Sunday 7 July 2019

ஆணவத் தூண் - I

"உங்கள் வார்த்தைகளே உங்களை தீர்ப்பிடும்" என்று சொல்லப் படுவது போல சிலரின் மகுடங்கள் இப்போது மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. பேசுபவர் யாராக இருந்தாலும் - ஞானியாகவே இருந்தாலுமே - அகங்காரத்தின் வெளிப்பாடாக அவர்களின் தொனி மாறும்போது அவர்கள் கடுமையான விமர்சனத்தை சந்திக்க நேரிடுகிறது.

இதில் மிக முதன்மையானவர் இளையராஜா. தற்போது அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் பல விதமான எதிர் வினைகளுக்கு காரணமாகின்றன.. மிகத் தீவிரமான இரா ரசிகர்களே இப்போது "அவர் இசை மட்டுமே பிடிக்கும் . அவர் பேசுவது பிடிக்காது" என்ற  நிதர்சனத்திற்கு வந்துவிட்டார்கள். இளையராஜாவின் ஆணவப் பேச்சுக்கள் தொடர்கதையாகி விட்ட தற்போதைய நிஜத்தில் அவர் மீதான விமர்சனங்களை புறம்தள்ளுவதும் அல்லது  ஜஸ்ட் லைக் தட்  நிராகரிப்பதும்  வரவேற்க்கத்தக்கதல்ல.

இரா பற்றிய பேட்டியிலோ அல்லது வாக்குவாதத்திலோ பங்கேற்கும் பலர் அவரை ஒரு புனிதப் பசு போன்ற ஒரு பிம்பத்தை கட்டமைக்க எத்தனிக்கிறார்கள். நான் கண்ட ஒரு செவ்வியில் ஒரு இரா பாதுகாவலர் மிகச் சாதாரணமாக ,' இப்போது இங்கு இளையராஜா வந்தால் இங்கே இருக்கும் எல்லோருமே அவர் காலில் விழுந்து விடுவார்கள்' என்று தன்மானம் தொலைத்த தனி மனித ஆராதனையின் உச்சமாக பேசுகிறார். எனக்கோ வியப்பை விட இந்தத் தரங்கெட்டத் தனத்தின் மீது நூறு பக்கங்கள் வசவுகளாக எழுதவேண்டிய கோபம் வந்தது. பகுத்தறிவை வீதி வீதியாக வீடு வீடாக கொண்டு சேர்த்த ஒரு இனத்தின் இன்றைய பிரதிநிதி இப்படி பேசுவது ஒரு நச்சுப் பேச்சு.

இந்தப் புனிதப் பசு என்ற பிம்பம் ஒரு காலத்தில் எம் ஜி ஆர் துவங்கி ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் என்று பரவி இன்றைய சூழலில் இளையராஜா மீது போர்த்தப்பட்டு வருகிறது. எல்லோரையும் விமர்சனம் செய்யும் உரிமை கொண்ட இந்த நவீன யுகத்தில் புனிதப் பசு பிம்பங்கள் உடைபட வேண்டிய இடத்திற்கு வந்துவிட்டன.

ஒரு இசையமைப்பாளர், பாடல்கள் அமைக்கிறார், சிலருக்கு பிடிக்கிறது. அவர்கள் அவரை கொண்டாடுகிறார்கள். இது இயல்பான ஒரு நிகழ்வு. முடிவின்றி தொடரும் வரலாற்றின் அடுத்த அத்தியாயம். ஆனால் இசை எனக்குப் பிடித்த அந்த ஒருவரோடு முடிந்துவிட்டது என்பதோ, அவர் மட்டுமே இசை சாகசங்கள் நிகழ்த்தினார் மற்றவர்கள் அவருக்கு கீழேதான் என்றோ தனக்குத்  தோன்றுவதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு பொதுவான விதியாக மாற்ற முயல்வது ஒரு ஆபத்தான அரசியல். இரா வாசிகள் இதைத்தான் செய்யத் துடிக்கிறார்கள்.

நான் முன்பே சொன்னது போன்று அவர்களுக்கு இராவின் முன்னே இருந்த இசை பற்றிய அறிவு துளியும் கிடையாது. போலவே இராவுக்கு அடுத்து வந்த இசையின் பால் அவர்களுக்கு மிகக் கடுமையான வெறுப்பு. இந்த இரண்டு உண்மைகளும் அவர்களை மீண்டும் மீண்டும்  பொய்களையே  உரக்கச் சொல்லவைக்கின்றன.

இளையராஜா 75 என்ற நிகழ்ச்சியில் இரா ரஹ்மானை தன் வழக்கமான விஷமத்தனத்துடன் கேலி பேசியது, ரஹ்மானை மட்டம் தட்ட நினைத்து தன் சுய ரூபத்தை காட்டிக்கொண்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகாவிட்டாலும் . இருவரின் அணுகுமுறையையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயத்தை உண்டு பண்ணியது. வயதில் பெரியவர், தன் கீழே பணிபுரிந்த ஒரு இளையவரை இப்படி நடத்துவது இயல்பை மீறிய ஒரு செயல். அதே நிகழ்ச்சியில் அவர் நடிகை ரோஹிணியை ஏசியதும், நடிகர் கார்த்திக் விளையாட்டாக கேட்ட ஒரு கேள்விக்கு பதில் சொல்ல முடியாத இயலாமையினால் அவரை நக்கல் செய்ததும் என்ன விதமான மேடை நாகரீகம்? (அக்கினி நட்சத்திரத்தின் ராஜா ராஜாதி ராஜா பாடல் குறித்து அது என்ன சார் வேறு எங்கும் தூக்காதே கூஜா என்று கார்த்திக் கேட்டிருந்தார்.)

இளையராஜாவின் தலைக்கணம் விளம்பரங்கள் இல்லாமலே பிரபலமானவை. எம் எஸ் வி பற்றி பெருமையாக பேசினாலும் அதன் பின்னே அவர் சொருகும் ஊசி  வேறு வகை. தன்னுடைய இசைப் புரட்சிகளை பட்டியலிடும் சமயங்களில் இரா எம் எஸ் வி யின் மெட்டுக்களை உதாரணம் காட்டி எம் எஸ் வியின் இசை மேதமையை கொஞ்சம் உரசிப் பார்ப்பார். இரா  தன் பல பேட்டிகளில் எம் எஸ் வி அவர்கள் எவ்வாறு ஒரே மெட்டை பல விதமான பாடல்களாக மாற்றியமைத்திருக்கிறார் என்று குறிப்பிடுவது வழக்கம். இது சாத்தியமே. இதை குறிப்பிடும் இராவின் பெரும்பான்மையான பாடல்கள் ஒரே தாளக்காட்டில் இசைக்கப்பட்ட வெற்று ஒலிகள்தான். அவர் அமைத்த ஐயாயிரம் பாடல்களில் வெறும் சில நூறு பாடல்கள் மட்டுமே தனித்து தெரிபவை. மற்ற எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

தனக்கு முன் இருந்த இசை பாரம்பரியத்தை இவ்வாறு பகடி செய்யும் இளையாராஜா வேறு யாரை மதிக்கிறார் என்றால் அது கேள்விக்குரியது. மேலும்  தனக்குப் பின்  வந்த இசையமைப்பாளர்கள் குறித்த அவரது பார்வை ஒரு வெறுப்பு மழை. அவருடைய செருக்கு இப்படி பல்லிளிக்க அவரை துதி பாடும் கூட்டம் இதைப் பற்றியெல்லாம் சற்றும் கவலை கொள்வதில்லை. விளைவு 96 என்ற ஒரு பாடாவதி படத்தில் நிகழ்ந்தது. அது அவர்களுக்கு தேவைதான்.

சுப்ரமணியபுரம் என்ற படத்தில் இயக்குனர் சசி குமார் துவக்கி வைத்த எண்பதுகள் என்றால் இளையராஜாவின்  இசை என்ற ஒரு மிகையான உண்மை  அந்தப் படத்திற்கு பொருத்தமானதாக இருந்தது. ஏனென்றால் எண்பதுகளில்தான் இளையராஜா பெரிய அளவில் வளர்ந்துகொண்டிருந்தார். அன்றைய காலகட்டத்தில் பல இசையமைப்பாளர்கள் இருந்தார்கள். ஆனால் தற்போது எண்பதுகள் என்றாலோ அது இளையராஜாவின் காலம் என்றொரு மிகை பிம்பம் செயற்கையாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் நீட்சியாக பல இயக்குனர்கள் தங்கள் படங்களில் இளையராஜாவின் இசையை எண்பதுகளின் குறியீடாக பயன்படுத்தி வருவது ஒரு அபத்தம். இது அவர்களின் தனிப்பட்ட விருப்பின்பால் நேரும் விளைவேயன்றி உண்மையை பிரதிபலிக்கும் போக்கு அல்ல.

இந்தப்  பொய் தொடர்கதையாக தமிழ்த் திரையில் வலம் வர இதற்கான எதிர்வினையை யாரும் எதிர்பார்க்காத ஒருவரே  முதல் ஆளாக செய்திருக்கிறார். அவர் இளையராஜா.

96 என்ற  ஒரு சென்டிமென்டல்  குப்பை Before sunrise என்ற ஆங்கில பட வரிசையின் அலங்கோலமான  தமிழ் வடிவம். இதில் கதையின் நாயகி இராவின் பாடல்களை பாடுவதுபோல காட்சிகள் உண்டு. உண்மையில் அவள் எஸ் ஜானகியின் ரசிகையே தவிர இளையராஜாவின் விசிறியாக அந்தப் படத்தில் காட்சிப் படுத்தப் படவில்லை. என்ன செய்வது? எஸ் ஜானகி என்றாலே அது இராவின் இசை தானே? நாயகி இரண்டோ மூன்றோ எஸ் ஜானகியின் பாடல்களைப் பாடுவது போன்ற திரைக்கதை. நாயகி பாடும் பாடல்கள் இளையராஜாவின் படைப்பாக  இருந்ததால் இது பற்றி அவரிடம் கேள்வி கேட்ட போது அவர் தன் பிராண்ட் தலை கணத்துடன் ,"என் இசையை காப்பியடிப்பவர்கள் ஆண்மை இல்லாதவர்கள்" என்று ஒரு அணுகுண்டை வீசிப்போட, தன்மானம் சற்றே விழித்துக்கொண்ட  சிலரின் இமேஜ் என்ற பலூனில் அது ஒரு ஊசியை செலுத்தியது. இளையராஜாவின் மேட்டிமை பேட்டிக்கு பேட்டி, நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சி தன்னை அடையாளம் காட்டிக்கொள்கிறது.

கூடுதலாக அவர் ,"அந்தக் காலத்து இசை போன்றே அவர்களாகவே சுயமாக பாடல்கள் அமைத்திருக்கலாமே, எதற்கு என்னை காப்பி அடிக்க வேண்டும்?" என்றொரு கருத்தை முன்வைக்கிறார்.

சொல்லப்போனால் 92ஆம் வருடத்தோடு இளையராஜாவின் ஆட்டம் ஒழிந்துபோனது. 96 இல் ரஹ்மான் மற்றும் தேவா பாடல்களே பெரிய அளவில் தமிழகத்தில் ஒலித்தன. இயல்பாக அந்தப் படத்தின் நாயகி அந்த 96ம் வருடத்திற்குரிய பாடல்களை பாடியிருந்தால் படத்தின் நம்பிக்கைத்தன்மை கூடியிருக்கும். அந்தப் படத்தின் இயக்குனர் தனது இரா பாசத்தை நடந்ததற்கு மீறிய செயற்கையான செண்டிமெண்டலுடன் வெளிக்காண்பிக்க, இந்த எதிர்வினை அந்த 96 கும்பலுக்கு அவசியமான அசிங்கம்தான். இனிமேலாவது இரா அடிவருடிகள் தங்களது அபிமானத்தை இதோடு நிறுத்திக்கொண்டால் நலமே.


ஆணவத் தூண் II தொடர்கிறது.