Friday 19 April 2013

இசை விரும்பிகள் III - மெல்லிசை மலர்ந்தது.

     தமிழ்த் திரையிசை 1931 இல் துவங்கி இன்று வரை   ஏறத்தாழ எண்பது ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. ஆரம்பத்தில் கடினமானதாகவும் மாற்றங்களுக்குத் தடுப்புச்சுவராகவும்  இருந்து  வந்த இந்த இரும்பு இசை இருபது ஆண்டுகள் கழித்து முதல் முறையாக  மெல்ல  வடிவம் மாறத்துவங்கியது. ஏனெனில் இந்த மாற்றத்திற்கான அவசியம் ஏற்பட காலம் கனிந்தது அப்போதுதான். இதில் கவனிக்கத் தக்க   ஒரு விஷயம் என்னவென்றால் மேலை நாடுகளில் 1950 களை  இசை மாற்றத்திற்கான பருவமாகவும் ஒரு குறியீடாகவும்  இசை  விமர்சகர்கள் கூறுவதுண்டு. இது நமக்கும் பொருந்தும்.
          1952 இல் தமிழ் திரையிலும்  ஒரு மகா மாற்றம் ஏற்பட்டது. அல்லது இப்படிச் சொல்லலாம்: பராசக்தி  நிகழ்ந்தது.  இந்த ஆண்டில்தான் சமூக கதைக்களம் கொண்ட  ஏ வி எம் மின் "பராசக்தி" வெளி வந்து மிகப்பெரிய அலைகளை உருவாக்கியது. இதற்கு முன்பே சில சமூக படங்கள் (ஏழை படும் பாடு-1950, ஓர் இரவு-1951, வேலைக்காரி மேலும் சில வீணை பாலச்சந்தரின் படங்கள் ) வந்திருந்தாலும் ,அவைகள் சாதிக்கமுடியாத ஒன்றை இந்தப்படம் செய்தது.அது இதுதான்: பராசக்தி  தமிழ்த் திரையை ஒரேடியாக புரட்டிப்போட்டது. அதன் வீச்சு வெகு ஆக்ரோஷமாக ராட்சத அளவில் இருந்தது. அதுவரை தமிழ்த் திரையுலகம் காணாத ஒரு மாற்றத்திற்கான முதல் புள்ளி அங்கே வைக்கப்பட்டது. அதன்  மூச்சு முட்டும் வெற்றி முகவரி இல்லாத ஒரு நடிகனை ஒரே இரவில் தமிழகத்தின் தலைப்புச்  செய்தியாக்கியது. ஒரே  வரியில் சொல்ல வேண்டுமென்றால் அதுவரை பாடல்கள் மூலம் வசனங்களை படம் முழுவதும்  பாடிக்கொண்டிருந்த அன்றைய உச்ச நடிகர்கள் சிவாஜியின் கூர்மையான தமிழ் உச்சரிப்பின்  சூடு தாங்காது ஒரே நொடியில் பஸ்பமாகிப் போனார்கள்.தமிழ் திரைஉலகம் ஒரு புதிய களத்தை அடையாளம் கண்டுகொண்டது.  பராசக்தியின் ராட்சத வெற்றி தமிழ் ரசிகர்கள் மனதின் ஆழத்தில் கொண்டிருந்த மாற்றத்தின் விருப்பத்தை வெடித்து உணர்த்தியது. இதுவே அன்றைய மக்கள் விரும்பிய மாற்றம். இருபது ஆண்டுகள் ஒரு பாமரனை இதிகாச புராண மற்றும் அவன் வாழ்ந்த காலத்திற்குப்  பொருந்தாத அரச கதைகளை வைத்தே கட்டிப்போட்டிருந்த தமிழ் திரையுலகத்தின்  துடிக்காத இதயத்தில் பராசக்தி முதல் ஆணியை அடித்தது.  சில திரை  விமர்சகர்கள் சொல்வதுபோல அப்போது பராசக்தி நிகழாமல் போயிருந்தால் அல்லது சிவாஜிக்குப் பதில் வேறொருவர் அதில் நடித்திருந்தால் (முதலில் எம் கே ராதா மற்றும் கல்கத்தா விஸ்வநாதன் அந்த பாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார்கள் ) தமிழ்த் திரையின் வளர்ச்சி இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் தள்ளிப் போயிருக்கும்.

     பராசக்தி என்ற  படத்தின் அசுர வெற்றி தமிழ்த் திரையிசைக்கு  பெரிதும் உதவியது என்பதை சொல்வதற்காகவே மேற்கண்ட பத்தி எழுதப்பட்டது. (உண்மையில் பராசக்தி தமிழில் நாடகத்தனமான படங்கள் வர பாதை அமைத்துக்கொடுத்தது என்பது என் தனிப்பட்ட எண்ணம்). பராசக்தி உடைத்த பல  சம்பிரதாயங்கள்  ஒரு புதிய சிந்தனைக்கு விதை தூவின. சமூக கதைக்களம் தமிழ்த் திரையின்  ஒரு முக்கிய அங்கமாக முன்மொழியப்பட்டது. இந்த மாற்றம் இசை அமைப்பிலும் பிரதிபலிக்க ஆரம்பித்தது. முதல் முறையாக திரையிசை பக்தி,சமயம், சிம்மாசனம், கோட்டை, போர்வாள்,வீரம்   போன்ற ஆயத்தமான சங்கதிகளைஒதுக்கி  விட்டு மக்களிசையை நோக்கி திசை மாற ஆரம்பித்தது. பராசக்தி படத்தில் வரும் மேற்கத்திய பாணியோடு ஒலிக்கும்  "ஒ ரசிக்கும் சீமானே"(இசை சுதர்சனம்) பாடலின்  அமைப்பு, இசை வாத்திய முழக்கம் போன்றவை  அந்த காலத்து இசையை விட்டு சற்று வேறுவிதமாக இருப்பதை நாம் உணர முடியும். கருப்பொருள் மற்றும் கதைக்களம் மாறியதால் இசையும் அதற்கேற்றார்போல் மாற வேண்டியதாக இருந்தது. இதற்காகவே  நாம் பராசக்தியை தாராளமாகப் பாராட்டலாம். கரு மேகங்கள் சூழ்ந்தன. ஆனாலும் மழை பொழியவில்லை.ஏனென்றால் மெல்லிசையின் காலம் இன்னும் கனியவில்லை.

       மக்கள் விரும்பிய அந்த மழையை கொண்டுவந்த  மிக முக்கியமான  இசைஞர்களைப் பற்றி இங்கே நாம்  சொல்லியாக வேண்டும். அவர்கள்  ஜி. ராமநாதன்,சுப்பையா நாயுடு, ஆர்  சுதர்சனம்,   சி ஆர் சுப்புராமன்,  டி  ஆர் பாப்பா, ஏ எம் ராஜா, கே வி மகாதேவன்,  டி  கே ராமமூர்த்தி, மற்றும் எம் எஸ் விஸ்வநாதன். இவர்களின் இசை பங்களிப்பு மெல்லிசைக்கு ஆதாரமான முதல் படியை ஆரம்பித்து வைத்தது என்பதில் மறுப்புக் கருத்து இருக்கவே முடியாது. கடின இசைக்கும்  மெல்லிசைக்கும் இடையே இவர்கள் தங்கள்  இசையை மிகவும் கவனமாக நகர்த்திச் செல்ல வேண்டி இருந்தது. இப்போது இந்த மிக சிக்கலான காலகட்டத்தை திரும்பிப் பார்க்கும்போது இந்த மாறுதல்ஒரு திடீர் மாற்றமாக இல்லாமல்  ஒரு பூ மலர்வதைப்போல மிகவும் நளினமாக  இருந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஐம்பதுகள் முழுவதும் இந்த முகமாற்றம் நடைபெற்றது. ஐம்பதுகளின் இறுதியில் மெல்லிசை என்ற மழை பீறிட்டுப் பெய்து, தமிழ் ரசிகர்களை சொட்டச் சொட்ட நனைத்தது.

          இசை மேதை என்று அழைக்கப்படும் ஜி. ராமநாதன் நாற்பதுகளிலேயே வந்துவிட்டாலும் அவரின் கை ஓங்கியது ஐம்பதுகளில்தான்.தமிழ்த் திரையிசையை மக்கள் விரும்பும் வடிவத்துக்கு மாற்ற இவர் நிறைய முயற்சிகள்  செய்திருப்பது தெளிவு. முதல் முறையாக நாட்டுப்புற இசையை திரையிசை மூலம் வெளியுலகுக்கு கொண்டுவந்த சிலரில் ஜி ராமநாதன் மிக முக்கியமானவர். சாஸ்திரிய ராகங்கள் பலமாக ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில்  நாட்டுப்புற இசையை கலந்து பாடல்கள் கொடுத்தவர். 53 இல் வந்த "திரும்பிப்பார்  படத்தில் வரும் "கலப்படம், கலப்படம் எங்கும் எதிலும் கலப்படம்" பாடலை இதற்கு உதாரணமாக சொல்லலாம்( என் எஸ் கிருஷ்ணன் இந்த வகைப் பாடல்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் பெரும் பங்கு வகிக்கிறார். ) தமிழ் சினிமாவில் நடந்த  அதிசயமான எம் ஜி ஆர் , சிவாஜி  என்ற இரண்டு மகா ஆளுமைகள் நடித்த ஒரே படமான "கூண்டுக்கிளி" படத்திற்கு இசை அமைத்த பெருமை பெற்றவர் ஜி ராமநாதன் . அதில் வரும் மிக புகழ் பெற்ற பாடல் "காயாத கானகத்தே". தொடர்ந்து வந்த எம் ஜி ஆர்   நடித்த "மதுரை வீரன்" (56) படத்தில் வரும் இன்னொரு அனாசயமான நாட்டுப்புற பாடல் "வாங்க மச்சான் வாங்க". இதில்தான் "நாடகமெல்லாம் கண்டேன்" என்ற மற்றொரு பிரபலமான பாடல் இடம் பெற்றது. 56 இல் சிவாஜி நடிப்பில் வந்த "நான் பெற்ற செல்வம்" படத்தில்   "நான் பெற்ற செல்வம்","வாழ்ந்தாலும் ஏசும்" பாடல்கள் மக்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்றன. 58 இல் வந்த உத்தம புத்திரன்  படத்தின் பாடல்கள் அத்தனையும்  சிகரம் தொட்டவை என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை . அவரின் மற்ற சில புகழ் பெற்ற பாடல்கள் இதோ;
    "மாசிலா நிலவே நம் காதலில்"(அம்பிகாபதி,57) வெகு இனிமையான பாடல்.
    "அமுதை பொழியும் நிலவே" (தங்கமலை ரகசியம்,57) அபாரமான பாடல்.
    "யாரடி நீ மோகினி"(மேற்கத்திய இசையும் சாஸ்திரிய இசையும் நேர்த்தியாக இழைந்த ஒரு ஆச்சர்யமான பாடல். மிக நவீனமாக இன்றைக்கும் ஒலிக்கும் பாடல் இது.),"முல்லை மலர் மேலே","உன்னழகை கன்னியர்கள் கண்ட","காத்திருப்பான கமலக்கண்ணன்" (உத்தம புத்திரன்,58)
     "இன்பம் பொங்கும் வெண்ணிலா" (வீரபாண்டிய கட்ட பொம்மன்,59)
     "சின்னப்பயலே சின்னப்பயலே " (அரசிளங்குமரி,61) இந்தப்  பாடலைப் பற்றி நான் என்ன சொன்னாலும் அது அபத்தமாகவே இருக்கும்
    இன்னும் பல அபாரமான பாடல்கள் இங்கே இடம் பெறவில்லை.மேற் குறிப்பிட்ட பாடல்கள் ஜி ராமநாதன் என்னும் இசை மேதையின் ஆளுமையை இதுதான் இசை என்று எண்பதுகளை சுட்டிக்காட்டும் சில அறிவிலிகளுக்கு உணர்த்தவே பிரத்தியேகமாக எழுதப்பட்டது .  ஜி.ராமனாதனின் இசை பயணம் 63 இல் முடிவு பெற்றது.  அதற்குள் அவர் தமிழ் திரையிசையின் சாகாவரம் பெற்ற பல பாடல்களை பிரசவித்து விட்டார். அவரின் பாடல்கள் எப்படி ஒரு கடின இசையை எளிமைப்படுத்தி நம் ரசனைக்கு அவற்றை உட்படுத்தின என்பதை அரைவேக்காட்டுத்தனமான இசை அறிவு உள்ள பலரின் புரிதலுக்கு விட்டுவிடுகிறேன். இன்னும் அவரின் இப்படிப்பட்ட அருமையான பாடல்களை அசட்டை  செய்யும் நபர்கள் கொஞ்சம் தள்ளி இருப்பது நல்லது. அவர்களின் இசை ரசனை வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்.
   
         படங்களில் பிண்ணனி பாடல் என்கிற புதிய யுக்தியை  (playback singing) தமிழ் திரையிசைக்கு அறிமுகம் செய்தவர் சுப்பையா நாயுடு.அதுவரை நடிகர்களே பாடியபடி நடித்ததே வரலாறு.(பாட முடியாதவர்கள் அன்று கதாநாயகனாக இருக்க முடியாது என்பதை எம் ஜி ஆர்  நாயகனாக மாற பத்து வருடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டி இருந்ததை வைத்தே கணிக்கலாம்.) 1947 இல் வந்த எம் ஜி ஆர்   முதல் முறையாக கதாநாயனாக நடித்த ராஜகுமாரி படத்தில் திருச்சி லோகநாதன் எம் என் நம்பியார்க்காக பாடிய "காசினிமேல் நாங்கள்" என்ற பாடலே தமிழ் திரையிசையில் பதிவு செய்யப்பட்ட முதல் பிண்ணனி பாடல். சுப்பையா நாயுடு ஜி ராமநாதனுடன் சேர்ந்து ஆரம்பகாலத்தில் பல படங்களில் இசை அமைத்திருக்கிறார்.தமிழ் திரையின் ஒ பி நையர் (ஹிந்தி யில் புகழ் பெற்ற இசை அமைப்பாளர்) என்று அழைக்கப்பட்டவர். இவரிடம் உதவியாளராக இருந்தவர்தான் எம் எஸ் விஸ்வநாதன். இவரிடமிருந்தே இசையை தான் கற்றுக்கொண்டதாக எம் எஸ் வி  எல்லா சந்தர்ப்பங்களிலும் சொல்வதுண்டு. சுப்பையா நாயுடு பல இனிமையான பாடல்களை நமக்கு  அளித்தவர். இவரின் பெயரை கேள்விப்பட்டிருந்தாலும் அவரின் பெயரை வைத்தே  என்ன பெரியதாக சாதித்திருக்கப் போகிறார் என்று ஒரு காலத்தில் இகழ்ச்சியாக எண்ணியவன் நான்,  அவருடைய சில புகழ் பெற்ற பாடல்களை கீழே  கொடுத்துள்ளேன். (இதை எழுதும்போது  எனக்கே குற்ற உணர்ச்சி உண்டாகிறது).

  "கலங்காதிரு மனமே "(படம்: கன்னியின் காதலி, ஆண்டு: 1949, கண்ணதாசனின் முதல் பாடல் இது)
      "எத்தனை காலந்தான் ஏமாற்றுவார்" (மலைக்கள்ளன், 1954)
      "தூங்காதே தம்பி தூங்காதே" (நாடோடி மன்னன், 1958)
      "குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே" (மரகதம், 1959)
      "திருடாதே பாப்பா திருடாதே" (திருடாதே, 1961)
      "சிங்கார  வேலனே தேவா " (கொஞ்சும் சலங்கை, 1962)
      "ஆசை கொண்ட மனம்", (கல்யாணியின் கணவன், 1963)
      "எத்தனை பெரிய மனிதருக்கு" (ஆசை முகம்,1965)
     "பிறந்த நாள்" (நாம் மூவர், 1966- நீண்ட நாட்களாக இது எம் எஸ் வி யின் பாடல் என்று நினைத்திருந்தேன்)
      "நீ எங்கே என் நினைவுகள் அங்கே" (மன்னிப்பு, 1969- மிக மென்மையான பசுமையான பாடல். மூன்றுவிதமான வித்தியாசமான மெட்டுக்களோடு இதே பாடலை அமைத்திருப்பார் சுப்பையா நாயுடு.) இன்றைக்கு பலர் (நானும் கூடவே சில சமயங்களில்)  பெரும்பாலும் பழைய பாடல்கள் என்றாலே ஒன்று எம் எஸ் வி அல்லது கே வி மகாதேவன் என்று குறிப்பிடும் பல பாடல்கள் இவரின் இசைச் சிதறல் என்பது வியப்பான உண்மை.

     தமிழ்த் திரையின் திசையை  மாற்றிய பராசக்தி படத்தின் இசை அமைப்பாளர் ஆர் சுதர்சனம். 1945 இல் இருந்தே  தமிழ்த் திரையிசையில் இருந்தாலும்  தன் தகுதிக்கான  அங்கீகாரத்தை இவர் அடையவில்லை என்பது  ஒரு வருத்தமான உண்மை.இவர் ஆரம்பத்தில் ஏ வி எம் மின் ஆஸ்தான இசை அமைப்பாளராக இருந்திருக்கிறார். ஸ்ரீ வள்ளி என்ற படத்தில் அறிமுகம் ஆனவர்.(தகவல் தவறாக இருப்பின் திருத்தலாம்) 47இல் வந்த மிகவும் புகழ் பெற்ற படமான நாம் இருவர் என்ற இந்திய சுதந்திரத்தை போற்றும் படத்தில் இவர் கொடுத்த பாடல்கள் அப்போது எங்கும் ஒலித்ததாக படித்திருக்கிறேன். "மகான் காந்தி மகான்" என்ற பாடலை குறிப்பிட்டால் சட்டென பலருக்கு புரியும்.தொடர்ந்து வேதாள உலகம்(48),வாழ்க்கை (49),ஓர் இரவு (51),பராசக்தி (52),பெண், (54),குல தெய்வம் (56), சகோதரி (59), தெய்வப் பிறவி (60), களத்தூர் கண்ணம்மா (62),அன்னை (62), நானும் ஒரு பெண் (63), பூம்புகார் (64), அன்புக்  கரங்கள்(65),கார்த்திகை தீபம் (65), மணிமகுடம் (66) போன்ற படங்களுக்கு இசை அமைத்தார் சுதர்சனம்.
        கல்யாணம் ஆஹா கல்யாணம் - பெண் ,
        நான் ஒரு முட்டாளுங்க,  - சகோதரி.
       அன்பிலே தேடிய என் அறிவு செல்வம்- தெய்வப் பிறவி.
      ஆடாத மனமும் ஆடுமே, கண்களின் வார்த்தைகள் புரியாதோ, அம்மாவும் நீயே அப்பாவும் நீயே -களத்தூர் கண்ணம்மா.
       புத்தியுள்ள மனிதரெல்லாம், அழகிய மிதிலை நகரிலே- அன்னை (முழுவதும் ஒரு வித மந்திரச் சுவை இழைந்து ஓடும் மிக அருமையான பாடல் இது. இதை விரும்பாதவர்கள்    கண்டிப்பாக இருக்க முடியாது என்று எண்ணுகிறேன். ஒருவேளை ....அப்படிப்பட்ட ரசனை குன்றிய  மனிதர்கள் இருக்கலாம்.)
      ஏமாறச்  சொன்னது நானோ, கண்ணா கருமை நிற கண்ணா, பூப்போல பூப்போல பிறக்கும்- நானும் ஒரு பெண்.
         ஒன்னா இருக்க கத்துக்கணும்,இரவு  முடிந்து விடும், காகிதத்தில் கப்பல் செய்து - அன்புக் கரங்கள்.
     
         மேலே குறிப்பிட  பாடல்களை கேட்டால் நாம்   தமிழ்த் திரையிசை கடின இசையை தாண்டி அடுத்த கட்டத்திற்கு வந்து விட்டதை நன்றாகவே புரிந்துகொள்ள முடியும். சுதர்சனம் பல  அருமையான பாடல்களை நமக்குக் கொடுத்தவர் என்பதில் எந்த விதமான மறுப்பும் இருக்க முடியாது என்பதும்  புரியும்.மெல்லிசைக்கான ஒரு புதிய பாதையை அமைத்தவர்களில் சுதர்சனம் ஒரு முக்கியமான, குறியீடான இசைஞர்.  ஆனால் இன்றைக்கு சுதர்சனம் என்றால் பலருக்கு மறந்துவிட்ட அல்லது ஒரு புதிய பெயராகவே இருப்பது நாம் சிலரையே நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறோம் என்ற உளவியலை உறுதிப்படுத்துகிறது.

      சி ஆர் சுப்புராமன் கர்நாடக ராகங்களில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தவர். எம் கே டி இவரின் இசையை கேட்டு விரும்பி இவரை தன்னுடைய "உதயணன்"(1945) படத்திற்கு  இசை அமைக்க சொல்லி இருக்கிறார். ஆனால் படம் வெளிவரும் முன்பே அந்த காலத்தின் அதிரடிச்  செய்தியாக இருந்த லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் சிறை சென்றுவிட, படம் கைவிடப்பட்டது. சுப்புராமனை தமிழ்த்திரை உலகம் அதிர்ஷ்டசாலி இல்லை என்று பட்டம் கட்டியது. இதன் நடுவே  சுப்பையா நாயுடுவின் ஆலோசனையின் படி ஒரு இளைஞனை(எம் எஸ் விஸ்வநாதன்) இவர் தன்னுடைய உதவியாளராக  சேர்த்துக்கொண்டார். சுப்புராமன் இசைக்குழுவில் ஏற்கனவே இருந்த  டி  கே ராமமூர்த்தியும் விஸ்வநாதனும் இணைந்தது இங்கேதான். இந்த இருவரின் சந்திப்பு தமிழ்த் திரையிசையின் மிக முக்கியமான கட்டம் என்பதை பின் வந்த அறுபதுகள் ஆணித்தரமாக நிரூபித்தன. 43 லிருந்து 53 வரை 37 படங்களுக்கு சுப்புராமன் இசை அமைத்திருக்கிறார். அவர் இசை அமைப்பில் வெளிவந்த   சில முக்கியமான படங்கள்  இவை:
       ரத்னமாலா(47), அபிமன்யு(48), ராஜமுக்தி(48),கன்னியின் காதலி(49,சுப்பையாநாயுடுவுடன்சேர்ந்துபணியாற்றியது), பாரிஜாதம்(50), மர்மயோகி(51), ராணி(52),  மருமகள்(53).

        53 இல் சி ஆர் சுப்புராமன் திடீரென மரணித்துவிட, அவரது  இசைப் பணிகள் தடைபட்டன. சுப்புராமனின் திடீர் மரணம் தமிழ்த் திரையிசைக்கு மறக்கமுடியாத இருவரை முகம் காட்டியது. அவர்கள்தான் மெல்லிசை மன்னர்கள் என்று அழைக்கப்படும் திரு எம் எஸ் விஸ்வநாதன் மற்றும் திரு டி கே ராமமூர்த்தி. என் எஸ் கிருஷ்ணனின் அறிவுரைப்படி இந்த இருவரும் விஸ்வநாதன் ராமமூர்த்தி என்று திரையில் தோன்ற ஆரம்பித்தார்கள். இவர்களின் காலம் ஒரு தனியான பதிவுக்கு இசைவாக இருப்பதால் இப்போதைக்கு இங்கேயே முற்றுப்புள்ளி வைத்துவிடுவது நல்லது என்று தோன்றுகிறது.

       இவர்களைத் தாண்டி தமிழ்த் திரையிசைக்கு ஊட்டம் அளித்த ஆனால்  இப்போது மறக்கப்பட்டுவிட்ட  சில இசை அமைப்பாளர்களைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. அவர்கள்  எஸ் வி வெங்கடராமன் மற்றும் டி ஜி லிங்கப்பா.

       எஸ் வி வெங்கடராமன் ஜி ராமநாதன் காலத்தில் இருந்து இருப்பவர். 1938 முதல் 1963 வரை அவரது இசைப் பயணம் தொடர்ந்தது. இவர் ஹோணப்ப பாகவதர், பி யு சின்னப்பா, டீ ஆர் மகாலிங்கம் போன்ற தமிழ் திரையின் பெரிய ஆளுமைகளோடு பணிபுரிந்தவர்.மீரா என்ற படத்தில் எம் எஸ் சுப்புலக்ஸ்மி யுடன் சேர்ந்து பாடல்கள் அமைத்த பெருமை பெற்றவர். எ, எஸ் விஸ்வநாதன் டி கே ராமமூர்த்தி ஜி கே வெங்கடேஷ் போன்ற பிரபல திரை இசை அமைப்பாளர்கள் இவரிடம் துணை செய்துள்ளார்கள். அவரின்  சில குறிப்பிடத்தக்க படங்கள்:
        நந்த குமார் (38), காமதேனு (41), கண்ணகி (42),ஸ்ரீ கிருஷ்ண விஜயம் (50), பாரிஜாதம்  (50), பணக்காரன் (53), மனோஹரா (54), இரும்புத் திரை (60),மருத நாட்டு வீரன் (61), அறிவாளி (63).

         டி ஜி லிங்கப்பா  கர்நாடக சங்கீதம் மட்டுமல்லாமல் மேற்கத்திய இசையிலும் அதீத  ஈடுபாடு கொண்டவராக இருந்தார். பிரபலமான "சித்திரம் பேசுதடி"(படம்: சபாஷ் மீனா) பாடலைக்  கொடுத்தவர்.  இவர் மவுத் ஆர்கன், மண்டலின் கிடார் போன்ற மேற்கத்திய வாத்தியங்களை எளிதாக வாசிக்க முடிந்த காரணத்தினால் ஜி ராமநாதன் எஸ் வி வெங்கடராமன் மற்றும் கே வி மகாதேவன் போன்றவர்களிடம் வாத்திய இசையாளராக பல படங்களில் பனி புரிய முடிந்தது.  சுப்பையா நாயுடு இசை அமைப்பில் வெளிவந்த சந்திரபாபு பாடிய பிரபலமான குங்குமப் பூவே பாடல் உண்மையில் லிங்கப்பாவின் இசை அமைப்பில் உருவான பாடல் என்றும் பின்னர் அது சில காரணங்களினால் சுப்பையா நாயுடுவின்  பெயரில் வெளிவந்ததாகவும்   ஒரு கருத்து நிலவுகிறது. மேலும் ஜி ராமனாதனின் பிரபலமான அமுதை பொழியும்  நிலவே பாடல் இவர் இசையில்தான் முதலில் பதிவு செய்யப்பட்டதாகவும் பின் இவர்  பெயர் மறுதலிக்கப்பட்டு ஜி ராமனாதனின் பெயர் இடம் பெற்றதாகவும் இன்னொரு ஆதாரமில்லாத கருத்து உண்டு.  இது நிகழ்ந்திருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் சாத்தியமே.  சுப்பையா நாயுடுவின் மிகப் புகழ்பெற்ற ஒரு பாடல்  நிஜமாகவே எம் எஸ் வி யால் உருவான தகவல் நம்மிடம் உண்டு.(அது என்ன பாடல் என்பது  இப்போது என் நினைவில் இல்லை). இது போன்ற விபத்துக்கள் நேரக்கூடிய சாத்தியங்கள் திரைஉலகில் அதிகம் உண்டு. (ஊரு சனம் தூங்கிருச்சு என்ற பாடலை இன்று வரை இளயராஜாவின் பாடல் என்றே எல்லோரும் நினைக்கிறார்கள். உண்மையில் அது எம் எஸ் வி யின் பாடல் என்பதே பலருக்குத்  தெரியாது).

       முப்பதுகளில் தோன்றிய தமிழ்த்திரை இசை நாற்பதுகளின் முடிவுவரை  கடினமாகவே இருந்தது. ஐம்பதுகளில் மேலே குறிப்பிட்ட இசை மேதைகளின் கண்காணிப்பிலும், கை அசைவிலும் அது மெதுவாக உருமாறி  மெல்லிசை என்ற முகத்தை அணிந்துகொண்டது.ஐமபதுகளின் இறுதியில் தமிழ்த்திரையிசை பெரும்பான்மையான மக்கள் விரும்பிய இசையின் திசையை நோக்கி நகர்ந்தது. இதை நாம் பதிவு செய்தாக வேண்டும். இதுவே மெல்லிசையின் காலம். இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து தமிழில் மெல்லிசைக்கான பாதை அமைந்தது. இந்த காலகட்டத்தில் வந்த இசையையே இன்றும் பெருமபான்மையான மக்கள் தினமும் கேட்க விருப்பம் கொள்கிறார்கள்.  ஏனெனில்  இதுவே மக்களின் இசை. இதை சொல்வதில் நாம் பெருமை  கொள்ள வேண்டும். ஏனென்றால் இது நம் இசை. ராகங்களும் பாவங்களும் சாஸ்திரிய சங்கீதத்தின் மேன்மையான மர்மங்களும் தெரியாத பாமரர்களான நமக்கான இசை. இங்கிருந்தே தமிழ்த் திரையிசையின் வளர்ச்சியும், புதிய முயற்சிகளும், எதிர்பாராத திருப்பங்களும் ஆரம்பிக்கின்றன.  இதை  இல்லை என்பவர்கள்  வேறு பாதையில் பயணிப்பது நல்லது. இங்கேதான்  இசைவிரும்பிகளும் இசைக் கோமாளிகளும் வேறுபடுகிறார்கள்.

          அடுத்தது: இசை விரும்பிகள்  IV - புதிய உச்சங்கள்.

    

7 comments:

  1. கொஞ்சம் மூச்சு வாங்குது.

    ReplyDelete
  2. இசை கோமாளிகள் என்று யாரை நீங்கள் சொல்கிறீர்கள்? இளையராஜாவின் ரசிகர்களையா ?

    ReplyDelete
  3. பெயரில்லா நண்பர்களுக்கு நன்றி. இதற்கே மூச்சு வாங்குது என்றால் நீங்கள் டி சவுந்தர் என்பவற்றின் பதிவுகளைப் படித்தால் நெஞ்சே அடைத்துப் போய்விடும் என்று தோன்றுகிறது.

    இரண்டாவது நண்பருக்கு, நான் இளையராஜாவைப் பற்றி ஒரே ஒரு இடத்தில்தான் அதுவும் பெயரை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். அவரின் ரசிகர்களை கோமாளிகள் என்று நான் சொல்லவில்லை. நீங்கள் அப்படித்தான் எண்ணுகிறீர்கள் போலிருக்கிறது. இளையராஜாவை பற்றி ஒரு தனி பகுதியே பின்னால் வருகிறது. பொறுத்திருக்கவும்.

    ReplyDelete
  4. நல்ல முயற்சி. சரியான தகவல்களுடன் லேசாக ஆய்வையும் சேர்த்தே எழுதிச் செல்லுகிறீர்கள். அங்கங்கே சிலருக்கு சம்மட்டி அடிகளும் தருகிறீர்கள். இந்த 'அடிகள்' இல்லாமல் எழுதிச் செல்லுவது முடியுமா என்று பார்த்தால் உங்கள் பாணிக்கு முடியாது என்றுதான் தோன்றுகிறது. இரண்டாவது இங்கே எதையுமே நீங்கள் மேம்போக்காகவோ உங்கள் கருத்தாகவோ அல்லது தான்தோன்றித்தனமாகவோ சொல்லிவிட்டுச் செல்லவில்லை. அல்லது சில ரசிகர்கள் அவர்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர்களின் பாடல்களைச் சொல்லி மயங்குகிறார்களே அம்மாதிரியான அசட்டு மயக்கங்களுடனும்கூடச் சொல்லவில்லை. தெரிந்தவர்களுக்கு 'அழகான நினைவுபடுத்தல்'. தெரியாதவர்களுக்கு - தெரிந்துகொள்ளவேண்டிய அரிய தகவல்கள்.
    இதை 'உணர்ந்து' படிப்பவர்கள் இனிமேல் போகிறபோக்கில் தங்கள் இஷ்டதெய்வங்களுக்குத் துதிபாடுவதற்கு யோசிக்கலாம்.
    அல்லது பயந்துபோய் படிப்பதற்கு வராமலும் இருக்கலாம்.
    இப்போதே ஒருத்தர் மூச்சு வாங்குகிறது என்கிறார். போதிய ஆக்சிஜன் உள்ளே இல்லையென்றால் மூச்சு 'வாங்கத்தான்' செய்யும்.

    ReplyDelete
  5. அமுதவன் அவர்களுக்கு,
    உங்களை எதிர்பார்த்திருந்தேன். வருகைக்கு நன்றி. உங்கள் கருத்துக்கள் படிப்பதற்கு நன்றாக இருக்கின்றன. சாதரணமாக அரைவேக்காடுகள் என்று நான் குறிப்பிட்டதையே சம்மட்டி அடி என்று சொல்கிறீர்கள். என்ன செய்வது? அப்படிப்பட்ட சில வார்த்தைகள் சில சமயங்களில் அவசியபடுகின்றன.இன்னும் வரும் பதிவுகளில் இது போன்ற "சம்மட்டிகள்" நிறையவே இருக்கும். இசைக் கோமாளிகள் என்றதும் சிலருக்கு சுருக் என்று தைக்கிறது. பதிவு முழுவதும் சுதர்சனம், சுப்பையா நாயுடு, ஜி ராமநாதன், டி ஜி லிங்கப்பா, வெங்கடராமன் என்று இருக்க அதைப் பற்றி எதுவும் பேசாமல் எங்கோ ஒரு இடத்தில் வரும் ஒருவரின் பெயரை சுட்டிக்காட்டும் இந்த வினோத மனப்போக்கு ஆச்சர்யமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

    ReplyDelete
  6. நல்ல முயற்சி காரிகன்.வாழ்த்துக்கள்.
    வரலாற்றை படிக்கத்தான் முடியும்.இசையை கேட்டபதால் தான் உணர முடியும்.பல்வகை இசை தெரிந்தால் தான் இசையுலகில் என்ன நடக்கிறது என்பதும் புரியும்.
    நீங்கள் எழுதிய ரஷ்ய கதைகள் பற்றிய பதிவை மிக ஆர்வத்துடன் படித்தேன்.
    நன்றி.

    T.சௌந்தர்

    ReplyDelete
  7. திரு சவுந்தர் அவர்களுக்கு,  என் வலைப்பக்கம் வருகை தந்ததற்கு மிக்க நன்றி. உங்களின் கருத்துக்களை நிறையவே எதிர்பார்த்தேன். என்னுடைய இசை விரும்பிகள்  பதிவில் ஏதேனும் முரண்பாடான தவல்கள்  இருப்பின் அல்லது குறைகள் தென்பட்டாலோ நீங்கள் என்னை விமர்சிக்கலாம்.ஆனால் இதுவரை நாமிருவரும் ஒரே பாதையில்தான் பயணித்துக்கொண்டிருக்கின்றோம் என்றே எண்ணுகிறேன். உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete