சில வருடங்களுக்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரைவாக தாண்டிச் சென்றுகொண்டிருந்த ஒரு சமயத்தில் திடுமென ஒரு சானல் ஒன்றில் நான் நின்றேன். அங்கே ஒரு இசைக் கலைஞரை கர்நாடக இசையில் பாண்டித்யம் பெற்ற பெண் ஒருவர் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார். பொதுவாக கர்நாடக இசை என்றால் வயலின், கடம், மிருதங்கம், தம்புரா என்ற சம்பிரதாய வாத்தியக் கலைஞர்கள் இல்லாமல் இங்கே பேசிக்கொண்டிருந்தவர் ஒரு கிடார் இசைஞர். கர்நாடக இசையில் எவ்வாறு கிடார் ஊடுருவியது என்று எனக்கு மகா வியப்பு. உடனேயே நான் அந்த நிகழ்ச்சியை சுவாரஸ்வத்துடன் பார்க்க ஆரம்பித்து விட்டேன்.
அந்த கிடார் இசைஞரின் பெயர் ஸ்ரீதர் என்று நினைவு. ஒருவேளை பெயர் தவறாக இருக்கலாம். ஆனால் பார்ப்பதற்கு எதோ மைதா மாவில் உருட்டி எடுத்த வஸ்து போல இருந்தார். வெகு இயல்பாக பல தகவல்கள் அவரிடமிருந்து வந்தன. அவரை பேட்டி கண்ட அந்த கர்நாடக பாடகிக்கு(!) சாஸ்திரீய சங்கீதத்தை எட்டிப் பிடித்துவிட்ட மேற்கத்திய வாத்தியமான கிடாரின் மீது கடுமையான சம்பிரதாய கோபம் இருந்திருக்கவேண்டும். எப்படி கர்நாடக ராகங்களுக்கு கிடார் கொண்டு இசைக்க முடியும் என்ற நம்பாத கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் கேள்விகளில் மேற்கத்திய இசையையும் அதன் இசைக் கருவிகளையும் இழிவாக எண்ணும் தொனி யூகத்துக்கு இடமில்லாமல் தெறித்து விழுந்தது. (உண்மையில் கர்நாடக சங்கீதத்தில் வாசிக்கப்படும் அதன் ராக வளைவுகளோடு இரண்டற பிரிக்க முடியாத அளவுக்கு கலந்துவிட்ட வயலின் ஒரு மேற்கத்திய இசைக் கருவி.) அவரின் கேள்விகளுக்கு அந்த கிடார் இசைஞர் மிகத் துல்லியமாகவும் விளக்கமாகவும் பதில் அளித்தது ஒரு ஆரோக்கியமான விவாதத்தை நோக்கி அவர் நகர விரும்புவதை தெளிவாக நிரூபித்தது. ஒரு இடத்தில் கேள்வி கேட்ட பெண்மணி சொன்னது இது: "ஆனா ஒரு விஷயம் பாருங்க, மேற்கத்திய இசை கேக்கறவங்க காலைதான் ஆட்டுவாங்க. நம்ம கர்நாடக இசை கேக்கறவங்க தலைய அசைப்பாங்க. அதாவது மேற்கத்திய இசை காலோடு முடிந்துபோற இசை. கர்நாடக இசையோ தலை வரை போகக்கூடியது. மேன்மையானது. மேற்கத்திய இசை போல கீழ்த்தரமானதல்ல". இதைக் கேட்டதும் என்னைப்போலவே அதிர்ச்சியடைந்த அந்த ஸ்ரீதர் என்பவர் தன்னோடு பேசிக் கொண்டிருக்கும் அந்த பாசிஸ்ட் பெண்மணியின் அபத்தமான கருத்தை ஒரு சிறிய புன்னகையோடு உதாசீனம் செய்தார். பின்னர் அவர்கள் பேசியதெல்லாம் இங்கே வேண்டாத சங்கதி.
நான் எழுத விழைந்தது இந்த பேட்டியைக் குறித்தல்ல. மாறாக அந்தப் பெண்ணின் prejudiced opinion எத்தனை ஆழமாக நமது பொது சிந்தனையில் ஊறிக் கிடக்கிறது என்பதை இதைப் படிப்பவர்களுக்குப் புரிய வைக்கவே. காலை ஆட்டுவதும் தலையை அசைப்பதும் ஒரு இசையின் தரத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான செயலாக ஒருவரால் முன்னிறுத்தப்படுவது எத்தனை மலிவானத் தீர்ப்பிடல்! ஒரு வெட்டி விவாதத்திற்காக இதை எடுத்துக்கொண்டாலுமே இதில் சற்றும் உண்மை இல்லை. பொதுவாக நாம் தாளத்துடன் ஒன்றிக்கும் போது நமது கால்கள் இயல்பாகவே அனிச்சை செயலாக தரையில் ரிதமாக இடிக்கத் துவங்கிவிடும். பாடல் அல்லது இசையின் சுவை அதிகரிக்க அதிகரிக்க நம் தலை போதையேறிய உணர்வுக்கு வந்துவிடும். அதன் நீட்சியே அந்தத் தலையாட்டல். மேலும் இந்தக் காலாட்டாலும் தலையாட்டாலும் ஒருவரின் விருப்பம் என்ற எளிமையான உடலசைவைத் தாண்டி வேறு புனிதமான அல்லது மர்மமான குறியீடுகள் கொண்டவையல்ல. சிலர் ஒரு குறிப்பிட்ட இசை அமைப்பாளரின் பாடலில் இரண்டாவது சரணத்தில் வரும் ஒரு சிறிய வயலின் துணுக்கு தன் உயிர்நாடியை தொட்டுவிட்டுச் செல்லும் என்று உளறுவதைப் போன்ற நகைச்சுவைதான் இது.
ஆனால் மேற்கத்திய இசைக்கும் தலையாட்டலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சொல்லப்போனால் இந்தத் தலையாட்டல் உண்மையிலேயே மேற்கத்திய இசையின் ஒரு இன்றியமையாத அங்கம். ஆங்கிலத்தில் இதை Headbanging என்பார்கள். ஹெட்பேங்கிங் மேற்கத்திய ராக் இசை கொடுத்த ஒரு திடீர் விபத்து. மேற்கத்திய இசை வல்லுனர்களின் கருத்துப்படி Led Zeppelin என்ற பிரிட்டிஷ் இசைக் குழுவினரின் அதிரடி இசையில் தூண்டப்பட்ட ரசிகர்கள் தங்கள் தலைகளை அரங்கத்தின் சுவர்களில் மோதிக்கொண்ட ஒரு நிகழ்வுடன் இந்தத் தலை மோதல் கலாச்சாரம் 1969இல் உருவானது. தொடர்ந்து மேற்கத்திய ஹெவி மெட்டல் இசைக் குழுக்களின் எல்லையற்ற தீரா இடி போன்ற இசையில் ரசிகர்களும் இசைஞர்களும் ஒரு சேர இந்தக் கலாச்சாரத்தை புதுப்பித்துக்கொண்டே வந்தார்கள். சில வேளைகளில் இவர்கள் தலையை ஆட்டும் வேகமும் ஆவேசமும் பார்ப்பவர்களுக்கு மயக்கம் வந்துவிடும் அளவுக்கு ராட்சதத்தனமாக இருக்கும். பொதுவாக ராக் இசையை கேட்கும் ஒருவரால் தலையை ஆட்டாமல் இருப்பது என்பது ஒரு அசாதாரண காரியம். ராக் என்ற அந்த மின்சாரத் துணுக்கு உங்களுக்குள் செல்லச் செல்ல உங்கள் தலை எதோ பெயரறியாத பிசிக்ஸ் விதிக்குட்பட்டு தானாகவே முன்னும் பின்னும் அசைய ஆரம்பித்துவிடும்.
இப்போது பதிவின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்ட அந்த பாசிஸ்ட் பெண்மணியின் தலையாட்டல் குறித்த கருத்தை ஒரு இசை ரசிகன் எந்த உண்மையின்படி நம்பமுடியும்? அவர் மமதையுடன் சொல்லியது போன்ற பல புரையோடிய அபத்தங்கள் நம்மிடம் நங்கூரமிட்டு மன ஆழத்தில் தங்கியிருக்கின்றன.
இறுதியாக ஒரு மருத்துவக் குறிப்புடன் இந்தச் சிறிய பதிவை முடித்துக்கொள்ளலாம். ஹெட்பேங்கிங் நிஜத்தில் ஒரு ஆரோக்கியமான உடலசைவல்ல. இது ஒரு நல்ல இசை ரசனையின் அபாயமான வெளிப்பாடு. தொடர்ந்து இதில் ஈடுபடும் இசைஞர்கள், ரசிகர்கள் சில வருடங்களில் தலை, நரம்பு தொடர்பான புதிய வியாதிகளுக்கு தங்களை தயார் செய்துகொள்வதாக மேற்குலகில் தற்போது கண்டுபிக்கப்பட்டுள்ளது. சில சமயங்களில் இது மரணம் வரை கூட செல்லலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் இந்தச் சாத்தியம் இது ஒரு மிகத் தீவிரமான பழக்கமாக மாறும்போதுதான். அதுவரை யாருமில்லா தனியறையில் பதவிசாக உட்கார்ந்துகொண்டோ படுத்துக்கொண்டோ உங்களுக்குப் பிடித்த பாடலைக் கேட்டபடி தலையாட்டிக்கொண்டிருப்பதில் எந்தவித ஆபத்தும் இல்லை.
அடுத்து: இசை விரும்பிகள் XXVI -கவிதைக் காற்று.