Sunday 4 December 2016

எம் எஸ் விஸ்வநாதன் : வசீகரக் கலைஞன்



நீராறும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும் என்ற தமிழ்ப் பண் பள்ளியில் பாடியபோது அது  கவிஞர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் கவிதை என்ற தகவல் மட்டும்தான் தெரியும். அது ஒரு சம்பிரதாயமான பாடல் என்ற எண்ணம் அப்போது மேலோங்கியிருந்தது. அந்தப் பாடலின் மெட்டு, இசையமைப்பு போன்ற சங்கதிகளைப் பற்றி அலட்டிக்கொள்ளாத பருவத்தைக் கடந்து விட்ட  பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அறிய நேர்ந்தது  தமிழ்த் தாய் வாழ்த்து என்ற அந்த இசைப் பாடலின் பின்னே இருந்த ஆளுமை எம் எஸ் விஸ்வநாதன் என்ற உண்மை. மின்சார மகரந்தத் துகள் போல அது என் மனதில் ஒட்டிக்கொண்டது. அடுத்த முறை அந்தப் பாடலைக் கேட்க நேர்ந்தபோதும் அதற்குப் பிறகேயும் அந்த மகரந்தம் சில சிலிர்ப்பலைகளையும் சின்னச் சின்ன வியப்புகளையும் உருவாக்கியபடியே இருந்தது--- இன்னும் அது தொடர்கிறது.

ஒரு முறை அந்தப் பாடல் பாடப்பட பிறகு என் நண்பர்களோடு துவங்கிய விவாதத்தில் பாடலின் இசையமைப்பு எம் எஸ் வி என நான் சொல்ல, அதை நம்ப மறுத்து  என்னுடன் வாக்குவாதம் செய்தார்கள் நண்பர்கள் சிலர். நானும் மற்றொரு நண்பரொருவரும் மட்டுமே அந்தக் கூட்டத்தில் இந்த உண்மை அறிந்திருந்தோம். மற்றவர்களுக்கு எங்கள் தகவல் ஒரு பொருட்டாகவே இல்லை. "நீயா? விட்டா ஜனகன மன பாட்டுக்கே எம் எஸ் வி தான் இசையமைச்சார்னு சொல்லுவியே?" என்ற ஏளன ஏவுகணைகள் என் மீது போனஸாக பாய்ந்தன.

ஆனால் இது எனக்கு திகைப்பாக இல்லை.  ஒருவிதத்தில் இதை நான் எதிர்பார்த்திருந்தேன். விவாதம் செய்தவர்களில் பலர் எம் எஸ் விக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்பது தவிர,  தங்கள் காலத்திற்கு முன்னாலிருந்த உலகம் குறித்த   கவலையோ அக்கறையோ இல்லாத அந்த அரைகுறை அறிவு அவர்களை அப்படித்தான் அவலட்சணமாகப் பேச வைக்கும் என்று  எனக்குத் தெரியும்.

இசையின் திசையில்  நகர்வதற்கும் அதன் ஆழங்களை நோக்கிச்  செல்வதற்கும்  அந்த இசையின் விதை நமக்குள் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இல்லையெனில் காலை நாளிதழின் நான்காம் பக்கத்தை தாண்டிச் செல்வது போன்றதொரு சுவாரஸ்வமற்ற அணுகுமுறையே  சாத்தியப்படும். அதை வைத்துக்கொண்டு அரைவேக்காட்டுத்தனமாக வீண் விவாதம் செய்யலாமே ஒழிய தீவிர கருத்தாடல்களுக்கு அது போதாது.

நான் சந்தித்த பலர் இசை பற்றி பேசுவதுண்டு. அப்படி இல்லாவிட்டாலும் எப்படியாயினும் அவர்களை இசை குறித்த உரையாடலுக்குள் கொண்டுவந்துவிடுவேன். ஆனால் ஐந்து நிமிடங்களுக்கு  மேல் அவர்களிடம் என் உரையாடலுக்கான தேடல் தொலைந்துபோய்  என் ஆர்வம் இலை மேல் படிந்த நீர் போல வடிந்துவிடும். அவர்களின் இசையறிவும், இசைத் தேர்வும், ரசனையும் என்னை மிரட்சி கொள்ளவைக்கும். உடனே "இதப் பார்றா எதோ இவனுக்குத்தான் எல்லாம் தெரியுங்கறாப்பல .." என்று உங்கள் மனதில் கோபம் கலந்த சிந்தனை துளிர்ப்பதை உணர முடிகிறது.  ஆனால் "மூணு சரணத்துக்கும் தனித்தனியா இசை போட்டவர் இவர்தான்,", "ஒரே ராகத்தில அமைச்ச பாட்டு உலகத்திலேயே இது ஒன்னுதான்,"   ",இந்தப் பாட்டில ரெண்டே ரெண்டு இசைக்கருவிதான். பிச்சு பெடலெடுத்திருப்பாரு" போன்ற மட்டித்தனமான உயர் குறிகள் கொண்ட தனிமனித துதிகள் எனக்கு அலர்ஜி.  அவர்களிடம் நியாயம் எடுபடாது. மூன்று நிமிஷங்கள் தாண்டியதும் அவர்களுடனான  உரையாடல் ஒரு சிந்தனை வறட்சிக்கு என்னை இட்டுச்சென்றுவிடும். அத்தகைய பிளா பிளா பிளாக்களை நான் ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை. செஸ் விளையாட்டில் எதிரி நம்மை விட வலிமையற்றவனாக இருக்கும் பட்சத்தில் நமக்கு தோன்றும் அலுப்பு போன்றது இது.

இருந்தும் இவ்வாறான இசை குறித்த உரையாடலில்  என்னால் தவிர்க்க முடியாத ஒரு  இசைக்கலைஞன் உண்டு. அது   எம் எஸ் விஸ்வநாதன்.  நவீன இசை குறித்து ரஹ்மான்- சந்தோஷ் நாராயணன்-அனிரூத்-கே-அரோல் கரோலி என்று விவாதம் செய்ய நேரிட்டாலுமே   எம் எஸ் வி பெயரின்றி அந்த விவாதம் முழுமை பெறாது.  இசை என்றால் அங்கே எம் எஸ் வி பற்றிய சிறு குறிப்பு இல்லாமல் பேசிச் செல்வது நடைமுறையில் எனக்கு சாத்தியமில்லை. எத்தனை நவீன வண்ணங்கள்  பூசிக்கொண்டாலும், நாட்டுப்புற மோகம் கொண்டாலும், சாதி அரசியல் போர்த்திய இசை பார்வை கொண்டாலும் உங்களால் பழைய பாடல்கள் துணையின்றி விவாதத்தை தொடர முடியாது. ஏதோ ஓரிடத்தில் விவாதத்தின் கருப்பொருள் பழைமைக்கும் புதுமைக்கும் இடையே ஒரு மர்ம முடிச்சாக தொக்கி நிற்கிறது.

    என் பார்வையில் பாடல் என்பது ஒரு மெட்டின் மீது வரையப்பட்ட ஓவியம். மெட்டின்றி அமையாது பாடல் என்பது என் கட்சி. ஆனால் பாடல் என்ற பெயரில் இன்று எந்த இலக்குமின்றி மேலும் கீழும் ஓடும் தொனிகளில், ஆணா பெண்ணா அல்லது இரண்டுக்கும் மத்தியிலா என்று கேட்பவரைக்  குழப்பும் குரலில் எதோ கிறுக்கி வைத்த தமிழ்வரிகளை எந்தவித வளைவுகள் நெளிவுகள் இல்லாமல் மேற்கத்திய பாணியில் பேசிச்  செல்வதை இன்றைய தலைமுறையினர் கொண்டாடிவரும் வேளையில், கொஞ்சம் அறுபதுகளையும் எழுபதுகளையும் திரும்பிப் பார்த்தால்   எம்  எஸ் வி உருவாக்கிய  தனித்துவம் வாய்ந்த மெட்டுக்கள் அனாசயமாக  எழும்பி நிற்பதைக் காணலாம்.  மெட்டுக்கள் மூலமாகவே இசையாகவும், குரலாகவும் அவர் பாடல்கள் பெரிய சத்தங்களில்லாமல்  சரித்திரம் படைத்தன. கைதேர்ந்த ஒரு வசியக் கலைஞனைப் போல அவரால்  ஒரே பாடலுக்கு கண நேரத்தில் பலப்பல மெட்டுக்களை உருவாக்க முடிந்தது  என்பது ஒரு அசாதாரண இசை மேதமையின்  மொழி.

     காவியத் தமிழ் மட்டுமில்லாது, மக்கள் வழக்கில் இருக்கும் பேச்சுத் தமிழ் கூட அவர் மெட்டின் வசியத்தில் "முத்துக் குளிக்க வாரீயளா?" என காவியமானது.  "அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு?" என்று சங்கீதமாக மாறியது.  அத்திக்காய் காய் காய் பாடல் கொடுத்த போதையில் எம் ஜி ஆர் சொன்ன, "எம் எஸ் வி கிட்ட ஒரு நியூஸ் பேப்பரைக்    குடுத்தாக்கூட அதுக்கும் அருமையா மெட்டு போட்டுருவான்" சற்றும் மிகையில்லாத நிஜம்.

      எழுபதுகளின் துவக்கத்திலிருந்து  என் மீது தெறித்த பல பாடல்களில் பெரும்பான்மையானவை எம் எஸ் வி படைத்த சங்கீத பெருமழையின் இசைச்சாரல்களே. ஒரு விதத்தில் எனக்கான இசையின் பாதை எம் எஸ் வியாலே அமைக்கப்பட்டது என்றே நினைக்கிறேன்.

   ஐந்தாவது படிக்கும் சிறுவனால் தங்கங்களே நாளைத் தலைவர்களே போன்ற பாடல்களைல்லாம் எவ்வாறு உவகையோடு ரசிக்க முடிந்தது? நெஞ்சத்தை அள்ளிக்கொஞ்சம் தா தா தா என்று முதலில் கேட்டபோது காதல் அறியா பருவத்தில் கூட நெஞ்சத்தில் கொஞ்சம் சிலிர்ப்பு உண்டானது ஏன்? வேறு ஒரு இசையமைப்பாளரை peer pressure பாதிப்பில் ரசித்துக்கொண்டிருந்த சமயங்களில் கூட, உதடுகளுக்குள் உறைந்துவிட்ட உண்மையை வெளியே சொல்லத் தயங்கி, திருட்டுத்தனமாக ரசித்த "வீடு வரை உறவு வீதி வரை மனைவி"  எதற்காக மனதுள் ஆர்ப்பரித்தது?  பழைய பாட்டா இருந்தாலும்  நல்லா இருக்கும் என்று "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை." பாடலுக்கு எது என்னை  ஒரு சமரசத்துடன் சான்றிதழ் வழங்க வைத்தது?

 எம் எஸ் வி அமைத்த மெட்டுக்கள்  வியப்பின் விலாசங்கள்.  ஆச்சர்யமானவைகள்.  அவரது மெட்டுக்கள் மிக மிக நுட்பமான புரிதலின் எளிமையான மொழிபெயர்ப்பு. உண்மையில் அவை மிகப் பெரிய பாராட்டுதல்களுக்கும் புகழுரைகளுக்கும் தகுதியானவை.  பாடலின் பல்லவியைக் கூட அவரால் இரு வேறு  மெட்டுக்களால் அலங்கரிக்க முடிந்தது.  சரணங்களில் அகங்காரமில்லாமல் , ஆணவமின்றி ஆழமான நதியின் அமைதியாக அவருடைய இசை மேதமை வெளிப்பட்டது. ஒரே பாடலுக்கு பலவிதமான மெட்டுக்கள் சூடி அவர் தனது பாடல்களின் தரத்தை நிர்ணயித்தார்.  அவர் இசையின் கீற்றுகள் பாடலின் போக்கையும் பாடகர்களின் குரலையும், பாடப்படும் கவிதையும் மரியாதை செய்யும் விதத்தில் ஒதுங்கியே ஒலித்தன. எம் எஸ் வி யின் பாடல்கள் அனைத்துமே அவைகள் உருவான  மெட்டுக்களின் பலத்தில் உயர்ந்து நிற்பவை. ஆடம்பரமான வெளிப்பூச்சுகள் அவர் பாடல்களுக்கு அவசியமில்லை. உதாரணத்திற்கு ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே  என்ற பாடல்.

His songs are like stars glowing from within.  Fact is, his tunes make them shine.

   அவர் இசையமைத்த பாடல்களை பட்டியலிட்டு இந்த உண்மைக்கு சிபாரிசு செய்வது அர்த்தமற்றது. அது மடத்தனம். பொன்னெழில் பூத்தது புதுவானில் போன்ற பாடல்களெல்லாம் வைர வரங்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது.    One of the most priceless tunes. 


   எம் எஸ் வி க்கு பின் வந்தவர்களுக்கு இருந்த ஒரு மகா பெரிய சிக்கல் இந்த மெட்டுக்கள்தான். அவர்களின் மேதமை இங்கேதான் பரிதாபமாக  வீழ்ந்தது. ஏனென்றால் அவர்களால் வெகு எளிதான, சம்பிரதாயமான, கொச்சையான, மிகச் சாதாரணமான மெட்டுக்களை மட்டுமே இயன்ற அளவில் கொண்டுவர முடிந்தது.  இந்தச் சிக்கலுக்கான ஒரே தீர்வு எம் எஸ் வி பாணியை முற்றிலும் சிதைப்பது. விளைவாக மெட்டுக்கள் மீதான பாடல் என்ற "பழைய" பார்முலா பின்னுக்குத் தள்ளப்பட்டு  அதீத இசை, அலங்காரமான வாத்திய ஓசைகள், கொச்சை சொற்கள் கொண்ட கவிதை என்ற  "புதிய" பாணி உருவானது.  நமது தமிழ்த் திரையிசை தளர்ந்தது அப்போதுதான்.   தானானா தானானா என்ற வறட்சியான மெட்டு ஒன்றில் இரண்டு சரணம் கொண்ட முழுப் பாடலையும் முடித்துவிடும் புதிய பாணியை வியாபாரம் செய்த  இசையமைப்பாளர்கள் மத்தியில் எம் எஸ் வி அரிதாகக் காணக் கிடைக்கும் ஒரு கறுப்பு முத்து.

   ஆனால் எம் எஸ் வி தான் வாழ்ந்த காலத்தில் தன் தகுதிக்கான அங்கீகாரமோ, பாராட்டுதல்களோ, புகழுரைகளோ கிடைக்கப் பெறாதவர். என் பார்வையில் இளையராஜா, ரஹ்மான், ஏன் சந்தோஷ் நாராயணன் போன்றோர் கூட அபிரிமிதமாக பாராட்டப்பட்டு விட்டார்கள். அவர்களை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாட ஒரு தலைமுறையே இருக்கிறது. பக்கம் பக்கமாக புகழுரைகள் எழுத நிறைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த "விபத்து" எம் எஸ் விஸ்வநாதனுக்கு நிகழவேயில்லை. இன்றைக்கு ஜெமோ எஸ்ரா மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள் இளையராஜா குறித்து புகழ் பாடுவது போல அன்றைய ஜெயகாந்தனோ, அசோகமித்திரனோ, ஏன் சுஜாதாவோ கூட எம் எஸ் வியின் இசை மேதமை குறித்து வெளிப்படையாகப் பேசாமல் தங்கள் பேனாக்களில் நிசப்தத்தை நிரப்பிக்கொண்டார்கள். இருந்தும் அவர்களுடைய எழுதப்படாத புகழுரைகள்   எம் எஸ் வியை ஒரு இழை அளவு கூட பாதிக்கவில்லை. எனக்குத் தோன்றுவதெல்லாம்  நமது அலட்சியப் போக்கு எவ்வாறு ஒரு மகா கலைஞனை மதிக்கத் தவறியது என்ற எண்ணம் மட்டுமே.

     உதாரணத்திற்கு வெண்ணிற ஆடை படத்தை ஆனந்த  விகடன் சற்று பாராட்டிவிட்டு, பாடல்கள் எதோ சுமார் என்று அப்போது விமர்சித்திருந்ததை ஒரு blog ஒன்றில் நான்கு வருடங்களுக்கு முன் படித்தபோது, கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்லவும், என்ன என்ன வார்த்தைகளோவும், அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டு பாடலும் என் நினைவில் மிளிர்ந்தன. அந்த விமர்சனம்தான் குற்றவாளிக்கூண்டில் கூனிக் குறுகி நின்றது.

     எம் எஸ் விஸ்வநாதனின் இசை ஞானம் குறித்து அன்றைய அறிவு மேதை எழுத்தாளர்கள் மௌனம் காத்தது ஒருவேளை பிராமண எதிர்ப்பின் நீட்சியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. திராவிட எழுச்சியில் உண்டான பிராமண எதிர்ப்பில் நாம் தூக்கியெறிந்த ஆவேசத்தில்  எம் எஸ் வியின் இசை ஞானம் குறித்த ஒரு நியாயமான பொதுப் பார்வை  காணாமல் போய்விட்டதாக நினைக்கிறேன். எவ்வாறு கர்நாடக சங்கீதம் ஒரு முத்திரை குத்தப்பட்டு ஓரங்கட்டப்பட்டதோ அதே போல.

   அங்கீகரிப்போ, பாராட்டோ, பட்டமோ, தனி மனித துதிகளோ , எம் எஸ் வி இது போன்ற பக்கவாத்தியங்கள் இல்லாமலே தனித்து ஆடிய கலைஞன். அவருடைய பேட்டிகளை காண நேரும்போது அவர் ஒரு ஜென் ஞானி போலவே காட்சியளிக்கிறார். பாராட்டோ நிராகரிப்போ அவரைத் தொட்டதில்லை.  அதே சமயத்தில் அவர் மற்றவர்களை பாராட்டத் தவறியதில்லை.

    இன்றைய தினத்திலிருந்து சற்றே கொஞ்சம் திரும்பிப் பார்க்கையில் நான் தமிழின் தங்க இசை காற்றில் பரவியிருந்த காலங்களைச் சேர்ந்தவன் என்ற பெருமையும்  ஒரு உயர்ந்த மேன்மையான இசையின் தாலாட்டில் வளர்ந்தவன் என்ற  உற்சாகக் களிப்பும் உண்டாகிறது. நான் எழுபதுகளைச் சேர்ந்தவன் என்ற எண்ணம் தற்போதைய சூழலில் எனக்கு ஒரு வரம் போலவே தோன்றுகிறது.

    முகம் பார்த்து, தொட்டுணர்ந்து பேசிக்கொள்ளக்கூடிய நண்பர்களும், எளிமையான பொழுதுபோக்கு உபகரணங்களும், காலை மாலைகளில் பள்ளிப் படிப்பு தாண்டி தனிப் பயிற்சி வகுப்புகள் செல்லாத எனக்கே எனக்கான தனிமை நேரங்களும், வீடே குதூகலமாகத் தோன்றச் செய்த சகோதர சகோதரி ரத்த உறவுகளின் பிணைப்புகளும், சின்னச் சின்னச் சண்டை சச்சரவுகளும், அதன் பின்னே மறைந்திருந்த  விலை மதிப்பில்லா சந்தோஷங்களும், மண்ணில் விழுந்து எழுந்து உடலில் புழுதியையும் உள்ளத்தில் புத்துணர்ச்சியையும் சூட்டிய விளையாட்டுகளும், அமெரிக்க ஆசைகள் இல்லாத ஏழைக் கனவுகளும்,.....

 பிறகு அந்த பெரிய கருப்பு வானொலியும், அது பிரசவித்த இசைப்பூக்களும்.....

  என் பால்யம் வண்ணத்துப் பூச்சியின் நிறங்கள் கொள்ள இவை மிக மிக ஆதாரமான காரணங்கள். . ஒவ்வொரு நிறத்தின் பின்னேயும் ஒரு ஆனந்தமான அனுபவம் அசைவற்று அமர்ந்திருக்கிறது. ஒரு இசைத் துளி அந்த அசைவற்ற எல்லாவற்றையும் ஒரே கனத்தில் உயிர்பெறச் செய்துவிடக் காத்திருக்கிறது.

     நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்த இசையின் வித்து என்னுள்ளில் கிளை பரப்பி படரத் தேவையான திரவத் துளிகளாக எம் எஸ் வி யின் இசை என்னுள் நிரம்பி வழிந்தது.  வழியில்  நான் பலரை ரசித்தாலும், பல சிறகுகளாக இசையின் இறக்கைகள் விரிந்தாலும்,  வியப்பு வியர்வைகளையும், திகைப்புத் தீயையும் என் மனதில் தோன்றச் செய்யும் அரிதான வெகு சிலரில் எம் எஸ் விஸ்வநாதன் ஒரு  ஆதாரமான, வசீகரக் கலைஞன்.