Sunday 22 June 2014

இசை விரும்பிகள் --XVIII எல்லைகளற்ற இசைவெளி

மனித விதிகளை  அலட்சியமாக மீறிச் செல்லும் ஒரு ஆனந்த அபூர்வம் இசை. கட்டுப்பாடற்ற காற்றாகவும் கைகளில் சிக்காத தண்ணீர்த் துளிகள் போலவும் இசையின் பரிமாணங்கள் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன. அதே சமயத்தில்  நமது கற்பனையையும் அது  உயிர்பித்துக்கொண்டே இருக்கிறது.   ஒரு மிக நீண்ட வயல் வெளியில் நீங்கள் நடந்து சென்று கொண்டே இருக்கிறீர்கள். தூரம் போகப் போக ஒரு விசித்திர மாற்றமாக மர்மான முறையில் மரங்களும் இலைகளும் பூக்களும் ஓசைகளும்  நாமறிந்த இயற்பியல் மற்றும் பௌதிக  கோட்பாடுகளுக்கு  முரணாக ஒன்றோடொன்று கலந்து தத்தம் அடையாளங்களை விட்டு முற்றிலும் விலகி எல்லைகளற்று ஒரே நிறத்தில் ஒரே வடிவத்தில்  உங்களுக்கு முன் ஒரு காட்சியாக விரிகின்றது.  நீங்கள் உங்கள் முன்  காண்பதெல்லாம் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத இசையின் வடிவங்களை மட்டுமே. அந்த மந்திரத் தோற்றம் கடைசியாக எப்பொழுது உங்களுக்கு நிகழ்ந்தது?

                        

                   எல்லைகளற்ற இசைவெளி 



      Midas Touch என்று அழைக்கப்படும் இசையின் தங்கத் தொடுகை நாம் அதற்கு தயாராக இல்லாத ஒரு இருண்ட வினாடியில் சட்டென நிகழும் ஒரு அதிசய விபத்து. இசை அனுபவத்தின் தாக்கமும் அது நம்மை அழைத்துச் செல்லும் பாதைகளும் பல வேளைகளில் நம்மால் யூகிக்க முடியாத மகிழ்ச்சியான மர்மங்கள்.



        ஆங்கில ராக் இசையில் சகாப்தங்கள் படைத்து, மேன்மையான உயரங்களுக்குச் சென்ற  பல இசைக் குழுக்களை தொடாமல் அவர்களை bypass செய்து டேபேச்சே மோட் போன்ற இசைக்கு நான் வந்திருந்தாலும் சில கிளாசிக் ராக் குழுக்களை நான் முற்றிலும் தவிர்த்தாக சொல்லிவிடமுடியாது.  உதாரணமாக The Long Run என்றொரு பாடலைக் கேட்டபோது அதன் தாளமும் மெலடியும் என்னை ஆட்கொண்டது. அது தி ஈகிள்ஸ் குழுவின்  அதே பெயரில் வந்த இறுதி இசைத் தொகுப்பின்  முதல் பாடல். Heartache Tonight, The Sad Cafe, King Of Hollywood, I Can't Tell You Why, Those Shoes போன்ற என் ரசிப்பிற்க்குரிய பாடல்கள் இதில்தான்  உள்ளன. வணிக ரீதியாக இது வெற்றி அடைந்த தொகுப்பாக இருந்தாலும் இசை விமர்சகர்கள் இந்த லாங் ரன் ஆல்பத்தை பெரிதும் விரும்பவில்லை. என் கணிப்பில் லாங் ரன் மிக அபாரமான படைப்பு. குறிப்பாக ஐ கேன்ட் டெல் யு ஒய், சேட் கபே இரண்டும் நம் மனதை பிசைந்து எடுத்துவிடக்கூடிய துயர கீதங்கள். இந்த இரண்டு பாடல்களைக் கேட்கும் சமயங்களில்  ஒரு bitter sweet உணர்வு என்னில் மேலோங்குவதை நான் மிக மவுனமாக ரசிப்பதுண்டு. சோகம்தான் இருந்தும் தாலாட்டும்  சோகம் என்று சொல்லலாம்.


     இதே போல  Down Under என்ற துள்ளும் கானத்தைக் கேட்டபோதும், Who Can It Be Now என்ற ரோலர் கோஸ்டர் உணர்வை அளித்த பாடலை ரசித்தபோதும் இனந்தெரியாத ஒரு முதிர்ச்சிபெற்ற மகிழ்ச்சியை அடைந்தேன்.  இதை இசைத்தவர்கள் Men At Work என்ற ஆஸ்திரேலிய இசைக்குழுவினர். Colin Hay என்ற இதன் பாடகர் சற்று நக்கல் தொனியில் பாடுவதில் கில்லாடி. மென் அட் வொர்க் குழுவினர் மூன்றே இசைத் தொகுப்புகள்தான் வெளியிட்டுள்ளனர். ஆனால் அவை அனைத்தும் மனதில் நிற்கக்கூடியவைகள். உதாரனத்திற்கு Business As Usual என்ற அவர்களது முதல் இசைத் தொகுப்பிலுள்ள  Be Good Johnny பாடலைக் கேளுங்கள். ஒரு சம்பிரதாயமான மேற்கத்திய இசையை அது லாவகமாக மீறிச் சென்று ஒரு பள்ளிச் சிறுவனின் ஆசைகளை அற்புதமாக படம்பிடித்துக்காட்டும். Cargo என்ற ஆல்பத்திலுள்ள Overkill என் நெஞ்சத்தை தழுவிய பாடல். காலின் ஹே திடீரென உச்சத்திற்கு சென்று நமக்கு எதிர்பாராத ஆனந்த அதிர்ச்சியை அளிப்பார். I Like To என்ற பாடலின் இறுதியில் நீண்ட நேரம் ஒலிக்கும் லீட் கிடாரின் தனியிசை கொஞ்சம் கொஞ்சமாக நம்மை இன்னொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லக்கூடியது. No Sign Of Yesterday, Settle Down My Boy,Two Hearts, Everything I Need, Maria, Sail To You, Hard Luck Story பாடல்கள் மிகவும் இனிமையானவை. ஒவ்வொரு பாடலையும் தனித் தனியாக விவரிக்க ஆவல் இருந்தாலும் இன்னும் ஏகப்பட்ட குழுக்களைப் பற்றி பேசவேண்டியிருப்பதால் அதைத் தவிர்ப்பது அவசியமாகிறது.


          கல்லூரியில் சேர்ந்த பின் கிடைத்த புதிய நண்பர்களின் இசை  விருப்பம் என் ஆங்கில இசை வரைபடத்தை இன்னும் சீராக்கியது. போனி எம் ரசிகனான நான் என்னையறியாத வகையில் அடுத்த கட்டத்துக்குச்  சென்றது எனக்கு அப்போது தெரியவில்லை.  பிரபு என்றொருவன்  என் கல்லூரி தினங்களின் எனக்கு முதல் நண்பனானான். எங்கள் பேச்சு இசையைப் பற்றித் திரும்பும்   சமயத்தில் Hello என்ற Lionel Richie  யின் பாடலைப் பற்றி அடிக்கடி அவன் சிலாகித்து "என்ன அருமையான காதல் பாட்டு!" என்று கனவு காண்பவன் போல ரசித்துப் பேசுவான்.  "And in my dreams I've kissed your lips a thousand times" என்ற வரியை முணுமுணுத்துக் கொண்டேயிருப்பான். ஒருநாள் திடீரென "நீ காதலித்திருக்கிறாயா?" என்று கேட்டுவிட்டு,  பதில் சொல்லக்கூட எனக்கு அவகாசம் தராமல், "பெண்களை நம்பாதே" என்று உடனே சந்திரபாபு மாதிரி உபதேசம் செய்தான். ஹலோ என்ற லயனல் ரிச்சியின் மிகப் பிரசித்திப் பெற்ற அந்தப் பாடலை நான் அதன் பின் கேட்டபோது அவன் அடிக்கடி பாடும் அந்த வரிகள் காட்சியாக மாறின. ரிச்சி அமெரிக்க Soul மற்றும் Rhythm and Blues என்ற இசை வகையின் ஒரு முக்கியமான இசைஞர். Commodores என்ற இசைக்குழுவில் பாடகராக இருந்தவர். கமொடர்சின் Night Shift மனதை தழுவும் அமைதியான தாளத்துடன் ஒரு உயரிய ரசனைக்குரிய பாடல். இதை நான் கேட்ட முதல் முறையே என்னை கவர்ந்துவிட்டது. இவரது Say You Say Me, Dancing On The Ceiling, All Night Long, Stuck On You போன்ற பாடல்கள் கேட்பதற்கு அலாதியானவை. ஹலோ அவரது முத்திரைப் பாடல்களில் முதன்மையானது.



       இந்த சமயத்தில்தான் நான் என் சம கால மேற்கத்திய இசையின் பால் நகரத் துவங்கினேன். அப்போது வாங்கிய ஒரு கசெட்டில் இருந்த முதல் பாடல் தடாலடியாக என் நெஞ்சத்தில் குதித்து கும்மாளம் போட்டது. பாடலின் ஆரம்பமே அதகளமாக சடசடவென வலது இடதாக தாவும் தாளம் விவரிக்க முடியாத இனிமை கொண்ட  சிந்தசைசர் இசையோடு பிணைந்து கொண்டு ஒலிக்க, சடுதியில் ஒரு ஆண் குரல்  "Talking away" எனத் துவங்கி, இரண்டொரு வினாடியில் நம்ப முடியாத ஹை பிட்ச்சில் Take On Me என்று வெடித்துப் புத்துயிர் பெற headbanging ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வாகிப் போனது. A-ha என்ற நார்வே நாட்டு  இசைக்குழுவின் மகா ஹிட் அடித்த டேக் ஆன் மீ கேட்கும் யாவரையும் அதே கணத்திலேயே வீழ்த்தி விடும் ஒரு அசாதரணப்  பாடல். பாடலை எண்ணற்ற முறை ரசித்து அனுபவித்துக் கேட்டபின்னர்  ஏறக்குறைய இருபது வருடங்கள் கழித்து கம்ப்யூட்டர் வாங்கிய பின் யூ டியூபில் இதன் வீடியோவைப் பார்த்துத் திகைத்துப் போனேன். பென்சில் ஸ்கெட்ச் அனிமேஷன் மற்றும் லைவ் ஆக்ஷன் இரண்டும் அபாரமான சதவிகிதத்தில் ஒன்றாகக் கலந்து rotoscoping என்றழைக்கப்படும் நவீன தொழில் நுட்பதில்  மிகப் புதுமையாக  இசைக் காட்சியை படமாக்கியிருப்பார்கள் இந்தப் பாடலுக்காக. காட்சியில் வரும் ஆணுக்கும் பெண்ணுக்கும் மற்றவர் ஒரு வரைபடம் போல தெரிய, அவ்வப்போது நிஜமான உருவங்கள் தோன்ற இந்த இரண்டு தோற்றங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்திவிடும். எண்ணிப்பார்த்தால் 80களின் ஆரம்பத்தில் இந்த வீடியோ அப்போதைய காலத்தை மீறிய ஒரு புரட்சியாகவே இருந்தது. ஒரு முறை இதன் வீடியோவை நீங்கள் பார்த்தால் அதன் மகத்துவத்தை எளிதில் உணர முடியும். மேலும் அஹா பாடல் குழுவின் பாடகரான Morten Harket தன் குரலை கேட்பவர்கள் அதிசயிக்கும் வகையில் மிக உச்சத்திற்கு கொண்டுசென்று சற்றும் அந்த ஹை பிட்ச் பிசிறிப் போகாமல் சிறப்பாகப் பாடக் கூடிய அபூர்வமான பாடகர். Falsetto என்று கூறப்படும் இந்த புல்லாங்குழல் ஒலிப்பது போன்ற  குரல் கொண்டு பாடுவது பெரும்பாலும் பல பாடகர்களால்  இயலாத ஒன்று. டேக் ஆன் மீ பாடலில் வரும் I'll be gone in a day or two என்ற வரிகளில் இவர் குரல் தொடும் அசாத்திய உச்சங்கள் நம்மை திடுக்கிட வைத்து விடும்.


   அஹாவின் முதல் இசைத் தொகுப்பு 85இல் வந்த Hunting High And Low. என் மனம் கவர்ந்த Train Of Thoughts என்ற காந்தப் பாடல் இதில்தான் இருக்கிறது. இதன் வீடியோவும் அபாரமானது. இவர்களின் இன்னொரு பெரிய வெற்றியடைந்த பாடல் The Sun Always Shines On T.V. ஆனால் என் கணிப்பின்படி Scoundrel Days, East Of The Sun West Of The Moon என்ற இரண்டு ஆல்பங்களே அஹாவின்  மிகச் சிறப்பானவை. ஈஸ்ட் ஆப் தி சன் தொகுப்பிலுள்ள Crying In The Rain உன்னதமான வசீகரத்தின் இசை வடிவம். உண்மையில் இது 62இல் The Everly Brothers குழுவினரால் பாடப்பட்ட  பாடல். ஆனால் அஹாவின் இசை வண்ணத்தில் இப்பாடல் ஒரு அழ வைக்கும் தாலாட்டு போலவும் மாலை நேரத்து வானவில் போலவும் அபாரமாக உருமாறிவிடுகிறது. ஸ்கவுண்ட்ரல் டேய்ஸ் ஆல்பத்தின் Manhattan Skyline பாடல் கீழ் மற்றும் உச்ச ஸ்தானியில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமடைந்து பாடலின் இறுதி வரியாக மன்ஹட்டன் ஸ்கைலைன் என்று முடிவடையும்போது நம்மால் இழந்த நட்பின் வலியை துல்லியமாக உணரமுடியும். சிலர் அஹாவை one hit wonder என்ற வகையில் பேசுவது முற்றிலும் தவறானது என்பது என் திண்ணமான எண்ணம்.


      அப்போது மேற்கத்திய இசை குறித்து  செய்திகளை வெளியிடும் Sun, Jet set போன்ற இதழ்கள் மேல் கவனம் வர  என் பை பணத்துக்கு (Pocket Money?) புதிய செலவு முளைத்தது. மியூசிக் லேன்ட் ஸ்ரீதர் Bee Gees என்ற இசைக் குழுவைப் புகழ்ந்து சொல்லி என் மனதுக்குள் மற்றொரு மத்தாப்பூவை கொளுத்தியிருந்தான். சமயம் வாய்த்த போது  திருச்சி ஜங்ஷன் சாலையில் பெயரில்லாத ஒரு கடையில் பீஜீசின் Living Eyes என்ற ஆல்பத்தைக் கண்டு அதை மிகுந்த உவகையுடன் வாங்கினேன். கசெட்டின் அட்டைப் படம் எனக்குள் பயங்கர சந்தோஷத்தைக் கொடுத்தது. விடுதியிலோ டேப் ரெகார்டர் வெகு சிலரிடமே இருக்கும் ஒரு அரிய பெரிய சங்கதி. எனவே அந்த வார இறுதியில் வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக அதை மிகுந்த ஆர்வமாகக்  கேட்டால், அட கண்றாவியே, என் ஆனந்தம் முழுவதும் ஒரு புல்டோசர் ஏறிய மெல்லிய சிறிய மலர்   போல நசுங்கிவிட்டது. அத்தனை எதிர்பார்ப்புக்களும் வேதனையாகிப் போக, பீஜீசின் இசை மீது எனக்கு உண்டான ஆத்திரம் இன்றுவரை தீரவில்லை. விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய வெகு சில பாடல்கள் இவர்களிடம்  பரவாயில்லை ரகம். மற்றவையெல்லாம் ஒரு முறை கூட முழுதும் கேட்க முடியாத துப்பிவிடக்கூடிய   சக்கைகள். ஆனால் இவர்கள் மிகப் பெரிய ஆளுமை கொண்டவர்கள் என்பதை நான் மறுக்கப்போவதில்லை.  70களில்  டிஸ்கோ யுகத்தை அமெரிக்க, ஐரோப்பிய கண்டங்களில் அறிமுகம் செய்த பல இசைக் குழுக்களில் பீஜீசுக்கு ஒரு முதன்மையான இடம் இருக்கிறது.  பீஜீஸ் குழுவின்  மூன்று சகோதரர்களில் Robin Gibb என்பவர் மட்டும் தனியாக அமைத்த சில இசைத் தொகுப்புகள் ரசிக்கும்படி இருப்பது ஒரு ஆறுதல். Boys Do Fall In Love, King Of Fools, Rebecca, Like A Fool, Someone To Believe In, Do You Love Her? போன்ற இவரது பாடல்கள் அதிரடி வகை. தலைக்குள் சம்மட்டியால் அடிப்பது போல ஒரு ஆங்கார ட்ரம் ஒலிக்கும் பாடல் முழுவதும்.



     பீஜீசின் மீது எனக்கு ஏற்பட்ட வெறுப்புக்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. லிவிங் ஐஸ் வாங்கிய பின்னர் அடுத்த முறை மியூசிக் லேன்ட் சென்றபோது எனக்கு அந்த ஸ்ரீதரின் முகத்தின் முன்னே அந்த  கசெட்டுக்கு நான் அழுத 25 ரூபாய்தான் தோன்றியது. அது என்னை  இன்னும் கடுப்பேற்றியது. வழக்கமாக அவன் பேசத் துவங்க, "நீங்கள் சொன்னதற்காக பீஜீஸ் வாங்கினேன். ஒரு பாட்டும் சகிக்கவில்லை." என்று நான் சட்டென கூறினேன்.   அவன் முகம் சற்று இருண்டது. ஒரு சிறுவன் தன் மீது இப்படியொரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வான்   என்று கொஞ்சமும் அவன் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது. "எனக்கென்ன தெரியும்? கல்லூரியில் படிப்பதால் யாரையாவது காதலித்திருப்பாய் என்று நினைத்தேன். காதல் செய்திருந்தால் பீஜீஸ் இசையை ரசிக்கலாம்" என்று நக்கலாக அவன் சொன்னது என்னை இன்னும் கொதிப்படையச் செய்தது. அவன்தான் அப்படியென்றால் நானாவது  அதோடு அந்த விஷயத்தை விட்டிருக்கலாம். நமக்குத்தான் அந்த மாதிரியான  நல்ல குணங்கள் கொஞ்சமும் கிடையாதே.  நான் தொடர்ந்து ," Police என்று ஒரு குழு இருக்கிறதாமே. அந்தப் பாட்டாவது  நன்றாக இருக்குமா?" என்று கேட்டதுதான் தாமதம், குதித்து எழுந்தவன்   என்னை மிகக் கொடூரமாக முறைத்து," திருச்சியில் படிப்பதால் எதோ ஒன்றிரண்டு பெயர்களை தெரிந்து வைத்துக்கொண்டு என்னிடம் இப்படி விளையாடுகிறாயா?" என்று ஆரம்பித்து கடுமையாக  என்னை வசை பாடத்  துவங்க, நான் திடுக்கிட்டு  எதுவும் பேசாமல் உடனே எழுந்து வீட்டிற்கு வந்துவிட்டேன். அது அவனை இன்னமும் ஆத்திரப்படுத்தியிருக்க வேண்டும். "இனிமேல் இங்கு வருவதாக இருந்தால் நீ மட்டும் வா. உன் தம்பியை கூட்டிக்கொண்டு வராதே." என்று என் அண்ணனிடம் அவன் சொல்லியதாக  அதன் பிறகு அறிந்தேன். அத்துடன் எனக்கும் மியூசிக் லேன்ட்டுக்கும் இருந்த இசைத் தொடர்பு அறுந்து போனது. பீஜீஸ் எனக்கு கொடுத்த இரண்டாவது பெரிய இழப்பு இது. அந்த 25 ரூபாயை எதோ தொலைந்தது என்று விட்டுவிட்டாலும்  இதை என்னால் மன்னிக்கவே முடியாது.


     கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது  மாலை வேளைகளில் திருச்சி சிங்காரதோப்பு வீதிகளில் ஒற்றன் போல ஊடுருவிய சமயத்தில் என் கண்களில் சிக்கிய    ஓம் சக்தி ரெகார்டிங் செண்டர் எனக்கு ஒரு இசைக் கோவிலாகவே மாறிப்போனது. சாயந்திரங்களில் எந்த நண்பனையும் இழுத்துக்கொண்டு செல்லாமல் தனியே என் விடுதியிலிருந்து புறப்பட்டுச் செல்வதில்தான் எத்தனை ஆனந்தம் இருந்தது ! Survivor என்ற அமெரிக்க  ராக் இசைக் குழுவின் Eye Of The Tiger அங்கே நான் கண்டெடுத்த அடுத்த புதையல். ஒருமுறை இப்பாடலை நீங்கள் கேட்டாலே போதும். உடனடியாக இதன் மீது மோகம் கொள்வீர்கள் என்று தயக்கங்களில்லாமல் சொல்வேன். இப்பாடலே Sylvester Stalloneனின் Rocky III படத்தின் தீம் சாங். துவக்கமே படு ஆர்பரிப்பாக இருக்கும். கிடுகிடுவென ஓடும் ரிதம் கிடாரின் இசையுடன் துவங்கி,பின் லீட் கிடாரின் எழுச்சியான கிறீச்சிடும் riff சரியான தாளத்தில் துடிப்பாக  அலற, அதன் பின் Dave Bickler ரின் தீம்பிழம்பை கக்கும் குரல் Rising up என்று வெடிக்க, சந்தேகமில்லாமல் ஐ ஆப் தி டைகர் நெருப்பின்  ருசியை கேட்பவருக்கு உணர்த்தும் கானம். ஆங்கிலப் பாடல்களை அதிகம் விரும்பாத என் கஸின் கூட ஒரு கசெட்டில் இந்தப் பாடலை பதிவு செய்து கேட்டது எனக்கு வியப்பாக இருந்தது.  American Heartbeat, Burning Heart, The One That Really Matters, I'm Not The One Anymore, Desperate Dreams, Poor Man's Son, Caught In The Game, It's The Singer Not The Song, Oceans, Backstreet Love Affair போன்றவை சர்வைவர் குழுவின் ஆளுமையை அதிரடியாக அறிவித்த  பாடல்கள்.




        என் வகுப்பிலுள்ள மேல்தட்டு வர்க்கத்துப் பிரதிநிதிகள் சிலர் அவ்வப்போது ஆங்கிலத்தில்," அவன் ஒரு ஆணே கிடையாது","அந்தப் பாடலையே நான் வெறுக்கிறேன்", என்று கடுமையாக விவாதிப்பதை செவியுற்ற நான் ஒருமுறை அதைப் பற்றி மெல்ல விசாரித்தேன். அவர்கள் கூறியது தமாஷாக இருந்தது.  Culture Club என்ற பிரிட்டிஷ்  இசைக் குழுவின் பாடகரான Boy George பற்றியே அவர்கள் இத்தனை கடுப்புடன் பேசிக்கொண்டிருந்தது தெரிந்தது. பாய் ஜார்ஜ் அப்போது இளம் பெண்கள் மத்தியில் வெகு பிரபலமானவர். ச்சோ ஸ்வீட் என்று சொல்லக்கூடிய அளவில் ஒரு வசீகரமான பெண் போலவே அவர் தன்னை அடையாளப் படுத்திக்கொண்டவர். அவரைப் பலர் ஒரு பெண் என்றே நினைத்ததுண்டு. பொதுவாக பாய் ஜார்ஜ்ஜின் பாடல்கள் எளிமையான தாளத்துடன் சற்றே மெலடி கொண்டு சுலபமான கவிதை வரிகளுடன் ஆர்ப்பாட்டமின்றி கேட்பதற்கு கொஞ்சம் அலுப்பு தரக்கூடிய வகையில் இருக்கும்.இவரது இசை ரகே மற்றும் சோல் இசை வடிவங்களின் கலவை.   கல்ச்சர் கிளப் குழுவின் Do You Really Want To Hurt Me, Karma Chameleon, Church Of The Poison Mind, I'll Tumble 4 Ya போன்றவை ரசிக்கக்கூடியவை. குறிப்பாக கர்ம கமீலியன் பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு திருச்சி சிப்பி தியேட்டருக்கு கொடுமையான வெயில் நேரத்தில் கோஹினூர் தியேட்டர் அருகே உள்ள ரயில்வே பாலத்தை தாண்டி நடந்து சென்ற கணங்கள் உயிர்ப்புடன் காட்சியாக விரிவதுண்டு.  அபாரம் என்று சொல்லமுடியாவிட்டாலும் பாய் ஜார்ஜின் பாடல்களை கொஞ்சமாக கேட்கலாம்- விருந்துக்கு  முன் அப்பளத்தை கடித்துக்கொள்வதைப்  போல.


       தொடர்ந்து திருச்சி கசெட் கடைகளிலும் ரெகார்டிங் சென்டர்களிலும்  நான் ஏகப்பட்ட இசைத் தொகுப்புக்களை வாங்கியபடியே இருந்தேன். கல்லூரி தினங்களில் எனக்கிருந்த  மிக முக்கியமான செலவு இதுதான். (இரண்டாவது திரைப்படங்கள்.) நான் வாங்குவது ஒரு புறமிருக்க என் அண்ணன் அவன் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேடித் பிடித்துக் கொண்டுவந்து கொட்டிய கசெட்டுக்கள் ஏராளம். நான் அவன் மீது பொறாமை கொள்ளும் ஒரு குணம் அவனிடம் இருந்தது. அது அவனுடைய ஞாபக சக்தி. வார்த்தைகளின் வரலாற்றையும் அதன் மாறிவரும் அர்த்தங்களையும் குறிக்கும் Etymology போன்று இசைக்கென ஒரு புதிய வார்த்தை இருக்குமானால் அதை தாராளமாக அவனுக்கு அர்ப்பணித்து விடலாம். சிலோன் வானொலியில் ஒரு பாடலின் பாரம்பரியத்தை விலாவாரியாக விவரிப்பதைப் போல இவன் ஒரு பாடலின் அல்லது பாடகரின் சரித்திரத்தைப் பற்றி அவ்வப்போது துப்புகள் கொடுப்பான். கல்லூரியில் ஒருமுறை என்னிடம் ," The Cars என்றொரு ஆல்பம் வாங்கினேன்.வீட்டிற்க்கு போய்க் கேள். அத்தனைப் பாட்டும் அருமை. ஆனால் அந்த அட்டைப் படம்தான் கொஞ்சம் ஒரு மாதிரியாக இருக்கும்." என்று அமைதியாகத்  தெரிவித்தான். அவ்வார இறுதியில் என் வீட்டில் கார்ஸ் குழுவின் Candy-O ஆல்பம் ஆர்ப்பாட்டமாக  அதகளம் செய்தது.   Let's Go என்ற முதல் பாடலிலிருந்து Dangerous Type என்ற இறுதிப் பாடல் வரை நான் வேறு எந்த வேலையையும் செய்யவில்லை. ஒரு  தரமான இனிப்பின் சுவை தொண்டைக்குள்  நழுவிச் செல்வதைப் போன்று பாடல்கள் என் நெஞ்சுக்குள் அமிழ்ந்தன. இரண்டு நாட்கள் முழுவதும் கேண்டி ஒ மீண்டும் மீண்டும் என் வீட்டில் இடைவிடாது ஒலித்துக் கொண்டே இருந்தது. (அந்த ஆல்பத்தின் முகப்புப் படமும்  அதன் பாடல்களைப் போன்றே வெகு வசீகரமானது. ரசிப்பிற்குரியது. )


     தி கார்ஸ்  அமெரிக்க New Wave வகையைச் சேர்ந்த ராக் இசைக்குழு. ஏழு இசைத் தொகுப்புகளுடன் கார்ஸ் குழுவினர் மேற்கத்திய  நவீன அலை இசையின் முன்னோடிகளில் முதன்மையானவர்களாகத் திகழ்கிறார்கள். சிலர் இவர்களது இசையை Bubblegum Pop என்றும் கூறுவதுண்டு.  கேண்டி ஒ கார்ஸ் குழுவின் மிக மிகச்  சிறப்பான அபாரமான இசைத் தொகுப்பு.  என் கணிப்பில் இது ஒரு சொர்கத்தின் இசைத் துளி. குறிப்பாக இந்த தொகுப்பில் இசைக்கப்பட்ட ட்ரம்ஸ் ஒரு வித muffled beat போன்று செவிகளை சோதிக்கும்  தடியான ஓசையாக இல்லாமல் கார்பெட்டில் காலணி தேயும் விதமாக தும் தும் என இனிமையாக ஒலிப்பது இதன் சிறப்பு. Double Life, Candy-O, Lust For Kicks, Since I Held You, Nightspots என அனைத்துப் பாடல்களும் கேட்ட அதே நொடியில் நீண்ட நாள் கழித்து காணும் காதலி போல என்னை அணைத்துக்கொண்டன. கார்ஸ் இசையில் என்னைக் கவர்ந்த ஒரு அம்சம் இவர்களது ஒவ்வொரு ஆல்பமும் வேறு வேறு தளத்தில், வண்ணத்தில் இருப்பதே. Shake It Up ஒரு தடதடக்கும் விரைவு எக்ஸ்பிரஸ் என்றால் அடுத்து வந்த Heartbeat City ஒரு புல்லெட் ரயில். It's a classic blast. இதுவே இவர்களின் மிகப் பெரிய வணிக வெற்றியின் உச்சம் தொட்ட இசைத் தொகுப்பு. ஒவ்வொரு பாடலும் அதிரடியாக ஒரு வெறி கொண்ட சூறாவளி போல துடிக்கும் . இதில்தான் Drive, Hello Again, You Might Think, It's Not The Night, Magic, Stranger Eyes போன்ற தடாலடிப் பாடல்கள் இருக்கின்றன. பத்துப் பாடல்களையும் கேட்டு முடித்ததும்   எதோ ஒரு போதை மாத்திரையை விழுங்கியது போன்ற உணர்ச்சி ஏற்படுவது நிச்சயம்.

       சென்னை எம் சி சி யில் நான் சேர்ந்த ஒரே வாரத்திற்குள்   (நான் எம் சி சிக்கு வர விரும்பியதன் மையமான காரணமே  இங்கே என் இசைத் தாகத்திற்கு அதிக நீரூற்றுகள் இருந்ததுதான்.) ஸ்டீரியோ விஷன் என்ற சென்னையின் மிகப் பிரபலமான ரெகார்டிங் சென்டரில் கார்ஸ் குழுவினரின் ஹார்ட்பீட் சிட்டி தொகுப்பை கைப்பற்றிவிட்டேன். ஆனால் வழக்கம்போல அதைக் கேட்பதற்கு என்னிடம் வசதிகளில்லை. என்னோடு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த, செலையூர் விடுதியில் தங்கியிருந்த என் கஸினுக்கு  பணத்தில் கொழுத்துப் போன ஒரு ஜூனியர் மாணவன் பழக்கமாகியிருந்தான். எனக்கு மிக அவசியப்பட்டது அவனிடம் இருந்தது . அது Kenwood என்ற   அல்ட்ரா மாடர்ன் டேப் ரெகார்டர். அதில் இருந்த பூம் ஒலி (Bass) போதாது என்று அவன் இரண்டு ஸ்பீக்கர்களையும் தனியே பிரித்தெடுத்து அவற்றை தாம்பரத்தின் எதோ ஒரு  சாலையோரத்தில் ஐந்து ரூபாய்க்கு வாங்கிய மண் பானைகளின் மீது வைத்து நவீனத்தையும் பாரம்பரியத்தையும் இணைத்து இன்றைய அதி நவீன Sub-Woofer சத்தத்தை அதில் சாத்தியமாக்கியிருந்தான். கொடுமை என்னவென்றால் அவன் இப்படிப்பட்ட  ஆடம்பரமான நவீனமான ப்ளேயரில் கண்றாவியான சம காலத்து தமிழ்ப் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தான். நான் என் கார்ஸ் கசெட்டை அவனிடம் கொடுத்து இசைக்கச் சொல்ல, அதை அவன் உடனே செய்ய, அந்த கென்வுட் அன்றைக்குத்தான் ஜென்ம சாபல்யம்  அடைந்தது என்று நினைக்கிறேன். ஹலோ எகைன் என்ற துடியான இசை வெடித்துக் கிளம்ப, அறை நிசப்தமானது. வெளியே இருந்த சில மாணவர்கள் அந்த அறையை நோட்டம்விடத் துவங்க, தொடர்ந்து  ஒலித்தது இட்ஸ் நாட் த நைட் என்ற அடுத்த அதிரடி. அப்போது நடந்ததை நான் இன்றும் ஒரு சிறு புன்முறுவலுடன் அசைபோடுகிறேன்.

      நடந்தது இதுதான்: வெளியே இரண்டு இரும்புக் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு தேகப் பயிற்சி என்ற பெயரில்  உரித்த கோழி போன்ற தோற்றத்தில்  ஊசலாடிக்கொண்டிருந்த ஒரு வட இந்திய சீனியர் மாணவன் பாடல் ஒலித்துக்கொண்டிருந்த வேளையில்  சடாரென கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தான். வந்தவன் ஆங்கிலத்தில் "முதலில் இந்த இரைச்சலை நிறுத்து"  என்று இரைந்தான். பாடல் நின்றதும் கசெட்டை  வெளியே எடுத்து வைத்தவன் அது என்ன பாடல் என்பதை ஒரு ஒற்றன் போல நோட்டம் விட்டான்.  இதை கவனித்த எனக்கு இந்த திடீர் இடையூறு சுவாரஸ்யமாகவே இருந்தது. பின்னர் "இது என்ன?"என்று அந்த ஜூனியர் மாணவனை அவன்  கடுமையாகக் கேட்டான். "இது இவருடையது." என்று அவனோ  அச்சத்துடன் என் பக்கம் கையைக் காட்ட அந்த உரித்த கோழி  என்னை எதோ ஒரு கீழ்த்தரமான  ஜந்து போல நோக்கினான். அவன் பார்வையிலேயே என்னை அவன் எவ்வளவு தூரம் தள்ளி வைத்திருக்கிறான் என்பதை என்னால்  உணர முடிந்தது. இத்தனை இன அகம்பாவம் கொண்ட அவனுக்கு  தன் நிறத்தையும் அந்தஸ்தையும் விட பல படிகள் கீழிருக்கும் ஒரு சாதாரணத்  தமிழன் தனக்கு அறிமுகமில்லாத ஒரு ஆர்ப்பாட்டமான மேற்கத்திய இசையை கேட்பது சற்றும் ஜீரணிக்கமுடியாத அவஸ்தையாக இருந்ததை நான் புரிந்துகொண்டேன்.  வன்மத்துடன் தன்னோடு கொண்டுவந்திருந்த ஒரு கசெட்டை சடுதியில் ஓட விட்டான். அதுவுமே எனக்கு பரிச்சயமான பாடல்தான். Robert Palmer என்ற பாடகரின் Addicted To Love என்ற பாடல் அது. தனியாகக் கேட்டால் விரும்பக்கூடிய அப்பாடல் இப்போதோ கார்ஸ் என்ற கடுமையான சூறாவளியின் முன் வெறும் சப்பையாக ஒலித்தது. கார்ஸ் இசையின் அதிரடி தாளத்திற்கும்  ராபர்ட் பாமரின் சம்பிரதாயமான ஓசைக்கும் இருந்த எளிதில் உணரக்கூடிய வித்தியாசம் அவனை இன்னும் அவமானப்படுத்த அதை ஏற்றுக்கொள்ளமுடியாமல் உடனே ஹீரோ என்ற ஹிந்திப் படத்தின் டிங் டாங் என்ற பாடலை ஓட விட, அது முந்தின பாடலை விட கேவலமாக ஒலிக்க, நானோ அவனுடைய கோமாளித்தனத்தை ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு அமைதியாக ரசித்தபடியிருந்தேன். ஒரு பத்து நிமிடம் அந்த கென்வுட் மியூசிக் சிஸ்டம் பற்றி அந்த ஜூனியரிடம் எதையெதையோ கேட்டுவிட்டு பின்னர் அந்த வெள்ளைக் கோழி அகன்று போனான். அவன் சென்றதும் மீண்டும் இட்ஸ் நாட் த நைட் முன்பை விட இன்னும் ஆங்காரமாக ஒலித்து அந்த காலை நேரத்து அமைதியை தகர்த்தெறிந்தது. ஆங்கில ராக் இசை கடுமையான கோபங்களின் வெளிப்பாடு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த உண்மையை  அன்றுதான் உணர்ந்தேன். ராக் இசையின் துடிப்பான தாளம் நாம் யார் மீது கோபம் கொண்டிருக்கிறோமோ அவர்களின் மீது நாம் வீசும் சாட்டையடி, அந்த  லீட் கிடாரின் ஆக்ரோஷமான நீண்ட தனியிசை நம் வலிகளை மறக்க நாம் கையிலெடுக்கும் ஒரு வன்முறை. பாடலோடு சேர்ந்து நம்மை பாடவைக்கும் அந்த மெலடி ஒரு போதை மாத்திரை.


       டெல்லி, பாம்பே என்று இரண்டு முறை என் அண்ணன் கல்லூரிச் சுற்றுலா சென்று திரும்பிய போது "அங்கேயிருந்து என்ன வாங்கிக் கொண்டு வந்தாய்?" என்ற சம்பிரதாயமான கேள்விக்கு "ஒன்றுமில்லை"என்று உதட்டைப் பிதுக்கிவிட்டு பின்னர் தனியே   என்னிடம்  வந்து ஒரு பெட்டியைக்  கொடுத்து "திறந்து பார்." என்றான். உள்ளே என்ன இருக்கும் என்று தெரிந்திருந்தாலும் அதைத்  திறந்தால் .. அடப்பாவி.. இத்தனையா  என்று நானே அதிர்ந்து போகுமளவுக்கு கொஞ்சம் கூட இடமில்லாது தமிழ்ப் படங்களில் தங்க பிஸ்கட்டுகளை அடுக்கி வைத்திருப்பதைப் போன்ற தோற்றத்தில் அத்தனையும் ஆங்கில கசெட்டுக்கள். எங்கள்  தந்தையோ இதைப் பார்த்து தன் கனமான அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஒன்றும் பேசாமல் உள்ளே சென்றுவிட்டார். ஒவ்வொரு கசெட்டாக பரவசத்துடன்  வெளியே எடுத்துவைத்ததும் நேரம் காலம் தெரியாமல் கேட்டதும் இன்றைக்கு என்னுள் பசுமையாகிவிட்ட நினைவுகளில் ஒன்று.  அதன் பின் இரண்டு வாரம் வீட்டில் இடைவிடாத இசை மழைதான். Pet Shop Boys, Gazebo என்ற புதிய இரண்டு குழுக்களை அறிந்தது  அப்போதுதான். பெட் ஷாப் பாய்ஸ் குழுவின் Actually  என்ற தொகுப்பில் இருக்கும் One More Chance என்ற பாடலை முதல் முறையாக கேட்டபோது அந்த இசை எனக்குள் மின்சாரம் போலப் பாய்ந்தது. என்ன ஒரு அபாரம் அது! யாரையோ காரில் துரத்துவது போன்ற இசை துவங்கி பின் தடதடக்கும்  தாளதிற்க்குள் வந்து ...ஆஹா... மீண்டும் மீண்டும் ருசிக்க வைக்கும் இசை. பெட் ஷாப் பாய்ஸ் இருவர் கொண்ட ஆங்கில எலெக்ட்ரானிக் இசைக் குழு. West End Girls, Opportunities, Violence, Suburbia, Heart, It's A Sin, Hit Music, Rent  என வரிசையாக எண்பதுகளின் மத்தியில் அங்கே அதகளம் செய்தவர்கள் இவர்கள். குறிப்பாக Was That  What It Was  என்ற அவ்வளவாக பிரபலமாகாத ஒரு பாடலைக்   கேட்டதும் மனதுக்குள் வானவிலைக் கண்டேன்.


     கசபோ பெரும்பாலும் பாப் இசைப் பாடல்களைப்  பாடிய ஒரு இத்தாலிய இசைஞன். ஐரோப்பாவில் புகழ்பெற்ற இவர் ஆங்கில இசையின் மையங்களான யு எஸ் மற்றும் யு கே வில் அதிகமாக அறியப்படாததால் மிகச் சிறப்பான இவரது பல பாடல்கள் சுவைக்கப்படாமலேயே இருக்கின்றன. சிந்தசைசரும் பியானோவும் இணைந்து அருமையான மழை நேரத்து ஈரக் காற்று போன்ற  I Like Chopin பாடலே இவர் இசையில் நான் கேட்ட முதல் பாடல். இதில் வரும் Rainy days never say goodbye to desire when we are together என்ற வரிகளை அப்போது நான் அடிக்கடி பாடிக்கொண்டிருந்த விபரீதமெல்லாம்  அப்போது  நடந்தது. Univision என்ற ஆல்பத்தின் The Sun Goes Down, Rain, Trostky Burger, Orient Express, Diamonds Are Forever என வரிசையாக தடதடக்கும் பாடல்கள்  என் மனதுக்குள் படையெடுத்தன. இறுதியில் ஒலித்த Telephone Mama  செங்குத்தாக  எனக்குள் இறங்கி என்னை கலங்கடிக்க, அதுவரை நான் கேட்டேயிராத சிந்தசைசரின் சரசரப்பான ஓசை இடம் வலம் மேல் கீழ் என்று அலைபாயும் துவக்கமே Love In Your Eyes என்ற கடைசிப் பாடல் என்னை என்ன செய்யப் போகிறது என்பதை அடிக்கோட்டிட்டு உணர்த்தியது. ஏகத்துக்கு சிந்தசைசர், கொஞ்சம் கிடார், ஆங்காரமான ட்ரம்ஸ் என இந்தப்பாடல் ஒரு அடர்த்தியான ஆனந்தத்தை அள்ளி வீசியது. மெய்மறத்தல்  என்பார்களே அது போன்ற ஒன்று எனக்கு அப்போது நிகழ்ந்தது. அந்த கசெட் ஓடி முடிந்த போது கசபோ எனக்கு மிக அருகில் வந்துவிட்டார். சென்னைக்கு வந்ததும் இங்கேயிருந்த சி டி கடைகளில் முத்துக்குளித்து கசபோவின் அனைத்து இசைத் தொகுப்புக்களையும் கண்டெடுத்துவிட்டேன். Victims In Paradise (தலைப்பே அபாரம். முரண்களின் சங்கமம்.) என்ற பாடலில் கசபோவின் வற்றாத  இசை இனிமையை நான் உணர்ந்தேன்.


       என் கப்பல் நண்பன் (ஆனந்த்) ஒருமுறை எங்களுக்குக் கொடுத்திருந்த கசெட்டிலிருந்த இருபது பாடல்களின்  குழுக்களையும் விரட்டி விரட்டிப் பிடித்து  அவற்றில் மனதை வருடிய குழுக்களின் மற்ற ஆல்பங்களையும் தொடர்ச்சியாக ஒரு நூலிழை போலப் பிடித்து எங்கள்  வசப்படுத்தியது ஒரு சுவாரஸ்யமான  அனுபவம்.  முதன் முதலாக டேபேச்சே மோட் குழுவின் மிக மிக மிகச்  சிறப்பான Get The Balance Right என்ற பாடலை நான் கேட்டது அப்போதுதான். மேகத்தின் மீது சவாரி செய்வதைப் போன்ற ஒரு பறக்கும் உணர்வினால் நான் நிரம்பினேன்.  அதைப் போன்ற சிந்தசைசர் இசையை நான் அதற்கு முன்னும் ஏன் இன்றுவரை கேட்கவில்லை. வெறும் திடும் திடும் என்று அலறும் மேற்கத்திய துள்ளல் இசை இல்லை இது. மாறாக கனவுகளை விதைக்கும் கானம். ஆன்மாவை ஊடுருவும் இசை. டேபேச்சே மோட் வெறும் திடும் திடும் தாளமாகவும் ஆடலுக்கான இசையாகவும் இருந்த சிந்தசைசர் இசை வகையை மிக உன்னதமான இடத்திற்கு எடுத்துச் சென்ற மகத்தான இசைஞர்கள். சமூக அவலங்களையும் , சம்பிரதாயமான மதச்  சடங்குகளையும்  , நவீன வாழ்வின்  கறுப்புப்  பக்கங்களையும், வணிக வேட்கை கொண்ட கொழுத்துப் போன பண முதலைகளையும் எதிர்த்து தங்கள் பாடல்களைப் புனைந்தார்கள். அவற்றில் ஆக்ரோஷமான தாளமும் உண்டு. மனதை மயக்கும் போதையும் உண்டு. Policy Of Truth,The Landscape Is Changing, Everything Counts  போன்ற  பாடல்கள்  இதற்கு ஒரு உதாரணம். Violator, Some  Great RewardBlack Celebration, Construction Time Again, Ultra போன்ற  இசைத் தொகுப்புகளின்  அனைத்துப் பாடல்களும் கடற்கரை மணலில் தனியே படுத்து நட்சத்திரங்களை ரசிக்கும் உன்னதமான உயிர்ப்பான  உணர்வுகளையூட்டக்கூடியவை.


        ஒருமுறை வீட்டில் இப்பொழுது நினைவில்லாத ஒரு பகல்பொழுதில் நான் எப்போதும்போல பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்த சமயத்தில் உள்ளேயிருந்த  என் மூத்த சகோதரி  என்னருகே வந்து  ,'இந்தப் பாடல் நன்றாக இருக்கிறதே? அந்த ஆளின் குரல் கேட்க இனிமையாக இருக்கிறது." என சொல்ல எனக்கு ஏற்பட்டது ஆனந்த திகைப்பு.   பெரும்பாலும் ஹிந்திப் பாடல்களையும், பழைய தமிழ்ப் பாடல்களையும் வெகுவாக விரும்பிக் கேட்கும் என் சகோதரியிடம்  இவ்வாறு திடீர் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற  அந்த "ஆள்" Mark Knopfler.  அப்பாடல் Dire Straits என்ற குழுவின் மிகப் பிரபலமான Brothers In Arms தொகுப்பிலுள்ள மனதை மறக்கடிக்கச் செய்யும் So Far Away என்ற பாடல்.  Pink Floyd's Roger Waters, The Cars's Ric Ocasek, Roxy Music's Brian Ferry, Chris Rea, J.J.Cale  போன்றவர்களின் அபாரமான ஆண் குரல்களைப் போன்றே மார்க் நாப்ளரின் ஆண்மைக் குரல் கேட்பவரை பொறாமைக் கொள்ளச் செய்யும் வசீகரமிக்கது. அவர் பாடும் விதம் ஒரு தாலாட்டைப் போன்றது. டயர் ஸ்ட்ரைட்ஸ் குழுவின் Once Upon A Time In The West, Where Do You Think You're Going, Six Blade Knife, Telegraph Road, Private Investigations, Walk Of Life, So Far Away, Sultans Of Swing, Romeo And Juliet பாடல்கள் மிக நுட்பமான மன உணர்ச்சியை நமக்குள் செலுத்தக்  கூடிய வலிமை பெற்றவை. சல்டன்ஸ் ஆப் ஸ்விங் பாடல் ராக் இசையின் என்றும் ஒளிரும்  நட்சத்திரம். பாடலின் அடிநாதமாக ஒலிக்கும் நாப்ளரின் கிடார் பாடலின் இறுதியில் அசுர வேகத்தில் இங்கேயும் அங்கேயும் இடம் மாறித் தாவித் தாவிச் செல்வதைக் கேட்கையில் இசை ஒன்றே உலகின் ஒரே ஆனந்தம் என்ற எண்ணம்  ஆழமாக வேரூன்றும்.  " The Electric Fingers" என்று அழைக்கப்படும் நாப்ளரின் கிடார் இசை ராக் இசையின் மகா உன்னதம். இவர் ஜே ஜே கேல் என்பவரின் பாணியை பின்பற்றுவதாக ஒரு கருத்து இருந்தாலும் மார்க் நாப்ளர் ஒரு இசை சகாப்தம். ஒரு மகா ஆச்சர்யம். இன்னொரு பதிவில்(!) இன்னும் கொஞ்சம் விரிவாக இவரை ஆராயலாம்.

         செயின்ட் ஜோசெப் கல்லூரியின் பெல்லார்மின் விடுதியின் அருகே இருந்த பர்மா பஸார்  எனக்குக் கிடைத்த பொக்கிஷம். ஓம் சக்தி செண்டருக்கும் இன்ன பிற கசெட் கடைகளுக்கும் செல்லாத தினங்களில் நான் இந்த பஸார் சாலைகளில் கடை கடையாக கசெட்டுக்களை தேடிக்கொண்டிருப்பதை கண்ணுற்ற என் விடுதி நண்பர்கள் "இனிமேல் இவன் கூட சேர்ந்தே போகக்கூடாது" என்று தீர்மானித்தது  எனக்கு இன்னும் அதிக சுதந்திரம் அளித்தது.  சாலைகளில் செல்லும் இளம் பெண்களை நோட்டம் விடாமல் எதோ ஒரு சிறிய கழிப்பறை போன்ற கடைகளில் ஆங்கில கசெட்டுகளை மணிக்கணக்காக ஒருவன் தேடிக்கொண்டிருந்தால் எவருக்கும் இவ்வாறு தோன்றுவது இயற்கைதான். ஆனால் என் விருப்பங்கள், ரசனைகள் எனக்கு வேண்டிய கவர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஒரு அழகிய பெண்ணிடம்  தேடவிடாது கசெட் கடைகளுக்குள் விரட்டியபடியே இருந்தன. முகமில்லாத என் இசைக் காதலியின் வசீகரம் என்னை சிறை பிடித்திருந்தது. அந்த சமயத்தில் ஒரு கடையில் நான் கண்ட ஒரு கசெட் என்னுள் இனந்தெரியாத பரவசத்தை உண்டாகியது. எதோ சுவர் போன்ற ஒரு படத்தில் The Wall என்ற தலைப்பில் ஒரு கசெட்டைக் கண்டேன். அது என்ன இசைக் குழு என்று அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. வருடங்கள் கழித்து இதே   இசைத் தொகுப்பு  தன் வசிய இசையினால் என்னைக் கட்டிப்போட்டு என் நெஞ்சத்தில் ஆழ்ந்து பலவிதமான காட்சிகளை உருவாக்கியது.



         குன்னூர் கோஷ்டி என்று நாங்கள்  குறியீடாகச் சொல்லும் ஒரு மாணவர்க் கூட்டம் விடுதியில் இருந்தது. அவர்கள் குன்னூர், ஊட்டி, கோத்தகிரி போன்ற இடங்களிலிருந்த பனி படர்ந்த மலைப் பள்ளிகளில் படித்தவர்கள். அவர்களின் உரையாடல் பெரும்பாலும்  ஆங்கிலத்திலேயே இருக்கும். அவர்கள் மற்ற யாருடனும் அதிகம் பேசுவது கிடையாது என்பதால் மண்டைக் கணம் பிடித்த அலட்டல்கள் என்ற முத்திரை அவர்கள் மீது குத்தப்பட்டிருந்தது. எனக்கும் அம்மாதிரியான ஒரு எண்ணம் சிறிய அளவில் இருந்ததாக நினைவு. ஆங்கிலம் பேசுவதால் அவர்கள் விடுதியில்  அன்னியமாக உணரப்பட்டார்கள். எங்களுக்கும் அவர்களுக்கும் இருந்த இடைவெளியின் தூரத்தை  ஒரு மொழி தீர்மானிப்பது எனக்கு  அபத்தமாகத் தோன்றியது.   இருந்தும் எனக்கு அவர்களின் ஆங்கிலத்தின் மீதோ அல்லது மற்றவர்களைத் தவிர்க்கும் சுபாவம் மீதோ   பிரச்சினை இல்லை மாறாக அவர்கள் அறைகளைத் தாண்டிச் செல்லும் பொழுதெல்லாம்  உள்ளே ஒலிக்கும் மேற்கத்திய இசை மீது பொறாமை கலந்த ஆர்வம் இருந்தது. ஏனென்றால் என்னால் புரிந்துகொள்ள முடியாத பாடல்களாக அவை இருந்தன. அவைகள்  இதுவரை நான் கேட்டிருந்த இசையை விட்டு விலகி  முழுதும் வேறு உடை அணிந்த பாடல்களாகவும் வித்தியாசமான இசையாகவும் என் காதுகளில் ஒலித்தன.  நானே வலிய அவர்களிடம் சென்று பேசவும் தயக்கமாக இருந்தது. ஆனால் மூன்றாம் வருடத்தில் அவர்களின் அறைகளுக்குள் தயக்கமில்லாது நுழையக்கூடிய சுதந்திரம் எனக்குக் கிடைத்தது. அவர்கள் மிக நல்ல நண்பர்கள் என்பதை அதன் பிறகே அறிந்தேன். தோற்றங்களும்,வெளிப்புற அடையாளங்களும் எப்படி நம்மை  தவறான முடிவுகளை  நோக்கிச் செலுத்துகின்றன  என்ற உண்மை புலனாயிற்று.


      கல்லூரியின் இரண்டாம் வருடத்தில் என் நண்பனின்  அறைத் தோழனாக அந்த குன்னூர் கூட்டத்தில் ஒருவன் அமைய, நான் என் நண்பனை சந்திக்கும் சமயங்களில் அவனுடன் பழக்கம் ஏற்பட்டது. மேற்கத்திய இசை பற்றிய பேச்சுக்களில் நான் அதிகம் ஈடுபாடு காட்டுவதை அறிந்த அவன் என்னை அவர்கள் கூட்டத்தில் அறிமுகம் செய்துவைத்தான்.  அதில் ஒருவனான பேஸில் என்பவனுடன் நான் அடிக்கடி அவர்கள் கேட்கும்  இசை குறித்து விவாதிப்பதுண்டு. (இந்த பேஸில் என்பவனை நாங்கள் மாடர்ன் ஜீசஸ் என்று அழைப்போம்.) ஒருமுறை நான் அவனை , " நீ  Pet Shop Boys கேட்டதுண்டா?" என கேட்க, அவனோ  "Crap!" என்று ஒரே வார்த்தையில் என் இசை ரசனையை நிராகரித்து விட்டான். "அதெல்லாம் வெறும் டிஸ்கோ இசை." என்றவன் தொடர்ந்து," வெறும் ட்ரம் இசை மட்டுமே நல்ல பாடலாகி விடாது. நீ கேட்பதில் பல வெறும் டிஸ்கோ இசைதான்." என்று மேற்கொண்டு மிகப் பெரிய அளவில் என் மேற்கத்திய மோகத்தின் மீது குளிர்ந்த நீர் ஊற்ற, எனக்கு பேரதிர்ச்சியாக  இருந்தது. இருந்தாலும் ஒரு புதிய இசைப் பாதையை நோக்கி நான் செல்ல விரும்பியதால்  விவாதத்தைத்  தவிர்த்தேன். இப்போது திரும்பிப் பார்க்கும்போது அவன் கூறியதில் உண்மை இருந்ததாகவே உணர்கிறேன். எதோ ஒரு விதத்தில் அவன் தன் சமகால இசையின் மீது கடும் வெறுப்பு கொண்டிருந்ததாகத் தோன்றுகிறது. "நல்ல இசை என்பது வெறும் தும் தும் இசை மட்டுமல்ல. அதில் கவிதை வேண்டும். பாடும் விதம் வேண்டும். மெலடி வேண்டும்." என்று வெகு ரசிப்புடன் எனக்குப் பாடம் நடத்தினான். பின்னர் ," நீ Pink Floyd கேட்டிருக்கிறாயா?" என்றான். Pink Floyd  என்ற வசீகரமான மனதை மயக்கும் ஒரு பெயரையே அப்போதுதான் கேள்விப்பட்டேன். இன்று நான் ஆயிரம் பக்கங்கள் Floyd ன்  இசையைப் பற்றி எழுதக்கூடிய இசை முதிர்ச்சிக்கும்  மேன்மையான ரசனைக்கும்  வந்துவிட்டாலும் அவன் என்னை அவ்வாறு  கேட்ட அந்த வினாடியில் எனக்கு Floyd  பற்றி ஒரு புள்ளி கூட தெரியாது. இடது வலதாக தலையாட்டினேன். "இதைக் கேள்" என்றவன் உடனே அங்கிருந்த கருப்பு டேப் ரெகார்டரில் பல கசெட்டுகளுக்குள் தேடி ஒன்றை எடுத்துப் போட்டான். விளக்குகள் அணைக்கப்பட அந்த இருண்ட அறையில் நான் முதல் முறையாகக் கேட்ட Floyd பாடல் ஒலிக்கத் துவங்கியது. அடடா... இது என்ன இசை! இதுவன்றோ இசை!... நான் அதுவரை கவனமாகக் கட்டி வைத்திருந்த இசைச் சுவர்களெல்லாம் தகர்ந்தன. இழை இழையாக அந்த இசை என் நெஞ்சத்தில் அடர்த்தியாகத் தங்கியது.  எனது இசை ரசனை வயதுக்கு வந்தது.

     Pink  Floyd ன்  Animals என்ற 77இல் வந்த இசைத் தொகுப்பிலுள்ள Pigs (The Three Different Ones) என்ற பாடல் அது.   பாடல் ஒரு  உறுமலுடன் துவங்க மெல்ல  நழுவிச் சென்று  பின் சட்டென்று கோலாகலமாக  அதிரும் கிடார் riff, அதைத் தொடர்ந்து இடைவெளி விட்டு நின்று நின்று ஒலிக்கும் ட்ரம்ஸ்  அதன் போதைகொண்ட தாளத்திற்கு ஏங்க வைத்து  அடுத்து  வரப்போகும் 11 நிமிட இசை வெடிப்புக்கு என்னைத்  தயார் செய்துவிட, ஒரு அனாசயமான ராக் ஓசையுடன் ட்ரம்ஸ் நளினமாகத்  துடிக்க   , "Big Man ,Pig Man" என Roger Waters தன் வசியக்குரலில் பாட ஆரம்பித்ததும் என் இசைவெளிகள் ஒரே நொடியில் எல்லைகளற்றுப் போயின. நான் இதுவரை கேட்டுக்கொண்டிருந்த மேற்கத்திய இசைக்கும் இதற்கும் தென்பட்ட வேறுபாடு எனக்கு உறைத்தது. 86ஆம் ஆண்டில் நான் 77இல் வந்த ஒரு இசையை நவீனம் என்று சொல்ல முடியாவிட்டாலும் அந்த அனுபவம் ஒரு புதுமையே. பாடல் முடியும் வரை யாரும் எதுவும் பேசவில்லை. ஓடையின் சலசலக்கும் நீர்த்துளிகளின் ஓசையைப் போல அந்தப் பாடல் தன்னை முடித்துக்கொண்டதும்தான் நான் எங்கே இருக்கிறேன் என்பதை என்னால் உணர முடிந்தது. அந்த நிகழ்வு இசை என்னும் ஒரு மகத்தான அனுபவத்தின் ஆழ்ந்த ஆத்மார்த்தமான  தொடுகை. என் இசை வரைபடம் சடுதியில் உருமாறி விட்டதை உணர்ந்தேன்.



    Pink Floyd ப்ராக்ரசிவ் ராக் இசையின் அசைக்க முடியாத அனாசயமான ஆச்சர்யம். என்னைப் பொறுத்தவரையில் இவர்கள் ஒரு இசை அதிசயம். இவர்கள் Psychedelic rock எனப்படும் மனதை வசியப்படுத்தும் இசை வகையின் முன்னோடிகள். The Beatles, The Doors. Jimi Hendrix Experience என இவர்களுக்கு முன்பே இவ்வகை இசையில் பலர் முன்னிருந்தாலும், வெகு நுட்பமான தங்களின் இசையினாலும், புதுமையான இசைப் பரிசோதனைகள் மூலமாகவும், துல்லியமான இசைக் கோர்ப்பினாலும், எதிர்பாராத இசை ஆச்சர்யங்களாலும், சட்டெனெ மனதில் உட்காரும் கவிதைகளாலும்  Pink Floyd  சைகெடெலிக் ராக் இசையை  ஒரு நவீன ஓவியமாக்கி அதன் பரிமாணத்தை மற்ற எவரும் எடுத்துச் செல்லாத உச்சத்திற்கு கொண்டு சென்றார்கள். மேலும் concept album என அழைக்கப்படும் தொடர்ச்சியான இசை அனுபவத்தைத் தரும் ஒரு  நவீன இசைத் தொகுப்பை மிகப் பிரபலமாக்கியதும் இவர்களே. Jethro Tull என்ற பிரிட்டிஷ் குழுவினர் Thick As A Brick என்றொரு  கான்செப்ட் ஆல்பத்தை 72இல் வெளியிட்டார்கள். இதன் சிறப்பு என்னவென்றால் மொத்தம் நாற்பத்தி மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த இசைத் தொகுப்பில் இருப்பது ஒரே ஒரு பாடல்தான். ஆனால் பத்து நிமிடத்திற்கு மேல் சலிப்பு தட்டும்  ஒரு புதிய முயற்சியாக இது இருந்தது. Pink Floyd இசையில் கான்செப்ட் ஆல்பங்கள் புத்துயிர் பெற்றன. Floyd ன் பெரும்பாலும் அனைத்து ஆல்பங்களும் இதே வகையைச் சேர்ந்தவையே. குறிப்பாக Dark Side Of The Moon, Wish You Were Here, Animals, The Wall, The Final Cut ஆல்பங்கள் கான்செப்ட் ஆல்பத்தின் தவிர்க்க முடியாத மைல் கற்கள்.

        தி வால் இசைத் தொகுப்பைப் பற்றி இங்கே நான் பேச ஆரம்பித்தால் அது எனக்கு வேண்டுமானால் இனிக்கலாம். கண்டிப்பாக படிப்பவர்களுக்கு அப்படி இருக்குமா என்பது ஒரு ஊசலாடும் கேள்வி. மேலும் ராக் இசையின் மிக உன்னதமான அருமையான  வியப்பான ஒரு இசைத் தொகுப்பைப் பற்றி நீங்கள் ஒரு அலுப்புடன் படிப்பதை நான் விரும்பவில்லை. எனவே இத்தனை பொறுமை காத்து இந்தப் பதிவின் கடைசி வரி வரை வாசித்த மனங்களுக்கு என் நன்றி. மேற்கத்திய இசை என்னும் முடிவில்லாத சாலையில் நான் என் எழுத்தின் மூலம் பயணம் செய்வதை ஆழமாக நேசித்தாலும், தற்காலிகமாக தங்குவதற்கு ஒரு மரத்தின் கீழ் இங்கேயே இன்று  நின்று கொள்கிறேன். இந்த மரமும் கூட இசையின் இன்னொரு வடிவமாகவே எனக்குத் தோன்றுகிறது.
 
                                  Music Music everywhere
                                   Till one last soul to care



அடுத்து: இசை விரும்பிகள் XIX--  எழுபதுகளின் ஏகாந்தக் காற்று.











25 comments:

  1. காரிகன் சார்,

    உங்களின் இசை ஆர்வம் என்னை பொறாமை கொள்ளச் செய்கிறது. அதைவிட அதை விவரிக்கும் உங்கள் அழகு ஒரு உங்கள் எழுத்துக்கு ஒரு ஆபரணம். நானும் சில ஆங்கில பாடல்களைக் கேட்டிருக்கிறேன். பாப் மார்லி என்று ஒருவரின் பபாலோ சோல்ஜர் எனக்குப் பிடித்த பாடல். பிறகு எவரிதிங் ஐ டூ ஐ டூ இட் பார் யு, ரைட் ஹியர் வெயிட்டிங் போன்ற பாடல்கள் அடிக்கடி கேட்பேன். மிக நன்றான பதிவு.

    ReplyDelete
  2. வணக்கம் காரிகன் !

    உங்களின் புதிய பதிவு பெருமகிழ்ச்சி அளித்தாலும் விரிவான பின்னூட்டம் சற்று தாமதமாத்தான் கொடுப்பேன் ! காரணம் உஙள் பதிவை நுனிப்புல் மேய முடியாது ! ரசித்து, உள்வாங்கி படிக்க வேண்டிய பதிவு !!

    நிற்க,

    சுழற்சி முறை பதிவு ஒன்றில் உங்கள் பெயரையும் சேர்த்துள்ளேன்... என் வலைப்பூ பக்கம் வாருங்களேன்... ! அப்படியே... எனது முதல் கதைக்கு உங்கள் கருத்து அல்லது குட்டும் தேவை !!!

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
  3. இசை பற்றி....அது கர்நாடக இசையோ, திரைப்படத்தில் வரும் மெல்லிசையோ, இந்திப்பாடல்களின் ஹிந்துஸ்தானி இசை நேர்த்தியாகக் கலக்கப்பட்ட நல்லிசையோ, ஆங்கில இசையோ எதுவாக இருந்தாலும் ஒரு அளவுக்கு அறிந்து அதுபற்றிப் பேசுகிறீர்கள் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இத்தனை தூரம் ஆங்கில இசையில் மூழ்கிக் குளித்து, அனுபவங்களில் திளைத்து அந்த ஈர அனுவங்களின் ரசனையுடன்தான் எல்லா இசையையும் அணுகுகின்றவர் என்பதை அறிய ஆச்சரியமாயிருக்கிறது.
    ஆகவே நீங்கள் இசைபற்றிப் பேசும் ஒவ்வொரு வரியும் முக்கியமானவை என்கின்ற புரிதலுடன்தான் உங்கள் கருத்துக்களை இனிமேல் பார்க்க வேண்டும் என்ற செய்தியும் இதனுடன் சேர்ந்தே இணைக்கப்பட்டிருப்பதாகவே நினைக்கிறேன்.

    ஆங்கில இசையின் அனுபவங்களையும் அதன் மதிப்பீடுகளையும் குறிப்பிடும்போது அந்த இசையைக் கேட்ட முதல்நாளின் அனுபவத்தையும் சேர்த்தே சொல்லும்போது கல்லூரி வாழ்க்கை, சகோதரரின் ஆதரவு, சகோதரியின் ஒப்புதல், திருச்சியின் கடைத்தெருக்கள், சிங்காரத்தோப்பு வீதி, ஹாஸ்டல் அனுபவங்கள், உரிச்ச கோழிபோல் இருந்த வட இந்தியப் பையன் என்று எல்லாமே கலந்துகட்டி வரும் அனுபவங்கள் அந்தப் பாடல்களை நீங்கள் கேட்ட வருடங்களைச் சொல்லிவருவதுடன், அந்த ரசனையான நாட்களுக்குக் கட்டியம் கூறும் செய்திகளாகத் தெரிவது மட்டுமின்றி படிப்பவர்களுக்கு இன்னொரு செய்தியையும் சந்தேகமற உணர்த்திவிடுகிறது. அதுதான் 'இவர் வெறும் இணையத்தை வைத்துக்கொண்டு அதைப் பார்த்துக் கதை பண்ணும் கோஷ்டி அல்ல' என்கின்ற கம்பீரமான உண்மை.

    பாடல்கள் என்றாலேயே ஒரு குறிப்பிட்ட காலத்தில் வந்த ஒருவருடைய பாடல்கள்தாம் என்று நினைத்துப் பினாத்திக் கொண்டிருக்கும் இணையப் பயனாளிகள் மத்தியில், அந்தப் பாடல்களுக்கு முன் வந்த பாடல்கள், பின்னால் வந்த பாடல்கள், அண்டை மாநிலத்துப் பாடல்கள் என்று மட்டுமல்ல, சர்வ தேசத்திலும் உயிர்ப்புடன் விளங்கும் பாடல்கள் என்னென்ன விதங்களில், எத்தனை வித்தியாசங்களுடன், எத்தனைப் புதுமைகளுடன் வெளிவந்து கொண்டாடப்படும் பாடல்கள் என்று பலதரப்பட்ட பாடல்களையும் கேட்டு முக்குளித்து வந்திருக்கும் நீங்கள் அதனை அழகுபடச் சொல்லியிருக்கும் முறை பாராட்டுக்களுக்குரியது.

    என்னவோ போங்கள்............இந்தக் கட்டுரை மூலம் இணையத்தில் இரண்டு விஷயங்கள் நடைபெறும் என்று தோன்றுகிறது.
    1) நிறையப்பேர் இந்தக் கட்டுரையைப் படித்ததாகவே காட்டிக்கொள்ள மாட்டார்கள்.
    2) அப்படிப் படித்தவர்கள் கொஞ்சம் பயத்துடனேயே உங்களை இனிமேல் அணுகுவார்கள்.

    அருமையான சொல்லாட்சியுடன்கூடிய நல்ல படப்பிடிப்பு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. அமுதவன் சார்,

    காரிகன் வலைதளத்திலிருந்து உங்களை தொடர்பு கொள்வதற்கு மன்னிக்கவும். உங்கள் வளைப்பூவினுள் நுழைய முடியவில்லை. Refresh ஆகிகொண்டே இருக்கிறது !

    ஒரு சுழற்சி முறை பதிவில் உங்கள் பெயரை இணைத்துள்ளேன்... மேலும் எனது முதல் சிறுகதை உங்கள் கருத்துக்காக காத்திருக்கிறது!

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
  5. வாருங்கள் சேது,

    உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    இசையே ஒரு அழகு. இதில் நான் புதிதாக என்ன செய்துவிட முடியும்? சில ஆங்கிலப் பாடல்களைக் குறிப்பிடுள்ளீர்கள். அவை எல்லாமே நல்ல பாடல்கள்தான். ரிச்சர்ட் மார்க்ஸ் ஸின் ஹசார்ட் என்ற பாடல் கூட மிக அருமையானது.

    ReplyDelete
  6. சாம்,
    நீங்கள்தான் என் பதிவை தமிழ் வெளியில் இணைத்திருப்பீர்கள் என்று நினைத்தேன். முதலில் அதற்கு நன்றி.

    இப்படி இரண்டு வரிகளோடு உங்கள் கருத்தை நிறுத்திக்கொண்டால் எப்படி? நீங்களும் சில மனதை மயக்கிய பாடல்களை குறிப்பிடவேண்டாமா? மீண்டும் வருக.

    உங்கள் தளத்திற்கு சென்றேன். காமெண்ட் இனிதான் எழுதவேண்டும்.

    ReplyDelete
  7. அமுதவன் அவர்களே,

    உங்களுக்காக ஒரு நீண்ட பதிலை எழுத உத்தேசித்திருக்கிறேன்.

    ReplyDelete
  8. அமுதவன் அவர்களே,

    மிகவும் நுண்ணிய பார்வையோடு என் பதிவை படித்திருப்பதாக எனக்குப் படுகிறது. இல்லாவிட்டால் இதுபோல ஆழமான பின்னூட்டம் சாத்தியமில்லை. நன்றி.

    நானொன்றும் இசை விமர்சகனல்ல. கொஞ்சம் இசை அறிவு, ஏகப்பட்ட இசை ரசனை இதுவே என் எழுத்தின் பின்னணியில் இருக்கும் உந்து சக்திகள். அவ்வளவே. இசையை சில கை தேர்ந்த விமர்சகர்கள் அணுகுவதைப் போன்ற நேர்த்தி என்னிடம் இல்லை என்றே எண்ணுகிறேன். ஆனாலும் என் ரசனை எவ்விதத்திலும் எவருக்கும் குறைந்ததில்லை என்று மட்டும் உறுதியாகச் சொல்வேன்.

    நீங்களும் திருச்சியை சேர்ந்தவர் என்பதால் உங்களுக்கு ஒரு deja vu உணர்ச்சியை என் எழுத்து ஏற்படுத்தி இருக்கலாம். நான் மிகவும் நேசிக்கும் நகர் திருச்சி. கசெட் கடைகள் காணாமல் போய்விட்ட இன்றைய wifi யுகத்தில் ஒரு நாள் திருச்சி சென்று நாள் முழுவதும் நான் நடந்து சென்ற வழக்கமான சாலைகளில் பழைய நினைவுகளை மட்டும் என்னுடன் வைத்துக்கொண்டு அலைந்திருக்கிறேன்.சில அபத்தமான செயல்கள்தான் எத்தனை இன்பத்தை தருகின்றன!

    ஆங்கில இசை பற்றிய என் பதிவு என் அனுபவங்களின் தொகுப்பாக இருப்பதால் patch patch சாக சற்று தொடர்பின்றி இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஆனால் அப்படி எழுதுவதையே நான் விரும்புகிறேன்.

    "அதுதான் 'இவர் வெறும் இணையத்தை வைத்துக்கொண்டு அதைப் பார்த்துக் கதை பண்ணும் கோஷ்டி அல்ல' என்கின்ற கம்பீரமான உண்மை."

    என்னுள் என் ஆன்மாவினுள் விழுந்த இசையை மீண்டும் நோக்கிப் பார்த்து அதை தேடி எடுப்பதில் எனக்கு கிடைக்கும் ஆனந்தம் அளவில்லாதது. வெறுமனே இணையத்தை வைத்துகொண்டு எழுதும் எழுத்துக்களில் உயிர் இருக்குமா என்று தெரியவில்லை.

    பாடல் என்றால் இவர்தான் என்ற கிணற்றுத் தவளை மனோபாவம் உண்மையில் நம்மை பல மேன்மையான இசை அனுபவங்களைப் பெறுவதிலிருந்து வெகு தூரம் தள்ளி நிறுத்தி விடுகிறது. அது ஒரு மோசமான புரையோடிய சிக்கலான சீர்கெட்ட ரசனை. வானொலியில் எதோ ஒரு அரேபிய பாடலைக் கேட்டது, இந்தியாவின் எதோ ஓர் மூலையில் நான் கேட்ட அந்த அஸ்ஸாமியப் பாடல், என் நண்பர் ஒருவரின் வீட்டில் கேட்ட ஸ்பானிஷ், பிரெஞ்ச் பாடல்கள் எல்லாமே எல்லைகளில்லாத இசையின் பரிமாணத்தை எனக்கு உணர்த்திய தருணங்கள்.

    என்னை இத்தனை எழுத வைத்த உங்களின் பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  9. பதிவுக்கு பதிவு உங்கள் எழுத்தின் வசீகரம் நல்ல இசையை போலவே இதமான தென்றலாய் வழிகிறது காரிகன் !

    " Midas Touch என்று அழைக்கப்படும் இசையின் தங்கத் தொடுகை நாம் அதற்கு தயாராக இல்லாத ஒரு இருண்ட வினாடியில் சட்டென நிகழும் ஒரு அதிசய விபத்து... "

    உண்மை ! விழிப்பு இன்னும் உணர்வில் இருக்க... சட்டென தழுவும் நித்திரையை போல ! அப்படி தழுவுவது மட்டும்தான் இசையாக முடியும் ! மற்றவைக்கு பெயர்... வெறும் சப்தங்களே !

    " இந்த இரண்டு பாடல்களைக் கேட்கும் சமயங்களில் ஒரு bitter sweet உணர்வு என்னில் மேலோங்குவதை நான் மிக மவுனமாக ரசிப்பதுண்டு. சோகம்தான் இருந்தும் தாலாட்டும் சோகம் என்று சொல்லலாம் "

    உண்மை காரிகன் ! தாலாட்டும் சோகமும் உண்டு !! அனுபவித்துகொண்டும் இருக்கிறேன் !!

    Men at workன் Everything i need எனது All time favaorite !

    அவர்களின் It's a mistake எனக்கு மிகவும் பிடிக்கும் ! Queenன் I want to break free பாணியில் அமைந்த பாடல்.

    https://www.youtube.com/watch?v=I0AxrOUJ62E

    " போனி எம் ரசிகனான நான் என்னையறியாத வகையில் அடுத்த கட்டத்துக்குச் சென்றது எனக்கு அப்போது தெரியவில்லை "

    வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நம்மையும் அறியாமல் நம்முள் நிகழும் Metamorphosis தானே நம்மை பன்படுத்துகிறது !

    Lionel Richie, Night shiftன் ஆரம்ப இசையே அலாதியானது ! Say you say me, பாடலின் ஆரம்பத்திலேயே கேட்பவரை ஒரு ஏகாந்த சுழலுக்குள் இழுத்துவிடும் அலாதியான கானம் !
    a-ha - Take On Me பாடலை பற்றி முந்தைய பதிவின் பின்னூட்டத்திலேயே குறிப்பிட்டிருந்தேன். அந்த பின்னூட்டத்திலேயே அதன் வீடியோ புதுமையை கூறிப்பிட நினைத்தேன்...ஆனால் நீளம் கருதி விட்டுவிட்டேன் ! ஆமாம், அந்த காலகட்டத்தின் மிக புதுமையான, அருமையான முயற்சி அது ( நம்மவர்கள் பாடல் காட்சிகளில் நடிகையின் நாபிச்சுழியை எப்படி புதுமையாக காட்டுவது என்ற யோசனையிலிருந்தே இன்னும் மீளவில்லையே ! )

    என் பின்னூட்டம் தொடரும் !

    ( தங்களின் வலைப்பூவின் சுட்டியை என் வலைப்பூவில் இணைத்துள்ளேன் காரிகன் )

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
  10. Wow Kaarigan,
    I'm left speechless. I can't possibly express all my views on your post right now. Men At Work, The Cars (you told me about it), Depeche Mode, Survivor and the greatest music band of all time (in my view) Pink Floyd.. they are not just band names as someone with a wiki fed knowledge can refer to. It's so obvious you really fell into their magic music so deep that your words are very true to what they convey.. Yours is rightly an experience- laced review as Mr. Amudhavan had said earlier. So it feels so great to read. In short, your post is outstanding. Keep going Kaarigan.

    ReplyDelete
  11. Mr.Oliver,
    Thanks for the comment. Your words speak a lot more than what they say. It's not over yet. The post was getting too long to continue. There's more to come about Floyd in my another post. And there are some exceptional bands that I should give my thanks to for my musical sojourn. To write about what I love the most thrills me. Come again.

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் காரிகன்,
    என்ன ஒரு நேர்த்தியான கட்டுரை ஆங்கில இசையைப் பற்றி. எனக்கு அவ்வளவாக பரிச்சயமில்லாத இசையாக இருந்தாலும் நன்றாக எழுதப்பட்டிருக்கும் விதத்தில் என்னைக் கவர்ந்தது. ஐ ஜஸ்ட் கால்ட் டு சே ஐ லவ் யு என்று ஒரு பாடல் நான் கேட்டது உண்டு. நன்றாக இருக்கும்.

    நீங்கள் கூறி இருக்கும் சில சம்பவங்கள் அருமை. அந்த உறிச்ச கோழி சம்பவம், ஸ்ரீதர் குதித்து எழுந்து உங்களை வசை பாடிய சம்பவம் போன்றவை சுவாரஸ்யமாக இருந்தன.

    "ஆனால் என் விருப்பங்கள், ரசனைகள் எனக்கு வேண்டிய கவர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஒரு அழகிய பெண்ணிடம் தேடவிடாது கசெட் கடைகளுக்குள் விரட்டியபடியே இருந்தன."

    அடப்பாவி என்று தோன்றியது. நான் வேறு ஒன்றை விரட்டியிருப்பேன். ஹி ஹீ ஹீ

    ReplyDelete
  13. உங்களின் நீண்ட பதிவை ரசித்துப் படித்தேன்- ஆங்கில இசையின் பால் அதிக நாட்டம் இல்லாவிட்டாலும்.
    இசை ஒன்றே உலகத்தை இணைக்கிறது என்ற கருத்துடன் உடன்படுகிறேன். மொழி, எல்லைகளைத் தாண்டி இசை மட்டுமே இன்று நம்மை வசியப்படுத்தி வைத்திருக்கிறது.

    நான் திருச்சியைச் சேர்ந்தவன் என்பதால் பதிவில் நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களை என் நெஞ்சத்தில் வைத்து அசைபோட்டுப் பார்த்தேன். என்ன ஒரு சுகமான வார்த்தைகளின் தாலாட்டு! ஆங்கில இசையோ நம் இசையோ கேட்டதும் மயக்கத்தில் ஆழ்த்தும் எந்த இசையுமே நல்ல இசைதான். இதை உங்களின் பால்ய நினைவுகள் பொங்க சொல்லியிருக்கும் விதம் நன்று .பாடலைக் கேட்ட நேரத்தில் நீங்கள் உணர்ந்ததை படிப்பவர்கள் உணரக்கூடிய எழுத்தாக உங்கள் எழுத்து இருக்கிறது. பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

    ஒரு தரமான கவிதைப் புத்தகம் வாசித்த திருப்தி அடைந்தேன். நன்றி.

    ReplyDelete
  14. I cherish your writing. But Bee Gees should have been given a little more push up. I don't think they are that bad..

    Jason

    ReplyDelete
  15. வாருங்கள் பரத்,

    பாராட்டுக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்டுள்ள I Just Called To Say I Love You என்ற பாடல் அமெரிக்க கறுப்பின மற்றும் பார்வையிழந்த இசைஞர் Stevie Wonder என்பவரின் அற்புதமான பாடல். பார்ட் டைம் லவர் என்றொரு இவரது இன்னொரு பாடலும் கேட்க மிக மிக இனிமையானது.

    நம் வாழ்கையில் சுவாரஸ்யமான விஷயங்களுக்கா பஞ்சம்? எல்லோரிடமும் இது போன்ற வேடிக்கை நிகழ்வுகள் நிறைய இருக்கின்றன.

    ReplyDelete
  16. வாருங்கள் காசிராஜ்,

    இசை பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி. இசை மட்டுமே காற்றைப் போல எல்லா இடங்களிலும் பரவிச் சென்று கேட்பவர்களை பரவசப்படுத்தக்கூடியது.

    ஒரு தரமான கவிதைப் புத்தகம் வாசித்த திருப்தி என்ற உங்கள் கருத்து நீங்கள் கவிஞராக இருக்கலாம் என்று எண்ண வைக்கிறது. கவிதையையும் இசையையும் ஒன்றாக வைத்துப் பார்க்கும் உங்கள் பார்வைக்கு என் நன்றி.

    ReplyDelete
  17. " ...ஆனால் அஹாவின் இசை வண்ணத்தில் இப்பாடல் ஒரு அழ வைக்கும் தாலாட்டு போலவும் மாலை நேரத்து வானவில் போலவும் அபாரமாக உருமாறிவிடுகிறது... "

    அந்த பாடலை போலவே அற்புத வரிகள் !

    " பை பணத்துக்கு "

    ஹா.. ஹா ( சட்டைப்பை பணத்துக்கு என்றிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும் ?! )

    Bee Gees பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது என்றால் அது Stayin ' Alive தான் ! என் பதினென்பருவத்தை, கோடைக்கால பாரீஸ் மாநகரின் மயக்கும் மாலை பொழுதுகளை கழித்த டிஸ்கோதே பார்களின் நினைவு ஸ்வரங்களை மனவெளியில் இந்த பாடல் மீட்டுவதும் ஒரு காரணம் !

    How deep is your love பாடலும் கேட்க கூடியதுதான் !

    Survivor - Eye of the tiger நான் பலமுறை கேட்ட பாடல்தான் என்றாலும் அந்த பாடலை பற்றிய உங்களின் வர்ணனைக்கு பிறகு கேட்டபோது ஒரு புது பரிமாணத்தை உணர்கிறேன் !

    " ...விருந்துக்கு முன் அப்பளத்தை கடித்துக்கொள்வதைப் போல "

    மிக அருமையான உதாரணம் காரிகன் ! Do you really want to hurt me பாடல் எனக்கு பிடித்தமான ஒன்று !

    " ஆங்கில ராக் இசை கடுமையான கோபங்களின் வெளிப்பாடு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்... "

    ஆமாம் ! சரியான உதாரணம் அல்ல என்றாலும் நமது கானாவை போல !! மேலைநாட்டின் கீழ்தட்டு மக்களின், விளிம்புநிலை மனிதர்களின் கோப வெளிப்பாட்டு இசையே ராக் எனலாம் ! அதன் அடுத்த பரிமாணம் இன்னும் மோசமான கோப வெளிப்பாடு... ராப் !

    Gazebo நான் கேட்டது கிடையாது ! I like chopin இந்த பதிவின் மூலம் கேட்டபோது... மழை ஓய்ந்த மாலை நேரத்தில், ஈரப்புல்வெளியில் தனிமையில் நடக்கும் சுகம் ! Victims in paradise சட்டென பிடித்துவிட்டது ! Mark Knopfler, Pink Floyd, என அடுத்தடுத்து நீங்கள் சிலாகிக்கும் எல்லாவற்றையும் சொன்னால் பின்னூட்டமே ஒரு பதிவாகிவிடகூடிய அபாயம் இருக்கிறது !

    காரிகன்,

    தமிழ் திரையிசை தொடங்கி மேற்கத்திய இசை வரை அலசும் தளங்கள் எத்தனையோ இருக்கின்றனதான் ! ஆனால் உங்களின் பதிவுகளில் மட்டுமே அந்தந்த‌ இசை இசையாகவே வழிகிறது ! இதற்கு காரணமாக நான் கருதுவது... நீங்கள் பதிவுக்காக இசையை கேட்கவில்லை, இசை பற்றிய உங்களின் ஆழமான காதலே பதிவுகளாக அமைகின்றன !

    "...முகமில்லாத என் இசைக் காதலியின் வசீகரம் என்னை சிறை பிடித்திருந்தது. "

    உங்கள் வார்த்தைகளிலேயே அதை மிக கவித்துவமாக சொல்லிவிட்டீர்கள் !

    கொஞ்சம் பாமரத்தனமான, கொச்சை தமிழிலில் சொல்லவேண்டுமானால்... " நீங்கள் கூலிக்கு மாரடிப்பவரல்ல ! "

    மேற்கத்திய இசையின் அத்தனை கூறுகளையும், பாடகர்களின் குரல் தொடங்கி, வாத்தியங்கள், தொழில்நுட்பம், குழுக்களின் வரலாறு என இத்தனை சங்கதிகளையும் அட்சரம் பிசகாமல் ஆலாபனை செய்ய சங்கீதம் தெரிந்திருதால் மட்டும் போதாது... சங்கீதத்தை சுவாசமாய் சேர்த்துகொண்டவரால்தான் முடியும் !

    உங்களின் பதிவுகள் இசை பற்றிய தக‌வல்கள் என்பதையும் தாண்டி நாம் கடந்து வந்த ஒரு சுவாரஸ்யமான காலகட்டத்தின் நினைவு மீட்சியாக அமைந்துவிடுகிறது !

    திருச்சி சிங்காரதோப்பு வீதிகளில் தொடங்கி, ரிக்கார்டிங் செண்ட்டர்கள், மேல்தட்டு வர்க்கத்துப் பிரதிநிதிகள், பணத்தில் கொழுத்துப் போன ஒரு ஜூனியர், ஐந்து ரூபாய்க்கு வாங்கிய மண் பானை, உரித்த கோழி, குன்னூர் கோஷ்டி என மறக்க முடியாத மனிதர்களும் அழிக்க முடியாத நினைவுகளையும் கொண்ட, நீங்கள் கடந்து வந்த பாதைகளை நாங்களும் கட‌ந்திருக்கிறோமே !

    இசை என்னும் விண்வெளிக்கு ஏழு ஸ்வரங்கள் மட்டுமே எல்லை ! நாம் தான் நமக்கு தெரிந்ததை மட்டுமே நல்ல இசையாக பாவித்து கொண்டு எல்லைகளற்ற விண்வெளியிலும் வட்டங்கள் வரைந்துகொண்டு, அவற்றிலிருந்து வெளிவர மறுக்கிறோம் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
  18. " ...ஆனால் அஹாவின் இசை வண்ணத்தில் இப்பாடல் ஒரு அழ வைக்கும் தாலாட்டு போலவும் மாலை நேரத்து வானவில் போலவும் அபாரமாக உருமாறிவிடுகிறது... "

    அந்த பாடலை போலவே அற்புத வரிகள் !

    " பை பணத்துக்கு "

    ஹா.. ஹா ( சட்டைப்பை பணத்துக்கு என்றிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும் ?! )

    Bee Gees பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது என்றால் அது Stayin ' Alive தான் ! என் பதினென்பருவத்தை, கோடைக்கால பாரீஸ் மாநகரின் மயக்கும் மாலை பொழுதுகளை கழித்த டிஸ்கோதே பார்களின் நினைவு ஸ்வரங்களை மனவெளியில் இந்த பாடல் மீட்டுவதும் ஒரு காரணம் !

    How deep is your love பாடலும் கேட்க கூடியதுதான் !

    Survivor - Eye of the tiger நான் பலமுறை கேட்ட பாடல்தான் என்றாலும் அந்த பாடலை பற்றிய உங்களின் வர்ணனைக்கு பிறகு கேட்டபோது ஒரு புது பரிமாணத்தை உணர்கிறேன் !

    " ...விருந்துக்கு முன் அப்பளத்தை கடித்துக்கொள்வதைப் போல "

    மிக அருமையான உதாரணம் காரிகன் ! Do you really want to hurt me பாடல் எனக்கு பிடித்தமான ஒன்று !

    " ஆங்கில ராக் இசை கடுமையான கோபங்களின் வெளிப்பாடு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்... "

    ஆமாம் ! சரியான உதாரணம் அல்ல என்றாலும் நமது கானாவை போல !! மேலைநாட்டின் கீழ்தட்டு மக்களின், விளிம்புநிலை மனிதர்களின் கோப வெளிப்பாட்டு இசையே ராக் எனலாம் ! அதன் அடுத்த பரிமாணம் இன்னும் மோசமான கோப வெளிப்பாடு... ராப் !

    Gazebo நான் கேட்டது கிடையாது ! I like chopin இந்த பதிவின் மூலம் கேட்டபோது... மழை ஓய்ந்த மாலை நேரத்தில், ஈரப்புல்வெளியில் தனிமையில் நடக்கும் சுகம் ! Victims in paradise சட்டென பிடித்துவிட்டது ! Mark Knopfler, Pink Floyd, என அடுத்தடுத்து நீங்கள் சிலாகிக்கும் எல்லாவற்றையும் சொன்னால் பின்னூட்டமே ஒரு பதிவாகிவிடகூடிய அபாயம் இருக்கிறது !

    காரிகன்,

    தமிழ் திரையிசை தொடங்கி மேற்கத்திய இசை வரை அலசும் தளங்கள் எத்தனையோ இருக்கின்றனதான் ! ஆனால் உங்களின் பதிவுகளில் மட்டுமே அந்தந்த‌ இசை இசையாகவே வழிகிறது ! இதற்கு காரணமாக நான் கருதுவது... நீங்கள் பதிவுக்காக இசையை கேட்கவில்லை, இசை பற்றிய உங்களின் ஆழமான காதலே பதிவுகளாக அமைகின்றன !

    "...முகமில்லாத என் இசைக் காதலியின் வசீகரம் என்னை சிறை பிடித்திருந்தது. "

    உங்கள் வார்த்தைகளிலேயே அதை மிக கவித்துவமாக சொல்லிவிட்டீர்கள் !

    கொஞ்சம் பாமரத்தனமான, கொச்சை தமிழிலில் சொல்லவேண்டுமானால்... " நீங்கள் கூலிக்கு மாரடிப்பவரல்ல ! "

    மேற்கத்திய இசையின் அத்தனை கூறுகளையும், பாடகர்களின் குரல் தொடங்கி, வாத்தியங்கள், தொழில்நுட்பம், குழுக்களின் வரலாறு என இத்தனை சங்கதிகளையும் அட்சரம் பிசகாமல் ஆலாபனை செய்ய சங்கீதம் தெரிந்திருதால் மட்டும் போதாது... சங்கீதத்தை சுவாசமாய் சேர்த்துகொண்டவரால்தான் முடியும் !

    உங்களின் பதிவுகள் இசை பற்றிய தக‌வல்கள் என்பதையும் தாண்டி நாம் கடந்து வந்த ஒரு சுவாரஸ்யமான காலகட்டத்தின் நினைவு மீட்சியாக அமைந்துவிடுகிறது !

    திருச்சி சிங்காரதோப்பு வீதிகளில் தொடங்கி, ரிக்கார்டிங் செண்ட்டர்கள், மேல்தட்டு வர்க்கத்துப் பிரதிநிதிகள், பணத்தில் கொழுத்துப் போன ஒரு ஜூனியர், ஐந்து ரூபாய்க்கு வாங்கிய மண் பானை, உரித்த கோழி, குன்னூர் கோஷ்டி என மறக்க முடியாத மனிதர்களும் அழிக்க முடியாத நினைவுகளையும் கொண்ட, நீங்கள் கடந்து வந்த பாதைகளை நாங்களும் கட‌ந்திருக்கிறோமே !

    இசை என்னும் விண்வெளிக்கு ஏழு ஸ்வரங்கள் மட்டுமே எல்லை ! நாம் தான் நமக்கு தெரிந்ததை மட்டுமே நல்ல இசையாக பாவித்து கொண்டு எல்லைகளற்ற விண்வெளியிலும் வட்டங்கள் வரைந்துகொண்டு, அவற்றிலிருந்து வெளிவர மறுக்கிறோம் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
  19. Welcome Mr. Jason,
    Thanks for the comment. Bee Gees is a very tiresome band like Status Quo, Rolling Stones and The Beatles (in my view. ) They have some.. maybe very few listenable numbers under their belt. That's all..

    ReplyDelete
  20. சாம்,

    உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்காக சற்று காத்திருந்தேன். திரு அமுதவன், வவ்வால் போன்றவர்களது போலவே உங்களது பின்னூட்டமும் சிறப்பாக இருக்கிறது. இத்தனை ஆழமான சிந்தனையுடன் அழகாக எழுதும் உங்கள் பாணி அருமை. வாழ்த்துக்கள். நீங்கள் வெறுமனே எதையோ எழுதவேண்டும் என்ற நோக்கில் எழுதும் ஆசாமி இல்லை.

    சட்டென பை பணம் என்று எழுதத் தோணிற்று. சட்டைப் பை பணம் என்று யோசிக்க ஒரு சாம் வேண்டுமே?

    நீங்கள் ஒருவிதத்தில் யோகக்காரர் தான் போங்கள். பாரிஸ் நகர வீதிகளில் ஒரு டீனேஜ் பையனாக சுற்றித் திரிந்த அனுபவம் உங்களுக்கு உண்டு. நானோ என் வீட்டின் ரேடியோ அறையையே அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ் என்று நினைத்துக்கொள்வதுண்டு. சுகமான கற்பனை.

    பீஜீஸ் பற்றி மேலே உள்ள ஜேசன் என்பவருக்கு பதில் சொல்லிவிட்டேன். அதில் பீட்டில்ஸ் குழுவைப் பற்றியும் சிலருக்கு பிடிக்காத வகையில் ஒரு விமர்சனம் இருக்கிறது. பீட்டில் மேனியா என்று இப்போது பரவலாக சொல்லப்படும் ஒரு சங்கதியே ஆங்கிலப் பத்திரிக்கைகளால் வலிந்து உருவாக்கப்பட்ட ஒரு பொய் என்ற கருத்து உண்டு.

    சர்வைவரின் ஐ ஆப் தி டைகர் ஒரு அதிரடிதான். (தமிழில் கூட வந்தது.) Poor Man's Son என்று ஒரு பாடல் அவர்களிடம் உண்டு. தயவுசெய்து கேளுங்கள். பிறகு I'm The One That Really Matters, Backstreet Love Affair, Oceans, It's The Singer Not The Song போன்ற பாடல்கள் நமக்குள் மின்சாரம் பாய்ச்சும். அத்தனை அபாரம்.

    Gazebo பற்றி அந்த ஈரப் புல்வெளி உவமை உங்கள் கற்பனை வளத்தை காட்டுகிறது. ஆஹா அருமை என்று வியந்தேன். இரண்டு வகையான எழுத்தாளர்கள் இருப்பதாக சொல்லப்படுவதுண்டு. Some write to impress and some write to express. நான் இரண்டாம் வகையில் இருப்பதையே விரும்புகிறேன். மற்றபடி மேற்கத்திய இசையின் அனைத்துக் கூறுகளையும் அறிந்தவன் என்பதெல்லாம் கொஞ்சம் அதிகப்படியான பாராட்டு. நிறைய ஆங்கில இசைக் குழுக்களைக் கேட்டதால் சில தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம். Glass Tiger என்று ஒரு கனடா நாட்டைச் சேர்ந்த குழு இருக்கிறது. Someday என்றொரு பாடல் கேட்டால் உங்களை அற்புதமாக தாலாட்டும். கேட்டுப் பாருங்கள். இதன் தொடர்ச்சியாக வர இருக்கிற மற்றொரு பதிவில் இன்னும் சில talented குழுக்கள் பற்றி எழுத உள்ளேன்.

    திருச்சியைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதக்கூடிய ஆவல் தகவல்கள் எல்லாம் இருக்கின்றன. அதிலும் இசையும் சேர்ந்துகொண்டால் கொண்டாட்டம்தான். திருச்சி ஜோசெப் விடுதியில் நான் சந்தித்த நண்பர்கள் அந்த அனுபவங்கள், மெட்ராஸ் எம் சி சி நிகழ்வுகள் எல்லாமே என் நெஞ்சத்தில் அமிழ்ந்துவிட்ட நினைவுகள். இதுபோன்று எல்லோருக்கும் கண்டிப்பாக நிகழ்ந்திருக்கும்.

    "இசை என்னும் விண்வெளிக்கு ஏழு ஸ்வரங்கள் மட்டுமே எல்லை ! நாம் தான் நமக்கு தெரிந்ததை மட்டுமே நல்ல இசையாக பாவித்து கொண்டு எல்லைகளற்ற விண்வெளியிலும் வட்டங்கள் வரைந்துகொண்டு, அவற்றிலிருந்து வெளிவர மறுக்கிறோம் !"

    அபாரம். விண்வெளியில் வட்டங்கள் வரையும் அதிபுத்திசாலிகளும் இசைச் சூனியங்களும் சற்று தங்களின் அளப்பரைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

    வெகு விரைவில் உங்கள் தளத்தில் ஒரு புதிய பதிவு தோன்றும் என்று நம்புகிறேன். மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete
  21. https://www.youtube.com/watch?v=KhbtzwhYnAg
    https://www.youtube.com/watch?v=x2lR8XrfMEE

    Stereo And Fusion in late 60's by TK Ramamoorthy sir.

    ReplyDelete
  22. https://www.youtube.com/watch?v=qp1yaI6ygmI

    MSV Sir's 1969 Musical.

    ReplyDelete
  23. அட பாவி...(உரிமையோடு தான் கொண்டாடுகின்றேன்) உமது இப்பதிவை எனதென்று இன்று போட்டால் என் நண்பர்கள் ஒருவருக்கும் சந்தேகம் வராது. ஒவ்வொரு பாடலும் - குறிப்பும் தெரிந்தவை.
    இருந்தாலும், வந்து விட்டேன் அல்லவா? என்னால் முடிந்த சந்தனத்தை அரைத்து விட்டு போகிறேன்.
    "Beegees- Status Quo- Rolling Stone" மூன்றும் Tiresome? அய்யோ, இதை உம்மைபோல் அறிந்தோர் சொன்னால் எப்படி. ஒரு வேளை " I started a Joke" "Satisfaction" "Rocking all over the World" போன்ற பாடல்களை தாம் மீண்டும் மீண்டும் கேட்டு tiresome ஆகிவிடீர்களா என்று ஒரு கேள்வி வருகின்றது.
    நீங்கள் கூறியது போல் Eagles - The Long ரன் அவ்வளவு நன்றாக போகவில்லை. நண்பர்கள் அனைவருக்கும் Eagles- Hotel California பிடித்து இருந்தாலும் என்னை பொறுத்தவரை அவர்களின் "The Last Resort" தான் பெஸ்ட்.
    Dire Straits : என்னத்த சொல்வேன்? Mark Knopler பிடிக்காதவரும் உண்டா? சில மாதங்களுக்கு முன் அவரின் கச்சேரிக்கு போய், காசு போனாலும் போகட்டும் என்று சொல்லி கைக்கு எட்டும் தூரத்தில் அமர்ந்து 3 மணி நேரம் அவர் பாடல்களை அவர் பாடி வசிக்க ரசித்தேன். இப்போதும் இங்கே நானும் மற்ற சில நண்பர்களும் ஒன்றாக சேர்ந்தோம் என்றால் ஆளுக்கொரு கிடாரை தூக்கி கொண்டு இவரிடம் தான் தஞ்சம் புகுவோம்.
    தங்கள் மின் அஞ்சலை தாருங்கள், நாங்கள் பாடிய 'walk of Life' " மற்றும் "So far Away" என்ற பாடல்களை அனுப்பி வைக்கின்றேன். எவ்வளவு பாடல்கள் தான் இருந்தாலும் இவர்களின் "Telegraph Road" பாடலில் வரும் "then came the Churchs, then came the Schools, Then came the Lawyers, tthen Came the Rules" வரிகள் போல வருமா. வாரம் ஒருமுறை இதை கேட்காவிடில், அது வாரமே இல்லை.
    சரி, உமக்கு ஆங்கிலேய பாடகர்களான Eric Clapton, Sting, Phil Collins இவர்கள் எண்ண பாவம் பண்ணினார்கள். இவர்கள் பெயரையே காணோம்.
    Pink Floyd : ஒரு பானை சோறுக்கு ஒரு பதம். Brick in the Wall... சிறு வயதில் இருந்து மயங்கி விட்டதால் என்றாவது ஒரு நாள் இவர்கள் கச்சேரியை நேராக சென்று பார்க்க வேண்டும் என்ற அல்ப்ப ஆசை, ஒரு முறை அல்ல இரண்டு முறை நிறைவேறியது.
    Bob Marly - Santana என்னத்தை சொல்வது... ?
    பிறகு ஆப்ரோ அமெரிக்க பாடகர்கள்..
    Chuck Berry ல் ஆரம்பித்து MJ வரை. அடித்து கொள்ள முடியுமா? Victory Tour ல் MJ ஆடிய "Billie Jean" நினைவு இருக்கின்றதா? அதற்க்கு நிகராக யாராவது ஆட பாட முடியுமா?
    அடபோங்கையா...You have opened a new can of worms. இதை எழுதி மாளாது.
    நினைவிற்கு நன்றி.
    Chris Rea- Road to Hell..... I gotta stop.. We will talk some other time...
    கடைசியாக ஒன்றை சொல்லி முடித்து கொள்கிறேன். அந்த குன்னூர் பையன் "Crap" என்று அந்த டிஸ்கோ இசையை சொன்னது சரிதான். அவரிடம் இன்னும் தொடர்ந்து நடப்பு இருந்தால், எனக்காக ஒரு வாய் சர்க்கரை போட்டுக்க சொல்லுங்கள், சரியாதான் சொல்லி இருகின்றார்.
    அது சரி.. இவ்வளவு சொல்லிய நீர் .... The Blues Brothers படத்தை எப்படி மறந்தீர். அதைபார்த்து இராவிடில் ஒரு முறை பார்க்கவும்.

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. வாருங்கள் விசு,

    பிரமிப்பூட்டும் பின்னூட்டம். ஆனந்த அதிர்ச்சி.

    Status Quo வின் whatever you want ஒரு சிலிர்ப்பு என்பதை மறுக்கமுடியாது. பீஜீஸ் ரோலிங் ஸ்டோன்ஸ் போன்ற குழுக்களின் சில பாடல்கள் பரவாயில்லை.

    நான் இதற்கு முன் சுவர்களைத்தாண்டி என்ற பதிவில் இன்னும் சில இசைகுழுக்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். அதையும் படிக்க வேண்டுகிறேன். ஒருவேளை உங்களின் சில கேள்விகளுக்கு பதில் கிடைக்கலாம். ஸ்டிங் எரிக் க்ளாப்டன் பில் காலின்ஸ் பற்றி ஓரிரு குறிப்புகள் அதில் இருக்கின்றன. மேலும் இரண்டு பதிவுகளில் ஆங்கில இசையின் மகத்துவத்தை முழுமையாக கொண்டுவந்துவிட முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? தமிழிசையைப் பற்றிய தற்போதைய பதிவுகள் முடிந்ததும் மீண்டும் ஆங்கில இசை பற்றிய பதிவுகள் உயிர் பெறும்- இன்னும் பல அபூர்வமான இசை யுகங்களைப் பற்றி.

    Dire Straits சின் Telegraph Road மிக நீண்ட பாடலாக இருந்தாலும் மெய்மறக்கச் செய்யும் கானம். நீங்கள் குறிப்பிட்ட அந்த வரிகள் எனக்குள்ளும் மின்சாரம் பாய்ச்சுவது ஒவ்வொருமுறையும் நடைபெறும் சங்கதிதான். அதன் பின் Mark Knopfler And then came the telegraph road என்று பாட அந்தப் பாடலின் உயிர்நாடியான கிடார் அப்போது துடித்து எழுவது ஆஹா... இசைதான் எத்தனை உன்னதம்! எனக்குப் பிடித்த ஒரு பாடலைக் குறிப்பிட்டதற்கு நன்றி நண்பரே.

    அந்த குன்னூர் பேசில் இப்போது எங்கிருக்கிறான் என்பது தெரியவில்லை. அவனை என்னால் மறக்கவே முடியாது. இதன் தொடர்ச்சியான பதிவில் அவனைப் பற்றிய இன்னும் சில தகவல்கள் எழுத இருக்கிறேன். (உங்கள் எழுத்தில் அந்த நபரை உங்களுக்குத் தெரியும் போல ஒரு தொனி தென்படுகிறது. ஒருவேளை இது எனது கற்பனையாக இருக்கலாம்.)

    Boys Don't Cry என்றொரு இசைக்குழு 86இல் I Wanna Be A Cowboy என்ற பாடலை வெளியிட்டது. கேட்டுப்பாருங்கள். அதகளம். The outfield குழுவின் For You பாடலும் புல்லெட் போல பாயும். எழுதினால் நிறுத்தாமல் போய்க்கொண்டே இருக்கும். பதிவுகளில் அவற்றை வைத்துக்கொள்ளலாம். மீண்டும் எனது நன்றி.

    ReplyDelete