Thursday 19 February 2015

Music Maniacs:(Exclusive) SYNESTHESIA

நீங்கள் பூக்களோடு பேசியிருக்கிறீர்களா? வானவில்லின் மீது அமர்ந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா? மனித மொழிகளில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத வார்தைகளில்லாத பலவிதமான நிறங்கள் விவரிக்க முடியாத தோற்றத்தில் உங்கள் முன் தோன்றியிருகின்றனவா? உங்கள் மனதுக்குள் இன்னும் இன்னும் உள்ளே பயணம் செய்திருக்கிறீர்களா? மிக மிக முக்கியமாக  இசையைப் பார்த்திருக்கிறீர்களா ?



 ஸ்டீரியோ விஷன் 

    ரெகார்டிங் சென்டர்கள் எனப்படும் இசைப் பதிவகங்கள் இன்றைய தினத்தின் இந்த வினாடியில்   புராதான சின்னங்களாக  மாறி வரும் வேளையில் அவைகளின் இருப்பு எவ்வாறு கடந்த காலத்தின் ஒரு தலைமுறையின் வாழ்விலிருந்து பிரித்தெடுக்க முடியாத உறவாக இருந்தது என்பது ஒரு துயரமான ஆச்சர்யம். இப்படியான பதிவகங்கள் அவைகளை நாடும் இசைப் பறவைகளுக்கு அளித்த உணவுகள் ஏராளம்.  சில சமயங்களில் முக்கிய தெருக்களிலும், பல சமயங்களில் அவைகளைத் தேடிப் போக வேண்டிய நிர்ப்பந்தத்தைத் தவிர வேறொரு காரணங்களும் இல்லாத மர்மமான சந்துக்களிலும் அதிகம் தென்படாமல்  இம்மாதிரியான இசைப் பதிவகங்கள் இருந்தன. ஒரு பத்து வருடங்களுக்கு முன்புவரை புதிதாக ஒரு ரெகார்டிங் சென்டர் இருக்கிறது என்று நான் கேள்விப்பட்டால் எனது முதல் இலக்கு அதுதான். "அங்கெல்லாம் எந்த பஸ்சும் போகாது" என்றால்  நடந்தே போய்விடுவேன். 

        சக்தி மியுசிகல்ஸ், மியூசிக் லேன்ட், சசி ஆடியோ, ஓம் சக்தி, கண்ணன் மியுசிகல்ஸ்,ஆடியோ ஐலண்ட் போன்ற பல பெயர்களில் நான் என் இசைத் தேவைகளை பூர்த்திசெய்த இடங்கள் எனது நினைவடுக்குகளில் விவரிக்க முடியாத   சுகத்தை சுமந்தபடி  ஒளிந்துகொண்டிருக்கின்றன. திருச்சியில் படித்துக் கொண்டிருந்தபோது சிங்காரதோப்பின் ஒற்றையடிப் பாதைகளும், குறுக்குச் சந்துகளும் என்னைப் பார்த்து வியந்த கதைகள் நிறைய உண்டு. முதல் வருடதின் இறுதியில் பெல்லார்மின் ப்ளாக்கிலிருந்து கல்லூரி விடுதியில் இடம் கிடைத்து நான் அங்கு சென்றடைந்த போது என் அறைத்தோழர்கள் நால்வர் இருந்தனர். அவர்களில் ஒருவன்  கேரளாவைச் சேர்ந்த ஜென்சன் என்பவன்.  மெட்ராஸில் பள்ளி முடித்துவிட்டு செயின்ட் ஜொசெப்பில் கம்பியூட்டர் சையன்ஸ் சேர்ந்திருந்தான். ஆரம்பத்தில் வெறும் புன்னகை ஒன்றே இருவருக்கும் இடையேயான நட்பாக இருந்தது. பின்னர் நான் ஆங்கிலப் பாடல்களை தேடித் தேடி வேட்டையாடுவதைக் கண்டு ஒருநாள் ,"உனக்கு ஏற்ற  இடம் மெட்ராஸில் ஒன்று இருக்கிறது. போய்ப்பார். திரும்பியே வரமாட்டாய்." என்றான் வழக்கமான மலையாளம் குழைத்த தமிழிலில். "அப்படியா? அது என்ன இடம்?" என்றேன். "ஸ்டீரியோ விஷன் என்றொரு ரெகார்டிங் கடை மெட்ராஸில் இருக்கிறது. அங்கே இல்லாத ஆல்பங்களே இல்லை." என்று எனது இசை வேட்டைக்கு ஒரு புதிய வனாந்திரத்தையே அடையாளம் காட்டினான். அதுதான் நான் முதன் முதலாக ஸ்டீரியோ விஷன் என்ற பெயரைக் கேட்டது. கேட்ட அந்த நொடியிலேயே அந்தப் பெயர் என் நெஞ்சத்தில்  ஒரு   முதல் முத்தம்  போல உறைந்து விட்டது.

    அதன் பின்  மெட்ராஸ் என்று காதில் விழுந்தாலே எனக்குத் தோன்றும் முதல் காட்சி நான் கண்டேயிராத இந்த ஸ்டீரியோ விஷன் கடைதான். அது எப்படிப்பட்டது எத்தனை பெரியது   எங்கேயிருக்கிறது என்னென்ன இசைத்தட்டுக்கள் அங்கிருக்கின்றன என்ற விபரம் அறியாமலே ஒரு நெருப்புக் காதல் என்னுள் தகிக்க ஆரம்பித்தது. அப்போதுதான் ஆஹா என்ற நார்வே நாட்டின் இசைக்குழு எனக்குப் பரிச்சயமாகியிருந்த நேரம். அவர்களின் ஹன்டிங் ஹை அண்ட் லோ என்ற முதல் ஆல்பம் கொடுத்திருந்த இசையதிர்ச்சி மனதை முழுதும் ஆக்கிரமித்து ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தது. அவர்களின் இரண்டாவது ஆல்பமான ஸ்கவ்ண்ட்ரல் டேஸ் திருச்சியில் எங்கு அலைந்தும் கிடைத்தபாடில்லை. இறுதியில் ஸ்டீரியோ விஷன் மனதிலிருந்து விரலசைத்து அழைக்க என் அறைத் தோழன் ஜென்சனிடம் அது பற்றி விசாரித்தேன். "இதிலென்ன? லீவு முடிந்து வரும்போது வாங்கிவருகிறேன்." என்று மிக ஆதரவாக சொன்னவன், ஊரிலிருந்து திரும்பி வந்தபோது ஆஹாவுடன் வந்து என்னை தடாலடியாக திடுக்கிடச் செய்தான். "ஸ்டீரியோ விஷனில் வாங்கியது" என்று உபரியாக தெரிவித்தான். அப்போதுதான் பார்த்தேன்.  அந்த கசெட்டின் பின்னே கீழே சிவப்புக் கலரில் ஸ்டீரியோ விஷன் நிறுவனத்தின் லோகோவை. ஒரு கருப்பு பிரமிட் அதை மூன்று பகுதிகளாக பிரிக்கும் வெள்ளை நிறத்தில் ஆங்கில Y போன்றதொரு அமைப்பு.  அந்த ஸ்டிக்கர் என் நெஞ்சத்தில் ஒட்டிக்கொண்டது.

       இந்தப் பதிவில்  நான் ஸ்டீரியோ விஷன் கடையை கண்டுபிடித்ததைப் பற்றியோ அங்கு  சென்று வாங்கிய இசைத் தொகுப்புகள் பற்றியோ குறிப்பிடப்போவதில்லை.  இந்தப் பதிவு பாடல்கள் பற்றியதேயல்ல. இது முழுவதும் வேறு களம்.

    மெட்ராஸ் வந்ததும் கல்லூரி படிப்பு போன்ற சமாச்சாரங்களை  விட (!) எனக்கிருந்த ஒரே வேட்கை இசைத் தொகுப்புகள்தான். சைட் எபெக்டஸ், பேஸ்மென்ட் ப்ளுஸ், ஆடியோ போர்ட் போன்ற இசைப் பதிவகங்களுக்கு மத்தியில் ஸ்டீரியோ விஷன் என்ற பெயரே என்னுள் போதையூசி போல ஆழ இறங்கி,  காந்தம் போல ஈர்த்தது. ஸ்டீரியோ என்ற ஆங்கிலப் பெயருக்கு தமிழில் மிகப் பொருத்தமாக என்ன சொல்வது என்று சரியாக தெரியவில்லை.  பல திசைகளில் இருந்தும் ஒலி வரும் அமைப்புச் சாதனத்திலிருந்து ஏற்படும் ஒலி என்றும், ஒலி சாதனம் என்றும், பிரிப்பு இசை என்றும் இந்த சிறிய வார்த்தை தமிழில் வெகு கடினமாகப்  பகுக்கப்படுள்ளது. சுருக்கமாக இரட்டை ஒலி என்று கூறலாம் என்று தோன்றுகிறது. இருந்தும் ஸ்டீரியோ இரண்டுக்கும் மேற்பட்ட ஆதார துவக்கங்களிலிருந்து - உதாரணமாக ஐந்து-  ஒலியை தரக்கூடியது. ஸ்டீரியோ விஷன் என்பதை ஒலிக்காட்சி என்று தமிழ்ப் படுத்தினாலும் இசைக்காட்சி என்றே நான் அழைக்க விரும்புகிறேன். ஏனென்றால் அதில்தான் கனவும் யதார்த்தமும் ஒருங்கே பிணைந்த ஒரு நிஜத்தின் நிழல் எனக்குத் தென்படுகிறது.

    இசையை கேட்பது எல்லோரும் செய்யக்கூடியது. ஒரு இசை நம் மனதுக்குள் ஏற்படுத்தும் காட்சிகள் கூட பலருக்கும் இயல்பாக நடக்கும் நிகழ்வே. உதாரணமாக ஒரு ஒற்றை வயலின் இசை நாம் கடந்துவந்த சில துயர சாலைகளை நம் மனதில் மீண்டும் புதுப்பிக்கலாம். Pink Floyd குழுவினரின் The Wall இசைத் தொகுப்பு கேட்பவரின் மனதுக்குள் பலவிதமான வண்ணம் வரையும் மாய சக்தி கொண்டதாக பலர் சொல்வதுண்டு. அது உண்மைதான். ஏனென்றால்  எனக்கே அது நடந்திருக்கிறது.  ஆனால் நான் இசைக்காட்சி என்று சொல்வது கண்டிப்பாக அதுவல்ல.  இசைக்காட்சி  ஒரு உண்மையான மனித அனுபவம். ஆங்கிலத்தில் இது Synesthesia (ஸினஸ்தீஷ்யா)  என்றழைக்கப்படுகிறது.

            ஸினஸ்தீஷ்யாவை  (synesthesia ) ஒரு ஆச்சர்யமான ஆசீர்வாதம் என்று எடுத்துக்கொள்ளலாம். அல்லது ஒரு பரவசமான பரிசு என்று வியக்கலாம். சில சமயங்களில்  ஒரு சாபம் அல்லது மன நோய் என்று கூட தோன்றுமளவுக்கு  இது ஒரு  வழக்கத்தை மீறிய  வினோதம்.  மர்மமாக   இந்த ஸினஸ்தீஷ்யா அனுபவம் வெகு சிலருக்கே ஏற்படுகிறது. இதன் விகிதம் பத்துக்கு ஒன்று என்று கூட இல்லை. ஆயிரத்தில் ஒன்று என்று வைத்துக்கொள்ளலாம். ஏன் அப்படி என்பதற்கான  காரணிகள் இதுவரை ஒரு தெளிவான விளக்கத்தை அடையவில்லை. எனவே இதை அவர்கள் மற்றவர்களிடம் தெரிவிக்கும் போது  அது  சரியான விகிதத்தில் புரிந்துகொள்ளப்படுவதில்லை. ஸினஸ்தீட் என்று அழைக்கப்படும் இவர்களில் பலர்  மக்களின் பரிகாசிப்புக்கு தங்களின் அனுபவம் இரையாகிவிடக்கூடாது என நினைப்பதால் இதுபற்றி பேசுவதே கிடையாது. யார் இந்த ஸினஸ்தீட்? எளிதாக இப்படிச் சொல்லலாம். இசையைப் பார்ப்பவர்கள். 


     ஸினஸ்தீஷ்யா  உண்மையில் மூளையில் நடக்கும் ஒரு அசாதாரணமான  இசையிணைப்பு.  இரண்டு உணர்ச்சி நரம்புகள் ஒன்றையொன்று உரசிக்கொள்ளும், தொட்டுக்கொள்ளும் ஒரு திடீர் சம்பவம். It happens when two senses cross in the brain. பார்வை உணர்ச்சியும், தொடு  உணர்ச்சியும் ஒன்றின் மீது ஒன்று ஒட்டிக்கொண்டால் நீங்கள் ஒன்றைப் படிக்கும் போது  அந்த எழுத்தை ஒரு குழந்தையின் கன்னத்தைத்  தொடுவது   போல உணர்வீர்கள்.    இது  தவிர விவரிக்க இயலாத  வினோத வடிவம் பெறக்கூடியது ஸினஸ்தீஷ்யா.   வார்த்தைகளையும் எழுத்துக்களையும் காட்சியாக வண்ணமாக பார்ப்பது இதில் ஒரு வகை. திங்கட்கிழமை என்ற வாரத்தையை சிலர் நீல நிறமாகவும், சிகப்பு நிறமாகவும் காண்கிறார்கள். சில சமயங்களில் வார்த்தைகளை எதோ ஒரு மலரின் வாசம் போன்று நுகரக்கூட முடியும்.   H என்ற ஆங்கில எழுத்து சிலருக்கு ஒரு ஆணாக தோன்றும். உதாரணமாக L என்பதை ஒரு பல்லியாகவோ பூச்சியாகவோ   நீங்கள் கண்டால் நீங்களும் ஒரு ஸினஸ்தீட். எண்களை வண்ணங்களாக காண்பது, புரிபடாத வடிவங்களில் ஒலியை காண்பது போன்று    ஸினஸ்தீஷ்யா   நாம் அறிந்த அறிவியலை மாற்றிப்போட்டு  முற்றிலும் உருமாற்றம் செய்து சிலர் தங்களுக்கு எதோ நேர்ந்து விட்டது என முடிவு கட்டிக்கொள்ளுமளவுக்கு சமயங்களில் ஒரு அச்சமூட்டும் அனுபவமாக இருக்கிறது.

      ஸினஸ்தீஷ்யா பல வகைப் பட்டதாக இருந்தாலும் இதன் அபார உச்சம் ஒலியைக் காண்பதுதான். இதைப் படிக்கும் பலர் உடனே எனக்கும் இது நடந்திருக்கிறது என்று எண்ணினால் கொஞ்சம் உங்களையே ஆய்வு செய்து கொள்ளுங்கள்.  ஒரு குறிப்பிட்ட இசையைக் கேட்டதும்  மனித உருவங்களோ, மேகங்களோ, மின்சார ரயில்களோ, பச்சை வயல் வெளிகளோ, தண்ணீர்த் துளிகளோ, காதலன், காதலியின் முகமோ, நேற்று சாப்பிட்ட வெங்காய ஊத்தப்பமோ மனதில் தோன்றுவது கண்டிப்பாக இதில் அடங்காது. இது வேறு விதமானது. உயர்வானது. புதிரானது . பலருக்கு கிடைக்காதது அல்லது தோன்றாதது.  
     
         அதாவது ஸினஸ்தீஷ்யா கொண்டவர்கள்   இசையை வினோத வடிவங்களாக , பல நிறங்களாக, ஒலியலைகளாக, தெறிக்கும் ஒளிச்சிதறலாக, கோடுகளாக, மேலும் வார்த்தைகளற்ற காட்சிகளாக காண்கிறார்கள். இந்த அனுபவத்தைக் காண்பவர்கள் பல சந்தர்ப்பங்களில் இதை வெளியே சொல்வதில்லை.  பொதுவாக எல் எஸ் டி, வகை போதை  வஸ்துகளை உட்கொண்டவர்கள்  இது போல யதார்த்தம் உடைந்த விசித்திர தோற்றங்களை  காண நேரிடும்  என்பது அறிவியல் சொல்லும் உண்மை.  எல் எஸ் டி அனுபவம் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு  மிக மிக ஆபத்தான உணர்ச்சி. ஆனால்  ஸினஸ்தீஷ்யாவோ  இயல்பானது. அரிதானது. சிலர் இதை தங்களுக்குக் கிடைத்த மிக உன்னதமான தகுதி என்றே கருதுகிறார்கள். மேலும் சிலர் இசையை நுகர்ந்து அதன் வாசத்தை அனுபவிப்பதாக சொல்கிறார்கள். வேடிக்கை போல தோன்றினாலும் இது நிகழக்கூடியதே. When one's auditory and olfactory senses overlap, this phenomenon is possible.  

      இது போன்ற ஸினஸ்தீட் நம்மில் பலர் இருக்கக்கூடும். ஆனால் எல்லோருமே இதை வெளியே சொல்லிக்கொண்டிருப்பதில்லை. நாம் தனிமைப்படுத்தப்பட்டுவிடுவோமோ என்ற அச்சம் இதற்கு ஒரு முக்கிய காரணம்.  நான் இசையை காண்கிறேன் என்று நீங்கள் அதிரடியாக அறிவித்தால் அடுத்து நீங்கள் செல்லும் திருமண விருந்தில் மணமக்களையும் திருமண சாப்பாட்டையும் விட மற்றவர்கள் உங்களை அதிகம் விவாதிக்கலாம்.

    தனிப்பட்ட விதத்தில் ஒரு முறை The Alan Parson's Project இசைக் குழுவினரின் Eye In The Sky என்ற பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த சமயத்தில் நான்  இப்படியான இசைக்காட்சியை அதிகமாக உணர்ந்தேன். எனக்கு எப்போதிலிருந்து இது தோன்ற ஆரம்பித்தது என்று உறுதியாக சொல்லமுடியவில்லை.   பல வருடங்களுப் பிறகு என் சகோதரனிடம் ,"என்னால் இசையை பார்க்க முடியும்." என்று சொன்னேன். அவன் என்னை விசித்திரமாக பார்த்துவிட்டு," அப்படியா? எப்படி?" என்றான். " ஒரு பாடலைக் கேட்டால் எனக்கு அதன் இசை கோடுகளாக  விதவிதமான அலைகளாக தெரிகின்றன." என்றேன். "தண்ணீரில் விழுந்த கல் ஏற்படுத்தும் அதிர்வைப் போல, உடையும் கண்ணாடித் துண்டுகள் போல ஒரு மாதிரியான வடிவங்களாக அவை எனக்குத் தோன்றுகின்றன." என்று சொன்னேன். அவன் என்னை ஏற இறங்க பார்த்தான். பிறகு ," நல்லவேளை. எனக்கு அப்படியெல்லாம் எதுவும் இல்லை." என்றான் அவசரமாக. அதில் "நான் இன்னும் நார்மலாகத்தான் இருக்கிறேன் " என்ற செய்தி தெரிந்தது. அதன் பின் அதுபற்றி நான் பேசவில்லை. இது நான் ஸினஸ்தீஷ்யா என்ற வார்த்தையை அறியும் முன் நடந்தது.

   வெகு சமீபத்தில் என் நண்பனுடன் பேசிக்கொண்டிருந்த வேளையில் "நீ இசையை பார்த்திருக்கிறாயா?" என்று கேட்டேன். " தியேட்டர் பிரிண்ட்தான் கிடைத்தது. சத்யராஜ் நடிப்பு நன்றாக இருக்கிறது. ஒரு முறை பார்க்கலாம்." என்றான் அவன் படு சீரியஸாக. சரிதான் நான் கேட்ட நேரம் சரியில்லை என்று எண்ணிக்கொண்டேன். அவன் தொடர்ந்து ," நீ பார்த்துவிட்டாயா?" என்று என்னைக்  கேட்டான். என்ன சொல்வது என்று எனக்குத்  தெரியவில்லை. சற்று நேர சிந்தனைக்குப் பிறகு நான்  சொன்னேன். "இசையைப் பார்க்கிறேன்." 

       அவனுக்கு அது புரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். 




 அடுத்து: இசை விரும்பிகள் XXIV-  எழுபதெண்பதுகள்: மாலை  வெளிச்சம்.