Sunday, 19 October 2014
எதிர்பாராதவர்கள்
(இசை விரும்பிகள் XXII வருவதற்கு சற்று தாமதம் ஆகலாம் என்பதால் ஒரு திடீர் பதிவாகத் தோன்றியதே இந்த எதிர்பாராதவர்கள். இது ஒரு கதை. 70களின் துவக்கத்தில் அரசாங்க அலுவலராக இருந்த ஒரு செக்கிங் இன்ஸ்பெக்டரின் கதை. )
எதிர்பாராதவர்கள்
உயர்மட்ட உத்தரவு ஒன்று தன்னை இத்தனை தூரம் இழுத்துக்கொண்டு வரும் என அந்த அதிகாரி நினைத்திருக்கமாட்டார். அயர்ச்சியைத் தரும் கரடு முரடான பயணத்தின் இறுதியில் அவர் வந்து சேர்ந்த இடம் அவரை சற்று திடுக்கிட வைத்தது. ஏனென்றால் அவர் நின்று கொண்டிருந்த இடமும் அவர் செல்ல வேண்டிய இடமும் இன்னும் சந்திக்கவேயில்லை. விசாரித்தபோது கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த ஒரு மாட்டுவண்டிக்காரன் சொன்னான்: "அய்யா அதுக்கு இன்னும் ரொம்ப தொலவு போகனுங்க."
காத்திருந்தவருக்கு சிறிது நேரத்தில் ஒரு பஸ் கிடைத்தது. எந்தவிதமான அராஜகங்களுக்கும், அநியாயங்களுக்கும் உடன்படாத நேர்மை அவரை அந்த பஸ்ஸில் அமர்த்த மற்றொரு சிரமமான பயணம் தொடர்ந்தது. முடிவில் உத்தரவில் இருந்த அந்த ரைஸ் மில்லுக்கு அருகே இறங்கி சற்று தூரம் நடந்த பின் அந்த இலக்கை அடைந்தார். அது ஒரு சாயந்திர நேரம். பொதுவாக வேலைகள் முடிந்துகொண்டிருந்த ஒரு மாலை நேரம்.இருந்தும் அந்த ரைஸ் மில் துரிதமாக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
மில்லுக்குள் புகுந்த அந்த அதிகாரி உடனே தன் அதிகாரக் குரலில் அங்கிருந்தவர்களை அதட்டத் துவங்க, அங்கிருந்த வேலையாட்கள் ஒன்றும் புரியாது திகைத்தனர். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தனர். "போய் உங்கள் முதலாளியை அழைத்துக்கொண்டு வாருங்கள்." என்றார் அதிகாரி அதட்டலுடன். சற்று நேரத்தில் அங்கே மிகக் கடுமையான தோற்றம் கொண்ட ஒரு மனிதன் வந்தான். அவன் தோற்றமே அவனின் அதிகார மற்றும் பண பலத்தை துல்லியமாகச் சொன்னது.
"நீதானா இந்த மில்லின் ஓனர்?" என்றார் அதிகாரி கடுமையாக. அவர் பயப்படவில்லை.
"ஆமாம். சார் நீங்க...? " என்றான் அவன் மிக பவ்யமாக. அவன் நடிக்கவில்லை.
" நான் ஒரு செக்கிங் இன்ஸ்பெக்டர். நான் உன் மில்லில் என்ன நடைபெறுகிறது என்று ஆராய வந்திருக்கிறேன். உன் மில்லில் சட்டவிரோதமான காரியங்கள் நடப்பதாக எங்களுக்கு தகவல் வந்திருக்கிறது." என்றார் அவர் மிகவும் கோபமாக.
"அப்படியெல்லாம் இல்ல சார். இருந்தால் திருத்திக்கிறேன்." என்றவன் உடனே "டேய் சாருக்கு ஏதாவது குடிக்க கொண்டுவாங்க" என்று தன் பணியாளர்களை நிர்பந்தித்தான்.
"அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்" என்றவர் தொடர்ந்து "இந்தக் கதையெல்லாம் என்னிடம் வேலைக்காகாது. உனது ரெகார்டுகளைப் பார்க்கவேண்டும். கொண்டுவா." என்றார்.
சிறிது நேரத்தில் இரண்டு மூன்று பெரிய நோட்டுப் புத்தகங்கள் அவரிடம் கொடுக்கப்பட்டன. அதிகாரி அவற்றை கவனமாக ஆராய்ந்தார். நீண்ட நேரத்திற்குப் பிறகு காகிதங்களிலிருந்து கண்ணை எடுத்தவர் அவனை நோக்கி," உனது ரெகார்டுகளில் நேர்மை இல்லை. இதில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்கின்றன. நீ எதையோ மறைக்கப் பார்க்கிறாய் என்று மட்டும் புரிகிறது. மேலும் மாலையே மூடவேண்டிய மில்லை இரவு வரை நீ திறந்து வைத்திருப்பது சட்டவிரோதம். அது தெரியுமா உனக்கு?" என்று கறாராக வினவினார்.
"இனிமே இப்படிச் செய்யமாட்டேன் சார். இந்த ஒருதடவ மட்டும் கொஞ்சம் பெரிய மனசு பண்ணி விட்டுருங்க." என்று அவன் பரிதாபமாகக் கேட்டான். வேண்டினான் என்று கூட சொல்லலாம்.
"அப்படியெல்லாம் விடமுடியாது. நான் உன் மில்லை இப்போதே மூடப்போகிறேன். சாவியை நீ நாளை கோர்டில் தண்டனையாக பணம் செலுத்தி வாங்கிக்கொள்." என்றவர் அடுத்தே அதை செயல்படுத்த ஆரம்பித்தார். அந்த மில் முதலாளியோ அதிகாரியை தொடர்ந்து வந்து கெஞ்சியபடி இருந்தான். அவரோ மிகக் கண்டிப்பாக அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் தன் பணியை சிரத்தையாக செய்து முடித்துவிட்டு சாவியை தன்னிடம் பத்திரப்படுத்திக்கொண்ட பின்னர் அவனைப் பார்த்து," நாளை நீ இதற்கான தண்டனையை செலுத்திவிட்டு உன் மில்லை திறந்துகொள். ஆனால் மீண்டும் இப்படிச் செய்யாதே." என்றார் கறாராக. இப்படிச் சொல்லிவிட்டு உடனே அந்த மில்லை விட்டு வெளியே வந்துவிட்டார் வேகமாக.

வெளியே வந்தவருக்கு அப்போதுதான் உறைத்தது அந்த இரவில்அந்த இடத்தில் எந்த பஸ் வசதியும் கிடையாது என்பது. இப்போது அவர் சேரவேண்டிய இடத்திற்கான பஸ் நிலையம் வெகுதூரத்தில் இருந்தது. அதை அடைய அவர் மூன்று அல்லது நான்கு கிலோ மீட்டர்கள் நடக்கவேண்டும். எப்படியும் நடுஇரவாகிவிடும். அதன் பின் பஸ் கிடைத்து வீடு அடைய ... நினைக்கவே ஆயாசமாக இருந்தது அந்த கறார் அதிகாரிக்கு. அவர் பின்னாலே வந்த அந்த மில் முதலாளி அவரைப் பார்த்து ,"சார், நீங்க நடந்துபோற தூரமில்லை. கொஞ்சம் இருங்க" என்றவன் சற்று நேரத்தில் தடதடக்கும் புல்லெட்டில் அங்கு வந்து சேர்ந்தான். குழப்பமாக அவனைப் பார்த்த அவரை நோக்கி அவன் சொன்னான்:" ஏறிக்கங்க. நான் உங்களை பஸ் ஸ்டாண்ட்டுக்கு கொண்டுபோய் விடுறேன். இப்பவே ராவாயிடுச்சு"
அந்த கறார் அதிகாரிக்கு வேறு வழியில்லை என்று தோன்றியிருக்கவேண்டும். எந்தவித மறுயோசனையுமின்றி அல்லது தயக்கமின்றி அந்த மனிதனின் வண்டியின் பின்னே அவர் உட்கார்ந்து கொள்ள அவன் உடனே தன் புல்லெட்டை வேகமாகச் செலுத்த ஆரம்பித்தான். அதே சிரமமான பாதையில் இப்போது அந்த இரவில் தான் தண்டித்த மனிதனுடன் அவனுடைய வண்டியில் சென்று கொண்டிருக்கும் வியப்பு கலந்த விபரீதத்தின் முதல் சுவடு கூட அவரைத் தொடவில்லை. கருமையான இரவில் அந்த வினோத புல்லெட் பயணம் தொடர்ந்தது. நீண்ட தொலைவு சென்றதும் ஒரு மூடப்பட்ட சிறிய கடையின் முன் அவன் வண்டியை நிறுத்தினான். பின் சொன்னான், "சார், உங்க நல்ல காலம். அதோ ஒரு பஸ் நிக்குது. அதில ஏறிக்கங்க. உங்க ஊருக்கு சீக்கிரம் போயிரலாம்."
முன்னால் சற்று தொலைவில் ஒரு பேருந்து நின்றுகொண்டிருந்தது. ஒருவேளை அதுதான் அன்றைய தினத்தின் இறுதி பேருந்தாக இருக்கலாம்.
முன்னால் சற்று தொலைவில் ஒரு பேருந்து நின்றுகொண்டிருந்தது. ஒருவேளை அதுதான் அன்றைய தினத்தின் இறுதி பேருந்தாக இருக்கலாம்.
அதிகாரி தங்களுக்கு முன் சற்று தூரத்தில் நின்றுகொண்டிருந்த அந்தப் பேருந்தை கண்டு அதில் அவசரமாக ஏறிக்கொள்ள அவன் கீழே நின்றபடி,"போயிட்டு வாங்க சார். நாளைக்கு நான் பணம் கட்டிர்றேன்." என்றான். "இனிமே இப்படி நடக்காது." என்று முடிவாகச் சொன்னான். பஸ் ஐந்து நிமிடங்களுக்குப்பிறகு கிளம்பும் வரை அவன் அங்கேயே நின்றபடியிருந்தான். பஸ் கிளம்பி அந்தப் பக்கம் செல்ல, பின்னர் அந்த புல்லெட் தடதடக்கும் ஓசையுடன் அதற்கு எதிர்த் திசையில் விரைந்து சென்று சடுதியில் ஒரு புள்ளியாக மறைந்தது.
இந்தக் கதை எனக்குள் ஒரே ஒரு கேள்வியைத்தான் விதைத்தது. இப்படி நடக்க சாத்தியமா? காந்தி கொல்லப்பட்ட போது ஐன்ஸ்டைன் ," ரத்தமும் சதையுமாக இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதையே பிற்கால சந்ததிகள் நம்பமாட்டார்கள்." என்று குறிப்பிட்டார். அதைப்போலவே இதை என்னால் நம்பமுடியவில்லை. 2014இலிருந்து 1970ஐப் பார்க்கும்போது சில விந்தையான உண்மைகளும் இப்போது காலாவதியாகிவிட்ட நேர்மைகளும், மலிந்துவிட்ட அதிகாரம் கொண்டவர்களின் அராஜாகங்களும் இதை ஒரு வியப்புச் செய்தியாக பார்க்கவைக்கிறது. எதற்காகவும் தன் நேர்மையை சமரசம் செய்துகொள்ளாத அந்த அதிகாரியைப் போல் இன்றைக்கும் சிலர் இருக்கிறார்கள் என்பது நம்பிக்கை தரும் ஒரு வெளிச்சத்தின் வேர்.

தன் பணியைச் சரியாக நியாயமாகச் செய்த அந்தத் துணிச்சலான அரசு அதிகாரி நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்தான். ஆனால் என் மனதில் நிழலாடும் நபர் அந்த நேர்மையான கறார் செக்கிங் இன்ஸ்பெக்டர் அல்ல. மாறாக அந்த முரட்டு மில் முதலாளிதான். அதற்கான காரணத்தை நான் விவரிக்க வேண்டியதில்லை. அது புதுக்கவிதை ஒன்றுக்கு விளக்கம் தருவது போன்று அபத்தமானது. ஆனாலும் ஏதாவது சொல்வதென்றால் இப்படிச் சொல்லலாம்:
அந்த அதிகாரி செய்தது அவருடைய பணி. அவன் செய்தது யாருமே எதிர்பார்க்காத மனிதாபிமானம்.
மறைந்து போன அந்த மனிதம் இன்று ஒரு வினோதம். ஒரு அபூர்வம். ஒரு தலைப்புச் செய்தி. அல்லது "அவன் கூட போன அந்த ஆளு ஒரு முட்டாளுனா அவர பத்திரமா கொண்டு போய் சேர்த்த இவன் அவர விட பெரிய முட்டாளா இருப்பான் போல" என்று இன்று நாம் செய்யும் ஒரு நகைச்சுவை.
இப்போது ஒரு சிறிய திருத்தம். பதிவின் துவக்கத்தில் இது ஒரு கதை என்று சொல்லியிருந்தேன். இல்லை. இது ஒரு நிகழ்வு. இதை நான் அறிந்தது வெகு சமீபமாகத்தான். இதில் சம்பந்தப்பட்ட அந்த அரசு அதிகாரியே என்னிடம் இதை பகிர்ந்துகொண்டார். இத்தனை நேர்மைக்கும் நியாயத்திற்கும் அவருக்கு கிடைத்த வெகுமதி இன்றுவரை அவர் ஒரு வாடகை வீட்டில்தான் வசிக்கிறார் என்ற முரண் ஒன்றே. அந்த செக்கிங் இன்ஸ்பெக்டர் எனது தந்தை.