Wednesday 27 April 2016

இசை விரும்பிகள்:XXX - எண்பதுகள்: இசையுதிர்காலம் I

வறட்சிக் காற்று. 
உடைந்த சிற்பம். 
உயிரற்ற ஓவியம்.
ரசம் போன கண்ணாடி,
கம்பிகள் அறுந்த  வீணை.
அணையும் விளக்கு. 
கிறுக்கல் கவிதை. 
குளத்து மீன்கள். 
காகிதப் படகு. 
சுவையற்ற உணவு. 
புகை மேகங்கள்.
குறுகலான சாலைகள்.
கூரற்ற  கத்தி. 
அந்தி வெளிச்சம். 
கண்ணாடிப்  பூக்கள். 
போன்சாய் மரங்கள்.
உதிர்ந்த இலைகள்.

                         
                        

   


            எண்பதுகள்: இசையுதிர்காலம்.


  மலர்களற்ற வெறும் மரங்கள் இருக்கும்,  கனவுகளைத் துறந்த  ஒரு இடத்தை கொஞ்சம் கற்பனை செய்து கொள்வோம். அங்கேயிருப்பவர்கள் அங்கே  காண்பதெல்லாம் வெறும் கிளைகளையும் அதில் ஊசலாடிக்கொண்டிருக்கும் சில  இலைகளையும் மற்றும் தரையில் சிதறிக் கிடக்கும் சருகுகளையும் மட்டுமே என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால்  அவர்களிடம் நாம் எந்தப் பூக்கள்  பற்றி பேசமுடியும்? பூக்களின் அறிவியலை அவர்களால் புரிந்துகொள்ள இயலுமா? பிறந்தது முதலே இவ்வாறான ஒரு வறட்சியான காட்சியை மட்டுமே நிஜமென நம்பிக்கொண்டிருக்கும் ஒருவன்  வண்ண வண்ணப் பூக்கள்  உடுத்திய ஒரு மரத்தை  திடீரென காண  நேர்ந்தால் அவன் நிஜமென்று நம்பியிருந்த முகத்திற்கு என்ன நிகழும்? தான் அறிந்தது மட்டுமே எல்லாம் என நம்பிக்கொண்டிருக்கும் ஒருவன்  முதன் முதலில் உண்மையான  உலகை சந்திக்கும்பொழுது  அவனது கற்பனை எப்படி உடையும்?

     
    ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒரு மாற்றம் வானவில் தோன்றுவதைப் போல நிறம் மாறி ஒரு புதிய வண்ணத்தை உடுத்திக்கொள்கிறது.  நமது தமிழ்த் திரையிசையை இதே போல பத்துப் பத்து வருடங்களாக பகுத்துப் பார்த்தால் நமக்கு மிகத்  தெளிவான பிம்பம் ஒன்று கிடைக்கிறது. நமது திரையிசையின் வரைபடத்தில் ஐம்பதுகளில் உயர்ந்து சென்ற இசைக் கோடுகள் அறுபதுகளில்  ஒரு உச்சத்தைத் தொட்டு அங்கேயே நிலை பெற்று நின்றதும், பின்னர் எழுபதுகளில் வேறு இலக்கு நோக்கி நகர்ந்ததும், எண்பதுகளில் சடாரென சரிந்ததும் ஒருசேர காணக் கிடைக்கின்றன.  எழுச்சியும் வீழ்ச்சியும்  நடைமுறை வாழ்க்கையின் நியதிகள் என்ற கசப்பான நிஜத்தை செரிமானம் செய்வதில் சிக்கல்கள் கொண்டவர்களுக்கு இந்த வாக்கியம் ஒரு அபத்தம்.

    எத்தனை வேகமெடுத்தாலும், எத்தனை உயரச் சென்றாலும், எத்தனை மெருகூட்டப்பெற்று அழகாகத் தோன்றினாலும் அத்தனை உண்மைகளும் ஏதோ ஒரு கட்டத்தில் எதிர்மறை மாற்றத்தை  சந்திப்பது இயற்கையின் டிஎன்ஏக்களில்  மறைந்திருக்கும் மர்மக் கோட்பாடுகளில் ஒன்று. எம் எஸ் வி- டி கே ராமமூர்த்தி, கே வி மகாதேவன் போன்றவர்கள் இசையால் இழைத்த சந்தன மெட்டுக்கள் காற்றில் தவழ்ந்த அறுபதுகள் நமது தமிழிசையின் மாற்ற முடியாத உச்சம். இசையின் வசீகரம் செவிகளையும், மனங்களையும் ஒரு சேர பரவசப்படுத்திய மேன்மையான காலகட்டம். அங்கிருந்து எந்தத் திசையில் நமது திரையிசை அதன்பின்னர் நகர்ந்தது என்று இசைச் சுவட்டை தொடர்ந்து சென்றால் ஒரு பிரமாண்ட அதிர்ச்சி நம்மை வரவேற்கக் காத்திருக்கிறது. எண்பதுகளின் முத்திரை இசைபாணி  விரிந்துசென்ற நமது இசையின் சிறகுகளை கொஞ்சம் மடக்கிப் போட்டது. விஸ்தாரமான வனாந்திரத்தில் பளபளவென பூரிப்பு காட்டும் ஒரு பரவசப் பூவை நமது வீட்டு மொட்டை மாடியின் அரையடி மண்சட்டியில் வைத்து ரசிப்பதைப் போல நமது இசை சுருங்கியது. அதன் இதழ்கள் விரியத் தயங்கின. வெடித்துக் கொட்டும் மழையின் இறுதிக் காட்சி போல இசை துளித் துளியாக சொட்டியது. எண்பதுகளின் மத்திக்குப் பிறகு எம் எஸ் வி போன்றோர் பாதுகாத்துவந்த இன்னிசை இயல்புகளும், நல்லிசை என்ற நம்பிக்கையும் தமிழ்த் திரையுடனான தமது தொடர்பை துண்டித்துக்கொண்டன. மேலும் அந்தக் காவிய கானங்கள் தமிழரின் செவிகளுக்கு அன்னியமாயின. இசை ஒரு தனி மனித ஆளுமையின் கீழ் பரிதாபமாக அடிமைப்பட்டது.

     இது ஒரு முரண்! எங்கும் வியாபித்திருக்கும் இசை என்ற மகத்துவத்தை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து இவரைவிட்டால் இசையே இல்லை என்ற மகா ஆணவத்தை பத்து வருடங்களாக பதிவு செய்ய விழைந்த அநாகரீகம், துர்பாக்கியம், செருக்கு, சுயபாராட்டல்கள் எண்பதுகளை நிரப்பின. இந்த விஷக் காற்றில் நமது மரபான நல்லிசை நலிந்து  நம் திரையிசை  மழை காணா பாலைவனமானது. வாடி எ கப்பக்கிழங்கேவில் ஒரு வளர்ந்த தலைமுறைக்கு இங்கு  இசை எப்படிப் பொழிந்தது என்றா தெரிந்திருக்கும்? அம்மாதிரியான பாடல்களில் தங்கள் ஆன்மாவை கண்டெடுக்கும் இசை மேதாவிகளின் கண்களில் அறுபதுகள் அபத்தமாகத் தெரிவது அவர்களது இசை ரசனையின் கோளாறு. நோய் வாய்ப்பட்ட அவர்களின் இசைத் தேர்வுகள் ஒரு வெளிப்படையான கோமாளித்தனம்.


    ஆரம்ப எண்பதுகளோடு என்னைப் பிணைத்த தமிழ் இசை தொடர்பான இழை கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தது.  திடீரென காற்றலைகளில் மிதக்கும் ஒரு காந்தப் பாடல் என்னைக் கவரும் அந்த அடுத்த நொடி எப்போது வரும் என்றே தெரியாத சூழல். எனது செவிகளில் விழுந்த பெரும்பான்மையான பாடல்கள் எந்த நவீன கனவுகளையும், புதுமையான சோலைகளையும் என் கற்பனைக்குள் தோன்றச் செய்யவில்லை.  அப்போது வந்த பாடல்களில் பலவும் வேர்களற்ற, பொறுப்பற்ற, கண்ணியமிழந்த வெறும் filler இசை போலவே எனக்குத் தோன்றியது. நம்மைச் சுற்றி உலகில் நிகழ்ந்த ஒரு மாபெரும் இசைப் புரட்சியின் நிழலை, அந்த இசையின் வெடிக்கும் பரிமாணத்தை ஒரு அங்குலம் கூட நம்மிடம் கோடிட்டுக் கூட காட்டாத வெறும் வறட்சியான சக்கைப் போன்றதொரு இசை மட்டுமே அப்போது தமிழில் ராஜநடை போட்டுக்கொண்டிருந்தது. அதை மட்டுமே கேட்டு வளர்ந்த ஒரு தலைமுறை என்னைப் பொறுத்தவரையில் இசையின் உண்மையான தொடுகையை தவற விட்டவர்கள்  என்றே கருதுகிறேன். ஆக்ஸிஜன் இல்லாத இசையை அவர்கள் சுவாசித்ததாக சொல்வதுகூட பொருத்தம்தான். அவர்களுக்கு  எண்பதுகளுக்கு முன்  நம் தமிழ்த்திரையிசை  எப்படி இருந்தது என்பதைப் பற்றியும் தெரியாது. எண்பதுகளில் உலக இசை எவ்வாறு அதீதமாக வளர்ச்சி பெற்றிருந்தது என்பதைப் பற்றியும்  அக்கறை கிடையாது. கண்டதே காட்சி கொண்டதே கோலம்  என்ற ரகத்தைத் சேர்ந்தவர்கள்.

      இரு சம்பவங்கள் பற்றி இங்கே நான் குறிப்பிடுவது அவசியம் என்றுணர்கிறேன். அந்தச் சம்பவங்கள் வேறு வேறு காலகட்டங்களில், இடங்களில் நிகழ்ந்திருந்தாலும் அவை சொல்லும் செய்தி ஒன்றுதான்.  முதலாவது சமீபத்தில் நடந்தது. கம்ப்யூட்டரில் வார்த்தை விருப்பம் தளத்தின் புதிய பின்னூட்டங்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த போது என் நண்பரொருவர் வந்தார். வந்தவர்,"அப்படி என்னதான் இணையத்தில் பார்ப்பீர்கள்?" என்றார் மர்மமாக சிரித்தபடி. "பார்க்கவில்லை. படித்துக்கொண்டிருக்கிறேன்." என்று பதில் சொன்னேன். "கதையா?" என்றார் என் பின்னே நின்றுகொண்டு. நான் படிப்பதை அவர் படிக்க முயன்றது தெரிந்தது.  " ஏதோ இசை சம்பந்தமான கட்டுரை போல. அனிரூத், சிம்பு, பாடலாக இருக்கும்." என்றார் அவராகவே முடிவெடுத்தபடி. "இல்லை. இது பழைய பாடல்கள் பற்றியது". என்று சொன்னேன். அதை எழுதுவது நான்தான் என்பது அவருக்குத் தெரியாது. தெரியவேண்டிய அவசியம் அவருக்கில்லை. அதை தெரிவிக்க வேண்டிய விருப்பமும் எனக்கில்லை.

   "பழைய பாடல்களா?" என்று வியப்பு காட்டியவர் உடனே," இளையராஜா பாடல்களா?" என்றார் சீரியஸாக. எனக்கு என்ன தோன்றியிருக்கும் என்பதை இங்கே எழுதத் தேவையில்லை என்று நினைக்கிறேன். நான் பொறுமையை இழக்காமலிருக்க வெகுவாக பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. "இல்லை. இவர் பொதுவாக இளையராஜா பற்றி அவ்வளவாக எழுதுவதில்லை. எம் எஸ் வி, கே வி மகாதேவன், ஜி ராமநாதன், வி குமார் போன்றவர்களைப் பற்றியது." என்றேன். அவருக்கு இந்தப் பெயர்கள் புதிதாக ஒலித்திருக்கலாம்.

  அடுத்து அவர் சொன்னது என்னை திடுக்கிட வைத்தது. அவர் சொன்னது இதுதான்: "இளையராஜாவைத் தாண்டியும் இசை இருக்கிறதா என்ன?" இப்படி சொல்லிவிட்டு, "கிரிக்கெட் போடுங்க. பார்க்கணும்." என்று எதோ ஒரு சேனலை அவராகவே தேர்ந்தெடுத்து கிரிக்கெட் என்ற எனக்குப் பிடிக்காத கண்றாவியை  ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

    எனக்குப் பிடிக்காத விதத்தில் பேசிவிட்டு எனக்கு கொஞ்சமும் பிடிக்காத ஒரு விஷயத்தை செய்து கொண்டிருக்கும் அவரிடம் நான் என்ன இசை பற்றி பேச முடியும் என்று குழப்பமாக இருந்தது. நான் இணையத்தில் படித்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறு எதுவும் அந்த நேரத்தில் செய்யவில்லை. அது ஒன்றுதான் அப்போதைக்கு புத்திசாலித்தனமான செயலாக எனக்குப் பட்டது.

        இரண்டாவது வெகு காலம் முன்பு - எண்பதுகளின் ஆரம்பத்தில் -- நடந்தது. ஆங்கில இசையில் நாட்டம் கொண்டிருந்த சமயத்தில் எங்கள் ஊரில் இருந்த எல்லா ரெகார்டிங் கடைகளுக்கும் செல்வது எனக்கு பழக்கமான ஒன்று. முட்டுச் சந்தில் ஒரு கடைசி வீட்டில் ஆங்கிலப் பாடல்கள் பதிவு செய்கிறார்கள் என்று என் நண்பர்கள் புரளி கிளப்பினால் கூட நான் அங்கு சென்று வருவதை ஒரு கடமையாக  வைத்திருந்தேன். அப்படி ஒரு முறை பெரிய வீதியில் ஒரு கடைக்குள் தகவல் அறிந்து நுழைந்து, அங்கிருந்த  வெகு சில ஆங்கில கசெட்டுக்களை ஆராய்ந்து கொண்டிருந்தபோது "இருங்க. இப்ப எங்க முதலாளி வந்துருவார். அவருக்குத்தான் இங்கிலீஷ் பாட்டெல்லாம் தெரியும்." என்று அங்கிருந்த ஆள் தெரிவித்தான். மொத்தமிருந்த நூறு கசெட்டுகளில் இருபது ஆங்கில இசைத் தொகுப்புகள் இருந்தன. சற்று நேரத்தில் தடதடக்கும் புல்லெட்டில் வந்திறங்கிய ஒரு டிப் டாப் இளைஞன்  தன் குளுமை கண்ணாடியை கழற்றிவிட்டு கடையை ஆராய்ந்தான். கொஞ்சம் இளமையாக அந்த காலகட்டத்தின் அத்தியாவசிய தேவையான  32 இன்ச் பாட்டம் வைத்த பெல்ஸ் அணிந்திருந்தான். கடையில் இருந்த ஆள் பெரிய கும்பிடு போடவும் எனக்கு இவன்தான் அந்த முதலாளியாக இருக்கவேண்டும் என்று தோன்றியது.

   அதற்குள் அந்த ஆள் இவனிடம் "எதோ இங்கிலீஷ் பாட்டாம். பசங்க வந்திருக்காங்க." என்ற சொல்லவும் அந்த இளைஞன் என்னையும் என் சகோதரனையும் ஒரு முதலாளிப் பார்வை பார்த்துவிட்டு, "என்ன?" என்றான் அலட்சியமாக. அப்போதுதான் டோனா சம்மர் என்ற பாடகியைப் பற்றி கேள்விப்பட்டிருந்தேன்.  எனவே அதை விசாரித்தேன்.  உடனே,"அடடா! போன வாரந்தானே அந்த கசெட்டை  ஒருத்தர் வாங்கிட்டு  போனாரு ." என்ற வியாபார பரிதாபம் காட்டியவன் தொடர்ந்து, "அடுத்த வாரம் சிங்கப்பூரிலிருந்து நிறைய ஆங்கில கசெட்டு வரும்." என்று  அவன் சிங்கப்பூரில் இருந்தவன் என்பதற்கான சுய சான்றிதழ் வழங்கிக்கொண்டான். பின்னர், "நான் சிங்கப்பூர்ல இருந்தப்ப நிறைய இங்கிலீஷ் பாட்டு கேப்பேன். ஆனா இப்ப கேக்கறதில்ல."என்றான். அவசியமில்லாவிட்டாலும்   "ஏன்?" என்று கேட்டுவிட்டேன்.

      அவன் அதே  அலட்சியமாக "என்னைக்கு பிரியா படம் வந்துச்சோ அன்னைக்கே நான் இங்கிலீஷ் பாட்டு கேக்கறத நிறுத்திட்டேன்." என்றான். "அதான் ஏன்?" என்றேன் புரியாமல். "அதான் தமிழ்லயே இளையராஜா இப்ப இங்கிலீஷ் பாட்டுக்கு இணையா மீஸிக் போடுறாரே? பின்ன எதுக்கு இங்கிலீஷ் பாட்டு தனியா?" என்று ஒரு காரணத்தை முன்வைத்தான். இளையராஜாவைப் பற்றி பெரிதாக விருப்போ வெறுப்போ இல்லாத அப்போதே எனக்கு அவன் இப்படிச்  சொன்னது வேடிக்கையாகத் தெரிந்தது. வேடிக்கை என்பதை விட மட்டித்தனமாக என்று கூட சொல்லலாம். ப்ரியா படப் பாடல்கள் வந்தபோதே எனக்கு அதன்மீது எந்தவிதமான விசேஷமான ஈர்ப்பும்  ஏற்பட்டதில்லை. தவிர,ஸ்டீரியோ போனிக் என்ற  ஜிகினா தூவல்கள் இல்லாவிட்டால் அந்தப் பாடல்கள் இத்தனை பெரிய அளவில் பேசப்பட்டிருக்காது.   "இவன் கண்டிப்பா இங்க்லீஷ் பாட்டு எதுவுமே கேட்டுருக்க மாட்டான். சும்மா சொல்றான்." என்றான் என் சகோதரன் என்னிடம்  மெல்லிய குரலில். இவனிடம் எனது பசிக்கான  உணவு கிடைக்காது  என்ற எண்ணம் எனக்கு வந்தது. "அடுத்த வாரம் வாங்கப்பா. நீங்க கேட்டது கிடைக்கும்." என்றான் எங்கள்  பக்கம் திரும்பாமல். டோனா சம்மர் என்ற பெயரை மறந்துவிட்டான் போலும்.  அடுத்த வாரம் வந்தது. நான் அந்தக் கடைக்குச் செல்லவில்லை - அதன் பிறகு.

   எண்பதுகளைச் சார்ந்த பலரின் பார்வையில் இதுபோன்ற பிழை நோக்கு ஒரு யதார்த்தமான தவறு.  அவர்கள் தான் சார்ந்த அனுபவங்களின் தொகுப்பை ஒரு பொது விதியாக கட்டமைத்துக்கொள்வதோடு அந்தப் புனைவை உண்மையென மற்றவர்களை நம்பவைப்பதில் தீவிர ஈடுபாடு காட்டுகிறார்கள். இணையத்தில் இது மிக மலிவாகக் காணப்படுகிறது. சிலர் ஒரு hidden agenda போல தாங்கள் ரசித்ததை ஒரு கோட்பாடாக திணிக்க எத்தனித்து, ஏற்கனவே படைக்கப்பட்ட பழைய சாதனைகளையும், அந்தப் பழமை நிறுவிய மகத்துவங்களையும் ஒரேடியாக நிராகரிக்கிறார்கள். வெறும் நாஸ்டால்ஜிக் உணர்வுகளும், பேருந்து பயணத்தில் ஆன்மாவை தொட்ட தருணங்களும்,  விஸ்தாரமில்லாத விவரங்களும், தெரிந்துகொள்ளவேண்டிய பல தகவல்கள் மீது பரிச்சயம் இல்லாமல் அவர்களால் பெரிய எழுத்துக்களில் எழுதப்படுகின்றன. சிறுவர்கள்  எங்க ஆள் மாதிரி வருமா என்று முஷ்டி மடக்குவதைப் போல இந்த வகையினர் அதே பக்குவமற்ற சிந்தனைக்குள்ளிருந்து வெளியே வரமறுக்கிறார்கள். சுரங்களை முதலில் கண்டவர், இசையே இங்கிருந்துதான் உற்பத்தியாகிறது, அவர் ஒரு சுயம்பு என இசையின் பிடிபடாத இழைகளை ஒரு தனிப்பட்ட ஆளுமையின் மீது முடிச்சு போடும் அவலத்தைக்  காணும்போது அங்கே சில விமர்சனங்கள் குறுக்கிடுவது அவசியமானது என்று நினைக்கிறேன். இதையும் பேசாதிருந்தால் நடந்த நிகழ்வுகளை திரித்துக் கூறி நமது அறுபது வருட திரையிசை ஒரே ஒருவரை சுற்றியே வந்ததாக ஒரு புதிய புனைவான சரித்திரம் உருவாகக்கூடிய  விபத்து நிகழக் காத்திருக்கிறது.

  நம் தமிழிசையின் ஆதார வேர்கள் வேய்ந்த, பாரம்பரிய ராகங்களின் வண்ணங்கள்  தோய்ந்த, நம் மரபுகளின் சங்கிலி நீட்சியாக  பலப் பல பாடல்கள் நாற்பதுகள் முதற்கொண்டு ஒரு இசை நதியாக ஐம்பதுகள், அறுபதுகள் வழியே தாவிச் சென்று எழுபதுகளில் வேறு பாதையில் தனது நீரோட்டத்தை கண்டுகொண்டன. இந்தப் புதிய வெளிச்சத்திற்கு  நம் மண் சார்ந்த நாட்டுப்புற இசைக்கு ஒரு மையமான இடமிருக்கிறது. எழுபதுகளில் தமிழ்த்திரை கூண்டை விட்டு வெளியே வந்த பறவை போல புதிய உற்சாகத்தில் சிறகடித்தது.

     யாரும் தொடாத கதைக் களம், திரைக்கதையில்  திருப்பம், நாடக வாசனையை துறந்த இயல்பான வசனங்கள், எளிமையான நடிப்பு, யதார்த்தமான காட்சி நகர்த்தல்கள் அதற்கான சரியான இசையமைப்பு போன்ற சினிமா தொழில் நுட்பங்கள் எழுபதின் இறுதியில் தமிழ்த் திரைக்கு நவீன அலங்காரம் கொடுத்தது. இதில் அதிகமாக பலனடைந்தவர் பாரதிராஜாவை விட இளையராஜாதான். அவருடைய புதிய பாணி இசை இந்த மாற்றத்தில் தனக்கான அலையை தேர்ந்தெடுத்து, அதன் மீது வியாபார  வெற்றியின் துணையுடன் ஒய்யாரமாக சவாரி செய்தது.  பலருக்கு எண்பதுகள்  என்பது இளையராஜாவின்  காலம்.  மறுப்பதற்கில்லை.

     தவிர, எம் எஸ் விக்குப் பிறகு யார் என்ற கேள்விக்கான விடை இளையராஜா மூலம் கடைசியாக வந்துவிட்டதாக கருதப்பட்டாலும், எம் எஸ் வியின் வியாபார உச்சங்களை விட  இன்னும் பல அடிகள் மேலே சென்றாலும், பல லார்ஜெர்-தேன்-லைப் ஆராதனைகளின் கருப் பொருளாக இருந்தாலும், குவாலிடி மியுசிக் என்ற வகையில் எம் எஸ் வி கொடுத்த இசைத் தரத்தின் அளவுகோளின் படி  பல படிகள் கீழே நின்றிருந்தார் இளையராஜா. வணிக ரீதியான வெற்றியை தொடர்ந்து சுவைக்க முடிந்த அவரால் தமிழிசையின் தரத்தை அடுத்த மேலான இடத்திற்கு நகர்த்த இயலவில்லை. இந்த உண்மையை பலர் அறிந்திருந்தாலும்  அதை  வெளிப்படையாக அறிவிப்பதில் முரண்படுகிறார்கள் அல்லது தயங்குகிறார்கள்.

      எழுபதுகளின் இறுதியிலிருந்து தடம் மாறிய நமது இசை சில திகைப்புகளை திரைச் சரித்திரத்தில் பதிவுசெய்து கொண்டே வந்தது மறுக்க முடியாதது. நினைவோ ஒரு பறவை, செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல், இளமை என்னும் பூங்காற்று, உறவுகள் தொடர்கதை, நானே நானா யாரோ தானா  என அவ்வப்போது அறிவிப்பின்றி  தோன்றிய இளையராஜாவின் நியான்  வானவில்கள் சடுதியில் கரைந்துவிட்ட நிஜம் அவரது எண்பதுகளின் இசையில் வெளிப்படையாகத் தெரிந்தது. நீரில் நனைந்த கடிதத்தின் எழுத்துக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்  தெரிவதைப் போல அங்கே இங்கே என சில சொற்பமான  சமயங்களில் அவர் இசையில் ஒரு குயிலின் உற்சாகம் தென்பட்டது. மீதமெல்லாம் இசையும், மெட்டுக்களும் மெலிந்துபோன பாடல்களே. எண்பதுகளின் மத்தியில் எதோ ஒரு குறிப்பிட்ட ஆண்டில் வெளிவந்த பாடல்களை random வகையில் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை புரியும். அதில் பலவற்றை ஒரே ஒரு முறை மட்டுமே கேட்டிருக்க முடியும். இப்படியெல்லாம் கூட பாட்டு அப்ப வந்துச்சா? என்ற கேள்வி ஒரு நிச்சயமான போனஸ்.

     எண்பதுகளின் மத்தியில் இளையராஜாவிடமிருந்து வரும் இசையை மிக எளிதாக கணிக்க முடிந்தது.  அவரிடமிருந்த அந்த திடீர் ஆச்சர்யங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வற்றத் துவங்கின.  இடையிசை என்று சொல்லப்படும் சரணங்களுக்கு இடையேயான இசையில் அவர் அமைத்த புதிய வண்ணங்கள் ஒரே நிறத்தில் அலுப்பூட்டும் வகையில் இருந்தன. இளையராஜாவின் மரபான ஒரே மாதிரியான புல்லாங்குழல், பிறகு சரசரவென இழையும் வயலின்கள் சில சமயங்களில் ஒற்றை வயலின் ஓசை, திடுமென தொடர்பேயில்லாமல் ஒரு பதிமூன்று நொடிகளுக்கு  ஒலிக்கும் கிடார் கார்ட்ஸ், பின்னர் வழக்கமான தபேலா என அவர்  பாணி சுருங்கியது.  கொஞ்சமும் பாடலின் போக்கிற்கு உதவி செய்யாத தொடர்பற்ற இடையிசை ஒரு ஆனந்தப் பாடல் கொடுக்கவேண்டிய முழுமையான அனுபவத்தை முப்பது வினாடி சுகங்களாக மாற்றிப்போட்டது. இசைத் துணுக்குகளாக பாடல்கள் உடைந்தன.  "பாட்டு சுமார்தான். ஆனா மியுசிக் அருமையா இருக்கு." என அப்போது பலர் சொல்லும் விமர்சனம் என்னுடைய இந்தக் கருத்தை உறுதி செய்வதாக நினைக்கிறேன். மேலும் வைரமுத்துவுடன் ஏற்பட்ட விரிசல் அவர் இசையில் இருந்த கவிதையின் தரத்தை சுக்கல் சுக்கலாக உடைத்தது. இல்லாத நல்ல கவிதையின் வெற்றிடத்தை வெறும் வாத்தியங்களை வைத்துக்கொண்டு சமாளித்துவிடலாம் என்று ஒரு இசையமைப்பாளர் தீர்மானித்ததன் விளைவு எதிர்பாரா இசைச் சரிவு.

   சிலர் அதாவது வெகு சிலர் அதாவது உண்மையான இசை அனுபவம் வசப்படாத வெகு வெகு சிலர் இந்த இசைக் கோபுரங்கள் சரிந்த எண்பதுகளை நம் தமிழிசையின் பொற்காலம் என்று வர்ணிப்பதுண்டு. இது ஒரு அப்பட்டமான பொய் என்றே நான் சொல்ல விரும்பினாலும் அந்தப் பிரமாண்டமான பொய்யை சற்று வேறு வார்த்தைகள் கொண்டு விவரிக்கலாம் என்று தோன்றுகிறது.  இது ஒரு மாய பிம்பம். அதாவது ஒரு குழந்தைக்கு தான் பார்க்கும் காட்சிகளே உலகமாகத் தெரியும் ஒரு முதிர்ச்சியற்ற புரிதல். முதல் முறையாக பேருந்து ஒன்றில் பயணம் செய்யும் ஒரு சிறுவனுக்கு மரங்களும் கட்டிடங்களும் நகர்வதாகத் தோன்றும் illusion போன்றது. எண்பதுகளை சிலாகிக்கும் கூட்டத்தினரை காணும்போது "ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி" என்று அறுபதின் ஆரம்பத்தில் ஒலித்த ஒரு குரல் உணர்த்தும் அந்த வலிமையான உண்மையே நினைவுக்கு வருகிறது.

     துவக்கத்தில் ஒரு டப்பாங்குத்து இசையமைப்பாளர் என்று மேட்டுக்குடி விமர்சகர்களால் பரிகாசிக்கப்பட்ட இளையராஜா தன் மீதான இந்த முத்திரையை மேற்கத்திய தூரிகைகளால் வரைந்த ஓவியம் போன்ற  பல நளினமான பாடல்கள் மூலம் உடைத்தெறிந்து தன் ஆளுமையை வியக்கத்தக்க வகையில் பதிவு செய்தார். இளையராஜாவுக்கு  வெஸ்டெர்ன் மியுசிக் வராது என்று கிண்டலடித்தவர்களின் தாடையைப்  பெயர்த்தது என் இனிய பொன் நிலாவே, சின்னப் புறா ஒன்று போன்ற சிலிர்ப்புகள். தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவர் எடுத்த சுவடுகள் மிக சிரமமானவை. வலி மிகுந்தவை.  சொற்பமான இசை வாத்தியங்களை வைத்தே அவர் அமைத்த பல பாடல்கள் இளைய தலைமுறையினரை போதையேற்றின. இளையராஜாவுக்கென கைதட்டும் ஒரு புதிய ரசிக வகையினர் தோன்றினர். எண்பதுகளில்  காலம் அவர் கரங்களில் தமிழ்த் திரையிசையின் கடிவாளங்களை ஒப்படைத்தது. இளையராஜாவின் தனிக் காட்டு ராஜ்ஜியம் ஆரம்பித்தது. மைடஸ் டச் என்னும் தங்கத் தொடுகை அவருக்கு வசப்பட்டது. வணிக வெற்றிகள் அவரது சாதனைகளாக இடம்பெற்றன.  இருந்தும் அவரது இசையில்  ஒரு வெற்றிடம் வியாபித்திருந்தது. அதை எந்த இசை கொண்டும் அவரால் நிரப்ப இயலவில்லை.

      எம் எஸ் வி யுடன் முடிந்துபோன அந்த மகத்தான இசைப் பாரம்பரியத்தையும் , இசையின் அழகியலையும், மெட்டுக்களின் மேதமையையும், காலங்கள் போற்றும் கனிவான கானங்களின் நீட்சியையும், சிந்தனைக்கு சுவையூட்டிய  கவிதை மரபையும், பாதுகாக்கவேண்டிய சாலைகளையும், மெருகேற்றவேண்டிய சோலைகளையும் எண்பதுகளில் இளையராஜாவின் இசை சாதித்ததா என்ற கேள்வி இப்போது எழுகிறது.


   ஒரே சொல்லில் இதற்கான பதிலை என்னால் சொல்ல முடியும். இருந்தும் சில கொடூர விபத்துக்களை அவ்வளவு எளிதாக ஒரே வரியில் விமர்சனம் செய்துவிட்டு கடந்து போவது உகந்ததல்ல.






அடுத்து; இசை விரும்பிகள்-XXXI --     இசையுதிர்காலம் II .


Friday 8 April 2016

ஒரு தேவதையின் குரல்.

இந்த வருடத்திற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அமிதாப் பச்சன் சிறந்த நடிகர், பாகுபலி சிறந்த படம் போன்ற ஆயத்தமான முன்தயாரிப்பு முடிவுகளைப் பார்க்கும் போது  ஒரு சம்பிரதாயமாகத் தொடரும் அபத்தம் இந்த முறையும் தவறவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.  இளையராஜா விருதுகளுக்குப் புதியவர்  இல்லை என்பதால் அவருக்குக் கொடுக்கப்பட்ட தாரை தப்பட்டைக்கான விருது பற்றி புதிதாக எதுவும் சொல்லத் தோன்றவில்லை. படம்தான் நார் நாராக கிழிந்துபோனது. எனவே இப்படி மெகா அடிபட்ட அந்தப் படத்திற்கு இதுபோன்ற சில ஒத்தடங்கள் தேவைதான்.

 வழக்கம்போலவே இராவாசிகள் இணையத்தில் கேக் வெட்டாத குறையாக குதூகலத்தில் குதிப்பார்கள் என்று நான் எதிர்ப்பார்த்திருந்த வேளையில் அதுபோன்ற அலப்பரைகள் எதுவும் கண்ணில் படவில்லை. அவர்களுக்கே இதையெல்லாம் தாண்டிச் செல்லவேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கலாம். அலுப்பாக இருந்திருக்கலாம். "விருதா? அப்படியா? அவருக்கு விருது கொடுத்ததால அந்த விருதுக்குத்தான் பெருமை." என்று சம்பிரதாயமான ராஜா ராஜாதான் பல்லவியோடு தங்களது கொண்டாட்டத்தை முடித்துக்கொண்டார்கள். அதுவரைக்கும் நிம்மதியே. ஆயிரம் படங்களுக்கு அவர் இசை அமைத்த சாதனைக்கு பெரிய மேடை போட்டு,பளீரென்ற மின்சார வெளிச்சத்தில் மனதுருகி, சினிமா கண்ணீர் சிந்தி, அதே ஆயிரம் முறை ஏகப்பட்ட இடங்களில் மனனம் செய்து வாசித்த பாராட்டுப் பத்திரத்தை வாசித்து முடித்திருந்த வேளையில் மற்றொரு பாராட்டுக்கு அவர்களுக்கு நேரமில்லை போலும்.   எத்தனை முறைதான் போலியாக மனதுருக முடியம்?

    இதே சமயத்தில்  ஒரு இசை சகாப்தம் தனது ஆளுமையை மிக அமைதியாக  ஒரு சாதனைப் புத்தகத்தில்  வார்த்தைகளாக வரைந்தது.   பி சுசீலா என்ற நமது கானக்குயில் 17ஆயிரம் பாடல்களுக்கும் மேலாகப் பாடிய வியப்பு கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட, உலகம் அந்தக்  குரலிசைக்கு ஒரு மாபெரும் அங்கீகாரம் அளித்திருக்கிறது. நானும் தேடினேன். இணையத்தில் அவரைப் பாராட்டி வந்த பக்கங்கள் பெரும்பாலும் கண்ணில் அகப்படவில்லை. ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த சாதனையைப் போற்றும் அதேவேளையில் இந்த பதினேழாயிரம் பாடல்கள் குறித்த சந்தோஷம், களிப்பு நம்மிடமில்லாத உண்மை வலி ஏற்படுத்துகிறது.

      பி சுசீலா பற்றி நவீனமாக என்ன எழுதினாலும் அவர் குரலில் ஆட்சி செய்யும் அந்த மோகம் நிறைந்த,  மயக்கம் சூழ்ந்த, நளினம் ததும்பும், துயிர்ப்பான ஒரு இசையாகவே ஒலிக்கும் அந்தத் திகைப்பைச் சுற்றியே அனைத்து வாக்கியங்களும் செல்லும். எனது பார்வையில் பி சுசீலாவுக்கான ஒரே போட்டியாக இருந்தவர் ஆஷா போன்ஸ்லே ஒருவர்தான்.

       நீங்கள் அறுபதுகள் குறித்த சினிமா  சிந்தனைக்குள் வர நேரிட்டால், சுசீலா என்ற இசை ஆச்சர்யத்தின் குரல் மானசீகமாக உங்கள் நெஞ்சத்தில் ஒலிக்காமல் இருக்காது. கே வி மகாதேவன், எம் எஸ் வி போன்ற இசைத் தூண்களின் மீது மோதித் தெறித்து வெளிப்பட்ட மெல்லிய தென்றல் காற்றாக அவர் குரல் ஒலித்தது. எம் எஸ் வி என்ற பிரமிப்பான இசைக்  கலைஞன்  சுசீலாவின் குரலில் மறைந்திருந்த அந்தத் தென்றலின் தழுவல்களையும் இதமான சுகங்களையும் நூலிழை பிசகாமல் பிரதி எடுத்து  காலம் என்றும் மறக்காவண்ணம் தனது இசையில் பதிவு செய்ய, சுசீலா என்ற இசைதேவதையின் பரிமாணம் பல விதங்களில் படர்ந்தது.

மன்னவனே அழலாமா என்ற தோழமையும் , எங்கே நீயோ அங்கே நானும் உன்னோடு என்ற காதலின் நீட்சியும், நாளை இந்த நேரம் பார்த்து ஓடி வா நிலா  என்ற ஏக்கமும், மன்னவன் வந்தானடி என்ற குதூகலமும், சொன்னது நீதானா என்ற சோகமும்,  சித்திரை மாதம் பவுர்ணமி நேரம் என்ற உற்சாகமும், காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானா என்ற களிப்பும், நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா என்ற நெஞ்சத்தின் வேதனையும், என்ன என்ன வார்த்தைகளோ என்ற வெகுளித் துள்ளலும், .........

      நாம் உணரும் பல உணர்ச்சிகளுக்கு உயிரூட்டிய குரல் அவருடையது. நம் மனதில் மிதக்கும் பல நெகிழ்ச்சியான, மகிழ்வான நிகழ்வுகளை ஒரு இசை மீட்டெடுக்கிறது. இசை என்றால் அது வாத்தியங்களின் சங்கீதமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. சில சமயங்களில்  சில குரல்களே ஒரு இசையாக மாறிவிடுகின்றன. சுசீலாவின் குரல்  அந்த வகையில் ஒரு பிழையில்லா இசை. அது ஒரு தேவதையின் குரல்.