Friday, 8 April 2016

ஒரு தேவதையின் குரல்.

இந்த வருடத்திற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அமிதாப் பச்சன் சிறந்த நடிகர், பாகுபலி சிறந்த படம் போன்ற ஆயத்தமான முன்தயாரிப்பு முடிவுகளைப் பார்க்கும் போது  ஒரு சம்பிரதாயமாகத் தொடரும் அபத்தம் இந்த முறையும் தவறவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.  இளையராஜா விருதுகளுக்குப் புதியவர்  இல்லை என்பதால் அவருக்குக் கொடுக்கப்பட்ட தாரை தப்பட்டைக்கான விருது பற்றி புதிதாக எதுவும் சொல்லத் தோன்றவில்லை. படம்தான் நார் நாராக கிழிந்துபோனது. எனவே இப்படி மெகா அடிபட்ட அந்தப் படத்திற்கு இதுபோன்ற சில ஒத்தடங்கள் தேவைதான்.

 வழக்கம்போலவே இராவாசிகள் இணையத்தில் கேக் வெட்டாத குறையாக குதூகலத்தில் குதிப்பார்கள் என்று நான் எதிர்ப்பார்த்திருந்த வேளையில் அதுபோன்ற அலப்பரைகள் எதுவும் கண்ணில் படவில்லை. அவர்களுக்கே இதையெல்லாம் தாண்டிச் செல்லவேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கலாம். அலுப்பாக இருந்திருக்கலாம். "விருதா? அப்படியா? அவருக்கு விருது கொடுத்ததால அந்த விருதுக்குத்தான் பெருமை." என்று சம்பிரதாயமான ராஜா ராஜாதான் பல்லவியோடு தங்களது கொண்டாட்டத்தை முடித்துக்கொண்டார்கள். அதுவரைக்கும் நிம்மதியே. ஆயிரம் படங்களுக்கு அவர் இசை அமைத்த சாதனைக்கு பெரிய மேடை போட்டு,பளீரென்ற மின்சார வெளிச்சத்தில் மனதுருகி, சினிமா கண்ணீர் சிந்தி, அதே ஆயிரம் முறை ஏகப்பட்ட இடங்களில் மனனம் செய்து வாசித்த பாராட்டுப் பத்திரத்தை வாசித்து முடித்திருந்த வேளையில் மற்றொரு பாராட்டுக்கு அவர்களுக்கு நேரமில்லை போலும்.   எத்தனை முறைதான் போலியாக மனதுருக முடியம்?

    இதே சமயத்தில்  ஒரு இசை சகாப்தம் தனது ஆளுமையை மிக அமைதியாக  ஒரு சாதனைப் புத்தகத்தில்  வார்த்தைகளாக வரைந்தது.   பி சுசீலா என்ற நமது கானக்குயில் 17ஆயிரம் பாடல்களுக்கும் மேலாகப் பாடிய வியப்பு கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட, உலகம் அந்தக்  குரலிசைக்கு ஒரு மாபெரும் அங்கீகாரம் அளித்திருக்கிறது. நானும் தேடினேன். இணையத்தில் அவரைப் பாராட்டி வந்த பக்கங்கள் பெரும்பாலும் கண்ணில் அகப்படவில்லை. ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த சாதனையைப் போற்றும் அதேவேளையில் இந்த பதினேழாயிரம் பாடல்கள் குறித்த சந்தோஷம், களிப்பு நம்மிடமில்லாத உண்மை வலி ஏற்படுத்துகிறது.

      பி சுசீலா பற்றி நவீனமாக என்ன எழுதினாலும் அவர் குரலில் ஆட்சி செய்யும் அந்த மோகம் நிறைந்த,  மயக்கம் சூழ்ந்த, நளினம் ததும்பும், துயிர்ப்பான ஒரு இசையாகவே ஒலிக்கும் அந்தத் திகைப்பைச் சுற்றியே அனைத்து வாக்கியங்களும் செல்லும். எனது பார்வையில் பி சுசீலாவுக்கான ஒரே போட்டியாக இருந்தவர் ஆஷா போன்ஸ்லே ஒருவர்தான்.

       நீங்கள் அறுபதுகள் குறித்த சினிமா  சிந்தனைக்குள் வர நேரிட்டால், சுசீலா என்ற இசை ஆச்சர்யத்தின் குரல் மானசீகமாக உங்கள் நெஞ்சத்தில் ஒலிக்காமல் இருக்காது. கே வி மகாதேவன், எம் எஸ் வி போன்ற இசைத் தூண்களின் மீது மோதித் தெறித்து வெளிப்பட்ட மெல்லிய தென்றல் காற்றாக அவர் குரல் ஒலித்தது. எம் எஸ் வி என்ற பிரமிப்பான இசைக்  கலைஞன்  சுசீலாவின் குரலில் மறைந்திருந்த அந்தத் தென்றலின் தழுவல்களையும் இதமான சுகங்களையும் நூலிழை பிசகாமல் பிரதி எடுத்து  காலம் என்றும் மறக்காவண்ணம் தனது இசையில் பதிவு செய்ய, சுசீலா என்ற இசைதேவதையின் பரிமாணம் பல விதங்களில் படர்ந்தது.

மன்னவனே அழலாமா என்ற தோழமையும் , எங்கே நீயோ அங்கே நானும் உன்னோடு என்ற காதலின் நீட்சியும், நாளை இந்த நேரம் பார்த்து ஓடி வா நிலா  என்ற ஏக்கமும், மன்னவன் வந்தானடி என்ற குதூகலமும், சொன்னது நீதானா என்ற சோகமும்,  சித்திரை மாதம் பவுர்ணமி நேரம் என்ற உற்சாகமும், காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானா என்ற களிப்பும், நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா என்ற நெஞ்சத்தின் வேதனையும், என்ன என்ன வார்த்தைகளோ என்ற வெகுளித் துள்ளலும், .........

      நாம் உணரும் பல உணர்ச்சிகளுக்கு உயிரூட்டிய குரல் அவருடையது. நம் மனதில் மிதக்கும் பல நெகிழ்ச்சியான, மகிழ்வான நிகழ்வுகளை ஒரு இசை மீட்டெடுக்கிறது. இசை என்றால் அது வாத்தியங்களின் சங்கீதமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. சில சமயங்களில்  சில குரல்களே ஒரு இசையாக மாறிவிடுகின்றன. சுசீலாவின் குரல்  அந்த வகையில் ஒரு பிழையில்லா இசை. அது ஒரு தேவதையின் குரல்.18 comments:

 1. உண்மைதான் நண்பரே
  சுசிலாவின் குரல் தேவதையின் குரல்தான்

  ReplyDelete
 2. பி.சுசீலா அவர்கள் தமிழிசைக்குக் கிடைத்தவரப்பிரசாதமே .இதை யாரும் மறுக்க இயலாது. கிட்டத்தட்ட பதினேழாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி உலகப்பெரும் கின்னஸ் சாதனை படைத்த காந்த குரலுக்குச் சொந்தக்காரர். இணையத்தில் இது குறித்த செய்திகள் அதிகம் வரவில்லை என்ற உங்கள் ஆதங்கம் புரிகிறது .இருந்தும் தங்கள் பதிவிலே இன்னும் அவரைப்பற்றிய ,அவரது இனிமையான எண்ணற்ற பாடல்கள் குறித்து செய்திகள் வெளியிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது .தலைப்புச் செய்தி மிகவும் குறைகிறதே .(சிலருக்குப் பிறரைக் குறை கூறுவதே வேளை என்று இதற்கு முந்தைய பதிவிலே பதிலளித்தது ஞாபகமிருக்கிறது )

  ReplyDelete
 3. சுசீலாவின் குரலைக் கேட்டு தாலாட்டப்பட்டு தூங்கிக் கொண்டிருந்தன ஒரு இருபது வருடங்கள் என்பதுதான் அவருக்குரிய மகிமை போலும். இணையம் சிலவற்றைப் புரட்டிப்போட்டது. அப்படிப்போடப்பட்ட புரட்டலில் சுசீலாவைப் பின்னுக்குத் தள்ளி பாடகி என்றாலேயே அது ஜானகிதான் என்ற பிம்பமும் இளைய தலைமுறையிடம் பரப்பப்பட்டது. எதையும் ஆய்ந்துபார்த்து ஒப்புக்கொள்ளும் திறனில்லாத இளைய தலைமுறை தன்னிடம் வந்த எல்லாக் குப்பைகளையும் தலைமேல் தூக்கிவைத்துக்கொண்டு ஆட ஆரம்பித்தது. அதில் வந்த குறைபாடுகள்தான் இவையும்.
  சுசீலாவின் மேன்மை அவரது ஆயிரக்கணக்கான பாடல்களில் பொதிந்திருப்பதை இளைய சமுதாயம் உணரவேண்டும் என்பதுதான் நம்முடைய எண்ணமும்.
  இரா பற்றிய தேசிய அவார்டு மிகப்பெரிதாகப் பேசப்படாமல் போனதற்கு தம்பி அண்ணனுக்கு வழங்கிய விருது என்பதாகவும் இருக்கலாம். விருதுக்குழுவில் கங்கை அமரன் இருந்தார் என்பதிலேயே பாதி கொண்டாட்டங்கள் நீர்த்துப்போய்விட்டன. அவரது ஆயிரமாவது படம் இப்படி ஆனதில் எனக்கு சந்தோஷமில்லை. அவருக்கு எடுக்கப்பட்ட விழாவும் மிகப்பெரிதாக சோபிக்கவில்லை என்பதிலும் எனக்கு சந்தோஷமில்லை. ஆனால் சில முடிவுகள் இப்படி அமைந்துபோவதில் இயற்கையின் பங்கும் இருக்கிறது போலும்.

  ReplyDelete
 4. வாங்க கரந்தை ஜெயகுமார்,

  வருகைக்கு நன்றி. பி சுசீலாவின் குரலை விரும்பாதவர்கள் இருந்தால் அது வினோதம்தான். எல்லோரையும் ஈர்க்கும் வசீகரமிக்க குரலல்லவா அது?

  ReplyDelete
 5. வாருங்கள் அருள் ஜீவா,

  முரண்படாமல் உங்கள் கருத்தை முன்வைத்ததற்கு முதலில் நன்றி.

  உண்மையில் இது மிகச் சிறிய பதிவுதான். ஆனால் இத்துடன் முடிந்துபோகும் பதிவல்ல என்பதால் சுருக்கமாக வெளியிட்டிருக்கிறேன்.

  ReplyDelete
 6. வாங்க குமார்,

  நீங்களும் நானும் இன்னும் மிகப் பலரும் ஒத்துக்கொள்ளும் உண்மையிது.

  நன்றி.

  ReplyDelete
 7. காரிகன்

  தேனினிமையிலும் இனிய குரலுக்கு சொந்தக்காரரான சுசீலா அவர்களுக்கு கிடைத்திருக்கும் இந்த மரியாதை போற்றப்பட வேண்டிய ஒன்று. கின்னஸ் சாதனையை எப்போதோ தொட்டு விட்டார். இது தாமதமான விருது என்றே நினைக்கிறேன். தன் இனிய குரலை தான் நினைத்தாலும் தக்க வைத்துக் கொள்ள முடியாத துர்ப்பாக்கியத்தை இயற்கை செய்து விடுகிறது . ஆனாலும் பதிவு செய்யப்பட்ட அவரது ஆயிரக்கணக்கான பாடல்களை காலம் காலமாக கேட்டுக் கொண்டே இருக்கலாம் . காலத்தால் அழியாத அற்புத கானங்களை அள்ளி வழங்கியவரல்லவா!

  தெலுங்கை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் நமது தமிழை அவரை விட எந்தப் பாடகியும் அழகுற உச்சரித்து பாடிவிட முடியாது. அந்தக் காலத்துப் பெரியவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் சுசீலாவின் உச்சரிப்பை கேட்டு தமிழ் பழகுங்கள் என்று சொன்னதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அவ்வளவு தெளிவாக சுத்தமான உச்சரிப்பில் தெளிந்த நீரோடையைப் போன்ற குரலைக் கொண்டவருக்கு புகழாரங்கள் இன்னும் எவ்வளவோ சூட்டலாம். நம் தமிழர்கள் ஒன்று கூடி அவரை பாராட்ட வேண்டும்.
  அரசு அவருக்கு பெரிய பாராட்டு விழா நடத்த வேண்டும் .

  ReplyDelete
 8. வாருங்கள் அமுதவன்,

  வருகைக்கு நன்றி.

  சுசீலாவுக்கு இணையான குரல் வளம் கொண்ட மற்றொரு பாடகி அவர் காலத்தில் இல்லை. எல் ஆர் ஈஸ்வரி கூட சுசீலாவுக்கு போட்டியாக வர இயலாது கேபரே பாடல்களுக்கு நகர்ந்து விட்டார். எஸ் ஜானகி செயற்கையாக பாடுபவர். பாசம் படத்தின் ஜல் ஜல் ஜல் என்னும் சலங்கை ஒலி பாடலில் எத்தனை சிரமப்பட்டு தன் குரலுக்கான இனிமையை சேர்த்திருக்கிறார் என்று கேட்டு அவர் அப்போதே அப்படித்தான் போலும் என்ற எண்ணம் வந்தது. இரா சுசீலாவை ஓரம்கட்ட முயன்றபோது ஜானகி அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டார். இராவினால் ஜானகிக்கு ஏராளமான பாடல்களும் புகழ் மாலைகளும் கிடைத்தன என்பது உண்மையே. சிலர் ஜானகியை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் என்றே அழைக்கிறார்கள். அவர் என்றைக்கும் சுசீலாவின் இனிமைக்கு அருகே வரமுடியாது. எல்லா குப்பைகளையும் என்ற சொற்களுக்குள் ஏகப்பட்ட அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன. அதை நான் ஆமோதிக்கிறேன். குப்பை கொஞ்சமா நஞ்சமா? வந்த பத்தில் ஒன்றோ ரெண்டோதான் தேறும். அதற்கே இத்தனை ஆர்ப்பாட்டம்?

  சுசீலாவின் குரல் வளம் பற்றி நீங்கள் ஒரு கட்டுரை எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். இன்னமும் எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 9. இசைத்துறையில் உள்ளவர்கள் கூட கூப்பிட்டு வாழ்த்தவில்லை.. பொறாமையோ என்னவோ

  ReplyDelete
 10. நான் நினைப்பது என்னவென்றால் இரா வருகைக்கு முன்பு சுசீலா பாட்டு டிஎம்ஸ் பாட்டு என்று தான் சொல்வார்கள். (அதுவும் கண்ணதாசன் ,வாலி,புலமைப்பித்தன் ,பட்டுக்கோட்டையார் எழுதினாலும் எம்ஸ்வி,மகாதேவன், சுதர்சனம், வேதா, குமார் இசையமைத்து இருந்தாலும் ).பாட்டு எழுதிய வரும் இசையமைத்தவரும் அதை பெரிதாக எடுக்க மாட்டார்கள்.

  இது இரா அவர்களுக்கு பிடிக்க வில்லை. Tks Susheela குரல்கள் vibrating voices.இசை யை அமுக்கி விடும். ஆனால் இரா பாடல்களை இரா பாட்டு என்றுதான் அனைவரும் கூறுவார்கள். என்ன ஜானகி பாடியது spb பாடியது என்று கூறுவார்கள்.

  ReplyDelete
 11. வாங்க சால்ஸ்,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  சுசீலாவுக்கு இணையான குரல் கொண்ட மற்றவரை தமிழில் இதுநாள் வரை நான் கேட்டதில்லை. அதற்காக அவர் மட்டுமே சிறந்தவர் என்றும் சொல்லமாட்டேன். சுசீலாவிடமிருந்து தமிழ் கற்றுக்கொள்ளச் சொன்ன ஆசிரியர்கள் குறித்து நானும் படித்திருக்கிறேன். என்ன ? செவ்வானத்தில் என்பதை ஷெவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் என்று சில சமயங்களில் கொஞ்சம் அழுத்தம் கொடுப்பார்.

  அரசு அவருக்குப் பாராட்டு விழா எடுக்கவேண்டும் என்ற உங்களின் கோரிக்கை சரியே.

  ReplyDelete
 12. வாருங்கள் ராஜேஷ்,

  நான் உங்கள் தளத்தை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். எதோ ஒரு இணைப்பின் மூலம் உங்கள் இசையரசி தளம் அறிந்து அங்கு வந்து நீங்கள் பி சுசீலாவின் தீவிர ரசிகர் என்றறிந்தேன். உங்கள் வருகைக்கு நன்றி.

  ----இசைத்துறையில் உள்ளவர்கள் கூட கூப்பிட்டு வாழ்த்தவில்லை.. பொறாமையோ என்னவோ---

  உண்மையாக இருக்கலாம். இங்கே ஒரு சிலருக்கு அபிரிமிதமான பாராட்டு மழை கொட்டுவார்கள். ஆடம்பர விழா எடுப்பார்கள். "எல்லாம் துறந்த ஞானி"களுக்குக் கூட இப்படியான புகழாரங்கள் தேவைப்படுகின்றன.

  நீங்கள் சுசீலாவுக்காக ஆதங்கப்படுவது நியாயமானதே.

  சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஒரு முறை கூட எம் எஸ் விக்கு வழங்கப்படவில்லை என்பது போன்ற முரண்பாடுகள் நிறைந்த பொறாமைகள் சூழ்ந்த உலகமாக திரைத்துறை தெரிகிறது.

  ReplyDelete
 13. வாங்க அழகுவேல் சாமி,

  இராவுக்கு முன் என்றல்ல இராவின் காலத்திலேயே ரஜினி பாட்டு கமல் பாட்டு மோகன் பாட்டு ராமராஜன் பாட்டு என்று மக்களில் சிலர் இசையை நடிகர்களின் முகமாகப் பார்த்தார்கள். இராவுக்கு முன் இது மிக வெளிப்படையாக அதிகமாகத் தெரிந்தது. இரா தனக்கு வேண்டிய அங்கீகாரத்தை பெற்றுவிட்டார். ஆனால் அவருக்கு முன்னிருந்தவர்கள் இந்த விஷயத்தில் இழப்பாளர்களே. குறிப்பாக எம் எஸ் வி மற்றும் வி. குமார். இரா எதற்காக இடையிசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் என்பது கூட பாடல் வரிகள் மீது மக்கள் கவனம் போகக் கூடாது என்பதற்காகத்தான். தன் இசையை மீறிய எதையும் அவர் வளர விட்டு வைத்ததில்லை. வைரமுத்துவுடனான பிரிவும், எஸ் பி பி குரலில் மனோ என்ற பாடகர் திடீரெனெ பாட வந்ததும் இதன் பின்னணியில்தான்.

  இப்போது எல்லாம் ஓய்ந்துவிட்டது. எதோ ஓய் என்றொரு படத்திற்கு இசை அமைத்தாராமே? கேட்டீர்களா?

  ReplyDelete
 14. வழக்கம் போலவே தாமதமான வருகை காரிகன்...

  நீங்கள் குறிப்பிட்ட சம்பிரதாய அபத்தம் அவ்வளவு சீக்கிரமாய் முடிந்துவிடாது என்பது ஒரு சோகமான யதார்த்தம் ! கான்ஸ் பட விழா போன்ற பாராபட்சமற்ற சினிமா விருதுகள் இந்திய சூழலில் என்றுமே சாத்தியமாகாது என்பது என் கருத்து.

  " எண்ணிக்கையை " கொண்டாடுவதும் நம் தனிமனித வழிபாடு சார்ந்த பழக்கங்களில் ஒன்றாக மாறிவிட்டதின் விளைவே ராஜாவின் சாதனை பேசப்படுவதற்கும் பி. சுசீலா மறக்கப்படுவதற்கும் காரணம் ! சுசீலாவின் சாதனையை உங்களின் இந்த பதிவின் மூலமாகத்தான் தெரிந்துக்கொண்டேன் !!!

  நீங்கள் குறிப்பிட்ட அவரின் பாடல் வரிகளை படிக்கும்போதே மனதுக்குள் அவரின் குரல் மாலை நேர தோட்டத்தின் மல்லிகை மணமாய் சூழ்கிறது !

  தொடருவோம்...

  நன்றி
  சாமானியன்

  ReplyDelete
 15. வாங்க சாம்,

  ஆச்சர்யமாக இருந்தது உங்களின் வரவு. நன்றி.

  சிவாஜிக்கும், எம் எஸ் விக்கும் வழங்கப்படாத தேசிய விருதுகளை யார் வாங்கினால் என்ன? சிவாஜியை விட கமல், விக்ரம், தனுஷ் போன்றவர்கள் சிறப்பாக நடித்தார்கள் என்பதோ, எம் எஸ் வி யை விட இளையராஜா, ரஹ்மான் சிறந்த இசையை கொடுத்தார்கள் என்பதோ என்னால் ஏற்றுகொள்ள முடியாத ஒன்று. உரியவர்களுக்கு கொடுத்துவிட்டு அதன் பின் மற்றவர்களுக்கு விருதுகள் சென்றிருந்தால் நலமாக இருந்திருக்கும்.

  சுசீலாவின் கின்னஸ் சாதனையை என் பதிவின் மூலம் தெரிந்துகொண்டதே நாம் எந்த அளவிற்கு திறமையானவர்களை மதிக்கிறோம் என்பதன் வெளிப்பாடு. பலர் சுசீலாவுக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் பற்றி வாய் திறக்கவில்லை. இதையே இளையராஜா பெற்றிருந்தால் நிலைமையே வேறு. அதுதான் என்னுடைய கோபம்.

  தமிழ்த் திரையிசையின் ஒரே இன்னிசைக் குரல் சுசீலாவுடையது. வேறு யாரும் அதை திருடிக்கொள்ள முடியாது. காலமே அதை தீர்மானித்துவிட்ட பின் யாரால் இதை மாற்ற முடியும்?

  தொடருங்கள்......

  உங்களின் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

  ReplyDelete

 16. காரிகன்,
  எக்காலத்திலும், எனக்கு மிகப்பிடித்தமான பாடகி திருமதி. பி. சுசீலா அவர்களைப் பற்றிய உங்கள் கணிப்பு மிகச் சரியானதே!
  ஈடு, இணையற்ற பாடல் அரசி. இன்னும் எவ்வளவோ சொல்ல முடியும் அவர் புகழ் பாடி.

  நான் முரண்படும் விஷயம், திருமதி. ஜானகி அவர்களைப் பற்றிய உங்கள் மதிப்பீடு!

  திருமதி. ஜானகி அம்மா அவர்கள் தனிக்க உரியதான குரல் வளத்தில் பெரும் வெற்றிகள் பெற்ற, பல மொழிகளில் நீண்ட காலம் கோலோச்சிய, அசாதாரண பாடகி. மூன்று மொழிகளில் 4 தேசிய விருதுகள், 11 முறை கேரளா, 10 முறை ஆந்திரா , 6 முறை தமிழ்நாடு அரசாங்கங்களினால் சிறந்த பாடகி என விருது பெற்றவர்.

  இருவர் குரலையும், இரண்டு மொழிகளில் 30 வருடங்களுக்கு மேலாக கேட்டு ரசித்துக் கொண்டிருப்பவன் நான். எனக்கு எப்போதும் பிடித்திருப்பது திருமதி. சுசீலா அம்மாவின் குரல்தான்! பி. சுசீலா அம்மா அவர்களைப் பற்றி வானுயரப் பேச, இன்னொரு சாதனையாளரை, திருமதி. ஜானகியாகட்டும் அல்லது வேறு யாராகட்டும், நியாயமில்லாத மதிப்பீடுகளின் மூலம் மட்டம் தட்டிப் பேச எந்த அவசியமும் இல்லை என்றே கருதுகிறேன்!

  வளர்புகழ் திருமதி. சுசீலா அம்மா அவர்களின் புதிய சாதனைக்கு என் வாழ்த்துகள்!

  ReplyDelete
 17. வாங்க சந்திரகுமார்,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  சுசீலாவின் குரல் உங்களுக்கு மிகவும் பிடித்ததாக நீங்கள் குறிப்பிட்டுள்ளது ஒருவேளை மிகையானதாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்லவரும் கருத்து எஸ் ஜானகி பற்றியதே. எனக்குத் தோன்றுவது என்னவெனில் ஜானகியை அதிகம் ரசிப்பதால்தான் உங்களால் எனது விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுதான்.

  சுசீலாவைவிட ஜானகி சிறப்பாக பாடுவதாக சிலர் பாராட்டுகிறார்கள். எனக்கோ அது உண்மையில்லை என்ற எண்ணம் ஆழமாக உண்டு. ஜானகி நல்ல பாடகியாக வந்தவர்தான். இராவிடம் மாட்டிக்கொண்டு பல அற்பமான, ஆபாசமான பாடல்களைப் பாடி சுசீலாவிடம் காணப்பட்ட மேன்மையை இழந்தவர். சிலர் அவரை ஒரு மிமிக்ரி பாடகர் என்றே அழைக்கின்றனர்.

  யாரையும் மட்டம் தட்டிப் பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், சில வேளைகளில் அவ்வகையான ஒப்பீடுகள் நேர்வது யதார்த்தமான எதிர்வினை என்று நினைக்கிறேன்.

  ReplyDelete