சற்று கற்பனை செய்து பார்ப்போம் இவற்றை.
நிறமில்லா வானவில்,
மணமற்ற மலர்கள்,
ஒளியிழந்த விளக்கு,
தடைகளற்ற வெற்றி,
சுவையில்லாத விருந்து,
நினைவுகளில்லா வாழ்க்கை,
பறவைகள் துறந்த தோட்டம்,
மண் வாசனையில்லா மழை,
மனதைத் தொடாத மகிழ்ச்சி,
விரலைத் தீண்டாத நெருப்பு,
குதூகலமற்ற கேளிக்கை,
வசீகரமில்லாத ஓவியம்,
அலைகளற்ற கடல்,
ஈரமற்ற பிணைப்பு ,
கவிதையில்லா கானம்........
நிறமில்லா வானவில்,
மணமற்ற மலர்கள்,
ஒளியிழந்த விளக்கு,
தடைகளற்ற வெற்றி,
சுவையில்லாத விருந்து,
நினைவுகளில்லா வாழ்க்கை,
பறவைகள் துறந்த தோட்டம்,
மண் வாசனையில்லா மழை,
மனதைத் தொடாத மகிழ்ச்சி,
விரலைத் தீண்டாத நெருப்பு,
குதூகலமற்ற கேளிக்கை,
வசீகரமில்லாத ஓவியம்,
அலைகளற்ற கடல்,
ஈரமற்ற பிணைப்பு ,
கவிதையில்லா கானம்........
எண்பதுகள் : கவிதைக் காற்று
நண்பரின் நண்பரை சந்திக்கும் நிகழ்வு பல வேளைகளில் ஒரு அவஸ்தையான அனுபவத்திற்கு கிடைக்கும் இலவச டிக்கட். அதிலும் நாம் சந்திக்காத ஒருவரைப் பற்றிய பலத்த முன்னுரைகள் நம் மூளைக்குள் தகவல்களாக அனுப்பப்பட்டபின் அது ஏற்படுத்திவிடும் பிம்பம் ஏகத்துக்கு பிரம்மாண்டமாக மாறி, அந்த எதிர்பார்ப்பு சாத்தியப்படும் போது நாம் சந்திக்கும் நிஜம் சில சமயங்களில் எதோ சர்க்கஸ் கோமாளிக் கூத்து போல ஆகிவிடுகிறது. சமீபத்தில் எனக்கு இது நடந்தது.
தன் அபிமான நண்பரின் பொது அறிவு மற்றும் கணவான் குணத்தைப் பற்றி (ஜென்டில்மேன் என்பதன் தமிழ்ச்சொல்) என் தோழர் ஒருவர் அடிக்கடி superlative adjective சேர்த்து பல விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வார். ("பயங்கரமா தண்ணி அடிச்சா கூட மத்த யாரப் பத்தியும் புரளி பேசமாட்டார். ஏதாவது பொது அறிவு கேள்விதான் கேப்பார். அப்படி ஒரு ஜென்டில்மேன்") இரண்டு மூன்று முறைகள் மொபைல் போனில் அவருடன் பேசியிருக்கிறேன் கட்டாயத்தின் பேரில். இந்த முறை நேரமோ அல்லது வேறு எதுவோ எங்களை சந்திக்க வைத்து விட்டது. சமீபத்தில் என்னைப் பார்க்க வந்திருந்த எனது தோழர் என்னிடம், "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. (நண்பரின் பெயரைச் சொல்லி) அவர் வர்றதா சொல்லியிருக்கார்." என்றதும் கொஞ்சம் கலவரமாக உணர்ந்தேன். ஜுராசிக் பார்க் படத்தில் டி ரெக்ஸ் டைனோசர் அறிமுகமாகும் வரை மனதில் எகிறும் த்ரில் போன்று ஏகப்பட்ட பதை பதைப்புடன் நான் காத்திருந்தேன். சில நிமிடங்களுக்குப் பிறகு வந்தார் அந்த பொது அறிவுப் புயல்.
சற்றும் பொருத்தமில்லாத தோற்றம் --- அதாவது நான் கற்பனை செய்திருந்த தோற்றத்தை முற்றிலும் சேதப்படுத்தியது போல அவர் காட்சியளித்தார். அவரை ஏதோ மாதிரி கற்பனை செய்திருந்தது என் தவறுதான். வந்தவர் சம்பிரதாயமாக என் கைகளைக் குலுக்கிவிட்டு பரஸ்பர அறிமுகங்களுக்குப் பிறகு சடாரென்று தோழரின் பால்ய வயது கிரிக்கெட் சாகசங்களை எதோ அன்று காலைதான் நடந்தது போல விவரிக்க ஆரம்பித்துவிட்டார், (ஆறு பந்துலயும் ஆறு சிக்சர் அடிப்பான்யா இவன்.) நான் எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் இருக்க, நான் காது கொடுத்துக் கேட்க விரும்பாத கிரிக்கெட் தொடர்பான டெக்னிகல் வார்த்தைகள் சரமாரியாக விழுந்தன. கொஞ்சம் நெளிந்த என் தோழர், "இவருக்கு கிரிக்கெட் பிடிக்காது" என்றார் என்னைச் சுட்டிக்காட்டி. நான் அதை உடனே மறுத்து இப்படிச் சொன்னேன்: "சுத்தமா பிடிக்காது." வந்தவருக்கு பலத்த ஆச்சர்யம். "ஏன்? விளையாட்டு பிடிக்காதா உங்களுக்கு?" என்றார் பி எஸ் வீரப்பா பாணியில் சிரித்துக்கொண்டே. அவர் தோற்றத்திற்கு அந்த வகை சிரிப்பு கொஞ்சம் அதிகம்தான். அவர் சிரித்து முடிக்கும் வரை காத்திருந்தேன். அதன் பிறகு சொன்னேன்: "கிரிக்கெட்டை நான் விளையாட்டு என்று கருதுவதில்லை."
அடுத்து நான் எழுதப் போவது சற்று நீண்ட உரையாடல்கள் அடங்கியது. பொறுமை இருந்தால் படிக்கவும். அல்லது இதை நீங்கள் தாண்டிச் சென்றாலும் பாதகமில்லை.
"அப்படியா? அப்படியானால் இசை பற்றி பேசலாம்." என்று எனக்கு இனிய அதிர்ச்சி கொடுத்தார். நான் நிமிர்ந்து உட்கார, அடுத்து நான் எதிர்பாராத கேள்வியைக் கேட்டார்: "உங்களுக்கு இளையராஜா பிடிக்குமா?". உண்மையில் இந்த மாதிரியான சந்திப்புக்கு நான் தயாராக வந்திருக்கவில்லை. அதுவும் அன்றைக்கு இளையராஜா பற்றியெல்லாம் திடீரென ஒரு திடீர் மனிதருடன் விவாதிப்பேன் என்று சற்றும் கற்பனை செய்திருக்கவில்லை. அதுவும் அவர் கேட்ட தொனியிலிருந்து நாங்கள் பேசப்போவது குறித்து கவலை உண்டானது. சரிதான் இன்றைக்கு எதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்று உள்ளுக்குள் மணி அடித்தது. அதேசமயம் இவருடன் பேசினால் இன்னொரு பதிவுக்கான சில தகவல்கள் கிடைக்கும் என்ற எண்ணம் என்னைச் சூழ, "பிடிக்கும்." என்றேன். "அதாவது கொஞ்சம்."
நண்பர் உடனே கண்களை மூடிக்கொண்டு கைகளை வெட்டி வெட்டி கர்நாடக கச்சேரி ஆலாபனை போல உச்சஸ்தாயில் ம்ம்ம் ம்ம் என்று ஏற்ற இறக்கமாக பாடிவிட்டு , "நான் உனை நீங்க மாட்டேன். நீங்கினால் தூங்க மாட்டேன். இந்த பாட்டு பிடிக்குமா?" என்றார் தன் கழுத்தை வெட்டி தடாலடியாக. அவரது கை அப்போதும் மேலும் கீழும் சென்றபடியேதான் இருந்தது.
நான் சொன்ன பதில் அவருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கவேண்டும். நான் சொன்னது இதுதான்; "இதையெல்லாம் நான் ஒரு பாட்டாகவே எண்ணுவதில்லை." உண்மையில் தொன்னூறுகளில் வந்த முக்கால்வாசி இளையராஜா பாடல்கள் வெறும் சக்கைகள் என்ற எண்ணம் கொண்டிருப்பவன் நான். தொன்னூறுகள் என்றில்லை. எண்பதுகளின் மத்தியிலேயே அவர் இசை நீர்த்துப் போய்விட்டதாக எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அவர் ஒரு நான்கைந்து வருடங்கள் அதிகமாக நமது திரையிசையில் தங்கிவிட்டதாக எனக்குத் தோன்றுவதுண்டு.
"உங்களுக்கு ரஜினிகாந்தைப் பிடிக்காது. அதனால்தான்" என்றார் எதோ ஒரு கொலைக்கான ஆதாரத்தை கண்டுபிடித்த போலிஸ் அதிகாரி போல.
"நடிகர்களை முன்னிலைப் படுத்துவது எனக்கு விருப்பமில்லாத ஒன்று. இரண்டாவது ரஜினிகாந்தை எனக்கு எதற்காக பிடிக்கவேண்டும்?" என்று கேட்டேன். தொடர்ந்து," நீங்கள் சொன்னதே தவறு. முதலில் இது ரஜினிகாந்தின் பாடலே அல்ல. இதற்கு இசை அமைத்தது இளையராஜா. பாடியது எஸ் பி பாலசுப்ரமணியம். அவர்களை விட்டு விட்டு பாடலுக்கு வாயசைத்த நடிகரை சொன்னது சரியல்ல." என்றேன். சற்று நேர தீவிர யோசனைக்குப் பிறகு அவர் சட்டென்று தன் கைகளைத் தட்டி," நீங்கள் சொல்வது சரிதான்." என்றார் நாடக பாணியில். அதன் பின்னர், "இந்தப் பாடலை பிடிக்காது என்று என்னிடம் சொன்ன முதல் ஆள் நீங்கள்தான். இப்போது நான் இதை இங்கே (அது ஒரு ஹோட்டல்) பாடினால் எத்தனை பேர் கை தட்டுவார்கள் தெரியுமா?" என்றார். சொன்னவர் உடனே அதை செயல்படுத்தத் தயாராக தன் கைகளை உயர்த்த, நான் அந்த விபரீத கேளிக்கையை காண ஆர்வமில்லாததால், "நீங்கள் பாடாமலே அது எனக்குத் தெரிந்ததுதான்." என்றேன் அவசரமாக.
"உங்களுக்குப் பிடித்த இளையராஜா பாடல்கள் என்னென்ன?" என்றார் அவர். "சின்னப் புறா ஒன்று பாடல் கேட்டதுண்டா?" என்றேன். உடனே அவர் அந்தப் பாடலை பாட ஆரம்பித்து, " படத்தில் இந்தப் பாட்டுக்கு பியானோ வாசிப்பது யார் தெரியுமா?" என்றார் புதிர் போல. தெரியாது என்ற பதிலை எதிர்பார்த்திருந்திருப்பார் போலும். நான் "தெரியும். தேங்காய் சீனிவாசன்" என்றதும் தன் இருக்கையிலிருந்து எகிறிக் குதித்து ,"உங்களுக்கு நிறைய தெரிந்திருக்கிறது" என்று ஆர்ப்பரித்தார். எனக்கோ இது கேலிக்கூத்தாகத் தோன்றியது. இது ஒரு மிகச் சிறிய முக்கியமில்லாத தகவல். என் பள்ளிப் பருவத்து நிகழ்வுகளையும் அப்போது நான் அறிந்திருந்த சின்னச் சின்ன குறிப்புகளையும் கொண்டு என் புத்தியைப் பாராட்டுவது எனக்கு அவமானமாக இருந்தது. அவர் சந்திக்க வேண்டிய நபர்கள் நிறைய இருக்கிறார்கள் என்று மட்டும் நினைத்துக்கொண்டேன். அவரைச் சுற்றியிருக்கும் நண்பர்கள் குறித்து பரிதாபம் ஏற்பட்டது.
"இளைய நிலா பொழிகிறதே, இது ஒரு பொன் மாலைப் பொழுது, அந்தி மழை, பனி விழும் மலர் வனம் போன்ற பாடல்கள் எனக்கு இஷ்டமானவை. இளையராஜா விளையாடியிருப்பார்." என்றேன். "அதன் பின் அவருடைய எழுபதுகள் எனக்குப் பிடிக்கும். மற்றபடி நீங்கள் சொன்ன தளபதி படப் பாடல் இத்துடன் ஒப்பிட்டால் ஒன்றுமேயில்லை." என்றேன் முடிவாக.
எங்களின் உரையாடலுக்கிடையே அவர் மொசார்ட், பீத்தோவன் பெயர்களைக் குறிப்பிட்டு, ("உங்களுக்கு இவர்களைத் தெரியாது என்று நினைக்கிறேன் " என்ற பின்குறிப்புடன்.) தன் அபிமானவரைப் புகழ, நான் ,"அது பீத்தோவன் கிடையாது. பெய்ட்டோவன் என்று அவர் பெயரை உச்சரிக்க வேண்டும்." என்று திருத்தி, மேலும் பாக், விவால்டி,ஷாபின்,வேக்னர் போன்ற சில மேற்கத்திய செவ்வியல் இசைஞர்களை அவருக்கு சிபாரிசு செய்தேன், அவர் திடீரென வேறு பக்கம் தாவி, தமிழில் உங்களுக்குப் பிடித்த இசை அமைப்பாளர் யார் யார் என்று கேட்டார். எம் எஸ் விக்குப் பிறகு நான் சொன்ன பெயரை அவர் கேட்டேயிருக்கவில்லை. நான் சொன்னது; "வி.குமார்." "தெரியுமா?" என்ற என் கேள்விக்கு நியாயமாக "இல்லை. இப்போதுதான் வி.குமார் என்ற பெயரையே கேள்விப்படுகிறேன்." என்றார் பலத்த சிந்தனையுடன். "வி குமாரின் ஒரு பாடல் சொல்லுங்கள்" என்று தீவிரமாக என்னைப் பார்த்து வினவினார். "நிறையவே சொல்லலாம். ஆனால் உங்களுக்குத் தெரிந்ததான ஒன்று என்றால் காதோடுதான் நான் பாடுவேன் பாடல். எல் ஆர் ஈஸ்வரி பாடிய வெகு சிறப்பான பாடல்களில் ஒன்று அது." என்றேன். உடனே அவர் அதைப் பாடியபடி ,"நல்ல பாடல்தான்." என்றார்.
பிறகு "நானும் பழைய பாடல்கள் நிறைய கேட்பேன்." என்றவர் "கா கா கா பாடல் தெரியுமா?" என்றார். "பராசக்தி படத்தில் வரும் பாடல். அதற்கு இசையமைத்தது யார்?" என்றேன். நான் எதிர்பார்த்ததைப் போலவே, "எம் எஸ் வி?." என்ற ஆம் என்றாலும் இல்லை என்றாலும் இரண்டுக்கும் பாதகமில்லாத சாதுர்யமான கேள்விக்குறி கொண்ட பதில் அளித்தார். பழைய பாடல்கள் என்றாலே எம் எஸ் வி என்று பொத்தாம் பொதுவாக மூளைக்குள் ஒரு தகவலை தயாராக வைத்திருக்கும் சிலரின் மடமையை அதே எம் எஸ் வியே உடைத்து விடுகிறார். "இல்லை. அதற்கு இசை சுதர்சனம். களத்தூர் கண்ணம்மா படத்துக்கும் அவர்தான் இசை." என்றேன். கா கா கா பாடலைப் போன்றே அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாடலும் அவருக்கு பரிச்சயமாக இருக்கலாம் என்ற எண்ணமே காரணம். "நீங்கள் இளையராஜாவை மட்டுமே கேட்கிறீர்கள். அவருக்கு முன்னே இருந்தவர்களையும் கேட்டால் உங்கள் மதிப்பீடு மாறலாம். என்னை கொஞ்சம் புரிந்துகொள்வீர்கள்." என்று சொன்னேன். ஆமோதிப்பது போல அவர் தலையசைந்தது.
ஆனால் என் தோழருக்கு இந்த உரையாடல் செல்லும் திசை கலவரத்தைக் கொடுத்திருக்க வேண்டும். அதிரடியாக ," உங்களுடைய பொது அறிவுக் கேள்விகளைக் கேளுங்கள்." என்று தன் நண்பரை உசுப்பிவிட, அவரோ அடுத்து என்சைக்ளோபீடியா ரேஞ்சுக்கு (உலகிலேயே அதிகம் பேசப்படும் வார்த்தை எது? போன்ற) சில வினாக்கள் தொடுத்து, அதன் பின் உடற்பயிற்சி என்ற பெயரில் ஆல்பட்ராஸ் பறவை போல கைகளை விரித்து சில வித்தைகள் காட்டினார். பிறகு மேஜிக் செய்வதாக இன்னும் சில கோமாளித்தனங்களைச் செய்துவிட்டு ஒருவழியாக விடை பெற்று தன் காரில் ஏறும் முன்," இன்னொரு முறை நாம் சந்திக்க வேண்டும். உங்களுடன் நிறைய பேச வேண்டும்." என்றார் முகத்தைத் தாண்டிய நீளமான புன்னகையுடன். அவருக்கு சற்று ஒடுக்கமான சிறிய முகம் என்பதை இங்கே சொல்லியாகவேண்டும். "ஆம் நிறைய விவாதிக்க வேண்டும்." என்றேன் நான். அவர் சென்றதும் எங்களுடன் இருந்த மற்றொரு நண்பர் என் தோழரைப் பார்த்து கடுமையான பெருமூச்சுக்குப் பிறகு, "எங்கேயிருந்துப்பா இவரைப் பிடிச்சீங்க?" என்றார் கையால் விசிறிக்கொண்டே. துளித் துளியாக அவர் முகம் வியர்த்திருந்தது.
இந்த நண்பர் என்றில்லை. பல இளையராஜா ரசிகர்களிடம் விவாதிக்க நேரும்பொழுது நான் உதாரணம் காட்டும் சில பாடல்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை சேர்ந்தவையாக இருப்பதை நான் அறிவேன். இது எனக்கு மட்டுமே தோன்றக்கூடிய ஒரு வினோத வரைபடம் அல்ல என்று நினைக்கிறேன். என்னதான் சின்னத் தம்பி, கரகாட்டகாரன், அக்னி நட்சத்திரம், தேவர் மகன், தளபதி என்று அவருடைய அந்திம காலப் பாடல்களை ஏகத்துக்கு பாராட்டினாலும், அவரது ஆரம்ப எண்பதுகள் அசாதாரணமானவை. அபாரமான இசை ஊற்று அப்போது அவரிடமிருந்து புறப்பட்டது. இன்றும் பலர் உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைத்து ஆராதனை செய்யும் பல இளையராஜா பாடல்கள் எண்பதுகளில் உருவாக்கப்பட்டவையே.என்னைப் போன்றவர்களுக்கு இளையராஜா என்றால் அது எண்பதுகள்தான். என் பார்வையில் 86 ஆம் ஆண்டு வரை என்று சொல்லலாம்.
சற்று இவற்றின் மீது பார்வை கொண்டால் உங்களுக்கு ஏற்படும் நினைவலைகள் தரும் சந்தன ஒத்தடங்கள் விலைமதிப்பில்லாதவை.
பருவமே புதிய பாடல் பாடு,
நீதானே எந்தன் பொன் வசந்தம்,
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே,
தோகை இளமயில்,
வனிதாமணி வனமோகினி,
புத்தம் புது காலை பொன்னிற வேளை,
காலைத் தென்றல் பாடிவரும் ,
மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு,
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே,
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்,
பூவே செம்பூவே உன் வாசம் வரும்,
காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்,
பூங்காற்று புதிதானது,
தேனே தென்பாண்டி மீனே
நானாக நானில்லை தாயே,
நிலவு தூங்கும் நேரம்
நான் பாடும் மௌன ராகம்
என்ன சத்தம் இந்த நேரம்,
சற்று கூர்ந்து கவனித்தால் அந்த காலகட்டத்தில் (80களின் பெரும்பான்மை) அவரது இசையில் ஒரு நவீன தரம் சுடர்விட்டதை அவதானிக்கலாம். நெஞ்சத்தைத் தழுவும் இசைக் கோர்ப்பு மட்டுமில்லாமல் ஒலிப்பதிவு நுட்பம், வியப்பூட்டும் பரிசோதனைகள், அபிரிமிதமான மெட்டுக்கள் என அவர் இசை வண்ணத்துப் பூச்சியின் இறக்கைகள் போல நிறம் நிறமாக விரிந்தது. உதாரணமாக காக்கிச் சட்டை, எனக்குள் ஒருவன், நினைவெல்லாம் நித்யா, மெல்லத் திறந்தது கதவு (எம் எஸ் வி யுடன் சேர்ந்து இசையமைத்தது), தூங்காதே தம்பி தூங்காதே, பகல் நிலவு, இதய கோயில், இளமைக் காலங்கள், உதய கீதம், தென்றலே என்னைத் தொடு, குங்குமச் சிமிழ், நான் சிகப்பு மனிதன், விக்ரம், புன்னகை மன்னன் படப் பாடல்களை நினைவு கூர்ந்தால் அதன் துல்லியத் தொழில் நுட்ப நேர்த்தி அவர் இசைக்கு அளித்த மகத்தான பரிமாணத்தை நாம் உணரலாம். 82 முதல் 88 வரை இளையராஜாவிடம் பணியாற்றிய எமி என்ற மிகத் திறமையான ஒலிப்பதிவாளர் சாத்தியப்படுத்திய இந்தத் தொழில் நுட்பத் துல்லியம் இளையராஜாவின் எண்பதுகளை ஒரு தனி இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர வைத்திருக்கிறது. (இதே எமிதான் ரஹ்மானின் சின்ன சின்ன ஆசையில் பங்காற்றியவர்.) வரிகளுக்கு நடுவில் வாசிக்கும் திறமை கொண்டவர்கள் இதை தவறாக புரிந்துகொண்டு நான் இளையராஜாவின் வளர்ச்சிக்கு எமிதான் காரணம் என்று குறிப்பால் உணர்த்துவதாக திரிக்க வாய்ப்பிருக்கிறது. நான் கூற விழைந்தது அதுவல்ல.
எண்பதுகளின் இளையராஜாவின் இசை ஒரு பூர்த்தியடைந்த முப்பரிமாணத் தோற்றமாக இருந்தது. மரபு வேர்களைத் துறக்காத, கட்டுப்பாடற்ற நளினமான அவரது நவீன இசை, எமியின் ஒலிப்பதிவுத் தரம் என்பதைத் தாண்டி இன்னொரு ரேகையும் இளையராஜாவின் எண்பதுகளில் ஒளிந்திருந்தது. அந்த மூன்றாவது பரிமாணம் சற்றும் எதிர்பாரா வேளையில் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து, வானம் வெடித்துக் கொட்டும் ஒரு கோடை மழை போல இளையராஜாவின் இசையில் ஒரு இரட்டை வானவில் போன்று அபூர்வமாகத் தோன்றிய கவிதை. இந்தக் கவிதையின் வருகையை இளையராஜாவின் இசையில் சாத்தியமாக்கியது வைரமுத்து என்ற கவிஞன்.
80இல் வந்த ஒரு தலை ராகம் என்றொரு முகமறியா கலைஞர்களின் படைப்பு தமிழ்த் திரையை ஒரு பேரலை போலத் தாக்கியது. அதன் வெற்றிக்கு அதுவரை காண்பிக்கப்படாத கல்லூரி கலாட்டா, கண்ணியமான காதல், அலுப்பு தராத திரைக்கதை போன்ற தகுதிகளுடன் தரமான பாடல்களும் ஒரு சிறப்புக் காரணம். வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது என்ற பாடல் பெருத்த வெற்றி பெற்று பட்டி தொட்டி, மேடைக் கச்சேரிகள், வானொலி, கல்யாண வீடுகள் என எங்கும் இடைவிடாது பாடியது. இதிலுள்ள மற்றொரு பாடலான இது குழந்தை பாடும் தாலாட்டு அதன் முரண்களுக்காகவே பெரிதும் விரும்பப்பட்டது. (அப்போது என்னைப் போன்ற) பள்ளிச் சிறுவர்கள் கூட இதன் கவிதையை வெகுவாக ரசித்தனர். அதற்கு முன் இத்தனை முரண்களை முன்வைத்து ஒரு பாடல் வந்ததாக நினைவில்லை.
ஒரு தலை ராகம் படப் பாடல்களுக்குக் கிடைத்த சிகப்புக் கம்பள வரவேற்பு இளையராஜாவின் இசையிலிருந்த கவிதை வெற்றிடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. "பாட்டெல்லாம் எழுதினது யாரோ டி ராஜேந்தராம். என்னாமா எழுதியிருக்கான் பாரு" என்று இன்றைக்கு டண்டனக்கா டணக்கா என்று பகடி செய்யப்படும் ராஜேந்தரின் மீது அப்போது பலத்த பாராட்டு மழை பொழிந்தார்கள் பலர். இளையராஜாவின் பாடல்களில் மீட்டப்பட்ட புதுமையான இசைக் கோர்வையில் ஒரு சராசரி ரசிகன் லயித்துப் போய் கவிதை வரிகளை அலட்சியம் செய்தான். அவனுக்கு அந்த இசையின் போதையே போதுமானதாக இருந்தது. "என்னய்யா பெரிய கவிதை?" என்ற இகழ்ச்சியினால் தனது அபிமானவரை அவன் பாதுகாக்க முயன்றான். ஆனால் அவனுக்குள்ளும் சின்னச் சின்ன ஆசைகள் மிச்சமிருந்தன.
கண்ணதாசன், வாலி, பஞ்சு அருணாசலம், கங்கை அமரன் போன்றவர்கள் இளையராஜாவுக்காக பாடல்கள் எழுதியிருந்தாலும், அவர்களது கவிதைகளை பை பாஸ் செய்துவிடும் இசை அவரது பாடல்களில் அதிகாரம் செலுத்தியது. கண்ணதாசனின் மிகச் சிறந்த பாடல்கள் என மடமட வென்று ஒரு பத்து பாடல்களை உங்கள் நினைவுகளிலிருந்து எடுத்துப் போட்டாலோ, அல்லது நிதானமாக ஒரு கப் காபி உறிஞ்சிக் கொண்டு பேப்பர், பேனா சகிதமாக ஆழ்ந்து யோசித்து ஒரு 100 பாடல்களை பட்டியலிட்டாலோ அதில் கண்ணதாசன் இளையராஜாவுக்கென இயற்றிய பாடல்களில் ஒன்று அகப்பட்டாலே ஆச்சர்யம்தான். (நல்லவெர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு என்ற பாடல் எனக்கு இவர்கள் இணைப்பில் அதிகம் பிடித்த பாடல்.) அப்படியான ஆச்சர்யமான அந்த ஒன்று பெரும்பாலும் கண்ணே கலைமானே என்ற மூன்றாம் பிறைப் படப் பாடலாக இருக்கலாம். ஏனென்றால் சிலர் என்னிடம் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் அந்தப் பாடல் நல்ல கவிதை கொண்டது என்பதை விட அதுதான் கண்ணதாசன் சினிமாவுக்கென எழுதிய கடைசிப் பாடல் என்பதால்தான்.
இளையராஜாவுக்கும், நல்ல கவிதைக்கும் எட்டாத தூரம் என்று அவரது எதிர்ப்பாளர்கள் ஒரு வித மேதமையான உற்சாக மிதப்பில் இருந்த வேளையில் இளையராஜாவின் உருவாக்கத்தில் வந்த ஒரு பாடல் எல்லோரையும் ஒரு சக்தி வாய்ந்த மின்னல் போலத் தாக்கியது. அழகான கவிதையில் மூழ்கி எழுந்த அனாசயப் பாடல். இடையே வரும் "வானம் எனக்கொரு போதி மரம், நாளும் எனக்கது சேதி தரும்" என்ற வரிகள் கேட்டவர்களை திகைக்க வைத்தன. வானத்தின் ரகசியங்களையும், மர்மமான கொடைகளையும் போதி மரத்துக்குள் அடைத்து புத்தனின் கண்களை ரசிகனுக்கு அணிவித்த அபாரமான வரிகள் அவை. பகுத்துப் பார்க்க முடியாத கணத்தில் நிறம் மாறும் மாலை வானத்தை "வான மகள் நாணுகிறாள், வேறு உடை பூணுகிறாள்" என்று வர்ணித்த கவிதை பூசிய காந்த வரிகள் இது ஒரு பொன் மாலைப் பொழுது பாடலை ஒரு ஆச்சர்ய அறிமுகம் செய்தன. அதுவரை இளையராஜாவின் இசையில் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்த உயர் கவிதை ஒரு பொன் மாலைப் பொழுதில் அவரிடம் சரணடைந்தது. இளையராஜாவின் இசை வானவில்லை அணிந்துகொண்டது.
இயற்கையை கருப் பொருளாகக் கொண்டு இயற்றப்பட்ட தமிழ்த் திரைப் படப் பாடல்களில் குறிப்பிடத்தக்கவைகள் என்று பார்த்தால் சாந்தி நிலையம் படத்தின் இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி பாடலை தவிர்க்க முடியாது. அதன் இசையும் மெட்டும் வரிகளும் குரலோசையும் ஒரு காவியத்தைப் படைத்தன. அதோடு நீயா நானா என்று போட்டி போடும் மற்றொரு பாடல் இருக்குமானால் அது நிழல்கள் படத்தின் இது ஒரு பொன் மாலைப் பொழுது பாடலாகத்தான் இருக்க முடியும். இது குறித்து எனக்கு ஒரே ஒரு வரி மட்டும் அனுமதிக்கப்பட்டால் நான் எழுதுவது இதுதான்:
நிழல்கள் வந்தது. இது ஒரு பொன் மாலைப் பொழுது நிகழ்ந்தது.
அப்துல் ரகுமான், இன்குலாப் (இருவரும் ஒருவர்தானோ? அமுதவன் ஸார்தான் சொல்லவேண்டும்.) போன்ற கவிஞர்கள் தமிழ் மரபுக் கவிதை வடிவத்தை உடைத்து புதிய எழுத்தாக்கங்களை உருவாக்கி புதுக் கவிதை என்ற நவீன எழுத்துக்கு உயிரூட்டிக்கொண்டிருந்த நேரமது. எந்தப் பத்திரிக்கையானாலும் அங்கே புதுக் கவிதை கோலம் பூண்ட நான்கைந்து வரிகள் படிப்பவர்களை பரவசப்படுத்திவிட்டு சிலிர்ப்புடன் கடந்து செல்லும். எங்கள் நண்பர்கள் வட்டத்தில் இந்தப் புதுக் கவிதை பைத்தியம் பிடித்து அலைந்த என் நண்பர்களின் ஒருவன், "ஒரு நீளமான வரியை நாலா வெட்டி ஒன்னு கீழ ஒன்னு எழுதினா அதான் புதுக் கவிதை." என்று அதற்கு அருஞ்சொற்பொருள் அளித்துவிட்டு ,
அவன்
வீட்டுக்குள்
வந்து
உடனே
கதவை
சாத்தினான்."
என்று எழுதி தானும் ஒரு கவிஞனாகிவிட்டதாக பெருமை கொண்டான்.
வெளியே
ஒரு
நாய்
குலைத்தது
என்று நான் அதைத் தொடர, எங்கள் நண்பர்கள் வேறு எதோ எழுத புதுக்கவிதை இவ்வளவு சுலபமா என்ற வியப்பில் நாங்கள் ஆழ்ந்துபோனோம். ஆனால் இதுபோன்ற சில்லறைத்தனமான நிகழ்வுகள் சிறிது காலமே. நான் புதுக் கவிதைகளை ஆழ்ந்து வாசித்த நேரம் அதன்பின் வந்தது. ஏறக்குறைய இதே சமயத்தில்தான் வைரமுத்து என்ற பெயர் வானொலிகளிலும் நண்பர்கள் வட்டத்திலும் உச்சரிக்கப்படத் துவங்கியது.
82ஆம் ஆண்டின் ஒரு கோடை வெயில் நாளில் நான் தனியாக வானொலியின் குமிழைத் திருகிக் கொண்டிருந்த வேளையில் ஒரு பாடல் என் மீது ஒரு நெருப்புத் துளி போல தெறித்து விழுந்தது. அதைக் கேட்ட அந்த நொடியிலேயே நான் எதோ வசியத்திற்கு உட்பட்டதைப் போல என் நிலை மறந்தேன். பாடலின் இசையும், பாடகன் அதைப் பாடிய விதமும், அந்தக் கவிதை வரிகளும் ஒரு ஆயிரம் வாட்ஸ் மின்சார பல்பை அப்படியே விழுங்கி விட்டது போல எனக்குள் துடியாக இறங்கின. பாடல் முடிந்ததும் ஒலிபரப்பாளர் சொன்னார்; "இப்போது நீங்கள் கேட்ட பாடலைப் பாடியது எஸ் பி பாலசுப்ரமணியம், பாடலுக்கு இசை இளையராஜா. பாடலை இயற்றியது வைரமுத்து. படம் நினைவெல்லாம் நித்யா." அந்த நெருப்புத் துளி பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்.
முதல் முறை கேட்டபோது பனி விழும் மலர் வனம் என்ற அந்த முதல் வரி எனக்குள் வர்ணிக்க இயலாத கற்பனைவெளிகளை விரித்தது. பாடல் பல்லவி, சரணம் என மலர மலர வார்த்தைகளின் அழகு வரிக்கு வரி இன்னும் பல காட்சிகளை என்னில் விதைத்தது. அது ஒரு புதுக் கவிதையின் ஆனந்த அணைப்பு. கவிஞர் என்றால் கண்ணதாசன் என்றே கேள்விப்பட்டிருந்த எனக்கு அந்த சிறு வயதில் வைரமுத்து ஒரு நவீன வெளிச்சம். அதுவரை அறிந்திராத ஒரு கவிதைச் சுவை.
கவிதை என்னைக் கவர்ந்தது என்றால் பாடலின் இசையமைப்பு என்னைக் கைப்பற்றியது. இளையராஜாவின் அற்புதமான மெட்டுக்கு வைரமுத்து எழுதிய சிலிர்ப்பான கவிதை பொருத்தம் என்றால், அந்தக் கவிதைக்கு இளையராஜா அமைத்த இசை, அந்தப் பாடலை கண்ணாடி காலனி அணிந்த சின்டரெல்லா போல அழகாக்கி விடுகிறது. சிறிய எளிய கிடார் இசையுடன் துவங்கும் பாடல் இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் என்ற வரிகள் வரை தயங்கித் தயங்கி தலைகாட்ட, அதன் பின் வெடித்துக் கிளம்பும் மேற்கத்திய ட்ரம் இசை ஒரே நொடியில் பாடலின் பாவத்தை (tone) துடிப்பான அசைவுக்கு மாற்றி வேறு பரிமாணம் கொள்கிறது. என்ன ஒரு ஆர்ப்பரிப்பான இசை!
இளையராஜா மேற்கத்திய பாணியில் அமைத்த என்னடி மீனாட்சி போன்ற பாமரத்தனமான டிஸ்கோவாகவும் இல்லாமல் பின்னர் கம்ப்யூட்டர் இசை என்ற ஜிகினா பூசிக்கொண்ட காலம் காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம் போன்ற திகட்டும் இசையாகவும் இல்லாமல் அக்னி நட்சத்திரத்தின் பொலிவற்ற நீர்த்துப் போன மேற்கத்திய தடவலாகவும் இல்லாமல் பனி விழும் மலர் வனம் மேற்கத்திய பாணியின் நீள அகலங்களை கச்சிதமாக உள்வாங்கி, அதன் வடிவத்தை சிதைக்காமல் வரி வரியாக அழகை அணிந்துகொண்டு கேட்பவர்களை வசியம் செய்யும் அபூர்வப் பாடல். இந்தப் பாடலை மனதில் வைத்தே நான் இந்தப் பதிவின் துவக்கத்தில் குறிப்பிட்ட அந்தப் பொது அறிவுப் புயலிடம் "இளையராஜா விளையாடியிருப்பார்" என்று சொன்னேன். உண்மையில் இப்பாடல் சலிப்பின் சாயலை என்றுமே தன்னருகே நெருங்க விடாத இளமையின் ஊற்று.
இதன் பின் சிறிது நாட்கள் கழித்து ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் என்று மற்றொரு மகரந்தம் என் மீது விழுந்தது.
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வீடாவேன்
பூவிலே மெத்தைகள் தைப்பேன்
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன்
போன்ற காதலின் நெருக்கத்தை இதமாக பாடும் கவிதை வரிகள் என் நெஞ்சத்தைத் தைத்தன. பாடல் தரும் போதை ஒரு பக்கம் என்றால் அது மனதுக்குள் காண்பிக்கும் பூந்தோட்டங்கள் இன்னொரு போதை. வைரமுத்து எனக்கு அதிகம் பரிச்சயமானது இந்தப் பாடலில்தான். காதலின் அடர்த்தியை இத்தனை மென்மையாக இலைகளாகவும், வசந்தமாகவும் அதைத் தாண்டி சேலையின் நூலாகவும் பார்க்கும் ரசனை எனக்குப் புதிது. மிகப் புதிது.
தோளின் மேலே பாரமில்லே கேள்வி கேட்க யாருமில்லே என்ற ஒசிபிசா வகைப் பாடல் ஒரு இளைஞனின் கொண்டாட்ட மனநிலையை அப்படியே வெளிக்கொணர்ந்தது. பிரபல பதிவர் ஒருவர் இந்தப் பாடலையும் அக்னி நட்சத்திரத்தின் ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா ராஜா பாடலையும் (இரண்டுமே இளைஞனின் கொண்டாட்டத்தை பதிவு செய்த பாடல்கள்.) ஒப்பிட்டு இரண்டின் கவிதையும் மேற்கோள் காட்டி, எவ்வாறு வைரமுத்துவின் வரிகள் இளையராஜாவின் பாடல்களுக்கு ஒரு புதிய ஒளியைக் கொடுத்தது என்று எழுதியிருந்தார். அது உண்மையே.
நினைவெல்லாம் நித்யா படத்தின் பாடல்களில் பனி விழும் மலர் வனத்திற்குப் பிறகு நெஞ்சத்தில் எழுவது நீதானே எந்தன் பொன் வசந்தம் என்ற தேனூறிய பூங்காற்று. பஸ் பயணம் செய்தவன் முதல் முறையாக ரயிலில் செல்லும்போது அவனக்கு ஏற்படும் முதல் பரவச உணர்ச்சி, ஆனந்த அனுபவங்கள், அதை உண்டாக்கும் காட்சிகள் என்று எல்லாமே அவன் நினைவில் படிந்துபோவதுபோல இளையராஜாவின் வழக்கமான இசையமைப்பிலிருந்து தன்னையே புதுப்பித்துக்கொண்ட ஒரு வைர வசந்தம். மிகச் சிறப்பான இசைகோர்ப்பு. பாடலின் இரண்டாவது சரணதிற்கான இசையில் கிடாரும் வயலினும் ஓடிப் பிடித்து விளையாடுவதுபோல வெட்டி வெட்டி ஒலிக்கும். எதோ மரங்களின் இடையே சூரியக் கதிர்கள் மறைந்து மறைந்து வெளிப்படும் அழகைப் போன்ற இசையமைப்பு. முதல் முறை கேட்டபோதே பிரம்மித்துப் போனேன். சிலர் சொல்வதுபோல இளையராஜா மீண்டும் தன் இருப்பை உணர்த்திய இசை. இத்தனை அபாரமான தாலாட்டும் பாடல்களுக்கு முரணாக நீங்கள் எப்போதுமே பார்க்கக் கூடாத அல்லது காண விரும்பாத காட்சியமைப்பு கொண்ட பாடல்களில் இது அடக்கம். இன்றைக்கு நினைவெல்லாம் நித்யாவை நமக்கு நினைவூட்டுவது இளையராஜாவின் இசை மட்டுமே.
அந்தி மழை பொழிகிறது என்ற அடுத்த இசைத் தீற்றல் ரசிகர்களின் மனதில் துளித் துளியாக விழுந்து நெஞ்சத்தை ஒரு புதுவித நறுமணத்துடன் நிரப்பியது. அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது என்ற சிந்தனைக்கு கிடைத்த வரவேற்பு தமிழ்த் திரையிசையில் மீண்டும் கவிதையின் ஆட்சிக்கான அங்கீகாரம். இந்திரன் தோட்டத்து முந்திரி, மன்மத நாட்டுக்கு மந்திரி, தண்ணீரில் மூழ்கும் போதே வேர்கின்றது, ரகசிய ராத்திரி புஸ்தகம் போன்ற வியப்பு வரிகள் பாடலை மெருகேற்றின. இடையிசையில் வரும் அந்த திடீர் ராக ஆலாபனை அப்போது ஒரு மிகப் புதிய அனுபவம். தவிர, முதல் முறையாக பாடகர் எஸ் பி பியை திரையில் ரசிகர்கள் கண்டதும் இந்தப் பாடலில்தான்.
வைரமுத்து தங்க மழை பொழிகிறது என்றுதான் முதலில் எழுதியதாகவும் இளையராஜாவே அதை அந்தி மழை என்று மாற்றியதாகவும் இந்த பாடல் குறித்து ஒரு தகவல் உண்டு. நான் இதை மறுக்கப் போவதில்லை. ஏனென்றால் இது ஒன்றும் புதிதல்ல. இளையராஜா பல சமயங்களில் தனது கவிதைத் திறமையை அவ்வப்போது இவ்வாறு பரிசோதித்துப் பார்த்தவர்தான். (பாடல்களைத் தாண்டி இன்னும் பல தளங்களில் அவர் நுழைந்ததுதான் அவருக்கு எதிரான மனப்பான்மை திரையுலகில் உருவாக காரணமாயிற்று என்று சொல்லப்படுகிறது.) மேலும் வைரமுத்துவின் சில வரிகளில் இதுபோல இளையராஜா கை வைத்ததுதான் இருவருக்கும் இடையேயான விரிசலின் முதல் புள்ளி என்று சிலர் சொல்கிறார்கள். அடுத்த பதிவின் இறுதியில் இதைப் பற்றிப் பார்ப்போம். (இந்தப் பதிவே நீண்டுவிட்டதால் இரண்டு பகுதிகளாக வெளியிட எண்ணம்.)
மற்றொரு நாளில் பள்ளிக்கு அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருந்த வேளையில் வானொலிப் பக்கம் சற்று ஒதுங்கிய போது என்னை நனைத்தது ஒரு பரவசம். தகிட ததிமி என்று துவங்கி அதன் பின் வேகம் பெற்று உச்சம் தொட்டது அந்தப் பாடல். இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா என் கதை எழுதிட மறுக்குது என் பேனா, கால்கள் போன தூரம் எந்தன் எல்லை, வாழ்க்கையோடு கோபமில்லை காதல் என்னை காதலிக்கவில்லை போன்ற வரிகள் சோக ஓவியம் வரைந்தன. இரவு தோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது என்ற வரிகளில் அழுது என்ற வார்த்தையை எஸ் பி பி ஒரு விரக்தியான சிரிப்புடன் பாடுவது அழகு. படம் வந்த பிறகு கமலஹாசன் போதையில் ஒரு கிணற்றில் மீது ஆடும் காட்சிக்கு பலத்த கைத்தட்டல்கள் கிடைத்தன. ஆனால் அங்கே நடிகனைத் தாண்டி அந்தப் பாடலை உயிர் பெறச் செய்வது இளையராஜாவின் இசைதான். குறிப்பாக இறுதியில் தோன்றும் அந்த கோரஸ் மனதைத் தீண்டும் ஒரு அற்புதம்.
இந்த சமயத்தில்தான் எங்கள் வீட்டுக்கு ஒரு "புதியவர்" வந்தார். அவரை நாங்கள் வீட்டு வானொலி அறையில் அமர வைத்து, தொடர்ந்து பாடல்கள் பாட வைத்து, அவரைப் படுத்தி எடுப்போம். அவர் வந்த விஷயம் கேள்விப்பட்டு எங்கள் நண்பர்கள் வேறு இவரைத் தேடி வர ஆரம்பித்தார்கள் பல வேண்டுகோள்களுடன், அவரோ பல மொழிகளில் பலவிதமான பாடல்கள் பாடுவார். இளையராஜா பாடுவார். சங்கர் கணேஷ் பாடுவார். ஒசிபிசா பாடுவார், யாதோங்கி பாரத் பாடுவார். திடுமென kraftwerk சிந்தசைசரில் இயந்திரக் குரலில் பேசுவார். ரொம்பவும் அதிகமாக பாடிவிட்டால் சூடாகி விடுவார். மின்சாரத்தை மட்டும் தீனியாக சாப்பிட்டுக் கொண்டு நாங்கள் தூங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் எங்களுக்காகவே சேவை செய்துவந்தார். அவர் பெயர் நேஷனல் பேனாசோனிக் ஸ்டீரியோ டேப் ரெகார்டர்.
என் தந்தைக்குத் தெரிந்த ஒருவர் மூலம் சிங்கப்பூரிலிருந்து விசேஷமாக வாங்கப்பட்டது அந்த டேப். சமயப் பாடல்கள், ஹிந்திப் பாடல்களை பதிவு செய்து கேட்டது போக, முதல் முறையாக தமிழ் கசெட் ஒன்று வாங்கினோம். அது இளமைக் காலங்கள் என்ற படத்தின் பாடல்கள். இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம் பிறக்கும், பாட வந்ததோ ராகம் பாவை கண்ணிலோ நாணம் போன்ற துடிப்பான பாடல்களை எங்கள் டேப்பில் கேட்டபோது உண்டான ஆனந்தம் ஒரு தனி சுவை கொண்டது. பாடல்களைவிட அவற்றை கேட்ட கணங்கள் அற்புதமானவை. இன்றும் இந்தப் படத்தின் பாடல்கள் எனக்கு அந்த டேப் ரெகார்டர் நாட்களை நினைவுபடுத்தும். மற்ற பாடல்களை விட என்னை அதிகம் கவர்ந்தது ஜேசுதாஸ் பாடிய ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே. அது ஒரு நவீனத் தென்றல்! மிக வித்தியாசமான தாளக்கட்டில் இதமாக நம்மை தடவிச் செல்லும் இன்ப கீதம். பாடலை நன்றாக உள்வாங்கினால் இது ஒரு வழக்கமான இளையராஜா பாடல் போன்றில்லாமல் வேறு பரிமாணத்தில் இருப்பதை உணரலாம். பாடலின் பாதையில் தடங்கலின்றி சற்றே அரை வினாடி நின்று நின்று ஒலிக்கும் தாளம் இந்தப் பாடலுக்குத் தீட்டும் வண்ணம் அபாரம். அதைவிட பாடலின் இடையிசையில் வழக்கமான தாலாட்டும் குழலிசை, நீளும் வயலின் போன்ற இளையராஜா சங்கதிகள் கிடாருடன் கைகோர்த்துக்கொண்டு வேறு வகையாக முகம் காட்ட, அது ஒரு புதுவித தோற்றத்தை ஈரமான ரோஜாவுக்கு அளிக்கிறது. தமிழில் விசில் பாடல்கள் என்ற வகையில் எம் எஸ் வி நிறைய பாடல்கள் அமைத்திருக்கிறார். ஆனால் இளயராஜாவின் இசையில் வெகு அரிதாகவே இந்த பாணியைக் காணலாம். அரிதான அந்த ஒன்றில் இந்தப் பாடல் ஒரு உன்னதம்.
இந்தப் பாடலின் கவிதை வரிகள் அலாதியான அழகு. இந்தப் பாடல் எனக்குள் அமிழ்ந்து கிடக்கும் ஒரு வேடிக்கையான நினைவை உரசிச் செல்லும். கல்லூரியில் சேர்ந்த புதிதில் வேறு வீட்டுக்கு குடியேறிய நாட்களில் அங்கே வீட்டுக்கு அருகேயிருந்த ஒரு பெண்ணை என் நண்பர்களோடு சேர்ந்துகொண்டு "விசேஷ பார்வை" பார்த்துக்கொண்டிருந்த நேரம். உண்மையில் அவள் அப்படியொன்றும் அழகில்லை. ஆனால் என் ஹார்மோன்களுக்கு அப்போது அது முக்கியமில்லை. அவள் இங்கே அங்கே கண்ணில் பட்டால் ஹார்மோன்கள் இன்னும் அதிகமாக துள்ளும். நான் கொஞ்சம் அடக்கி வாசித்தாலும், என் நண்பர்கள் அடித்த லூட்டியில் (இதில் ஒரு நண்பன் இரண்டு விரல்களை வாயில் வைத்து எழுப்பும் மகா விசில் ஓசைக்கு நான்கு தெருக்கள் தள்ளி ஓடும் டவுன் பஸ்ஸே நின்றுவிடும்.) அவள் ஏகத்து கலவரமாகி அதிர்ந்துபோக, அதன் விளைவு அவளுக்கு என் மீது கொஞ்சமாக துளிர் விட்டிருந்த ஒரு மிக மெல்லிய நல்லெண்ணம் நீரைக் காணாத தாவரம் போல சடுதியில் பட்டுப் போனது. அதன் பின் அவள் கண்களில் புயலையும் நெருப்பையும் அணிந்துகொண்டு என்னைப் பார்ப்பாள். To make matters worse, கடைவீதி, கோவில்,பேருந்து நிலையம் என்று எங்கே சென்றாலும் அவள் வீட்டை நான் கடந்து செல்லவேண்டிய நிர்பந்தம் வேறு. அவ்வாறு செல்கையில் சில சமயங்களில் பட்டென்று ஒரு சத்தம் கேட்கும். என்ன சத்தம் இந்த நேரம் என்று ஆராய்ந்தால், அவள் வீட்டின் ஜன்னல் ஆவேசமாக மூடப்பட்டதன் அடையாளமாக மூடிய ஜன்னலின் கொக்கி மட்டும் ஒரு பெண்டுலம் போல ஆடிக்கொண்டிருக்கும். நண்பர்களிடம் சொன்னதற்கு எனக்குக் கிடைத்த பதில் : "உன்னைப் பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டுப் போகும்." வியப்புச் சுவை கொண்ட வைரமுத்துவின் ரசனையான வரிகள்! சில சமயங்களில் ஒரு பாடல் கவிதை கொண்டு எத்தனை அழகாக தன்னை அலங்காரம் செய்துகொள்கிறது!
இதற்கு சற்று முன்தான் இன்னொரு இசை மழை பெய்து ஒய்ந்திருந்தது. பயணங்கள் முடிவதில்லை. அதன் பாடல்கள் அடைந்த மகா வெற்றி மோகன் என்ற நடிகனை உச்சாணிக் கொம்பில் கொண்டு நிறுத்தியது. அன்னக்கிளி, 16 வயதினிலேவுக்குப் பிறகு இசையால் நிரம்பிய படம். அதனாலேயே நிமிர்ந்து நின்றது இது. ஒரு சிறு குறிப்பு வரைவது போல இளையராஜா என்றாலே இளைய நிலா பொழிகிறதே நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிவதில்லை. ஏற்கனவே நிறம் மாறிய பூக்கள் என்ற பதிவில் நான் இந்தப் பாடலைப் பற்றி பரவசத்துடன் எழுதியிருக்கிறேன். இளையராஜா விளையாடியிருப்பார் என்ற பதத்துக்கு ஏற்ற பாடல்.
எண்பதுகள் என்றாலே அது இளையராஜாவின் காலமாக புரிந்துகொள்ளப்படுகிறது. இது புனைவு கிடையாது. அந்த காலகட்டத்தில்தான் அவரது இசை ஒரு வினோத அழகுடன் பரிணமித்தது. வைரமுத்துவின் வியக்க வைக்கும் புதுக்கவிதை நனைந்த மின்சார வரிகள் சுரீரென அங்கே இங்கே தீண்டிச் செல்ல, இளையராஜாவின் மெட்டுக்கள் புதிய எழுச்சியுடன் மரபுகள் அனுமதிக்கும் நவீனத்தை எட்டிப் பிடித்து அனாசய அவதாரங்கள் எடுத்தன. ஒரு முழுமையை நோக்கி வேகமாக அவரது இசை நகர்ந்து கொண்டிருந்தது.
அடுத்து : இசை விரும்பிகள் XXVII - வசந்தங்கள் வடிந்தன.

சில பாடல்கள் நம்மை ரசித்த அந்த இடத்திற்கு அழைத்து சென்று விடும்... சில பாடல்கள் திரைப்படத்தை ஞாபகப்படுத்தும்... மற்றபடி ஒப்பீடு என்று நினைத்தாலே ரசனை கெட்டு விடும் என்பது எனது கருத்து...
ReplyDeleteதேடினேன் வந்தது. வாசலில் நின்றது... வாழ்த்துக்கள்! எனக்கும் உதவும் நன்றி!!
ReplyDeleteகாரிகன். மிக நீண்ட பதிவு .எனினும் நன்றே. எண்பதுகளின் காலம் இளையராஜா கோலோச்சிய காலம் .வைரமுத்துவின் வரிகள் வைரமெனில் அது அணியாவதற்கு இசைஞானி தானே காரணகர்த்தா .இதனை மறுக்க இயலாதே. பூக்கள் எல்லாம் மணமளிப்பதில்லையே .மலருக்கு மணம் தந்தது இளையராஜாவின் அற்புதமான இசையே .வாசமில்லா மலரைப் பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை .அவ்வாறே வைரமுத்து என்னும் அற்புத கவிஞர் எவ்வளவு தான் இனிமையான கவிதைகள் படைத்திருந்தாலும் சிலர் மட்டுமல்லாமல் பலரும் அதை அனுபவித்து உணரவேண்டுமெனில் அது இசையோடு ஐக்கியமாக வேண்டியிருக்கிறது .இவை இரண்டும் இரண்டற கலந்ததே எண்பதுகளின் காலம் .
ReplyDeleteகாரிகன், வாழ்த்துக்கள். வழக்கம்போலவே மீண்டும் ஒரு விருப்பு வெறுப்பற்ற நியாயமான அலசலைக்கொண்ட இசையமைப்பாளர்களின் மீதான சரியான விமர்சனப் பார்வை. இ.ராவை விமர்சிக்கிறோம் என்பதாலாயே அவர் ஒரு இசையமாப்பாளரே அல்ல என்பதுபோன்ற (சிலபேர் அப்படித்தான் இங்கே ஏ.ஆர்.ரகுமான் பற்றியும் ஹாரிஸ் ஜெயராஜ் பற்றியும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் மிக்ஸிங் செய்பவர்கள்; அவர்கள் இசையமைப்பாளர்கள் அல்ல என்று) அடாவடி விமர்சனங்கள் அல்லாமல் மிகவும் நேர்மையாக அவருடைய இசையமைப்பு பற்றியும் அவர் அந்தக் காலத்தில் நிகழ்த்திய சாதனைகள் குறித்தும் சொல்லிச் செல்வது அழகு. மேற்கொண்டு பிறகு எழுதுகின்றேன்.
ReplyDeleteவணக்கம் காரிகன்
ReplyDeleteசந்தித்து நீண்ட நாட்கள் ஆகி விட்டன . மீண்டும் அழகான ஒரு பதிவுடன் களம் இறங்கி இருக்கிறீர்கள். வாழ்த்துகள்! இளையராஜாவை அதிகம் தூற்றாத பதிவாக தெரிகிறது . ஆனாலும் வைரமுத்துவை முன்னிலைப்படுத்துவதில்தான் அதிக முனைப்பும் தெரிகிறது. வைரமுத்து இல்லாவிடில் இளையராஜா இல்லை என்பது போல் நீர் பிம்பம் காட்டுகிறீர்கள். அது காற்றுக்கே கலங்கி விடும் . பொய் என்றும் தெரிந்துவிடும் . இளையராஜா இல்லாவிடில் வைரமுத்து இல்லை என்று நான் சொல்லமாட்டேன் . ஆனால் அது நிஜ பிம்பம்.
ஒரு இசையமைப்பாளர் நல்ல கவி ரசிகராகவும் இருந்தால்தான் ஒரு பாட்டிற்கான நல் கவிதை உருவாகும் . இசையின் போக்கிற்கு எந்த வரிகளை போடவேண்டும் ; எங்கு நீட்ட வேண்டும் , குறைக்க வேண்டும் என்பதை முடிவு செய்பவர் இசையமைப்பாளரே! எந்த வார்த்தை சிக்கும் ; எந்த வார்த்தை திக்கும் என்பதும் இசைகலைஞரே முடிவு செய்வார். பல்லவியின் முதல் வார்த்தை எதுவாக அமைந்தால் பாடல் எடுபடும் என்பதையும் இசையமைப்பாளர் நன்றாகவே அறிவார்.
கவிஞர்களை எழுதச் சொன்னால் வத வதவென நிறைய கிறுக்கிப் போடுவார்கள் . அதில் தங்கம் வைரம் எல்லாம் தேடி எடுப்பதும் இசையமைப்பாளரே! இசைக்கலைஞன் நல்ல கவிஞர் ஆகலாம்; கவிஞன் நல்ல இசையமைப்பாளர் ஆக முடியாது.
'திராட்சை ரசம் வழிகிறது' என்றுதான் வைரமுத்து எழுதியிருந்தார் . 'அந்தி மழை பொழிகிறது ' என மாற்றியவர் இளையராஜா .
நல்ல தகவல்
Deleteஅருமையான பகிர்வு... வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாருங்கள் பரிவை குமார்,
Deleteநன்றி.
வாங்க தனபாலன்,
ReplyDeleteஒப்பீடு என்பது இரண்டு வேறுபட்ட இசையமைப்பாளர்களை குறித்து இருந்தால் நீங்கள் சொல்வது சரியே. எம் எஸ் வி என்று வரும்போது எம் எஸ் வி- டி கே ராமமூர்த்தி இசையைவிட எம் எஸ் வி தனியாக இசை அமைத்தது அவ்வளவு சிறப்பாக இல்லை என்பது பலரது எண்ணம். ரஹ்மான் என்றால் அவருடைய ஆரம்பகால இசையைப் போல இப்போது இல்லை என்பதும் ஒரு ஒப்பீடாக வைக்கப்படுகிறது. ஆனால் இரா என்றால் மட்டும் நாம் இந்த ஒப்பீடை செய்யக்கூடாது என்றால் அது நியாயமாகத் தோன்றவில்லை. எனவே தான் இந்த பதிவு.
வாங்க வலிப்போக்கன்,
ReplyDeleteசரியாகப் புரியவில்லை. இருந்தும் உங்கள் வருகைக்கு நன்றி.
செமையான வாசித்தல் அனுபவம்
ReplyDeleteவியப்பேதும் இல்லை
உங்களுக்கு தனித்த ரசிகர் பட்டாளம் இருப்பதில்
வாங்க மது,
Deleteநன்றி. ரசிகர் பட்டாளம் என்றெல்லாம் சொல்லவேண்டாம். அப்படியெதுவும் நான் கற்பனை செய்துகொள்ளவில்லை. எழுதுவதில் அதீத ஆர்வம். இசையின் மீது அதைவிட அதீத காதல். அவ்வளவே. நான் எழுதும் சில வாக்கியங்கள் எனக்கே பிடிப்பதில்லை மீண்டும் படித்துப் பார்க்கும்போது. இதைவிட இன்னும் அழகாகச் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றும்.
வைரமுத்துவை இங்கே தனியாக யாரும் புகழவில்லை. சினிமாப் பாடல் என்பதே பாடல் வரிகளும் இசையும் கலந்து சேர்ந்த ஒரு கலவைதான். இசையில்லாமல் தனியே ஒலிக்கும் பாடல்களும் உண்டு. இசையே இல்லாத பாடல் வரிகளும், கவிதை வரிகளும் இன்னமும் மக்கள் மனதிலும் இலக்கியக்கூட்டங்களிலும், பாட்டரங்கங்களிலும், பட்டிமன்றங்களிலும் வழங்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவை அங்கே வேறு தளங்களில் வழங்கப்படுகின்றன.
ReplyDeleteபாடல் வரிகள் இல்லாத வாத்தியக்கருவிகளைக் கொண்ட இசையும் உண்டு. அவை வெளிநாடுகளில் சிறப்பும் புகழும் பெற்றிருக்கும் அளவுக்கு இங்கே புகழ்பெறவில்லை. ஆக, இங்கே நாம் எடுத்துப் பேசுவது பாடலும் இசையும் சேர்ந்து ஜீவிக்கும் திரைஇசைப் பாடல்களைத்தாம்.
இந்த வரிசையில் வெறும் இசையமைப்பாளரை மட்டும் உயர்த்திச் சொல்லுவது நியாயமோ தர்மமோ ஆகாது. பாடல் வரிகளாலும்தான் ஒரு பாடல் புகழப்படுகிறது. எத்தனையோ பாடல்கள் பாடல் வரிகள் நன்றாக இல்லாமல் வெறும் இசைக்காக மட்டுமே சிறப்புப் பெற்றது உண்டு. அதுபோலவே இசை அத்தனை நன்றாக இல்லாமலிருந்தும்கூட எவ்வளவோ பாடல்கள் இன்னமும் வரிகளுக்காகவே நினைக்கப்படுகின்றன. ஆக....... இவற்றையெல்லாம் நீக்கிவிட்டுப் பார்த்தால் இசையோடு சேர்ந்த பாடல் வரிகளையும் கணக்கில் கொண்டு பார்க்கப்படும் பார்வையே சரியான பார்வை என்றாகிறது.
வைரமுத்து இளையராஜாவுடன் சேர்ந்தவுடன் இளையராஜாவின் பாடல்களுக்கு ஒரு சமூக அந்தஸ்து ஏற்பட்டதை மறுக்க முடியாது. அதே போல வைரமுத்து இளையராஜா பிரிந்தவுடன் வைரமுத்துவுக்கு ஒரு வெற்றிடம் ஏற்பட்டதையும் மறுக்க முடியாது. வைரமுத்துவின் அதிர்ஷ்டம் அவருக்கு ஒரு ரஹ்மான் கிடைத்தது. இளையராஜாவின் துரதிர்ஷ்டம் அவருக்கு இன்னொரு வைரமுத்து வாய்க்கவே இல்லை என்பது.
வைரமுத்து இல்லையென்ற குறையை நிவர்த்தி செய்வதற்குத்தான் 'திரைப்பாடலுக்கு வார்த்தைகள் அவசியமில்லை. வார்த்தைகள் என்பது இரண்டாம் பட்சம்தான்' என்ற கருத்துரையைப் பரப்புவதிலும் அதனை வலியுறுத்துவதிலும் இந்த எண்ணத்தை எல்லா மனங்களிலும் திணிப்பதிலும் இ.ரா அண்ட் கோஷ்டிகள் இன்றுவரைக்கும் மும்முரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆகவே நீங்கள் வைரமுத்துவுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருப்பது நியாயமான ஒன்று என்றே கருதுகின்றேன்.
வாங்க அருள் ஜீவா,
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி. ஒரு பாடல் நம் மனதில் இடம் பிடிக்க இசை மட்டுமே போதும் என்ற தவறான அபிப்ராயம் இராவாசிகளின் கூச்சல். நான் அதை எப்பொழுதுமே ஏற்றுக் கொள்ள மாட்டேன். மருதகாசி, பட்டுக்கோட்டையார், கண்ணதாசன், வாலி, வைரமுத்து, நா முத்துக்குமார், தாமரை என கவிஞர்கள் பெயர் பெற்றது வெறும் இசையினால் மட்டும்தான் என்று நான் எண்ணவில்லை.
இராவின் இசையும் வைரமுத்துவின் வரிகளும் சேர்ந்து படைத்த இசையோவியங்கள் எண்பதுகளின் தென்றல். இதில் அது அல்லது இது என்ற தீர்ப்பு முறையற்றது. அதான் பார்த்தோமே வைரமுத்து பிரிந்துசென்றபின் இராவின் பாடல்கள் என்ன தரத்தில் இருந்தன என்று. போடா போடா பொக்க, நிலா அது வானத்துமேலே என்று அடடா என்ன ஒரு காவியத் தமிழ்!
#வைரமுத்துவின் அதிர்ஷ்டம் அவருக்கு ரஹ்மான் கிடைத்தது .இளையராஜாவின் துரதிர்ஷ்டம் அவருக்கு இன்னொரு வைரமுத்து கிடைக்காத து .#-அமுதவன் கூற்று . #வைரமுத்துவைப் பிரிந்த பின் இளையராஜாவின் பாடல்கள் தரம் தாழ்ந்துவிட்டன .#-காரிகன் கூற்று . நீங்கள் இருவரும் இசைஞானியின் இசையை பழிக்க வந்த இரட்டையர்களா. கண்ணதாசனோ ,வைரமுத்துவோ ,நா.முத்துக்குமாரோ யாராயினும் அவர்களது பாடல் வரிகள் படித்த மேதைகளை மட்டுமல்லாமல் பாமர ர்களையும் அடையவேண்டுமெனில் எம் .எஸ் .வி.,இளையராஜா ,ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்களால் மட்டுமே சாத்தியம். ஒரு கவிஞரால் தான் இசையமைப்பாளர் புகழடைகிறார் என்று கூறுவது அபத்தமாக உள்ளது ..
ReplyDeleteஇன்னொரு முறை உங்கள் கருத்தை நீங்கள் படித்துப் பார்த்தால் நீங்கள் எழுதியிருப்பது உங்களுக்கே அபத்தமாகத் தெரியும். முயற்சி செய்யுங்கள்.
Deleteஹலோ காரிகன்
ReplyDeleteவைரமுத்து வருகைக்கு முன்னரே இளையராஜா அவர்கள் புகழின் உச்சிக்கு சென்று விட்டார் . இல்லை என்று பொய் சொல்ல முடியாது. நீங்கள் அப்படிச் சொன்னால் அது நகைப்பிற்குரியதாகி விடும். கண்ணதாசன் , வாலி போன்ற வைரமுத்துவை விட அனுபவம் வாய்ந்த நல்ல கவிஞர்கள் வைரமுத்துவை விட நல்ல பாடல்கள் கொடுத்தார்கள் . இல்லை என்று சொல்வீர்களானால் அவர்களை நீங்கள் கீழ்மைப்படுத்த முனைகிறீர்கள் என்று அர்த்தம்.
வைரமுத்து வருவதற்கு முன்னாலேயே இளையராஜா ஏறக்குறைய 90 படங்களுக்கும் மேல் இசையமைத்து முடித்து விட்டார் . அதில் 80 படங்களின் பாடல்கள் ஹிட் ஆகியிருந்தன . அதன் பிறகுதான் 1980 இல் நிழல்கள் திரைப்படம் வந்தது . வைரமுத்துவும் ராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டார்.
என்னமோ வைரமுத்து வந்ததற்குப் பிறகுதான் இளையராஜா வெளிச்சத்திற்கு வந்த மாதிரி கூசாமல் இன்றைய அமைச்சர்கள் போலவே பேசுகிறீர்கள். ' தண்ணிக்குள்ள வேர்க்குது ' , 'சூரியனுக்கு குளிருது ' என்று மாறுபட்டு எழுதிவிட்டால் நல்ல கவிதை ஆகி விடுமா? வைரமுத்துவிற்கு முன்னால் இருந்த கவிஞர்கள் கொடுக்காத கவிச் சுவையா?
வைரமுத்துவிற்குப் பிறகு நூற்றுக்கணக்கான பாடல்கள் பலரால் அழகாக எழுதப்பட்டு இளையராஜாவால் இசையமைக்கப்பட்டுள்ளது. ' போடா போடா பொக்கே ' மட்டும்தான் காதில் விழுந்துச்சா ? சினிமா சூழலுக்கு எழுதப்படும் பாட்டிற்கும் சுவைக்காகவே எழுதப்படும் பாட்டிற்கும் வித்தியாசம் தெரியாத ஆப்பாயிலா நீங்கள்?
வாருங்கள் அமுதவன்,
ReplyDeleteசட்டென ஓரிரண்டு வரிகளில் உங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்பதால் இந்தத் தாமதம்.
பாராட்டுக்கு நன்றி. நான் எழுத நினைத்து மறந்துவிட்ட தகவல்களை நீங்கள் எழுதியதுபோல இருக்கிறது உங்களின் கருத்து. இராவை இகழ்வதே எனது தொழில் என்பதுபோன்ற புனைவுகளை அருள் ஜீவா, சால்ஸ் பிறகு சில குகை மனிதர்கள் மனப்பாடம் செய்து ஒப்பித்தாலும், படிப்பவர்களுக்கு எனது நியாயம் புரியும்.
இராவின் இசைக்கு வைரமுத்துவின் கவிதைகள் ஒரு அழகைக் கொடுத்தன. நீங்கள் சொல்வதுபோல ஒரு சமூக அந்தஸ்து என்பது சரிதான். நான் அப்போது இராவின் இசையை விரும்பிக் கேட்டதே இதுபோன்ற வியப்பூட்டும் வரிகளால்தான். அதற்கான மெட்டும் இராவினால் அதே அழகுடன் இருக்கும். அருமையான கலப்பு.
தமிழ்த் திரையிசை என்றாலே பாடல்வரிகள்தான். கண்ணதாசன் இல்லாமலா எம் எஸ் வி இத்தனை பெயர் பெற்றிருப்பார்? மலர்ந்தும் மலராத என்ற அற்புத வரிகள் இன்று நமது நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருப்பதற்கு வெறும் எம் எஸ் வி யை மட்டும் காரணம் சொல்லமுடியுமா? நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் என்றாலே அது கவிதைதானே?
இசையமைப்பாளர்கள் நல்ல கவிதையை அங்கீகரிக்கவேண்டும் என்பதே என் செய்தி. எம் எஸ் வி அதை எப்போதுமே செய்தார். இராவுக்கு அது வைரமுத்து மூலம் நடந்தது. ஆனால் பிறகு அவர் கவிதையை கீழே தள்ளியது அவர் இசையின் தரத்தை பதம் பார்த்தது. இதுதான் நான் சொல்ல வருவது. இது இராவாசிகளுக்கே மிக நன்றாக தெரிந்த ஒன்றுதான். ஆனால் ஒத்துக்கொள்ள மனமில்லை. அவர்கள்தான் கடிவாளம் கட்டிய குதிரைகளாயிற்றே! குண்டுச் சட்டிக்குள் ஓடும் மாறாத மனப்பான்மை. நீ என்ன சொல்வது? என்ற அடாவடித்தனம்! நான் இராவை பழிப்பதாக வெற்றுக்கூச்சல். நிறைய பார்த்து விட்டேன்.
-----வைரமுத்துவின் அதிர்ஷ்டம் அவருக்கு ஒரு ரஹ்மான் கிடைத்தது. இளையராஜாவின் துரதிர்ஷ்டம் அவருக்கு இன்னொரு வைரமுத்து வாய்க்கவே இல்லை என்பது.-----
தெளிவான கருத்து. சரியான சிந்தனை. இணையத்தில் சில இராவாசிகள் "வைரமுத்துவுக்கு முன்னே கண்ணதாசன்,வாலி, பட்டுக்கோட்டையார்,வைரமுத்துவுக்குப் பின்னே நா முத்துகுமார், மதன் கார்க்கி என கவிஞர்கள் ஏராளம் உண்டு. ஆனால் இராவுக்கு முன்னேயும் பின்னேயும் அவரைப் போன்ற இசையமைப்பாளர் கிடையாது" என்று வம்படியாக தங்கள் அரைவேக்காட்டுக் கருத்தை முன்வைக்கிறார்கள். என்ன ஒரு அபத்தம்!
----வைரமுத்து இல்லையென்ற குறையை நிவர்த்தி செய்வதற்குத்தான் 'திரைப்பாடலுக்கு வார்த்தைகள் அவசியமில்லை. வார்த்தைகள் என்பது இரண்டாம் பட்சம்தான்' என்ற கருத்துரையைப் பரப்புவதிலும் அதனை வலியுறுத்துவதிலும் இந்த எண்ணத்தை எல்லா மனங்களிலும் திணிப்பதிலும் இ.ரா அண்ட் கோஷ்டிகள் இன்றுவரைக்கும் மும்முரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. --------
மிக உண்மை. ஒரு பாடலின் இசை அதன் ஆன்மா போன்றது. அதே சமயம் ஒரு பாடலின் தரத்தை நிர்ணயிப்பது கவிதை வரிகளே. இதை இல்லை என்று மறுப்பது ஒரு மிக மலிவான சிந்தனை.
வருகைக்கும் உங்களின் தொடரும் ஆதரவுக்கும் நன்றி.
அருமையான கருத்துகள். ராஜாவின் இசை அருமையான பல பாடல்கள் தந்திருந்தாலும் எல்லா பாடல்களையும் வெகு சிறப்பு என்று சொல்ல முடியாதுதான்...யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் அவருக்கும் சறுக்கியது உண்டு...அதுவும் சமீபத்தில் அவர் இடும் பாடல்க்ள் பெரும்பான்மையாக அவரது பாடல்களையே தான் மீட்டுகின்றன...புதியது என்று சொல்வதற்கில்லைதான்...
ReplyDeleteஒவ்வொரு இசையமைப்பாளருக்கும், இசையமைப்பாளர் என்று இல்லை ஒவ்வொரு துறையிலும் ஒரு கால கட்டத்தில் உச்சாணியில் இருப்பவர்கள், அவர்களுக்கு அடுத்து அவர்களை முந்திக் கொண்டு செல்பவர்கள் தோன்றும் போது இவர்கள் கீழ் இறங்கித்தானே ஆக வேண்டும்....எல்லா இடமும் நிலையானது இல்லைதான்...இல்லையா...காலச்சக்கரம் சுழன்று கொண்டே தான் இருக்கும்...ஒரே ஒரு வித்தியாசம், சுழன்றாலும், நல்ல இசை காலம் காலமாக இனிமையாக இருந்து கொண்டேதான் இருக்கும்....எம் எஸ் வி, ராமமூர்த்தி என்று சொல்லிக் கொண்டே போகலாம் இல்லையா....அப்படி ராஜாவின் இசையும்....ரஹ்மானின் இசையும்...ராஜாவிற்கும்,ரஹ்மானிற்கும் உள்ள வித்தியாசம் இசையை விட தலைனீட்டி நிற்பது அவர்களது குணத்தில்தான் ....ராஜாவிடம் ஒரு சிறு பங்கு மமதை எட்டிப் பார்த்ததுண்டு....ரஹ்மானிடம் இல்லாத ஒன்று...
முதலில் சொல்லப்பட்ட வரிகள் அருமை....இவை எதுவுமே இல்லை என்றால் வறட்சிதான்...
வாங்க சால்ஸ்,
ReplyDeleteநீங்கள் இப்படித்தான் பேசுவீர்கள் என்று நினைத்தேன். அது தெரிந்ததுதானே? இராவின் இசையைப் பற்றி குறைவாக நான் இந்தப் பதிவில் எழுதியாக தோன்றவில்லை. நல்ல கவிதை திடீரெனெ அவர் இசையில் முளைத்தது. அதற்காக அவரோடு சேர்த்து அதை சாத்தியமாக்கிய வைரமுத்துவையும் கொஞ்சம் பாராட்டினேன். அவ்வளவுதான். இவரால்தான் அவர் புகழடைந்தார் என்று நீங்களாகவே வீண் முடிச்சு போடுவது உங்களின் "சிறந்த" மனப்பானமையை காட்டுகிறது.
----கவிஞர்களை எழுதச் சொன்னால் வத வதவென நிறைய கிறுக்கிப் போடுவார்கள் . அதில் தங்கம் வைரம் எல்லாம் தேடி எடுப்பதும் இசையமைப்பாளரே! -------
இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் வைரமுத்துவை விரட்டியபின் ஏனப்பா உங்கள் இராவின் பாடல்களில் அந்த சுகந்த கவிதையின் சுவடே காணவில்லை? அப்போதும் தங்கம் வைரம் எல்லாமே இராவின் முன்னால்தானே கொட்டிக்கிடந்தது? அவர் அதில் என்னத்தை பொறுக்கி எடுத்தார் என்று அவர் பாடல்களைக் கேட்டவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
திராட்சை ரசம் அந்தி மழை ஆனது குறித்து என் கசின் என்னிடம் ஒருமுறை சொல்லியிருந்தான். நான்தான் தங்க மழை என எழுதிவிட்டேன். தவறை திருத்தியதற்கு நன்றி.
-----வைரமுத்து வருவதற்கு முன்னாலேயே இளையராஜா ஏறக்குறைய 90 படங்களுக்கும் மேல் இசையமைத்து முடித்து விட்டார் . அதில் 80 படங்களின் பாடல்கள் ஹிட் ஆகியிருந்தன . அதன் பிறகுதான் 1980 இல் நிழல்கள் திரைப்படம் வந்தது . வைரமுத்துவும் ராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டார். -----
தவறு. மூடுபனி இராவுக்கு நூறாவது படம். அதன் பிறகே நிழல்கள் வந்தது. சொல்லப்போனால் இரா நூறு படங்களுக்கு மேலே இசையமைத்த பின்னர்தான் வைரமுத்து அவருடன் இணைந்தார் நீங்கள் சொல்வதுபோல 90 அல்ல. (இந்தக் கணக்கையும் நானே சொல்லவேண்டியதாக இருக்கிறது பாருங்கள்!) நீங்கள் எதோ புதிதாக சொல்வதுபோல நினைத்துகொண்டு எழுதியதையும் நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இணையம் சரியாக கைகொடுக்காததால் நீளமான இந்தப் பதிவை இரண்டாக வெட்டி கவிதைக் காற்று என்று முதல் பாதியை வெளியிட்டேன். அடுத்து வரும் பாதியில் நான் எழுதியிருப்பதை இப்போது உங்களுக்கு preview காட்டுகிறேன்.
கீழே இருப்பது அடுத்து நான் வெளியிட இருக்கும் கவிதைக் காற்றின் இரண்டாம் பகுதியிலிருந்து (விருந்து தொடர்கிறது) எடுக்கப்பட்டது.
====வைரமுத்துவினால் இளையராஜா அதீத வெற்றிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டார் என்று எழுதுவது எனது நோக்கமல்ல. அது ஒரு மிக குதர்க்கமான சிந்தனை. உண்மையில் இளையராஜா நூறு படங்களுக்கும் மேலாக இசை அமைத்து பல வணிக வெற்றிகளைப் பெற்று தமிழ்த் திரையிசையில் தன்னை அழுத்தமாக நிரூபித்த பிறகே வைரமுத்து இளையராஜாவுடன் இணைந்தார். இந்த நூறு வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல. வரவேற்பு, அங்கீகாரம், பாராட்டு, வெற்றி என இளையராஜாவுக்குக் கிடைத்த மாபெரும் மகுடங்கள். அதே போல இந்த இருவரின் இணைப்பில் வந்த ஏறக்குறைய 100 படங்களுக்குப் பிறகு தோன்றிய வைரமுத்துவுடனான பிரிவுக்குப் பிறகும் இளையராஜா இன்னும் செங்குத்தான உயரங்களுக்குச் சென்றார். எனவே இளையராஜாவின் வணிகப் பாய்ச்சலுக்கு வைரமுத்துவை முன்னிறுத்துவது ஒரு தவறான முகவரி. =======
நான் நியாயமாகவேதான் பயணித்துக்கொண்டிருக்கிறேன். என் எழுத்தில் இருக்கும் நடுநிலையை இல்லை என்று நிரூபிக்க வேண்டிய ஆதாரங்கள் உங்கள் கற்பனைகளில் மட்டுமே ஒளிந்திருக்கின்றன.
----சினிமா சூழலுக்கு எழுதப்படும் பாட்டிற்கும் சுவைக்காகவே எழுதப்படும் பாட்டிற்கும் வித்தியாசம் தெரியாத ஆப்பாயிலா நீங்கள்?-----
அரைவேக்காடு என்று நான் சொன்னதை ஆங்கிலத்தில் சொல்லுகிறீர்கள். சரி. அதை விடுங்கள். சினிமா சூழலுக்கு எழுதப்பட்ட பாடல்கள் சரி. சுவைக்காக எழுதப்பட்ட பாடல்களில் ஒன்றிரண்டை அடையாளம் காட்டுங்கள். நானும் தெரிந்துகொள்கிறேன்.
வாருங்கள் துளசிதரன்,
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
முன்பு பத்தாயிரம் பாடல்கள் என்று கதை அளந்தார்கள். இப்போது சடாரென ஐயாயிரம் பாடல்கள் என்று கணக்கு காட்டுகிறார்கள். அது எப்படி பாதி அளவு குறைந்தது என்று மர்மமாக இருக்கிறது. இதுபோலவேதான் இரா பற்றிய பல புகழாரங்கள் உண்மையில்லாத புனைவுகள். இரா இசையில் புரட்சி செய்தார் என்பார்கள். உண்மையில் சினிமா இசை மரபு இசை பாணியை மீறியே இசைக்கப்படுவது. அதில் இதுபோன்ற மரபு உடைப்புகள் இயல்பானவை. இதைதான் புரட்சி என்கிறார்கள். இதை ஜி ராமநாதன் முதற்கொண்டு சுப்பையா நாயுடு, கே வி மகாதேவன், எம் எஸ் விஸ்வநாதன், டி கே ராமமூர்த்தி, எ எம் ராஜா, டி ஆர் பாப்பா, சங்கர் கணேஷ், வி குமார் என்று எல்லோருமேதான் செய்திருக்கிறார்கள். இராவும் தன் பங்குக்கு சில மரபு உடைப்புகள் செய்திருக்கிறார். இதில் இவர் செய்ததுதான் சிறந்தது என்று உதார் விடுவது மடத்தனம். எல்லோரையும் குறிப்பிட்டு பாராட்டிவிட்டுப் போவதில் என்ன வந்துவிடப் போகிறது?
---ராஜாவின் இசை அருமையான பல பாடல்கள் தந்திருந்தாலும் எல்லா பாடல்களையும் வெகு சிறப்பு என்று சொல்ல முடியாதுதான்...யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் அவருக்கும் சறுக்கியது உண்டு...----
சரியான கருத்து. சபாஷ். இரா அளித்ததில் வெகு சொற்பமானவையே சிறப்பானவை. மற்றவை வியாபார ரீதியாக புகழ் பெற்றவையே தவிர தரமானவை என்று சொல்ல முடியாது. இதுதான் நான் சொல்லும் கருத்து.
கவிதையின்றி நமது இசை வறண்டு போனதினால்தான் சின்ன சின்ன ஆசை பாடலின் இசையும் கவிதையும் தமிழகத்தை (ஏன் இந்தியாவையே) ஒரு விண்கல் போல உலுக்கியது. ரஹ்மான் வந்தார். தமிழ் இசை பிழைத்தது.
"நீலகுயிலே உன்னோடு நான் பண்பாடுவேன் " என்று "வர்ணரூபிணி" ராகத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடல் "மகுடி" என்ற திரைப்படத்தில் வருகிறது....இப்பாடலை எப்பொழுது கேட்டாலும்....வார்த்தைகள் வருவதில்லை கண்ணீர் மட்டும் வருகிறது .....இசையால் ஊன் உயிரை உருக வைக்க வேண்டும் என்றாலும்,..இசையால் மன அழுத்தம்,ரத்த அழுத்தம் போன்ற நோய்களை குணப்படுத்த முடியும் என்றாலும்,..இசையால் ஒவ்வொரு மனிதனின் உணர்ச்சிகளை பிரதிபலிக்க முடியும் என்றாலும்....அது இசை கடவுள் இளையராஜா....என்கிற இசையராஜாவால் மட்டுமே முடியும்....what a composistion...what a instrument's melange...like violin..veena..gitar...flute...mind blow......song link
ReplyDelete" https://www.youtube.com/watch?v=p151PJRzvkQ "
கார்த்தீ அவர்களே,
ReplyDeleteஉங்களின் தனி மனித துதி நான் ஏற்கனவே நிறைய பார்த்த ஒரு ரசனைப் பிழை. நீங்கள் குறிப்பிட்ட பாடல் எண்பதுகளில் நான் கேட்டு கொஞ்சம் தூர ஒதுக்கி வைத்த ஒன்று. எனக்கும் சில பாடல்கள் கேட்டால் கண்ணீர் வரும். சோகம் துக்கம் என எல்லாமே கலந்துகட்டி அடிக்கும். அதற்காக அவைகளே உலகின் சிறந்த பாடல்கள் என்று நான் சொல்ல மாட்டேன். அது ஒரு மிகத் தவறான கருத்தாக்கம். ஒவ்வொருவருக்கும் சில தனிப்பட்ட ரசனைகள் இருக்கும். இருக்க வேண்டும்.
இளையராஜாவால் மட்டுமே இப்படிச் செய்ய முடியும் என்பதெல்லாம் மிக மலிவான கருத்து. இளையராஜாவைத் தாண்டிய இசை சகாப்தங்கள் தமிழில் உண்டு. இசை என்பது ஒரே ஒரு ஆளுக்கு சொந்தமானதல்ல.