Friday 18 September 2015

கொஞ்சம் நிலவு கொஞ்சம் புனைவு

இந்தப் பதிவு  அறிவியல் சம்பந்தப்பட்டதாக  இருந்தாலும் கான்ஸ்பிரசி தியரி எனப்படும் (தமிழில் சதிக்கதை?) மிகப் பிரபலமான   அல்லது உண்மையென நாம்  நம்பிக்கொண்டிருக்கும் பல நிகழ்வுகளை அதிர்ச்சியளிக்கும்  ஒரு  மாறுபட்ட பார்வையோடு  பார்க்கும் பதிவு.  இதை ஒரேடியாக மறுப்பவர்களும், இதை நம்புவர்களை ஏளனம் செய்பவர்களும் ஏராளம். நான் இதை எழுதும் நோக்கம் இதுதான்: மூளைச்  சலவை செய்வதைப் போன்று நமக்கு கொடுக்கப்படும் தகவல்களை பிரதானமாக மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார வைக்காமல்  பல  திகிலூட்டும் திகைப்பூட்டும்  பார்வைகளுக்கும் சிந்தனைகளுக்கும் நாம் தயாராக இருப்பது அவசியம்.

         Why should always we believe what we are told?

     

                       கொஞ்சம் நிலவு 
                             கொஞ்சம் புனைவு 


     "கழுகு தரையிறங்கி விட்டது." என்ற முதல் தகவல் நாஸாவிலுள்ள ஹூஸ்டனுக்கு வருகிறது. சற்று நேரம் கழித்து ஒரு மனித உருவம் மெல்ல மெல்ல லூனார் மாட்யூல் ஈகிள் கலத்திலிருந்து வெளியே படிகளில் இறங்குகிறது. திரளான மக்கள் கூட்டம் தொலைகாட்சி திரையை அமைதியாக கவனித்தபடி இருக்கிறது.  கடைசிப் படியைத் தாண்டியதும் அந்த மனித உருவம்  நிலப்பரப்பில் கால் வைக்கிறது.

  பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள் சிலிர்க்கிறார்கள். பலருக்கு அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. சந்தோஷக் கண்ணீர்.     பரவசமான நொடிகள். கனமான கணங்கள்.  " (ஒரு) மனிதனுக்கு இது ஒரே ஒரு  காலடி. ஆனால் மனித இனத்துக்கு  இது ஒரு ராட்சஷ  பாய்ச்சல் ." மிகப் புகழ் பெற்ற வரிகள் இவை. "A small step for (a) man but a giant leap for mankind" என்ற கரகரப்பான தெளிவற்ற குரல் கேட்கிறது.  வரலாறு நிகழ்ந்தது.

சொன்னவர்; நீல் ஆர்ம்ஸ்ட்ராங்.
நேரம் :  ஜூலை 20, 1969. காலை.
இடம்:   நிலவு.

   நிலவில் மனிதன் காலடி வைத்தது ஒரு மகா  திகைப்பான நிகழ்வு. ஒரு பெரிய ஆச்சர்யத்தை அதிரடியாக அரங்கேற்றிய அசாதாரண அனுபவம். நிலவின் சீ ஆப் ட்ரான்க்விலிடி, (Sea Of Tranquility) என்ற ஒரு இடத்தில் தரையிறங்கிய அமெரிக்க அப்போலோ 11 விண்கலம் ஒரு இறவா சரித்திரமாக எழும்பி நிமிர்ந்தது. மனிதர்கள்  எல்லோரும் பெருமைப் படக்கூடிய சாதனையின் உச்சம்  என அது வர்ணிக்கப்படுகிறது.  மறுக்க முடியாத பெருமைதான். 

 ஆனால் 69ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை கேட்கப்பட்டு வரும் கேள்வி ஒன்று இந்தப் பெருமையை குறித்து சிறிதும் அக்கறை கொள்ளவில்லை. கேள்வி இதுதான்:  "மனிதன் உண்மையிலேயே நிலவுக்குப் போனானா?" சற்று வேறு விதமாக சிந்தித்தால் நிலவில் மனிதன் நடந்து சென்ற சாதனையின்  பின்னே இருக்கக்கூடிய பல விடையில்லாத கேள்விகள் இந்த நிகழ்வின் சாத்தியங்களை உடைத்து நொறுக்குகின்றன.

        நிலவில் மனிதன் இறங்கினானா என்ற கேள்விக்கான பதிலை நாசாவும் அமெரிக்க அரசும் நமக்குத் தெளிவாக சொல்லிவிட்டன. நாம் படிக்கும் வரலாறும் இதை உறுதி செய்கிறது. உலகின் பெரும்பான்மையான மக்கள் இதை நம்பியே வருகிறார்கள். ஆனால் எல்லோருமல்ல. இன்றைக்கு 12 மில்லியன் அமெரிக்க மக்களே இந்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங் சாகசத்தை நம்பத் தயாராக இல்லை. அதை ஒரு புனைவு என்று ஒதுக்கிவிடுகிறார்கள். பொதுவில் ரஷ்யர்கள் இதை இது நிகழ்ந்த  1969லேயே நம்பவில்லை. நாசா கூறும் கதைகளில் நம்பிக்கை இழந்த பலர் உண்மையைத் தேடி வேறு பக்கம் நகர்ந்துவிட்டார்கள். இதைப் படிக்கும் பலருக்கு இது சற்று வியப்பாக ஏன் அபத்தமாகக் கூடத் தோன்றலாம். 400 மில்லியன் பொது மக்களால் நேரலையாக பார்க்கப்பட்ட ஒரு மின்சார அனுபவத்தை இவ்வாறு இரக்கமில்லாத இரேஸர் கொண்டு அழிப்பது முட்டாள்தனத்தின் உச்சம் என்ற எண்ணம் வரலாம். ஆனால் நாம் நம்பிக்கொண்டிருக்கும் பல "உண்மைகளுக்குப்" பின்னே உள்ள உந்து சக்தி அறிவியல் கோட்பாடுகளுக்கும் மனித ஆசைகளுக்கும்  இடையேயான தூரத்தை திரளான தகவல்களால் நிரப்பி நம்மை மூளைச் சலவை செய்வதில் அடங்கியிருக்கிறது.

     ஒரு காலத்தில் செவி வழிச் செய்தியாக கேட்ட ஒரு செய்தியை   பிறகு (எம் சி சி யிலிருந்து சுட்ட) ஒரு கம்யூனிகேஷன் புத்தகத்தில் காண நேரிட்ட போது எனக்குள் ஒரு உலுக்கல் உண்டானது. இன்டர்நெட் இல்லாத அந்த சூழலில் அதைப் பற்றிய மேலான தகவல்கள் அரிதாக வசப்படும் காலத்தில் நான் இந்த நிலவில் மனிதன் என்ற செய்தியை கொஞ்சம் சந்தேகத்துடனே பார்த்தேன். ரஷ்யர்கள் இதைப் பற்றி எழுதியிருக்கிறார்கள் என்றறிந்து அந்தப் புத்தகத்தைத் வீணாக தேடி அலைந்திருக்கிறேன். இறுதியில் கம்ப்யூட்டர் என் வசப்பட்டபோது நிறைய தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது.

      அடுத்து நான் எழுதப் போவது என் கற்பனையில் உதித்த  துளிகளல்ல. நாசாவின் நிலவுத் திட்டத்தை (moon mission ) துவக்கத்திலிருந்தே சந்தேக கண்களுடன் பார்த்துவந்த ரஷ்யர்கள் மேலும் மாற்றுப் பார்வை கொண்ட ஸ்கெப்டிக்ஸ் (தமிழில் இதை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. சந்தேககர்கள்?) இந்த நிலவு சாதனை பற்றி பலவிதமான கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். அவற்றையும் அவற்றிற்கு நாசா அளித்த விளக்கங்களையும்  கீழே  படியுங்கள்.

சந்தேகம்  1. காற்றில்லாமல் அசைந்த  கொடி. 



சந்தேகர்கள் நிலவு மிஷன் முழுவதுமே ஒரு நாடகம் என்று மேசை மீது அடித்துச் சொல்லும்படியாக  மிகத் துணிவாக கூறுவதற்கான முதல் காரணம் எப்படி காற்றில்லாத நிலவில் அமெரிக்க கொடி அசைந்து பறக்க முடியும் என்பதே.  இந்த அசையும் கொடி ஒரு மிக முக்கியமான ஆதாரமாக அவர்களால் முன் வைக்கப்படுகிறது. நீல் ஆர்ம்ஸ்ட்ராங் , எட்வின் பஸ் ஆல்டிர்ன் இருவரும் நிலவில் அமெரிக்கக்  கொடியை நட்டபோது அது பட்டொளி வீசிப் பறந்த கதையாக சற்று அசைந்ததை நாம் இன்றும் அந்த காணொளியை காணும்போது பார்க்கலாம். . நிலவில் காற்றுக்கான வாய்ப்பே  இல்லாத போது இந்த அசைவு எப்படி சாத்தியம்?

நாசாவின் பதில்: உண்மையில் கொடி அசைந்தது காற்றினால் அல்ல. ஏனென்றால் நிலவில் காற்று இல்லை. அந்த அசைவு இனெர்ஷா (Inertia) என்கிற இயற்பியல் விதியின் படி நிகழ்ந்தது. கொடிக் கம்பம் அசைந்தபோது அந்த அதிர்வு மேலே சென்று கொடியை அடைய  அதுவும் அதிர்ந்தது. மேலும் சுருட்டி வைக்கப்பட்டிருந்த கொடி விரிக்கப்பட்ட போது ஏற்பட்ட  சலனமாகவும் அது இருக்கலாம்.
   
பிற தகவல்: நிலவில் நடப்பட்ட முதல் கொடி  அப்போலோ 11 விண்கலம் நிலவிலிருந்து கிளம்பியபோது வெளியேறிய புகையின் வேகத்தில் அப்போதே சரிந்து விழுந்துவிட்டதாக நாசா தெரிவித்துள்ளது.

சந்தேகம் 2.  பாதிப்பு இல்லாத தரையிறக்கம் 



அப்போலோ விண்கலம் நிலவில் இறங்கிய போது அந்த இடத்தில் எந்தவிதமான பாதிப்புப்  பள்ளங்களும்  (impact crater or blast crater) உண்டாகாமல் இருந்தது எப்படி?  மேலும் நிலவின் மிக மிருதுவான மண் வெளியில் அந்த விண்கலத்தை ஒட்ட வைத்தது போல அந்தக் காட்சி தோன்றுகிறது.  நம் பூமி போன்று  ஒசான் படலம் எதுவும் இல்லாததால் இயல்பாகவே அண்டவெளி விண்கற்கள் மூலம் நிலவு  பலவிதமான பள்ளங்களை   தன் மேல் பரப்பில் கொண்டுள்ளது. அப்போலோ விண்கலம் போன்ற மிக சக்தி வாய்ந்த அறிவியல் இயந்திரம் ஒன்று ஆஜானுபாகுவாக அங்கே தரையிறங்கிய போதோ எந்த விதமான பாதிப்பும் நிலவின் மேற்பரப்பில் ஏற்படவில்லை.  இது ஏன்?

நாசா: ஒரு கிரேட்டர் ஏற்படத் தேவையான அதிக அழுத்தம் இல்லாமல் லூனார் மாடியூல் வெகு குறைந்த அழுத்தத்துடன்  நிலவில்  இறங்கியதால் அங்கே எந்த பள்ளமும் ஏற்பட்டவில்லை. மேலும் நிலவின் மேற்பரப்பை அடையும் முன் அந்த மாட்யூலின் ப்ரோபெல்லர்கள் அதிக அழுத்தத்தை வெளியிடாமல் தனக்குள் உள்ளிழுத்துக் கொண்டன. கான்க்ரீட் தளத்தில் ஒரு விமானம் தரையிறங்கும் போது அங்கே எந்த தடயங்களும் பதிவுகளும் இருக்காது என்ற விதியே இதற்குக் காரணம்.

சந்தேகம் 3. பல கோணத்து வெளிச்சம்.





நிலவின் வெளிச்சம் சூரிய ஒளியின் பிரதிபலிப்பு. ஆனால் நிலவில் அமெரிக்க விண்வெளியாளர்கள் இருக்கும் படங்களில் பல கோணங்களில் வெளிச்சங்கள் மற்றும் நிழல்கள் தெரிவது எப்படி? இது ஒரு சினிமா செட்டில் காணப்படும் ஸ்டூடியோ விளக்குகள் போல பலவிதமான இடங்களிலிருந்து வெளிச்சம் வருவதைப் போன்று தோன்றுகிறது. இந்த பல கோண வெளிச்சம் எப்படி சாத்தியம்?

நாசா: நிலவில் இருக்கும் ஒழுங்கற்ற மலை முகடுகளும், திட்டுக்களுமே இந்த கோளாறான நிழல்கள் தோன்றக் காரணம். . அவ்வாறான சீரற்ற மேல்பரப்பின் பாதிப்பே இந்த வித விதமான வெளிச்சம் மற்றும் நிழல்கள் என்று நாசா சொல்வதை  பல சந்தேகர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. எவ்வாறு சாதாரண மலை முகடுகள் இரண்டு நிழல்களை துல்லியமாக 45 டிகிரியில் வேறுபட்டு தோன்றச் செய்யமுடியும்?

சந்தேகம் 4. தொங்கும் பிம்பம்.


அப்போலோ 12 மிஷன் நிலவில் இறங்கிய படங்கள் வெளியிடப்பட்டதும் விண்வெளியாளரின் ஹெல்மெட்டில் தோன்றும் ஒரு பிம்பம் பலரை திகைப்பில் ஆழ்த்தியது. அது அந்தரத்தில் தொங்கும் ஒரு அடையாளம் தெரியாத பொருள் ஒன்றின்  பிம்பம். அம்மாதிரியான ஒரு பொருள் நிலவில் இருப்பதற்கான தேவையோ சாத்தியமோ இல்லாதபோது அது என்ன என்ற கேள்விக்கு  பதிலில்லை. சந்தேகர்கள் இதை ஸ்டூடியோவில் இருக்கும் ஸ்பாட் லைட் போன்ற ஒரு கருவி என்று நம்புகிறார்கள். நிலவு மிஷன் முழுவதுமே ஒரு ஸ்டூடியோ காட்சியமைப்பு என்ற அவர்களது கூற்றுக்கு இது ஒரு சான்று.

நாசா இதற்கு பதில் சொன்னதாகத் தெரியவில்லை.

சந்தேகம் 5.  நிலவு நடைபயணத்திற்கான மறைக்கப்பட்ட கேபிள்கள் .

நிலவில் ஆர்ம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் இருவரும் குதித்து குதித்து நடை பயின்றது ஈர்ப்பு விசை இல்லாத சூழலின் உண்மைத் தன்மையை உலகுக்கு காட்டியது- விஞ்ஞான ரீதியில். ஆனால் சந்தேகர்கள் இந்த குதிப்பு நடையை நாசாவின் மோசடி என்று சொல்கிறார்கள். நிலவில் மனிதன்  நடந்த அந்த நிகழ்ச்சியின் காணொளி காட்சிகளை X2.5 என்ற வேகத்தில் ஓடச் செய்து பார்த்தால்  பூமியின் ஈர்ப்பு விசைக்கேற்ப அந்த இருவரும் சாதாரணமாக நடந்து செல்வதைக் காணலாம். அப்படியானால் அந்த ஈர்ப்பு விசையில்லாத சூழலுக்கான குதிப்பு எவ்வாறு சாத்தியப்பட்டது?  மறைவான கேபிள்கள் கொண்டு (போட்டோக்களில் மிக மெல்லியதாக இது தெரியும்) நாசா இந்த விஞ்ஞானத்தை மிமிக் செய்ததாக சந்தேகர்கள் கூறுகிறார்கள்.

நாசா இதற்கும் என்ன பதில் சொல்லியது என்று தெரியவில்லை. ஒருவேளை நாசா இதை மற்றொரு கற்பனை என்ற வகையில் ஒதுக்கியிருக்கலாம்.

சந்தேகம் 6. விண்மீன்கள் இல்லாத இரவு வானம்.





நாசா வெளியிட்ட அப்போலோ 11 நிலவில் இறங்கிய சாதனைப்  படங்கள் எதிலும் ஒரு துளி நட்சத்திரத்தைக் கூட பார்க்க முடியாது. அத்தனைப் படங்களிலும் வானம் மொத்தமாக கழுவி விடப்பட்டதைப்  போல முழு கருமையாக தோற்றமளிக்கும். புகைப்படம் என்றில்லை நாசா வெளியிட்ட காணொளி காட்சிகளில் கூட நட்சத்திரங்களை மருந்துக்கும் காண இயலாது. நிலவுக்கு மேலே மேகங்கள் இல்லாத நிலையில் நட்சத்திரங்கள் இங்கே பூமியிலிருப்பதை விட தெளிவாகவும், இன்னும் பிரகாசமாகவும் தோன்றவேண்டிய இயல்பான இயற்கை விதியின்படி இல்லாமல் ஒட்டு மொத்த விண்மீன்களும் காணாமல் போனது ஏன்?

நாசா இதற்கு  நிலவிலிருந்து படங்கள் எடுக்கப்பட்டது காலை நேரம். எனவே சூரிய ஒளியில் நட்சத்திரங்கள் தென்படவில்லை என்று பதில் சொல்லியது. மேலும்   விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட எந்த ஒரு படத்திலும் நட்சத்திரங்களை காண முடியாது. எனவே இது ஒன்றும் புதிதானதல்ல என்ற விளக்கமும்  கொடுக்கப்பட்டது. உண்மையில் விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட எந்த படத்திலும் வானம் வெறுமையாகவே காட்சியளிப்பது நாசாவின் இந்த விளக்கத்தை நம்பும்படி செய்தாலும் சந்தேகர்கள் இதற்கு கொடுக்கும் காரணம் வேறு.

நிலவிலிருந்து காணப்படும் பூமியின் தோற்றம் எதோ ஓட்ட வைத்தது போல தோன்றுவதாக பொதுவாக சந்தேகர்கள் நம்புகிறார்கள். அவர்களின் கருத்துப்படி நிலவிலிருந்து எடுக்கப்பட்டதாக நம்பப்படும் படங்களில் நட்சத்திரங்கள் இருந்தால் அவ்வகையான நட்சத்திரக்  கூட்டமைப்பு வானில் எங்கிருக்கிறது என்பதை வைத்து அந்தப் படம் பூமியின் எந்தப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது என்பதை சுலபமாக அறிந்துகொள்ள முடியும். எனவே  நாசா தான் வெளியிட்ட படங்களில் நட்சத்திரங்களை முழுதும் அழித்து விட்டது. மேலும் நிலவிலிருந்து நட்சத்திரங்கள் எவ்வாறு தோன்றும் என்பதும் யாருக்கும் இதுவரை தெரியாது. எனவே இந்த உண்மையை பரிசோதிக்க வேண்டிய நிரப்பந்தகளை ஒதுக்கிவிட்டு ஒரேடியாக நட்சத்திரங்களை நீக்கிவிட்டால் அந்தப்  பிரச்சினைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிடலாம் என்பது   நாசாவின் எண்ணம்.

சந்தேகம் 7.  நிலவுப் பாறையின் மீது தெரியும் ஆங்கில எழுத்து.



நிலவு இறக்கம் (Moon landing) தொடர்பான நாசா வெளியிட்ட ஒரு படத்தில் அதிர்ச்சியூட்டும் ஒரு படம் சந்தேகர்களுக்கு தீனியாக அமைந்தது. அந்தப் படத்தில் நிலவில் இருக்கும் ஒரு பாறை (அல்லது கல் எனலாம்) ஒன்றில் மிகத் தெளிவாக ஆங்கில C என்ற எழுத்து இருப்பதைக் காணலாம். எப்படி இந்த C நிலவில் தோன்ற முடியும் என்ற கேள்விக்கு சந்தேகர்கள் கூறும் பதில் இதுதான்:  நிலவு இறக்கமே ஒரு நாடகம். அது ஒரு ஸ்டூடியோ செட்டப். எனவே வசதிக்காக ஒரு கல்லின் மீது அந்த C என்ற எழுத்து ஒரு குறியீடாக எழுதப்பட்டிருக்கலாம். செட் ப்ராபர்டீஸ் என்ற வகையில் அந்தக் கல் அங்கே இருந்திருக்கலாம். நாசா செய்த தவறு அந்த C எழுதப்பட்ட கல்லை கவனிக்காது நிலவுக் கல் என்று வெளியிட்டதுதான் என்கிறார்கள்.

நாசா இதற்கு அளித்த காரணம் அபத்தமானது. படத்தை டிவலப் செய்தபோது அந்த C என்ற எழுத்தை யாராவது எழுதியிருக்கலாம், அல்லது டிவலப் செய்முறையின் போது மனித ரோமம் ஒன்று அங்கே எதேச்சையாக ஓட்டியிருக்கலாம் என்பது நாசாவின் விளக்கம்.

சந்தேகம் 8. மறையும் கிராஸ் ஹேர்ஸ் (Cross-hairs)

கிராஸ் ஹேர்ஸ் என்பது  கூட்டல் குறி போன்ற (+) பிளஸ் வடிவம் கொண்டது. பொதுவாக கேமராக்களில் இந்த + பிம்பங்களை சரியாக படம் பிடிக்க வகை செய்யும் விதத்தில் பயன்படுத்தப்படுகிறது. (டெலஸ்கோப் துப்பாக்கிகளில் இதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஒரு பொருளை துல்லியமாக அடையாளம் கண்டு அதை மிகச் சரியாக position செய்வதற்கு இது உதவுகிறது.) இந்த + கேமராக்களில் எடுக்கப்படும் பிம்பங்களின் முன்னே ஒரு வாட்டர் மார்க் போன்று தென்படும். நாசா வெளியிட்ட நிலவுப் படங்களில் இந்த கிராஸ் ஹேர்ஸ் சில இடங்களில் படங்களின் பிம்பங்களுக்கு பின்னே தென்படுகிறது. அதாவது படங்கள் எடுக்கப்பட்ட பிறகு கிராஸ் ஹேர்ஸ்களுக்கு முன்னே சில பொருட்களை வைத்து புனைவாக படங்கள் மாற்றியமைக்கப்பட்டதைப் போல இது தெரிவதாக சந்தேகர்கள் கருதுகிறார்கள். ஆனால் மர்மம் என்னவென்றால் இத்தனை அப்பட்டமான தவறை நாசா ஏன் செய்யவேண்டும் என்பதுதான். நாசா நினைத்திருந்தால் இந்த கிராஸ் ஹேர்ஸ் இல்லாமலே படங்களை எடுத்திருக்க முடியும். பின் ஏன் இந்த வெளிப்படையான தவறு என்று புரியவில்லை.

சந்தேகம் 9.  நிலவில் பாதச் சுவடுகள்.



பஸ் ஆல்ட்ரினின் நிலவு பாதச் சுவடு மிகப் பிரசித்தமான ஒன்று. இந்த நிலவுச் சுவடுகள் எதோ ஈரப்பதமுள்ள மண் மீது படிந்த சுவடுகள் போன்று மிகத் தெளிவாக இருப்பது குறித்து சந்தேகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். நிலவின் மண்ணில் ஈரப்பதம் இல்லாதபோது   எவ்வாறு அங்கே இத்தனை துல்லியமாக சுவடுகளை பதிக்க முடியும்?

நாசா இதை அபத்தம் என்று ஒதுக்கிவிட்டது. ரெகலெத் எனப்படும் நிலவு மண் எரிமலை சாம்பலைப் போன்றது. நன்றாக அரைக்கப்பட்ட மாவுடன் இதனை ஒப்பிடலாம். எனவே அதன் மீது நீங்கள் நடக்கும் போது இயற்கையாகவே அது ஒன்றோடு ஒன்று எளிதில் குழைந்து பின் பிணைந்து உங்கள் காலனியின் பதிவை உண்டாக்கிவிடும் என  நாசா விளக்கம் அளித்தது.  ரெகலெத் எனப்படும் குழைவான மண் அண்டவெளிக் கற்கள், பாறைகள், மற்ற நிலவுகளிலும் உண்டு. ஏன்? இது பூமியிலும் இருக்கிறது. ஆனால் இங்கே இருக்கும் ஒன்று நிலவில் இல்லை. அது ஈரப்பதம். எனவே சந்தேகர்கள் நாசாவின் இந்தக் கூற்றை மறுக்கிறார்கள்.

சந்தேகம் 10. வான் ஆலன் கதிர்வீச்சுப் பாதை.

நிலவுக்குச் செல்ல வேண்டிய பாதை அத்தனை இலகுவானதும் இன்பமயமானதும் அல்ல. நிலவு செல்லும் எந்த விண்கலமும் அதிலுள்ள விண்வெளியாளர்களும் வான் ஆலன் என்ற மிகக் கடுமையான கதிர்வீச்சுப் பாதையை கடந்து செல்லவேண்டும். இது  Van Allen Radiation Belt என்று அழைக்கப்படுகிறது.  இந்தப் பகுதி பூமியின் காந்த ஈர்ப்பு சக்தியினால் நிலவைச் சுற்றி ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது. எப்போதும் மாறாதது. அப்போலோ திட்டங்கள் முதன் முதலாக மனிதர்களை இந்த ராட்சஷ கதிர்வீச்சுப் பாதைக்குள் செலுத்தின. இதைத்தான் சந்தேகர்கள் மறுகிறார்கள். வான் ஆலன் பெல்ட் பகுதிக்குள் நுழையும் எந்த மனிதனும் நொடியில் அந்த மிக சக்திவாய்ந்த கதிர்வீச்சின் வெப்பத்தில் உயிரோடு அவியலாகிவிடுவான். எத்தனை அடுக்குகளாக அலுமினியம் பூசப்பட்ட விண்கலமாக அது இருந்தாலும் இதுதான் அவனுக்கு ஏற்படும்  கதி. சந்தேகர்களின் கூற்றுப்படி இந்த வான் ஆலன் பெல்ட் பகுதியை மனிதன் தாண்டிச் செல்லக்கூடிய அந்த விந்தையான அறிவியல் தொழில்நுட்பம் இன்றுவரை நமக்கு கைகூடவில்லை. எனவே மனிதன் நிலவுக்குச் சென்றான்  என்பது ஒரு புனைவான நிகழ்வு என்று தீர்மானமாகச் சொல்கிறார்கள்.

நாசா இதற்கு ஒரு வினோதமான பதிலை கொடுத்தது. அதாவது மிகக் கடுமையான கதிர்வீச்சுப் பாதையான வான் ஆலன் பெல்ட் பகுதிக்குள் அமெரிக்க வின்வெளியாளர்கள் நீண்ட நேரம் பயணம் செய்யாமல் வெகு குறைந்த நேரத்தில் அவர்கள் அந்தப் பகுதியை கடந்து செல்லும்படி அவர்களது விண்கலம் ப்ரோகிராம் செய்யப்பட்டிருந்தது. எனவே அவர்கள் குறைவான கதிர்வீச்சு பாதிப்புடன் தங்களை பாதுகாத்துக்கொண்டனர் என்று நாசா விளக்கம் சொல்லியது.

பிற தகவல்:   2014 இல்  நாசாவைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி," முதலில் நாம் வான் ஆலன் பெல்ட் போன்ற கடுமையான அபாயகரமான கதிர்வீச்சுப் பாதைகளில் எவ்வாறு மனிதர்களை பாதுகாப்பாக அனுப்புவது  என்ற அறிவைப்  பெறுவது அவசியம். அதன் பிறகே நம்மால் மனிதர்களை வேறு கிரகங்களுக்கு வெற்றிகரமாக அனுப்பமுடியும். இந்த அறிவு சாத்தியப்படும் நாள் வெகு தூரமில்லை" என்று தெரிவித்திருந்தார். பின் வேறெந்த அறிவையும் தொழில் நுட்பத்தையும் கொண்டு 69 லேயே மனிதனை நாசா நிலவுக்கு அனுப்பமுடிந்தது? என்று சந்தேகர்கள் தற்போது  தீவிரமாக குரலை உயர்த்த ஆரம்பித்துவிட்டார்கள்.

 பொதுவாக இந்த நிலவு சாகசத்தை நம்பாதவர்கள் எழுப்பும் கேள்விகளே மேலே இருப்பவை. இது  தவிர இன்னும் சில கேள்விகள்  இந்தப் பட்டியலில் உண்டு. இப்போது நாம் மற்றொரு கோணத்தையும் பரிசீலித்துவிடுவது தேவையாக இருக்கிறது.

ஸ்டான்லி குப்ரிக் தொடர்பு. (The Stanley Kubrick link)





நிலவில் மனிதனை அனுப்பிய அந்த அப்போலோ நிகழ்ச்சி ஒரு நாடகம்/செட்டப்  என்று சொன்னால் அதை அத்தனை தத்ரூபமாக நிஜம் போலவே எடுத்தது யார் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுவது ஒரு கண்டிப்பான அடுத்த கட்டம். இதற்கான பதிலையும் அதே சந்தேகர்கள் சொல்லிவிட்டார்கள்.

   நிலவில் மனிதன் இறங்கியதை படம் பிடித்தது ஸ்டான்லி குப்ரிக் என்னும் தனித்துவம் வாய்ந்த ஒரு அமெரிக்க இயக்குனர். இந்த ஸ்டான்லி குப்ரிக் The killing, Spartacus, Lolita, Dr.Strange Love போன்ற மிகப் புகழ் பெற்ற பல படங்களை இயக்கியவர். உதாரணமாக இன்றளவும் ஹாரர் என்ற ஜான்ரவில் (Genre) பலரால் முதலிடம் என்று கருதப்படும் தி ஷைனிங் (The Shinning) என்ற படத்தை இயக்கியவர் இவர்தான்.  இவர் போட்ட பாதையில்தான் பின்னாளில் மார்டின் ஸ்கோர்ஸசி, குவாண்டின் டாரண்டினோ போன்ற இன்றைய இயக்குனர்கள் உலா வர முடிந்தது. 1968 இல் இவரது இயக்கத்தில் வந்த படம் ஒன்று அப்போது ஒரு மாபெரும் சகாப்தமாக பெயர் பெற்றது. இன்று ஆயிரம் State Of The Art தொழில் நுட்பம் கொண்டு அவதார் போன்ற படங்கள் எடுக்கப்பட்டாலும் குப்ரிக்கின் 2001:The Space Odyssey படத்தையே பலர் science fiction ஜான்ரவின் அதி நவீனம் என்று சொல்கிறார்கள். நோலனின் Interstellar படத்தைக் காட்டிலும் குப்ரிக்கின் ஸ்பேஸ் ஒடிசியே மிகச் சிறந்த படம் என்று பெருவாரியான "மேல்தட்டு" வர்க்கத்தினர்  கூறுகிறார்கள்.

   இந்த 2001 ஸ்பேஸ் ஒடிசி   1968 இல் அதுவரை  மக்கள் காணாத அறிவியல் சாகசத்துடன்  வழக்கமான சை-பை போலில்லாது முற்றிலும் வேறு விதமாக இருந்தது. இப்படம் பார்த்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஸ்பீல்பெர்க் இது பற்றி  "எங்கள் தலைமுறை பிக் பேங் இந்தப் படம்" என்று சொல்கிறார். அத்தனை மகத்தான படமாக இது இருந்தது. சொல்லப்போனால் இன்னும் இருக்கிறது. இப்போது எதற்காக ஸ்பேஸ் ஒடிசி பற்றி ஒரு பத்தி என்கிறீர்களா? காரணம் இல்லாமலில்லை.

  சிலர் இந்தப் படத்தைக் கண்ட நாசா  தங்களது நிலவு திட்டத்திற்காக புனைவாக ஒரு சிறு படம் எடுக்க குப்ரிக்கை அணுகியது என்கிறார்கள். படத்தில் எடுக்கப்பட்டிருக்கும் நிலவு தொடர்பான காட்சிகளைக் கண்ட நாசா அதுவரை அத்தனை துல்லியமாக விண்வெளியை யாரும் காட்டியதில்லை என்ற உண்மைக்காக  குப்ரிக்கை தங்கள் திட்டத்திற்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டதாக சொல்கிறார்கள். இன்னும் சிலர் குப்ரிக் நாசாவினால் பெரிய அளவில் வணிக ரீதியாக உதவி செய்யப்பட்டு, வளர்க்கப்பட்டு,   நிலவு திட்டத்துக்கான  ஒத்திகையாக  உருவாக்கிய படமே ஸ்பேஸ் ஒடிசி என்று ஆணித்தரமாக நம்புகிறார்கள்.

  இவர்களின் கூற்றில் ஒதுக்கித் தள்ள முடியாத பல உண்மைகள் உள்ளன. ஸ்பேஸ் ஒடிசி படத்திற்கான ஸ்பெஷல் கேமரா (விண்வெளியை தத்ரூபமாக படம் பிடிக்கவேண்டி) நாசாவினால் கொடுக்கப்பட்டது. இந்தப் படம் ஆரம்பித்த வருடம் 1964. அதே வருடம்தான் நாசாவின்  கனவுத் திட்டமான நிலவு மிஷன் -அப்போலோ 11 க்கான துவக்கமும் ஆரம்பித்தது. மேலும் சுவாரஸ்யமாக விஞ்ஞானி பிரெடெரிக் ஒர்ட்வே (Frederick Ordway) என்பவர் ஒரே சமயத்தில் நாசாவின் அப்போலோ 11 மிஷனிலும் குப்ரிக்கின் ஸ்பேஸ் ஒடிசி படத்தின் முக்கியமான விஞ்ஞான ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். இது தவிர இன்னும் பல கோடுகள் நாசாவின் அப்போலோ 11 நிலவு திட்டத்தையும் குப்ரிக்கின் அசாத்திய மூளையையும் இணைக்கின்றன. அவற்றை விரிவாக சொன்னால் கட்டுரை வேறு வடிவத்துக்கு மாறிவிடும்.

  அப்போலோ 11 சாகசம் குப்ரிக்கினால் ஸ்டூடியோ ஒன்றில் எடுக்கப்பட்டு, விண்வெளியிலிருந்து நேரலையாக நாசாவினால் ஒளிபரப்பானது என்பது சந்தேகர்களின் நம்பிக்கை. இவர்களில் பலர் ஒட்டுமொத்த அப்போலோ மிஷன் எல்லாமே ஒரு பெரிய கண் துடைப்பு என்று அதிரடியாக அறிவிக்கிறார்கள். இப்போது சில சாத்தியங்களை ஆராயலாம்.

  சாத்தியம் 1. பூமியின் சுற்றுவட்டப் பாதையத்தாண்டி மனிதனால் விண்வெளியில் பயணம் செய்ய முடியாது. அடையாளம் தெரியாத பலவிதமான அபாயங்கள் அண்டவெளியில் அடைந்துகிடக்கின்றன. இதில் அமெரிக்கா நிலவுக்கு மனிதனை அனுப்பியதாக சொல்வது வெறும் கட்டுக்கதை.

     சாத்தியம் 2. அப்போலோ 11 நிலவுக்குச் செல்லவில்லை. அது பூமியின் சுற்று வட்டப் பாதையிலேயே பாதுகாப்பாக வலம் வரும்படி ப்ரோக்ராம் செய்யப்பட்டு, குப்ரிக்கின் நிலவுக் காட்சி நாசாவினால் நேரலையாக ஒளிபரப்பானது.

      சாத்தியம் 3. நிலவுக்கு மனிதர்கள் சென்றார்கள். ஆனால் அது நாசா நமக்குக் காண்பித்த மாதிரி அல்ல. உண்மையில் நிலவில் மனிதன் என்ன செய்தான் என்பதையே நாசா வெளியிடவில்லை.

   சாத்தியம் 4. நிலவுக்கு மனிதன் செல்லும் அந்த தொழில் நுட்பம் நாசாவிடம் அப்போது கிடையாது.

   பெரும்பாலானவர்கள் நிலவுக்கு மனிதன் சென்றதை மறுப்பதில்லை. அப்படி மறுப்பவர்களை கேலி செய்வதுண்டு. இப்போது ஒரு விவாதத்திற்காக நாசா முழு உலகையும் ஏமாற்றி இருக்கிறது என்று வைத்துக்கொண்டால், ஏன் என்ற கேள்விக்கு விடை தேடுவது அவசியமாகிறது. அமெரிக்கா வணிக வகையில் இதனால் எத்தனை டாலர் அடைந்திருக்கும்? சொல்லப்போனால் அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் ஏகப்பட்ட பில்லியன் டாலர் செலவில் இந்த நிலவுத்  திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அமெரிக்கா பணத்திற்காக இதை செய்தது என்பது அபத்தம்.

பின் ஏனிந்த நிலவு மோசடி?

காரணம்  ரஷ்ய- அமெரிக்க நிழல் யுத்தம். இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவான  ரஷ்ய- அமெரிக்க நாடுகளுக்கிடையேயான நிழல் யுத்தத்தில்  (பனிப் போர் என்பார்கள்) அமெரிக்கா வெற்றிபெற்று விட்டதாக மக்களை நம்ப வைக்க இந்த நிலவு சாகசம் தேவைப்பட்டது. உண்மையில் ரஷ்யா அமெரிக்காவைவிட ஒரு டெகட் (decade) விண்வெளி யுகத்தில் முன்னேறி இருந்தது.  சொல்லப்போனால் அமெரிக்காவை காட்டிலும் ரஷ்யாவே முதலில் மனிதனை நிலவுக்கு அனுப்பியிருக்கவேண்டும். ஆனால் அது நடை பெறவில்லை. அது ஏன்? விடை வெகு சுலபம். நிலவுக்கு மனிதன் செல்லவே முடியாது என்பது ரஷ்யர்களுக்குத் தெரிந்திருந்தது.  கீழே இருப்பது விண்வெளி யுகத்தில் ரஷ்யர்கள் வெற்றி கண்ட முதல் முயற்சிகள்.

1. முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை. (நாட்சி ஜெர்மனியின் இந்த ராக்கெட் தொழில் நுட்பமே ஐம்பதுகளில் ரஷ்யாவுக்கு விண்வெளிக்குள் பயணிக்க காரணமாக  இருந்தது.)
2. முதல் சேட்டிலைட் - ஸ்புட்னிக் 1.
3. பூமியின் சுற்றுவட்டப் பாதையில் முதல் உயிரினம் (நாய்) லைகா (- ஸ்புட்னிக் 2)
4. விண்வெளியில் முதல் மனிதன் யூரி ககாரின் (வாஸ்டாக் 1)
5. விண்வெளியில் முதல் பெண் வேலன்டீனா டெரெஷ்கோவா (வாஸ்டாக் 6)
6. முதல் விண்வெளி நடை (space walk) அலெக்சி லியோனொவன்.
7. முதல் நிலவு தொடுகை (impact) -லூனா 2.
8. நிலவின் இருண்ட பக்கம் முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டது - லூனா 3.
9. முதல் ஆளில்லா நிலவு தரையிறக்கம்- லூனா 9.
10. முதல் விண்வெளி ரோவர் - லுநோகொட் 1
11. முதல் நிலவு மண் - லூனா 16.
12.முதல் விண்வெளி நிலையம்- சல்யுட் 1.

     இத்தனை முதல்களை படைத்த ரஷ்யாவினால் நிலவுக்கு  ஒரு மனிதனை அனுப்ப முடியவில்லை என்பது ஒரு முரண். ரஷ்யாவுக்கு முன்னே அமெரிக்கா அந்த அறிவை எட்டிவிட்டது என்றால் அந்த  சாதனைக்குப்  பின் ஏன் வேறு எந்த நாடும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பவில்லை?அமெரிக்காவுக்கு மட்டுமே கிடைத்த கடவுளின் அழைப்பா இந்த அறிவு?

    1969 லிருந்து 1972 வரை ஆறு முறை அமெரிக்க விண்கலங்கள் நிலவில் இறங்கியுள்ளன. மொத்தம் பனிரெண்டு அமெரிக்கர்கள் நிலவில் நடந்து சென்றிருக்கிறார்கள்.  எதோ திருப்பத்தில் இருக்கும் பெட்டிக்கடையில் பால், சர்க்கரை வாங்கிக்கொண்டு வருவதுபோல நான்கு வருட காலத்தில் நினைத்த மாத்திரத்தில் அமெரிக்காவினால் நிலவுக்கு சுலபமாக ஆறு விண்கலங்களையும் 12 மனிதர்களையும் அனுப்பமுடிந்திருப்பது ஒரு விந்தையான "உண்மை".   பிறகு 1972 டிசம்பரில்  அப்போலோ 17 மிஷனுடன் நாசா திடீரென இந்த நிலவுக்குச் செல்லும் அதிசயத்தை இனி அங்கு  தேட ஒன்றுமில்லை என்று ஒரு கருத்தை முன் வைத்து தனது நிலவுத் திட்டங்களை சட்டென்று  முடித்துக்கொண்டது.

 நிலவில் அமெரிக்கக் கொடிகள் பறக்கின்றன. அமெரிக்க விண்வெளியாளர்கள் விட்டுச் சென்ற விண்வெளி மிச்சங்கள் , லூனார் மாட்யூல்கள் என  இந்த சம்பவங்களின் உண்மைத்தன்மையை உணர்த்தும் சான்றுகள் நிரம்பியிருக்கின்றன. பின்னர் எதற்காக இந்த சந்தேகம்? என்ற கேள்வி உண்டாவது இயற்கையே.

 நிலவில் பறக்கும் அமெரிக்கக் கொடிகள் இன்றைய எந்த அதி நவீன டெலஸ்கோப்பினாலும் காண முடியாதவை. மேலும் ஏறக்குறைய 40 வருடங்கள் கடந்துவிட்ட இன்றைய நாளில் அந்தக் கொடிகள் அங்கிருப்பதே சந்தேகம்தான். அப்படியிருந்தாலும் அவை நிலவுத் தூசி படிந்து வெறும் வெண்மையாகவே காட்சியளிக்கும் என்று நாசா தெரிவித்துவிட்டது. மேலும் அமெரிக்கர்கள் விட்டுச் சென்ற விண்வெளி மிச்சங்களுக்கும் இதே கதிதான். இதைத்  துப்பறிய எந்த விண்கலனையும் எந்த நாடும் அனுப்பப் போவதில்லை  என்பதே உண்மை.

     நிலவு சாகசமே ஒரு மிகப் பெரிய பொய் என்றால் அதை அமெரிக்காவின்  பரம வைரியான ரஷ்யா எப்படி கண்டுகொள்ளாமல் விட்டிருக்க முடியும் என்று சிலர் கேட்கிறார்கள். இதை வைத்தே ரஷ்யா அமெரிக்காவை அவமானப்படுத்தியிருக்கலாம் என்பது அவர்களின் கூற்று. உண்மையே. ரஷ்யா நிலவுக்கு மனிதன் சென்றான் என்பதை ஆரம்பம் முதலே நம்பவில்லை. பூமியின் சுற்றுவட்டப் பாதையைத் தாண்டி எந்த மனிதனும் செல்ல முடியாது என்ற விஞ்ஞான உண்மையை ரஷ்யர்கள் அறிந்திருந்தார்கள். இருந்தும் 1969இல் நாசா தனது சாகசத்தை நிகழ்த்தியபோது ரஷ்யர்கள் பெரிய அளவில் எதிர்ப்பில் ஈடுபடவில்லை. காரணம் பல உண்டு.

 முதலாவது ரஷ்யர்களுக்கு அந்த டீப் மூன் டெக்னாலஜி 74இல்தான் சாத்தியப்பட்டது. அதற்குள் நாசா (72இலேயே) தனது நிலவு திட்டத்தை முடித்துக்கொண்டுவிட்டது.

    இரண்டாவது என்னதான் அமெரிக்காவும் ரஷ்யாவும் பரம வைரிகளாக இருந்தாலும் இரண்டு நாடுகளுக்கிடையில் ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் இருந்தது. இரண்டாம் உலகப் போரில் இந்த இரண்டு நாடுகளும் ஜெர்மனியை இரண்டு துண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்ததும், அதனால் கிடைத்த பண பலத்தையும் தொழில் நுட்ப அறிவையும் கொண்டு தங்களை வளர்த்துக்கொள்வதில் அதீத ஈடுபாடு காட்டியதும், இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சொல்லி அதனால் தங்களது வணிக முன்னேற்றம் பாதிப்படைவதையும்  இருவருமே விரும்பவில்லை. ஒரு விதத்தில் ரஷ்யாவின் காம்யுநிஸ்ட் புரட்சிக்கு அமெரிக்கா பண உதவி செய்திருக்கிறது என்ற தகவலே ஒரு அதிர்ச்சியானதுதான். அமெரிக்காவை அவமானப் படுத்தும் எண்ணத்தில் ரஷ்யா தன்னையும் அந்த அவமானதிற்குள் இழுத்து வந்திருக்கும். எனவேதான் அவர்கள் அமைதி காத்தார்கள். இப்படிப் போகிறது சந்தேகர்களின் கருத்து. மறுக்க முடியாத அரசியல் காய் நகர்த்தல். உண்மையாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

     நிலவில் இறங்கிய இரண்டு அமெரிக்க விண்வெளியாளர்களும் பூமிக்குத் திரும்பிய பின் எந்தவிதமான பத்திரிகை, டெலிவிஷன், ரேடியோ பேட்டிகளுக்கும் அனுமதிக்கப்படவில்லை என்பது சற்று திகைக்க வைக்கும் தகவல். நீல் ஆர்ம்ஸ்ட்ராங் அதன் பின் எந்த பொது நிகழ்சிகளிலும் கலந்து கொள்ளாமல் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட குற்றவாளி போல இருந்தது குறித்து சந்தேகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இறுதியில் அவர் மன நோய்க்கு ஆளாகி இறந்ததாக தெரிகிறது. நாற்பது ஆண்டுகளாக உலகை ஏமாற்றிய ஒரு புனைவின் நாயகனாக இருப்பதில் அவருக்கு பெரும் மன சிக்கல்கள் இருந்திருக்கலாம்.

  இதற்கிடையில் சில விஷமிகள் அமெரிக்க விண்வெளியாளர்கள் நிலவில் முஸ்லிம்களின் பாங்கு ஓசையை கேட்டதாகவும், பூமி திரும்பிய பின் ஆர்ம்ஸ்ட்ராங் ஒரு நாள் எங்கோ நடந்து சென்று கொண்டிருந்த போது அதே பாங்கு ஒலியை கேட்டு உடனே தானும் முஸ்லிமாக மாறிவிட்டதாகவும் புரளி பரப்ப, இது ஏகத்து தொடர்ந்து எரிய, இறுதியில் ஆர்ம்ஸ்ட்ராங் ஒரு தன்னிலை விளக்கம் அளித்து தான் ஒரு கிருஸ்துவனாகவே இன்னும் இருப்பதாக தெரிவித்து இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சந்தேகர்களுக்கு இதுவெல்லாம் ஒரு விஷயமே அல்ல. ஏனென்றால் அவர்களைப் பொருத்தவரை அவர் நிலவுக்கு செல்லவேயில்லை. பின் எங்கே முஸ்லிம்களின் பாங்கு ஒலி கேட்பது? இதெல்லாம் நாசா திட்டமிட்டு செய்த நாடகம் என்று  அறிவிக்கிறார்கள். இதன் மூலம் தனது நாடகத்தை நாசா ஒரு உண்மையான நிகழ்வாக திரிக்க முயல்கிறது என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

      ஏறக்குறைய இந்தப் பதிவின் முடிவுக்கு வந்தாகிவிட்டது. இன்னும் பல அதிர்ச்சியான தகவல்கள் இருப்பதால் அதனை அடுத்த பதிவில் எழுத இருக்கிறேன். இறுதியாக ஒரு தகவல்.

     இப்போது நம்மிடமிருக்கும் அந்த   1969 ஆம்  ஆண்டின்  நிலவில் மனிதன் கால் பதித்த நிகழ்வின் காணொளி ஒரு  ரீ மாஸ்டர்ட் டிஜிடல் பதிப்பு. அப்படியானால் அந்த உண்மையான நேரடிப் பதிவின் காணொளி என்னவாயிற்று?

      இதற்கு நாசாவின்  பதில்:  1980 இல் எதேச்சையாக அந்த 1969 ஆம் ஆண்டு நிலவு சாகசத்தின் காணொளி அழிக்கப்பட்டுவிட்டது. அது ஒரு விபத்து போல நிகழ்ந்துவிட்டது.


    நாசாவிடம் எப்போதுமே ஒரு பதில் உண்டு.

   ஆனால் அதை நம்புவதில்தான் இருக்கிறது பிரச்சினை.








அடுத்து : நிலவு நிஜமா?

21 comments:

  1. காரிகன்
    அறிவியல் சார்ந்த பதிவு. ஆயிரம் சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புவதாகவே உள்ளது. இப்பதிவை படித்தபோது சில நாட்களுக்கு முன் செய்தித்தாளில் படித்த செய்தியொன்று ஞாபகத்திற்கு வருகிறது .ஏதோவொரு நிறுவனம் சூரியனில் பிளாட் போட்டு விற்பனை செய்வதாக கொடுத்த விளம்பரத்தை நம்பி போட்டிபோட்டு புக்கிங் செய்தவர்களும் மானிடர்களே . சதுரங்க வேட்டை போல எத்தனை படம் வந்தென்ன. ஏமாற சிலரிருந்தால் ஏமாற்ற பலர் இருக்கத்தான் செய்வார்கள் .அறிந்து பெறுவதுதானே அறிவியல். அதற்காக எல் லாவற்றையும் ஐயமுற பார்ப்பதும் தவறுதானே.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அருள் ஜீவா,
      எல்லாவற்றையுமே அப்படியே ஏற்றுக்கொள்வது மடத்தனம். கடவுளின் கோட்பாடுகளையே கேள்விகளால் துளைத்தெடுக்கும் இன்றைய சூழலில் நிலவில் மனிதன் கால் வைத்தான் என்று அமெரிக்கன் சொல்வதை மட்டும் அப்படியே நம்பவேண்டும் என்று நீங்கள் எண்ணினால் ..... கொஞ்சம் சிந்தியுங்கள்...

      Delete
  2. காரிகன், எதை எழுதினாலும் அதற்குள்ளே ஆழமாகப்போய் முழுகி முத்துக்குளித்து எழுதும் உங்கள் உழைப்பு இதிலும் தெரிகிறது. அதற்கு முதலில் பாராட்டுக்கள்.
    இது பற்றிய கட்டுரைகளை ஏற்கெனவே படித்திருக்கிறேன்.
    இதிலெல்லாம் ஒரு முடிவுக்கு நாம் வந்துவிட முடியும் என்று தோன்றவில்லை. முல்லா நசிருதீன் கதைதான் நினைவுக்கு வருகிறது. 'நீ சொல்கிறாயா? முக்காலும் உண்மை. நீ சொல்வதுதான் முற்றிலும் சரி' ....... உடனே எதிர்தரப்பு தன்னுடைய கருத்தைச் சொல்கிறது. அதனைக் கேட்ட முல்லா 'அப்படியா? அப்படியென்றால் நீ சொல்வதுதான் சரி' என்றாராம். . இதனைக் கேட்ட ஒருவர் "என்ன முல்லா இப்படிச் சொல்கிறீர்? அவர் சொன்னதற்கும் ஆமாம் சரி என்றீர். இவர் சொன்னதற்கும் ஆமாம் சரி என்கிறீரே?" என்றாராம். அதற்கு முல்லா "கரெக்ட். இப்போது நீர் சொல்கிறீர் பாரும்.. இதுதான் சரி என்றாராம். இந்தக் கதை போன்றுதான் என்னுடைய எண்ணமும்.
    இம்மாதிரியான விவகாரங்களினால்தான் இந்தியன் - அதுவும் தமிழன் அவன் பாட்டுக்கு நிலவைப் பார்த்துப் பாட்டுப் பாடிக்கொண்டும், சுட்டபழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா கதையை சிருஷ்டித்துக்கொண்டும், பாட்டியை வைத்து வடை சுட்டுக்கொண்டும் இருக்கிறான். இதெல்லாம் எவ்வளவு சௌகரியம் என்பது இப்போதுதான் புரிகிறது.
    ஆனால் நாசாவை நேரில் பார்த்தவர்கள் சொல்லும் பிரமிப்பு விவரங்களைக் கேட்கும்போது அமெரிக்காவின் விஞ்ஞான சாதனைகளை அத்தனை சுலபத்தில் எடைபோடுவதற்கில்லை என்பதையும் சேர்த்தே புரிந்துகொள்ளவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அமுதவன் சார்,

      இது உண்மை என்று நான் சொல்ல முடியாது. ஆனால் நாசா சொல்வதும் உண்மை என்று நாம் எடுத்துக்கொள்ள முடியாது என்பதே என் கருத்து. என்னைப் பொறுத்தவரை நிலவில் மனிதன் என்பதை நான் 100% நம்பும் ஆசாமியல்ல. உங்களிடம் சுஜாதா கூட இதைப் பற்றி ஏதாவது பேசியிருக்கலாம் என்று தோன்றுகிறது. இருந்தால் அதையும் சொல்லுங்கள்.

      Delete
  3. அருமையான ஆய்வுக் கட்டுரை நண்பரே
    ஆனாலும் ஒரு சந்தேகம் மனதில் தோன்றுகிறது
    நிலவுப் பயணம் வெற்றி எனில்,
    அதனைத் தொடர்ந்து, அடுத்தகட்ட பயணங்கள் ஆராய்ச்சிகள்,
    மீண்டும் மனிதனை நிலவில் நடக்க விடுதல் என்று எந்த முயற்சியையும்
    நாசா எடுத்ததாக தெரியவில்லையே அது ஏன் நண்பரே?
    ஒரு முயற்சி வெற்றி எனில் அதன் தொடர் முயற்சி யே இல்லையே

    ReplyDelete
    Replies
    1. வாங்க கரந்தை ஜெயக்குமார்,

      நிலவில் அமெரிக்கர்கள் மனிதனை அனுப்பினார்கள் என்பது வரலாறு நமக்குச் சொல்லும் செய்தி. ஆனால் உலக மக்கள் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அதை நம்பவில்லை. அவர்களின் பார்வையே இந்தப் பதிவு.

      1969 க்குப் பிறகு அமெரிக்கா ஆறு முறை 12 அமெரிக்கர்களை நிலவுக்கு அனுப்பியுள்ளது. பிறகு 72இல் திடீரென நிலவு திட்டத்தை நிறுத்திவிட்டது. காரணம் நிலவில் புதிதாக கண்டுபிடிக்க எதுவுமில்லை என்பதாக அது சொல்லியது. 2014இல் இந்தியர்கள் அனுப்பிய சந்திராயன் என்ற விண்கலம் நிலவில் ஒரு காலத்தில் நீர் இருந்தததாக கண்டுபிடித்து சொல்லி அமெரிக்க கருத்தை உடைத்துப் போட்டது. ஆனால் இதுவரை நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய ஒரே நாடு அமெரிக்காதான். இதை நாம் நம்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பது நடைமுறையில் நடக்காத காரியம். அது ஏன் அமெரிக்காவுக்கு மட்டுமே இது சாத்தியம் என்பதே சந்தேகர்கள் எழுப்பும் கேள்வி.

      உதாரணமாக எவரெஸ்ட் சிகரத்துக்கு எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நார்கே முதலில் சென்ற பிறகு ஏறக்குறைய நூற்றுக்கணக்கான மலை ஏறுபவர்கள் அங்கே சென்றிருக்கிறார்கள். ஆனால் நிலவுக்கு மட்டும் அந்த டெக்னாலஜி நமக்கு வசப்பட்ட போதிலும் 1969க்குப் பிறகு அமெரிக்கர்களைத் தவிர வேறு ஒருவரும் அங்கே சொல்லவில்லை என்பது லாஜிக்காக சற்று உதைக்கிறது.

      Delete
  4. நமஸ்காரம் அய்யா...
    ஸ்டான்லி குப்ரிக் தனது படங்களின் நெகடிவ்களை மிக கவனமாக எரித்தவர் என்பதும் ஒரு கூடுதல் தகவல்...

    ஒரு நிகழ்வை திரைத்துறை கொண்டு விசுவல் இம்பாக்டை ஏற்படுத்தும் உயர் நுண்ணறிவு செயல் என்று நீங்கள் வாதிடுகிறீர்கள் ..
    ஓகே
    உங்களுக்கு கூடுதல் தகவல்கள்..
    ஆர்கோ பார்த்தீரா?
    அமரிக்க நுண்ணறிவுப் பிரிவு ஒரு திரைப்படத்தைக் காட்டி அவர்களின் அதிகாரிகளை தெஹ்ரானில் இருந்து மீட்டதை படமாகவே எடுத்து அதற்கு ஆஸ்கரும் கொடுத்திருப்பது நினைவில் இடறியது...

    ஏமாற்றுவது வரலாறாக இருக்கிறதா அமெரிக்காவிற்கு ?

    ReplyDelete
    Replies
    1. வாங்க மது,

      நிலவு சாகசம் ஒரு புனைவு என்பதை கொஞ்சம் கொஞ்சமாக பலர் இப்போது நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். நாசா இப்போது அதற்கு பல விதமான விளக்கங்கள் கொடுத்தாலும் 70களில் கொடுத்த விளக்கங்கள் மிகையான வேடிக்கைகள். உதாரணமாக நிலவின் சீரற்ற மலை முகடுகளால் பலவிதமான கோணத்தில் நிழல்கள் ஏற்படுவதாக சொன்னது. 2015 ஆம் டெக்னாலஜியை வைத்து பலர் நிலவு சாகசத்தை defend செய்ததாலும் 1970 களில் இதே காரணங்கள் சொல்லப்படவில்லை என்பதே உண்மை.

      ஆர்கோ பார்த்திருக்கிறேன். அது ஒரு நடந்த கதை. சினிமா எடுப்பதாக சொல்லி இரானிலிருந்து ஆறு (என்று நினைக்கிறேன்) அமெரிக்கர்களை பத்திரமாக மீட்டுக்கொண்டு வந்த சாகசம் பற்றியது அது. ஆனால் அதிலும் அமெரிக்க புனைவு உண்டு. அந்த ஆறு அமெரிக்கர்களின் உயிருக்கு பாதுகாப்பாக இருந்த கனடா நாட்டின் பங்களிப்பைப் பற்றி அந்தப் படத்தில் எந்த காட்சியும் இல்லை என்பதை அப்போது கனடா அரசு எதிர்த்து கருத்து வெளியிட்டது.

      saving private ryan என்ற ஸ்பீல்பெர்க் படத்திலும் இதே புனைவான அமெரிக்க தேசபக்தி உண்டு. எதோ அமெரிக்கர்களின் நார்மாண்டி படையெடுப்புக்குப் பிறகே, அதுவும் அமெரிக்கர்களால்தான் இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி சரணடைந்தது என்பதுபோன்ற ஒரு மிகையான கருத்து அதில் இருந்தது. ரஷ்ய, பிரிட்டிஷ் பங்களிப்பு பற்றி அமெரிக்கர்கள் கவலைப்படுவதேயில்லை. உலகமே இவர்களால்தான் நவீனமடைந்தது என்று சொல்லும் கோமாளித்தனமான எண்ணம்.

      Delete
  5. ஹலோ காரிகன்

    பதிவு வாசிக்க சுவாரசியமாக இருந்தது . நிறைய விஷயங்கள் அலசியிருந்தீர்கள். ஆனால் நீங்கள் சொல்லியிருந்த அத்தனையும் உண்மை என்று சொல்வதற்கில்லை.

    ஒரு நாட்டின் விண்வெளித் துறையும் அணுசக்தித் துறையும் எப்போதும் எல்லா செய்திகளையும் வெளியில் எடுத்துரைக்காது. அதற்கு பல அரசியல் காரணங்கள் இருக்கலாம் .

    அறிவியலில் இப்போது இருக்கும் விதிகள் இன்னொருவரால் மாற்றப்படலாம். அப்படிதான் பல அறிவியற் கொள்கைகள் எடுகோள்கள் எல்லாமே மாறி வந்திருக்கின்றன.

    ஹாலிவுட் திரைப்பட வித்தகர்களால் செட் போடப்பட்டு நிலவில் இறங்கியது மாதிரியான காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை சிலர் நம்பினாலும் நிலவிற்கே அனுப்பப்படவில்லை என்று சந்தேகிக்கும் சந்தேகர்கள் ( சரியான வார்த்தைதானா? ) கொஞ்சம் அதிகப்படியாக யோசிக்கிறார்கள் எனலாம்.

    ///பூமியின் சுற்றுவட்டப் பாதையத்தாண்டி மனிதனால் விண்வெளியில் பயணம் செய்ய முடியாது. அடையாளம் தெரியாத பலவிதமான அபாயங்கள் அண்டவெளியில் அடைந்துகிடக்கின்றன.///

    இந்தியன் தனது விண்வெளி பயணத்தில் வெற்றி அடைந்திருக்கிறான் . சுற்று வட்டப்பாதையை தாண்டி பயணம் செய்ய முடியாது என்பது தவறு. நேர்கோட்டுப் பாதையில் பயணம் செய்ய முடியாது .

    நிலவில் நடப்பது சாத்தியமா என்பதையும் சொல்லமுடியாது . எடை இழந்த நிலையில் காலூன்றி அடுத்த அடி எடுத்து வைப்பதே கடினமானதென்பதால் குதித்துக் குதித்து சென்றதாக கேள்விப்பட்டதுண்டு.

    அதனால் நிலவிற்கு மனிதன் சென்று இறங்கியதில் உண்மை பொய் இரண்டும் கலந்துள்ளது . எதன் சதவீதம் அதிகம் என்பதுதான் தெரியவில்லை . அடுத்தப் பதிவில் என்ன interpretation இருக்கப் போகிறது என்பதை பார்க்க ஆவலாய் உள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்டான்லி குப்ரிக்கின் ஸ்பேஸ் ஆடிசி படத்திற்கு ஸ்பாயிலர் எழுதும் பொழுதே அய்யா காரிகன் இதைக் குறிப்பிடிருந்தார்...இப்போது விரிவாக எழுதியிருக்கிறார்.
      இப்படியும் வாய்ப்பு இருக்கிறது...
      இதில் பல்வேறு அனுகூலங்கள் இருக்கின்றன அமரிக்காவிற்கு

      Delete
    2. வாங்க சால்ஸ்,

      நான் கேள்விப்பட்டதையும் படித்ததையும் ஒருங்கே சற்று தொகுத்து எழுதியிருக்கிறேன். அவ்வளவே. மற்றபடி இது என் சொந்தக் கருத்து அல்ல. ஆனால் இதை முழுவதும் கற்பனை என்றும் நான் ஒதுக்கிவிடமாட்டேன். அமெரிக்கா ஈடுபட்டு வரும் பல திரை மறைவு நாடகங்களில் இதுவும் ஒன்றாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. நிலவு சாகசத்தை நம்பாத மக்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதே இதற்கு சான்று.

      அடுத்த பதிவு குறித்து ஆவலாக இருப்பது கண்டு மகிழ்ச்சியே. நம்ப கடிமனான தகவல் கொண்டது இதன் தொடர்ச்சி.

      Delete
  6. என்ன காரிகன் , அமெரிக்க பக்கம் போய் விிட்டீர்கள். நம்ம ஆளுங்க நிலவுக்கு ராக்கெட் அனுப்பி தண்ணீர் இருக்கு என்று கண்டு பிடிக்காலாயா? அதுவும் பொய்யா?


    ReplyDelete
    Replies
    1. இயந்திரத்தை அனுப்புவது வேறு உயிருள்ள மனிதர்களை அனுப்புவது வேறு

      Delete
  7. காரிகன் அவர்களே ! நல்ல அருமையான ஆழ்ந்த விவாதங்கள் உள்ளடக்கிய கட்டுரை. இந்த தகவல்களை ஏற்கனவே வாசித்திருந்தாலும், தாங்கள் தமிழில் பகிர்ந்துள்ளது சற்று நல்ல புரிதலைத் தருகின்றது எனலாம். ரஷ்யாவும், அமெரிக்காவும் என்றுமே பனிப்போர் நடத்துபவையே. இதில் இரு பக்கமும் உண்மையும், பொய்யும் கலந்து வருபவையே. சில அறிவியல் விளக்கங்கள் சரியாக தோன்றவில்லை. உதாரணமாக பூமியின் சுற்றுவட்டப்பாதையைக் கடந்து விண்வெளியில் பயணிக்க முடியாது என்பது. நம் ராகேஷ் ஷர்மா சென்று வந்தாரே....

    பலதகவல்கள் பல சமயங்களில் உண்மையான தகவல்களை வெளியிடாமல் ரகசியமாக நாடுகள் காக்க நினைக்கலாம்....நமக்கு ஊடகங்களில் வெளி வருபவைதானே அறியமுடிகின்றது...

    ஆனால் கட்டுரை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

    ஆ அடுத்து நிலவு நிஜமா ? ஐயகோ அது பொய்யானால் நம் கவிஞர்கள் என்ன ஆவார்கள் ஹஹஹ்...தொடர்கின்றோம்

    ReplyDelete
    Replies
    1. ஒரு நாடகத்தை ஆங்கிலத்தில் அற்புதமாக எழுதிய ஆங்கில ஆசிரியர் நீங்கள் ...
      தமிழில் எழுதியதால் நன்றாக இருக்கிறது புரிகிறது என்று நீங்கள் எழுதியிருப்பது ...
      தாய்மொழி குறித்த புரிதலை சற்று அகலப் படுதியிருக்கிறது

      Delete
    2. வாங்க துளசிதரன்,

      பாராட்டுக்கு நன்றி.

      நிலவு பற்றிய புனைவுகள் நிறையவே உண்டு. நிலவு பொய் என்றால் பல கவிஞர்கள் பாடு பாவம்தான் நீங்கள் சொன்னபடி. நிலாவே வா என்று பாடியதெல்லாம் வெறும் இலூஷன் என்றாகி விடும்.

      Delete
  8. அமெரிக்க நாசா நாடகம் உண்மை தான்...
    தங்களது விரிவான அலசலை வரவேற்கிறேன்.

    முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
    http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜீவலிங்கம்,( என்ன நீளமான பெயர்?)

      வருகைக்கு நன்றி. மீண்டும் வரவும்.

      Delete
  9. வாங்க மது,

    வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.

    ஸ்டான்லி குப்ரிக் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் படித்திருக்கிறேன். என்னைப் போலவே நீங்களும் இந்த நிலவு சாகசத்தை சந்தேக கண்ணோடு பார்ப்பதாக நினைக்கிறேன். பல நிகழ்வுகள் குறித்து விமர்சனங்கள் எழுவது தேவையானதே. இல்லாவிட்டால் வரலாறே கற்பனையாகிவிடும் அபாயம் இருக்கிறது.

    ReplyDelete
  10. http://tamil.gizbot.com/news/reasons-the-moon-landings-could-be-hoax-tamil-010197.html

    probably your write up made them do it.

    ReplyDelete
  11. அருமையான பதிவு உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete