Sunday, 9 August 2015

இசை விரும்பிகள் XXVII - வசந்தங்கள் வடிந்தன.


( நான் மிக மதிக்கும், திகைக்கும் இறவா இசையூற்று எம் எஸ் விஸ்வநாதனின் மரணத்திற்குப் பிறகு எழுதும் முதல் பதிவு இது.  ஆனால் இது அவரைப் பற்றியதல்ல. அது இனிமேல்தான்  வருகிறது. )




                      வசந்தங்கள் வடிந்தன.

        மன ஆழத்தில் நான் இசை குறித்த விவாதங்களை அதீதமாக விரும்புவதுபோலவே தோன்றுகிறது. எங்கேயாவது இசை பற்றிய பேச்சு அடிபட்டால் அதுவும் என் காதில் விழ நேரிட்டால், அங்கு நான் ஒரு வரிக் கருத்தையாவது உதிர்க்காமல் கடந்து செல்ல மாட்டேன். பலமுறை வார்த்தைகளில் உஷ்ணம் ஏறி, குரல்கள் உச்சம் தொட்டு, இறுதியில்,"உனக்குத் தெரிஞ்சது அவ்ளோதான்" என்று நான் நகர்ந்து போனதுண்டு. போன மாதம் ஒரு மதிய வேளையில் என் பணித் தோழர் ஒருவருடன் ஆன் லைன் ஷேர் மார்க்கெட் பற்றிய விபரங்கள் பேசிக்கொண்டிருந்தேன். அவருக்கு அதில் அதீத ஈடுபாடு.  எனக்கு பயங்கர  பயம்(!). ஆன் லைன் மார்கெட்டில் எவ்வாறு பங்குகள் எதிர்பாராத வினாடிகளில் எகிறும் அல்லது  கவிழும் என்று எனக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார். கேட்டுக்கொண்டிருந்த எனக்கு  பாராசூட்டை கட்டிக்கொண்டு கீழே குதிப்பது போன்ற  உணர்வு வந்தது. (ஒரே ஒரு முறை விமானத்தில் பயணம் செய்திருக்கிறேன். அதுவும் முக்கால் மணிநேர பயணம்தான். இதில் இந்த பாராசூட் எல்லாம் கொஞ்சம் அதிகம்தான்.) அவர் சொல்லச் சொல்ல எனக்கு  இந்த விபரீத விளையாட்டு  எந்த ஆர்வத்தையும் ஏற்படுத்தவில்லை. பேசிக்கொண்டிருந்த நண்பர் திடீரென  "எனக்கு பத்தாயிரம் வரை போச்சு." என்று வருத்தப்பட்டார். நான் அதைப் பற்றி கேள்விகள் வீச, அவர்  "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை" என்று தமிழ் நெஞ்சங்களில் உறைபனி போல  படர்ந்திருக்கும் என்றுமே மரணிக்காத  தத்துவப் பாடலை  ஒரு எதிர்பாராத நொடியில்  பாடினார்.  பேச்சு திசை மாறியது.

    "ஒரு பாடலை சிறப்பு செய்வது இசையா? கவிதையா?" என்று கேட்டேன்.

   அவர் சற்றும் யோசிக்காமல், "இசைதான்." என்றார் எதையோ எழுதிக்கொண்டே. சொல்லப்போனால்  இத்தனை நேரமும் எழுதியபடியேதான்  என்னுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.  "நல்லா மெட்டு போட்டாத்தானே எந்த கவிதையுமே நிற்கும்?" என்றார் தொடர்ந்து.

     "அப்படியானால் இப்போது நீங்கள் பாடிய பாட்டு இசையின் தூண்டுதலா அல்லது அந்தக் கவிதையின் பாதிப்பா?" என்றேன் நான். மாற்றம் நிகழ்ந்தது. பேனாவை மூடி வைத்துவிட்டு நேருக்கு நேர் நிகழ்ச்சிக்கு வந்தவர் போன்ற பாவனையுடன் என்னைப் பார்த்தார். கொஞ்சம் யோசித்தார்.  பிறகு, "எல்லாப் பாடல்களுக்கும் இசை என்று சொல்ல முடியாது." என்றார் கொஞ்சம் தாழ்ந்த குரலில்.  அப்படி வா வழிக்கு என்று நினைத்துக்கொண்டேன்.

     "ஒரு பாடலை அழகு செய்வது இசை. ஆனால் அதன் தரத்தை நிர்ணயம் செய்வது கவிதை என்பது என் எண்ணம்." என்றேன் நான். "சரிதானே?"

      இருபது வினாடிகள் மௌனத்தில் கழிந்தன. அதன் பின்,  "சரியே. பாடல்களின் தரம் என்றால் அது பாடல் வரிகள்தான். பாடல்கள் என்று பேசினாலே நாம் அதன் கவிதையைத்தானே குறிப்பிட்டுப் பேசுகிறோம்?" என்று சேம் சைட் கோல் அடித்தார். நான் மேற்கொண்டு  அந்த விவாதத்தை தொடரவில்லை. பின்னர் எங்கள் பேச்சு பாபநாசம், த்ருஷ்யம், மோகன்லால், கமலஹாசன் என்று மற்றொரு அரிதாரம் பூசிக்கொண்டது.

  நான் என் நண்பரிடம் கேட்ட கேள்விதான்  இந்தப் பதிவின் இலக்கு. கவிதையும் இசையும் ஒரு பாடலின் சுவாசம் போன்றவை. இதில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுப்பது சிரமம். மேலும் அது ஒரு ஆரோக்கியமற்ற தேர்வு. ஒரு இசையமைப்பாளரே கவிஞரை அடையாளம் காட்டுகிறார் என்று சொல்லப்படுவதில் உண்மைகள் இருந்தாலும், பாடலை நமது நினைவுகளில் படியச் செய்து அதை மீண்டும் மீண்டும் மனதுக்குள்ளே ஒலிக்கச் செய்து, நம்மை அடிக்கடி பாடச் செய்யும்  மந்திரம் கொண்டது கவிதையே.   ஒரு விருந்தின் சுவை துவங்கும் இடம் அதன் மணம் என்று சொல்லப்படுவதுண்டு. ஒரு பாடலின் மெட்டுக்கு நாம் இதை ஒப்பிட்டாலாம். ஆனால் அந்த நறுமணமான மெட்டின் மீது சவாரி செய்யும் கவிதை வரிகள் அழகின்றி அபத்தமாக, ஆபாசமாக,  அமைந்து விட்டால் பாடலின் மொத்த சுவையும் ஒரே நொடியில் குலைந்து விடுகிறது. கம்பன் ஏமாந்தான் என்றாலே மனதுக்குள் அந்தப் பாடல் வரிவரியாக விரிவதை மறுக்கமுடியுமா? மயக்கமா கலக்கமா என்ற முதல் வரியே  எத்தனை ஆறுதலான மருந்தை மனதில் தடவுகிறது?

    இளையராஜா இசையமைத்த காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா (சின்ன மாப்பிள்ளை) என்ற காதல் பாடலையும் ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் (கொம்பேறி மூக்கன்) என்ற பாடலையும் தொடர்ச்சியாக கேட்க நேர்ந்தால் எவ்வாறு நல்ல கவிதை ஒரு பாடலின்  உருவத்தை செழுமைப்படுத்துகிறது என்பது புலப்படும். நல்ல மெட்டு மட்டும் போதும் என்ற அழிச்சாட்டியம் அழகான பாடலை கொடூரமாக கொலை செய்கிறது.  எப்படி ஒரு அழகான மெட்டு அதன் வரிகளால் தன் பொலிவை இழந்தது என்பதற்கு முத்து மணி மால உன்ன தொட்டுத் தொட்டுத் தாலாட்ட  பாடலைக்  குறிப்பிடலாம். அசரடிக்கும் அற்புதமான மெட்டு. நீரோடை போன்ற துல்லியமான  இசைக்  கோர்ப்பு. இருந்தும் வெகு சாதாரணமான கவிதை வரிகள் அந்தப் பாடலுக்கான மரியாதையை மறுக்கின்றன.

    தமிழ்த் திரையின் பொற்காலம் என்று ஒரு சில இளையராஜா அபிமானிகளால் தவறாக சித்தரிக்கப்படும் எண்பதுகள் பாரதிராஜா-இளையராஜா-வைரமுத்து கூட்டணிக்கே ஒரு பொற்காலமாக இருந்தது. தமிழில் ஒரு மாற்று சினிமாவுக்கான புதிய தேடல்களும் அவசியங்களும் அதை சாத்தியப்படுத்தும் முயற்சிகளும் சில இயக்குனர்களுக்கு வசப்பட்ட எழுபதுகளின் இறுதி, எண்பதுகளில் தமிழ்த் திரை ஏறக்குறைய வெகு ஜன சினிமாவை வெட்டிவிட்டு இயல்பான கதைக் களங்களை கையில் எடுத்துக்கொண்டது. பாரதிராஜாவின் வருகையில் மகேந்திரன், ருத்ரையா, மட்டுமல்லாது பல முகமில்லாத இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தமிழ்த் திரைக்குள் ஊடுருவ முடிந்தது. இவர்கள் கொண்டுவந்த மாற்று சினிமா அதற்கு முன்னிருந்த நாடகத்தனமான தமிழ்த் திரையின் அவலத்தை கேலி செய்தது. எனவேதான் இந்த காலகட்டத்தை சிலர் தமிழ்த் திரையின் பொற்காலம் என்று முடிவு செய்கிறார்கள். இருக்கலாம். உண்மையில் இந்த இயல்பான சினிமாவின் ஆயுள் சடுதியில் முடிந்தும் விட்டது. ஐந்தே வருடங்கள்தான். அதன் பின் மீண்டும் பார்க்கச்  சகிக்காத சக்கைகள் புதிய தோரணங்கள் கட்டிக் கொண்டு ஆட்டம் போட்டன. இந்த- தமிழ்த் திரையின் பொற்காலம்- என்ற சொற்றொடர் தமிழ் சினிமாவுக்கு வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் அது தமிழ்த் திரையிசைக்குமான சான்றிதழ் என்பதைத்தான் ஏற்க முடியவில்லை.

   சற்று ஆழமான பார்வை கொண்டு நோக்கினால், ஒரு உண்மை காணக் கிடைக்கும்.  தமிழ்த் திரையிசை தொட்ட உச்சம் அறுபதுகளில் நிகழ்ந்தது. அது எம் எஸ் வி - டி கே ராமமூர்த்தி இரட்டையர்களின் காலத்தில் தமிழ்த் திரை கண்ட மகா அதிசய நிகழ்வு. இதன் பின் ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டதாக சொல்லப்படும் எண்பதுகளில் தென்பட்ட  இந்த அடுத்த உச்சம் சூரியன்  மறைந்த பிறகு வெளிச்சம் கொடுக்கும் மின்சார விளக்குகள் போன்றது. ஒரு போலி வெளிச்சம்.

    ஆனால் இந்த செயற்கை ஒளியில் ஒரு நிஜம் ஒளிந்திருக்கிறது.எம் எஸ் வி- கண்ணதாசன் என்ற இணைப்புக்குப் பிறகு தமிழிசையில் ஏற்பட்ட அடுத்த மகா ஆளுமை கொண்ட கூட்டணி இளையராஜா-வைரமுத்து என்பது அதிகம் மிகைப்படுத்தப்படாத உண்மை. எண்பதுகளை இவர்கள் ஆட்சி செய்தார்கள் என்பதும் ஓரளவுக்கு உண்மையே. சில அதிர்ச்சியான சம்பவங்களுக்குப் பிறகு இளையராஜா மட்டும் தனி ராஜாங்கம் நடந்தினார். பலருக்கு எண்பதுகள் என்பது இளையராஜாவின் காலம். மறுக்க முடியாத உண்மை.

     பாரதிராஜா படங்களுக்கு இவர்கள் படைத்த பாடல்கள் இன்றளவும் பலரால் பொக்கிஷங்களாக போற்றப்பட்டு வருகின்றன. நிழல்களில் துவங்கிய இந்த மூவரின் கூட்டணி அடுத்தடுத்து வேறு வேறு சங்கீதச்  சோலைகளை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தது. அலைகள் ஓய்வதில்லை இசையால் எழும்பியது. தமிழ் சமூகத்தை சீரழித்த படங்களில் மிக முக்கிய இடத்தில் இருக்கும் இந்தப் படத்தைப் பற்றி தனிப்பட்ட விதத்தில் நான் நல்ல அபிப்ராயம் கொண்டிராவிட்டாலும் அதன் பாடல்கள் அப்போது தமிழகத்தில் ஏற்படுத்திய அலை அசாதாரணமானது. விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே அப்போது பள்ளிச் சிறுவர்களின் காதல் கீதம். காதல் ஓவியம் பாடல் ஏகத்தும் காதல் விஷத்தை சிறுவர்களிடம் ஏற்றியது. ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாடல் கொடுத்த ஆனந்தம் வார்த்தைகளை மீறியது.  ஆனால் பின்னாளில் இந்தப் பாடலின் மெட்டு தேனிப் பக்கம் உள்ள ஒரு கோவில் திருவிழா பாடலின் மெட்டு என்று அறிந்தபோது இளையராஜா இதுபோன்று வேறு எங்கெல்லாம் கைவைத்திருப்பார் என்ற அதிர்ச்சியில் உறைந்துபோனேன்.  கீழே இருப்பது  இணையத்தில் ஒரு பதிவர் எழுதியிருந்தது.


கேட்கும் யாருக்குமே முதல் முறையிலேயே பிடித்துப்போகும் மெட்டு. என்னதான் மிருதங்கம், வீணை போன்ற உயர்குடி சமாச்சாரங்கள் இருந்தாலும், பாடலின் மெட்டு ஒரு நாட்டுப்புற கும்மிப்பாடலை சார்ந்திருக்கும். கங்கை அமரன் ராஜாவிடம் மனஸ்தாபம் கொண்ட காலங்களில், "அவர் என்ன பெரிய பாட்டு போட்டுட்டார், எங்க ஊருல முளைப்பாரி எடுக்கும்போது பாடுற கும்மி பாட்ட காப்பி அடிச்சார்.." என்று மூலத்தையும் பாடிக் காட்டினார். ராஜாவே இதை சொன்னாலும் இனி நம்மால் மனதை மாற்றிக்கொள்ள இயலாது தானே??

யான வர்றதப் பாருங்கடி
அது அசஞ்சு வர்றதப் பாருங்கடி
என்ற கிராமியப் பாடலைக் கூட இதே ஆயிரம் தாமரை மொட்டுக்களே மெட்டில் சில இடங்களில் பாடுவது உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

  கர்நாடக சங்கீதத்தை கருப் பொருளாகக் கொண்ட  சங்கராபரணம் என்ற தெலுகு படம் 79இல் வந்து அசாதாரண வெற்றி பெற்று, கார்நாடக இசையை தமிழகத்தில் மீண்டும் உயிர்ப்பித்தது.  இந்தப் படத்தின் தாக்கம் பாரதிராஜாவை காதல் ஓவியம் என்ற "காதல்  காவியத்தை" எடுக்கத் தூண்டியது என்பது அந்த ஓவியத்தைப்  பார்த்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். பாரதிராஜா பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் நபர்களில் தனது கதாநாயகனைக் காண்பார்  என்பார்கள். அதை மெய்ப்பிக்கும் வகையில் அவர் தேனாம்பேட்டை சிக்னலிலிருந்து (அப்படித்தான் அன்று பேசிக்கொண்டார்கள்) அழைத்துவந்த மற்றொரு நடிகர்(!?) இந்தப் படத்தில் நடித்த (அப்படி கூட இவர் செய்தாரா?) கண்ணன் என்பவர். ராதா ஒரு பரதம் ஆடும் பெண். இவரோ கண் தெரியாத கர்நாடக இசைஞர். தமிழ் சினிமாவின் விசித்திர விதிப்படி இவர்கள் இருவரும் காதல் கொள்ள, பிறகு இன்னொருவனுடன் திருமணம் என்று அவள் பிரிய, இவர்கள் காதல் உடைய, இறுதியில் நாயகனுக்கு பார்வை வர, காதலியோ காதலன் நினைவிலேயே உயிரை விட, பாடியபடியே கண் கிடைத்த நாயகனும் உயிர் துறக்க .. சுபம் என்று சொல்ல இயலாத அபத்தம். படம் ஓடவில்லை. படுத்தே விட்டது.  ஆனால் இளையராஜாவும் வைரமுத்துவும் இந்தப் படத்தை  ரசிகர்களின் மனதில் நீங்கா வண்ணம் புதைத்து விட்டார்கள். அனைத்துப் பாடல்களும் தேனில் குழைத்த பலாச் சுளைகள் போன்ற  இனிப்புச் சுவை.

நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே, நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம், பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் (என்ன ஒரு  காவியக் கற்பனை!), அம்மா அழகே உலகின் ஒளியே, வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள், பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ (இந்தப் பாடலுக்குத்தான் மாநில அரசின் சிறந்த பாடகர் விருது கிடைத்தது. வாங்கியவர் பாடலின் அனைத்துப் பாடல்களையும் அற்புதமாகப் பாடிய எஸ் பி பி அல்ல. இந்தப் பாடலை சிறப்பாகப் பாடிய தீபன் சக்கரவர்த்தி.) இவை அனைத்தையும் விட சங்கீத ஜாதி முல்லை காணவில்லை (கண்கள் வந்தும் பாவையின்றி பார்வையில்லை) பாடலே என்னை வீழ்த்தியது. பாடலின்  இடையே வரும் விழியில்லை எனும்போது வழிகொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்?  படத்தின் கருவை இரண்டே வரிகளில் சொல்லிவிடுகிறது.

இதன் பின் வந்த மண்வாசனை மறைந்திருந்த பாரதிராஜாவின் கிராமியச் சுவட்டை புதுப்பித்தது. பொத்தி வச்ச மல்லிக மொட்டு பூத்துருச்சு வெக்கத்த விட்டு என்ற பாடல் வைரமுத்துவின் இருப்பை சொன்னது. பெண்களை விதம் விதமாக வர்ணிப்பதில்தான்  ஆணுக்கு எத்தனை ஆனந்தம்? நல்ல மெட்டு, இசை போன்ற  சிறப்பான தகுதிகள் இருந்தாலும் இது ஒரு ஆபாசமான பாடல். சற்று அபத்தமான வரிகள் கூட எட்டிப்பார்க்கும்.

எண்பதுகளில் பாரதியார் புயல் தமிழ் இயக்குனர்களை பிடித்து ஆட்டியது. பாரதியாரை மீண்டும் கண்டுகொண்ட பல படங்கள் வந்தன. பாரதிராஜாவின் புதுமைப் பெண் அந்த வகையில் வந்த வெகு சாதாரணமான படம். கஸ்தூரி மானே கல்யாணத் தேனே, ஒ ஒரு தென்றல் புயலாகி வருதே போன்ற பாடல்கள் அப்போது வானொலிகளில் சற்று பிரபலமாக இருந்தன.


    இரா-பாரா-வைரா கூட்டணியின் தவிர்க்க முடியாத ஒரு படம் முதல் மரியாதை, நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் படங்களுக்குப் பிறகு இந்த மூவரும் சேர்ந்து படைத்த அதி அற்புத -- குறிப்பாக ---- கிராமத்து விருந்து.  சிவாஜி என்ற மகா நடிகனை புதிய ஒளியின் கீழ் ரசிகர்கள் கண்ட வியப்பான வருகை. பாடல்கள் அனைத்தும் வானொலிகள், இசைப் பதிவகங்கள், திருவிழா மேடைகள், திருமண விழாக்கள் எங்கும் மஞ்சுவிரட்டு காளைகள் போல சீறிக்கொண்டு ஒலித்தன.  இத்தனை உயிர்ப்பான நாட்டார் இசையை இளையரஜா இந்தப் படத்திற்காகவே தன் ஹார்மோனியப் பெட்டிக்குள் பத்திரப்படுத்தியிருந்தது போல மெட்டுக்கள் கேட்டவர்களை மண் வாசனையால் நிரப்பின.  சொல்லப் போனால் அப்போது வந்துகொண்டிருந்த பல கிராமத்துச் சூழல் படங்களில் இருந்த இளையராஜா முதல் மரியாதையில் வேறு தளத்தில் புதிய உற்சாகம் காண்பித்தார். தன்னையே கிராமத்து மழையில் நனைத்து புதுப்பித்துக் கொண்டு அவர் அமைத்தது போல பாடல்கள் இயல்பான கிராமத்து நிறம் கொண்டிருந்தன.  குறிப்பாக ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பு இருக்குதுங்க, என்ற பாடல் எனக்கு கொஞ்சம் உன்ன நம்பி நெத்தியிலே பாடலை நினைவு படுத்தும். வேறு வேறு மெட்டுகளாக இருந்தாலும் இளையராஜா தான் வெகு தூரம் தாண்டி வந்துவிட்ட அந்த ஆரம்பகால நாட்டார் இசையை இங்கேதான் மீட்டெடுத்தார் என்பது என் எண்ணம். வைரமுத்துவின் வரிகள் பாடலுக்கு அதீத அழகைக் கொடுத்தன. தப்பான கருத்தா தண்ணீரில் அழுக்கா? போன்ற வரிகள் எளிமையான இருந்தும் சிலிர்ப்பூட்டும்  சொற்கள் கொண்டவை. வெட்டிவேரு வாசம் விடலப் புள்ள நேசம்  அடுத்த ஆனந்தம். தாலாட்டும் வசீகரம், கொஞ்சும் தீற்றல், தீண்டும்  துயரம், செதுக்கும் இசையனுபவம் கொண்ட பாடல் என நான் கருதுவது  பூங்காத்து திரும்புமா ஏ பாட்ட விரும்புமா,  ஒரே வார்த்தை; அற்புதம்.  யார் யாரை மிஞ்சுவது என்ற போட்டியில் இளையராஜாவும் வைரமுத்துவும் சேர்த்துப் படைத்த தங்க மின்னல். ஆத்தாடி மடியில் வச்சு தாலாட்ட எனக்கொரு தாய் மடி கெடைக்குமா  என்ற வரிகள் துயரத்தை உங்களுக்குள் விதைக்கும். பாடலின் இடையில் வரும் உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறனும் எங்க சாமிக்கு மகுடம் ஏறனும் என்ற வரிகளை வைரமுத்து சிவாஜிக்காக பிரத்தியேகமாக எழுதியதாக சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். சிவாஜிக்கு மறுக்கப்பட்ட இந்திய அரசு விருதுகள் குறித்து வைரமுத்துவின் ஆதங்கம் பொங்கும் வரிகள் அவை. பாடலின் இறுதியில் வரும்
ஆத்தாடி 
மனசுக்குள்ள 
காத்தாடி 
பறந்ததே 
உலகமே 
மறந்ததே 
ஒரு எளிமைச்  செழிப்பு.   இதில் மற்றொரு பாடல் உண்டு. காதலர்களின் கீதமாக வந்த அந்த நிலாவதான் ஏங் கையிலே புடிச்சேன் என்ற பாடல். எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன் கண்ண மூடு கொஞ்சம் நா காட்டுறேன் என்று ஒரு மாதிரியாக போகும். வேறு விதமாக அர்த்தம் பண்ணிக் கொள்ள ஏதுவான வழக்கமான இளையராஜாவின் முத்திரையான நாலாந்திரப் பாடல். வைரமுத்து எழுதியதால் அவரை விட்டுவிடலாம் என்று நான் எண்ணியதேயில்லை.  சொல்லப் போனால் நல்ல கவிதைகளை எழுதினாலும் வைரமுத்து இடையிடையே பல அருவருப்புகளையும் விடாது இழுத்துக்கொண்டே வந்திருக்கிறார். இதெல்லாம் சங்க கால இலக்கியங்களிலேயே இருக்கும் ஒரு சங்கதி என்ற சப்பைக்கட்டு இதற்கு பதிலாக வரும் ஒரு பலவீனமான  பாதுகாப்பு. சங்ககால இலக்கியங்களில் இருப்பதால் ஒரு ஆபாசம் (ஆனால் அப்போது அது ஆபாசம் அல்ல) அழகாகி விடும் என்று எனக்குத் தோன்றவில்லை. இது பற்றி பேசினால் போக்கு திசை மாறிவிடும்.

   கடலோரக் கவிதைகள் இந்த இரா-பாரா-வைரா கூட்டணியில் வந்த இறுதிப் படம்.  படத்தைப் பற்றி சிலாகிக்கும் படியான எந்த அம்சமும் தேடினாலும் கிடைக்காத இன்னொரு பாரதிராஜா  படம். சத்யராஜின் செயற்கையான இயல்புத்தனம் படத்தின் பலம் என்றாலும் பாடல்கள் சிறகு கட்டிப் பறந்தன.  கொடியிலே மல்லிகப் பூ மயக்குதே மானே ஒரு அபாரமான பாடல். வைரமுத்து எழுதியதில்லை என்றாலும் இதை இங்கே  குறிப்பிட வேண்டும்.   அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்க கட்டி பறக்குது சரிதானா பாடலின் துவக்கமே பலருக்கு போதையேற்றும். கிராமத்து பின்னணியில் இளையராஜா சோடை போவதேயில்லை என்பதை நிரூபித்த இசை. அவருடைய மகுடத்தின் மற்றொரு வைரக்கல் இந்தப் பாடல். போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே என்ற பாடலும் சிறப்பானது.  அடி ஆத்தாடி என்று எஸ் ஜானகி அடிக்கடி  ஜோசப் கல்லூரி விடுதியில் இரவு நேர உணவின் போது பாடுவதைக்  கேட்டிருக்கிறேன். தமிழ்ப் பாடல்களை அதுபோல கேட்ட நாட்கள் அவை. சிலவற்றையே நண்பர்களிடமிருந்து கடனாகப் பெற்று விருப்பத்தின் பேரில் கேட்டதுண்டு. இளையராஜா அப்போது எங்கேயுமிருந்தார். அப்போது வந்த பத்துப் படங்களில் ஏழு படங்களின் இசை அவருடையது.  எனவே அவர் பாடல்களுக்காக நான் சிரமப்பட்டதேயில்லை. அவரது பல பாடல்களைப் போல இந்த அடி ஆத்தாடி விடுதி ஒலிபெருக்கிகளில் கேட்டே அலுத்துவிட்டது.

     அடுத்து நான்  இளையராஜா-வைரமுத்து உருவாக்கத்தில் பிறந்த சில பாடல்களை பட்டியலிட்டுள்ளேன். 80 முதல் 86 வரை ஏறக்குறைய 100 (சிலர் 110 அல்லது 120 இருக்கலாம் என்கிறார்கள்.) படங்களுக்கு மேலே இவர்களின்  இணைப்பில் பல  பாடல்கள் வந்துள்ளன. அவை அனைத்தையும் எழுதுவது சற்று சிரமமான காரியம். எனவே சிலவற்றையே  இங்கே தந்துள்ளேன். அதிலும் சில  பாடல்களின் அருகே ஒரு கேள்விக்குறி தொக்கி நிற்பது  அவை   வைரமுத்து எழுதியதுதானா என்ற எனது சிறிய சந்தேகத்தின்  வெளிப்பாடு,  தெரிந்தவர்கள் திருத்தினால் மகிழ்ச்சியே.

     இப்போது  எண்பதுகளின் இனிமைச் சாலையில் ஒரு ஒய்யார ஊர்வலம் போகலாம்.

பயணங்கள் முடிவதில்லை- இளைய நிலா பொழிகிறதே, சாலையோரம் சோலை ஒன்று வாடும், தோகை இள மயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ. இதிலுள்ள அனைத்துப் பாடல்களும் பட்டை தீட்டிய வைரங்கள் என்றாலும் வைரமுத்துவின் வரிகளில் வந்ததை மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ளேன். தோகை இளமயில் ஒரு சந்தனக் காற்றின் சங்கீதம். கேட்கக் கேட்க திகட்டாதது.

கொம்பேறி மூக்கன்- ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்,(தியாகராஜனுக்கு இந்த அற்புத மெலடி கொஞ்சம் அதிகம்தான்.)

கைராசிக்காரன்- நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்,   படத்தைப் பார்கவில்லை. படம் வந்து நீண்ட நாட்கள் கழித்து கேட்ட இந்தப் பாடல் அள்ளி வீசிய ஆனந்தம் ஏராளம். கை  வீசும் தாமரை கல்யாண தேவதை.(இரண்டுமே ஆகாயப் பந்தலில் பொன்னூஞ்சல் ஆடும் சுகமானவை.)

புதுக்கவிதை- வெள்ளைபுறா ஒன்று ஏங்குது? இது காதல் பாடலா அல்லது சோகப் பாடலா என்ற பட்டிமன்றமே நடத்தலாம்.  காதலர்களுக்கு மத்தியில் ஒரு டூயட் பாடும் நேரத்தில் எதற்காக இத்தனை துயரம் என்று தெரியவில்லை. வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே அப்போது பிடித்த பாடல். இப்போது கேட்கும்போது இதுதானா அது என்று என்னையே வியப்புடன் வினவிக்கொள்கிறேன். மலேஷியா வாசுதேவன் ஒரு பாடலின் ஜீவனை பாடிப் பாடியே துரத்தி வெளியே அனுப்பிவிடுவார். மெலடி என்றால் என்ன விலை என்று கேட்கும் சாரீரம் அவருடையது. இரண்டாவது சரணத்தில்   வலி, வழி என்று ஒரு வார்த்தை விளையாட்டு உண்டு.

மலர்கள் நனைகின்றன- கண்ணா வா வா அதிகம் அறியப்படாத  ஒரு பாடல்.

நிழல் தேடும் நெஞ்சங்கள்- இது கனவுகள் விளைந்திடும் காலம் (நீதானா நீதானா இது நீதானா?)  எத்தனை அருமையான கானம்! இசையின் போக்கும் அதை லயமாக இழுத்துச் செல்லும் மெட்டும் ...அபாரமான பாடல்.. மங்கள வானம் குங்குமம் தீட்டும் மன்மத நேரமிது,  பூக்கள் சிந்துங்கள் கொஞ்சும் தேவே சொந்தங்கள் (இதுவே தங்க மகன் படத்தில் வா வா பக்கம் வா பக்கம் வர வெக்கமா என்று மாறியது.)

ஈரவிழிக் காவியங்கள்- பழைய சோகங்கள் அழுத காயங்கள், என் கானம் இன்று அரங்கேறும்,  காதல் பண்பாடு யோகம் கொண்டாடு (ஒரு கார்காலத்தில் என் பூந்தோட்டத்தில் எதிர்பாராத மாறுதல், என் நெஞ்சின் பசி கண்ணீரின் ருசி அவை தீராத சாபங்கள் என்று பெட்ரோல் பூசிக் கொண்ட வரிகள் திடீர் திடீரென நம்மைச்  சுடும்.) இந்தப் பாடலை நான் கற்பனை செய்துவைத்திருந்த காட்சியில் அதே பெட்ரோல் ஊற்றி கொளுத்தியது போல மிக மோசமான காட்சியமைப்பு. யாராவது இந்தப் பாடலை ஒரு மேடைப் பாடல் என்று நினைத்திருப்பர்களா அதுவும் மேற்கத்திய ராக் கான்செர்ட் பாணியில்? அபத்தத்தின் உச்சம்.

ஆராதனை- ஒரு குங்கும செங்கமலம், வெகு தாமதமாக நான் கேட்ட பாடலிது. இளையராஜாவின் பட்டுபோன்ற மென்மையான இசைக் கோர்ப்பு. ஆர்ப்பாட்டங்கள் இல்லாத எளிமையின் அழகு. பலரின் கற்பனையில் இல்லாத அபூர்வமான கவிதை கானம்.

வாலிபமே வா வா - கண்ணே பலம் தன்னால் வந்தது, படத்தைப் போலவே அதிகம் பேசப்படாத ஒரு சராசரிப் பாடல். பாரதிராஜாவுக்கு தமிழ் ரசிகர்கள் மீது வந்த அசாதாரண கோபம் இந்தக் குப்பையை எடுக்கத் தூண்டியது என்பார்கள். காதல் ஓவியம் தோற்றதால் அவருக்கு இந்தக் கோபம் வந்ததாம். என்னைக் கேட்டால் அலைகள் ஓய்வதில்லை என்ற படமே ஒரு குப்பைதான். சமூகத்தை சீரழித்த படங்களின் துவக்கம் இதுதான்.

கோபுரங்கள் சாய்வதில்லை- பூ வாடைக் காற்று வந்து ஆடை தீண்டுமே, சந்தேகமேயில்லாமல் வைரமுத்துவின் பாடல் இது என்று சொல்லிவிடலாம். பாடலில் இடையே வரும் ஹம்மிங் ரம்மியமானது. இன்றுவரை ரசிக்கிறேன்.

ராணித் தேனீ- என்னசொல்லி நான் எழுத என் மன்னவனின் மனம் குளிர. பொதுவாக சுசீலாவின் இனிமை இளையராஜாவின் பாடல்களில் காணக் கிடைப்பது அபூர்வம். சுசீலாவை வெகு சாதாரணமாகவே பாடவைப்பார். அல்லது அந்தக் குரலுக்கான அற்புதமான ராக நெளிவு அவரிடம் கிடையாது என்று சொல்லலாம். ஆனால் இளையராஜாவின் இசையில் பி சுசீலா அற்புதமாகப் பாடிய வெகு சில பாடல்களில் இது ஒன்று. பாடலுக்கான மெட்டு அற்புதமாக செதுக்கப்பட்ட சிலை போல அத்தனை துல்லியம்.

மஞ்சள் நிலா- பூந்தென்றல் காற்றே வா, இளையராஜாவை வியக்காமல் இருக்கவே முடியாது என நான் எண்ணும் சில பாடல்களில் இதுவும் ஒன்று. பூந்தென்றல் காற்றே வா என்ற முதல் வரியின் பின்னே இளையராஜா அமைத்திருக்கும் இசைக் கோர்ப்பு ஒரு அதீத கற்பனையின் ஆச்சர்யமூட்டும் அழகு. பாடலின் பல்லவியுடன் அலை போல அசைந்துவரும் கிடார் இசையை தனித்துக் கேட்டபடியே இதை ரசித்தால் இப்பாடலின் வியப்பூட்டும் பரிமாணம் நமக்கு விளங்கும். ராஜா ரசிகர்கள் சிலாகிக்கும் பல வெற்றுப் பாடல்களை விட இது அதிகம் செழிப்பானது. தரமானது. இது போன்ற பெயரில்லாத படங்களில் இளையராஜாவின் இசை சில சமயங்களில் ஒரு  அதிர்ச்சியூட்டும் அழகு.

தூறல் நின்னு போச்சு- தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி பலரின் விருப்பப் பாடல்.  நான் அதிகம் கேட்டதில்லை.

கண்ணே ராதா- மாலை சூட கண்ணே ராதா நாள் வராதா ரசிக்ககூடிய மெட்டுடன் கூடிய துள்ளல் இசை.

கோழி கூவுது- எதோ மோகம் எதோ தாகம், இளையராஜா அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த புள்ளி இதுதான். பாடலைக் கேட்டால் மனதுக்குள் விரியும் கற்பனைக் காட்சிகள் வார்த்தைகளை மீறிய வனப்பு கொண்டவை.  பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே. மலேஷியா வாசுதேவன் பாடிய பாடல்களில் என்னைக் கவர்ந்த வெகு சில பாடல்களில் ஒன்று.

மலையூர் மம்பட்டியான்- காட்டு வழி போகும் பெண்ணே கவலப் படாதே பாவலர் வரதராஜன் தான் சார்ந்திருந்த காம்யுநிஸ்ட் கோட்பாடுகளைப்   பாடிய பல மெட்டுக்களில் இதுவும் ஒன்று என விபரம் அறிந்தவர்கள் சொல்வார்கள். இதுபோல பாவலர் ஏற்கனவே மெட்டமைத்தவைகளை இளையராஜா சினிமாவில் பயன்படுத்திக்கொண்டதாக அப்போது ஒரு இயக்குனர் குமுதம் இதழில் எழுதியிருந்தது ஞாபகம் வருகிறது. அவர் வீட்டு சொத்து. அவர் எடுத்துக் கொள்வதில் தவறேதுமில்லை என்றே தோன்றுகிறது.

மெல்லப் பேசுங்கள்- காதல் சாகாது ஜீவன் போகாது, கேளாதோ  காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ,  செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு மூன்றுமே தெவிட்டாத தென்றல் துளிகள்.

ஒரு ஓடை நதியாகிறது- தலையை குனியும் தாமரையே, தென்றல் என்னை முத்தமிட்டது, டிபிகல் வைரமுத்து-இளையராஜா படைப்பு.  இவர்களின் பாடல் இப்படித்தான் இருக்கும் என்றெண்ண வைத்த பாடல்கள்.

ஆனந்த கும்மி- ஒ வெண்ணிலாவே வா ஓடி வா, ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா, தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி, ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ,இந்தப் படத்திற்கு வசனம் எழுதியதும் வைரமுத்துதான். மிகைப் படுத்தப்பட்ட நாடகத்தனமான வசனங்கள் என்று விமர்சனம் எழுந்தது. ஆனால் பாடல்களில் தேன் வழிந்தது. குறிப்பாக ஒரு கிளி உருகுது பாடலின் மெட்டு மனதை சிறைபிடிக்கும்.

ராகங்கள் மாறுவதில்லை- என் காதல் தேவி நீ என்னில் பாதி, விழிகள் மீனோ மொழிகள் தேனோ, தென்றலோ தீயோ தீண்டியது நானோ அருமையாக வரையப்பட்ட நேர்த்தியான பொன்னோவியங்கள்.

ஆயிரம் நிலவே வா- அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே, தேவதை இளம் தேவி, இளையராஜாவின் 200 வது படம் என்று நினைவு. எப்படி எப்படி என்று எஸ் பி பி கேட்கும் அந்தரங்கம் யாவுமே அப்போது இளைஞர்களைக் கவர்ந்தது. படம் ... கேட்கவே  வேண்டாம்... அத்தனை சுத்தம்!

இன்று நீ நாளை நான்- மொட்டு விட்ட முல்ல கொடி?, பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம், துயரத்தின் நிழல் படிந்த சந்தோஷ கீதங்கள். அற்புதமான மெட்டுடன் மனதை ஆழமாகத் தைக்கும் சோக முட்கள்.

ஜோதி- சிரிச்சா கொள்ளிமல குயுலு ? அதிகம் வெளியே தலைகாட்டாத கானம்.  இது அத்தனை சிறப்பானதல்ல என்றாலும் கேட்கக்கூடிய பாடலே.

கண் சிவந்தால் மண் சிவக்கும்- மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்.  காம்யுநிஸ்ட் கொள்கைகளை வைத்து வீடு கட்டிய சிவப்பு மல்லி என்ற படத்தின் எரிமலை எப்படிப் பொறுக்கும் என்ற பாடலின் தாக்கம் அதிகம் கொண்டது இது.

நீங்கள் கேட்டவை- பிள்ளை நிலா, கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் சோகங்கள்  (இதிலுள்ள வைரமுத்து எழுதாத அடியே மனம் நில்லுனா நிக்காதடி மற்றும் ஓ வசந்த ராஜா இரண்டும் பெரிய அளவில் இளைஞர்களை கவர்ந்தன.)

உயர்ந்த உள்ளம்- எங்கே என் ஜீவனே.  (இதிலுள்ள  என்ன வேணா தினுங்கடா டோய் இஷ்டப்படி வெட்டுங்கடா டோய் பாடல் பின்னர் வாழ வைக்கும் காதலுக்கு ஜே என்றானது. )

இங்கேயும் ஒரு கங்கை- சோலை புஷ்பங்களே என் பள்ளி நாட்களில் அதிகம் பேசப்பட்ட, விரும்பப்பட்ட, ஒலித்த பாடல் இது.  சோகத்தில் மூழ்கிய மெட்டு.

கீதாஞ்சலி- ஒரு ஜீவன் அழைத்தது,  துள்ளி எழுந்தது பாட்டு? கல்லூரி விடுதில் கேட்ட நினைவில் ஆடும் பல பாடல்களில் இவைகளும் உண்டு. இருந்தும் இளையராஜாவின் குரலை விட இசை கேட்க சற்று ஆறுதலாக இருக்கும். அவர் பாடியிருக்காவிட்டால் ஒருவேளை இந்தப் பாடல்கள் என்னை கவர்ந்திருக்கலாம்.

எனக்குள் ஒருவன்- முத்தம் போதாதே சத்தம் தீராதே, முத்தம் சத்தம் யுத்தம் எல்லாம் வைரமுத்துவின் பேனாவிலிருந்து தானாக உதிரும் வார்த்தைகள். நான்  அதிகம்  கேட்டதில்லை.   மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு.         ஜெனிசிஸ், ஆலன் பார்சன்ஸ் ப்ரொஜெக்ட், ஸ்டார்ஷிப், ஹூட்டர்ஸ், மிஸ்டர் மிஸ்டர், சர்வைவர்  என்று ஆங்கில இசைத் தொகுப்புகளை கடை கடையாக வேட்டையாடிக்கொண்டிருந்த  காலகட்டத்தில் வந்த இந்தப் பாடல் முதல் தடவையே ஒரு பரவச அனுபவமாக நெஞ்சத்தில்  அமர்ந்துகொண்டது. கொஞ்சம் அதிரடி, கொஞ்சம் மெலடி, கொஞ்சம் சரவெடி என்ற புது வடிவத்தில் இளையராஜா ஏகத்துக்கும் விளையாடிய இசைப் பெருமழை.   சற்று வேறு பக்கம் பார்க்கக்கூடிய சந்தர்ப்பத்தையே கொடுக்காது,  "அங்க என்ன பார்வை? என்னையே  கவனி" என்று தீர்க்கமாகச் சொல்லும் பொறாமைக் காதலி போன்ற பாடல். அத்தனை உயிர்ப்பான இசை, துடிக்கும் தாளம், மெய்மறத்தலுக்கு ஏற்ற இசை. நான் ரசிக்கும் இளையராஜா பாடல்களில் ஒன்று என்பதை சொல்லத் தேவையில்லை.

தர்ம பத்தினி- நான் தேடும் செவ்வந்திப் பூவிது? இளையராஜா பாடாமல் இருந்திருக்கலாம் என்ற எண்ணத்தை உருவாக்கும் பல பாடல்களில் ஒன்று. பரவலாக சிலாகிக்கப்பட்ட இசை. எனக்கு  அந்த அளவுக்கு எதுவும் தோன்றவில்லை. குறிப்பாக தொடர்பில்லாத இடையிசை  தான் பாட்டுக்கு வேறு எங்கோ சென்றபடி இருக்கும். அதை கட்டி இழுத்து வந்து சரணதிற்குள் அடைக்கும் பொருத்தமில்லாத இசையமைப்பு. முழுமையடையாத பாடல் போலவே ஒலிக்கும்.

கொக்கரக்கோ- கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம். பள்ளி தினங்களில் என் மனதை அள்ளிச் சென்ற பாடல். எஸ் பி பியின் குழையும் குரலில் இதைக் கேட்பதே ஒரு சுகம்தான். வெல்வெட் விரிப்பில் நடந்து செல்லும் மிருதுவான இசையமைப்பு.

உன்னை நான் சந்தித்தேன்- தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் என்னால் மறக்கவே முடியாத 85ஆம் ஆண்டின் கோடை விடுமுறை நாட்களை உயிர்ப்பிக்கும் பல பாடல்களில் ஒன்று. என் கசின் கூட்டம் சேர்ந்து அடித்த கூத்தும்,  பேனாசோனிக் டேப் ரெக்கார்டரில் எங்கள் குரலில் சினிமா பாடல்கள் பாடி பதிவு செய்த  குதூகலமும், அதற்குப் பிறகு அத்தனை கூட்டம் சேராமல்  காணாமல் போன களிப்பும்  என்னை மீண்டும் மீண்டும் அந்த தங்க துக்கத்தை அசைபோடச் செய்கிறது. அப்படி என் தங்கை பாடிய ஒரு பாடல் தேவன் தந்த   வீணை. முதல் வரியை பாடிவிட்டு அவள் எக்கோ எபெக்ட் கொடுத்து தன் தொழில் நேர்த்தியை தானே பாராட்டிக்கொண்டாள். எனக்கு இந்தப் பாடல் அவ்வளவாக பிடிக்காது. ஆனால் இந்தப்  பாடல் தரும் நினைவலைகள் விலைமதிப்பில்லாதவை.   தாலாட்டு மாறிப் போனதே? இளையராஜாவின் மோகனமான மனதை சொக்க வைக்கும் தாளம் இதன் உயிர்நாடி.

வாழ்க்கை- காலம் மாறலாம் நம் காதல் மாறுமா எதோ கமலஹாசன் பாடல் போல இருக்கும். படத்தில் சிவாஜி வாயசைப்பார் அம்பிகாவுடன் நடனமாடியபடியே. கோட் சூட் போட்ட கார் மெக்கானிக்கை நீங்கள் இந்தப் படத்தில்தான் பார்க்கலாம்.

முடிவல்ல ஆரம்பம்- பாடிவா தென்றலே ஜெயச் சந்திரனின் குரலில் எதோ ஒரு வசியம் இருப்பதை ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். சில சமயங்களில் இவர் ஜேசுதாசை விட நம் மனதை கொள்ளையடித்து விடுகிறார்.  தென்னகீற்றும் தென்றல் காற்றும் கைகுலுக்கும் காலமடி சுசீலா பாடிய சுவடே தெரியாது. யார் வேண்டுமானாலும் பாடியிருக்கக் கூடிய சாதாரணப் பாடல்.

சிந்து பைரவி- படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் அசுர வெற்றி பெற்றன. அப்போது ஒரு பதிவகத்தில் எடி கிராண்ட் இசைத் தொகுப்பை தேடிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த கொஞ்சம் வயதான ஒரு மாமி' "சிந்து பைரவி கேசெட் கொடுங்கோ. பாட்டெல்லாம் பேஷா நன்னா வந்திருக்கு." என்று சொல்லி வாங்கிச் சென்றது நினைவிருக்கிறது. என் நண்பன் சொல்வதுண்டு; "இப்பதாண்டா இளையராஜாவ பிராமின்ஸ் ரசிக்கிறாங்க." கலைவாணியே உனைத்தானே அழைத்தேன், பூ மாலை வாங்கிவந்தேன், என்று இளையராஜா கர்நாடக ராகங்களில் தோய்ந்த இசையை பூப்  பூவாக தொடுத்திருப்பார். எனக்குத் தெரிந்த ஒரு கர்நாடக இசையறிந்த நண்பரொருவர் சிந்து பைரவி பாடல்கள் பற்றி  "பெரிய சாதனை பாடல்கள் ஒன்றும் கிடையாது. வெகு சாதாரணப் பாடல்கள்தான். இதை விட அபூர்வ ராகங்கள் படப் பாடல்கள் சிறப்பானவை" என்று சொல்வார்.  நானொரு சிந்து, பாடறியேன் படிப்பறியேன் இரண்டும் கர்நாடக ராகங்களில்  ஒளிந்திருக்கும்  நாட்டுப்புற மெட்டுக்களின் வேர்களை தேடிச் செல்லும் ராக பயணம்.  நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு, மாம வீடு மச்சு வீடு போன்ற இசை "ஆச்சர்யங்களை" அள்ளித் தெளித்த இளையராஜாவின் மற்றொரு அதிரடி"அற்புதம்" தண்ணித் தொட்டி தேடி வந்த கண்ணுக் குட்டி நான். பரிதாபம்.

  எண்பதுகளில் பலருக்கு கிடைக்காத ஒரு மெகா வெற்றி வெளிச்சம் இளையராஜா இசையினால் ஒரு நடிகரின் மீது படர்ந்தது. அவர்  நடிகர் மோகன். இவர் படங்கள் என்றாலே   இளையராஜாவின் இசையில் ஒரு தனி ரசிப்புக்கான பல அம்சங்கள் குவிந்துவிடும். மோகன் பாடல்கள் என்று ஒரு தனி பதிவே எழுதுமளவுக்கு இளையராஜா அவர் படங்களுக்கு அளித்த பல பாடல்கள்  என்றும்  பசுமையானவை.  சமீபத்தில் ஒரு டி வி  நேர்காணலில், நடிகர் மோகனை ஒரு நிருபர் "உங்களின் படங்களில் பாடல்கள் எல்லாமே சிறப்பாகவும் அருமையாகவும் அமைந்துவிட்டது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?" என் கேட்க, அதற்கு   அவர்  சொன்ன பதில் அதிர்ச்சியூட்டியது. அவர் சொன்னது: "எல்லாம் கடவுளின் அருள்". நியாயமாகப் பார்த்தால் மோகன் இந்தக் கேள்விக்கு சொல்லியிருக்கக்கூடிய அல்லது வேண்டிய ஒரே வார்த்தை; " இளையராஜா".  எதோ இவரது வெற்றி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட கடவுளின் ஆசீர்வாதம் போல தொனிக்கும் இந்த அபாண்டமான பதில் எனக்கே எரிச்சலூட்டியது.

     உண்மையில் இளையராஜா தன் படைப்பாற்றலின் உச்சத்தில் இருந்தபோது அதிர்ஷ்டவசமாக மோகன் அங்கே இருந்தார். கமல், ரஜினி என்ற ஒளிவட்டம்  சுழன்ற பெரிய நடிகர்கள்  அப்போது இருந்தாலும் அவர்களுக்கான பாடல்களில் இருந்த  ஒரு வர்த்தகக் கயிறு அவர் இசையை கட்டிப்போட்டிருந்தது எனலாம். ஆனால் இரண்டாம் மூன்றாம் கட்ட  நடிகர்கள் படத்தில் அவர் தன் புதிய பரிசோதனைகளை கட்டுப்பாடுகளின்றி செய்ய முடிந்தது. எந்த தனிப்பட்ட ஆளுமைக்கான நிர்ப்பந்தமும் அவரது இசையின்  பாதையை தீர்மானிக்கவில்லை. மோகன் என்றாலே இளையராஜா நம் நினைவில் வருவது இதனால்தான். பருவமே புதிய பாடல் பாடு என்று வைரமுத்துவுக்கு முன்பே இளையராஜா மோகனுக்காக அமைத்த ஒரு பாடல் என்னுடைய விருப்பதிற்குரியது.

   தென்றலே என்னைத் தொடு - இளையராஜாவின் சாதனை இசைப் படைப்புக்களில் ஒன்று  என்று தயங்காமல் சொல்லிவிடலாம். இன்றும் நவீன முகம் கொண்ட  அழகு. ஜேசுதாசை மூடுபனியின் என் இனிய பொன் நிலாவேவில் கூட நான் இந்த அளவுக்கு ரசித்ததில்லை.  கண்மணி நீ வரக் காத்திருந்தேன் ஜன்னலோரம் அமர்ந்திருக்கையில்  நம் முகத்தை வருடிச் செல்லும்  மென்மையான தென்றலின்  கூந்தல் . புதிய பூவிது பூத்தது இளையராஜா ஒரே வார்ப்பில் ஏகத்துக்கு  பாடல்கள் அமைத்திருக்கிறார். சில சமயங்களில் சரணத்தை மட்டும் கேட்டால் என்ன பாடல் என்பதே புரியாத புதிராக இருக்கும். ஆனால் இது போன்றதொரு இன்னொரு பாடலை அவர் அமைக்கவேயில்லை. வசீகர வனப்பில் வடித்தெடுத்த வசந்த இசை. உண்மையிலேயே புதிய பூவது. கவிதை பாடு குயிலே இனி வசந்தமே, தடதடக்கும் தாளம்  இந்தப் பாடலின் அடிநாதம். கொஞ்சமாக  ஒரு இழை பிசகியிருந்தாலும்  இப்பாடல் இளையராஜாவின் புளித்துப் போன வழக்கமான டப்பாங்குத்து வடிவத்துக்குள் சிக்கிக்கொண்டிருக்கும். தென்றல் வந்து என்னைத் தொடும்? தொடரும் தென்றல். வண்ண மயமான ஓவியத்தை அருகே ரசிக்கும் ஆனந்தம்.

உதய கீதம்- உதய கீதம் பாடுவேன்  தீண்டிப்பார்க்கும் துயரம்.   சங்கீத மேகம்?  சில பாடல்களின்   முன்னிசையே   ஒரு பெரிய ஆர்ப்பரிப்புக்கான அறிமுகமாக அமைவதுண்டு. ( அன்பே வா படத்தின் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலின் துவக்க இசையைக் கேளுங்கள். இதன் அர்த்தம் புரியும்.) அப்படியான ஒரு நீர்வீழ்ச்சி போல  கொட்டித் தெறிக்கும் இசையுடன் துவங்கும் இந்தப் பாடல்  அடுத்தடுத்து பல படிமங்களாக விரிவடைவது ஆச்சர்யமானது. இளையராஜாவின் பாடல்களின் இத்தனை குதூகலம் கொண்ட இசையை நான் இதற்கு முன் கேட்டதேயில்லை. அவருடைய டப்பாங்குத்து பாடல்களில் வரும் குதியாட்டதை நான் இங்கே கணக்கில் சேர்க்கமாட்டேன். சற்று கிருஸ்துவ  தேவாலயப் பாடல் சாயல் கொண்ட மெட்டு. சரசர வென்று விரைந்து செல்லும் இசையமைப்பு கேட்பவரை ஆக்கிரமித்து, ஒரு நொடி கூட தளராமல் பாடலின் இறுதி வரை ஆட்சி செய்யும். தேனே தென்பாண்டி மீனே. இது புலமைப்பித்தன் எழுதிய பாடல். சோகத்தை சுமந்த மெட்டு. மனதுள் பாடல் இறங்க இறங்க மெல்லிய வலியை உணரலாம். தாழம்பூவை தூர வைத்தால் வாசம் விட்டுப் போகுமா என்ற வரிகள் மிகுந்த ஆழமானவை. இதே போல குங்குமச் சிமிழ் படத்தில் வாலி எழுதிய நிலவு தூங்கும் நேரம் என்ற பாடல் அற்புதமான கானம். சோகம் போர்த்திய மென்மையான காதல் கீதம்.


நூறாவது நாள்- உலகம் முழுதும் பழைய ராத்திரி, விழியிலே மணி விழியிலே? கன்னடத்திலிருந்து தமிழுக்கு புலம் பெயர்ந்து பின்னர் ஹிந்திக்கு படையெடுத்த இளையராஜாவின் அபாரமான மெட்டு. சிலர் இளையராஜாவின் காதல் பாடல்கள் என்ற பேச்சில்  அக்னி நட்சத்திரம், அபூர்வ சகோதரர்கள், ராஜாதி ராஜா என்று கேட்கச் சகிக்காத  பாடல்களை விவாதத்திற்குள் இழுத்துக்கொண்டு வரும்போது நான் குறிப்பிடும் பல அரிதான பாடல்களின் ஒன்று இது.

அன்பே ஓடி வா- இப்படி ஒரு படம் வந்ததே எனக்கு படம்  வந்து காணாமல் போன இரண்டு வருடங்கள் கழித்துதான் தெரியவந்தது. என் அண்ணன் ஒரு கசெட்டில் எஸ் பி பியின் தனிப் பாடல்கள் என்ற தலைப்பிட்டு சுமார்  பனிரெண்டு பாடல்களை பதிவு செய்து வைத்திருந்தான். எம் சி சி கல்லூரிக் காலம் முடிந்த பிறகு மேகங்கள் பூசிய ஒரு மழைக்காலத்து அந்தி வேளையில் தமிழ்ப்  பாடல்களைக் கேட்கவேண்டும் என்றொரு இச்சை எழ, அப்போது கேட்ட பல அசாதாரணப் பாடல்களில் ஒன்று  ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.  வர்ணிக்க ஒரே வரிதான். திகைப்புச் சுவை. அரிதான பாடல்கள் வரிசையில் சிரமமில்லாமல் சேர்ந்துகொண்ட அற்புதப் பாடல். மகா பிரகாசமாக  ஒளிரும் மின் விளக்குகளை விட இது போன்ற சிறிய அகல் விளக்குகளின் அழகு என் மனதை கவர்வதுண்டு. அழகான பூக்கள் மலர்ந்தாடுமே அடுத்த அழகு.

ஒ மானே மானே - பொன்மானே தேடுதே என் வீணை பாடுதே? இது கமலஹாசன்  மோகனுக்காக பாடிய பாடல். பிரசாத்(?) ஸ்டூடியோவுக்கு எதேச்சையாக வந்த கமலஹாசனை இளையராஜா சும்மா பாடச் சொல்ல அவர் சும்மா பாடிவைக்க படத்தில் கமல் குரலுக்கு வாயசைத்தார் மோகன். உண்மை இப்படி இருக்க நாங்கள் மோகனுக்கு பாடுற லெவலுக்கு வந்துட்டாரப்பா கமல் என்று பேசிக்கொள்வோம். தரமான மேற்கத்திய பாணி இசை. கேட்க நன்றாக இருக்கும். வந்த புதிதில் பிரபலமாக இருந்தது.

அன்புள்ள மலரே- அலை மீது தடுமாறுதே  சிறு ஓடம்? ஒரே மாதிரியான இசைக் கோர்ப்பு என்றாலும் கேட்க அலுக்காத அழகிசை. 

உன் கண்ணில் நீர் வழிந்தால்- என்ன தேசமோ துக்கமா? துயரமா? தத்துவமா?  கூப்பிடு ஜேசுதாசை என்ற அப்போதைய காலத்தின் நிர்ப்பந்தம். கண்ணில் என்ன கார் காலம். பல்லவி மட்டும் ஆண் குரலில் வரும். இரண்டு சரணமும் பெண் குரலில் சற்று தாலாட்டும்.  முதல் சரணத்தில்
நான் உறங்கும் நாள் வேண்டும் 
சாய்ந்து கொள்ள தோள் வேண்டும் 
என் கண்ணில் நீர் வேண்டும் ...
சுகமாக அழ வேண்டும் என்ற கவிதை ஒரு மின்சார அழகு. எம் சி சி யில் நான் படித்தபோது அங்கிருந்த  ஒரு நண்பன் இந்தப் பாடலை ரிபீட் செய்து கேட்டுக்கொண்டே இருப்பான். சுகமாக அழவேண்டும் என்ற வார்த்தையை "பின்னீட்டான். அழறது கூட ஒரு சுகம்தான். இதச் சொல்ல ஒரு கவிஞன் வரான் பாரு" என்று சிகரெட்டின் கடைசி இழுப்பு வரை இழுத்துக்கொண்டே சிலாகிப்பான். உண்மையே. கண்ணீர்த் துளிகளின் கதகதப்பை கவிதையாக வடித்த அபார வரிகள் அவை.

நான் சிகப்பு மனிதன்- காந்தி தேசமே காவல் இல்லையா, பெண் மானே சங்கீதம் பாடி வா? இந்தப் பாடல் நடிகர் மோகனுக்கான  பாடல் போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்டதோ என்ற சந்தேகம் எனக்குண்டு.

படிக்காதவன்- ஊரத் தெரிஞ்சுகிட்டேன் இளையராஜா இசையில் வந்த வெகு சொற்பமான தத்துவப் பாடல்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பாடல். இதை புதுகை சக்தி மியூசிகல் பதிவகத்தில் முதலில் பெரிய ஸ்பீகர்களில் கேட்டபோது அங்கே தள்ளாடிக் கொண்டு வந்த ஒரு "குடி"மகன் பாடலை மீண்டும் ஒலிக்கச் செய்து கேட்டுவிட்டு "ராஜா ஒரு தெய்வம்டா. என்னாமா பாட்டு போட்டுருக்கான்!" என்று சிலாகித்தது ஞாபகத்தில் இருக்கிறது.  சோடிக்கிளி எங்கே சொல்லு சொல்லு. இதில் பல்லவிக்கு முன் வரும் அந்த திடீர் கிர்ர்ர் என்ற ஓசைக்கு அப்போது ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. என் ரஜினி நண்பன் சொல்வான்  "தலைவருக்கு ஏத்த மியுசிக்னா அது இதான்." நானோ அவனுக்குத் தெரியாமல் சிரித்துக் கொண்டிருப்பேன்.

உன்னைத் தேடி வருவேன்- ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே இதே போல இளையராஜாவிடம் டசன் கணக்கில் பாடல்கள் இருக்கின்றன. புதுமையான எதுவுமே இல்லாத சாதாரணம். என் அன்பே அன்பே என் மனம் உன் வசம்?  புதிய பாணி இசை என்று சொல்லலாம். இதில் வரும் அந்த பிசிறடிக்கும் கிடார் ஓசையே பின்னாட்களில் இளையராஜாவின் முத்திரை இசையாகிப் போனது துரதிஷ்டமே. அக்னி நட்சத்திர நாட்களின் முன்னோடி இந்தப் பாடல்.

பிள்ளை நிலா- ராஜா மகள் ரோஜா மகள்?

அன்பின் முகவரி - உயிரே உறவே ஒன்று  நான் சொல்லவா?  வான் சிவந்தது பூ மலர்ந்தது.

பாடும் பறவைகள்- நிழலோ நிஜமோ (அன்பின் முகவரி படத்தின் உயிரே உறவே பாடலின்  மறு பதிப்பு.) கீரவாணி?

அந்த ஒரு நிமிடம்- சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே படத்தின் ஒரே நல்ல அம்சம் இந்தப் பாடல்தான். எஸ் பி பியின் அழகான சிரிப்புக்கெனவே இதை அடிக்கடி கேட்ட நாட்கள் உண்டு.

இதயக் கோயில்- நான் பாடும் மௌன ராகம் வைரமுத்து எழுதிய ஒரே பாடல். பாடலின் தாளம் பாடலை வேறு தளத்திற்கு உயர்த்தி விடுகிறது. சொக்கவைக்கும் இசை. அசாதாரண மெட்டு. செவிகளை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு கடந்து செல்ல முடியாத துயரத்தின் உன்னதம். இந்தப் படத்தின் மற்ற பாடல்களான யார் வீட்டு ரோஜா பூ பூத்ததோ, இதயம் ஒரு கோவில், பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான், வானுர்யந்த சோலையிலே என அனைத்தும் தங்கத் துகள்கள். எண்பதுகளில் இளையராஜா என்றால் எனக்கு அப்போது மனதில் உதித்த  பாடல்கள் இவைதான்.

ஜப்பானில் கல்யாணராமன்- அப்பப்பா தித்திக்கும் இந்த முத்தம் சடசடக்கும் ரயில் போன்ற இசை கொண்ட தித்திக்கும் பாடல். தடா புடா என்று உருளும் ட்ரம்ஸ் அப்போதைய இளையராஜாவின் மேற்கத்திய percussion இசை. அவரது சில பாடல்களில் அந்த ஓசை நம்மை அதிகம் தொந்தரவு செய்யாமல் இனிமையாக இருக்கும்- இந்தப் பாடல் போன்று.

தாய்க்கு ஒரு தாலாட்டு- ஆராரிரோ பாடியதாரோ  துயரத் தாலாட்டு.

உனக்காகவே வாழ்கிறேன்- இளஞ்சோலை பூத்ததா ஒரு காலகட்டத்தில் எனக்கு இளையராஜா என்றாலே சற்று அலுப்பு ஏற்பட்டது. நியாயமாக சொல்லவேண்டுமென்றால் அந்த சமயத்தில் கூட என்னைக் கவர்ந்த ஒரு இளையராஜாவின் பாடல் எது என்று கேட்டல் பதிலாக வருவது இந்தப் பாடலே. கர்நாடக  சங்கீதத்தில் மூழ்கி எடுத்த முத்து. சிவகுமாரையும் நதியாவையும் நினைக்காமல்  இந்தப் பாடலைக் கேட்டால் அதன் அற்புதம் உங்கள் மனதைத் தொடும். நான் இளையராஜாவை வியந்த மற்றொரு பாடல்.  கண்ணா உனைத் தேடுகிறேன் வா நான்  அடிக்கடி குறிப்பிடும் என் நெருங்கிய நண்பன் பற்றிய செய்தி இதில் உண்டு. இந்தப் பாடலை அவன் அதிகமாக நேசித்தான். ரஜினி ரசிகனான அவன் பூவே பூச்சுடவா படத்திற்குப் பிறகு நதியாவின் தீவிர ரசிகனாகி விட்டான். இந்தப் பாடலைக் குறித்து," என் நதியாவே என்னைக் கூப்பிடுகிறாள்" என்று குதூகலிப்பான். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவன் பெயர் கண்ணன். இவனைப் பற்றி ஒரு முழு பதிவே எழுதக் கூடிய அளவுக்கு என் மனதையும் எண்ணங்களையும் பாதித்த என் நெஞ்சத்தில் ஆழ்ந்துவிட்ட என்னுடைய ஒரே நண்பன்.

விக்ரம் - வனிதாமணி வனமோகினி வந்தாடு சிலிர்க்கும் இசை. சிலர் இந்தப்  பாடலே தமிழில் வந்த முதல் ராப் பாடல் என்று சொல்கிறார்கள். எனக்கு அப்படியெல்லாம் தோன்றவில்லை. அதே கண்கள் படத்தின் வேதாவின் இசையில் வந்த பொம்பள ஒருத்தி இருந்தாளாம் பூதத்த பாத்து பயந்தாளாம் என்ற பாடலில் கூட ராஜா ரசிகர்கள் பெருமைப்படும் இதே  ராப் அம்சங்கள் ஏகத்துக்கு உண்டு.  விக்ரம் விக்ரம் என்னை ஆச்சர்யப் படுத்தியப் பாடல். இந்தப் படம் வந்த 86இல் நான் பெட்ஷாப் பாய்ஸ், ஆஹா, என வேறு நடைபாதையில் சென்றுகொண்டிருந்தேன். சரியாக நினைவில்லாத ஒரு காலை நேரத்தில் திருச்சி ஜோசப் கல்லூரி பெல்லார்மின் ப்ளாக்கின் பின்னே உள்ள பர்மா பஜாரில் ஒரு பாடல் திடும் திடும் என துடித்தது.  அந்தத் தாளம் அதிரடியாக ஒலிக்க, சற்று என் செவிகளை அந்தப் பக்கம் திருப்பினேன். காதில் விழுந்தது தமிழ் வார்த்தைகள். இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு அது விக்ரம் என்ற புதிய கமல் படத்தின் விக்ரம் என்ற பாடல் என்பதை அறிந்தேன். இதில்தான் முதல் முதலில் எ ஆர் ரஹ்மான் இளையராஜாவுக்காக சிந்தசைசர் இசைத்தார் என்று ஒரு தகவல் உண்டு. இதை வைத்தே புன்னகை மன்னன் படத்தில் இந்த சிந்தசைசர் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடல்கள் அமைக்கப்பட்டன என்று ஒரு நண்பர் தெரிவித்தார். இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. உண்மையில் இதன் பிறகு வந்த அந்த புன்னகை மன்னன் படப் பாடல்களைவிட இந்த விக்ரம் பாடல் வெகு நேர்த்தியானது. ஆனால் அதிகம் புகழ் வெளிச்சம் படாமல் அலட்சியப்படுத்தப்பட்ட பாடல். (பிறகு படத்தில் இல்லாத சிப்பிக்குள் ஒரு முத்து. நல்ல வேளை படத்தில் இல்லை. ஒருவேளை இருந்திருந்தால் கமல் தன் ட்ரேட் மார்க் ரொமாண்டிக் கோமாளித்தனத்துடன் செய்திருக்கக்கூடிய காட்சிகளை பார்ப்பதற்கே அதிக மன பலம் தேவைப்பட்டிருக்கும். )

ஆண் பாவம்-இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான், இந்தப் படத்தின் எந்தப் பாடலையும் நான் ரசித்ததே இல்லை. உபயோகித்து விட்டு நாம் தூக்கி எறியும்  பல பொருட்கள் போல  ஒரு முறை கேட்டுவிட்டு தாராளமாக மறந்துவிடக் கூடிய பாடல்கள். வெகு சாதாரண இசையமைப்பு. இதுவே போதும் என்று இளையராஜா எண்ணியிருப்பது போலவே தோன்றும்.

நட்பு- அதிகாலை சுபவேளை பத்தோடு பதினொன்று.

நானே ராஜா நானே மந்திரி- மயங்கினேன் சொல்லத் தயங்கினேன். வைதேகி காத்திருந்தாள் - காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி, தூங்காதே தம்பி தூங்காதே- நானாக நானில்லை தாயே இவை  அனைத்தும் வைரமுத்து எழுதிய பாடல்கள் அல்ல. வாலி இயற்றியது. எண்பதுகளில் தவிர்க்க முடியாத பாடல்களில் இவை அடக்கம். அதிலும் குறிப்பாக மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் பாடல் என்னை செயின்ட் ஜோசெப் கல்லூரி விடுதிக்கு அழைத்துச் சென்றுவிடும். அங்கு பரிமாறப்படும் மெகா சைஸ் சப்பாத்தியை நூறு துணுக்குகளாக பிய்த்துப் போட்டுவிட்டு அதன் மேலே ஊற்றப்பட வேண்டிய குருமாவுக்காக காத்திருக்கும் சமயங்களில் பெரும்பாலும் இந்தப் பாடல்தான் பின்னணியில் ஒலிக்கும். இன்று கூட இந்தப் பாடல் எனக்கு அந்த சப்பாத்தியின் சுவையை மீண்டும் உணர வைக்கத் தவறுவதில்லை.

நீதானா அந்தக் குயில்-  என் ஜீவன் பாடுது, பூஜைக்கேத்த பூவிது? இது கங்கை அமரன் எழுதிய பாடல் என்று எங்கோ படித்ததாக நினைவு. ஆனால் வைரமுத்துவிடமும் இதே விரசமான  பார்வை உண்டு.  எனவேதான் இந்த சந்தேகம்.

பூ விலங்கு - ஆத்தாடி பாவாட காத்தாட, என்ன ஒரு "காவியக்  கவிதை! " இந்தக் கண்றாவியை நான் முழுதாக கேட்டதேயில்லை என்பதை விட கேட்கவே விரும்பியதில்லை. இளையராஜா தமிழிசையை வேறு பக்கம் நகர்த்திக்கொண்டிருந்தார் என்பதன் அடையாளம். வைரமுத்து தன்  பங்குக்கு தன்னால் ஆன சேதாரத்தை ஒழுங்காக செய்தபடி இருந்தார்.

நான் பாடும் பாடல்- பாடவா உன் பாடலை இதில் ஜானகி பாடலை  என்பதில் உள்ள முதல் சிலபலை பா ஆ ஆ ஆ டலை  என்று நீட்டிப்பது கேட்க புதுமையாக இருக்கும்.  இது போன்ற extension of a  syllable மேற்கத்திய இசையின் மிக முக்கியமான அங்கம். சீர் கொண்டுவா வெண் மேகமே? மேகத்துனுக்கு போன்ற மிதக்கும் மெட்டமைப்பு. ரம்மியமான பாடல்.

பாரு பாரு பட்டணம் பாரு- யார் தூரிகை தந்த ஓவியம்? தென்றல் வரும் என்னை அழைக்கும்? இரண்டுமே அசாதாரண பாடல்கள்தான். நவீன சுழன்ற பாலங்களை விட ஒற்றையடிப் பாதைகள் சில சமயங்களில் நம் மனதை வென்றுவிடும். அப்படியான வெளியே அதிகம் தென்படாத இளையராஜாவின் அற்புதமான பாடல்களில் இவை அடங்கும்.

பூவே பூச்சுடவா- சின்னக் குயில் பாடும் பாட்டு, பூவே பூச்சுடவா, பட்டாச சுட்டுப் போடட்டுமா மகா வெற்றி கண்ட பாடல்கள். ஆனால் எனது பார்வையில் வழக்கமான தளத்தில் பயணித்த அலுப்பான சவாரி.

புன்னகை மன்னன்- இளையராஜா-வைரமுத்து  கூட்டணியின் இறுதிப்படம். என்ன சத்தம் இந்த நேரம் என்பதுபோல நீண்ட நாட்களாக புகைந்துகொண்டிருந்த திரி  ஒன்று சத்தமில்லாமல் வெடித்து இசை நண்பர்களை இரண்டாக உடைத்தது. ஆனால் பாடல்கள் மிகப் பெரிய வெற்றியைச் சுவைத்தன.  அனைத்துப் பாடல்களும் கொண்டாடப்பட்டன. இதில்தான் முதல் முறையாக கம்ப்யூட்டர் இசை என்ற புதிய வித்தையை இளையராஜா அரங்கேற்றினார். இந்த ஜிகினா அலங்காரம் அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால்  பொதுவாக மேற்கத்திய  இசையின் ஒரு பரிமாணமான  சிந்தசைசர் வகைப்   பாடல்கள்   பரிச்சயம் கொண்டவர்கள் இந்த களேபகரத்தில் கலந்துகொள்ளவில்லை. சொல்லப்போனால் டும் டும் என்று தமிழுக்குத் தயாராகாத ஒரு ஓசை காதுகளை பாடாய்ப்படுத்தி எடுத்தது. தலைவலிக்கு உத்திரவாதமான தீம் மியூசிக் என்ற அவஸ்தையான இசையை முதல் முறை கேட்டபோது எனக்குத் தோன்றியது  "பனி விழும் மலர் வனம் என்ற அற்புதத்தை அளித்த இளையராஜாவா இது?".   படம் பற்றி எழும்பிய பிரமாண்டமான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத எங்கோ எதோ காணாமல் போனது போன்ற பிசிறடிக்கும்  இசையமைப்பு.  கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் நல்ல வார்த்தைகள் கொண்ட அடிதடி. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் தான் எழுதியதிலேயே மிகவும்  பிடித்த பாடல் என வைரமுத்து குறிப்பிடும் பாடல். டிபிக்கல் இளையராஜா எனலாம். காலம் காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்  புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது என்ற பழமொழியை ஞாபகப்படுத்தும் சராசரிப்   பாடல், இசை, குரல்கள், காட்சியமைப்பு என்ற ஒன்றில் கூட சற்றும் அழகுணர்ச்சி துளியளவும் தென்படாத கம்ப்யூட்டர் அபத்தம். ரசிக்க முடியாத வகையில் அதிக அலட்டலுடன் எஸ் பி பி பாடிய பாடல்களில் இதுவும் ஒன்று. சிங்களத்துச் சின்னக் குயிலே பல்லவிக்கும் சரணத்திற்கும் தொடர்பே இல்லாமல்  இரண்டும் முட்டிக்கொண்டு நிற்கும் வழக்கமான இளையராஜா பாடல். வான் மேகம் பூ பூவாய்  தூவும்  ஒரே மாதிரியான வார்ப்பில் வந்த ஏராளமான  இளையராஜாவின் பாடல்களை ஞாபகப்படுத்தும்.  இந்தக் கேட்க சகிக்காத இசையையெல்லாம்   மேற்கத்திய  பாணி என்று முத்திரை குத்தினால்  பராசக்தியின் ஓ ரசிக்கும் சீமானே பாடலை எங்கே வைப்பது? அல்லது சந்ரோதயத்தின் எங்கிருந்தோ ஆசைகள் பாடலை எப்படி வகைப்படுத்துவது? சாந்தியின் யார் அந்த நிலவு பாடலை என்னவென்று சொல்வது ? ஆனால் ஒரே ஒரு பாடல்  அத்தனை பாராட்டுகளையும் வாரிச் சென்றுவிட்டது. என்ன சத்தம் இந்த நேரம் இந்த கம்ப்யூட்டர் தூரிகைகள் கொண்டு வரையப்படாத அல்லது அந்த இயந்திர இரைச்சல்கள் இல்லாத ஒரு மௌனத்தின் இசை.

   வைரமுத்துவினால் இளையராஜா அதீத வெற்றிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டார் என்று எழுதுவது எனது நோக்கமல்ல. அது ஒரு குதர்க்கமான சிந்தனை. உண்மையில் இளையராஜா நூறு படங்களுக்கும் மேலாக இசை அமைத்து பல வணிக வெற்றிகளைப் பெற்று தமிழ்த் திரையிசையில் தன்னை அழுத்தமாக நிரூபித்த பிறகே வைரமுத்து இளையராஜாவுடன் இணைந்தார். இந்த நூறும் வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல. வரவேற்பு, அங்கீகாரம், பாராட்டு, வெற்றி என இளையராஜாவுக்குக் கிடைத்த மாபெரும் மகுடங்கள். அதேபோலே இந்த இருவரின் இணைப்பில் வந்த ஏறக்குறைய 100 படங்களுக்குப் பிறகு தோன்றிய வைரதுமுத்துவுடனான பிரிவுக்குப் பிறகும் இளையராஜா இன்னும் செங்குத்தான உயரங்களுக்குச் சென்றார். எனவே இளையராஜாவின் வணிகப் பாய்ச்சலுக்கு வைரமுத்துவை முன்னிறுத்துவது ஒரு தவறான முகவரி.  ஆனால் அதே நேரத்தில் வைரமுத்துவினால் இளையராஜாவின் பாடல்களுக்குக் கிடைத்த வசீகர வண்ணத்தை மறுப்பதிலும், அவரது தரமான கவிதையினால் இவரது பாடல்கள் பெற்ற வியப்பை அங்கீகரிக்காமல்  கண்களைச் சாய்த்துக் கொண்டு கடந்து செல்வதிலும் எனக்கு உடன்பாடில்லை.  

  இந்தப் பதிவில் நான் வைரமுத்து இளையராஜாவுக்காக இயற்றிய பாடல்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். இது தவிர அவர் சங்கர் கணேஷ், எம் எஸ் வி, சந்திரபோஸ் சிவாஜிராஜா (ஒரே படம்) , ஹம்சலேகா, போன்றோருக்கு  எழுதிய பாடல்களை கணக்கில் கொள்ளவில்லை. 

   புன்னகை மன்னன் படத்திற்குப் பிறகு இந்த இருவரும் பிரிந்தார்கள்- மீண்டும் ஒன்றாக முடியாத அளவுக்கு அவர்களுக்கிடையேயான தூரம் அதிகரித்தது. பல காரணங்கள் இதற்கு சொல்லபடுகின்றன. கீழே இருப்பது ஒரு பதிவர் எழுதியிருப்பது. எதேச்சையாக காணக் கிடைத்தது. 


எந்த அளவு உண்மை என்பது எனக்கு இன்னமும் புரியவில்லை..!!!
இளையராஜா வைரமுத்து பிரிவுக்கு என்ன காரணம்?
என்று நிறைய நண்பர்கள் கேட்க நாங்கள் ஆராயந்ததில் எங்களுக்கு கிடைத்த சில தகவல் உங்களுக்காக. ஈகோ பிரச்சனையா? கொஞ்சம் அலசித்தான் பார்க்கலாமே!

இளையராஜாவின் இசையில் தொடர்ந்து பல பாடல்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பு என பிஸியாக சென்று கொண்டிருந்த இந்த பயனத்தில் விரிசல் விழத்தொடங்கியது;

வைரமுத்து பிற இசையமைப்பாளர்களின் படங்களுக்கும் அதிகமாக எழுத்தொடங்கிய போதுதான். அதுவரை ஒலிப்பதிவின் போது சரியான நேரத்திற்கு வந்து தேவைப்பட்ட நேரத்தில் பாடல்வரிகளின் திருத்தத்திற்கு பெரும் உதவியாக இருந்த வைரமுத்துவால் சரியாக ஒலிப்பதிவிற்கு வரமுடியாமல் போனதால் உரசல் உண்டாகி அது நாளடைவில் ஒருவரை ஒருவர் சமயம் கிடைக்கும் போது தாக்கிக்கொள்ளும் அளவிற்கு பெரியதாகியது.

அடுத்ததாக பாடல் வரிகளில் இளையராஜா தலையிட்டு மாற்றச்சொல்வது; அந்த விரிசலை மேலும் பெரியதாக்கியது.

உதாரணமாக “சிந்து பைரவியில்” வைரமுத்து எழுதிய பல்லவியை மாற்றிவிட்டு கிராமிய பாடலில் இருந்து இளையராஜா எடுத்து போட்ட பல்லவிதான் “பாடறியேன் படிப்பறியேன்” என்ற பல்லவி. இந்த கிராமிய பாடலின் பல்லவியை “புதிய வார்ப்புகள்” படத்திலும் நீங்கள் கேட்கலாம்.

விரிசல் பெரிசாக பெரிசாக ஒருவர் பலவீனத்தை இன்னொருவர் இனம் கண்டு தாக்க அது மனஸ்தாபமாய் உருவெடுத்தது, உதாரணமாக வைரமுத்துவிற்கு எப்போதுமே ஒரு படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் தானே எழுதவேண்டும் (படத்தின் கேஸ்ட்/ரெக்கார்டில் போட்டோ, டைட்டில் கார்டு, போஸ்டர் விளம்பரத்தில் தனித்து தெரிவது) என்பது விருப்பமாய் இருக்கும். இதை அவரே பலமுறை தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் தாய்க்கொரு தாலாட்டு படத்திற்கு முழுப்பாடலையும் எழுத வைரமுத்து ஒப்பந்தமாகிறார் பாடல்கள் எல்லாம் ஒலிப்பதிவாகி படமாக்கப்பட்ட பின்னர்; ரீ-ரெக்கார்டிங்கின் போது மேலும் ஒரு பாடலை சேர்த்து அதை கவிஞர் வாலியை வைத்து எழுதச்சொல்லி; பாடல்கள் – வைரமுத்து என்ற டைட்டில் கார்டை பாடல்கள் – வாலி,வைரமுத்து (ஒரு பாட்டு எழுதினாலும் வாலி சீனியர் ஆச்சே வாலி பெயர்தானே முதலில் வரவேண்டும்) என்று மாற்றுகிறார் இளையராஜா. இளையராஜா இவ்வாறு நடந்து கொள்ள என்ன காரணம்? இந்த படத்தின் பாடல் கம்போஸிங்கின் போது “இளமைக்காலம் – என்ற புதியபறவை” பாடல் ரீமிக்ஸின் வரிகளில் “பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை” என்று வரிகளில் வைரமுத்து வார்த்தை ஜாலம் புரிந்து இளையராஜாவை கோபப்படுத்தியதே காரணம்.

இதே போல்தான் சிந்துபைரவி டைட்டில் கார்டிலும் பிரச்சனை; “தென்றலது கண்டதுண்டு திங்களது கண்டதில்லை, மனம்தான் பார்வை” என்ற வாலி எழுதிய இரண்டு வரிகளுக்காக, வாலியின் பெயரை தியாகராஜசுவாமிகள், பாரதியார், ஆகியோருடன் சேர்த்து ஒரு டைட்டில் கார்டுடாகவும், பாடல்கள் – வைரமுத்து என்று வைரமுத்திற்கு தனி டைட்டில் கார்டு போட்டு பிரச்சனையை பாலச்சந்தர் சமாளித்திருப்பார்.

கடைசியாக இவை எல்லாம் சேர்ந்து ஒரு நாள் “இசை பாடும் தென்றல்” படப்பாடல் கம்போஸிங்கின் போது மோதலாக வெடித்தது. “எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது” பாடலுக்கு வரியை எழுதி வைரமுத்து இளையராஜாவிடம் காட்ட, “என்னய்யா பாட்டு எழுதச்சொன்னா, உரைநடை எழுதியிருக்க? இப்ப பாரு நான் எழுதுறேன்” என்று தான் எழுதிய பாடலை இளையராஜா வைரமுத்துவிடம் காண்பிக்க, வைரமுத்து “prose மாதிரி இருக்கு” என்று கூறிவிட்டு கோபமாக அந்த அறையில் இருந்து உடனடியாக வெளியேறிவிட்டார். அதன் பின்னர் எத்தனையோ போர் எவ்வளோவிதமாக சமாதானம் செய்தும் பலனேதும் இல்லை.

இப்போது கூறுங்கள் இளையராஜா வைரமுத்து பிரிவுக்கு என்ன காரணம்?


        ஒரு உறைக்குள் இரண்டு கத்திகள் இருக்க முடியாது என்று வழக்கமாக சொல்லப்படுவதுபோல இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும்  இடையே உருவான ஆளுமை யுத்தம் அவர்களின் நிழல் நட்பை கொஞ்சம் கொஞ்சமாக தின்று தீர்த்தது. முடிவாக நண்பர்கள் என்று அறியப்பட்டவர்கள் இரு துருவங்களாக மீண்டும் இணைய முடியாத வெவ்வேறு தூரங்களை அடைந்தார்கள். ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரிவு என்ற புனைவு அதிக நாட்கள் நீடிக்கவில்லை. இளையராஜா தொடர்ந்து  தன் நீண்ட நாள் நண்பன் என்று சொல்லிக்கொள்ளும் பாரதிராஜாவுடனான நட்பையும் முறித்துக்கொண்டு தன் ஆளுமையின் அடுத்த பரிமாணத்திற்கு பயணித்தார். அதோடு நில்லாமல் கே பாலச்சந்தரின் நான்கு படங்களுக்கு இசை அமைத்த பின் அவருடைய மகா ஆளுமை விழித்துக்கொள்ள அங்கேயும் வெடித்தது இதே யுத்தம்.  இளையராஜாவின் அபிமான இயக்குனர்கள் என்றறியப்பட்ட பாலு மகேந்திரா, மணி ரத்னம் இருவரும் மட்டுமே இந்த ஈகோ அலையில் மாட்டிக் கொள்ளாதிருந்தார்கள். அதுவும் தளபதிக்குப் பிறகு இளையராஜா- மணி ரத்னம் ஒரு கடந்து போன நிகழ்வானது. அதன் பின் ஏற்பட்டது மணிரத்னம்- எ ஆர் ரஹ்மான் என்ற வரலாறு. 

    இப்போது இளையராஜா முட்டி மோதிக்கொண்டு பிரிந்து சென்ற கவிஞர், இயக்குனர்கள் பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் அவரது ரசிகர்கள் தங்கள் குற்ற விரல்களை நீட்டுவது வைரமுத்து, பாரதிராஜா, பாலச்சந்தர், மணிரத்னம் இருக்கும் திசையை நோக்கியே. இது அவர்களுக்கு மிகச் சுலபமாக வாய்த்திருக்கும் சப்பைக்கட்டு.  இவரிடம் முறைத்துக்கொண்டு அவர்கள் சென்றதாகவும், இவருக்கு அவர்கள் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாகவும் வித விதமாக தங்கள் அபிமானவரை பாதுகாக்கும் பணியைச் செய்கிறார்கள். அதில் தென்படும்  பதற்றமே அவர்களின் கையறு நிலையின் உச்சமான சான்று. ஒரு வாதத்திற்காக மேலே குறிப்பிட்ட அனைவரும் இளையராஜாவுக்கு எதிராக சதி செய்து, நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்கள் என்று வைத்துகொண்டால் சில அடிப்படையான கேள்விகளுக்கு இதே ராஜா ரசிகர்கள் பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் மாட்டிக்கொள்கிறார்கள். 

     தான் அறிமுகம் செய்த அபாரமான இசைஞரான வி குமாரை கை விட்டு  எம் எஸ் வி என தாவி, பற்பல சாகா வரம் பெற்ற கானங்களை அவரின் விரலசைவினில் பெற்றுக்கொண்டு   பிறகு அவரையும் துறந்து  கே பாலச்சந்தர் சிந்து பைரவிக்காக இளையராஜா வீட்டுக் கதவைத் தட்டியபோதும், தன் படங்களுக்கு எத்தனை காவியமான பாடல்களை அளித்திருந்தாலும், வணிக வெற்றியின் பால் ஈர்கப்பட்டு ஒரு பலவீனமான கட்டத்தில் இயக்குனர் ஸ்ரீதர் இளமை ஊஞ்சலாடுகிறது படத்திற்காக இளையராஜாவை அணுகிய போதும், கே வி மகாதேவன் மட்டுமே இசை அமைத்து வந்த தேவர் பிலிம்ஸின் ஆஸ்தான இசைஞராக அவருக்குப் பின் மாறிய ஷங்கர் கணேஷை ஒதுக்கி விட்டு அன்னை ஓர் ஆலயம் படத்திற்காக தேவர் பிலிம்ஸார் இளையராஜாவிடம் ஒதுங்கியபோதும், கே வி மகாதேவன், எம் எஸ் விஸ்வநாதன் என்று வரிசை கட்டி வந்த படங்களைத் தந்த தமிழின் தொன்மையான ஏ வி எம் நிறுவனம் எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு 80இல் தயாரித்த முரட்டுக்காளை படத்திற்கு இளையராஜாவை ஒப்பந்தம் செய்தபோதும்  இதே நம்பிக்கை துரோகம் என்ற சொல் எந்த நிலத்தின் கீழே ஒரு விதையாக உறங்கிக்கொண்டிருந்தது என்று தெரியவில்லை.

    இளையராஜாவின் இசை அவர்களை தன் பால் ஈர்த்தது என்றொரு அபத்தமான காரணம் கொண்டு இந்த "மேன்மையான நம்பிக்கை துரோகங்களை" புதைத்து விட்டால், அதே காரணம்  இளையராஜாவை விட்டு பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் விலகிச் சென்றதையும் நியாயப்படுத்தும்.  ஆனால் இந்த சுடும் நிஜத்தை ஏற்றுக்கொள்வதில் மட்டும் சில கடினமான ரசிக நெஞ்சங்கள் வறட்டுப்  பிடிவாதம் காட்டுகின்றன. அந்தந்த காலகட்டத்தின்  முரட்டு அலைகளில் கலங்காமல் பயணம் செய்த இசைப்படகுகளின் மாலுமிகளை   வணிக நோக்கத்திற்காக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் நாடிச் செல்வது இயல்பான ஒன்று. இதில் ஒருவருக்கு நடந்ததை மட்டும் வினோத  புலனாய்வு செய்து, புனைவுகளைக் கலந்து  சதிச் சுவர்கள் எழுப்புவது உண்மைகளை உள்வாங்கிக் கொள்ள முடியாத இயலாமைதான். வேறென்ன சொல்வது?  ஆனால் உண்மை பல மாளிகைகளை எழுப்பியதுபோலவே அவற்றை சாய்த்துவிட்டு தன் பாதையில் அடுத்தடுத்த அஸ்திவாரங்களை அமைத்துச் சென்று கொண்டிருக்கிறது. சில வீடுகள், சில கட்டிடங்கள், சில மாளிகைகள், சில கோயில்கள் என காலம் அவற்றை வடிவமைக்கிறது. 

    80கள் தமிழிசையின் பொற்காலம் என்ற வேடிக்கையான  பொய்யைப் போன்று சிலரின் பார்வைகளில் எப்போதும்  இளையராஜா ஒருவரே  தென்படுகிறார்.  அதில் தவறேதுமில்லை. ஆனால் அவர்கள் தாங்கள் காணும் காட்சியை  மற்றவர்களுக்கும் ஒரு கோட்பாடாக நிறுவுவதில்தான் கோளாறுகள் உள்ளன. பரிதாபத்திற்குரிய பார்வை. எல்லோருக்கும் ஒரே இலக்குத்தான் குறிக்கோளாக இருக்கவேண்டுமா?

    எல்லா மரங்களும் ஒரே அளவில் ஒரே வடிவில் ஒரே நிறத்தில் ஒரே உயரத்தில் ஒரே பூக்களோடு ஒரே நறுமணத்துடன் இருந்தால் அது காடு இல்லை. இசையின் முகமே இவர்தான் என்று ஒரே ஒருவரை சுட்டிக்காட்டினால் அது உண்மையல்ல. எல்லாமே இளையராஜாவாக இருக்கவேண்டிய அந்த  மாயக் கண்ணாடிகள் ஆலிஸ் விழுந்த முயல் துளையின் கனவுலகில் மட்டுமே சாத்தியம்.









         


  அடுத்து : இசை விரும்பிகள் Exclusive 2 ​ நிசப்தமான நிஜங்கள் .
   
          







41 comments:

  1. வசந்தங்கள் வடிந்தன .வழக்கம் போலவே வஞ்சப்புகழ்ச்சியாகவே உள்ளது

    ReplyDelete
    Replies
    1. அருள் ஜீவா, இதெல்லாம் உங்களுடைய கற்பனை.

      Delete
    2. சத்தியமான வார்த்தைகள்

      Delete
  2. மிகவும் அருமையான பகிர்வு... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி திரு பரிவை சேகர்.

      Delete
  3. மெலடி என்றால் என்ன விலை என்று கேட்கும் சாரீரம் மலேசியா வாசுதேவனுடையது .இது அபத்தமாக இல்லை .காரிகன் எப்போதும் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதைக் கொள்கையாக கொண்டுள்ளீர்களோ .தங்களைப் பெரிதும் கவரந்ததாக குறிப்பிட்டுள்ள முதல் மரியாதை படத்தில் வரும் பூங்காற்று திரும்புமா எனும் பாடல் மெலடியல்லாது டப்பாங்கூத்து பாடலாக தெரிகிறதா ? அறபதுகளில் எம் .எஸ் .வி -ராம மூர்த்தி இவர்களால் இசை உச்சத்தை அடைந்தது .மறுப்பதற்கில்லை தான் .ஆனால் அடுத்த இருபதாண்டைக் கடந்து இசை உச்சம் தொட்டது சூரியன் மறைந்த பின்பு ஏற்றப்படும் மின் விளக்குகளைப் போல போலியானது என்பதை ஏற்பதற்கில்லை .உங்கள் கூற்றுப்படி பார்த்தால் தொண்ணூறுகளில் உச்சம் தொட்ட ஏ.ஆர் .ரஹ்மான் இசை எப்போதோ ,எங்கேயோ தோன்றும் மின்மினியின் வெளிச்சம் போன்றதா? வைரமுத்துவால் தான் இளையராஜாவின் இசை வசந்தம் வீசியது என்றும் வைரமுத்துவை நீங்கிய பின் வடிந்ததாகவும் வார்த்தைகளில் வர்ணஜாலம் காட்டியிருக்கிறீர்கள் .பார்க்க பரவசம் ஊட்டும் அலங்கார விளக்குகளுக்கு மின்சாரம் இல்லையெனில் என்ன பயன் ?ஒளிரும் மின்சாரம் போல வசீகரிக்கும் வார்த்தைகளுக்கு உயிர் கொடுப்பது இசையல்லவா .(எம் .எஸ் .வி .தொட்டு இன்றைய இசையமைப்பாளர்கள் வரை இது பொருந்தும் )

    ReplyDelete
    Replies
    1. ----வைரமுத்துவால் தான் இளையராஜாவின் இசை வசந்தம் வீசியது என்றும் வைரமுத்துவை நீங்கிய பின் வடிந்ததாகவும் வார்த்தைகளில் வர்ணஜாலம் காட்டியிருக்கிறீர்கள் .----

      நன்றி. நான் சொல்ல வந்த கருத்தை மிகச் சரியாக கண்டுபிடித்து அதற்கு அழகான பொழிப்புரை வேறு கொடுத்துள்ளீர்கள். வர்ண ஜாலம் கிடையாது. உண்மையே. வைரமுத்து போன பிறகு இரா வின் இசையில் கவிதை என்ற வஸ்துவை எப்போவாவதுதான் கேட்க முடிந்தது.

      மலேஷியா வாசுதேவன் குறித்த விமர்சனம் எனது தனிப்பட்ட கருத்து. அதில் உங்கள் மூக்கை நுழைத்து இப்படி எழுதுங்கள் என்று எனக்கு ஆலோசனை வழங்குவதெல்லாம் வீண் வேலை. உங்களுக்கு அவரைப் பிடித்திருந்தால் அது உங்கள் விருப்பம். எனக்குப் பிடிக்காது. அவர் பாடிய சில பாடல்கள் பரவாயில்லை. அதில் ஒன்று தான் அந்த பூங்காத்து திரும்புமா? இது போதும் என்று நினைக்கிறேன்.

      இரா தொட்ட உச்சம் போலி வெளிச்சம்தான். உடனே எ ஆர் ரஹ்மானை இங்கே இழுத்து வருவது ரஜினியைப் பற்றி பேசினால் கமலை கட்டம் கட்டும் வழக்கமான சிறுபிள்ளைத்தனமான யுத்தி. கொஞ்சம் வளருங்கள்.

      Delete
    2. You shared one article with raja poster before cinema about annakili songs made with some other person as folk songs...can u pls share

      Delete
  4. ஹலோ காரிகன்

    நல்ல பதிவு . உங்கள் மனதில் பட்டதைச் சொல்லியிருக்கிறீர்கள் . அதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் ' அடடா.... பிரமாதம்... அசத்திட்டேல் போங்கோ ' வகையறாக்கள் வந்து விட்டு போகட்டும் . பிறகு நிதானமாக உங்களிடம் இந்தப் பதிவு பற்றி பேசுகிறேன் .

    ReplyDelete
    Replies
    1. வாங்க சால்ஸ்,

      இன்னும் பதிவையே நீங்கள் படிக்கவில்லை என்று தெரிகிறது. அதற்காக என்னைப் பாராட்டுபவர்களை ஏன் இத்தனை வன்மத்தோடு விமர்சனம் செய்கிறீர்கள்? இதற்குப் பெயர்தான் கீழிறங்கி விளையாடுவது போலும்.

      Delete
    2. Sir
      I am reading your articles but ஏன் ராஜாவின் மீது இப்படி ஒரு காழ்ப்புணர்ச்சி?அவரே சொல்லிட்டாருள்ள இது அண்ணா(msv) போட்ட பிச்சைன்னு...உட்டுருங்களேன்...ராஜாவுக்கு உங்ஙcomments பத்தி கவரை எல்லா....ரசிகர்கள் நாங்க வருத்தப்படுகிறோம்

      Delete
  5. Nice Article... Better you could have avoid the Ilayaraja Vairamuthu clash...

    ReplyDelete
    Replies
    1. Sorry, I couldn't have avoided that IR-VM split. It's only natural not intentional.

      Delete
    2. As you have stated already in your blog about Raja, ( I have read the same in some other blogs also) his original achievement is.. the music belongs to only a particular category ( I don't want to mention the caste) at one period. he comes from a very low category and achieved it.. not slightly but strongly.. that's the only achievement that he made which is not a easy thing also... Here people are fighting and arguing for some other things.

      Delete
  6. காரிகன், உண்மையிலேயே பிரமாதம்தான். ஏதோ சரியாக எழுதியவர்களைப் புகழ்ந்தாலேயே அவர்களெல்லாம் 'வகையறாக்கள்' வரிசையில் வந்துவிடுவதாகவும் அவர்களுடைய தப்பாட்டம் எல்லாம் நடைபெற்று முடிந்தபிறகு தம்முடைய காவிய வரிகளை இங்கே எழுதப்போவதாகவும் சார்லஸ் சொல்லியிருக்கிறார்.
    பிறரைப் பற்றிய அதீதக் கற்பனையுடன் இருந்தாலாவது கொஞ்சம் சகித்துக் கொள்ளலாம். தம்மைப் பற்றியே பெர்னார்ட்ஷா அளவுக்கு நினைத்துக்கொண்டிருப்பவரைப் பற்றி என்ன சொல்ல முடியும்?
    உண்மையில் இ.ராவைப் பற்றி அவருடைய 'திருவடி தொழும் சகாக்கள்' இத்தனை அழகாக சிலாகித்து எழுதியிருக்கிறார்களா என்பது தெரியவில்லை. 'நல்ல ஒரு ரசிகனின் கள்ளங்கபடு இல்லாத இசைப்பார்வை' என்ற வகையிலேயே இதனை நான் புரிந்துகொள்கிறேன்.
    உண்மையில் எனக்கு நீங்கள் புகழ்ந்து குறிப்பிடும் பாடல்களில் பாதிக்கு மேல் தெரியாது. நான் கேட்டதில்லை. என்னைப் பொறுத்தவரை புகழ்பெற்ற பாடல்கள் என்றால் நாம் தேடிச்செல்லாதபோதிலும் நம்மை வந்து அடையவேண்டும். அதுதான் 'புகழ்பெற்ற பாடல்களுக்கான' அடையாளம். அந்தவகையில் பல பாடல்கள் எனக்கு அறிமுகமில்லாதவை. அதற்காக அவை நன்றாக இல்லையென்று நான் சொல்லத் தயாரில்லை.
    வைரமுத்து இளையராஜா காம்பினேஷன் ஒரு வெற்றிக்கூட்டணி என்று எதிர்பார்க்கப்பட்ட கூட்டணி. நான் ஏற்கெனவே சொல்லியிருப்பதுபோல் வைரமுத்துவுக்காவது இளையராஜா விலகலுக்கு அடுத்து ஒரு ரஹ்மான் கிடைத்தார். இ.ராவுக்குத்தான் கடைசிவரை இன்னொரு வைரமுத்து கிடைக்கவே இல்லை.
    அவர்கள் பிரிவுக்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் காரணங்களும் இருக்கலாம்.
    உன்னைநான் சந்தித்தேன்- படத்தில்வரும் 'தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம்' பாடல் கண்ணதாசன் எழுதி இளையராஜாவால் வேறு படத்திற்கு இசையமைக்கப்பட்டு ஏதோ காரணங்களால் அந்தப் படத்தில் இடம்பெறாமல் போய்விட்ட பாடல். அந்தப் பாடல் இளையராஜாவின் வசத்திலேயே இருந்ததாம். கவிஞரின் மறைவுக்குப் பின்னர் அந்தப் பாடலை ரங்கராஜ் டைரக்ஷனில் வந்த உன்னைநான் சந்தித்தேன் படத்திற்கான படப்பிடிப்பின்போது இ.ராவின் வேறு பாடலுக்காக படப்பிடிப்புக் குழுவினர் காத்திருந்தபோது இந்தப் பாடலை அனுப்பிவைத்து "உங்களுக்கு இந்தப் பாடல் பிடித்திருந்தால் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கான பர்மிஷனை நான் சம்பந்தப்பட்டவர்களிடம் வாங்கிவிடுகிறேன்" என்று போனில் சொன்னார் இ.ரா. கண்ணதாசனுடைய பாடல் என்பதால் உடனடியாக அந்தப் பாடலுக்கு ஓகே சொல்லப்பட்டு அடுத்த நாளே படப்பிடிப்பும் ஆரம்பிக்கப்பட்டது. (அப்போது நான் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தேன். ஊட்டியா அல்லது கோடைக்கானலா என்பது சரியாக நினைவில்லை)
    உங்களின் இசைப்பயணம் சரியான திசையிலேயே சென்றுகொண்டிருக்கிறது. தொடர்ந்து செல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அமுதவன்,

      வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. ஏற்கனவே இந்தப் பதிவு முக்கால்வாசி முடிந்த நிலையில்தான் எம் எஸ் வி யின் இறப்பு நிகழ்ந்தது. உடனே அவரைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றினாலும் நிறைய எழுத இருப்பதால் அந்தப் பதிவை சற்று தள்ளி வைத்துள்ளேன். முதலில் இந்தப் பதிவுக்கு விருந்து தொடர்கிறது என தலைப்பிட்டிருந்தேன். ஆனால் அது இப்போதைய சூழலில் பொருத்தமாக இல்லை. எனவே எம் எஸ் வி யின் இறப்பை குறிக்கும் வகையில் வசந்தங்கள் வடிந்தன என மாற்றி இருக்கிறேன்.

      இராவை நான் பாராட்டி எழுதுவதை இராவாசிகள் கண்டிப்பாக நியாயமான கண்ணோட்டத்தோடு விமர்சிக்க மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் எழுதிய அத்தனை வார்த்தைகளும் நான் உணர்ந்து எழுதியவைகள். என் சிறுவயதில் இராவின் பாடல்கள் எனக்குள் செலுத்திய பரவசத்தின் விளைவே அந்தப் பாராட்டு. பிற்பாடு எனக்கு அவர் இசை பிடிக்காமல் போனதால் அவரைப் பிடித்திருந்த காலகட்டங்கள் கானல் நீராகி விட வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

      நீங்கள் சொல்வதுபோல பலர் இராவின் பல பாடல்களை அப்போது கேட்டதில்லைதான். அப்படி ஒரு பாட்டு இருக்கா என்று என்னை கேட்ட நண்பர்கள் பலர் உண்டு. அவருடைய டப்பாங்குத்து அதிரடி பாடல்களே அதிகம் விலை போனது. சில மெலடிகள் வந்ததுமே போய்ச் சேர்ந்துவிட்டன.

      தேவன் தந்த வீணை பாடல் பற்றி ஏற்கனவே ஒரு முறை நீங்கள் எனக்கு பின்னூட்டம் ஒன்றில் எழுதிய நினைவு இருக்கிறது. இதைப் படித்ததும்தான் அது தோன்றியது. இல்லாவிட்டால் அதை குறிப்பிட்டிருப்பேன். இதுபோல நான் குறிப்பிட்டதில் இன்னும் சில பாடல்கள் வைரமுத்து இயற்றியது அல்ல என்று நினைக்கிறேன்.

      வைரமுத்து போனதும் இரா தாக்குப் பிடித்து சாதித்தார். உண்மைதான். ஆனால் சில காலம் கடந்து வைரமுத்து மீண்டும் வந்தார். இந்த மீண்டது இராவுக்கு நிகழவில்லை என்பதுதான் சோகம்.

      Delete
  7. ஹலோ காரிகன்

    என்னுடைய வார்த்தைகள் இந்த அளவுக்கு கோபத்தை ஏற்படுத்துமா என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை . பெர்னாட்ஷா ரேஞ்சுக்கு என்னை பேசியிருக்கும் நண்பர் ஏன் இவ்வளவு கோபப்பட வேண்டும் ? எல்லாப் பதிவுகளிலும் 100 % உண்மையிருக்காது என்பதுதான் உண்மை. அதைதான் நான் சொல்ல வருகிறேன் .

    காரிகன் இளையராஜா ரசிகர்கள் கூட எழுத முடியாத அளவிற்கு சிறப்பாக எழுதிவிட்டதாக நண்பர் கூறியிருக்கிறார் . இளையராஜா பற்றிய நிறைய பதிவுகளை அவர் வாசித்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. காரிகனுக்கு மேல் பிச்சு உதறியவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். காரிகனுக்கு மேலோட்டமாக கேட்டு அலங்கார வார்த்தைகளால் வர்ணம் பூசி எழுதும் பாங்குதான் பெரும்பாலும் கை கூடி வரும் . உள் வாங்கி உள்ளே போய் ஆழமாக ஆராய்ந்து வேர்களைக் கூட விசாரித்து எழுதக் கூடிய பதிவர்கள் இருக்கிறார்கள் . நண்பருக்கு ராஜாவை பிடிக்காது . அதனால் அந்தப் பதிவுகளை எல்லாம் வாசித்திருக்க மாட்டார்.

    வைரமுத்து முளைத்திருக்காவிட்டாலும் இளையராஜா உச்சத்திற்கு போய்தான் இருந்திருப்பார். ஆனால் இளையராஜா இல்லையென்றால் வைரமுத்து வெளிச்சத்திற்கு வந்திருக்க மாட்டார். வைரமுத்து பிரிவிற்குப் பிறகு ராஜாவின் ஓட்டம் நின்று போனது போன்ற பிரமையை நீங்கள் எல்லோரது எண்ணங்களிலும் புகுத்தப் பார்க்கிறீர்கள். அது தவறு என சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

    மலேசியா வாசுதேவன் குரல் மீது உங்களுக்கு ஏற்படும் தனிப்பட்ட வன்மத்தை பொதுவில் வைத்துப் பேசுவது நாகரீகமல்ல . மலேசியா வாசுதேவன் ஒரு சிறந்த பாடகர் . அவர் குரலுக்கு சில பாடல்களில் மென்மையும் சில பாடல்களில் கம்பீரமும் இருக்கும் .

    இது போன்ற நீங்கள் சொன்ன உண்மைக்கு மாறான செய்திகளை மறுக்கத்தான் பிறகு வருகிறேன் என்று சொன்னேன். அதற்குள் சிலர் குதிக்கிறார்களே?

    ReplyDelete
    Replies
    1. சால்ஸ்,

      நீங்கள் உங்கள் சகாக்களின் பாணியில் தனி மனித தாக்குதலில் ஈடுபட விரும்புகிறீர்கள் போலும். உங்கள் எழுத்தில் அது அழுத்தமாகவே தெரிகிறது. நீங்கள் குறிப்பிடும் அந்த நண்பர் உங்களுக்கும் தெரிந்தவர்தான். அவருடைய பதிவுகள் எல்லாவற்றிற்கும் நீங்கள் பதவிசாகவே பாராட்டி பின்னூட்ட்டம் எழுதியும் வருகிறீர்கள். பின் இங்கே மட்டும் ஏன் இந்த திடீர் நண்பர் என்கிற அலட்சியத் தோரணை?

      உங்கள் வார்த்தைகள் யாரையும் கோபப்படுத்தவில்லை. உங்களின் அறியாமையை அமுதவன் அடிக் கோட்டிட்டு காட்டியிருக்கிறார். அவ்வளவுதான்.உங்கள் தளத்தில் என்னைத் தாக்கி எழுதும் உங்களின் சகாக்களின் செய்கையை நீங்கள் ஒரு சக பதிவர் என்ற அளவில் கூட மறுத்து எதுவும் சொல்வதில்லை. உங்களுக்கு அவர்கள் எழுதும் அந்த வன்மம் திருப்தியாக இருக்கிறது என்று எடுத்துக்கொள்கிறேன். நான் தலையிடுவதில்லை. ஏனென்றால் அது உங்கள் தளம். ஆனால் இங்கே என்னைப் பாராட்ட வரும் நண்பர்களை ஏக வசனத்தில் ஏசுவது மனப் பக்குவமில்லாத போக்கு. சற்று முதிர்ச்சியோடு எழுதுங்கள்.

      நீங்கள் இன்னும் என் பதிவை படிக்கவில்லை. ஆனால் சண்டைக்கு மட்டும் தயாராகி விட்டீர்கள்.
      ------காரிகனுக்கு மேல் பிச்சு உதறியவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். காரிகனுக்கு மேலோட்டமாக கேட்டு அலங்கார வார்த்தைகளால் வர்ணம் பூசி எழுதும் பாங்குதான் பெரும்பாலும் கை கூடி வரும் . உள் வாங்கி உள்ளே போய் ஆழமாக ஆராய்ந்து வேர்களைக் கூட விசாரித்து எழுதக் கூடிய பதிவர்கள் இருக்கிறார்கள் .-------

      "இரண்டாம் சரணத்தின் 3;14 ஆம் வினாடியில் ஒரு புல்லாங்குழல் அப்படியே உச்சத்துக்குப் போய் பிறகு 4:45 இல் ஒரு பேஸ் கிடார் எழும்பி கிறங்க அடிக்கும்" வகையான எழுத்துக்களை சொல்கிறீர்கள் போல. உங்கள் எழுத்தில் தென்படும் வன்மம் ஏனென்று தெரியவில்லை. அமுதவன் சொல்வதுபோல நீங்கள் ஒரு நார்சிஸ்ட்டாக மாறி விட்டீர்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. எனக்கு என் எழுத்து. மற்றவர்கள் எழுதுவது போல நான் எதற்காக எழுத வேண்டும்?

      வைரமுத்துவுக்குப் பிறகு இளையராஜாவின் பாடல்களில் தரம் செங்குத்தாக கீழிறங்கியது. இதை அவரது ரசிகர்கள் "எங்க ஆளுக்கு கவிதையே தேவையில்லை" என்று சொல்லி சமாளித்து வருவது உங்களுக்குத் தெரியாதா? மலேஷியா வாசுவை நான் எதற்காக விரும்பவேண்டும்? எனக்கு அவர் குரல் அலர்ஜி. கேட்க சகிக்காது. நான் என் எண்ணத்தை மாற்றிக்கொள்ள எந்த ஆலோசனையும் தேவையில்லை என்று நினைக்கிறேன். எ ஆர் ரஹ்மான் பணம் கொடுத்து ஆஸ்கார் வாங்கியதாக நீங்கள் எழுதியபோது நீங்கள் குறிப்பிடும் அந்த நாகரீகம் எங்கே போயிருந்தது? சூப்பர் சிங்கர் நிகழ்சிகளை வைத்துக்கொண்டு அதன் மூலமே பாடல்கள் பற்றி ஒரு பொதுவான அபிப்ராயத்தை உருவாக்கிக்கொள்ளும் உங்கள் பார்வை அபத்தமானது.

      ---இது போன்ற நீங்கள் சொன்ன உண்மைக்கு மாறான செய்திகளை மறுக்கத்தான் பிறகு வருகிறேன் என்று சொன்னேன். அதற்குள் சிலர் குதிக்கிறார்களே?----

      முதலில் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை நிதானமாக படியுங்கள். ஏனென்றால் அப்போதுதான் எதை மறுக்கலாம் என்று முடிவுசெய்ய இயலும். என் தளத்தில் ஒரு வீண் வாதம் அதுவும் இராவாசிகளின் தரத்தில் போடப்படும் சண்டைகளுக்கு அனுமதி கிடையாது. மீண்டும் வரும்போதாவது கொஞ்சம் பக்குவப்பட்ட எழுத்துடன் வாருங்கள். கருத்துகளை மட்டும் விவாதிப்போம். ஆட்களை அல்ல.

      Delete
  8. மிக நல்ல பதிவு....நண்பரே! முதலில் சில சமயம் என்பதை விட பல சமயங்களில் பாடலைக் கேட்கும் போது மெட்டு ஈர்த்துவிட்டால் உடனே அந்தப் பாடல் எது என்று பார்த்து வரிகளைத் தேடத் தொடங்கி வரிகள் நன்றாக இருந்தால் ரசிக்க முடிகின்றது. சில சமயம் மெட்டு நன்றாக இல்லை என்றால் வரிகள் நன்றாக இருந்தால் கூட மறைந்து விடுகின்றது....நாம் கூர்ந்து கவனித்தால் மட்டுமே வரிகளை, மெட்டுகள் கடந்தும் சுவைக்க முடிகின்றது. இரண்டும் கை கோர்த்தால் வெற்றி அடைகின்றது. குறிப்பாக மெல்லிசை மன்னர்-கண்ணதாசன் ....அதன் பிறகான இரண்டும் கை கோர்ப்பு என்பது அந்த அளவிற்கு இருப்பதாகத் தெரியவில்லை...ஒரு வேளை எங்கள் ஞானம் அந்த அளவிற்கு இல்லை எனலாம்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன்,

      நல்ல கருத்து. வருகைக்கு நன்றி.

      மெட்டும் வரியும் சேர்ந்து படைப்பதுதான் நல்ல பாடல். எம் எஸ் வி யின் இசையில் இது இரண்டுமே நேர்த்தியான அழகுடன் மிளிர்ந்தன. அடுத்து வந்தவரின் இசையில் இரண்டும் மோதிக் கொண்டு ஒரு புதிய தரங்கெட்ட இசை பாணிக்கு அடிகோலியது.

      Delete
    2. தரம்கெட்ட என்ற உங்கள் வார்த்தை தவறு.காழ்ப்ப.புணர்ச்சிக்கு இசையில் இடமில்லை

      Delete
    3. தரம்கெட்ட என்ற உங்கள் வார்த்தை தவறு.காழ்ப்ப.புணர்ச்சிக்கு இசையில் இடமில்லை

      Delete
  9. காரிகன்
    ///இராவை நான் பாராட்டி எழுதுவதை இராவாசிகள் கண்டிப்பாக நியாயமான கண்ணோட்டத்தோடு விமர்சிக்க மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் எழுதிய அத்தனை வார்த்தைகளும் நான் உணர்ந்து எழுதியவைகள். என் சிறுவயதில் இராவின் பாடல்கள் எனக்குள் செலுத்திய பரவசத்தின் விளைவே அந்தப் பாராட்டு. பிற்பாடு எனக்கு அவர் இசை பிடிக்காமல் போனதால் அவரைப் பிடித்திருந்த காலகட்டங்கள் கானல் நீராகி விட வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ///

    அதாவது வைரமுத்து பிரிந்துவிட்ட பிறகு இளையராஜாவின் பாடல்கள் உங்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது . அது உங்களின் தனிப்பட்ட விருப்பம் . தர்க்க ரீதியாகவோ அல்லது வர்க்க ரீதியாகவோ நீங்கள் இளையராஜாவின் இசையின் மேல் எடுத்திருக்கும் வன்மத்தை இங்கு வெளிப்படுத்துகிறீர்கள் . வைரமுத்துவிற்குப் பிறகு யாருக்கும் பாடல் எழுதவே தெரியவில்லை என்பது போன்ற மாயப் பூச்சு பூசப் பார்ப்பது தவறல்லவா? அவருக்கு நிகரான கவிஞர்களும் , அவரை விட சிறந்த கவிஞர்களும் இளையராஜாவிற்காக பாடல் எழுதி இருக்கிறார்கள். கவிதை சரியில்லாமல் போனதால் இசை சரியில்லை என்பது உங்கள் தனிப்பட்ட பார்வை அது எப்படி உண்மையாகும்? வைரமுத்துவிற்குப் பிறகு இளையராஜாவின் இசைத் தரம் குறைந்து போய்விட்டதாக இதுவரை யாரும் குறிப்பிடவேயில்லை . உங்களின் பதிவில் மட்டுமே அது அகங்கார எழுத்தாக தெரிகிறது. பொய்யானத் தகவலை பரப்பி வரும் உங்களைப் போன்றோரை திருத்த முயல்வது இளையராஜா ரசிகர்களின் கடமை .

    ///சூப்பர் சிங்கர் நிகழ்சிகளை வைத்துக்கொண்டு அதன் மூலமே பாடல்கள் பற்றி ஒரு பொதுவான அபிப்ராயத்தை உருவாக்கிக்கொள்ளும் உங்கள் பார்வை அபத்தமானது///

    என்னைப் பற்றி உங்களுக்கு தெரிந்தது சொற்பமே ! என்னுடைய பின்னூட்டங்களைக் கொண்டு அது மட்டுமே என்னுடைய இசை அனுபவம் என நீங்களாக முற்சாய்வு எண்ணங்களை ஏற்படுத்திக் கொள்ளவேண்டாம் . அதுவும் அபத்தம்தான் .

    தனி மனித தாக்குதல்கள் நான் பெரும்பாலும் செய்வதில்லை. ஆனால் நீங்கள்தான் இளையராஜாவை கேவலமாக விமர்சனம் செய்திருக்கிறீர்கள் . பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள் . ராஜா ரசிகர்களை வெங்காயம், விளக் ....ணை, மதியீனர்கள் என்று மூன்றாம் தர வார்த்தைகளை எல்லாம் கொண்டு அர்ச்சித்திருக்கிறீர்கள் . உங்களுக்கும் நாகரீகம் தெரிய வேண்டும் என ஞாபகப்படுத்துகிறேன் .

    ReplyDelete
  10. சால்ஸ்,

    தேய்ந்துபோன ரெகார்ட் போன்ற பேச்சு.

    ----கவிதை சரியில்லாமல் போனதால் இசை சரியில்லை என்பது உங்கள் தனிப்பட்ட பார்வை அது எப்படி உண்மையாகும்? வைரமுத்துவிற்குப் பிறகு இளையராஜாவின் இசைத் தரம் குறைந்து போய்விட்டதாக இதுவரை யாரும் குறிப்பிடவேயில்லை . ---

    நீங்கள் எப்போதுமே மற்றவர்களின் கருத்தை சார்ந்தே உங்கள் கருத்தை முன் வைக்கிறீர்கள் என்பதை நிரூபிக்கும் எழுத்து. சொந்தமாக ஏதாவது கருத்து வைத்துக்கொள்ளுங்கள்.

    -----என்னைப் பற்றி உங்களுக்கு தெரிந்தது சொற்பமே ! என்னுடைய பின்னூட்டங்களைக் கொண்டு அது மட்டுமே என்னுடைய இசை அனுபவம் என நீங்களாக முற்சாய்வு எண்ணங்களை ஏற்படுத்திக் கொள்ளவேண்டாம் . அதுவும் அபத்தம்தான் .----

    இராவை விட்டு முதலில் வெளியே வந்து பிற இசையமைப்பாளர்களின் பாடல்களையும் ரசித்து அவற்றை குறித்தும் ஏதாவது எழுத உங்களால் முடிந்தால் மேற் சொல்லப்பட்ட உங்களின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். முயற்சி செய்யவும்.

    தனி மனித தாக்குதல் என்று அடுத்த சுவரை எழுப்பி அதில் மற்றவர்கள் எதாவது கிறுக்க வரமாட்டார்களா என்ற நப்பாசை போலும்.

    ReplyDelete
  11. அன்புடையீர்,

    வணக்கம்.
    தங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வருகை தந்து சிறப்பிக்கவும்.

    blogintamil.blogspot.in/2015/08/blog-post_16.html

    நன்றி

    அன்புடன்,

    எஸ்.பி.செந்தில்குமார்.

    ReplyDelete
  12. நன்றி செந்தில்,

    நீங்கள் அறிமுகம் செய்த விதம் அருமை. பின்னூட்டத்தில் கொஞ்சம் அதிகம் எழுதியிருக்கிறேன்.

    ReplyDelete
  13. வலைச்சர அறிமுகத்தின் மூலம் வந்தேன் .
    இவர் பதிவை படிக்க நேரம் ஒதுக்கி வரவேண்டும் என்று செந்தில் குறிப்பிட்டது இப்போது புரிகிறது. நான் பாதி வரை தான் படித்திருக்கிறேன் மீதியை வந்து படிக்கிறேன். அப்பப்பா எத்தனை விஷயங்களை ஒரே நேரத்தில் உங்களால் பதிவிட முடிகிறது என்கிற வியப்பே மேலிடுகிறது.

    தேனிப் பக்கம் உள்ள ஒரு கோவில் திருவிழா பாடலின் மெட்டு என்று அறிந்தபோது-----------
    இது போன்ற ஆச்சரியமூட்டும் தகவல்கள் பல உள்ளன தங்கள் பகிர்வில் திரும்ப வருகிறேன்.

    தொடர்கிறேன் நன்றி.

    ReplyDelete
  14. வலைச்சரத்தில் இருந்து வந்தேன். உங்கள் பதிவை முன்பே படித்திருக்கிறேன். அதே போல் என் வலைத்தளத்திலும் தங்கள் பின்னூட்டம் பார்த்திருக்கிறேன்.

    நானும் கவிதைக்குத்தான் அடிமை. ஆனால் சில சமயங்களில் இசை மூலமாக பாடலை அடைய முடிவது மறுக்க முடியாத உண்மை.

    நான் இரா வைரா யுத்தத்தினுள் வரவில்லை. இந்தப் பாடலில் இசை அருமை என்றாலும் என்னைக் கவர்ந்தது இந்த வரிகள்தான். :)

    https://www.youtube.com/watch?v=kH7VN13rjZI

    இதுபோல் நிறையப்பாடல்கள்.:)

    ReplyDelete
  15. இந்தப் பாடலிலும் இதன் வரிகள்தான் அதிக தாக்கம் செய்தன. இசைக்கும் பங்குண்டு :)

    http://honeylaksh.blogspot.in/2014/10/blog-post_93.html.

    உங்கள் பின்னூட்டமும் இருக்கிறது இதில் :)

    அதற்கு என் பதில் பின்னூட்டமும்.

    ///Thenammai Lakshmanan சொன்னது…

    நன்றி காரிகன். உங்கள் பதிவைப் பார்த்தேன் பிரமித்தேன்.

    ///மிகவும் அருமையான ஆராய்ச்சிக்கட்டுரை போல் இருக்கிறது. எல்லாப் பாடல்களிலும் தேன் உண்ணும் வண்டு போல் மாந்தி மாந்தி எழுந்தேன். :)

    எனக்கும் எம் எஸ் வியின் பல பாடல்கள் பிடிக்கும். இங்கே அநேகமாக சிவாஜி சம்பந்தப்பட்டதுதான் வந்திருக்கிறது.

    விஸ்வநாதன் வேலை வேண்டும். அனுபவம் புதுமை, ஹேய் நாடோடி, உத்தமபுத்திரனில் “அன்பே என் அன்பே நீ வா” என்று டான்ஸோடு கைதட்டிஆடும் பாட்டு இதெல்லாம் பிடிக்கும்.

    இதெல்லாம் விஸ்வநாதன் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். ( ரொம்ப கவனித்து நோக்குதல் குறைவு என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ) :)

    இன்னும் பல பாடல்கள் உண்டு. விஸ்வநாதன் பேரரசர், அடுத்து இளையராஜா, அடுத்து இளவரசர் போல் ரஹ்மான் கோலோச்சிக்கொண்டிருக்கிறார்கள்.

    இப்படித்தான் என் கண்ணோட்டம். ஆனால் பேரரசராக இனி யாரும் ஆகமுடியாது என்பதும் உண்மை.நன்றி பகிர்வுக்கு :)///

    முதல் வரவுக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி :)///

    ReplyDelete
  16. இப்போது தான் படித்து முடித்தேன். படிக்கவே எங்களுக்கு இப்படி என்றால் பதிவிட உங்களுக்கு.....?
    பல விஷயங்களை தெரிந்துகொண்டேன். பின்னூட்டம் உட்பட.
    இனிமையான இசையோடு இணைந்து வரும் பாடல்களை ரசிக்கும் மனம் அனைவரிடத்தும் இருக்கிறது. இதில் யாரால் பாடல் உயிர்பெற்றது இசையாலா? பாடல் வரியாலா? என்றெல்லாம் ஆராயத்தோன்றவில்லை.
    இறுதியாக தாங்கள் கூறுவது போல...
    பல மாளிகைகளை எழுப்பியதுபோலவே அவற்றை சாய்த்துவிட்டு தன் பாதையில் அடுத்தடுத்த அஸ்திவாரங்களை அமைத்துச் சென்று கொண்டிருக்கிறது. சில வீடுகள், சில கட்டிடங்கள், சில மாளிகைகள், சில கோயில்கள் என காலம் அவற்றை வடிவமைக்கிறது.
    காலம் எல்லாவற்றையும் கடந்து சென்றுகொண்டுதானிருக்கிறது.
    நல்ல அலசல் .

    ReplyDelete
  17. Another beautiful article about MSV the Great...
    http://solvanam.com/?p=41623

    ReplyDelete
    Replies
    1. Very rare write-up about M.S.V. Unlike some vague posts on the music genius, this one is quite remarkable. Thanks for the link.

      Delete
  18. வாருங்கள் சசிகலா,

    உங்களின் முதல் வருகைக்கு நன்றி.

    நீங்களும் இசையின் ரசிகர் என்றறிந்தும் மகிழ்ச்சி உண்டானது. பொதுவாக நான் நீண்ட பதிவுகள் எழுதுவதையே விரும்பும் ஒரு அலுப்பான ஆசாமி. எனவே என் பதிவுகளைப் படிக்க பலருக்கு பொறுமை இருப்பதில்லை என்று நினைக்கிறேன். இத்தனை விஷயங்களா என்றெல்லாம் வியப்படைய வேண்டாம். உங்களுக்குத் தெரிந்ததை நீங்கள் எழுதினாலும் நிறையவே எழுதுவீர்கள். அதுபோலதான் இதுவும்.

    நல்ல இசையை ரசிக்க இசையா கவிதையா என்ற விவாதம் தேவையற்றதுதான். ஆனால் கவிதையை உதைத்து தூரே தள்ளி விட்டு இசையை மட்டும் தூக்கிவைத்துக் கொண்டு கொண்டாடினால் அது நியாயமில்லை என்பது என் எண்ணம்.

    ReplyDelete
  19. வாருங்கள் தேனம்மை லக்ஷ்மனன்,

    பாராட்டுக்கு நன்றி. எனக்கும் ஞாபகம் இருக்கிறது உங்கள் தளத்தில் ஒரு முறை நான் எழுதிய பின்னூட்டம் குறித்து. இசை, பாடல்கள் என்றால் கொஞ்சம் அதிகம் விருப்பத்துடன் அங்கு செல்வேன். அதுபோன்ற சந்தர்ப்பத்தில் ஒரு முறை உங்கள் தளம் வந்திருக்கிறேன்.

    நான் நீண்ட பதிவுகளை படிக்கவே விரும்புவேன். எனவே என் பதிவுகள் அப்படியான நீளத்துடன் இருக்கின்றன போலும். நான்கு பத்திகள் எழுதி அதை இரண்டு நிமிடத்தில் படித்து முடித்து விடும் விரைவு எழுத்துக்கள் எனக்கு அலர்ஜி. சிலர் இரண்டே வரிகள் எழுதி அதை ஒரு பதிவாக வெளியிடுகிறார்கள் வீட்டுக்கு வந்த உடனேயே வெளியே தள்ளி கதவைச் சாத்துவது போல.

    ReplyDelete
  20. Waiting for the article about MSV eagerly..

    ReplyDelete
  21. Mr. Xavier,

    That will take a pretty long time. Not possibly now. I just want to look away from music for a while.

    ReplyDelete
    Replies
    1. Ok...thanks for your reply... take your own time.. :)

      Delete
  22. காரிகன்!!

    எனக்கு சில சந்தேகங்கள். MSV-யா, இளையராஜாவா என்ற விஷயத்தை ஒரு புறம் ஒதுக்கி வைப்போம். அடிப்படையில் இளையராஜா என்பவர் இசையில்
    எந்த அளவுக்கு சிறந்தவர், அதாவது தமிழ் திரைப்பட வரலாற்றில் அவருக்கென்று ஒரு தனி இடம் கொடுக்க முடியுமா?

    சமீபத்தில் கங்கை அமரன் தனது பேச்சில், அவரும் இளையராஜாவும் மற்றவர்களுடைய டியூன்களை எக்கச் சக்கமாகக் காப்பியடிச்சு பாடல்களை கம்போஸ் செய்திருக்கிறோம் என்றும் இளையராஜா காப்பியடித்ததை அவர் தான் சொல்ல வேண்டும் என்றும் பேசியிருக்கிறார். அப்படியென்றால் இளையராஜா சரக்கில் எவ்வளவு காப்பி, எவ்வளவு சொந்த உழைப்பு? [ஆனந்த விகடனின் ஒரு வீடியோவைப் பார்த்தார் MSV யில் ஆரம்பித்து இளையராஜா, ரஹ்மான் என்று அனிருத் வரைக்கும் அத்தனை பேரும் காப்பியடித்திருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது!!].

    ஏ ஆர் ரஹ்மான் ஆஸ்கார் பாராட்டு விழாவில் இளையராஜா பேசும்போது, "அண்ணன் MSV ஆதார ஸ்ருதி, அதன் மேல் எழுந்த பஞ்சமம் நான், அதற்கும் மேல் எழுந்த சட்சமம் ஏ ஆர் ரஹ்மான என்றும் , மற்றவர்கள் எல்லாம் பிற சப்தஸ்வரங்கள் என்றும் பேசினார். இதன் அர்த்தம் என்ன? எந்த விதத்தில் ஒருவர் மீது ஒருத்தர் முளைத்து வந்ததாக பொருள் கொள்ள முடியும்?

    ReplyDelete
  23. வாங்க ஜெயதேவ்,

    வருகைக்கு நன்றி.

    இளையராஜா- ரஹ்மான் ஒப்பீட்டை வேண்டுமானால் நிறுத்தி வைக்கலாம். எம் எஸ் வியா இராவா என்ற கேள்விக்கே இடமில்லை. இரா என்றைக்கும் எம் எஸ் வி அருகே வர முடியாது என்பதே நிதர்சனம். இது அவருக்கே தெரியும்.

    அடுத்து உங்களின் கேள்விக்கு வருவோம்.

    ---அடிப்படையில் இளையராஜா என்பவர் இசையில் எந்த அளவுக்கு சிறந்தவர், அதாவது தமிழ் திரைப்பட வரலாற்றில் அவருக்கென்று ஒரு தனி இடம் கொடுக்க முடியுமா?----

    இரா தமிழ்த் திரையிசையில் புறந்தள்ள முடியாத ஒரு ஆச்சர்யமான நிகழ்வு. இதில் சந்தேகமில்லை. அவர் இசை ஒரு தனி வண்ணத்தை தமிழிசையில் பூசியது. கண்டிப்பாக இராவுக்கென ஒரு சிம்மாசனம் உண்டு. அவரது 4500பாடல்களில் ஏறக்குறைய 500 பாடல்கள் அருமையானவை. இந்த 500 ரை வைத்துக்கொண்டு அவரை சிறப்பித்து எழுதலாம். ஆனால் அதேசமயம் அவர் அமைத்த நலிவான, தரங்கெட்ட பெருவாரியான பாடல்களை அலசினால் அவர் மிகையாக புகழ்ப்படுகிறார் என்பது புலப்படும். இருப்பதை அப்படியே எழுதுவதினால் என் மீது சிலருக்கு கடுமையான கோபம். என்னைப் பொறுத்தவரை யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது.

    ----சமீபத்தில் கங்கை அமரன் தனது பேச்சில், அவரும் இளையராஜாவும் மற்றவர்களுடைய டியூன்களை எக்கச் சக்கமாகக் காப்பியடிச்சு பாடல்களை கம்போஸ் செய்திருக்கிறோம் என்றும் இளையராஜா காப்பியடித்ததை அவர் தான் சொல்ல வேண்டும் என்றும் பேசியிருக்கிறார். அப்படியென்றால் இளையராஜா சரக்கில் எவ்வளவு காப்பி, எவ்வளவு சொந்த உழைப்பு? ---

    கங்கை அமரன் நிறையவே சொல்லுவார். இரா இதைப் பற்றியெல்லாம் பேசவே மாட்டார். கேட்டால் இசையே ஒரு மோசடி. ஏழு ஸ்வரங்களை வைத்துக்கொண்டு நாம் (இசையமைப்பாளர்கள்) செய்யும் ஏமாற்று வேலை என்பார். இராவும் தன் பங்குக்கு நிறையவே "எடுத்துக்"கொண்டிருக்கிறார். தேவா, ரஹ்மான் என்றால் காப்பி அடித்தார்கள் என்பார்கள். இரா என்றால் அதை ஒரு அக தூண்டுதல் என்று ஒரு புதிய தமிழ் வார்த்தையை கண்டுபிடித்து இராவின் நகலெடுப்பை நியாயப்படுத்துவார்கள். பொதுவாக நாட்டுபுற பாடல்களுக்கு காப்பி ரைட் என்ற ஒன்று கிடையாததால் யார் வேண்டுமானாலும் அதை சுலபமாக "திருடிக்"கொள்ளலாம். யாரும் கேள்வி கேட்க முடியாது.

    இரா நாட்டுபுற இசை, மேற்கத்திய செவ்வியல் இசை என்று பல இடங்களில் தனது "அக தூண்டுதலை" தெரிந்துகொண்டவர்.அவரை சுயம்பு என்று விளிப்பதெல்லாம் கண் மூடித்தனமான காட்டுக் கூச்சல்.

    ---ஏ ஆர் ரஹ்மான் ஆஸ்கார் பாராட்டு விழாவில் இளையராஜா பேசும்போது, "அண்ணன் MSV ஆதார ஸ்ருதி, அதன் மேல் எழுந்த பஞ்சமம் நான், அதற்கும் மேல் எழுந்த சட்சமம் ஏ ஆர் ரஹ்மான என்றும் , மற்றவர்கள் எல்லாம் பிற சப்தஸ்வரங்கள் என்றும் பேசினார். இதன் அர்த்தம் என்ன? எந்த விதத்தில் ஒருவர் மீது ஒருத்தர் முளைத்து வந்ததாக பொருள் கொள்ள முடியும்?--

    அவர் வேறு என்ன சொல்லமுடியும் இதைத் தவிர? கடுமையான சாஸ்திரிய இசையை மெல்லிசையாக குழைத்து கொடுத்த பிறகு (எம் எஸ் வி- டி கே ஆர் கூட்டணி) அதன் பிறகு வந்தவர்களுக்கு பாடல்கள் அமைப்பது சுலபமாகப் போயிற்று. மக்கள் ரசிப்புக்கான ஒரு தரமான நல்லிசைக்கு ஒரு புதிய வடிவத்தை அமைத்துக் கொடுத்த எம் எஸ் வி இவர்களை மீறிய மகா மேன்மையான இசை மேதை.

    ReplyDelete
  24. தம்பி காரிகன் , சும்மா புளுகாதே !

    எந்தன் கைக்குட்டையை எழுதியவர் மேத்தா.தப்பும் தவறுமாய் எழுதுவதில் நீங்க சூரர் !

    ReplyDelete
  25. உங்கள் பதிவில் வேர்ட்பிரஸ் ஐடியிலிருந்து பின்னூட்டம் இடமுடியவில்லை.

    ஒரு சிறுதகவல் மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன்.

    என்ன சொல்லி நான் எழுத.. ஒரு அதியற்புதமான பாடல். தெலுங்கில் சிரஞ்சிவியும் மாதவியும் நடித்து வெளிவந்த குக்க காட்டுக்கு செப்ப தெப்பா என்ற படம் தான் பின்னால் தமிழில் இராணித்தேனி ஆனது. தெலுங்கில் அதே காட்சியமைக்கு வந்த ஏவண்டி ஏமணுகோகண்டி என்ற பாடலைப் பாடியதும் பி.சுசீலா அவர்கள் தான். அதற்கு இசை யார் தெரியுமா? மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன். அந்தப் பாடலையும் கேட்டும் பார்த்தும் விடுங்களேன்.
    https://www.youtube.com/watch?v=TZIuzpvzPsU

    ReplyDelete