Sunday, 4 January 2015

இசை விரும்பிகள் XXIII- பாதையெல்லாம் பரவசம்

          விடாது பெய்யும் அடை மழைக் காலத்தில் ஒரு சிறிய இடைவெளியில் திடீரெனத் தோன்றும் சூரிய வெளிச்சம், 
       நீண்ட தூர வெய்யில் பயணத்தின்  நடுவே எதிர்பாராமல் கிடைக்கும்   ஓர் அரச  மரத்தின்  நிழல், 
     க்ரோட்டன்ஸ் செடிகளுக்கு மத்தியில் தலைகாட்டும் உயிரோட்டமான  ஒரு வண்ண மலர்.
  வண்ண வண்ணப் புகைப்படங்களுக்குள்   அசந்தர்ப்பமாக ஒளிந்திருக்கும் ஒரு கருப்பு வெள்ளைப்  புகைப்படம்,   
  சிமெண்ட் கட்டிடங்களுக்கு இடையே  திடீர் பசுமையாகக்  காட்சியளிக்கும் வயல் வெளிகள், 
   மேகங்கள் அடர்ந்த கருமையான இரவு  வானத்தில் எதோ ஒரு மூலையில் ஒளிரும் ஒரே ஒரு நட்சத்திரம், 
   காதுகளைக் குடையும் வாகன இரைச்சலின் நடுவில் சன்னமாக  ஒலிக்கும்  மழைத் துளிகளின்  ஓசை,  
      சோடியம் வேப்பர் மின் விளக்குகளின் நிழல் படாத ஓர்  ஓலை  வீட்டின் வெளியே இரவு நேரத்தில் காற்றில் அசைந்து எரியும் ஒரு விறகு அடுப்பு,   
    கண்களைக் கவரும் கவர்ச்சியான அந்நிய முகச் சாயல் கொண்ட தோற்றங்களுக்கு மத்தியில் மனதை மயக்கும் ஒரு மண் சார்ந்த முகம்....


                                                   

              பாதையெல்லாம் பரவசம்.


   சில வேலைகளைச் செய்வதில் எனக்கு எப்போதுமே  விருப்பமிருந்ததில்லை. அதில் ஒன்றுதான் இந்த காய்கறிக் கடைகளுக்குச் செல்வது. வெண்டைக்காய், முருங்கைக்காய், பூசணிக்காய், தக்காளி  போன்ற சமாச்சாரங்களை விலை விசாரித்து வாங்குவது ஒரு ஆயாசமான வேலை. Frankly speaking, I am very selective.  எனவே பொதுவாக இதை நான் முடிந்தவரை தவிர்க்கவே பார்ப்பேன். ஆனால் சிறு வயதில் பல சமயங்களில் இந்த விருப்பமில்லாதச்  செயலைச் செய்திருக்கிறேன். தயங்கும் சமயங்களில் தப்பித்துக் கொண்ட என் அண்ணன் சொல்வான்: "டேய் ரொம்ப ஈஸிடா. மார்கெட்டுக்கு  நெறைய பொண்ணுங்க  வருவாங்க. ஒரு அழகான  பொண்ணு பின்னாடி போய் நின்னுக்க. அவ எத வாங்கினாலும் உடனே "எனக்கும்" அப்படீன்னு பின்னாடியிருந்து கத்து. அப்புடியே  அவ வாங்கறதையெல்லாம் வாங்கிட்டு வந்துரு." இந்த "எனக்கும்" என்பது கொஞ்சம் உச்சக் குரலில் சொல்லவேண்டியது. அதாவது அப்போது நகைச்சுவை நாயகனாக இருந்த சுருளிராஜன் பாணியில். அவனுக்கு நக்கல் கொஞ்சம் ஜாஸ்தி. எனக்கும் அவன் சொன்னபடி செய்ய ஆசைதான். ஆனால் அந்த விருப்பத்தை பூர்த்தி செய்யும் விபரீதத்தில் என்றைக்கும் இறங்கியதில்லை. இருந்தும் நான் காய்கறி கடைக்குச் சென்றதில் ஒரு காரணம் இருக்கவே செய்தது. அது என்னவென்றால் என் பள்ளித் தோழியின் வீடு அங்கேதான் இருந்தது. தேவையில்லாத வாக்கியமாக இருந்தாலும் சொல்லவேண்டியதைப் போல உணர்வதால் சொல்கிறேன். மிக அழகானவள். வகுப்பில்  என்னைத் தேடி வந்து அவள் பேசும் சயமங்களில் மற்ற சிறுவர்கள் என்னை பொறாமையுடன் பார்க்கும் பார்வைகளில்  வீசும் அனல் என்னை மிகவும் பயப்படுத்தும். இருந்தும் அதுபோன்ற சந்தர்ப்பங்களை நான் ரசிக்கத்   தவறியதில்லை. அந்த சமயங்களில் ரெட் புல் குடித்ததைப் போன்றதொரு  உற்சாகம் கரைபுரண்டோடும். அவளைப் பார்த்து  அவளொரு நவரச நாடகம் என்று பாட்டு கூட பாடியிருப்பேன் ஆனால் எனக்கு அப்போது அது தோன்றவில்லை. ஒவ்வொரு முறை மார்கெட்டுக்கு  செல்லும்போதும் அவள் வீட்டிலிருந்து எங்கிருந்தோ என்னைப் பார்ப்பது போல எதோ ஒரு கற்பனை சிறகடிப்பது ஒரு சுகம். ஆனால்  ஒரு முறை கூட அந்தக் கற்பனை உண்மையானதில்லை என்பது ஒரு சுரீர்.

     அடுத்த பத்தியைப் படிப்பது உங்கள் விருப்பம். ஆனால் அது இந்தப் பதிவுக்கு அவசியமில்லாதது.

  ....பல வருடங்கள் கழித்து (என் சகோதரியும் அவள் சகோதரியும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள்.) சில அரிய தகவல்களை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. அதில் ஒன்றுதான் அந்தப் பெண் என்னைப் பற்றி விசாரித்தாள் என்பது. "அவளா? அடிக்கடி என்ட்ட உன்னப் பத்தி  கேப்பாளே?" என்று ஒருமுறை என் அக்கா என்னிடம் கூறியதும் அடிப்பாவி  இப்ப வந்து இதச் சொல்றியே  என்று மனதில் கறுவிக்கொண்டே "இப்ப எங்க இருக்கா?" என்றால் பதில் வந்தது: "பெங்களூர்ல இருக்கா, கல்யாணமாயி புருஷன்கூட".  மனது உடைந்ததா இல்லையா என்று ஞாபகமில்லை. ஆனால்   எல்லா துயர சூழலுக்கும் பொருத்தமான இந்தப் பாடல் மட்டும் நினைவுக்கு வந்தது.  நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...
      இப்படி நான் வெறுத்த ஒரு காரியத்தை செய்தபோது  (மார்கெட் செல்வது) எனக்கு நிகழ்ந்தததைப் பற்றியே இப்போது குறிப்பிட இருக்கிறேன். மற்றபடி இது என் சிறு வயது infatuation, crush  பற்றியதல்ல.    ஒருமுறை காய்கறிக் கடைக்குச் சென்று வாங்கவேண்டியதை  வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்தபோது  அடுப்பில் கொதிக்கவேண்டியதெல்லாம்  என் அம்மாவின் முகத்தில் வெடிப்பதைக் கண்டேன்.  என்னை உக்கிரமாகப் பார்த்து என் அம்மா, "பத்து எட்டு வச்சா  கட வந்துரும். இங்கருக்கிற கடையில கால் கிலோ வெங்காயம் வாங்கிட்டு வரதுக்கு இவ்வளவு நேரமா? அப்படி என்னதான் கனவோ? போற வழியில என்னத்ததான் கண்டியோ?" என்று 45 டிகிரி செல்சியஸில் கத்தியது என் நினைவிலிருக்கிறது. உண்மைதான். ஐந்து  நிமிட வேலைதான் அது. என்னிடம் அகப்பட்டதல்லவா? பதினைந்து  நிமிடம் ஆனது. அதற்குக் காரணம் நான் எதையும் காணவில்லை- மாறாகக் கேட்டேன்.

   நடந்தது இதுதான். கடைக்குப் போகும்  வழியில் ஒரு மஞ்சள் வண்ணம் பூசிய வீட்டிலிருந்த வானொலியிலிருந்து ஒரு வசியப்படுத்தும் கானம் கசிந்துகொண்டிருந்தது. அது என்னுடைய மனதை கொள்ளை கொண்ட பாடல். வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா என்று எஸ் பி பி துயரமாகத் துவங்க நான் அதைக் கேட்ட அந்தக்  கணத்திலேயே என் வேலையைத் தவற விட்டுவிட்டு    மிகுந்த குதூகலத்துடன்  வழியிலிருந்த   ஒரு வேப்ப  மரத்தினருகே நின்றுவிட்டேன். ஒன் டூ த்ரீ போர் என்ற சம்பிரதாயமான கணக்கைத் தாண்டியதும் டடாங் டிங் என்று இசை வெடித்துப் புறப்பட்ட  எனக்குள் பட்டென்று  ஆயிரம் வண்ணங்கள் சிதறின. அதிகம் ஆளரவமற்ற அந்தக்  காலை வேளையில் நான் எதோ பாத்திரங்களுக்கு வெள்ளிப் பூச்சு பூசுபவனைப் போன்ற தோரணையில் நின்றுகொண்டு பாடலை ரசித்துக்கொண்டிருக்க சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர்களில் சிலர்  என்னை அந்த திருப்பம் வரை திரும்பிப் பார்த்தபடியே சென்றார்கள். நானோ என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு என்று எதிரியாகிவிட்ட தன் காதலியை எஸ் பி பி குசலம் விசாரித்து, அந்தக்  காதல் தோல்வியிலும்  ஒரு துள்ளல் ஆட்டத்திற்ககான பாடலைப்  பாடி முடித்ததும்தான் நகர்ந்தேன். எதோ மட்டன் பிரியாணியை கோழிக் குருமாவுடன் சேர்த்து அடித்த   திருப்தியுடன் அதன் பின் கடைக்குச் சென்று எனக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக(!)  முடித்துவிட்டு வெற்றியுடன்  வீடு திரும்பியபோது எனக்குக் கிடைத்ததுதான்  மேலே உள்ள  என் அம்மாவின் பாராட்டு. அதற்குப் பிறகு என்னை ஏதாவது கடைக்கு அனுப்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் என் அம்மாவிடமிருந்து வரும் வார்த்தைகள் இவைதான்: "அய்யோ இவனா? நாலு எட்டு வைக்க நாப்பது நிமிஷம் ஆக்குவானே?".

      வானொலிகள், சாலையோர தேநீர்க் கடைகள், கல்யாண மண்டபங்கள் திரையரங்குகள் போன்ற இடங்களில் மட்டுமே பாடல்கள் ஒலித்த காலத்தைச் சேர்ந்த பலருக்கும் இந்தப் பாதையோர பாடல்  அனுபவங்கள்  புதிதல்ல. இன்னொரு  முறை இதேபோல காலை உணவு வாங்க ஹோட்டல் ஒன்றிற்க்கு   செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் மனதில் மண்டிய வெறுப்புடன் நான் நடந்து சென்றுகொண்டிருந்தபோது வழியிலிருந்த தேநீர்க் கடையிலிருந்து  ஒலித்த ஒரு பாடல் என்னை அப்படியே நிறுத்திவிட்டது. இளமை என்னும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு என ஒரு ஏகாந்தம் என்னைத் தடவ,  மழைக்கு முன் வீசும் ஒரு குளிர்ந்த காற்றின் தொடுகை போன்ற  பாடலின் அந்தச் சுகமே வீடு வரும் வரை என்னைத் தாலாட்டியது.  ஆண் -பெண் உறவை குறியீடாகச் சொல்லிய எண்ணிலடங்கா தமிழ்ப் பாடல்கள் வரிசையில் வந்த மற்றொரு பாடல். என்றாலும்  அப்படி சட்டென்று பத்தோடு பதினொன்றாக வைத்துவிடமுடியாத ஒரு மந்திர கானம்.  இது  ஒரு மோக மெட்டு.  சற்று காமம் தோய்ந்த  காதலோடு  பொருத்தமான பாவணையில்  எஸ் பி பி பாடுவதும், மழை நேரத்துச் சாரல் தீற்றுகள் முகத்தைத் தீண்டுவது போன்ற ஆர்ப்பரிப்பில்லாத சன்னமான இசையும் ..நீங்கள் வேண்டாம் என்றாலும் மனதுக்குள் புகுந்துகொள்ளும்  செல்லப் பாடல்.  ஒரு தென்றல் துளி. எனது பால்ய தினங்களில் இளையராஜா இசையின் முகமாக இருந்த பாடல் இது.

         இந்தப் பாடல் மூன்று சரணங்கள் கொண்டது.  எனவே இந்த முறை நான் வீடு திரும்ப வழக்கத்தை விட சற்று அதிக  நேரம் பிடித்தது. வந்ததும்  என் அம்மா என்னிடம் ஒரு இகழ்ச்சியான புன்னகையுடன் கேட்டது இது: "ஆமா தெரியாமத்தான் கேக்கிறேன், நீ கடையில இருந்து வாங்கிட்டு வரியா இல்ல செஞ்சு எடுத்துட்டு வரியா?". நீண்ட தூரம் நடந்து வந்த வெறுப்பு மேலும் இந்த நக்கல் இரண்டும் என்னை மேலும் சூடாக்கியது.  "அதான் வந்தாச்சே" என்றேன் எரிச்சலுடன். என் அம்மா ஒரு கேள்வியோடு தனது குறுக்கு விசாரணையை முடித்துக்கொள்ளும் ஆசாமி கிடையாது. "அது தெரியுது நல்லா. ஏன் இவ்வளவு லேட்டு?" என்று அடுத்த கேள்வி பாய, சிறுவர்களுக்கு வரும் இயல்பான கோபத்தோடு '" பாட்டு கேட்டுட்டு வந்தேன். வர வழியிலே. ஒரு டீ  கடையிலே. போதுமா?" என்றேன் விறைப்பாக.  என் அம்மாவின் முகத்தில் தோன்றியது  கோபமா இல்லை அதிர்ச்சியா என்று இன்றுவரை எனக்குத் தெரியவில்லை.

   இதே போல பின்னொரு நாளில் சாலையோரத்தில் (என்று நான் நினைத்திருந்தேன்) நின்றபடி மீன்கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் என்ற பாடலை ரசித்துக் கொண்டிருந்த போது  கிரீச்சிட்டு என்னருகே நின்ற ஒரு பைக் "என்ன வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா?" என்று கடுமையான குரலில் விசாரித்தது.  கூட  வந்திருந்த என் நண்பன் என்னிடம் "இன்னும் கொஞ்சம் முன்னாடி நின்னுருந்தீன்னா நீயே ஊர்வலமா போயிருக்கலாம்"  என்று சொல்லி என்னை இன்னும் கதிகலங்கடித்தான்.
                      

   இது ஒரு புறமிருக்க பின்னாளில் ஆங்கிலக்  கவிதை வகுப்பொன்றில் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின்  The Solitary Reaper கவிதையைப் படித்த போது சரிதான் அப்பேற்பட்ட வேர்ட்ஸ்வொர்த்தே  நம்ம கட்சிதான்  போல என்று ஒரு ஆனந்த நிம்மதி ஏற்பட்டது.  கொஞ்சம் மகிழ்ச்சியாக ஏன்  பெருமையாகக் கூட இருந்தது. ஏனென்றால் இந்தக் கவிதையில் அவர் சொல்லியிருப்பது அவருடைய சுய அனுபவம் சார்ந்தது. இதைப் படித்த பலருக்கும் இது  ஞாபகமிருக்கலாம். கவிதை இப்படிப் போகும். ஒருமுறை வேர்ட்ஸ்வொர்த் ஆங்கில-ஸ்காட்டிஷ் எல்லையில் ஒரு ஸ்காட்டிஷ் பண்ணை யுவதி பாடும் ஒரு துயர இசையைக் கேட்டு அப்படியே உறைந்துபோய் நின்றுவிடுகிறார். அந்தப் பெண்ணின் குரல் அவருக்குள் ஆயிரம் சிறகுகளை உருவாக்குகிறது. பாடலின் சோகமோ விதவிதமான லயிப்பான எண்ணங்களையும், தூரமான ஒப்பீடுகளையும் அவர் மனதில் விதைக்கிறது. தவிர  பாடலின் போதையான சுகம் அவரை வேறு எதைப்  பற்றியும் சிந்திக்க விடாது அவரை ஒரு வசிய நிலைக்குக் கொண்டுசென்று விட வேர்ட்ஸ்வொர்த் என்ற மிகப் பெரிய அந்தக் கவிஞன் அந்த மொழி புரியாத பாடலின் துயர இசையில் தன்னையே கரைத்துக்கொண்டு காணாமல் போகிறான்.  அவரது  கற்பனை அரேபிய பாலைவனம், ஹிப்ரீட்ஸ் தீவுகள் என்று நீண்ட தூரங்கள்  பறந்து செல்ல   பெயரில்லாத  அந்த ஸ்காட்டிஷ் வனிதை   தனது கீதத்தை முடித்துக்கொண்டு  தன் பண்ணைப் பரிவாரங்களோடு  அந்த இடத்தைவிட்டு அகன்று சென்ற பின்னர்தான்  மீண்டும் வேர்ட்ஸ்வொர்த் தன் இயல்பு நிலைக்கு வருகிறார்.  யோசித்துப் பார்த்தால் இது ஒரு வெகு சாதாரண நிகழ்வு. ஆனால் அதை அவர் கவிதையாக வடித்த விதம் ஒரு அசாதாரண வாசிப்பின் பரிமாணமாக விரிகிறது.

O, listen! for the Vale profound 
Is overflowing with the sound   மற்றும்
The music in my heart I bore 
Long after it was heard no more

போன்ற திகைக்க வைக்கும் மரணிக்காத மின்சார வரிகள் இதில்தான் இருக்கின்றன. இதைப் படித்தபோது எனக்குத் தோன்றியது இதுதான்.  இங்கிலாந்தோ இந்தியாவோ உயர்ந்த கவிதையோ அல்லது சாதாரண சொற்களோ புரிகிறதோ இல்லையோ இசைதான் அதைக் கேட்பவனை எப்படிக் கட்டிப்போட்டுவிடுகிறது! இசையின் உன்னதத்தை வேர்ட்ஸ்வொர்த்தின் எழுத்தில் படித்த எனக்கு அதன் உண்மை பல சமயங்களில் புரிந்தே இருந்தது. பிடித்த பாடலைக் கேட்டுக்கொண்டு நடந்து செல்லும் அந்தப் பரவசமான பாதையோர பயணங்கள் விலை மதிப்பில்லாதவை. அதற்காக எத்தனை தொலைவு வேண்டுமானாலும் நடக்கலாம்.

      ஆனால் இன்றைக்கு இந்தச்  சுகங்கள் செல்லாக் காசாகிவிட்டன.  ஐ பாட், எம்பி த்ரீ  போன்ற இசைச் சாதனங்கள்  இதே அனுபவத் தேடலை   இன்று மிக மிக எளிதாக்கிவிட்டன.  விரல் நுனியில் சாத்தியப்படும்   இந்த வசதி   இசை என்னும் அந்த   ஆழமான அனுபவத்தை நீர்த்துப் போகச் செய்ய உதவும் ஆன்மாவைத் தொலைத்த   கருவிகளாக  எனக்குத் தோற்றமளிக்கின்றன.   இன்றைக்கு டிஜிட்டல் துல்லியத்தில் இசையை ரசிக்க முடிந்தாலும் பழைய ரேடியோ நாட்களின் அந்த கரகரப்பான தெளிவில்லாத இசை அனுபவம் எனக்கு ஊட்டிய எல்லையில்லாத உற்சாகம் மற்றும் திகைப்பூட்டும் மகிழ்ச்சிக்கு இவை இணையாகவில்லை என்பது ஒரு அதிர்ச்சியான முரண்.

      இளமை ஊஞ்சலாடுகிறது  படத்தின் மிகப் புகழ்பெற்ற காதல் கீதமான ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது  (நிலவில் கிழவிதான் வடை சுட்டுக்கொண்டிருப்பாள். அவளுக்காகவா  இந்தப் பாட்டு? என்று என் சகோதரிகள் இந்தப் பாடலை கிண்டல் செய்வதுண்டு.) என்ற பாடலை விட என் மனதில்  தங்கிவிட்ட என்னடி மீனாட்சி  ஒலிக்கத் துவங்கினால் என்னை ஒரு ஆனந்தப் பூங்காற்று சூழ்ந்துகொள்ளும்.  அதற்கு ஒரே காரணம்தான்.  அது இளையராஜா. வானொலியில் பாடல்கள் ஒலிபரப்பப்படும் போது படத்தின் பெயர் பாடகர்கள் இயற்றியவர் என்ற வரிசையைத் தாண்டி இசை இளையராஜா என்று காதில் விழுந்துவிட்டால் என் கவனம் ஒரே வினாடியில் ஒரு லேசர் ஒளிக்கற்றையைப் போல அந்தப் பாடலின் மீது குவிந்துவிடும். அன்னக்கிளியின் மச்சானப் பாத்தீங்களா எனக்குக் கொடுத்திருந்த உற்சாக போதை இளையராஜாவின் மீது எனக்கிருந்த ஆர்வத்தை அவருடைய அடுத்தடுத்த பாடல்கள்  மூலம்  அதிக உயரங்களுக்கு எடுத்துச் சென்றபடி இருந்தது. இளையராஜாவைப் பற்றி பலவித விமர்சனங்களும் குற்றச் சாட்டுகளும் வீட்டில் அதிகம் எழுந்தாலும் என் இளையராஜா விருப்பம் அடர்த்தியாகிக் கொண்டேதான் போனது. நானும் என் அண்ணனும் இந்தப் பக்கம்  மற்றவர்கள் அந்தப் பக்கம். முதல் முறையாக பஸ் ஒன்றில் பயணம் செய்யும் ஆனந்த அனுபவமாக அவர் இசை என்னைத் தீண்டியது. இருந்தும் நான் வெறும் இளையராஜா இசையை மட்டும் கேட்டு வளர்ந்தவனில்லை.

     இளையராஜாவின் இசைக்கும்  எனக்குமான இசைத் தொடர்புகள்  ஒரு முதல் நண்பனின் அன்யோன்யத்தைப்  போன்றது.  எனது காலகட்டத்தைச் சேர்ந்த பலருக்கும் இதே போன்றதொரு உணர்வுப் பிணைப்பு இருப்பதை நானறிவேன். ஒருவிதத்தில் இளையராஜா அப்போதைய  மற்ற சில அம்சங்களைப் போலவே என் பால்ய தினங்களின் குறியீடாக எனக்குத் தோற்றமளிக்கிறார். அன்னக்கிளி படத்தின் போதே எனக்கு இளையராஜா என்ற  பெயர் ஒரு இனிப்புச் சுவையாக நெஞ்சத்தில் தங்கி  விட்டது.  நான் அப்போது அறிந்திருந்த   மற்ற இசை அமைப்பாளர்களின் பெயர்கள்   மிகப் பெரிய அளவில் எம் எஸ் விஸ்வநாதன், ஷங்கர்-கணேஷ், கொஞ்சமாக கே வி மகாதேவன், அதைவிட மெலிதாக எ எம்  ராஜா,  டி ஆர் பாப்பா. (இவரது பெயரை வானொலில் கேட்டாலே என் மனதில் ஒரு பாப்பாவின் முகம்தான் நினைவுக்கு வரும்.) மேற்குறிப்பிடப்பட்ட அனைவருமே என் காலத்தைச் சார்ந்திராதவர்கள். எனக்கு முன்னிருந்த ஒரு கடந்த கால இசைப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து   என் காலத்திற்கு நகர்த்தி வந்தவர்கள்.  எனது பால்யப் பள்ளி நாட்களில் இவர்களது இசையே என்னைச் சூழ்ந்திருந்தது. இசையின் சூட்சுமங்கள் புரிபடாத, வாத்தியங்களின் பெயர்கள் கூட தெரிந்திராத வெறும் ரசனை மட்டுமே ஒரு உந்து சக்தியாக இருந்த  பருவத்தில் நான் கேட்ட அவர்களது   பல கானங்கள் என்னை சிறை பிடித்தன. இருந்தும் அவர்களின் பாடல்களில் இருக்கும் வழக்கமான  தாளங்களும் பாரம்பரிய  இசைக் கோர்வையும் திருப்பங்களில்லாத ஒரு நீண்ட பாதையில் பயணம் செய்யும் உணர்வை எனக்குக் கொடுத்தன.

     இந்தச் சூழலில்தான்  ஒரு அதிசய வானவில் போன்று பாரம்பரியத்தின் வேர்களும் நவீனத்தின் இலைகளும் ஒரு சேரத் தோன்றும் ஒரு அற்புதச் செடியாக இளையராஜாவின் இசை எனக்குப் பரிச்சயமானது. வயல்வெளிகளில் ஓடும் ட்ராக்டர் போன்றதொரு முரண்படாத நவீனமாகவும், ஒரு தேவையான மாற்றமாகவும் அவரது இசை என்னைத் தொட்டது. வானத்தில் பறக்கும் விமானம் போலன்றி  கிராமத்துச் சாலைகளில்  ஓடும் மாட்டுவண்டியாகவும்,  சமயத்தில் அதே கிராமத்து  வயல் வெளிகளை முத்தமிட்டுச் செல்லும் ரயில்வண்டி போலவும் அவரது இசை இரட்டை  முகம்  கொண்டிருந்தது. உறவுகள் தொடர்கதை, நானே நானா யாரோதானா  போன்ற மேற்கத்திய வாசனைத் திரவியங்களும் உன்ன நம்பி நெத்தியிலே  போன்ற மண்வாசனைகளும் அவரது இசையின் வினோத சுவைகள். உதாரணத்திற்கு அன்னக்கிளி ஒன்ன தேடுதே பாடலில் வரும் அந்தத் துயரமான குயிலின் குக்கூ ஒரே நொடியில் அந்தப் பாடலை வேறு நிலைக்கு  எடுத்துச் சென்றுவிடுகிறது.  அந்த ஓசையை  நவீனமென்பதா இல்லை நிஜத்தைப் பிரதியெடுக்கும் ஒரு புதிய பாணி  என்பதா?  சுத்தச் சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் பாடலின் இயல்பான சமையலறைச்  சத்தங்கள் அப்போது  பலருக்கு வியப்பைக்  கொடுத்தன. அதைப் பற்றிப் பேசாதவர்கள் அன்றைக்கு வெகு குறைவே. பாடலின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம். அதுபோன்ற   சாதாரண எளிமையான ஓசைகள் இளையராஜாவின் இசையை  மிக வித்தியாசமாக இனம் காட்டின. தவிர அவரது பாடல்களில் ஒரு போதைச் சுவடாக வலம் வந்த  தாளம் கேட்பவரை சுண்டியிழுத்தது. அதுவரை கேட்காத மெட்டுக்கள் வயல்வெளி கீதங்கள் என அவர் இசை சுழன்றடித்தது. ஆனால் இதையெல்லாம் மீறி என் காலத்து இசைஞன் என்ற எனது சுயத்தை அடையாளப்படுத்தும் பெருமை எனக்கு இளையராஜாவின் இசை மீது இருந்தது.

      பாரம்பரியத்தை ஒட்டியே   ஓடிய இளையராஜாவின் இசை நதி துவக்கத்தில் சந்தித்தத்  தடங்கல்கள் அதிகம். அவர் இசை மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் மிகக் கடுமையானவை. இன்று அவரது ரசிகர்கள் ரஹ்மானின் மீது வைக்கும் அதே மாதிரியான குற்றச்சாட்டுகள் இளையராஜாவின் மீது அன்றைக்கு சுமத்தப்பட்டன. வார்த்தைகளை மீறிய இசை, வெறும் வயல்வெளிப்  பாடல்கள், இசையின் தூய்மையை பாழ் செய்த பறையோசை, மலிவான இசையமைப்பு  என வகைவகையான விமர்சனங்கள் எழுந்தன. மேலும் அவர் குறைந்த வாத்தியங்களைக் கொண்டு  இசை அமைத்தது பற்றியும் கேலிப் பேச்சு எழுந்தது. (ஆனால் உண்மையில் அது பாராட்டப்படவேண்டிய அம்சம் என்பது அப்போதே எனக்குத் தெரிந்திருந்தது.) எம் எஸ் விஸ்வநாதன் எங்கே நிம்மதி பாடலில் பயன்படுத்தியது  நூறு வயலின்கள் (ஒருவேளை எண்ணிக்கை தவறாக இருக்கலாம்.)  என்ற தகவலை இந்த ஒப்பீட்டில்தான் அறிந்தேன். ஆனால் அது பற்றி பெரிதாக எண்ணிக்கொள்ளவில்லை. அவரெல்லாம் பழைய ஆளுப்பா என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது.

   அன்னக்கிளிக்குப் பிறகு வந்த படங்களில் இளையராஜாவின் இசை சிறப்பாகப் பேசப்படவில்லை. பாலூட்டி வளர்த்த கிளி, உறவாடும் நெஞ்சம் என்ற படங்கள் வந்த சுவடே தெரியாமல் மறைந்துபோயின. மச்சானப் பார்த்தவரை இதில் பார்க்க முடியவில்லை போன்ற தொனியில் பிரபல வாரப் பத்திரிகைகள் இவரது இசையை கிண்டலடித்தன. இருந்தும் அவரது பாடல்கள் - நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தையில்லை, ஒரு நாள் உன்னோடு ஒருநாள் உறவினில் ஆட -அன்றைய காலத்தின் கண்ணாடியாக இன்று பரிணாமம்  அடைந்திருக்கின்றன. சொல்லத் தேவையில்லாமல் அவை இனிமையான இசைத் துளிகள்.  எனது அபிமானத்திற்குரிய பாடல்களாக அவை இன்னமும் இருக்கின்றன. மேற்கத்திய இசை மரபில் கவுண்டர் பாயிண்ட் என்று சொல்லப்படும் மெட்டுக்களின் சங்கமத்தை இளையராஜா முதல் முறையாக நான் பேச வந்தேன் பாடலின் ஹம்மிங்கில் செய்திருப்பார்.   பாலூட்டி வளர்த்த கிளி படத்தில்   அடி ஆத்திரத்தில் சாத்திரத்தை மறந்தாயோ?  என்ற  அதிகம் அறியப்படாத   பாடலொன்று   உண்டு. கேட்க நான்றாகவே இருக்கும். கொலகொலயாம்  முந்திரிக்கா (சரியாகத்தான் சொல்கிறேனா?)  என்ற பாடல்  வெளியே தெரிந்தது. சற்று கேட்கலாம்.  உறவாடும் நெஞ்சம் படத்தின் நெனச்சதெல்லாம் நடக்கபோற நேரத்தில வாடி   என் காதல் ராணி நான் தானே தேனீ என்ற பாடல் மிக ரம்மியமானது. கேட்டால்  இளையராஜா இப்படியெல்லாம் கூட இசையமைப்பு செய்தாரா என்ற கேள்வி தோன்றக்கூடிய அளவுக்கு நம்மை துவம்சம் செய்யாத இசைக் கோர்ப்பு.  அவரது   வழக்கமான அதிரடி தாளமில்லாத அதிகம் ஆர்ப்பாட்டமில்லாத மிருதுவான நாட்டுப்புற இசை. இந்தப் பாணியை அவர் எதற்காக மாற்றிக்கொண்டார் என்பது ஒரு விடையில்லாக்  கேள்வி.

    மாலை இளம் மனதில் ஆசைதனை தூவியது இளம் காலை-  இந்தப்  பாடல் அவளொரு பச்சைக் குழந்தை என்ற ஒரு காணாமல் போன படத்தில் இருக்கிறது. மற்றொரு அற்புதம். வானொலியில் இந்தப் பாடல் வந்த புதிதில் ஒன்றிரண்டு முறை கேட்டது. இளையராஜாவின் இசையில் வி குமார் சாயல் ஏகத்து இந்தப் பாடலில் தென்படும். மிக நேர்த்தியான நல்லிசை. இதே போல மற்றொரு காவிய கீதம் 77இல் வந்த சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு என்ற படத்தில் உண்டு.  ஒரு காதல் தேவதை இரு கண்கள் பூமழை என்று துவங்கும் பாடல். இசையின் போக்கு எங்கும் தறிகெட்டு ஓடாமல் நிதானமாக நடை பயிலும் ஒரு இளம்பெண் போல கேட்பவரை வசீகரிக்கும்.

   பத்ரகாளி படத்தில் இளையராஜாவின் அதிரடி கேட்டேளா அங்கே அத பாத்தேளா இங்கே  என்று வெடித்தது. சலசலக்கும் அமைதியான நதியலைகளைப் போன்ற பாடல்களைப் பாடிய சுசீலா இந்தப் பாடலைப் பாடியது குறித்து (வாங்கோன்னா அட வாங்கோன்னா) அப்போது பலர் ஆச்சரியப்பட்டார்கள். பெரும் அமளியை கிளைப்பிய இந்தப் பாடல்  ஒரு சமூகத்துக்கு பெரும் சங்கடத்தைக்  கொடுத்தது. அந்தப் பாடலையே  தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை எழுந்ததாக நினைவு. (சில வருடம் கழித்து வந்த ஓரம்போ ஓரம்போ ருக்குமணி  வண்டி வருது பாடல் தமிழ் வானொலிகளில் தடை செய்யப்பட்டது. அப்படித்   தடை செய்யப்பட்ட முதல் தமிழ்ப்  பாடல் அது என்று நினைக்கிறேன்.) இதே படத்திலுள்ள கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை என்றொரு மதுர கானம் ஒரு ஏகாந்த உணர்வுக்கு ஏற்ற உணவு. பொதுவாக காலையில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவசரகதியில் இந்தப் பாடல் திடுமென வானொலியில் ஒலிபரப்பாகும். இதைக் கேட்டாலே அந்த வெறுப்பூட்டும் பள்ளிச் சீருடையும் அந்த விருப்பமில்லாத ஓட்டமும்தான் நினைவுக்கு வரும்.  அதை சற்று ஒதுக்கிவிட்டு இந்தப் பாடலை ரசிக்க நான் பிற்பாடு கற்றுக்கொண்டேன். இளையராஜாவின் தரமான நல்லிசையின்  முத்திரைப் பாடல். ஒரு உண்மையான இசைத் தேடலுக்குப் பிறகு காலம் கடந்து நான் ரசித்த பல பாடல்களில் இதுவும் ஒன்று.  தனது தாய் பாடிய தாலாட்டுப் பாடல்களின் மெட்டில் இளையராஜா தன் ஆரம்பகால பாடல்கள் பலவற்றை அமைத்திருப்பதாக ஒரு தகவல் இருக்கிறது. இந்தப் பாடல் கூட ஒரு தாலாட்டுப்  பாடல் போன்றே துயில் கொள்ளச் செய்யும் கீதம்.

    ஒரு பாடலை அணுகுவது ஒருவரின்  ரசனையோடு அதிக தொடர்புடையது. கவிதை, குரல், இசை போன்ற அடிப்படையான இசைக் கோடுகளை இணைப்பது தாளம் என்பது என் எண்ணம். பாடல்களின் வசீகரமான தாளம் என்னை அதிகம் கவரக்கூடியது. காரணம் நான் எனது சிறு வயதில் ஒரு ட்ரம்மராக என்னையே கற்பனை செய்துகொண்டதன் விளைவாக இருக்கலாம்.  இளையராஜாவின் தாளம் ஒரு தனி ரகம். அது ஒரு புதுவிதம். கதவுகளையெல்லாம் சாத்தியபின் எதிர்பாராமல் வரும் ஒரு  திடீர் விருந்தாளியைப்  போன்று சமயங்களில் ஆச்சர்யத்தையும்  சமயங்களில் மிரட்சியையும்  கொடுக்கக்கூடியது. சம்பிரதாயமான தாளங்களில் நனைந்து கொண்டிருந்த  என் மனது இளையராஜாவின் நவீன தாளக்கட்டில் அருவியில் குளிக்கும் சிலிர்ப்பை உணர்ந்தது. உதாரணமாக கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றப் பாடல்களைப் பாருங்கள். அவற்றின் தாளங்களே அவைகளின் தனி முத்திரையாக இருப்பதை உணரலாம்.

மச்சானைப் பாத்தீங்களா- அன்னக்கிளி.
நினைவோ ஒரு பறவை- சிகப்பு ரோஜாக்கள்.
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு- இளமை ஊஞ்சலாடுகிறது.
வாழ்வே மாயமா- காயத்ரி.
தோட்டம் கொண்ட ராசாவே சூடிக்கொண்ட ராசாத்தி- பகலில் ஒரு இரவு.
உச்சி வகுடெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி- ரோசாப்பு ரவிக்கைக்காரி.
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் -முள்ளும் மலரும்.
ஆயிரம் மலர்களே மலருங்கள்- நிறம் மாறாத பூக்கள்.
மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் - கரும்பு வில்.
சின்னப்புறா ஒன்று எண்ணக் கனாவினில்- அன்பே சங்கீதா.
ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி  - தர்ம யுத்தம்.
ஆசைய காத்துல தூது விட்டு -ஜானி.

         இன்னும் பல பாடல்கள் இந்த வகையில் இருக்கின்றன. வசியம் செய்யும் இந்த மந்திரத் தாளம் இளையராஜாவின் பாடல்களுக்கு புதிய வண்ணம் பூசியது. ஒப்பீட்டளவில் அப்போது இசைக்கப்பட்டுக்கொண்டிருந்த மரபு நீட்சியான இசைக்கும் இளையராஜாவின் இசைக்கும் அதிக ஒற்றுமைகள் இருந்தாலும், சில இடங்களில் அவரது இசை நாம் பயணம் செய்யும் வாகனம் திடீரென குலுங்குவதைப் போன்று நம்மை உலுக்கி விட்டுச் செல்லும். இடையிசையிலோ அல்லது தாளக்கட்டிலோ ஒரு திடீர் சுவை ஒளிந்திருக்கும்.  திடுமென அது வெளிப்பட்டு  ஒரு ஆனந்த அதிர்ச்சியை அளித்துவிட்டு அடடா இது என்ன என்று திரும்பிப் பார்ப்பதற்குள்  நம்மை கடந்து போய்விடும்.

   இளையராஜாவின் நாட்டுப்புற இசையே அவரது முதன்மையான விலாசமாக இன்றுவரை நிலைத்திருக்கிறது. அவரது இசை பாணி நம்  நாட்டுப்புற மற்றும் மேற்கத்திய செவ்வியல் கலப்பு என்று ஒரு விதமாக அடையாளப்படுத்தப்படுகிறது. தனது முதல் படதிலேயே  அவர் இதன் வித்துக்களை நட்டாலும் அதன் பின் வந்த படங்களில் அவ்வகையான மனதை பிசையும் நாட்டார் பாடல்களை அவர் கொடுத்ததாகத்  தெரியவில்லை. பதினாறு வயதினிலே படத்தில்தான் அவர்  இந்த நாட்டார் இசை வடிவத்தை  மீட்டெடுத்தார்.  மேலும் அதை மிகச் சிறப்பாக அரங்கேற்றினார்.   இந்தப் படமே நம் மண்ணின் இசைஞன் என்ற முத்திரையையும்  மக்களின்  அங்கீகாரத்தையும் அவருக்களித்தது. ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததென்னு  பாடலாகட்டும் கிராமத்துப் பெண்களின் உற்சாகத்தைப் பிரதியெடுத்த  மஞ்ச குளிச்சு அள்ளித் தெளிச்சு பாடலாகட்டும், எழுபதுகளின் இறுதியை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த  செந்தூரப்பூவே பாடலாகட்டும் இவை அனைத்தும் நம் மண்ணின்  மரபிசையின்   வேர்களோடு ஒட்டிப்  பிணைந்த கானங்கள்.  கேட்கும் போதே பச்சை வயல்களும், தென்னத் தோப்புகளும், சலசலக்கும் ஓடைகளும், நாற்று நாடும் மாந்தர்களும் கொஞ்சம் கொஞ்சமாக உருவம் பெறும்   ஒரு கிராமிய சூழல் மனதில் சுகமாக விரிவதை உணரலாம். இளையராஜாவின் நாட்டுபுற இசையின் வடிவங்கள் அதுவரை கேட்டுக்கொண்டிருந்த அம்மாதிரியான இசையின் சாயல் கொண்டிருந்தாலும் அவரது பாடல்களில் புதைந்திருக்கும் ஏதோ ஒரு இசையிழை கேட்பவரின் நெஞ்சத்தை தனது  மண் சார்ந்த அனுபவங்களோடு நெருக்கமாக உணர வைத்ததே பலருக்கு இளையராஜா ஒரு போதை தரும் பெயராக இருப்பதன் ரகசியம் என்று தோன்றுகிறது.

    சிட்டுக்குருவி என்ற படத்தின்  அதிகம் பிரபலமடையாத உன்ன நம்பி நெத்தியிலே  பொட்டு வச்சேன் மத்தியிலே  மச்சான் என்ற கண்ணீர் கானம்  இளையராஜா ஏன் நாட்டுப்புற இசையின் நாயகனாக அடையாளப் படுத்தப்படுகிறார் என்ற கேள்விக்கான விடையை பாசாங்குகள் இல்லாமல் உணர வைத்துவிடுகின்றது. படம் வந்த புதிதில்  ஒலித்த சமயங்களில் அதிகம் நாடாத இப்பாடலை நீண்ட வருடங்கள் கழித்துக் கேட்டபோது சுசீலாவின் குரலில் தென்படும் வேதனை கையைவிட்டு அகன்று போகும் ஒரு கனவை எனக்கு நினைவூட்டியது. துயரத் தாலாட்டின் தூய்மையான வசீகரம் இந்தப்பாடல். இளையராஜா எத்தனை விதமான அல்லது எண்ணிக்கையிலான நாட்டுப்புறப்  பாடல்களை அமைத்திருந்தாலும் உன்ன நம்பி நெத்தியிலே போன்றதொரு காவிய கீதம் என்னைப் பொருத்தவரை அவர் இசையில் அதன் பின் வரவில்லை  என்பேன். பாடலின் வரிகள் மிக எளிமையானது.  ஒரு சராசரி கிராமத்துப் பெண்ணின் சிந்தனையில் உதிக்கும் எண்ணங்கள் கவிதை வரிகளாக  விரிவதும், நெஞ்சத்தைத்  தழுவும் ஈரமான இசையமைப்பும், மனதில் மீண்டும் மீண்டும் வட்டமடிக்கும் அந்த ஹான்டிங்  மெட்டும் ...துயில் கொள்ள அல்லது துயிலைத்  தொலைக்க ஏதுவான கானம்.  இளையராஜாவின் காவிய கானங்களாக நான் கருதும் பாடல்களில்  ஒன்று. சோகத்தின் ஈரத் தொடுகை. (ஒரு தகவல் இந்தப் பாடல் ஒரு நாட்டுப்புற பாடலின் அப்பட்டத் தழுவல் என்று சொல்கிறது.) இத்தனைச் சிறப்பான இந்தப் பாடலைவிட இந்தப் படத்தில் அதிகம் பிரபலமானது  என் கண்மணி உன் காதலி இள மாங்கனி  என்ற மெட்டுக்கள் மீது மெட்டுக்கள் சவாரி செய்யும் (கவுண்டர் பாயிண்ட் என்று மேற்கத்திய செவ்வியலில் வர்ணிக்கப்படும் ஒரு இசை பாணி.) பாடலே. எம் எஸ் விஸ்வநாதன் காலத்திலேயே இந்த யுக்தி தமிழ்த்திரைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது என்ற போதிலும் இந்தப் பாடலில் அது மிகவும் வெளிப்படையாகத் தெரியும்படியான அலங்காரம் கொண்டிருந்தது. ஒப்பனை அதிகம் செய்துகொண்ட ஒரு பெண் அதிகம் கவனம் பெறுவது போல. இதனாலேயே பலர் இந்தப் பாடலுக்கு அந்த முதல் மரியாதை சிறப்பைக் கொடுத்துவிடுகின்றனர். இருந்தும்  எனக்கு  தேனாம்பேட்டை  என்ற பெயரே இந்தப் பாடலை நினைவூட்டிவிடும் இன்றுவரை. சென்னைவாசிகள் இந்தப் பாடலை அப்போது மிகவும் ரசித்திருக்கலாம் என்று தோன்றுகிறது.  இந்தப் பாடல் நமக்கு ஒரு நகரப் பேருந்து ஒன்றில் பயணம் செய்யும் உணர்வை கொடுக்கும். (இளையராஜாவின் பிற்காலப் பாடல்கள் பலவும் இதுபோன்று புறநகர் சிறுநகர் பேருந்துகளில் அதிகம் ஒலிப்பதால் அவரது இசையே பேருந்து ஒன்றில் பயணிப்பது போன்ற உணர்வை அளிப்பதாக எனக்குத் தோன்றுவதுண்டு.)

    இளையராஜா பலவாறான விமர்சனங்களுக்கு உட்பட்டிருந்த தனது துவக்கக் காலத்தில் வந்த  கவிக்குயில் படத்தின் குயிலே கவிக்குயிலே யாரை எண்ணிப் பாடுகின்றாய்? பாடல் ஒரு ஆனந்த கீதம். அது போன்ற ரசனைக்குரிய சுகந்த மெட்டுக்கள் கொண்ட பாடல்கள் ஒரு ராகத்தாலாட்டு.  வெகு சொற்பமான இசைக் கருவிகளைக் கொண்டு ஒரு எளிமையான இசையை மனதுக்குள் நுழைக்கும் வித்தையை படிப்படியாக இளையராஜா மெருகேற்றிகொண்டு வந்த காலகட்டமது.   படத்தின் உயிர்நாடியான சின்னக் கண்ணன் அழைக்கிறான் பாடல் பலரை அப்போது வியப்புக்குள்ளாக்கியது. பாடலின் ராகம், அதைப் பாடியவர் என்று ஆச்சர்யங்கள் குவிந்த அற்புத கானம். சங்கீத மேதை பாலமுரளி கிருஷ்ணாவை அவர் பாடவைத்தது ஒரு இன்றியமையாத நிகழ்வு என்றே தோன்றுகிறது. இந்தப் பாடலுக்குப் பிறகே பல இசை விமர்சகர்கள் மற்றும் சில மடங்காத கழுத்து  கொண்ட சாஸ்திரீய சங்கீத அபிமானிகள் போன்றவர்களின்  பார்வை இளையராஜா பக்கம் திரும்பியது. இசை சமூகத்துப் பெருமை கொண்டோர் கூட அவரை அங்கீகரித்தது இந்தப் பாடலுக்குப் பிறகு வந்த ஒரு மாற்றம்.

           78 சுதந்திர தினத்தில்  சத்தமில்லாமல் வெளிவந்த ஒரு படம் தன் முகவரியை இழந்திருக்கவேண்டிய சூழலில் மக்களின் வாய்மொழி விளம்பரத்தால் யு டர்ன் அடித்து வெறியோடு எழுந்து சக்கைப் போடு போட்டு திரையுலக ஆரூடங்களை துவம்சம் செய்தது. அது இன்றுவரை பலரால் தமிழ் சினிமாவின் உச்சங்களில் ஒன்றாகக்  கருதப்படும் முள்ளும் மலரும் என்ற இயக்குனர் மகேந்திரனின் .முதல் படம். படத்தைப்பற்றி நான் சில எதிர்க் கருத்துக்கள் கொண்டிருந்தாலும் தமிழ் சினிமாவில்  ரியலிசம் என்ற வார்த்தைக்கான தகுதிகள் அதிகம் கொண்ட படமிது என்பதில் உறுதியாக இருக்கிறேன். பாரதிராஜாவின் 16  வயதினிலே படம் கூட ஏகப்பட்ட நாடகத்தனம் பூசப்பட்ட ஒரு பாசாங்கான திரைப் படம் என்பது என் எண்ணம். குறிப்பாக கடைசிவரை எதற்காகவும் தன் ஆளுமையை சமரசம் செய்துகொள்ளாத காளி கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் அதுவரை வந்ததாக நினைவில்லை. ஒருவிதமான அதிர்ச்சியூட்டும் கதாநாயகனை (அந்த நாள் சிவாஜிக்குப் பிறகு) அப்போதுதான் முதல் முறையாக திரையில் பார்க்க முடிந்தது.

      கொஞ்சம் படத்தை விலக்கி விட்டு பாடல்கள் பக்கம் வருவோம். பலர்  அதிகம் விரும்பிய பாடல் ஒன்று இந்தப் படத்தில் இருக்கிறது.  பல உள்ளங்களை உற்சாக ஊற்றில்  ஆழ்த்தியது இந்தப் பாடல் என்பது கூட ஒரு சாதாரண வாக்கியம். நான் சந்தித்த சிலரின்  ரிங் டோன் இந்தப் பாடலாக இருப்பதில் எனக்கு பெரிய வியப்பில்லை. ஏனெனில் இது அப்படியான ஒரு குளிரையும், சுகத்தையும் நம் மீது தெளிக்கும் ஒரு இசைக்கோலம்.  கண்ணதாசனின் வரிகள், இளையராஜாவின் நவீன மெட்டு, ஜேசுதாசின் தென்றாலாக வீசும் குரல் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா  பாடலை கேட்டதும் அதை  மனதுக்கருகே அழைத்து வந்துவிடுகின்றன. வயலினும் புல்லாங்குழலும் இத்தனை புதுமையாக இழைந்து இசை படைக்க முடியுமா என்ற பிரமிப்பை உண்டாக்கும் பாடல். இளையராஜாவின் நவீன பாணி இடையிசை பாடலை தொய்வின்றி நகர்த்திச் சென்று சரணங்களுக்குள் நம்மைப்  புதைத்துவிடும். பல பெண்கள் இந்தப் பாடல் தனக்காகவே பாடப்பட்டதைப்  போல உணர்ந்ததாக படித்திருக்கிறேன்.  இதே படத்தின் மற்றொரு நல்ல பாடல் அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை.  சிறப்பான இசையமைப்பு குதித்துக்கொண்டு ஓடும் ஒரு மானைப் போன்று தோன்றும். நித்தம் நித்தம் நெல்லுச் சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா பாடல் பெரிய வரவேற்பைப் பெற்றது.  பாடலோடு வரும் சில ஓசைகள் கேட்க இனிமையாக இருக்கும். சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கும் கருவாட்டு மனம் தூக்கலாக வீசும் அடாவடிப் பாடல். ஏறக்குறைய உன்ன நம்பி நெத்தியிலே பாடலின் சாயல் இதில் அதிகம் இருப்பதை உணரலாம்.இளையராஜாவின் இசையில் வாணிஜெயராம்  இதுபோன்ற வெகு சில பாடல்களே பாடியிருக்கிறார். இதைத் தவிர ஒரு கும்மாளப் பாடல் இதிலுண்டு. அது ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே. அப்போது இது வானொலிகளில் அதிகம் ஒலிபரப்பானது. செந்தாழம் பூவில் ஒரு தென்றல் என்றால் இது ஒரு சூறாவளி. பொதுவாக எம்மனசு தங்கம் போன்று மிகப் பாமரத்தனமான மேளம் கொட்டும் (ராமராஜன், ராஜ் கிரண் வகையறாக்களின்)  பாடல்களே இளையராஜாவின் டப்பாங்குத்து இசையின் மகுடங்களாக இன்று நினைவூட்டப்படுகின்றன. எனது பார்வையில் ராமன் ஆண்டாலும்  வெகு நேர்த்தியாக அமைக்கப்பட்ட கிராமத்துக் குதியாட்டம். இந்தப் பாடலின் அமைப்பே வித்தியாசமானது. மாமா ஒ பொண்ணக் கொடு, நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு, நம்ம மொதலாளி நல்ல மொதலாளி, ஊரு விட்டு ஊரு வந்து பாடல்கள் வரிசையில் கண்டிப்பாக இதைச் சேர்க்க முடியாது. இந்தப் பாடலின் தாளம் வினோத வடிவம் கொண்டது. வசியப்படுத்தக்கூடியது.   அடுத்த முறை இதைக் கேட்கும் போது இந்தத் தாளத்தை மட்டும் நீங்கள் கவனிப்பீர்களேயானால் நான் சொல்வதை உணர்ந்து கொள்ள முடியும். இசைக்கேற்றவாறு  வளைந்து, நின்று, தாண்டி, குதித்துச் செல்லும் அபாரமான தாளம் பாடலோடு பின்னணியில்  ஒரு வசீகர உலா வர,  அலட்சியக் குரலில் எஸ் பி பி பாட, கேட்பதற்கு போதையேறும் உணர்வைக் கொடுக்கும் கிறக்கமான கானம்.  ஒரு டப்பாங்குத்துப் பாடலை இத்தனைச்  செழுமையாக உரமேற்ற முடியுமா என்ற வியப்பு இதன் சிறப்பு. இதே  பாதையில் இளையராஜா நிறைய பாடல்கள் அமைக்காதது ஏன் என்ற வினா என்னிடம் உண்டு.  இதுபோன்ற நல்லிசையின் பிரதியாக இருந்த இளையராஜாவின் இசை பாணி பின்னாட்களில் மாறிப் போனது குறித்து எனக்கு நிறைய வருத்தங்கள் இருக்கின்றன.

        நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை பாடலை முதல் முறை வானொலியில் கேட்டபோது என்னைப் போன்ற ஒரு சிறுவனுக்கு அப்போது ஏற்பட்ட  பிரமிப்பு வெறும் வார்த்தைகளில் அடக்கிவிடமுடியாதது. ஒரு வகையான சோகம் போர்த்திய காதல் டூயட். குறிப்பாக இரண்டு இடையிசைகளிலும் ட்ரம்ஸ், ட்ரம்பெட், ஃப்ளூட்  என இந்தப் பாடல் ஆர்ப்பரிக்கும். ஒரு தரமான மேற்கத்திய விருந்து. கமலஹாசனின் குரல் பொதுவாக அவர் பாடும் பாடல்களை  பல படிகள் சடாரென கீழே தள்ளிவிடும்  வினோத தன்மை கொண்டது.  உதாரணமாக பன்னீர் புஷ்பங்களே வாழ்த்துப் பாடு  என்ற அவள் அப்படித்தான் படத்தின் அழகான பாடலை இவர் கொடூரமாக சிதைத்திருப்பார். கேட்டால் தூக்கிவாரிப் போடும்.  ஆனால் விதிவிலக்காக சில அருமையான பாடல்களை அதன் ஆன்மா கெடாமல் அவர் பாடியதும் உண்டு.  அதில் இது ஒன்று- சந்தேகமில்லாமல். இதே படத்தின்  இந்த மின்மினிக்குக் கண்ணிலொரு மின்னல் வந்தது வண்ணத்துப் பூச்சி சிறகடிப்பதைப் போன்ற மிகத் துடிப்பான கானம். இளையராஜாவின் எந்தப் பாடல்களையும்  சற்றும் விரும்பாத எனது சகோதரிகளில் ஒருவர்   என்னுடைய தொல்லையூட்டும் நச்சரிப்புக்குப் பிறகு இளையராஜாவின் இசையில் தனக்குப் பிடித்ததாகக் குறிப்பிட்டது  இந்தப் பாடலைத்தான்.  ஜானகியின் ஹம்மிங், இசை கோர்ப்பு, பாடலின் கவிதை என்று அனைத்தும் இதில் கவிபாடும்.

    விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது என்ற புவனா ஒரு கேள்விக்குறி (கதை; மகரிஷி என்ற எழுத்தாளருடையது) படப் பாடல் ஒரு மலையோரக் காற்று. வயலின் இசையோடு குரலோசை பிணைந்து கொண்டு பாடும் அழகு கேட்பதற்கு ஒரு ஏகாந்தம். வார்த்தைகள் வாயில் வராது ( தெரியாது) வெறும் ம்ம்ம் என்று சிறுவயதில் அடிக்கடி நான் ஹம் செய்த பாடல் இது. ராஜா என்பார் மந்திரி என்பார் ஒரு ராஜ்ஜியம் இல்லை ஆள என்றொரு சோகப் பாடல் இதிலுண்டு. கேட்க நன்றாகவே இருக்கும். என் நண்பர்கள் வட்டத்தில் இந்தப் பாடல்தான் வெகு பிரபலம். சோகத்தை சுகமென  பார்க்கச் சொல்லும் புரியாத தத்துவங்களை எட்டிப்பார்க்கும் வயது அப்போது.  இளையராஜாவின் ஆரம்பகாலமாக இருந்ததால் இந்தப் பாடல் பிழைத்தது. இதே பாடலை எண்பதுகளில் இளையராஜா தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான் பாணியில்   வேறு மாதிரி அமைத்திருப்பார் என்று தோன்றுகிறது.

   இதே போல சற்று சோக உணர்வுகள் பின்னிப் பிணைந்த மற்றொரு பிரம்மிப்பான பாடல் அவள் அப்படித்தான் படத்திலுள்ள உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை. இளையராஜாவின் காவிய கானங்கள் பட்டியலில் கண்டிப்பாக இருக்கும் ஒரு உயர்ந்த இசை. என்னால் மறக்க முடியாத ஒரு பாடல். பியானோ இசை உறுத்தாமல் பின்னணி பாட, ஜேசுதாசின் சோகம் தோய்ந்த குரல் பாடலை கொஞ்சம் கொஞ்சமாக நெஞ்சத்தில் தேய்க்கும். சரணம் முடிந்து பல்லவிக்கு பாடல் மாற்றம் பெறும் அந்த இடம்  கேட்க அலாதியானது.  இதுபோன்று இசை, குரல், கவிதை என அனைத்து ராகத்  தேவைகளும் ஒருசேர ஒரு அழகைப் படைப்பது இளையராஜாவிடம் அதிக எண்ணிக்கையில் இல்லை.

   மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் -  என்ற அச்சாணி படப் பாடலும் இதே உணர்வை தவறாமல் அளிக்கும் பாடல்தான். அழுகை வந்ததில்லை ஆனால் மனதை பிழியும் பாடல்.  பல வருடங்கள் கழித்து பயணங்கள் முடிவதில்லை படத்தின் மணியோசை கேட்டு எழுந்து பாடலில் இந்தப் பாடலின் நிழலைக் காண முடிந்தது.

   அவர் எனக்கே சொந்தம் படத்தின் தேவன் திருச்சபை மலர்களே ஒரு தேவாலய தாலாட்டு. கேட்ட முதல் நொடியிலேயே  என்னை அதிகம் கவர்ந்தது இந்தப் பாடல். கண்மூடி இதைக் கேட்கும் சமயங்களில் என்னுள்ளே இந்தப் பாடல் உயிர்கொடுக்கும் காட்சிகள் ஒரு இன்பமயம். இதே படத்தின் தேனில் ஆடும் ரோஜா பூந்தென்றல் ஆடக்கண்டேன்  என்ற பாடலும் அருமையான வார்ப்பில் உருவாக்கப்பட்ட  கானம். எழுபதுகளின் ஏகாந்தத்தை உணர்வுபூர்வமாக நெஞ்சத்தில் இறக்கிய இசை வடிவம்.

     ஒரு விவாதத்தைத் துவக்க விருப்பமில்லாவிட்டாலும்  இதைச் சொல்லியே ஆகவேண்டும் என்றுணர்வதால் இந்த ஒப்பீடு. சிலரது இசையமைப்பை கேட்கக் கேட்க பிடிக்கும் என்று ஒரு புதிய இசைக் கோட்பாடு தற்போது அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது. இணையம் அல்லது அதைத் தாண்டிய பொதுவெளி இரண்டிலும் இப்படியான ஒரு நவீன சிந்தனை வேரூன்றிக் கொண்டு வருகிறது. குறிப்பாக ரஹ்மானின் இசை இப்படிப்பட்டது என்றே பலர் சொல்லிவருகிறார்கள். (ஆங்கிலத்தில் Rush என்றொரு Canada நாட்டைச் சேர்ந்த இசைக்  குழுவினரின் இசையமைப்பு ஒருவிதத்தில் இம்மாதிரியானதே. ரஷ் குழுவைப் பற்றி பேச ஆரம்பித்தால் வேறு திசைக்கு பயணம் மாறும் என்பதால் அதற்கொரு  சிகப்பு விளக்கு.)   ஆனால் இளையராஜாவின் இசையில் இந்த தலையைச் சுற்றும் சங்கதிக்கே இடமில்லை. அவர் பாடல்களில் இரண்டே வகைதான் உண்டு. ஒன்று கேட்டதும் பிடித்துப் போய்விடும். இல்லை   வெறுத்துப் போய்விடும். அவ்வளவே. கேட்கக் கேட்கப் பிடிப்பதற்கான ரகசிய இழைகளை இளையராஜா தனது இசையில் ஒளித்து வைத்ததேயில்லை. இது எனக்குத் தோன்றும் எண்ணம். ஏனென்றால் என்னுடைய இளையராஜா இசை அனுபவம் இப்படிப் பட்டதே. கீழேயுள்ள பாடல்களை கவனித்தால் இதை எளிதாகப்  புரிந்துகொள்ளலாம். இன்னும் இரண்டு மூன்று முறை கேட்டுவிட்டு என் கருத்தைச் சொல்கிறேன் என்ற வசனம் இவைகளுக்குப் பொருந்தவே பொருந்தாது.

       நானே நானா யாரோதானா - மனதுக்குள் சுழன்றடிக்கும் மோகக் காற்று. வாணியின் வெள்ளிக் குரலும், இளையராஜாவின் இனிமையான குறிப்பாக இதயச் சுவர்களை மீட்டும் அந்த கிடார் இசையும் ஒருங்கே இணைந்து படைத்த ஒரு அபாரமான மேற்கத்திய வருடல். இதை ரசிக்காமலிருக்கவே முடியாது. போதை தரும் மெட்டு.

   மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் -முதல் இரவு என்ற படத்தில் வரும் இந்தப் பாடல் ஒரு ஜில்லென்ற குளிர்க் காற்று. எனக்கு பாடகர் ஜெயச்சந்திரன் என்றால் மனதில் தோன்றும் முதல் பாடல் இதுதான். அன்றைய சமயத்தில் இது ஒரு மிகப் புதுமையான இசையமைப்பு. இளையராஜா  இசையின் நவீனம் தொடர்ந்து பரவசப்படுத்தும் பரிமாணங்களை எட்டியதன் நீட்சி.

  வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை  வந்தது- சொன்னது நீதானா? படத்தின் இந்தப் பாடலும் அதே ஜெயச்சந்திரனை எனக்குள் கொண்டுவந்து சேர்த்தது. எதோ ஒரு வகையில் ஜேசுதாசின் குரலை விட ஜெயச்சந்திரனின் குரல் என்னை ஈர்த்தது. ஒருவேளை ஜேசுதாசிடம் தென்படும் சோகத்தை விட இவரது குரலின் அந்த துடிப்பான உற்சாகம் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

    அடுத்து நான்  குறிப்பிட இருக்கும்  இந்தப் பாடலை பலர் வியக்காமல் இருந்ததில்லை. அப்படியான அபூர்வப் பாடல் இது.  வந்த புதிதில் முதலில் கேட்டுவிட்ட என்  நண்பனொருவன் இந்தப்  பாடலைப் பற்றி வெகுவாகப் புகழ்ந்து பேசி எனக்குள் ஒரு தீப்பொறியை பற்றவைத்திருந்தான். சிலோன் வானொலியில் முதல் முறையாக இதைக் கேட்டதும் அந்தத்  தணல் ஒரு நெருப்பின் வடிவம் பெற்றது. அந்தப் பாடல் சின்னப் புறா ஒன்று எண்ணக் கனாவினில் வண்ணம் கெடாமல் வாழ்கின்றது. மனதைத்  தைத்த இசை. அபாரமான சரணங்கள், ஆச்சர்யப்படுத்தும் இடையிசை, ஆர்ப்பரிக்கும் தாளம் என ஒரு நவீனத்தின் அனைத்து வண்ணங்களையும் கொண்டு வரைந்த அழகோவியம். ஒரு தென்றலின் சுவடு. (மிகப்பெரிய முரணாக படத்தில் தேங்காய் சீனிவாசனும் ராதிகாவும் சேர்ந்துகொண்டு இதன் அழகை சிதைத்திருப்பார்கள். கண்டிப்பாகப்  பார்க்கக்கூடாத  பாடல்களில் இது முதன்மையானது.)  அன்பே சங்கீதா என்ற இந்தப் படத்தின் மற்றொரு அருமையான கானம் கீதா சங்கீதா சங்கீதமே சௌபாக்கியமே. தரமான நல்லிசை. பெத்தாலும் பெத்தேனடா ஒரு போக்கிரிப் பையனைத்தான் என்றொரு வேடிக்கைப் பாடலும் இதிலுண்டு. நல்லவேளையாக எண்பதுகளில் இதே இளையராஜாவிடம் காணப்பட்ட இசைச் சரிவின் சாயல்   (வாடி எ கப்பக் கிழங்கே) சற்றும் தலைகாட்டாத  நயமான பாடல்.

           மேகமே தூதாக வா அழகின் ஆராதனை  கண்ணன் ஒரு கைக்குழந்தை என்ற படத்தில் உலாவந்தது  இந்த மெல்லிசை மேகம். இள நிலவின் குளுமை வீசும் சுகம் கொண்ட பாடல். இளையராஜா மோகன், ராமராஜன் போன்றவர்களுக்கு மிகச் சிறப்பான பாடல்கள் அமைத்திருப்பதாக  பொதுவாக ஒரு கருத்து இருக்கிறது.  அவர்  நடிகர் சிவகுமாருக்கும் பல இனிமையான கீதங்களை படைத்திருக்கிறார் என்ற உண்மையை உணர்த்தும் சுவையான பாடல்.  மோக சங்கீதம் அதை கேட்க வந்தாயோ மற்றும் கண்ணன் அருகே பாடவேண்டும் காதல் கிளி நான் ஆட வேண்டும்  என்று அதிகம் பிரபலமடையாத மேலும் இரண்டு நல்ல பாடல்கள் இதில் இருக்கின்றன.

    இதேபோல கடவுள் அமைத்த மேடை படத்தில் உள்ள ஒரு அருமையான கானம் மயிலே மயிலே உன் தோகை இங்கே. ஜென்சியின் சகிக்க முடியாத குரலை சற்று மன்னித்துவிட்டால் எஸ் பி பி மிகவும் ரம்மிய உணர்வுடன் பாடியிருப்பதை ரசிக்கலாம். எனது ரேடியோ நாட்களை மெருகூட்டிய பலரது இசையைப் போலவே இதுவும் என் நினைவுகளின் மேல் பூசப்பட்ட இன்னொரு வண்ணம். மேலும் இளையராஜாவின் இசையில் பி பி ஸ்ரீனிவாஸ் பாடிய  தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு என்ற பாடல் இதில் இருக்கிறது.  சில சமயங்களில் அலங்காரத் தோரணங்களை விட வீட்டிலுள்ள கல்தூண்கள் நமது கவனத்தை கவருவதுண்டு. எளிமையான இந்த சாதாரணங்களே வாழ்கையை அதிகம் ருசியூட்டுகின்றன என்பது என் எண்ணம்.

      இளையராஜாவின் இசையில் நான் கண்ட பூங்காவனங்களும் வண்ணத்துப் பூச்சிகளும் பறவைகளும் என்னை அழைத்துச்  சென்ற இடங்கள் வண்ணமயமானவை. நறுமணமிக்கவை. சலசலப்பான ஒரு தனிமையான ஓடையின் வசீகரத்தைக் கொண்டவை. அவரது இசை ஒரு மிகப் பெரிய மாற்றத்திற்கான முதல் சுவடு. எனது பார்வையில் இளையராஜாவின் இசை ஒரு தேவைப்படும் மருந்து போன்றது.  என் மதிப்பீட்டில் அது ஒரு வகையில் மனதைப் பிழியும் ஒரு இசை அல்லது அர்த்தமில்லாத ஒரு இரைச்சல். எனவேதான் அவர் பாடல்களை ஒரு காலத்தில் நிறைய ரசித்தேன் ஒரு கட்டத்திற்குப் பின்னர்  அதே அளவு நிறைய வெறுத்தேன். அவரைப் பற்றிய எனது விமர்சனங்களைத்  தவிர்த்து இந்தப் பதிவில் நான் அவரது இசையில் ரசித்தவைகளை மட்டுமே  விவரித்திருக்கிறேன்.   என்னுடைய பால்ய தினத்து நினைவுகளில் அவரது இசைக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது.  எனது பள்ளி நாட்களின் பல மறக்கமுடியாத அனுபவங்களைச் செதுக்கிய இசை அவருடையது. இளையராஜா என்ற பெரிய இசைப் பாய்ச்சல் இல்லாத எழுபதுகளின் இறுதியை நம்மால் எண்ணிப்பார்க்க  முடியாது. அவரை வெறுப்பவர்கள் கூட அவரில்லாத காலகட்டத்தை சுகமாக கற்பனை செய்துகொள்வது இயலாத காரியம்.

   இந்த இடத்தில் ஒன்றைச் சொல்வது அவசியம் என்று படுகிறது. அது அவருடைய சாதனை பற்றியது.  இளையராஜாவின் சாதனைகள் என்று பலரும் பலவிதமான கருத்துக்களை முன்வைக்கிறார்கள். அவற்றில் பெரும்பாலும் அபத்தமான மலிவான கைத்தட்டல்களே  இருக்கின்றன. என்னைப் போன்று மிகத் தீவிரமாக அவரை நோக்குபவர்கள் இந்தப்  பாமரத்தனமான கூச்சல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. அவர் தொடர்ந்து இசை ராஜ்ஜியம் நடத்தினார், அவரது பாடல்களே தொடர்ச்சியாக வெற்றி பெற்றன  என்பதைத் தாண்டி மிக சிறுபிள்ளைத்தனமாக அவர் பெயருக்கு மக்கள் கைதட்டினார்கள் என்று ஆரம்பித்து ஒரு இசையமைப்பாளருக்கென அவருக்குத்தான் முதலில் கட்டவுட் வைத்தார்கள் என்று இளையராஜாவின் பெருமையை ஒரு பத்தடி மூங்கில் மற்றும் இருபதடி பேப்பரில் சுருக்கி விடுகிறார்கள். இளையராஜாவின் சாதனை இதுதான் என்று அவரது ரசிகர்களாகிய சிலர் சொல்லும்போது  அவரை கடுமையாக விமர்சிக்கும் நான் சொல்கிறேன் அவர் இதையெல்லாம் தாண்டியவர் என்று.

         பண்ணைபுரத்திற்கு சென்று வந்தவர் என்ற வகையில்  என் தந்தை ஒரு முறை இளையராஜா பற்றிய விவாதத்தில் சில கருத்துக்களை வீட்டில் தெரிவித்தார். அப்போது சிறுவனான எனக்கு நம்முடைய  வினோத சமூக கோட்பாடுகளும், மக்களைப் பிரிக்கும்  கீழ்த்தரமான கோடுகளும் புரியவில்லை. ஆனால் நாம் வாழும் இடத்தின் அரசியல் மற்றும் சமுதாய விழுமியங்கள் விரும்பியும் விரும்பாமலும் நம் மனதில் ஒட்டிக்கொண்ட, நமது  பால்ய பிராயத்து அறியாமைகள் நம்மை விட்டு அகன்று சென்றுவிட்ட யதார்த்தத்தில் அவர் சொன்ன கருத்தை நான் முழுமையாகப் புரிந்துகொண்டேன்.

      இசை என்னும் மக்களின் ஆதார உணர்ச்சியை , அவர்களின் வாழ்வியலின்  அடிப்படையான கலையுணர்வை, அழகுணர்ச்சியை, உயிர்நாடியை   ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளமாக மாற்றிக்கொண்டுவிட்ட அநீதியின் பின்னணியில் வாழ்வின் அடிமட்டத்தில் உழன்றுகொண்டிருக்கும் மக்களிடமிருந்து வந்த ஒருவர், அதிலும் நமது சமூகத்தின் பெருமைமிக்க பாரம்பரிய இசை தொடர்பில்லாத ஒருவர் ஆணவம் கொண்ட ஒரு சமூகத்தின் மாயையை தனது மண் சார்ந்த இசை மூலம் உடைத்து நொறுக்கிவிட்டு அவர்கள் கோலோச்சிய அந்த உயர்ந்த இடத்தில் தன் முத்திரையை தமிழிசை வரலாறு பேசுமளவுக்கு ஆழமாகவும், கேட்பவர்களின் மனதை அசைப்பதோடு மட்டுமல்லாது அவர்களின் நெஞ்சத்தை ஆக்ரமிக்கும் உன்னதமாக உருவாக்கி இசை என்னும் எல்லையற்ற மதமற்ற சாதியற்ற உணர்வை மிகையின்றி அதன் உயர்ந்த ரசனையின் வெளிப்பாடாக மாற்றி, பாமரர்களின் இசை வேட்கையை ஏளனம் செய்த ஒரு புனைவுக்கு முற்றுப்புள்ளி வைத்ததே இளையராஜாவின் மிகப் பெரிய சாதனை.

       என் தந்தை சொன்னது இதுதான்:"இவர்கள் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலையில் இவன் வந்து என்னாலும் முடியும் என்று செய்து காட்டினான் பார் அதுதான் அவன் சாதனை."

     ஆழமான கடல்களுக்கடியில் ஓடும் தண்ணீர் நூற்றாண்டுகளுக்கொரு முறைதான் கடலுக்கு மேலே வரும் என்கிறார்கள் கடல் ஆராய்ச்சியாளர்கள்.  உண்மைதான்.  இளையராஜா ஒரு விபத்தல்ல அவர் ஒரு நிகழ்வு.


   
 
         அடுத்து: இசை விரும்பிகள் XXIV-  எழுபதெண்பதுகள்: மாலை நேரத்து  வெளிச்சம்.