Sunday 4 December 2016

எம் எஸ் விஸ்வநாதன் : வசீகரக் கலைஞன்



நீராறும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும் என்ற தமிழ்ப் பண் பள்ளியில் பாடியபோது அது  கவிஞர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் கவிதை என்ற தகவல் மட்டும்தான் தெரியும். அது ஒரு சம்பிரதாயமான பாடல் என்ற எண்ணம் அப்போது மேலோங்கியிருந்தது. அந்தப் பாடலின் மெட்டு, இசையமைப்பு போன்ற சங்கதிகளைப் பற்றி அலட்டிக்கொள்ளாத பருவத்தைக் கடந்து விட்ட  பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அறிய நேர்ந்தது  தமிழ்த் தாய் வாழ்த்து என்ற அந்த இசைப் பாடலின் பின்னே இருந்த ஆளுமை எம் எஸ் விஸ்வநாதன் என்ற உண்மை. மின்சார மகரந்தத் துகள் போல அது என் மனதில் ஒட்டிக்கொண்டது. அடுத்த முறை அந்தப் பாடலைக் கேட்க நேர்ந்தபோதும் அதற்குப் பிறகேயும் அந்த மகரந்தம் சில சிலிர்ப்பலைகளையும் சின்னச் சின்ன வியப்புகளையும் உருவாக்கியபடியே இருந்தது--- இன்னும் அது தொடர்கிறது.

ஒரு முறை அந்தப் பாடல் பாடப்பட பிறகு என் நண்பர்களோடு துவங்கிய விவாதத்தில் பாடலின் இசையமைப்பு எம் எஸ் வி என நான் சொல்ல, அதை நம்ப மறுத்து  என்னுடன் வாக்குவாதம் செய்தார்கள் நண்பர்கள் சிலர். நானும் மற்றொரு நண்பரொருவரும் மட்டுமே அந்தக் கூட்டத்தில் இந்த உண்மை அறிந்திருந்தோம். மற்றவர்களுக்கு எங்கள் தகவல் ஒரு பொருட்டாகவே இல்லை. "நீயா? விட்டா ஜனகன மன பாட்டுக்கே எம் எஸ் வி தான் இசையமைச்சார்னு சொல்லுவியே?" என்ற ஏளன ஏவுகணைகள் என் மீது போனஸாக பாய்ந்தன.

ஆனால் இது எனக்கு திகைப்பாக இல்லை.  ஒருவிதத்தில் இதை நான் எதிர்பார்த்திருந்தேன். விவாதம் செய்தவர்களில் பலர் எம் எஸ் விக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்பது தவிர,  தங்கள் காலத்திற்கு முன்னாலிருந்த உலகம் குறித்த   கவலையோ அக்கறையோ இல்லாத அந்த அரைகுறை அறிவு அவர்களை அப்படித்தான் அவலட்சணமாகப் பேச வைக்கும் என்று  எனக்குத் தெரியும்.

இசையின் திசையில்  நகர்வதற்கும் அதன் ஆழங்களை நோக்கிச்  செல்வதற்கும்  அந்த இசையின் விதை நமக்குள் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இல்லையெனில் காலை நாளிதழின் நான்காம் பக்கத்தை தாண்டிச் செல்வது போன்றதொரு சுவாரஸ்வமற்ற அணுகுமுறையே  சாத்தியப்படும். அதை வைத்துக்கொண்டு அரைவேக்காட்டுத்தனமாக வீண் விவாதம் செய்யலாமே ஒழிய தீவிர கருத்தாடல்களுக்கு அது போதாது.

நான் சந்தித்த பலர் இசை பற்றி பேசுவதுண்டு. அப்படி இல்லாவிட்டாலும் எப்படியாயினும் அவர்களை இசை குறித்த உரையாடலுக்குள் கொண்டுவந்துவிடுவேன். ஆனால் ஐந்து நிமிடங்களுக்கு  மேல் அவர்களிடம் என் உரையாடலுக்கான தேடல் தொலைந்துபோய்  என் ஆர்வம் இலை மேல் படிந்த நீர் போல வடிந்துவிடும். அவர்களின் இசையறிவும், இசைத் தேர்வும், ரசனையும் என்னை மிரட்சி கொள்ளவைக்கும். உடனே "இதப் பார்றா எதோ இவனுக்குத்தான் எல்லாம் தெரியுங்கறாப்பல .." என்று உங்கள் மனதில் கோபம் கலந்த சிந்தனை துளிர்ப்பதை உணர முடிகிறது.  ஆனால் "மூணு சரணத்துக்கும் தனித்தனியா இசை போட்டவர் இவர்தான்,", "ஒரே ராகத்தில அமைச்ச பாட்டு உலகத்திலேயே இது ஒன்னுதான்,"   ",இந்தப் பாட்டில ரெண்டே ரெண்டு இசைக்கருவிதான். பிச்சு பெடலெடுத்திருப்பாரு" போன்ற மட்டித்தனமான உயர் குறிகள் கொண்ட தனிமனித துதிகள் எனக்கு அலர்ஜி.  அவர்களிடம் நியாயம் எடுபடாது. மூன்று நிமிஷங்கள் தாண்டியதும் அவர்களுடனான  உரையாடல் ஒரு சிந்தனை வறட்சிக்கு என்னை இட்டுச்சென்றுவிடும். அத்தகைய பிளா பிளா பிளாக்களை நான் ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை. செஸ் விளையாட்டில் எதிரி நம்மை விட வலிமையற்றவனாக இருக்கும் பட்சத்தில் நமக்கு தோன்றும் அலுப்பு போன்றது இது.

இருந்தும் இவ்வாறான இசை குறித்த உரையாடலில்  என்னால் தவிர்க்க முடியாத ஒரு  இசைக்கலைஞன் உண்டு. அது   எம் எஸ் விஸ்வநாதன்.  நவீன இசை குறித்து ரஹ்மான்- சந்தோஷ் நாராயணன்-அனிரூத்-கே-அரோல் கரோலி என்று விவாதம் செய்ய நேரிட்டாலுமே   எம் எஸ் வி பெயரின்றி அந்த விவாதம் முழுமை பெறாது.  இசை என்றால் அங்கே எம் எஸ் வி பற்றிய சிறு குறிப்பு இல்லாமல் பேசிச் செல்வது நடைமுறையில் எனக்கு சாத்தியமில்லை. எத்தனை நவீன வண்ணங்கள்  பூசிக்கொண்டாலும், நாட்டுப்புற மோகம் கொண்டாலும், சாதி அரசியல் போர்த்திய இசை பார்வை கொண்டாலும் உங்களால் பழைய பாடல்கள் துணையின்றி விவாதத்தை தொடர முடியாது. ஏதோ ஓரிடத்தில் விவாதத்தின் கருப்பொருள் பழைமைக்கும் புதுமைக்கும் இடையே ஒரு மர்ம முடிச்சாக தொக்கி நிற்கிறது.

    என் பார்வையில் பாடல் என்பது ஒரு மெட்டின் மீது வரையப்பட்ட ஓவியம். மெட்டின்றி அமையாது பாடல் என்பது என் கட்சி. ஆனால் பாடல் என்ற பெயரில் இன்று எந்த இலக்குமின்றி மேலும் கீழும் ஓடும் தொனிகளில், ஆணா பெண்ணா அல்லது இரண்டுக்கும் மத்தியிலா என்று கேட்பவரைக்  குழப்பும் குரலில் எதோ கிறுக்கி வைத்த தமிழ்வரிகளை எந்தவித வளைவுகள் நெளிவுகள் இல்லாமல் மேற்கத்திய பாணியில் பேசிச்  செல்வதை இன்றைய தலைமுறையினர் கொண்டாடிவரும் வேளையில், கொஞ்சம் அறுபதுகளையும் எழுபதுகளையும் திரும்பிப் பார்த்தால்   எம்  எஸ் வி உருவாக்கிய  தனித்துவம் வாய்ந்த மெட்டுக்கள் அனாசயமாக  எழும்பி நிற்பதைக் காணலாம்.  மெட்டுக்கள் மூலமாகவே இசையாகவும், குரலாகவும் அவர் பாடல்கள் பெரிய சத்தங்களில்லாமல்  சரித்திரம் படைத்தன. கைதேர்ந்த ஒரு வசியக் கலைஞனைப் போல அவரால்  ஒரே பாடலுக்கு கண நேரத்தில் பலப்பல மெட்டுக்களை உருவாக்க முடிந்தது  என்பது ஒரு அசாதாரண இசை மேதமையின்  மொழி.

     காவியத் தமிழ் மட்டுமில்லாது, மக்கள் வழக்கில் இருக்கும் பேச்சுத் தமிழ் கூட அவர் மெட்டின் வசியத்தில் "முத்துக் குளிக்க வாரீயளா?" என காவியமானது.  "அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு?" என்று சங்கீதமாக மாறியது.  அத்திக்காய் காய் காய் பாடல் கொடுத்த போதையில் எம் ஜி ஆர் சொன்ன, "எம் எஸ் வி கிட்ட ஒரு நியூஸ் பேப்பரைக்    குடுத்தாக்கூட அதுக்கும் அருமையா மெட்டு போட்டுருவான்" சற்றும் மிகையில்லாத நிஜம்.

      எழுபதுகளின் துவக்கத்திலிருந்து  என் மீது தெறித்த பல பாடல்களில் பெரும்பான்மையானவை எம் எஸ் வி படைத்த சங்கீத பெருமழையின் இசைச்சாரல்களே. ஒரு விதத்தில் எனக்கான இசையின் பாதை எம் எஸ் வியாலே அமைக்கப்பட்டது என்றே நினைக்கிறேன்.

   ஐந்தாவது படிக்கும் சிறுவனால் தங்கங்களே நாளைத் தலைவர்களே போன்ற பாடல்களைல்லாம் எவ்வாறு உவகையோடு ரசிக்க முடிந்தது? நெஞ்சத்தை அள்ளிக்கொஞ்சம் தா தா தா என்று முதலில் கேட்டபோது காதல் அறியா பருவத்தில் கூட நெஞ்சத்தில் கொஞ்சம் சிலிர்ப்பு உண்டானது ஏன்? வேறு ஒரு இசையமைப்பாளரை peer pressure பாதிப்பில் ரசித்துக்கொண்டிருந்த சமயங்களில் கூட, உதடுகளுக்குள் உறைந்துவிட்ட உண்மையை வெளியே சொல்லத் தயங்கி, திருட்டுத்தனமாக ரசித்த "வீடு வரை உறவு வீதி வரை மனைவி"  எதற்காக மனதுள் ஆர்ப்பரித்தது?  பழைய பாட்டா இருந்தாலும்  நல்லா இருக்கும் என்று "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை." பாடலுக்கு எது என்னை  ஒரு சமரசத்துடன் சான்றிதழ் வழங்க வைத்தது?

 எம் எஸ் வி அமைத்த மெட்டுக்கள்  வியப்பின் விலாசங்கள்.  ஆச்சர்யமானவைகள்.  அவரது மெட்டுக்கள் மிக மிக நுட்பமான புரிதலின் எளிமையான மொழிபெயர்ப்பு. உண்மையில் அவை மிகப் பெரிய பாராட்டுதல்களுக்கும் புகழுரைகளுக்கும் தகுதியானவை.  பாடலின் பல்லவியைக் கூட அவரால் இரு வேறு  மெட்டுக்களால் அலங்கரிக்க முடிந்தது.  சரணங்களில் அகங்காரமில்லாமல் , ஆணவமின்றி ஆழமான நதியின் அமைதியாக அவருடைய இசை மேதமை வெளிப்பட்டது. ஒரே பாடலுக்கு பலவிதமான மெட்டுக்கள் சூடி அவர் தனது பாடல்களின் தரத்தை நிர்ணயித்தார்.  அவர் இசையின் கீற்றுகள் பாடலின் போக்கையும் பாடகர்களின் குரலையும், பாடப்படும் கவிதையும் மரியாதை செய்யும் விதத்தில் ஒதுங்கியே ஒலித்தன. எம் எஸ் வி யின் பாடல்கள் அனைத்துமே அவைகள் உருவான  மெட்டுக்களின் பலத்தில் உயர்ந்து நிற்பவை. ஆடம்பரமான வெளிப்பூச்சுகள் அவர் பாடல்களுக்கு அவசியமில்லை. உதாரணத்திற்கு ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே  என்ற பாடல்.

His songs are like stars glowing from within.  Fact is, his tunes make them shine.

   அவர் இசையமைத்த பாடல்களை பட்டியலிட்டு இந்த உண்மைக்கு சிபாரிசு செய்வது அர்த்தமற்றது. அது மடத்தனம். பொன்னெழில் பூத்தது புதுவானில் போன்ற பாடல்களெல்லாம் வைர வரங்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது.    One of the most priceless tunes. 


   எம் எஸ் வி க்கு பின் வந்தவர்களுக்கு இருந்த ஒரு மகா பெரிய சிக்கல் இந்த மெட்டுக்கள்தான். அவர்களின் மேதமை இங்கேதான் பரிதாபமாக  வீழ்ந்தது. ஏனென்றால் அவர்களால் வெகு எளிதான, சம்பிரதாயமான, கொச்சையான, மிகச் சாதாரணமான மெட்டுக்களை மட்டுமே இயன்ற அளவில் கொண்டுவர முடிந்தது.  இந்தச் சிக்கலுக்கான ஒரே தீர்வு எம் எஸ் வி பாணியை முற்றிலும் சிதைப்பது. விளைவாக மெட்டுக்கள் மீதான பாடல் என்ற "பழைய" பார்முலா பின்னுக்குத் தள்ளப்பட்டு  அதீத இசை, அலங்காரமான வாத்திய ஓசைகள், கொச்சை சொற்கள் கொண்ட கவிதை என்ற  "புதிய" பாணி உருவானது.  நமது தமிழ்த் திரையிசை தளர்ந்தது அப்போதுதான்.   தானானா தானானா என்ற வறட்சியான மெட்டு ஒன்றில் இரண்டு சரணம் கொண்ட முழுப் பாடலையும் முடித்துவிடும் புதிய பாணியை வியாபாரம் செய்த  இசையமைப்பாளர்கள் மத்தியில் எம் எஸ் வி அரிதாகக் காணக் கிடைக்கும் ஒரு கறுப்பு முத்து.

   ஆனால் எம் எஸ் வி தான் வாழ்ந்த காலத்தில் தன் தகுதிக்கான அங்கீகாரமோ, பாராட்டுதல்களோ, புகழுரைகளோ கிடைக்கப் பெறாதவர். என் பார்வையில் இளையராஜா, ரஹ்மான், ஏன் சந்தோஷ் நாராயணன் போன்றோர் கூட அபிரிமிதமாக பாராட்டப்பட்டு விட்டார்கள். அவர்களை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாட ஒரு தலைமுறையே இருக்கிறது. பக்கம் பக்கமாக புகழுரைகள் எழுத நிறைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த "விபத்து" எம் எஸ் விஸ்வநாதனுக்கு நிகழவேயில்லை. இன்றைக்கு ஜெமோ எஸ்ரா மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள் இளையராஜா குறித்து புகழ் பாடுவது போல அன்றைய ஜெயகாந்தனோ, அசோகமித்திரனோ, ஏன் சுஜாதாவோ கூட எம் எஸ் வியின் இசை மேதமை குறித்து வெளிப்படையாகப் பேசாமல் தங்கள் பேனாக்களில் நிசப்தத்தை நிரப்பிக்கொண்டார்கள். இருந்தும் அவர்களுடைய எழுதப்படாத புகழுரைகள்   எம் எஸ் வியை ஒரு இழை அளவு கூட பாதிக்கவில்லை. எனக்குத் தோன்றுவதெல்லாம்  நமது அலட்சியப் போக்கு எவ்வாறு ஒரு மகா கலைஞனை மதிக்கத் தவறியது என்ற எண்ணம் மட்டுமே.

     உதாரணத்திற்கு வெண்ணிற ஆடை படத்தை ஆனந்த  விகடன் சற்று பாராட்டிவிட்டு, பாடல்கள் எதோ சுமார் என்று அப்போது விமர்சித்திருந்ததை ஒரு blog ஒன்றில் நான்கு வருடங்களுக்கு முன் படித்தபோது, கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்லவும், என்ன என்ன வார்த்தைகளோவும், அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டு பாடலும் என் நினைவில் மிளிர்ந்தன. அந்த விமர்சனம்தான் குற்றவாளிக்கூண்டில் கூனிக் குறுகி நின்றது.

     எம் எஸ் விஸ்வநாதனின் இசை ஞானம் குறித்து அன்றைய அறிவு மேதை எழுத்தாளர்கள் மௌனம் காத்தது ஒருவேளை பிராமண எதிர்ப்பின் நீட்சியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. திராவிட எழுச்சியில் உண்டான பிராமண எதிர்ப்பில் நாம் தூக்கியெறிந்த ஆவேசத்தில்  எம் எஸ் வியின் இசை ஞானம் குறித்த ஒரு நியாயமான பொதுப் பார்வை  காணாமல் போய்விட்டதாக நினைக்கிறேன். எவ்வாறு கர்நாடக சங்கீதம் ஒரு முத்திரை குத்தப்பட்டு ஓரங்கட்டப்பட்டதோ அதே போல.

   அங்கீகரிப்போ, பாராட்டோ, பட்டமோ, தனி மனித துதிகளோ , எம் எஸ் வி இது போன்ற பக்கவாத்தியங்கள் இல்லாமலே தனித்து ஆடிய கலைஞன். அவருடைய பேட்டிகளை காண நேரும்போது அவர் ஒரு ஜென் ஞானி போலவே காட்சியளிக்கிறார். பாராட்டோ நிராகரிப்போ அவரைத் தொட்டதில்லை.  அதே சமயத்தில் அவர் மற்றவர்களை பாராட்டத் தவறியதில்லை.

    இன்றைய தினத்திலிருந்து சற்றே கொஞ்சம் திரும்பிப் பார்க்கையில் நான் தமிழின் தங்க இசை காற்றில் பரவியிருந்த காலங்களைச் சேர்ந்தவன் என்ற பெருமையும்  ஒரு உயர்ந்த மேன்மையான இசையின் தாலாட்டில் வளர்ந்தவன் என்ற  உற்சாகக் களிப்பும் உண்டாகிறது. நான் எழுபதுகளைச் சேர்ந்தவன் என்ற எண்ணம் தற்போதைய சூழலில் எனக்கு ஒரு வரம் போலவே தோன்றுகிறது.

    முகம் பார்த்து, தொட்டுணர்ந்து பேசிக்கொள்ளக்கூடிய நண்பர்களும், எளிமையான பொழுதுபோக்கு உபகரணங்களும், காலை மாலைகளில் பள்ளிப் படிப்பு தாண்டி தனிப் பயிற்சி வகுப்புகள் செல்லாத எனக்கே எனக்கான தனிமை நேரங்களும், வீடே குதூகலமாகத் தோன்றச் செய்த சகோதர சகோதரி ரத்த உறவுகளின் பிணைப்புகளும், சின்னச் சின்னச் சண்டை சச்சரவுகளும், அதன் பின்னே மறைந்திருந்த  விலை மதிப்பில்லா சந்தோஷங்களும், மண்ணில் விழுந்து எழுந்து உடலில் புழுதியையும் உள்ளத்தில் புத்துணர்ச்சியையும் சூட்டிய விளையாட்டுகளும், அமெரிக்க ஆசைகள் இல்லாத ஏழைக் கனவுகளும்,.....

 பிறகு அந்த பெரிய கருப்பு வானொலியும், அது பிரசவித்த இசைப்பூக்களும்.....

  என் பால்யம் வண்ணத்துப் பூச்சியின் நிறங்கள் கொள்ள இவை மிக மிக ஆதாரமான காரணங்கள். . ஒவ்வொரு நிறத்தின் பின்னேயும் ஒரு ஆனந்தமான அனுபவம் அசைவற்று அமர்ந்திருக்கிறது. ஒரு இசைத் துளி அந்த அசைவற்ற எல்லாவற்றையும் ஒரே கனத்தில் உயிர்பெறச் செய்துவிடக் காத்திருக்கிறது.

     நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்த இசையின் வித்து என்னுள்ளில் கிளை பரப்பி படரத் தேவையான திரவத் துளிகளாக எம் எஸ் வி யின் இசை என்னுள் நிரம்பி வழிந்தது.  வழியில்  நான் பலரை ரசித்தாலும், பல சிறகுகளாக இசையின் இறக்கைகள் விரிந்தாலும்,  வியப்பு வியர்வைகளையும், திகைப்புத் தீயையும் என் மனதில் தோன்றச் செய்யும் அரிதான வெகு சிலரில் எம் எஸ் விஸ்வநாதன் ஒரு  ஆதாரமான, வசீகரக் கலைஞன்.
 







Thursday 25 August 2016

இழந்தவர்களின் இசை

                                                   We carry in our hearts the true country
                                                          And that can not be stolen
                                                    We follow in the steps of our ancestry 
                                                          And that can not be broken


                                                 
     

                                      இழந்தவர்களின் இசை  



    தங்களது சொந்த மண்ணை இழந்தவர்களின்  வரலாறு உலகெங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. தங்கள் கண் முன்னே பறிபோன தங்களின் மண் குறித்து அந்த இனம் ஒரு பாடல் பாட நேர்ந்தால் அது எப்படியான இசையாக இருக்கும்? துக்கம்? கோபம்? வலி? வெறுப்பு?

     உழவர்களின் ரத்த வேதனையை  கேட்பவர்களின் உணர்வுகளில் ஊசி போல செலுத்திய ஜான் மெலன்கேம்ப்பின் ஸ்கேர்க்ரோ போன்ற மற்றொரு பாடல் குறித்தே இந்தப் பதிவு. இதைப்  பாடியது ஆஸ்திரேலிய ராக் இசைக் குழுவான  Midnight Oil. பாடலின் பெயர் Dead Heart.

   தங்கள் வசமிருந்த தங்கள் மண் அந்நியர்களின் வருகையால் எவ்வாறு தங்களிடமிருந்து அபகரித்துக்கொள்ளப்பட்டது என்ற ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளின் எரிமலைத் துக்கத்தையும், தாங்கள் இழந்த நிலத்தின் மீது விடாது கொள்ளும் எல்லையில்லா பெருமிதமும், மிகப் பழமையான மனித இனங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஆஸ்திரேலிய அபாரிஜினல் இனத்தின் தோற்றுப்போன கோபமும் ஒரு சேர வெளிப்படும் ஒரு இனத்தின் அடையாளமாகத்  தெறிக்கும்   பாடலே  டெட் ஹார்ட்.

    1986 ஆம் ஆண்டு வெளிவந்த டீசல் அண்ட் டஸ்ட் என்ற இசைத் தொகுப்பின் பிரதான பாடலாகிய படுக்கைகள் எரிகின்றன (Beds are burning) என்ற பாடல் உண்டாக்கிய அதிர்வலைகள் ரிக்டர் அளவில் எட்டுக்கும் மேலே இருந்தாலும், அதே தொகுப்பில் இருக்கும் இறந்த இதயம் (Dead Heart)  என்ற இந்தப் பாடல் கேட்பவரை நிலைகுலையைச் செய்துவிடும் வலிமை கொண்டது.

      டெட் ஹார்ட் என்ற இந்தப் பாடல் கால ஓட்டத்தில் கரைந்து விடும், கணங்கள் தாண்டியதும் காணாது போய்விடும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான இசை கிடையாது.  இது ஒரு மன ஆழத்தின் வெளிப்பாடு. நாற்பதாயிரம்  ஆண்டுகளின் எரிமலைக் குமுறல். தனது நிலத்தை அந்நியர்களின் படையெடுப்பில் தொலைத்துவிட்ட ஒரு மண்ணின் மைந்தனின் ஆன்மாவில் புதைந்திருக்கும்  ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளான  ஆக்ரோஷம்.

   ஆனால் இந்த மகா கோபம் மட்டுமே பாடலின் நிறம் கிடையாது. பாடலுக்குள் பெருமை, சுய கர்வம், வீரம், தன்மானம், போர் மனப்பான்மை, என பல குறியீடுகள் வார்த்தைகளுக்குள்ளிருந்து மின்னல் போல வெளிப்பட்டு நம்மை திணறச் செய்கின்றன.

   குறிப்பாக  " We carry in our hears the true country"என்ற கோரஸில் இருக்கும் மந்திரத் துகள்கள் கேட்டவுடனே மனதில் ஈரக்காற்று போல ஒட்டிக்கொள்கின்றன. அடுத்த முறை அந்தக் கோரஸ் ஒலிக்கும்போது ஒரு அனிச்சை செயல் போல நாமும் அதோடு இணைந்து அந்த அபாரமான கவிதை வரிகளை முணுமுணுக்கத் துவங்கி விடுகிறோம். ஒரு இனத்தின்   பண்பாட்டு வேர்கள், கலாச்சார கர்வம் இந்தப் பாடலில் எத்தனை அழகாக வெளிப்படுகிறது என்று கேட்டுப்பாருங்கள்.


   தங்கள் நிலத்தை துண்டாட வந்திருக்கும் வெள்ளையர்களோடு  அபாரிஜினல் மக்கள் நடத்திய  யுத்தத்தின்  வீரமும் வலிமையையும்  அபார துணிச்சலும்    We don't need protection, We don't need your hand என்று பீட்டர் கரெட் பாடும் தொனியில் நமக்கு காட்சிகளாகத் தெரிகின்றன.  என்ன ஒரு மகத்தான கர்வம்!

     மிக முரணாக  இதைப்  பாடியது ஒரு ஆஸ்திரேலிய ஆபாரிஜினல் பாடகன் கிடையாது. ஆஸ்திரேலியாவில் வந்தேறிகளாக வந்திறங்கிய ஐரோப்பிய வம்சாவழியில் வந்த ஒரு வெள்ளைத் தோல் பாடகனான பீட்டர் கரெட். (Peter Garrett). எந்தவிதமான வியாபார வெற்றிகளுக்காகவோ, புகழ் என்ற போதையான பீடத்துக்காகவோ பீட்டர் கரெடின் குரல் இத்தனை வலிமையாக ஒலிக்கவில்லை.  உண்மையில் பீட்டர் கரெட் ஆஸ்திரேலிய ஆபாரிஜினல் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து தனது இசையின் மூலம் போராடி வந்த ஒரு போராளிப் பாடகன். ஆஸ்திரேலிய அரசியலில் தன்னைக் கரைத்துக்கொண்டு   மண்ணின் மைந்தர்களான அபாரிஜினல் இனத்துக்காக விடாது போராடும் ஒரு இசைப் போராளி.

   1989ஆம் வருடத்தில் மெட்றாஸ் எம் சி சியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு விடுமுறையில் வீடு சென்ற கணத்தில் இந்த கசெட்டைக் கண்டேன். கண்டதும் கேட்டேன். முதல் பாடலாக ஒலித்தது Beds Are Burning. அது ஒரு இசையதிர்வு. மிட்நைட் ஆயில் குழுவின் மிகச் சிறந்த இசைத் தொகுப்புகளில் ஒன்றான டீசல் அண்ட் டஸ்ட் என்ற அந்தத் தொகுப்பின் ஆறாவது பாடலான டெட் ஹார்ட் கேள்விகளுக்கப்பாற்பட்ட, விவாதங்களைத் தாண்டிய மிக மகத்தான கானம்.

      அதுவரை ராக் இசை என்றால் அதில் கண்டிப்பாக ஒரு தனியான  கிடார் ஆலாபனை இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் வளர்ந்துவந்திருந்தேன்.

Highway Star (Deep Purple), 
Still Loving You (Scorpion), 
Comfortably Numb (Pink Floyd), 
Prime Time (Alan Parsons Project), 
Goodbye Stranger (Supertramp), 
Sultans Of Swing (Dire Straits), 
Stairway To Heaven (Led Zep) 

   போன்ற ராக் இசையின் ஆதாரத் தூண்கள் கற்பித்த சிந்தனை அது. வெறுமனே இரண்டு வினாடிகள் லீட் கிடார் இசைத்துவிட்டு பாடலுக்குள் புகுந்துகொள்ளும் இசைக்குழுக்களை நான் ஏளனத்துடன் எட்டியே வைத்திருந்தேன்.

     ஆனால் வியப்பான வகையில் டெட் ஹார்ட் என்ற இந்தப் பாடலில் ராக் இசைக்கே உரித்தான வீறிடும் லீட் கிடார் எங்கும் கிடையாது. பாடல் முழுவதும் ஒரே தாளம் ஒரே சீரான வேகத்தில் செல்ல, வார்த்தைகளை விழுங்காத கிடார் இசை முதல் முறையாக என்னை ஆச்சர்யப்படுத்தியது.

   பாடல் இப்படி ஆரம்பிக்கிறது.

  We don't serve your country, Don't serve your king,
   Know your custom, Don't speak your tongue,
   White man came took every one.

   பாடலில் தெறிக்கும் கோபம் கேட்கும் நமக்குள்ளும் தோன்றும் விந்தையை உணர மட்டுமே முடியும். உலகில் எங்கெல்லாம் வெள்ளையர்களால் அடிமைப்பட்டவர்களின் சுவாசம் மீதமிருக்கிறதோ அங்கு இந்தப் பாடல் கண்டிப்பாக  நூற்றாண்டுகள் கடந்த ஒரு கோபத்தை உருவாக்கும்.

   White man listen to the songs we sing,
   White man came took everything

என்ற வரிகளுக்குப் பிறகு வருவது  ஒரு  அபாரமான எபிக் கோரஸ்.

     We carry in our hearts the true country
           And that can not be stolen
    We follow in the steps of our ancestry 
          And that can not be broken                                             

  இரண்டாவது முறை இதே கோரஸ் பாடப் படும்போது நம்மால் அதை வெறுமனே கேட்டுக்கொண்டிருக்க இயலாமல் பாட ஆரம்பித்துவிடுகிறோம். இந்தப் பாடலின் ஆன்மா அங்கேதான் அமிழ்ந்திருக்கிறது.  கேட்டதும் சட்டென நம்மை அது ஆட்கொண்டுவிடுகிறது.  அடுத்து நிகழ்வது இதுதான்; அடிமைப் பட்டவனின் கோபத்தை அங்கே நாம் பீட்டர் கரெட்டுடன் பிரதி எடுக்கிறோம். அளவிடமுடியாத கோபம் ஒன்றே இதன் முத்திரை. வெறுப்பல்ல. பாடகனின் இந்த உணர்ச்சித் தேர்வு ஒரு மிகுந்த பாராட்டுதலுக்குட்பட்டது.
 
   ஆஸ்திரேலிய மண்ணின் மைந்தர்கள் என்றழைக்கப்படும் அபாரிஜினல் மக்கள்  வந்தேறிகளான வெள்ளையர்களிடம்  எவ்வாறு தங்கள் சுதந்திர பூமியை இழந்தார்கள் என்பது குறித்த விழிப்புணர்வை பிரமாண்டமான அளவில் வெளியே தெரியச் செய்த பல அசைவுகளில்  மிட்நைட் ஆயில் இசைக் குழுவிற்கு மகத்தான பங்கு இருக்கிறது. இந்தக் குழுவின்  குரல் மிகுந்த வீரியம் கொண்டதாக இருந்தது. அவர்கள் வெறுமனே  காதல், ஆண்-பெண் நட்பு, புணர்வு  உணர்ச்சிகள், முதல் முத்தம் போன்ற எளிமையான கருக்களை என்றுமே பாட விரும்பியதில்லை.. அவர்களது பார்வை மிகத் தீர்க்கமான சங்கதிகளின் மீதே இருந்தது.

  சுரங்கத் தொழிலாளர்களின் கண்ணீர் துளிகள், மேற்கத்திய நாடுகளின் முகமூடி அணிந்த அமைதிப் புறாக்கள், பனிப் போரின் அவலங்கள், துப்பாக்கி ரவைகள் கொண்டு ஏகாதிபத்திய நாடுகள் எழுதும் மரணக் கவிதைகள், முதலாளித்துவத்தின் கொடூர முகங்கள் , காலனி ஆதிக்கதின் காட்டுமிராண்டித்தனங்கள் என்று அவர்களின் பாடல்கள் தொட்டுக்கொள்ளும் கருக்கள் மிக வியப்பானவைகள், மிக மிக சிக்கலானவைகள்.

   உலகப் புகழ்பெற்ற பீட்டில்ஸ் இசைக் குழு போன்று லவ் மீ டு, ப்ளீஸ் ப்ளீஸ் மீ  என சுலபமாகப் பாடிவிட்டு டாலர் டாலர்களாக கல்லா கட்டி, வித விதமாக கேமெரா முன் நின்று போஸ் கொடுத்து, மட்டித்தனமாகச் சிரித்து, பத்திரிகை அட்டைகளில் கலர் கலராக விளம்பரம் செய்யப்பட்டு, "நாங்கள் ஏசுவை விட புகழ் பெற்றுவிட்டோம்" என்று உளறிக்கொட்டி, மீடியாக்களால் புனைவாக உருவாக்கப்பட்ட புகழ் புழுதியில் சிக்கிக்கொள்ளும் வியாபார விபத்தில் மற்ற இசைக்குழுக்கள் காண்பிக்கும் அக்கறையில் ஒரு சிறிய அளவேனும் மிட்நைட் ஆயில் காண்பித்திருந்தால் அவர்களின் பெயர் பலருக்குத் தெரிந்திருக்கும். பீட்டில்ஸ் முதல் ஜஸ்டின் பீபர் வரை  பல ஆங்கில இசைக்குழுக்கள்  இந்த  அருவருப்பான, தகுதியற்ற  விளம்பர வெற்றி பெற்றவைதான்.

      இறக்கை விரித்து பறப்பதெல்லாம் பறவையானாலும், அவற்றில் பல  வெறும் காகங்களாய் கரைந்து போய்விடுகின்றன. சில மட்டுமே கழுகுகளாக உயரப் பறக்கின்றன.

 DEAD HEART by MIDNIGHT OIL (FROM THE 1986 ALBUM "DIESEL AND DUST")


We don't serve your country
Don't serve your king
Know your custom don't speak your tongue
White man came took everyone

We don't serve your country
Don't serve your king
White man listen to the songs we sing
White man came took everything

We carry in our hearts the true country
And that cannot be stolen
We follow in the steps of our ancestry
And that cannot be broken

We don't serve your country
Don't serve your king
Know your custom don't speak your tongue
White man came took everyone

We don't need protection
Don't need your hand
Keep your promise on where we stand
We will listen we'll understand

We carry in our hearts the true country
And that cannot be stolen
We follow in the steps of our ancestry
And that cannot be broken

We carry in our hearts the true country
And that cannot be stolen
We follow in the steps of our ancestry
And that cannot be broken

Mining companies, pastoral companies
Uranium companies
Collected companies
Got more right than people
Got more say than people
Forty thousand years can make a difference to the state
of things
The dead heart lives here


   









Saturday 9 July 2016

ரத்த நிலம்.


    

    Scarecrow என்ற ஆங்கில வார்த்தையை நான் அறிந்துகொண்டது John Mellencamp என்ற அமெரிக்க folk-rock பாடகனின் 'Rain On The Scarecrow' என்ற பாடலை  முதலில் கேட்ட சமயத்தில்தான்.  இது 1985 இல் வெளிவந்த Scarecrow என்ற இசைத் தொகுப்பின் தலைப்புப் பாடல். ஸ்கேர்க்ரோ என்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ்ச் சொல் பல உண்டு. பொதுவாக  இதை சோளக்காட்டு  பொம்மை அல்லது சோளக்கொள்ள பொம்மை என்றும் குறிப்பிடுவார்கள். காக்கா விரட்டி என்பது  ஸ்கேர்க்ரோவின் துல்லியத்  தமிழ் மொழிபெயர்ப்பாகத் தோன்றுகிறது.

      வயல் வெளிகளில் பழைய நைந்து போன சட்டை பேண்ட் அணிந்துகொண்டு கைகளை விரித்தபடி தொங்கிக்கொண்டிருக்கும் வைக்கோல் வைத்துத் தைக்கப்பட்ட, மனித சாயல் கொண்ட இந்தத்  திகில் உருவம் காகங்களை விட மனிதர்களைத்தான் அதிகம் பயப்படுத்தும்.  இந்த வைக்கோல் உருவத்தை வைத்துக்கொண்டு ஹாலிவுட் நிறைய பயங்கரப் படங்களை உருவாக்கியிருக்கிறது.

    இந்தப் பதிவு அவ்வகையான ஹாலிவுட் படங்கள் பற்றியதல்ல. ஸ்கேர்க்ரோவை வைத்து மனதை தைக்கும் ஒரு பாடலைக் குறித்த ஒரு பார்வை. அது மெலன்கேம்பின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்றென கருதப்படும் ரெய்ன் ஆன் தி ஸ்கேர்க்ரோ.  மிரட்சி தரக்கூடிய இந்த உருவத்தை கருப்பொருளாகக் கொண்டு ஒரு அசாதாரண, அர்த்தம் பொதிந்த ஒரு பாடலைப் படைக்க மெலன்கேம்பின் மனதில் அதே அசாதாரணமான கோபமும், அதீத வலியும், அமிழ்ந்திருக்க வேண்டும்.

   இப்போது நினைத்துப் பார்க்கையில்  ஸ்கேர்க்ரோ என்ற வார்த்தையில் ஏதோ ஒரு வசியம் இருந்தது என தெரிகிறது. அது என்னை ஈர்த்தது.  இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தால் அந்த வார்த்தையை  விட அந்தப் பாடலில் இருந்த வெட்டும் தாளமும், நீண்டு செல்லும் கிடார் இசையுமே என்னை அதிகமாக  ஈர்த்தது.  ஆவேசமாக அதிரும் இசை என்பதைத் தாண்டி மூடிய கதவுகளை அடித்துத் திறக்கும் சூறாவளி போல  நெஞ்சுக்குள் தடாலடியாக புகுந்து  கேட்டவுடன் ஒரே வீச்சில் என்னைச் சாய்த்துவிட்ட ஒரு புயல் பாடல்.

   நிலத்தில் நட்டப்பட்டிருக்கும் கம்பிவேலியைப் பற்றிக்கொண்டு ஒரு மனிதன் (Mellencamp) துயில் கொண்டிருக்கும் கனத்த துயரத்துடன்  தன் வயல்வெளியைப் பார்த்தவாறு நின்றுகொண்டிருக்கும் படம் என்னைக் கவர்ந்தது. கருப்பு வெள்ளைத் திரைப்படங்கள் போன்று அது ஒரு கிளாஸிக் போஸ்டர். வணிக சமரசங்களுக்கு உடன்படாத, அந்த இசைத்தொகுப்பின் ஆன்மாவை குறிப்பால் உணர்த்தும் ஆழமான அர்த்தம் சொல்லும் படம் அது.


     

     திருச்சியிலிருந்த ஒரு இசையகத்தில் கசெட் டு கசெட் முறையில் பதிவு செய்திருந்த பதிமூன்று பாடல்களில் ஒன்றாக இது இருந்தது. பி சைட் எனப்படும் கசெட்டின் இரண்டாம் பக்கத்தில் நான்காவதாக இது பதியப்பட்டிருந்தது. இது இத்தனை தெளிவாக என் நினைவிலிருப்பதற்கு இன்னொரு  காரணம் இருக்கிறது.  The Police என்ற பிரிட்டிஷ் இசைக் குழுவின் பிரதான பாடகரான Sting பாடிய Russians என்ற இசைக் கருவிகள் இல்லாத மிக மெதுவான (அப்போது அலுப்பான) பாடல் முடிந்ததும் அடுத்து ஒரு மகா வெடிப்பு போல துடித்துக் கொண்டு கிளம்பும் கிடாரும், திமிரும் டிரம்ஸ் இசையும் ஒரு சினிமா நாயகனின் அறிமுகக் காட்சி போன்று அதிரடியாக என் மனதில் பசுமையாக தங்கிவிட்டது. இன்றும் ரஷ்யன்ஸ் பாடல் கேட்டால் அந்தப் பாடலின் இறுதியில் scarecrow வின் திடீர்த் தாளம்  அனிச்சையாக மனதுக்குள் ஒலிக்கும்.

     பாடல் எதைப் பற்றியது என்ற சிந்தனைக்கு என் வயது தயாராகவில்லை. கேட்டவுடனே இது சாதாரண காதல் பாடல் அல்ல என்பது மட்டும் தெரிந்தது.  பாடகனின் குரலும் அவன் பாடும் பாணியும், இசையும் எனக்குப் போதுமானதாக இருந்தது. பின்னாட்களில் ஆங்கிலப் பாடல் வரிகள் கொண்ட லிரிக்ஸ் புத்தகங்கள் ஒன்றில் இதன் வரிகள் படிக்கக் கிடைத்தாலும், பெரிதாக ஈர்க்கவில்லை.-- அதாவது அப்போது. ஏதோ ஒரு அமெரிக்க ஏழை உழவன்  தனது காய்ந்து போன வெற்று நிலத்தைக் குறித்து வேதனையுடன் பாடும் பாடல் என்ற ஒற்றைக் கோடு மட்டும் இதைக் கேட்கும் கணங்களில் தோன்றுவதோடு சரி.   வார்த்தைகளுக்குள்  அதிகம் உள்ளே சென்று ஆராய்ந்ததில்லை.

   ஆனால் நம்  உழவர்களின் தற்போதைய தொடர் தற்கொலை, உழவுத் தொழில் நமது நாட்டில் அரிதாகிக் கொண்டுவரும் ஆபத்தான சூழ்நிலை, விளை நிலங்கள் விலை போய் கட்டிடங்கள் அங்கே எழும்பும் கான்கிரீட் காடுகளின் உருவாக்கம், பண முதலைகளின் அரசியல் ஆடு புலி ஆட்டத்தில் தொடர்ந்து காணாமல் போகும் விவசாய நிலங்கள், இதன் பின்னணியில் இயங்கும்  உயர்மட்ட நயவஞ்சக காய் நகர்த்தல்கள், மோசடி சத்தியங்கள் என்று பல உண்மைகள் மனதை ஆக்கிரமிக்கும் இப்போதைய நிலையில் இந்தப் பாடலைக் கேட்கும் போது  இந்தப் பாடலின் ஆன்மாவை என்னால் தொடமுடிகிறது.

   வர்த்தகமயமான தொழில் நுட்பத்தின் கோபுரமான முதல் உலக தேசமோ,, சிகப்பு பூசிக்கொண்ட இரண்டாம் உலக தேசமோ, அல்லது நாள் தோறும் வாழ்க்கையை பணயம் வைத்துப் பிழைக்கும் மூன்றாம் உலக தேசமோ எந்த நாடாக இருந்தாலும் அங்கிருக்கும் உழவர்களின் நிலையும், அவர்கள் வாழ்க்கையும் பலவிதமான கடுமையான வன்முறையின் இடையே சிக்கித் திணறி, வலி ஒன்றை மட்டுமே சுவைக்கும் யதார்த்தம்  என்பதை உணர முடிகிறது.  அதை உணரும் தருணம் இந்தப் பாடலின் எங்கோ ஒளிந்திருப்பதை நாம் அறியும்பொழுது ஒரு துளி மின்சார ரத்தம்  நம் நெஞ்சத்தில் துளிர்க்கிறது. அத்தனை ஆவேசம், அத்தனைக்  கோபம், அத்தனை  வலி, அத்தனைக்  கண்ணீர்!

  இந்தப் பாடலின் பரிமாணம் வெறுமனே டிரம்ஸ்,கிடார் என்ற ஆங்கில இசையின் இன்னொரு பாடல் என்கிற வகையில் முடிந்துவிடுவதில்லை. "இப்போது  என் பிளே லிஸ்ட்டில் இருக்கும் பாடல்" போன்ற அபத்தமான வாரந்திரத் தேர்வுக்கான பாடல் இல்லை. பஸ் அல்லது ரயில் நிலையங்களில்  காத்திருக்கும் வேளையில் "சும்மா ஒரு டைம்பாஸ்" என்று காதில் வெள்ளை பட்டன் அணிந்துகொண்டு தலையை ஆட்டிக்கொண்டு ஒரு மூன்று நிமிடங்கள் ரசித்துவிட்டுப் போகும் பாடலும்  அல்ல.   ஆங்கில இசை என்றால் வெறும் இரைச்சல் என்று போதிக்கும் சில இசை  யோகிகளின் இருளடைந்த இசை "ஞானத்தை" உடைத்து நொறுக்கும் இரும்புப் புயல் இது.

   ஒரே பாடலில் மேலன்கேம்ப் நான்கு தலைமுறைகளை நமக்கு அறிமுகம் செய்கிறான். தாத்தா முதல் பேரன் வரையான  நான்கு தலைமுறைக்கும், பாடகனின்  நிலத்திற்குமான ஆத்மார்த்தமான உறவை நம்மால் உணரமுடிகிறது.  தன் தாத்தாவின் நிலம் எப்படி தந்தையின் காலத்தில் பயிர்களால் நிரம்பியிருந்தது என்று ஒரு வரியில் உணர்த்திவிட்டு, பயிர்கள் படர்ந்திருந்த தனது விளை நிலம் தன் காலத்தில் வெறும் காய்ந்த பூமியாக இருப்பதை துயரத்துடன் இசைத்துவிட்டு, ஒரு காலத்தில் பசுமையாக இருந்த அந்த நிலத்தின் நினைவுகளை மட்டும் தனது மகனுக்கு பரிசளிக்கிறான்.

     பல குறியீடுகள் பாடலில் விதைக்கப்பட்டிருக்கின்றன. Scarecrow on the wooden cross, black bird in the barn என்ற ஆரம்ப வரிகள்  தான் இழந்த நிலம் ஒரு உழவனுக்கு ஏசுவுக்கு நிகழ்ந்த கொடூர மரணம் போன்றது என்ற குறிப்பை (மரச் சிலுவையில்  தொங்கும் வைக்கோல் பொம்மை) உணர்த்துகிறது. Rain on the Scarecrow மழையில் நனையும் அந்த வைக்கோல் பொம்மையின் மரணத்தைச்  சொல்கிறது. களஞ்சியத்தில் இருக்கும் ஒரு கரும் பறவை ஒரு அபசகுணமாக பொதுவாகப் பார்க்கப்படுகிறது. (இது தேசத்திற்கு தேசம் மாறுபடலாம்)

      Four Hundred empty acres that used to be my farm என்ற இரண்டாவது வரியில் தன்னுடைய பாரம்பரிய நிலத்தின் இழப்பை சட்டெனெ போகிற போக்கில் கோடிட்டு காட்டிவிட்டு, அங்கே வளர்ந்த பயிர்கள் போல தான் வளர்ந்ததை உணர்த்துகிறான் தொடர்ந்து. அதில் பின்னே வெடிக்கக் காத்திருக்கும் ஆவேச உணர்ச்சிகளின்  ஆரம்பங்கள் அமைதியாகத் தவழும்   அழகை நீங்கள் மீண்டும் மீண்டும் இந்தப் பாடலைக் கேட்டால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும்.  

    I grew up like my daddy did and my grandpa cleared this land 
  When I was five I walked this fence while my grandpa held my hand என்ற வரிகளில் தங்களின் பாரம்பரிய நிலம் அவர்களுக்கு எத்தனை நெருக்கமாக இருந்தது என்ற காட்சி கேட்பவருக்குள் விரிகிறது.  ஒரு சிறுவன் தனது தாத்தாவின் கரத்தைப் பற்றிக்கொண்டு நடந்துசெல்லும் அந்தக் காட்சியை மங்கலாக, வெகு தூரத்தில் என்னைவிட்டு அகன்று செல்வதை போல என்னால்  காண முடிகிறது. 

   கோரஸில் வரும் Rain on the scarecrow blood on the plow  என்ற வேதனையாகட்டும், This land fed a nation this land made me proud என்ற  இழந்துவிட்ட பெருமிதமாகட்டும், And son, I'm just sorry there's no legacy for you now என்ற விரக்தியாகட்டும் ஜான் மெலன்கேம்ப்பின் குரல் ஒரு  தீண்டும் தீயாக சுடுகின்றது. அடுத்த சரணத்தில் அந்தத் தீ  தனக்குத் தேவையான ஆக்சிஜனை அதன் இசையிலிருந்து தொடர்ந்து பெற்றுக்கொண்டே இன்னும் வேகமாக ஆக்ரோஷமாக எரிகிறது .

  The crops we grew last summer weren't enough to pay the loans என இயற்கையின் சூழ்ச்சியையும்,  Couldn't buy the seed to plant this spring and farmers' bank foreclosed என்று சுயநல அரசியலின்  நயவஞ்சக நாடகத்தின் பிரமாண்டமான பிம்பத்தின் முன்னே தான் வலுவிழந்து வீழ்ந்ததையும் நெருப்பாகப்  பாடுகிறான்.

     நிலத்தை ஏலம் எடுக்கவந்த நண்பனும், அவனுடைய சுயமுறையீடும், வெளியே ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு கைகளில் பைபிளோடு "கடவுளே என்னை சுதந்திர தேசத்திற்கு எடுத்துச் செல்லும்" என பிரார்த்திக்கும் பாடகனின் பாட்டியும் நிலத்தில் நாற்றுகளோடு பிடுங்கி எறியப்பட்ட மனித நட்புகளுக்கும்,  சிதைந்து போன மனித நம்பிக்கைகளுக்குமான குறியீடுகள்.

    இறுதி சரணத்தில் வரும் 97 சிலுவைகள் ஒரு சர்காஸ்டிக் குறியீடு.  மனித உயிர்களின் மையமான உணவின் பிம்பமான பயிர்கள் நடப்படும் நிலத்தில் 97 சிலுவைகள் நடப்பட்டிருப்பது மரணத்தை விதைக்கும் அரசியலின் கோர முகத்தைக் காட்டுகிறது. பயிர்கள் இல்லாத நிலத்தில் சிலுவைகளின் தோற்றம் பாடகனின் நெஞ்சத்தில் விதைக்கும் மரண விதைகள் அவனை அந்த நிலத்தில் காவல் இருந்தாலும்  கையறு நிலையில் இருந்த வைக்கோல் பொம்மை போல உணர வைக்கின்றது.  அவன் பாடுகிறான்:"And some nights I feel like dying like that scarecrow in the rain."     மகத்தான வரிகள்.  அதை அவன் பாடும் தொனி நம்மை உறையச் செய்கிறது.

   பாடலின் இசை நெஞ்சில் ஈரமான கண்ணாடித் துண்டுகளை விதைக்கிறது. ஆங்கில ராக் இசைக்கே உரித்தான அலறும் கிடார் இசை இங்கில்லை. இங்கே ஒலிக்கும் கிடாரின் இசை  தேவாலயத்தில் கேட்கும் நீளமான மணியோசை போன்றது.  இந்தப் பாடலில் மெலன்கேம்ப்பின் கிடார் இசை நிறைய கண்ணீர்த் துளிகளால் உருவானது. அது வெறும் வாத்திய ஓசையாக மட்டும் இந்தப் பாடலில் ஒலிக்காமல், மனதுக்குள் கதறி அழும் ஒரு கையாலாகாத அப்பாவி உழவனின் ரத்தச் சிதறலாக வெடிக்கிறது.

   பாடலின் துவக்கத்தில் ஒலிக்கும் அந்த கிடாரின் நீள் ஓசை அதோடு ஒட்டிவரும் தாளம் சட சடவென்று  வேகம் பிடித்து பின்னர் ஒரு explosion போல வெடித்ததும் கிடார் வேறு மொழி பேசுகிறது.

      ஆங்கில ராக் இசையின் தாளம் (ட்ரம்ஸ்) அலாதியானது.  அமைதியாக, அதிரடியாக, ஆக்ரோஷமாக,, சில சமயங்களில் அதிர்ச்சியூட்டும்படியாக  அது பல விதமாக வெளிப்படும். இந்தப் பாடலின் டிரம்ஸ் மிகக் கூர்மையான  மெட்டாலிக் ஓசையுடன் தெறித்து ஒலிக்கும்.  இது போன்றதொரு டிரம்ஸ் வெகு அரிதானது.  இதுவரை நான் இதே போன்ற டிரம்ஸ் இசையை கேட்டதில்லை. பாடலின் துயரமான கருவின் வடிவை சிதைக்காமல் இன்னும் பிரமாண்டமாகக் காட்டும் மந்திரத்தைச் செய்கிறது அந்த டிரம்ஸ் இசை.

   அதிலும் குறிப்பாக பாடலின் இறுதியில் பாடகன், "சில இரவுகளில் நான் சாவதைப் போல உணர்கிறேன், அந்த வைக்கோல் பொம்மை மழையில் இறந்ததைப்  போல" என்று தன் குரலை உச்ச ஸ்தாயிக்கு கொண்டு செல்லும் போது கேட்கும் ரசிகனுக்குள்ளும் ஏதோ ஒன்று  சட்டென்று உடைகிறது.

  அதன் பின்னர் தெறித்து ஒலிக்கும் டிரம்ஸ் ஓசையின் ஒவ்வொரு தாளமும் தனக்கு நேர்ந்த அநீதியின் மீது வெடிக்கும் ஆங்கார ஓசையாகவே வெளிப்படுகிறது. உலகிலுள்ள ஒவ்வொரு உழவனின் கண்ணீர்த் துளியும் இந்தப் பாடலில் இசையாக, வரியாக, குரலாக பரிணாமம் அடைகிறது.

    


Rain On The Scarecrow



Scarecrow on a wooden cross blackbird in the barn 
Four hundred empty acres that used to be my farm 
I grew up like my daddy did my grandpa cleared this land 
When I was five I walked the fence while grandpa held my hand

[Chorus]
Rain on the scarecrow blood on the plow 
This land fed a nation this land made me proud 
And son I'm just sorry there's no legacy for you now 
Rain on the scarecrow blood on the plow 
Rain on the scarecrow blood on the plow

The crops we grew last summer weren't enough to pay the loans 
Couldn't buy the seed to plant this spring and the farmers bank foreclosed 
Called my old friend schepman up to auction off the land 
He said john its just my job and I hope you understand 
Hey calling it your job ol' hoss sure don't make it right 
But if you want me to Ill say a prayer for your soul tonight 
And grandmas on the front porch swing with a 
Bible in her hand Sometimes I hear her singing take me to the promised land 
When you take away a mans dignity he cant work his fields and cows

There'll be blood on the scarecrow blood on the plow 
Blood on the scarecrow blood on the plow

Well there's ninety-seven crosses planted in the courthouse yard 
Ninety-seven families who lost ninety-seven farms 
I think about my grandpa and my neighbors and my name and some nights 
I feel like dying like that scarecrow in the rain

[Chorus]

Rain on the scarecrow blood on the plow 
This land fed a nation this land made me so proud 
And son I'm just sorry they're just memories for you now 
Rain on the scarecrow blood on the plow 
Rain on the scarecrow blood on the plow


https://www.youtube.com/watch?list=SRjohn%20mellencamp%20rain%20on%20the%20scarecrow&v=joNzRzZhR2Y


எனக்கென சொந்தமாக நிலமோ, இடமோ இல்லை. நான் ஒரு உழவனுமல்ல. இருந்தும் மேலன்கேம்பின் ஓலத்தில் என் குரலும் இணைந்திருப்பதை என்னால் உணர முடிகிறது.  

இசைக்கு மனித மொழிகள் சுவர்கள் அமைக்க முடியாது என்ற உண்மையை மீண்டுமொரு முறை நிரூபிக்கும் மற்றொரு  மகத்தான பாடல். 











Sunday 19 June 2016

திரைமுகம்



 ஒரு திரைப் படம் ஒருவரை ஈர்ப்பதன் பின்னே பல காரணிகள் இயங்குகின்றன. பெரிய அளவில் நடிகர்கள், இயக்குனர்கள், இசையமைத்தவர்கள், டீசர்கள், பெருத்துத் தெறிக்கும் பிரமாண்ட வியாபாரப் பொய்கள், விளம்பரங்கள், வாய்வழிப் பிரச்சாரங்கள், நேரத்தை கடத்தும் கணங்கள், சாகச மனோபாவங்கள்,.....

  எனக்கோ ஒன்றே ஒன்றுதான்.  படத்தின்  தலைப்பு.  அவ்வளவே. ஏனென்றால்  ஒரு  தலைப்பு என்பது அந்தத் திரைப்படத்தின்  முகம் போன்றது. அதைப் பார்த்ததும் அந்தப் படம் பற்றிய ஒரு வரைபடம் எனது கற்பனையில் உருவாகிவிடும். தலைப்பை வைத்து  படத்தின் கதையை தீர்மானிப்பதோ அல்லது படம் பார்க்கலாமா வேண்டாமா என்ற பூவா தலையா விளையாட்டோ இல்லாவிட்டாலும், தலைப்புகளின் மீது ஒரு மோகம் உண்டு. 

   நான் சந்தித்த வரை வெகு சிலரே ஒரு திரைப் படத்தின் தலைப்பைக் குறித்து சற்றேனும் சிந்தனை செய்கிறார்கள். அல்லது கவலை கொள்கிறார்கள். நான் குறிப்பிடுவது ஒரு படத்தின் தலைப்பை வைத்து படம் வெளிவரும் முன்னரே செய்யப்படும் அரசியல் பற்றியதல்ல. எப்படி ஒரு படத்தின் தலைப்பு ஒரு அழகியலின் வெளிப்பாடாக, முதிர்ச்சி பெற்ற பண்பாட்டுச் சிந்தனையின் குறியீடாக, நெஞ்சத்தில் தைக்கும் வெல்வெட் ஊசியாக, மனதில் கரையும் மயக்கமாக, அறிவு சார்ந்த மேதமையின் அடிக்கோடாக ஒரு திரைப் படத்தை அலங்கரிக்கிறது என்பதை குறித்தே நான் இங்கு பேச விழைகிறேன்.

   ஒரு படத்தின் தலைப்பு ஒரு குழந்தைக்குச் சூட்டும் பெயர் போன்றிருக்க வேண்டும்  என ஏ வி எம் நிறுவனர் மெய்யப்பச் செட்டியார் கருதியதாக  ஒரு தகவல் படித்திருக்கிறேன். ஒரு விதத்தில் அது உண்மைதான். தமிழ்த் திரையில், எனக்குத் தெரிந்தவரை, சொற்பமான சில இயக்குனர்களுக்கே இந்த வசீகரச் சிந்தனை வயப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஸ்ரீதர், கே பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்றவர்கள். கொஞ்சம் பாக்கியராஜையும்  இதில் சேர்த்துக்கொள்ளலாம். 

   மணாளனே மங்கையின் பாக்கியம், தாய் மகளுக்குக் கட்டிய தாலி, அலிபாபாவும் நாற்பது திருடர்களும், பணம், முதல் தேதி, பாசமலர், பார்த்தால் பசி தீரும் (இன்றுவரை இதன் பொருள் எனக்குப் புரியவில்லை) என அடர்த்தியான அறிவு தேவைப்படாத எளிமையான தலைப்புகளின் காலத்தில் ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் சட்டென்று கவிதை பாடுகிறது. சிவந்த மண் சற்று யோசிக்கத் தூண்டுகிறது.  பெண், பாகியலஷ்மி, சித்தி, கற்பகம் என்றால் கடந்து போகும் ஒருவன் வெண்ணிற ஆடை என்றால் கொஞ்சம் தடுமாறி நிற்கிறான். முழுவதும் காதல் காற்று வீசும் திரைக்கதைக்கு  காதலிக்க நேரமில்லை என்று ரசிகர்களை சீண்ட ஸ்ரீதரால் முடிந்தது.  உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், அழகே உன்னை ஆராதிக்கிறேன், தென்றலே என்னைத் தொடு என்று காதலை யாசிக்கும் நீளமான தலைப்புகளின் மத்தியில்    இளமை ஊஞ்சலாடுகிறது  மனதை சட்டென்று கட்டிப்பிடிக்கிறது.   நினைவெல்லாம் நித்யா என கவிதை பாட வந்த திரைப் படம் மிகக் கொடூரமாக தலைப்பை கொலை செய்தது.

       அதே சமயம் பாலச்சந்தரின் தலைப்புகள் வேறு வகை. கொஞ்சம் நமது மூளையிலுள்ள  நியூரான்களை துடிக்க வைக்கும் தலைப்புகள் அவரது பாணி. நூல்வேலி என்ற பெயரே என்னை அந்தப் படத்தைப் பார்க்கத் தூண்டியது. ஆனால் வீட்டிலோ என் அம்மா ஒரேடியாக ,"இந்தப் படமெல்லாம் உனக்குப் புரியாது. போய் பிரியா படம் பாரு" என்று திசையை மாற்றிவிட, நீண்ட வருடங்கள் கழித்து ஆறு வருடங்களுக்கு முன்பு  எதோ ஒரு சேனலில் நூல்வேலியைப்  பிடித்தேன். நீர்க்குமிழி, எதிர்நீச்சல்,அபூர்வ ராகங்கள், அரங்கேற்றம்,   (The height of sarcasm?), மூன்று முடிச்சு, சொல்லத்தான் நினைக்கிறேன் போன்ற தலைப்புகள் "படத்தோட ஹீரோ பேரையே தலைப்பா வச்சுடலாம்" என்ற மொழி வறட்சியின் மீது அடிக்கப்பட்ட ஆணிகள் என்று நினைக்கிறேன்.  தனது படத் தலைப்புகளில் கூட பாலச்சந்தர் மலர்ச்சியை கொண்டுவந்தவர்.  இரு கோடுகள் என்ற அவரது தலைப்பில் ஐன்ஸ்டீனின் relativity theory  ஒளிந்திருப்பதைக் கண்டுபிடிக்க சற்று அவகாசம் தேவை. முயன்று பாருங்கள். புரியும்.

   அவள் ஒரு தொடர்கதை படத்தின் பெயரிலேயே ஒரு புதினம் இருப்பதை உணர்கிறீர்களா?   அந்தப் படத்திற்கு கவிதா? என்று தலைப்பிட்டு படம் எடுத்திருந்தால் கூட பொருத்தமாகத்தான் இருந்திருக்கும். நல்லவேளையாக பாலச்சந்தர் கொஞ்சம், ஏன் நிறையவே என்று சொல்லலாம், உட்கார்ந்து படத்தின் தலைப்பை உருவாக்கும் இயக்குனர். தப்புத் தாளங்கள் அதன் பெயருக்காகவே அதிகம் விமர்சனம் செய்யப்பட்டது. எம் எஸ் வி  அதற்கு இசையமைக்க மறுத்ததும் படத்தின் இந்தத் தலைப்பினால்தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

       நினைத்தாலே இனிக்கும் என்றாலே இளமை ததும்பும் நினைவுகள் ஒரு நீண்ட ரயில் போல தொடர்ச்சியாக நெஞ்சத்தில் கிளை பரப்பும். நிழல் நிஜமாகிறது  இன்றும் ஒரு கவிதையின் நீட்சி போலவே ஒலிக்கிறது.

       இதேபோல அழியாத கோலங்கள் என்னை பல நாட்கள் ஆட்டுவித்தது. மூடுபனி என்ற தலைப்பு ஒரு விதமான போதை தரும்.  மூன்றாம் பிறை பற்றி நம் மக்கள் அதிகம் பேசிக்கொண்டது அந்தப் படம் வந்தபிறகே என்று நினைக்கிறேன். இதில் என் உறவின சகோதரர்கள் ஆளாளுக்கு மூன்றாம் பிறைக்கு  விஞ்ஞான விளக்கம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். பாலு மகேந்திராவிடம் எனக்கிருந்த ஈர்ப்பு இப்போது விலகிவிட்டாலும், அவருடைய தலைப்புகள் ஒரு தனிரகம்.  அதை மறுப்பதற்கில்லை.

      பாலச்சந்தர் போன்றே பாரதிராஜாவிடமும் ஒரு நல்ல தமிழ் தாகம் இருப்பதை அவருடைய படத் தலைப்புகள் தெரிவிக்கத் தவறுவதில்லை. 16 வயதினிலே துவங்கி கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், சிகப்பு ரோஜாக்கள், நிறம் மாறாத பூக்கள், நிழல்கள் என அவரது படப் பெயர்கள் நிறைய தரமான தமிழும், கொஞ்சம் கவிதை வாசமும், ஜன்னல் வைத்த ஜாக்கெட் போல  கொஞ்சமாக  (கதையை) காட்டும்  கவர்ச்சியும் கொண்டவை. அலைகள் ஓய்வதில்லை என்று பாரதிராஜா ஆரம்பித்து வைக்க  அதன் பின் அதே போன்ற இலக்கிய வாசம் எகிறி அடிக்கும் தலைப்புக்கள்  அப்போது தொடர்ச்சியாக வந்து இலக்கியம் இன்னும் வேணுமா என்று கேட்டன.  உதாரணமாக பயணங்கள் முடிவதில்லை, ராகங்கள் மாறுவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை...  இது ஆவறதில்லை  என்று சராசரி ரசிகன் விலகிப் போய்விட்டதால் விட்டார்கள். ஒரு சமூகத்தின்  பண்பாட்டுச் சித்திரங்களும், நாட்டார் மரபுகளும், மக்களின் எளிமையான வாழ்க்கை முறையும் இந்த ஒரே தலைப்பில் அமிழ்ந்திருப்பதாக நினைக்கிறேன். அது மண் வாசனை. தமிழின் மிகச் சிறந்த படத் தலைப்புகளில் ஒன்று. ஆனால் வாலிபமே வா வா என்று இதே பாரதிராஜாவுக்கு தோன்றியது ஒரு ஆபாச விபத்து.

   கடலோரக் கவிதைகள், கடல் பூக்கள் என்று சிந்திக்க கொஞ்சமாவது தமிழ்த் தேடல் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் கதாநாயகனின் பெயரைத்தாண்டி சிந்தனை ஓடாது. இல்லாவிட்டால் நல்லவன், கெட்டவன், பொல்லாதவன், வேட்டைக்காரன், படிக்காதவன் என்ற  beaten - track  ஒன்றே வழி. 

   பாரதிராஜா பள்ளியிலிருந்து வந்த பாக்கியராஜ் தன் ஆசான் போலவே சுவர் இல்லாத சித்திரங்கள், ஒரு கை ஓசை, விடியும் வரை காத்திரு, மௌன கீதங்கள் என்று நன்றாகத் துவங்கினார். தூறல் நின்னு போச்சு அதிகம் பாராட்டப்பட்ட தலைப்பாக அப்போது இருந்தது. பிறகு முந்தானை முடிச்சு என்று  சற்று தடம் மாறினார். தாவணிக் கனவுகள் என்ற சிறிய ஒத்தடம் கொடுத்துவிட்டு பின்னர் சரசரவென கீழிறங்கினார்.  சின்ன வீடு, எங்க சின்ன ராசா, இது நம்ம ஆளு (அவர் இயக்கிய படம் இல்லை என்றாலும்), ஆராரோ ஆரிரரோ, பவுனு பவுனுதான், ராசுக்குட்டி... என்று துவக்கத்தில் தன்னிடமிருந்த தரமான தமிழை தூர விரட்டினார்.  சொல்லப்போனால் நகை முரணாக பாரதிராஜா வகையறாக்கள் வந்த பின்னரே தமிழில் மகா கேவலமான படு திராபையான தலைப்புகள் சாத்தியமாயின. ஏ  வி எம்மின் சின்ன வீடு என்று விளம்பரம் வரும் என  அறுபதுகளில் யாரும் நினைத்திருக்கவே மாட்டார்கள். குழந்தைக்கு சூட்டுவது  போன்று திரைப் படங்களுக்கு பெயர் வேண்டும் என்று விரும்பிய நிறுவனம் கடந்து வந்த வணிகப் பாதையில் இந்த இடறல், சறுக்கல், தவிர்க்கமுடியாத ஒரு வியாபார சமரசம்.

      நல்ல தலைப்புகள் பற்றி பேசும் சமயத்தில் கண்ணைச் சாய்த்து கடந்து செல்ல முடியாத ஒருவர் இயக்குனர் மகேந்திரன். முள்ளும் மலரும் என்ற தலைப்பு இன்று வரை தமிழில் வந்த மிகச் சிறந்த தலைப்புகளில் ஒன்றாக சிலாகிக்கப்படுகிறது.  அந்தத் தலைப்பை சற்று நிதானமாக ஆராய்ந்தால் அதனுளில் இருக்கும் இலக்கியச் சுவையை அறியலாம். அதை நீங்கள் எப்படி உள்வாங்கினாலும் படத்தின் கதைக்கேற்றபடியே அது பொருந்துவதை நீங்கள் காணலாம். One of the most classic titles.

   நெஞ்சத்தைக் கிள்ளாதே (பின்னாட்களில் இதயத்தை திருடாதே) நண்டு (எந்த இயக்குனருக்கும் தோன்றாத ஒன்று), ஜானி என்று  மகேந்திரனும் கொஞ்சம் சறுக்கினார். இருந்தும் தமிழின் ஆகச் சிறந்த தலைப்புகளில் ஒன்றான உதிரிப்பூக்கள் அவர் பெயரை என்றும் சொல்லிக்கொண்டே இருக்கும். எனது பார்வையில் உதிரிப்பூக்கள் போன்றதொரு தலைப்பு ஒரு மகா மகா ஆச்சர்யம். காவியத் தலைப்பு. இதற்கு சற்றேனும் இலக்கியப் பரிச்சயம் அவசியம். புதுமைப் பித்தனின் சின்னம்மா (என்று நினைக்கிறேன்) உதிரிப்பூக்களாக மலர நிறைய வாசிப்பும் நிறைய யோசிப்பும் கண்டிப்பாகத் தேவை. மகேந்திரனிடம் அவை இரண்டுமே இருந்தன என்று தெரிகிறது.  கை கொடுக்கும் கை, கண்ணுக்கு மை எழுத்து, ஊர் பஞ்சாயத்து என்று தமிழ் சினிமாவின் சாபத்திலிருந்து மகேந்திரனும் தப்பவில்லை.  இறுதியாக சாசனம் என்று கொஞ்சமாக அந்தப் பழைய மகேந்திரனை காண முடிந்தது. பிறகு தெறி என்ற வணிக அபத்தத்தில் தோன்றி காணாமல் போனார்.   தமிழின் மிகச் சிறந்த ஒரு படைப்பாளி இன்றைய வணிக வெற்றியின் குறியீடான  விஜய் போன்றவர்களின் வில்லனாக நடிக்க வேண்டியது ஒரு  துர்பாக்கியம். இன்றைய தலைமுறை இனி அவரை இப்படித்தான்   பார்க்கும் என்று கவலையாக இருக்கிறது.

  ஒரு தலை ராகம் என்று படம் எடுத்த ராஜேந்தர் பின்னர் ரயில் பயணங்களில், வசந்த அழைப்புகள், நெஞ்சில் ஒரு ராகம்,(நெஞ்சில் ஓர் ஆலயம் பாதிப்பு) ராகம் தேடும் பல்லவி என்று வெற்றிக் கனி சுவைக்காமல் பின்னர் தடாலடியாக உயிருள்ளவரை உஷா வென லோக்கல் பாணியில் இறங்கி வர சூடு பிடித்தது அவருடைய சினிமா. இதற்கிடையில்  பன்னீர் புஷ்பங்கள், பாலைவனச் சோலை, நெஞ்சமெல்லாம் நீயே என்று தமிழ் சினிமாவுக்கு சற்று ஆக்சிஜன் செலுத்தப்பட, அதுவுமே கொஞ்ச காலமே.

    உச்ச கட்டம் என்று ராஜ் பரத் என்பவர் ஒரு திர்ல்லர் கொடுக்க, தொடர்ந்தது அவருடைய  கவிதை சொட்டும் தலைப்புக்கள் சொல்லாதே யாரும் கேட்டால், சின்ன முள் பெரிய முள் பின்னர் தொட்டால் சுடும் என விரிய  நான்கே படங்களில்  தனது அடையாளம் இழந்தார்.

     தமிழ் சினிமாவின் தலைப்புகள் இன்றைய தேதியில் தனது சுயத்தை இழந்து விட்ட ஒரு விலாசம். மீண்டும் திருவிளையாடலும் மர்ம யோகியும், பில்லாவும், தசாவதாரமும், தில்லு முல்லுவும் தோன்றிக்கொண்டே இருக்கும் கற்பனை வறட்சியின் நீட்சி.

   தமிழுக்கு புதிய ரத்தம் செலுத்திய மணிரத்னம் தனது படங்களுக்கு அவ்வளவாக சிரத்தையுடன் தலைப்புகள் வைப்பதில்லை என்று நான் நினைக்கக் காரணம் (பகல் நிலவு, அக்னி நட்சத்திரம்,தவிர), நாயகன், இதயத்தை திருடாதே, தளபதி, அஞ்சலி, ரோஜா, திருடா திருடா, கன்னத்தில் முத்தமிட்டால் (இதற்கு என்ன அர்த்தம் என்று அவருக்காவது தெரியுமா) கடல், ராவணன், காதல் கண்மணி போன்ற மிக மலிவான அபத்தமான தலைப்புகள்தான். கொஞ்சமும் நேரம் செலவழிக்க விரும்பாமல் எதோ ஒரு சொல்லை  படத்தின் தலைப்பாக வைப்பதிலிருந்து மணிரத்னம் இன்னமும் மீளவில்லை. இருவர் என்ற தலைப்பில் ஒரு காவியத் தொடுகை இருந்ததை இப்போது சற்று எண்ணிக்கொள்கிறேன். பம்பாய், உயிரே படங்களுக்கு அந்தத் தலைப்புகள் மிகப் பெரிய அவமானம்.

     எம் எஸ் வி எண்பதுகளில் ஒரு திரைப்படம் தயாரித்தார். படத்தின் பெயர் என்னை மிகவும் வேதனைப் படுத்தியது. அது சில்க் சில்க் சில்க்... நான் மிகவும் மதிக்கும் நபர் எம் எஸ் வி என்பதற்காக அவருடைய இந்தத் தேர்வை நான் நியாயப்படுத்தி எனது  வார்த்தைகளை விரயம் செய்ய மாட்டேன்.  மிக மிக மோசமான தலைப்பு. படம் ஊற்றிக்கொண்டதால் எம் எஸ் வி வியாபார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டார் என்று பின்னர் அறிந்தேன். எப்படி எம் எஸ் வி போன்ற இசையின் அதிசயங்கள் நடைமுறை வாழ்க்கையின் நிர்ப்பந்தங்களுக்கு அடிமையாகிறார்கள் என்பது விஷம் தரும் வலி. இடறல் இல்லாமல் நடை பயில முடியாது என்ற உலக உண்மை ஒன்றே இதற்கான வலி நிவாரணி.

    நாயகனின் பெயரோ. அவனுடைய குணாதிசயங்களில் ஒன்றோ, அவன் புகழ் பாடும் எதோ ஒரு கண்றாவியோ,  பேச்சு வழக்கு சொற்களோ, கொச்சை வார்த்தைகளோ தலைப்புகளாக மாறுவதில் இருக்கும் வசதியும் விரைவும் அற்புதமான தமிழ் சொற்கள் மீண்டும் வருவதை தடை செய்வதாக உணர்கிறேன். கண்ணியமான தலைப்புகளும், தரமான கவிதை கொண்ட பாடல்களும் இப்போதைய மிகத் தீவிரத் தேவை.   இல்லையென்றால் போடா போடி, தெறி, தெனாவெட்டு, மங்காத்தா போன்ற அருவருப்புகளும், ராசா ரோசா, மானே தேனே, ராஜா கூஜா, பூவு நீவு, எசப்பாட்டு நிப்பாட்டு போன்ற கருமாந்திரங்களும் மறுபடி படையெடுக்கும் ஆபத்து  அடுத்து நிகழக் காத்திருக்கிறது. இளையராஜா காலம் முடிந்து விட்டதால் நமது தமிழ்ப் பாடல்களுக்கு இனி அவ்வகையான சித்ரவதைகளும், கொடூரங்களும் நடக்கப்போவதில்லை என்றாலுமே அவர் துவக்கி வைத்த "அந்தத் திருப்பணியை" தொடர்ந்து செய்ய யாரேனும் முயலக்கூடிய வாய்ப்பு இன்னுமிருக்கிறது.

     இன்றைய தரை லோக்கல் சூழலில் (முத்தின கத்தரிக்கா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, நாங்கல்லாம் அப்பவே அப்படி, மிளகா, இன்ன பிற அவஸ்தையான பெயர்கள்..) இன்னும் சற்றேனும் தமிழ்த் தனம் குறையாமல், ஒரு சதவிகிதமாவது கவிதை புனைந்த வார்த்தைகளோடு தனது படங்களுக்குப் பெயர் சூட்டும் ஒரே இயக்குனர் கௌதம் மேனன் ஒருவரே. மின்னலே, காக்க காக்க, போன்ற இரண்டு சமரசங்களை தள்ளி வைத்துவிட்டால், பின்னர் நமக்குக் கிடைப்பது ஒரு நல்ல தமிழ் கொண்ட தலைப்புகள். வாரணம் ஆயிரம், நீதானே என் பொன் வசந்தம், வேட்டையாடு விளையாடு, நடுநிசி நாய்கள், விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, என்னை அறிந்தால்  (நல்ல கவிதை வரியை தன் படத் தலைப்பாக தேர்ந்தெடுப்பது ஒரு விதத்தில் வரவேற்கப்படவேண்டிய முயற்சி.) என்னை நோக்கிப் பாயும் தோட்டா போன்ற தலைப்புகள்  நல்ல தமிழ் நோக்கி நமது திரையுலகம் நகர்வதின் அடையாளமாகத் தோன்றுகிறது.

      தனிப்பட்ட விதத்தில் தமிழின் மிகச் சிறந்த தலைப்புகள் எவை என்ற கேள்வி என்னை நோக்கிப் பாய்ந்தால் எனது பதில்;

மண் வாசனை, 
நூல்வேலி, 
உதிரிப்பூக்கள்......

   ஒரு கவிதையின் கடைசி வரி போன்ற தலைப்புகள் தமிழ்த் திரையில் மீண்டும் வரும் என்ற நம்பிக்கை இன்னும் என்னிடமிருக்கிறது.

   









தொடர்வது ; இசையுதிர்காலம் இரண்டு 

Thursday 2 June 2016

வவ்வாலின் வருகைக்காக .....

இணைய நட்பு என்பது ஒரு விதத்தில் ரயில் சிநேகிதம் போன்றது. ஆத்மார்த்தமான நட்பு இதில் ஒரு அதிசயம்.  தாமரை இலைத் தண்ணீர்த் துளி போல இணையத்தில் நாம் இணைந்திருந்தாலும் சில விதிவிலக்குகள் நேர்வதுண்டு.

நான் பதிவுகள் எழுதும் முன் இணையத்தில் சந்தித்த பலரில் இருவர் முதன்மையானவர்கள்.  முதல் நபர்  திரு அமுதவன். நான் எழுதவேண்டும் என்ற உள் சிந்தனையை உருவாக்கியது அவரது எழுத்து. இரண்டாவது நபர் வவ்வால். நான் பொறாமை கொண்ட பதிவர்.

வவ்வாலுக்கும் எனக்குமான இணையத் தொடர்பு ஒரு முட்டலில் உருவானது. துவக்கத்தில் இணையத்தில் ஆங்கிலப் பாடல்களை தேடித் தேடி தரவிறக்கம் செய்த காலங்களில் நான் அதிகம் தமிழ்ப் பதிவுகளை வாசித்ததில்லை. அப்படி வாசித்த சில பதிவுகளும் வெற்று எழுத்து கொண்ட வெறும் சக்கைகளாக இருந்தன. அது என் தேடலின் குறை என்று இப்பொழுது அறிகிறேன்.

இதற்கிடையில் சமுத்ரா என்பவரின் வார்த்தைகளிலிருந்து மௌனத்திற்கு என்ற வலைப்பூவில் ஒரு குறிப்பிட்ட பதிவில் நான் அந்தப் பதிவரின் எழுத்து நடை குறித்து "இது சுஜாதாவின் பாணி போல தெரிகிறது" என்று எழுத, அவருக்கு கடும் கோபம் வந்துவிட்டது. எனக்குப் பதிலளிக்கும் ஆவேசம் அவரை "சுஜாதா எனக்கு முன்னே வந்துவிட்டார். அவ்வளவுதான் வித்தியாசம்" என்று எழுதுமளவுக்கு விரைவாக செலுத்திவிட்டது. இந்த பின்னூட்ட கைகலப்பில் வவ்வால் சேர்ந்துகொண்டார். பதிவர் சொன்னதை ஆமோதித்த அவர் "காரிகன் என்ற பெயர் நான் சிறு வயதில் படித்த ஒரு காமிக்ஸ் கதாநாயகனின் பெயர். அவர் அப்படித்தான் எழுதுவார் போலும்". என்று தனது டிரேட் மார்க் நையாண்டியுடன் அவர் குறிப்பிட, நான் வவ்வாலுக்கு "உங்கள் பெயரில் கூட தலைகீழாக தொங்கும் ஒரு வினோத ஜந்து உள்ளது" என தெரிவிக்க அங்கே  நிகழ்ந்து முடிந்தது எங்களது முதல் சந்திப்பு.

அந்த முழு பதிவுக்குமான இணையத் தொடர்பை கீழே கொடுத்துள்ளேன். திரு. சமுத்ரா உண்மையில் மிகத் திறமையான எழுத்தாளர். சுஜாதா பாணியிலிருந்து மீள முடியாவிட்டாலும் அவர் எழுதும் அறிவியல், இன்றைய இணையத்  தமிழுக்கு மிக அவசியமான ஒன்று என்று நினைக்கிறேன்.

 http://samudrasukhi.blogspot.in/2012/03/blog-post.html


பின்னூட்டங்களிலேயே எனது பொழுது கழிந்த வருடங்களில் அடிக்கடி இணையத்தில் பலருடன் முரண்படுவது எனக்கு நேர்ந்த ஒரு பொழுதுபோக்குச் சுமை. இரா பதிவர்களுடன் முட்டி மோதிய தருணங்கள் நிறையவே உண்டு.

பின்னொரு தளத்தில் உலக சினிமா ரசிகன் என்பவர் கமலின் ஹே ராம் பற்றி ஏதோ மாடர்ன் ஆர்ட் ஒன்றை விவரிப்பதுபோல frame by frame சிலாகித்து எழுத, பொறுமை உடைந்துபோன  எனது விரல்கள் அங்கே மற்றொரு உரசலை உருவாக்கின. அது ஒரு மிகக் கடுமையான விவாதமாக தொடர்ந்து கொண்டிருக்க, இடையில் அவரோ என்னை சினிமா தொடர்புடைய வேறு யாரோ என்று கற்பனை செய்துகொண்டு ஆக்ரோஷமான வார்த்தைப் போரில் ஈடுபட, நானும் ஏவுகணைகள் அனுப்ப, விவாதம் வேறு தளங்களுக்கும் பரவியது. அதையும் அவரே செய்துமுடிக்க இரண்டாம் முறை நான் வவ்வாலை உலக சினிமா ரசிகனின் தளத்தில் சந்திக்க சேர்ந்தது. இந்தமுறை வவ்வால் ஒரு திடீர் அதிசயமாக என் சார்பாக ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தார். "காரிகன் ஒருவரின் பெயரை வைத்தே அவரை அறிந்துவிடக்கூடியவர்"  என்று எனக்கே தெரியாத உளவியலை வெளிப்படுத்தி என்னை ஆச்சர்யப்படுத்தி," ஹே ராம் படத்தில் எங்கெல்லாம் கமல் குறியீடுகளை பயன்படுத்தியிருக்கிறார் என்று தெளிவாக மற்றொரு பதிவு எழுதினால் நான் எங்கே அவைகளை கவனிக்கத் தவறினேன் என்பதை அறிய வசதியாக இருக்கும்" என்று அதிரடியாக சொல்ல, உலக சினிமா ரசிகன்,"சரிதான். ஏழரை உச்சத்தில் இருக்கிறது போல" என விலகிச் சென்றுவிட்டார்.  (இப்போது அந்தப் பதிவை காணவில்லை. உலக சினிமா ரசிகன் என்னைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.)

வவ்வாலின் பின்னூட்டங்கள் அதிரடியானவை, அவை அதிகம்  ஆர்ப்பாட்டம் மிகுந்த  தெளிவான நக்கல், நையாண்டி கலந்த  சொற்களோடு வரும் ஒரு கலவரக் கதம்பம். வரிக்கு வரி சுவாரஸ்வம் தெறிக்கும். வவ்வாலின் forte அதுதான். அவரால் வெகு எளிதாக கலோக்கியல் சொற்களோடு  வாதம் செய்ய முடியும். அதேவேளையில் சடாரென எதிர்பாரா வளைவில் திரும்பி புத்தகத் தமிழில் உரைநடை பாணியில் தரமான தர்க்கம் புரியவும் முடியும். வாதம் என்று வந்துவிட்டால் இடையில் I quit என்று சீட்டுக்களைக் கலைத்துபோடும் முட்டாள்தனமான தற்காப்பு நாடகத்தனமோ, அல்லது விவாதத்தில் பாதியில் கரைந்துபோகும் கோழைத்தனமோ கொஞ்சமும் இல்லாத இறுதி வரை நின்று தன் மீது ஏவப்படும் ஏவுகணைகளுக்கு ஸ்கட் மிஸைல் அனுப்பும் அயராத ஆளுமை கொண்டவர். தனது எழுத்தில் எந்த இடத்திலும் சோர்வையோ அலுப்பையோ அல்லது வெறும் சம்பிரதாயமான கை குலுக்கல் செயற்கை பிம்பங்களோ தலை காட்டவிடாமல், அவர்  எழுதும் வார்த்தைகள் அனைத்தும் அவர் மனதிலிருந்து வெளிப்படும் உணர்வுகளாகவே இருக்கும்.

அவரது பதிவுகள் மிக நீண்டவை. பல இணையத் தொடர்புகள் சூழப்பட்ட ஆழமான கட்டுரைகள் எழுதுவது வவ்வாலின் பாணி. சில சமயங்களில் சற்றே அலுப்பூட்டினாலும்  பல விஷேச தகவல்களை அங்கங்கே அடிக்கோடிட்டு காண்பித்துச்  செல்லும் அவர் எழுத்து.  ஒரு கலைடாஸ்கோப் ஒவ்வொரு அசைவுக்கும் வினோத அழகாக உருமாறுவதைப் போன்ற  வசீகரம் மிக்க கட்டுரைகள் எழுதுவது வவ்வாலின் சிறப்பு.

அவருடைய பின்னூட்டங்களை தொடர்ந்து வாசித்து வந்த எனக்கு என் பதிவு ஒன்றில் அவரது திடீர் வருகை ஒரு வசந்தம் போல உவகை அளித்து, திகைப்பில் திக்குமுக்காட வைத்தது. அது நிற்காத மழை என்ற தலைப்பில் நான் எம் எஸ் வி பற்றி எழுதிய பதிவு.

http://kaarigan-vaarththaiviruppam.blogspot.in/2013/05/vi-65.html

அதன் பின்னர் தொடர்ச்சியாக நான்கைந்து பதிவுகளில் அவர் வருகை இருந்தது.  எதிர்பார்த்த சில பதிவுகளில் அவர் தோன்றுவதில்லை. என் வலைப்பூ பக்கம் வராவிட்டாலும் நான் அவரைத் தொடர்ந்தபடியே இருந்தேன். இடையில் நண்பர் வருண், நண்பர் ஜெயதேவ் தாஸ், வவ்வால் மூவருக்குமிடையில் ஒரு சிறிய புள்ளியில் ஒரு விவாதம் தோன்றி அது கன்னாபின்னாவென்று காட்டுத்தீ போல உக்கிரமாக கொழுந்துவிட்டு எரியத் துவங்க அமுதவன் அவர்கள்  தனது தளத்தில் பதிவர்களே உங்கள் சண்டையை நிறுத்துங்கள் என்று ஒரு பதிவே எழுதுமளவுக்கு தகித்தது.

நான் இறுதியாக வவ்வாலின் பின்னூட்டத்தை கண்டது  இந்த களேபரங்களுக்குப் பிறகு  நண்பர் ஜெயதேவ் தாஸ் பதிவு ஒன்றில்தான். அதன் பின் வவ்வால் ஒரு மர்மம் என எனக்குத்  தெரிய ஆரம்பித்தது. நெய்வேலி புத்தகத்  திருவிழா பற்றிய அவரது பதிவே இன்று அவரது இறுதிப் பதிவாக இணையத்தில் இருக்கிறது.

இணையத்தை விட்டு திடுமென அகன்று விட்ட வவ்வால் ஒரு மகா ஆச்சர்யமானவர். அவரது பாராட்டில் ஒரு ஆத்மார்த்தமான தோழமையைக் கண்டேன். ஒருமுறை வலைச்சரத்தில் என் வலைப்பூ அறிமுகம் செய்யப்பட்டபோது  அவர் என்னைக் குறித்து எழுதிய பின்னூட்டத்தில் அவரது அன்பு வெறும் டிஜிடல் சங்கதி  கிடையாது என்பதை புரிந்துகொண்டேன்.

அவரை நேரில் சந்திக்கும் அந்த கணம் தோன்றப் போவதில்லை என்று தெரிகிறது. அது பற்றி கவலையில்லாவிட்டாலும், இணையத்தில் அவர் எழுத்துக்களை மறுபடியும் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் தற்போது அடர்த்தியாக எனக்குள் ஒரு புயல்  போல அசைகிறது. அவரது பழைய எழுத்துகளைப் படிக்கும் போது எத்தனை அருமையான தோழனை இழந்திருக்கிறேன் என்று ஒவ்வொரு வரியும் சொல்கிறது. வவ்வாலின் நண்பர்கள் மற்றும் அவரை இணையத்தில் அறிந்தவர்கள் அனைவருக்கும் நான் சொல்லும் வார்த்தைகளின் வலி புரியும் என்று நம்புகிறேன்.

வவ்வாலின் இரண்டரை வருட திடீர் மௌனம் பல எண்ணங்களுக்கும், கருத்துக்களுக்கும்,  கொஞ்சம் கொஞ்சமாக உயிரூட்டிக் கொண்டிருக்கிறது. இந்த மௌனம் பல திகைப்புகளையும் , அச்சங்களையும்  மனதில் எழுப்புகிறது.

இந்த மௌனம் ஒரு நட்புக்கினிய நண்பனின் பிரிவை உணர்த்துகிறது. எங்கிருந்தாலும் அவர் நலமாக இருக்கவேண்டும் என்ற வாழ்த்து எப்போதும் என்னிடமுண்டு.

வவ்வால் மீண்டும்  வரவேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு நீண்ட பதிவாகக் கூட வேண்டாம். ஒரு சிறிய பத்தியாக, ஒரு வாக்கியமாக, ஒரு வார்த்தையாக  அல்லது ஒரே ஒரு எழுத்தாக ....








Wednesday 27 April 2016

இசை விரும்பிகள்:XXX - எண்பதுகள்: இசையுதிர்காலம் I

வறட்சிக் காற்று. 
உடைந்த சிற்பம். 
உயிரற்ற ஓவியம்.
ரசம் போன கண்ணாடி,
கம்பிகள் அறுந்த  வீணை.
அணையும் விளக்கு. 
கிறுக்கல் கவிதை. 
குளத்து மீன்கள். 
காகிதப் படகு. 
சுவையற்ற உணவு. 
புகை மேகங்கள்.
குறுகலான சாலைகள்.
கூரற்ற  கத்தி. 
அந்தி வெளிச்சம். 
கண்ணாடிப்  பூக்கள். 
போன்சாய் மரங்கள்.
உதிர்ந்த இலைகள்.

                         
                        

   


            எண்பதுகள்: இசையுதிர்காலம்.


  மலர்களற்ற வெறும் மரங்கள் இருக்கும்,  கனவுகளைத் துறந்த  ஒரு இடத்தை கொஞ்சம் கற்பனை செய்து கொள்வோம். அங்கேயிருப்பவர்கள் அங்கே  காண்பதெல்லாம் வெறும் கிளைகளையும் அதில் ஊசலாடிக்கொண்டிருக்கும் சில  இலைகளையும் மற்றும் தரையில் சிதறிக் கிடக்கும் சருகுகளையும் மட்டுமே என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால்  அவர்களிடம் நாம் எந்தப் பூக்கள்  பற்றி பேசமுடியும்? பூக்களின் அறிவியலை அவர்களால் புரிந்துகொள்ள இயலுமா? பிறந்தது முதலே இவ்வாறான ஒரு வறட்சியான காட்சியை மட்டுமே நிஜமென நம்பிக்கொண்டிருக்கும் ஒருவன்  வண்ண வண்ணப் பூக்கள்  உடுத்திய ஒரு மரத்தை  திடீரென காண  நேர்ந்தால் அவன் நிஜமென்று நம்பியிருந்த முகத்திற்கு என்ன நிகழும்? தான் அறிந்தது மட்டுமே எல்லாம் என நம்பிக்கொண்டிருக்கும் ஒருவன்  முதன் முதலில் உண்மையான  உலகை சந்திக்கும்பொழுது  அவனது கற்பனை எப்படி உடையும்?

     
    ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒரு மாற்றம் வானவில் தோன்றுவதைப் போல நிறம் மாறி ஒரு புதிய வண்ணத்தை உடுத்திக்கொள்கிறது.  நமது தமிழ்த் திரையிசையை இதே போல பத்துப் பத்து வருடங்களாக பகுத்துப் பார்த்தால் நமக்கு மிகத்  தெளிவான பிம்பம் ஒன்று கிடைக்கிறது. நமது திரையிசையின் வரைபடத்தில் ஐம்பதுகளில் உயர்ந்து சென்ற இசைக் கோடுகள் அறுபதுகளில்  ஒரு உச்சத்தைத் தொட்டு அங்கேயே நிலை பெற்று நின்றதும், பின்னர் எழுபதுகளில் வேறு இலக்கு நோக்கி நகர்ந்ததும், எண்பதுகளில் சடாரென சரிந்ததும் ஒருசேர காணக் கிடைக்கின்றன.  எழுச்சியும் வீழ்ச்சியும்  நடைமுறை வாழ்க்கையின் நியதிகள் என்ற கசப்பான நிஜத்தை செரிமானம் செய்வதில் சிக்கல்கள் கொண்டவர்களுக்கு இந்த வாக்கியம் ஒரு அபத்தம்.

    எத்தனை வேகமெடுத்தாலும், எத்தனை உயரச் சென்றாலும், எத்தனை மெருகூட்டப்பெற்று அழகாகத் தோன்றினாலும் அத்தனை உண்மைகளும் ஏதோ ஒரு கட்டத்தில் எதிர்மறை மாற்றத்தை  சந்திப்பது இயற்கையின் டிஎன்ஏக்களில்  மறைந்திருக்கும் மர்மக் கோட்பாடுகளில் ஒன்று. எம் எஸ் வி- டி கே ராமமூர்த்தி, கே வி மகாதேவன் போன்றவர்கள் இசையால் இழைத்த சந்தன மெட்டுக்கள் காற்றில் தவழ்ந்த அறுபதுகள் நமது தமிழிசையின் மாற்ற முடியாத உச்சம். இசையின் வசீகரம் செவிகளையும், மனங்களையும் ஒரு சேர பரவசப்படுத்திய மேன்மையான காலகட்டம். அங்கிருந்து எந்தத் திசையில் நமது திரையிசை அதன்பின்னர் நகர்ந்தது என்று இசைச் சுவட்டை தொடர்ந்து சென்றால் ஒரு பிரமாண்ட அதிர்ச்சி நம்மை வரவேற்கக் காத்திருக்கிறது. எண்பதுகளின் முத்திரை இசைபாணி  விரிந்துசென்ற நமது இசையின் சிறகுகளை கொஞ்சம் மடக்கிப் போட்டது. விஸ்தாரமான வனாந்திரத்தில் பளபளவென பூரிப்பு காட்டும் ஒரு பரவசப் பூவை நமது வீட்டு மொட்டை மாடியின் அரையடி மண்சட்டியில் வைத்து ரசிப்பதைப் போல நமது இசை சுருங்கியது. அதன் இதழ்கள் விரியத் தயங்கின. வெடித்துக் கொட்டும் மழையின் இறுதிக் காட்சி போல இசை துளித் துளியாக சொட்டியது. எண்பதுகளின் மத்திக்குப் பிறகு எம் எஸ் வி போன்றோர் பாதுகாத்துவந்த இன்னிசை இயல்புகளும், நல்லிசை என்ற நம்பிக்கையும் தமிழ்த் திரையுடனான தமது தொடர்பை துண்டித்துக்கொண்டன. மேலும் அந்தக் காவிய கானங்கள் தமிழரின் செவிகளுக்கு அன்னியமாயின. இசை ஒரு தனி மனித ஆளுமையின் கீழ் பரிதாபமாக அடிமைப்பட்டது.

     இது ஒரு முரண்! எங்கும் வியாபித்திருக்கும் இசை என்ற மகத்துவத்தை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து இவரைவிட்டால் இசையே இல்லை என்ற மகா ஆணவத்தை பத்து வருடங்களாக பதிவு செய்ய விழைந்த அநாகரீகம், துர்பாக்கியம், செருக்கு, சுயபாராட்டல்கள் எண்பதுகளை நிரப்பின. இந்த விஷக் காற்றில் நமது மரபான நல்லிசை நலிந்து  நம் திரையிசை  மழை காணா பாலைவனமானது. வாடி எ கப்பக்கிழங்கேவில் ஒரு வளர்ந்த தலைமுறைக்கு இங்கு  இசை எப்படிப் பொழிந்தது என்றா தெரிந்திருக்கும்? அம்மாதிரியான பாடல்களில் தங்கள் ஆன்மாவை கண்டெடுக்கும் இசை மேதாவிகளின் கண்களில் அறுபதுகள் அபத்தமாகத் தெரிவது அவர்களது இசை ரசனையின் கோளாறு. நோய் வாய்ப்பட்ட அவர்களின் இசைத் தேர்வுகள் ஒரு வெளிப்படையான கோமாளித்தனம்.


    ஆரம்ப எண்பதுகளோடு என்னைப் பிணைத்த தமிழ் இசை தொடர்பான இழை கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தது.  திடீரென காற்றலைகளில் மிதக்கும் ஒரு காந்தப் பாடல் என்னைக் கவரும் அந்த அடுத்த நொடி எப்போது வரும் என்றே தெரியாத சூழல். எனது செவிகளில் விழுந்த பெரும்பான்மையான பாடல்கள் எந்த நவீன கனவுகளையும், புதுமையான சோலைகளையும் என் கற்பனைக்குள் தோன்றச் செய்யவில்லை.  அப்போது வந்த பாடல்களில் பலவும் வேர்களற்ற, பொறுப்பற்ற, கண்ணியமிழந்த வெறும் filler இசை போலவே எனக்குத் தோன்றியது. நம்மைச் சுற்றி உலகில் நிகழ்ந்த ஒரு மாபெரும் இசைப் புரட்சியின் நிழலை, அந்த இசையின் வெடிக்கும் பரிமாணத்தை ஒரு அங்குலம் கூட நம்மிடம் கோடிட்டுக் கூட காட்டாத வெறும் வறட்சியான சக்கைப் போன்றதொரு இசை மட்டுமே அப்போது தமிழில் ராஜநடை போட்டுக்கொண்டிருந்தது. அதை மட்டுமே கேட்டு வளர்ந்த ஒரு தலைமுறை என்னைப் பொறுத்தவரையில் இசையின் உண்மையான தொடுகையை தவற விட்டவர்கள்  என்றே கருதுகிறேன். ஆக்ஸிஜன் இல்லாத இசையை அவர்கள் சுவாசித்ததாக சொல்வதுகூட பொருத்தம்தான். அவர்களுக்கு  எண்பதுகளுக்கு முன்  நம் தமிழ்த்திரையிசை  எப்படி இருந்தது என்பதைப் பற்றியும் தெரியாது. எண்பதுகளில் உலக இசை எவ்வாறு அதீதமாக வளர்ச்சி பெற்றிருந்தது என்பதைப் பற்றியும்  அக்கறை கிடையாது. கண்டதே காட்சி கொண்டதே கோலம்  என்ற ரகத்தைத் சேர்ந்தவர்கள்.

      இரு சம்பவங்கள் பற்றி இங்கே நான் குறிப்பிடுவது அவசியம் என்றுணர்கிறேன். அந்தச் சம்பவங்கள் வேறு வேறு காலகட்டங்களில், இடங்களில் நிகழ்ந்திருந்தாலும் அவை சொல்லும் செய்தி ஒன்றுதான்.  முதலாவது சமீபத்தில் நடந்தது. கம்ப்யூட்டரில் வார்த்தை விருப்பம் தளத்தின் புதிய பின்னூட்டங்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த போது என் நண்பரொருவர் வந்தார். வந்தவர்,"அப்படி என்னதான் இணையத்தில் பார்ப்பீர்கள்?" என்றார் மர்மமாக சிரித்தபடி. "பார்க்கவில்லை. படித்துக்கொண்டிருக்கிறேன்." என்று பதில் சொன்னேன். "கதையா?" என்றார் என் பின்னே நின்றுகொண்டு. நான் படிப்பதை அவர் படிக்க முயன்றது தெரிந்தது.  " ஏதோ இசை சம்பந்தமான கட்டுரை போல. அனிரூத், சிம்பு, பாடலாக இருக்கும்." என்றார் அவராகவே முடிவெடுத்தபடி. "இல்லை. இது பழைய பாடல்கள் பற்றியது". என்று சொன்னேன். அதை எழுதுவது நான்தான் என்பது அவருக்குத் தெரியாது. தெரியவேண்டிய அவசியம் அவருக்கில்லை. அதை தெரிவிக்க வேண்டிய விருப்பமும் எனக்கில்லை.

   "பழைய பாடல்களா?" என்று வியப்பு காட்டியவர் உடனே," இளையராஜா பாடல்களா?" என்றார் சீரியஸாக. எனக்கு என்ன தோன்றியிருக்கும் என்பதை இங்கே எழுதத் தேவையில்லை என்று நினைக்கிறேன். நான் பொறுமையை இழக்காமலிருக்க வெகுவாக பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. "இல்லை. இவர் பொதுவாக இளையராஜா பற்றி அவ்வளவாக எழுதுவதில்லை. எம் எஸ் வி, கே வி மகாதேவன், ஜி ராமநாதன், வி குமார் போன்றவர்களைப் பற்றியது." என்றேன். அவருக்கு இந்தப் பெயர்கள் புதிதாக ஒலித்திருக்கலாம்.

  அடுத்து அவர் சொன்னது என்னை திடுக்கிட வைத்தது. அவர் சொன்னது இதுதான்: "இளையராஜாவைத் தாண்டியும் இசை இருக்கிறதா என்ன?" இப்படி சொல்லிவிட்டு, "கிரிக்கெட் போடுங்க. பார்க்கணும்." என்று எதோ ஒரு சேனலை அவராகவே தேர்ந்தெடுத்து கிரிக்கெட் என்ற எனக்குப் பிடிக்காத கண்றாவியை  ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

    எனக்குப் பிடிக்காத விதத்தில் பேசிவிட்டு எனக்கு கொஞ்சமும் பிடிக்காத ஒரு விஷயத்தை செய்து கொண்டிருக்கும் அவரிடம் நான் என்ன இசை பற்றி பேச முடியும் என்று குழப்பமாக இருந்தது. நான் இணையத்தில் படித்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறு எதுவும் அந்த நேரத்தில் செய்யவில்லை. அது ஒன்றுதான் அப்போதைக்கு புத்திசாலித்தனமான செயலாக எனக்குப் பட்டது.

        இரண்டாவது வெகு காலம் முன்பு - எண்பதுகளின் ஆரம்பத்தில் -- நடந்தது. ஆங்கில இசையில் நாட்டம் கொண்டிருந்த சமயத்தில் எங்கள் ஊரில் இருந்த எல்லா ரெகார்டிங் கடைகளுக்கும் செல்வது எனக்கு பழக்கமான ஒன்று. முட்டுச் சந்தில் ஒரு கடைசி வீட்டில் ஆங்கிலப் பாடல்கள் பதிவு செய்கிறார்கள் என்று என் நண்பர்கள் புரளி கிளப்பினால் கூட நான் அங்கு சென்று வருவதை ஒரு கடமையாக  வைத்திருந்தேன். அப்படி ஒரு முறை பெரிய வீதியில் ஒரு கடைக்குள் தகவல் அறிந்து நுழைந்து, அங்கிருந்த  வெகு சில ஆங்கில கசெட்டுக்களை ஆராய்ந்து கொண்டிருந்தபோது "இருங்க. இப்ப எங்க முதலாளி வந்துருவார். அவருக்குத்தான் இங்கிலீஷ் பாட்டெல்லாம் தெரியும்." என்று அங்கிருந்த ஆள் தெரிவித்தான். மொத்தமிருந்த நூறு கசெட்டுகளில் இருபது ஆங்கில இசைத் தொகுப்புகள் இருந்தன. சற்று நேரத்தில் தடதடக்கும் புல்லெட்டில் வந்திறங்கிய ஒரு டிப் டாப் இளைஞன்  தன் குளுமை கண்ணாடியை கழற்றிவிட்டு கடையை ஆராய்ந்தான். கொஞ்சம் இளமையாக அந்த காலகட்டத்தின் அத்தியாவசிய தேவையான  32 இன்ச் பாட்டம் வைத்த பெல்ஸ் அணிந்திருந்தான். கடையில் இருந்த ஆள் பெரிய கும்பிடு போடவும் எனக்கு இவன்தான் அந்த முதலாளியாக இருக்கவேண்டும் என்று தோன்றியது.

   அதற்குள் அந்த ஆள் இவனிடம் "எதோ இங்கிலீஷ் பாட்டாம். பசங்க வந்திருக்காங்க." என்ற சொல்லவும் அந்த இளைஞன் என்னையும் என் சகோதரனையும் ஒரு முதலாளிப் பார்வை பார்த்துவிட்டு, "என்ன?" என்றான் அலட்சியமாக. அப்போதுதான் டோனா சம்மர் என்ற பாடகியைப் பற்றி கேள்விப்பட்டிருந்தேன்.  எனவே அதை விசாரித்தேன்.  உடனே,"அடடா! போன வாரந்தானே அந்த கசெட்டை  ஒருத்தர் வாங்கிட்டு  போனாரு ." என்ற வியாபார பரிதாபம் காட்டியவன் தொடர்ந்து, "அடுத்த வாரம் சிங்கப்பூரிலிருந்து நிறைய ஆங்கில கசெட்டு வரும்." என்று  அவன் சிங்கப்பூரில் இருந்தவன் என்பதற்கான சுய சான்றிதழ் வழங்கிக்கொண்டான். பின்னர், "நான் சிங்கப்பூர்ல இருந்தப்ப நிறைய இங்கிலீஷ் பாட்டு கேப்பேன். ஆனா இப்ப கேக்கறதில்ல."என்றான். அவசியமில்லாவிட்டாலும்   "ஏன்?" என்று கேட்டுவிட்டேன்.

      அவன் அதே  அலட்சியமாக "என்னைக்கு பிரியா படம் வந்துச்சோ அன்னைக்கே நான் இங்கிலீஷ் பாட்டு கேக்கறத நிறுத்திட்டேன்." என்றான். "அதான் ஏன்?" என்றேன் புரியாமல். "அதான் தமிழ்லயே இளையராஜா இப்ப இங்கிலீஷ் பாட்டுக்கு இணையா மீஸிக் போடுறாரே? பின்ன எதுக்கு இங்கிலீஷ் பாட்டு தனியா?" என்று ஒரு காரணத்தை முன்வைத்தான். இளையராஜாவைப் பற்றி பெரிதாக விருப்போ வெறுப்போ இல்லாத அப்போதே எனக்கு அவன் இப்படிச்  சொன்னது வேடிக்கையாகத் தெரிந்தது. வேடிக்கை என்பதை விட மட்டித்தனமாக என்று கூட சொல்லலாம். ப்ரியா படப் பாடல்கள் வந்தபோதே எனக்கு அதன்மீது எந்தவிதமான விசேஷமான ஈர்ப்பும்  ஏற்பட்டதில்லை. தவிர,ஸ்டீரியோ போனிக் என்ற  ஜிகினா தூவல்கள் இல்லாவிட்டால் அந்தப் பாடல்கள் இத்தனை பெரிய அளவில் பேசப்பட்டிருக்காது.   "இவன் கண்டிப்பா இங்க்லீஷ் பாட்டு எதுவுமே கேட்டுருக்க மாட்டான். சும்மா சொல்றான்." என்றான் என் சகோதரன் என்னிடம்  மெல்லிய குரலில். இவனிடம் எனது பசிக்கான  உணவு கிடைக்காது  என்ற எண்ணம் எனக்கு வந்தது. "அடுத்த வாரம் வாங்கப்பா. நீங்க கேட்டது கிடைக்கும்." என்றான் எங்கள்  பக்கம் திரும்பாமல். டோனா சம்மர் என்ற பெயரை மறந்துவிட்டான் போலும்.  அடுத்த வாரம் வந்தது. நான் அந்தக் கடைக்குச் செல்லவில்லை - அதன் பிறகு.

   எண்பதுகளைச் சார்ந்த பலரின் பார்வையில் இதுபோன்ற பிழை நோக்கு ஒரு யதார்த்தமான தவறு.  அவர்கள் தான் சார்ந்த அனுபவங்களின் தொகுப்பை ஒரு பொது விதியாக கட்டமைத்துக்கொள்வதோடு அந்தப் புனைவை உண்மையென மற்றவர்களை நம்பவைப்பதில் தீவிர ஈடுபாடு காட்டுகிறார்கள். இணையத்தில் இது மிக மலிவாகக் காணப்படுகிறது. சிலர் ஒரு hidden agenda போல தாங்கள் ரசித்ததை ஒரு கோட்பாடாக திணிக்க எத்தனித்து, ஏற்கனவே படைக்கப்பட்ட பழைய சாதனைகளையும், அந்தப் பழமை நிறுவிய மகத்துவங்களையும் ஒரேடியாக நிராகரிக்கிறார்கள். வெறும் நாஸ்டால்ஜிக் உணர்வுகளும், பேருந்து பயணத்தில் ஆன்மாவை தொட்ட தருணங்களும்,  விஸ்தாரமில்லாத விவரங்களும், தெரிந்துகொள்ளவேண்டிய பல தகவல்கள் மீது பரிச்சயம் இல்லாமல் அவர்களால் பெரிய எழுத்துக்களில் எழுதப்படுகின்றன. சிறுவர்கள்  எங்க ஆள் மாதிரி வருமா என்று முஷ்டி மடக்குவதைப் போல இந்த வகையினர் அதே பக்குவமற்ற சிந்தனைக்குள்ளிருந்து வெளியே வரமறுக்கிறார்கள். சுரங்களை முதலில் கண்டவர், இசையே இங்கிருந்துதான் உற்பத்தியாகிறது, அவர் ஒரு சுயம்பு என இசையின் பிடிபடாத இழைகளை ஒரு தனிப்பட்ட ஆளுமையின் மீது முடிச்சு போடும் அவலத்தைக்  காணும்போது அங்கே சில விமர்சனங்கள் குறுக்கிடுவது அவசியமானது என்று நினைக்கிறேன். இதையும் பேசாதிருந்தால் நடந்த நிகழ்வுகளை திரித்துக் கூறி நமது அறுபது வருட திரையிசை ஒரே ஒருவரை சுற்றியே வந்ததாக ஒரு புதிய புனைவான சரித்திரம் உருவாகக்கூடிய  விபத்து நிகழக் காத்திருக்கிறது.

  நம் தமிழிசையின் ஆதார வேர்கள் வேய்ந்த, பாரம்பரிய ராகங்களின் வண்ணங்கள்  தோய்ந்த, நம் மரபுகளின் சங்கிலி நீட்சியாக  பலப் பல பாடல்கள் நாற்பதுகள் முதற்கொண்டு ஒரு இசை நதியாக ஐம்பதுகள், அறுபதுகள் வழியே தாவிச் சென்று எழுபதுகளில் வேறு பாதையில் தனது நீரோட்டத்தை கண்டுகொண்டன. இந்தப் புதிய வெளிச்சத்திற்கு  நம் மண் சார்ந்த நாட்டுப்புற இசைக்கு ஒரு மையமான இடமிருக்கிறது. எழுபதுகளில் தமிழ்த்திரை கூண்டை விட்டு வெளியே வந்த பறவை போல புதிய உற்சாகத்தில் சிறகடித்தது.

     யாரும் தொடாத கதைக் களம், திரைக்கதையில்  திருப்பம், நாடக வாசனையை துறந்த இயல்பான வசனங்கள், எளிமையான நடிப்பு, யதார்த்தமான காட்சி நகர்த்தல்கள் அதற்கான சரியான இசையமைப்பு போன்ற சினிமா தொழில் நுட்பங்கள் எழுபதின் இறுதியில் தமிழ்த் திரைக்கு நவீன அலங்காரம் கொடுத்தது. இதில் அதிகமாக பலனடைந்தவர் பாரதிராஜாவை விட இளையராஜாதான். அவருடைய புதிய பாணி இசை இந்த மாற்றத்தில் தனக்கான அலையை தேர்ந்தெடுத்து, அதன் மீது வியாபார  வெற்றியின் துணையுடன் ஒய்யாரமாக சவாரி செய்தது.  பலருக்கு எண்பதுகள்  என்பது இளையராஜாவின்  காலம்.  மறுப்பதற்கில்லை.

     தவிர, எம் எஸ் விக்குப் பிறகு யார் என்ற கேள்விக்கான விடை இளையராஜா மூலம் கடைசியாக வந்துவிட்டதாக கருதப்பட்டாலும், எம் எஸ் வியின் வியாபார உச்சங்களை விட  இன்னும் பல அடிகள் மேலே சென்றாலும், பல லார்ஜெர்-தேன்-லைப் ஆராதனைகளின் கருப் பொருளாக இருந்தாலும், குவாலிடி மியுசிக் என்ற வகையில் எம் எஸ் வி கொடுத்த இசைத் தரத்தின் அளவுகோளின் படி  பல படிகள் கீழே நின்றிருந்தார் இளையராஜா. வணிக ரீதியான வெற்றியை தொடர்ந்து சுவைக்க முடிந்த அவரால் தமிழிசையின் தரத்தை அடுத்த மேலான இடத்திற்கு நகர்த்த இயலவில்லை. இந்த உண்மையை பலர் அறிந்திருந்தாலும்  அதை  வெளிப்படையாக அறிவிப்பதில் முரண்படுகிறார்கள் அல்லது தயங்குகிறார்கள்.

      எழுபதுகளின் இறுதியிலிருந்து தடம் மாறிய நமது இசை சில திகைப்புகளை திரைச் சரித்திரத்தில் பதிவுசெய்து கொண்டே வந்தது மறுக்க முடியாதது. நினைவோ ஒரு பறவை, செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல், இளமை என்னும் பூங்காற்று, உறவுகள் தொடர்கதை, நானே நானா யாரோ தானா  என அவ்வப்போது அறிவிப்பின்றி  தோன்றிய இளையராஜாவின் நியான்  வானவில்கள் சடுதியில் கரைந்துவிட்ட நிஜம் அவரது எண்பதுகளின் இசையில் வெளிப்படையாகத் தெரிந்தது. நீரில் நனைந்த கடிதத்தின் எழுத்துக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்  தெரிவதைப் போல அங்கே இங்கே என சில சொற்பமான  சமயங்களில் அவர் இசையில் ஒரு குயிலின் உற்சாகம் தென்பட்டது. மீதமெல்லாம் இசையும், மெட்டுக்களும் மெலிந்துபோன பாடல்களே. எண்பதுகளின் மத்தியில் எதோ ஒரு குறிப்பிட்ட ஆண்டில் வெளிவந்த பாடல்களை random வகையில் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை புரியும். அதில் பலவற்றை ஒரே ஒரு முறை மட்டுமே கேட்டிருக்க முடியும். இப்படியெல்லாம் கூட பாட்டு அப்ப வந்துச்சா? என்ற கேள்வி ஒரு நிச்சயமான போனஸ்.

     எண்பதுகளின் மத்தியில் இளையராஜாவிடமிருந்து வரும் இசையை மிக எளிதாக கணிக்க முடிந்தது.  அவரிடமிருந்த அந்த திடீர் ஆச்சர்யங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வற்றத் துவங்கின.  இடையிசை என்று சொல்லப்படும் சரணங்களுக்கு இடையேயான இசையில் அவர் அமைத்த புதிய வண்ணங்கள் ஒரே நிறத்தில் அலுப்பூட்டும் வகையில் இருந்தன. இளையராஜாவின் மரபான ஒரே மாதிரியான புல்லாங்குழல், பிறகு சரசரவென இழையும் வயலின்கள் சில சமயங்களில் ஒற்றை வயலின் ஓசை, திடுமென தொடர்பேயில்லாமல் ஒரு பதிமூன்று நொடிகளுக்கு  ஒலிக்கும் கிடார் கார்ட்ஸ், பின்னர் வழக்கமான தபேலா என அவர்  பாணி சுருங்கியது.  கொஞ்சமும் பாடலின் போக்கிற்கு உதவி செய்யாத தொடர்பற்ற இடையிசை ஒரு ஆனந்தப் பாடல் கொடுக்கவேண்டிய முழுமையான அனுபவத்தை முப்பது வினாடி சுகங்களாக மாற்றிப்போட்டது. இசைத் துணுக்குகளாக பாடல்கள் உடைந்தன.  "பாட்டு சுமார்தான். ஆனா மியுசிக் அருமையா இருக்கு." என அப்போது பலர் சொல்லும் விமர்சனம் என்னுடைய இந்தக் கருத்தை உறுதி செய்வதாக நினைக்கிறேன். மேலும் வைரமுத்துவுடன் ஏற்பட்ட விரிசல் அவர் இசையில் இருந்த கவிதையின் தரத்தை சுக்கல் சுக்கலாக உடைத்தது. இல்லாத நல்ல கவிதையின் வெற்றிடத்தை வெறும் வாத்தியங்களை வைத்துக்கொண்டு சமாளித்துவிடலாம் என்று ஒரு இசையமைப்பாளர் தீர்மானித்ததன் விளைவு எதிர்பாரா இசைச் சரிவு.

   சிலர் அதாவது வெகு சிலர் அதாவது உண்மையான இசை அனுபவம் வசப்படாத வெகு வெகு சிலர் இந்த இசைக் கோபுரங்கள் சரிந்த எண்பதுகளை நம் தமிழிசையின் பொற்காலம் என்று வர்ணிப்பதுண்டு. இது ஒரு அப்பட்டமான பொய் என்றே நான் சொல்ல விரும்பினாலும் அந்தப் பிரமாண்டமான பொய்யை சற்று வேறு வார்த்தைகள் கொண்டு விவரிக்கலாம் என்று தோன்றுகிறது.  இது ஒரு மாய பிம்பம். அதாவது ஒரு குழந்தைக்கு தான் பார்க்கும் காட்சிகளே உலகமாகத் தெரியும் ஒரு முதிர்ச்சியற்ற புரிதல். முதல் முறையாக பேருந்து ஒன்றில் பயணம் செய்யும் ஒரு சிறுவனுக்கு மரங்களும் கட்டிடங்களும் நகர்வதாகத் தோன்றும் illusion போன்றது. எண்பதுகளை சிலாகிக்கும் கூட்டத்தினரை காணும்போது "ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி" என்று அறுபதின் ஆரம்பத்தில் ஒலித்த ஒரு குரல் உணர்த்தும் அந்த வலிமையான உண்மையே நினைவுக்கு வருகிறது.

     துவக்கத்தில் ஒரு டப்பாங்குத்து இசையமைப்பாளர் என்று மேட்டுக்குடி விமர்சகர்களால் பரிகாசிக்கப்பட்ட இளையராஜா தன் மீதான இந்த முத்திரையை மேற்கத்திய தூரிகைகளால் வரைந்த ஓவியம் போன்ற  பல நளினமான பாடல்கள் மூலம் உடைத்தெறிந்து தன் ஆளுமையை வியக்கத்தக்க வகையில் பதிவு செய்தார். இளையராஜாவுக்கு  வெஸ்டெர்ன் மியுசிக் வராது என்று கிண்டலடித்தவர்களின் தாடையைப்  பெயர்த்தது என் இனிய பொன் நிலாவே, சின்னப் புறா ஒன்று போன்ற சிலிர்ப்புகள். தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவர் எடுத்த சுவடுகள் மிக சிரமமானவை. வலி மிகுந்தவை.  சொற்பமான இசை வாத்தியங்களை வைத்தே அவர் அமைத்த பல பாடல்கள் இளைய தலைமுறையினரை போதையேற்றின. இளையராஜாவுக்கென கைதட்டும் ஒரு புதிய ரசிக வகையினர் தோன்றினர். எண்பதுகளில்  காலம் அவர் கரங்களில் தமிழ்த் திரையிசையின் கடிவாளங்களை ஒப்படைத்தது. இளையராஜாவின் தனிக் காட்டு ராஜ்ஜியம் ஆரம்பித்தது. மைடஸ் டச் என்னும் தங்கத் தொடுகை அவருக்கு வசப்பட்டது. வணிக வெற்றிகள் அவரது சாதனைகளாக இடம்பெற்றன.  இருந்தும் அவரது இசையில்  ஒரு வெற்றிடம் வியாபித்திருந்தது. அதை எந்த இசை கொண்டும் அவரால் நிரப்ப இயலவில்லை.

      எம் எஸ் வி யுடன் முடிந்துபோன அந்த மகத்தான இசைப் பாரம்பரியத்தையும் , இசையின் அழகியலையும், மெட்டுக்களின் மேதமையையும், காலங்கள் போற்றும் கனிவான கானங்களின் நீட்சியையும், சிந்தனைக்கு சுவையூட்டிய  கவிதை மரபையும், பாதுகாக்கவேண்டிய சாலைகளையும், மெருகேற்றவேண்டிய சோலைகளையும் எண்பதுகளில் இளையராஜாவின் இசை சாதித்ததா என்ற கேள்வி இப்போது எழுகிறது.


   ஒரே சொல்லில் இதற்கான பதிலை என்னால் சொல்ல முடியும். இருந்தும் சில கொடூர விபத்துக்களை அவ்வளவு எளிதாக ஒரே வரியில் விமர்சனம் செய்துவிட்டு கடந்து போவது உகந்ததல்ல.






அடுத்து; இசை விரும்பிகள்-XXXI --     இசையுதிர்காலம் II .


Friday 8 April 2016

ஒரு தேவதையின் குரல்.

இந்த வருடத்திற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அமிதாப் பச்சன் சிறந்த நடிகர், பாகுபலி சிறந்த படம் போன்ற ஆயத்தமான முன்தயாரிப்பு முடிவுகளைப் பார்க்கும் போது  ஒரு சம்பிரதாயமாகத் தொடரும் அபத்தம் இந்த முறையும் தவறவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.  இளையராஜா விருதுகளுக்குப் புதியவர்  இல்லை என்பதால் அவருக்குக் கொடுக்கப்பட்ட தாரை தப்பட்டைக்கான விருது பற்றி புதிதாக எதுவும் சொல்லத் தோன்றவில்லை. படம்தான் நார் நாராக கிழிந்துபோனது. எனவே இப்படி மெகா அடிபட்ட அந்தப் படத்திற்கு இதுபோன்ற சில ஒத்தடங்கள் தேவைதான்.

 வழக்கம்போலவே இராவாசிகள் இணையத்தில் கேக் வெட்டாத குறையாக குதூகலத்தில் குதிப்பார்கள் என்று நான் எதிர்ப்பார்த்திருந்த வேளையில் அதுபோன்ற அலப்பரைகள் எதுவும் கண்ணில் படவில்லை. அவர்களுக்கே இதையெல்லாம் தாண்டிச் செல்லவேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கலாம். அலுப்பாக இருந்திருக்கலாம். "விருதா? அப்படியா? அவருக்கு விருது கொடுத்ததால அந்த விருதுக்குத்தான் பெருமை." என்று சம்பிரதாயமான ராஜா ராஜாதான் பல்லவியோடு தங்களது கொண்டாட்டத்தை முடித்துக்கொண்டார்கள். அதுவரைக்கும் நிம்மதியே. ஆயிரம் படங்களுக்கு அவர் இசை அமைத்த சாதனைக்கு பெரிய மேடை போட்டு,பளீரென்ற மின்சார வெளிச்சத்தில் மனதுருகி, சினிமா கண்ணீர் சிந்தி, அதே ஆயிரம் முறை ஏகப்பட்ட இடங்களில் மனனம் செய்து வாசித்த பாராட்டுப் பத்திரத்தை வாசித்து முடித்திருந்த வேளையில் மற்றொரு பாராட்டுக்கு அவர்களுக்கு நேரமில்லை போலும்.   எத்தனை முறைதான் போலியாக மனதுருக முடியம்?

    இதே சமயத்தில்  ஒரு இசை சகாப்தம் தனது ஆளுமையை மிக அமைதியாக  ஒரு சாதனைப் புத்தகத்தில்  வார்த்தைகளாக வரைந்தது.   பி சுசீலா என்ற நமது கானக்குயில் 17ஆயிரம் பாடல்களுக்கும் மேலாகப் பாடிய வியப்பு கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட, உலகம் அந்தக்  குரலிசைக்கு ஒரு மாபெரும் அங்கீகாரம் அளித்திருக்கிறது. நானும் தேடினேன். இணையத்தில் அவரைப் பாராட்டி வந்த பக்கங்கள் பெரும்பாலும் கண்ணில் அகப்படவில்லை. ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த சாதனையைப் போற்றும் அதேவேளையில் இந்த பதினேழாயிரம் பாடல்கள் குறித்த சந்தோஷம், களிப்பு நம்மிடமில்லாத உண்மை வலி ஏற்படுத்துகிறது.

      பி சுசீலா பற்றி நவீனமாக என்ன எழுதினாலும் அவர் குரலில் ஆட்சி செய்யும் அந்த மோகம் நிறைந்த,  மயக்கம் சூழ்ந்த, நளினம் ததும்பும், துயிர்ப்பான ஒரு இசையாகவே ஒலிக்கும் அந்தத் திகைப்பைச் சுற்றியே அனைத்து வாக்கியங்களும் செல்லும். எனது பார்வையில் பி சுசீலாவுக்கான ஒரே போட்டியாக இருந்தவர் ஆஷா போன்ஸ்லே ஒருவர்தான்.

       நீங்கள் அறுபதுகள் குறித்த சினிமா  சிந்தனைக்குள் வர நேரிட்டால், சுசீலா என்ற இசை ஆச்சர்யத்தின் குரல் மானசீகமாக உங்கள் நெஞ்சத்தில் ஒலிக்காமல் இருக்காது. கே வி மகாதேவன், எம் எஸ் வி போன்ற இசைத் தூண்களின் மீது மோதித் தெறித்து வெளிப்பட்ட மெல்லிய தென்றல் காற்றாக அவர் குரல் ஒலித்தது. எம் எஸ் வி என்ற பிரமிப்பான இசைக்  கலைஞன்  சுசீலாவின் குரலில் மறைந்திருந்த அந்தத் தென்றலின் தழுவல்களையும் இதமான சுகங்களையும் நூலிழை பிசகாமல் பிரதி எடுத்து  காலம் என்றும் மறக்காவண்ணம் தனது இசையில் பதிவு செய்ய, சுசீலா என்ற இசைதேவதையின் பரிமாணம் பல விதங்களில் படர்ந்தது.

மன்னவனே அழலாமா என்ற தோழமையும் , எங்கே நீயோ அங்கே நானும் உன்னோடு என்ற காதலின் நீட்சியும், நாளை இந்த நேரம் பார்த்து ஓடி வா நிலா  என்ற ஏக்கமும், மன்னவன் வந்தானடி என்ற குதூகலமும், சொன்னது நீதானா என்ற சோகமும்,  சித்திரை மாதம் பவுர்ணமி நேரம் என்ற உற்சாகமும், காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானா என்ற களிப்பும், நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா என்ற நெஞ்சத்தின் வேதனையும், என்ன என்ன வார்த்தைகளோ என்ற வெகுளித் துள்ளலும், .........

      நாம் உணரும் பல உணர்ச்சிகளுக்கு உயிரூட்டிய குரல் அவருடையது. நம் மனதில் மிதக்கும் பல நெகிழ்ச்சியான, மகிழ்வான நிகழ்வுகளை ஒரு இசை மீட்டெடுக்கிறது. இசை என்றால் அது வாத்தியங்களின் சங்கீதமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. சில சமயங்களில்  சில குரல்களே ஒரு இசையாக மாறிவிடுகின்றன. சுசீலாவின் குரல்  அந்த வகையில் ஒரு பிழையில்லா இசை. அது ஒரு தேவதையின் குரல்.