மாஸ்கோவிலிருந்து சில மழைச்சாரல்கள்
ரஷ்யா இப்போது ஒரு சிதைந்து போன நாடாக காட்சி அளிக்கிறது-உலகின் முதல் காம்யுனிச நாட்டை இன்னும் கேலி பேசும் நிலையில் அது இன்றைக்கு இருந்தாலும் அதன் இலக்கியங்கள் அதே வீரியத்துடன் இளமையாக என்றைக்கும் அழிந்து போக முடியாதபடி இருக்கின்றன.உலக இலக்கியங்களை பற்றி பேசுபவர்கள் பெரும்பாலும் ஆங்கில ஐரோப்பிய லத்தின் அமெரிக்க இலக்கியங்களை மேற்கோள் காட்டி ருஷ்ய இலக்கியங்கள் மீது மவுன அஞ்சலி செலுத்துவார்கள்.ரஷ்யாவை பற்றி பேசினாலே அவன் ஒரு காம்யுநிசவாதியாகத்தான் இருப்பான் என்று ஒரு வித முன்தீர்மானித்தல் இங்கே அதிகம் காணப்படுகிறது. ஆனால் ருஷ்ய இலக்கியங்களை படிக்காதவர்கள் மற்ற எதை படித்திருந்தாலும் அவர்களின் ரசனை முற்றுப்பெறவில்லை என்பது என் எண்ணம்.
ருஷ்ய புதினங்களை ஆங்கிலத்தில் படிப்பதைவிட தமிழில் படிப்பது உங்களுக்கு ஒரு நேரடியான அனுபவத்தை கொடுக்கும்.ஆங்கில மொழிபெயர்ப்பு முற்றிலுமாக அந்த ருஷ்ய nativity யை காணாமல் செய்துவிடும். தமிழிலோ ருஷ்ய வாசனையை அதே பரவசத்துடன் உங்களால் நுகர முடியும். ஸ்டெப்பிபுல்வெளிகள்,முட்டைகோசு,பிஸ்கோத்து,
போன்ற சொற்றாடல்கள் தமிழாக இருந்தாலும் அவை ருஷ்ய சுவையுடன் உங்களை அந்த நாட்டின் ஒரு கிராமத்திற்கே கொண்டுசென்றுவிடும். ரொம்ப நாட்கள் வீட்டிலேயே இருந்தாலும் மிக நீண்ட காலத்திற்கு பின் நான் படித்தது யுவதிகள் என்னும் ஒரு புதினம் . ஆங்கிலத்தில் girls என்றிருந்ததை தமிழில் கஜினி என்ற புனைபெயர் கொண்ட மொழிபெயர்ப்பாளர் பெண்கள்,நங்கைகள்,வனிதைகள்,மோகினிகள்,என்று தமிழாக்கம் செய்யாமல் யுவதிகள் என்று மொழியாக்கம் செய்திருப்பார்.(அதுவரை நான் யுவதிகள் என்றால் எதோ குதிரை வகையை சேர்ந்த ஒரு மிருகம் என்று எண்ணியிருந்தேன்)யுவதிகள் என்பது சம்ஸ்கிருத சொல். இருப்பினும் அதன் கவர்ச்சியை ரசிக்காமல் இருக்க முடியாது.
இந்த யுவதிகளை பற்றி எழுத மிக நீண்ட பதிவு தேவை.இந்த கதையை படித்தவர்கள் யாராவது இருப்பார்களேயானால் அவர்களுக்கு இதன் உண்மை புரியும்.அந்த புதினத்தை படிப்பதே ஒரு ஆனந்த நிலையை சேர்ந்தது. சும்மா ஒரு சில எழுத்தாளர்களின் கதையை போகிற போக்கில் படிப்பது போல உங்களால் இதை படித்து விட முடியாது. புத்தகத்தை நாலாக எட்டாக மடித்து, ஒரு கடி பக்கோடா ஒரு சிப் காப்பி என்று இதை நீங்கள் செய்து விட இயலாது. என்னால் தற்போது யுவதிகளை பற்றி பதிவு எழுத கண்டிப்பாக முடியாததன் காரணமே அந்த புதினத்தை இன்னொரு முறை நான் ருசிக்கவேண்டும் என்பதற்காகத்தான். இப்போது இந்த புத்தகம் விற்பனைக்கு கிடைப்பதில்லை. அது ஒரு காலம் என்று பெருமூச்சுடன் சிலர் சொல்வதைபோல எழுபதுகளில் ருஷ்ய இலக்கியங்கள் தமிழ்நாட்டில் தாரளமாக கைக்கெட்டின.இப்போதோ நீங்கள் நினைத்தாலும் கிடைப்பது அரிது-இந்த wi-fi யுகத்தில் ஒரு குருவியை காண்பது போல.
நான் என் பதிவுகளை என்னை பாதித்த என்னை தாலாட்டிய ருஷ்ய புதினங்களிளிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று விரும்பினேன்.அது ஒரு வகையான ஆத்மாவுடன் கூடிய உறவு.நீங்கள் மிகவும் மதிக்கும் ஒரு பொக்கிஷ உணர்ச்சி,ஒரு வித மின்சார சுகம் கொண்டது.நெருப்பையும் பனிக்கட்டியையும் ஒரு சேர விழுங்கும் சுவை கொண்டது.படிக்கும் வரை சுகமாக இருக்கும் படித்து முடித்ததும் அந்த சுகத்தை இழந்த தனிமையை உணர்வீர்கள்.வெண்ணிற இரவுகள் (இதுவே சிற்சில மாற்றங்களோடு இயற்கை என்று தமிழில் படமாக வந்தது)குற்றமும் தண்டனையும்,முட்டாள்,அதிகாலையின் அமைதியில்(இது பேராண்மை என்று மாறியது)விடிவெள்ளி, பாட்டிசைக்கும் பையன்கள்(அபாரமான வர்ணனைகள் கொண்ட கதை)அவன் விதி(மனதின் கண்ணீரை கேட்கமுடியும்)கன்னி நிலம்,விளையாட்டுப்பிள்ளைகள் (இன்பம் இன்பம் இன்பம்) இது போன்ற புதினங்களை கையில் வைத்துகொண்டு ரசித்துப்படிப்பதே ஒரு விதத்தில் அனுபவம்தான்.
அடுத்த பதிவு: தூரத்து இலக்கியங்கள்