Sunday, 31 January 2016

ஒரே முகம்

தமிழ்த் திரையின் இரண்டு மகா நடிகர்களைப் பற்றிய சற்றே நீண்ட பதிவு. அல்லது சிலர் சொல்வதுபோல ஒரு சிறிய கட்டுரை. எனது பார்வையில் அவர்கள்.
 
                                                     
                                        


                                             ஒரே முகம் 

                                 

     இந்த  பொங்கல் விடுமுறையின் ஒரு  நாளில் (மாட்டுப் பொங்கல் என நினைவு)  டிவியில் இரண்டு படங்களை பார்க்க நேர்ந்தது. ஒன்று பழைய படம். மற்றது அதை விட ரொம்ப பழைய படம். திரைப்படங்களை வரிவரியாக விவரித்து மொத்தக் கதையையே சொல்லும் விதமான விமர்சனத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அன்று நான் பார்த்த அந்த இரண்டு படத்திற்கும்  இருப்பதுபோல தோன்றும் ஆனால் இல்லாத ஒரு   ஒற்றுமை என்னை இந்தப் பதிவை எழுதத் தூண்டியது. தவிர, மிக நீண்ட நாட்களாகவே இப்படியான ஒரு பதிவை எழுத நினைத்திருந்தேன். தமிழ்த்திரையின் இரண்டு பிரமாண்டமான ஆளுமைகள் குறித்து என் பார்வையை பதிவு செய்யவேண்டும் என்ற என்னுடைய விருப்ப விதைக்கு  தண்ணீரும் வெளிச்சமும் பாய்ச்சியது இந்தப் படங்கள். இந்தப் பொங்கலில் இந்த இரண்டு படங்களும் ஒரே தினத்தில் ஒளிபரப்பானது ஒரு எதேச்சையான ஆச்சர்யம். ஒரு திடும் திகைப்பு. உடனே என் மூளையின் நியூரான்களில் படிந்திருந்த அந்தப் பழைய எண்ணம்  உயிர் பெற்று எழுந்து என் விரல்களுக்குள் சென்று வார்த்தைகளாக வடிவம் பெற்றது.  

    நான் மேலே குறிப்பிட்ட அந்த இரண்டு படங்களில் முதலாவது  2008இல் வெளிவந்த கமலஹாசன் நடித்த தசாவதாரம். இரண்டாவது 1964இல் வந்த சிவாஜி நடித்த நவராத்திரி. ஒன்று  மேற்கத்திய சாயல் போர்த்திய அதீத அபத்தம். மற்றொன்று  நம் மண் மணம் வீசும் மகத்துவமான ஆச்சர்யம். இந்த இரண்டு படங்களும் வெவ்வேறு தளங்களில், பரிமாணங்களில் பயணித்து இரு துருவங்களான இலக்குகளை நோக்கி நகர்பவை.சொல்லப்போனால் ஒப்பீட்டளவில் இந்த இரண்டு படங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.  ஆனால் இரண்டுக்கும் உள்ள அந்த nonexistent similarity  என நான் குறிப்பிட்டது பல முகங்கள் காட்டும் ஒரு நடிகனின் தாகம் பற்றியது.  இந்த இரண்டு படங்களின் ஆதாரமான அம்சம் இதுவே.

    தசாவதாரம் ஒரு பேராசைக் கனவு. சிவாஜி என்ற மகா நடிகனின் உயரத்தைத் தாண்டியாக வேண்டும் என்ற  கமலஹாசனின் மன ஆழத்தில் உழன்று கொண்டிருக்கும்   நெருப்புக் கனலை   மட்டுமே  தசாவதாரத்தில் காட்சிக்குக் காட்சி காண முடிந்தது. நீ என்ன பெரிய ஆளா? நீ ஒன்பது வேஷம் கட்டினா நான் பத்து வேஷம் காட்டுவேன் என்ற சிறுபிள்ளைத்தனமான முஷ்டி மோதல் போல கமலஹாசன் இந்தப் படத்தைத் தீர்மானிக்கவில்லை என்று எண்ணத் தோன்றினாலும் அதுதான் இந்தப் படத்தின் பின்னே உறைந்திருக்கும் உண்மை. கமலஹாசனின் பகட்டான  மேதாவித்தனம் ஏகத்துக்கும் விரவிக்கிடக்கும் காட்சியமைப்புகளைக் கூட மன்னித்துவிடலாம். ஆனால் அவரது அந்த பத்து கதாபாத்திரங்கள் என்ற விபரீத விருப்பத்தை எந்தவித விமர்சனமும் செய்யாமல்  வெறுமனே வாயை மூடிக்கொண்டு கடந்து சென்றுவிட முடியாது.

     படம் வந்த போது அதை திரையரங்கில் பார்க்க சற்றும் விருப்பம் கொள்ளவில்லை. படம் பற்றிய விமர்சனங்கள் படித்தபோது நான் சிறு வயதில் படித்த வைரஸ் X என்ற ஒரு முத்துக் காமிக்ஸ் கதை என் நினைவுக்கு வந்தது. என் அபிமான காமிக்ஸ் கதாநாயகன் காரிகன் ஒரு கொள்ளைக்காரன் வேடம் கொண்டு எதிரிகளின் கையில் சிக்கிக்கொண்ட அபாயகரமான  அழிவுக் கிருமிகள் அடைக்கப்பட்ட ஒரு கண்ணாடிக் குப்பியை  வெற்றிகரமாக மீட்டு வரும் சாகசம் அது. இதை படமாக எடுத்தால் கண்டிப்பாக பிரமாதமாக இருக்கும் என்று அப்போது நினைத்ததுண்டு. கமலஹாசன் அந்தக் கதையை திருடி தசாவதரமாக்கி விட்டார் என்று நான் ஒரு டிபிகல் பின் நவீனத்துவ  சினிமா விமர்சகன் போல சொல்லப்போவதில்லை. படத்தின் இந்த ஒரு வரிக் கதை துடிப்பான காட்சிகளாக விரிந்து சிறப்பாக மெருகூட்டப் பெற்று  நம்மை வியப்பில் ஆழ்த்தியிருக்க வேண்டும். பரிதாபமாக தசாவதாரத்தில் அது நடைபெறவில்லை. மிஞ்சியது படத்தின் மீது ஏகமான வெறுப்பும் கமல் என்ற நார்சிஸ்ட் நடிகனின் செயற்கைத்தனமான நடிப்பின் மீது ஏளனமும், ஏமாற்றமும், எரிச்சலும்தான்.

       கமலின் அதி பயங்கர பாசாங்கான அறிவுஜீவித்தனம் அவ்வப்போது தலை காட்டினாலும் இறுதிக் காட்சியில் அந்த ஜப்பானியனும், அமெரிக்கனும் மோதிக்கொள்ளும் போது அவர்களின் உரையாடலில் அது தன் முகத்தை காட்டிவிடுகிறது.  அந்த அமெரிக்கன் "Remember Hiroshima?" என்பான். உடனே அந்த ஜப்பானியன் " Remember Pearl Harbour?" என்று பதில் சொல்வான். Allusion to Second World War. ஆனால் எத்தனை அபத்தமான உரையாடல்! திரையில் ஒரு அமெரிக்கனும் ஜப்பானியனும் சண்டை போட்டுக்கொண்டாலும் அந்த முகங்களுக்குப் பின்னே இந்த இரண்டு அழிவு நிகழ்வுகளின் வலிகளோடும் வேதனைகளோடும் கொஞ்சமும் தொடர்பில்லாத ஒருவனின் மனநிலை சிறுபிள்ளைத்தனமாக வெளிப்படுவதை கண்டு எனக்கு பரிதாபம் ஏற்பட்டது. இரண்டாம் உலகப் போரின் மிக மையமான இரண்டு நிகழ்வுகளை குறிப்பாக உணர்த்துகிறாராம்! இதெல்லாம் எனக்குத் தெரியும்டா என்ற தோரணை அதில் அலங்காரமாகத் தெரிகிறது.

   இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்காவும் ஜப்பானும் நெருக்கமாகி இரண்டு நாடுகளுக்கிடையில் வணிக அளவில் நட்புறவும், சந்தை லாபங்களும், நிதி உதவிகளும் ஏராளமாக பெருகின. அமெரிக்கா நேரடியாகவும் மறைமுகமாவும் ஜப்பானுக்கு பொருளாதார வகையில் உதவிக்கரம் நீட்டி தன் ஹிரோஷிமா கரையை துடைக்க முயன்றது. இன்று இந்த இரண்டு நாடுகளும் ஆத்மார்த்த நண்பர்கள். பேர்ல் ஹார்பரையும் ஹிரோஷிமாவையும் தாண்டிய நட்பு இன்று அவர்களுக்குள் சாத்தியமாயிருக்கிறது. இன்றைய தேதியில்  ஒரு ஜப்பானியனும் அமெரிக்கனும் சந்தித்துக்கொண்டால் அவர்களுக்குள் எழும் முதல் எண்ணம் ஹிரோஷிமா, பேர்ல் ஹார்பராக  இருக்கும் என்று நினைப்பது மகா மட்டமான மலிவான அரசியல் சிந்தனை.

   கமல் தேர்வு செய்த இந்தக் கதைக்கு பத்து கதாபாத்திரங்கள் பொருத்தமா என்ற கேள்வி வருகிறது. ஏனென்றால் இது போன்ற பத்து  கதாபாத்திரங்கள் செய்ய விரும்பியவருக்கு எந்த கதையிலும் அதற்கான தளம் இருக்கவே செய்கிறது. மேலும் பத்து என்ன இன்னும் கூட அதிகமான முகமூடிகளோடு அவர் அனைத்து கதாபாத்திரங்களையும்  செய்திருக்க முடியும் என்று தோன்றுகிறது. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷாக அவர் முகமூடி போட்டுக்கொண்டு நடிப்பதைப் பார்த்தபோது நாயகன் படத்தில் அத்தனை இயல்பாக நம்மை ஆட்கொண்டவர்தானா இவர் என்ற கேள்வி எழாமலில்லை. அசின் கூட படத்திற்கு தேவையில்லை. அந்த கூனிப் பாட்டி போல  (என்ன ஒரு பயங்கர மேக்கப்! அதுவும் அருகாமைக் காட்சிகளில் அருவருப்பாகத் தோன்றுகிறது.) அதையும் அவரே செய்திருக்கலாம். கமல் எத்தனை கமலடா என்று வியக்கும் அளவுக்கு அவரது  அராஜக அவதாரம் ஆக்ரோஷமாக ஆனந்தத் தாண்டவமாடுகிறது.  படம்  முடிந்து வெளியே வரும்போது நம் கண்ணில் தென்படும் எல்லோருமே கமலாக இருப்பார்களோ என்று சந்தேகம் வருகிறது என்று இந்தப் படத்தைப் பற்றி ஒரு பதிவர் எழுதியிருந்தார்.

    இந்தியன் படத்தில் கமல் தன் முகத்தின் மீது பூசிக்கொண்ட அந்த மேற்கத்திய முகமூடி தமிழுக்கு அன்றைய காலகட்டத்தில் மிகப் புதிது. அவர் அடைந்த வெற்றிக்கு அந்தத் தோற்றமும் அதற்கான பல மணி நேர வியப்பான உழைப்பும் மிக முக்கிய காரணிகள். அவ்வை ஷண்முகி என்று அவர் அடுத்த முறை பெண்ணாக பரிணமித்தபோது முதல் சலிப்பு ஏற்பட்டது. ஒரு ஆண் பெண்ணாக நடிப்பதென்பது ஒரு தீவிரமான ரசனை மிகுந்த கதைக்கு சற்றும் உதவாத துணை. பின்னர் மொட்டையாகத் தோன்றினார். தாடி வைத்துக்கொண்டு காந்தியைக்  கொல்ல விரைந்தார். முகத்தில் நீண்ட தழும்புடன் உண்மையான கண்ணாடி அணிந்துகொண்டு கடவுள் மறுப்பு பேசினார். அவ்வப்போது  மெட்ராஸ் தமிழில் தனக்கே உரித்தான நலிந்த நகைச்சுவையோடு சில படங்களில் தோன்றினார். பிரெஞ்ச் தாடி வைத்துக்கொண்டு கூத்தடித்தார்.  பிறகு "தசாவதாரம்" எடுத்தார். அது அவரது கோமாளித்தனத்தை வெளிச்சமாக்கியது. "விஸ்வரூபம்" எடுத்து தான் ஒரு சீரியசான ஜோக்கர் என்று நிரூபித்தார்.

  இது எல்லாவற்றையும் ஒரே வீச்சில் வீழ்த்தியது அவர் தனக்கு முன் இன்றுவரை விடாது பிடித்துக்கொண்டிருக்கும் மிக மிக அபத்தமான, மலிவான  அந்த உலகநாயகன் என்ற அடைமொழிதான்.  80களின் மத்தியில் இந்தியாவின் சிறந்த நடிகருக்கான பாரத் விருது அவருக்குக் கொடுக்கப்பட்டதும் தமிழகம் பெரியதாக உணர்ச்சிவசப்பட்டது. அவரது ரசிகர்கள் அவரை அடுத்து என்ன என்று கேட்க, அவர் ஆஸ்கார் என்று சொல்லாமல் சொல்ல, கமல் அன்றைய காலகட்டங்களில் ஆஸ்கார் நாயகன் என்றே அழைக்கப்பட்டார். பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், குணா போன்ற படங்கள் அவரது  ஆஸ்கர் ஆசையை மேன்மேலும் மேலே எடுத்துச் சென்றன. எண்பதுகளில் வாழ்ந்தவர்களுக்கு இந்த உண்மை மிக நன்றாகவே தெரியும். இந்தியாவிலிருந்து ஒரு நடிகன் ஆஸ்கர் விருது பெற்றால் அது கமலஹாசனாகத்தான் இருக்க முடியும் என்ற தமிழர்கள்  திடமாக நம்பியிருந்தார்கள்.  தவிர, கமலின் பேச்சுக்களும், வினோதமான சாகச முயற்சிகளும் அதை உறுதி செய்தவண்ணம் இருந்தன.

  ஆஸ்கர் என்பது அமெரிக்கர்கள் தங்கள் படங்களுக்குக் கொடுத்துக்கொள்ளும் ஒரு லோக்கல்  விருது என்பதும் அதில் சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற  ஒரே ஒரு பிரிவில் மட்டுமே மற்ற மொழித் திரைப்படங்கள் அனுமதிக்கப்பட்டு ஒரே ஒரு ஆஸ்கர் விருது  ஆங்கிலமல்லாத ஒரு திரைப்படத்திற்கு வழங்கப்படும் என்ற நிதர்சனமும்  வெளியே தெரியவந்தபோது கமலஹாசனுக்கு ஆஸ்கார் நாயகன் என்ற அந்தப் அடைமொழியின் மீது கடுமையான ஆத்திரம் ஏற்பட்டிருக்கவேண்டும்.  90களின் மத்தியில் அவர் பேச்சில் ஆஸ்கர் கனவு பற்றிய குறியீடு ஏளனமும் நக்கலுமாக வெளிப்பட்டது.  இதற்குள் ஆஸ்கார் நாயகனுக்கும் மேலே அவர் ஆசைப்பட்ட அடைமொழியாக உலக நாயகன் என்ற புதிய பட்டம்  கமலின் நார்சிஸ்ட் மனோபாவத்திற்கு பொருத்தமாக அமைந்துவிட்டது.  நான் ஆஸ்கருகும் மேலே என்று வழக்கமாக யாருக்கும் எளிதில் புரிந்துவிடாது கவனமாகப் பேசும் பாணியில் மக்களுக்குப் புரியவைத்தார்.

      இதற்கிடையில் சற்றும் சத்தமில்லாமல் ஒரு தமிழன் மெட்ராசிலிருந்து, லண்டன் வழியே லாஸ் ஏஞ்செலஸ்சை தன் இசையால் அடைந்தான். அவன் கைகளில் இரண்டு ஆஸ்கர் விருதுகள் தஞ்சமடைந்தபோது கண்டிப்பாக தமிழகத்தில் இருவருக்கு தூக்கம்  தூரமாக இருந்திருக்க வேண்டும். அந்த இருவரில் ஒருவர் யார் என்று நான் சொல்லத்தேவையில்லை. அவர் பற்றி பேசினால் இதைப் படிக்கும் பலருக்கு தூக்கம் போய்விடும்.  அது தமிழகமே அறிந்த உண்மை. மற்றவர் ஆஸ்கார் நாயகன் என்று தன் ரசிகர்களால் மிக பெருமையுடன் அழைக்கப்பட்ட கமலஹாசன். ரஹ்மானை ஆஸ்கருக்காக கமலஹாசன் பாராட்டவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட பின்னரே --அதிலும் தன்னுடைய முத்திரை நையாண்டியுடன்தான் -- அவரால் அதைச் செய்ய முடிந்தது என்ற நிகழ்வே இதற்குச்  சான்று.

  கமல் என்ற பன்முகம் கொண்ட ஆளுமையின் மீது நான் நடத்தும் ஏவுகணைத் தாக்குதல் அல்ல இது. அவர் வட்டம் வெறும் நடிப்பு என்று முடிவடைவதில்லை. புதிய இலக்குகளை நோக்கி அவரது சுழற்சி பாய்ந்துகொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் நடனம் என்றால் அது கமல்தான் என்ற விதி தமிழ்த் திரையில் இருந்தது. பிரபுதேவாவின் பிரவேசத்திற்குப் பிறகு கமல் நடனமாடுவதை ஏகத்துக்கும்  குறைத்துவிட்டார். அதைப் பற்றி பேசுவதே கிடையாது. இப்போது கமல் நன்றாக நடனம் ஆடுவார் என்பது பலருக்கு ஒரு புதிய தகவலாக இருக்கலாம். உத்தம வில்லன் படத்தின் துவக்கத்தில் அவர் போடும் அந்த இளமை ததும்பும் நடனத்தை அவரது ரசிகர்களே "இதெல்லாம் இவருக்கு தேவையா?"என்றே பார்த்தார்கள்.

   நடனம், நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, பாடல், இசை, ஒளிப்பதிவு, போன்ற தளங்களும் சினிமாவின் பின்னணியில் இருக்கும் நுட்பங்களும், நவீன அறிவியல் பார்வையும், சமூக கண்ணோட்டமும், வணிக வெற்றியை மட்டுமே எண்ணாத கலைத் தாகமும், தமிழ் சினிமாவை வேகமாக வேறு கட்டங்களுக்கு  நகர்த்த விரும்பும் வெறியும், இன்ன பிற சாகச சிந்தனைகளும், அபிலாஷைகளும் ஒருங்கே தனக்குள் அடக்கிவைத்திருப்பவர் கமல். எல்லாம் இருந்தாலும் பிரதானமாக அவர் ஒரு நடிகர். அவரின்  அந்த ஒரு முகத்தை மட்டுமே என்னால் விமர்சனத்திற்கு உட்படுத்தமுடியும்.

    தான் செல்லவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருப்பதாக அவர் சொல்வதன் மூலம்  நம்மை மூர்ச்சையடைய வைக்கும் ஏராளமான பரிசோதனைகளுக்கு அவர் இன்னும் தயாராக இருப்பதாக நாம் அர்த்தம் செய்துகொள்ளலாம். வாழ்த்துக்கள் என்ற ஒரு வார்த்தையோடு நான் சற்று விலகிக் கொள்கிறேன்.

      நான்  இத்தனை விமர்சித்தாலும் ஒரு முரணாக என் பள்ளிக் காலங்களில் என் அபிமானத்துக்குரிய  ஒரே நடிகனாக இருந்தவர்  இதே  கமலஹாசன்தான். சிறுவர்களுக்கே உரிய ரசனையின் வெளிப்பாடாக  ரஜினிகாந்த்தின் கோமாளித்தனமான வித்தைகள் மீது துவக்கத்தில் ஈர்ப்பு இருந்தாலும் சலங்கை ஒலியில் கமலஹாசனின் நடிப்பு என் மீது புதிய கவிதை எழுதியது. எனது விழிகள் வியப்பில் மூழ்கின. இதாண்டா நடிப்பு என்று குதியாட்டம் போடாமல் மென்மையாக, அமைதியாக  எனக்குப் பிடித்த நடிகன் என மானசீகமாக என் மனதில் அவர் பெயரை வரைந்துகொண்டேன். மூன்றாம் பிறை படத்தை கல்லூரி நாட்களில்தான் பார்க்க முடிந்தது. (அதுவரை அதைப் பார்ப்பதற்கு   வீட்டில் எனக்குத் தடை இருந்தது.) அது கமல் என்ற பிம்பத்தின் மீது மற்றொரு மகுடம் சூட்டியது. இத்தனை இயல்பாக நடிக்கக் கூடிய ஒரே நடிகன் கமல்தான் என்ற எனது எண்ணம் வலுப்பெற்றது. அந்த சமயத்தில் கமல் மிகவும் அலட்டலாக  நடித்த விக்ரம்  கூட எனக்குப் பிடித்திருந்தது.  அவர் மீது ஒரு அடர்த்தியான அபிமானம் அசைவற்று நின்றது.   அதன் விளைவாக கீழ் கண்ட உரையாடல்கள் சாத்தியமாயின.

நண்பர்கள்;  சிவாஜி என்னாமா நடிக்கிறான் பாரு? சிவாஜிய அடிச்சுக்க ஆளே கிடையாது.
நான்; சிவாஜியெல்லாம் ஒரு நடிகனா? அலட்டல் நடிப்பு. அழுதுகிட்டேயிருப்பான்.
நண்பர்கள்;  நீ சிவாஜி படம் ஏதாவது பார்த்திருக்கியா?
நான்;  ஏ இல்ல? லாரி டிரைவர் ராஜாக் கண்ணு, திரிசூலம், வெற்றிக்கு ஒருவன், ரத்த பாசம்,கருடா சௌக்கியமா?, சந்திப்பு, சங்கிலி, ...
நண்பர்கள்;  பழைய படம் ஏதாவது?
நான்;  இத பாத்தே பாதி செத்தாச்சு. இதில அது வேறயா?
நண்பர்கள்;  வேற யார் தாண்டா நல்லா நடிக்கிறா?
நான்;  கமல்.
நண்பர்கள்;  சிவாஜியை  விடவா?
நான்;   ஆமா. சிவாஜியை விட கமல் நல்லாவே நடிக்கிறான். அவந்தாண்டா நடிகன்.

   ஜோசப் கல்லூரியில் படித்தபோது இது போன்று  நண்பர்களை ஆத்திரமூட்டும் உரையாடல்கள் எனக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று. என்னை அவர்கள் சற்று விநோதமாகவே  பார்ப்பார்கள். ஒருமுறை ஒரு கூட்டம் "இவன்தாண்டா சிவாஜிக்கு நடிக்கவே தெரியாதுன்னு சொல்றவன்." என்று என்னை குறிப்பிட்டது என் காதில் தெளிவாக விழுந்தது. அது  எனக்குப் பெருமையாகக்  கூட இருந்தது. விடுதியில் அவ்வப்போது பெரிய திரை கட்டி பழைய படங்கள் காட்டுவார்கள். கலர் படமா, கருப்பு வெள்ளைப் படமா என்பதே அப்போது கேட்கப்படும் ஒரே கேள்வி.  கருப்பு வெள்ளை என்றால் பாதி ஹாஸ்டல் காலியாக இருக்கும். உல்லாசப் பறவைகள், காதலிக்க நேரமில்லை என்ற சில படங்களே இப்போது என் நினைவில் இருக்கின்றன. ஒரு முறை தெய்வ மகன் படம் திரையிடப்பட்டது. அதில் சிவாஜி தோன்றும் சமயங்களில் என் நண்பர்கள் என்னையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். எனக்கோ சிவாஜியின் நடிப்பைக் காட்டிலும் இவர்களின் ஆர்வம் அதிக வெறுப்பைக் கொடுக்கும். "அங்க பாருங்கடா" என்று எரிச்சலடைவேன். அதில் மூன்று சிவாஜிகளும் ஒரே காட்சியில் தோன்றும் அந்தக் காட்சியை கண்டு என் நண்பர்கள்,"இதுக்கு என்ன சொல்ற?" என்றார்கள். "முதலில் சிவாஜியை அழாமல் நடிக்கச் சொல்லுங்கள். பிறகு பார்க்கலாம்." என்றேன்.

      சிவாஜியை விட கமல் ஒரு சிறந்த நடிகன் என்ற என் கருத்துக்கு பெரிய அங்கீகாரம் நாயகன் படம் வெளிவந்ததும் கிடைத்தது. அதுவரை என்னை ஏளனமாகப் பார்த்த பலரது பார்வை நாயகன் வந்த பிறகு முற்றிலும் மாறிவிட்டது.  மிகத் தீவிர கமல் வெறியனான   என் அறைத்தோழன்,  "நீங்க அப்பவே கரெக்டா சொன்னீங்க" என்று எனக்கு மிகுந்த மரியாதை கொடுக்க ஆரம்பித்துவிட்டான். அதுவரை தானே சாப்பிட்டுக்கொண்டிருந்த பிஸ்கட், காராசேவு, பக்கோடா  போன்ற வஸ்துக்களை அதன் பின் தயக்கமில்லாமல் என்னுடன் பகிர்ந்துகொண்டான்.  நான் அவனுடன் ஒரே அறையில் இருப்பதை அவன் எதோ பெருமை போல சொல்வான். அப்போது நான் ஆங்கிலப் பாடல்களை துரத்தித் துரத்தி வேட்டையாடிக்கொண்டிருந்த நேரம். "என் வயதுக்கு  கமல்தான் சரி. சிவாஜி ஒரு பழங்கஞ்சி" என்ற குறியீடு எனது பேச்சில், நடவடிக்கைகளில் வெளிப்படும்.

       நாயகனுக்குப் பிறகு தொடர்ச்சியாக கமல் வேறு பாதையில் செல்லத் துவங்கினார். சத்யா, பேசும் படம், மைக்கல் மதன காமராஜன் என அவரது அடுத்த பரிணாமம் அவரை மேலும் பல உயரங்களுக்கு எடுத்துச் சென்றது. மதிப்பீட்டளவில்  கமல் என் மனதில் மிக உயர்ந்த இடத்தில் இருந்தார். எப்போது இந்த அபிமானம் அகன்றது என்று மிகத் துல்லியமாக சொல்ல முடியாவிட்டாலும், அவரது பாசாங்கு, பகட்டான அறிவுஜீவித்தனம், தன்னையே முன்னிறுத்திக்கொள்ளும் பக்குவமற்ற போக்கு, ஆங்கில நடிகர்களை --குறிப்பாக Al Pacino ---நகல் எடுக்கும் நடிப்பு என்று பலவிதமான கரைகள் அவர்மீது கொஞ்சம் கொஞ்சமாக எனக்குத் தோன்றின.  குணா படத்தில் வியப்பும், அலுப்பும் ஒரு சேர உண்டானது. ஆளவந்தான் என்ற படத்தில் அவர் தான் ஒரு  நார்சிஸ்ட் என்பதை கோடிகளில் விளம்பரம், வியாபாரம் செய்தார். அந்தப் படத்தை இன்றுவரை நான் முழுவதும் பார்த்தது கிடையாது. தசாவதாரம் அதன் அடுத்த கட்டம். விஸ்வரூபம், உத்தம வில்லன், தூங்காவனம் அவரது நார்சிஸம் படத்துக்குப் படம் விரிவடைந்து கொண்டே போகிறது. அவரிடத்தில்  ஒரு நிழல் நிஜமாகிறது, அவள் அப்படித்தான், சலங்கை ஒலி, நாயகன் ஏன் கலைஞன், குரு  போன்ற படங்களில் நடித்த அந்தக் கமலின் நிழல் தெரிந்தால் கூட நான் அதிகம் மகிழ்ச்சியடைவேன். ஆனால் அவர் அந்தச் சாலைகளை விட்டு ஹைவேயில் பயனித்துக்கொண்டிருப்பது போல தோன்றுகிறது.

    சொல்லப்போனால்  கடைசியாக  ஒரு இயல்பான கமலஹாசனை திரையில் நான் பார்த்தது மகாநதி படத்தில்தான் என்று நினைக்கிறேன். பல காட்சிகளில் அவரது யதார்த்தமான நடிப்பு எனக்குள் ஆச்சர்ய வலிகளை ஏற்படுத்தியது. திணிக்கப்பட்ட வன்முறைக் காட்சிகளை சற்று நடைமுறைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்திருந்தால் மகாநதி தமிழின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக விமர்சனங்களின்றி கொண்டாடப்பட்டிருக்கும். கமலின் நடிப்பு அதில் பல்லாயிரம் பாராட்டுகளுக்கு உரியது. மிக இயல்பாக நடிக்கக்கூடிய ஒரு அபாரமான நடிகன்தான் அவர்.   இருந்தும்  அவர் தன் பாதையை இவ்வாறான மனதைச் சுண்டும் கதைகளையும் கதாபாத்திரங்களையும் நோக்கித்  திருப்பாவிட்டால் என்றைக்கும் அவரது சிறந்த இறுதிப்  படம் இதே மகாநதியாகத்தான் இருக்கும்.

         இப்போது நான் மற்றொரு நடிகன் பற்றிய எனது பார்வையையும்  இங்கு பதிவு செய்தால்தான் இந்தக் கட்டுரைக்கு ஒரு முழுமை கிடைக்கும். தசாவதாரம் எவ்வாறு நவராத்திரியை மனதில் ஒப்பீடு செய்யத் தூண்டுகிறதோ அதேபோல கமலின் நடிப்பு பற்றிய விவாதத்தில் நம்மால் சிவாஜியை அப்புறப்படுத்திவிட்டு மேலே தொடர்ந்து பேச முடியாது. சிவாஜியின் நீட்சியாக கமல் இருக்கிறாரா இல்லையா அல்லது அவரைத் தாண்டிவிட்டாரா என்பதல்ல இங்கே விவாதிக்கப்படும் செய்தி.

     50 களிலிருந்து ஆரம்ப 80கள் வரை  முப்பது வருடங்கள் சிவாஜியின் திரை ஆளுமை மிக மிக விஸ்தாரமான வீச்சு கொண்டது. அந்த காலகட்டத்தில் சிவாஜியின் பாதிப்பின்றி நடிப்பு சாத்தியப்பட்டது இவருக்குத்தான். ஒருவர் எம் ஆர் ராதா, மற்றொருவர் எம் ஜி ஆர். மூன்றாவதாக எஸ் வி ரங்காராவை குறிப்பிடலாம். மற்ற எல்லோரிடத்திலும் எதோ ஒரு அசைவில் சிவாஜியின் நிழல் அசந்தர்ப்பமாகத் தெரிந்துவிடும். ரஜினிகாந்தின் துவக்ககால ஸ்டைல் கூட சிவாஜி என்ற மரத்திலிருந்து உதிர்ந்த சில இலைகளே. கமல் மிக முயன்று தன்னை வேறு விதமாக செதுக்கிக் கொண்டவர்.

      நான் இந்தப் பதிவில் எழுதியபடி சிவாஜியை நான் அறிந்தது அவருடைய பிற்கால எழுபதுகள் சார்ந்த படங்கள் மூலமாகத்தான். எப்படி மைக்கல் ஜேக்சனின் பத்துப் பாடல்களைக் கேட்டுவிட்டு ஆங்கில இசையை விமர்சிப்பது முட்டாள்தனமோ அதே போன்றதுதான் சிவாஜி ஏதோ வந்துவிட்டுப் போன எழுபதுகளில் வந்த படங்கள் மூலம் அவர் பற்றிய ஒரு வரைபடத்தை வரைவதும். ரத்தபாசமும் லாரி டிரைவர் ராஜாக்கண்ணும் சிவாஜியின் ஆதாரமான அந்த ஆச்சர்யமூட்டும் நடிப்பை ஒரு புள்ளியளவும் பிரதிபலிக்கும்  படங்களல்ல. அவை வெறும் குப்பைகள். ஆனால் இவ்வாறான படங்கள் மூலமே சிவாஜியை அறிந்த ஒருவனுக்கு அந்த நடிப்பு மிகுந்த வெறுப்பையும், சலிப்பையுமே கொடுக்கும். நான் சிவாஜியைப் பார்த்தது அப்படித்தான்.

       தன் தந்தை காங்கிரஸ் அபிமானியாக இருந்ததால் அந்த பாதிப்பில் என் மிக நெருங்கிய நண்பன் தன்னை ஒரு சிவாஜி ரசிகனாகக் காட்டிக்கொண்டான். ஆனால் எங்கள் வட்டத்திற்குள் வந்த கொஞ்ச நாட்களிலேயே சிவாஜியைத் துறந்து ரஜினிகாந்த் பக்கம் வந்துவிட்டான். அதன்பின் கடைசி வரை அவன் அபிமானம் மாறவேயில்லை. அவனுடன் சேர்ந்து ஒரு சில சிவாஜி படங்கள் பார்த்த அனுவபம் மறக்கவே முடியாதது.  மூன்று மணி நேரப் படத்தில் இரண்டரை மணி நேரம் நாங்கள் செய்யும் கேலியும் கிண்டலும்தான் நாங்கள் அந்தப் படங்களுக்குச் செலவு செய்ததன் ஒரே திருப்தி. படம் முடிந்து வரும் போது,"பேசாம இந்தப் பட  போஸ்டரப் பாத்துட்டு அப்படியே போயிருக்கலாம்." என்பான் அவன்.

    ஒரு முறை  சிவாஜியின் நடிப்பை மிகக் காரமாக ஒரு சிறுவனுக்கே உரித்தான கேலியுடன்  மரியாதை குன்றிய வார்த்தைகளுடன்   பிய்த்துக்  குதறிக் கொண்டிருந்தபோது என் தந்தை குறுக்கிட்டு, "சிவாஜியைப் பற்றி உனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்." என்றார் கொஞ்சம் வருத்தத்துடன். "அவனெல்லாம் அப்பவே நடிச்சு முடிச்சுட்டான்டா. இப்ப நடிக்கிறத பாத்துட்டு நீ இப்படி பேசறதெல்லாம் ரொம்ப தப்பு.  இது அவனுடைய மிச்சம் மீதி. சிவாஜியுடைய நடிப்பை பார்க்கணும்னா அவன் நடிச்ச  பழைய படங்கள் பாரு." என்றார்.

    "ஏதாவது ஒரு படம் சொல்லுங்கள்." என்றேன்.  என் தந்தை நொடி நேரம் கூட யோசிக்காது ஒரு படத்தைப் பரிந்துரைத்தார். "உத்தம புத்திரன்."
     
     பார்த்தேன். பதினைந்து வருடங்கள் கழித்து. ஆனால் அது உத்தம புத்திரனல்ல.

  1994ஆம் ஆண்டு என்று நினைவு. வட மாநிலம் ஒன்றில் தனியாகத் தங்கியிருந்தபோது என் அயலான் என்னை ஒரு நாள் மதியம் திடீரெனெ அழைத்தார். அவர் ஹிந்தி, பெங்காலி, மற்றும் எனக்குப் பெயரே தெரியாத மற்றொரு மொழி பேசுபவர். "டிவியில் உங்கள் மொழிப் படம் ஒன்று ஓடுகிறது. தமிழ் என்றதும் எனக்கு உங்கள் ஞாபகம் வந்தது. வந்து பாருங்கள்." என்று உற்சாகமாகச் சொன்னார். ரோஜா வெளிவந்து இந்தியாவே அதன் நறுமணத்தில் நனைந்திருந்த நேரம். ஒருவேளை அதுவாக இருக்கலாம் என்று நினைத்துச்  சென்ற நான், கண்டது ஒரு மிகப் பழைய கருப்பு வெள்ளைப் படம்.

   21 இன்ச் சிறிய டிவி திரையில் சிவாஜி கொடூரமான முக பாவத்தோடு வசனம் பேசியபடி இருந்தார். பார்த்ததும் பரவசமானேன். அது போன்ற சூழலில், தமிழ்நாட்டைவிட்டு ஐயாயிரம் மைல் தொலைவில் தமிழைக் கேட்பதே ஆனந்தம் என்றால், சிவாஜி உச்சரிக்கும் தமிழ் என்ன செய்யும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.  ஒரு புதிய மாற்றம் என்னை நகரவிடாமல் தடுத்தது. காட்சிக்குக் காட்சி சிவாஜியின் முகத்தில் தோன்றி மறையும் மின்னல் உணர்ச்சிகளும், வசனத்தின் தகிக்கும் அனலும், அதை அவர் மேலே எடுத்துச் செல்லும் adrenaline rush   வேகமும் .... ஒரே ஒரு உணர்ச்சிதான்  என்னிடமிருந்தது...... பிரமிப்பு!  சிவாஜி பற்றி நான் கிறுக்கி வைத்திருந்த என் மன ஓவியம் சட்டென கசங்கிக் கலைந்தது. அவர் பற்றி என்னிடமிருந்த போலித்தனமான கட்டமைப்புகள் நொடியில் உடைந்து நொறுங்கின. சிவாஜி பற்றிய எனது மதிப்பீடுகளை நான் உடனே  மறுபரிசீலனைக்குட்படுத்தினேன்.

  அந்த நாள் படத்தின் இறுதிக் காட்சியைத்தான் நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.  பார்த்ததும் வியப்பில் விழுந்தேன். என்ன ஒரு அசுர நடிகன் என்ற எண்ணம் என் உள்ளதிலிருந்த சில  நடிகர்களின் முகங்களை அமிலம் போல கரைத்தது. அவர் பெயர் இவர் பெயர் என என் மனதில் நான் எழுதிவைத்திருந்த சிறந்த நடிகர்கள் எல்லோருடைய பெயரும் ஒரே கணத்தில் காணாமல் போனது.

        அந்த நாள் தமிழில் வந்த மிகச் சிறந்த இரண்டு படங்களில் ஒன்று. திரும்பிப் பார்க்கும்போது அன்றைய நாளில் இதுபோன்றதொரு  கதைக் களம் சாத்தியப்பட்டதே ஒரு அதிசயம்தான்.  முதன் முதலாக ப்ளாஷ் பேக் என்ற கதை சொல்லும் நவீன பாணி, (இது ஜப்பானிய ரோஷமான் படத்தின் தாக்கம். காப்பி கிடையாது)  பாடல்களே இல்லாத படம், anti-hero  subject, மனைவி கணவனைக் கொல்லும் கலாச்சார அதிர்ச்சி (உண்மையில்  நீயா நானா என்ற போராட்டத்தில் துப்பாக்கி தானே வெடித்தது என்று சமரசம் செய்துகொண்டாலும்) என புதுமையின் முத்திரையாக அந்த நாள் அறிமுகமானது. பெரிய வெற்றியடையவில்லை என்று சொல்லக் கேள்வி. இருந்தாலென்ன?  தமிழ் சினிமாவின் நிரந்தமான இடங்களில்  அந்த நாள் நேற்றல்ல இன்றல்ல நாளையும் இருக்கும்.

        இந்தியா விடுதலையடைந்து ஏறக்குறைய எழுபது ஆண்டுகள் ஆன பின்பும் நமது கதாநாயகர்கள் இன்னும் தேச பக்தர்களாக திரையில் வீரம், சூரம் காட்டிக்கொண்டு திரைக்குப் பின்னே,"நான் இந்த நாட்டை விட்டே வெளியேறிவிடுவேன்" என்று கண்ணீர் காட்டும் வேளையில்,  இந்திய தேசம் விடுதலையடைந்து  ஏழே வருடங்களில் ஒரு படு பயங்கரமான தேச விரோதியாக, தன் நாட்டையே அழிக்க எண்ணும் துரோகியாக அப்போது வளர்ந்து வந்த  ஒரு கதாநாயக நடிகன் நடிக்கத் துணிய  அவனை எந்த உந்து சக்தி செலுத்தியிருக்க முடியும்?  தங்கள் ஓட்டம் முடிந்ததும் கதாநாயகர்கள் கொடியவர்களாக நடிப்பதில் நவீனம் எதுவுமில்லை. இயல்பானதுதான். ஆனால் சிவாஜியின் முதல் படமே அவரை தமிழகத்தின் தலைப்புச் செய்தியாக்கியது. ஒரே படத்தில் அவர் கதாநாயகன் என்ற உயரத்திற்குச் சென்றவர். இரண்டு வருடம் கழித்து தமிழில் ஒரு புது முயற்சியாக பாடல்கள் இல்லாமல் வெளிவரயிருக்கும் ஒரு படத்தில் ஒரு பெண் பித்தனாக, துரோகம் செய்யும் கணவனாக,  தேச விரோதியாக நடிக்க  எந்தக்  கதாநாயகன் துணிவான்?

    நடிப்பைப் புசிக்கும்  ஒரு நடிகனுக்கு  மட்டுமே இது போன்ற விபரீதத் தேர்வுகள் சாத்தியம்.

     திருவிழா தினத்து டிவி நிகழ்சிகளில் ,"நடிப்பைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது. சினிமா சினிமா சினிமாதான் என் மூச்சு." என்று பேசும் மக்கள் மறந்துபோன அல்லது காணாமல் போகப் போகிற நடிகர்கள் சொல்வதைக் கேட்கும்போது ஏளனமாக இருக்கிறது. நடிப்பைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது என்று சொல்லக்கூடிய திமிர் அல்லது திடம் இங்கே ஒரே ஒரு நடிகனுக்கு மட்டும்தான் உண்டு. அது  சிவாஜி ஒருவர்தான். மற்ற எல்லோருக்கும் வேறு வேறு சௌகரிய சந்தோஷங்கள் இருக்கின்றன. ஆசைகள் இருக்கின்றன. கனவுகள் இருக்கின்றன. கமல் கூட இன்று இந்த வசனத்தைப் பேச முடியாத வகையில் சினிமாவின் சிக்கலான உள் ஆழங்களுக்குள்  சென்று கொண்டிருக்கிறார்.

     கர்ணன், தெய்வமகன், ஆலய மணி, திருவிளையாடல், புதிய பறவை போன்ற சில படங்களைத் தவிர நான் சிவாஜியின் மிகச் சிறப்பான படங்கள் எதையும் திரையரங்குகளின்  அகன்ற திரையில் பார்த்ததில்லை. ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மன், பராசக்தி, மனோகரா, உத்தம புத்திரன், பாசமலர், ராஜா ராணி,உயர்ந்த மனிதன் போன்ற படங்களை திரையையரங்குகளில் மக்கள் எப்படிக் கொண்டாடியிருப்பார்கள் என்ற எண்ணம் ஏக்கம் படிந்த உணர்வாக என்னில் நிலைத்துள்ளது.

     சிவாஜியின் நடிப்புத் திறனுக்குச் சான்றாக அவர் நடித்த படங்களைக் குறிப்பிட்டு அந்தக் காட்சிகளை விவரிக்கும் அபிமானம், திறமை என்னிடமில்லை.  அதை தீவிர சிவாஜி ரசிகர்கள் செய்தபடி இருக்கிறார்கள். கௌரவம் படத்தில் மெழுகுவர்த்தி எரிகின்றது பாடலில் சிவாஜியின் சட்டை கூட நடிக்கும் என்று ஒரு சிவாஜி அபிமானி எழுதியிருந்தார்.  நான் அந்தப் பக்கமாக செல்லப் போவதில்லை. அது சற்று மிகையானது.

       சிவாஜியின் அசைவுகள் மிகுந்த பிரசித்திப் பெற்றவை.  துப்பாக்கி கொண்டு தன் கண்ணீரைத் துடைத்துக்கொள்ளும் யதார்த்தம், ராணியம்மா மனசு வச்சா எதுவும் நடக்குமம்மா(?) என்று காட்டும் காதல் சேஷ்டை, ஞான ஒளியின் அதே ஆண்டனி என உச்சரிக்கும் தொனி, உயர்ந்த மனிதன் படத்தின் டூத்பிக் கொண்டு வாயை குத்திக்கொண்டே பேசும் பாணி, நவராத்திரியின் அந்த  பாகவதர் தோரணை, தில்லானா மோகனாம்பாள் படத்தில் காட்டும் மிடுக்கு, மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் ஒரு பெரிய மனிதனின் மிகையற்ற இயல்பு,  திருவிளையாடலின் கம்பீரம், தெய்வ மகனின் அந்த இயலாமை என ஒன்றன் பின் ஒன்றாக அடுக்க முடிந்தாலும் ஒரே ஒரு காட்சியை மட்டும் என்னால் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

     பாசமலர் படத்தில் ஜெமினியுடனான அந்த  ஆக்ரோஷமான விவாதத்தின் இறுதியில் சிவாஜி உச்ச ஸ்தாயிலிருந்து தன் குரல், பாவம், தோற்றம் எல்லாவற்றையும் நொடியில் கீழிறக்கி, அளவற்ற வெறுப்புடன் ஆனால் மிக அமைதியாக  get out என்று சொல்லும் அந்த அசாதாரண நேர்த்தி யாராலும் பிரதியெடுக்க முடியாத அபாரம்.   Class!  

      யார்றா சிவாஜி என்று நக்கலாக கேட்கும் நபர்களின் வாயடைக்கும் விதத்தில் இதாண்டா சிவாஜி என்று பதிலளிக்கும் வகை ஸ்டைல் பல அவரிடத்தில்  உண்டு.  ஒரு பதிவு போதாது.

      நான் வழக்கமாக ஆங்கில இசைத் தொகுப்புகளை பதிவு செய்யும் எக்மோரில் உள்ள ஒரு பதிவகத்தில் ஒரு முறை அதன் உரிமையாளருடன் இசை, சினிமா பற்றி உரையாடிக்கொண்டிருந்தேன். அது கமலின் தசாவதாரம் படம் வந்த சமயம். பேச்சின் நடுவே தசாவதாரம் குறித்து எனது பார்வையை முன்வைத்தேன். நான் பேசிக்கொண்டிருந்த அந்த பதிவகத்தின்  உரிமையாளர் ஒரு மேல் தட்டு, ஆங்கில இசையின் பால் அதிக பரிச்சயம் கொண்ட நபர். பொதுவாக எங்கள் உரையாடல் ஆங்கிலத்திலேயேதான் இருக்கும்.

       நான்-    கமலின் தசாவதாரம் பார்த்தீர்களா?
       அவர்-    பேன்சி டிரெஸ் காம்பெடிஷன்.
    நான்-      சிவாஜி நவராத்திரியில் ஒன்பது வேடங்கள் செய்தார். உங்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. கமல் அதை முறியடிக்க பத்து வேடம் போடுகிறார் போல.
  அவர்-  நவராத்திரியின் அருகே இந்தப் படம் வரவே முடியாது.   அதன்  நேட்டிவிட்டி தசாவதாரத்தில் கொஞ்சமும் கிடையாது.
          நான்-    நவராத்திரி படம் பார்த்திருக்கிறீர்களா?
  அவர்- பின்னே?  என்ன ஒரு படம் அது? அதில் வரும் ஒன்பது கதாபாத்திரங்களும்   நம் ஒவ்வொரு உணர்ச்சியின் வெளிப்பாடு. கமல் செய்தது வெறும் முகமூடி அணிந்துகொண்டு முக பாவங்கள் இல்லாத உயிற்ற நடிப்பு.
    நான்-  நீங்கள் தமிழ்ப் படம் பார்ப்பீர்கள் என்று இன்றுதான் தெரிந்தது. அதிலும் பழைய படங்கள்- என்னைப் போலவே.
         அவர்-    சிவாஜி போல ஒரு நடிகர் வருவதென்பது ஆச்சர்யமானது.

 நான்தான் ஆச்சர்யப்பட்டேன். நான் சற்றும் எதிர்பார்க்காத ஒரு மூலையிலிருந்து சிவாஜி குறித்து இப்படியான சிந்தனை வெளிப்படும் என்று.

      2003 என்று நினைக்கிறேன். எனது உறவினர் ஒருவருடனான  சினிமா தொடர்பான உரையாடலின்போது ; "இப்போது உங்களிடம் ஒரு உண்மையை சொல்லப் போகிறேன்" என்றேன் மிகத் தீவிரமாக. "சொல்." என்றார் அவர் சிரத்தையுடன். ஏற்படுத்திக்கொண்ட தாமதத்திற்குப் பிறகு  "சிவாஜி நன்றாக நடிக்கிறார்." என்றேன். ஏனென்றால் சிவாஜிக்கு நடிக்கத் தெரியாது என்று அவரிடமே பலமுறை  விவாதித்திருக்கிறேன் பள்ளி நாட்களில். எனவே அவரது எதிர்வினை என்னவாக இருக்கும் என்று அறிய ஆவலாக இருந்தது. என்னைப் பார்த்து நக்கலாக சிரித்துவிட்டு அவர் சொன்னார்; "நீ தமிழன்னு வெளிய சொல்லாதே."  அவர் வீட்டை விட்டு அகலும் சமயத்தில் என் தோளைத் தட்டி, "அடுத்த தடவ வரப்ப பாகவதர் பத்தி எதுவும் உண்மையை என்கிட்டே சொல்லிடாதே. இந்த அதிர்ச்சியே ஒரு வருஷம் தாங்கும்." என்றார்.

     போதிக்கப்பட்ட அபிமானம், ரசனை, பாதிப்பு எனக்குப் பிடிக்காத ஒன்று. நானாக அறிந்துகொண்ட பின்னரே எதைப் பற்றியுமான  ஒரு கருத்து என் மனதில் உருப்பெறும். சிவாஜி, எம் எஸ் வி போன்றவர்களை நோக்கி நான் நகர்ந்தது இந்த தீப்பொறி என்னைத் தீண்டியதால்தான். பலவிதமான கருத்துக்களையும், போதனைகளையும், கற்பிதங்களையும், விதிகளையும், கோட்பாடுகளையும், கனவுகளையும், புனைவுகளையும், சேமிக்கும் காலம் ஒன்று உண்டு. ஆனால் மனது அலைபாய்வதிலிருந்து விடுதலை பெற்றதும் வாழ்வின் பல இயக்கங்களுக்கான காரணத்தை  நாம் நாமாகவே உருவாக்கிக் கொள்கிறோம். அது யாரிடமிருந்தும் கடன் பெற்ற கருத்தாக இருப்பதில் நமக்கு உடன்பாடு இருப்பதில்லை.

         தற்போது சிவாஜி ஒரு மிகையாக நடிக்கும் நடிகர் என்ற கருத்து அதிகம் பேசப்படுகிறது. இணையத்தில் சில சில்லுவண்டுகள் அதை பெரிதாக மெகாபோன் வைத்து ஊதிப் பெருக்குகிறார்கள். மிகைதான்- சில சமயங்களில். அதேசமயம் அதே நடிகர் மோட்டார் சுந்தரம் பிள்ளை. தெய்வப் பிறவி போன்ற படங்களில் சற்றும் மிகையில்லாது இயல்பாக நடித்த படங்கள் குறித்தோ அதில் அவரது நடிப்பு குறித்தோ தங்களது வாதங்களை முன் வைப்பதில்லை.

    சிவாஜி நாடக மேடையில் நடிப்பு பயின்ற ஒரு மிகை நடிப்புக் கலைஞன். சினிமாவில் அதைத்  தொடர்ந்தார். ஆனால் அது மட்டுமே அவருடைய முழு ஆளுமை கிடையாது. உண்மையில் சிவாஜி யாராலும் தீட்டப்படாத  ஒரு raw diamond. வைரமுத்து ஒரு முறை கூறியதுபோல சிவாஜி ஒரு அணுகுண்டு. அவரை வைத்து நமது இயக்குனர்கள் தங்கள் முதுகை சொறிந்துகொண்டார்கள். இதுதான் சிவாஜி, இப்படித்தான் அவரால் நடிக்க முடியும் என்று அவர்களே தீர்மானித்தார்கள். சினிமாவில் நடிப்பு தவிர வேறு எதுவும் அறிந்திராத சிவாஜி அவர்களுடைய கையசைவுகளுக்கு கட்டுப்பட்டு நடித்ததே பலராலும் இன்று பெருமளவில் பாராட்டப்படுகிறது. அவருடைய நடிப்புப் பசிக்கான கதைக் களம், திரைக்கதை வெகு சிலராலே சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.  அவரால் எந்த விதமாகவும் எப்படிப்பட்ட ஆளுமைக்குள்ளும் சிரமமின்றி நுழைந்துகொள்ள முடியும். கதாநாயகன் என்றல்ல. கமீடியன், வில்லன், ஏன் கொஞ்சமும் முக்கியத்துவமில்லாத walk-on part ரோல் கூட அவரால் எந்தவித பொறாமைகள், கோபங்கள், தனிவிரக்கங்கள் இல்லாமல் செய்யமுடியும். வாணிராணி படம் இதற்கு சான்று. அதில் அவருக்கு எந்த ஒரு மையமான நடிப்பும் கிடையாது. இருந்தும் வாணிஸ்ரீக்காக (வாணிஸ்ரீயின் சொந்தப் படம்) அவர் நடித்துக் கொடுத்த படம் அது. தேவர் மகனில் கூட கமல்தான் பிரதானமானவர். சிவாஜி ஒரு ஊறுகாய் போலவே வந்துபோவார். (மிக அபத்தமாக அந்தப் படத்திற்காக சிவாஜிக்கு சிறந்த துணை நடிகர் விருது பரிந்துரை செய்யப்பட்டது.!)

     கமலஹாசனுக்குக் கிடைத்த இயக்குனர்கள் போல சிவாஜிக்கு வாய்க்காதது துரதிஷ்டமே. அதேபோல் கமல் போல தன்னையே இயக்கிக்கொள்ளும் அந்த நார்சிஸ்ட் தாகமும் சிவாஜியிடம் இல்லாதது அவருக்கு ஒரு பின்னடைவுதான். 50, 60 களில் சிவாஜிக்கு இணையான நடிகன் இந்தியாவிலேயே கிடையாது என்பதுதான் உண்மை. நாம்தான் அதை புரிந்துகொள்ளாமல் பலவித அரசியல், சாதி வண்ணம் பூசி ஒரு கலைஞனை அங்கீகரிப்பதிலிருந்து தூரமாக நிற்கிறோம். இன்று சிவாஜி போன்ற ஒரு மகத்தான நடிப்புக் கலைஞனை வெறும் மிகையான நடிகன் என்று இகழ்ந்து விட்டு வேறு யாரை அவருக்கான இடத்தில் வைக்கப்போகிறோம்? அந்தத் தகுதி வேறு யாருக்கு இங்கே இருக்கிறது?

 தமிழ் சமூகத்தின் சரித்திர நாயகர்களையும், இலக்கிய ஆளுமைகளையும், ஆன்மீக மாந்தர்களையும், தேசத் தலைவர்களையும், பகட்டான மேல்தட்டு மனிதர்களையும், சாலையோர சாமானியர்களையும், காதலனையும், கணவனையும், சகோதரனையும், தந்தையையும்,  ஒரு சேர இத்தனை ரத்தமும் சதையுமாக திரையில் பிரதிபலித்த ஒரு மகா மகா மகத்தான நடிகனுக்கு இகழ்ச்சி ஒன்றே நம்முடைய மேதாவித்தனம் கொடுக்கும் பாராட்டு என்றால்....  வெறும் காதல் பேசி, வன்முறை ஆட்டம் ஆடி, பெண்களை இழிவு செய்து, துரத்தித் துரத்தி மற்றவர்களை அடித்துக் கொன்று, தாய் தந்தையை மதிக்காது நடக்கும் நமது "இயல்பான" கதாநாயகர்களை  தலையில் வைத்துக் கொண்டாடும் நவீனத்துவமும்,  யதார்த்தமும்   மிகவும் ஆபத்தான கலையுணர்வு.

     56 இல் வந்த ராஜாராணி என்ற படத்தில் சிவாஜி ஒரே டேக்கில் பேசும் அந்த எட்டு  நிமிட புறநாறூற்று வசனத்தை சற்று கேளுங்கள். சிவாஜியின் கிரீடம் வேறு எவர் தலைக்கும் பொருந்தாது என்பது புரியும்.

  நகைச்சுவை என்றால் சார்லி சாப்ளினும், விஞ்ஞானி என்றால் ஐன்ஸ்டைனும், மேற்கத்திய செவ்வியல் இசை என்றால் பெய்ட்டோவன் மட்டும்தானா இருக்கிறார்கள் இங்கே? இல்லைதான். ஆனால் அவர்கள் எல்லோரும் அவர்கள் சார்ந்த துறையின் குறியீடாக, ஒரு முத்திரையாக மக்களால் பார்க்கப்படுகிறார்கள்.  "உனக்குப் பிடித்த தமிழ் நடிகர் யார்?" என்ற கேள்விக்கு என்னால் கண்டிப்பாக "சிவாஜி மட்டும்தான்" என்று சொல்ல முடியாது. ஆனால் தமிழின் மிகச் சிறந்த நடிகர் யார் என்ற கேள்விக்கு அதே பதிலை என்னால் கண்டிப்பாகச் சொல்ல முடியும். ஏனென்றால் நம்மிடம் அந்தக் கேள்விக்கான பதிலாக ஒரு முகம்தான்  இருக்கிறது,    ஒரே முகம்.
 

 

அடுத்து : இசை விரும்பிகள் XXX - எண்பதுகள் - இசையுதிர் காலம்.

Saturday, 16 January 2016

இசை விரும்பிகள் XXIX: கரையாத கானம்

  புத்தாண்டு கோலாகலங்கள் மேற்கத்திய நாகரிக சாயம் பூசிக்கொண்டுவிட்டன. மது பாட்டில்களும், பீப் வார்த்தைகளும், விரைவு பைக்குகளும், மரியாதை தொலைத்த  விபரீத  வாழ்த்துக்களும், சில திடீர் மரணங்களும் நம் மண்ணின் தற்போதைய நச்சுக் கலாச்சாரமாக உருமாறி  அசுர முகத்துடன் ஆபத்தான  ஆர்ப்பாட்டங்களோடு புத்தாண்டை வரவேற்கின்றன. இந்த பெருநகர் கலாச்சாரம் உலகமெங்கும் அவரவர் மொழிகளில் பிரதியெடுக்கப்படுகிறது.  மெட்ரோபோலிஸ் நகரங்களுக்கு வெறும் நவீன கட்டிடங்களும், திடமான சாலைகளும், வேகமான கார்களும் மட்டும் போதாது. இரவு வாழ்க்கையும், அதைக் கொண்டாடும் போலி நியாயங்களும், பாசாங்கான மேதாவித்தனமும் கூடவே அவசியப்படுகின்றன. சுமார் பத்து வருடங்களாக நாம் கொண்டாடும் புத்தாண்டுக் களியாட்டத்தில் இதன் கூறுகளை நம்மால் அதிக சிரமங்களின்றி  காண முடியும். இந்த வகை கொண்டாட்டங்கள் வேக ஓட்டத்தில் ஏற்பட்ட மற்றொரு கலாச்சார விபத்து.  இன்னொரு   பண்பாட்டுப் பலி.

   ஏறக்குறைய எல்லாமே மாறிவிட்டது. வணிக நிர்ப்பந்தங்கள், விடலைத் துடிப்புகள், அர்த்தமில்லாத ஆர்ப்பாட்டங்கள், கண நேர அபத்த சந்தோஷதிற்காக  உயிரை விலை பேசும் விபரீதங்கள்,  இனக்  கவர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் இச்சைக்கான புதிய வழிகள் என  நமது புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் வெறும் துள்ளல்களாகவே   துடிக்கின்றன. இது ஒரு இன்னொரு தினம் என்ற எண்ணம் எனக்கு மட்டும்தான் இருக்கிறதா என்று தெரியவில்லை.

    ஆனால் சில சங்கதிகள் இன்னும் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. அவை அப்படியே நிலைகொண்டுவிட்டன. எத்தனை காலங்கள் ஆனாலும்  எப்படி வாராயோ என் தோழி வாராயோ   ஒரு திருமணத்தில் ஒலிப்பதும், மானுத்து மந்தையிலே சகோதர சீர் வரிசை கொண்டாட்டத்தில் பாடப்படுவதும் மாறாதோ அதேபோல புத்தாண்டு என்றாலே இந்தப் பாடல்தான் என்றாகிவிட்டது.

    இந்தப் புத்தாண்டில் மீண்டும் அதே பாடலை நான் கேட்டேன். 25 வருடங்கள் காற்றில் கரைந்த பின்னரும் புத்தாண்டை இன்றும் அதே இளமையுடன் இனிமையுடன் வரவேற்கும் அந்தப் பாடலை மீண்டுமொருமுறை கேட்டேன். அது என்ன பாடல் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

  புத்தாண்டை வரவேற்க நம் தமிழ்த் திரை வெகு சில பாடல்களையே அளித்துள்ளது.

    நூற்றுக்கு நூறு படத்தின் நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும், சங்கிலியின் நல்லோர்கள் வாழ்வைக் காக்க நமக்காக நம்மைக் காக்க என கைவிரல்கள் எண்ணிக்கையிலேயே புத்தாண்டுப் பாடல்கள் நம்மிடம் உண்டு. இதன் நீட்சியாக 82இல் வந்த ஒரு பாடல் புத்தாண்டின் மின்சாரத் துள்ளலை இழை இழையாக கேட்பவருக்குள் துடிக்கச் செய்யும்.  அந்தப் பாடல் இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ. 

  நகை முரணாக இளையராஜாவை நான் கடுமையாக விமர்சிக்கும் சகலகலாவல்லவன் என்ற குப்பையில் கிடைத்த ஒரே ஒரு அசந்தர்ப்பமான, அதிரடியான   பாடல்தான் இந்த  இளமை இதோ இதோ. சொல்லப் போனால் அந்தக் கண்றாவிப் படத்தின் ஒரே ஒரு saving grace இந்தப் பாடலே.

   எண்பத்தியிரண்டிலிருந்து ஏறக்குறைய 25 வருடங்களாக நமது ஒவ்வொரு புத்தாண்டின் துவக்கமும் இந்தப் பாடலின்றி அமைந்ததில்லை. இதை சமன் செய்யும் மற்றொரு பாடல் இன்றுவரை கானல் நீர்தான்.  இளையராஜாவின் இசையில்  அரிதாக அகப்படும் விரைவான எல்லையற்ற கொண்டாட்டம் இதில் ஏகத்துக்கும் இரைந்திருக்கும். அதைவிட மிக முக்கியமாக இன்றைய நவீன இசைக்கு சற்றும் குறையாத  பொலிவுடன் இன்றும்  இது ஒலிப்பது ஆச்சர்யம்தான்.

  பாடல் வரிகள் வழக்கம்போலவே சராசரி வகை. குத்துவேன் வெட்டுவேன் பூ சுத்துவேன் குஸ்தி போடுவேன் என்று வாலித்தனம் (காலித்தனம்!) வரிக்கு வரி தெறிக்கும் முரட்டுத் தற்பெருமை பேசும் பாடல். அதிலும் ஆரம்பத்தில் வரும் புத்தாண்டு வாழ்த்துக்குப் பிறகு எந்த இடத்திலும்  ஒரு புத்தாண்டுப் பாடலுக்கான எந்தவித தனித்துவமும் இல்லாத ஒரு டெம்ப்ளேட் ஹீரோயிஸம் துடிக்கும்  நடனப் பாடல். இருந்தும்  இளையராஜாவின் குதூகல இசையில் இந்தப் பிழைகள் கரைந்துபோய் விடுகின்றன.

   பாடலின் துவக்கத்தில் வரும் அந்த டெம்போ எகிறும் டிரம் இசை போனி எம் மின் நைட் பிளைட் டு வீனஸ் பாடலின் பிரதியாக இருந்தாலும் அதன் பின் இளையராஜா பாடலை தமிழ் பாணிக்கு கொண்டுவந்துவிடுகிறார். ஏகத்தும் கிடார், டிரம்பெட், டிரம்ஸ் என அந்த இளம் வயதில் அசுர அதிரடியாக இப்பாடல் என் செவிகளை நிரப்பியது. எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் காட்டிய  ஆனந்த உணர்வை இளமை இதோ வில் மீண்டும் கண்டேன்.

   பாடல் வந்த புதிதில் இதை நானும் எனது நண்பர்களும்  கொண்டாடியது என் நினைவில் நிழலாடுகிறது. இதே போன்று இன்னொரு பாடல் எப்போது வரும் என்ற என் ஆவல் எனக்குள் ஒருவன் படத்தின் மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு பாடலில்தான் நிறைவேறியது.  அதற்குள் எனது பாதையில் மேற்கத்திய மலர்கள் பூத்துவிட்டன.

 அதே சமயத்தில் இதே படத்தின் மற்ற அனைத்துப் பாடல்களும் இளையராஜா பற்றிய எனது பார்வையை முற்றிலும் மாற்றியதும், அவரது இசையை விட்டு நான் கொஞ்சம் கொஞ்சமாக விலகி வந்ததும்  என் நினைவுக்கு வருகிறது.

  இருந்தும் இளமை இனிமை கொண்ட இன்னொரு புத்தாண்டுப் பாடல் நம் இசையில் பிறக்கும் வரை.....  ஒவ்வொரு புத்தாண்டும் கொண்டாடும் பாடலாகவே  இது இருக்கப் போகிறது.
அடுத்து: இசை விரும்பிகள் XXX :  எண்பதுகள் - இசையுதிர்காலம்.