Wednesday, 29 April 2015

இசை விரும்பிகள் XXV - உடைந்த ஒப்பனைகள்



கண்ணாடியில் தெரியும் ஒரு நிஜத்தின் பிரதிபலிப்பு, 
அலங்காரம்  கலைந்த ஒரு உண்மைத்  தோற்றம், 
கொஞ்சம் கொஞ்சமாக உருமாறும் மேகங்கள்,
வானவில் மறைந்த ஒரு  வெற்றிடம், 
தொலைந்துபோன குழந்தைத்தனம். 
வண்ணங்களை  இழந்த  ஓவியம், 
ஒரு கோமாளியின் அழுகை.




                           உடைந்த  ஒப்பனைகள் 

         தொண்ணூறுகளின் இறுதி என்று நினைவு. 96 ஆம் ஆண்டாக இருக்கலாம். மதுரையிலிருந்த ஒரு இசைப் பதிவகம் எனக்கு கொஞ்சம் பழக்கமாகியிருந்தது. சி டிக்கள் பதிவகங்களின் எல்லா வரிசைகளையும் நிரப்பிக்கொண்டிருந்த  கசெட்டுகளின் அந்திம காலம் அது.  ஆங்கிலப் பாடல்களை சற்று ஒதுக்கிவிட்டு மீண்டும்  தமிழ் கானங்களை நோக்கி நகர்த்திச் செல்லும்    ஒரு  புதிய கண்டெடுத்தல் என்னைச்  செலுத்திக்கொண்டிருந்தது.    காரணம்  இதுதான்;   நான் ஐந்து வருடங்கள் வட இந்திய மாநிலத்தில் இருந்தது  என் தமிழ் அடையாளத்தின் மீது என்னை ஆழமாகத் தைத்திருந்தது. என் தமிழ் வேர்களை நான் முதல் முறையாக புதிய கண்கள்  அணிந்துகொண்டு பார்க்க ஆரம்பித்திருந்தேன். கல்லூரி விடுதியில் இருப்பவர்களுக்குத்தான் வீட்டு நினைவு அதிகம் இருப்பதாக பொதுவாக கூறுவார்கள். அதைப் போன்றதொரு  உளவியலே இது. அதன் விளைவாக எனது பால்ய தினத்து தமிழ்ப் பாடல்கள் மீது நான் ஒரு நாஸ்டால்ஜிக் காதல் கொண்டு அவைகளை சிறை பிடித்துக்கொண்டிருந்தேன்.

       எனக்குப் பழக்கமாகியிருந்த அந்த பதிவகத்தை ஒரு முதியவர் --- ஏறக்குறைய 60 வயது இருக்கலாம். அனுமானம்தான். அவரைக் கேட்டதில்லை---- நடத்திக்கொண்டிருந்தார். அந்த ஒலிப்பதிவின்  நேர்த்தியும் தரமும் எனக்குப் பிடித்துப்போய் விட்டதால் அடிக்கடி அங்கே சென்று பாடல்கள் பதிவு செய்வது வழக்கம்.    என் பள்ளிக் கல்லூரி தினங்களில் நான் கேட்டு ரசித்திருந்த பழைய பாடல்கள் பற்றிய எண்ணம் என்னில் அதிகமாகி என்னை தொந்தரவு செய்த  நாஸ்டால்ஜிக் போதையேறிய ஒரு சந்தர்ப்பத்தில், என் நினைவடுக்குகளிலிருந்து தேடிக் கண்டுபிடித்த 40,50  பாடல்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை தயாரித்து எடுத்துக்கொண்டு  உற்சாகமாக  அந்த கடைக்குச் சென்றேன். "புது படம் எதுவும் வரலியேப்பா"  என்றார் அவர்.  "தெரியும். கொஞ்சம் பழைய பாடல்கள் வேண்டும்" என்றேன்  குதூகலத்துடன். அவருக்கு இது கொஞ்சம்  அதிர்ச்சியாக  அல்லது வியப்பாக இருந்திருக்க வேண்டும். (எப்போதும் ரஹ்மான் பாடல்களைப்  பதிவு செய்யும்) என்னை அவர் சற்று விநோதமாகப் பார்த்துவிட்டு  ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தை  எடுத்து நீட்டினார்.  மிகத் தடியாக இருந்த அந்த நோட்டை ஆவலுடன் பிரித்தேன். அடுத்த வினாடி எனக்கு    நூடுல்ஸ்சுக்குப் பதிலாக எதோ ஒரு மின்சார வயரை கடித்து விட்ட  அதிர்ச்சி ஏற்பட்டது.

     ஏனென்றால் நான் கேட்ட கொஞ்சம் ரொம்பவாக மாறியிருந்தது. படகோட்டி, ஆயிரத்தில் ஒருவன், ஆலய மணி, சாந்தி நிலையம், பார்த்தால் பசி தீரும், நெஞ்சில் ஓர் ஆலயம், வெண்ணிற ஆடை என்று பெயர்கள் வரிசையாக என் கண்களில் விழுந்தன. அச்சத்துடன், "இத்தனை பழசு வேண்டாம்." என்றேன் கலவரமாக. "பின்ன?" என்றார் அவர். "கொஞ்சம் பழசு." என்றேன். முதலில் கூறிய கொஞ்சத்திற்க்கும் இப்போது சொன்னதற்கும் வித்தியாசம் இருந்தது. இரண்டாவது முறை சற்று அந்த வார்த்தையை அழுத்திச் சொன்னேன். சொல்லும்போதே இது எத்தனை அபத்தமாக இருக்கிறது  என்ற எண்ணம் வரவே, சுதாரித்துக்கொண்டு இப்படிச் சொன்னேன் : "இளையராஜா காலத்துப் பாடல்கள்."  அவர் என்னை முன்பை விட இன்னும் தீர்க்கமாக --கொஞ்சம் சலிப்பாக-- பார்த்துவிட்டு இன்னொரு நோட்டை என் கைகளில் திணித்தார். சரியான  வேட்டைதான் என்று எண்ணிக்கொண்டே அதைப் புரட்டிப் பார்த்தேன். உடனே திடுக்கிட்டேன். காரணம்  அதில் எழுதியிருந்த தலைப்பு. படித்தால் உங்களுக்கூட அதே திடுக்கிடல் நடக்கலாம். அதில் இப்படி எழுதப்பட்டிருந்தது: நடுத்தரப் பாடல்கள்.  கொஞ்சம் குழப்பம், கொஞ்சம்  அதிர்ச்சியாக இருந்தது. "ஏன் இப்படி எழுதியிருக்கிறீர்கள்? இளையராஜா பழைய பாடல்கள் வரிசையில் வரவில்லையா?" என்றேன் வழக்கமான சுதந்திரம் எடுத்துக்கொண்டு.   அவரிடம் நிறைய இசை பற்றி விவாதித்திருக்கிறேன். ஆனால் இளையராஜாவைப்  பற்றி எனக்கு இன்றிருக்கும் ஆழமான விமர்சனங்கள் அப்போது என்னிடமில்லை. அப்போது அவர் சொன்னது இன்னும் என் நினைவிலிருக்கிறது. "இதை எப்படி பழசுன்னு சொல்றது?" என்று அவர் என்னைக் கேட்டுவிட்டு  சில மவுனமான வினாடிகளுக்குப் பிறகு, " இதை புதுசிலயும் சேக்க முடியாது. அதான்." என்றார் வெகு சாதாரணமாக.

         சற்று சிந்தித்துப் பார்த்தால் அது உண்மைதான் என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை. பழைய பாடல்கள் என்றதும் மக்களின் நெஞ்சத்தில் வண்ணம் வண்ணமாக வலம் வருவது அறுபதுகளின் இசையே.  எம் ஜி ஆர், சிவாஜி பாடல்கள் , கண்ணதாசன், வாலி பாடல்கள் அல்லது விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே வி மகாதேவன் பாடல்கள், டி எம் எஸ்- சுசீலா பாடல்கள், பி பி ஸ்ரீனிவாஸ் பாடல்கள்  என அவை வித விதமாக  பகுக்கப்பட்டாலும் ஒரு ஆல மரம் போன்று தமிழ் சமூகத்தின் மன ஆழத்தில் வேரூன்றி இருப்பது அந்தப்  பொற்கால இசைதான். நவீனம் என்றால் ரஹ்மானிலிருந்து துவங்குவதில் பெரிய ஆட்சேபனைகள் யாருக்கும் இருக்கப் போவதில்லை. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவர் இசையை நாம் ஒரு கால கட்டத்தின் அவசியம் கருதியாவது நவீன இசை என்ற குடையின் கீழ் கொண்டுவரத்தான் வேண்டும். இப்போது எழும் ஒரு இயல்பான கேள்வி இளையராஜாவின் இசையை நாம் எந்த காலத்தில் வைப்பது என்பதுதான்.

   மத்திய எழுபதுகள் தொடங்கி எண்பதுகள் வரையான நமது இசைப் பாரம்பரியத்தை(!) எந்த முத்திரை கொண்டு அழைப்பது? இளையராஜாவின் இசையை பழைய இசை என்று குறிப்பிட முடியாது , புதிய நவீன இசை என்று சொல்வதும் இப்போது முரணாக இருக்கிறது. சிலர் இடைப்பட்ட பாடல்கள் என்று எழுதுவார்கள். அதாவது எம் எஸ் விக்கும் ரஹ்மானுக்கும் இடையில் வந்தவர் என்ற அர்த்தத்தில். இது ஒரு நிரப்பு இசை என்ற தொனியை அளிக்கிறது. எனவே  நான் இதை விரும்பவில்லை.  சில தீவிர ரஹ்மான்மேனியாக்கள் என்னிடம் இதுபோன்று ஒரு முறை   கூறியபோது, நான் சொன்னேன் ,  "இளையராஜாவைப் பாராட்டுவது வேறு: ஆனால் அவரை விமர்சிப்பதாக இருந்தால் நீங்கள் அவரது இசையை கேட்டு வளர்ந்தவர்களாக இருக்க வேண்டும்."  நிரப்பு இசை என்ற பதம் ஏறக்குறைய பதினைந்து வருடங்களாக தமிழ்த் திரையில் ராஜாங்கம் நடத்திக்கொண்டிருந்த ஒருவரின் மிக அகலமான இசைச் சாலையை கருணையின்றி குரூரமாக சுருக்கிவிடுகிறது. இது  கண்டிப்பாக உண்மையில்லை. பழைய இசை, புதிய இசை, இடைப்பட்ட  இசை என்ற எந்த கோட்டுக்குள்ளும்  அடக்கிவிட முடியாததாக இருப்பதால் இளையராஜாவின் இசையை அந்த மதுரை முதியவர் தனது நோட்டுப் புத்தகத்தில் எழுதியிருந்தது போன்று நடுத்தரப் பாடல்கள் என்று அழைப்பதுதான்  பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. அவர் அந்த காலத்தை மனதில் கொண்டு இப்படி எழுதியிருந்தாலும் நமது தமிழிசையின் தரம் எண்பதுகளில் எப்படிப்  "பட்டொளி வீசிப் பறந்தது"  என்பதை அசை போடும்போது நடுத்தரம்  என்ற வார்த்தையின் உண்மையை எண்ணி சற்றேனும் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை.

     இப்போது எவ்வாறு எழுபதுகளின் இறுதியில் நமது தமிழிசையின் போக்கு மாறியது என்பதை குறித்துப்   பேசுவோம் .    தமிழ் சினிமாவை சற்று உற்று நோக்கினால் ஒவ்வொரு பத்து வருட இடைவெளியில் நம் திரையிசையின் வடிவம் மாறிவருவதை அறியலாம். சில உண்மைகள் உறங்குவதை உணரலாம்.  ஐம்பதுகள் புராணம் பாடும் சரித்திர கதைக் களங்கள் கொண்டதாகவும் (பாரம்பரிய ராகங்கள் சூழ்ந்த சாஸ்திரிய இசை),  அறுபதுகள் குடும்பம்  சார்ந்த மிகைப்படுத்தப்பட்ட நாடகத்தனமான திரைப்படங்களின் காலமாகவும் (மெல்லிசை மற்றும்  அதோடு கலந்த திகட்டாத மேற்கத்திய இசை)  இருந்தன. இது இந்த காலகட்டத்தைக் குறித்த பார்வை மட்டுமே தவிர இதில் எது உயர்ந்தது என்ற நாட்டாமைத்தனம் எனக்கில்லை. எழுபதுகளையும்  அறுபதுகளின் நீட்சியாக குடும்பம் சூழ்ந்த களங்கள் ஆட்சி செய்தன. எனவே  காட்சிகள் நவீனத்தின் பக்கம் சாயாத ஒளியிழந்த சாயல் கொண்டிருந்தன. இது ஒரு மிகத் தொய்வான காலகட்டம் என்பதை எளிதாக சொல்லக்கூடிய அளவில் அப்போது தமிழ்த் திரை ஒரு சரிவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. எ வி எம், விஜயா-வாஹினி  போன்ற பெயர் பெற்ற  பெரிய திரைப்பட நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பை நிறுத்திவிட்ட காலகட்டம் அது. சிறிய தயாரிப்பாளர்கள், சிறிய முதலீடு, எளிமையான கதை போன்ற திடீர் விதிகள்  புதியவர்களும், இளைஞர்களும்,  நவீன கதை சொல்லிகளும்,  திரைக்குப் பின்னே வெகுவாக படையெடுக்க உதவி செய்தன.  இருந்தும்  திரையில் தோன்றியதோ   அதே விக் வைத்து பென்சில் மீசை கொண்ட, கேமராவைப் பார்த்துப் பேசும்  பத்தாயிரம் முறை பார்த்துப் பார்த்து சலித்துப்போன முகங்கள்தான்.  அது எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன், ஜெய் ஷங்கர், ரவிச்சந்திரன், விஜயகுமார், சிவகுமார் என யாராக இருந்தாலும்  எல்லா முகங்களுமே பார்வையாளர்களுக்கு எந்த வித சலனத்தையும்  கொடுக்கவில்லை. "இதே  மூஞ்சிகள்தானா?" என்ற சலிப்புதான் மிஞ்சியது.

      அதே சமயத்தில் இன்னொரு பக்கம் கதாநாயகிகள் தேவிகா, சரோஜா தேவி, கே ஆர் விஜயா என்பதிலிருந்து லதா, மஞ்சுளா, ஸ்ரீப்ரியா, ஜெயசித்ரா, சுஜாதா என மாறியிருந்தார்கள். கதாநாயகர்கள் நரை தட்டிப் போய், எல்லாம் அடங்கிய பின்னும், ஐ சி யு விலிருந்தே  திரும்பி வந்தாலும் திரையில் முகத்தோடு முகம் வைத்து உரசி பெண்வாசனை பிடிக்கவும் , பார்பவர்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தும் ரொமாண்டிக் புன்னகையுடன் அவளது சேலையை பிடித்து இழுக்கவும்,  ஒரு இளமையான நடிகை ------அவள் தனது பேத்தி வயதை ஒத்திருந்தாலும்---- தேவைப்படும் இந்த அருவருப்பான வினோதம் தமிழுக்கு ஒரு புதிய சங்கதி அல்ல. எம்ஜிஆர் இதயக்கனி படத்தில் ராதா சலூஜாவோடு அடித்த கூத்தும், சிவாஜி லாரி டிரைவர் ராஜாக்கண்ணு படத்தில் ஸ்ரீ ப்ரியாவுடன் செய்த சில்மிஷங்களும், ரஜினிகாந்த் லிங்கா என்ற கருமத்தில் சொனாக்ஷி சின்ஹாவை காதல் வீரியத்துடன் அனைத்ததும், கமலஹாசன் தசாவதாரத்தில் அசினோடு "அற்புதக்" காதல் லீலைகள் புரிந்ததும் இந்த அசிங்கத்தின் அடுத்தடுத்த அத்தியாயங்களே.

    எழுபதுகளில்  ஹிந்தியில்  பிரபலமான  யாதோங்கி பாரத் என்ற படத்தை தமிழில் எடுத்தபோது  அதில் எம். ஜி. ஆர். இரண்டு வேடங்களில் நடித்தார். (இதெல்லாம்  மிக மலிவான  ரசிகமனப்பான்மையின் வெளிப்பாடு) மூன்றாவதாக கமலஹாசன் நடிக்க இருந்தார் . எதனாலோ அவர் அப்புறப்படுத்தப்பட்டு ஒரு தெலுங்கு நடிகர் சந்திர மோகன் (பெயர் தவறாக இருக்கலாம்) அங்கே வந்தார். இவ்வாறு 70கள் முக்கால்வாசி நமது பொலிவிழந்த கதாநாயகர்களால் நிரப்பப்பட்டிருந்தது.  சிவாஜியைப் பற்றி கேட்கவே வேண்டாம். 70களின் மத்தியிலிருந்து அவர் நடித்த படங்களைப் பார்க்காமல் தவிர்ப்பதே நாம் அவருக்குச் செய்யும் மரியாதை என்று நினைக்கிறேன். இதைத் தவிர கதைக்களம் எந்த புது அனுபவத்திற்கும் பார்ப்பவர்களை அழைத்துச் செல்லாத அவலம் இன்னொரு பக்கம்தமிழ் சினிமாவுடன் கூடவே வந்துகொண்டிருந்தது.

    உண்மையில் 70களில்  நமது திரைப்படங்களில் இருந்த ஒரே ஒரு பாராட்டிற்குரிய அம்சம் the only saving grace --எந்தவித சந்தேகமுமின்றி-- அதன் பாடல்கள் மட்டுமே.  உதாரணமாக 70களின் மத்தியில் வந்த மாலை சூட வா என்ற படத்தில் கே ஜே ஜேசுதாஸ் பாடிய யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா? எனக்கென்றும் நீயே சொந்தம் என்ற பாடலை சற்று நினைவுக்கு இழுத்துவருவோம். இணையத்தின் பல இடங்களில் இதன் இசை அமைப்பாளரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. சில இடங்களில் ஓல்ட் என்ற ஒரு ஒற்றைச் சொல் இதை அமைத்தவரை இழிவு செய்கிறது. உண்மையில் இது விஜய பாஸ்கர் என்ற இசை அமைப்பாளரின் இசை வண்ணம். மிக அருமையான கீதம். நான் அப்போது பிரபலமாக இருந்த எம் எஸ் வி, வி குமார், ஷங்கர் கணேஷ் போன்றவர்களின் பாடல்களைக் குறிப்பிடாமல் அதிகமாக அறியப்படாத விஜய பாஸ்கரின் பாடல் ஒன்றை இங்கே அடிக்கோடிடுவதின் காரணம் இதன் பின்னே இருக்கும் அந்த மறைந்த நிஜம் நாம் அசட்டை செய்த பல அபாரமான  பாடல்களை பெரிய எழுத்துகளில் நம் நினைவுச் சுவர்களில் எழுதட்டும்  என்பதற்காகத்தான். மேலும் சில அற்புதத் தேன்துளிகளை random வகையில் கீழே கொடுத்துள்ளேன்.  எப்படி நம் இசை குதூகலமாக நம்மைக் கொண்டாடியது என்பதன் சுவடுகள் அவை.

சப்தஸ்வரம் புன்னைகையில் கண்டேன்- நாடகமே உலகம் - வி குமார்.
அவளொரு பச்சைக் குழந்தை  பாடும் பறவை- நீ ஒரு மகாராணி- சங்கர் கணேஷ்.
சம்சாரம் என்பது வீணை சந்தோஷம் என்பது ராகம் - மயங்குகிறாள் ஒரு மாது- விஜயபாஸ்கர்.
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்- தேன் சிந்துதே வானம்- வி குமார்.
கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம் -மேயர் மீனாட்சி-எம் எஸ் வி.
கங்கை நதியோரம் ராமன் நடந்தான்- வரபிரசாதம்- கோவர்த்தனம்.
மயங்குகிறாள் இந்த மதுரை மீனாட்சி- பிராயச்சித்தம்- எம் எஸ் வி.
உள்ளத்தில் நூறு நினைத்தேன்- மாப்பிள்ளை அழைப்பு- சங்கர் கணேஷ்.
நான் பாடிய முதல் பாட்டு நீ பேசிய தமிழ் கேட்டு - ஐந்து லட்சம்- கே வி மகாதேவன்.
ஜில்லென்ற காற்று வந்ததோ- நில் கவனி காதலி- எம் எஸ் வி.
குயிலாக நானிருந்தென்ன குரலாக நீ வரவேண்டும்- செல்வமகள்- எம் எஸ் வி.
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்- நான்கு கில்லாடிகள்- வேதா.
ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவை இது- கௌரி கல்யாணம்- டி கே ராமமூர்த்தி.
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு- வசந்தத்தில் ஓர் நாள்-  எம் எஸ் வி.
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது- பிராப்தம்- எம் எஸ் வி.
நினைத்துப் பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது- அவள் தந்த உறவு- எம் எஸ் வி.
திருக்கோவில் தேடி ரதி தேவி வந்தாள்-  தெய்வம் தந்த வீடு- எம் எஸ் வி.
திருமகள் தேடி வந்தாள்- இருளும் ஒளியும்- கே வி மகாதேவன்.
இளமை நாட்டிய சாலை- கல்யாணமாம் கல்யாணம்- விஜய பாஸ்கர்.
என்னோடு என்னன்னவோ ரகசியம் - தூண்டில் மீன்- வி குமார்.

        எழுபதுகளின் பாடல்கள் குறித்து நான் பல பதிவுகள் எழுதியிருப்பதன் ஒரே நோக்கம் நமது இசை எத்தனை பொலிவாக இருந்தது என்பதை படிப்பவர்களுக்கு உணர்த்தவே.  அப்போது வானொலிகளிலும் சாலையோர தேநீர்க்கடைகளிலும், திருமண மண்டபங்களிலும் ஒலித்துக்கொண்டிருந்த மேற்குறிப்பிட்ட ரம்மியமான பாடல்களை   திடுமென வந்து வாரிச் சுருட்டிச் சென்ற ஒரு புதிய இசையலை நமது இசை அனுபவத்தை ஒரேடியாக முற்றிலும் மாற்றிப்போட்டதன் விளைவாக பலர் இந்தப் புதிய இசை வசந்தத்தை போற்றிக் கொண்டாடி அதற்கு முன் வீசிய இளந்தென்றல் போன்ற எழுபதுகளின் ஏகாந்தத்தை அசட்டை செய்து, நடந்த நிகழ்வை மாற்றிச் சொல்லும் புனைவுகளை உருவாக்கி ஒரு இல்லாத வரைபடத்தை தயார் செய்கிறார்கள். ஹிந்தி இசை என்னும் ஒரே பதத்தை வைத்துக்கொண்டு தமிழர்கள் தங்கள் தமிழ்த்தனத்தையே இழந்து விட்டதாகவும், ஹிந்தி இசைக்கு தங்களை விற்று விட்டதாகவும் தங்கள் மனம்போன போக்கில் கடுகு போன்றதொரு உண்மைக்குள் பொய் காற்று செலுத்தி பெரிய பலூன் ஒன்றை இணையத்தில் பறக்க விடுகிறார்கள்.   ஒரு வசந்தத்தின் தீற்றலாய் பொழிந்த  இந்த இசையலை கொடுத்த அதிர்ச்சி ஒரு பக்கம், ஆனந்தம் இன்னொரு பக்கம், இவை இரண்டுமில்லாத மற்றொரு உணர்ச்சி  மற்றொரு பக்கம் என தொடர,  போகிற போக்கில் இந்த  இசை வசந்தத்தின் தூரிகை வேறு ஓவியம் வரைய, எண்பதுகள் வந்தபோது  நமது தமிழ்த் திரையிசையின் முகம் முழுவதும் உருமாறிப்போயிருந்தது.  அதன் பாய்ச்சல், வேகம், தொனி, குரல்கள், இசையமைப்பு, பாடல் பேசும் களம் என எல்லாமே வேறு திசையில் நகர்ந்து கொண்டிருந்தது. எந்தப் புள்ளியில் இந்த திடீர் முக மாற்றம் சாத்தியமானது என்று நூல் பிடித்துச்  சென்றால்  ஒரு இடத்தில் நாம் நிற்கவேண்டி வருகிறது.   அதை அறிவது அவசியம்.

    தமிழ்த்திரையில் ஒரு அசுர  மாற்றம் கொண்டுவந்தது என்று  இரண்டு படங்களை சுட்டிக்காட்டுகிறார்கள் திரை விற்பன்னர்கள். முதல் மாற்றம் 52இல் வந்த பராசக்தி. பாடிப் பாடி  நம்மை பரவசப்படுத்திய அல்லது படுத்திய படங்களை பராசக்தி ஆயிரம் மெகா டன் குண்டு வைத்து ஒரே நொடியில் காலி செய்தது.  பராசக்திக்குப் பிறகு தமிழ்த் திரையை புரட்டிப் போட்ட படமாக பொதுவாக பலர் கருதுவது 77வந்த பதினாறு வயதினிலே. நாடகத்தனமாக  கதை சொல்லும் விதத்தை இந்தப் படம் சப்பாணி, பரட்டை, மயிலு மூலம் ஒரே விழுங்கில் கபளீகரம் செய்தது. ஒரு மகா அலைபோல மீண்டுமொரு முறை  தமிழ்த் திரை புரண்டு படுத்தது- பராசக்திக்குப் பிறகு.

   ஏகப்பட்ட கட்டுரைகள் எழுதப்பட்ட, காட்சி காட்சியாக விமர்சிக்கப்பட்ட, எண்ணில்லா புகழாரங்கள் சூட்டப்பட்ட படம் இது. பாரதிராஜா என்ற மண் வாசனையும், மாற்று சினிமா வேட்கையும்  கொண்ட ஒரு சாமானியனின் முதல் படைப்பு தமிழ் சினிமாவின்  போக்கையே  திசை திருப்பியது ஒரு வியப்பான  நிகழ்வு. தமிழ்த் திரை கட்டிவைத்திருந்த பல பிம்பங்களை சரேலென்று ஒரே வீச்சில் உடைத்த விசித்திரமாக வந்தது 16 வயதினிலே. சட்டென்று மாறியது தமிழ் சினிமா. அலட்சியம் செய்யக்கூடியதாக  இல்லாமல்  இந்த மாற்றம் பெரிய அளவில் நடந்தது. தமிழ் சினிமாவின் போக்கு என்பது வெறும் நடிகர்களை குறிக்கும் ஒரு சொல் அல்ல. மாறாக கதை சொல்லும் விதம், ஒளிப்பதிவு கோணம், வசனம்,மற்றும் இசையமைப்பு எல்லாம் சேர்ந்ததே. 16 வயதினிலே குளிர் காலத்திற்குப் பிறகு ஒரு மரம் புதிய இலைகளால் தன்னை முழுதும் வேறுவிதமாக அலங்கரித்துக்கொள்ளும் ஒரு புத்துயிர்ப்பு. 70களின் சூழலில் அந்தப் படம் ஒரு மகா ஆச்சர்யம். கிராமத்தை அதற்கு முன் இத்தனை உயிரோட்டமாக , ரத்தமும் சதையுமாக வரைந்த படம் எதுவுமில்லை. கதைமாந்தர்கள் பேசிய வசனங்கள், பின்னணி காட்சிகள், அந்த இயல்பான தெருக்கள் எல்லாமே ஒரு புதிய ஒளியால் தமிழ்த் திரையை நிரப்பின

     இருந்தும்  வெறும் காட்சி என்பது உண்மைக்கு வெகு அருகே நிற்கும் ஒரு நிழல்தான். அதோடு பொருத்தமான இசையும் இணையும் போதுதான் அந்தக் காட்சியின்  ஆன்மாவை நம்மால் உணர முடியும். அவ்விதமான கிராமத்து சூழலுக்கான மண் மனம் கமழும் நாட்டார் இசை அதே மண் சார்ந்த பாடல்களையும் மெட்டுக்களையும் தன் சுவாசத்தில் உள்வாங்கியிருந்து, அந்த மண்ணின் மரபுகளோடு தனது  பிறப்பிலிருந்து இரண்டறக் கலந்திருந்த ஒருவரால்தான் எந்தவித ஒப்பனைகளுமின்றி மனதோடு  தைக்கும்படி கொடுக்க முடியும். அது இளையராஜாவிடமிருந்தது. அன்னக்கிளி படத்தில் ஒரு கேள்விக்குறியாக அறிமுகம் ஆன இளையராஜா 16 வயதினிலேவில் ஒரு ஆச்சர்யக்குறியாக மாறினார். நாட்டுப்புற இசைக்கு  ஒரு மகத்தான அங்கீகாரம் கிடைத்ததே   இளையராஜாவின் இசை தொட்ட உச்சம் எனலாம். வயல் காடுகளிலும், நீர் நிலைகளிலும், பயிர்த் தோட்டங்களிலும் உலா வந்த நாட்டுப்புற இசையின் குரல்  தமிழகம் முழுவதும் உரத்து ஒலிக்கச் செய்த   மெட்டுகள், கானங்கள் அவரது இசையின் மையப்புள்ளியாக   இருந்தது.  இந்த மண் முடிச்சு அவர் இசைக்கு மகுடம் சூட்டியது.

     16 வயதினிலேவுக்குப் பிறகு தமிழ்த் திரைக்குக் கிடைத்த புதிய கருப்பொருளான கிராமத்து சூழல்தான் அவரின் இவ்வாறன இசை வேட்கைக்கு ஒரு களம்  அமைத்துக் கொடுத்தது  .  பகட்டாக அலங்கரிப்பட்ட வரையப்பட்ட செயற்கை மரங்கள் வீசும் மின் காற்றாடி தென்றல்கள் கொண்ட கிராமங்கள் மறைந்து, கிராமத்தை அதன் வாழ்வியலின் அழகோடும் அழுக்கோடும் காட்சிபடுத்தும் ஒரு "வேறுமாதிரி"யான சினிமா பிறந்தது.  பாரதிராஜாவின் வருகை ஒரு புதிய அத்தியாயத்தை தமிழ்த் திரையில் ஆரம்பித்துவைத்தது என்று பொதுவாக சொல்லப்படுகிறது. அது உண்மைதான். பாரதிராஜா படைத்த இந்த வேறுமாதிரியான சினிமா அதே வேறுமாதிரியான இசையால் மட்டுமே பூர்த்தியானது.  ஒரு புதிய இசை பாணிக்கான முதல் விதையை பாரதிராஜா நட்டார். இவ்வாறு பாரா அமைத்த அஸ்திவாரத்தில் பலரால் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு இசை வண்ணம் பூசினார் இரா. பதினாறு வயதினிலே பாதிப்பின் நீட்சியாக வந்த ஏராளமான கிராமத்துப் படங்கள் இளையராஜாவின் இசைக்கான மைதானமாக மாறின. அவரது  இசையினால் அவை பலம் பெற்றன. மைதானம் முழுதும் அவர் விளையாடினார். படத்துக்குப் படம் அவர் இசை இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்தது.  பாரதிராஜா துவக்கிய இந்தப்   புதிய பாதை அப்போது அமைந்திராவிட்டால்  இளையராஜா தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இன்னும் கடுமையாக போராடவேண்டியதாக இருந்திருக்கும். தன் கையெழுத்து இசையை  அவர் பதிப்பதற்குள் சடுதியில் பல திருப்பங்கள் நிகழ்ந்திருக்கலாம். இளையராஜாவின் வருகையில் வி குமார் என்ற மகத்தான இசை மேதை திடீரென காற்றில் கரைந்துபோன விசித்திரம் போல..

    எவ்வாறு மணிரத்னம் என்ற முத்திரை ரஹ்மானின் வளர்ச்சிக்கு அடிநாதமாக இருந்ததோ அதேபோல பாரதிராஜாவின் வருகையில் இளையராஜா இரண்டாம் முறை பிறந்தார்.  பல டை ஹார்ட் இளையராஜா விசிறிகளால் இந்த வாக்கியத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இளையராஜா யாரை பிரிந்தாலும் இவர்களது விரல் சுட்டுவது அப்படிப் பிரிந்தவர்களைத்தான். எனவே பாரதிராஜா- இளையராஜா வர்த்தக வெற்றிகளுக்குள் இவர்கள் ஒருவரை மட்டுமே காண்கிறார்கள். விந்தையான பார்வை. இவரால் அவரா அல்லது அவரால் இவரா என்பதெல்லாம் முடிவின்மையை நோக்கி நகரும் அர்த்தமற்ற  பேச்சு. இருவரும் சேர்ந்து தமிழ் சினிமாவின் திசையை மாற்றி அதன் வரைபடத்தை புதுப்பித்தார்கள். (அவர்கள் படைத்ததெல்லாம் நல்ல படங்களா  நல்ல பாடல்களா என்ற கோட்டுக்குள் இப்போது செல்லவேண்டாம்.) இருவரும்   வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றார்கள். இவ்வாறு நட்பின் அடையாளமாக இணைந்திருந்த  இருவரும் பின்னர் சில மறைமுகக் காரணங்களினால் பிரிந்தார்கள். பிறகு மீண்டும் இணைந்து பிறகு  மீண்டும்  பிரிந்து... மற்றொரு 16 வயதினிலே படைப்பதற்குள்   தமிழ் சினிமா பல மைல்கள் வனாந்திரங்களையும், பாலைவனங்களையும், ஓடைகளையும், சோலைகளையும், புல்வெளிகளையும், பூந்தோட்டங்களையும்,     இராவையும் பாராவையும்  தாண்டி வந்துவிட்டது.

    பாரதிராஜாவினால் உருவான கிராமத்து சினிமா பல முகமில்லாதவர்களை தமிழ்த் திரைக்கு அழைத்து வந்தது. வந்தவர்களில்  ஒரு சிலரைத் தவிர பலர் ஒரே வார்ப்பில் பாரதிராஜாவைப் பின்பற்றி தங்கள் சுவடுகளை எடுத்து வைத்தார்கள். ஒரு படமோ ஒரு பாடலோ வெற்றி பெற்றுவிட்டால் அதன் நீட்சியாக பல பிரதிகள் வரும்  தமிழ் சினிமாவின் பாரம்பரியம்  இங்கேயும் தொடர்ந்தது. இந்த மாற்றத்தில் பெரிதும் பயன் அடைந்தது இளையராஜாதான். இந்தப் புதிய சாலையில் அவர்  இசைக்கு மிகப் பெரிய அங்கீகாரமும் அதைத் தாண்டிய ஒரு ஒளிவட்டமும் கிடைத்தது என்பது புனைவுகளற்ற ஒரு வாக்கியம்.  நாட்டுபுற நாயகன் என்ற பட்டம் இளையராஜாவுக்கு மக்களின்  மனதில் அப்போதே  கொடுக்கப்பட்டுவிட்டது.

    கிரௌண்ட் ப்ரேகிங் 16 வயதினிலேவுக்குப் பிறகு பாரதிராஜா  கிழக்கே போகும் ரயில்,புதிய வார்ப்புகள் என்று தன் ராஜபாட்டையில் நடை போட்டார். அவர் காட்டிய கிராமம் அவரைத் தொடர்ந்து வந்தது. கோவில் மணி ஓசை தனை கேட்டதாரோ, மாஞ்சோலை கிளிதானோ, பூவரசம்பூ பூத்தாச்சு, இதயம் போகுதே, தந்தனநம்தன தாளம் வரும்  என்று தமிழ் இசை அடுத்த பரிமானத்திற்குத்  தயாரானது.  புதிய வார்ப்புகளின் தந்தனநம்தன  பாடலின் கோரஸ்  பிரசித்திபெற்ற ஒன்று.   ஒரு கடலலை போல பாடல் மீது படர்ந்து சென்றாலும் சரணத்தில் இந்த கோரஸ் செயற்கையாக திணிக்கப்பட்டிருப்பதை போல ஒலிக்கும். வசீகரமான மெட்டுடன் கூடிய அனாசயமான பாடல்.

    பாரதிராஜா தனது  சப்பாணி கதாபாத்திரத்திற்கு ஆரம்பத்தில் நடிகர் சிவகுமாரைதான் தேர்வு செய்திருந்ததாகவும் கோவணம் அணிந்து நடிக்கவேண்டிய சங்கடத்தை விரும்பாத அவர் மறுத்துவிட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.  கமல் வந்து அந்த இடத்தை தமிழ் சினிமா மறக்க முடியாத அளவுக்கு நிரப்பினார்.  அதன் பின் எந்த வெகுளித்தனமான கதாபாத்திரம் தமிழில் வந்தாலும் அது சப்பாணியின் நிழலாகவே மக்களால் பார்க்கப்பட்டது.  இதற்கிடையில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்ற தனது 100 வது படத்தில்,  திடீரென விழித்துக்கொண்ட சிவகுமார் அதே சப்பாணி வேடத்தை தன் மீது பூசிக்கொண்டு நடித்தார். படம் நன்றாகவே ஓடியது. ஆனாலும் " சப்பாணி மாதிரி  வராது" என்றே மக்கள் பேசிக்கொண்டார்கள். படம் நடக்கும் காலம் இந்திய சுதந்திரத்திற்கு முன். ஆனால் பாடல்களைக் கேட்டால் அப்படியான எந்த உணர்வும் நமக்கு வராது.  என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்  என்று வாணியின் குரல்  விரக வேதனையை வெளிப்படுத்தியது. உச்சி வகுடெடுத்து ஒரு சோகத் தாலாட்டு. இதன் தாளம் மனதை வசப்படுத்தக்கூடியது. இதைத்தவிர இன்னும் இரண்டு பாடல்கள் இருக்கின்றன. கேட்க சகிக்காது.

       இந்த சமயத்தில் வெளிவந்த  பொண்ணு ஊருக்குப் புதுசு என்ற படத்தின் பாடல்கள் பெரிதாக பிரபலம் அடைந்தன. சாமக் கோழி கூவுதம்மா, ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டிவருது போன்ற பாடல்கள் இளையராஜாவின் இசை வேறு விதமாக உருமாறிக் கொண்டு (சிதைந்து!)  கொண்டு வருவதை அறிவித்தன. தனிப்பட்ட விதத்தில் நான் விரும்பிக் கேட்காத பாடல்கள் இவை. எஸ் பி ஷைலஜா பாடிய முதல் தமிழ்ப் பாடலான   சோலைக் குயிலே காலைக் கதிரே இதிலுண்டு. கேட்க நன்றாகவே இருக்கும். இதே அலைவரிசையில் வந்த சக்களத்தி (என்ன ஒரு பெயர்?) படப் பாடல்களும் இதே ரகம்தான். என்ன பாட்டு பாட என்ன தாளம் போட, வாட வாட்டுது என இளையராஜா தனது "காந்தக்"  குரலில் பாடிய பாடல்கள் சிலரை வெகு தூரம் ஓட வைத்தன. என்ன பாட்டு பாட என்ற குழப்பத்தையே இளையராஜா ஒரு பாடலாக பாடிவிட்டார் பாரேன் என்று சொன்ன நண்பர்களும் எனக்கு அப்போது இருந்தார்கள்.

      79 இல் கல்யாணராமன் என்ற படம் சக்கைப் போடு போட்டது. இதில் ஆஹா வந்துருச்சு (எதை என்று கேட்காதீர்கள்.) என்று பெரிய ஹிட் அடித்த ஒரு பகடிப்பாடல் அதன் இயல்பான நகைச்சுவைக்காக பெரிய அளவில் புகழ் பெற்றது. அப்போது சிறுவர்களான எங்களுக்கு இந்தப் பாடல் ஒரு உல்லாசம்தான். காதல் தீபமொன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன், மலர்களில் ஆடும் இளமை புதுமையே போன்ற பாடல்கள் அடிக்கடி கேட்டவை.

    உல்லாசப் பறவைகள் படப் பாடல்கள் என்னைப் போன்றவர்களுக்கு என்றைக்கும் ஒரு மறக்க இயலாத நாஸ்டால்ஜிக் உணர்வின் ஊற்று.  ஜெர்மனியின் செந்தேன் மலரே, தெய்வீக ராகம் ( தேனிசை கோரஸ், ஹான்டிங் மெலடி. ஜென்சியை சற்று மன்னித்துவிட்டால் இது ஒரு அபாரமான பாடல்தான்.) போன்றவை  சலிப்பில்லாத சுவை கொண்டவை. 

     தனிப்பட்ட விதத்தில் எனக்கு குரு  படப் பாடல்கள் மிகவும் பிடித்தவை. படம் வந்த புதிதில் பறந்தாலும் விடமாட்டேன் பாடலை எஸ் பி பி போன்று ஸ்டைலாக பாட முயன்று கேலிச் சித்திரமாக மாறிய கதையெல்லாம் உண்டு. அதில் எஸ் பி பி கொஞ்சலோடு சொல்லும் " Senorita, how you feel about me now I say?" போன்ற ஆங்கில வரிகள் அப்போது எனக்கு பெரிய பிரம்மிப்பை கொடுத்தன. மேற்கத்திய இசையை கேட்பதற்கு முன் இதைதான் நான் ஆங்கிலப் பாடல்களுக்கு இணையான ஒரு பாடலாக கருதினேன்(!).  இப்போது சில பிம்பங்கள் உடைந்து விட்டாலும் இந்தப்  பாடல் அளிக்கும் சுகம் சிதைந்து விடாமல் இருக்கிறது. ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன்வண்டுகள் என்றொரு குழந்தைப் பாடல் இருக்கிறது. அப்போது அவ்வளவாக பிடிக்காத பாடல் இப்போது நிறையவே பிடிக்கிறது. எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் என்ற பாடலில் ஸ்ரீதேவி போதையில் ஆடிப்பாடி வர,  அது பிடிக்காத  கமலஹாசன்  நாயகியின் விலகும் முந்தானையை சரி செய்துகொண்டே ரொம்ப நல்ல பிள்ளையாக நடிப்பார்.  பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா என்று ஸ்ரீதேவி தன் காதலன் பெயரைச் சொல்லாமல் தமிழ்ப் பண்பாட்டை  காக்கும் ஒரு  பாடலும்  இதில் உண்டு. இசையும் மெட்டும் ஏகத்துக்கு உற்சாகம் ஏற்றும் மிக அருமையான பாடல். நான் இன்றுவரை விரும்பிக் கேட்கும் அதிசய ராகம். இளையராஜாவின் இசையில் ஒளிந்திருக்கும் திடீர் ஆச்சர்யங்களில் இது ஒன்று.

     குருவின் அதிரடி பாய்ச்சலில் அதோடு  வெளிவந்த மகேந்திரனின் ஜானி வந்த சுவடே தெரியாமல் காணாமல் போனது.  இரட்டைவேடத்தில் ரஜினிகாந்த் என்ற விளம்பரம் படத்துக்கு பல மடங்கு எதிர்பார்ப்பை செலுத்திவிட, மகேந்திரனோ  "உங்க நெனெப்பெல்லாம் எங்கிட்டே ஆவாது" என்கிற ரேஞ்சில் இரண்டு ரஜினியை வைத்து ஒரு காதல் கதையை கண்ணில் காட்ட (எந்த நம்பிக்கையில் என்று இன்றுவரை தெரியவில்லை),  காசு கொடுத்து ரஜினியின் கோமாளித்தனத்தையும், ஆக்ரோஷ அடி தடியையும், சிகரெட் வித்தையையும்  காண வந்த ரசிகர் கூட்டம் எதிர்பார்த்த எதுவும் இல்லாததால், (ஸ்ரீதேவி கூட  போர்த்திய புடவையோடு  படம் முழுவதும் நடித்திருப்பார்.) நரி போல ஊளையிட்டு படத்தை இரண்டே நாளில்  காலி செய்தது. படத்தில் துப்பாக்கி, திருட்டு,கொலை, போலிஸ் துரத்தல் என ஒரு ரஜினி படத்திற்கான  எல்லாமே உண்டு- சுவாரஸ்யம்  தவிர. கலைப் படம் எடுப்பவர் கையில் கொலைப் படத்தை கொடுத்தால் அவர் என்ன செய்வார்? இருந்தும் இன்றைக்கு ரஜினிகாந்த் சற்றேனும் ஒழுங்காக நடித்த படங்களில்  ஒன்று என்ற நல்ல பெயரும், சில மென்மையான காதல் காட்சிகளும்,  அருமையான பாடல்களும் அதைவிட கவர்ச்சி நாயகியாக பெயர் எடுத்த ஸ்ரீதேவி புடவை  நாயகியாக மிக கண்ணியமாக  நடித்த ஒரே படம் என்ற பெயரையும் பெற்றுள்ளது.

     காற்றில் எந்தன் கீதம் ஒரு ராக உலா என்றால், என் வானிலே ஒரே வெண்ணிலா ஐஸ் க்ரீம் சுவை. ஒரு இனிய மனது இசையை அலைத்துச்  செல்லும்,(ஜென்சி அழைத்து என்பதை அலைத்து  என்றுதான் பாடியிருப்பார்.) ஒரு வெண்மேகம்  என்றால் ஆசைய காத்துல தூது விட்டு ஒரு இடி மின்னல். இது தவிர சிநோரீடா ஐ லவ் யு என்று ஒரு உற்சாக கானம் உண்டு. இப்போது காற்றில் எந்தன் கீதம் தாண்டி மற்ற எதுவும் மனதில் தங்கவில்லை.

           ஏறக்குறைய இதே வரிசையில் வந்த ஒரு படம் ப்ரியா. எப்படி ஒரு கறுப்பின பையனான மைக்கல் ஜாக்சன் ஒரு வெள்ளைப் பெண்ணாக மாறினாரோ அதுபோல சுஜாதாவின் சுவாரஸ்யமான கதைக்கு ஏகப்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரி செய்து எதோ அமிஞ்சிக்கரையில் இரண்டு கோஷ்டிகளுக்குள் நடக்கும் ஒரு கைகலப்பு ரேஞ்சுக்கு கதையை  மாற்றியிருப்பார்கள். ப்ரியா என்ற ஒற்றைப் பெயருக்காக கதை சுஜாதா என்று டைட்டில் கார்டு காண்பித்து அவருக்குப்  பெருமை செய்திருப்பார்கள்.  பாடல்கள், இசை எல்லாமே மெட்ராஸை தாண்டாத வெகு லோக்கல் பாணியில் இந்தப் படத்தை சிங்கப்பூரிலா எடுத்தார்கள் என்று நினைக்கவைக்கும். அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே என்றொரு பாடல் மட்டும் ஒரு சுகம். (ஆனால் இதன் நதி மூலத்தை ஆராய்ந்தால் இது ஒரு மேற்கத்திய தழுவல் என்ற உண்மை நம்மைப் பார்த்து சிரிக்கும்.) மற்ற எல்லா பாடல்களும் வெகு எளிமையான வண்ணம் கொண்ட yet another typical mundane stuff  from Ilayaraajaa. டார்லிங் டார்லிங் டார்லிங் என்று ஒரு மேற்கத்திய வகைப் பாடலை நான் மிகவும் ரசித்துக் கேட்பதுண்டு இரண்டு வருடங்களுக்குப் பிறகு போனி எம் இசைக் குழுவினரின் sunny என்ற பாடலைக் கேட்கும் வரையில். இளையராஜாவினால் எம் எஸ் வி யின் மேற்கத்திய பாணி இசைக்கு ஈடு கொடுக்க முடியாத இயலாமையை இந்தப் படத்தில் அறிமுகம் செய்யப்பட்ட  ஸ்டீரியோ போனிக் என்ற கிம்மிக் சமன் செய்துவிட்டது.  ஸ்டீரியோ போனிக் என்றால் என்னவென்றே தெரியாத சில ஜென்மங்கள் இந்தப் புதிய தொழில் நுட்பத்தைப் பற்றி என்னென்னமோ கதை அளக்க, ("ரெண்டு ஸ்பீக்கர்ல ரெண்டு குரல் தனித் தனியா கேக்குது பாரு. அதான் ஸ்டீரியோ போனிக்.") சிறுவர்கள் வாய் பிளந்ததுதான் மிச்சம். அந்த போதையிலேயே ப்ரியாவின் பாடல்கள் உச்சத்திற்குப் போயின. இதைவிட உலகம் சுற்றும் வாலிபன், நினைத்தாலே இனிக்கும், சிவந்த மண் படப் பாடல்கள் அந்தந்த  மண்ணின் வாசத்தை  இசைப்  பிரதி எடுத்து அவைகளுக்கு அழகூட்டிய மந்திர கானங்கள். இதை நான் ஒரு சவால் போன்றே சொல்கிறேன். உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் எந்த ஒரு பாடலின்  அருகே கூட ப்ரியா படப் பாடல்கள் சற்றும் மழைக்குக் கூட ஒதுங்க முடியாது. 

    இது எப்படி இருக்கு? என்ற இந்தப் படத்தில் வரும் எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ  காயத்ரியின் காலைப் பனியில் ஆடும் மலர்கள் போன்ற பாடல்கள் மெல்லிய மேகம் ஒன்று முகத்தை உரசும் மெல்லிசைத் துளிகள். காயத்ரி படத்திலுள்ள வாழ்வே மாயமா வெறும் கதையா  பாடலின்  தாளம், சசிரேகாவின்(!) மிரட்சியூட்டும் குரலோடு இணைந்துகொண்டு நம் திகில் செல்களுக்கு  தீனிபோடும்.

    தர்ம யுத்தம் படத்தின் பாடல்கள் அடுத்து பெரிய வெற்றி பெற்றன. என் நினைவில் ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு, ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி இரண்டும் அந்தப் பழைய  ரேடியோ நாட்களை மீட்டுக்கொண்டுவரும் பல பாடல்களில் அடக்கம். ஆகாய கங்கையை  அதிக முறை ரேடியோக்களில் கேட்ட நினைவிருக்கிறது. ஆனால் புரியாத ஒன்று என்னவென்றால் ஒரு காதல் பாடலுக்கு எதற்காக மிக சோகமான இசையை பாடலின் ஆரம்பத்திலும் இடையிலும் கொடுக்க வேண்டும்? பாடல் சொல்லும் கருத்துக்கு ஏதுவான இசையை விட தனக்கு தோன்றியதை இசையாக படைப்பதே இளையராஜாவின் சிறப்பு. அவரது பல பாடல்களில் வரும் இடையிசைக்கும் சரணத்திற்கும் எந்தவித தொடர்பும் இருக்காது என்பதை அவர் பாடல்களை உன்னிப்பாக கேட்பவர்கள் அறிவார்கள். அவரது இடையிசையை நன்றாக கவனித்தால் முதலில் ஒரு குழல் அதைத் தொடரும் வயலின்கள் பிறகு சில கிடார் ஓசைகள் பின் மீண்டும் குழல் அல்லது வயலின் இசையோடு சடாரென்று சரணத்திற்குள் பாடல் அதிரடியாக படையெடுக்கும். சில சமயங்களில்  இந்த வயலின், குழல், கிடார் வாத்தியங்கள் அவ்வபோது இடம் மாறும். வெகு சில பாடல்களைத் தவிர இதுவே அவரது இசையின் வரைபடம்.

       ஹிந்தியில் மா என்று தர்மேந்திரா நடித்த படத்தை தமிழில் தேவர் பிலிம்ஸ் அன்னை ஓர் ஆலயம் என்று எடுக்க, ஜீப்பில் பெரிய துப்பாக்கியோடு உட்கார்ந்துகொண்டு ரஜினிகாந்த் காட்டு மிருகங்களை சினிமா வீரத்துடன் வேட்டையாடுவார். அதிலும் அவர் இரண்டு புலிகளை பிடிப்பதையெல்லம் இன்றைக்குப் பார்த்தால் படு தமாஷாக இருக்கும். இளையராஜாவின் இசை ஒன்றே சற்று சகித்துக்கொள்ளக்கூடிய அம்சம். நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியமாடுது என்றொரு அருமையான பாடல் இருக்கிறது. எஸ் பி பியின் அத்தனை மென்மையான குரலுக்கும்  அதற்கு ரஜினிகாந்த் காட்டும் முக பாவனைகளுக்கும் நீயா நானா என்று ஒரு போட்டியே நடக்கும்.  நந்தவனத்தில் வந்த குயிலே என்று  நாயகியை நாயகன் பகடி செய்யும் தமிழ் சினிமாவின் காதல் பாரம்பரியத்தை மீறாத பாடல் ஒன்று உண்டு.  டி எம் எஸ்  பாடிய அம்மா நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை என்ற பாடல் கொஞ்சம் நெஞ்சத்தை உருக்கும். இளையராஜாவின் முத்திரையான அம்மா பாடல்களுக்கு இதுவே முதல் விதை என்று நினைக்கிறேன்.  இதிலுள்ள இன்னொரு நல்ல பாடல் அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே. ரஜினியும் ஸ்ரீ ப்ரியாவும் குட்டி யானையை (உண்மையில் யானையைத்தான் குறிப்பிட்டேன்) சுற்றி வந்து பாடுவார்கள். படம் வந்த புதிதில் மதுரையில் சில கோவில் திருவிழாக்களில் காலை நேரங்களில் இந்தப் பாடலை அம்மன் பாடல்கள் ரேஞ்சுக்கு  சத்தமாக ஒலிபரப்பிய வேடிக்கையெல்லாம்  நடந்திருக்கிறது.   மேற்கத்திய இசை பின்னிப் பிணைந்த இளையராஜாவின் ஆரம்பகால  அதிரடி. சுசீலாவின் குரல் கேட்க வெகு சுகம். அவருக்காகவே நான் இந்தப் பாடலை பலமுறை ரசித்திருக்கிறேன். 

     காளி என்ற படம் சினிமாஸ்கோப்பில் எடுக்கப்பட்டு மண்ணைக் கவ்வியது. இதில் இரண்டு பாடல்கள் கேட்க நன்றாக இருக்கும். வாழும்  மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் என்று விஜயகுமார் ஓடும் காரில் பலவித சர்க்கஸ் குதியாட்டம் போட்டுக்கொண்டு பாடுவார். ரஜினியோ ரொம்ப சாந்தமாக உதடு பிரியாமல் புன்னகைத்துக்கொண்டே காரை ஓட்டிக்கொண்டிருப்பார்.  ரஜினியின் இந்த அலட்சியம் அப்போது எங்களை கவர்ந்தது. மற்றொரு பாடல் டாக்டர் கல்யாண், எஸ் பி பி இணைந்து பாடிய  ஆங்கிலத்தமிழ் பாடல். பெய்பி ஷேக்கிட்  பெய்பி என்று அதிரடியாக கல்யாண் ஆரம்பிக்க ஆர்ப்பாட்டமான மேற்கத்திய கிடார், ட்ரம்ஸ் வாத்திய இசைக்குப் பிறகு தித்திக்கும் முத்தம் ஒன்று அள்ளிக்கொடு என எஸ் பி பி பின் தொடர, வெட்டி வெட்டி ஆட வேண்டிய டிஸ்கோ நடனத்திற்கேற்ற  சரியான இசை.  சரணம் முடிந்து பல்லவிக்கு பாடல் திரும்பும் அந்த கணம் ஒரு உற்சாகத் தடவல். இதே படத்தின் அடி ஆடு பூங்கொடியே என்ற ஒரு பாசப் பாடல் அப்போது சற்று வெளிச்சம் கண்டது. 

 கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ என்ற மென்மையான கீதம் ஆறிலிருந்து அறுபதுவரை படத்தில் வந்தது. வானொலிகளில் அதிகம் கேட்கப்பட்ட பாடல்களில் ஒன்று.

   மீண்டும் கோகிலாவின் சின்னஞ்சிறு வயதில்  எனக்கோர் சித்திரம், ராதா என் ராதா என்ற இரண்டு பாடல்களும் பிரபலம் அடைந்தாலும் எனக்கு ஹேய் ஓராயிரம் ....மலர்களே மலர்ந்தது என்ற எஸ்  பி பி குழைந்து கொண்டு பாடும் அந்தப் பாடல்தான் விருப்பம்.

     அழகே உன்னை ஆராதிக்கிறேன் என்ற படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ஒலிப்பெருக்கிகளில் ஓயாது உரத்து ஒலித்தவை. அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க, குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை, சிறுசு ரொம்ப சிறுசு எளசு அம்மாடி எளசு (நான் படம் பார்த்ததில்லை. எனவே எதைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. அப்போதே ஆரம்பித்துவிட்டார் இளையராஜா தனது இசைப் "புரட்சியை".) பாடல்களைவிட நானே நானா யாரோதானா, என் கல்யாண வைபோகம் உன்னோடுதான் போன்ற பாடல்கள் தரமான இசை வடிவங்கள்.  தனிமையில் யார் இவள் என்றொரு பாடல் இருக்கிறது. பாடலின் துவக்கத்தில் வரும் சில ஓசைகளை வெட்டிவிட்டால் பாடலின் அருமையை எந்தவித தடங்கலுமின்றி ரசிக்கலாம். ஒரு நல்ல பாடலுக்கு எதற்காக தேவையில்லாத கேட்கவே கூசும் prelude என்று புரியவில்லை. ஆச்சர்யமாக இந்தப் படத்தில் வாணிஜெயராமை முழுமையாக பயன்படுத்தியிருந்தார் இளையராஜா.

      தைப் பொங்கல் படத்தில் இடம் பெற்ற கண் மலர்களின் அழைப்பிதழ், பனிவிழும் பூ நிலவே, தீர்த்தக்கரைதனிலே செண்பக புஷ்பங்களே பாடல்கள் கேட்க இனிமையானவை.

     சாமந்திப் பூவின்  ஆகாயம் பூமி என்றும் ஒன்றா? பாடல் அடிக்கடி சிலோன் வானொலியில் உலா வரும். பொன் மான தேடி நானும் பூவோட வந்தேன் பாடலோடு இதை தாராளமாக குழப்பிக்கொள்ளலாம்.

    ருசி கண்ட பூனை என்றொரு படத்தில்  அன்பு முகம் கண்ட சுகம் என்று இளையராஜா கொஞ்சம் நன்றாகவே பாடியிருக்கும் பாடல் ஒன்று இருக்கிறது. இதில்தான்  எஸ் ஜானகியை ஒரு  மிமிக்ரி பாடகியாக மாற்றிய  கண்ணா நீ எங்கே வா வா நீ இங்கே என்ற பாடல் உள்ளது. ஜானகி ஒரு குழந்தை போல பாடி அப்போது பலரது பாராட்டைப் பெற்றாலும் அவர் குரலில் துருத்திக்கொண்டு வெளியே தலைகாட்டும் செயற்கைத்தனம் இவருக்கு இதெல்லாம் தேவையா என்று எண்ணவைக்கும். பலர் இந்தப் பாடலை விரும்பவில்லை. இதே ஜானகி போடா போடா பொக்க (என்ன அரிதான தமிழ்!) பாடலில் ஒரு கிழவி போல  பாடியிருப்பார். இளையராஜாவின் இசையில் இவர் பாடியதோடு நின்றுவிடாமல், இப்படி மிமிக்ரி வேலைகள் செய்தும், முக்கி முனகி, விசேஷ சத்தங்கள் கொடுத்தும், கீச் என்று கத்தியும் பல புதுமைகள் செய்திருக்கிறார்.

     ஒரே முத்தம் என்ற ஓடாத படத்தில் அதிகம் அறியப்படாத ஒரு பாடல் இருக்கிறது. பாவையர்கள் மான் போல காவிரியின் நீர் போல. கவ்வாலி பாணியில்  இளையராஜா இசை அமைத்த ஒரே பாடல் இதுவாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. 65இல் வெளி  வந்த வல்லவனுக்கு வல்லவன் படத்தில் வேதா இசையமைத்த  பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம் பாடலின் சாயல் இதில் தெரியும்.

    இளையராஜாவின் 100வது படமாக வந்தது மூடுபனி. பாலுமஹேந்திரா சிகப்பு ரோஜாக்களையும், சைக்கோ என்ற ஹிட்ச்ஹாக்கின் படத்தையும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றாக கொட்டிக் கலந்து ரசிகர்களுக்கு ஒரு திர்ல்லர் விருந்தை வைத்தார். சிகப்பு ரோஜாக்கள் போலில்லாது  சற்று subtle லாக கதையின் போக்கு நகரும். சிகப்பு ரோஜாக்களை ரசித்த நம்ம ஊர் பெண்களுக்கு ஏனோ இந்தப் படம் பிடிக்கவில்லை. படத்தின் இறுதியில் நாயகன் பிரதாப் கிடாரை வைத்துகொண்டு  ஷோபாவை பார்த்து கிறங்கிப் போய் என் இனிய பொன் நிலாவே என்று பாடும் அந்தப் பாடல் இன்று வரை பலரது நினைவுகளில் ஒரு ரசாயன மாற்றத்தை உண்டாக்கி,  பல ஞாபகங்களை மீட்டிவிட்டுப் போகிறது. மறுபேச்சின்றி கிளாசிக் என்ற முத்திரை குத்திவிடலாம். பருவ காலங்களின் கனவு என்ற பாடல் அதிகமாக ஒலிபரப்பப்படாவிட்டாலும்  கேட்க நன்றாகவே இருக்கும்.

    கண்ணில் தெரியும் கதைகள் என்றாலே ஷங்கர் கணேஷின் நா ஒன்ன நெனச்சேன் என்ற பாடல்தான் முதலில் எட்டிப் பார்க்கும். கொஞ்சம் பின்னே பார்த்தால் நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே என்ற இளையராஜாவின் பாடலையும் காணலாம். படத்தின் அடையாளமாக இந்த இரண்டு  பாடல்கள்தான் இன்று நிலைத்திருக்கின்றன.

   நான் போட்ட சவால் என்றொரு படம் வந்து, உடனே யு டர்ன் அடித்து காணமல் போனது. சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தான் என்று ஒரு சுமாரான பாடல் உண்டு. அதைவிட நெஞ்சே உன் ஆசை என்ன? என்ற பாடல் கேட்க அமர்களமாக இருக்கும். அருமையான தடதடக்கும் இசையமைப்பில் டி எல் மகாராஜனின் குரலில் இந்தப் பாடல் ஒரு இனிமை. இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்திலும் இளையராஜா தனது பாணியை விட்டு விலகிய வேறு  இசையை கொடுத்திருப்பார்.

      நதியை தேடிவந்த கடல்  என்றொரு படம் எண்பதுகளில் வந்தது. ஜெயலலிதா நடித்த கடைசிப் படம் இது. இதில் தவிக்குது தயங்குது ஒரு மனது என்று ஜெயச்சந்திரன் பாடிய பாடல் உண்டு. படத்தில் ஜெயலலிதா காலை உடற்பயிற்சி செய்ய, நாயகன் சரத்பாபு ( அவர்தான் இவருக்கு ஜோடி! இப்போது இதை நினைக்கவே தயங்குது நம் மனது.) அவர் மீது மையலோடு பாடுவதாக காட்சி போகும்.

       இப்போது மிக முக்கியமான கட்டத்திற்கு வந்துவிட்டோம். எவ்வாறு நமது இசையின் ஒப்பனைகள் கலைந்தன என்பதை கீழே உள்ள ஒரு குறியீட்டுப் பாடல்  உங்களுக்கு விளக்கிவிடும்.

        பிரியமான பெண்ணை ரசிக்கலாம் என்ற வரியை பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம் என்று தவறாக பாடி உறவு முறைகளை கொச்சைப் படுத்தியதாக சில வருடங்களுக்கு முன் ஒரு பாடகர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதற்கும் முன் கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா இல்ல ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா என்ற பாடல் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டது. தமிழ்க் கலாச்சாரத்தை சிதைக்கும் பாடல்கள் என பல குரல்கள்  அப்போது கேட்டன. ஆனால் இதுபோன்ற சீரழிவின் முதல் வித்து எப்போது ஊன்றப்பட்டது என்று சற்று ஆராய்ந்தால், அந்தக்  கோடு நம்மை இளையராஜாவிடம் இழுத்துச் செல்கிறது.  இளையராஜாவின் இசையில்தான் இந்த ஆபாசம் அரங்கேறியது. இதை அவர் ஒரு பரிசோதனை என்ற அளவில் வைத்துக்கொள்ளாமல் ஒரு பாணியாகவே மாற்றிக்கொண்டார். இந்த ஆபாச டிரெண்ட் செட்டர் பாடல்கள் தமிழிசையின் ஆத்மாவை கேலி செய்து, எச்சில் துப்பி, புதைக்குழிக்குள் தள்ளி, அதன் மீது கல் நட்டு இனி என் ராஜ்யம்தான் என்று நாம் அறிந்திருந்த தரமான இசையை துவம்சம்  செய்தது.

            இளையராஜா அமைத்த adult songs அதாவது ஆபாச பாடல்கள் அவை வந்த சமயத்தில் பெருத்த கலாச்சார அதிர்வை கொடுத்ததும், ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு உட்பட்டதும் இன்றைக்கு பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. இன்று அவர் ஒரு சாமியார் தகுதிக்கு வந்துவிட்டதாலும் அவர் மீது பாய்ச்சப்படும் இந்த பாசாங்கான ஒளி வட்டமும் அவரை காட்டமாக விமர்சிப்பதிலிருந்து ஒருவரை தள்ளி நிற்க வைத்து விடுகிறது.  பலவிதமான மேற்பூச்சுகளுடன் அவரது ரசிகர்கள் அவ்வாறான பாடல்களுக்கு புதுவண்ணம் அடித்தாலும், புற்கள் பூண்டுகள் முளைத்த பழந்தமிழ் வார்த்தைகளைக் கொண்டு அந்த ஆபாசங்களை அழகுபடுத்தி அவற்றை குறித்து பத்தி பத்தியாக பொழிப்புரைகள்  எழுதினாலும் சில நிகழ்வுகளை காலம் பதிவு செய்தே இருக்கிறது.  அதன் மீது ஆயிரம் புல்டோசர்களை விட்டு ஓட்டினாலும் அது அழியப்போவதில்லை. அது போன்ற பல இழிவான பாடல்களிலிருந்து உதாரணத்திற்கு நான் ஒரு பாடலை மட்டுமே இங்கே குறிப்பிட இருக்கிறேன். மற்றவை மற்றொரு பதிவில் படையெடுக்கும்.

       1982இல் வந்த ஒரு திரைப் படம் கடல் மீன்கள். கமலஹாசன் இரட்டை வேடங்களில் வழக்கமான  அதிகப்பிரசங்கித்தனத்துடன் நடித்த yet another crap. இதில் தள்ளாடுதே வானம் என்றொரு நல்ல பாடல் இருக்கிறது. இதே படத்தில் இளையராஜா ரசிகர்கள் வசதியாக மறந்துவிட்ட   "கலாச்சார பெருமை" கொண்ட பாடல் ஒன்று உள்ளது.  இதை நான் என் நண்பனிடம் தெரிவித்தபோது ,"அப்படியா?" என்றான். அவனைப் போலவே இதைப் படிக்கும் பலருக்கும் தோன்றலாம். அது என்ன பாடல் என்ற கேள்வி எழும். பாடலின் முதல் வரி ஆண் குரலில்  இப்படி;"மதனி மதனி," உடனே பெண் ,"கொழுந்தா கொழுந்தா" ஆண் "மதனி மதனி மச்சான் இல்லையா இப்ப வீட்டுல?" பெண் "கொழுந்தா  கொழுந்தா எதுக்கு கேக்குற எதுவும் வேணுமா?"  அடுத்து வரும் வரி  நம் சமூகம் அறிந்திருக்கும்  உறவு முறைக்குள்  அதிர்ச்சி ஊசி செலுத்தும்.  " நா ராத்திரிக்கு துணையாக  வரலாமா?"  எதற்கு என்ற கேள்விக்கு இங்கே இடமில்லை. Pretty straight. உடனே அவள் சொல்வாள்; " ஹே உளறாத எனக்கொன்னும் பயமில்ல" ரொம்பவும் தைரியம். Highly adventurous.  ஆஹா இதுவல்லவோ தரமான நல்லிசை! நம்  பண்பாட்டைச் சொல்லும் அதி அற்புதப் பாடல்! சரணத்தில் பாடல் இன்னும் கொஞ்சம் அசைவமாக போகும்.

   மதனி என்ற பெயரையே அப்போதுதான் நான் முதல் முறையாகக் கேட்டேன். கேட்டதும் மதனி என்பது  தலையில் பானையைச்  சுமந்து பதனி விற்கும் ஒரு பெண்னைக் குறிக்கும் ஒரு சொல்  என்றுதான்  நினைத்தேன். அன்றைய சமயங்களில் சிறிய ஊர்களில் தினமும்  காலை வேளையில் சில  பெண்மணிகள்  பதனி விற்றபடி வருவது அன்றாட நிகழ்வுகளில் ஒன்று. மேலும் மதனிக்கும் பதனிக்கும் இயல்பாக இருக்கும் எதுகை மோனை சத்தம் என் புரிதலின்  மீது புகுந்து விளையாடிவிட்டது. வீட்டில் இதைச் சொன்னதும் புரையேறிய சிரிப்பலை  அடங்குவதற்குள் எனக்கு எரிச்சலைத் தாண்டி கோபம் வந்துவிட்டது. "சில இடங்கள்ள அண்ணியத்தான் மதனிம்பாங்க" என்ற விளக்கம் இன்னும் அதிகமாக  என் தலையை  சுற்ற வைத்தது. "அது எப்படி?" என்று குழம்பிப்போனேன். காதலர்கள் பாடும் ஒரு டப்பாங்குத்து பாடலுக்கு எதற்காக மதனி - கொழுந்தன் tag என்று எனக்குப் புரியவில்லை. என் குழப்பத்திற்கு பதில் வந்தது;  "கன்றாவிக் கழிசடையெல்லாம் கேக்கறத மொதல்ல நிறுத்து".

    கீழே இந்தப்  பாடலின் "கவிதை" உள்ளது. படித்துப் பாருங்கள். எழுதியது பஞ்சு அருணாசலம் என்ற "அரிதான" கவிஞர்.

மதனி மதனி,     கொழுந்தா கொழுந்தா
மதனி மதனி மச்சான் இல்லையா இப்போ வீட்டுல
கொழுந்தா கொழுந்தா எதுக்கு கேக்குற எதுவும் வேணும்மா
நா ராத்திரியில் துணையாக வரலாமா
ஹே உளராத எனக்கொன்னும் பயமில்லே

ஊரும் ஒலகம் எல்லாம் இதை பார்த்தா ஏதோ சொல்லும்
வாயு மனக்கும் பேசி பல வார்த்தையாலே கொல்லும்
யாரு சொன்னா என்ன
எங்க மதினிய போல இல்ல
யாரு சொன்னா என்ன
எங்க மதினிய போல இல்ல
ஊரு எல்லாம் ஹ ஹ ஹ ஹ ஊரு எல்லாம் தேடி பார்த்தேன்
உங்கள போல யாரு
ஓடி யாடும் சின்ன வயசு ஒரு குறையாச்சும் கூறு
ஆமாங்க எனக்கு ரொம்ப வெவரம் தெரியாத போதே மனமாச்சு
மதனி மதனி     கொழுந்தா கொழுந்தா
மதனி மதனி மச்சான் இல்லையா இப்போ வீட்டுல
கொழுந்தா கொழுந்தா எதுக்கு கேக்குற எதுவும் வேணும்மா

நாளும் மூணும் ஏழு ஆமா நமக்கும் நல்ல நாளு
நானும் உங்க ஆளு ஆமா எல்லாத்துக்கும் மேலு
அண்ணன் வீட்டு நெல்லு
எங்க அண்ண பொண்டாட்டி கையு
அண்ணன் வீட்டு நெல்லு
எங்க அண்ண பொண்டாட்டி கையு
ஹ ஹ எனக்கு ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
எனக்கு உன்ன பார்த்தா ஏதோ போல ஆச்சு
அள்ளி கட்டி நானும் சேர்க்க ஆசை மீறி  போச்சு
ஹ ஹ ஹ நெஜமா எனக்கும் ஒன்னு நெனப்பா இருக்குது சிரிக்காதீங்க
மதனி மதனி  கொழுந்தா கொழுந்தா
மதனி மதனி மச்சான் இல்லையா இப்போ வீட்டுல
கொழுந்தா கொழுந்தா எதுக்கு கேக்குற எதுவும் வேணும்மா
நா ராத்திரியில் துணையாக வரலாமா
ஹே உளராத எனக்கொன்னும் பயம்மில்லே
மதனி மதனி 
கொழுந்தா கொழுந்தா 


    இளையராஜா எதை கணக்கில் கொண்டு இந்தப் பாடலை அமைத்தாரோ தெரியவில்லை. மேலே மேலே சென்ற  வணிக வெற்றியின்  உற்சாகத்தில் அவருக்கு  வானமே வசப்பட்டு விட்டதைப் போல ஒரு உணர்வு வந்திருக்கலாம்.  இல்லாவிட்டால் இதுபோன்ற ஆபாசக் குப்பைகளுக்கு இளையராஜாவின்  முத்திரை கிடைத்திருக்காது. பாடல் வந்த சில நாட்களிலேயே இதற்கு  பலத்த எதிர்ப்பு கிளம்பியது. (நல்லவேளையாக எதிர்ப்பு வந்தது.  இல்லாவிட்டால் இளையராஜா இன்னும் பலவிதமான உறவு முறைகளுக்கு புரட்சி  மெட்டு போட்டிருப்பார். இதேபோல பயணங்கள் முடிவதில்லை படத்தின் ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா? பாடலுக்கும் மக்கள் மத்தியில் சலசலப்பு உண்டானது.) நெருக்கமான உறவு முறைகளை இளையராஜா கொச்சைப் படுத்துவதாக கண்டனக் குரல்கள் உக்கிரமான  டெசிபெலில்  ஒலிக்க, இந்தக் கலாச்சார எதிர்ப்பில் மதனி "மயிலு"வானாள். கொழுந்தா "குமரா" ஆனான். வேடிக்கையாக திரையில் மட்டுமே மயிலு, குமரா. ஆனால் வானொலிகளில் மதனியும் கொழுந்தனும் கலாச்சாரத்தை காலில் மிதித்து துவசம்சம் செய்தபடிதான் இருந்தார்கள். இப்போது கூட யு டியூபில் நீங்கள் அவர்களைத்தான் காண முடியும்.

       இதற்கு எப்படி இளையராஜாவை குற்றம் சொல்ல முடியும் பாடலை எழுதிய கவிஞர்தான் culprit என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம். உண்மைதான். பாதி உண்மை. ஆனால் வசதியாக இன்னொரு பாதியை மறந்துவிடுகிறோம். ஒரு பாடலில் எதை அனுமதிக்கவேண்டும் என்பது இசையமைப்பாளரின் முடிவில் இருக்கிறது. பாடமுடியாது என்று பாடகர்கள் மறுக்க அதனால் மாற்றப்பட்ட கவிதை வரிகள், மெட்டுக்குப் பொருந்தாத வரிகளை அங்கே இங்கே வெட்டி ஒட்டி அமைத்த பாடல்கள் போன்றவைகளைத் தாண்டி, இயல்பாக ஒரு இசையமைப்பாளருக்கு இருக்க வேண்டிய சமூக அக்கறை அல்லது  எதை பொதுவில் வைக்கவேண்டும் என்ற வியாபார நோக்கமற்ற சிந்தனை இளையராஜாவிடம் இல்லாதிருந்தது தமிழ் திரையிசையின் வீழ்ச்சிக்கு பாதை அமைத்தது. அதேசமயம்  நகைமுரணாக இளையநிலா பொழிகிறதே, அந்தி மழை பொழிகிறது  போன்ற பாடல்களுக்கு  பெரும்பான்மையானவர்கள் இளையராஜாவை மட்டுமே  பாராட்டுகிறார்கள்.  எழுதிய வைரமுத்துவை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இளையராஜா என்று வந்துவிட்டால் பாராட்டு மட்டும் அவருக்கு. திட்டு என்றால் இருக்கவே இருக்கிறார்கள் கவிஞர்கள், இயக்குனர்கள்.

       இசை என்ற ஒரு முழுமையான உணர்வின் சுவையை அம்மா அப்பா சகோதர சகோதரிகளுடன் ஒரே அலைவரிசையில்  அறியும் அந்த ஒருங்கிணைந்த மேலான அனுபவத்திற்கு இளையராஜா  தடுப்பான்கள் அமைத்தார். அவரின்  பல பாடல்களில் இந்தச் சுவர் நம் இசையின்பத்தை கூறு போட்டு அந்த மகத்தான  இசைப் பகிர்வை   தனித்தனித்  தீவுகளாக மாற்றியது. "இதெயெல்லாம் எப்படி வீட்டில சத்தமாக வெச்சுக் கேக்க முடியும்?" என்ற புதிய வகை இசை உண்டானது. "சீ இந்த கருமத்தையா கேக்கிற?" என்று பெரியவர்கள் சிறியவர்கள் மீது சீறி விழுந்த  பாடல்கள் உண்டாயின. இந்தப் பிரிவின் கீழ்  இளையராஜாவின் எண்ணிலடங்காப் பாடல்கள் வரிசை கட்டி நின்றன. அவற்றை நான் இங்கே குறிப்பிட்டால் பதிவின் சாராம்சம் திசை விலகிப் போய்விடும்.  மேலும் அது இப்போது எனது நோக்கமல்ல.

     கடலோர கப்சாக்கள் என்ற தலைப்பில் திரு சேட்டைக்காரன் என்பவர் இந்தப் பாடல்  பற்றி எழுதியிருக்கிறார். கீழ் வருவது அவருடைய எழுத்து.

இந்தப் படத்தில் ‘மதனி மதனி மச்சான் இல்லையா இப்போ வீட்டுலே? கொழுந்தா கொழுந்தா எதுக்குக் கேட்குறே?‘ என உடைபட்ட உறியடிப்பானைபோல இலக்கியரசம் சொட்டிய பாடலும், அதற்குக் கமல் ஆடிய விறுவிறு ஆட்டமும். அதிலும் ‘ஆஹா எனக்கு உங்களைப் பார்த்தா ஏதோ போல ஆச்சு’ என்ற வரிகளுக்கு உலகநாயகன் பிடிக்கிற அபிநயத்தைப் பார்த்துவிட்டு, அப்பாலிக்கா விஸ்வரூபம்கதக் டான்ஸ் பத்திப் பேசுங்கப்பா! இந்தப் பாடல் தமிழ்க் கலாச்சாரத்துக்கே இழுக்கு என்று அனைவரும் அல்சர் வந்தது போல ஆவேசமாகக் கத்தவே, நெல்லை, குமரி மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் மட்டும் ‘மயிலு மயிலு மச்சான் இல்லையா இப்போ வீட்டுலே?என்று பல்வலி, அதாவது பல்லவி மாற்றப்பட்டது.


     அதே சமயத்தில் இதே கடலோரப் பின்னணியில்   சில வருடங்களுக்கு முன் வந்த ஒரு படப்  பாடலை கீழே கொடுத்துள்ளேன்.  எம் ஜி ஆர் நடிப்பில் ஸ்ரீதர் இயக்கிய மீனவ நண்பன் என்ற படத்தின் பாடல் அது. பொதுவாக இந்தப் படத்தில்  தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து, நேரம் பவுர்ணமி நேரம் என்ற இரண்டு பாடல்கள் அதிகம் பிரசித்திபெற்றவை. நான் குறிப்பிடுவது அலைகளின் மீது ஆடிச் செல்லும் படகில் பயணம் செய்யும் தாலாட்டின்  உணர்வை கொடுக்கும் பாடல். இசை என்ற மந்திரத்தின் புரிந்துகொள்ள முடியாத வினோத அழகை மனதில் காட்சியாகக் காணும் ஒரு அற்புதப் பாடல். பொங்கும் கடலோசை தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே கொஞ்சும் தமிழோசை  என்று  வாணியின் குரலில் நம் நெஞ்சத்தை  அருவியின் தண்ணீர்த் துளிகள் போல நனைக்கும் கானம். இந்தப் பாடலின் இசையை ஒரு மகா இசைக் கலைஞனின்  வறண்டு போகாத கற்பனை ஒன்றே படைத்திருக்க முடியும். வேறு யார்? எம் எஸ் விஸ்வநாதன்தான்.  ஜலதரங்கம்  மற்றும் Xylophone வாத்தியங்களைக் கொண்டு எம் எஸ் வி ஒரு கடல் காட்சியை அதன் வனப்பு குறையாமல் இசையாக வடித்திருக்கிறார்  என்று தாராளமாக சொல்லலாம்.  தமிழில் இந்த Xylophone வாத்தியம் அதிகம் இசைக்கப்பட்டதில்லை. தண்ணீர்த் துளிகளின் ஓசைக்கு  இணையாக  இந்த இரண்டு வாத்தியங்களைக் கொண்டு எம் எஸ் வி பாடலில் வரவேண்டிய  சம்பிரதாயமான தபலா தாளக்கட்டை வியப்பான முறையில் சமன் செய்துவிடுகிறார். அதிகம் ஆராவாரம் இல்லாத பாடல். குளிர்ந்த நீர்த்துளிகள் மேனியின் மீது சிதறும் போது நமக்குக் கிடைக்கும் சிலிர்ப்பை  இதன் இசையில் நீங்கள் உணரலாம்.

    எழுபதுகளின் முடிவு மற்றும் எண்பதுகளில் இளையராஜாவின் graph மேல்நோக்கி எகிறிச்  சென்றுகொண்டிருந்தது. வர்த்தக வெற்றியைக் குறிக்கும் இந்தக் கோடு அவருக்கு கிரீடம் அளித்தது.  அவரது ராஜாங்கம் துவங்கியது. ஒரு தலைமுறையை மயக்கும் இசைக்கான  ஆயத்தங்கள் தென்பட ஆரம்பித்தன. இசையின் புதிய அத்தியாயங்கள் எழுதப்பட காத்திருந்தன. எல்லாம் இருந்தும் நமது இசையின் இந்த முக மாற்றம் ஒரு ஆழ்ந்த பெருமூச்சை நம்மிடம் உருவாக்குகிறது.  பழைய புகைப்படங்களை பார்க்கும்போது நமக்குத் தோன்றும் அந்த துயர உணர்வைப் போல. மீண்டும் பெற முடியாத நாம் இழந்துவிட்ட குழந்தைத்தனத்தை விரும்பும் உணர்வின் வலியைப்  போல.

    இளையராஜா மேலேதான் சென்றுகொண்டிருந்தார். ஆனால் கூடவே நமது தமிழிசையின் தரத்தையும் எடுத்துச் செல்ல மறந்துவிட்டாரோ என்று தோன்றுகிறது.
   








அடுத்து : இசை விரும்பிகள் XXVI  - எண்பதுகள்-  கவிதைக் காற்று.



38 comments:

  1. மிக நீண்ட பதிவு ...
    அருமையான இசைப் பதிவு
    வழக்கம் போலவே...
    தொடருங்கள் ..

    ReplyDelete
  2. சில பாடல்களை மறப்பதே நல்லது... அவை பணம் செய்த மாயங்கள்...

    ReplyDelete
  3. நிறைய விடயங்கள் தரும் நிறைகுட பதிவு...
    இந்த மதனி வார்த்தையை போட்டு வந்ததை இப்போது தான் கேள்விபடுகின்றேன். அருவருப்பான வரிகள்...
    அன்னக்கிளி கேள்வி குறி.. 16 வயதினிலே ஆச்சர்யகுறி... அப்ப .. சிவப்புரோஜாக்கள் ...? அதிசய குறி தானே....
    பரா சக்தி மற்றும் 16 வயதினிலே ஒரு திருப்புமுனை படங்கள் என்று சரியாக சொன்னீர்கள் ... நிறைய கேட்டு ரசித்த பாடல்களை நினைவிற்கு அழைத்து வந்தீர்கள். நீங்கள் ரூம் போட்டு எழுதிய இந்த பதிவை நாங்கள் லீவ் போட்டு இன்னொரு முறை படிக்க வேண்டும் என்று தான் சொல்லுவேன்

    ReplyDelete
  4. ஹலோ காரிகன்

    ஒரு இனிய மனது என்ற ஜானி படப் பாடல் பாடியது ஜென்சி அல்ல சுஜாதா .

    ReplyDelete
  5. காரிகன்

    ///நவீனம் என்றால் ரஹ்மானிலிருந்து துவங்குவதில் பெரிய ஆட்சேபனைகள் யாருக்கும் இருக்கப் போவதில்லை.///

    உங்கள் வார்த்தைகளை நான் ஆட்சேபிக்கிறேன் . கர்னாடக சங்கீதத்தை பாடிக்கொண்டிருந்த காலத்தில் மெல்லிசையை கொண்டு வந்த ஜி. ராமநாதன் இசை முதல் நவீனம் . எல்லோரும் முணுமுணுக்கும் வண்ணம் மேனாட்டு இசை கலப்பு செய்து மெல்லிசை கொடுத்த விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை இரண்டாம் நவீனம். மெல்லிசையிலும் பின்னணி இசையில் பிரமிக்க வைத்த இளையராஜா இசை மூன்றாம் நவீனம் . நமது தமிழ் இசையை எறிந்துவிட்டு எவன் நாட்டு இசையையோ வட நாட்டு இசையையோ தமிழ் வார்த்தைகள் எழுதி இசைத்த ரகுமான் இசையை நான்காம் நவீனம் என்று வேண்டுமென்றால் சொல்லிக் கொள்ளலாம்.

    ReplyDelete
  6. காரிகன்

    ///உலகம் சுற்றும் வாலிபன், நினைத்தாலே இனிக்கும், சிவந்த மண் படப் பாடல்கள் அந்தந்த மண்ணின் வாசத்தை இசைப் பிரதி எடுத்து அவைகளுக்கு அழகூட்டிய மந்திர கானங்கள். இதை நான் ஒரு சவால் போன்றே சொல்கிறேன்.///

    மேலே சொன்ன படங்கள் எந்த ஊர் வாசனையை உங்களுக்குக் காட்டியது என்று ஆதாரத்தோடு சொல்ல முடியுமா ?

    பிரியா படம் உங்களுக்கு அமிஞ்சிக் கரை வாசனை அடித்தது என்றால் அந்தப் படங்கள் கூடுவாஞ்சேரி வாசனை அடித்ததாக நான் எழுதினால் உண்மையாகாதா!? பொய்யான வாசனையோடு பதிவெழுதாதீர்கள்.

    ReplyDelete
  7. /// பாடல் சொல்லும் கருத்துக்கு ஏதுவான இசையை விட தனக்கு தோன்றியதை இசையாக படைப்பதே இளையராஜாவின் சிறப்பு. அவரது பல பாடல்களில் வரும் இடையிசைக்கும் சரணத்திற்கும் எந்தவித தொடர்பும் இருக்காது என்பதை அவர் பாடல்களை உன்னிப்பாக கேட்பவர்கள் அறிவார்கள். ///


    நல்ல நகைச் சுவை !

    ReplyDelete
  8. காரிகன். தங்களின் இந்த நீண்ட பதிவு பிரபலமான இரண்டு திரைப்பட வசனங்களை எனக்கு நினைவூட்டுகிறது. பதிவின் முதல் பாதி(நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு )அடுத்த பாதி (பத்த வச்சிட்டியே பரட்டை) திரு.தனபாலன் அவர்கள் கூறியுள்ளது போல சிற்சில பாடல்கள் வணிக நோக்கிற்காக. தரம் குறைந்திருக்கலாம் .அதற்காக இளையராஜா வின் அனைத்துப் பாடல்களும் தரமற்றவை என்றுரைத்தல் எவ்விதம் நியாயமாகும் ?

    ReplyDelete
  9. காரிகன்

    ' நான் ஏழு வசுல எளனி வித்தவ ' ( அந்த காலத்தில் எளனி என்ற வார்த்தையில் அசிங்கம் வைத்து பேசிய கூட்டம் உண்டு )

    'இலந்த பழம்' ( பாடல் முழுமையும் அசிங்கப்படுத்தும் வார்த்தைகள் இல்லாவிட்டாலும் அசிங்கப்படுத்திக் கொண்ட கூட்டத்தை நான் சந்தித்திருக்கிறேன் )

    'என்ன சுகம் ...என்ன சுகம் ' ( நல்லா சொல்லிப் பாருங்க ...பாலுறவு சப்தம் அதில் இல்லை!?)

    'இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா ' (எதற்கு என்று சிறு வயதில் நானும் கேள்வி கேட்டிருக்கிறேன்)

    ' மடல் வாழை தொடை இருக்க மச்சம் ஒன்று அதில் இருக்க ' ( மச்சத்திற்கு ஒரு அர்த்தம் செய்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் )

    adult song இளையராஜாவிற்கு முன்னரே நிறைய இசை அமைப்பாளர்கள் கொடுத்துவிட்டார்கள். அப்படியென்றால் உங்கள் கூற்றுப்படி அவர்கள் தமிழ்த் திரை இசையை முதலில் சீரழித்து விட்டார்கள் . இல்லையா!?



    ReplyDelete
  10. வாருங்கள் யாதவன் நம்பி,

    உங்களுக்கும் எனது மே தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. வாருங்கள் மது,

    இன்னும் எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். நீண்ட பதிவுதான் என்ன செய்வது? நம் பழக்கம் அப்படி.

    ReplyDelete
  12. வாங்க டி டி,

    ---சில பாடல்களை மறப்பதே நல்லது... அவை பணம் செய்த மாயங்கள்...-----

    நல்ல அணுகுமுறைதான். ஆனால் தமிழிசையை இவர்தான் கெடுத்தார் என்று ரஹ்மான் வகையறாக்களை சுட்டிக்காட்டும் இரா வாசிகளுக்கு இதை சொல்ல வேண்டாமா?

    ReplyDelete
  13. வாங்க விசு,

    இந்த மதனி பாடல் அப்போது பெரிதாக பேசப்பட்டது. அருவருப்பான வரிகள் என்று சரியாக சொல்லியிருக்கிறீர்கள். இராவின் பல பாடல்கள் இதுபோன்று அருவருப்பான வரிகளை கொண்டவைதான். ஆனால் அவர் கொடுத்த சில நல்ல பாடல்களை வைத்துக்கொண்டே அவர் பற்றிய மதிப்பீட்டை சிலர் செய்துகொண்டிருக்கிறார்கள். ரஹ்மானால்தான் நமது இசை கெட்டது என்று கண்மூடித்தனமாக சூடம் அணைக்காத குறையாக சத்தியம் செய்கிறார்கள். உங்கள் ஆளும் ரொம்ப புனிதர் கிடையாதப்பா என்று திருப்பி அடிக்கவேண்டிய கட்டாயம்.

    ReplyDelete
  14. வாங்க சால்ஸ்,
    ---திரையிசையின் முதல் நவீனம் பண்ணைப்புரத்து புல்லாங்குழல்---

    என்று உங்களின் தற்போதைய பதிவை துவங்கி இருக்கிறீர்கள். இங்கே என்னிடம் முதலில் இருந்த இராவை மூன்றாம் இடத்திற்கு இறக்கிவிட்டீர்கள். இதில் எது நீங்கள் நம்புவது? நான் நவீனம் என்று சொன்னது அவரவர்கள் வந்த காலகட்டத்தை குறித்தே ஒழிய வேறு மறைமுகக் காரணங்களல்ல. ஜி ராமநாதன் முதல் நவீனம், எம் எஸ் வி இரண்டாம் நவீனம் என்று நீங்கள் பேசுவதைக் கேட்கும் போது வியப்பாக இருக்கிறது. ஜி ராமநாதனைப் பற்றியெல்லாம் இப்போது திடீரென பேசுகிறீர்களே என்ற வியப்புத்தான் வேறென்ன? இரா தவிர வேறு யார் பற்றியும் அக்கறை காட்டாத நீங்கள் ...எப்படி இருந்த நீங்கள்? இதுதான் நிதர்சனம். இப்படியே நான் கூறும் மற்ற உண்மைகளையும் கூடிய விரைவில் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

    ரஹ்மானைப் பற்றிப் பேசும்போது சற்று காழ்புணர்ச்சி தூக்கலாக தெரிகிறது. இராவாசிகளுக்கு ரஹ்மான் ஒரு சிம்ம சொப்பனம்தான் போல. நீங்கள் என்னத்தை இகழ்ந்தாலும் அவர் தொடும் உயரங்கள் உங்கள் இராவே கற்பனை செய்யாதது. ஒருவேளை உங்களைப் போன்றவர்களின் தூற்றுதல்கள்தான் அவரை இன்னும் அதிக உயரங்களுக்கு எடுத்துச் செல்கிறதோ என்று லைட்டா ஒரு சந்தேகம் வருகிறது..

    ஜானி படத்தின் ஒரு இனிய மனது பாடல் சுஜாதா பாடியதுதான்.. ஜென்சியை அப்போது அதிகம் இரா பயன்படுத்தியதால் இதுவும் அப்படியோ என்ற தவறு. மேலும் அது அழைத்துச் செல்லுமா அல்லது அணைத்துச் செல்லுமா என்றும் சந்தேகம். அதுசரி இரா பாடல்களில் கவிதையா முக்கியம்? அவர் வயலினை இரண்டு இழுப்பு இழுத்தால் அதுவே சிலருக்கு பேரானந்தம்... கஷ்டம்டா சாமி..

    பிரியா பாடல்கள் லோக்கல் ரேஞ்ச் என்றால் உடனே போட்டிக்கு நீங்கள் குறிப்பிடும் கருத்து ரொம்பவும் சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கிறது. ஆதாரம் காட்டு என்றால் எனக்கும் நீங்கள் அதை நிறைய காட்ட வேண்டியதிருக்கும். உங்களுக்கெல்லாம் ஆரோக்கியமான நியாயமான விவாதங்கள் செய்வது எப்படி என்று தெரியவே தெரியாதா? அல்லது இதெல்லாம் ஒரு தற்காப்பு ஜோடனையா?

    இராவின் இடையிசை அவரது மகுடம். ஆனால் பல பாடல்களில் அதுவே பாடலை விட்டு தனித்து நிற்கும். அதைத்தான் நான் குறிப்பிட்டேன். அதை நீங்கள் ஒரு காம்ப்ளிமென்ட் என்று எடுத்துக்கொள்ளலாம். அது அவர் பாணி என்றுதான் நான் சொல்கிறேன்.

    அடுத்து உங்களின் ஏலந்தபளம் கருத்துக்கு வருகிறேன்.. கொஞ்சம் பொறுமை காக்கவும்...

    ReplyDelete
  15. வாங்க அருள் ஜீவா,

    இந்தப் பதிவு உங்களுக்கு உவப்பாக இருக்காது என்பது தெளிவு. முதல் பாதி இரண்டாம் பாதி என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை. இதென்ன சினிமா படமா? ஒருவேளை இரா-பாரா குறித்தது முதல் என்றும் மற்றது இரண்டாவது என்றும் நீங்களாகவே அர்த்தம் பண்ணிக் கொண்டுவிட்டீர்கள் போல.

    திண்டுக்கல் தனபாலனுக்கு பதில் சொல்லிவிட்டேன். உங்களுக்கும் அதையே சொல்ல வேண்டாம் என்பதால் வேறு ..

    இராவின் அனைத்துப் பாடல்களும் தரமில்லாதவை என்று நான் சொன்னதாக நீங்கள் சொல்வது ஒரு உண்மைத் திரிப்பு. ஒழுங்காக படித்துவிட்டு பதில் எழுதியிருந்தால் இது போன்ற தவறான கருத்துகளை நீங்கள் தவிர்த்திருக்கலாம். மேலும் நான் குறிப்பிட்ட அந்த ஒரு பாடலுக்கே இன்னும் சரியான பதில் வரக்காணோம்..
    இன்னும் இரண்டு மூன்று எடுத்து விட்டிருந்தாலும்...

    இத்தனை எடுத்துச் சொல்லியும் இராவை பாதுக்காக்கும் உங்களின் நிலை நினைத்து எனக்கு வேதனைதான்.. வேறன்ன சொல்வது? நன்றாக இதுபோன்ற குப்பைகளை வீட்டில் வைத்துக் கேளுங்கள்...அது உங்கள் விருப்பம்...

    ReplyDelete
  16. காரிகன்

    வார்த்தைகள் உங்களைப் போன்ற அரிப்பெடுத்த ரசிகர்களுக்காக தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் எல்லோரும் சேர்ந்து போட்டது. இசையமைப்பாளர் இசை மட்டுமே கொடுத்தார். மடத் தனமாக ( உங்களின் வார்த்தைதான்) பேசக் கூடாது.

    இளையராஜாவின் இசை முன்னோர்களை நானும் ஏற்றுக் கொண்டவனே ! சில பாடல்களை நீங்கள் குறிப்பிட்டுச் சொன்னதால் நானும் முன்னவர்களின் பாடல்களை குறிப்பிட்டிருக்கிறேன் .

    ---திரையிசையின் முதல் நவீனம் பண்ணைப்புரத்து புல்லாங்குழல்--- என்பது எனது வார்த்தைகள் அல்ல என்று என் பதிவிலும் சொல்லியிருக்கிறேன் .

    ///ரஹ்மானைப் பற்றிப் பேசும்போது சற்று காழ்புணர்ச்சி தூக்கலாக தெரிகிறது. இராவாசிகளுக்கு ரஹ்மான் ஒரு சிம்ம சொப்பனம்தான் போல. நீங்கள் என்னத்தை இகழ்ந்தாலும் அவர் தொடும் உயரங்கள் உங்கள் இராவே கற்பனை செய்யாதது. ///


    நீங்கள் இளையராஜாவை இகழ்வதில் காட்டும் காழ்ப்புணர்ச்சியை விட நான் காட்டியிருப்பது குறைவு என்றே நினைக்கிறேன். ரகுமானுக்கு முன்பே இளையராஜா என்றைக்கோ சர்வதேச அளவில் உச்சிக்குப் போய்விட்டார். ரகுமானைப் பார்த்து ராஜா வியக்கிறாராம்!? சின்னப்புள்ளத் தனமா இருக்கே!


    அப்புறம் யாருக்கும் தெரியாத இந்த வி.குமாரை மகத்தான இசை மேதை என்று பொய் ஜோடனை செய்யாதீர்கள் . உங்களின் குயுக்தி தெரியாது வாசிக்கும் வாசகர்கள் நம்பிவிடப் போகிறார்கள்.

    ReplyDelete
  17. சால்ஸ்,

    உங்களின் எலந்தப் பளம் பற்றிய கருத்துக்கு எனது பதில்.

    நான் குறிப்பிட்டது இரா அமைத்த உறவு முறையை அசிங்கப்படுத்திய பாடலைப் பற்றித்தான். நீங்கள் என்னடாவென்றால் மருந்து சாப்பிட்ட எலி போல எங்கெங்கோ பிராண்டுகிறீர்கள். அப்படிப் பார்த்தால் நிலா காயுது, பொன்மேனி உருகுது, அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன், வா மாமா வசமாத்தான் மாட்டிக்கிட்ட, ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ, சும்மா நிக்காதீங்க என்று வேறு பாதையில் போகவேண்டியதிருக்கும். நான் இன்னும் அந்தப் பக்கம் செல்லவில்லை. அதற்குள் என்ன அவசரம்? அதுவும் தான் வருகிறது பிறகு. அப்போது பேசிக்கொள்ளலாம்.

    இப்போது மதனி பாடல் போன்று இரா வுக்கு முந்தைய இசை அமைப்பாளர்கள் ஆபாச பாடல்கள் அமைத்திருந்தால் அதை குறிப்பிடுங்கள். அதைப் பற்றியே வாயைத் திறக்க காணோம். அதிலேயே தெரிகிறது உங்கள் இயலாமை. எதிர்பார்த்ததுதானே. பாலுணர்வு பற்றி இராவுக்கு முன்பே பழையவர்கள் பாடல்கள் போட்டுவிட்டார்களாம். சரி. அது மட்டுமல்ல இரா செய்ததாக நீங்கள் சொல்லும் எல்லா புதுமைகளையும் அவர்கள் அப்போதே செய்துவிட்டார்கள். அதையும் சேர்த்தே சொல்வதில் என்ன குறைந்துவிடப் போகிறது? இரா தொழில் நுட்பத்தை வைத்துகொண்டு செய்தவைகளை வேண்டுமானால் புதுமை எனலாம்- இப்போது ரஹ்மான் செய்வதுபோல.

    ReplyDelete
  18. ----வார்த்தைகள் உங்களைப் போன்ற அரிப்பெடுத்த ரசிகர்களுக்காக ---

    ஆஹா என்ன ஒரு நாகரீகமான தமிழ்! . வெல்டன்.. இந்தக் கோபம் உங்களின் இயலாமையின் வெளிப்பாடு என்று நன்றாகவே தெரிகிறது. Everyone has got a breaking point.

    நான் இராவின் ஆபாச பாடல்களை அறவே வெறுப்பவன். நீங்கள்தான் அவரை சுயம்பு, இசைக்கடவுள், அவரைப் போல வேற யாருமில்லை என்று புகழ்கிறீர்கள். எனவே நீங்கள் சொன்ன அதே அ ... எடுத்த உங்களைப் போன்றவர்களுக்காக இரா இதை செய்திருக்கிறார் போலும். நல்ல சேவைதான் போங்க.

    ---தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் எல்லோரும் சேர்ந்து போட்டது. இசையமைப்பாளர் இசை மட்டுமே கொடுத்தார். -----

    அப்படியே அவர் போட்ட நல்ல பாடல்களுக்கும் தயாரிப்பாளர்,இயக்குனர், பாடலாசிரியர் போன்றவர்களை புகழ்ந்து எழுதுங்களேன். உங்கள் கருத்துப் படி அதுதானே நியாயம்?

    ------திரையிசையின் முதல் நவீனம் பண்ணைப்புரத்து புல்லாங்குழல்--- என்பது எனது வார்த்தைகள் அல்ல என்று என் பதிவிலும் சொல்லியிருக்கிறேன் .----

    அப்படியா? அப்படியானால் இதற்கு என்ன அர்த்தமாம்?---- ஒரு விழாவில் இளையராஜாவை விளிப்பதற்காக வாசிக்கப்பட்ட கவிதை .இதில் சொல்லப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் உண்மை ; மிகையானதல்ல.---

    இதுவும் நீங்கள் எழுதியதுதான்.. எல்லாமே உண்மை என்று ஒத்துக்கொண்டால் அது உங்களின் கருத்தும்தான் என்றாகிவிடாதா? யோசித்து எழுதுங்கள்..

    --ரகுமானுக்கு முன்பே இளையராஜா என்றைக்கோ சர்வதேச அளவில் உச்சிக்குப் போய்விட்டார். ---

    இது அடுத்த அபத்தம். இளையராஜா தென் இந்தியாவை தாண்டியதில்லை. எதோ நான்கைந்து படம் ஹிந்தியில் போட்டும் ஒன்றும் போணியாகவில்லை. அவர் இசைக்கு தமிழ் மண்ணைத் தவிர வேறு எதுவும் தெரியாது. நம் மண்ணின் மைந்தர். மெட்ராஸை தாண்டினாலே இளையராஜாவா யாரு அது என்கிறார்கள்.. இளையராஜா பெயரை எத்தனை வட இந்தியர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள்? இந்த லட்சணத்தில் சர்வதேச அளவில் உச்சிக்குப் போய்விட்டாராம்.. நல்ல கதைதான் போங்க.. ஒரே ஒரு உதாரணம் சொல்லவும்... உடனே இல்லாத சிம்பனி பற்றி மடத்தனமாக எதுவும் ஆரம்பிக்க வேண்டாம். அதெல்லாம் வேலைக்காகாது. எவனோ ஒரு வெள்ளையன் தனது சொந்த கருத்தாக இராவை 9ஆம் இடத்தில் வைத்ததை சொல்வீர்கள்.. இதற்குப் பெயர்தான் சர்வதேச உச்சம் போலும்.. ரஹ்மான் சென்ற உயரங்கள் இளையராஜாவின் கற்பனையில் மட்டுமே சாத்தியம். அது உங்களுக்கும் தெரியும். அதை உள்வாங்கிக் கொள்ள நீங்கள் தயாராக இல்லை. எனவேதான் ஆத்திரத்தில் ஏதேதோ பினாத்துகிறீர்கள்..

    வி குமார் பற்றி இகழ்ச்சியாக பேசி உங்களின் இசை அறிவை வெளிச்சம் போட்டுக் காட்டியதற்கு நன்றி. இராவின் ஆரம்ப கால பாடல்கள் குமார் பாடல்களின் சாயலை அதிகம் கொண்டவை. இராவுக்கு பாரா கிடைத்ததார். அது அவர் அதிர்ஷ்டம்.

    ReplyDelete
  19. காரிகன்

    கொஞ்ச நேரத்திற்கு முன்னால் நல்லநேரம் படத்தில் ' டிக் ..டிக் ..மனதுக்கு தாளம்' என்ற பாட்டை கேட்டேன் . இடையில் உங்களுடைய பார்வையில் நீங்கள் அதிகம் உன்னிப்பாய் கவனிக்கின்ற அந்த பாலுறவு சப்தம் அந்தப் பாடலிலும் ஒலித்தது. இசை கே.வி.எம் . அதிகம் அந்த மாதிரி பாட்டையே கேட்பீர்கள் போல! என்ன ரசனையோ !? அதிகமாய் அதைப் பற்றியே சிலாகித்திருக்கிறீர்கள் .

    உறவு முறையை யாரும் கொச்சைப்படுத்தவில்லை . கிராமத்தில் மதினிகள் கொழுந்தனாரை கிண்டல் செய்வதும் கொழுந்தனார்கள் மதினிகளை கேலி செய்வதும் கால காலமாய் உள்ளதுதான் . நகரத்திலேயே வளர்ந்ததால் உங்களுக்குப் புரியவில்லை .

    மணிப்பூர் கிழக்கு இந்தியா . நீங்கள் அந்தப்பக்கம்தான் போனதாக முன்பு சொல்லியிருக்கிறீர்கள் . உங்களுக்கும் வட இந்தியா பரிச்சயமில்லை. பிறகு எதற்கு இந்த பித்தலாட்டம் . ஆரம்பத்தில் ஆங்கிலப் பாடலுக்கு அடிமையாகிப் போன நீங்கள் எந்த அனுபவ அறிவும் இல்லாமல் ஏதோ கொஞ்ச நாள் தமிழ் பாட்டைக் கேட்டுவிட்டு எல்லாம் தெரிந்தது போல குறளி வித்தை காட்டுகிறீர்கள் . வட இந்திய இசை பிரபலங்கள் இளையராஜா இசையில் பாட விரும்பிய கதை தெரியாது போலும்!
    பட்டை கட்டிய குதிரை அதன் பாட்டையிலே போவது போலதான் உங்கள் சிந்தனை .

    குமாரை எல்லாம் இசை மேதை என்று எப்படி சிரிக்காமல் சொல்லுகிறீர்கள் என்று புரியவில்லை. பத்து படம் அடிச்ச ஆளை மேதை என்று சொன்னால் இளையராஜாவை இசைக் கடவுள் என்று ஏன் அவர் ரசிகர்கள் சொல்லக் கூடாது?

    ரகுமான் என்ன உயரம் போனார் என்று காளியாட்டம் ஆடுகிறீர்கள்!?

    இளையராஜாவின் சிம்பொனிக்கு முன்னால் அவர் உயரம் எல்லாம் கால் தூசு .



    ReplyDelete
  20. *இளையராஜாவின் சிம்பொனிக்கு முன்னால் அவர் உயரம் எல்லாம் கால் தூசு .*
    என்று சொல்லும் சார்லஸ் என்ற கோமாளிக்கு,

    மொதல்ல அந்த சிம்பொனி யை கண்ணுல காட்டுங்கப்பா அதுக்கப்பறமா இதுபோல உதார் பீலா உடலாம். பேசத் தெரியாதவன் வாயில கட்டின்னானாம்.. வெங்காயம்....

    ReplyDelete
  21. பாண்டிய மன்னா சாரி மணியா

    காரிகன் பின்னால் ஒளிந்து கொண்டு சும்மா கூவ வேண்டாம் . சிம்பொனி வாசிக்கப்பட்டது. வெளியிடப்படவில்லை. அதற்கு நோட்ஸ் எழுதும் தகுதி இந்திய இசையமைப்பாளர்களில் இளையராஜா ஒருவருக்கே இருந்தது ; இருக்கிறது. ரகுமான் அந்த அறிவைப் பெற்றவரல்ல!

    ReplyDelete
  22. வாங்கப்பா தொர,

    ரொம்ப கலாய்க்கரதா நெனப்பு போல.

    சிம்பொனி வாசிக்கப்பட்டது. வெளியிடப்படவில்லை.

    இதுக்கு எங்கேயா இருக்கு ஆதாரம்? நல்ல கதையா கீதே? வெள்ள காகிதத காட்டி இதுல எப்புடி மாடு புல்லு மேயுது பாரு ன்னானாம் ஒரு மேதாவி. எங்கடா புல்லுன்னா அதத்தான் மாடு தின்னுடுச்சேனானாம். மாடு எங்கடா ன்னா அது தின்னுட்டு அப்பவே வீட்டுக்கு போய்டுச்சு ன்னானாம்.. வெளக்கெண்ணை....

    ReplyDelete
  23. மணியன் சார்

    நீங்கள் வேறு பெயரில் ஒளிந்து வருகிறீர்கள் என்று தெரிகிறது. கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தாதவரை நீங்கள் நல்லவர்தான் . நீங்கள் மிகப் பெரிய உண்மையைச் சொல்லி என் கண்ணை திறந்ததற்கு நன்றி.

    ReplyDelete
  24. பாண்டிய மணியன்,

    வெங்காயம், வெளக்கெண்ணெய் போன்ற வார்த்தைகளைத் தவிர்க்கவும்.

    உங்கள் கருத்து பாமரத்தனமாக சொல்லப்பட்ட உண்மை. அந்த மாடு புல் மேயும் ஓவியக்கதை அபாரம். அதுசரி. இதில் எது அந்த வெளியே தலைகாட்டாத சிம்பனி? புல் என்று வைத்துகொண்டால் அந்த மாடு யார் என்று குழப்பம் வருகிறது. சரி விடுங்கள் எதோ ஒன்று. அதுவா முக்கியம் இப்போது?

    ReplyDelete
  25. நீங்கள் கற்றுக் கொடுத்த வார்த்தைகள்தானே காரிகன் . மணியன் பெயரில் மாறு வேசமோ என உங்களை நினைக்கத் தோன்றுகிறது.

    ReplyDelete
  26. சால்ஸ்,

    நீங்கள் என்னவேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள். அது உங்கள் விருப்பம். பாண்டிய மணியோ மணியனோ என் மாறு வேஷம் என்றால் உங்கள் தளத்தில் வந்து என்னை பிராண்டிப் பார்க்கும் குமார், விமல் வகையறாக்களும் உங்களின் மறு முகங்களோ? பாண்டிய மணியன் சொன்ன வெங்காயம் வெளக்கெண்ணை போன்ற வார்த்தைகள் நீங்கள் என்னைக் குறித்து சொன்ன அரிப்பெடுத்த என்ற வாரத்தையை விட மோசமானது அல்ல என்றே நினைக்கிறேன். மேலும் அவர் கொஞ்சம் பாமரத்தனமாக எழுதுகிறார் அதைத் தவிர வேறு அநாகரீக சொல்லாடல்கள் இல்லை. இதற்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது. உங்கள் இடத்தில் என்னை பற்றி எழுதும் உங்கள் நண்பர்களின் கருத்துக்களுக்கு நீங்கள் எப்படி பொறுப்பேற்க முடியாதோ அதே போல.

    மேலும் உங்களுக்கு தமிழில் சில அர்த்தங்கள் தெரியவில்லை என்று தோன்றுகிறது. நான் விரக இசையை சிலாகிப்பதாக எழுதியிருக்கிறீர்கள். ஒரு விஷயத்தை எழுதினால் அது சிலாகிப்பதாகாது. நீங்கள் இராவை சகட்டு மேனிக்கு பாராட்டுகிறீர்களே அதுதான் சிலாகிப்பது. நான் அந்த மாதிரி பாடல்களை பற்றி எழுதுவதன் காரணம் உங்கள் இரா தான் அப்படியான விரக இசைக்கு வித்திட்டார். அதை எப்படி மறுப்பது என்று தெரியாத நீங்கள் என்னை நக்கல் செய்ய எத்தனிக்கிறீர்கள்.. நல்லது . இது ஒரு கோழைத்தனமே.

    வட இந்தியா தென் இந்தியா என்றே பொதுவாக சொல்வது வழக்கம். மணிப்பூர் கிழக்கு அல்ல வட கிழக்கு. வட கிழக்கு என்றால் அது அஸ்ஸாமிலிருந்து ஆரம்பிக்கிறது. மேலும் நான் மணிப்பூரில் இருந்ததாக எங்கும் சொன்னதாக நினைவில்லை. அது உங்கள் கற்பனை. வேண்டுமானால் உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் அங்கு சென்றிருக்கலாம். நான் எங்கே இருந்தேன் என்ன செய்தேன் போன்ற தகவல்களை அதிகம் சொல்ல விரும்புவதில்லை. அது படிப்பவர்களுக்கு தேவையுமில்லை. எனவே நீங்களாகவே கோடு கிழித்துக் கொண்டு அதற்குள் என்னை வரச் சொல்லாதீர்கள்.

    மதனி பாடல் உறவு முறையை கொச்சைப் படுத்தவில்லை என்று ஒரு குருட்டுத்தனமான சால்ஜாப்பு. பின் எதற்க்காக இங்கே அந்தப் பாடலுக்கு எதிர்ப்பு வந்ததாம்? எதற்காக மதனி மயிலு என்று மாறினாள் ? இரா என்ன கேவலமாக பாட்டு போட்டாலும் அதையும் என்ன இசை பாரேன் என்று சிலாகிக்கும் செம்மறியாட்டுக் கூட்டத்தைச் சேர்ந்தவர் போலிருக்கிறது.

    ----ஆரம்பத்தில் ஆங்கிலப் பாடலுக்கு அடிமையாகிப் போன நீங்கள் எந்த அனுபவ அறிவும் இல்லாமல் ஏதோ கொஞ்ச நாள் தமிழ் பாட்டைக் கேட்டுவிட்டு எல்லாம் தெரிந்தது போல குறளி வித்தை காட்டுகிறீர்கள் . ----

    ஆங்கிலப் பாடல் என்றால் அடிமை தமிழ்ப் பாடல் என்றால் ரசனை. அடடா. என்னவொரு வியாக்கியானம்! இசையை இசையாக பார்க்கத் தெரிந்தவர்கள் கண்டிப்பாக இது போல மட்டமாக பேச மாட்டார்கள். அது சரி உங்களுக்கு அதுவெல்லாம் எங்கே தெரியப் போகிறது? உங்களுக்கு தெரிந்ததெல்லாம் இரா... தவிர நான் ஆங்கில இசை ஹிந்தி இசை அரேபிய இசை ஸ்பானிஷ் இசை கேட்பதால் உங்களுக்கு என்ன வந்தது? வேடிக்கைதான்.. முடிந்தால் நீங்களும் முயற்சி செய்யுங்கள்.. எல்லாமே இசைதானே....

    ----ரகுமான் என்ன உயரம் போனார் என்று காளியாட்டம் ஆடுகிறீர்கள்!? ---

    நீங்கள் தமிழ் நாட்டிலேயே இல்லை போலிருக்கிறது. அல்லது பொது அறிவு எதுவும் வளர்த்துக்கொள்ள விரும்பாதவர் போல. பாவம். உங்கள் குழந்தைகளைக் கேளுங்கள் அவர்கள் தெளிவாக சொல்வார்கள். நீங்கள் அடுத்து சொன்ன ஆஸ்கார் எங்காளுக்கு கால் தூசு படா காமெடி... இப்படியே சொல்லிக்கொண்டு திரியவேண்டியதுதான்....

    ReplyDelete
  27. அபாரம் காரிகன், வழக்கம் போலவே நுட்பமான படப்பிடிப்புடன் பதிவை அலசித் துவைத்து பிரித்து மேய்ந்து காயப்போட்டிருக்கிறீர்கள்.
    சில நாட்களுக்கு வெளியூர்ப் பக்கம் சென்றிருந்ததால் தாமதமாகத்தான் பதிவைப் படிக்க முடிந்தது. அதற்குள் நம்ம நண்பர்களெல்லாம் படித்து அதிர்ந்து ஒரு சாமியாட்டமே ஆடித் தீர்த்திருக்கிறார்கள்.
    அவர்களின் இந்த ஆட்டத்திற்கும் நியாயமுண்டு. மிகச்சரியாக அவர்களுடைய மென்னியையே பிடித்திருப்பதால் அவர்களால் சாமியாடாமல் இருந்துவிட முடியுமா என்ன?
    இ.ராவின் பாடல்களின் சுவையையும் அந்தக் காலத்தில் ஹிட் அடித்த பல பாடல்களையும் வரிசைக் கிரமமாகவே பட்டியலிட்டிருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது என்று நீங்கள் ரசித்த இ.ராவின் பாடல்களைப் பட்டியலிட்டிருப்பதை ஒன்றும் சொல்லமுடியாத அவருடைய ரசிகர்கள் சில பாடல்களை விமர்சிக்கப் புகும்போது மட்டும் ஆவேசம் கொண்டு எழுந்து கண் சிவந்து பேசுவது ஏன் என்பதுதான் புரியவில்லை. இ.ரா இசையமைத்தவை என்றாலேயே அவை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை என்று இவர்களாகவே கற்பிதம் செய்துகொள்வார்கள் போல!
    மகாத்மா காந்தியையும், நேருவையும், இந்திரா காந்தியையும், காமராஜரையும், கருணாநிதியையும் வேண்டுமானால் விமர்சனம் செய்யலாம். ஆனால் இ.ராவை மட்டும் வெறும் பாராட்டுப் பத்திரம் வாசிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். சிம்பொனி, இடையிசை என்பதுபோல் கற்பனைக்கதைகள் எவ்வளவு வேண்டுமானாலும் புனைந்து பொய் மூட்டைகளை எத்தனை உயரத்துக்கு வேண்டுமானாலும் அடுக்கி வைக்கலாம். ஆனால், விமர்சனம் என்றெல்லாம் புகுந்தால் 'கபர்தார்' என்றெல்லாம் இருக்கும் நிலைமைக்கு மத்தியில் புகுந்து புறப்பட்டிருக்கிறீர்கள்.
    ஒரு படம் எந்தக் காரணத்திற்காக வெற்றிபெற்றிருந்தாலும் அந்தப் படத்துக்கு இ.ரா இசையமைத்திருந்தால் பாக்கி அத்தனைக் காரணங்களையும் புறம்தள்ளிவிட்டு அந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம் இ.ரா மட்டும்தான் என்று பேசும் இவர்கள், ஒரு படத்தின் பாடலில் உறவு முறையை இந்த அளவு கொச்சைப் படுத்தி வெளியிட்டிருப்பதற்கு மட்டும் காரணம் அந்தப் படத்தின் இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என்று காரணம் சொல்லுவார்களாம். இ.ராவுக்கும் அதற்கும் சம்பந்தமில்லையாம். இவர் வெறும் இசை மட்டுமே அமைத்தாராம். பாராட்டு என்றால் இவருக்கு மட்டுமே உரியது. தவறு என்றாலோ விமரிசனம் என்றாலோ இவருக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. என்னய்யா இது அபத்தம் என்று மென்னியைப் பிடித்தீர்கள் பாருங்கள்......... நுட்பமான பார்வை இது. (தொடர்வேன்)

    ReplyDelete
  28. தமிழில் நிச்சயம் பராசக்தி திருப்புமுனை ஏற்படுத்திய படம்தான். அங்கிருந்து நேராக பதினாறு வயதினிலே படத்திற்கு வந்து விட்டீர்கள். ஒப்பீட்டளவில் உண்மைபோல தெரிந்தாலும் இதற்கு இடையில் வந்த பல படங்கள் அல்லது இயக்குநர்கள் தமிழ் சினிமாவை நிறையவே மாற்றியமைத்திருக்கிறார்கள். குறிப்பாக ஸ்ரீதர். அவருடைய கல்யாண பரிசு படமே ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம்தான். அதற்கு அடுத்து வந்த தேன்நிலவும் சரி,நெஞ்சில் ஓர் ஆலயமும் சரி தமிழ்ப் படங்களின் திசையை மாற்றியமைத்த படங்களே. ஸ்ரீதரைத் தொடர்ந்து வந்த கேபியும் தம் பங்கிற்கு படங்களின் போக்கினைத் தீர்மானித்த இயக்குநரே. இந்தப் பாதையில் சென்றுகொண்டிருந்த படங்களின் போக்கு மறுபடியும் மாற்றியமைக்கப்பட்டது பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே அதிரடியால்.
    \\எழுபதுகளையும் அறுபதுகளின் நீட்சியாக குடும்பம் சூழ்ந்த களங்கள் ஆட்சி செய்தன. எனவே காட்சிகள் நவீனத்தின் பக்கம் சாயாத ஒளியிழந்த சாயல் கொண்டிருந்தன. இது ஒரு மிகத் தொய்வான காலகட்டம் என்பதை எளிதாக சொல்லக்கூடிய அளவில் அப்போது தமிழ்த் திரை ஒரு சரிவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. எ வி எம், விஜயா-வாஹினி போன்ற பெயர் பெற்ற பெரிய திரைப்பட நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பை நிறுத்திவிட்ட காலகட்டம் அது. சிறிய தயாரிப்பாளர்கள், சிறிய முதலீடு, எளிமையான கதை போன்ற திடீர் விதிகள் புதியவர்களும், இளைஞர்களும், நவீன கதை சொல்லிகளும், திரைக்குப் பின்னே வெகுவாக படையெடுக்க உதவி செய்தன. இருந்தும் திரையில் தோன்றியதோ அதே விக் வைத்து பென்சில் மீசை கொண்ட, கேமராவைப் பார்த்துப் பேசும் பத்தாயிரம் முறை பார்த்துப் பார்த்து சலித்துப்போன முகங்கள்தான். அது எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன், ஜெய் ஷங்கர், ரவிச்சந்திரன், விஜயகுமார், சிவகுமார் என யாராக இருந்தாலும் எல்லா முகங்களுமே பார்வையாளர்களுக்கு எந்த வித சலனத்தையும் கொடுக்கவில்லை. "இதே மூஞ்சிகள்தானா?" என்ற சலிப்புதான் மிஞ்சியது.\\
    உங்களுடைய இந்தப் பார்வையும் மிகவும் சிறப்பான அதே சமயம் சரியான நுட்பமான பார்வை. தமிழ்ப் படங்களின் இந்த தொய்வுக்குக் காரணம் எம்ஜிஆர் சிவாஜிக்கென்று ஏற்பட்டுவிட்ட அந்தத் தளத்திலிருந்து கழன்று கொண்டுவருவதற்குத் தமிழ் சினிமா தயாரில்லாமலேயே இருந்தது. அந்தக் காலத்திலெல்லாம் பார்த்தோமானால் கமலஹாசனும் ரஜினியும்கூட சிவாஜி எம்ஜிஆர் பாணியில் போவதற்கான முயற்சிகளில் இருந்தவர்கள்தாம். இந்த முயற்சியை மாற்றியமைத்தவர் சந்தேகமில்லாமல் பாரதிராஜாதான். பாரதிராஜாவின் இந்த மாற்றத்தினால் மிகப்பெரிதாகப் பயன் அடைந்தவர் இ.ராதான் என்பதும் தங்களின் நுட்பமான படப்பிடிப்புக்களில் ஒன்று.
    பின்னர் வந்த மாறுதல்கள் உடனடியாக எல்லாப் படங்களின் மீதும் எளிதாகக் கவியும் நிலைமை இருந்தது எனில் சிவாஜி எம்ஜிஆர் அளவுக்குப் பாதிப்பை வேறு எவரும் இதுவரை நிகழ்த்தவில்லை என்பதுதான் காரணம். (அது கமல், ரஜினியாகவே இருந்தபோதிலும்)
    இன்னொன்று- ஒரு படத்தின் வெற்றிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இசை. இசை மட்டுமே ஒரு படத்தின் வெற்றிக்குக் காரணம் என்றும், அதுவும் இ.ராவின் இசை மட்டுமே வெற்றியை நிர்ணயிக்கும் என்றெல்லாம் பிதற்றிக்கொண்டு இருந்தால், இந்தக் கூற்று உண்மையாக இருக்கும் பட்சத்தில் -இ.ரா இசையமைத்த ஆயிரம் படங்கள் இதுவரை ஒவ்வொரு படமும் ஐநூறு நாட்களைத் தாண்டி ஓடியிருக்கவேண்டும். அப்படியெல்லாம் ஒன்றும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லையே.
    தமிழில் adult songs தந்த இசையமைப்பாளர் என்று இ.ராவுக்கு மகுடம் சூட்டியிருப்பது மிகவே பொருத்தமான ஒன்று. இவரளவுக்குப் பாலுறவைக் கொச்சையாக்கிப் பாடல்கள் தந்தவர் வேறு யாரும் இல்லை என்பதும் நிஜம். உடனே கண்ணதாசன் பாடல்களிலிருந்தும், வாலி பாடல்களிலிருந்தும் யாரும் வரிகளைத் தூக்கிக்கொண்டு ஓடிவரவேண்டாம். பாலியலை 'அழகு படச் சொன்னார்கள்' என்பதற்கும் பாலியலைக் 'கொச்சைப் படுத்தினார்கள்' என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அதே போல பாலுறவை 'எழுதினார்கள்' என்பதற்கும் உறவுமுறைகளையே 'அசிங்கப்படுத்தினார்கள்' என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
    சிம்பொனி கதைபற்றி இங்கே ஒரு அன்பர் சொல்லியிருக்கும் வெள்ளைக்காகிதம், புல்லு மேயற மாடு உதாரணம் அற்புதம். உங்களுக்கும் அந்த அன்பருக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  29. வாங்க அமுதவன் சார்

    நல்ல நேரம் மாதிரி எம்.ஜி.ஆர் படங்களிலேயே பாலுறவு சப்தமுள்ள பாடல்கள் வந்துவிட்டது. பாலுறவைக் குறிக்கும் பாடல் வரிகள் இளையராஜாவிற்கு முன்னரே பலர் இசைத்துவிட்டனர் . எவ்வளவோ எடுத்துச் சொல்லலாம் . உங்கள் காதுகளில் எட்டாது. நீங்கள்தான் இளையராஜாவினை எந்த வகையிலும் கொச்சைப்படுத்துவதற்கு காரிகனோடு சேர்ந்து தயாராகி விடுவீர்களே! தற்போது நீங்கள் எடுத்திருக்கும் கதாயுதம் உறவை கொச்சைப்படுத்தும் பாடல்கள் . அவ்வளவுதானே!

    பாலியல் கல்வி இல்லாத காலங்களில் பெண்களின் விழிப்புணர்விற்காக கோயில் சுதைகளில் ஒன்று பாலுறவைக் குறித்துக் காட்டுவதாக இருக்கும் . பெண்கள் கவனிக்காதது போல் கவனித்துக்கொண்டுதான் செல்வார்கள் . கிராமங்களில் நடக்கும் கரகாட்டங்களில் ஆபாசம் கலந்துதான் பேசுவார்கள் . அதை வீடுகளில் ஒளிந்திருந்து பெண்கள் கேட்டு வெட்கப்படுவதைப் போல நடிப்பார்கள் . உண்மையில் மனதுக்குள் ரசிப்பார்கள். கிராமங்களில் அது சகஜம் . கரகாட்டங்கள் தடை செய்யப்படுவதில்லை. அதன் வெளிப்பாடாக இந்தப் பாடல் உருவாக்கப்பட்டிருக்கலாம்.

    மதனி கொழுந்தன் உறவை கொச்சைப்படுத்துவதாக எழும் சர்ச்சையில் முழுக்க முழுக்க ராஜாவின் இசையை மட்டுமே குறை சொல்லும் அகங்கார தொனியும் உணர்வுப்பூர்வமான ஆத்திரமும் அன்னியப் பார்வையுமே உங்களின் எழுத்தில் தெரிகிறது. கொழுந்தனார் மதனியார் உறவுகள் ஒருவருக்கொருவர் கேலியும் கிண்டலும் செய்து கொள்வதும் சில நேரங்களில் கொச்சையாக பேசிக்கொள்வதும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் . அந்த அடிப்படையில் பாடல் உருவாகி இருக்கலாம் . ஆனால் திரைப்படக் காட்சியில் அந்த வரிகள் இல்லை. ரேடியோக்களில் ஒளிபரப்பியதில்லை என்பதும் உண்மை.

    ரெக்கார்டுகளில் பொதுவில் பாடல் ஒலிபரப்பப்பட்டது. ஆண்களும் பெண்களும் ரசித்ததால்தான் பாடல் ஹிட் அடித்தது. உங்களைப் போன்றோரும் ரசித்துவிட்டு இப்போது அதை கொச்சை சீரழிவு என்று பல்வேறு பதங்கள் இட்டுக் கொடி பிடிக்கிறீர்கள்.

    மன்மத லீலையை வென்றார் உண்டோ என்ற பாடல் கூட அசிங்கமாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அதுவும் சூப்பர் ஹிட் பாடலே!

    ஓகே கண்மணி படத்தில் கதையும் காட்சியும் கருத்தும் இந்திய பண்பாட்டை சீரழிக்கவில்லையாம் . அதற்கு வெளிநாட்டு இசையை அமைத்து தமிழிசையை இன்னொருத்தர் சீரழிக்கவில்லையாம். அதையெல்லாம் பதிவு போட்டு பாராட்டுகிறீர்கள் . முப்பது வருடங்களுக்கு முன்னால் பாட்டு போட்ட ராஜா சீரழித்து விட்டாரா?

    அடுத்து ஆத்தா ஆத்தோரமா வாரியா என்ற பாடலைப் பற்றியும் காரிகன் சொல்லியிருந்தார். 'ஆத்தா ' என்ற சொல் அம்மாவிற்கு , பெற்ற மகளுக்கு, சிறுமிகளுக்கு , வயது வந்த பெண் பிள்ளைகளுக்கு என்று பலவாறாக கிராமங்களில் பயன்படுத்துவார்கள். பாடலில் குறிப்பிடப்பட்ட 'ஆத்தா' வை நீங்களும் காரிகனும் பச்சைக்கண்ணாடி மட்டுமே போட்டுக் கொண்டு பார்த்தால் எல்லாமே பச்சை பச்சையாகத்தான் தெரியும்.



    ReplyDelete
  30. சார்லஸ் இங்கே நீங்கள் பேசியிருக்கும் விஷயத்தைப் பற்றி நான் பெரிதாக ஒன்றும் பேசவில்லை. கோடிகாட்டிவிட்டுப் போய்விட்டேன். அதனைப் பற்றித் திரு காரிகன் நிறைய பேசியிருக்கிறார். அவர் பேசியிருப்பது நியாயமே என்று நான் சொல்லியிருக்கிறேன். அது ஏன் என்பதனையும் சொல்லியிருக்கிறேன். நீங்களாகவே ஏதாவது நினைத்துக்கொண்டு வரிந்து கட்டி ஓடிவந்து பதில் சொல்கிறீர்கள். கொஞ்சம் நிதானமாகப் படித்துப் பார்த்தால் யாருக்கு எந்த விஷயம் பற்றிய பதில்களைச் சொல்லலாம் என்பது உங்களுக்குக்கூடப் புரியும். வேண்டுமானால் நான் இங்கே பின்னூட்டத்தில் எழுதியிருக்கும் இந்த விஷயத்திற்கு நீங்கள் பதில் சொல்லலாம்.
    \\இன்னொன்று- ஒரு படத்தின் வெற்றிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இசை. இசை மட்டுமே ஒரு படத்தின் வெற்றிக்குக் காரணம் என்றும், அதுவும் இ.ராவின் இசை மட்டுமே வெற்றியை நிர்ணயிக்கும் என்றெல்லாம் பிதற்றிக்கொண்டு இருந்தால், இந்தக் கூற்று உண்மையாக இருக்கும் பட்சத்தில் -இ.ரா இசையமைத்த ஆயிரம் படங்கள் இதுவரை ஒவ்வொரு படமும் ஐநூறு நாட்களைத் தாண்டி ஓடியிருக்கவேண்டும். அப்படியெல்லாம் ஒன்றும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லையே.
    தமிழில் adult songs தந்த இசையமைப்பாளர் என்று இ.ராவுக்கு மகுடம் சூட்டியிருப்பது மிகவே பொருத்தமான ஒன்று. இவரளவுக்குப் பாலுறவைக் கொச்சையாக்கிப் பாடல்கள் தந்தவர் வேறு யாரும் இல்லை என்பதும் நிஜம். உடனே கண்ணதாசன் பாடல்களிலிருந்தும், வாலி பாடல்களிலிருந்தும் யாரும் வரிகளைத் தூக்கிக்கொண்டு ஓடிவரவேண்டாம். பாலியலை 'அழகு படச் சொன்னார்கள்' என்பதற்கும் பாலியலைக் 'கொச்சைப் படுத்தினார்கள்' என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அதே போல பாலுறவை 'எழுதினார்கள்' என்பதற்கும் உறவுமுறைகளையே 'அசிங்கப்படுத்தினார்கள்' என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
    சிம்பொனி கதைபற்றி இங்கே ஒரு அன்பர் சொல்லியிருக்கும் வெள்ளைக்காகிதம், புல்லு மேயற மாடு உதாரணம் அற்புதம்\\

    ReplyDelete
  31. வாருங்கள் அமுதவன்,

    சற்று இணையத்தை விட்டு தூரம் வந்ததால் உடனடியாக உங்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. பாராட்டுக்கு நன்றி.

    தமிழ் சினிமா பல அசாதரணமான இயக்குனர்களின் கைகளில் செதுக்கப்பட்ட சிற்பம். அதில் எல்லிஸ் டங்கன், ஸ்ரீதர், பீம்சிங், கே பாலச்சந்தர் போன்றவர்களின் பங்கு அதிகம்தான். ஆனால் பொதுவாக தமிழ் சினிமாவின் திசையை சட்டென்று திருப்பிய இரண்டு படங்கள் என்று பராசக்தி மற்றும் 16 வயதினிலே படங்களை குறிப்பிடுவதுண்டு. தனிப்பட்ட விதத்தில் எனக்கு இந்த இரண்டு படங்களின் மீதும் நிறைய விமர்சனங்கள் உண்டு. ஆனால் அதை நான் எழுதவில்லை.

    -----தமிழில் adult songs தந்த இசையமைப்பாளர் என்று இ.ராவுக்கு மகுடம் சூட்டியிருப்பது மிகவே பொருத்தமான ஒன்று. இவரளவுக்குப் பாலுறவைக் கொச்சையாக்கிப் பாடல்கள் தந்தவர் வேறு யாரும் இல்லை என்பதும் நிஜம். ----

    ஒரு பெரிய பதிவே எழுதிவிடலாம். கவிதைக் காற்றை தாண்டியதும் அது வரும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  32. வரட்டும் வரட்டும்...
    இந்தப் பதிவு இணைப்புடன் மலர்தரு முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டது ...
    பார்ப்போம்
    நேற்று நண்பர் சந்திரமோகனுடன் பேசிகொண்டிருந்த பொழுது குறிப்பிட்டேன்..
    அவரை ஒரு அளவுகோலை மட்டும் கொண்டு மதிப்பிடுவது தவறு என்று சொன்னார்.
    எனக்கும் அப்படியேதான் படுகிறது ..
    கலை வடிவங்களின் அதிமுக்கியமான பணியே பால் அழைப்புதான் என்கிறது உளவியல்...
    எல்லாவற்றையும் பால் கண்ணோட்டத்தில் பார்க்கும் ப்ராய்டியன் பள்ளியின் கருத்தாக இருக்கும்..
    ஒரு பத்துசத பாடல்கள் வேண்டுமானாலும் பால் சார்ந்து தவறாக தந்திருக்கலாம்.
    மிச்சமுள்ள தொண்ணூறு சதம்?
    அங்கே நிற்கிறார் நிலைக்கிறார் ராஜா.
    இந்த விகிதாச்சாரம் சரியாக வராததால் தான் பலர் காணமல் போய்விட்டார்கள்.
    Raja will be there... if we like him or not that is not needed

    ReplyDelete
  33. வாருங்கள் மது,

    முக நூலில் இந்தப் பதிவைப் பகிர்ந்ததற்கு நன்றி. எனக்கு முக நூல் என்றாலே அலர்ஜி. அந்தப் பக்கமே செல்வதில்லை.

    இ ரா என்று வந்துவிட்டால் நம் இசை பதிவர்களிடம் இருக்க வேண்டிய சில நடுநிலைக் கோடுகள் காணாமல் போய்விடும். அதை கூட ஒரு தனிப் பட்ட விருப்பு என்ற கணக்கில் எடுத்துகொள்ளலாம். ஆனால் இரா வை எதிர்த்து ஒரு தகவலைச் சொல்வதையே தவறு என்று சிலர் கிளம்பும்போதுதான் பிரச்சினை எழுகிறது. இரா நல்ல திறமையான இசை அமைப்பாளர் என்பதும் அவர் ஏறக்குறைய 15 வருடங்களாக தமிழ்த்திரையை தனது இசையால் நிரப்பியவர் என்பதும் மாற்ற முடியாத நிஜங்கள். அதே சமயம் அந்த கால கட்டத்தில் அவர் கொடுத்த அனைத்துப் பாடல்களும் சிறந்தவை என்ற எண்ணம் எனக்கில்லை. சொல்லப்போனால் அவர் இசையில் வெகு சொற்பமானவையே இன்றுவரை நம் நினைவில் இருப்பவை. மிகவும் தரமானவை. மற்றதெல்லாம் வெற்றி பெற்ற மசாலாப் பாடல்கள். அவற்றில் இருப்பதாக சொல்லப்படும் ஜீவன், உயிர் நாடி, இன்ன பிற சங்கதிகள் எல்லாமே இரா வாசிகள் மட்டுமே அனுபவிக்கக் கூடியது. எனக்கு அப்படியல்ல. அதை நான் சொல்வதால் என் மீது ஒரு சாயம் பூசுகிறார்கள் இராவாசிகள்.

    உங்கள் நண்பர் சொன்னது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனால் இதை வைத்தே நாம் எல்லோரையும் பாதுகாத்து விடலாம். இன்றைய மொட்டப் பய கெட்டப் பய பாடல்களை நாம் எந்தவித குற்ற உணர்ச்சி அல்லது கூச்சமில்லாத மனநிலையோடு கேட்கும் இடத்திற்கு நம் இசை வந்திருப்பதின் காரணம் என்ன வென்று நீங்கள் யோசிக்க முற்பட்டால் ஒருவேளை என் கருத்தோடு ஐக்கியமாக வாய்ப்பிருக்கிறது. நீங்கள் சொல்வதுபோல வெறும் பத்து சதம் மட்டும்தானா இராவின் இசையில் தரமில்லாதது? நான் அப்படி நினைக்கவில்லை. உங்களின் வலம் இடமாக இருக்கும் பத்து -தொண்ணூறு எனக்கு இடம்- வலமாக இருக்கலாம்.

    சிக்மண்ட் பிராய்ட்டின் பாலுணர்வு உளவியல் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் பட்ட ஒன்றல்ல. கலையின் ஆதார புள்ளியே காமம் சார்ந்த பால் ஈர்ப்பு என்ற கருத்து உண்மையாக இருந்தாலும் மனித இனம் அந்த விழுமியங்களை எல்லாம் எப்போதோ தாண்டி வந்துவிட்டது. இச்சை ஒரு தேவையான உணர்ச்சிதான் ஆனால் அது மட்டுமே மனிதனை வாழ வைப்பதில்லை. அதனால் அதை வைத்துக்கொண்டு இலக்கியம் கலை படைப்பதெல்லாம் இன்று நிற்காது.அதிலும் இசையில் இப்படியான இச்சை சார்ந்த வடிவங்கள் வைர முத்து எழுதியது போன்று ரகசிய ராத்திரி புஸ்தக கணக்கில்தான் வரும்.

    இரா நன்றாகவே நின்றவர்தான். எனவே நான் எழுதும் சில விமர்சனங்கள் அவருடைய மகா ஆளுமையை எந்த விதத்திலும் பாதிக்காது.

    ReplyDelete
  34. இந்த கட்டுரையை படித்த பிறகு சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்து விட்டேன். இசையின் ஒவ்வொரு படிக்கட்டையும் அனுபவித்து ருசி கண்டு அதை இத்தனை அற்புதமாக அளிக்க உங்களால் மட்டுமே முடியும். இசை அமைப்பாளர்களின் நல்ல பாடல்களை பாராட்டும் அதே நேரத்தில் அவர்களின் கேவலமான பாடல்களையும் தயங்காமல் விமர்சிக்கும் உங்களது நடுநிலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள் காரிகன்.

    இளையராஜா ஒரு ஞானி என்பதில் ஐயமே இல்லை. பல அற்புதங்களை அவர் சாதித்திருக்கிறார். அதற்காக அவர் கர்ண கடூரமாக பாடுவதை பல முறை என்னால் சகித்து கொள்ள முடிவதில்லை. தேவாவும் இந்த ரகத்தை சேர்ந்தவர் தான். ரஹ்மானின் குரலையாவது ஓரளவு சகித்து கொள்ளலாம். இவர்கள் இசையமைப்பதோடு நிறுத்தி கொண்டிருக்கலாம்.

    இதே போல எம்.எஸ்.வி முதல் ரஹ்மான் வரை அனைவருமே சில பாடல்களை மேற்கத்திய அல்லது ஹிந்தி பாடல்களில் இருந்து காபி அடித்திருக்கிறார்கள். தேவாவை பற்றி சொல்லவே வேண்டாம். இதை பற்றியும் எழுதுங்களேன்.

    ReplyDelete
  35. வாங்க குரு,

    பாராட்டுக்கு நன்றி. இசை அமைப்பாளர்கள் எல்லோரிடத்திலும் நமக்குப் பிடித்த பிடிக்காத பாடல்கள் போன்று நல்லதும் மோசமானதும் அடக்கம். எம் எஸ் வி இடம் இந்த விகிதம் ஆயிரத்தில் ஒன்று எனலாம். இரா விடம் நூறில் பாதி இந்த வகையே. எந்த புது அனுபவத்தையும் தராத கேட்டுக் கேட்டு புளித்துப் போன இசையே அதிகம் அவரிடம். சரியாக புரிந்து கொண்டதற்கு நன்றி.

    இரா பாடுவது பற்றி ஒரு திகில் கட்டுரையே எழுதலாம். அந்த அளவுக்கு ஆரம்பத்தில் பாடி கேட்டவர்களை விழுந்தடித்து ஓடச் செய்தவர் அவர். இதில் நல்ல மெட்டுடன் கூடிய பாடல்களைப் பாடி அவைகளைக் கேட்க நினைக்கும் நம் விருப்பத்திற்கும் மரண அடி கொடுப்பார். ரெகார்டிங் கடைகளில் யாராவது அவர் பாடிய பாடல்களை பதியச் சொன்னால் கடைக்காரர் காட்டும் முகபாவம் ஆயிரம் கதைகள் சொல்லும். கடைக்காரர் எவ்வளவு நல்ல மனசு கொண்டவர் என்று அப்போதுதான் புரியும்.

    காப்பி அடிப்பது நம் இசையின் பாம்பரியம் என்றே சொல்லலாம். எம் எஸ் வி காலம் முன்பே இது இங்கே இருந்த ஒன்றுதான். தேவா வந்தபோது அவர் இதை மிக வெளிப்படையாக செய்து தன் சுயத்தை இழந்தார். தேவா பற்றி எழுத விருப்பம்தான். தொண்ணூறுகளில் ஹரிஹரன் குரலில் அவர் கொடுத்த பல பாடல்கள் சுகமானவை.

    ReplyDelete
  36. நண்பர் காரிகன் அவர்களுக்கு
    மீண்டும் ஒரு IR இன் இடைகால பாடல்களை பற்றி சொல்லி உள்ளீர்கள்.
    ஒரு சிறு திருத்தம்
    சாமந்திப் பூவின் ஆகாயம் பூமி என்றும் ஒன்றா? பாடல் இசை அமைப்பாளர் மலேசிய வாசுதேவன்

    மேலும் சில பாடல்கள் நினைவில் வந்தன
    1.உல்லாச பறவை - அழகு ஆயிரம்
    2.மீண்டும் கோகிலா - பொன்னான மேனி ஜேசுதாஸ் ஜானகி
    3.பொண்ணு ஊருக்கு புதுசு - உனகெனெ தானே இன்னேரமா
    ஒரு மஞ்ச குருவி என் நெஞ்சை தடவி

    ReplyDelete
  37. ஹப்பா என்ன ஒரு அலசல்....நுண்ணிய அலசல்...

    நாங்கள் எல்லாவற்றையும் இசை என்ற வடிவத்தில் மட்டுமே பார்ப்பதால் அலசத் தெரிவதில்லை...எல்லாவற்றையும் ரசிப்பதுண்டு...

    நீங்கள் சொல்லி இருக்கும் அந்த மதனிமதனி பாடல், இன்னும் சில கேட்டதில்லை....

    வியந்த பதிவு...

    ReplyDelete
  38. வாங்க துளசிதரன்,

    கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    இசையை ரசிப்பதோடு கொஞ்சம் விமர்சனமும் செய்யலாமே? அதில் ஏதும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

    ReplyDelete