இது சாத்தியமே. இதை குறிப்பிடும் இராவின் பெரும்பான்மையான பாடல்கள் ஒரே தாளக்காட்டில் இசைக்கப்பட்ட வெற்று ஒலிகள்தான். அவர் அமைத்த ஐயாயிரம் பாடல்களில் வெறும் சில நூறு பாடல்கள் மட்டுமே தனித்து தெரிபவை. மற்ற எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

தனக்கு முன் இருந்த இசை பாரம்பரியத்தை இவ்வாறு பகடி செய்யும் இளையாராஜா வேறு யாரை மதிக்கிறார் என்றால் அது கேள்விக்குரியது. மேலும்  தனக்குப் பின்  வந்த இசையமைப்பாளர்கள் குறித்த அவரது பார்வை ஒரு வெறுப்பு மழை. அவருடைய செருக்கு இப்படி பல்லிளிக்க அவரை துதி பாடும் கூட்டம் இதைப் பற்றியெல்லாம் சற்றும் கவலை கொள்வதில்லை. விளைவு 96 என்ற ஒரு பாடாவதி படத்தில் நிகழ்ந்தது. அது அவர்களுக்கு தேவைதான்.

சுப்ரமணியபுரம் என்ற படத்தில் இயக்குனர் சசி குமார் துவக்கி வைத்த எண்பதுகள் என்றால் இளையராஜாவின்  இசை என்ற ஒரு மிகையான உண்மை  அந்தப் படத்திற்கு பொருத்தமானதாக இருந்தது. ஏனென்றால் எண்பதுகளில்தான் இளையராஜா பெரிய அளவில் வளர்ந்துகொண்டிருந்தார். அன்றைய காலகட்டத்தில் பல இசையமைப்பாளர்கள் இருந்தார்கள். ஆனால் தற்போது எண்பதுகள் என்றாலோ அது இளையராஜாவின் காலம் என்றொரு மிகை பிம்பம் செயற்கையாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் நீட்சியாக பல இயக்குனர்கள் தங்கள் படங்களில் இளையராஜாவின் இசையை எண்பதுகளின் குறியீடாக பயன்படுத்தி வருவது ஒரு அபத்தம். இது அவர்களின் தனிப்பட்ட விருப்பின்பால் நேரும் விளைவேயன்றி உண்மையை பிரதிபலிக்கும் போக்கு அல்ல.

இந்தப்  பொய் தொடர்கதையாக தமிழ்த் திரையில் வலம் வர இதற்கான எதிர்வினையை யாரும் எதிர்பார்க்காத ஒருவரே  முதல் ஆளாக செய்திருக்கிறார். அவர் இளையராஜா.

96 என்ற  ஒரு சென்டிமென்டல்  குப்பை Before sunrise என்ற ஆங்கில பட வரிசையின் அலங்கோலமான  தமிழ் வடிவம். இதில் கதையின் நாயகி இராவின் பாடல்களை பாடுவதுபோல காட்சிகள் உண்டு. உண்மையில் அவள் எஸ் ஜானகியின் ரசிகையே தவிர இளையராஜாவின் விசிறியாக அந்தப் படத்தில் காட்சிப் படுத்தப் படவில்லை. என்ன செய்வது? எஸ் ஜானகி என்றாலே அது இராவின் இசை தானே? நாயகி இரண்டோ மூன்றோ எஸ் ஜானகியின் பாடல்களைப் பாடுவது போன்ற திரைக்கதை. நாயகி பாடும் பாடல்கள் இளையராஜாவின் படைப்பாக  இருந்ததால் இது பற்றி அவரிடம் கேள்வி கேட்ட போது அவர் தன் பிராண்ட் தலை கணத்துடன் ,"என் இசையை காப்பியடிப்பவர்கள் ஆண்மை இல்லாதவர்கள்" என்று ஒரு அணுகுண்டை வீசிப்போட, தன்மானம் சற்றே விழித்துக்கொண்ட  சிலரின் இமேஜ் என்ற பலூனில் அது ஒரு ஊசியை செலுத்தியது. இளையராஜாவின் மேட்டிமை பேட்டிக்கு பேட்டி, நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சி தன்னை அடையாளம் காட்டிக்கொள்கிறது.

கூடுதலாக அவர் ,"அந்தக் காலத்து இசை போன்றே அவர்களாகவே சுயமாக பாடல்கள் அமைத்திருக்கலாமே, எதற்கு என்னை காப்பி அடிக்க வேண்டும்?" என்றொரு கருத்தை முன்வைக்கிறார்.

சொல்லப்போனால் 92ஆம் வருடத்தோடு இளையராஜாவின் ஆட்டம் ஒழிந்துபோனது. 96 இல் ரஹ்மான் மற்றும் தேவா பாடல்களே பெரிய அளவில் தமிழகத்தில் ஒலித்தன. இயல்பாக அந்தப் படத்தின் நாயகி அந்த 96ம் வருடத்திற்குரிய பாடல்களை பாடியிருந்தால் படத்தின் நம்பிக்கைத்தன்மை கூடியிருக்கும். அந்தப் படத்தின் இயக்குனர் தனது இரா பாசத்தை நடந்ததற்கு மீறிய செயற்கையான செண்டிமெண்டலுடன் வெளிக்காண்பிக்க, இந்த எதிர்வினை அந்த 96 கும்பலுக்கு அவசியமான அசிங்கம்தான். இனிமேலாவது இரா அடிவருடிகள் தங்களது அபிமானத்தை இதோடு நிறுத்திக்கொண்டால் நலமே.


ஆணவத் தூண் II தொடர்கிறது.





Saturday 2 February 2019

பரவசக் குறியீடு

ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னும் இறப்பில்லா ஆணிகளால் அடிக்கப்பட்ட  அழுத்தமான   ஒரு நினைவு ஒரு உயிர்ப்போடு ஆழ்ந்திருக்கிறது. யோசித்துப்பாருங்கள். ஒரு புகைப் படமோ ஒரு பழைய கடிதமோ ஒரு இசையோ ஒரு முகமோ ஒரு வாசனையோ ஒரு திடீர் இடமோ இவை எல்லாமே நமக்குள் ஒரு அணைந்துவிட்ட ஒரு நெருப்புப் பொறியை மீண்டும் பற்ற வைக்கும். அதன் உக்கிரம் தீவிரம் அக்கினி நம்மை அந்த  பழைய காலத்துக்குள் வாரத்தைகள் இல்லாத உணர்ச்சிகளோடு இணைத்துக் கொள்ளும்.

நமக்கு வெகு நெருக்கமான சில தருணங்கள் நினைவுகளை தாலாட்டும் சில பொக்கிஷ கணங்கள் எங்கோ ஒரு புள்ளியில் புதைந்து போயிருக்கிறன. அவற்றை மீட்டுட்டெடுக்க ஒரு சிறிய இசைத் துணுக்கு போதும். அல்லது ஒரு பெயரே போதும். அப்படியானது தான் 1979 ல் வந்த ஒரு திரைப்படம் எனது பால்ய நினைவுகளின் ஒரு மின்சார குறியீடாக இன்றுவரை எனக்குள் பல இதய அதிர்வுகளை இனிப்பாக பதிவெடுக்கிறது. அது நினைத்தாலே இனிக்கும் என்ற படம்.

இந்தப் படம் வந்த போது நான் எனது நினைவுகளை பிரதி எடுக்கும் பால்ய வயதில் இருந்தேன். இன்றுவரை இப்படம் அளிக்கும் வார்த்தைப் படங்கள்  மறக்க முடியாத அனுபவங்களின் தொகுப்பு. நடிகர்கள் மீதான ஈர்ப்பைத் தாண்டிய ஒரு அடர்ந்த கோடு என்னுளில்  படர்ந்திருந்தது. அது நான் அப்போது கேட்டுக்கொண்டிருந்த எனது சமகால இசையை மீறியது. இளையராஜா எனது விருப்பத்திற்குரியவராக இருந்த காலமது.

எங்கேயும் எப்போதும் என்ற பாடல் கேட்ட எல்லோரையும் அண்டார்டிக்கா குளிர் காற்று போல ஆட்கொண்டது. அப்போது ஒரு பள்ளிக்கூடப் பையனான நான் எம்மாத்திரம். கேட்க மிகவும் பரவசமான பாடல் அது. அதன் பின் சம்போ சிவா சம்போ என்றொரு திகைப்பான பாடல். பின்னர் யாதும் ஊரே யாவரும் கேளிர். கடைசியாக இனிமை நிறைந்த உலகம் இருக்கு என்ற நெருப்புத் தொடுகை. அப்போதுதான் எம் எஸ் வி என்ற ஆளுமையின் விரலிசையில் வெளிப்படும் மரணமில்லா மெட்டுக்கள் புரிய ஆரம்பித்தன.

பாடல்கள் மட்டுமே என்னை அந்தப் படத்தை நோக்கி திரும்ப வைத்தன. இருந்தும் நினைத்தாலே இனிக்கும் அந்த காலத்து இளைஞர்களின் இதயத் துடிப்பாக நிலைத்தது. என் வயது பசங்கள் ஜெயப் பிரதாவை சிலாகித்த போது எனக்கோ நம்ம ஊரு சிங்காரி பாடலின் மீது காதல் உண்டானது.

இப்போது சமீபத்தில் ஒரு டீவி சேனலில் இந்தப் படத்தை மீண்டும் காண நேர்ந்தது. நான் எனது பால்ய நண்பர்களை கண்டுகொண்டேன். அவர்களோடு நான் உரையாடிய சம்பாஷணைகள் மீண்டு வந்தன. எத்தனை ஞாபகங்களை இந்தப் படம் எனக்குள் புதைத்து வைத்திருக்கிறது?

திரும்பிப் பார்க்காமல் கடந்து போன பல படங்களில் இதுவும் ஒன்றாக இருந்தாலும் மிக மென்மையான மேலும் ஆழமான பல ஞாபகத் தடங்களை காற்றுகள் கலைத்த நினைவுகள் போல தோன்றச் செய்யும் ஒரு பரவசக் குறியீடாக இது உயிர் பெற்றிருக்கிறது என்னுள்.  மேலும் என்னைப் போல் பலருள்.

மிகவும் பொருத்தமான தலைப்புதான்.

நினைத்தாலே இனிக்கும்.

நினைத்தாலே இனிக்கக்கூடிய பல வசந்தங்கள் நம் எல்லோரிடமும்  உயிர் பெற காத்திருக்கின்றன.









Sunday 5 August 2018

இரு துருவ இசை


ஒரே வானத்தில்தான் காகங்களும் பறக்கின்றன கழுகுகளும் பறக்கின்றன. 






இது மிக சமீபத்தில் நிகழ்ந்தது. அண்மையில் ஒரு  பகல் நேர  பயணத்தின் பொழுது ஓட்டுனரின் விருப்பங்கள் பாடல்களாக ஒலித்துக்கொண்டிருந்தன. இது போன்ற பயணங்களில் பொதுவாக இளையராஜா பாடல்கள் இல்லாமலிருக்காது. கேட்கிறார்களோ இல்லையோ அது பாட்டுக்கு ஒலித்துக்கொண்டிருக்கும். ஆனால் இப்போது நான் கேட்டதோ  பல கலவையான கானங்கள்.  சற்றும் தொடர்பின்றி,  ஒரு குழந்தை வரைந்த ஓவியம் போல ஒலித்தன.

கலைடாஸ்க்கோப்பில் ஓவ்வொரு அசைவிலும் சட்டென வடிவங்கள் மாறுவது போல காக்கை சிறகினிலே நந்தலாலா, பின் பூவே செம்பூவே , பின்னர் ராஜ ராஜ சோழன் நான், பிறகு தெய்வம் தந்த வீடு என பாடல்களின் உருவங்கள் மாறின. ஒருவேளை ஜேசுதாஸ் பாடல்கள் கொண்ட இசைத் தொகுப்பாக இருக்கலாம் என்று நான் தீர்மானித்த கணத்தில்  திடீரென வந்தது அந்தப் பாடல்.

காத்திருக்கும் சமயத்தில் வெடிக்காமல் நாம் கடந்துபோகும் போது அதிரடியாக திடுமென வெடிக்கும் தீபாவளி வெடி போல் சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா? பாடல் ஒலிக்கத்துவங்கியது.  சரிதான் அரிதான  ஏதோஒரு மர்மமான இசை வரிசை போல என்றெண்ணிக்கொண்டேன் நான்.  முதல் சரணம் முடியும் முன்னரே ஓட்டுநர் என் பக்கம் திரும்பாமலே பேசினார்:     "உண்மை சார். எங்க போனாலும் நம்மூர் நம்மூர்தான் சார். அத அடிச்சுக்க முடியாது".

 நான் "ஆம்" என்றேன். தமிழ்நாட்டை விட்டு வெகு தொலைவில் இருந்த அந்த வருடங்கள் என் எண்ணங்களில் அமிலங்களாக மிதந்தபடி இருந்தன. எனக்கு மட்டுமல்ல சொந்த ஊரைத் துறந்து சென்ற எல்லோருக்கும் இந்த எண்ணம் வராமல் இருப்பது சற்று இயலாத காரியம். அப்படி சொல்பவர்கள்  செயற்கைத்தனம் மிகையாக கொண்டவர்களாக இருக்கலாம்.

புலம் பெயர்ந்த மக்கள் குறித்த பதிவு இது என்ற எண்ணம் உங்களுக்கு இப்போது ஏற்பட்டால் ஒரு சிறிய திருத்தம். இது இசை குறித்த எனது பார்வையின் மற்றொரு துளி.

இந்தியன் என்ற படத்தில் இயக்குனர் சங்கர் ஒரு நவீனத்தை அறிமுகம் செய்தார். அது ஒரே ஒரே பாடல் காட்சிக்கு வெளிநாடுகளுக்கு சென்று படமாக்குவது. டெலிபோன் மணிபோல் பாடல் காட்சி ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டது அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு விஷயம். அதன் பின்னர் இந்த ஒரு காட்சிக்கு மட்டும் ஸ்பெயின், மெக்சிகோ , சைனா செல்லும் நவீனம் தரை டிக்கட் ரேஞ்சுக்கு உருமாறிப்போனது.


ஆனால்  எழுபது எண்பதுகளில் வெளிநாடுகளுக்கு சென்று படம் இயக்குவது மிக மிக அரிதான ஒன்று. படத்தை விளம்பரம் செய்வதற்கு இது ஒரு சங்கதியே போதுமானதாக இருந்த காலங்கள் உண்டு.  இயக்குனர் ஸ்ரீதர் சிவந்த மண் படத்துக்கு வெளிநாடு சென்று படமாக்கியது தமிழ்த் திரை அதுவரை கண்டிராத புதுமை. அதன் பின்னர் உலகம் சுற்றும் வாலிபன் தமிழ்நாட்டில் ஒரு சூறாவளி போல சுழன்றடித்தது.  பின்னர் நினைத்தாலே இனிக்கும்,  பிரியா போன்ற படங்கள் மேல்நாட்டு மோகத்தை இன்னும் அதிகமாக்கின.

மீண்டும் பயணத்திற்கு வருவோம்.

சொர்க்கமே என்றாலும் என்ற இந்தப் பாடல் ஊர விட்டு ஊரு வந்து என்ற 91ம் ஆண்டில் வந்த படத்தில் இடம்பெற்ற மிகப் பிரபலமான பாடல். இது ஒலிக்காத தென்மாவட்ட பஸ் பயணங்களே அதிகமாக இருக்க முடியாது.  மிகவும் எளிமையான வரிகள், அதே எளிமையான மெட்டு, வெகு சாதாரணமான இசை, இயல்பான குரல் என்ற இளையராஜாவின் முத்திரை சற்றும் பிசகிப் போகாத பாடல்களில் இதுவும் ஒன்று. கேட்கும் பலர் ஆஹா என்று சிலாகிக்கும் பாடல்.

பாடல் முடியும் முன் ஓட்டுநர் மீண்டும் என்னிடம் பேசினார்: "நானும் மலேசியா சிங்கப்பூர் போனவன்தான் சார். அங்கெல்லாம் பணம் மட்டும் வரும்."  நிறுத்தினார் பேச்சை. இன்னும் எதையோ வெளிப்படுத்த நினைப்பதை போல இருந்தது அந்த  இடைவெளி. "இப்ப சொந்த ஊர்ல இருக்கறது நிம்மதியா இருக்கு. என்ன, இப்ப என்கிட்டே  அந்த அளவுக்கு பணம் இல்ல. அதான் ஒரே பிரச்சினை".

அவர் சொன்னது சுய மண்ணை துறந்து  அயல் நாட்டில் பணி செய்யும் பலரது இதயத்தின் துடிப்பு. என் இதயத்திலும் இதே துடிப்பு ஒரு காலத்தில் இருந்தது. அதைப் பற்றி எழுத நினைத்தாலும் தற்போது எனது சுய சரிதை அவசியமில்லை என்பதால் ஒரு முற்றுப் புள்ளி. இருந்தும் உலகம் குறித்த நமது பார்வை அகலமடைய வேண்டுமானால் நாம் சில அகண்ட அடிகள் எடுத்து வைக்க ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று மட்டும் சொல்ல விருப்பம்.

 சொர்க்கமே என்றாலும் என்ற பாடல் என்னை மற்றொரு பாடல் குறித்து சிந்திக்க வைத்தது. அந்த மற்றொரு பாடல் வேறு வகை.  இரண்டுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இரண்டும் இரு துருவங்களைச் சேர்ந்த பாடல்கள். Opposite poles attract என்ற விஞ்ஞான விதியின் படி அந்த முரண் ஒன்றே இவ்விரு கானங்களையும்  ஒன்றிணைக்கிறது.

முதல் பாடலை குறித்து பேசியாயிற்று. அந்த இரண்டாம் பாடல் இதுதான். அது  1979இல் வெளிவந்த நினைத்தாலே இனிக்கும் படத்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர்.

உலக அன்பின் எல்லைகளற்ற மகிழ்ச்சி பாடலின் ஒவ்வொரு வரியிலும், இசை இழையிழும் ஆர்ப்பாட்டமிலாது வெளிப்படும் ஒரு மறக்க முடியாத மகிமை இந்தப் பாடல்.  எம் எஸ் வியின் மெட்டுக்கள் குறித்து  எழுத ஆரம்பித்தால்,  எனக்கு ஒரு பதிவு தேவைப்படும். அவரது மெட்டும், இசையமைப்பும்  என்னை இன்னும் ஆச்சர்யத்தில் ஆழ ஆழ அழுத்தும் ஒரு அபூர்வம்.

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா, 
யாதும் ஊரே யாவரும் கேளிர்  

 என்ற இந்த இரண்டு பாடல்களுக்கு இடையே நான் எந்த இணைக்கோடையும் வரையவில்லை.  ஒன்று நம் வீடே உலகம் என்ற சிந்தனையின் குழந்தைத்தனமான குதூகலம். மற்றொன்று உலகமே நம் வீடு என்ற பிரபஞ்ச அன்பின் கோட்பாடுகளற்ற மேன்மையான பக்குவம். இரண்டில் ஒன்று கீழே  ஒன்று மேலே என்ற முதிர்ச்சியற்ற விமர்சனத்தை நான் முன் வைக்கவில்லை. ஆனால் சற்றே யோசிக்க வைக்கிறது இவ்விரு பாடல்களின் பின்னே இருக்கும் அந்த "அன்பின் உலக தத்துவம்".

நட்சத்திரங்களை நம் காலடியில்  தேங்கியிருக்கும் மழை நீரியிலும் பார்க்கலாம். அல்லது மேலே இரவு வானத்திலும் காணலாம்.










Thursday 4 January 2018

விரியும் சிறகுகள்

நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. பலவித பணிகளுக்கு மத்தியில் பதிவு எழுதுவது சற்றே சிரமத்தை ஏற்படுத்துவதை மறுப்பதற்கில்லை. இது ஒரு தொய்வு. அவசியப்படும் இடைவெளி. வீடு மாற்றல், தனிப்பட்ட வகையில் எனக்கேற்பட்ட ஒரு ஆழ்ந்த இழப்பு,  காரணங்களின்றி சடுதியில் வாழ்க்கையின் வண்ணங்கள் தன்னியல்பு இல்லாது மாறிவிடும் மந்திரம், நேரத்தை அபகரித்துக்கொள்ளும் இணையமில்லா இரண்டாம் உலகம் என இணையம் நோக்கி வரவேண்டிய சாலைகளை பல நடைமுறை நிகழ்வுகள் அடைத்துவிடுகின்றன.

இருந்தும் இணையத்தை விட்டு விலகி இருப்பது ஒரு விதத்தில் நல்லதாகவே தெரிகிறது. ஆனால் அதைத் தாண்டிய எதோ ஒன்று என் விரல்களில் மின்சாரம் பாய்ச்சி என் சிந்தனைக்களுக்கு வார்த்தைகள்  கொடுப்பதை உணர முடிகிறது. 

பல பதிவுகள் draft டாக  கலைந்து  போன படுக்கை போல ஒழுங்கின்றி இருக்கின்றன. அவற்றை சீர் செய்து இந்த வருடத்தின் முதல் இசைப் பதிவை வெளியிட விருப்பம். 

பார்ப்போம். 



Sunday 16 April 2017

மாறும் இசை மரபுகள்

 
 

   தற்போது அதிகமாக விவாதிக்கப்பட்ட கருத்தாக்கங்களில் ஒன்றான இசைக்கான உரிமை பற்றி நிறையவே வாசித்தாயிற்று. இப்போது எழுந்திருக்கும் ராயல்டி விவகாரங்களோ, பாடலின் உரிமை குறித்த வழக்குகளோ   வணிக அம்சங்கள் கொண்டவை. அவை முற்றிலும்  பாடலை உருவாக்குபவர்களுக்கும் அதை உபயோகிப்பவர்களுமான வியாபார யுத்தம்.  இசையின் இன்னொரு பக்கத்தில் இருக்கும் ஒரு சராசரி இசை ரசிகனுக்கு இதில் பங்கில்லை. ஒரு பாடல் யாருக்கு சொந்தம் என்பது குறித்த சந்தேகங்கள், விவாதங்கள், நியாயங்கள் இன்னும் நம் தமிழிசையில் ஒரு தெளிவான வரையறுத்தலுக்கு உட்பட்டு விவரிக்கப்படவில்லை. எல்லாமே ஆங்கில இசைப்  பாரம்பரியத்தின் நீட்சியாக  தொடர்கிறது. 

     அதே சமயம் மேற்கத்திய சங்கீதத்தின்  பின்புலம் குறித்த போதிய அறிவு நம்மிடம் பெரிதும் இல்லை என்ற உண்மையை மறுக்க முடியாது. தமிழிசை மேற்கத்திய இசையின் வணிக அம்சங்களை தற்போது சுவீகாரம் எடுத்துக்கொண்டாலும் நமது சங்கீதப்  பாரம்பரியத்தில் இது  ஒரு பொருந்தாத வடிவமாகவே  காட்சியளிக்கிறது.  அதற்கான காரணங்கள் பல.

    முதலில் இசை என்னும்  மகத்துவம் ஒரு தனி ஆளுமையாக நம்மிடம் பொதுவாக இல்லை. அவ்வாறு நிலைபெற்றிருக்கும் இசையின் மீது பலருக்கு மோகம், ஈர்ப்பு போன்ற இத்யாதிகள்  கிடையாது. இந்த வாக்கியம் சற்று துருத்தலாக தெரிந்தாலும் இதுவே உண்மை. பெரும்பாலும் நமக்கு இசை என்பது மற்றொரு மிகப் பிரம்மாண்ட விருட்சத்தின் நிழல். அந்த விருட்சம் என்னவென்று நான் குறிப்பு வரையாமலே உங்களால் எளிதில் புரிந்துகொள்ளமுடியும். இசைக்கான தனிப்பட்ட சாலைகளை பெரிய அளவில் நாம் இதுவரை அமைக்கவில்லை. அப்படி உருவான சாலைகளும் சாமானியர்களை சென்றடையாது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் மேட்டுக்குடி மனோபாவத்திற்கு அடிகோலின.

   ஆனால் மேற்கத்திய நாடுகளில் இசை என்பது அவ்வாறதானதல்ல. இசையின் பல்வேறு கூறுகள் அங்கே காலம் காலமாக சிறிது சிறிதாக ஊன்றப்பட்டு, நூற்றாண்டுகளாக  ஆழமாக, அழுத்தமாக வளர்த்தெடுக்கப்பட்டு, எதையும் சாராத இசைக் கோட்பாடுகள் வழியே அங்கே மேற்கத்திய சங்கீதம் ஒரு தனியான, மேன்மையான தகுதிக்கு உயர்ந்துள்ளது. அங்கேயும் மேட்டுக்குடியினரின்  இசை, சாமானியர்களின் இசை என்ற பகுப்புகள் உண்டு. இசை  என்பது மிக மிகப் பிரதானமான ஒன்றாக அங்கே வடிவமைக்கப்பட்டுள்ளது.   அதை யாராலும் மாற்றியமைக்க இயலாது.

     ஒப்பீடடளவில் நம் தமிழிசை முழுதும் எதிர்மறையான இன்னொரு புள்ளியில் நிற்கிறது.  மார்கழி கால சாஸ்திரீய சங்கீதங்களையும் , ரிமோட் கருவியில் பொத்தான்களை அழுத்தும்போது திரையில் சில வினாடிகளில் தோன்றி கடந்து போகும் பொதிகை டீவி  போன்றவைகளில் ஒலிக்கும் கானங்களையும் இங்கே நினைவில் கொள்ளவேண்டாம்.  மேற்கத்திய இசை போன்றே ஒரு தனி ஆளுமையாக உயர்ந்திருக்க வேண்டிய நமது தமிழிசை, முப்பது நாற்பதுகளில் ஏற்பட்ட  சினிமா என்ற காட்சி வடிவத்தின் முன்னே வீழ்த்தப்பட்டுவிட்டது.  இன்று நமக்கு இசை அல்லது பாடல் என்றால் அது எந்தப் படத்தைச் சார்ந்தது என்ற கேள்வியே பிரதானம். சினிமா என்ற அந்தக் கவர்ச்சி நாகம்  நமது இசையை விழுங்கியதன்   விளைவு ஒரு மகத்தான பாடல் தனக்கான சுயத்தை முழுதும் இழந்து ஒரு நடிகனின் முகமாக வார்க்கப்பட்டு சிதைக்கப்படுகிறது.

      இங்கே ஒரு பாடலின்  வெற்றி என்பது வெறும் இசை மட்டுமல்லாது அது அடையாளப்படுத்தும் திரைப்படத்தின் வெற்றியை சார்ந்தும் இருக்கிறது. ஒரு படத்தின் வெற்றி  அதனுடன் தொடர்புடைய பலரை உச்சியில் நிறுத்திவிடுகிறது. பாடல்களுக்காக ஓடிய படங்கள் என்பது வெகு சில உதாரணங்களே. "பாட்டு நல்லாயிருந்தது என்ன பிரயோசனம்? படம் ஓடலியே!" என்ற விமர்சனம் நம்மிடம் மிகப் பொதுவானது.

      இசையை இசைக்கெனெ விரும்பும் மனோபாவம் நம் பொதுபுத்தியில் இன்னும் ஒரு முக்கிய இடத்தைப்  பெறவில்லை.

        உதாரணமாக புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்க்காக தோழா ஏழை நமக்காக என்ற பாடலை பெரும்பான்மையினோர் "எம் ஜி ஆர் பாடல்" என்று தீர்மானிப்பதில் எந்தவித குற்றயுணர்ச்சியும் கொள்வதில்லை. பாடலை எழுதிய வாலி என்ற கவிஞனும் அதற்கான மனதை மயக்கும் மெட்டு அமைத்து அதை ஒரு மரணமில்லா  கானமாக்கிய எம் எஸ் வி யையோ யாரும் பொருட்படுத்துவதேயில்லை. இதேபோல் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே  என்ற பாடலும் வெறும் சிவாஜி பாடல் என்ற குறிப்புடன் பலரை திருப்தி செய்துவிடுகிறது. அதற்கு உழைத்த மாபெரும் ஆன்மாக்களை நாம் சடுதியில் கலைத்துப் போட்டுவிடுகிறோம். என்னடி மீனாட்சி  அது கமலஹாசன் பாடும் பாட்டலாவா என்ற முற்றுப்புள்ளியும் சம்போ சிவசம்போ ரஜினிகாந்த் அதகளம் பண்ணிய பாடலாகவும் நிலைபெற்றுவிட்டன.  இந்த அநீதியான அபத்தத்தின் முடிச்சுகளில் நியாயத்தை தேடுவது மிக சிக்கலான காரியம்.

         இந்த நிலைமை மாறவேண்டிய நிர்ப்பந்தம் எண்பதுகளில் நிகழ்ந்தது. இந்த மாற்றத்தின் பின்னே இருந்தது  நவீன இசையின் முகமாக அப்போது அறியப்பட்ட ஒருவர்.

       எண்பதுகளில் திரையில் நடிகர்கள் தாண்டி இன்னொருவரின் பெயருக்கு அரங்கங்கள்  அதிர்ந்தன.  விசில்கள் விளையாடின. அது இளையராஜா. அன்னக்கிளி, பதினாறு வயதினிலே, இளமை ஊஞ்சலாடுகிறது, பிரியா போன்ற அவரது துவக்ககால அணிவகுப்புகளுக்கு மக்கள் அளித்த பாராட்டாக அந்த கைத்தட்டல் பொருள் கொண்டது. அவருக்கு முந்தின தலைமுறை இசை ஜாம்பவான்களுக்கும்  கிடைத்திருக்க  வேண்டிய இந்த அங்கீகாரம்  எண்பதுகளில்தான் இசையமைப்பாளர்களுக்கு   சாத்தியமானது.

      ஒரு திரைப்படத்தில் வரும்  பாடலோ பின்னணி இசையோ வெறும் ஜிகினா வேலை கிடையாது.   அது ஒரு படைப்பின் ஆழமான சுவடு.

  நடிகர்கள் மற்றவர்களை விட வெகு எளிதாக மக்களின் மனதை ஆக்ரமித்துக்கொள்ள முடியும். அவர்கள் அழுதாலோ, வீரம் காட்டினாலோ, காதலித்தாலோ, நையாண்டி செய்தாலோ  அவை யாவுமே பார்ப்பவர்களை ஒரு உடனடி பாதிப்புக்கும் எதிர்வினைக்கும் இட்டுச் சென்று விடும். கைத்தட்டலோ, கல்வீச்சோ  இதன் ஆயத்த பரிசுகள்.  ஆனால் ஒரு இசைஞன் தனது முகம் காட்டாது தன் மேதமையை மக்களிடம் கொண்டுசேர்ப்பது அவ்வளவு சுலபமல்ல.

   அவனது ஒரே முகம் இசை மட்டுமே. இசைக்கருவிகள்  கொண்டு அவன் படைக்கும்  ஒரு இணை சினிமா கண்களுக்குத் தெரியாதது. ஆனால் அது நாம் காணும் காட்சிகளின் ஆன்மாவாக இருக்கிறது. மனதை துளைக்கிறது. நெருடுகிறது. நெஞ்சத்தை வருடுகிறது. கண்ணீருக்கும் புன்னகைக்கும் ஏதுவான களம் அமைக்கிறது. இசை இல்லாவிட்டால் நமது சினிமா இறந்துபோய்விடும்.

 இன்றைய சூழலில் இளையராஜாவைத் தொடர்ந்து ரஹ்மான் போன்றவர்களுக்கு கிடைத்திருக்கும் மரியாதையும் அதன் விளைவாக எழுந்திருக்கும் ஏகமான எதிர்ப்பார்ப்புகளும் இசை என்னும் அந்த பிரமாண்டத்தை நாம் பார்க்கும் பார்வை மாறிக்கொண்டு வருவதை குறிப்பதாக தோன்றுகிறது. ஒரு விதத்தில் இது மிகவும் ஆரோக்கியமானதும் கூட.

        சில மரபுகள்  மாறத்தான் வேண்டும். தவறில்லை.
       
     
 

   

Sunday 19 February 2017

கலைந்து போகாதே என் கனவே!


எனது பார்வையில் இசைக்கான தேடல் முற்றிலும் உங்கள் தனி இசை ரசனை சார்ந்தது. உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதுதான் உங்கள் இசைக்கான அடையாளம். ஆனால் காலம் செல்லச் செல்ல அந்த ரசனை பல வடிவங்களாக  மாறிவிடுகிறது.   ஒரு இடத்தில் நீங்கள் சற்று நின்றுகொண்டு உங்களையே என் இசை எது? என்று கேட்டுக்கொள்ள நேரிடும். எந்த கோட்பாடுகளை வைத்து நான் எனக்குப் பிடித்த இசையையும், பிடிக்காத இசையையும் தீர்மானிக்கிறேன் என்ற தெளிவு அப்போது ஏற்பட்டேயாகவேண்டும். இல்லாவிட்டால் இசை என்ற பெயரில் வெளிவரும் எல்லா அபத்தங்களையும் ஆபாசங்களையும் மற்றவர்கள் சிபாரிசு செய்வதற்காக ரசிப்பது போல நடித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.








                 கலைந்து போகாதே என் கனவே!








மே மாதம், 1985.

நாம் எல்லோருக்கும் விரும்பித் திரும்பிப் பார்க்கக்கூடிய ஒரு காலகட்டம் இருக்கும். அது எப்போதுமே கடந்த காலத்தின் ஒரு துணுக்காகத்தான் இருக்க முடியும். எனக்கும் உண்டு. மேலே இருக்கும் இந்தப் பதிவின் அந்த முதல் வரி எனக்கானது.  The summer of '85 always melts me into memories.

மனித முயற்சியில் நாம்  போராடி நிரூபிக்கவேண்டிய பல சாத்தியமில்லாத சவால்களை ஒரு இசை எத்தனை எளிதாக காலத்தின் மீது காலடி வைத்து தன் சுவட்டை பதித்துவிட்டு செல்கிறது! ஒரே ஒரு பாடல் எத்தனை நினைவு இழைகளை உயிரூட்டி முடிந்துபோன அந்த கண நேரத்து இன்பத்தை மனதுக்குள் பிரதியெடுக்கிறது!

எண்பதுகளின் துவக்கத்திலிருந்து என் இசை தாகம் மேற்கத்திய நீரூற்றுகளில் திரவம் தேடியது.  பீட்டில்ஸ், ரோலிங் ஸ்டோன்ஸ், எல்விஸ் பிரெஸ்லி, எரிக் கிளாப்டன், லெட் செப்பலின், Pink Floyd. ஈகிள்ஸ் போன்ற மேல்தட்டு இசைக் குழுக்கள் பற்றி அப்போது எனக்கு எதுவும் தெரியாது. அதற்கான பாதைகள் எனக்கு முன் அமைக்கப்படவில்லை. எனவே எனக்கு தெரிந்த, என் வசப்பட்ட மேற்கத்திய இசையான Boney M ஒன்றே என் வானத்தில் தோன்றிய  முதல் மேற்கத்திய மேகம். அதுவும் கூட என் பள்ளி நண்பன் நான் ஆங்கிலப் படங்களை விருப்பத்துடன் பார்ப்பது கண்டு அவனாகவே என்னிடம் ஒருநாள் கொடுத்த ஒரு போனிஎம் கசெட் மூலம் உருவானது. நானாக தேடிப் போகவில்லை.



ஆனால் அதைக் கேட்ட ஒரே நொடியில் ஒரு புதிய வானம் எனக்குள் தோன்றியது. போனிஎம் படைத்த அந்த புதுவானில் அந்த அதிரும் இசை எனக்கு இறக்கைகள் அளித்துக்கொண்டேயிருந்தது. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ஞாபகத்தை வரைந்து சென்றது. மொழி தாண்டிய உணர்வுகளுக்கு பரவசம் ஒன்றே இலக்கணமாக இருக்கவேண்டும். இல்லையென்றால் kitar என்று எழுதிய ஒரு சிறுவனுக்கு அந்த கிடார் இசையின் மின்சாரம் எப்படி புரிந்திருக்க முடியும்?

மட மடவென போனிஎம் தொகுப்புகள் எங்களது வானொலி அறையின் மேல் அடுக்கில் மஞ்சள் பூக்கள் போல பரவின. தூரங்கள் எனக்கு ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. எங்கும் செல்ல தயாராக இருந்தேன் போனிஎம் அங்கிருக்கும் என்றால்.  இதற்கிடையே  குவீன், வாம், எடி கிராண்ட், அபா, ஓசிபிஸா, போன்ற இசை குழுக்களும் எங்கள் வானொலி அறைக்கு வருகை தந்தன.

இருந்தும் போனிஎம் என் நெஞ்சத்துக்கு நெருக்கமான ஒரு இசையாக இருந்தது. நைட் பிளைட் டு வீனஸ் பாடலில் அதிரடியாக ஒலிக்கும் ட்ரம்ஸ் இசை  கொடுத்த போதையும்  பாடல் முடியும் தருவாயில் அப்படியே அந்த இசை போனிஎம் மின் மிகப் பிரபலமான ரஸ்புடின் பாடலுக்கு உருமாறும் அந்த சிலிர்ப்பான கணமும்  இன்று கூட அதே பழைய பரவசத்தை பகிர்கிறது.



மேலே குறிப்பிட்டுள்ள அந்த summer of 1985 வந்தபோது நான் பள்ளிப்பருவத்தின் இறுதிச் சுவட்டில்  இருந்தேன்.  அந்தக்  கோடையில் எங்கள் வீடு அணிந்துகொண்ட களிப்பும், உற்சாகமும், கொண்டாட்டமும், சிரிப்பலைகளும், சந்தோஷங்களும்,எளிமை கொண்ட ஏகாந்தகளும், ஆனந்தமும் என் ரத்தத்தில் இன்றுவரை நிரந்தரமாகத் தங்கியிருக்கின்றன. எனது மூளை நியூரான் அமிலங்களின் அந்த 85ஆம் ஆண்டில் கோடைக்  காலம் சிறிய சிறிய ஞாபகத் துணுக்குகளாக மிதந்து கொண்டிருக்கின்றன.

ஏறக்குறைய இருபது நாட்கள் நீடித்த அந்த வசிய கணங்கள் விட்டுச் சென்றிருக்கும் சுவடுகள் ஒன்றே சில நேரங்களில் நான் என்னைத் தொலைக்க ஏதுவான அரவணைப்பு தருபவை. அப்போது நான் கேட்ட ஒவ்வொரு பாடலின் பின்னேயும் இருந்த ஒரு இனிப்பு ஊசி இன்றும் என் உடலில் பாய்கிறது. முடிந்துபோய்விட்ட அந்தக் கோடைக்காலம் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டேயிருக்கிறது என்னுள்.

காலம் வரைந்த குடும்பச் சித்திரத்தில் இணைந்துவிட்ட  என் உறவினர்கள், நினைவுகளில் மட்டுமே பார்த்துக்கொள்ளும் என் பால்ய சிநேகிதர்கள்,  இந்த எந்திர யதார்த்தத்தில் இடமில்லாமல் அகன்று போய்விட்ட நான் வாழ விரும்பிய கனவு வாழ்க்கை என்று நான் சுவைத்த எல்லாமே இன்று முகம் மாறிப்போய்விட்ட நிலையில் அதே தீர்க்கமான அந்தப்  பழைய உலகம் ஒரு இசையின் பின்னே ஒளிந்திருக்கிறது. ஒவ்வொரு நான்கு நிமிடப் பாடலுக்குப் பின்னும் மணிக் கணக்கான நினைவுகள் அடங்கியிருக்கின்றன.

எத்தனை நேசித்தேனோ அத்தனை அதிகமாக போனிஎம் பற்றிய எதிர்மறை விமர்சனங்கள் நிறைய நான் சந்திக்க நேர்ந்தது. அதில் முதன்மையானது அது ஒரு டிஸ்கோ இசை என்பது. அது உண்மைதான். டிஸ்கோ வகையாக இருந்தாலும் மற்ற நாலாந்திர டிஸ்கோ குழுக்களுக்கும் போனிஎம் இசைக்கும் மிகுந்த வேறுபாடு இருக்கவே செய்தது.

போனிஎம் எனது இசை வரைபடத்தில் புதிய இலக்குகளையும், சாலைகளையும் உண்டாக்கியது. நான் நகர்ந்துகொண்டேயிருந்தேன். டிஸ்கோவிலிருந்து பாப். பிறகு ராக், ஹெவி ராக், ரகே, ஜேஸ், ப்ளூஸ், சிந்த் பாப் என்று எனது தோட்டத்தில் பல தாவரங்கள் தலைகாட்டின. டெபேச்சே மோட் போன்ற இசைக் குழுக்களிடம் வந்து சேர்ந்தபோது நான் போனிஎம் இசையை டிஸ்கோ என்று முடிவுகட்டி என் ஞாபக அடுக்குகளின் கீழே தள்ளி புதைத்திருந்தேன். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன நான் கடைசியாக போனிஎம் பாடல் கேட்டு.


மேலும் கல்லூரி சேர்ந்த புதிதில் நான் போனிஎம் பாடல்கள் கேட்பதை அறிந்த நண்பர்கள் சிலர் என்னை போனிஎம் என்று அழைத்து என்னை சிறுமைப் படுத்துவதில் சிறிது பேரானந்தம் கொண்டார்கள். அவர்களது பார்வையில் போனிஎம் வெறும் பாமரர்கள் கேட்கும் இசை. "நாங்களெல்லாம் ஜார்ஜ் மைக்கல், எரிக் கிளாப்டன், மைக்கல் ஜாக்சன் கேட்கிறவங்க" என்ற பகட்டு அவர்கள் பேச்சில் எச்சிலோடு சேர்ந்து தெறிக்கும். நானோ மைக்கல் ஜேக்ஸன் ஜுரம் பரவிக்கொண்டிருந்த நேரத்தில் கூட அந்தப் பாடல்களை விரும்பியது கிடையாது. ஆனால் வேறு வகை இசைகளில் காதல் ஏற்பட, ஒரே மாதத்தில் ஆஹா, பெட் ஷாப் பாய்ஸ், சிம்ப்ளி ரெட், போலீஸ் என்று  நான் என் நிறம் மாறினேன். கல்லூரியின் இரண்டாவது வருடத்தில் மைக்கல் ஜாக்சன் விரும்பி ஒருவனிடம் மென் அட் ஒர்க் குழுவின் Be Good Johnny பற்றி கேட்டேன். "நீ போனிஎம் மட்டும்தானே கேப்பே?" என்றான் குழப்பத்துடன். ஆறு மாதம் கழித்து அவனை  நியூ ஹாஸ்டலில் பார்த்தபோது, செண்பகமே செண்பகமே என்று மாறிப்போயிருந்தான். "இன்னுமா சாக்ஸன் (அதாவது மைக்கல் ஜாக்சன் இப்போது அவனுக்கு பிடிக்காதாம்) பாட்டையெல்லாம் கேட்கிறாய்?" என்றான் இகழ்ச்சியாக. "நீயெல்லாம் நல்லா வருவடா!" என்று அவனை ஆசீர்வதித்தேன்.

மெட்றாஸ் வந்தபோது  என் இசைக் கிளைகள் The Alan Parsons Project, Supertramp, Starship, Pink Floyd,The Cars என படர்ந்து விரிந்திருந்தன.நான் ஒரு காலத்தில் போனிஎம் ரசித்துக் கேட்டேன் என்பதே எனக்கு கொஞ்சம் வெட்கமாக இருந்தது. "கேட்டிருக்கேன். ஆனா அவ்வளவா பிடிக்காது" என்று பதில் சொல்லியிருக்கிறேன் போனிஎம் பற்றிய கேள்விக்கு. வளர்ந்துவிட்ட பிறகு திரும்ப அணிய விரும்பாத அரை டிராயரை போல போனிஎம் எனக்குத் தோன்றியது.

இரண்டாயிரம் ஆண்டில் வெளிவந்த மேற்கத்திய இசை என்னை கதிகலங்க அடித்தது. நிர்வாணா, பேர்ல் ஜேம், ரெட் ஹாட் சில்லி பெப்பெர்ஸ் போன்ற அப்போதைய நவீன இசைக் குழுக்கள் அதுவரை கேட்ட ராக் ஒலியை முற்றிலும் மாற்றிப்போட்டு பின்நவீனத்துவ இசைக்கு அடிகோலின. ராக் இசையின் மிக மையமான லீட் கிடாரின் ரிஃப், தனி ஆலாபனைக்கு கதைவடைத்தன. இந்த புதிய இசை குழுக்களின் பாணி  ராக் இசையை கொலை செய்தது.   என் மேற்கத்திய இசை தாகம் முடிந்துபோனது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எழுபதுகளில் basement இசையாக இருந்த பங்க் இசையே தற்போது மாடர்ன் ராக் என்ற பெயரில் வெற்றி பெற்றிருக்கிறது. கிரீன் டே போன்ற நவீன ராக் இசை குழுக்கள் எழுபதுகளில் இருந்திருந்தால் இரண்டு இசைத்தொகுப்புகள் கூட வெளிவந்திருக்காது.



ஜான் மேஜர், ஈகிள் ஐ செரி, வால்பிளாவர்ஸ் போன்றவைகள் கேட்பதற்கே அலுப்பானவை. எந்தவித மெலடியும் இல்லாமல் கவிதையை பேசியே பாடலை "பாடுவார்கள்".

இதுபோன்ற ஒரு சமயத்தில்தான் ஒரு முறை போனிஎம் இசைத்த கிறிஸ்மஸ் இசை தொகுப்பு  என் நண்பர் ஒருவருக்காக வாங்க நேர்ந்தது. என் பள்ளி நாட்களில் கேட்ட பாடல்கள் என்பதால் -அதுவும் தற்போது சி டி என்பதால் கூடுதல் ஆர்வம் வேறு-  மீண்டும் கேட்டேன். பெலிஸ் நவிடாட், மேரிஸ் பாய் சைல்ட் , லிட்டில் ட்ரம்மர் பாய்  பாடல்கள் என்னை எண்பதுகளின் கிறிஸ்மஸ் குளிர் காலங்களுக்கு கூட்டிச் சென்றன. I'll be home for Christmas பாடல் என் மனதில் ஆழத்திலிருந்த அசைவற்று உறைந்து போயிருந்த உணர்ச்சிகளின் மீது தீ வைத்தது. என் எண்ணங்கள் உருகின.



இதைத் தொடர்ந்து போன ஆண்டு ஆமேசான் மூலம் ஐந்து சிடிக்கள் கொண்ட ஒரு போனிஎம் இசை தொகுப்பு வாங்கினேன்.  Take The Heat Off Me, Love For Sale, Nightflight To Venus, Oceans Of Fantasy, Boonoonoonoos என அந்த சிடிக்கள் மின்சார துடிப்புகளாக உருமாறி பின் என் ஸ்பீக்கரின் வழியே மனித குரல்களாக வெடித்தபோது என் பள்ளி நாட்கள், என் பழைய ஒட்டு வீட்டின் ரேடியோ அறை, என் பால்யத்து நண்பர்கள், கம்மாய் தண்ணீரில் பிடித்த மீன்கள் என வண்ணத்துப் பூச்சியின் நிறங்கள் போல பலவித எண்ணங்கள் உதித்தன என் மனதில்.


இவற்றையெல்லாம் மீறிய இன்னொன்று  என்னவென்றால் அந்த இசை தற்போது எனக்கு வெறும் டிஸ்கோ ஒலியாக கேட்கவில்லை. மாறாக என் குடும்ப உறுப்பினர் போல போனிஎம் முன்புபோலவே என் நெஞ்சத்துக்கு நெருக்கமாக ஒலித்தது.  டாடி கூல் பாடலின் முதல் இசையான இடம் வலம் நகர்ந்து செல்லும் கீபோர்டு இசை, அதை தொடரும் ட்ரம் பீட் என நான் கேட்ட அனைத்தும் என்னோடு உரையாடியது.

தொடர்ச்சியாக அந்த ஐந்து இசைத்தொகுப்புகளையும் கேட்ட பிறகு எனக்குப் பிடித்த  காமிக்ஸ் கதையொன்றை படித்த மகிழ்ச்சி என் மனதில் படர்ந்தது. யோசித்துப் பார்த்தாலோ இது உண்மைதான் என்று தோன்றுகிறது.



போனிஎம் கூட ஒரு காமிக்ஸ் போலவேதான். எத்தனை உவகையான நிகழ்வுகளை நான் வாழ்ந்திருக்கிறேன் இந்த இசை ஒலித்த நாட்களில். அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து டேப் ரெக்கார்டரில் பஹாமா மாமா  கேட்ட நிசப்தமான கணங்கள், பள்ளிக்கு செல்வதை தாமதமாக்கிய ரஸ்புடின் அலறல், மதர்லெஸ் சைல்ட் என்ற பாட்டின் இடையே வரும் பிலீவிங் என்ற கோரஸை என் சகோதரிகள் திலீபன் (வீட்டின் முதல் பேரன்) என்று திரித்து அந்தப் பாடலை ரசித்தது, ஹேப்பி சாங் பாடலுக்கு என் அம்மா முதற்கொண்டு சிபாரிசு செய்தது, என் நண்பன் ஒரு திடீர் நாளில் என்னிடம்,"நானும் இனிமே உன்னை மாதிரி இங்க்லிஷ் பாட்டு கேக்கப்போறேன். எத முதல்ல கேக்கலாம்?" என சீரியஸாக தீர்மானம் எடுத்து "போனிஎம் கேளு" என்ற என் கட்டளைக்கிணங்க தொடர்ந்து அரைமணி கேட்டுவிட்டு அதன் பின் அந்தப் பேச்சையே கைவிட்டது, களிம்பாடி லூனா பாடலின் இடையில் அதிரும் சிந்தசைசர் மழை இரைச்சல் கேட்டு மற்ற நண்பர்கள் "ஏண்டா நம்ம ஆளுங்க இந்த மாதிரி மியூசிக்கெல்லாம் போடமாட்டேங்கிறாங்க?" என ஆதங்கப்பட்டது......

போனிஎம் ஒரு துடிப்பான இசைதான். வெறும் பீட்டுகள் மட்டும் கொண்ட டிஸ்கோ வகையை சேர்ந்ததுதான். ஆனால் நாற்பது வருடங்கள் கழிந்த பின்னரும், அந்த இசையில் இருக்கும் ஆன்மா இன்றைய பல நவீன மேற்கத்திய இசையில் கொஞ்சமும் இல்லை. இரைச்சலும், பேச்சுமாக வெறும் ஸ்ட்ரிம்மிங் கிடார் ஓசையுமாக இன்றைய ஆங்கில ராக் இசை பரிதாபமாக முகம் சிதைந்து வருகிறது. Pink Floyd ன் Comfortably Numb போன்ற மீண்டும் தோன்றாத அபூர்வங்கள் இனி வரப்போவதில்லை.




Going Back West என்ற போனிஎம் பாடலை மீண்டும் கேட்டபோது ஒரு கேரம் போர்ட், நான்கு நண்பர்கள் என்றிருந்த   அந்த எண்பத்து ஐந்தின் கோடை கால காலை மறுபடி துளிர்த்தது. 10000 லைட் இயர்ஸ் பாடல் அடுத்து ஆரம்பித்தது. ஆயிரம் முறை கேட்ட பாடல். பாடலின் இடையே சட்டென்று விழுந்த வார்தைகள் இம்முறை தீயின் துணுக்குகளாக சுரீரென சுட்டன.

"I feel like flow  in that clock at the wall,
God how I wish that this dream would go on....."








ஆம். சில சமயங்களில் நான் விரும்பிக் கேட்பதும் இதுவேதான்.

கலைந்து போகாதே என் கனவே!














Thursday 26 January 2017

கண்டேன் காமிக்ஸை

 




   தொடர்ந்து வருடாவருடம் என்றில்லாவிட்டாலும் மெட்றாஸில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு நான் புதியவனல்ல.   ஒரு சில முறைகள் சென்றிருக்கிறேன். அத்தகைய தருணங்களில் கைகளும் பைகளும் கொள்ளாமல்  நிறைய புத்தகங்கள் வாங்கியதாக நினைவில்லை. மூன்று வருடங்களுக்கு முன்பு ஏறக்குறைய நான்காயிரம் ரூபாய்க்கு பதினெட்டு ரஷ்ய இலக்கியங்கள் வாங்கியதுதான் ஒரே நேரத்தில் நான் புத்தகங்களுக்காக செலவு செய்ததின்  உச்சம் என தோன்றுகிறது. மற்றபடி ஒரு விபத்து போல மனதில் தோன்றும்போது புத்தகங்கள் வாங்குவதோடு சரி. இது  நான் வாசிப்பதை நிறுத்திவிட்டேன் என்ற அர்த்தம் கிடையாது.

          வாசிப்பு ஒரு தியானம் போல என்பார்கள். அதிலும் இலக்கிய வாசிப்பு ஒரு காலால் நின்றுகொண்டு தியானம் செய்வதுபோல மகா சிரமமான காரியம். நானோ அத்தனை தூரம் வார்த்தைகளின்  உலகத்துக்குள் தற்போது செல்ல விரும்புவதில்லை.  ஜியாமெட்ரி கோடுகள் போல என் வாசிப்பு மிக மிக மெலிதாக  மாறிவிட்டது.  (மெல்லியதாக  என்றால் கூட ஒரு அழுத்தம் வந்துவிடுகிறது). அடர்த்தியான இலக்கியங்கள் எனக்கு இப்போது கொஞ்சம் அலர்ஜி கொடுக்கின்றன. பள்ளி, கல்லூரிக் காலங்களில் தேடித் தேடி படித்த தமிழ் மற்றும் பிற மொழி இலக்கியங்களின் வெட்டு  என் எழுத்தின் கூர்மையை தீர்மானித்தது என்னையறியாமல் நிகழ்ந்த ஒன்று. அத்துடன் நான் கடுமையான இலக்கியங்கள் பக்கம் நகர்வதை சற்று நிறுத்திக்கொண்டேன். ஆதலால் கதைகள் என்னும்  ஒரு தனி மனிதனின் கற்பனைகளில் எனது நேரம் செலவழிவது  படிப்படியாக குறைந்திருக்கிறது.

      இருந்தும் புத்தக வாசிப்பு இசை போல என்னில் உறைந்துபோன ஒரு இதயத் துடிப்பு.  கொஞ்சம் இசை கொஞ்சம் வாசிப்பு என்பதே என் வழக்கம். எனவேதான்.....  சென்றேன் புத்தகத் திருவிழாவுக்கு.

      இந்தமுறை செயின்ட் ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் வழக்கம் போல பரபரப்பு, சுறுசுறுப்பு, விறுவிறுப்பு இன்ன பிற இத்யாதிகளோடு வேகமாக இயங்கிக்கொண்டிருந்த புத்தக கண்காட்சிக்கு என் நண்பர் ஒருவரோடு செல்ல நேர்ந்தது. நண்பரோ நாளிதழ் தலைப்புச் செய்திகளை   தீவிரமாக வாசித்துவிட்டு ,"பேப்பர் படிச்சாச்சு" என்று ஏக பெருமையுடன் சொல்லும் இன்டர்நெட் யுக அதிநவீன வாசகர்களில் ஒருவர். 

       "ஒவ்வொரு கடையா போகப் போறிங்களா?" என்று திகிலோடு  கேட்டார் என்னை. அப்படியானால் நான்கு அல்லது ஐந்து மணிநேரம் ஆகலாம் என்பது அவர் கணக்கு. "இல்லை. ஒரே கடைதான்." என்றேன். "முத்துக் காமிக்ஸ். அங்கே மட்டும் போனால் போதும்."

        கடை எண் 625 (என்று நினைக்கிறேன்). தேடிப் பிடித்தாயிற்று. காமிக்ஸ் புத்தகங்கள் வரிசையாக வரவேற்க, அந்த சிறிய இடத்தில் நுழைந்ததும் எதோ கால எந்திரத்தில் ஏறியது போல தோன்றியது.  அங்கிருந்த மக்கள்  காமிக்ஸ் கதைகளுக்குள் தங்கள் பால்ய வயது உலகத்தை மீண்டும் கண்டுபிடித்துக்கொண்ட களிப்புடன்   தோன்றினார்கள். எல்லோரிடமும் ஒரு குழந்தைத்தனமான ஆர்வம், வேகம், கொஞ்சம் துள்ளல் தொற்றியிருந்தது.

        "Those good old days!" என்றார் என்னருகில் நின்றிருந்த யாரோ ஒருவர். பார்க்க எதோ ஒரு பிசினஸ் கான்பிரன்ஸை முடித்த கையேடு நேர சடாரென்று முத்துகாமிக்ஸ் கடைக்கு  வந்திருப்பவர் போல தோன்றினார். அவர் சொன்னதை ஆமோதிக்கும் விதமாக தலையசைத்துவிட்டு, என் தேடலில் இறங்கினேன். இதற்கிடையில் என் நண்பர் டெக்ஸ் வில்லர், மாய மனிதன் மார்ட்டின், மாடஸ்டி பிளைசி, ஸ்பைடர், லக்கி லுக் என்று தன் கையில் அகப்பட்டதையெல்லாம்   எனக்கு  சிபாரிசு செய்தார். நானோ கொஞ்சம் பழமை விரும்பி. என் காமிக்ஸ் விருப்பம் எண்பதுகளில் நான் படித்த கதைகளைத்  தாண்டி ஒரு அங்குலம் கூட வெளியே எட்டிப் பார்க்காது. நான் நேர கிளாசிக் மறுபதிப்புகளை நாடிச் சென்றேன். ஜானி & ஸ்டெல்லா , லாரன்ஸ் &டேவிட் பிறகு இரும்புக்கை மாயாவி புத்தகங்களில் என்னிடமிருந்து காலம் பறித்துச் சென்ற கதைகளை முத்துக்குளித்து எடுத்தேன்.  அப்போது என்னிடம் தென்பட்ட அதீத ஆனந்தம்  என் நண்பருக்கு வேடிக்கையாக இருந்திருக்க வேண்டும்.

      எட்டு புத்தகங்கள். என் தேடல் முற்றுப் பெற்றது. பணம் செலுத்தவேண்டிய இடத்தில் அந்த பண இயந்திரம் கொஞ்சம் தாறுமாறு செய்ய, கிடைத்த அவகாசத்தில் என்னால் அங்கே வந்த மற்றொரு காமிக்ஸ் விரும்பிக்கு ஒரு சிறு உதவி செய்ய முடிந்தது. அவர் கண்களில் தென்பட்ட உவகை அவர் கையைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்த அவரது நான்கு வயது மகளின் உற்சாகத்துக்கு இணையாக இருந்தது.

        புத்தக கண்காட்சி என்பது பல லட்சக் கணக்கான மக்கள் வந்துபோகும் இடம் என்றாலும் இதில் ஒரு குறிப்பிட்ட வகையினர் தங்களை மற்றவர்களிடமிருந்து தனியே பிரித்து வைத்துப் பார்க்கும் ஒரு ஆணவத்தின்  மனித வெளிப்பாடாக எனக்கு தோன்றுவதுண்டு. ஏதோ  ஒரு ஐந்து நட்சத்திர உணவு விடுதிக்குள் இருப்பது  போன்ற அணுகுமுறையை அவர்களிடம் காணலாம். யாரும் யாருடனும் ஆத்மார்த்தமாக பேசிக்கொள்ள விருப்பம் கொள்ள மாட்டார்கள். "நான் ---- படிக்கிறேன். நீ வெறும்  --- படிக்கிறாய். உன்னை விட  நான் பெரிய ஆள்."  என்ற எண்ணம் பலரது முகத்தில் படிந்திருப்பதை நானே பலமுறை கண்டிருக்கிறேன். அங்கே யாருமே தங்களுக்குப் பிடித்ததை  மற்றவர்களுக்கு இதை படியுங்கள் என்று சிபாரிசு செய்வதை நான் அறிந்ததேயில்லை.  ஒருவிதமான மேல்தட்டு மனோபாவம் அவர்களின் முகத்தில் துவங்கி கைவிரல்கள் வரை பாய்வதைப்  பார்க்கலாம்.

   தங்களை பிறரிடமிருந்து தனிமைப்படுத்திக்கொள்ளும் வசதியை தந்தருளும் "மாபெரும்" இலக்கிய மாந்தர்களின் கதைகளை  விற்பனை செய்யும் கடைகளுக்கு மத்தியில் காமிக்ஸ் கடை ஒரு வினோத அழகாகத்  தெரிகிறது. அங்கே செயற்கையான பெருமிதங்களோ, அறிவு ஜீவித்தனமான அலட்டல்களோ, "என் லெவெலே  வேற" என்ற ஆணவத்தை குறியீடாக  உணர்த்தும் உடலசைவுகளோ, இன்னபிற பம்மாத்து பகட்டுகளோ இல்லாமல்  அந்த இடம் யதார்த்தமான மகிழ்ச்சியும், குழந்தைத்தனமான குதூகலமும், இயல்பான அன்னியோன்யமும்,  தொலைந்துபோன பால்யத்தின் வசீகரத்தை மறுபடியும் வசப்படுத்திக்கொண்ட சந்தோஷமும் ஒரு சேர இழையோடும் ஒரு மகிழ்ச்சித் தோட்டம் போல தோன்றுகிறது.

       நாமெல்லாம் ஒரே இனம் என்ற அந்த காமிக்ஸ் பிணைப்பு மட்டுமே அதை சாத்தியப்படுத்துகிறது.

         காமிக்ஸ் கதைகள் தொலைந்து போன நாட்களின் ஏகாந்த எச்சங்கள்.  அந்த நாட்களின் மகிழ்ச்சியின் மிச்சங்கள்.


       

                                   (ஜானி நீரோவின் காணாமல் போன கைதி )