மூன்றில் ஒரு பகுதி உலகம் இன்றைய கணத்தில் நிர்ப்பந்திக்கப்பட்ட தனிமையில் உறைந்து போயிருக்கிறது. கண்டங்கள், நாடுகள், நகரங்கள், வீதிகள், சாலைகள் எல்லாமே ஒரு புகைப்படம் போன்று அசைவுகளற்ற அமைதியில் அடங்கிப் போயிருக்கின்றன. வழிபாட்டுத் தலங்களும், வணிக வளாகங்களும், உணவரங்குகளும், கேளிக்கை விடுதிகளும், திரையரங்குகளும், முகவரியற்ற இடங்களாக மனிதத் தடம் படாத பகுதிகளாக மாறியிருக்கின்றன. இயற்கையோ செயற்கையோ, விதியோ சதியோ நம் கண்களுக்குப் புலப்படாத இந்த எதிரியின் பின்னிருக்கும் காரணிகளை ஆராயும் நேரம் இதுவல்ல என்றாலும் உலகம் முழுவதும் இறந்து கொண்டிருக்கும் எளிமையானவர்களின் மரணத்திற்கு இயற்கையையும் கடவுளையும் சுட்டிக் காட்டி விட்டு இதை நாம் கடந்து சென்று விடப் போகிறோமா?
தற்போதைக்கு தனித் தனி தீவுகளாகவும், யாரையும் தொடாமலும், முகம் பார்த்து பேசாமலும், பிறரிடமிருந்து தள்ளி நின்றும் இருப்பதே பாதுகாப்பானது. ஆனால் இதுவே ஒரு புதிய வாழ்க்கை முறையாக போதிக்கப் படாமலிருந்தால் மிகவும் நலம்.