Thursday 11 April 2013

இசைவிரும்பிகள்  II-    தடித்த  இசை.

                  பிறப்பு முதல் இறப்பு வரை நம் தமிழ் சமூகம் இசையினாலே    நிறைந்ததாக சிலர் சொல்வதுண்டு.யோசித்துப்பார்த்தால் இது ஒரு மடமையான கருத்து. இசை ஒரு சமூகத்துக்கு மட்டுமே சொந்தம் என்று சொல்வது உண்மையில் சிறுபிள்ளைத்தனமானது. உலகில் உள்ள அத்தனை மனித குழுக்களிடமும் தாலாட்டு (Lullaby) முதல் ஒப்பாரி(Lament) வரை எல்லாவிதமான மனித உணர்சிகளையும் வெளிப்படுத்தக்கூடிய பிரதிபலிப்பாக இசை இருக்கிறது.

      இருப்பினும்  துவக்கத்தில் இசை கடவுளர்களை துதி பாடும் ஒரு மத சம்பிரதாயத்துக்கு உட்பட்டு, ஆட்பட்டு, இன்னும் பல துன்பங்களுக்கு இரையாகி ஒரு மிகச்சிறிய வட்டத்தில் சுற்றிச் சுற்றி சுழன்று கொண்டிருந்தது.ஆனால் மேற்குலகில்  பதினைந்தாம்  நூற்றாண்டிலேயே  (மறுமலர்ச்சி காலம்) இசை மதத்தை விட்டு மனிதத்துக்கு வரத் துவங்கி விட்டது .மதயிசை  மற்றும் மக்களிசை( Sacred music and Secular music ) என்ற பிரிவு அங்கே  உருவாகி பல மக்களிசை பாடல்கள் அங்கு பெருத்த வரவேற்ப்பை பெற்றிருந்தன. அதே போல மக்களிசை பாடல்களை மதம் தடை செய்த வரலாறும்  உண்டு. மேற்கத்திய செவ்வியல் இசையின் (Western classical) ஆரம்பமும் இப்படித்தான் இருந்தது. ஆனால்  வெகு விரைவிலேயே அது  தேவாலய கதவுகளை விட்டு வெளியேறி    மதமில்லாத இசையை மக்களின் ரசனைக்கு விருந்தாக  அளித்தது. பீத்தோவன், மொசார்ட், பாக், விவால்டி, ஷாப்பின் போன்ற மேற்கத்திய செவ்வியல் இசைக் கலைஞர்கள் மக்களிசையின் நாயகர்களாக வரையறுக்கப்படுவதும் இதனால்தான்.

     இங்கே வந்தோமானால் ,  நம் தமிழ்ச் சமூகத்தில் மதத்தின் தாக்கம் இல்லாத கலைகளை காண்பதரிது. மேலும் மக்கள் ரசனைக்குரிய கலைகள் பெரும்பாலும் மதத்தை  உள்ளடக்கியே இருந்து வந்திருக்கின்றன. மேற்குலகில்  மக்கள் மனிதத்தை விரைவாக அறிந்துகொண்டது போலல்லாமல் நாம் இந்த சமயம் சார்ந்த விஷயங்களை விட்டு வெளியே வர நீண்ட காலம் பிடித்தது.   இப்படியான ஒரு மதம் என்னும்  பின்புலத்தை   பின்னணியாக கொண்டிருந்த கால கட்டத்தில் இருந்துப் புறப்பட்ட படங்களிலிருந்தே நாம் தமிழ் திரை இசையை  ஆராய  வேண்டி இருக்கிறது.தமிழ் திரையில் 1918 இல் கீச்சய வதம்  என்ற ஊமை படம் நடராஜ முதலியார் என்பவரால் எடுக்கப்பட்டது . தமிழின் முதல் பேசும்  படம் காளிதாஸ்(அதில் ஏறக்குறைய ஐம்பது பாடல்கள் இருந்தன)  1931 இல் வந்தது. அது முதற்கொண்டு  வந்த ஏறக்குறைய அறநூறு படங்கள் (அவற்றில் சில சமூக சிந்தனை கொண்டிருந்தாலும்) எல்லாமே புராண , இதிகாச, அரச  கதைகளையே களமாகக்  கொண்டவை.அவ்வாறான கதைக் களத்தை ஒட்டியே தமிழ்த்  திரை பாடல்களும் அமைக்கப்பட்டன . ராகங்கள் எங்கிருந்து எவ்வாறு தோன்றின என்பது குறித்து இன்னும் பலத்த சர்ச்சை இருக்கிறது. நாட்டுப்புற பாடல்களில் இருந்தே ராகங்கள் தோன்றின என்று ஒரு கருத்து இருந்தாலும்,சாஸ்த்ரிய ராகங்கள் பிரதானமாக கடவுளர்களை வழிபடவே உருவாக்கப்பட்டதற்கான  வரலாறு நம்மிடம்  உண்டு. இதன் பாதிப்பை நாம் ஆரம்பகால தமிழ்த்திரை இசையில் வெகுவாக காணலாம். 

      பாபநாசம் சிவன் தமிழ் திரையின் புகழ் பெற்ற  முதல் இசை அமைப்பாளராக கருதப்படுகிறார். அவர்  சாஸ்திரிய சங்கீதத்தில் அகலமான புலமை உள்ளவராக  அறியப்பட்டவர். ஜி ராமநாதன்(ஐம்பதுகளில் இவரின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது), ராஜா சந்திரசேகர், ஜனார்த்தனம், சி ஆர் மூர்த்தி, சி எஸ் ஜெயராமன்,டி கே முத்துசுவாமி ,அண்ணாஜி ராவ், மோடி பாபு, எம் ஜி பார்த்தசாரதி, சுப்பையா நாயுடு, சுதர்சனம், அஸ்வத்தாமா,  இன்னும் பல இசை அமைப்பாளர்களுக்கு மத்தியில் பாபநாசம் சிவன் நிறைய படங்களுக்கு  இசைப் பங்களிப்பு செய்திருப்பதைக் கொண்டே நாம் அவரின் முக்கியத்துவத்தை  அறியலாம். கர்நாடக சங்கீதத்தின் வேர்களை கொண்டு அவர் படைத்த பல பாடல்கள் சிறப்பானவை .அவரை பின்பற்றி வந்த பலரும் சாஸ்திரிய சங்கீதம் இழைந்த பாடல்களை  கொடுக்க தலைப்பட்டனர். இவ்வாறு சாஸ்திரிய ராகங்களின் மீது கட்டப்பட்ட  பாடல்களை முன் வைத்தே தமிழ் திரையிசை வளர்ந்து வந்தது ஒரு மறுக்க முடியாத வரலாறு.

       இப்படி கர்நாடக ராகங்கள் நம் திரையிசையை தங்கள் தோள்களின்   மீது சுமந்து கடந்த வந்த தூரங்கள் அதிகம்.மேற்கத்திய இசைக் கலப்பு அப்போது அபூர்வமாகவே நிகழ்ந்தது.நாற்பதுகளிலேயே அப்படிப்பட்ட இணைப்பிசை (Fusion) தமிழ் திரையில் சாத்தியமானது. அப்படி இரண்டும் கலந்தாலும் மேற்கத்திய சாயலை சற்றேனும்  கேட்பவர்கள்  உணர முடியாதபடி இம்மண்ணின்  ராகங்கள் ஆட்சி செலுத்தின.மேல்நாட்டு  வாத்தியங்கள் மற்றும் இசை அமைப்பு முறை ,கூட்டிசை(Chorus) போன்ற மேற்கத்திய பாணி சற்றே தென்பட்டாலும் முற்றிலும் மேற்கத்திய பாணியை கொண்ட பாடல்கள் தலைகாட்டவில்லை. சாஸ்திரிய இசையின் தாக்கம் அதீத வீரியமாக இருந்த  நிலையில் தமிழ்த் திரையிசை  பாடல்கள்  பெரும்பாலும் சமய சார்புடனும்,ஆலய கீதங்கள் போலவும்தான்   ஒலித்தன.அப்போது வெளிவந்த படங்களிலிருந்து  இதை நாம் மிகத்தெளிவாக உணர முடிகிறது.அந்த காலகட்டத்தில்   வெகு சொற்பமாகவே மக்களிசை இருந்தது. ராகங்களை கொண்டு சமய சார்பில்லாமல் பாடல்கள் அமைக்க முடியும் என்ற எண்ணவோட்டம் கொண்ட புரட்சிகரமான   இசை அமைப்பாளர்களுக்கு இன்னும் பாதை அமையவில்லை . அவர்களின் வருகைக்கான காலம் பருவமடையவில்லை.

      இந்தச்  சூழலில் வெளிவந்த பாடல்கள் முழுவதும் சாஸ்திரிய சங்கீதத்தில் தோய்த்து எடுக்கப்பட்ட, பாமரர்களுக்கு புரியாத சங்கீத ஞானத்தில்  முழுதும்  நனைந்த,கர்நாடக ராகங்களின்  அடர்த்தியான வீரியத்துடன், திகட்டும் சாஸ்திரிய  சுவையோடு ஒரு  தடித்த இசையாகவே இருந்தன. மக்களிசை புறந்தள்ளப்பட்டு கர்நாடக சங்கீதத்தின் வீச்சு ஓங்கி இருந்தது.   அதற்கு காரணம் ராகங்களில் கரை கண்டவர்கள் இசை அமைக்க வந்ததுதான்.இந்த இடத்தில் நான் விமர்சிப்பது அந்த காலத்தைய இசையின் தன்மையை அன்றி அதன் தரத்தை அல்ல. (இப்போது ராகங்கள் தெரியாமலே ஏன் அந்த ஞானம் இல்லாமலே  ஒருவர் இசை அமைப்பாளராக இருக்க முடியும்! பரிதாபமான கால சுழற்சி). உதாரனத்திற்க்கு  பவளக்கொடி (இசை பாபநாசம் சிவன், ஆண்டு 1934)படத்தில் வரும் "கண்ணா கரியமுகில் வண்ணா", "வனிதைக்குள் உயர்வான" போன்ற பாடல்களை ரசிக்க நமக்கு பொறுமை அவசியம்.

     அன்றைய காலகட்டத்தில் தூய கர்நாடக இசைக்கும் தமிழ் திரையிசைக்கும் இடையே  மிகப்பெரியப் பனிப்போரே நிகழ்ந்து வந்தது என்று நாம் அறிகிறோம்.தமிழ் திரை இசையின் ஆரம்ப காலத்தில் பல கர்நாடக மேதைகள் இந்த இரண்டின் இணைப்பையும் விரும்பவில்லை.அவர்களின் கருத்துப்படி திரையிசை என்றைக்கும்  கர்நாடக இசைக்கு அருகே வர முடியாது. ஜி ராமநாதன் முறையாக படிக்காத ஆனால்  காதில் கேட்ட ராகங்களை கொண்டே கர்நாடக சங்கீதத்தில் புலமை பெற்றவர்.  அவரின் இசையில்  1944 இல் வெளிவந்த  எம் கே தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ் படத்தில் வரும் "மன்மத லீலையை வென்றோர் உண்டோ?" என்ற மிகப் பிரபலமான பாடல் மக்களிசையை நோக்கி தமிழ்த்திரை இசை நகர்வதை குறிப்பாக உணர்த்தியது. அதை தொடர்ந்து  வந்த பல படங்களிலும்  தமிழ்த் திரையிசை அடுத்த பரிமாணத்தை நோக்கி பயன்பட்டாலும் மக்களிசை வெகு தொலைவிலேயே இருந்தது. கர்நாடக சங்கீதத்தின் கட்டு பலமாக பின்னப்பட்டு பாடல்களின் குரல்வளை நசுக்கப்பட்டுக் கொண்டிருந்தது என்று கூடச் சொல்லலாம். முப்பதுகளில் துவங்கிய தமிழ்த் திரையிசை அடுத்த பத்து ஆண்டுகளில் பாமரர்களின் ரசனையோடு இணையாமல் ராகங்கள் அறிந்த, புரிந்த மக்களின் இசை தாகத்தை தீர்க்க,உயர்ந்த ராகங்களில் ஊறிய  பலப்பல சம்பிரதாயமான பாடல்களை வழங்கி வந்தது. நாற்பதுகளில் இன்னும் பல புதிய இசை அமைப்பாளர்கள் களத்தில் குதித்தாலும் சாஸ்திரிய சங்கீதத்தின்  பலமான,கெட்டியான  முடிச்சை அவிழ்க்கும் கலை யாராலும் அறியப்படாத மர்மமாகவே நீடித்தது. அதன் அடர்த்தி சற்றேனும் குறைந்தபாடில்லை.

    பாரிஜாத புஷ்பஹாரம், ராமாயன்,கோவலன்,வள்ளி திருமணம்,சகுந்தலா, சீதாவனவாசம்,அல்லிஅர்ஜுனா, ஞானசவவுந்தரி, நளதமயந்தி, பட்டினத்தார், ராஜா தேசிங்கு,யயாதி,சௌபாக்யவதி,தியாக பூமி,பிரஹலாதா, ரம்பையின் காதல் போன்ற படங்கள் 1931 இல் இருந்து 1940க்குள் வந்தவை.இவற்றில் வெகு சில படங்கள்  மட்டுமே இப்படியான இதிகாச அரச கதைக்களங்களை பின்புலங்களாக கொள்ளாமல் சமூக களங்களை கொண்டவை.நியாயமாக நாம் சிந்தித்துப்பார்த்தால்  இப்படியான கதைகளை சொல்லும் படங்களில் 1940களுக்கு முந்தைய காலத்தில் நாம் எந்த விதமான இசையை எதிர்பார்க்கமுடியும்?இயல்பாகவே அன்றைய காலத்து இசை ஒரு வட்டத்துக்குள் இருந்ததில் வியப்பொன்றும் இல்லை. ஒன்றை நாம் புரிந்து கொள்வது அவசியம்: தமிழ்த் திரையிசையின் வளர்ச்சி ஒரே இரவில் நடந்துவிடவில்லை.

     ஆனால்   அதே சமயம் மேற்குலகில் முப்பதுகளிலேயே அறிவியல்,  சமூகம் சார்ந்த படங்கள் வெளிவர ஆரம்பித்துவிட்டன. அங்கே பாடல்களையும் படங்களையும் பிரித்துப்பார்க்கும் ஆரோக்கிய மனநிலை அப்போதே இருந்தது. நமக்கோ தமிழ் பாடல்கள் என்றாலே தமிழ் சினிமா பாடல்கள்தான். படத்தின் பிண்ணனி எந்த விதமான மாறுபட்ட இசைக்கும் இடம் தராத சூழ்நிலையில் நம் தமிழ் திரையிசை ஒரு இடுக்கமான பாதையிலேயே செல்ல வேண்டியதாக இருந்தது. ஒரு பக்கம் கர்நாடக ராகத்தில் தேர்ந்தவர்கள் அங்கீகாரம் செய்ய மறுத்த நாட்டுப்புற இசை மறுபுறமோ பெரும்பான்மை மக்களை சென்றடையாத மக்களிசை. இரண்டுக்கும் இடையில் இருந்த ஆனால் யார் கண்ணுக்கும் புலப்படாத ஒரு மாய முடிச்சு என்று தமிழ் திரையிசை ஊசலாடிக்கொண்டிருந்தது. ஐம்பதுகள் வரை தமிழ் திரையில் வந்த இசையையே மக்கள் நம் இசை என்று நம்ப வைக்கப்பட்டனர் என்பதே தெளிவு.இடையில் விதிவிலக்காக சில மக்களிசை பாடல்கள் வந்தது உண்மைதான்.இருந்தும் இசை ஒரு பாமரனை வெகு தூரம் தள்ளியே வைத்திருந்தது.(இதற்கு நம்மிடையே இசை பற்றிய புரிதல் இல்லாததும் ஒரு காரணம்).

        தமிழில் நாட்டுப்புற இசையை வெகு ஜன மக்களிடம் கொண்டு சேர்த்தவர்களில் ஜி ராமநாதனும் கே வி மகாதேவனும் மிக முக்கியமானவர்கள். இவர்கள் ஆரம்பித்த இந்த பாதையில்தான் பிற்பாடு பல இசைஅமைப்பாளர்கள் தங்கள் வண்டிகளை ஒட்டினார்கள். இதை அறியாமல் நாட்டுபுற நாயகன் என்று வேறு சிலரை அழைப்பது வேடிக்கையான அபத்தம்.தமிழ் திரையிசை சிலர் எண்ணுவதைப்போல எண்பதுகளில் ஆரம்பிக்கவில்லை என்பதை இங்கே நான் மிகுந்த வேதனையுடன் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. எத்தனை இசை அமைப்பாளர்கள் இப்போது நாம் ரசிக்கும் இந்த எளிமையான பாடல்கள் அமைய பாதை அமைத்துக்கொடுத்தார்கள் என்பதை கிஞ்சித்தும் எண்ணாமல் இசை என்றால் இவர்தான் அல்லது அவர்தான் என்று நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு வந்தவர்களை சுட்டிக்காட்டுவது ஒரு மாபெரும் மோசடி. தொடரும் பதிவுகளில் தமிழ் திரையிசை நளினமடைந்தது பற்றி விரிவாக எழுத எண்ணி இருப்பதால் இத்துடன் நான் என்னுடைய இரண்டாவது அத்தியாயத்தை முடித்துக் கொள்ள விரும்புகிறேன்.   
        
       தமிழ் திரையிசை பயணித்த பாதையை நாம் இப்போது திரும்பிப் பார்க்கும் போது ஒரு காலத்தில் எப்படி ஒரு கடினமான இசை  ரசனைக்கு நாம் உட்படுத்தப்பட்டோம்  என்ற கருத்தை முன்வைக்கவே இந்த இரண்டாம் பதிவுக்கு நான் தடித்த இசை என்ற தலைப்பை வைத்தேன். இந்தப் பதிவில் நான் சொல்லி இருப்பதில் எந்த விதமான குற்றச்சாட்டும் இல்லை. முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் நம் தமிழிசை சந்தித்த மாறுபடும் அடையாளத்திற்க்கான  போராட்டமே இங்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இருந்தும் அந்த காலகட்டத்தில் புதிய முயற்சிகள் செய்யப்படாமலில்லை. கொஞ்சம் கொஞ்சமாகவே இந்த சிரமான பணி கையாளப்பட்டது. ஒரு தந்தைக்கும் மகனுக்கும் உள்ள இசை ரசனை வேறுபட காலம் ஒரு முக்கியமான காரணியாக இருக்கிறது. இந்த ரசனை மாறுபாடு  இருவரின் இசை விருப்பங்களையும் குறைத்தோ அல்லது இழித்தோ மதிப்பிடுவதற்கு ஒரு அளவுகோல் அல்ல என்பதே என் புரிதல். எம் எஸ் சுப்புலட்சுமி,எம் கே டி, பி யு சின்னப்பா, டி  ஆர் மகாலிங்கம், கண்டசாலா, எல் வசந்தகுமாரி,ஜிக்கி,  இன்னும் பல இசைக் கலைஞர்கள் ஆண்ட திரை இசையை பின்னாளில் வந்தவர்கள் இகழ்வாக பேசுவதற்கான சந்தர்ப்பங்கள் இங்கு அதிகம்.அப்படி பேசுபவர்களுக்கு  ஒரு முறையான புரிதல் கொடுக்கப்படவேண்டும் மேலும் அவர்களுக்கு ஒரு நேர்மையான இசை பற்றியத்  தெளிவு அளிக்கப்படவேண்டும். நம்முடைய விருப்பங்களையும்,  மதிப்பீடுகளையும்  சற்று ஓரம் வைத்துவிட்டு  உண்மைகளை பதிவு செய்வதின் மூலமே இதை நாம் செய்யமுடியும். என்னுடைய இந்தப் பதிவு இதில் சற்றேனும் செய்திருந்தால் அதுவே எனக்கு மிக்க மகிழ்ச்சி.


     அடுத்தது : இசை விரும்பிகள் III - மெல்லிசை மலர்ந்தது.
    

5 comments:

  1. பலமான வண்டியை சரியான சாலையில் இறக்கி இருக்கிறீர்கள். மிகவும் சிரமப்பட்டு பல்வேறு தகவல்களைத் திரட்டி ஆரம்பத்தில் இருந்தே ஆரம்பித்திருக்கிறீர்கள். இதன் சிரமம் எனக்குப் புரியும். ஏனெனில் தமிழ்த்திரை இசை ஆரம்பம் முதல் இன்றுவரை என்பதற்கான ஒரு நீண்ட பயணத்தின் வரலாற்றுக்குறிப்புக்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டு பல படங்களின், பல இசையமைப்பாளர்களின், பல பாடல்களின் குறிப்புக்களைச் சேகரித்துவைத்து எழுதவும் துவங்கிவிட்டேன். அனேகமாக இதுஒரு நூலாக வெளிவரக்கூடும். நீங்கள் இங்கே இணையத்தில் சரியான அலசல்களுடன் உங்கள் பயணத்தை ஆரம்பித்திருக்கிறீர்கள். வேறுசிலர் இதே சப்ஜெக்டுகளைக் கையாண்டிருந்தாலும் உங்கள் கட்டுரைகள் அவற்றிலிருந்து பெருமளவு வேறுபட்டிருக்கிறது.
    நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டு இன்றளவும் தொடர்ந்துகொண்டிருக்கும் ஒரு இசையனுபவத்தை உணராமல் இன்றுதான் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்று முட்டாள்தனமாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள் மத்தியில் நீங்கள் பேசவேண்டியவராக இருக்கிறீர்கள். பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.
    இதில் சிலபேருடைய பெயர்களை நேரடியாகச் சொல்வதைத் தவிர்த்திருக்கிறீர்கள். நல்லது.

    ஒன்று சொல்லத்தோன்றுகிறது.

    நீங்களும் சரி நானும் சரி இன்றைய திரை இசையைப் பேசும்போது இளையராஜாவை அல்ல, அவருடைய ரசிகர்களைத்தான் குறைசொல்கிறோம் என்கிற சிறிய விஷயத்தை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்துகொள்வார்களேயானால் பெருமளவு அபிப்ராய பேதங்கள் குறைந்துபோவதற்கு வாய்ப்புண்டு.
    தங்கள் எழுத்தின் இரண்டாவது பாகமும் சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அமுதவன் அவர்களுக்கு,
    நீங்கள் என்னுடைய இந்த பதிவுகளை தொடர்ந்து படித்து வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி. உங்களின் கருத்துக்கள் எனக்கு உற்சாக டானிக் போல இனிக்கின்றன . என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் திரையிசையின் துவக்கக்கால பாடல்கள் மற்றும் இசை அமைப்பாளர்கள் பற்றிய செய்திகளை சேகரிப்பதை விட அப்படி திரட்டிய அத்தனை விஷயங்களையும் ஒன்று சேர முரண்படாமல் எழுதுவது சிக்கலானது என்பதை இந்த பதிவை எழுதும் போது புரிந்துகொண்டேன். முடிந்தவரை நடுநிலையோடு எழுதி இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. விஷய ஞானம் என்னை விட அதிகம் உள்ள நீங்கள் பாராட்டி இருப்பது இதை உறுதிசெய்கிறது. உங்களின் இசை குறித்த புதிய நூல் பற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. வெகு விரைவில் அதை வெளியிட என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நல்ல பதிவுதான் . பாராட்டப்பட வேண்டிய ஒன்று . ஆனால் நீங்களும் அமுதவன் அவர்களும் மறைமுகமாக என்னை அல்ல என்னைப் போன்றவர்களை விமர்சித்து இருக்கிறீர்கள் . பரவாயில்லை . நாங்கள் அதற்கெல்லாம் அசர மாட்டோம் .

    இசை என்பது கடல் . இசை கற்று கரை தேர்ந்தவர்கள் யாருமே கிடையாது . இசை முழுமையாக கற்றுக் கொள்ளாமலேயே நீங்கள்,நான், அமுதவன் சார் எல்லோரும் அதிகமாக பேசிக் கொண்டிருக்கிறோமோ என்ற சந்தேகம் இப்போது எழுகிறது . ஆனால் ரசிக்கத் தெரிந்தவர்கள் என்பது புரிகிறது .

    இசை என்பது ஒரு கடவுள் அனுபவம் போலத்தான் ! புரிந்தவர்கள் புரியாதவருக்கு இறுதி வரை புரிய வைக்க முடியாது . ஆக என் புரிதலை தவறு என்றோ வெறும் அரை வேக்காட்டுத்தனம் என்றோ நீங்கள் கூறி விட முடியாது . நானும் இசை என்னும் வெள்ளத்தில் நீந்துபவன்தான் . எழுதுங்கள் . நானும் உங்களோடு நீந்துகிறேன் . உங்கள் இசை ஆராய்ச்சி வளரட்டும் , வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  4. சார்லஸ் அவர்களுக்கு,
    உங்கள் வருகைக்கு நன்றி. இசையை கற்றுக்கொண்டே பின்னரே அதை நாம் அதைப் பற்றி பேசவேண்டும் என்று சொல்வது இங்கே வெகு சிலரையே அடையாளம் காட்டும்.இசையை கற்றுக்கொள்வது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அதனால் நல்ல இசையை ரசிப்போம். இதில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ரசிப்பே இசையின் முதன்மையான நோக்கம் என்பது எனது தாழ்மையான கருத்து. இங்கே நான் அரைவேக்காட்டுத்தனம் என்று சொன்னது கண்களையும் காதுகளையும் மூடிக்கொண்டு உண்மையை உணர மறுக்கும் சிலரையே. நீங்கள் எழுதுவதைப் பார்க்கும் போது நீங்கள் அந்த சிலரில் ஒருவராக இருக்க முடியாது என்று தெரிகிறது. நீங்களோ நானோ அல்லது திரு அமுதவனோ கடலில் யார் வேண்டுமானாலும் நீந்தலாம். தாரளமாக வாருங்கள்.

    ReplyDelete
  5. // தமிழில் நாட்டுப்புற இசையை வெகு ஜன மக்களிடம் கொண்டு சேர்த்தவர்களில் ஜி ராமநாதனும் கே வி மகாதேவனும் மிக முக்கியமானவர்கள். இவர்கள் ஆரம்பித்த இந்த பாதையில்தான் பிற்பாடு பல இசைஅமைப்பாளர்கள் தங்கள் வண்டிகளை ஒட்டினார்கள். இதை அறியாமல் நாட்டுபுற நாயகன் என்று வேறு சிலரை அழைப்பது வேடிக்கையான அபத்தம் //


    புரிகிறது ..யாரைச் சொல்கிறீர்கள் என புரிகிறது . நாட்டுப் புற இசை எப்படி இருக்கும் என்பதை நேரடியாக நாங்கள் கண்டவரில்லை . வயல் வெளிகளில் களை பறிப்பு ,நாற்று நடவு , நீரிறைப்பு , நீர் பாய்ச்சல் ,கதிரறுப்பு ,மேய்ச்சல் போன்ற காரியங்களில் அலுப்பு தெரியாமல் இருக்க பாடப்பட்ட பாடல்கள் நாட்டுப் புற இசையாக உருவெடுத்திருக்க முடியும் என்று படித்து தெரிந்ததுதான் . அதை நங்கள் சரியாக உணரும் வண்ணம் இசைஞானி அழகாக அருமையாக அற்புதமாக கையாண்டிருப்பார் . நாட்டுப் புற இசை அனுபவத்தை ரசிக்கும்படியும் கொடுக்க முடியும் என்பதை பல திரைப் பாடல்களில் கொடுத்திருப்பார் . முன்னவர்கள் கொடுக்கவில்லை என்று நாங்கள் சொல்லவில்லை . அவர்களை விட அதிக அளவு , அவர்களை விட வேறுபட்ட ரசனைகளில் ,அவர்களை விட அதிக அளவு திரைப்படங்களில் , வெவ்வேறு கோணங்களில் ,வெவ்வேறு தரங்களில் , வெவ்வேறு அழகியல் உணர்வுகளில் வெளிப்படுத்தி இருக்கிறார் இந்த நாத கலா ஜோதி இளையராஜா அவர்கள் என்பதை நீங்கள் மறுத்தால் சும்மா வீம்புக்கு எழுதுகிறீர்கள் என்றுதான் நாங்கள் எடுத்துக் கொள்வோம் .

    // எத்தனை இசை அமைப்பாளர்கள் இப்போது நாம் ரசிக்கும் இந்த எளிமையான பாடல்கள் அமைய பாதை அமைத்துக்கொடுத்தார்கள் என்பதை கிஞ்சித்தும் எண்ணாமல் இசை என்றால் இவர்தான் அல்லது அவர்தான் என்று நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு வந்தவர்களை சுட்டிக்காட்டுவது ஒரு மாபெரும் மோசடி.//


    நாங்கள் (இளையராஜா ரசிகர்கள் ) யாரும் மோசடி செய்வதற்காக பேச வரவில்லை . முன்னவர் வகுத்த பாதை வழி கண்டு பயணித்து தமிழர்களை புதிய பாதையில் கூட்டிச் சென்றவர் இளையராஜா . தமிழனை தமிழ் பாட்டு கேட்க வைத்தவர் . இசையின் புதிய பரிமாணங்களை புரிய வைத்தார் . நாற்பது வருடங்களுக்கு பிறகு வந்தாலும் புதுமையான இசை கொடுத்தவரை சுட்டி காட்டுவதில் தவறில்லை என்றே எங்களுக்கு படுகிறது .







    ReplyDelete