Sunday, 31 January 2016

ஒரே முகம்

தமிழ்த் திரையின் இரண்டு மகா நடிகர்களைப் பற்றிய சற்றே நீண்ட பதிவு. அல்லது சிலர் சொல்வதுபோல ஒரு சிறிய கட்டுரை. எனது பார்வையில் அவர்கள்.
 
                                                     
                                        


                                             ஒரே முகம் 

                                 

     இந்த  பொங்கல் விடுமுறையின் ஒரு  நாளில் (மாட்டுப் பொங்கல் என நினைவு)  டிவியில் இரண்டு படங்களை பார்க்க நேர்ந்தது. ஒன்று பழைய படம். மற்றது அதை விட ரொம்ப பழைய படம். திரைப்படங்களை வரிவரியாக விவரித்து மொத்தக் கதையையே சொல்லும் விதமான விமர்சனத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அன்று நான் பார்த்த அந்த இரண்டு படத்திற்கும்  இருப்பதுபோல தோன்றும் ஆனால் இல்லாத ஒரு   ஒற்றுமை என்னை இந்தப் பதிவை எழுதத் தூண்டியது. தவிர, மிக நீண்ட நாட்களாகவே இப்படியான ஒரு பதிவை எழுத நினைத்திருந்தேன். தமிழ்த்திரையின் இரண்டு பிரமாண்டமான ஆளுமைகள் குறித்து என் பார்வையை பதிவு செய்யவேண்டும் என்ற என்னுடைய விருப்ப விதைக்கு  தண்ணீரும் வெளிச்சமும் பாய்ச்சியது இந்தப் படங்கள். இந்தப் பொங்கலில் இந்த இரண்டு படங்களும் ஒரே தினத்தில் ஒளிபரப்பானது ஒரு எதேச்சையான ஆச்சர்யம். ஒரு திடும் திகைப்பு. உடனே என் மூளையின் நியூரான்களில் படிந்திருந்த அந்தப் பழைய எண்ணம்  உயிர் பெற்று எழுந்து என் விரல்களுக்குள் சென்று வார்த்தைகளாக வடிவம் பெற்றது.  

    நான் மேலே குறிப்பிட்ட அந்த இரண்டு படங்களில் முதலாவது  2008இல் வெளிவந்த கமலஹாசன் நடித்த தசாவதாரம். இரண்டாவது 1964இல் வந்த சிவாஜி நடித்த நவராத்திரி. ஒன்று  மேற்கத்திய சாயல் போர்த்திய அதீத அபத்தம். மற்றொன்று  நம் மண் மணம் வீசும் மகத்துவமான ஆச்சர்யம். இந்த இரண்டு படங்களும் வெவ்வேறு தளங்களில், பரிமாணங்களில் பயணித்து இரு துருவங்களான இலக்குகளை நோக்கி நகர்பவை.சொல்லப்போனால் ஒப்பீட்டளவில் இந்த இரண்டு படங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.  ஆனால் இரண்டுக்கும் உள்ள அந்த nonexistent similarity  என நான் குறிப்பிட்டது பல முகங்கள் காட்டும் ஒரு நடிகனின் தாகம் பற்றியது.  இந்த இரண்டு படங்களின் ஆதாரமான அம்சம் இதுவே.

    தசாவதாரம் ஒரு பேராசைக் கனவு. சிவாஜி என்ற மகா நடிகனின் உயரத்தைத் தாண்டியாக வேண்டும் என்ற  கமலஹாசனின் மன ஆழத்தில் உழன்று கொண்டிருக்கும்   நெருப்புக் கனலை   மட்டுமே  தசாவதாரத்தில் காட்சிக்குக் காட்சி காண முடிந்தது. நீ என்ன பெரிய ஆளா? நீ ஒன்பது வேஷம் கட்டினா நான் பத்து வேஷம் காட்டுவேன் என்ற சிறுபிள்ளைத்தனமான முஷ்டி மோதல் போல கமலஹாசன் இந்தப் படத்தைத் தீர்மானிக்கவில்லை என்று எண்ணத் தோன்றினாலும் அதுதான் இந்தப் படத்தின் பின்னே உறைந்திருக்கும் உண்மை. கமலஹாசனின் பகட்டான  மேதாவித்தனம் ஏகத்துக்கும் விரவிக்கிடக்கும் காட்சியமைப்புகளைக் கூட மன்னித்துவிடலாம். ஆனால் அவரது அந்த பத்து கதாபாத்திரங்கள் என்ற விபரீத விருப்பத்தை எந்தவித விமர்சனமும் செய்யாமல்  வெறுமனே வாயை மூடிக்கொண்டு கடந்து சென்றுவிட முடியாது.

     படம் வந்த போது அதை திரையரங்கில் பார்க்க சற்றும் விருப்பம் கொள்ளவில்லை. படம் பற்றிய விமர்சனங்கள் படித்தபோது நான் சிறு வயதில் படித்த வைரஸ் X என்ற ஒரு முத்துக் காமிக்ஸ் கதை என் நினைவுக்கு வந்தது. என் அபிமான காமிக்ஸ் கதாநாயகன் காரிகன் ஒரு கொள்ளைக்காரன் வேடம் கொண்டு எதிரிகளின் கையில் சிக்கிக்கொண்ட அபாயகரமான  அழிவுக் கிருமிகள் அடைக்கப்பட்ட ஒரு கண்ணாடிக் குப்பியை  வெற்றிகரமாக மீட்டு வரும் சாகசம் அது. இதை படமாக எடுத்தால் கண்டிப்பாக பிரமாதமாக இருக்கும் என்று அப்போது நினைத்ததுண்டு. கமலஹாசன் அந்தக் கதையை திருடி தசாவதரமாக்கி விட்டார் என்று நான் ஒரு டிபிகல் பின் நவீனத்துவ  சினிமா விமர்சகன் போல சொல்லப்போவதில்லை. படத்தின் இந்த ஒரு வரிக் கதை துடிப்பான காட்சிகளாக விரிந்து சிறப்பாக மெருகூட்டப் பெற்று  நம்மை வியப்பில் ஆழ்த்தியிருக்க வேண்டும். பரிதாபமாக தசாவதாரத்தில் அது நடைபெறவில்லை. மிஞ்சியது படத்தின் மீது ஏகமான வெறுப்பும் கமல் என்ற நார்சிஸ்ட் நடிகனின் செயற்கைத்தனமான நடிப்பின் மீது ஏளனமும், ஏமாற்றமும், எரிச்சலும்தான்.

       கமலின் அதி பயங்கர பாசாங்கான அறிவுஜீவித்தனம் அவ்வப்போது தலை காட்டினாலும் இறுதிக் காட்சியில் அந்த ஜப்பானியனும், அமெரிக்கனும் மோதிக்கொள்ளும் போது அவர்களின் உரையாடலில் அது தன் முகத்தை காட்டிவிடுகிறது.  அந்த அமெரிக்கன் "Remember Hiroshima?" என்பான். உடனே அந்த ஜப்பானியன் " Remember Pearl Harbour?" என்று பதில் சொல்வான். Allusion to Second World War. ஆனால் எத்தனை அபத்தமான உரையாடல்! திரையில் ஒரு அமெரிக்கனும் ஜப்பானியனும் சண்டை போட்டுக்கொண்டாலும் அந்த முகங்களுக்குப் பின்னே இந்த இரண்டு அழிவு நிகழ்வுகளின் வலிகளோடும் வேதனைகளோடும் கொஞ்சமும் தொடர்பில்லாத ஒருவனின் மனநிலை சிறுபிள்ளைத்தனமாக வெளிப்படுவதை கண்டு எனக்கு பரிதாபம் ஏற்பட்டது. இரண்டாம் உலகப் போரின் மிக மையமான இரண்டு நிகழ்வுகளை குறிப்பாக உணர்த்துகிறாராம்! இதெல்லாம் எனக்குத் தெரியும்டா என்ற தோரணை அதில் அலங்காரமாகத் தெரிகிறது.

   இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்காவும் ஜப்பானும் நெருக்கமாகி இரண்டு நாடுகளுக்கிடையில் வணிக அளவில் நட்புறவும், சந்தை லாபங்களும், நிதி உதவிகளும் ஏராளமாக பெருகின. அமெரிக்கா நேரடியாகவும் மறைமுகமாவும் ஜப்பானுக்கு பொருளாதார வகையில் உதவிக்கரம் நீட்டி தன் ஹிரோஷிமா கரையை துடைக்க முயன்றது. இன்று இந்த இரண்டு நாடுகளும் ஆத்மார்த்த நண்பர்கள். பேர்ல் ஹார்பரையும் ஹிரோஷிமாவையும் தாண்டிய நட்பு இன்று அவர்களுக்குள் சாத்தியமாயிருக்கிறது. இன்றைய தேதியில்  ஒரு ஜப்பானியனும் அமெரிக்கனும் சந்தித்துக்கொண்டால் அவர்களுக்குள் எழும் முதல் எண்ணம் ஹிரோஷிமா, பேர்ல் ஹார்பராக  இருக்கும் என்று நினைப்பது மகா மட்டமான மலிவான அரசியல் சிந்தனை.

   கமல் தேர்வு செய்த இந்தக் கதைக்கு பத்து கதாபாத்திரங்கள் பொருத்தமா என்ற கேள்வி வருகிறது. ஏனென்றால் இது போன்ற பத்து  கதாபாத்திரங்கள் செய்ய விரும்பியவருக்கு எந்த கதையிலும் அதற்கான தளம் இருக்கவே செய்கிறது. மேலும் பத்து என்ன இன்னும் கூட அதிகமான முகமூடிகளோடு அவர் அனைத்து கதாபாத்திரங்களையும்  செய்திருக்க முடியும் என்று தோன்றுகிறது. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷாக அவர் முகமூடி போட்டுக்கொண்டு நடிப்பதைப் பார்த்தபோது நாயகன் படத்தில் அத்தனை இயல்பாக நம்மை ஆட்கொண்டவர்தானா இவர் என்ற கேள்வி எழாமலில்லை. அசின் கூட படத்திற்கு தேவையில்லை. அந்த கூனிப் பாட்டி போல  (என்ன ஒரு பயங்கர மேக்கப்! அதுவும் அருகாமைக் காட்சிகளில் அருவருப்பாகத் தோன்றுகிறது.) அதையும் அவரே செய்திருக்கலாம். கமல் எத்தனை கமலடா என்று வியக்கும் அளவுக்கு அவரது  அராஜக அவதாரம் ஆக்ரோஷமாக ஆனந்தத் தாண்டவமாடுகிறது.  படம்  முடிந்து வெளியே வரும்போது நம் கண்ணில் தென்படும் எல்லோருமே கமலாக இருப்பார்களோ என்று சந்தேகம் வருகிறது என்று இந்தப் படத்தைப் பற்றி ஒரு பதிவர் எழுதியிருந்தார்.

    இந்தியன் படத்தில் கமல் தன் முகத்தின் மீது பூசிக்கொண்ட அந்த மேற்கத்திய முகமூடி தமிழுக்கு அன்றைய காலகட்டத்தில் மிகப் புதிது. அவர் அடைந்த வெற்றிக்கு அந்தத் தோற்றமும் அதற்கான பல மணி நேர வியப்பான உழைப்பும் மிக முக்கிய காரணிகள். அவ்வை ஷண்முகி என்று அவர் அடுத்த முறை பெண்ணாக பரிணமித்தபோது முதல் சலிப்பு ஏற்பட்டது. ஒரு ஆண் பெண்ணாக நடிப்பதென்பது ஒரு தீவிரமான ரசனை மிகுந்த கதைக்கு சற்றும் உதவாத துணை. பின்னர் மொட்டையாகத் தோன்றினார். தாடி வைத்துக்கொண்டு காந்தியைக்  கொல்ல விரைந்தார். முகத்தில் நீண்ட தழும்புடன் உண்மையான கண்ணாடி அணிந்துகொண்டு கடவுள் மறுப்பு பேசினார். அவ்வப்போது  மெட்ராஸ் தமிழில் தனக்கே உரித்தான நலிந்த நகைச்சுவையோடு சில படங்களில் தோன்றினார். பிரெஞ்ச் தாடி வைத்துக்கொண்டு கூத்தடித்தார்.  பிறகு "தசாவதாரம்" எடுத்தார். அது அவரது கோமாளித்தனத்தை வெளிச்சமாக்கியது. "விஸ்வரூபம்" எடுத்து தான் ஒரு சீரியசான ஜோக்கர் என்று நிரூபித்தார்.

  இது எல்லாவற்றையும் ஒரே வீச்சில் வீழ்த்தியது அவர் தனக்கு முன் இன்றுவரை விடாது பிடித்துக்கொண்டிருக்கும் மிக மிக அபத்தமான, மலிவான  அந்த உலகநாயகன் என்ற அடைமொழிதான்.  80களின் மத்தியில் இந்தியாவின் சிறந்த நடிகருக்கான பாரத் விருது அவருக்குக் கொடுக்கப்பட்டதும் தமிழகம் பெரியதாக உணர்ச்சிவசப்பட்டது. அவரது ரசிகர்கள் அவரை அடுத்து என்ன என்று கேட்க, அவர் ஆஸ்கார் என்று சொல்லாமல் சொல்ல, கமல் அன்றைய காலகட்டங்களில் ஆஸ்கார் நாயகன் என்றே அழைக்கப்பட்டார். பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், குணா போன்ற படங்கள் அவரது  ஆஸ்கர் ஆசையை மேன்மேலும் மேலே எடுத்துச் சென்றன. எண்பதுகளில் வாழ்ந்தவர்களுக்கு இந்த உண்மை மிக நன்றாகவே தெரியும். இந்தியாவிலிருந்து ஒரு நடிகன் ஆஸ்கர் விருது பெற்றால் அது கமலஹாசனாகத்தான் இருக்க முடியும் என்ற தமிழர்கள்  திடமாக நம்பியிருந்தார்கள்.  தவிர, கமலின் பேச்சுக்களும், வினோதமான சாகச முயற்சிகளும் அதை உறுதி செய்தவண்ணம் இருந்தன.

  ஆஸ்கர் என்பது அமெரிக்கர்கள் தங்கள் படங்களுக்குக் கொடுத்துக்கொள்ளும் ஒரு லோக்கல்  விருது என்பதும் அதில் சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற  ஒரே ஒரு பிரிவில் மட்டுமே மற்ற மொழித் திரைப்படங்கள் அனுமதிக்கப்பட்டு ஒரே ஒரு ஆஸ்கர் விருது  ஆங்கிலமல்லாத ஒரு திரைப்படத்திற்கு வழங்கப்படும் என்ற நிதர்சனமும்  வெளியே தெரியவந்தபோது கமலஹாசனுக்கு ஆஸ்கார் நாயகன் என்ற அந்தப் அடைமொழியின் மீது கடுமையான ஆத்திரம் ஏற்பட்டிருக்கவேண்டும்.  90களின் மத்தியில் அவர் பேச்சில் ஆஸ்கர் கனவு பற்றிய குறியீடு ஏளனமும் நக்கலுமாக வெளிப்பட்டது.  இதற்குள் ஆஸ்கார் நாயகனுக்கும் மேலே அவர் ஆசைப்பட்ட அடைமொழியாக உலக நாயகன் என்ற புதிய பட்டம்  கமலின் நார்சிஸ்ட் மனோபாவத்திற்கு பொருத்தமாக அமைந்துவிட்டது.  நான் ஆஸ்கருகும் மேலே என்று வழக்கமாக யாருக்கும் எளிதில் புரிந்துவிடாது கவனமாகப் பேசும் பாணியில் மக்களுக்குப் புரியவைத்தார்.

      இதற்கிடையில் சற்றும் சத்தமில்லாமல் ஒரு தமிழன் மெட்ராசிலிருந்து, லண்டன் வழியே லாஸ் ஏஞ்செலஸ்சை தன் இசையால் அடைந்தான். அவன் கைகளில் இரண்டு ஆஸ்கர் விருதுகள் தஞ்சமடைந்தபோது கண்டிப்பாக தமிழகத்தில் இருவருக்கு தூக்கம்  தூரமாக இருந்திருக்க வேண்டும். அந்த இருவரில் ஒருவர் யார் என்று நான் சொல்லத்தேவையில்லை. அவர் பற்றி பேசினால் இதைப் படிக்கும் பலருக்கு தூக்கம் போய்விடும்.  அது தமிழகமே அறிந்த உண்மை. மற்றவர் ஆஸ்கார் நாயகன் என்று தன் ரசிகர்களால் மிக பெருமையுடன் அழைக்கப்பட்ட கமலஹாசன். ரஹ்மானை ஆஸ்கருக்காக கமலஹாசன் பாராட்டவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட பின்னரே --அதிலும் தன்னுடைய முத்திரை நையாண்டியுடன்தான் -- அவரால் அதைச் செய்ய முடிந்தது என்ற நிகழ்வே இதற்குச்  சான்று.

  கமல் என்ற பன்முகம் கொண்ட ஆளுமையின் மீது நான் நடத்தும் ஏவுகணைத் தாக்குதல் அல்ல இது. அவர் வட்டம் வெறும் நடிப்பு என்று முடிவடைவதில்லை. புதிய இலக்குகளை நோக்கி அவரது சுழற்சி பாய்ந்துகொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் நடனம் என்றால் அது கமல்தான் என்ற விதி தமிழ்த் திரையில் இருந்தது. பிரபுதேவாவின் பிரவேசத்திற்குப் பிறகு கமல் நடனமாடுவதை ஏகத்துக்கும்  குறைத்துவிட்டார். அதைப் பற்றி பேசுவதே கிடையாது. இப்போது கமல் நன்றாக நடனம் ஆடுவார் என்பது பலருக்கு ஒரு புதிய தகவலாக இருக்கலாம். உத்தம வில்லன் படத்தின் துவக்கத்தில் அவர் போடும் அந்த இளமை ததும்பும் நடனத்தை அவரது ரசிகர்களே "இதெல்லாம் இவருக்கு தேவையா?"என்றே பார்த்தார்கள்.

   நடனம், நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, பாடல், இசை, ஒளிப்பதிவு, போன்ற தளங்களும் சினிமாவின் பின்னணியில் இருக்கும் நுட்பங்களும், நவீன அறிவியல் பார்வையும், சமூக கண்ணோட்டமும், வணிக வெற்றியை மட்டுமே எண்ணாத கலைத் தாகமும், தமிழ் சினிமாவை வேகமாக வேறு கட்டங்களுக்கு  நகர்த்த விரும்பும் வெறியும், இன்ன பிற சாகச சிந்தனைகளும், அபிலாஷைகளும் ஒருங்கே தனக்குள் அடக்கிவைத்திருப்பவர் கமல். எல்லாம் இருந்தாலும் பிரதானமாக அவர் ஒரு நடிகர். அவரின்  அந்த ஒரு முகத்தை மட்டுமே என்னால் விமர்சனத்திற்கு உட்படுத்தமுடியும்.

    தான் செல்லவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருப்பதாக அவர் சொல்வதன் மூலம்  நம்மை மூர்ச்சையடைய வைக்கும் ஏராளமான பரிசோதனைகளுக்கு அவர் இன்னும் தயாராக இருப்பதாக நாம் அர்த்தம் செய்துகொள்ளலாம். வாழ்த்துக்கள் என்ற ஒரு வார்த்தையோடு நான் சற்று விலகிக் கொள்கிறேன்.

      நான்  இத்தனை விமர்சித்தாலும் ஒரு முரணாக என் பள்ளிக் காலங்களில் என் அபிமானத்துக்குரிய  ஒரே நடிகனாக இருந்தவர்  இதே  கமலஹாசன்தான். சிறுவர்களுக்கே உரிய ரசனையின் வெளிப்பாடாக  ரஜினிகாந்த்தின் கோமாளித்தனமான வித்தைகள் மீது துவக்கத்தில் ஈர்ப்பு இருந்தாலும் சலங்கை ஒலியில் கமலஹாசனின் நடிப்பு என் மீது புதிய கவிதை எழுதியது. எனது விழிகள் வியப்பில் மூழ்கின. இதாண்டா நடிப்பு என்று குதியாட்டம் போடாமல் மென்மையாக, அமைதியாக  எனக்குப் பிடித்த நடிகன் என மானசீகமாக என் மனதில் அவர் பெயரை வரைந்துகொண்டேன். மூன்றாம் பிறை படத்தை கல்லூரி நாட்களில்தான் பார்க்க முடிந்தது. (அதுவரை அதைப் பார்ப்பதற்கு   வீட்டில் எனக்குத் தடை இருந்தது.) அது கமல் என்ற பிம்பத்தின் மீது மற்றொரு மகுடம் சூட்டியது. இத்தனை இயல்பாக நடிக்கக் கூடிய ஒரே நடிகன் கமல்தான் என்ற எனது எண்ணம் வலுப்பெற்றது. அந்த சமயத்தில் கமல் மிகவும் அலட்டலாக  நடித்த விக்ரம்  கூட எனக்குப் பிடித்திருந்தது.  அவர் மீது ஒரு அடர்த்தியான அபிமானம் அசைவற்று நின்றது.   அதன் விளைவாக கீழ் கண்ட உரையாடல்கள் சாத்தியமாயின.

நண்பர்கள்;  சிவாஜி என்னாமா நடிக்கிறான் பாரு? சிவாஜிய அடிச்சுக்க ஆளே கிடையாது.
நான்; சிவாஜியெல்லாம் ஒரு நடிகனா? அலட்டல் நடிப்பு. அழுதுகிட்டேயிருப்பான்.
நண்பர்கள்;  நீ சிவாஜி படம் ஏதாவது பார்த்திருக்கியா?
நான்;  ஏ இல்ல? லாரி டிரைவர் ராஜாக் கண்ணு, திரிசூலம், வெற்றிக்கு ஒருவன், ரத்த பாசம்,கருடா சௌக்கியமா?, சந்திப்பு, சங்கிலி, ...
நண்பர்கள்;  பழைய படம் ஏதாவது?
நான்;  இத பாத்தே பாதி செத்தாச்சு. இதில அது வேறயா?
நண்பர்கள்;  வேற யார் தாண்டா நல்லா நடிக்கிறா?
நான்;  கமல்.
நண்பர்கள்;  சிவாஜியை  விடவா?
நான்;   ஆமா. சிவாஜியை விட கமல் நல்லாவே நடிக்கிறான். அவந்தாண்டா நடிகன்.

   ஜோசப் கல்லூரியில் படித்தபோது இது போன்று  நண்பர்களை ஆத்திரமூட்டும் உரையாடல்கள் எனக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று. என்னை அவர்கள் சற்று விநோதமாகவே  பார்ப்பார்கள். ஒருமுறை ஒரு கூட்டம் "இவன்தாண்டா சிவாஜிக்கு நடிக்கவே தெரியாதுன்னு சொல்றவன்." என்று என்னை குறிப்பிட்டது என் காதில் தெளிவாக விழுந்தது. அது  எனக்குப் பெருமையாகக்  கூட இருந்தது. விடுதியில் அவ்வப்போது பெரிய திரை கட்டி பழைய படங்கள் காட்டுவார்கள். கலர் படமா, கருப்பு வெள்ளைப் படமா என்பதே அப்போது கேட்கப்படும் ஒரே கேள்வி.  கருப்பு வெள்ளை என்றால் பாதி ஹாஸ்டல் காலியாக இருக்கும். உல்லாசப் பறவைகள், காதலிக்க நேரமில்லை என்ற சில படங்களே இப்போது என் நினைவில் இருக்கின்றன. ஒரு முறை தெய்வ மகன் படம் திரையிடப்பட்டது. அதில் சிவாஜி தோன்றும் சமயங்களில் என் நண்பர்கள் என்னையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். எனக்கோ சிவாஜியின் நடிப்பைக் காட்டிலும் இவர்களின் ஆர்வம் அதிக வெறுப்பைக் கொடுக்கும். "அங்க பாருங்கடா" என்று எரிச்சலடைவேன். அதில் மூன்று சிவாஜிகளும் ஒரே காட்சியில் தோன்றும் அந்தக் காட்சியை கண்டு என் நண்பர்கள்,"இதுக்கு என்ன சொல்ற?" என்றார்கள். "முதலில் சிவாஜியை அழாமல் நடிக்கச் சொல்லுங்கள். பிறகு பார்க்கலாம்." என்றேன்.

      சிவாஜியை விட கமல் ஒரு சிறந்த நடிகன் என்ற என் கருத்துக்கு பெரிய அங்கீகாரம் நாயகன் படம் வெளிவந்ததும் கிடைத்தது. அதுவரை என்னை ஏளனமாகப் பார்த்த பலரது பார்வை நாயகன் வந்த பிறகு முற்றிலும் மாறிவிட்டது.  மிகத் தீவிர கமல் வெறியனான   என் அறைத்தோழன்,  "நீங்க அப்பவே கரெக்டா சொன்னீங்க" என்று எனக்கு மிகுந்த மரியாதை கொடுக்க ஆரம்பித்துவிட்டான். அதுவரை தானே சாப்பிட்டுக்கொண்டிருந்த பிஸ்கட், காராசேவு, பக்கோடா  போன்ற வஸ்துக்களை அதன் பின் தயக்கமில்லாமல் என்னுடன் பகிர்ந்துகொண்டான்.  நான் அவனுடன் ஒரே அறையில் இருப்பதை அவன் எதோ பெருமை போல சொல்வான். அப்போது நான் ஆங்கிலப் பாடல்களை துரத்தித் துரத்தி வேட்டையாடிக்கொண்டிருந்த நேரம். "என் வயதுக்கு  கமல்தான் சரி. சிவாஜி ஒரு பழங்கஞ்சி" என்ற குறியீடு எனது பேச்சில், நடவடிக்கைகளில் வெளிப்படும்.

       நாயகனுக்குப் பிறகு தொடர்ச்சியாக கமல் வேறு பாதையில் செல்லத் துவங்கினார். சத்யா, பேசும் படம், மைக்கல் மதன காமராஜன் என அவரது அடுத்த பரிணாமம் அவரை மேலும் பல உயரங்களுக்கு எடுத்துச் சென்றது. மதிப்பீட்டளவில்  கமல் என் மனதில் மிக உயர்ந்த இடத்தில் இருந்தார். எப்போது இந்த அபிமானம் அகன்றது என்று மிகத் துல்லியமாக சொல்ல முடியாவிட்டாலும், அவரது பாசாங்கு, பகட்டான அறிவுஜீவித்தனம், தன்னையே முன்னிறுத்திக்கொள்ளும் பக்குவமற்ற போக்கு, ஆங்கில நடிகர்களை --குறிப்பாக Al Pacino ---நகல் எடுக்கும் நடிப்பு என்று பலவிதமான கரைகள் அவர்மீது கொஞ்சம் கொஞ்சமாக எனக்குத் தோன்றின.  குணா படத்தில் வியப்பும், அலுப்பும் ஒரு சேர உண்டானது. ஆளவந்தான் என்ற படத்தில் அவர் தான் ஒரு  நார்சிஸ்ட் என்பதை கோடிகளில் விளம்பரம், வியாபாரம் செய்தார். அந்தப் படத்தை இன்றுவரை நான் முழுவதும் பார்த்தது கிடையாது. தசாவதாரம் அதன் அடுத்த கட்டம். விஸ்வரூபம், உத்தம வில்லன், தூங்காவனம் அவரது நார்சிஸம் படத்துக்குப் படம் விரிவடைந்து கொண்டே போகிறது. அவரிடத்தில்  ஒரு நிழல் நிஜமாகிறது, அவள் அப்படித்தான், சலங்கை ஒலி, நாயகன் ஏன் கலைஞன், குரு  போன்ற படங்களில் நடித்த அந்தக் கமலின் நிழல் தெரிந்தால் கூட நான் அதிகம் மகிழ்ச்சியடைவேன். ஆனால் அவர் அந்தச் சாலைகளை விட்டு ஹைவேயில் பயனித்துக்கொண்டிருப்பது போல தோன்றுகிறது.

    சொல்லப்போனால்  கடைசியாக  ஒரு இயல்பான கமலஹாசனை திரையில் நான் பார்த்தது மகாநதி படத்தில்தான் என்று நினைக்கிறேன். பல காட்சிகளில் அவரது யதார்த்தமான நடிப்பு எனக்குள் ஆச்சர்ய வலிகளை ஏற்படுத்தியது. திணிக்கப்பட்ட வன்முறைக் காட்சிகளை சற்று நடைமுறைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்திருந்தால் மகாநதி தமிழின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக விமர்சனங்களின்றி கொண்டாடப்பட்டிருக்கும். கமலின் நடிப்பு அதில் பல்லாயிரம் பாராட்டுகளுக்கு உரியது. மிக இயல்பாக நடிக்கக்கூடிய ஒரு அபாரமான நடிகன்தான் அவர்.   இருந்தும்  அவர் தன் பாதையை இவ்வாறான மனதைச் சுண்டும் கதைகளையும் கதாபாத்திரங்களையும் நோக்கித்  திருப்பாவிட்டால் என்றைக்கும் அவரது சிறந்த இறுதிப்  படம் இதே மகாநதியாகத்தான் இருக்கும்.

         இப்போது நான் மற்றொரு நடிகன் பற்றிய எனது பார்வையையும்  இங்கு பதிவு செய்தால்தான் இந்தக் கட்டுரைக்கு ஒரு முழுமை கிடைக்கும். தசாவதாரம் எவ்வாறு நவராத்திரியை மனதில் ஒப்பீடு செய்யத் தூண்டுகிறதோ அதேபோல கமலின் நடிப்பு பற்றிய விவாதத்தில் நம்மால் சிவாஜியை அப்புறப்படுத்திவிட்டு மேலே தொடர்ந்து பேச முடியாது. சிவாஜியின் நீட்சியாக கமல் இருக்கிறாரா இல்லையா அல்லது அவரைத் தாண்டிவிட்டாரா என்பதல்ல இங்கே விவாதிக்கப்படும் செய்தி.

     50 களிலிருந்து ஆரம்ப 80கள் வரை  முப்பது வருடங்கள் சிவாஜியின் திரை ஆளுமை மிக மிக விஸ்தாரமான வீச்சு கொண்டது. அந்த காலகட்டத்தில் சிவாஜியின் பாதிப்பின்றி நடிப்பு சாத்தியப்பட்டது இவருக்குத்தான். ஒருவர் எம் ஆர் ராதா, மற்றொருவர் எம் ஜி ஆர். மூன்றாவதாக எஸ் வி ரங்காராவை குறிப்பிடலாம். மற்ற எல்லோரிடத்திலும் எதோ ஒரு அசைவில் சிவாஜியின் நிழல் அசந்தர்ப்பமாகத் தெரிந்துவிடும். ரஜினிகாந்தின் துவக்ககால ஸ்டைல் கூட சிவாஜி என்ற மரத்திலிருந்து உதிர்ந்த சில இலைகளே. கமல் மிக முயன்று தன்னை வேறு விதமாக செதுக்கிக் கொண்டவர்.

      நான் இந்தப் பதிவில் எழுதியபடி சிவாஜியை நான் அறிந்தது அவருடைய பிற்கால எழுபதுகள் சார்ந்த படங்கள் மூலமாகத்தான். எப்படி மைக்கல் ஜேக்சனின் பத்துப் பாடல்களைக் கேட்டுவிட்டு ஆங்கில இசையை விமர்சிப்பது முட்டாள்தனமோ அதே போன்றதுதான் சிவாஜி ஏதோ வந்துவிட்டுப் போன எழுபதுகளில் வந்த படங்கள் மூலம் அவர் பற்றிய ஒரு வரைபடத்தை வரைவதும். ரத்தபாசமும் லாரி டிரைவர் ராஜாக்கண்ணும் சிவாஜியின் ஆதாரமான அந்த ஆச்சர்யமூட்டும் நடிப்பை ஒரு புள்ளியளவும் பிரதிபலிக்கும்  படங்களல்ல. அவை வெறும் குப்பைகள். ஆனால் இவ்வாறான படங்கள் மூலமே சிவாஜியை அறிந்த ஒருவனுக்கு அந்த நடிப்பு மிகுந்த வெறுப்பையும், சலிப்பையுமே கொடுக்கும். நான் சிவாஜியைப் பார்த்தது அப்படித்தான்.

       தன் தந்தை காங்கிரஸ் அபிமானியாக இருந்ததால் அந்த பாதிப்பில் என் மிக நெருங்கிய நண்பன் தன்னை ஒரு சிவாஜி ரசிகனாகக் காட்டிக்கொண்டான். ஆனால் எங்கள் வட்டத்திற்குள் வந்த கொஞ்ச நாட்களிலேயே சிவாஜியைத் துறந்து ரஜினிகாந்த் பக்கம் வந்துவிட்டான். அதன்பின் கடைசி வரை அவன் அபிமானம் மாறவேயில்லை. அவனுடன் சேர்ந்து ஒரு சில சிவாஜி படங்கள் பார்த்த அனுவபம் மறக்கவே முடியாதது.  மூன்று மணி நேரப் படத்தில் இரண்டரை மணி நேரம் நாங்கள் செய்யும் கேலியும் கிண்டலும்தான் நாங்கள் அந்தப் படங்களுக்குச் செலவு செய்ததன் ஒரே திருப்தி. படம் முடிந்து வரும் போது,"பேசாம இந்தப் பட  போஸ்டரப் பாத்துட்டு அப்படியே போயிருக்கலாம்." என்பான் அவன்.

    ஒரு முறை  சிவாஜியின் நடிப்பை மிகக் காரமாக ஒரு சிறுவனுக்கே உரித்தான கேலியுடன்  மரியாதை குன்றிய வார்த்தைகளுடன்   பிய்த்துக்  குதறிக் கொண்டிருந்தபோது என் தந்தை குறுக்கிட்டு, "சிவாஜியைப் பற்றி உனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்." என்றார் கொஞ்சம் வருத்தத்துடன். "அவனெல்லாம் அப்பவே நடிச்சு முடிச்சுட்டான்டா. இப்ப நடிக்கிறத பாத்துட்டு நீ இப்படி பேசறதெல்லாம் ரொம்ப தப்பு.  இது அவனுடைய மிச்சம் மீதி. சிவாஜியுடைய நடிப்பை பார்க்கணும்னா அவன் நடிச்ச  பழைய படங்கள் பாரு." என்றார்.

    "ஏதாவது ஒரு படம் சொல்லுங்கள்." என்றேன்.  என் தந்தை நொடி நேரம் கூட யோசிக்காது ஒரு படத்தைப் பரிந்துரைத்தார். "உத்தம புத்திரன்."
     
     பார்த்தேன். பதினைந்து வருடங்கள் கழித்து. ஆனால் அது உத்தம புத்திரனல்ல.

  1994ஆம் ஆண்டு என்று நினைவு. வட மாநிலம் ஒன்றில் தனியாகத் தங்கியிருந்தபோது என் அயலான் என்னை ஒரு நாள் மதியம் திடீரெனெ அழைத்தார். அவர் ஹிந்தி, பெங்காலி, மற்றும் எனக்குப் பெயரே தெரியாத மற்றொரு மொழி பேசுபவர். "டிவியில் உங்கள் மொழிப் படம் ஒன்று ஓடுகிறது. தமிழ் என்றதும் எனக்கு உங்கள் ஞாபகம் வந்தது. வந்து பாருங்கள்." என்று உற்சாகமாகச் சொன்னார். ரோஜா வெளிவந்து இந்தியாவே அதன் நறுமணத்தில் நனைந்திருந்த நேரம். ஒருவேளை அதுவாக இருக்கலாம் என்று நினைத்துச்  சென்ற நான், கண்டது ஒரு மிகப் பழைய கருப்பு வெள்ளைப் படம்.

   21 இன்ச் சிறிய டிவி திரையில் சிவாஜி கொடூரமான முக பாவத்தோடு வசனம் பேசியபடி இருந்தார். பார்த்ததும் பரவசமானேன். அது போன்ற சூழலில், தமிழ்நாட்டைவிட்டு ஐயாயிரம் மைல் தொலைவில் தமிழைக் கேட்பதே ஆனந்தம் என்றால், சிவாஜி உச்சரிக்கும் தமிழ் என்ன செய்யும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.  ஒரு புதிய மாற்றம் என்னை நகரவிடாமல் தடுத்தது. காட்சிக்குக் காட்சி சிவாஜியின் முகத்தில் தோன்றி மறையும் மின்னல் உணர்ச்சிகளும், வசனத்தின் தகிக்கும் அனலும், அதை அவர் மேலே எடுத்துச் செல்லும் adrenaline rush   வேகமும் .... ஒரே ஒரு உணர்ச்சிதான்  என்னிடமிருந்தது...... பிரமிப்பு!  சிவாஜி பற்றி நான் கிறுக்கி வைத்திருந்த என் மன ஓவியம் சட்டென கசங்கிக் கலைந்தது. அவர் பற்றி என்னிடமிருந்த போலித்தனமான கட்டமைப்புகள் நொடியில் உடைந்து நொறுங்கின. சிவாஜி பற்றிய எனது மதிப்பீடுகளை நான் உடனே  மறுபரிசீலனைக்குட்படுத்தினேன்.

  அந்த நாள் படத்தின் இறுதிக் காட்சியைத்தான் நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.  பார்த்ததும் வியப்பில் விழுந்தேன். என்ன ஒரு அசுர நடிகன் என்ற எண்ணம் என் உள்ளதிலிருந்த சில  நடிகர்களின் முகங்களை அமிலம் போல கரைத்தது. அவர் பெயர் இவர் பெயர் என என் மனதில் நான் எழுதிவைத்திருந்த சிறந்த நடிகர்கள் எல்லோருடைய பெயரும் ஒரே கணத்தில் காணாமல் போனது.

        அந்த நாள் தமிழில் வந்த மிகச் சிறந்த இரண்டு படங்களில் ஒன்று. திரும்பிப் பார்க்கும்போது அன்றைய நாளில் இதுபோன்றதொரு  கதைக் களம் சாத்தியப்பட்டதே ஒரு அதிசயம்தான்.  முதன் முதலாக ப்ளாஷ் பேக் என்ற கதை சொல்லும் நவீன பாணி, (இது ஜப்பானிய ரோஷமான் படத்தின் தாக்கம். காப்பி கிடையாது)  பாடல்களே இல்லாத படம், anti-hero  subject, மனைவி கணவனைக் கொல்லும் கலாச்சார அதிர்ச்சி (உண்மையில்  நீயா நானா என்ற போராட்டத்தில் துப்பாக்கி தானே வெடித்தது என்று சமரசம் செய்துகொண்டாலும்) என புதுமையின் முத்திரையாக அந்த நாள் அறிமுகமானது. பெரிய வெற்றியடையவில்லை என்று சொல்லக் கேள்வி. இருந்தாலென்ன?  தமிழ் சினிமாவின் நிரந்தமான இடங்களில்  அந்த நாள் நேற்றல்ல இன்றல்ல நாளையும் இருக்கும்.

        இந்தியா விடுதலையடைந்து ஏறக்குறைய எழுபது ஆண்டுகள் ஆன பின்பும் நமது கதாநாயகர்கள் இன்னும் தேச பக்தர்களாக திரையில் வீரம், சூரம் காட்டிக்கொண்டு திரைக்குப் பின்னே,"நான் இந்த நாட்டை விட்டே வெளியேறிவிடுவேன்" என்று கண்ணீர் காட்டும் வேளையில்,  இந்திய தேசம் விடுதலையடைந்து  ஏழே வருடங்களில் ஒரு படு பயங்கரமான தேச விரோதியாக, தன் நாட்டையே அழிக்க எண்ணும் துரோகியாக அப்போது வளர்ந்து வந்த  ஒரு கதாநாயக நடிகன் நடிக்கத் துணிய  அவனை எந்த உந்து சக்தி செலுத்தியிருக்க முடியும்?  தங்கள் ஓட்டம் முடிந்ததும் கதாநாயகர்கள் கொடியவர்களாக நடிப்பதில் நவீனம் எதுவுமில்லை. இயல்பானதுதான். ஆனால் சிவாஜியின் முதல் படமே அவரை தமிழகத்தின் தலைப்புச் செய்தியாக்கியது. ஒரே படத்தில் அவர் கதாநாயகன் என்ற உயரத்திற்குச் சென்றவர். இரண்டு வருடம் கழித்து தமிழில் ஒரு புது முயற்சியாக பாடல்கள் இல்லாமல் வெளிவரயிருக்கும் ஒரு படத்தில் ஒரு பெண் பித்தனாக, துரோகம் செய்யும் கணவனாக,  தேச விரோதியாக நடிக்க  எந்தக்  கதாநாயகன் துணிவான்?

    நடிப்பைப் புசிக்கும்  ஒரு நடிகனுக்கு  மட்டுமே இது போன்ற விபரீதத் தேர்வுகள் சாத்தியம்.

     திருவிழா தினத்து டிவி நிகழ்சிகளில் ,"நடிப்பைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது. சினிமா சினிமா சினிமாதான் என் மூச்சு." என்று பேசும் மக்கள் மறந்துபோன அல்லது காணாமல் போகப் போகிற நடிகர்கள் சொல்வதைக் கேட்கும்போது ஏளனமாக இருக்கிறது. நடிப்பைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது என்று சொல்லக்கூடிய திமிர் அல்லது திடம் இங்கே ஒரே ஒரு நடிகனுக்கு மட்டும்தான் உண்டு. அது  சிவாஜி ஒருவர்தான். மற்ற எல்லோருக்கும் வேறு வேறு சௌகரிய சந்தோஷங்கள் இருக்கின்றன. ஆசைகள் இருக்கின்றன. கனவுகள் இருக்கின்றன. கமல் கூட இன்று இந்த வசனத்தைப் பேச முடியாத வகையில் சினிமாவின் சிக்கலான உள் ஆழங்களுக்குள்  சென்று கொண்டிருக்கிறார்.

     கர்ணன், தெய்வமகன், ஆலய மணி, திருவிளையாடல், புதிய பறவை போன்ற சில படங்களைத் தவிர நான் சிவாஜியின் மிகச் சிறப்பான படங்கள் எதையும் திரையரங்குகளின்  அகன்ற திரையில் பார்த்ததில்லை. ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மன், பராசக்தி, மனோகரா, உத்தம புத்திரன், பாசமலர், ராஜா ராணி,உயர்ந்த மனிதன் போன்ற படங்களை திரையையரங்குகளில் மக்கள் எப்படிக் கொண்டாடியிருப்பார்கள் என்ற எண்ணம் ஏக்கம் படிந்த உணர்வாக என்னில் நிலைத்துள்ளது.

     சிவாஜியின் நடிப்புத் திறனுக்குச் சான்றாக அவர் நடித்த படங்களைக் குறிப்பிட்டு அந்தக் காட்சிகளை விவரிக்கும் அபிமானம், திறமை என்னிடமில்லை.  அதை தீவிர சிவாஜி ரசிகர்கள் செய்தபடி இருக்கிறார்கள். கௌரவம் படத்தில் மெழுகுவர்த்தி எரிகின்றது பாடலில் சிவாஜியின் சட்டை கூட நடிக்கும் என்று ஒரு சிவாஜி அபிமானி எழுதியிருந்தார்.  நான் அந்தப் பக்கமாக செல்லப் போவதில்லை. அது சற்று மிகையானது.

       சிவாஜியின் அசைவுகள் மிகுந்த பிரசித்திப் பெற்றவை.  துப்பாக்கி கொண்டு தன் கண்ணீரைத் துடைத்துக்கொள்ளும் யதார்த்தம், ராணியம்மா மனசு வச்சா எதுவும் நடக்குமம்மா(?) என்று காட்டும் காதல் சேஷ்டை, ஞான ஒளியின் அதே ஆண்டனி என உச்சரிக்கும் தொனி, உயர்ந்த மனிதன் படத்தின் டூத்பிக் கொண்டு வாயை குத்திக்கொண்டே பேசும் பாணி, நவராத்திரியின் அந்த  பாகவதர் தோரணை, தில்லானா மோகனாம்பாள் படத்தில் காட்டும் மிடுக்கு, மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் ஒரு பெரிய மனிதனின் மிகையற்ற இயல்பு,  திருவிளையாடலின் கம்பீரம், தெய்வ மகனின் அந்த இயலாமை என ஒன்றன் பின் ஒன்றாக அடுக்க முடிந்தாலும் ஒரே ஒரு காட்சியை மட்டும் என்னால் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

     பாசமலர் படத்தில் ஜெமினியுடனான அந்த  ஆக்ரோஷமான விவாதத்தின் இறுதியில் சிவாஜி உச்ச ஸ்தாயிலிருந்து தன் குரல், பாவம், தோற்றம் எல்லாவற்றையும் நொடியில் கீழிறக்கி, அளவற்ற வெறுப்புடன் ஆனால் மிக அமைதியாக  get out என்று சொல்லும் அந்த அசாதாரண நேர்த்தி யாராலும் பிரதியெடுக்க முடியாத அபாரம்.   Class!  

      யார்றா சிவாஜி என்று நக்கலாக கேட்கும் நபர்களின் வாயடைக்கும் விதத்தில் இதாண்டா சிவாஜி என்று பதிலளிக்கும் வகை ஸ்டைல் பல அவரிடத்தில்  உண்டு.  ஒரு பதிவு போதாது.

      நான் வழக்கமாக ஆங்கில இசைத் தொகுப்புகளை பதிவு செய்யும் எக்மோரில் உள்ள ஒரு பதிவகத்தில் ஒரு முறை அதன் உரிமையாளருடன் இசை, சினிமா பற்றி உரையாடிக்கொண்டிருந்தேன். அது கமலின் தசாவதாரம் படம் வந்த சமயம். பேச்சின் நடுவே தசாவதாரம் குறித்து எனது பார்வையை முன்வைத்தேன். நான் பேசிக்கொண்டிருந்த அந்த பதிவகத்தின்  உரிமையாளர் ஒரு மேல் தட்டு, ஆங்கில இசையின் பால் அதிக பரிச்சயம் கொண்ட நபர். பொதுவாக எங்கள் உரையாடல் ஆங்கிலத்திலேயேதான் இருக்கும்.

       நான்-    கமலின் தசாவதாரம் பார்த்தீர்களா?
       அவர்-    பேன்சி டிரெஸ் காம்பெடிஷன்.
    நான்-      சிவாஜி நவராத்திரியில் ஒன்பது வேடங்கள் செய்தார். உங்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. கமல் அதை முறியடிக்க பத்து வேடம் போடுகிறார் போல.
  அவர்-  நவராத்திரியின் அருகே இந்தப் படம் வரவே முடியாது.   அதன்  நேட்டிவிட்டி தசாவதாரத்தில் கொஞ்சமும் கிடையாது.
          நான்-    நவராத்திரி படம் பார்த்திருக்கிறீர்களா?
  அவர்- பின்னே?  என்ன ஒரு படம் அது? அதில் வரும் ஒன்பது கதாபாத்திரங்களும்   நம் ஒவ்வொரு உணர்ச்சியின் வெளிப்பாடு. கமல் செய்தது வெறும் முகமூடி அணிந்துகொண்டு முக பாவங்கள் இல்லாத உயிற்ற நடிப்பு.
    நான்-  நீங்கள் தமிழ்ப் படம் பார்ப்பீர்கள் என்று இன்றுதான் தெரிந்தது. அதிலும் பழைய படங்கள்- என்னைப் போலவே.
         அவர்-    சிவாஜி போல ஒரு நடிகர் வருவதென்பது ஆச்சர்யமானது.

 நான்தான் ஆச்சர்யப்பட்டேன். நான் சற்றும் எதிர்பார்க்காத ஒரு மூலையிலிருந்து சிவாஜி குறித்து இப்படியான சிந்தனை வெளிப்படும் என்று.

      2003 என்று நினைக்கிறேன். எனது உறவினர் ஒருவருடனான  சினிமா தொடர்பான உரையாடலின்போது ; "இப்போது உங்களிடம் ஒரு உண்மையை சொல்லப் போகிறேன்" என்றேன் மிகத் தீவிரமாக. "சொல்." என்றார் அவர் சிரத்தையுடன். ஏற்படுத்திக்கொண்ட தாமதத்திற்குப் பிறகு  "சிவாஜி நன்றாக நடிக்கிறார்." என்றேன். ஏனென்றால் சிவாஜிக்கு நடிக்கத் தெரியாது என்று அவரிடமே பலமுறை  விவாதித்திருக்கிறேன் பள்ளி நாட்களில். எனவே அவரது எதிர்வினை என்னவாக இருக்கும் என்று அறிய ஆவலாக இருந்தது. என்னைப் பார்த்து நக்கலாக சிரித்துவிட்டு அவர் சொன்னார்; "நீ தமிழன்னு வெளிய சொல்லாதே."  அவர் வீட்டை விட்டு அகலும் சமயத்தில் என் தோளைத் தட்டி, "அடுத்த தடவ வரப்ப பாகவதர் பத்தி எதுவும் உண்மையை என்கிட்டே சொல்லிடாதே. இந்த அதிர்ச்சியே ஒரு வருஷம் தாங்கும்." என்றார்.

     போதிக்கப்பட்ட அபிமானம், ரசனை, பாதிப்பு எனக்குப் பிடிக்காத ஒன்று. நானாக அறிந்துகொண்ட பின்னரே எதைப் பற்றியுமான  ஒரு கருத்து என் மனதில் உருப்பெறும். சிவாஜி, எம் எஸ் வி போன்றவர்களை நோக்கி நான் நகர்ந்தது இந்த தீப்பொறி என்னைத் தீண்டியதால்தான். பலவிதமான கருத்துக்களையும், போதனைகளையும், கற்பிதங்களையும், விதிகளையும், கோட்பாடுகளையும், கனவுகளையும், புனைவுகளையும், சேமிக்கும் காலம் ஒன்று உண்டு. ஆனால் மனது அலைபாய்வதிலிருந்து விடுதலை பெற்றதும் வாழ்வின் பல இயக்கங்களுக்கான காரணத்தை  நாம் நாமாகவே உருவாக்கிக் கொள்கிறோம். அது யாரிடமிருந்தும் கடன் பெற்ற கருத்தாக இருப்பதில் நமக்கு உடன்பாடு இருப்பதில்லை.

         தற்போது சிவாஜி ஒரு மிகையாக நடிக்கும் நடிகர் என்ற கருத்து அதிகம் பேசப்படுகிறது. இணையத்தில் சில சில்லுவண்டுகள் அதை பெரிதாக மெகாபோன் வைத்து ஊதிப் பெருக்குகிறார்கள். மிகைதான்- சில சமயங்களில். அதேசமயம் அதே நடிகர் மோட்டார் சுந்தரம் பிள்ளை. தெய்வப் பிறவி போன்ற படங்களில் சற்றும் மிகையில்லாது இயல்பாக நடித்த படங்கள் குறித்தோ அதில் அவரது நடிப்பு குறித்தோ தங்களது வாதங்களை முன் வைப்பதில்லை.

    சிவாஜி நாடக மேடையில் நடிப்பு பயின்ற ஒரு மிகை நடிப்புக் கலைஞன். சினிமாவில் அதைத்  தொடர்ந்தார். ஆனால் அது மட்டுமே அவருடைய முழு ஆளுமை கிடையாது. உண்மையில் சிவாஜி யாராலும் தீட்டப்படாத  ஒரு raw diamond. வைரமுத்து ஒரு முறை கூறியதுபோல சிவாஜி ஒரு அணுகுண்டு. அவரை வைத்து நமது இயக்குனர்கள் தங்கள் முதுகை சொறிந்துகொண்டார்கள். இதுதான் சிவாஜி, இப்படித்தான் அவரால் நடிக்க முடியும் என்று அவர்களே தீர்மானித்தார்கள். சினிமாவில் நடிப்பு தவிர வேறு எதுவும் அறிந்திராத சிவாஜி அவர்களுடைய கையசைவுகளுக்கு கட்டுப்பட்டு நடித்ததே பலராலும் இன்று பெருமளவில் பாராட்டப்படுகிறது. அவருடைய நடிப்புப் பசிக்கான கதைக் களம், திரைக்கதை வெகு சிலராலே சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.  அவரால் எந்த விதமாகவும் எப்படிப்பட்ட ஆளுமைக்குள்ளும் சிரமமின்றி நுழைந்துகொள்ள முடியும். கதாநாயகன் என்றல்ல. கமீடியன், வில்லன், ஏன் கொஞ்சமும் முக்கியத்துவமில்லாத walk-on part ரோல் கூட அவரால் எந்தவித பொறாமைகள், கோபங்கள், தனிவிரக்கங்கள் இல்லாமல் செய்யமுடியும். வாணிராணி படம் இதற்கு சான்று. அதில் அவருக்கு எந்த ஒரு மையமான நடிப்பும் கிடையாது. இருந்தும் வாணிஸ்ரீக்காக (வாணிஸ்ரீயின் சொந்தப் படம்) அவர் நடித்துக் கொடுத்த படம் அது. தேவர் மகனில் கூட கமல்தான் பிரதானமானவர். சிவாஜி ஒரு ஊறுகாய் போலவே வந்துபோவார். (மிக அபத்தமாக அந்தப் படத்திற்காக சிவாஜிக்கு சிறந்த துணை நடிகர் விருது பரிந்துரை செய்யப்பட்டது.!)

     கமலஹாசனுக்குக் கிடைத்த இயக்குனர்கள் போல சிவாஜிக்கு வாய்க்காதது துரதிஷ்டமே. அதேபோல் கமல் போல தன்னையே இயக்கிக்கொள்ளும் அந்த நார்சிஸ்ட் தாகமும் சிவாஜியிடம் இல்லாதது அவருக்கு ஒரு பின்னடைவுதான். 50, 60 களில் சிவாஜிக்கு இணையான நடிகன் இந்தியாவிலேயே கிடையாது என்பதுதான் உண்மை. நாம்தான் அதை புரிந்துகொள்ளாமல் பலவித அரசியல், சாதி வண்ணம் பூசி ஒரு கலைஞனை அங்கீகரிப்பதிலிருந்து தூரமாக நிற்கிறோம். இன்று சிவாஜி போன்ற ஒரு மகத்தான நடிப்புக் கலைஞனை வெறும் மிகையான நடிகன் என்று இகழ்ந்து விட்டு வேறு யாரை அவருக்கான இடத்தில் வைக்கப்போகிறோம்? அந்தத் தகுதி வேறு யாருக்கு இங்கே இருக்கிறது?

 தமிழ் சமூகத்தின் சரித்திர நாயகர்களையும், இலக்கிய ஆளுமைகளையும், ஆன்மீக மாந்தர்களையும், தேசத் தலைவர்களையும், பகட்டான மேல்தட்டு மனிதர்களையும், சாலையோர சாமானியர்களையும், காதலனையும், கணவனையும், சகோதரனையும், தந்தையையும்,  ஒரு சேர இத்தனை ரத்தமும் சதையுமாக திரையில் பிரதிபலித்த ஒரு மகா மகா மகத்தான நடிகனுக்கு இகழ்ச்சி ஒன்றே நம்முடைய மேதாவித்தனம் கொடுக்கும் பாராட்டு என்றால்....  வெறும் காதல் பேசி, வன்முறை ஆட்டம் ஆடி, பெண்களை இழிவு செய்து, துரத்தித் துரத்தி மற்றவர்களை அடித்துக் கொன்று, தாய் தந்தையை மதிக்காது நடக்கும் நமது "இயல்பான" கதாநாயகர்களை  தலையில் வைத்துக் கொண்டாடும் நவீனத்துவமும்,  யதார்த்தமும்   மிகவும் ஆபத்தான கலையுணர்வு.

     56 இல் வந்த ராஜாராணி என்ற படத்தில் சிவாஜி ஒரே டேக்கில் பேசும் அந்த எட்டு  நிமிட புறநாறூற்று வசனத்தை சற்று கேளுங்கள். சிவாஜியின் கிரீடம் வேறு எவர் தலைக்கும் பொருந்தாது என்பது புரியும்.

  நகைச்சுவை என்றால் சார்லி சாப்ளினும், விஞ்ஞானி என்றால் ஐன்ஸ்டைனும், மேற்கத்திய செவ்வியல் இசை என்றால் பெய்ட்டோவன் மட்டும்தானா இருக்கிறார்கள் இங்கே? இல்லைதான். ஆனால் அவர்கள் எல்லோரும் அவர்கள் சார்ந்த துறையின் குறியீடாக, ஒரு முத்திரையாக மக்களால் பார்க்கப்படுகிறார்கள்.  "உனக்குப் பிடித்த தமிழ் நடிகர் யார்?" என்ற கேள்விக்கு என்னால் கண்டிப்பாக "சிவாஜி மட்டும்தான்" என்று சொல்ல முடியாது. ஆனால் தமிழின் மிகச் சிறந்த நடிகர் யார் என்ற கேள்விக்கு அதே பதிலை என்னால் கண்டிப்பாகச் சொல்ல முடியும். ஏனென்றால் நம்மிடம் அந்தக் கேள்விக்கான பதிலாக ஒரு முகம்தான்  இருக்கிறது,    ஒரே முகம்.
 

 





அடுத்து : இசை விரும்பிகள் XXX - எண்பதுகள் - இசையுதிர் காலம்.

27 comments:

  1. பிரமிக்க வைத்து விட்டீர்கள் காரிகன்!
    என்னுடைய மனதின் வழியாக நீங்கள் எழுதியதுபோல் இருந்தது. இந்த கருத்துகளைதான் இவர்கள் மீது நானும் கொண்டிருந்தேன். மிக மிக ஆழமான பாசாங்கு இல்லாத விமர்சனம்.
    அருமை தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. செந்தில் ஜி
      என் கணிப்பின்படி காரிகன் உங்களைவிட குறைந்தது ஆறு வருடங்களாவது மூத்தவர் ...
      தோனுச்சி சொன்னேன்
      நோ ஹர்ட்ஸ்

      Delete
  2. அழகான அருமையான நல்ல அலசலுடன் கூடிய மிகைப்படுத்தப்படாத பதிவு காரிகன். சிவாஜி வசனம் பேசுவது பற்றி வாசித்ததுண்டு. அவர் ஒரே டேக்கில் பல நீளமான வசனங்கள் பேசுக்கூடியவர் என்பது மட்டுமல்ல பல நீள வசனத்தையும் கூட ஒரு முறை பார்த்தாலே அவருக்கு மனதில் பதியும் என்றும் எங்கேயோ வாசித்த நினைவு. இப்போதெல்லாம் படம் எடுப்பது என்பது டிஜிட்டலைஸாகி எளிதான விஷயமாகிவிட்டது...பல வரிகள் வசனத்தைக் கூட ஒவ்வொரு வரியாக எடுக்கின்றார்கள். ஒரே டேக் என்பதெல்லாம் இல்லை..பல டேக்குகள் வாங்குகின்றார்கள் இப்போதைய கலைஞர்கள். சிவாஜி சிவாஜிதான் பல நல்ல நடிகர்கள் இருந்தாலும் அவர்களையும் ரசித்தாலும்.

    ReplyDelete
  3. எங்கேயோ ஆரம்பித்து, எப்படியோ கொண்டுசென்று என்னசொல்லி முடிக்கப்போகிறீர்கள் என்ற ஆர்வத்துடனேயே படித்தேன். இணையம் வந்ததிலிருந்து எழுதுபவர்கள் எல்லாரும், அல்லது பெரும்பாலானோர் தங்களுடைய எல்லா அனுபவங்களிலிருந்தும்தான் அவர்களுடைய விருப்பு வெறுப்புக்கள் எல்லாமே கட்டமைக்கப்படுகின்றன என்கிறமாதிரியான தொனியுடனேயே எழுதுகிறார்கள். எனக்கு இதில் உடன்பாடு கிடையாது. சில கட்டமைப்புக்களை இந்தக் கணிப்பின்படி நாம் பெற முடியாமலும் போகலாம். தேசத்தின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர் என்ற மரியாதையை பலபேர் காந்தியடிகளுக்கும், நேருவுக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கமுடியாமல் போகும் விபரீதங்களெல்லாம் இத்தகு கட்டமைப்புக்களின் விளைவே.

    அனுபவங்கள் ஒருவனை ஒரு முடிவெடுக்கத் தூண்டும் அதே சமயத்தில் சில ஆதார முடிவுகளை ஒப்புக்கொள்ள வேண்டியவர்களாகவும் நாம் இருக்கிறோம் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டால் இந்த நெருப்பு வளையத்தை சுலபமாகத் தாண்டிவிடலாம்.

    சிவாஜியைப் பற்றிய பிம்பம் நான் வளர்ந்த காலத்தில் அதுபாட்டுக்கு இன்னொரு பக்கம் வளர்ந்து கொண்டிருந்தது. அவரைப் பற்றிய முன்முடிவுகள் எதுவும் என்னிடம் இருக்கவில்லை. நான் சிறுவயதில்- எதைப் பற்றியும் தெரிந்துகொள்ள முடியாத வயதில் பார்த்த முதல் சிவாஜியின் படம் பாவமன்னிப்பு என்று நினைக்கிறேன். அதில் பார்த்த சில காட்சிகள் இன்னமும் செதுக்கியதுபோல் மனதை ஆக்கிரமித்துள்ளது.

    சிவாஜி பற்றிய உங்களின் எண்ணங்கள் பிரமாதமானவை. "சிவாஜியை இயக்க ஒரு நல்ல டைரக்டர் இங்கே பிறக்கவில்லை" என்று ஒரு சமயம் ஒரு புகழ்பெற்ற இயக்குநரே சொன்ன வரிகள்தாம் நினைவு வருகின்றன.
    தசாவதாரம் பார்த்ததும் கமல் மீது கொண்டிருந்த மதிப்பு சற்று சரிந்தது என்பதுதான் உண்மை.
    சிவாஜி பற்றி மற்றவர்கள் பேசட்டும். நான் திரும்பத் திரும்ப குறிப்பிடும் விஷயம் ஒன்றுதான். மற்ற எல்லாரும் - கமல் உட்பட - பத்து டிவிடிக்களையும், பதினைந்து சினிமாக்களையும் பார்த்துவிட்டுத்தான் படம் மட்டுமல்ல, ஒவ்வொரு காட்சியையே எடுக்கிறார்கள்.படம் எடுப்பதே இப்படித்தான் என்றாகிவிட்டது இன்றைக்கு.

    சுயம்புவாக வெளிப்பட்ட மகா கலைஞன் இங்கு சிவாஜி ஒருவர்தான். பல விஷயங்களை சரியாக கணிக்கமுடியாத தமிழகம் சிவாஜி விஷயத்திலும் அதே தவறைத்தான் செய்துகொண்டிருக்கிறது.
    அற்புதமான கட்டுரை.

    ReplyDelete
  4. காரிகன்
    தமிழகத்தின் இரு பெரும் நடிகர்களைப் பற்றிய அலசல் நன்றே .தொடர்வண்டி நிலையத்தில் புறப்பட்ட இரயில் தடம்மாறி பின் சேரவேண்டிய இடத்தை சென்றடைந்தது போலுள்ளது தங்களின் பதிவு .அற்புதமான மிகச்சிறந்த நடிகர் சிவாஜி என்பதில் ஐயமில்லை. அதற்காக கமல்ஹாசனை குறைத்து மதிப்பிடுதல் அவசியமில்லையே .
    விருதைப் பற்றிய கருத்தில் ஒரு ஃ வைப்பதேன் .இந்தியா எவ்வளவு முன்னேறினாலும் இன்னும் சாதி வெறி முழுமையாக குறையவில்லை என்பதையே இது போன்ற விருதுகள் நமக்கு உணர்த்துகின்றன .

    ReplyDelete
  5. ஹலோ காரிகன்

    இசைப் பதிவுகளுக்கு மத்தியில் இரு பெரும் ஆளுமைகளைப் பற்றிய பதிவு வித்தியாசமாக இருக்கிறது. சிவாஜி மீது எனக்கும் மிகுந்த அபிமானம் உண்டு. அவரை போல் ஒரு நடிகன் இன்னும் பிறக்கவில்லை என்று சொல்லலாம் . இனி மேல் பிறப்பானா என்பதும் சந்தேகமே!

    சிவாஜி என்ற பல்கலைக் கழகத்தில் படித்து வந்த மாணவன்தான் கமலஹாசன் . சிவாஜிக்குப் பிறகு வந்த எல்லா நடிகர்களின் நடிப்பிலும் சிவாஜியின் சாயல் தெரியாமல் இருக்காது என்று கமல்ஹாசனே சொன்னவர்தான்! தன்னையும் சேர்த்துதான் சொன்னார். அதற்காக கமலஹாசனை இவ்வளவு குறைவாக விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது!?

    சிவாஜி நடிப்பின் சிகரம் . ஆனால் அதைத் தவிர அவருக்கு மற்ற எந்தக் கலையிலும் சிறிய நுணுக்கம் கூட தெரியாது. கமலஹாசன் சினிமாவின் மூலை முடுக்குகளை தெரிந்தவர்; சினிமாக் கலைகளின் பலவித நுணுக்கங்களையும் கற்றவர். இன்னும் கற்றுக் கொண்டிருப்பவர். அவரது தேடலுக்கு ஒரு எல்லை இல்லை. தான் இன்னும் புதிதாய் படிப்பதாகவே சொல்லிக் கொள்கிறார். புதிய முயற்சிகளையும் புகுத்திப் பார்க்கிறார். அவருடைய ஒவ்வொரு திரைப்படமும் அவர் கலைத் தாகத்தை காட்டுவதாக உள்ளது.

    அவர் சம்பாதிப்பதும் சம்பாதித்ததை தொலைப்பதும் சினிமாவில்தான்! அதை அவரே கூறியது. நீங்கள் எளிதாக எள்ளி நகையாடும் அளவிற்கு அவர் தரம் தாழ்ந்தவர் அல்ல. நடிப்பிலும் மற்ற எல்லா கலைகளிலும் உயர்ந்த இடத்தில் இருக்கிறார். நடிப்பில் சிவாஜியை விட பின் தங்கியவர் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். சினிமாவின் மற்ற துறைகளில் சிவாஜியை விஞ்சியவர்.

    உங்களுக்கு சிவாஜியை பிடிக்கும் . அதை வெளிப் படுத்துங்கள் . எல்லோரும் ஏற்கிறோம். கமலஹாசனை மட்டமாக ஒப்பிட்டுத்தான் சிவாஜியை புகழ வேண்டும் என்று நினைக்கும் வேளையில் கமலஹாசனை மறைமுகமாக உயர்த்தவே செய்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

    அவர் 9 வேடங்கள் நடித்ததை மிஞ்சுவதற்கு இவர் 10 வேடங்களில் நடித்தார் என்று யாரும் எங்கும் சொன்னதில்லை. அது உங்கள் கற்பனை. அப்படி அவர் 10 வேடங்களில் வித்தியாசப்படுத்திக் காட்டியிருப்பதை உங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தசாவதாரம் படத்தில் வரும் ஒவ்வொரு வேடத்தையும் கேவலமாக சித்தரிக்கிறீர்கள் . ஒருவரை உயர்த்திப் பேச மற்றவரை மட்டப்படுத்தும் மலிவான எண்ணம் உங்களின் பல பதிவுகளில் அடிக்கடி பார்த்ததுதானே! இதில் மட்டும் அது குறையவா போகிறது?

    சகிப்புத்தன்மை பற்றி அண்மைக் காலமாக சர்ச்சைகள் எழுந்தது உங்களைப் போன்றோருக்காகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.


    ReplyDelete
  6. வாருங்கள் செந்தில்,

    பாராட்டுக்கு நன்றி.

    நான் உங்களை பிரமிக்க வைக்கவில்லை. அது சாத்தியப்பட்டது அந்த பிரமிப்பூட்டும் நடிகனால்தான்.

    சிவாஜி பற்றி மிகையான பாராட்டுதல்களும், தரமற்ற விமர்சனங்களும், மேதாவித்தனமான தாக்குதல்களும் நிறையவே காணக் கிடைக்கிறது. ஆனால் அவரில்லாத தமிழ் சினிமாவை சற்று நினைத்துப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. நம் சினிமாவின் போக்கே வேறு விதமாக மாறியிருக்கும். நாம் ஆச்சரியப்படும் பல பரிமாணங்களைக் கொண்டுவந்தவர் சிவாஜி.

    ReplyDelete
  7. வாருங்கள் துளசிதரன்,

    வருகைக்கு நன்றி.

    உண்மைதான். சிவாஜி ஒரே ஒரு முறையே தன் ஸ்க்ரிப்ட்டை மற்றவர்கள் படிக்கச் சொல்லிக் கேட்பார் என்றும் முடிந்தவரை ஒரே டேக்கில் அது எத்தனை பெரிய வசனமாக இருந்தாலும் செய்து முடித்துவிடுவார் என்றும் படித்திருக்கிறேன். அவர் கண்கள் சிவப்பது கூட அவர் அந்தக் காட்சியை மனதுக்குள் உள்வாங்கி நடிப்பதால்தான் என்பார்கள் விபரம் அறிந்தவர்கள். நாங்கள் சிறு வயதில் அவர் குடித்துவிட்டு நடிப்பதாக பேசிக்கொள்வோம்.

    ReplyDelete
  8. வாருங்கள் அமுதவன்,

    பாராட்டுக்கு நன்றி.

    அனுபவத்தின் மூலமே சில கருத்தாக்கங்கள் சாத்தியப்படுகின்றன.

    சிவாஜி பற்றி என்னை விட நீங்கள் அற்புதமாக எழுதமுடியும் என்று நினைக்கிறேன். உங்கள் எழுத்தில் ஏற்கனவே ஒரு பதிவு படித்திருப்பதால் இதை சொல்கிறேன்.

    கமல் உட்பட என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த inspired acting தான் நான் கமல் பற்றி வைக்கும் விமர்சனம். கமலின் முக்கால்வாசி அசைவுகள் மேற்கத்திய சாயலை அப்படியே பிரதி எடுத்தவை. அவரிடம் சில்வெஸ்டர் ஸ்டேலனும் தெரிவார், அல் பசினோவும் தெரிவார். தற்போதைய ராபர்ட் டவ்னி ஜூனியர் கூட தெரிவார்.

    ReplyDelete
  9. காரிகன்
    \\கமல் உட்பட என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த inspired acting தான் நான் கமல் பற்றி வைக்கும் விமர்சனம். கமலின் முக்கால்வாசி அசைவுகள் மேற்கத்திய சாயலை அப்படியே பிரதி எடுத்தவை. அவரிடம் சில்வெஸ்டர் ஸ்டேலனும் தெரிவார், அல் பசினோவும் தெரிவார். தற்போதைய ராபர்ட் டவ்னி ஜூனியர் கூட தெரிவார்.\\

    நான் கமலிடமும் நெருங்கிப் பழகியிருக்கிறேன். நாங்கள் இருவரும் சந்திக்கும்போது நிறைய சிவாஜியைப் பற்றி, அவர் பற்றிய ஆச்சரியங்கள் பற்றிப் பேசுவோம். அது ஒரு புறமிருக்க...
    நீங்கள் சொல்லும் விஷயங்கள் பற்றித்தான் நானும் சொல்லவருகிறேன். இவையெல்லாம் 'உள்வாங்கிக்கொண்டு' நடிக்கும் விஷயமாக நான் கருதவில்லை. ஒவ்வொரு காட்சிக்கும் குறிப்பிட்ட அந்த விசிடியை, டிவிடியை எத்தனை தரம் வேண்டுமோ அத்தனை தரம், இவர்கள் எதிர்பார்க்கிற அந்த perfection வரும்வரை திரும்பத் திரும்ப போட்டுப்பார்த்துத்தான் காட்சிகளையே எடுக்கிறார்கள். பிறகு எப்படி இவர் அவரை மிஞ்சினார், அவர் இவரை மிஞ்சினார் என்ற சொல்லாடல்கள் எல்லாம்?
    இது நடிப்பு என்ற ஒரு விஷயத்தில் மட்டுமல்ல மியூசிக், நடனம், மேக்கப், சண்டை, எடிட்டிங், ஒளிப்பதிவு என்று சகல விஷயங்களிலுமே செய்யப்படுகிறது. சுயமாக,சுயம்புவாக வெளிப்பட்டவர் என்றுதான் சிவாஜியைப் பற்றிச் சொல்லவருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா அமுதவன் அவர்களே ,
      தாங்கள் குறிப்பிட முனைவது இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற ஏ.ஆர் .ரஹ்மான் அவர்களுக்கும் பொருந்தும் தானே .(அவர்கள் விரும்பும் perfection வரும்வரை டிவிடி ,விசிடி போட்டுப்பார்த்து காட்சிகளைப் படமாக்குவது போல இசைப்பதிவு செய்வது )

      Delete
    2. யார் யார் அப்படிச் செய்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் பொருந்தும் அருள் ஜீவா.

      Delete
  10. காரிகன்

    ஹாலிவூட் திரைப்படங்களுக்காக உருவாக்கப்பட்டவை ஆஸ்கார் அவார்டுகள். அதுதான் உலகத்தின் சிறந்த விருது என உங்களைப் போன்ற ஆங்கில மோகம் கொண்டு அலைவோர் சொல்லிக் கொள்கிறார்கள். சிறந்த அவார்டு என்றால் உலகத்தின் பல் மொழி திரைப்படங்களும் போட்டியில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். ஆனால் ஒரே ஒரு வேற்று மொழி திரைப்படம் மட்டுமே கணக்கில் எடுக்கப்படுகிறது. அது ஏன் உலகத்தின் சிறந்த விருதாக பேசப்படுகிறது என்று தெரியவில்லை.

    ஆங்கில இசையை எடுத்துக் கொண்டு ஆங்கில திரைப்படத்திற்கு இசையமைத்ததால் ஆஸ்கார் வாங்கி வந்தவரைப் பார்த்து இருவர் பொறாமைப் பட்டதாக நக்கல் செய்திருக்கிறீர்கள். அதில் கமலஹாசனை எடுத்துக் கொள்ளலாம். ஆஸ்காருக்காக அலைந்தார் . மற்றவர் அதைப் பற்றி பேசியதே கிடையாது. ஆசைப்பட்டதும் கிடையாது. ஒருமுறை கூட அதை வாங்கியே தீருவேன் என்று எக்காளமிட்டதும் கிடையாது.

    ஆஸ்கார் வாங்கியவர் தமிழ்த் திரைப்படத்திற்கு இசையமைத்து வாங்கியிருந்தால் பெருமைப்படலாம். ஆங்கில படத்திற்கு ஆங்கில பாணியில் இசையமைத்து வாங்கினார். பெருமைப்பட என்ன இருக்கிறது?

    ReplyDelete
  11. வாங்க அருள் ஜீவா,

    அன்று நான் பார்த்த இரண்டு படங்களை வைத்து இந்தப் பதிவை துவக்கியதால் தடம் புரண்ட ரயில் போல ஒருவேளை உங்களுக்குத் தோன்றியிருக்கலாம். சிவாஜிக்காக கமலை பழித்துப் பேசுவதாக நீங்கள் நினைப்பதெல்லாம் விதாண்டவாதம். சிறு வயதில் நான் கமலை என் அபிமான நாயகனாக கொண்டிருந்தேன் என்றும்தானே சொல்லியிருக்கிறேன்.

    ReplyDelete
  12. வாங்க சால்ஸ்,

    காரிகன் எதை எழுதினாலும் அதை விட்டு விளாசுவது என்ற கொள்கை உங்களுடையது. இதில் நான் தெளிவாக பதில் சொன்னால் மட்டும் உங்களுக்குப் புரிந்துவிடவாப் போகிறது? கமலுக்கு என்னென்ன தெரியும் என்ற லிஸ்ட் நானும் கொடுத்துள்ளேன். பதிவை முழுசும் படிக்கவே மாட்டீர்களா?

    ReplyDelete
  13. \\படம் முடிந்து வெளியே வரும்போது நம் கண்ணில் தென்படும் எல்லோருமே கமலாக இருப்பார்களோ என்று சந்தேகம் வருகிறது என்று இந்தப் படத்தைப் பற்றி ஒரு பதிவர் எழுதியிருந்தார்.\\ ஹா..............ஹா..............ஹா..............

    நவராத்ரி சிவாஜியை விஞ்ச எடுக்க வேண்டும் என்று எடுத்த படம் தான் தசா அவதாரம். எப்படி கமல் வெளிநாட்டு படங்களை காப்பியடித்தார் என்பதை நிரூபிக்க முடியாதோ அதே மாதிரி இதையும் நிரூபிக்க முடியாது. ஆனால் இது தான் உண்மை. ஆனால் இதில் கொடுமை என்னவென்றால், காதில் இரண்டு, கண்களில் இரண்டு, மூக்கில் இரண்டு என்று மொத்தம் ஆறு துளைகளை மட்டும் விட்டு விட்டு மிச்ச இடம் முடுவதும் மொத்தமாக எந்தையோ அப்பிக் கொண்டு நடித்தால் அதை நடிப்பென்று எப்படிச் சொல்வதென்று தான் விளங்கவேயில்லை.

    ReplyDelete
  14. அடுத்து ஆஸ்காருக்கு வருவோம். அதை ஒருபோதும் வாங்கவே முடியாது என்று தெரிந்திருந்தும் தனது பெயருக்கு முன்னாடி ஆஸ்கார் நாயகன் என்று போட்டு, ஒரு அரசியல்வாதி எப்படி மக்களுக்கு நல்லது செய்வேன் என்று கடைசி வரை ஊழல் செய்து தனது சொத்து மட்டுமே சேர்ப்பானோ, அதைப் போல மக்கள் மனதில் ஆஸ்கார் விருது வாங்கி தமிழகத்துக்கு பெயர் சேர்க்கப் போகிறவன் என்ற இமேஜை ஏற்றி வைத்திருந்தார். கடைசியில் ஒரு கட்டத்தில் ஆஸ்கார் விருது நமக்கெதுக்கு, வெள்ளைக் காரன் தமிழ் நாட்டுக்கு வந்து, தமிழ் விருது வாங்கிகிட்டு போற மாதிரி செய்யப் போறேன்னு விட்டாரு ஒரு பீலா. கூரை மீதேறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானத்தின் மீதேறி வைகுண்டம் போகப் போறானாம், என்ற பழமொழியே நினைவுக்கு வந்தது. இவர் வாங்க மாட்டார் என்று சொல்வதற்கும் காரணம் இருக்கிறது. ஆஸ்கார் வாங்க ஒரிஜினாலிட்டி வேண்டும். மணிரத்னமும் இவரும் சேர்ந்து இந்திய அரசு நடுவர்களை ஏமாற்றி தேசிய விருதுகள் வாங்கியது போல அங்கே செய்ய முடியாது. காரணம் உலகில் மூலை முடிக்கில் இருந்தெல்லாம் வந்து உட்கார்ந்திருப்பான். காப்பியடித்ததை காட்டி ஏமாற்ற முடியாது. நாயகனை அனுப்பியபோது காறித் துப்பி திருப்பியனுப்பிய செய்தி அமுக்கப் பட்டது வேறு விஷயம்.

    அந்த சமயத்தில் ரஹ்மான் இரண்டு ஆஸ்கார் வாங்கி வந்த போது , இளையராஜாவே தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொனண்டு பாராட்டு விழாவில் பங்கெடுத்து இரண்டொரு வார்த்தைகள் பெருமையாகப் பேசினார். ஆனாலும் இந்த மனிதனுக்கு பாராட்ட வாயில் வார்த்தைகளே வரவில்லை. பொறாமையில் உள்ளுக்குள்ளேயே புழுங்கித் தள்ளினான். மனமுவந்து கடைசி வரை பாராட்டவேயில்லை.

    ரஹ்மான் மேற்க்கத்திய இசையைக் கற்று ஆஸ்கார் வாங்கினால் தப்பென்ன? எந்த மாணவனும் ஆரம்பத்தில் பள்ளிக் கூடம் சென்றுப்பான் அரிச்சுவடி கற்றிருப்பான். பின்னால் அவன் விஞ்ஞானியாவது அவனது தனித் திறமையே தவிர பள்ளியில் படித்ததே காப்பி என்றாகிவிடாது. ஒரிஜினாலிடி இல்லாமல் பஃடாவில் ஆரம்பித்து, ஆஸ்கார், கிராமி வரை அத்தனை விருதுகளையும் தட்டியிருக்க முடியாது.

    ReplyDelete
  15. சிவாஜி நடிப்பு: ஹி .............ஹி .............ஹி ............. இவரைப் பத்தி பேச நமக்கு தகுதியும் கிடையாது, நடிப்பு பத்தி வெவரமும் பத்தாது. [அப்போ மிசீக் பத்தி மட்டும் தெரியுமான்னு கேக்காதீங்க, அதுவும் தெரியாது தான்.] ஒரு தனி மனிதனின் திறமைகளை மதிப்பிடும்போது, அவனிடம் ஏன் ஒரு திறமைதான் இருந்தது, ஒன்பது திறமைகள் ஏன் இல்லை, அப்புறம் அவன் அந்த திறமையை வைத்து சேர்த்த பணத்தை ஏன் அதிலேயே போட்டு அழிக்கவில்லை................ அடடா......... இதெல்லாம் ஒரு கேள்வியாய்யா? நல்லா கேட்டாய்ங்க டீடெயிலு.................

    ReplyDelete
  16. சால்ஸ்,

    ஆஸ்கர் விருது ஒரு அமெரிக்க லோக்கல் விருது என நானே குறிப்பிட்டுள்ளேன். எதையோ புதிதாக சொல்வதுபோல ஆஸ்கார் ஹாலிவுட்காரன் ஆங்கிலப் படங்களுக்கு கொடுத்துக்கொள்ளும் விருது என்று நீங்கள் சொல்வதைப் பார்க்கையில் நகைப்பாக இருக்கிறது. அதுசரி. ஆங்கிலப் படங்களுக்கு கொடுக்கும் விருதான ஆஸ்கர் விருதை ஒரு தமிழ் படத்திற்கு இசை அமைத்திருந்தால் ரஹ்மானுக்கு கொடுத்திருப்பார்களா? இல்லை என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று பாருங்கள்;

    ----ஹாலிவூட் திரைப்படங்களுக்காக உருவாக்கப்பட்டவை ஆஸ்கார் அவார்டுகள். ----

    என சொல்லிவிட்டு பிறகு இறுதியில்,

    -----ஆஸ்கார் வாங்கியவர் தமிழ்த் திரைப்படத்திற்கு இசையமைத்து வாங்கியிருந்தால் பெருமைப்படலாம். ஆங்கில படத்திற்கு ஆங்கில பாணியில் இசையமைத்து வாங்கினார். பெருமைப்பட என்ன இருக்கிறது?---

    அது எப்படி சார் முடியும்? கொஞ்சமாவது விபரம் தெரிந்துகொண்டு வந்து எழுதுங்கள். இப்படித்தான் எதையாவது குழந்தைத்தனமாக உங்கள் பொன்னான கருத்தை அடிக்கடி வெளிப்படுத்தி எங்களை திணற அடிக்கிறீர்கள்.

    ReplyDelete
  17. வாங்க ஜெயதேவ்,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    நவராத்திரியை விட்டு மக்கள் தன் பக்கம் திரும்பவேண்டும் என்ற அதீத ஆசையினால் உருவானது தசாவதாரம் என்பது எல்லோருக்குமே தெரியும். முகத்தில் மாஸ்க் ஒட்டிக்கொண்டு அமெரிக்க அதிபர், அமெரிக்க டெர்ரரிஸ்ட், ஜப்பானியன், உயரமானவன், கருப்பானவன், கிழவி என்று மகா மடத்தனமாக வேஷம் போடுவது குறித்து கமலுக்கு வேண்டுமானால் பெருமை இருக்கலாம். நவராத்திரி ஒன்பது மனித உணர்ச்சிகளை மனிதாகவே காட்டிய படம். அதை மிஞ்ச கமல் எடுத்துக்கொண்டது மிக மலிவான பத்து வேடக் கதை. இன்று அந்தப் படத்தைப் பார்த்தால் படு கேவலமாக இருக்கிறது. கமலே அதைப் பார்ப்பதை விரும்பமாட்டார் என்று நினைக்கிறேன்.

    ஆஸ்கர் பற்றி பேச ஆரம்பித்தாலே கமலின்றி அது முடியாது. மூன்றாம் பிறை படத்தில் பாரத் விருது கிடைத்ததும் ஏதோ வானமே வசப்பட்டதுபோல ஏகத்துக்கும் பல வண்ணக் கனவுகளில் மூழ்கிப் போனார் கமல். சிவாஜிக்கே இல்லாத சிறந்த நடிகர் என்ற பட்டம் யாருக்கு கிடைத்தால் என்ன ஒரு கூட்டத்தினர் மவுனமாக இருந்தார்கள். அப்போது கமல் ஆரம்பித்த கனவுதான் ஆஸ்கர் விருது பெறுவேன் என்ற இந்த ஸ்டேட்மென்ட். ஆஸ்கர் பற்றிய துளியூண்டு அறிவும் இல்லாமல் நீங்கள் சொல்வதுபோல மக்களை ஏமாற்றியவர். ரஹ்மானை இன்றுவரை புகழ்ந்து பேசுவதே கிடையாது. பெயரில் உலக நாயகன் என்று போட்டுக்கொண்டு தன்னைத்தானே பாராட்டிக் கொண்டிருக்க வேண்டியதுதான். அந்தப் பட்டதைத் அவராகவே துறக்கும் நாளில்தான் அவர் முதிர்ச்சியடைந்த நடிகராக மாறுகிறார் என்று சொல்வேன்.

    கமல் பற்றிய பல புகழாரங்கள் உண்டு. அதில் ஒன்று தான் ஈட்டிய பணத்தை சினிமாவிலேயே கொட்டுகிறவர் அவர் மட்டும்தான் என்பதும். கமலுக்கு அது தெரியும் இது தெரியும் சிவாஜிக்கு வேறென்ன தெரியும் என்று நண்பர் ஒருவர் கேட்டிருக்கிறார். சிவாஜிக்கு நடிப்பு ஒன்றுதான் தெரியும். அதனால்தான் அவர் ஒருவரே இங்கு நடிகன் என்கிறேன். உங்கள் பதில் அவருக்கு சில உண்மைகளை புரியவைத்திருக்கும்.

    ஆனாலும் தமிழ்ப் படத்திற்கு இசை அமைத்து ஆஸ்கர் வாங்கியிருந்தால் ரஹ்மானைப் பாராட்டலாம் என்று ஒரு போடு போட்டாரே? என்ன ஒரு ஞானம்! ரஹ்மான் வாங்கிய ஆஸ்கருக்காக அவரைப் பாராட்ட மனம் வராதாம். ஆனால் இதுவரை யாரும் கேட்டேயிராத சிம்பனி அமைத்ததாக கதை கட்டும் இளையராஜாவை மட்டும் கொண்டாடுவராம்!

    ReplyDelete
  18. // வரிவரியாக விவரித்து மொத்தக் கதையையே சொல்லும் விதமான விமர்சனத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. //
    பாஸ் அது ஸ்பாயிலர்..
    பதிவைப் படித்தவுடன் ஒரு டம்பளர் தண்ணீர் குடித்தேன்!
    விரிவாக எழுதப் போவதில்லை
    புதிதாக ஒரு ஆசை
    நீங்கள் குறிப்பிட்ட சிவாஜியின் ஆகச் சிறந்த படங்களை மோசர் பியரிலாவது வாங்கி குடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்பதே அது..
    பார்போம் எப்போது கைகூடுகிறது என்று...
    உங்கள் பதிவைப் பற்றி நான் என்ன சொல்வது
    வழக்கம் போல பாலிஷ்ட் டயமன்ட்தான்
    தொடருங்கள்

    ReplyDelete
  19. இந்த அளவில் வேற கட்டுரை படித்திருந்தேன் என்றால் தூக்கம் வந்திருக்கும். வரவில்லை ஏனென்றால் எனக்கு கமலைப் பிடிக்கும். கமலைப் பற்றி பெருமையாகவும் கூறியுள்ளீர்கள், கழுவியும் ஊற்றியுள்ளீர்கள் . சிவாஜியை நல்ல நடிகன் என்று கூறுவதால் கமல் நல்ல நடிகனில்லை என கூறிவிட முடியாது. ஒருவரைப் போல் இன்னொருவர் சாத்தியமில்லை. கமல் ஆடும் அளவுக்கு சிவாஜியால் ஆட முடியாது. சலங்கை ஒலி ஒன்று போதும் . நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கலாம் சிவாஜி என்று . இத்தலைமுறையில் உள்ளவர்கள் அவரை மறந்து விட்டார்கள். அதுபோலவே வரும் தலைமுறைகள் கமலையும் மறந்து விடுவார்கள் (இப்பொழுதே பாதி பேர் மறந்து விட்டார்கள் ) . நடிப்பு என்பது தலைமுறைக்கேற்றவாறு மாறிக் கொண்டிருக்கிறது. வரும் தலைமுறைகள் இருவரையுமே வரலாற்றில் மட்டுமே வைத்திருக்கும்.

    ReplyDelete
  20. வாருங்கள் நபி பால் நடராஜன்,

    பெயரிலேயே சமத்துவம் தெளிவாகவே தெரிகிறது.

    கருத்துக்கு நன்றி.


    நான் கமலை மட்டுமல்ல சிவாஜியைக் கூட கழுவி ஊற்றியுள்ளேன். இது ஒரு ரசனையின் நகர்வு. இது உங்களுக்கும் ஏற்படலாம்.

    நீங்கள் சொல்வது சரிதான். இன்றைய தலைமுறை சிவாஜியை வியப்பதில்லை. கமல் கூட முன்னாள் நாயகன் என்ற பட்டியலுக்குள் வந்துவிட்டார். கமல் நல்லா நடிப்பான் என்று பொத்தாம் பொதுவாக ஒரு கருத்தை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். விமர்சனம் செய்யக்கூடிய அலசல் வெகு சிலரே செய்கிறார்கள்.

    எனக்கு ஒரு விதத்தில் இருவரையுமே பிடிக்கும் நிறைய மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும்.

    தமிழ் சினிமா என்று வரும்போது இவர்கள் இருவரின் நடிப்பைப் பற்றி சிலாகிக்காமல் யாராலும் கடந்து சென்றுவிட முடியாது.

    ReplyDelete
  21. It is true that tamil film lovers had cursed kamal when he had not appreciated rahman for his oscar award kamals insensible
    inappropriate comments on various issues had incurred the wrath of many a person in tamilnadu
    a good article kareegan ji

    ReplyDelete
  22. It is true that tamil film lovers had cursed kamal when he had not appreciated rahman for his oscar award kamals insensible
    inappropriate comments on various issues had incurred the wrath of many a person in tamilnadu
    a good article kareegan ji

    ReplyDelete