உடைந்த நிலா, சுருதி குறையும் நாதம், அறுந்த வீணைக் கம்பி, மங்கிய ஒளி, வாடும் மலர், வாகனம் விட்டுச் சென்ற புழுதி, காதில் ஒலிக்கும் மணியோசை, குழந்தையின் திடீர் சிரிப்பு, கூரையிலிருந்து சொட்டும் மழைத்துளி, பயணத்தின் இறுதி நிறுத்தம், பாடல் முடிந்தும் கேட்கும் இசைத் தட்டின் தேய்ந்த ஓசை........
எழுபதென்பதுகள்: மாலை வெளிச்சம்.
நினைவுகளின் நீட்சி பதிவின் துவக்கத்தில் நான் நீண்ட நாட்கள் கழித்து சந்தித்த எனது நண்பனைப் பற்றிக் குறிப்பிட்டு, அவன் தெரிவித்த ஐந்து விருப்பப் பாடல்கள் பற்றிய தகவலுடன் பதிவை ஆரம்பித்திருந்தேன். அவனுடைய இசையறிவு குறித்த என் சங்கடத்துடன் வெறும் அரசியல் பேசலாம் என்பதோடு அதை அங்கே நான் நிறுத்திக்கொண்டாலும் அப்போது அந்த இடத்தில் நடந்த ஒரு முக்கியமான, (அதைவிட) வேடிக்கையான நிகழ்வைப் பற்றி நான் அப்போது குறிப்பிடவில்லை. அது இங்கே வருகிறது.
இசை, அரசியல் என நாங்கள் தொடர்ந்து உரையாடியபடி இருந்தபோது அங்கேயிருந்த பெரிய டிவி திரையில் எனக்குப் பிடிக்காத கிரிக்கெட் என்ற சங்கதி ஓடிக்கொண்டிருந்தது. அந்தக் கண்றாவியை காணச் சகிக்காமல் நான் எதோ பொறியில் மாட்டிக்கொண்ட எலி போல தவித்துக்கொண்டிருக்கையில் நல்லவேளையாக இடைவேளை போன்று எதோ ஒன்று வர எனக்கு விமோசனம் கிடைத்தது. டிவியில் பாடல்கள் ஓட ஆரம்பித்தன. எனக்கு ஆர்வமில்லா சில பாடல்கள் அசைந்தன. பிறகு திடுமென ஆ ஆஆ என ஹம்மிங் துவங்க ஆயிரம் மலர்களே மலருங்கள் என்ற நிறம் மாறாத பூக்கள் படத்தின் பாடல் திரையில் தோன்றியது. உடனே என் நண்பன் துடிப்பாக, " ஆஹா! என்ன ஒரு இசை!" என்று நிமிர்ந்து உட்கார்ந்தான். "என்ன பாட்டு இது! கேளு, அப்படியே சொர்கத்துக்கே போயிடுவ" என்று எதோ அங்கே ஒவ்வொரு வாரமும் போய்வருபவன் போலச் சொன்னான். இசை துவங்க, பாடலின் தாளம் ஏற்கனவே நான் குறிப்பிட்டிருந்தபடி கேட்க இன்பமயமாக இருந்தது. (ஜென்சியின் குரலில் பாடல் துவங்கியதும் அந்த இன்பம் ஒரே நொடியில் தொலைந்துவிட்டது.)
திடீரென அங்கிருந்த ஒரு ஆசாமி பலமாகக் கைகளைத் தட்டி, குட்டிக்கரணம் அடிக்காத குறையாக குதித்து குதித்து வெகு உற்சாகமாக ஹோஹோ என்று குகை மனிதன் போல ஊளையிட்டான். அவனுடைய ஆவேச ரசனை எங்களை திடுக்கிடச் செய்தது. "பார்த்தாயா இளையராஜாவுக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை? அவர்கள் எங்கேயும் இருப்பார்கள்." என்று என்னைச் சீண்டும் மமதையுடன் சொன்னான் என் நண்பன். எனக்கோ அவன் கூறியது அப்போது நான் சாப்பிட்டுக்கொண்டிருந்த சிப்ஸ் போன்ற எதோ ஒரு வஸ்து உள்ளே சென்ற அளவுகூட செல்லவில்லை. அந்த குகை மனிதனின் சேஷ்டைகளை சற்று கவனிக்க ஆரம்பித்தேன். கொஞ்ச நேரத்தில் ஒன்றைக் கண்டேன். அவன் நடவடிக்கையில் ஒரு ஒழுங்கு முறை தெரிந்தது. அவ்வப்போது கைகளைத் தட்டுவதும் பின் அமைதியாவதும் என அவன் இருக்க, சிறிது நேரத்திலேயே எனக்கு விஷயம் புரிந்துவிட்டது.
நான் என் நண்பனிடம் திரும்பி," கொஞ்சம் உங்கள் இளையராஜா ரசிகர் செய்வதை கவனி", என்றேன். அவனைக் கூர்ந்து நோக்கிய என் நண்பன் , "இதிலென்ன?" என்றான் மிக அலட்சியமாக. "சரிதான். அப்பப்ப உங்க ஆள் அமைதியாகி விடுகிறாரே கவனிக்கவில்லையா?" என்றேன் நான். அப்போதுதான் அது அவனுக்கு உறைத்தது. "அட. ஆமா. எதுக்கு இப்படி செய்றான்?" என்றான் புரியாமல். "இது கூடவா தெரியல உனக்கு? அவன் அடுத்து கையைத் தட்டும் போது திரையைப் பார்." என்றேன். அடுத்த முறை அந்த சேஷ்டை அரங்கேறியபோது திரையில் அசைந்தது ஒரு மெல்லிய உருவம். நடிகை ரதி அக்னிஹோத்ரி. விசில் ஒன்றுதான் பாக்கி. மற்றதெல்லாம் செய்துகொண்டிருந்த அந்த குகை மனிதன் ரதி திரையை விட்டு மறைந்ததும் எதோ ஸ்விட்சை அனைத்ததுபோல அமைதியாகி பரீட்சைக்குப் படிக்கும் மாணவன் போல பரிதாபமாக உட்கார்ந்திருந்தான். என் நண்பன், "இவனையெல்லாம்..." என்று ஆரம்பித்து எழுத சிரமமான தமிழில் அவன் புகழ் பாடிவிட்டு , "இதுக்குத்தானா இத்தனை ஆர்ப்பாட்டம்? எக்மோர் மியுசியத்தில இருக்கவேண்டிய... (மற்றொரு புகழ் மாலை.) இப்புடி என்ன கவுத்துட்டானே." என்றான் ஒரு பாசாங்கான வருத்தத்துடன்.
இந்தப் பாடல் எனக்குள் ஒரு வியப்பான எண்ணத்தை உண்டாக்கியது. உண்மையைச் சொல்வதென்றால் எனக்கு மலேசியா வாசுதேவனின் குரல் அவ்வளவாக விருப்பமில்லாத ஒன்று. அவர் பல நல்ல பாடல்களை தனது கரடுமுரடான சாரீரத்தால் சரித்தவர் என்று தீவிரமாக எண்ணம் கொள்பவன் நான். முதல் மரியாதை பாடல்கள் தவிர கோடை கால காற்றே, அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா?, வா வா வசந்தமே என வெகு சில பாடல்களே அவரது குரலில் என்னால் கேட்கமுடிந்தவைகள். அடுத்து எஸ் பி ஷைலஜா என்ற இடைச்செருகல். எஸ் பி பாலசுப்ரமணியத்தின் தங்கை என்ற ஒரே தகுதியால் பாட வந்தவரோ என்று நாங்கள் அப்போது பேசிக்கொள்வோம். இவரது குரலையெல்லாம் கேட்கவேண்டும் என்ற பாக்கியம் நமக்கு இளையராஜா என்ற ஒருவரால்தான் கிடைத்தது. இவராவது பரவாயில்லை. இவரது பாடல்களில் சில கேட்பதற்கு நன்றாகவே இருக்கும். குறிப்பாக 1983 இல் வந்த ஒப்பந்தம் என்ற படத்தில் இவர் பாடிய ஒரே முகம் நிலா முகம் என்ற பாடல் கேட்க இனிமையாக இருக்கும். இறுதியாக எனக்கு எப்போதும் பிடிக்காத குரலுக்கு உரியவரான மூக்கால் பாடும் ஜென்சி. இவர் பாடிய அனைத்துப் பாடல்களும் இவராலேயே சீரழிந்தன என்ற என் எண்ணத்தை என்றைக்கும் நான் மாற்றிக்கொள்ளவே மாட்டேன். காதல் ஓவியம் பாடும் காவியம் என்ற நல்ல பாடலை இவர் இளையராஜாவை விட கொடூரமாக குதறியிருப்பார். இந்த மூன்று வறண்ட குரல்களும் சேர்ந்து ஒரு பாடல் பாடினால் அந்தப் பாடல் எப்படி இருக்கும் என்ற எண்ணமே திகிலூட்டுகிறது. ஆனால் திகைப்பூட்டும் விதமாக இவர்கள் மூவரும் இணைந்து பாடிய ஆயிரம் மலர்களே மலருங்கள் என்னைக் கவர்ந்தது. இது ஒரு முரண்தான். அதற்குக் காரணம் ஒன்றேதான் - இசை. அங்கே இளையராஜாவின் அந்த இசை இல்லாவிட்டால் ஆயிரம் மலர்கள் எனக்கு மட்டுமல்ல கேட்கும் யாருக்குமே இத்தனை வாசம் வீசியிருக்காது. மெய்மறக்கச் செய்யும் தாளமும், மேகம் போல நகரும் இசையும் மன ஆழத்தில் துயில் கொண்ட வேதனையை எழுப்பும் துயர மெட்டுமே இதன் காரணமாக இருக்கமுடியும். இதே மெட்டில் படத்தின் துவக்கத்தில் டைட்டில் பாடலாக நிறம் மாறாப் பூக்களே என்று ஒரு பாடல் உண்டு. வெறும் லாலாலா என்ற ஜென்சியின் ஆலாபனையுடன் இந்தப் பாடலைக் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இசை. அந்த காலகட்டத்தில் வந்த மிக நவீன டைட்டில் இசை. நண்பர்கள் வட்டத்தில் இந்த இசையையும் ஒரு விவாதப் பொருளாக இருந்தது. முதல் முறையாக காதல் டூயட் பாடவந்தேனே என்றொரு பகடிப் பாடல் உண்டு. வித்தியாசமான காதல் பாட்டு. அப்போது பெரிய அளவில் புகழ் பெற்றிருந்த ஹிந்தி நடிகை ஜீனத் அம்மனை சீண்டிப்பார்க்கும் ஒரு வரி கூட இதிலுண்டு. சட்டென ஆகாயத்தில் பறக்கும் உணர்வையூட்டும் இசையாக ஒலித்தது இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன பாடல். ஜிவ்வென்ற துளிர்ப்பான இசைகொண்டது.
நான்கைந்து வருடங்களுக்கு முன் அரிதாக எனக்குக் கிடைத்த ஒரு சி டி யில் அந்தப் பாடலைக் கேட்டேன். பள்ளி நாட்களில் மிகவும் ரசித்துக் கேட்ட பாடல் அது. மீண்டும் அந்தப் பாடலைக் கேட்டபோது அதே பழைய வண்ணம் மனதை ஆக்ரமிக்க, இசை நெஞ்சத்தில் பூங்காற்று வீச, அங்கு வந்த என் சகோதரியின் மகன் என்னை ஏளனமாகப் பார்த்தபடி சிரித்துக்கொண்டே கடந்து சென்றான். "ஒனக்கெல்லாம் வேற வேலையே கெடையாதா?" என்ற செய்தி அந்தப் புன்னைகையின் பின்னே ஒளிந்திருந்தது. நானோ அதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல் என் நினைவுகளின் மடியில் சுகமாக தஞ்சமடைந்தேன். சிலருக்கு ஏளனம் சிலருக்கோ ஏகாந்தம். சில பாடல்கள்தான் நம் எண்ணங்களை எங்கெங்கோ இழுத்துச் செல்லும் வலிமை கொண்டவையாக இருக்கின்றன!. அப்படியான அந்தப் பாடல்
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள். பட்டாக்கத்தி பைரவன் என்ற அதிகம் அறியப்படாத படத்தில் உள்ளது இந்த அற்புத இசை இழை. பாடலின் துவக்கமே போதை தரும். அதிக சத்தங்களின்றி மெதுவாக கிளம்பும் ஒரு ரயில் போன்று துவங்கும் இசை பின்னர் சடசடவென்று கோடை மழை போல் சரமாரியாக கொட்ட, வானவில்லின் மீது படுத்துக்கொண்டது போன்ற மயக்கம் தழுவ, தேனொழுகும் மெட்டுடன் பாடல் துளித்துளியாக உள்ளத்தில் நிரம்பும். இது சிவாஜிக்கான பாட்டு என்பதே அப்போது எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இன்னொரு அழகான ஓவியம் போன்ற பாடலும் உண்டு இதே படத்தில்.
தேவதை ஒரு தேவதை பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள் என்ற பாடலே அது. பாடலின் போக்கே எதோ ஊஞ்சலில் ஆடுவதைப் போலிருக்கும்.
77இல் பட்டி தொட்டி எங்கும் குதித்து விளையாடிய 16 வயதினிலே படப் பாடல்கள் அடுத்து இளையராஜாவை எடுத்துச் சென்ற இடம் அவரே எதிர்பார்க்காதது. 77 இல் அவர் இசையமைத்த ஒரு படம் தீபம். இது ஒரு மிகச் சாதாரண தகவல் போல தெரிந்தாலும் இதன் பின்னணியில் உள்ள அசைவுகள் அசாதாரணமானவை. தமிழக அரசியல் சூழல் அப்போது இந்திரா காந்தி 75 இல் அனுமதித்திருந்த எமெர்ஜென்சி புயலின் பாதிப்பில் சிக்கியிருந்த நேரம். தமிழக அரசியலில் புதிதாக உருவான இரட்டை இலை கட்சி மக்கள் மத்தியில் பெற்ற பெருத்த வரவேற்ப்பும் அதன் தலைவரான நடிகர் எம் ஜி ஆரின் மீது மக்கள் வைத்திருந்த அபிமானமும் மிகையில்லாத உண்மைகள். அதுவரை திரைத் துறையில் கோலோச்சி வந்த இருவர்களில் முதன்மையானவரான எம்ஜிஆர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஆனதும் வேறு வழியின்றி (அவர் தான் நடிக்க அனுமதி கேட்டு அது கடுமையாக நிராகரிக்கப்பட்டது) நடிப்பைத் துறந்து அரசியலில் கலந்துவிட, மீதமிருந்த ஒரே பெரிய ஆளுமையாக சிவாஜி நீடித்தார். இருந்தும் அவரது அரசியல் காய் நகர்த்தல்கள் மக்களிடம் செல்வாக்கு பெறவில்லை. இது அவரது படங்களிலும் எதிரொலித்தது. தொடர்ந்து அவரது படங்கள் தோல்வியைத் தழுவியபடி இருந்தன.
இந்த சமயத்தில் சிவாஜியின் நீண்ட நாள் நண்பரும் தயாரிப்பாளருமான பாலாஜி (இவர் வழக்கமாக தெலுகு மற்றும் ஹிந்திப் படங்களை தமிழில் மறுபதிப்பு செய்பவர்.) ஒரு புதிய படத்தை உருவாக்க முனைப்பு காட்டினார். இந்த காலகட்டத்தில் அவருக்கும் வெற்றி தொட முடியாத புள்ளியாகவே இருந்தது. இந்த சூழலில்தான் தீபம் என்ற படம் உருவானது சிவாஜி நடிப்பில். பாலாஜி, சிவாஜி இருவருக்குமே தீபம் ஒரு மிக முக்கியமான படமாக இருந்தது. எனவே சில மாற்றங்களை அனுமதிக்கவேண்டிய தேவைகள் அவர்களுக்கு எழுந்தன. இதன் நீட்சியாக அதுவரை சிவாஜி படங்களுக்கு தொடர்ச்சியாக இசை அமைத்து வந்த கே வி மகாதேவன், எம் எஸ் வி போன்ற பழைய பள்ளி இசை அமைப்பாளர்களை (old school musicians) ஒதுக்கி விட்டு முதல் முறையாக ஒரு புதியவருக்கு கதவுகளைத் திறக்கலாம் என்ற எண்ணம் அப்போது அவர்களுக்கு ஏற்பட்டதன் விளைவு சிவாஜி-இளையராஜா இணைப்பு. இது தீபம் படத்தில் நிகழ்ந்தது.
இதற்கு முன்னோடியாக ஒரு பத்திரிகை பேட்டியில் சிவாஜி அப்போது தான் அதிகம் விரும்பும் தனக்குப் பிடித்த பாடலாக குறிப்பிட்டது
செந்தூரப் பூவே என்ற பதினாறு வயதினிலே படப் பாடலைத்தான். இந்த தகவலுக்குப் பின்னே இருந்த செய்தி சிவாஜி இளையராஜாவை கவனிக்க ஆரம்பித்துவிட்டார் என்பதை சொல்லாமல் சொன்னாலும் தீபம் படத்தில் இளையராஜா இசை அமைப்பது அப்போது பலருக்கு பெருத்த வியப்பைக் கொடுத்தது. 76 இல் வந்த ஒரு சிறிய இசை அமைப்பாளர் வந்தே ஒரே ஆண்டில் சிவாஜி படத்திற்கு இசை அமைப்பது அப்போது பலரது புருவங்களை உயரச் செய்தது. பத்து வருடங்களுக்கும் மேலாக திரைத் துறையில் இருந்து வந்த சங்கர் கணேஷ் இரட்டையர்களுக்குக் கிடைக்காத இந்த பொன்னான வாய்ப்பு இளையராஜாவுக்குப் போனது அவரை நோக்கி தயாரிப்பாளர்கள் பலரும் படையெடுக்கும் நிலைக்கு அவரை உயர்த்தியது. படம் வெற்றி பெற்று பாடல்கள் மக்கள் மனதில் இடம் பிடித்தன.
அந்தப்புரத்தில் ஒரு மகாராணி, பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே, என்ற இரண்டு பாடல்களும் சிறப்பானவை. சிவாஜிக்கு இளையராஜா எவ்வாறு இசை அமைப்பார் என்று எதிர்பார்த்தவர்களின் ஆவலை பூர்த்தி செய்தது
அந்தப்புரத்தில் ஒரு மகாராணி. மீதமான
பேசாதே, ராஜா ஒரு யுவராஜா என்பவை அதிகம் பேசப்படாத சராசரி வகை. சற்று தொய்வானவை.
சிவாஜிக்கு தொடர்ந்து ஆறு படங்களுக்கு இசை அமைத்திருந்தாலும் இளையராஜாவினால் சிவாஜி பிராண்ட் எனப்படும் அவரது ஆளுமைக்கான நேர்த்தியான இசையை அளிக்கமுடியவில்லை என்பதே உண்மை. தீபம் தியாகம் நல்லொதொரு குடும்பம் என்று துவக்கத்தில் சிவாஜிக்கான இசையை கொடுப்பதில் கடுமையான பிரயத்தனம் காட்டிய இளையராஜா அதன் பின் தன் பாணியில் சிரமங்களின்றி சென்றுவிட்டார். டி எம் எஸ் குரல் ஒன்றே சிவாஜி என்ற நடிகனை அடையாளம் காட்டக்கூடியதாக ஒலித்தது.
உதாரணமாக கவரிமான் என்ற படத்தின் பூப்போலே உன் புன்னகையில் பொன் உலகினைக் கண்டேனம்மா என்ற பாடல் (மட்டுமே) சிறப்பாக இருந்தாலும் சிவாஜி பாணி கொஞ்சமும் இல்லாத பாடல். விஜயகுமார், சிவகுமார் அல்லது கமலஹாசன் பாடுவதைப் போலவே இருக்கும். "சிவாஜிக்கு இளையராஜா போட்டிருக்கிற பாட்டப் பாரேன்" என்று நாங்கள் கிண்டல் செய்வதுண்டு.
நல்லதொரு குடும்பம் படத்தின் செவ்வானமே பொன்மேகமே, மிக ரசனையான பாடல். சிவாஜிக்கான சிந்து நதிக் கரையோரம் அந்தி நேரம் பழைய எம் எஸ் வி பாணியில் இருக்கும் ஒரே நல்ல பாடல். , கண்ணா உன் லீனாவிநோதம், 1, 2 சசச்சா (எல் ஆர் ஈஸ்வரி இளையராஜா இசையில் பாடிய வெகு சில பாடல்களில் ஒன்று.) என்ற இரண்டுமே மிக நலிந்த இசை அமைப்பு கொண்டவை. ஒரு தடவைக்கு மேலே கேட்கவே முடியாது.
ஆனால் தியாகம் படத்தின் பாடல்கள் தென்றலைத் தொட்டு வரைந்த ஓவியங்கள் போல வெகு இனிமையாக இருந்தன, தேன் மல்லிப் பூவே பூந்தென்றல் காற்றே , நல்லவெர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி, வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள் என இதன் பாடல்கள் கேட்க சற்றும் அலுப்பைத்தராதவை. குறிப்பாக இன்றளவும் நான் மிகவும் ரசித்துக் கேட்கும் பாடலான நல்லவெர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒரு காவியப் பாடல்.
இதே போல நான் வாழவைப்பேன் படத்தின்
ஆகாயம் மேலே பாதாளம் கீழே ஆனந்த உலகம் நடுவினிலே, என்னோடு பாடுங்கள் நல்வாழ்த்துப் பாடல்கள், திருத்தேரில் வரும் சிலையோ என அனைத்துப் பாடல்களும் கேட்க ஆனந்தமயமாக இருக்கும்.
எந்தன் பொன் வண்ணமே அன்பு பூ உள்ளமே என்ற டி எம் எஸ் பாடிய பாடல் அப்போது பெரிய அளவில் பிரபலம் அடைந்தது.
தொடர்ந்து ரிஷிமூலம் படத்தில் வந்த இரண்டு பாடல்கள் ரம்மியமான உணர்வை கொடுப்பவை.
ஐம்பதிலும் ஆசை வரும் அப்போது பலரால் அதிகம் பகடி செய்யப்பட்டாலும் மிக அருமையான கானம். நான் அதிகம் ரசிக்கும் பாடல்
நேரமிது, நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுது என்ற கண்ணியமான தொல்லை தராத சுக கீதத்தைதான். ஒரு தாலாட்டைப் போன்ற காதல் கானம். இந்தப் பாடலின் போதுதான் இளையராஜாவுக்கும் டி எம் எஸ் ஸுக்கும் மோதல் ஏற்பட்டதாகப் படித்த நினைவு. பாவங்கள் இல்லாமல் பாடுகிறார் என்று
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும், சட்டி சுட்டதடா கை விட்டதடா, ஆறு மனமே ஆறு, யார் அந்த நிலவு, காற்று வாங்கபோனேன் ஒரு கவிதை வாங்கிவந்தேன், அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம், ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன் போன்ற ஆன்மாவை தொடும் பாடல்களைப் பாடியவரை இகழ்ச்சியாக குறிப்பிட்டது அப்போது பெரிய விவாதப் பொருளாக இருந்தது. இதற்கு முன்னோடியாக சிலோன் வானொலிக்கு அளித்த பேட்டி ஒன்றில் டி எம் எஸ் இளையராஜா இசை பற்றி கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிக்கு (ஓரம்போ பாடல் பிரபலமாக இருந்த சமயம் அது.) " இது போன்ற மலிவான பாடல்கள் மக்களிடம் நிற்காது" என்ற கருத்தில் எதையோ சொல்லப் போக இது அவரை கடுமையாக கொதிப்படையச் செய்ததாக தகவல் உண்டு. இதன் நீட்சிதான் டி எம் எஸ் - இளையராஜா இடையேயான விரிசல்.
வெற்றிக்கு ஒருவன் என்றொரு படம் இந்த சமயத்தில் (79) வந்தது. சிவாஜி ஒன்றும் தெரியாத அப்பாவியாக(!) நடிப்பதாக நினைத்து நம்மை படுத்தியிருப்பார். இவரது தந்தை வழக்கமான மேஜர் சுந்தரராஜன். நண்பர்கள் போல பழகுவார்களாம். அம்மா புஷ்பலதா கூட படத்தில் ஒருமுறை இவர்களைப் பார்த்து "சகிக்கல" என்று சொல்லும் வசனம் வரும். நமக்கும் அப்படித்தான் தோன்றும். தந்தையும் மகனும் சேர்ந்து "அந்த" மாதிரியான ஆங்கிலப் படங்களுக்கு சென்று பார்ப்பதாக ஒரு காட்சி வேறு உண்டு. போலிஸ் அதிகாரியான சுந்தரராஜன் கொல்லப்பட்டதும் நம் தமிழ் சினிமா ஊட்டும் திடீர் விதியின் படி வெகுண்டு எழும் ஒன்றுமே தெரியாத சிவாஜி தந்தையை கொன்றவர்களை பழி வாங்க சபதம் ஏற்று, இடையில் ஸ்ரீப்ரியாவுடன்
தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி, முத்தமிழ் சரமே இளங்கொடி மலரே போன்ற பாட்டெல்லாம் கோட் சூட் அணிந்து வித்தைக்காரன் போல ஆடிப்பாடி "எல்லாம்" அறிந்தவராகி, இறுதியில் ஹோட்டல் ஒன்றில்
கொடூர ஆப்பிரிக்க மேக்கப்பில் பலவிதமான ஆதிவாசி சேஷ்டைகளுடன்
ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ என்று கொடியவர்களைப் பார்த்து மங்களம் பாடிவிட்டு , (அவர்களுக்கு இவரை அடையாளம் தெரியாதாம். அதுதான் அந்த ஆப்பிரிக்க மேக்கப்பின் லாஜிக்.) வழக்கமான டிஷ்யூம் டிஷ்யூம் சண்டைக்குப் பிறகு பழிவாங்கல் இனிதே முடிய, ஸ்ரீப்ரியாவை அணைத்துக்கொள்வார். பார்க்கிற நமக்குத்தான் படு பயங்கரமாக எரியும். என் பள்ளி நாட்களில் நான் பார்த்த சிவாஜி படங்கள் பொதுவாக இதுபோன்ற குப்பைகள்தான். அதனால்தான் யாராவது என்னிடம் சிவாஜி மாதிரி யாரும் நடிக்க முடியாது அவர் ஒரு மிகச் சிறந்த நடிகர் என்றால் ஒரு ஏளனச் சிரிப்புடன் "எல்லாம் எங்களுக்குத் தெரியும். நீங்க ஒங்க வேலையப் பாருங்க" என்று எண்ணிக்கொள்வேன். நான் பார்த்த சிவாஜி படங்கள் அப்படி. அவர் தன் ஆரம்ப காலத்திலேயே முதல் 150 படங்களில் தன் அனைத்து நடிப்பையும் காட்டி முடித்துவிட்டார் என்ற உண்மையெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. நான் எப்படி சிவாஜியை ரசிக்கத் துவங்கினேன் என்பது ஒரு தனிப் பதிவாகவே எழுதக்கூடிய விவரங்கள் கொண்டது. இதை இப்போது தவிர்த்து விட்டு மையமான தகவலைப் பார்ப்போம்.
இத்தனை படங்கள் இருந்தும் இந்தப் படத்தை நான் இப்படி குறிப்பிடுவதற்குக் காரணம் இதில் வரும் ஒரு கொலைக் காட்சி. மற்றும் ஒரு பாடல். எதோ ஒரு ஆங்கிலப் படத்திலிருந்து சுட்ட காட்சிதான். வில்லன் மோகன் பாபு தனியாக நீண்ட தூரம் நடந்து சென்று ஒரு ஆட்களில்லாத கட்டிடம் மேலே நின்று பெட்டியைத் திறந்து உள்ளே இருக்கும் பல துண்டுகளை நிதானமாக ஒவ்வொன்றாக இணைத்து ஒரு பெரிய ரைபிள் ஒன்றை உருவாக்கி டெலஸ்கோப் உதவியுடன் குறி பார்த்து சுடுவார்- சுந்தர்ராஜனை. (ஜான் எப் கென்னெடியை சுட்டதுபோல). சுந்தர்ராஜனுக்கு இதெல்லாம் ரொம்பவும் அதிகம் என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியாது. அந்த காட்சி மனதில் அப்போது பதிந்துவிட்டது. படத்திற்கு கொடுத்த 2.15 காசு அதற்கே சரியாகப் போய்விட்டது என்று நினைத்துக்கொண்டேன். அந்த காட்சி மட்டும் படத்தோடு கொஞ்சமும் ஒட்டாமல் இருக்கும். அதன் பின் அந்த சிவாஜியின் கர்ண கடூர காட்டுவாசி தோற்றத்தில் வரும்
ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ என்ற பாடல் என்னைக் கவர்ந்தது. சொல்லப்போனால் மேற்கத்திய பாணி என்று இளையராஜா எண்பது, தொண்ணூறுகளில் அமைத்த கொடூரமான இசையை விட (
ராஜா ராஜாதிராஜன் இந்த ராஜா வகைகள்.) இந்தப் பாடலில் மேற்கத்திய இசையை அபாரமாக அமைத்திருப்பார். துடிப்பான இசையில் வெட்டிச் செல்லும் மெட்டு. ஒரு முறை கேளுங்கள். இந்தப் பாடலை இத்தனை தூரம் நினைவில் வைத்திருக்கும் வெகு சிலரில் நானும் ஒருவனாக இருப்பேன் என்றே நினைக்கிறேன்.
இச்சமயத்தில் வந்த பல படங்களுக்கு இளையராஜாவின் இசை ஒரு புதிய வண்ணம் அளித்தது. விரைவாக அவரது இசை நோக்கி இளைஞர்கள் நகரத் துவங்கினார்கள். அப்போது பொதுவாக இப்படித்தான் நாங்கள் பேசிக்கொள்வோம்;" இசை யாரு? இளையராஜாவா? இல்லை வேற ஆளா?"
இளமை என்னும் பூங்காற்று பாடல் அளித்திருந்த சுகம் பற்றி போன பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதைத்தவிர பகலில் ஒரு இரவு படத்தின் பாடல்கள் எல்லாமே அற்புதமான இசை வடிவங்கள் .
பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம், தாம் ததீ ஆடும் உள்ளம் பாடும் காவியம் (மிக அருமையான இசையமைப்பு கொண்ட வளைந்து வளைந்து செல்லும் மலைச்சாலை போன்ற மெட்டு கொண்ட பாடல்)
, கலையோ சிலையோ, தோட்டம் கொண்ட ராசாவே என்று அதுவரை காணாத இசைச் சோலைகள் விரிந்தன.
காற்றினிலே வரும் கீதம் படப் பாடல்கள் அடுத்த இனிய அதிர்ச்சி அளித்தன. சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன், ஒரு வானவில் போல என் வாழ்விலே வந்தாய், கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் போன்ற பாடல்கள் இடைவிடாது ஒலித்து எம் எஸ் வி யின் சாம்ராஜ்யத்தை சற்றே அசைத்தன. ஒரு புதிய இசை வடிவம் வந்துவிட்டதை இளையராஜாவின் தொடர் வெற்றி உறுதி செய்தது.
எதோ நினைவுகள் மனதிலே அகல் விளக்கு படத்தில் இடம் பெற்ற ஒரு பசுமையான எண்ணத்தை விதைக்கும் அருமையான பாடல். நல்லிசையின் நீட்சியாக வந்த இளையராஜாவின் பல பாடல்களில் இதுவும் ஒன்று.
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது பூந்தளிர் படத்தின் மிக சிறப்பான பாடல். பாரம்பரிய ராக தொடர்பு கொண்ட மெட்டு மழைத்துளி போல பாடல் முழுவதும் தெறித்து நம் மீது படரும். இதிலுள்ள இன்னொரு நல்ல பாடல்
ராஜா சின்ன ராஜா பூந்தளிரே இன்பக் கனியே. இதையெல்லாம் விட மற்றொரு மயக்கும் கானம் இந்தப் படத்தில் உண்டு.
மனதில் என்ன நினைவுகளோ இளமை கனவோ என்று துவங்கி அபாரமான தாள ஓசையுடன் இசை இசையாக உள்ளுக்குள் இறங்கும் இனிய கானம். எஸ் பி பி யும் எஸ் பி ஷைலஜாவும் சேர்ந்து பாடிய டூயட். (இருவரும் சேர்ந்து பாடிய முதல் பாடலாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.) இது போன்ற தேன்துளிகளை புதைத்துவிட்டு பின்னாளில் வந்த நீர்த்துப் போன பாடல்களை இளையராஜாவின் முத்திரை இசையாக சிலர் பேசுவது குறித்து எனக்கு வருத்தமே.
தென்ன மரத்துல தென்றல் அடிக்குது நந்தவனக் கிளியே என்றொரு பாடல் லட்சுமி படத்தில் இருக்கிறது. பாடல் வந்த புதிதில் இது எங்கள் நண்பர்கள் வட்டத்தில் அதிகம் விரும்பப்பட்ட பாடலாக இருந்தது. தடத்தடவென ஓடும் இசை. கேட்பதற்கு அலாதியாக இருக்கும். இதே படத்தில் உள்ள
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே என்ற பாடல் சுசீலாவின் குரலில் மிக மென்மையாக ஒலிக்கும். இளையராஜாவின் இசையில் சுசீலா என்ற கானக் குயிலின் தனித்தன்மை மிக இனிமையாக வெளிப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.
முள்ளும் மலரும் வெளிவந்த பின் மகேந்திரன் என்ற இயக்குனர் பெரிய அளவில் பேசப்பட்டார். தொடர்ந்து உதிரிப்பூக்கள் என்ற படம் அவர் இயக்கத்தில் வந்தபோது மகேந்திரன் தமிழக சத்யஜித்ரேவாக மாறிப்போனார். படத்தில் இல்லாத குறியீடுகளும், உலகத் தரமும் விமர்சகர்களால் இன்றுவரை அலசப்பட்டு வருகின்றன. தமிழில் வந்த வெகு சில தரமான படங்களில் மகேந்திரனுக்கும் கண்டிப்பாக ஒரு பங்கு இருக்கிறது என்பது நிச்சயமான உண்மை. உதிரிப்பூக்கள் படத்தின் நான் விரும்பும் ஒரே பாடலான
அழகிய கண்ணே உறவுகள் நீயே பாடல் ஒரு துயர இசையின் பிரதியாக கேட்கும் நம்மை நாம் மறந்துவிட்ட சோகங்களுக்கு அழைத்துச் செல்லும் வலிமை கொண்டது. ஆனால் ஒரு பாசமிகு தாய் ஒரு மகிழ்ச்சியான சூழலில் எதற்காக இத்தனை துயரமாக தான் நேசிக்கும் குழந்தைகளிடம் பாடவேண்டும் என்ற கேள்வி எனக்குண்டு.
80ஆம் ஆண்டில் இளையராஜாவின் 100 வது படமான மூடுபனி வந்தது. பிறமொழிப் படங்களை எந்தவித குற்ற உணர்ச்சியுமின்றி தமிழில் பிரதி எடுத்து தன் மேதமையை நிரூபித்த பாலு மகேந்திராவின் மூன்றாவது படம். இன்றும் பலரால் விரும்பப்படும் வசந்தமாக வீசும் கானம் ஒரு கானம் இதிலுள்ள
என் இனிய பொன் நிலாவே. ஜேசுதாசின் நெளிவான ததத தாத்ததா இன்றைக்கும் நம் மனதை சுண்டியிழுக்கும். ஒரு விதமான கிறக்கம் கொடுக்கும் பண்பான காதல் கீதம். மேற்கத்திய இசையும் நமது ராகங்களும் இணைந்து படைத்த சுவையான இசை விருந்து. என் நண்பர் ஒருவர் இந்தப் பாடலை உலகின் தலை சிறந்த பாடலாக சிலாகித்துப் பேசுவார். எண்பதுகளின் இறுதி, தொன்னூறுகளில் வந்த இளையராஜாவின் பாடல்களை இதனுடன் ஒப்பீடு செய்து ," அதான் பாட்டு. என் இனிய பொன் நிலா கொடுத்த ராஜாவை காணவில்லையே" என்று கண்ணீர்த் துளிகள் இல்லாமல் வருத்தப்படுவார். இதே படத்தின்
பருவ ராகங்களின் கனவு என்ற பாடல் அவ்வளவாக பிரபலம் அடையவில்லை. ஆனால் நேர்த்தியாக இசைக்கப்பட்ட தரமான பாடல். இதில்
ஸ்விங் ஸ்விங் என்றொரு ஆங்கிலப் பாடல் உண்டு. டாக்டர் கல்யான் என்பவர் இளையராஜாவின் இசையில் இதுபோல சில ஆங்கிலப் பாடல்கள் அப்போது பாடியிருக்கிறார். (இன்னொரு பாடல் காளி என்ற படத்தில் இருக்கிறது.) நான் இந்தப் பாடலைப் பதிவு செய்து அடிக்கடி கேட்ட நாட்கள் உண்டு.
சங்கர்லால் என்று ஒரு படம் வருடக்கணக்காக எடுக்கப்பட்டு இறுதியில் வெளிவந்தது. படத்தில் கமலஹாசன் பலவித முக அமைப்பில் எந்தவித மேக்கப் உதவியும் இல்லாமலே வருவார். வண்ணப் படம் திடீரென கருப்பு வெள்ளையாக மாறும். இளங்கிளியே இன்னும் விளங்கலியே, கஸ்தூரி மான் ஒன்று என்று இரண்டு பாடல்கள் அப்போது வானொலிகளில் வட்டமடித்தன. இந்த உருப்படாத படத்துக்கு கூட இளையராஜா நல்லா பாட்டு போட்டுருக்கார் என்று நாங்கள் சொல்வதுண்டு.
சட்டம் என் கையில் படத்தின் சொர்க்கம் மதுவிலே சொட்டும் அழகிலே இளைஞர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதில் வரும் வினோதமான பெண் ஓசை கேட்பவரை திடுக்கிடச் செய்யும். ஆங்கில பாணி என்று நினைத்துக்கொண்டு இளையராஜா வெகு மலிவான முறையில் பாடலை அமைத்திருப்பார். இடையிசை மட்டும் கொஞ்சம் ஆறுதல் அளிக்கும். ஒரே இடம் நிரந்தம் என்ற பாடல் சற்று தெளிவான கானம். சலிப்பின்றி கேட்கலாம். வழக்கமான இளையராஜா பாணி அதிரடி கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ. ஆழ்கடலில் தேடிய முத்து என்றொரு நல்ல பாடல் இருக்கிறது.
இளையராஜாவின் இசை தமிழ் திரையிசையின் போக்கை மாற்றிக்கொண்டு வந்த நேரமது. இந்த இடத்தில் நாம் ஒரு மிக முக்கியமான நிகழ்வைப் பற்றி பேசவேண்டும். இளையராஜாவின் இசை எவ்வாறு சில நடிகர்களின் larger-than-life என்ற அபிரிமிதமான ஆளுமைக்கு வலு சேர்த்தது என்பதை இங்கே நாம் நினைவில் கொள்வது அவசியம். அப்போது வளர்ந்து வந்த புதிய தலைமுறை நடிகர்களான கமல், ரஜினி இருவருக்கும் இளையராஜா அளித்த இசை மிகவும் குறிப்பிடத்தகுந்தது. ஒரு விதத்தில் அவர்களிருவரும் இளையராஜாவின் இசையினால் வார்த்து எடுக்கப்பட்டவர்கள் என்று சொல்லலாம். எவ்வாறு தமிழ்த்திரையின் மகத்தான சகாப்தங்களான எம் ஜி ஆர், சிவாஜி இருவரின் அசுர வளர்சிக்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே வி மகாதேவன், எம் எஸ் வி போன்றவர்களின் இசை ஒரு மிக முக்கியமான அம்சமாக இருந்ததோ அதே அளவில் 70களின் இறுதி மற்றும் 80களில் கமல் ரஜினி இருவரின் வணிக வெற்றி மற்றும் தனி ஆளுமை வளர்ச்சிக்கு இளையராஜாவின் இசையும் ஒரு மறுக்கமுடியாத காரணமாக இருந்தது. ஒரு நடிகனைக் கொண்டு பாடல்களை தேர்வு செய்யும் நம் சமூகத்தின் பொது எண்ணப்படி சிவாஜி பாடல்கள் என்று கணக்கிட்டால் அவற்றில் பதில் ஒன்று கூட இளையராஜா பாடலாக இருக்காது. ஆனால் அதே சமயத்தில் கமல், ரஜினி பாடல்கள் என்று ஒரு பட்டியலிட்டால் பத்தில் எட்டு இளையராஜா இசையில் உருவானவைதான்.
கமல் ரஜினி இருவரின் துரித புகழ் கண்ட வெற்றிடங்கள் இளையராஜாவின் இசையினால் நிரப்பப்பட்டன. அவரது இசை மட்டுமே அவர்களை புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்றது என்பதல்ல இதன் பொருள். ஆனால் அவர்களின் வெற்றிக்கு மிக அத்தியாவசியமான உந்து சக்தியாக பின்புலத்தில் இயங்கிய பல காரணிகளில் இளையராஜாவின் இசைக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது. ஒரு கமல் பாடல் என்று நீங்கள் கற்பனை செய்தால்
அந்தி மழை பொழிகிறது, நினைவோ ஒரு பறவை, கண்ணே கலைமானே, என்ன சத்தம் இந்த நேரம், வனிதாமணி வனமோகினி, வளையோசை கலகலவென, உன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் போன்ற பாடல்கள் உங்கள் மனதில் உலா வருவதை தவிர்க்க முடியாது. ரஜினியின் ஆளுமையும் இதே இசையின் மற்றொரு பரிமானம்தான். எண்பதுகளில் சாமானியர்களின் நாயகனாக வடிவம் பெற உதவிய பைரவி , ப்ரியா, முரட்டுக்காளை, தனிக்காட்டுராஜா, நல்லவனுக்கு நல்லவன் போன்ற படங்களின் பாடல்கள் ரஜினியை தமிழகத்தின் மூலைகளில் இருந்த ரசிகனிடம் அறிமுகம் செய்தன.
என் நண்பர் ஒருவர் தீவிர ரஜினி ரசிகர். லிங்கா படத்தையே தொடர்ந்து மூன்று முறை தியேட்டரில் மூர்ச்சையடையாமல் பார்த்துவிட்டு, "இன்னும் அஞ்சு தடவ பாக்கணும்" என்று பயமில்லாமல் சொல்லி எனக்கு அதிர்ச்சி கொடுத்தவர். என் வீட்டிற்கு வரும் சமயங்களில் ,"ஏதாவது இளையராஜா பாட்டா போடு." என்று அழுத்தமாக சொல்வார். அவர் வந்தாலே நான் இளையராஜா பாடல்கள் அடங்கிய ஒரு சிடியை தயாராக வைத்திருப்பேன். ஆனால் மிக முரண்பாடாக அவர் அடிக்கடி விரும்பிக் கேட்பவை காக்கிக் சட்டை படத்தின்
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே, கண்மணியே பேசு, பூப்போட்ட தாவணி, பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள பாடல்கள்தான். "ஒரு பாட்ட போட்டுட்டு இருபது வருஷம் பின்னால போக வச்சுட்டியேப்பா" என்று குறிப்பிடுவார். இவரைப் பற்றித்தான்
இசை விரும்பிகள் I காலமும் கானமும் பதிவில் நான் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தேன்.
----எனது நண்பர் ஒருவர் என்னை பார்க்க வரும் பொழுதெல்லாம் ஒரு குறிப்பிட்ட பட பாடல்களை இசைக்க சொல்லி கேட்பது வழக்கம். நானும் அதை தவறாமல் செய்து கொண்டிருக்கிறேன். அது அவர் கல்லூரி நாட்களில் பார்த்த படம். அதன் பாடல்களை கேட்கும் போது அந்த நாட்கள் மீண்டும் அருகே வருவது போன்ற ஒரு எண்ணம் அவருக்கு ஏற்படுவதை அவர் கண்களில் தெரியும் ஒருவித மயக்க நிலையை கொண்டே நான் புரிந்து கொள்வதுண்டு. இதை அவர் என்னிடம் ஒவ்வொரு முறையும் சொல்லி " ஒரே பாட்டில இருபது வருஷம் பின்னால போயாச்சே "என்று களிப்புடன் சொல்வது உண்டு.குறிப்பாக வானிலே தேனிலா, கண்மணியே பேசு, பட்டுக்கன்னம் என்ற காக்கி சட்டை பட பாடல்கள்தான் அவை.(ஒரு விஷயம்; அவர் ஒரு தீவிர ரஜினி ரசிகர்). இதுதான் நாம் நாம் சிறு வயதில் கேட்ட பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்க விரும்புவதின் உளவியல்.-----
பொதுவாக மோகன், கமல் படப் பாடல்களாக அதிகம் விரும்பிக் கேட்கும் இவர் ஒருமுறை "ஏதாவது என் தலைவர் பாட்டு போடேன்" என்று என்னை ஏகத்துக்கும் படுத்தியதால் மிக கடுமையான தேடுதலுக்குப் பிறகு ஒரு சிடியை கண்டெடுத்து ஓடவிட்டேன். பாடிய பாடல் சந்தனக் காற்றை மனதுக்குள் நிரப்பியது. நான் பள்ளி நாட்களில் ஓயாது ரசித்துக் கேட்ட மிக அற்புதமான காதல் கீதம். தென்றல் நேராக மின்னல் போல பாய்ந்து நெஞ்சைத் தழுவும் கானம்.
சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வாவா என்ற தனிக்காட்டு ராஜா படப் பாடல்.
பாடல் பாடிக்கொண்டிருக்க இரண்டாவது சரணம் தொடங்கியதும் கண் மூடி பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த என் நண்பர், "ரஜினிகாந்த் இளையராஜா காலைத் தொட்டுக் கும்பிடனும்" என்று திடீரென தூக்கத்தில் பேசுவது போல சொன்னார். கேட்ட எனக்கு தூக்கிவாரிப் போட்டது. "ஏன்?" என்றேன் கலவரத்துடன். "பின்ன? இந்த மாதிரி ஒரு மெலடியை ரஜினிக்கு இளையராஜா போட்டிருக்கான் பாரு. ரஜினிக்கெல்லாம் பொதுவாக எம்மனசு தங்கம் பாணி பாட்டுத்தான் சரி. சும்மா சாதாரணமா பாட்டு போட்டாவே நாங்க அந்த பாட்ட (ரஜினி ரசிகர்கள்) ஹிட் பண்ணிடுவோம். இப்படி அநியாயத்துக்கு அருமையான பாட்டா போட்டா என்ன பண்றது?" என்றார் வெகு இயல்பாக. "இப்ப பாருங்க, இந்தப் படத்தில ரஜினிகாந்த் பேசின எந்த வசனமும் எனக்குத் தெரியாது. ஆனால்
நான்தான் டாப்பு மீதியெல்லாம் டூப்பு பாட்டு மட்டும் தெரியும்." என்றார் இதன் நீட்சியாக. "ரஜினிக்காவது சும்மா அப்படி இப்படின்னு பாட்டு இருக்கும். ஆனா கமலஹாசனுக்கு இளையராஜா உயிரக் குடுத்து பாட்டு போட்டிருப்பானப்பா. எத்தன பாட்டு?" என்று சிலாகித்தார். இறுதியில் "கமல் பாட்டுன்னாவே இளையராஜாதான்." என்று சூடம் கொளுத்தாமல் அடித்துச் சொன்னார்.
காலைத் தொடும் சம்பிரதாயங்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஆனால் அவர் கூறியது ஒரு ஏளனச் சிரிப்புடன் புறந்தள்ள முடியாத ஒரு செய்தியை எனக்கு உணர்த்தியது. அவர் ஒன்றும் மிகப் பெரிய இசை விமர்சகரோ, இசை விற்பன்னரோ இல்லை. அவருக்குத் தோன்றியதை என்னிடம் ஒரு தகவலாக பகிர்ந்துகொண்டார். அவர் கூறியது உண்மைதான். கமல் ரஜினி இருவரது அசாதாரண வெற்றிகளில் இளையராஜாவின் நிழல் கண்டிப்பாக இருக்கிறது. ஒரு செடி வளரத் தேவையான நீராகவோ அல்லது சூரிய ஒளியாகவோ எதை வேண்டுமானாலும் உதாரணம் சொல்லக்கூடிய அளவுக்கு இளையராஜாவின் இசை இந்த இருவர்களின் பிரமாண்ட வெற்றியின் மூலக் கூறுகளில் ஒன்றாக இருக்கிறது. எம் ஜி ஆர் , சிவாஜி பாடல்கள் என்றாலே நமக்கு எம் எஸ் வி நினைவுக்கு வருவதுபோல கமல் ரஜினி பாடல்கள் இளையராஜாவை நினைவூட்டாமல் இருக்காது. என் நண்பர் சொல்வதுபோல இன்று அடுத்த வாரிசு, உல்லாசப் பறவைகள் போன்ற படு மோசமான இவர்களது படங்களை எடுத்துக்கொண்டால் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது
பேசக்கூடாது, ஜெர்மனியின் செந்தேன் மலரே போன்ற பாடல்கள்தான். இதன் உச்சமாக சகலகலாவல்லவன் என்ற படமும் அதன் பாடல்களும் கமலஹாசனை ஒரே நொடியில் வணிக வெற்றியின் கோபுரத்தில் உட்காரவைத்துவிட்டன. (நமது ரசனையை எண்ணி வியக்காமலிருக்க முடியாது.
இளமை இதோ இதோ தவிர அத்தனையும் துடைத்து தூர எறியவேண்டிய பாடல்கள். தமிழ் சினிமாவின் போதாத காலம்.)
சில சம்பவங்கள் நிகழ்ந்த பிறகு அவற்றை நாம் திரும்பிப் பார்க்கும்போதுதான் அதன் உண்மையான நிறம் நமக்குத் தெரியவருகிறது. ரயிலில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு சிறுவன் அல்லது சிறுமியை இங்கே உதாரணமாக எடுத்துக்கொள்வோம். அவர்களுக்கு தாங்கள் காணும் காட்சியாகிய மரங்கள், கட்டிடங்கள், வயல் வெளிகள்தான் பின்னோக்கி ஓடுவதாக தெரிகிறது. ஆனால் அந்த வயதையும் அனுபவத்தையும் தாண்டிய ஒரு நபருக்கு இது உண்மையில்லை என்று நன்றாகத் தெரியும். நான் என்னுடைய பால்ய பருவத்தில் இரவு வானத்தைப் பார்த்து நிலவு எத்தனை வேகமாக ஓடுகிறது என்று வியந்திருக்கிறேன். பல நாட்கள் இதற்காகவே இரவில் வீட்டைவிட்டு வெளியே வந்து ஓடும் நிலவை ஆச்சர்யம் பூசிய விழிகளோடு பார்த்திருக்கிறேன். இதன் நீட்சியாக எனது கல்லூரி நாட்களில் இரவு உணவுக்குப்பின் செயின்ட் ஜோசெப் விடுதியில் நண்பர்கள் புடைசூழ புல்தரையில் அமர்ந்து பல வேடிக்கைக் கதைகள் பேசிக்கொண்டிருக்கும் சமயங்களில் சில நேரங்களில் அந்த பழைய ஞாபகங்கள் மனதை ஆக்ரமிக்க, நான் மேலே பார்ப்பதுண்டு. அப்போதும் அந்த இரவு வானத்தில் கண்டது அதே காட்சியைத்தான். ஆனால் அப்போது நான் பார்த்தது வேகமாக நகரும் நிலவையல்ல. மாறாக ஓடும் மேகங்களை. நான் எதைப் பார்த்தேன் என்பதைவிட எதை உணர்ந்தேன் என்பதுதான் இங்கே முக்கியம். அது இதுதான்:
உண்மைகள் என்றுமே மாறுவதில்லை. மாறினால் அவைகள் உண்மைகளல்ல.
மாறுவது நம் புரிதல்களும் பார்வைகளும்தான்.
அடுத்து : இசை விரும்பிகள் XXV - உடைந்த ஒப்பனைகள்.