Sunday, 27 April 2014

இசை விரும்பிகள் XVI--- இசைச் சாரல்கள்


கொட்டித் தீர்க்கும் உக்கிர மழையை வியப்பான விழிகளோடு நோக்கும் நாம்  ஏன் சிறு சாரல்களையும் தூறல்களையும் அலட்சியம் செய்கிறோம் ?

                                     

                               
                      

                                              இசைச்  சாரல்கள் 


       சிறு  வயதில் கேட்ட பல கானங்கள் நம் மனதில் படிந்துவிட்ட கரையாத இசைப் படிவங்கள். அதிலும் வானொலியில் எந்தவித அறிமுகமும் இல்லாமல் திடும் என ஒரு அபாரம் ஒலிக்கத் துவங்கினால் அப்போது கிடைக்கும் இன்பம் என்னைப் பொறுத்தவரை குழந்தைகளின் குதூகலம் போன்றது. சுயநலமில்லாதது. இசையின்பம்  ஒரு  மேன்மையான தெளிவையும் புரிதலையும் அளித்து கறை  படிந்த நம் நெஞ்சங்களிலிருந்து  ஒரு சில  கணங்களுக்காவது   ஒரு   குழந்தையின் உள்ளதை  நமக்குள்   மீட்டெடுக்கிறது. சில நிமிடங்கள்  உலகின் மாசுக்களிலிருந்தும் போலித்தனங்களிலிருந்தும் நாம் விடுதலையடைகிறோம். காலங்கள் பல கடந்த பின்னும் இனிப்பான தினங்கள் இறந்த பின்னும்   நெஞ்சத்தில் தங்கிவிட்ட சில நினைவுகளை அதே பழைய சுவையுடன் ருசிக்கும் அற்புதத்தை  இசை எத்தனை எளிமையாக, எளிதாக செய்துவிடுகிறது! ஒரு மூன்று நிமிடப் பாடலுக்குள் முழுதும் மூழ்கும்  கணத்தில் உண்டாகும் பரவசம் விலைமதிப்பில்லாதது.

    மழையே மழையே பாடலுக்கு முன்பே  மற்றொரு மழைப் பாடல் என் மனதை கொள்ளைகொண்டது. இதுவும் வார்த்தைளை  மீறிய ஒரு இன்னிசை அனுபவம். சுகமான  தென்றல் நம்மைத் தீண்டும்  உணர்வைத் தரும் கீதம். மென்மையும், இனிமையும் ஒருங்கே பாடலோடு பயணிக்க  இறக்கை கட்டிய உணர்வு இதைக் கேட்டவுடனே எனக்குக் கிடைத்தது. மனிதரில் இத்தனை நிறங்களா என்ற படத்தில் வரும் "மழை தருமோ என் மேகம்?" என்ற பாடலே அது. ஷியாம் என்ற ஒரு மலையாள இசை அமைப்பாளரின் இசையில் வந்தது அப்பாடல்.  அவரைப் பற்றி அப்போது அதிகம் நான்  அறிந்ததில்லை.  பாடலின் மெட்டும்  இசை கோர்ப்பும் மிக மென்மையானவை. எஸ் பி பியின் பால் நிலவுக் குரல் அழைத்துச் செல்லும் இசைவெளிகள் கேட்பவரை திகைக்கவைக்கின்றன. ஒரு பாடலுக்குள் இத்தனை சுகமா என்ற வியப்பை பல பாடல்கள் எனக்குக் கொடுத்துள்ளன. அதில் இதுவும்  ஒன்று.

           இதன்பின் தேவதை என்ற ஒரு படத்தில் எஸ் ஜானகி பாடிய கலீர் கலீர் என்று துவங்கும் ஒரு பாடல் ஷ்யாம் என்ற பெயரை எனக்கு அறிமுகம் செய்தது. இதை ஒரு  தேவதையின் கானம் என்றே சொல்லலாம். இருபுறமும் மரங்களடர்ந்த ஒரு நீண்ட சாலையில் மதி மயங்கும் ஒரு மாலை வேளையில் தனியே நடக்கும் ரம்மியத்தை கொண்டது இப்பாடல். இவரது இசை எளிமையானது அதே சமயம் மிகச்  சிறப்பானது. முழுவதும் வேறு தளத்தில் பயணிப்பது. தேவையில்லாத ஆடம்பர வாத்திய ஓசைகள், பொருத்தமில்லாத இணைப்பிசை, அலங்காரமான அதிரடி தாளங்களின்றி மிக நளினமாக ஒரு குழந்தையின் தழுவலைப் போன்றதொரு இசை பாணி இவருடையது. . பொதுவாக 70 களின் இசையை  ஒரு அமைதியான நதியோட்டத்துடன் ஒப்பிடலாம். (கடலலைகளைப் போல ஆக்ரோஷமாக  ஆர்ப்பரிக்கும் மாற்றம் அதன்பிறகே ஏற்பட்டது. அத்துடன் தமிழ் திரையிசையின் இனிமையும் மெலிந்து  சீர் குலைந்து போனது.)

      ஷ்யாம் (சாம்வல் ஜோசெப்) சென்னையில் பிறந்ததிருந்தாலும்   கேரளாவை பூர்விகமாகக் கொண்டவர். சிறிய வயதில் தேவாலய choir இசையினால் ஈர்க்கப்பட்டு  பின்னர் தன்ராஜ் மாஸ்டரிடம் மேற்கத்திய இசையை பயின்றவர். வயலின் வாத்தியத்தை சிறப்பாக வாசிப்பதில் மேதமை கொண்ட இவர் தமிழ்த் திரையின் இசை உன்னதங்களான எம்  எஸ் வி- டி கே ஆர்,  சுப்பையா நாயுடு, பின்னர் ஜி தேவராஜன் (தேவ மைந்தன் போகின்றான், வானமென்னும் வீதியிலே பாடல்களை அளித்தவர்) போன்றவர்களிடம் பணி புரிந்திருக்கிறார். இன்றைய புகழ் பெற்ற ஹேரிஸ் ஜெயராஜின் தந்தை இவரிடம் உதவியாளராக இருந்திருக்கிறார். ஷ்யாம் மொத்தம் ஏறக்குறைய முப்பது தமிழ்ப் படங்களுக்கு இசை அமைத்துள்ளார் என்று தெரிகிறது. கமலஹாசன் முதல் முதலில் கதாநாயகனாக நடித்த உணர்சிகள் என்ற படத்திற்கு இசை அமைத்தவர் இவரே. 80களில் மவுலி என்னும் நாடக இயக்குனர் தமிழ்த் திரையில் சில படங்களை இயக்கினார். மற்றவை நேரில், வா இந்தப் பக்கம், நன்றி மீண்டும் வருக, ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது, போன்ற இவரது படங்களுக்கு ஷ்யாம் இசை அமைத்திருந்தார்.  மனிதரில் இத்தனை நிறங்களா, உணர்சிகள், தேவதை, குழந்தை இயேசு, விலாங்கு மீன், இதயம் பேசுகிறது, பஞ்ச கல்யாணி,கள் வடியும் பூக்கள், நலம் நலமறிய ஆவல், சலனம் போன்ற படங்கள் இவரது இசையில் குறிப்பிடத்தக்கவை. நான் முடிந்தவரை தேடி எடுத்த சில அபாரமான பாடல்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இணையதில் இவை கிடைக்கவே செய்கின்றன. (cool toad .com என்ற இடத்தில் ஏறக்குறைய உங்கள் தேடல் எல்லாம் முற்றுப்பெற்று விடும் என்று எண்ணுகிறேன்.) ஷ்யாம் என்ற இசை அமைப்பாளரின் இனிமையை சற்றேனும் நாம் உணரவேண்டாமா?

மழை தருமோ என் மேகம்?-மனிதரில் இத்தனை நிறங்களா?
பூமா தேவி போல வாழும் ஜீவன் நீதானே- பஞ்ச கல்யாணி. (எஸ் பி பி இத்தனை உருகி உருகிப் பாடுவது ஒரு கழுதையைக் குறித்து.)
இரவும் பகலும் ஒருவன் நினைவை பாடும் பறவை- நீ சிரித்தால் நான் சிரிப்பேன்.
மாந்தளிரே மயக்கமென்ன, கலீர் கலீர் என்று காலம் தன்னால் இங்கே முன்னேறுது- தேவதை.
நினைத்திருந்தது நடந்துவிட்டது- மற்றவை நேரில்.
இவள் தேவதை இதழ் மாதுளை,ஆனந்த தாகம் (அழகான கீதம். சொக்கவைக்கும் இசைக்கோர்ப்பு. இந்தப் பாடலின் இசை வடிவத்தை   80 களின் ஆரம்பத்தில் இளையராஜாவின் பாடல்களில்  அதிகமாக காணலாம்.) - வா இந்தப் பக்கம்.
எனை ஆளும் காதல் மன்னன்-குங்கும கோலங்கள்.
தேவைகள் ஆயிரம்- தேவைகள் ஆயிரம்.
காதல் கனவுகளே நீராடும் என் நினைவுகளே- நன்றி மீண்டும் வருக.
இதயம் இதயம் முழுதும் மோகங்கள், மோகம் சங்கீத மோகம், வாராய் கண்ணே  - இதயம் பேசுகிறது.
மழைக்கால மேகங்கள், வானம் பன்னீரைத் தூவும் - கள் வடியும் பூக்கள்.
மாமரத்தின் பூங்குயில்கள் மங்கள கீதம் பாடுமே- நலம் நலமறிய ஆவல்.
செல்வமே தெய்வீக மலரே, கண்ணே வா கண்மணியே வா  - குழந்தை யேசு.(இரண்டுமே மிக சிறப்பானவை.)
முத்து முத்து புன்னகையோ - சந்தோஷ கனவுகள்.
ஆசைகள் தேய்ந்ததே, பூ மாலைகள் இரு தோள் சேருமே- கல்லுக்குள் தேரை.

      மேற்கூறப்பட்ட பாடல்களில் சிலவற்றைத் தவிர மற்றவை எல்லாம் அதிகமாக நாம் கேட்டிராத பாடல்கள். இப்போது கேட்கும்போது நாஸ்டால்ஜிக் உணர்வை மீறிய மற்றொரு சுவையையும் நாம் ருசிக்க முடிகிறது. அதே சமயத்தில் இசை எத்தனை இன்பமயமாக இருந்தது என்ற ஆழ்ந்த பெருமூச்சும் வரத் தவறவில்லை. குறிப்பாக ஆனந்த தாகம், கலீர் கலீர், மழை தருமோ என் மேகம்?, பூமா தேவி போல வாழும், வானம் பன்னீரை தூவும் ஆசைகள் தேய்ந்ததே போன்ற பாடல்கள்   கேட்க அலாதியானவை. ஒரு மிகப் பெரிய மழைக்கு முன் ஆரவாரமின்றி அமைதியாக வீசும் ஒரு ஒற்றைக் காற்றின் தொடுகை போல அத்தனை அழகு.

   ஷ்யாம் போன்று   இனிமையான இசைக்குரிய இன்னும் சிலர்  70களில் தமிழ்த் திரையில் இருந்தார்கள். இவர்களின் பாடல்கள் நேர்த்தியானவையாக இருந்தாலும் மாறிவிட்ட இசை பாணியும், ரசனையும்  ரசிகர்களின் இசை தேர்வும் இத்தகைய பாடல்கள் வெளிச்சத்துக்கு வருவதற்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக இருந்தன. பழைய பாணி என்ற ஒரே விமர்சனத்தில் இவ்வாறான இசை முத்துக்கள் புறக்கணிக்கப்பட்டன.அவைகள் வானொலிகளில் விடாது ஒலிபரப்பப்படும் அந்தஸ்தை அடைந்தாலும் இன்று மீட்டெடுக்கப்படாத ஆழத்தில் உறங்கிக் கொண்டிருக்கின்றன. A state of intentionally  induced coma. Our pathetic taste of music can only be blamed for this artificial amnesia.  ஆனால் உண்மையைத் தேடுபவர்களுக்கு எந்தப் பாதையும் தடையில்லாதது. இப்போது மற்றவர்களையும் சற்று அறிவோம்.
 
   விஜய பாஸ்கர்-  கன்னடத்தின் புகழ் பெற்ற இசை அமைப்பாளராக இருந்தவர். வெகு சொற்பமான தமிழ்ப் படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.இவரது சில பாடல்களைக் கண்ணுற்றால்  அடடா இவரா என்ற எண்ணம் உண்டாகாமல் இருக்காது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பாடல்கள் அனைத்தும் 70 களின் இசைப்  பொக்கிஷங்கள்   என்ற வகையைச் சேர்ந்தவை.

அன்பு மேகமே இங்கு ஓடிவா - எங்கம்மா சபதம்,
இளமை நாட்டியசாலை, காலம் பொன்னானது- கல்யாணமாம் கல்யாணம்
வரவேண்டும் வாழ்கையில் வசந்தம், சம்சாரம் என்பது வீணை-மயங்குகிறாள் ஒரு மாது. (சிலோன் வானொலியில் இந்தப் பாடல்கள்  எத்தனை முறைகள் ஒலித்திருக்கின்றன! )
சங்கீதம் ராகங்கள் இல்லாமலா, எனது வாழ்க்கை பாதையில்- மோகம் முப்பது வருஷம்.
யாருக்கு யார் சொந்தம்- மாலை சூட வா.(கமலஹாசனின் நடிப்பில் 75இல் வந்த படம்.  அன்றைய வானொலிகளில் அதிகம் ஒலித்த பாடல்.)
வானுக்கு தந்தை எவனோ (மிக உன்னதமான கானம்.) ,உறவோ புதுமை  -ஆடு புலி ஆட்டம்,
அட என்னடா பொல்லாத வாழ்க்கை  -தப்புத் தாளங்கள். எஸ் பி பி இதுக்கு போயி அலட்டிக்கலாமா என்று பாடுவதே அலட்டலாக இருக்கும். 
இதோ உன் காதலி,ரசம் பழரசம்- சௌந்தர்யமே வருக வருக.
மனமகளே உன் மணவறை கோலம்- காலங்களில் அவள் வசந்தம்.

   ராஜன் நாகேந்திரா- வீட்டு வீடு வாசப்படி என்று ஒரு படம் 80 களின் துவக்கத்தில் வந்தது. அதில் இடம் பெற்ற வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப்படி என்ற பாடல் அதிகம் வானொலிகளில் உலா வந்த ஞாபகம் இருக்கிறது. கன்னடத்தைச் சேர்ந்த ராஜன் நாகேந்திரா இரட்டையர்கள் தமிழில் நிறைய படங்களை செய்யவில்லை. ஆட்டோ  ராஜா என்ற படத்தில் வரும் மிக அற்புதமான மென்மையின் இசைப் பிரதியாக ஒலிக்கும் மலரே என்னென்ன கோலம் பாடல் இவர்களின் இசையில் வந்தது என்ற செய்தி சற்று அதிர்ச்சியாக இருந்தது எனக்கு. அதை இளையராஜாவின் பாடல் என்றே நினைத்திருந்தேன் பல காலங்கள். நிறம் மாறிய பூக்கள் என்ற தலைப்பில் இப்பாடலைப் பற்றி நான் எழுதியதை கீழே கொடுத்துள்ளேன்.

      =மலரே என்னென்ன கோலம் (இளையராஜாவின் மிக அற்புதமான இசை சிற்பம் இது. இன்றுவரை இது இளையராஜாவின் பாடல்தானா என்று எனக்கு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது. இந்தப் பாடலில் நீங்கள் கொஞ்சம்கூட அவரின் சாயலை காண முடியாது. மிகவும் ரம்மியமான பாடல்.இந்தப் படத்திற்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத சிறப்பான பாடல்.)=

      இது ராஜன் நாகேந்திராவின் இசை என்பதை அறிந்தபோது முதலில் ஏற்பட்ட அதிர்ச்சி பின்னர் இந்த உண்மையை சரியாக  யூகித்த மன திருப்தியில் கரைந்தேபோனது.

    சலில் சவ்திரி- ஹிந்தியில்  மிகப் புகழ் பெற்ற சலில் சவ்திரி தமிழில் சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவரது இசையை இந்த உலகத்தைத் தாண்டிய இசை என்று சிலர் வர்ணிப்பதுண்டு. ஆனந்த் என்ற ஹிந்திப் படத்தின்  ஸிந்தகி என்ற ஒரு பாடலைக் கேட்டால் உங்களுக்கும் இப்படியே தோன்றக்கூடும். அழியாத கோலங்கள் படத்தின் கதையோட்டத்தை தனது இசையில் வடித்திருப்பார் இந்த இசை மேதை. நான் எண்ணும் பொழுது பாடலைக் கேட்கும் பொழுதே நாம் நம்முடைய இறந்த தினங்களுக்கு சென்றுவிடுகிறோம். அந்தப் பாடல் ஒரு அனுபவம். பூ வண்ணம் போல நெஞ்சம்  என்ற பாடலோ ஒரு இனிமையான தாலாட்டு. இந்த இரண்டு பாடல்களைக் கேட்கும்பொழுதெல்லாம் எனக்கு ஏற்படும் எண்ணங்களுக்கு புதிய வார்த்தைகளைத்தான் கண்டுபிடிக்கவேண்டும். இசைச் சித்திரங்கள் என்று சொல்வது வெறும் சம்பிரதாயமானது. ஆனால் உண்மை அதுவே. 71 இல் உயிர் என்ற தமிழ்ப் படத்திற்கு பின்னணி இசை மட்டும் அமைத்திருந்த சலில் சவ்த்ரி தொடர்ந்து கரும்பு (73),பருவ மழை (78), அழியாத கோலங்கள் (79),தூரத்து இடி முழக்கம் (80) போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். தூரத்து இடி முழக்கம் படத்தின் நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு , உள்ளமெல்லாம் தள்ளாடுதே  என்ற இரண்டு பாடல்களும் மனதை சிறைபிடிக்கும் சிறப்பான இசைச் சிற்பங்கள்.

          எல். வைத்தியநாதன்- கேட்ட அதே நொடியில் புதைகுழி போல என்னை உள்ளே இழுத்துகொண்ட இன்னொரு அபூர்வமான பாடலை இங்கே குறிப்பிடவேண்டும். இந்தப் பாடலை விரும்பாதவர்களை நான் இதுவரை சந்தித்ததில்லை. இருப்பார்களேயானால் அவர்களை சந்திக்க விருப்பமும் இல்லை. ஏறக்குறைய முப்பது வருடங்கள் கடந்தும் இந்தப் பாடல் இன்றும் புதுமையாக ஒலிப்பதே இதன் மகத்துவம். மகாகவி பாரதியாரின் பாடல்கள் பல தமிழ்த் திரையில் இசைக்கப்பட்டுள்ளன. பல இசை ஜாம்பவான்கள் அவரது கவிதைக்கு இசை அலங்காரம் செய்திருக்கிறார்கள். காலத்தைத் தாண்டிய கானங்களாக அவை நம் நெஞ்சில் நிழலாடுகின்றன. மறுப்பதற்கில்லை. ஆனால்  எல் வைத்தியநாதன் பாரதியின் இந்தப் பாடலுக்கு செய்திருக்கும் சிறப்பு வாரத்தைகளை மீறிய மரியாதை. அவர் பாரதியின் இந்தப் பாடலுக்கு உயிர் அளித்திருக்கிறார். அந்தப்  பாடல்: ஏழாவது மனிதன் படத்தின் காக்கைச் சிறகினிலே. இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் பாரதியாரின் கவிதைகளே.  இருந்தும் காக்கைச் சிறகினிலே 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் போன்ற அபூர்வம். இன்றும் நவீனமாக ஒலிக்கும் அற்புதம்.  கே ஜே யேசுதாஸ் குரலில் ஜொலிக்கும்   இசை வைரங்களில் இதுவும்  ஒன்று.  பூங்காற்றின் தென்றலாக இசை நம்மை தடவிச் செல்ல, அபாரமான கவிதை நம்மை அசையவிடாது அனைத்துச் செல்ல,பாடலின் இறுதியில் மனிதக் குரல் மென்மையான சீழ்க்கையாக உருமாறி இந்த அற்புதப் பாடலுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது. இந்த இடத்தில் பொதுவாக புல்லாங்குழல் இசை வருவது  இயல்பே. ஆனால் அந்த சம்பிரதாய இசையை எல் வைத்தியநாதன் சத்தமில்லாமல் உடைத்திருகிறார். இதை நான் முன்பே காலமும் கானமும் என்ற பதிவில் காலத்தைத் தாண்டிய கானம்  என குறிப்பிட்டிருந்தேன். அந்த ஒரு வரிக்குப் பின்னால் நான் சொல்ல விரும்பிய விஷயங்களுக்கு  இந்த ஒரு பத்தி அவசியப்படுகிறது.

          சிலர் பத்தாயிரம் பாடல்கள்   என எண்ணிக்கையை வைத்து ஒரு மாயத் தோற்றத்தை வடிவமைக்கிறார்கள். ஆனால் அவற்றில் வெகு சிலவற்றைத் தவிர மற்றதெல்லாம் ஒரு முறை மட்டும்  கேட்பதற்காக உருவானவை.  ஒன்றே செய் அதை நன்றே செய் என்று சொல்லப்படுவதைபோல சிலர் சொற்பமான பாடல்களையே கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த சொற்பதிலும் பல  சிறப்பானவை. தரமானவை. இதுவன்றோ இசை!

         77இல் ஆறு புஷ்பங்கள் என்ற படத்தில் இடம் பெற்ற ஒரு நாட்டுப்புற பாடல்  பலரின் கவனத்தை ஈர்த்தது. எம் எஸ் வி யின் இன்னிசையில் வந்த ஏண்டி முத்தம்மா ஏது புன்னகை என்ற பாடல் அது. அதைப் பாடியது  சந்திரபோஸ் என்ற புதியவர். இவரே பிறகாலத்தில் பல அதிரடி ஹிட் பாடல்களைக் கொடுத்து, சங்கர்-கணேஷுக்கு மாற்றாக அறியப்பட்டவர். 78 இல் சந்திரபோஸ் மச்சானப் பாத்தீங்களா என்ற படத்தில் அறிமுகமானார். (சிலர் மாங்குடி மைனர் படமே முதலில் வந்தது என்று சொல்கிறார்கள்.) இதில் வரும் மாம்பூவே சிறு மைனாவே என்ற பாடல்  இனிமை நிறைந்தது. இந்தப் பாடலில் இளையராஜாவின் நிழல் கொஞ்சம் அடர்த்தியாகவே இருக்கும். தன் சொந்தப் பாதையை அறிந்துகொள்ள முடியாத பல இசை அமைப்பாளர்களில் இவரும் ஒருவர். ஆனாலும் கவனிக்கத்தக்க விதத்தில் சில இனிமைகளை இவர் அளித்திருகிறார். உதாரணமாக மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு (அண்ணா நகர் முதல் தெரு),  நீலக்குயில்கள் ரெண்டு  (விடுதலை) என்ற பாடல்கள் மனதை சட்டென கொள்ளை கொள்பவை. குறிப்பாக மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு பாடலே  சந்திரபோஸின் மிகச் சிறப்பான பாடலாக இருக்கும் என்று நினைக்கிறேன். செவிகளை தொந்தரவு செய்யாத தாலாட்டும் இசை, அருமையான மெலடி என நேர்த்தியாக அமைக்கப்பட்ட இசைச் சித்திரம். அவரின் பெயரைச் சொல்லும் மற்ற எல்லா பாடல்களுமே  என்னைப் பொறுத்தவரை மூன்றாம்தர ரசனைக்கு ஏதுவானவைகள்.  காக்கிச் சட்ட போட்ட மச்சான் (சங்கர் குரு), சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா (ராஜா சின்ன ரோஜா), டில்லிக்கு ராஜான்னாலும் (பாட்டி சொல்லைத்  தட்டாதே),  காள காள மொரட்டுக்காள (மனிதன்) பிறகு சற்று சகித்துக்கொள்ளக்கூடிய மனிதன் மனிதன் இவன்தான் மனிதன் (மனிதன்) போன்றவை இவரது இசையில் பெரிய அளவில் வெற்றி பெற்ற பாடல்கள். ஆனால் பெரிய உயரிய ரசனைக்கு உட்படாதவைகள். முகச் சவரம் செய்துகொண்டோ, அல்லது நாளிதழை புரட்டிக்கொண்டோ கவனமில்லாது  சற்று  கேட்கலாம் அவ்வளவே. மறந்து விட்டாலும் பாதகமில்லை. மன்னிப்பு உண்டு. ஏனென்றால் இவைகளைப்போல ஒரு பத்தாயிரம் கருமாந்திரங்கள்   நம்மிடம் இருக்கின்றன. 

      இப்போது நாம் மறந்துவிட்ட மற்றொரு இசை அமைப்பாளரை நினைவு கொள்ளவேண்டியது கட்டாயமாகிறது. இவர்  16 வயதினிலே படத்தின் முத்திரையாக ஒலிக்கும் செந்தூரப்பூவே மற்றும் அலைகள் ஓய்வதில்லை படத்தின் தரமான பாடலென நான் கருதும் புத்தம் புது காலை பொன்னிறவேளை போன்ற  பாடல்களை  இயற்றியவர். இவர் 80களில் உச்சத்தில் இருந்த இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். இவர் ஒரு கவிஞர், இசை அமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என்று பல அவதாரங்கள் எடுத்தவர். குறிப்பாக எனக்கு கங்கை அமரன் இசை என்றால் நினைவுக்கு வரும் மூன்று படங்கள் இவை: மௌன கீதங்கள்,  வாழ்வே மாயம் மற்றும் சட்டம். இதற்குப் பிறகே சின்ன தம்பி பெரிய தம்பி, சுவரில்லாத சித்திரங்கள் ( கங்கை அமரன் இசை அமைத்த முதல் படமிது. காதல் வைபோகமே என்ற சிறப்பான பாடல் இதில் உண்டு), கனவுகள் கற்பனைகள், விடுகதை ஒரு தொடர்கதை போன்ற படங்களுக்கும் இவரே இசை அமைத்துள்ளார் என்ற தகவலை அறிந்தேன். இது சற்று ஆச்சர்யத்தை அளித்தது. காரணம் கனவுகள் கற்பனைகள் என்ற படத்தில் வரும் வெள்ளம் போல துள்ளும் உள்ளங்களே என்றொரு பாடலை நான் வெகுவாக ரசிப்பதுண்டு. இணையத்தில் எவ்வளவு தேடியும் இதுவரை இந்த முத்து எனக்கு அகப்படவில்லை. மிக அருமையான கீதம். இதே படத்தில் உள்ள தென்றல் ஒரு தாளம் சொன்னது என்ற பாடலும் இனிமையானது.  இசை அமைத்தது யார் என்றே தெரியாமல் நான் பல பாடல்களை அனுபவித்துக் கேட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு ஆனந்த உணர்வை கொடுத்த பாடல் விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று ( விடுகதை ஒரு தொடர்கதை). துயரமான பாடலென்றாலும் சுகமான சோகம் இது. பாடல் அப்படியே நெஞ்சுக்குள் வழிந்து செல்வதை உணரலாம். கங்கை அமரனின் இசை இளையராஜாவின் சுவட்டை ஒட்டியே இருந்தாலும் (மவுன கீதங்கள் படத்தில் இளையராஜா நோட்ஸ் எழுதிக்கொண்டிருக்க கங்கை அமரன் பின்னாலிருந்து அவற்றை சத்தமில்லாமல் சுடுவது போல காட்டியிருப்பார் பாக்கியராஜ்.) உன்னிப்பாக அணுகினால் ஒரு மயிரிழை இடைவெளியை இனம் காண முடியும். வாழ்வே மாயம் படத்தில் வந்தனம், மழைக்கால மேகம் ஒன்று  இரண்டையும் தவிர மற்றவை கங்கை அமரனின் படைப்புகள். இதில் உள்ளதை உருக்கும்  உன்னத கீதம் ஒன்று உண்டு. எனக்கு மிகவும் விருப்பமான பாடலும் அதுவே. நான் குறிப்பிடுவது நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா என்ற பாடலை. இது முதலில் மலையாளத்தில் வந்த பாடல் என்று பிற்பாடு அறிந்தேன். அதற்கு இசை அமைத்தது இளையராஜாவாக இருக்கலாம் என்று அவதானிக்கிறேன். உண்மையா என்று தெரியவில்லை. தேவி ஸ்ரீ தேவி, வாழ்வே மாயம் போன்ற பாடல்களும் கேட்கக் கூடியவையே. மவுன கீதங்களின் டாடி டாடி ஒ மை டாடி, மூக்குத்தி பூமேலே காத்து ஒக்காந்து பேசுதம்மா( மூக்குத்திப் பூ மீது  காற்று உட்கார்ந்து பேசுதம்மா என்றிருக்க வேண்டிய தமிழே  இப்படிப்  பாடாவதியானது), மாசமோ மார்கழி மாசம் (வழக்கமான வாசனை! பாடலின் இறுதியில் எஸ் ஜானகி ஒரு அபாராமான கூச்சலிடுவார்.  கேட்டால் "சிலிர்த்துவிடும்". என்ன ஒரு காவியச் சிந்தனை!)  போன்ற பாடல்கள் பெரிய அளவில் வெற்றியடைந்தன.

         கங்கை அமரனின் இசையில் வந்த சட்டம் (தோஸ்தானா என்ற ஹிந்திப் படத்தின் தமிழ்த்  தழுவல்)படத்தின் பாடல்கள் கூட ஒரு நல்ல ரசனைக்கு உகந்ததாகவே இருந்தன. வா வா என் வீணையே விரல் மீது கோபமா?,அம்மம்மா சரணம் சரணம், நண்பனே எனது உயிர் நண்பனே, ஒரு நண்பனின் கதையிது போன்ற பாடல்கள் சலிப்பில்லாது கேட்கப்படக்கூடியவை. குறிப்பாக வா வா என் வீணையே ஒரு நளினமான காதல் கானம். ஏறக்குறைய ஐம்பது படங்களுக்கு கங்கை அமரன் இசை அமைத்துள்ளார். (ஒருவேளை எண்ணிக்கை தவறாக இருக்கலாம்.) நான் அவ்வளவாக இவர் இசையை தொடர்ந்தவன் இல்லை என்பதாலும் 80 களின் இசைப் போக்கை கடுமையாக வெறுத்ததாலும் இவரது அண்ணனின் இசைப் "பொக்கிஷங்களையே" விரும்பி காதுகொடுத்து கேட்டதில்லை என்பதாலும்   இவரது இசையில் வந்த பல பாடல்களை குறிப்பிட முடியவில்லை. சிலவற்றை கேட்டிருக்கிறேன். உதாரணமாக இசைக்கவோ நம் கல்யாண கானம்-மலர்களே மலருங்கள், நாளெல்லாம் பவுர்ணமி என்ற படத்தின் நீதானா நெசந்தானா நிக்க வச்சு நிக்க வச்சு ..... (ஏடாகூடமாக கற்பனை விரிய வாய்ப்புகள்  இருக்கின்றன. எல்லாம் அவரது அண்ணன் காட்டிய வழி. இப்படித்தான் இவர்களின் தமிழ்த் தொண்டு நம் இசையை "அடுத்த கட்டத்திற்கு" எடுத்துச் சென்றது! ) போன்றவை நினைவில் இருக்கின்றன.  இதன் பின் சின்ன தம்பி பெரிய தம்பி என்ற படத்தில் இடம் பெற்ற ஒரு உண்மையான நல்ல பாடல் என்னைக் கவர்ந்தது.  ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது என்ற அந்தப் பாடல் வெகு சிறப்பாக இசைக்கப்பட்ட அழகான கானம். இதை இளையராஜாவின்  இசை என்று நினைத்திருந்தேன்.  படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தாலும் இந்தப் பாடல் மட்டும் அவர் இசையமைப்பில் வரவில்லை என்றும் இது உண்மையில் இளையராஜாவின் பாடலேதான் என்றும் பின்னர் தெரிய வந்தது.

     80களில் அதிசயமாக இன்னும் சிலர் இசைக் களத்தில் திடீரெனெ தோன்றி அதே திடீரெனெ மறைந்தும் போனார்கள்.

            ஸ்பரிசம் என்றொரு படம் ஆர் சி சக்தியின் இயக்கத்தில் 82இல் வந்தது. இதற்கு ரவி என்பவர் இசையமைத்திருந்தார். யார் இந்த ரவி என்று தெரியவில்லை. ஒருவேளை இவர்  பழம்பெரும் ஹிந்திப் பட இசை அமைப்பாளர் (பாம்பே) ரவியாக இருக்கலாம்.  இரண்டு அற்புதமான பாடல்கள் இதில் உண்டு. ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து, மற்றும் நான் என்னுடைய பழைய பதிவுகளில் அடிக்கடி  குறிப்பிட்டிருக்கும் ஊடல் சிறு மின்னல். ஊடல் என்ற இந்தப் பாடல்  ஒரு அபூர்வ இசை வடிவம். மொத்தப் பாடலும்  நான்கே வரிகள் கொண்டது.

           ஊடல் சிறு மின்னல் 
           குளிர் நிலவே வாடலாமா?
           காதல் விளையாட்டில் 
           கண்ணீர் மாலை சூடலாமா?

      பாடலின் பல்லவியாக வரும் இதே வரிகளே  இடையிசைக்குப் பின் வரும் சம்பிரதாயமான சரணமாகவும் இருக்கும். மூன்று வெவ்வேறு மெட்டுகளில் இந்தப் பல்லவியை பாடல் முழுவதும் இனிமையான இசையோடு படைத்திருப்பார் ரவி. கேட்க அசாதரணமாக, 80களின் இசைப் பாணியை விட்டு வெகுவாக விலகியிருப்பதை உணரலாம். கண்டிப்பாக சிறந்த இசை ரசனைக்கு உகந்த கானம். இந்தப் பாடலை நான் ஒரு நவீன முயற்சியாகவே காண்கிறேன். இதே போல மற்றொரு பாடல் மரகதமணியின் இசையில் நீ பாதி நான் பாதி என்ற படத்தில் வந்த நிவேதா என்ற பாடல்.  இடையிடையே ராக ஆலாபனைகள் பின்பாட்டு பாட முழு பாடலும் நிவேதா என்ற ஒற்றைச் சொல்லைக்கொண்டே அமைந்திருக்கும். ஒருவிதத்தில் இதை ஒரு instrumental music எனலாம். இம்மாதிரியான இசை முயற்சிகள் (புரட்சிகள்!) பாராட்டப்படாமல் போனது வருத்தமளிக்கும் உண்மை. மாறாக இதுபோன்ற புதிய இசை வடிவங்கள்  புகழ் பெற்ற வேறு ஒருவரிடமிருந்து வந்திருந்தால் அவரைக் கொண்டாடியிருப்பார்கள் நம் ரசிகர்கள்.

            காற்றுக்கென்ன வேலி (82) என்ற படத்தில் சிவாஜி ராஜா என்ற ஒரு புதிய இசை அமைப்பாளர் மிகச் சிறப்பான வகையில் பாடல்கள் அமைத்திருந்தார். கடல் மீதிலே தன் மீனை தேடினாள்  மற்றும் சின்னச் சின்ன மேகம் என்னைத் தொட்டுப் போகும் என்ற பாடல்கள் இனிமையான கீதங்கள். அவ்வளவாக தமிழ்ப் பாடல்களை விரும்பிக் கேட்காத  அந்த நாட்களிலேயே என்னைக் கவர்ந்தன இந்தப் பாடல்கள். அப்போது உச்சத்தில் இருந்தவரைப்  பற்றிய எந்த சிந்தனையுமே இல்லாதிருந்த நான் ஒரு விதத்தில் அவரது பாணியை சலிப்புத் தட்டுவதாக உணர்ந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. எனவேதான் எந்த புதிய இசையையும் அது தரமானதாக இருக்கும் பட்சத்தில் வரவேற்கத்  தயாராக இருந்தேன்.

     அடுத்து   வி எஸ் நரசிம்மன் என்ற  தேர்ந்த வயலின் வித்வான் ஒருவரை பற்றி பேசவேண்டியது அவசியம் என்றுனர்கிறேன். இவர் இளையராஜாவின் குழுமத்தில் வயலின் வாசித்தவர்.  How To Name It? என்ற அவரது முதல் இசைத் தொகுப்பில் வரும் அந்த வயலினிசை நரசிம்மனுடையது. மிகுந்த இசை அறிவு கொண்டவரான இவர் முதலில் பாலச்சந்தரின் அச்சமில்லை அச்சமில்லை படத்திற்கு இசை அமைத்தார். அதில் உள்ள ஆவாரம் பூவு, ஓடுகிற தண்ணியில என்ற பாடல்கள் கவனத்தை ஈர்த்தன.  தொடர்ந்து புதியவன் படத்தில் நானோ கண் பார்த்தேன், தேன் மழையிலே தினம் ரசிக்கும், வந்தது வசந்த காலம்  போன்ற இனிமையான இசை கீதங்களைப் படைத்தார்.இதன் பின் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்தது ஆயிரம் பூக்கள் மலரட்டும்  என்ற படத்தின் ஆயிரம் பூக்கள் மலரட்டும், இது இளமை எழுதும் கதை, பூ மேடையோ, மேகம் அந்த மேகம் பாடல்கள்.  குறிப்பாக பூ மேடையோ பாடல் இரவினில்  ஜன்னலோரம் அமர்ந்து வீசும் தென்றலை உள்வாங்கும் சுகத்தைக் கொண்டது. இந்தப் பாடலின் இசைத் தொழில் நுட்பம் வெகு துல்லியமாக இருக்கும். கேட்டால் நீங்களே இதை உணர்வீர்கள். நீண்ட நாட்கள் கழித்து பாச மலர்கள் என்ற  படத்தில் மீண்டும் இசையமைத்தார். ஹே ராம் படத்தில் இவரது பங்கு இருப்பதாக ஒரு தகவல் சொல்கிறது. தற்போது தனி இசை தொகுப்புகள் வெளியிடுவதில் இவர் கவனம் செலுத்தி வருவதாக அறிந்தேன்.

    80 களின் மையத்தில் தேவேந்திரன் என்னும் ஒரு திடீர் இசையமைப்பாளர்  மண்ணுக்குள் வைரம்,  வேதம் புதிது போன்ற படங்களுக்கு இசையமைத்தார். இவரது இசையில் எந்தவிதமான தனித் தன்மையையும் நம்மால் பிரித்துப் பார்க்க இயலாத அளவுக்கு இளையராஜாவின் நகல் போலவே  இசையளித்தார். மண்ணுக்குள் வைரம் படத்தில் பொங்கியதே காதல் வெள்ளம், இதழோடு என்ற  பாடல்கள் கொஞ்சம் வெளிச்சம் கண்டன. இளையராஜாவை விட்டுப் பிரிந்த பின்  பாரதிராஜா முதன் முதலில் அணுகிய வேற்று இசையமைப்பாளர் இவர்தான். வேதம் புதிது படத்தில் கண்ணுக்குள் நூறு நிலவா, புத்தம் புது ஓலை வரும், சந்திக்க துடித்தேன் போன்ற பாடல்கள் பிரபலமடைந்தன. இருந்தும் இவரால் இங்கே தொடர முடியாததில் பெரிய மர்மங்கள் எதுவுமில்லை.  

              இதே வரிசையில் வந்த இன்னொருவர் ஹம்சலேகா என்ற கன்னட இசையமைப்பாளர்.  இவர்  கன்னடத்தில் முன்னூறு படங்களுக்கு மேல் இசை அமைத்திருப்பவர். பருவ ராகம் என்ற படத்தில் இளைஞர்களைக் கவர்ந்த இவர் பாரதிராஜாவின் கொடி  பறக்குது, கேப்டன் மகள் என்ற இரண்டு படங்களுக்கு இசையமைத்திருந்தார். பருவ ராகம் படத்தின் இளமைத் துடிப்புடன் வந்த  பூவே உன்னை நேசித்தேன்,  ஒரு மின்னல் போல எங்கள் முன்னாள் போவது யாரு?,காதல் இல்லை, கேளம்மா கேளம்மா, யார் இவனோ பாடல்கள்  முனு முணுக்க வைத்தன. சராசரிப் பாடல்கள் என்ற அளவிலேயே இவற்றை நாம் பார்க்கமுடியும். கொடி பறக்குது படத்தின் சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு என்ற பாடல் அப்போது மிகப் பெரிதாக உலா வந்தது. காதல் என்னை  என்ற பாடலும் சற்று தலை காட்டியது. பின்னர் வேலை கிடைச்சிருச்சு, நாட்டுக்கொரு நல்லவன், படங்களில் பணியாற்றினார். கேப்டன் மகள் படத்தின்  எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று  பாடல் ரசனைக்கு ஏதுவாக கேட்கக்கூடிய விதத்தில்  இருந்தது. அவ்வளவே. இவரது இசையைத்தான் இளையராஜா "எதோ டப்பிங் பட இசை போல இருக்கிறது" என்று "பாராட்டினார்" கொடி பறக்குது படம் வந்த புதிதில். இவர் தமிழில் காலூன்ற முடியாததில் வியப்பொன்றுமில்லை.

     87 இல் வந்த ஒரு வெற்றிப் படம் சின்னப் பூவே மெல்லப் பேசு. பிற்காலங்களில் வெறும் ல ல லா இசையமைப்பாளர் என்று பெயரெடுத்த எஸ் எ ராஜ்குமார் அறிமுகமான படமிது. இதில் அவர் சில ரசிக்கக்கூடிய பாடல்களை கொடுத்திருந்தார்.( ஆனால் நான் அதிகம் இவைகளை விரும்பியதில்லை. ) குறிப்பாக சின்னப் பூவே மெல்லப் பேசு, சங்கீத வானில் இரண்டும் மெல்லிசையின் சிறப்பான பதிவுகள். ஏ புள்ள கருப்பாயி என்ற பாடல் மிகவும் பிரபலமான ஒன்று. ஆனால் இவர்  இசையில் எந்த விதமான புதுமையும் இல்லாதிருந்தது. இது  இவரது  பாடல்களை  ஏற்கனவே பத்தாயிரம் முறை கேட்ட சலிப்பையே கொடுத்தது. இளையராஜாவின் முத்திரையை உடைக்கும் இசையை மக்கள் தங்கள் ஆழ்மனதில் எதிர்பார்த்திருந்தார்கள். அதற்கான தகுதிகள் இல்லாத இசையமைப்பாளர்களே இந்த சமயத்தில் தமிழ்த் திரைக்கு வந்தனர். எனவே சில நல்ல சிறப்பான பாடல்களோடு இவர்களைப் போன்றவர்களின் இசையோட்டம் முடிந்து போனது.

  இதற்கிடையில்  ஹிந்திப் படங்களில் இசை அமைத்துக்கொண்டிருந்த  மனோஜ்-கியான் என்ற இருவர் ஊமை விழிகள் என்ற திரைப்படக் கல்லூரி மாணவர்களின் படத்தின் மூலம் 86 இல்  தமிழில் அறிமுகமானார்கள்.  படம் எதிர்பாராத அளவில் பெரிய வெற்றியை அடைந்தது. படத்தின் பாடல்களும் அதே அளவுக்கு பிரபலமானது ஒரு வியப்பான நிகழ்வு. கண்மணி நில்லு, மாமரத்துப் பூ பாடல்கள் மென்மையாக இருக்க திடீர் அதிரடியாக கொஞ்சம் விரக ஓசையுடன் துடித்தது ராத்திரி நேரத்துப் பூஜையில். மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட தத்துவப் பாடல்களான நிலைமாறும் உலகில், தோல்வி நிலையென நினைத்தால் இரண்டும் இன்றுவரை பாராட்டப்படுபவை. மனோஜ் கியான் ஒரே படத்தில் கவனத்தை ஈர்த்தனர்.  இவர்களது இசை இளையராஜாவின் சாயலை கொண்டிராது வேறு தொனியில் இருந்தது ஒரு குறிப்பிடத்தக்க அம்சம். சொல்லப்போனால் 86-92 காலகட்டங்களில் இளையராஜாவின் இசைச் சாயலின்றி இசையமைக்க முடியும் என்பதே ரஹ்மானின் வருகைக்குப் பிறகுதான். இருந்தும்  மனோஜ்-கியான் இசையில் நாம் சற்று அதிகமாகவே அவர்களின்  தனித்தன்மை இழையோடுவதைக்  கேட்கலாம். தமிழில் பத்துப் படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ள மனோஜ் கியான் முடிந்தவரை சிறப்பான இசையையே தந்திருக்கிறார்கள். இவர்கள் இசையில் வந்த இன்னொரு அருமையான கானம் வெளிச்சம் படத்தில் இடம் பெற்ற  துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே. இது  ஒரு இனிமையின் விலாசம். இதைக் கேட்கும் போதெல்லாம் பல வகையான காட்சிகள் மனதில் தோன்றுகின்றன. இதைத் தவிர இவர்கள் இசையில் வந்துள்ள இன்னும் சில இன்னிசை கீதங்களை இப்போது உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

என்ன சொல்ல ( ஆனந்த ஆராதனை),
அழகான புள்ளிமானே (மேகம் கறுத்திருக்கு),
செந்தூரப் பூவே இங்கு தேன் சிந்த வா வா (செந்தூரப் பூவே),
மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம், பொன்மானே நில்லடி என்பேரை சொல்லடி, விடுகதை போட்டுவிட்டு விடை ஒன்று தேடுகிறேன் (உரிமை கீதம்), 
நான் முதன் முதல் பாடிய பாட்டு,ஓ  கண்களே,  ஒரு முல்லைப் பூவிடம் கொஞ்சும் (தாய் நாடு),
அந்தி நேர தென்றல் காற்று-  (இணைந்த கைகள்) தென்றலாக வீசும் கீதம். இதுதான் கடைசியாக இவர்களின் இசையில் வந்த நினைவில் நின்ற பாடல் என்று நினைக்கிறேன். இதன் பின் மனோஜ் கியான் காதல் ராசி என்ற படத்திற்கு இசை அமைத்திருந்தார்கள். பின்னர் இவர்கள் பெயர் மறைந்தே போனது.

    எண்பதுகளின் மத்தியில்  ஹிந்தியின்  பிரபலமான இரண்டு இசை அமைப்பாளர்கள் தமிழில் தங்களின் முத்திரையை சற்றே பதித்த நிகழ்வும் நடந்தது.  பூ மழை பொழியுது என்ற படத்தில் ஹிந்தியின் இசை சகாப்தம் என்று வர்ணிக்கப்படும் ஆர் டி பரமனின் இசையில் நதியா நதியா நைல் நதியா என்றொரு பாடல் கவனிக்கத்தகுந்த அளவில் புகழ் பெற்றது. பாபி பட இசை அமைப்பாளர்களாகிய லக்ஷ்மிகாந்த் பியாரிலால் உயிரே உனக்காக என்ற தமிழ்ப் படத்தில் பல சிறப்பான பாடல்களை கொடுத்திருந்தார்கள். தேனூறும் ராகம், பன்னீரில் நனைந்த பூக்கள், பல்லவி இல்லாமல் பாடுகிறேன்,கையாலே உன்னைத் தொட்டால் போதும்,கவிதைகள் விரியும் விழியிலே, ஐ வாண்ட் டு பி எ ரிச் மேன் என்ற பாடல்கள்  ரசனைக்கு ஏற்றவகையில் இருந்தன. கல்லூரி விடுதியில் தனியறை கிடைக்காததால் 25பேர் கொண்ட ஒரு அகண்ட ஹாலில் நான் தங்கியிருந்த சமயத்தில் ஒரு அவஸ்தை (தாமஸ் என்று பெயர்) பன்னீரில் நனைந்த பூக்கள் பாடலை நாள் முழுதும் கேட்டுக்கொண்டிருப்பான். நாள்தோறும் இந்தத் தலைவலி தொடர்ந்தது. அதற்குப் பிறகு இந்தப் பதிவுக்காக இப்போதுதான் மீண்டும் இந்தப் பாடலைக் கேட்கிறேன். இந்தப் படத்தில் என் தனிப்பட்ட விருப்பம்  தாளங்கள் எதுவுமின்றி ஒற்றைக் கிடார் இசையில்  எஸ் பி பி மிக ரம்மியமாகப் பாடும் பல்லவி இல்லாமல் பாடுகிறேன் பாடல்தான். எதோ கடற்கரை மணலில் தனியே வானில் விண்மீன்களைப் பார்த்தவாறு படுத்திருப்பதைப் போன்ற உணர்வை இப்பாடல் அளிக்கிறது- ஒவ்வொரு முறையும்.

     இப்போது சற்று பின்னோக்கிக்  சென்றால் இன்னொரு முக்கியமான நபரை அறிந்துகொள்ளலாம். 80ல்  விழாக் கோலம் கண்ட ஒரு  படம் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும்  ஒரு ஜல்லிக்கட்டுக் காளையைப் போல சீறிப்பாய்ந்தது. இப்படத்தின் வெற்றி பொதுமக்கள் முதல் திரைத் துறையைச் சேர்ந்த பலருக்கும் தணியாத திகைப்பை கொடுத்தது. காரணம் இந்தப் படத்தில் திரையிலும் அதன்  பின்னும்  பணியாற்றிய அனைவருமே (சந்திரசேகர் என்ற நடிகரைத் தவிர) திரையுலகிற்கு மிகப் புதியவர்கள். அதுவரை இவர்களின் பெயர்களை தமிழகத்தில் யாரும் உச்சரித்துக் கேட்டதேயில்லை. ஒரே படம் இப்படத்தில் பணியாற்றிய அனைவரையும் (சற்று மிகைப்படுத்தப்பட்ட சொல்) ஒரே நொடியில் அரியணையில் ஏற்றியது. இதை பலரும் 16 வயதினிலே பட  வெற்றியோடு ஒப்பிட்டு பாராட்டினாலும்   அதன்  வெற்றிக்கு பாரதிராஜா, இளையராஜா பாக்கியராஜ்  கூட்டணியைத் தாண்டி கமல், ஸ்ரீதேவி, ரஜினி போன்ற நட்சத்திரங்களின்  துணை  ஒரு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் இதுவோ   முற்றிலும் ஒரு அந்நியர்களின் படையெடுப்பு. ஷேக்ஸ்பியர் ஜூலியஸ் சீசரைப் பற்றிப் பேசும்போது  வந்தான், கண்டான், வென்றான் என்று எழுதியது இலக்கிய உலகில்  மிகப் புகழ் பெற்றது. அதே போல் வந்தார்கள் வென்றார்கள் என்றே இந்தப் படத்தை உருவாகியவர்களைப் பற்றி நாம் சொல்லமுடியும்.  அந்தப் படம் ஒரு தலை ராகம். காதலர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளாமலே இருப்பது, டூயட் என்று பாடாதது,காதலன் காதலியைத் தொடாமலிருப்பது போன்ற சங்கதிகள் மக்களிடம் இந்தப் படத்தைப் பற்றிய நல்லெண்ணத்தை உண்டாக்கி இதன் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தன என்று சொல்லலாம். இந்தப்  படத்தில்  ஒரு காட்சி உண்டு. கல்லூரி பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் மாணவர்கள் பேச முடியாது திக்கித்  திணறி நாடகத்தனமாக அழுதுகொண்டிருக்கும் போது , தொடர்ந்து பேச  வேறொரு மாணவன் எழ எத்தனிக்கையில் குடிகாரனாக வரும் சந்திரசேகர் அவன் தோளை அழுத்தி உட்காரவைக்கும் அந்தக் காட்சிக்கு திரையரங்கம் முழுவதும் ஆர்ப்பாட்டமான உணர்சிக் கொந்தளிப்பைக் காண முடிந்தது.  விசில்கள், கைத்தட்டல்கள், "வாடா வாடா வந்து பேசுடா" என்று குதித்த ரசிகர்கள் என்று அரங்கமே அதிர்ந்தது. இது இன்றைய ஹீரோக்களுக்கு அறிமுகக் காட்சியின் போது கிடைக்கும் அதிரடியான ஆதரவைப் போன்றது. ஏனென்றால் அதன் பின்தான் சந்திரசேகர் அந்தப்  பிரபலமான வெள்ளைப் புறா(!)  சிகப்பாக மாறிய கதை சொல்வார். இப்போது எண்ணிப் பார்க்கையில் மனதை அசைக்கும் ஒரு சோகத்தை அதே சோகங்களுடன் ரசித்த ஒரு சாமானியனின் ரசனை இன்றைக்கு வெறும் உளுத்துப்போன பஞ்ச் வசனங்களுக்குள் தொலைந்து போய்விட்டதே என்ற வருத்தம் வருகிறது.


          படத்தின் எதிர்பாராத மகா வெற்றி  படத்தின் பின்னணியில் வேலை செய்த எல்லோரையும் (லைட் பாய்ஸ் தவிர) இது என் படம் என்று சொல்லவைத்தது. இப்ராஹிம் (இவர்தான் இப்படத்தின் இயக்குனர் என்று டைட்டிலில் காண்பிக்கப்படும்)  என்பவர் தொடர்ந்து தணியாத தாகம் என்று படம் "இயக்கி" தணிந்தே போனார்.  ராபர்ட் ராஜசேகரன் கூட்டணி அடுத்து பாலைவனச் சோலை எடுத்து நம்மை நிமிர்ந்து உட்கார வைத்தாலும் அதன் பின் கல்யாண காலம் என்று ஒரு படம் காட்டி  காணாமல் போனார்கள். படத்தின் இசை அமைப்பாளர்களாகிய டி ராஜேந்தர்-எ எ ராஜ் என்ற இருவரில் முன்னவர் மட்டும் தொடர்ச்சியாக காதல் தோல்விப் படங்களாக படுத்தி எடுத்து  ஒரு தலை ராகம் படத்தின் இயக்குனர்  உண்மையில் யார் என்ற கேள்விக்கு  விடையளித்தார்.

          ஒரு தலை ராகம்  டி ராஜேந்தர் என்ற (இவரை எந்த வகையில் சேர்ப்பது என்ற குழப்பம் இருக்கிறது) புதிய இசை அமைப்பாளரை தமிழ்த் திரையில் கரையேற்றியது.  படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய அளவில் அதன் பாடல்கள் துணை நின்றன. இதில் இடம் பெற்ற ஏழு பாடல்களும் வானொலியிலும்,கச்சேரிகளிலும், டீக்  கடைகளிலும், திருமண மண்டபங்களிலும் விடாது ஒலித்தன. சிறப்பு என்னெவென்றால் இந்த ஏழில் ஒன்றில் கூட மருந்துக்கும் பெண் குரல் கிடையாது. எல்லாமே ஆணின் ஏக்கம்,காதல்,மோகம், குதூகலம்  மற்றும் வேதனையை வெளிப்படுத்திய பாடல்கள்.  குறிப்பாக வாசமில்லா மலரிது கேட்டவுடனே எல்லோரையும் கவர்ந்தது.  டி எம் எஸ்  இந்தப் படத்தில் பாடியதால்தான் மார்கெட்டை இழந்தேன் என்று ராஜேந்தரை மன்னிக்காத குறையாக குற்றம் சாட்டிய என் கதை முடியும் நேரமிது, நான் ஒரு ராசியில்லா ராஜா இரண்டுமே அருமையானவை. மன்மதன்  ரட்சிக்கனும் அப்போது வெகு பிரபலம். ஏகப்பட்ட பெண்களின் பெயர்களோடு ஜாலி ஏப்ரஹாம் குதூகலமாக பாடியதை அப்படியே வீடுகளிலும் பள்ளிக்கூடத்திலும்  பெயர்களை மாற்றிப் பாடுவதில்தான் எத்தனை மகிழ்ச்சி! கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் ஒரு ஆழமான சோகத்தின் வலியை உணர்த்தும் haunting tune.  கூடையிலே கருவாடு அந்த காலகட்டத்தின் அவசியப்பட்ட அபஸ்வரம். குறிப்பாக இந்தப் படத்தின் மிக சிறப்பான பாடல் என்னைப் பொறுத்தவரை முரண்களின் முத்தாய்ப்பாக ஒலிக்கும்  இது குழந்தை பாடும் தாலாட்டு என்ற பாடலே. இதை ஒரு extended paradoxical oxymoron வகையைச் சேர்ந்தது  என்று குறிப்பிடலாம். (இருந்தும் இது சரியானதா என்று தெரியவில்லை.)

     இது குழந்தை பாடும் தாலாட்டு 
     இது இரவு நேர பூபாளம் 
     இது மேற்கில் தோன்றும் உதயம்    
     இது நதியில்லாத ஓடம் 

     டி ராஜேந்தரை இப்போது ஒரு நகைச்சுவைத்  துணுக்காக பார்க்கும் மனோபாவம் பலரிடம் இருக்கிறது. ஏனென்றால் அவர் சினிமா போஸ்டர் ஓட்டுவதைத் தவிர தன் படத்தின் அத்தனை விஷயங்களையும் தானே வலிந்து  செய்பவர் என்று  பெயர் பெற்றவர். அவருடைய நடிப்பு என்னும் சேஷ்டைகளையும் கோமாளித்தனங்களையும் இயக்கம் என்ற அவஸ்தையையும் இன்னபிற சங்கடங்களையும் மன்னித்து விடுவது உத்தமம். ஆனால் அவர் ஒழுங்காகச் செய்த ஒரே பணி இசை என்று தோன்றுகிறது. அவரது படங்களைப் பார்த்தால் இதை நீங்கள் வேறுவழியின்றி ஒத்துக் கொள்வீர்கள்.  ஒரு தலை ராகத்திற்குப் பிறகு  அந்த கூடாரத்திலிருந்து வெளியேறியவர்களில் வெற்றிகரமாக தமிழ்த் திரையில் உலா வந்தவர்  இவர் மட்டுமே. இவரது பாடல்கள் வந்த புதிதில் தரமானதாகவே இருந்தன.  எண்ணிவிடக்கூடிய சில அற்புதங்களை இவர் படைத்திருக்கிறார் என்பதும்  உண்மையே. இவரது கவிதைகள்   சில எதிர்பாராத ஆச்சர்யங்களைத்  தரக்கூடியது  மேலே உள்ளதைப் போல. ஏறக்குறைய 80களின் இறுதிவரை இவர் பாடல்கள் ரசிக்கக்கூடிய விதத்திலேயே இருந்தன. அதன் பின் இனிமை தேய்ந்துபோய் வெறும் வெற்று ஓசைகளாக இவரது பாடல்கள் முடங்கிப் போயின.

  அட நீல சேல பறக்கையில, தேவலோகம் அழைத்தாலும், கங்கை பொங்குதே என் கண்களோரம், முத்து முத்து ஜாதி முல்ல- வசந்த அழைப்புகள்.

  அட யாரோ பின்பாட்டு பாட, அமைதிக்குப் பெயர்தான் சாந்தி , நூலுமில்லை வாலுமில்லை, வசந்த காலங்கள், வசந்தம் பாடி வர- ரயில் பயணங்களில். இந்தப்  படத்தின் அனைத்துப் பாடல்களும் மிக பிரபலமானவை. அடிக்கடி வானொலிகளில் இவற்றை கேட்கமுடியும் அப்போது. ராஜேந்தரின் கவிதை நயம் மக்களின் கவனத்தை ஈரத்தது இந்தப் படத்தில்தான் என்று நினைக்கிறேன். பெண்களை வர்ணிப்பதில் ராஜேந்தர் ஒரு புதிய பாணியை கொண்டிருந்தார் என்றே சொல்லலாம். குறிப்பாக இதழ்கள் ஊறுமடி என்று ஒரு வரியை இதழ் கள் ஊறுமடி என்று பாடவைத்திருப்பர் வசந்த காலங்கள் என்ற பாடலில். எஸ் பி பியின் மெழுகுக்  குரலில்   வசந்தம் பாடி வர என்ற பாடல் மிகச் சிறப்பானது.

     நெஞ்சில் ஒரு ராகம் என்ற அடுத்த படத்தில் ராஜேந்தர் சில சிறப்பான பாடல்களை அளித்திருந்தார். இதய வாசல்வருகவென்று பாடல் ஒன்று பாடும் (அருமையான ட்ரம்ஸ் இசையுடன் சரியான மேற்கத்திய கலவையாக ஒலிக்கும் அற்புதப் பாடல்.),மேகம்தான் இதில் மழையே  இல்லை (இது ஒரு குழந்தை பாடும் தாலாட்டு பாணியில் இருக்கும் சராசரிப் பாடல்.),  நெஞ்சம் பாடும் புதிய ராகம் ( அடுத்த அற்புதம். ஜானகி பாடலைப் பாட இடையிடையே எஸ் பி பி பெரும்பாலும் ஹம்மிங் செய்துகொண்டே இருப்பது ஒரு நவீனம். எந்த சாயலையும் தன மீது போர்த்திக்கொள்ளாத புதுமையான  இசை பாணி.)

       ராஜேந்தரின் மிக சிறப்பான பாடல்கள்  என்று நான் நினைப்பது ராகம் தேடும் பல்லவி என்ற படத்தில் வரும் ஆழ்கடலில் தத்தளித்து (நானெடுத்த முத்து ஒன்றை விதியவன் பறித்தது ஏன்), மற்றும் மூங்கிலிலே பாட்டிசைக்கும் (இந்தப் பாடலை கேட்கும் போதே மனதுக்குள் எதிரொலிப்பது போல ஒரு உணர்வு வரும். கேட்டதும் சட்டென நெஞ்சத்தை நிரப்பும் பாடல்.) என்ற இரண்டு கானங்களைத்தான். குறிப்பாக ஆழ்கடலில் தத்தளித்து பாடலின் இறுதி சரணத்தில் வக்கிரமான போதைகளில்லாமல் தரமான  தமிழில்  உடைந்த காதலின் வலியை  உணர்த்தும் அபாரமான வரிகள் உண்டு.

       கரைபோல் காத்திருந்தேன் 
       நதியை எதிர்பார்த்திருந்தேன் 
       கதை மாறிடவே 
       கரை வேறு கண்டாள் 
       கால அலைகளுடன் 
       புது நதியைக் கொண்டாள் 
       அது ஏன்?
        என் மனதில் பாலைவனமானேன் 
       மணிவிழியில் சோகக் கடலானேன்.

      தனது படங்களைத் தவிர சில வேறு இயக்குனர்களின் படங்களுக்கும் ராஜேந்தர் இசை அமைத்துள்ளார். பசி இயக்குனர் துரையின் கிளிஞ்சல்கள் படத்தில் இவரது இசையில் "அழகிலினில் விளைந்தது மழையினில் நனைந்தது, விழிகள் மேடையாம்,சின்ன சின்ன கண்ணா" போன்ற பாடல்கள் இன்றளவும் ரசிக்கப்படக்கூடியவை. தொடர்ந்து சட்டம் சிரிக்குது,பூக்களைப் பறிக்காதீர்கள், கூலிக்காரன்,இவர்கள் வருங்காலத் தூண்கள், முத்துகள் மூன்று,பூபூவா பூத்திருக்கு, பூக்கள் விடும் தூது போன்ற படங்களுக்கு இசை அமைத்தார். இதில் பூக்களைப் பறிக்காதீர்கள் படத்தின் பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமானவைகள். அடி அம்மாடி சின்னப் பொண்ணு (ஒரு மணப் பெண்ணுக்கான சம்பிரதாய அறிவுரைகள்  சொல்லும் பாடல்), காதல் ஊர்வலம் இங்கே, மாலை என்னை வாட்டுது (காதலில் விழுந்த என் உயிர் நண்பன் இந்தப் பாடலை ஒரு கசெட் தேயும் வரையில் ரீவைண்ட் செய்து ரசிப்பதைக் கண்டு நான்  வியந்து போனேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுவை பிடிக்கிறது.) மானே தேனே, பூக்களைத்தான் பறிக்காதீங்க  போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பைப்  பெற்றன.  கூலிக்காரன் படத்தின் வச்ச குறி தப்பாது,குத்து விளக்காக குல மகளாக நீ வந்த நேரம் பாடல்களும் கவனத்தை ஈர்க்கத் தவறவில்லை.

     ராகம் தேடும் பல்லவிக்குப்  பிறகு ராஜேந்தரின் பாடல்கள் என்னைக் கவரவில்லை என்பதை இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இருந்தும் இதன் பிறகே அவர் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டார். கீழே அவருடைய வெற்றி பெற்ற பாடல்களை குறிப்பிட்டுள்ளேன். என்னைப் பொறுத்தவரை உண்மையான இசை ரசனை கொண்டவர்கள்  இதிலுள்ள முக்கால்வாசி பாடல்களை junk music என்று ஒதுக்கிவிட வாய்ப்புள்ளது.

         ராஜேந்தரின் திரைப் படங்களில்  மிகப் பெரிய அளவில் வணிக வெற்றியை பெற்றது  உயிருள்ளவரை உஷா. ஆயிரம் முறை சுட்ட அதே  கல்லூரிக்   காதல் தோசைதான். படம் படு செயற்கையாக பார்பதற்க்கே எரிச்சல் மண்டிக்கொண்டு வரும். கொஞ்சம் இளைஞர்களின் நாடித்துடிப்பை சீண்டிப் பார்க்கும்  காட்சிகள் (பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை ஆரம்பித்து வைத்த  கோளாறு.), ராஜேந்தரின் கிளாசிக் கோமாளித்தனம், அபத்தமான கல்லூரிக் காட்சிகள் ,சரவெடியாக வெடித்த பாடல்கள் என இந்தப் படம் எகிறிக் குதித்தது. அனைத்துப் பாடல்களும் உரத்து ஒலித்தன. இளையராஜா  உச்சத்தில் இருந்த சமயத்தில்  அவர் பாடல்களுக்கு இணையான  அதிரடி ஹிட் கொடுத்தவர் ராஜேந்தராகத்தான் இருக்க முடியும். இதை அவர் தொடர்ந்து மூன்று நான்கு படங்களில் செய்தார். ராஜேந்தரின் பாடல்களுக்கு பள்ளிச் சிறுவர்களும் கல்லூரி மாணவர்களும் கொண்ட  ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. வெற்றிக்காக தன் இலக்கியத் தரமான கவிதையைக்  கூட அவர்  துறந்தாரோ  என  எண்ணுமளவுக்கு பெண்களைக் கிண்டல் செய்ய ஏதுவான பாடல்கள் இந்த காலகட்டத்தில் ராஜேந்தரின் இசையில் அதிகம் வந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். உயிருள்ளவரை உஷா படத்தின் பாடல்களான அடி என்னடி பந்தாடும் பாப்பாக்களே (Obviously no pun intended), இதயமதை கோயில்  என்றேன், இந்திரலோகத்து சுந்தரி ராத்திரி, கட்டடிப்போம் கட்டடிப்போம் காலேஜுக்கு,மோகம் வந்து தாகம் வந்து (பாடலின் நடுநடுவே வரும் இச்சை ஹம்மிங் இல்லாதிருந்தால்  இது ஒரு சகித்துக்கொள்ளக் கூடிய  பாடல் என்பதில் சந்தேகமேயில்லை. இதற்கு முன்பே இளையராஜா இந்த புது "நவீன" பாணியை வெற்றிகரமாக துவக்கிவைத்துவிட்டார்.) உன்னைத்தானே அழைத்தேன், வைகைக் கரை காற்றே நில்லு (இந்தப் படத்தின் ஒரே நல்ல பாடல் இதுதான். அருமையான தென்றலாக வீசும் கீதம்.) எல்லாமே மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்தன.

        இதன்பின் தங்கைக்கோர் கீதம் என்ற படத்தில் டிஸ்கோ அதிரடியாக வந்த தினம் தினம் , இது ராத்திரி நேரம் (இளையராஜா ஆரம்பித்த இசைச் சீரழிவின் நீட்சி . ஆனால் நிலா காயுது, பொன்மேனி உருகுதே  அளவுக்கு மோசமில்லை. சசி ரேகாவின் கிளர்ச்சியூட்டும் குரல் கேட்க நன்றாகவே இருக்கிறது.) பகலென்றும் இரவென்றும் பூமியிலே நடமாடும், தங்க நிலவே ( ஒரு சாமானியனின்   கனவுகளை கவிதையாக வடித்த  இன்னுமொரு  வழக்கமான "தங்கச்சிப்" பாடல்.) தஞ்சாவூரு மேளம், அதன் பின் இன்றுவரை ராஜேந்தரை நக்கல் செய்ய  ஒரு ஆயுதமாக பலர் பயன்படுத்தும் தட்டிப் பாத்தேன் கொட்டங்குச்சி போன்ற பாடல்கள் திகைப்பூட்டும் வகையில் பெரிய வெற்றி பெற்றன.

      உறவைக் காத்த கிளி (இந்த மல்லிகை மனச, எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி - கொஞ்சம் ரசிக்கத்தக்க பாடல் இது மட்டுமே.)
மைதிலி என்னைக் காதலி (அட பொன்னான மனசே நீ வைக்காதே பொண்ணுமேலே ஆச -லேசாக எட்டிப்பார்க்கும் இன்றைய கானா  தொனியை இதில் காணலாம். என் ஆச மைதிலியே - வெற்றிகரமாக ரீமிக்ஸ் செய்யப்பட்ட பாடல். எங்கும் மைதிலி எதிலும் மைதிலி, கண்ணீரில் மூழ்கும் ஓடம், மயில் வந்து மாட்டிக்கிட்ட பாதையிலே, நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை, ராக்கால வேளையிலே, சலங்கையிட்டாள் ஒரு மாது (இதுவே ஒரு சிறிய திருப்தியை கொடுத்த பாடல்.)
ஒரு தாயின் சபதம் (ராக்கோழி கூவையிலே,சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது-  இது வேறு எதோ ஒரு  பாடலை நினைவு படுத்துகிறது.)
 போன்ற படங்கள் ராஜேந்தரின் இருப்பை உறுதி செய்தன. ராஜேந்தரின் பாடல்களில் இடையிடையே வரும் அர்த்தமில்லாத வார்த்தைகள் -ஓசைகள் என்று சொல்லலாம்- தற்போதைய ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் நாம் கேட்கும் ஓசைகளை நினைவுபடுத்துகிறன. ஒருவேளை இங்கிருந்துதான் இந்த அலை புறப்பட்டதோ என்று சந்தேகமாக இருக்கிறது.

     இதற்கிடையில் ராஜேந்தர் அரசியல் சாயம் பூசிக்கொண்ட கதையும்   நிகழ்ந்தது. அப்போது முதல்வராக இருந்த எம் ஜி ஆரை எதோ ஒரு விதத்தில் பகைத்துக்கொண்ட ராஜேந்தர் திடீரென தி மு க வில் இணைத்தார். இதன் காரணமாக தீவிர தி மு க விசுவாசிகளின் கவனம் அவர் படங்களின் மீது திரும்பியது. உறவைக் காத்த கிளி (என்று நினைக்கிறேன்) படத்தில் வரும் ஒரு வில்லி ஜெயலலிதாவை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதாக அப்போது பேச்சு எழுந்தது. கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருந்த போது ஒரு தீவிர தி மு  க அனுதாபி என் வகுப்பில் இருந்தான். அவன் ராஜேந்தரின் பாடல்களை வெகுவாக ரசிப்பதுண்டு. எரிச்சலடைந்த ஒரு கணத்தில் ஒரு முறை அவனிடம் நான் சொன்னேன்: "என்ன இருந்தாலும் ராஜேந்தரால் இளையராஜா அளவுக்கு இசை அமைக்க முடியாது." (இதில் எந்த உள்குத்தும் இல்லை. ஏனென்றால் நான் அப்போது ராஜேந்தரின் நான்கைந்து  பாடல்களைத் தவிர மற்றவற்றை அறவே வெறுத்தேன். இப்போது ஒரு பத்து தேறும் அவ்வளவே வித்தியாசம்.) அவன் சொன்னான்: "ராஜேந்தர் கதை திரைக்கதை வசனம் ஒளிப்பதிவு இசை பாடல்கள் எடிட்டிங் தயாரிப்பு இயக்கம் என எல்லாவற்றையும் செய்கிறார். அப்படியும் அவர் பாடல்கள் சிறப்பாக இருக்கின்றன. அவர் மட்டும் இசை ஒன்றை மட்டுமே செய்தால் இளையராஜா காணாமல் போய்விடுவார்." அவன் சொன்னது என் சிந்தனைக்கு நல்ல உணவாக இருந்தது. ஆனால் இது ஒரு அதீத கற்பனை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. ராஜேந்தர் சில நல்ல பாடல்களை கொடுத்திருகிறார். அதை மறுப்பதற்கில்லை.  ஆனால் அதுவே  இளையராஜா போன்ற இசை ஆளுமைகளை விழுங்கி விடக்கூடிய பலத்தை அவருக்கு கொடுத்துவிடவில்லை. நன்றாக துவங்கியவர் பின்னர் கண்ணா பின்னாவென்று இசை என்ற பெயரில் பல கண்றாவிகளைப் படைத்து தன் கோமாளித்தனங்களால் ஒரு சிறிய நகைச்சுவை நாயகனாகிப் போனார். இன்று அவர் சிம்பு என்ற நடிகனின் தந்தையாகவே பார்க்கப்படுகிறார். அவருடைய அருமையான கானங்கள் இன்று மக்களால் நினைக்கப்படுவதேயில்லை. அவரும் சில அற்புதங்களைக் கொடுத்தார் என்பதையே சிலர் நம்புவதில்லை. விசித்திரம்!

         சில பாடல்களை  காரணமில்லாமலே விரும்புவதும் வெறுப்பதும் இயல்பான  ஒன்று. காதல் செய்வதற்கு என்ன காரணம் ஒருவருக்கு தேவைப்படுகிறது?. "கேட்க நல்லா இருக்கு" அல்லது "சகிக்கலை". ஒரு பாடலை தீர்மானிக்க இதுவே போதும். . என் நண்பனொருவன்   தன் ஸ்மார்ட்போனில் ரிங் டோனாக கண்கள் இரண்டால் என்ற ஒரு பாடலை நீண்ட நாட்கள் வைத்திருந்தான். நல்ல பாடல்தான். (ஆனால் நான் அவ்வளவாக விரும்புவதில்லை.) சந்தர்ப்பம் கிடைத்த போது அதைப் பற்றி விசாரித்தேன். "ரொம்ப நல்லாயிருக்கு. அடிக்கடி கேட்பேன்." என்றான் . "அழகான  ராட்சஸியே பாடல் பிடிக்குமா?" என்றேன். "மணிஷா கொய்ராலா மூஞ்சியிலே பானையை மூடிக்கிட்டு ஓடுவாளே அதானே? அவளைப் பிடிக்கும். பாட்டு அவ்வளவா பிடிக்காது." என்றான் . நான் தொடர்ந்து   "சின்னக் கண்ணன் அழைக்கிறான் என்ற பாடல் பிடிக்குமா?" எனக்  கேட்டேன். எதிர்பார்த்தபடியே  "இல்லை." என்றான். "எதோ ஒரு  பழைய கருப்பு வெள்ளைப் படத்தில் அப்பாடல் வரும். டி வியில் பார்த்த ஞாபகம் இருக்கிறது. சாமி பாடல் போல இருக்கும். " என்று தொடர்ந்து எனக்கு அதிர்ச்சியூட்டினான். பின்னர் "ஏன் கேட்கிறாய்?" என்றான். " மூன்று பாடல்களும் ஒரே ராகத்தில் அமைந்தவை. அதனால்தான்." என்றேன். அந்தச் செய்தி அவனை சிறிதுகூட பாதிக்கவில்லை. மேலும் அதைப் பற்றி அவன்  அக்கறை கொண்டதாகவே தெரியவில்லை. "அதிலென்ன இருக்கிறது? ஒரே ராகமாக இருந்தால் என்ன? எனக்குப் பிடிக்கவில்லை." என்றான் ஒரேடியாக.  அதற்கு மேல் அவனிடம் நான் எதற்குப் பேசப் போகிறேன்?

          அடிப்படையான ஒரு கேள்வி இங்கே எழுகிறது. ராகங்களைக் கொண்டா நாம் ஒரு பாடலை அடையாளம் காண்கிறோம்? அல்லது ராகங்களே  பாடல்களின் சிறப்பையும் தரத்தையும்  தீர்மானிக்கின்றனவா? அப்படியென்றால் நாம் கேட்கவே  விரும்பாத கேடுகெட்ட கண்றாவிகளும் எதோ ஒரு மேன்மையான ராகத்தில்தானே அமைக்கப்பட்டிருக்கின்றன? இருந்தும் அதை நாம் ஏன் சிறப்பாகக் கருதுவதில்லை?  ஏனிந்த முரண்? குழப்பமாகக் கலைந்து கிடக்கும் இந்தக் கோடுகளை சற்று ஆழமாக நோக்கினால் நமக்கு ஒரு தெளிவான காட்சி தென்படும். அது இதுதான்: உண்மையில் ராகம் ஒரு பாடலின் குறிப்புச் சட்டம் போன்றது. அது ஒரு வரை படம் அவ்வளவே. ராகத்தின் மீது  எழுப்பப்படும் மெட்டே (Tune) ஜீவக் காற்றை ஒரு பாடலுக்குள் செலுத்தி அப்பாடலை  உயிர் பெறச் செய்கிறது. எனேவேதான் ராகத்தைப் பற்றிய  அரிச்சுவடி  அறியாத ஒரு பாமரனால் கூட   ஒரு சிறப்பான பாடலை இலகுவாக ரசிக்க முடிகிறது.  பொதுவாக பல சமயங்களில் ராகங்கள் என்று சொல்லப்படுவது  ஒரு பாடலின் மெட்டைக் குறித்துத்தான்  என்று நான் நினைக்கிறேன். மற்றபடி ஒரு ராகத்தின் உட்கூறுகளை தெளிவாகப் படம் பிடிக்கும் திறமை சிலருக்கே கைக்கூடுகிறது. தவிர இந்த ராக ஆராய்ச்சி ஒரு வித அலங்கார மேதமை கொண்டது. அது இசை விற்பன்னர்கள் தாங்கள்  மற்றவர்களைவிட உயர்ந்த இடத்தில்  இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் பகட்டான யுக்தி. ஒரு பாடலைப்  படைப்பதற்கு இது  அவசியப்படுகிறது. ஆனால் அதே பாடலை ரசிப்பதற்கு இதன் துணை கட்டாயமில்லை. ஏனெனில் உண்மையான ராகங்கள் என்னவென்றே தெரியாமல்தான்  பல கானங்கள்  காலம் காலமாக இங்கே ரசிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன. மேலும் இந்த அறியாமை நம் இசை ரசனையை எவ்விதத்திலும் இடையூறு செய்வதில்லை.

        நம் கண்களுக்குத் தெரியாத பகல் விண்மீன்கள் போல, நாம் திறக்க மறந்த ஜன்னல்களைப் போல, அலட்சியம் செய்யப்படும் நம் மீது தெறித்து விழும் மழைச் சாரல்கள் போல எத்தனையோ  இசை இன்பங்கள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன. சற்று சிரத்தை எடுத்தால் , கொஞ்சம் முயன்றால், கையளவு கவனம் கொண்டால் இசையின் எல்லைகளற்ற மகத்துவத்தை, அதன் பல முகங்களை  எவ்வித முரணுமின்றி  நாம் அனுபவிக்கலாம். கடலில்தான் எத்தனைத் துளிகள் இருக்கின்றன! கொஞ்சம் உற்றுக் கேட்டால்  ஒவ்வொரு துளியும் ஒரு கதை சொல்லும்.அடுத்து : இசை விரும்பிகள் XVII -  சுவர்களைத் தாண்டி.....


Thursday, 10 April 2014

இசை விரும்பிகள் -XV - திறக்காத ஜன்னல்கள்.

காற்றுக்காக கதவுகளை விரியத் திறக்கும் நாம்  மூடப்படிருக்கும் சிறிய சாளரங்களை பெரும்பாலும் ஏனோ மறந்து போகிறோம்.


                     

                     திறக்காத ஜன்னல்கள் 


          சிலோன் வானொலியின் எதோ ஒரு  நிகழ்ச்சியில் அந்தப் பாடல் ஒரு நாள் ஒலித்த போது ஒரு தாலாட்டின் சுகம் அதிலிருந்ததை  உணர முடிந்தது. காதில் இசையும் வார்த்தைகளும் ஒருசேர விழுந்த அந்த ஒரே கணத்திலேயே அப்பாடல்  ஒரு மழை நேரத்து மண் வாசம் போல மனதை ஆக்கிரமித்துக்கொண்டது. சந்தேகமேயில்லாமல் மிக சிறப்பான வார்க்கப்பட்ட இசையோவியம் அது என்பதை  கேட்ட ஒரே கணத்தில் சொல்ல  முடிந்தது .  அது : "மழையே, மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா" என்கிற அம்மா என்ற படத்தில் இடம் பெற்ற பாடல். பாடலைக் கேட்கும் போதே மனதில் மழைச்  சாரல்கள் படிய  மானசீகமாக நாம் மழையில் நனைவதைப் போன்ற உணர்வு  தரும் சிறப்பான பாடல். அப்போது மிகவும் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்றாக இது இருந்தது. அதற்கு இசை அமைத்திருந்த சங்கர்-கணேஷ் ஏற்கனவே எனக்கு பரிச்சயமான பெயர்தான். 79 இல் வந்த கன்னிப்பருவத்திலே படத்தின் பிரசித்திப் பெற்ற பட்டு வண்ண ரோசாவாம் பாத்த கண்ணு மூடாதாம் (ரோசாப்பூ ரவிக்கைக்காரியின் உச்சி வகுடெடுத்து பாடலின் நகல் ) என்ற பாடல், நீயா படத்தின் "நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா" என்ற ஒரு பாடல், அதற்கும் முன்னே தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் குதூகலித்த ஆட்டுக்கார அலமேலுவின் "பருத்தி எடுக்கையிலே" போன்ற பாடல்கள் மூலம் நான் சங்கர்-கணேஷ் இரட்டையர்களைப் பற்றி இதற்கு முன்பே அறிந்திருந்தாலும், அதிகமாக அவர்களை அறிய முனைந்ததில்லை. அப்போது வானொலிகளில் இசைக்கப்படும் ஐந்தில் ஒன்று  இவர்களது பாடலாக இருக்கும்.  அதே சமயத்தில்  சங்கர்-கணேஷை அறிந்திராத காலங்களில்  நான்  கேட்ட அவர்களின்  சில  பாடல்கள்  இன்னும் அதே சுக கீதங்களாக என் மனதை சிலிர்க்கச் செய்கின்றன.  உதாரணமாக  "என் காதலி யார் சொல்லவா?", "பூவிலும் மெல்லிய பூங்கொடி", "அவளொரு பச்சைக் குழந்தை", "செந்தாமரையே செந்தேனிதழே" போன்ற பாடல்களைச் சொல்லலாம்.

      வியப்பான நிகழ்வாக 80களில் இளையராஜா உச்சத்தில் இருந்தபோது சங்கர் கணேஷுக்கும் ஒரு கவனிக்கக்தக்க ரசிகர் குழுமம்  இருந்தது. "நடைய மாத்துன்னு ஒரு பாட்டு. சங்கர்-கணேஷ் என்னாமா விளையாடிருக்கான் தெரியுமா?"  என்று குதூகலித்த நண்பர்களை நானறிவேன். (சங்கர்-கணேஷை ஒருவராகவே பாவித்து இப்படிச் சொல்வது அன்றைய காலகட்டத்தில் வழக்கமானதுதான்.)  பாலைவனச் சோலையின் "பவுர்ணமி நேரம் பாவை ஒருத்தி மின்னல் போல முன்னால் போனாள்..."  பாடல் அப்போது அதகளப்பட்டது. (ராப் வகையின் கூறுகளை கொண்டிருந்த பாடல் இது.) பாடலின் பல்லவியை எதோ மந்திரம் போல மனப்பாடம் செய்து அதில் சிறிது வார்த்தைத் தவறு ஏற்பட்டாலும் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் பாட முயன்ற நண்பர்கள் எனக்கு இருந்தார்கள்.  எங்கள் ஊரின் புகழ்பெற்ற டீ கடையாக இருந்த மோகன்ஸ் கபேவில்  பெரும்பாலும் இவர்களின் பாடல்களைத்தான் கேட்கமுடியும்.  அவ்வப்போது வாடிக்கையாளர்களின் விருப்பதிற்க்காகாவும்  வியாபார நோக்கத்திற்காகவும் இளையராஜாவின் பாடல்களும் ஒலிப்பதுண்டு.(70, 80 களில் இவ்வாறான டீ கடைகளே தமிழகத்தின் நிறுவப்படாத  வானொலி நிலையங்களாக இருந்தன. இவைகளின் மூலமே பல  பாடல்கள் பெரு வெற்றி அடைந்தன என்பது புனைவுகள் இல்லா சரித்திரம்.)

    சங்கர்-கணேஷுக்கு இத்தனை தூரம் ஆழமான அறிமுகம் தேவையா என்றால் எனது பதில் ஆம் என்பதே. ஏனென்றால் இவர்களும் மற்ற எந்த தமிழ்த் திரை இசையமைப்பாளர்களைப்  போலவே  சாதித்தவர்கள்தான். பெரியதாக விளம்பரப்படுத்தப்படும் ஆடம்பரமான  வணிக வசீகரங்களையே   எப்போதும் நாம் கவனித்துக்கொண்டிருக்க வேண்டுமா என்ற கேள்விக்கான விடையே சங்கர்-கணேஷ் இரட்டையர்களைப் பற்றிய  இப்பதிவு. தமிழ்த்திரையிசையின் இரட்டையர்கள் என்றால் அது விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்ற உண்மை நம் நெஞ்சங்களில்  உறைந்து போயிருக்கிறது. இருப்பினும் அவர்களிடம் பணியாற்றிய சங்கர்-கணேஷ் இரட்டையர்களையும் (குறிப்பாக 60களின் ஆலயமணி, பாலும் பழமும் காலகட்டம்)  நாம் நினைவில் கொள்வது ஒரு நல்ல, தேர்ந்த  இசை ரசனையின் வெளிப்பாடு.   அவர்கள் போல இவர்கள் இல்லை என்ற சம்பிரதாயமான கூற்றை  சற்று தள்ளிவைத்து விட்டு இவர்களை அணுகுவது உகந்தது . ஏனென்றால் மற்றவர்களைப் போலவே சங்கர்-கணேஷ் இரட்டையர்களும் தாங்கள் அறிமுகமான  புதிதில் பல அருமையான பாடல்களைப் படைத்திருக்கிறார்கள். அந்த இனிமையான கானங்கள் இன்று வரை நறுமணம் வீசிக்கொண்டிருக்கின்றன.           சங்கர்-கணேஷ் என்றால் எனக்குத் தோன்றும் ஒரு முத்திரைப் பாடல் பட்டிக்காட்டு ராஜா  படத்தில் மேற்கத்திய சங்கீத ஆர்ப்பரிப்பாக ஒலிக்கும் "உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்" என்ற பாடல்தான். சிறிய வயதில் இதை முதல் முறையாக கேட்ட பொழுதும் பின்னர்  கல்லூரி நாட்களில் இந்தப் படத்தைக்  காண நேர்ந்த துர்பாக்கிய நிலையிலும் இந்தப் பாடல் எனக்கு  ஊஞ்சலிலாடும் ஒரு உற்சாக உணர்வையூட்டியது. அபாரமான பாடல். துவக்கத்தில் வரும் அந்த ஹம்மிங், அதை தொடரும் எஸ் பி பி யின் நாட்டியமாடும் குரல், தடதடக்கும் தாளம் என்று ஒரு  சரியான கலவையில் ஊறிய இனிப்பான கானம். குறிப்பாக அந்த பபப்பா பபப்பா ஹம்மிங் அந்தப் பாடலுக்கு ஒரு அற்புதமான அலங்காரம். ஒரு சிறுவனின் மனநிலையில் நான் பல வருடங்கள் இந்தப் பாடலையே தமிழில் வந்த மேற்கத்திய இசையின் அளவுகோலாக வைத்து பல பாடல்களை இதனுடன்  ஒப்பிட்டு "இருந்தும் அந்தப் பாடல் மாதிரியில்லையே" என முற்றுப்புள்ளி வைத்ததுண்டு. என்னடி மீனாட்சி (இளமை ஊஞ்சலாடுகிறது), எங்கேயும் எப்போதும் (நினைத்தாலே இனிக்கும்) போன்ற பாடல்கள் கூட எங்கோ தடுமாறி சற்று தள்ளியேயிருந்தன. இப்போது அந்த அளவுகோல் மாறிவிட்டாலும் ஒரு சிறப்பான ஆங்கில இசையின் அனுபவத்தை கேட்கும்  ஒவ்வொரு முறையும் இந்தப் பாடல் எனக்கு இன்றைக்கும் அளிக்கத் தவறுவதில்லை.

         சங்கர்-கணேஷ் ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்திருப்பதாக (1053) இணையத்தில் ஒரு தகவல் இருக்கிறது. தமிழில் மட்டும் 418 படங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது சாதரணமாக கடந்து போகக்கூடிய சாதனை அல்ல. இருந்தும் இத்தனை படங்களுக்கு இசையமைத்தவர்கள்  இன்று ஏன் தமிழ்த்திரை வரலாற்றின் இருண்ட பக்கங்களுக்குள் புதைந்து போயிருக்கிறார்கள்  என்பது விளங்காத ஒரு புதிர். இது   வசதியான மேலும்  இலகுவான நமது  இசை விருப்பங்களின் கோளாறு என்று புரிந்துகொள்ளலாம். எப்படி வி குமாருக்கு சொந்தமான பாராட்டுகள் பல சமயங்களில் எம் எஸ் வி க்கும் இளையராஜாவுக்கும் சென்றதோ அதே போல் சங்கர்-கணேஷின் இசையை இளையராஜாவுக்கு தாரை வார்க்கும் மனோபாவமும் காணப்படுகிறது. சிவப்பு மல்லி படத்தின் ஒரே saving grace என்று சொல்லத்தக்க "ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்" பாடலை பலர் இளையராஜாவின் இசை என்று நினைத்துகொண்டிருப்பதை யு டியுபில் இந்தப் பாடலை தேடிய போது அறிந்துகொள்ள முடிந்தது. (வழக்கம் போல புளித்துப்போன  ராஜா ராஜாதான் பல்லவி வேறு!) இதைச் சொல்லும்போது பல ராஜா ரசிகர்களுக்கு இது எவ்வளவு கசக்கும் என்று தெரியும். நானும் இதே போன்ற தவறுகளை செய்தவன்தான். ஆனால் அதை உணரும்  அதே கணத்திலேயே என் மதிப்பீடுகளையும் தீர்மானங்களையும் புதுப்பித்துக் கொள்வதில் நான் தயக்கங்கள் காட்டுவதில்லை.

     சங்கர்-கணேஷின் பாடல்களைப் பற்றி விரிவாக பேசும் முன் அவர்களைப் பற்றிய பொதுவான குற்றச்சாட்டை சற்று விவாதிக்கலாம் என்று தோன்றுகிறது.  இணையத்தில் ஆராய்ந்த போது மையமாக  ஒரே ஒரு குற்றச்சாட்டு இவர்கள் மீது  வைக்கப்படுகிறது. அது இவர்கள் எம் எஸ் வி, இளையராஜா மேலும் ஹிந்தி ஆங்கில இசையை நகல் எடுப்பவர்கள் என்னும் தடாலடியான தாக்குதல்.  இந்தப் பார்வை  ஒரேடியாக மறுக்கப்படக்கூடியதல்ல என்பதை நான் நன்கறிவேன்.  இருந்தும்  சங்கர்-கணேஷ் இவ்வாறான நகல்களில் தங்களின் ஆளுமையையும் முத்திரை இசையையும் ரசிக்கத்தக்க விதத்தில்  கலந்து  அவற்றுக்கு  வேறு வடிவம் கொடுத்தார்கள் என்று சொல்ல விரும்புகிறேன்.  உதாரணமாக உச்சி வகுடெடுத்து பாடலைப் பின்பற்றி பட்டுவண்ண ரோசாவாம், ஒ ப்ரியா (இதயத்தை திருடாதே-இசை இளையராஜா) பாடலின் அச்சில் ஒ மை லவ் (இதய தாமரை) பாடல்கள் அமைக்கப்படிருந்தாலும் சரணங்களும் இசை அமைப்பும், வாத்திய ஒலியும் வேறுவிதமாக இருப்பது  கண்கூடு. மேலும்  புகழ் பெற்ற வேற்று மொழிப் பாடலின் பல்லவியை தமிழில் பயன்படுத்துவது இங்கே காலம்காலமாக செய்யப்படுவதுதான்.  அதையும் தாண்டி எவ்வாறு அந்தப் பாடலின் இசைக் கோர்ப்புகள் இசைக்கப்படுகின்றன, எப்படி அப்பாடல் வேறு தளத்தில் பயணிக்கிறது என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.  தாய் வீடு படத்தின் பாடல்களை சங்கர்-கணேஷின் நகல் இசைக்கு  ஆதாரமாகச் சொல்கிறார்கள். உண்மையில் அப்படப்பாடல்கள் முழுவதும் ஹிந்தியில் பப்பி லஹரியால் உருவாக்கப்பட்டவை.(இந்த பப்பி லஹரி நகல் இசை அமைப்பதில் கில்லாடி என்று பெயர்  பெற்றவர்.) படத் தயாரிப்பாளர்கள் வணிக வசதிகளுக்காக  அவற்றை  தமிழில் அப்படியே பயன்படுத்திக்கொண்டார்கள். சங்கர்-கணேஷ் வெறுமனே படத்தின் பின்னணி இசை மட்டுமே செய்தார்கள்.  இதுவே அபூர்வ சகோதரிகள், பாடும் வானம்பாடி படப் பாடல்களிலும் நிகழ்ந்தது. அதே சமயத்தில் மங்கம்மா சபதம் (கமலஹாசன் நடித்தது) படத்தின் சொர்கத்தின் வாசல் இங்கே மைக்கல் ஜாக்சனின் உலகப் புகழ் பெற்ற பில்லி ஜீன் பாடலின் தழுவலாகவும் நான்தானே  ஒரு புதுக்கவிதை (ஆணிவேர்) பாடல் பிரசித்தி பெற்ற போனி எம்மின் ரஸ்புடின் பாடலின் தமிழ்ப்  பிரதியாகவும் அமைத்திருந்தார்கள். ஆனாலும் வாத்திய இசையில் வேறு வடிவங்களை இவர்கள் முயன்றிருப்பது கவனிக்கத்தக்கது.

         இவர்களது மேற்கத்திய இசை பாணி எம் எஸ் வி, இளையராஜா போன்றவர்களின் பாதையிலிருந்து விலகியிருப்பதை சில பாடல்களின் பல்லவி மற்றும் இடையிசையிலிருந்து நாம்  தெளிவாக காண முடியும். சொல்லப்போனால் இளையராஜாவின் (மேற்கத்திய) பாணியை விட சங்கர்-கணேஷின் இசையில் நாம் இன்னும் அதிகமாகவே மேற்கத்திய இசையின்  தாக்கத்தையும் ஆளுமையையும் உணரலாம். (இளையராஜாவை விட) சங்கர்-கணேஷின் நவீன இசை மேற்கத்திய இசைக்கு வெகு அருகிலும்  அதேவேளையில் அந்த  அந்நிய வாசம் தூக்கலாக தெரியாத வகையிலும் மிக சிறப்பான விதத்தில் சமரசம் செய்யப்பட்டிருக்கும்.  syncopated drum beat இவர்களின் இசையில் ஆர்ப்பாட்டமாக துடித்துக்கொண்டு தாளமிடும். (இவ்வகையான syncopated பீட் இளையராஜாவின் இசையில் வெகு அபூர்வமாகவே கேட்கக் கிடைக்கும். (மன்றம் வந்த தென்றலுக்கு இதற்கொரு  உதாரணம்.) உலகின் பிரபாலமான drum beat என்று சொல்லப்படும் ஆமென் பிரேக் (Amen Break)  ட்ரம்ஸ் இசையை அதிகமாக இவர்கள்  பயன்படுத்தியிருக்கிறார்கள்.  மேலும் மயக்கம் தரும் கிடார் கார்ட்ஸ் மற்றும் guitar  riffs எனப்படும் lead கிடாரின் நீட்டிக்கப்பட்ட அதிர்வு இவர்களிசையின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம். இளையராஜாவைக் காட்டிலும் சங்கர்-கணேஷ் மேற்கத்திய கலப்பிசையை வெகு அனாசயமாக, அபாரமாக, அதே சமயத்தில் நமக்கு தொல்லை தராத, அலுப்பூட்டும் பாமரத்தனமான வெற்று காலி டப்பா ஓசைகளாக இல்லாமல் இனிமையான தாலாட்டாக வழங்கியிருக்கிறார்கள்- சித்திரமே உன் விழியில், பால் நிலவு காய்ந்தது (கிடார் மற்றும் ட்ரம்ஸ் இந்தப் பாடலில்  துடிப்பாக ஒலிப்பது இப்போது மறக்கப்பட்டுவிட்ட அபாரம்.), தேவி கூந்தலோ பிருந்தாவனம், சந்தன புன்னகை, சித்தர் கூட புத்தி மாறி தத்துவங்கள் சொல்லலாம், கேட்டது கிடைத்தது கோடிக் கணக்கில், எங்கள் கதை இது உங்களின் கதை,  நானூறு பூக்கள்,  அலை அலையாக போன்ற பாடல்களைக் கேட்டால் அவர்களின் மென்மையான மேற்கத்திய இசை வடிவங்களையும், முரண்படாத விதத்தில்  அவைகள் தமிழை  தழுவிக்கொண்ட ஆச்சரியங்களையும் அறியலாம்.

    புரிந்து கொள்ளமுடியாத வினோத விதிகளின் (கோட்பாடுகள்)  துயர ரேகைகள் நம் வாழ்வில் படிவதைப்  போல சங்கர்-கணேஷின் இசை எவ்வளவு இனிமையானதாக இருந்தாலும் அந்த  இசைப் புதையல்கள் எடுப்பாரற்று இன்னமும் தேங்கியே கிடக்கின்றன. இளையராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் பிரபலங்களின் நிழல்கள் கூடவே வந்தன. அவர்கள் இளைப்பாற சோலைகள் இருந்தன. சங்கர்-கணேஷுக்கோ இது போன்ற ஆயத்த வெற்றிகள்  கடைசிவரை கைகூடவில்லை. அவர்களுக்கு ஒரு பிராண்ட் நேம் எனப்படும் ஒரு முத்திரை முகம் அமையவில்லை. ஒரே ஒரு ஆறுதலாக சின்னப்பா தேவர் (தேவர் பிலிம்ஸ்) இவர்களை அறிமுகம் செய்ததோடு நிற்காமல்  தான் உயிரோடு இருந்தவரை  தன் படங்களில் இவர்களை தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டு வந்தார். (அதற்கு முன் தேவர் படங்கள் என்றால் அது கே வி மகாதேவன் இசையாகத்தான் இருக்கும். ஒரு மாற்றத்திற்காக தேவர் எம் எஸ் வி யை அணுகியபோது அவரும் ஒத்துக்கொண்டு முன் பணம் வாங்கியிருக்கிறார்.  கே வி மகாதேவன் மீது பெருத்த அபிமானம் கொண்டிருந்த எம் எஸ்  வி யின் தாய் இதை விரும்பவில்லை . மேலும் வணிக காரணங்களுக்காக இன்னொருவரை தேடி வரும் போக்கும்  அவருக்கு பிடிக்கவில்லை. முதலில் குருவை மதிக்க கற்றுக்கொள் என்று தன் மகனுக்கு அவர் போதிக்க தன் தாயின் வேண்டுகோளுக்கினங்க  எம் எஸ் வி தேவர் படங்களுக்கு இசை அமைத்ததில்லை என்று ஒரு செய்தி உண்டு. இதன் காரணமாக சங்கர் கணேஷ் அறிமுகப்படுத்தப்பட்டார்களா என்று என்னால் உறுதியாக சொல்ல இயலாது.) தேவரின் மறைவுக்குப் பின் தேவர் பிலிம்ஸ் இளையராஜாவை அணுகியது. அன்னை ஓர் ஆலயம், அன்புக்கு நான் அடிமை போன்ற படங்களில் இளையராஜா இசை அமைத்திருந்தார். தேவரைத் தவிர பசி பட இயக்குனர் துரை, பாஸ்கர் (தீர்ப்புகள் திருத்தப்படலாம் ), ராஜ் பரத் (உச்ச கட்டம்) என வெகு சிலரே சங்கர்-கணேஷுக்கு தங்கள் படங்களில் தொடர்ச்சியாக வாய்ப்பளித்து வந்தார்கள். மற்றபடி இவர்கள் பெரும்பாலும் B-movies என்று சொல்லப்படும் இரண்டாம் கட்ட (இரண்டாம் தரம் அல்ல) படங்களுக்கே அதிகமாக இசை அமைக்க வேண்டியிருந்தது. இருந்தும் அந்தப் படங்களில் இவர்கள் கொடுத்திருக்கும் பாடல்கள் சந்தேகமில்லாமல் தித்திப்பான சுவை கொண்டவை. படங்களும் பாடல்களும் அவ்வளவாக வணிக அளவில் வெற்றி பெறாவிட்டாலும் மனதை மயக்கும் மெலடிகள் அவைகளில்  பல உண்டு.

        எம் எஸ் வியின் காலத்தில் அவருக்கு அடுத்த இடத்திலும் பின்னர் இளையராஜாவின் தனிக்காட்டு ராஜாங்கதிலும் அதே இரண்டாவது இடத்திலும் இவர்கள் இருந்தார்கள். இளையராஜாவுக்கு மாற்றாக இவர்களைச் சொல்ல முடியாதென்றாலும்  பல தயாரிப்பாளர்களின் இரண்டாவது தேர்வு இவர்களே. ஆனாலும் எந்தவிதமான வஞ்சனைகளுமின்றி சிறப்பான இசையை வழங்கியதே இவர்களின் பாணியாக இருந்தது.  ஒரு முறை கங்கை அமரன் ஒரு பேட்டியின் போது "உங்கள் இசையில் உங்கள் அண்ணனின் தாக்கம் அதிகமாக இருக்கிறதே?" என்ற கேள்விக்கு "ரத்த சம்பந்தம் இல்லாதவர்கள் எல்லாம் என் அண்ணனை காப்பியடிக்கும்போது  நான் செய்வதில் என்ன தவறு?" என்று   குறிப்பாக சங்கர்-கணேஷை மனதில் வைத்து சொன்னதாக படித்திருக்கிறேன். உண்மையே. இளையாராஜாவின் இசைக் கூறுகள் சங்கர்-கணேஷின் இசையில் தென்படவே செய்தன. ஆனாலும் ஒரேடியாக அவை அவர்களின் தனித்தன்மையை ஆக்கிரமிக்கவில்லை என்று சொல்லலாம். உதாரணமாக மாம்பூவே சிறு மைனாவே  என்ற பாடலை பலர் இளையராஜாவின் பாடல் என்றே கருதுகின்றனர். அந்த அளவுக்கு அப்பாடல் இளையராஜாவின் சாயலை அடர்த்தியாக ஒத்திருக்கும். உண்மையில் மச்சானப் பாத்தீங்களா படத்தில் அப்பாடலை அமைத்தது சந்திரபோஸ். அது அவருடைய முதல் படம். சங்கர்-கணேஷின் இசையிலோ இதுபோன்ற தனி அடையாளம் முழுதும் தொலைந்து போகும் அபாயமான  இடையூறுகள் இருக்காது. மற்ற இசை அமைப்பாளர்களின் பாணியை கொஞ்சம் இங்கே அங்கே  தொட்டுக்கொன்டாலும் அது அவர்களின் பாடல்களை கொடூரமாக நெரித்து  ஆதிக்கம் செலுத்தாமல் அரவணைத்துச்  செல்லும் அழகைக் காணலாம்.

         எம் எஸ் விக்கு டி எம் எஸ்-சுசிலா, இளையராஜாவுக்கு எஸ் பி பி -ஜானகி போல சங்கர்-கணேஷின் ஆஸ்தான பாடகர்களாக ஜெயச்சந்திரனும் வாணி ஜெயராமும் இருந்தார்கள். ஜெயச்சந்திரன் இவர்களது இசையில் அதிகமான பாடல்களைப் பாடியிருப்பதாக ஒரு தகவல் உள்ளது. எனக்கு இன்றுவரை வாணி ஜெயராமின் பாடல் எதைக் கேட்டாலும் அது சங்கர்-கணேஷின் இசையாகத்தான் இருக்கும் என்ற எண்ணம்  அனிச்சையாக தோன்றும். பல நேரங்களில் அது உண்மையாகவும்  இருக்கும். பால் நிலவு காய்ந்தது மற்றும் யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது  என்ற இரண்டு வைர கானங்களை மறக்கத்தான் முடியுமா?     சங்கர்-கணேஷின் டப்பாங்குத்து இசை(தற்போதைய கானா இசையின் முன்னோடிகளில் ஒன்று), மேற்கத்திய பாணி இசை, ஆங்கில மற்றும் ஹிந்திப் பாடல்களின் நகல் எல்லாவற்றையும் கேட்ட பிறகே நான் ஏன் பிறந்தேன், இதய வீணை என்ற இரண்டு  எம் ஜி ஆர் படத்திற்கும் இவர்கள் இசை அமைத்திருக்கிறார்கள் என்ற செய்தியை அறிந்தேன்.(!). குறிப்பாக நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் , தம்பிக்கு ஒரு பாட்டு, உனது விழியில் எனது பார்வை (மனதை வசீகரிக்கும் மந்திரப் பாடல் ), நான் ஏன் பிறந்தேன் போன்ற மிகவும் சிறப்பாக இசைக்கப்பட்ட கானங்கள் என்றும் பசுமையானவை. இதே படத்தில் உள்ள அபாரமான பாடல் என்று நான் எண்ணுவது சித்திரைச் சோலைகளே  பாடலைத்தான். பாரதிதாசனின் சிறப்பான கவிதையை மிக அழகாக நல்லிசை என்ற வண்ணம் தீட்டி காலத்தால் அழியாத ஒரு கானமாக அதை உருமாற்றியிருப்பதை இங்கே பதிவு செய்வது அவசியம். அதேபோல இதயவீணை படத்தின் திருநிறைச்செல்வி, ஆ...னந்தம் இன்று ஆ..ரம்பம், காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர் (ஹேப்பி இன்று முதல் ஹேப்பி என்ற பாடலை லேசாக நினைவூட்டும் ஆரம்பம் ), பிறகு படத்தின் சிறப்பான பொன் அந்தி மாலைப் பொழுது போன்றவைகள் மிகப் பெரிய வெற்றி பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. பாடல்களில் மிகுந்த ஈர்ப்புடன் கவனம் செலுத்தும் எம் ஜி ஆர் சங்கர் கணேஷிடமிருந்து அவர்களின் மிகச் சிறப்பான பாடல்களை  தேர்வு செய்திருப்பதை இதிலிருந்து நாம் உணரலாம்.

    அதியச தகவலாக இவர்கள் இருவரும் இசை அமைப்பளர்களாக அறியப்படும் முன்பே ஒரு புகழ்  பெற்ற படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்திருக்கிறார்கள்.  காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் தன் கனவுப் படத்திற்கான பாடலை அமைக்க அழைத்து வரும் இரண்டு இசை அமைப்பாளர்கள்  இவர்களே.  விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் சிபாரிசின் பேரிலேயே சங்கர்-கணேஷ் இதில் நடித்தார்கள் என்று   அப்போதே கேள்விப்பட்டிருந்தாலும் அதை பெரிதாக நினைக்கவில்லை. இந்தப் பதிவை எழுதத் துவங்கியபின்  சமீபத்தில் எதேச்சையாக இந்தப் படத்தை காண நேர்ந்தது. அப்போது குறிப்பிட்ட  அந்தக்   காட்சியை எதோ ஒரு neck and neck ரேஸின் முடிவைப் பார்ப்பதுபோல உன்னிப்பாக கவனித்து இந்தத் தகவலை உறுதி செய்துகொண்டேன். அது அவர்களேதான். குறிப்பாக சங்கரை  (இப்போது அவர் இல்லை.) எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. (கொஞ்சம் சேட்டு போன்ற தோற்றத்தில் வருபவரே சங்கர் .)

      60களின் இறுதியில்   கவிஞர்  கண்ணதாசனால்  சாண்டோ சின்னப்பா தேவருக்கு அறிமுகம் செய்யப்பட்டு, தேவரின் ஆஸ்தான இசை அமைப்பாளர்களாக இருந்த  சங்கர்-கணேஷ் தங்களின் நன்றியை எப்போதும் "கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ்" என்றே  திரைப்படங்களில் தெரிவிப்பது வழக்கம். (சங்கர் புகழ் பெற்ற பழம்பெரும் இசை அமைப்பாளர் சி ஆர் சுப்புராமனின் சகோதரர்.)  மகராசி என்ற படத்தில் (ஒரு தகவல் இவர்களின் முதல் படம்  நல்  வரவு என்று சொல்கிறது.) அறிமுகமான இவர்கள்  70களில் பல உயிர்ப்பான கானங்களை என்றும் நீங்கா நினைவுகளாக, கரையாத வண்ணங்களாக நம் நெஞ்சங்களில் வரைந்திருக்கிறார்கள்.

     எம்  எஸ் வி யின் காலத்தில் துவங்கி, அந்த இசையின் சுவடுகளை கொஞ்சம் தொட்டுக் கொண்டு வந்த இவர்களின் இசை பாணி  பின்னர் 80களில் இளையராஜாவின் இசைக் கூறுகளையும் உள்வாங்கிக்கொண்டது. சிலர் இவர்களை ஒரேடியாக காப்பி இசை அமைப்பாளர்கள் என்று முத்திரை குத்தி புறம்பே தள்ளிவிடுகிறார்கள். இதில் பாதியளவு  உண்மை இருப்பதாகவே நான் நினைக்கிறேன். நகல் இசை என்ற குற்றச்சாட்டை சற்று   தவிர்த்து விட்டு அவர்கள் அளித்த அசல்களை   ஆராய்ந்தால் அவர்கள் இசையின் படிமானங்களை வியப்புறும் வகையில் நம்மால் உணரமுடியும். (ஒரு விதத்தில்) சங்கர் கணேஷின் இசை ஆர்ப்பரித்துக்கொண்டு பீறிட்டுப் பாயும் காட்டாறு வெள்ளத்தின் ஆக்ரோஷ அழகைப்   போலில்லாமல் அமைதியாக  சலசலக்கும் ஓடையின் இனிமையை கொண்டிருந்தது. எத்தனை ரம்மியமான  கீதங்கள் இவர்களிடமிருந்து புறப்பட்டிருகின்றன! கீழே இருக்கும் பட்டியலைப் பார்த்தால் இந்த எளிமையான உண்மையை சட்டென பிடித்துவிடலாம்.  (இதில் சில அதிரடிவகைப்  பாடல்களும் அடக்கம்.)

    சங்கர்-கணேஷின் துவக்க கால படைப்புகளின் மீது ஒரு பார்வை வீசுவோம்.(வெளிவந்த வருடங்கள் குறித்து என்னால் உறுதியாக கூறமுடியவில்லை. ஒரு அனுமானமாகவே பாடல்கள்  பட்டியலிடப்பட்டிருக்கின்றன.)

சின்ன கண்ணனே நான் தந்தையென-தாய்க்கு ஒரு பிள்ளை.
எதைக் கேட்பதோ எதை சொல்வதோ- பத்து மாத பந்தம்,
செந்தாமரையே செந்தேனிதழே - புகுந்த வீடு. (அபார கலைஞன் எ எம் ராஜாவின் இனிமையான குரலில் வந்த இந்த மூன்று பாடல்களும் மிகவும் சிறப்பானவை .)
பால் நிலவு நேரம்-அன்பு ரோஜா,
என் காதலி யார் சொல்லவா - தங்கத்திலே வைரம். (சந்தேகமேயில்லாமல் பலரின் விருப்பப்பாடல் இது.)
அவளொரு பச்சைக் குழந்தை- நீயொரு மகாராணி. (இனிமையின் இன்னொரு பெயர்.)
பூவிலும் மெல்லிய பூங்கொடி- கண்ணன் வருவான். (டி எம் எஸ்   எம் ஜி ஆர், சிவாஜி இருவரின்  குரல் பிரதிநிதியாக இருந்தாலும் அவர் அதிக எண்ணிக்கையில் பாடல்கள் பாடியது ஜெய் ஷங்கருக்குத்தான். அதிலும் இப்பாடல்  ஜெய் ஷங்கரே பாடியது போல ஒரு தோற்றம் தருகிறது. கேட்டதும் விரும்பக்கூடிய வெகு சில   பாடல்களில் இதுவும் ஒன்று. )
கண்ணே தேடி வந்தது யோகம்-வாக்குறுதி,
அன்புத் தெய்வம் நீ- கோமாதா எங்கள் குலமாதா,
எங்கெங்கும் உன் வண்ணம்- கண்ணம்மா,
கல்யாண ராமனுக்கும்- மாணவன்,
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை- சினிமா பைத்தியம். (இது கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது. வி குமாரா அல்லது சங்கர் கணேஷா என்று.)
ஜிலு ஜிலு குளு  குளு, தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது.(70 களின் மென்மையான ஞாபகங்களை உயிர் பெறச் செய்யும் ரம்மியமான பாடல். தரமான நல்லிசை.  பலர் இந்தப் பாடலை கேட்டு உணர்ச்சி வசப்படுவதை நான் கண்டிருக்கிறேன். அதுவே இப்பாடலின் வெற்றி. இப்படம் சங்கர்-கணேஷுக்கு வணிக அளவில் பெரிய வெற்றியை கொடுத்தது.)-வெள்ளிக்கிழமை விரதம்.

      இனி  70 களின்  இசை அழகை சற்றும் சிதைக்காமல் அவர்கள் அமைத்த சில பாடல்கள்.

ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை- என்னடி மீனாட்சி, (மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் கீதம்.)
என் காதல் கண்மணி-மஞ்சள் குங்குமம்.
சங்கீதம் மலர்கின்ற நேரம்- கைவரிசை.
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்- உயர்ந்தவர்கள். (உயர்ந்த கானம்.)
சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு - சொர்க்கம் நரகம். (Tamil tongue twister!)
நானூறு பூக்கள்-உறவுகள் என்றும் வாழ்க. (அபூர்வமான அழகியலின் அற்புத இசை அவதாரம் என்று சொல்லலாமா? Really a very rare gem.)
நீ (ர்) மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே  - தாயில்லா குழந்தை. (சிலோன் வானொலியின் தங்க தினங்கள்  நினைவுக்கு வருவதை தவிர்க்கவே முடியாது .)
எதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போல -சொன்னதைச் செய்வேன், (இது சங்கர்-கணேஷின் பாடலா அல்லது எம் எஸ் வி யின் பாடலா என்ற குழப்பம் ஒரு பக்கம். இறுதியில் இவர்கள் இருவருமல்ல. வி குமாரின் இசையில் வந்த பாடல் இது என்று தெரிகிறது. இதை நான் சங்கர்-கணேஷின் இசை என்று எண்ணியதால் இங்கே சேர்த்திருக்கிறேன்.எவரின் படைப்பாக இருந்தாலும் இது ஒரு மிக அருமையான பாடல் என்பதை மறுபேச்சின்றி ஏற்றுக்கொள்ளலாம் .)
நடிகனின் காதலி, வடிவேலன் மனசு வச்சான்- தாயில்லாமல் நானில்லை,
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு -தாய் மீது சத்தியம்,
என் கண்ணின் மணியே இளம் கன்னித் தமிழே  (சகோதர பாசத்தை பண்பட்ட வகையில் சொல்லும் மனதை உருக்கும் பாடல்.) -  காலைப் பொழுது விடிந்தது என் நெஞ்சத்தைப் போல (ஜானகி பாடிய மிக சிறப்பான விடியல் பாடல்.) -ராஜராஜேஸ்வரி,
மலைச் சாரலில் ஒரு பூங்குயில் (ரசிக்கவைக்கும் தட தடவென்ற  தாளம். ஜேசுதாஸின் குரலில் வந்த வைரங்களில் ஒன்று.) - ஒரு குடும்பத்தின் கதை.
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா,ஒரே ஜீவன், ஒரு கோடி-நீயா?

    70 களின் இறுதியில் ஏற்பட்ட ஒரு திடீர் இசை பூகம்பம் இளையராஜா. அவரின் இசைச் சாயலை ஒட்டி  தங்களை புதுப்பித்துக்கொண்ட இசை வடிவத்தில் சங்கர்-கணேஷ்  படைத்த  சில பாடல்கள்.

பருத்தி எடுக்கையிலே-ஆட்டுக்கார அலமேலு.( சங்கர்-கணேஷின் முத்திரைப் பாடல்களில் ஒன்று. அவர்களுக்கு பெரிய வெற்றியை கொடுத்த பாடலும் இதுவே என்று நினைக்கிறேன். இந்தப் படத்தில்தான் சங்கர் கணேஷ் பாபி படத்தின் கிடார் இசைத்  துணுக்கு ஒன்றை  படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பயன்படுத்தியிருப்பார்கள். அது படத்தின் 'ஹீரோவான" ஆடு "கெட்டவர்களை" துரத்தும் காட்சி என ஞாபகம்.  டிடிங் டிடிங் டிங் என்று அந்த  கிடார் துவங்கும் போது  அரங்கு முழுதும் விசில்கள் பறந்தது  நினைவு இருக்கிறது. ஒரு ஆட்டுக்கு இத்தனை ஆரவாரமா  என நான்  அதிர்ந்தே  போனேன்.)
ஆவாரம் பூமேனி, பட்டு  ரோசாவாம், நடைய மாத்து. (இளையராஜா கூட இது போன்ற street music செய்ததில்லை என்று சிலர் சொல்கிறார்கள். உண்மையோ  என தோன்றுகிறது. கேட்காவிட்டால் கொஞ்சம் கேட்டுவிட்டு பிறகு உடன்படுவதையோ அல்லது எதிர்ப்பதையோ செய்யுங்கள்.)-கன்னிப்பருவத்திலே
கொஞ்ச ஒதுங்கு  நா தனியா பேசணும் உன்னோடதான்-வசந்த காலம். (சுருளிராஜனின் குரலில் எஸ் பி பி பாடியது. சுருளிராஜனுக்கென்றே படங்கள் ஓடிய காலங்கள் உண்டு. ரசிக்ககூடிய பகடிப் பாடல். அப்போது இது ஒரு கொண்டாட்டமான பாடலாக வானொலியில் உலா வந்து மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது.  இதற்கு சுருளிராஜன் மற்றும் சுமித்ரா நடித்திருப்பார்கள்.  கம்பன் ஏமாந்தான் என கமல் நக்கலடிக்கும் அதே சுமித்ராதான். )
பொன்மான தேடி- எங்க ஊர் ராசாத்தி. (இளையராஜாவின் நிழல் அதிகமாக இதில் படிந்திருப்பதை காணலாம்.)
நா ஒன்ன நெனச்சேன்- கண்ணில் தெரியும் கதைகள். (மிக அபூர்வமான கானம். கேட்ட ஒரே கணத்தில் நெஞ்சத்தை நொறுக்கும் சக்தி வாய்ந்த இசையின் புரிபடாத மர்மங்களின் மறு வடிவம். ஐந்து பெரிய இசை ஆளுமைகள் இதில் இருந்தாலும் போட்டி என்னவோ நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே (இளையராஜா) என்ற பாடலுக்கும் இந்தப் பாடலுக்கும்தான். இறுதியில் வென்றது யார் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா? சங்கர்-கணேஷின் அதிகபட்ச வெற்றிகளில் இந்தப்  பாடலுக்கு ஒரு மிக முக்கியமான இடம் என்றைக்கும் உண்டு. ஒரு விதத்தில் சங்கர்-கணேஷின் முத்திரைப் பாடல் இதுவே என்று தோன்றுகிறது. )
எரிமலை எப்படிப் பொறுக்கும், ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம் ( என்ன ஒரு வசீகரமான கானம்! மெல்லிசையின் மிக மென்மையான மழைத் தூறல். இந்தப் பாடலை விரும்பாதவர்கள்  இருக்க முடியுமா என்று தெரியவில்லை.) - சிவப்பு மல்லி,
ரோசா மலரே அழுவக் கூடாது-ராஜாங்கம்.
செந்தமிழோ - புதியவர்கள்,
ஐ லவ் யு பனி தேன் மழையே -மாம்பழத்து வண்டு,
எ உன்னத்தான் (செப்புக்குடம்)-ஒத்தையடி பாதையிலே,
நாக்கிலே மூக்கில நாத்து பல்லாகிலே (தள தளன்னு வளந்த பொண்ணு)-சின்ன சின்ன வீடு கட்டி. விரசங்களில்லாமல்  குதூகலிக்கும் கும்மாளமான   நாட்டுப்புற கானம். பாடலின் துவக்கத்தில் அங்கே இங்கே என்று  பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கும்  ஆர்ப்பாட்டமான அந்த அதிரடித்  தாளம் தள தளன்னு வளந்த பொண்ணு தண்ணி மொள்ளும் போதிலே என்ற  இடத்தில்  வெடித்துக்கொண்டு  ஆர்ப்பரிப்பதை கேட்கும்  போது அந்த தண்ணீர்க் குடம் நம் தலையில் கவிழும்   சிலிர்ப்பை நீங்கள் உணர முடியும். மேலும்   தமிழில் வந்த மிக நீண்ட பல்லவி கொண்ட பாடல்களின் ஒன்று  என்ற சிறப்பை பெற்றது இது. (இன்னொன்றும் இவர்கள் இசையிலேயே வந்தது. அது  பவுர்ணமி நேரம் என்ற பாலைவனச்சோலை படப் பாடல்.)  சற்று இந்த பல்லவியைப் பாருங்கள்:

             நாக்கிலே மூக்கில 
             நாத்து பல்லாக்கிலே,
             தோப்பு பராக்கிலே,
             தாழ்வாரத்திலே, 
             தோளோரத்திலே,
             சிங்காரத்தில,
             தள தளன்னு வளந்த பொண்ணு 
             தண்ணி மொள்ளும் போதிலே 
             தாவி வந்து அணச்சுகிட்டேன், 
             கையிரண்டும் போதல,

  (இந்தப் பாடல் வானொலியில் ஒலிக்கும் சமயங்களில் தெருக்களில் இளம் பெண்கள், குறிப்பாக குடத்துடன்  பெண்கள் தண்ணீர் எடுக்க செல்ல நேரிட்டால் அவர்கள் காட்டும் முக பாவணைகளைக்  கண்டு  அவர்கள் கோபப்படுவதாக எண்ணியிருந்தேன். அது அப்படியல்ல என்று இப்போது தோன்றுகிறது.)

ஆல மரத்துக்கிளி,மச்சானே அச்சாரம் போடு- பாலாபிஷேகம்,
முத்து முத்து தேரோட்டம், நான்தானே ஒரு புதுக்கவிதை - ஆணிவேர், (ரஸ்புடின் என்ற போனி எம்  பாடலின் பிரதியாக இருந்தாலும் மிக சிறப்பாக இசைக்கப்பட்ட ட்ரம்ஸ் இசை சரணம் வரும் போது வேறு பரிமாணத்துக்குச் செல்கிறது. அருமையாக வாத்தியங்கள் இசைக்கப்பட்ட கானம். )
தேவி வந்த நேரம்- வண்டிச் சக்கரம். (மெல்லிசை என்ற தென்றல் வீசும் பாடல்.)
இனிக்கும் இளமை என்னிடம் - இனிக்கும் இளமை.

       80 களின் துவக்கத்தில் சங்கர்-கணேஷின் இசை வேறு தளத்தை எட்டியது. ஆர்ப்பாட்டமான ஆங்கில இசையின் அடிப்படையான உட்கூறுகளை தமிழுக்கேற்றவாறு இசை மொழி பெயர்ப்பு செய்து வெகு சிறப்பாக அவற்றை நமது மெல்லிசையின் மீது வைத்து கர்நாடக ராகத்தையும்  சேர்த்துத்  தைத்து மிக அருமையான பாடல்களை இவர்கள் உருவாகினார்கள்.

அவள் ஒரு  மேனகை - நட்சத்திரம். (இது தெலுகு படத்தின் பாடல் என்று தெரிகிறது. எஸ் பி பி சிவரஞ்சனி என்று உச்சஸ்தானியில்  நீண்ட நேரம் ராக ஆலாபனை செய்தது அப்போது பெரிதாக பேசப்பட்டது .)
தனிமையிலே ஒரு ராகம்- சட்டம் ஒரு இருட்டறை. (சுரேந்தரின் தேன் சிந்தும் குரலில் இந்தப் பாடல் ஒரு மேகத் தாலாட்டு. தனிப்பட்ட விதத்தில் இப்பாடல் அப்போது எங்கள் வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர்களையும்  இந்தப் படத்தைப் பார்க்கச் சென்ற ஒரு கோடை காலத்தின் வெயிலடிக்கும் மதிய நேரத்தையும் எனக்கு   நினைவூட்டும்.) Nostalgia at its best.

தேவி கூந்தலோ பிருந்தாவனம் - என் ஆசை உன்னோடுதான். (The Turtles என்ற 60களைச் சேர்ந்த  ஆங்கில இசைக் குழுவினரின் happy together பாடலின் தமிழ் வடிவம். இருப்பினும் அருமையாக தமிழில் வார்க்கப்பட்ட பாடல்.)
வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி-பொன்னகரம்.
மலர்களே இதோ இதோ- தீராத விளையாட்டுப் பிள்ளை. (என்ன ஒரு தரமான மேற்கத்திய இசையின் தமிழ்ப்  படிவம்! இணையத்தில் சிலர் இதையே சங்கர்-கணேஷின் சிறப்பான பாடல் என்று சொல்கிறார்கள். எனக்கு இதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் இது ஒரு அருமையான கானம் என்பதில் இரண்டாம் சிந்தனை கிடையாது ).இதே படத்தில் தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற ஒரு அதிரடி பாடல் உண்டு.
பனியும்  நீயே மலரும் நானே- பனிமலர். ( நளினமான பாடல்.)
தேவி நீயே - ஆசைகள். (இது கொஞ்சம் அபூர்வமான பாடல். எப்போதோ கேட்ட நினைவு மறுபடியும் கேட்கையில் தோன்றுகிறது.)

இந்த இரவில் நான் பாடும் பாடல்,மனம் உன்னை  நினைத்தது, பால் நிலவு காய்ந்தது (kraftwerk (Album: The Man Machine) என்னும் ஜெர்மானிய சிந்தசைசர் இசை குழுவின் The Model  என்ற பாடலின் நிழல். ஆனால் சங்கர்-கணேஷின் ட்ரம்ஸ் இங்கே நவீன தாளம் போடுகிறது.  kraftwerk கையாண்ட சிந்தசைசர் இசை இங்கே கிடார் மற்றும் அதிரடி ட்ரம்ஸ் இசையால் சமன் செய்யப்பட்டு  பாடல்  வேறு வடிவம் பெறுகிறது. அருமையான கவிதை கொண்டு உடைந்த  காதலின் வலியை வர்ணிக்கும் கானம் இது.  கண்டிப்பாக கேட்கப்படவேண்டிய பாடல்களில் ஒன்று.)  - யாரோ அழைக்கிறார்கள்,
நானொரு கோவில் நீயொரு தெய்வம்- நெல்லிக்கனி. (நட்பை நல்லிசையாக வடித்த பாடல். இது வெளிவந்த புதிதில் இதில் நடித்த சிவகுமார். சிவச்சந்திரனை விட இதைப் பாடிய எஸ் பி பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவனுக்காகவே இந்தப் பாடல் அதிகம் விரும்பப்பட்டது.  அப்போதைய இரண்டு முக்கியமான பாடகர்கள் (முதன் முதலாக?) இணைந்து பாடியிருந்ததே இதன் சிறப்பு.)
சித்திரமே உன் விழியில்- நெஞ்சிலே துணிவிருந்தால். (இது எதோ ஒரு ஆங்கிலப் பாடலை நினைவு படுத்துகிறது. துல்லியமாக அதை சுட்டிக்காட்ட முடியவில்லை இப்போதைக்கு. சங்கர்-கணேஷின் முத்திரையான தடதடக்கும் ட்ரம்ஸ் இந்தப் பாடலை ஒரு சுகமான ரசனைக்கு இட்டுச் செல்கிறது. .)
மரியா மை டார்லிங்- மரியா மை டார்லிங்,
ஒரு ஊரில் ஊமை ராஜா, ராகம் தாளம் பல்லவி (அது காதல் பூபாளமே) - தீர்ப்புகள் திருத்தப்படலாம்,
சரணம் சரணம் தலைவா சரணம், நிழல் தேடி வந்தேன்  - பவுர்ணமி அலைகள்,
ரோஜாவில் முள்ளுமில்லை- காதல் காதல் காதல்.
மங்கல குங்குமம்- தீர்ப்பு என் கையில்,
ஆகாயம் பூப்பூக்கும் நேரம்-சாட்சி,
எல் ஒ வி இ லவ்தான், வாடி மச்சி -விதி,
நான் இரவில் எழுதும்- சுப முகூர்த்தம்,
ஒ மேகமே ஓடும் மேகமே (காதல் தோல்வியின் வலியை சொன்ன பல அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று. மிக மென்மையான கானம்).- அந்தஸ்து.
எனக்கொரு மணிப் புறா ஜோடியென்று இருந்தது. (அதே காதல் தோல்வி ஜெயச்சந்திரனின் குரலில்.)- ஜோடிப் புறா.
பட்டுக்கோட்டை அம்மாளு- ரங்கா. ( மலேசியா வாசுதேவனும் எஸ் பி பி யும் இணைந்து பாடிய ஜாலியான பாடல். பொதுவாக எஸ் பி பி க்கு மேற்கத்திய பாணியும் மலேசியா வாசுவுக்கு நாட்டுபுற பாணியும் தான் வழக்கம். இதில் சங்கர்-கணேஷ் அந்த சம்பிரதாயத்தை தலைகீழாக மாற்றியிருப்பார்கள்.)

    80 களில் ராஜ் பரத் என்று ஒரு அறிமுக இயக்குனர் ஒரு திடீர் காளான் போல தமிழ்த் திரையில் தோன்றி நான்கு படங்களைக்  கொடுத்தார். அவை: உச்சகட்டம், சொல்லாதே யாரும் கேட்டால், சின்ன முள் பெரிய முள், தொட்டால் சுடும்.  (கே பாலச்சந்தரின் தில்லு முல்லு  படத்தின் இறுதிக் காட்சியில் தொட்டால் சுடும் பை ராஜ் பரத் என்று ஒரு பேனர் காண்பிக்கப்படும். ராஜ் பரத் பாலச்சந்தரின் மீதிருந்த அபிமானத்தால் உடனே அதே பெயரில் தனது  அடுத்த  படத்தை இயக்கினார் என்று சொல்லப்பட்டது. தொட்டால் சுடும் என்ற தலைப்புக்கு ஏற்றவாறு திரைக்கதையை அமைத்திருப்பார் இயக்குனர்.) அனைத்துமே திர்ல்லர் வகையைச் சேர்ந்தவை. அவைகளில் அதிகபட்சமாக இரண்டு பாடல்கள் மட்டுமே இருக்கும். இவரது படங்களில் ஒரே கதை சீரான நேர்கோட்டில் செல்லும் ஆங்கில திரைக்கதை யுக்தி  பிரமாதமாக கையாளப்பட்டிருக்கும். பாடல்கள் கூட அந்த காலகட்டத்தின் அவசியம் கருதியே இடம் பெற்றிருந்தன. சங்கர்-கணேஷின் இசை இவரின் படங்களுக்கு ஒரு சரியான பற்றை (grip) கொடுத்தது. இது போன்ற த்ரில்லர் வகைப் படங்களுக்கு சங்கர்-கணேஷின் இசை மிகப் பொருத்தமாக இருக்கும். பாமரத்தனமாக  பிண்ணனியில் மர்ம இசை  என்ற பேரில் எதையோ உருட்டி உடைத்து கதற வைத்து நம் செவிகளை பதம் பார்க்கும் கிறீச்சிடும் கண்றாவிகள் இவர்களிடம் பொதுவாக இருக்காது. சங்கர்-கணேஷின் பிண்ணனி இசையையும் கவனத்தில் கொள்ளும் ஒரு ரசனை மிக்க ரசிகர் கூட்டம் 80கள் வரை இருந்ததை நான் அறிவேன். "எங்கள் இசைத் தலைவர்கள் சங்கர்-கணேஷ் படம் காண வந்த ரசிகர்களுக்கு நன்றி" என்று படத்திற்கு முன் சிலைட் (இதற்கு தமிழில் என்ன சொல்வதென்று தெரியவில்லை.) தோன்றும் அபூர்வங்களை நான் பார்த்திருக்கிறேன்.

இதழில் தேன் பாண்டி முத்துக்கள், சித்தர் கூட புத்தி மாறி- உச்சகட்டம்,
பூவாகி இரவு நேரம், கேட்டது கிடைத்தது கோடிக்கணக்கில் (செவிகளை  தொந்தரவு செய்யாத genuine ட்ரம்ஸ் இசை)  - சொல்லாதே யாரும் கேட்டால்,
ராமன் போல தோற்றம்- தொட்டால் சுடும்,
மாலை சூட கண்ணே ராதா நாள் வராதா -கண்ணே ராதா.
சொல்லாதே யாருக்கும்- ஜிகு ஜிகு ரயில்,
சம்சாரம் அது மின்சாரம்- சம்சாரம் அது மின்சாரம். (பெரிய புகழடைந்த பாடல்.)
அழகிய விழிகளில் அறுபது கலைகளும், ஒ நெஞ்சே நீதான் பாடும்- டார்லிங் டார்லிங் டார்லிங் ,
கெண்ட சேவல் கூவும்  நேரம்- எங்க சின்ன ராசா. (இதே பாடல் பின்னாட்களில் ஹிந்தியில் அணில் கபூர் படமொன்றில்  கையாளப்பட்டது.)          80கள் தமிழ்த் திரையில் பல புதிய இயக்குனர்களையும், நவீன சிந்தனைகளையும், வேறுபட்ட திறமைகளையும் அடையாளம் காட்டின. ஒரு தலை ராகம் என்ற சராசரிப் படத்தின் பிரமாண்ட வெற்றி தமிழ்த் திரையின் கதை களத்தை அதிரடியாகத் தாக்கியது.  இதன் தொடர்ச்சியாக வந்த பல படங்கள் அன்றைய இளைய தலைமுறையினரின் எண்ண ஓட்டங்களை ஏறக்குறைய கச்சிதமாக காட்சிப்படுத்தின. அதில் குறிப்பிடதக்க ஒரு படம் என்று நான் கருதுவது  81இல் வந்த பாலைவனச் சோலை என்ற ராபர்ட் ராஜசேகரின் படத்தையே. (நிழல்கள் படத்தின் அபாரமான, வைரமுத்துவின் முதல் திரைப் பாடலான, இளையராஜாவின் வைரமாக ஒளிர்ந்த  இது ஒரு பொன்மாலைப் பொழுது பாடலுக்கு "அற்புதமாக" நடித்த அதே ராஜசேகர்தான்.) பாலைவனச்சோலை மிகப் பெரிய உச்சத்தை தொட்டது. பொதுவாக எல்லோரும் பாராட்டிய படமாக இது இருந்தது. அதிகமான வர்த்தக சமரசங்கள் செய்து கொள்ளப்பட்டாத திரைக்கதை, இயல்பான வசனங்கள்,போலித்தனமில்லாத நடிப்பு, விரசமில்லாத காட்சிகள் மேலும் சிலிர்ப்பூட்டும் இசை, சிறப்பான பாடல்கள் போன்றவைகள் இதை 80 களின் முத்திரைப் படங்களில் ஒன்றாக மாற்றிவிட்டது. இப்போது சங்கர்-கணேஷின் இசையில் வந்த இப்படத்தின் பாடல்களைப் பார்ப்போம்.
    எங்கள் கதை இது உங்களின் கதை- இளைஞர்களின் "புகை"படிந்த, கவலைகள் துறந்த நிலையை சொல்லும் பாடல்.
      ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு- மணப் பெண்ணை பகடி செய்யும் பாடல். இறுதி சரணத்தில் வரும் "முதல் முதலாக பார்க்கும் போது அச்சமாக இருக்கும், ஆனா விடியும் போது விளக்கில் எண்ண மிச்சமாக இருக்கும்." என்ற வரிகள் வெகுவாக ரசிக்கப்படவை.
     மேகமே மேகமே- வாணி ஜெயராமின் அற்புதமான பாடல்களில் ஒன்று. ஹிந்தி கஸல் இசையின் சுடப்பட்ட தமிழ் பிரதி இது என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இருப்பினும் தரமான நல்லிசை.
  பவுர்ணமி நேரம்- இதுவும் ஒரு பகடிப் பாடல்தான். பாடலின் இறுதிச் சரணம்  புத்தாண்டை வரவேற்பது போல அமைந்திருக்கும். தமிழின் மிக நீண்ட பல்லவி கொண்ட பாடல் இது என்று சொல்லப்படுகிறது. சற்று ஆராய்வோம்:

        பவுர்ணமி நேரம் 
        பாவை ஒருத்தி
        மின்னல் போல 
        முன்னால் போனாள் 
        பின்னல் கண்டு 
        பின்னால் சென்றேன் 
        பொண்ணு ஊருக்கு 
        புதுசோ என்றேன்   
        காலில்
        உள்ளது 
        புதுசு 
        என்றாள் 
        ஓ மேலே கேட்காதே!
 
    நாம் ஏறக்குறைய சங்கர்-கணேஷின் சிறப்பான பாடல்கள் பட்டியலின் இறுதிக்கு வந்துவிட்டோம். பல பாடல்களை நான் இங்கே குறிப்பிடவில்லை. ஆனால் கீழே இருக்கும் பாடல்கள் கண்டிப்பாக உங்கள் பார்வைக்கு உகந்தவை. They do deserve an honest listen.

கடலோடு நதிக்கென்ன கோபம்- அர்த்தங்கள் ஆயிரம். (இதை எண்ணும்  போதே சிலோன் வானொலி நினைவலைகளில் ஆனந்த தாண்டவம் ஆடுவதை உணர்கிறேன். மிகையின்றி சொல்லவேண்டுமானால் சங்கர்-கணேஷின் அபாரமான ஆனந்தங்களில்  ஒன்று. எஸ் பி பி யின் தாலாட்டும் குரலும், போதையூட்டும் அந்த ராக வளைவுகளும் நம்மை ஒரு உன்னதமான அமைதிக்கு அழைத்துச்  சென்று விடுகின்றன. )
சந்தன புன்னகை சிந்திய கன்னிகை- நாடோடி ராஜா. (திடு திடுக்கும் தாள நயத்துடன் ஒலிக்கும் இனிமையான ராக அழகுடன் வந்த மிக சிறப்பான  கானம்.  மிக மிக அரிதான பாடல். எப்போதோ சிலோன் வானொலியின் தயவில் இப்பாடலை ரசித்திருக்கிறேன். மீண்டும் கேட்கும் போதுதான் எத்தனை இன்பம் உண்டாகிறது!  )
அதி கலையில் பனி காற்றுகள் வீசிட- கல்யாண காலம். (அபூர்வமான பாடல். தேடித் தேடி இறுதியில் cool toad மூலம் இந்தப் பாடலை கண்டுபிடித்தேன்.)
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது-  நெஞ்சமெல்லாம் நீயே. (மற்றொரு கஸல் பாடலின் தமிழ் வடிவம். அதே சங்கர் கணேஷின் ஆஸ்தான பாடகி  வாணி ஜெயராமின் இனிமையான குரலில்.)
கண்ணோடு கண்ணும், எனை தேடும் மேகம், அலைஅலையாக -கண்ணோடு கண்.
குறிப்பாக கண்ணோடு கண் படத்தின்  பாடல்கள் நம் நெஞ்சத்தை தழுவும் வார்த்தைகளுக்குட்டபடாத மாயச்  சுவையை கொண்டவை. அலை அலையாக மிக சிறப்பாக இசை கோர்க்கப்பட்ட கானம். பாடலின் ராக அமைப்பும் மெட்டும் இசையின் மென்மையும் இதை கேட்கும் போதே நாம் எதோ ஒரு கடலலையின் மீது தவழ்வது போன்ற fantasy உணர்வை கொடுத்துவிடுகின்றன. மிகவும் அபாரமான வகையில் உணர்வின் இசையாக மீட்டப்பட்ட  இப்பாடல் கேட்பவர்களின் மனதில் ஆனந்த  அழகின் அலைகளை அழைத்துவந்துவிடுகிறது  . சங்கர்-கணேஷின்  பல பாடல்களை நீங்கள் கேட்டிருந்தாலும் அலை அலையாக பாடலை நீங்கள் கேட்கவில்லை என்றால் எங்கோ உங்கள் இசை  வட்டம் முற்றுப்பெறவில்லை என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். இது எப்படியென்றால் இளைய நிலா பொழிகிறதே பாடலைக் கேட்காமல் எப்படி ஒருவரின் இளையராஜா அனுபவம் துண்டிக்கப்பட்டு நிற்குமோ அதைப் போன்றது.   இந்தப் பாடலை நான் சங்கர் கணேஷின் முத்திரைப்  பாடலான    "நா உன்ன நெனச்சேன்"  பாடலோடு ஒப்பிட்டு, ஒரு  தராசின் இரண்டு  தட்டுகளிலும் இவற்றை வைக்கிறேன்.   The verdict is both are etherially beautiful. No more words to describe.


ஒரு காதல் தேவதை- இதய தாமரை. (இளையராஜாவின் பாடல் போலேவே தோன்றும் இசை. ஆனால் அவர் பாடல்களில் இல்லாத அளவுக்கு  மிக நவீனமாக இசைக்கப்படுகிறது  கிடார். இந்தப் பாடலை நான் அவ்வளவாக விரும்புவதில்லை. ஒருவேளை அவர்களின் முத்திரை இதில் சமரசம் செய்துகொள்ளப்பட்டதாக நான் எண்ணுவது இதற்கு  ஒரு காரணமாக இருக்கலாம். சங்கர் கணேஷ்  இசை அத்தியாயத்தின் இறுதிப்  பக்கம் இந்தப் படம்தான்.   இதன் பின் அவர்களின் பெயர் எங்கும் தோன்றவில்லை.)

  பெரிய பிம்பங்களும், அலங்கார விளக்குகளும், ஆடம்பரமான அணிவகுப்புகளும்  நம் கவனத்தை உடனே ஈர்ப்பது இயல்பானதே. ஆனால்  அதே வேளையில் வானில் சீராக பறந்து செல்லும் பறவைகளையும், மழை நேரத்தில் தங்கள் இருப்பிடங்களை மாற்றிக்கொள்ளும் எறும்புகளின் அழகான அணிவரிசையையும், சூட்டப்படாமல் செடிகளிலேயே தயங்கி நிற்கும் வசீகரமான மலர்களையும் கொஞ்சம் ரசிப்பதில் தவறில்லை. மண்வீடோ மாளிகையோ  எழுந்ததோ விழுந்ததோ எதுவாக  இருப்பினும்  ரசிப்பதற்கு அழகு என்ற ஒன்று  மட்டுமே நம் ரசனையின் அடிப்படை கோட்பாடாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

     சங்கர்-கணேஷ் பற்றி இணையத்தில் அதிகம் எழுதப்படவில்லை என்பது ஒரு வருத்தம் தரும் நிஜம். நான் தேடியவரை 110 பதில்களுடன் ஒரு forum இவர்களைப் பற்றி உள்ளது. பின்னர் ஓசை..ஓயாத அலைகள்  என்ற தளத்தில் நண்பர் ஓசை (அவர் பெயர் தெரியவில்லை.) சங்கர் கணேஷ் பற்றி இரண்டு சிறப்பான பதிவுகள் எழுதியுள்ளார். இதில் கவனிக்கத்தக்க சிறப்பு அல்லது வியப்பு  என்னவென்றால் இவர் ஒரு தீவிர இளையராஜா ரசிகர். நல்லிசையின் மீது கொண்டிருக்கும் காதல் மட்டுமே சிலருக்கு தங்களின் சொந்த அபிமானங்களையும்  தாண்டி வேறுபட்ட விருப்பங்களை வளர்க்கும். இவர் அப்படிப்பட்டவர் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தே இல்லை. கீழே அவரது தளத்தின் சுட்டி உள்ளது.

          http://oosssai.blogspot.com/2013/09/blog-post_20.html

   சங்கர்-கணேஷின் இசையை இப்போது கேட்கும் போது இத்தனை அருமையான, கலை ரசனைக்குட்பட்ட ( சில சமயங்களில் ஆர்ப்பாட்டமான ) பாடல்களைக் கொடுத்தவர்களை நாம் எத்தனை எளிதில்  மறந்துவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சி  ஒரு  கூரான கத்தி போல நெஞ்சில் பாய்கிறது. இந்தப் பொது புத்தியின் பின்னாலிருக்கும் மடத்தனமான ஆட்டுமந்தை அணுகுமுறையை விட்டு நாம்  அகலவேண்டும் என்பதே என் விருப்பம். நமது குறுகிய இந்தப் பார்வை எத்தனை இசை இன்பங்களை நம்மிடமிருந்து அந்நியப்படுத்தியிருக்கிறது என்ற உண்மை தரும் குற்ற உணர்ச்சி வலி மிகுந்தது. இந்தப் பதிவை படித்தபின் உங்களுக்கு நாடகத்தனமாக சங்கர்-கணேஷின் மீது ஈர்ப்பு வந்துவிடும் என்றோ அவர்களின் பாடல்களை நீங்கள் உடனே கேட்க ஆரம்பித்துவிடுவீர்கள் என்றோ நான்  எண்ணவில்லை. அதற்க்கான ஆயத்தங்களும் வாய்ப்புகளும்  வெகு குறைவே. ஆனாலும் சங்கர் -கணேஷ் பாடல்களை நீங்கள் கேட்க வேண்டும் என்ற  எண்ணம் ஒரு   சிறிய பொறியாக உங்களுக்குத்    தோன்றினாலோ   அல்லது ஒருவேளை எப்போதோ நீங்கள்  கேட்டிருந்து இப்போது துறந்துவிட்ட அந்தப் பாடல்களைக்  குறித்து மனதில் மவுனமாக அசை போட்டாலோ அதுவே இந்தப் பதிவின் நோக்கத்தை பூர்த்தியடையச் செய்துவிடுகிறது.
அடுத்து: இசை விரும்பிகள் XVI -- இசைச்  சாரல்கள்.