Sunday 9 November 2014

இசை விரும்பிகள் XXII -எழுபதுகள்: நினைவுகளின் நீட்சி.


ஒரு கருப்பு வெள்ளைப்  புகைப்படம், முற்றத்தில் தெறிக்கும் சூரிய வெளிச்சம், தூண்கள் நிரம்பிய வீடு, ரசாயன மாற்றமடைந்து சருகாகிவிட்ட மஞ்சள் நிறம் பூசிக்கொண்ட  புத்தகப் பக்கங்கள், ஒரு இன்லேன்ட் கடிதம், பொத்தான்கள் கொண்ட ஒரு பழைய ரேடியோ,  பின் ஒரு பழைய பாடல்..... இவை நமது மன ஆழத்தில் துயில் கொண்டுவிட்ட துயரமான, களிப்பான, வேதனைச் சுகமான நினைவுகளை நோக்கி நம்மை விரைந்து செலுத்தும்  வியப்புகள்....

                                       

                                              எழுபதுகள்: நினைவுகளின் நீட்சி.


             நீண்ட நாட்கள் கழித்து எனது பழைய நண்பன் ஒருவனைச் சந்திக்க நேர்ந்தது. நண்பர்களின்  சந்திப்பே ஒரு உற்சாக ஊற்றுதான்.  குன்ஹா தீர்ப்பு, சொத்துக் குவிப்பு வழக்கு, ஊழல், தண்டனை என்று அவன் அப்போது நிகழ்ந்தவைகளை  சூடாக விவாதிக்க ஆரம்பித்தான். எனக்கோ இந்த அரசியல் பார்வைகளில் அதிக ஈடுபாடு எப்போதுமே கிடையாது. நீதி, நேர்மை என்பதெல்லாம் நம் நாட்டில் நேர்மையாக இருப்பதாக நான் என்றுமே தீவிரமாக எண்ணியதேயில்லை. மேலும்  என்னிடம் அரசியல் பேசினால்  எனது எதிர்வினை கடைசியில் "அப்படியா? இருந்துவிட்டுப் போகட்டுமே." என்பதாகத்தான்  இருக்கும்.  என் நண்பனோ முன்னை விட முனைப்பாக அரசியல் கட்சிகளை சாடத் துவங்க  நான், "அரசியல் மதம் இரண்டும் பொதுவெளியில் தவிர்க்கப்படவேண்டிய விவாதங்கள்." என்றேன் அவனிடம். "நீ சொல்வது சரிதான்" என்று உடனே ஒத்துக்கொண்டவன் ."வேறு என்ன பேசலாம்?" என்று கேட்டான். "பொதுவாக இசை பற்றி பேசலாம். உனக்குப் பிடித்த ஐந்து பாடல்களைக் குறிப்பிடு" என்று வேறு பாதைக்கு அவனை இழுத்து வந்தேன். இன்னும் துடிப்பாக உடனே என் யோசனைக்கு செவிசாய்த்தான். இரண்டு நிமிடங்கள் செலவழித்து ஐந்து பாடல்களை குறிப்பிட்டான்.  கீழ்க்கண்டவைகள் எப்போதும் ரசிக்கும் அவன் விருப்ப ஐந்து.

நினைவோ ஒரு பறவை-சிகப்பு ரோஜாக்கள்.
ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும்-ஜானி.
காதல் ஓவியம் பாடும் காவியம்-அலைகள் ஓய்வதில்லை.
பூ மாலையே தோள் சேரவா-பகல் நிலவு.
காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரிப் பொட்டுவைத்து-  வயசுப்பொண்ணு.

    நாங்கள் 70-80களைச் சார்ந்தவர்கள் என்பதால் இது எனக்கு வியப்பாக இல்லை. அவன் குறிப்பிட்ட பாடல்கள் எல்லாமே எனக்கும் விருப்பமானவையே. குறிப்பாக நினைவோ ஒரு பறவை என்ற பாடலை நான் அதிகம் நேசித்ததுண்டு. சாலையில் நின்றுகொண்டும் எதோ  கடைக்கருகில் சதைத்தூணாக மாறி செய்யவேண்டிய வேலையைச் செய்யாதும்  வானொலியில் ஒலித்த பல பாடல்களை நான் என் பால்ய பருவத்தில் ரசித்துக் கேட்டவன். அவை பெரும்பாலும் இளையராஜாவின் பாடல்களாகத்தான் இருக்கும். பள்ளிப் பருவத்தில் நாம் கேட்கும் கானங்கள்தானே பசுமையாக நம்மில் துளிர்த்துக்கொண்டிருகின்றன!

    "அதெல்லாம் சரி. அது ஏன்  காஞ்சிப் பட்டுடுத்தி பாடல்? இது உன் தேர்வு போல தெரியவில்லையே?" என்றேன். "எப்படி சரியாக கண்டுபிடித்தாய்?" என்றவன், "எனக்குப் பிடிக்கும் ஏனென்றால் என் ஆளுக்கு ரொம்பப் பிடிக்கும்." என்றான் கண் சிமிட்டியபடி. நான் எதிர்பார்த்ததுதான். "உன் மனைவிக்குத் தெரியுமா இது?" என்று கேட்டேன். ஏனென்றால்  அவன் காதல் கதை நம் சமூகத்திலிருக்கும் ஏராளமான தோல்வியடைந்த அமர காவியங்களில் ஒன்று.

     சற்று நேர மவுனத்திற்குப் பிறகு, "ஆனால் என்ன ஒன்று பார்த்தாயா? இது ஐந்துமே இளையராஜா பாடல்கள்." என்றான் உணர்சிவசப்பட்டவனாக. அது ஒரு தேவையில்லாத உணர்ச்சியாக எனக்குத் தோன்றியது. ஏனென்றால்  அது உண்மையில்லை என்று எனக்குத்  தெரியும். அவன் சொன்னதில்  நான்கு இளையராஜா இசையில் வந்த பாடல்கள். கடைசியில் அவன் குறிப்பிட்ட   காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரிப் பொட்டு வைத்து என்ற பாடல் 78 இல் வந்த வயசுப் பொண்ணு என்ற படத்தில் இடம் பெற்றது. அதற்கு இசை அமைத்தது  எம் எஸ் விஸ்வநாதன். இதை நான் அவனிடம் தெரிவித்த போது இரண்டு முறை நம்பாத சிரிப்பு சிரித்தான். சரிதான். சிலர்  மண்டைகளைத்  திறந்து நேரடியாக கபாலத்தில் உண்மையை ஊற்றினாலும் ஒரு பலனுமில்லை என்று என் முயற்சியை கைவிட்டுவிட்டேன். என் நண்பனைப் போலவே  பலரும் இந்தக் காஞ்சிப் பட்டுடுத்தி பாடலை  இளையராஜாவின் இசை  என்றே கருதுகிறார்கள். இது  நானறிந்த ஒன்றுதான். ஏன் நானே எனது பால்ய வயதில் இந்தப்  பாடலை அப்படித்தான் நினைத்திருந்தேன். படத் தலைப்பும் வயசுப் பொண்ணு என்று பாரதிராஜா வகையறாக்களின் தலைப்பு  போல இருந்ததும்  இந்தப்  பிழை நிகழ்ந்ததற்கு ஒரு முக்கிய காரணம்.

  புதிதாக திருமணமான பெண்ணொருத்தி தன் கணவன் வீட்டில் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்ற மூளை மழுங்கிய ஆணாதிக்க சிந்தனை வரிக்கு வரி தெறித்தாலும்  கேட்பதற்கு மந்திர மயக்கத்தைக் கொடுக்கும் கானம்.  ஒரு இடத்தில் கூட நம் ரசனையை சிதைக்காத வகையில் நளினமாக நடை பயிலும்  மிக அலாதியான பாடல் இது.

      இப்போது பாதியில் விட்டுவிட்டு வந்த என் நண்பனை மீண்டும் பார்ப்போம். "என் பட்டியல் முடிந்தது. இப்போது நீ சொல்." என்று என்னைக் கேட்டான். இதைச் சொல்லிவிட்டு உடனே, "நீ டி ஆர் மகாலிங்கம்  பாட்டையெல்லாம் சொல்லுவியே" என்று கலவரமடைந்தான் . எனக்கு அது சற்று ஆச்சர்யமாக இருந்தது. அடடே என்னைப் பற்றி கொஞ்சமேனும் சரியாகக் கணித்திருக்கிறானே என்று எண்ணினேன்.  "டி ஆர் மகாலிங்கம் வரை போகமாட்டேன்." என்ற உறுதிக்குப் பிறகு நான் சொன்னேன், "சொன்னது நீதானா? பாடல் எனக்குப் பிடித்த ஒன்று."  உடனே , "நான் அடுத்து இதைத்தான் சொல்ல நினைத்தேன்." என்றான் அவன். "ஏன் இதையும்  உன் ஆள் ரொம்பவும் விரும்பிக் கேட்பாளோ?" என்றேன். "அதில்லை. நல்ல பாடல். அப்பறம் பாச மலர் படத்தில் ஒரு அருமையான பாடல்..." அது என்ன பாடல் என்பதை அவன் மறந்துவிட்டான். "மலர்ந்தும் மலராத பாதி மலர்போல.." என்று நான் ஆரம்பித்ததும் "அதேதான். ச்சே சான்சே இல்லை." என குதூகலித்தான்: "கேட்டா அழுகை வந்துரும். இல்ல?" என்றான்.   "உண்மைதான். ஆனால் ஒன்று. இதையும் இளையராஜா பாடல் என்று சொல்லிவிடாதே." என்றேன்.  "அப்ப இல்லியா?" என்று போலியாக வியப்பு காட்டினான். எனக்கு எரிச்சல்தான் வந்திருக்கவேண்டும் மாறாக   சிரிப்பு வந்தது.  " நாம்  அரசியல் பற்றியே பேசியிருக்கலாம்." என்றேன்.

     எழுபதுகளின் நேர்த்தியான இன்னிசை  அதிகம் விவாதிக்கப்படாத ஒன்று. பெரும்பாலும் இந்த காலகாட்டம் ஹிந்தி இசையின் ஆதிக்கம் நிறைந்ததாகவும் தமிழிசை பின் இருக்கைக்கு  போய்விட்டதாகவும் ஒரு நிரூபனமற்ற கருத்து பரவலாக சிலரால் பரப்பப்படுகிறது.  எழுபதுகளின் இன்னிசையை என்னால் முடிந்த அளவுக்கு வெளிப்படுத்தும்  முயற்சியில் நான் எழுதும் ஏழாவது பதிவு இது.  இவற்றில் மொத்தமாக  நான் சேகரித்துச் சொல்லியிருக்கும் பாடல்கள் அப்போது வந்ததில் பாதி அளவு கூட இருக்காது.  இருந்தும் ஒரு சிறிய எண்ணிக்கையையாவது பதிவு செய்வது அவசியம் என்பதைத் தாண்டி சில  முரட்டுக் கருத்துகளுக்கு முடிவு கட்டவும்  சில மூடப்பட்ட கதவுகளை திறக்கவும் தேவைப்படும் ஆயுதம் என்றே நான் எண்ணுகிறேன்.

      மதன மாளிகையில் மந்திர  மாலைகளா உதய காலம்வரை உன்னத லீலைகளா என்ற பாடல் ராஜபார்ட் ரங்கதுரை என்ற படத்தில் இடம்பெற்ற கனவு கானம். அப்போது அதிகம் கேட்டதில்லை. ஏனோ பிடித்ததில்லை.  75ஆம் ஆண்டு  காலில் நடந்த அறுவைச் சிகிச்சை ஒன்று என்னை ஏறக்குறைய ஒரு மாதம் மருத்துவமனையில் முடக்கிப்போட்டது. அம்மா மட்டும் என்னுடன் இருக்க என் சகோதரனும் சகோதரிகளும் தினமும் என்னை வந்து வேடிக்கைப் பார்த்துவிட்டு போவது எனக்குப்  பழகியிருந்தது. அடுத்த வார்டில் தனியாக இருந்த ஒரு வயதான தாய் ட்ரான்சிஸ்டரில் பாடல்கள் கேட்டுக்கொண்டிருப்பார். குறிப்பாக மதன மாளிகையில் என்ற இந்தப் பாடலை அப்போதுதான் முழுமையாகக் கேட்டேன். அதன் மெட்டும் ராக தாள நுணுக்கங்களும்  முழுதும் புரியாவிட்டாலும் எதோ ஒரு வசீகரம்  அந்தப் பாடலை ரசிக்கவைத்தது.  இன்றும் இந்தப் பாடல் எனக்கு நான் தங்கியிருந்த மருத்துவமனையின் வாசனையையும் அந்த நீண்ட தாழ்வாரங்களையும், காலில் தினமும் எதோ ஒரு கூர்மையான கம்பி கொண்டு டிரெஸ்ஸிங் செய்தபோது அனுபவித்த வலியையும் அப்படியே திரும்ப கொண்டுவருகிறது.  நாஸ்டால்ஜ்யா! நினைத்தை முடிப்பவன் படத்தின் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போல ஆடலாம் பாடலாம் என்ற பாடலும் இதே மருத்துவமனை நினைவுகளை என்னுள் புதுப்பிக்கும்.

        நான் உள்ளே இருந்து வெளியே வந்தேன் உலகம் தெரியுதடா  என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு எங்கள் ஊரிலிருந்த  பிரகதாம்பாள் என்ற திரை அரங்கில் இருப்பது போன்ற நினைவே வரும். பட இடைவேளையின் போது மிகப் பொருத்தமாக இந்தப் பாடல் ஒலிக்கும். இது மணிப்பயல் என்ற படத்தில் வந்தது என்று அறிந்தேன். ஆனால் உறுதியாகத் தெரியவில்லை. இசை எம் எஸ் வி யாக இருக்கலாம்.

    பொன்னென்றும் பூவென்றும் தேனென்றும் சொல்வேனோ, நிலவே நீ சாட்சி மன  நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்,  தை மாதப் பொங்கலுக்கு தாய் தந்த செங்கரும்பே - நிலவே நீ சாட்சி படத்தின் இந்தப் பாடல்கள் தரமானவை.  குறிப்பாக பொன்னென்றும் பூவென்றும் பாடலில் எஸ் பி பியின் இளமை துள்ளும் வசீகரக் குரலை ரசிக்கலாம்.

      நீல மலர்கள் ( அனுராக் என்ற ஹிந்திப் படத்தின் நகல்) என்று ஒரு படம் 79 இல் வந்தது. கமலஹாசன்-ஸ்ரீதேவி நடித்தது. இதில் ஒரு காவியப் பாடல் உண்டு. வசியம் செய்யும் இசை கொண்ட தாலாட்டும் மெலடியுடன் எம் எஸ் வி அமைத்த இது இரவா பகலா நீ நிலவா கதிரா என்ற பாடல்தான் அது. பார்வையற்ற பெண்ணொருவள் தன் காதலன் வழியே இந்த உலகைப் பார்க்கும் நெகிழ்ச்சியான அனுபவத்தை இப்பாடல் மிகச் சிறப்பாக நமக்கு உணர்த்தும். எத்தனை அழகான கற்பனை! அதை இன்னும் அழகேற்றும் என்ன அபாரமான காவியக் கவிதை வரிகள்! பல்லவியைத் தாண்டி சரணத்துக்குள் செல்லச் செல்ல பார்வையற்ற உலகின் இருண்ட சோகத்தைக்  கூட ரசிக்கும் இன்ப மனநிலை நமக்கு வந்துவிடக்கூடிய ஒரு இதயமில்லா இன்னிசை.
     
   கல்யாணமே ஒரு பெண்ணோடுதான் இதில் யார் என்ன சொன்னாலும் ஊர் என்ன சொன்னாலும் என் வாழ்க்கை உன்னோடுதான் லலிதா (76) என்ற படத்தில் வந்த இந்தப் பாடல் ரேடியோ நாட்களின் சுவையை பலருக்கு இன்னமும் உணர்த்தக்கூடியது. மரபிசையை விட்டு விலகாத மெட்டும் வாணியின் வெள்ளிக்குரலும் துருத்தாத இசையமைப்பும் எத்தனை அழகாக ஒன்றுசேர்ந்து விருந்து படைக்கின்றன! இதே படத்தில் வரும்  சொர்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது  பாடலும் கேட்பதற்கு சுகமானது.

   நான் சில எம் எஸ் வி பாடல்களை இளையராஜாவின் இசையாக நினைத்ததுண்டு. அதில் ஒன்றுதான்     அடியேனைப் பாரம்மா பிடிவாதம் ஏனம்மா  வணக்கத்துக்குரிய காதலியே என்ற பாடல். வணக்கத்துக்குரிய காதலியே என்ற படத்தில் வரும் பாடலிது. இது மாலைமதி  பத்திரிகையில் (ஆரம்பத்தில் மாலைமதியில் ஆங்கில காமிக்ஸ் கதைகள் வந்ததன.)  எழுத்தாளர் ராஜேந்திர குமார் எழுதிய ஒரு புதினம். இதே படத்தின் அதிகம் கேட்கப்படாத மற்றொரு இனிமையான கீதம் ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான். இந்தப் பாடல் செல்லும் விதமே ஒரு ஊஞ்சலில் ஆடுவதைப் போலிருக்கும். இரண்டும் செழுமையாகச் செதுக்கப்பட்ட இசைச் சிற்பங்கள். 

    79இல் வந்த படம் ஒரே வானம் ஒரே பூமி. ஐ வி சசி இயக்கத்தில் ஜெய்ஷங்கர் நடித்த இந்தப் படம் முக்கால்வாசி அமெரிக்காவில் படமாக்கப்பட்டது. இதற்கு இசையமைத்தது  எம் எஸ் விஸ்வநாதன்.  அந்நிய மண்ணில் எடுக்கப்படும்  படங்களுக்கான  சிறப்பான பொருத்தமான மேலும் இனிமையான  இசையை கொடுப்பதில் எம் எஸ் வியை விட்டால் அப்போது வேறு யார் இருந்தார்கள்? எண்பதுகளில் ஜப்பானில் கல்யாணராமன் என்று ஒரு படம் வந்தது.  அதில் இருக்கும் ஒரு பாடலில் கூட   ஜப்பானை நினைவு படுத்தும் எந்த சங்கதியும் இருக்காது. எதோ அமிஞ்சிகரையில் எடுக்கப்பட்டதைப் போன்ற   உணர்வுதான் வரும்.  ஒரே வானம் ஒரே பூமி படத்தின்  கும்மாள கீதமாக ஒலிக்கும் சொர்கத்திலே நாம்  அடியெடுத்தொம் வெகு சுகமோ சுகமாக என்ற பாடல் குதூகல முத்திரையை கொண்டது. பிரமாண்டமான இசையமைப்பு கொண்ட மிகச்  சிறப்பான பாடல். உலக சகோதரத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் கொஞ்சம் காம்யுனிஸ்ட் சிவப்பு தென்படும்   அட்டகாசமான பாடல் ஒரே வானம் ஒரே பூமி ஒரே ஜாதி ஒரே நீதி.  சொல்லும் கருத்தைக் கொண்டு இது ஏறக்குறைய யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடலின்  தொனியைக் கொண்டது என்று சொல்லலாம். இதிலுள்ள மற்றொரு அழகான பாடல் மலைராணி முந்தானை சரிய சரிய. இதை முதலில் கேட்டபோது இதில் ஜாலி ஆபிரகாம் வாணி ஜெயராமின் ஒவ்வொரு வரிக்கும்  லலல லலலா ( படத்தில் ஒரு அமெரிக்க ஆசாமி நம்மூர் கே ஆர் விஜயாவை காதலிப்பார். இந்த லலல அவர் பாடுவது.) என்று பின்பாட்டு பாடுவது பெருத்த நகைச்சுவையாக இருந்தது.  நயாகரா நீர்வீழ்ச்சியை குறிக்கும் பாடலிது என்று நினைக்கிறேன். அந்த அமெரிக்க காதலன் கே ஆர் விஜயாவை நினைத்து லலலா என்று பாடுவது ஒரு வேடிக்கை. நீர்வீழ்ச்சியின் நீர்த்துளிகள் நம் மீது படியும் சிலிர்ப்பைக் கொடுக்கக்கூடிய பாடல்.

   அவன் அவள் அது என்று எழுத்தாளர்  சிவசங்கரியின் கதை படமானது. இதில் ஒரு தென்றலாக வீசும் கானம் உண்டு. இப்படிப் போகும்  இல்லம் சங்கீதம் அதில் ராகம் சம்சாரம். உண்மையில் தம்பதிகள் இவ்வாறுதான் தங்கள் வாழ்க்கையைப் பற்றி கனவு காண்கிறார்களா என்ற சந்தேகத்தை ஒதுக்கிவிட்டு இந்தப் பாடலை ரசிக்கலாம். மார்கழிப் பூக்களே இளந்தென்றலே கார்மேகமே என்று மற்றொரு அருமையான பாடலும் இதிலுண்டு. அந்தக் காலம் முதற்கொண்டு என்ற பாடல் கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கும். அதிகம் நான் கேட்டதில்லை அப்போது. ஜிஞ்சினக்க சின்னக்கிளி  சிரிக்கும்  பச்சைக்  கிளி  என்ற ராஜபார்ட் ரங்கதுரை பாடலின் மெட்டில் அமைந்த பாடல்.

      76 இல் வந்த ஒரு படம் பேரும் புகழும். இசை எம் எஸ் வி. இதில் அவளே என் காதலி கொடி  நீருக்குள்ளே மலர் மேலே என்ற ரம்மியமான பாடல் இருக்கிறது. வழக்கமான எம் எஸ் வி பாணிப் பாடல். இதுவும் அதிகம் airplay அடையாத பாடல். ஆனால் எத்தனை நளினமான கீதம்!

     நீ வருவாய் என நான் இருந்தேன்- சுஜாதா என்ற படத்தில் வரும் இந்தப் பாடல் மெலடியின் மேகத் தடவல். ஒரு முறை கேட்டுப்பாருங்கள். அசாதரணப் பாடல்.  இதன் ராகமும் மெட்டும் வரிகளும் ஒருசேர துளித்துளியாக கசிந்து மனதை நிரப்பும்.

   அப்போது ஹிட்லர் உமாநாத் படத்தில் வரும் சுருளிராஜனின் வில்லுப்பாட்டொன்று மிகப் பிரபலமடைந்தது. எம் எஸ் வி பலவிதமான இசை வடிவங்களை அளிப்பதில் கைதேர்ந்தவர் என்பதை மீண்டும் நிரூபித்த பாடல். அப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான இசை முயற்சியாக உருவான  இந்தப் பகடிப் பாடல் அப்போது இளவட்டங்களில்  அதிக பிரசித்திப் பெற்றது. பூப்பறிச்சு மாலை கட்டி  ஆமாடி தங்கம்  எனத் துவங்கி ஒரு பாரம்பரிய வில்லுப்பாட்டுக்கான எல்லா விழுமியங்களையும் ஒருங்கே கொண்டு இடையிடையே சுருளிராஜனின் முத்திரை நகைச்சுவையுடன் (பெரியோர்களே தாய்மார்களே உங்க மனைவிமார்களே, தப்பா எழுதினாதானே அழி ரப்பர் தேவை, மகாத்மா காந்தி என்ன சொன்னார் என்ன சொன்னார் டேய் என்னடா சொன்னாரு?, வில்லை எடுத்தவன் வில்லன், புல்லரிக்குதுண்ணே-பாத்து மாடு மேஞ்சிறப்போகுது ) கேட்பதற்கே அதகளமாக இருக்கும். இந்தப் படத்தின் ஒரே saving grace  இந்தப் பாடல்தான் என்று நினைக்கிறேன். இதில் ஒரு நம்பமுடியாத பாடல் உண்டு. நம்பிக்கையே மனிதனது  சாதனம் அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம் என்ற இப்பாடல் குறிக்கும்  நாயகன் யார் தெரியுமா? கொஞ்சம் தயாராகுங்கள் அதிர்ச்சிக்கு. அடால்ப் ஹிட்லர். ஜெர்மனியில் கூட ஹிட்லருக்கு இப்படியொரு வந்தனப் பாடல் இருக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது. கோழையான கணவனுக்கு தன்னம்பிக்கையூட்ட மனைவி ஹிட்லரைக் கொண்டு வீரம் கற்பிக்கும் அபூர்வப் பாடல்.  இந்தப் படத்தைப் பற்றி விகடன்  விமர்சனத்தில்  "ஹிட்லர் என்ன அவ்வளவு நல்லவரா? அவரை  எதோ காந்தி ரேஞ்சுக்கு புகழ்கிறார்கள் இந்தப் படத்தில்! " என்றொரு ஆச்சர்ய வாக்கியம் இருந்தது.

   ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி- 79இல் வந்த நங்கூரம் என்ற படப் பாடலிது. வானொலிகளில் அப்போது  அதிகம் மிதந்தாலும் நிறைய பேருக்கு இப்போது ஞாபகமிருக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது. கைகளில் பிடிபடும் வண்ணத்துப் பூச்சியின்  உணர்வை கொடுக்கும் பாடல்.

       79ஆம் ஆண்டு வில்லன் நடிகர் பி எஸ் வீரப்பாவின் தயாரிப்பில் வந்த ஒரு படம் திசை மாறிய பறவை. இதில் ஒரு அபாரமான கானம் கேட்ட முதல் நொடியிலேயே என்னைக் கவர்ந்தது.  கிழக்குப் பறவை மேற்கே பறக்குது அது கிழக்கு வானை மறக்கப் பார்க்குது என்று பல்லவி துவங்கி ஒரு லயமான வசியப்படுத்தும் தாளக்கட்டுடன் சரணம் சரணமாக பயணித்து ஒரு மோக நிலையை கேட்பவர்க்கு கொடுக்கும் மந்திர கானம். குறிப்பாக காவிரி என்ன கொள்ளிடமென்ன என்று டி எம் எஸ் கணீரென்று பாடும் அந்த இரண்டாவது சரணம் மற்றும் சரணத்தின் முடிவில் வேறு மெட்டுக்குத் தாவும் காரிருள் தேடுது நிலவை அது திசை மாறிய பறவை என்ற இடம் கேட்பதற்கு சுகமான ஆனந்தம். என்ன ஒரு தாளம்! என்ன ஒரு பாவம்! மரபை மீறாத மந்திர இசை.
     
  ரதிதேவி சந்நிதியில் ரகசிய பூஜை ரசமான  நினைவுகளின் இதழ் மணி ஓசை   ஒரு வீடு இரு உலகம் (80)  என்ற படத்தில் வரும் இந்தப் பாடல் எ ல் மகாராஜன்- சசிரேகா பாடியது. எம் எஸ் வி இசையில் இருக்கும் நீர்த்துப் போகாத நமது பாரம்பரிய இசை இழைகள் இந்தப் பாடலை ராக தூரிகை கொண்டு ரம்மியமாக வரைவதைக்  கேட்கலாம். ஒரு ஆழமான ரசிப்பிற்கான மிகப் பொருத்தமான பாடல்.

    குழலும் யாழும் குரலினில் ஒலிக்க கும்பிடும் வேளையிலே  சிறு வயதில் இதை ஒரு திரைப்படப் பாடல் என்று   எண்ணியிருந்தேன். பல அருமையான கிருஸ்துவ கானங்களை படைத்த எம் எஸ் வி யின் பரவசப்படுத்தும் பரலோக கீதம். 

     எண்பதுகளின் துவக்கத்தில் நான் அதிகமாக இளையராஜா பாடல்களைக் கேட்க ஆரம்பித்திருந்த நேரத்தில் ஒரு நாள் வழக்கம்போல சிலோன் வானொலியின் ஒரு நிகழ்ச்சியில் ஒரு புதிய பாடலொன்றைக் கேட்டேன். கேட்டதும் வியப்பு மேலிட்டது. இவர் இப்படியெல்லாம் கூட பாடல்கள் அமைப்பாரா என்ற சந்தேகம் எழுந்தாலும் அதை மீறிய ரசனைக்கான பாடலாக அது என்னைத் தீண்டியது. இன்றும் அதே தீண்டல் என்னை சுகமாக அணைப்பதை இந்தப் பாடலைக் கேட்கும்பொழுதெல்லாம் உணர்கிறேன். அந்தப் பாடல்  உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா. 82இல் வந்த சிம்லா ஸ்பெஷல் என்ற படத்தின் துடிப்பான இசையுடன் கூடிய துயரப் பாடல். எம் எஸ் வியின் இன்னிசை  இன்னும் இளைக்கவில்லை என்ற செய்தியை ரசிகர்களுக்கு உணர்த்திய பாடல். தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம் என்ற வரிகளுக்குப் பிறகு எஸ் பி பியின்  மின்னல் ஆலாபனை மேலிருந்து கீழிறங்குவது ஒரு அழகியலின் நேர்த்தி. இதே படத்தின் தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம் ஒரு  டப்பாங்குத்துப் பாடலாக இருந்தாலும் அப்போது வரிசை கட்டிவந்த அதே வகைப் பாடல்கள் போலில்லாது சற்று நளினமாக இருக்கும். இதை விட லுக் லவ் மீ டியர் லவ்லி பிகர் லாஸ்டிங் கலர் வெண்மேகமே ஓடிவா என்றொரு மிகச் சிறப்பான பாடல் இதிலுண்டு. கண்ணியமான காதல் கானம். மெட்டை உடைக்காத அழகான வார்த்தைகள். தழுவும் இசை. பரவசப்படுத்தும் பாடல். ஒரு பாடலை நம் மனதருகே கொண்டு வருவதற்கு எம் எஸ் வி அமைக்கும் மெட்டுக்கள்தான் எத்தனை நுணுக்கமானவை! ரசனைமிக்கவை! அவைகள்  அற்புதத் தருணங்கள் என்னும் கருத்தோடு  முரண்பட முடிந்தால்  உங்களுக்கு ஒரு நோய் பிடித்த இசை ரசனை இருந்தால் மட்டுமே முடியும்.
     
    பில்லா என்ற ஹிந்தி டான் படத்தின் நகல் 80இல் வந்தது. இதிலிருந்துதான் ரஜினிகாந்த் வேறு அரிதாரம் பூசிக்கொண்டார். அதுவரை எதோ கொஞ்சமாவது இயல்பான நடிப்பை அவரிடம் காணமுடிந்தது. பில்லாவிற்குப்பின் அமிதாப்பச்சனை அப்படியே நகல் எடுக்க ஆரம்பித்தார். பாதை மாறியது. இந்தப் படத்தின் பாடல்கள் பெரிய வெற்றி பெற்றவை. இருந்தும் நான் அடிக்கடி கேட்க விரும்பாத பாடல்களாகவே அவை இருந்தன. நாட்டுக்குள்ள எனக்கொரு பேருண்டு என்ற பாடல் அப்போது ரஜினிகாந்தைப் பற்றி பத்திரிகைகளில் வந்துகொண்டிருந்த சில கறுப்புக் கருத்துக்களை பகடி செய்வதுபோல இருக்கும்.  மை நேம் இஸ் பில்லா சற்று விறுவிறுப்பான நேர்த்தியான பாடல்.

   இதே ஆண்டில் பொல்லாதவன் என்றொரு படம் ரஜினிகாந்த் நடிப்பில் வந்தது. இசை எம் எஸ் வி. இதில் நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன் என்ற பாடல் பரபரப்பாக பேசப்பட்டது.  ரஜினி ரசிகர்கள் இந்தப் பாடலை கொண்டாடினார்கள். நல்ல பாடல்தான். அதோ வாராண்டி வராண்டி வில்லேந்தி ஒருத்தன் என்றொரு காதல் பாடல் இதிலுண்டு. கேட்பதற்கு சுவையாக இருக்கும். வழக்கமான எம் எஸ் வி மெலடி. ஆனால் நான் இவற்றைவிட அதிகம் ரசிப்பது நானே என்றும் ராஜா ஆனால் முள்ளில் ரோஜா என்ற மிக மென்மையான கீதத்தைதான். கேட்கத் திகட்டாத பாடல்.

  82இல் போக்கிரி ராஜா என்ற படம் வெளிவந்தது. ஏ வி எம் முரட்டுக்களைக்குப் பிறகு ரஜினியை வைத்து எடுத்த இரண்டாவது படம் என்று ஞாபகம். கடவுள் படச்சான் உலகம் உண்டாச்சு மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு, நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா பக்கத்துல பட்டுல ரோஜா போன்ற அப்போதைய காலத் தேவைக்கான பாடல்கள் அதில் இருந்தன. எனக்கு சற்றும் பிடிக்காத பாடல்கள்.  இளையராஜாவின் அதிரடியான பொதுவாக எம்மனசு   தங்கம் பாடல் பாணியோடு  எம் எஸ் வியால்  ஈடு கொடுக்க முடியவில்லை என்றாலும் விடிய விடிய சொல்லித் தருவேன் என்ற பாடல் ஒரு குளுமையான நிலவின் சுகத்தையும், ஒரு எரிந்து முடிந்த நெருப்பின்  கதகதப்பையும்  கொண்டது.

      அஞ்சலி என்றொரு படம் மணிரத்னம் இயக்கத்தில் வந்த சமயத்தில் அதிலுள்ள அஞ்சலி அஞ்சலி எங்கள் கண்மணி என்ற பாடலைச் சிலாகித்து என் நண்பர்கள் பேசுவது வழக்கம். நான் அப்போது தமிழ்ப் பாடல்களை கேட்கும் விருப்பங்களை விட்டு வெகு தூரம் வந்திருந்தேன். விரும்பாவிட்டாலும் அந்த அஞ்சலி பாடல்கள்  எதோ ஒரு சந்தர்ப்பத்தில் காதில் விழுந்த வண்ணமாக இருந்தன. ஒரு பாடல்கூட என் ரசனைகேற்றதாகவோ, நவீனமாகவோ அல்லது கேட்கத் தூண்டும்படியாகவோ எனக்குப் படவில்லை. எல்லா பாடல்களும் இளையராஜாவின் வழக்கமான வறட்டு மேற்கத்திய பூச்சு கொண்ட mundane music. இம்மாதிரியான நீர்த்துப்போன சக்கைகளை ரசிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிர்ப்பந்தத்தில் தமிழ் இசை ரசிகர்கள் இருந்ததற்காக சற்று வேதனை கூட வந்தது. அப்போது தமிழ்வாணன் என்றொரு நண்பர் சுசீலா பாடிய மற்றொரு குழந்தைப் பாடலைக்  குறிப்பிட்டு, "இது அதைவிட நன்றாக இருக்கும்." என்றார். அது முன்பு நான் கேட்ட பாடல்தான். ஆனால் என்னால் அப்போது அந்த ஒப்பீட்டை பூரணமாக உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. பல வருடங்கள் கழித்து அவர் சொன்ன அந்தப் பாடலை மீண்டும்  கேட்டபோது  அவர் கூறியது உண்மைதான் என்று உணர்ந்தேன். அது  மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே என்ற 86இல் வந்த நிலவே மலரே படத்தின் பாடல். நமது மரபிசை ராகத்தின் மீது மேற்கத்திய வண்ணம் பூசப்பட்ட ஒரு ஹாண்டிங் மெலடி. துருத்திக்கொண்டு நம்மை துன்புறுத்தும் மேற்கத்திய தாளங்கள் (அதுவும் கூட மிகவும் பாமரத்தனமாக) அலறும் அஞ்சலிப்பட  பாடல்கள் போலன்றி  இந்த கானம்  ஒரு நதியோரத்து நாணலின்  அழகைக்  கொண்டது. சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன், மாலை பொன்னான மாலை இளம் பூவே நீ வந்த வேளை போன்ற கேட்பதற்கினிய பாடல்களும் இதில் இருக்கின்றன.

    கீழே உள்ளது எழுபதுகளில் எம் எஸ் வி அல்லாத பிற இசை அமைப்பாளர்களின் இசையில் வந்த சில ஏகாந்தப் பாடல்கள். இதையும் விட அதிகமான அளவில் பல சுவையான பாடல்கள் இருக்கின்றன. அவற்றை சேகரிப்பதில் இருக்கும் சிரமம் இந்தப் பதிவை இன்னும் நாள் கடத்தும் என்பதால் சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.

பேசு மனமே நீ பேசு பேதை மனமே பேசு- புதிய வாழ்க்கை.இசை-கே வி எம். எஸ் பி பியின் துவக்ககால அற்புதங்களில் ஒன்று.

இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை, கல்யாண ஆசை வந்த காரணத்தைச் சொல்லவா?- எங்கள் தங்க ராஜா. கே வி எம்.

கல்யாண கோவிலின்  தெய்வீக கலசம்- சத்யம்.கே வி  எம். சற்றே தெலுகு சாயல் வீசும் பாடல். ரசிக்கவைக்கும் கானம்.

நதிக்கரையோரத்து நாணல்களே என் நாயகன் அழகைப் பாருங்களேன்- காதல் கிளிகள். கே வி எம். இந்தப் பாடலைப் பற்றி ஒரு ஆச்சர்யமான தகவல் உண்டு. அது தமிழ்த்திரையிசையில் இந்தப் பாடலில்தான் மிக வேகமாக  தபலா இசைக்கப்பட்டிருக்கிறது என்பதே. இரண்டு சரணத்திலும் வரும் தபலா இசையைக் கேட்டால் இந்தத் தகவல் பொய்சொல்லவில்லை என்று நாம் உணரலாம்.

ஆடுவது வெற்றி மயில் மின்னுவது தேவி இதழ் - அக்கா தங்கை. சங்கர் கணேஷ்.

ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே- கனிமுத்து பாப்பா,- டி வி ராஜு. ஷர்மிலி என்ற ஹிந்திப் படத்திலுள்ள Khilte hain gul yahan    பாடலின் நகல். இதற்கு இசை எஸ் டி பர்மன்.

மணிவிளக்கே மாந்தளிரே மதுரசமே ரகசியமே-  உன்னைத்தான் தம்பி. -விஜய பாஸ்கர்.

பொன்னை நான் பார்த்ததில்லை பெண்ணை தான் பார்த்ததுண்டு- கண்ணாமூச்சி வி குமார்.

பனிமலர் நீரில் ஆடும் அழகை ரசிக்கும் மனதில் சுகமே, மிக நவீனமாக அமைக்கப்பட்ட பாடல். ஏறக்குறைய எண்பதுகளின் மேற்கத்திய சாயலைக் கொண்ட பாடல். மோகனப் புன்னகையின் ஊர்வலமே மன்மத லீலையின் நாடகமே - உறவு சொல்ல ஒருவன். விஜய பாஸ்கர்.

ஆவணி மலரே ஐப்பசி மழையே -தொட்டதெல்லாம் பொன்னாகும் விஜய பாஸ்கர். ஆஹா! என்ன ஒரு அற்புதக் கானம்! இதைக் கேட்கையில் மேகத்தில் ஊர்வலம் போவதைப் போன்ற உணர்வைப்  பெறலாம்.

கண்ணெல்லாம் உன் வண்ணம் நெஞ்செல்லாம் உன் எண்ணம்- ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு- வி குமார்.

ஆனந்தம் அது என்னடா அதை காணும் வழி சொல்லடா,தொடவரவோ தொந்தரவோ - இரு நிலவுகள். இசை ராஜன் நாகேந்திரா. இரண்டுமே ஓடை ஒன்றில் பாதம் நனைய நடக்கும் சுகமானவை.

வரவேண்டும் மஹராஜன் தரவேண்டும் சுக ராகம்- பகடை பனிரெண்டு இசை- சக்கரவர்த்தி. அருமையான பாடல். கேட்ட நொடியிலேயே என்னை வீழ்த்திவிட்டது இந்தப் பாடல். இதை எப்படி வர்ணிப்பது என்று தெரியவில்லை. வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். ஜன்னலருகில் அமர்ந்திருக்கையில் திடீரென ஒற்றைக் காற்று ஒன்று  முகத்தை முத்தமிட்டுச் செல்வதைப் போன்ற  ஒரு திடீர் சுகம் இந்தப் பாடல். ஒருமுறை இந்தப் பாடலைக் கேட்டுகொண்டிருந்தபோது அங்கு வந்த என் நண்பனின் மகன் "இதையெல்லாம் எப்படிக் கேட்கிறீர்கள்?" என்று அதிர்ச்சியடைந்தான். "இன்னும் இருபது வருடம் ஆனதும் இதற்கான பதிலை நீயே தெரிந்துகொள்வாய்." என்றேன் நான் அவனிடம்.

    ஒரு முறை  ஒரு சாலையோரக் கடையொன்றில்  இரவு உணவு எடுத்துக்கொண்டிருந்தபோது   அருகிலிருந்த டிபிகல் சென்னைவாசிகள் மூவர் தங்கள் புதிய அலைபேசி பற்றி அளந்துகொண்டிருந்தார்கள். ஒருவன் சொன்னான்; "புதுசா ஒரு ரிங்டோன் வச்சிருக்கேன். கேளுங்கடா". எதோ பாண்டி நாட்டு கொடியின் மேலே தாண்டிக் குதிக்கும் மீனப் போல ரகப் பாடல் ஒலிக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால்  நான் கேட்ட  பாடல் என்னை சற்று திகைக்க வைத்தது. இதையெல்லாம் கூட இந்த அனிரூத் தலைமுறையினர் கேட்கிறார்களா என்ற ஆச்சர்யம் எழுந்தது. அந்தப் பாடல்: இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே. அவன் உற்சாகமாகச் சொன்னான் : "இந்தப் பாட்டு எப்பிடியிருக்கு பாத்தியா? என்னா மீசிக்? இன்னொரு பாட்டு போடுறேன். இந்த பாட்டையும் கேளேன்." சற்று நேரத்திற்குப் பிறகு  ஒலித்தது நான் பாடும் மவுன ராகம் கேட்கவில்லையா. அவனுடைய குதூகலிப்பும் ரசனையும் என்னை மிகவும் வசீகரித்தது. அவன் கண்டிப்பாக ஊதா கலரு ரிப்பனு வகைப் பாடல்களை தனது ரசனையின் அடையாளமாகக் கொண்டவனாக இருக்க அதிக வாய்ப்புகள் இருந்தாலும்  அதைத் தாண்டி இளையராஜாவின் இன்னிசைத்துளிகளைக் கேட்க அவன் காட்டிய ஆர்வம் ஒரு விதத்தில் அவனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வது ஒரு ஆரோக்கியமான நிகழ்வு.  2014இல் ஒரு இளைஞன் 1980களை வியப்புடன் பார்ப்பது ஒரு முதிர்ந்த ரசனைதான்.  ஆனால்   1980களைச் சேர்ந்தவர்கள் அதே எண்பதுகளில் நின்றுகொண்டு எழுபதுகளையும் அறுபதுகளையும் இகழ்ச்சியுடன் நோக்குவது ஒரு வீழ்ந்த ரசனை.

     வாழ்கையின் வழிகளில் சில வெளிச்சங்களைத் தேடும் விருப்பம் சில சமயங்களில்  நமக்கு ஏற்படும் ஒரு கட்டாயம். இந்தத் தேடல்களே நமது அனுபவங்களை செழுமையாகக்குகின்றன. கடந்த கால வண்ணங்களின் வசீகரத்தை நமக்கு நினைவூட்டுகின்றன. இந்தத் தேடல்தான் என்னை வேறு பாதைக்கு இட்டுச் சென்றது. புதிய கதவுகளைத் திறந்தது. எல்லையில்லா வானத்தில் நிலவைத் தாண்டி ஒளிரும் ஏராளமான   இசை நட்சத்திரங்களை அடையாளம் காட்டியது. குளங்கள்தான் எத்தனை பெரியவை என்ற எண்ணம் இயல்பானதுதான். ஆனால் அது கடல்களைக் காணும் வரைதான்.



அடுத்து: இசை விரும்பிகள் XXIII - எழுபதுகள்: பாதையெல்லாம் பரவசம்.



Saturday 25 October 2014

Sunday, 19 October 2014

எதிர்பாராதவர்கள்


(இசை விரும்பிகள் XXII வருவதற்கு சற்று தாமதம் ஆகலாம் என்பதால் ஒரு திடீர் பதிவாகத் தோன்றியதே இந்த எதிர்பாராதவர்கள். இது ஒரு கதை. 70களின் துவக்கத்தில் அரசாங்க அலுவலராக இருந்த ஒரு செக்கிங் இன்ஸ்பெக்டரின்  கதை. )


                                  
                                          எதிர்பாராதவர்கள் 
                                 

             உயர்மட்ட உத்தரவு ஒன்று தன்னை இத்தனை தூரம் இழுத்துக்கொண்டு வரும் என அந்த அதிகாரி நினைத்திருக்கமாட்டார்.  அயர்ச்சியைத் தரும் கரடு முரடான   பயணத்தின் இறுதியில் அவர் வந்து சேர்ந்த இடம் அவரை சற்று திடுக்கிட வைத்தது. ஏனென்றால் அவர் நின்று கொண்டிருந்த இடமும்   அவர் செல்ல வேண்டிய இடமும் இன்னும் சந்திக்கவேயில்லை. விசாரித்தபோது கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த ஒரு மாட்டுவண்டிக்காரன் சொன்னான்:  "அய்யா அதுக்கு இன்னும் ரொம்ப தொலவு போகனுங்க."

       காத்திருந்தவருக்கு சிறிது நேரத்தில்  ஒரு பஸ் கிடைத்தது.  எந்தவிதமான அராஜகங்களுக்கும், அநியாயங்களுக்கும்  உடன்படாத நேர்மை அவரை அந்த பஸ்ஸில் அமர்த்த  மற்றொரு சிரமமான பயணம் தொடர்ந்தது. முடிவில் உத்தரவில் இருந்த அந்த ரைஸ் மில்லுக்கு அருகே இறங்கி சற்று தூரம் நடந்த பின் அந்த இலக்கை  அடைந்தார். அது ஒரு சாயந்திர நேரம். பொதுவாக வேலைகள் முடிந்துகொண்டிருந்த ஒரு மாலை நேரம்.இருந்தும் அந்த ரைஸ் மில் துரிதமாக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

   மில்லுக்குள் புகுந்த  அந்த அதிகாரி  உடனே தன் அதிகாரக்  குரலில் அங்கிருந்தவர்களை அதட்டத் துவங்க,  அங்கிருந்த வேலையாட்கள் ஒன்றும் புரியாது திகைத்தனர்.  ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தனர். "போய் உங்கள் முதலாளியை அழைத்துக்கொண்டு வாருங்கள்." என்றார் அதிகாரி அதட்டலுடன். சற்று நேரத்தில் அங்கே மிகக் கடுமையான தோற்றம் கொண்ட ஒரு மனிதன் வந்தான்.  அவன் தோற்றமே அவனின் அதிகார மற்றும் பண பலத்தை துல்லியமாகச் சொன்னது.

    "நீதானா இந்த மில்லின் ஓனர்?" என்றார் அதிகாரி கடுமையாக. அவர் பயப்படவில்லை. 

     "ஆமாம்.  சார் நீங்க...? " என்றான் அவன் மிக பவ்யமாக. அவன்  நடிக்கவில்லை. 

   " நான் ஒரு செக்கிங் இன்ஸ்பெக்டர்.  நான் உன் மில்லில் என்ன நடைபெறுகிறது என்று ஆராய வந்திருக்கிறேன். உன் மில்லில் சட்டவிரோதமான காரியங்கள் நடப்பதாக  எங்களுக்கு தகவல் வந்திருக்கிறது."  என்றார் அவர் மிகவும் கோபமாக. 

    "அப்படியெல்லாம் இல்ல சார்.  இருந்தால் திருத்திக்கிறேன்." என்றவன் உடனே "டேய் சாருக்கு ஏதாவது குடிக்க கொண்டுவாங்க" என்று தன் பணியாளர்களை நிர்பந்தித்தான்.

  "அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்" என்றவர் தொடர்ந்து "இந்தக் கதையெல்லாம் என்னிடம் வேலைக்காகாது. உனது ரெகார்டுகளைப் பார்க்கவேண்டும். கொண்டுவா." என்றார்.

       சிறிது நேரத்தில் இரண்டு மூன்று பெரிய நோட்டுப் புத்தகங்கள் அவரிடம் கொடுக்கப்பட்டன. அதிகாரி அவற்றை கவனமாக ஆராய்ந்தார். நீண்ட நேரத்திற்குப் பிறகு காகிதங்களிலிருந்து கண்ணை எடுத்தவர்  அவனை நோக்கி," உனது ரெகார்டுகளில் நேர்மை இல்லை. இதில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்கின்றன. நீ எதையோ மறைக்கப் பார்க்கிறாய் என்று மட்டும் புரிகிறது. மேலும் மாலையே மூடவேண்டிய மில்லை இரவு வரை நீ திறந்து வைத்திருப்பது சட்டவிரோதம். அது தெரியுமா உனக்கு?" என்று கறாராக வினவினார்.

        "இனிமே இப்படிச் செய்யமாட்டேன் சார். இந்த ஒருதடவ மட்டும் கொஞ்சம் பெரிய மனசு பண்ணி விட்டுருங்க." என்று அவன் பரிதாபமாகக் கேட்டான். வேண்டினான் என்று கூட சொல்லலாம்.

   "அப்படியெல்லாம் விடமுடியாது. நான் உன் மில்லை இப்போதே மூடப்போகிறேன். சாவியை நீ நாளை கோர்டில் தண்டனையாக பணம் செலுத்தி வாங்கிக்கொள்." என்றவர் அடுத்தே அதை  செயல்படுத்த ஆரம்பித்தார்.   அந்த மில் முதலாளியோ  அதிகாரியை தொடர்ந்து வந்து கெஞ்சியபடி இருந்தான். அவரோ மிகக் கண்டிப்பாக அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் தன் பணியை சிரத்தையாக செய்து முடித்துவிட்டு சாவியை தன்னிடம் பத்திரப்படுத்திக்கொண்ட பின்னர்   அவனைப் பார்த்து," நாளை நீ இதற்கான தண்டனையை செலுத்திவிட்டு உன் மில்லை திறந்துகொள். ஆனால் மீண்டும் இப்படிச் செய்யாதே." என்றார் கறாராக. இப்படிச் சொல்லிவிட்டு உடனே அந்த மில்லை விட்டு வெளியே வந்துவிட்டார் வேகமாக. 

     வெளியே வந்தவருக்கு அப்போதுதான் உறைத்தது அந்த இரவில்அந்த இடத்தில்  எந்த பஸ் வசதியும் கிடையாது என்பது. இப்போது அவர் சேரவேண்டிய இடத்திற்கான பஸ் நிலையம் வெகுதூரத்தில் இருந்தது. அதை அடைய அவர் மூன்று அல்லது நான்கு கிலோ மீட்டர்கள் நடக்கவேண்டும். எப்படியும் நடுஇரவாகிவிடும். அதன் பின் பஸ் கிடைத்து வீடு அடைய ... நினைக்கவே ஆயாசமாக இருந்தது அந்த கறார் அதிகாரிக்கு.  அவர் பின்னாலே வந்த அந்த மில் முதலாளி அவரைப் பார்த்து ,"சார்,  நீங்க நடந்துபோற தூரமில்லை. கொஞ்சம் இருங்க" என்றவன் சற்று நேரத்தில் தடதடக்கும் புல்லெட்டில் அங்கு வந்து சேர்ந்தான். குழப்பமாக அவனைப் பார்த்த அவரை நோக்கி அவன் சொன்னான்:" ஏறிக்கங்க. நான் உங்களை பஸ் ஸ்டாண்ட்டுக்கு கொண்டுபோய் விடுறேன். இப்பவே ராவாயிடுச்சு"

   அந்த கறார் அதிகாரிக்கு வேறு வழியில்லை என்று தோன்றியிருக்கவேண்டும்.  எந்தவித மறுயோசனையுமின்றி அல்லது தயக்கமின்றி அந்த  மனிதனின் வண்டியின் பின்னே அவர் உட்கார்ந்து கொள்ள அவன் உடனே தன் புல்லெட்டை வேகமாகச் செலுத்த ஆரம்பித்தான். அதே  சிரமமான பாதையில் இப்போது அந்த இரவில் தான் தண்டித்த மனிதனுடன் அவனுடைய வண்டியில் சென்று கொண்டிருக்கும் வியப்பு கலந்த விபரீதத்தின் முதல் சுவடு கூட அவரைத் தொடவில்லை. கருமையான இரவில் அந்த வினோத புல்லெட் பயணம் தொடர்ந்தது. நீண்ட தொலைவு சென்றதும் ஒரு மூடப்பட்ட சிறிய கடையின் முன்  அவன் வண்டியை நிறுத்தினான். பின் சொன்னான், "சார், உங்க நல்ல காலம். அதோ ஒரு பஸ் நிக்குது.  அதில ஏறிக்கங்க.  உங்க ஊருக்கு சீக்கிரம் போயிரலாம்."

      முன்னால்  சற்று தொலைவில் ஒரு பேருந்து நின்றுகொண்டிருந்தது. ஒருவேளை அதுதான் அன்றைய தினத்தின் இறுதி பேருந்தாக இருக்கலாம்.

      அதிகாரி தங்களுக்கு முன் சற்று தூரத்தில் நின்றுகொண்டிருந்த அந்தப்  பேருந்தை கண்டு அதில் அவசரமாக  ஏறிக்கொள்ள அவன் கீழே நின்றபடி,"போயிட்டு வாங்க சார். நாளைக்கு நான் பணம் கட்டிர்றேன்." என்றான். "இனிமே இப்படி நடக்காது." என்று முடிவாகச் சொன்னான். பஸ் ஐந்து நிமிடங்களுக்குப்பிறகு கிளம்பும் வரை அவன் அங்கேயே நின்றபடியிருந்தான். பஸ் கிளம்பி அந்தப் பக்கம் செல்ல, பின்னர் அந்த புல்லெட் தடதடக்கும் ஓசையுடன் அதற்கு எதிர்த் திசையில் விரைந்து சென்று  சடுதியில் ஒரு புள்ளியாக மறைந்தது.

      இந்தக் கதை எனக்குள் ஒரே ஒரு கேள்வியைத்தான் விதைத்தது. இப்படி நடக்க சாத்தியமா? காந்தி கொல்லப்பட்ட போது ஐன்ஸ்டைன் ," ரத்தமும் சதையுமாக இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதையே பிற்கால சந்ததிகள் நம்பமாட்டார்கள்." என்று குறிப்பிட்டார். அதைப்போலவே இதை என்னால் நம்பமுடியவில்லை. 2014இலிருந்து 1970ஐப் பார்க்கும்போது சில விந்தையான உண்மைகளும் இப்போது காலாவதியாகிவிட்ட நேர்மைகளும், மலிந்துவிட்ட அதிகாரம் கொண்டவர்களின் அராஜாகங்களும்  இதை ஒரு வியப்புச் செய்தியாக பார்க்கவைக்கிறது. எதற்காகவும் தன் நேர்மையை சமரசம் செய்துகொள்ளாத அந்த அதிகாரியைப் போல் இன்றைக்கும் சிலர்   இருக்கிறார்கள் என்பது நம்பிக்கை தரும்  ஒரு வெளிச்சத்தின் வேர்.

     தன் பணியைச் சரியாக  நியாயமாகச் செய்த அந்தத் துணிச்சலான அரசு அதிகாரி  நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்தான். ஆனால்  என் மனதில் நிழலாடும் நபர் அந்த நேர்மையான கறார் செக்கிங் இன்ஸ்பெக்டர் அல்ல. மாறாக அந்த முரட்டு மில் முதலாளிதான்.   அதற்கான காரணத்தை நான் விவரிக்க வேண்டியதில்லை. அது புதுக்கவிதை ஒன்றுக்கு  விளக்கம் தருவது போன்று அபத்தமானது.  ஆனாலும் ஏதாவது  சொல்வதென்றால் இப்படிச் சொல்லலாம்:

   அந்த அதிகாரி செய்தது அவருடைய பணி. அவன் செய்தது யாருமே எதிர்பார்க்காத மனிதாபிமானம்.

     மறைந்து போன அந்த மனிதம் இன்று ஒரு  வினோதம். ஒரு அபூர்வம். ஒரு தலைப்புச் செய்தி. அல்லது  "அவன் கூட போன  அந்த ஆளு ஒரு முட்டாளுனா அவர   பத்திரமா கொண்டு போய் சேர்த்த இவன் அவர  விட பெரிய முட்டாளா இருப்பான் போல" என்று இன்று நாம் செய்யும் ஒரு நகைச்சுவை. 

      இப்போது ஒரு சிறிய திருத்தம். பதிவின் துவக்கத்தில் இது ஒரு கதை என்று சொல்லியிருந்தேன். இல்லை. இது ஒரு நிகழ்வு. இதை நான் அறிந்தது வெகு சமீபமாகத்தான். இதில் சம்பந்தப்பட்ட அந்த அரசு அதிகாரியே  என்னிடம் இதை பகிர்ந்துகொண்டார். இத்தனை நேர்மைக்கும் நியாயத்திற்கும் அவருக்கு  கிடைத்த வெகுமதி இன்றுவரை அவர் ஒரு வாடகை வீட்டில்தான்  வசிக்கிறார் என்ற  முரண்  ஒன்றே.  அந்த செக்கிங் இன்ஸ்பெக்டர் எனது தந்தை.


Thursday 9 October 2014

இசை விரும்பிகள் XXI -- அலங்காரம் கலையாத அழகு.



சில சந்தர்ப்பங்களையும் அனுபவங்களையும்  நாம் எவ்வித கலையுனர்வுமின்றி ரசிக்கத் தவறி சட்டென கடந்து சென்றுவிடுகிறோம். பால்ய நாட்களின் திரும்பி வராத இனிமையைப் போல அவைகள் திரும்பிப் பார்க்கப்படும் போதுதான் இன்னமும் அழகாகத் தெரிகின்றன. அப்போது நமக்கு ஏற்படுவது வெறும் அழகின் சுவை மட்டுமல்ல அதை சுவைக்கத் தவறிய வலியும்தான்.

                         

           எழுபதுகள்: அலங்காரம் கலையாத அழகு.


        பதிவைத் துவங்கும் முன் நாம் மறந்துவிட்டசில மகத்தான பாடல்களைக் குறித்துப் பேச  விரும்புகிறேன். முதலில்  ஒரு மாலை நேரத்து இளய  நிலவின் குளுமையை சில்லென்று நமக்கு கடத்தும் ஒரு பாடல். 72ஆம் ஆண்டு  வந்த மாப்பிள்ளை அழைப்பு என்ற படத்தின்   உள்ளத்தில் நூறு நினைத்தேன் உன்னிடம் சொல்லத் தவித்தேன்  என்ற வி குமார் அவர்களின் இசையில் வெளிவந்த அற்புதமான பாடலை நீங்கள் எப்போதாவது கேட்டதுண்டா? இணையத்தில் நீந்திச் சென்றுகொண்டிருந்த போது திடுமென இந்த இசைமுத்தை பல வருடங்களுக்குப் பிறகு கண்டெடுத்தேன். எத்தனை ரம்மியமான பாடல்! அடுத்த பாடல் இன்னும் சற்று பின்னோக்கிய காலத்தில் வந்தது. 67 ஆம் ஆண்டில் வந்த செல்வமகள் என்ற படத்தின் எம் எஸ் வியின் இசையில் பளீரென்று ஒரு காற்று நம்மை சுகமாக அறைவதைப் போன்ற உணர்வைக் கொடுக்கும் குயிலாக நானிருந்தென்ன குரலாக நீ வரவேண்டும் பாட்டாக நானிருந்தென்ன பொருளாக நீ வர வேண்டும் என்ற பாடல். இதில் கானக் குயில் சுசீலாவின் குரல் உங்களுக்குள் சில வியப்பு விதைகளை விதைக்காவிட்டால் அந்த இசை அனுபவமே வீணாகிவிடுகிறது. குரலா, இசையா, கவிதையா எதை விவரிப்பது என்ற குழப்பம் ஏற்படுவது நிச்சயம். பழைய இசைதான் என்னென்ன விதமான எண்ண ஓவியங்களை மனதில் வரைகிறது! சிலர் எளிதில் இகழும் சாதாரண இசையமைப்புதான். இருந்தும் இதுபோன்ற சாதாரணங்கள் கொடுக்கும் பிரமிப்பு வார்த்தைகளைத் தாண்டியது.

   
      பழைய பாடல்கள் நம் குடும்ப உறவினர் போல ரத்தத்தில் கலந்து விட்ட மறக்க முடியாத பிணைப்புகளில் ஒன்று. இப்படியொரு  கருத்தை முன்பு ஒருமுறை படித்தபோது அதுவரை பழைய பாடல்களுக்கும் அதைக் கேட்பவருக்குமான தொடர்பு என்னவென்பதை எப்படிச் சரியாக வகைப்படுத்துவது என்ற  குழப்பத்திற்கு  ஒரு துல்லியமான விடை கிடைத்த திருப்தி எனக்கு உண்டானது. இது  எத்தனை உண்மை என்பது   ஆன்மாவை மீட்டெடுத்து பலவகையான பசுமையான நினைவுகளை உயிர்ப்பிக்கும் பழைய பாடல்களைக் கேட்கும்போதுதான் புரிகிறது.  அவைகளை மீண்டும் கேட்கும் போது நமக்கு ஒரு இனம் புரியாத இணைப்பின் இன்பம் வருவதின் பின்னே இருப்பது இந்த உண்மையாகத்தான் இருக்க முடியுமென தோன்றுகிறது. ஏனென்றால் பழைய பாடல்களை  நாம் வெறும் பாடல்களாக மட்டுமே பாவிப்பதில்லை. அதையும்  மீறிய ஒரு பிணைப்பு அந்த இசையின் ஊடே ஒரு மெல்லிய நூலிழை போல நம்மையும் நம் நினைவுகளையும் ஒரு சேர சேர்த்துத் தைக்கிறது. விழித்துக்கொண்ட மனமோ உள்ளுக்குள் இன்னும் ஆழமாகப் பார்க்கிறது.  ஒரே  வரியில்  ஆன்மாவை கண்டெடுக்கும் இந்த இணைப்பை விவரிப்பதென்றால் இப்படிச் சொல்லலாம்:  பழைய பாடல்கள் நமது நினைவுகளின் நீட்சி.

       எம் எஸ் வி யின் தேன் மதுர கானங்களை நான் காலம் தாண்டி ரசிக்கக் கற்றுக்கொண்டாலும் அவரது பாடல்கள் என் மனதிற்குள் மழைத்துளி போல விழுந்து  என் ரசிப்பின் மேன்மைக்கு உரமேற்றியவைகள்  என்பதில் மாற்றுக் கருத்து  இல்லை. உதாரணமாக ஒரு முறை வட மாநிலத்தில் மிகத் தனிமையாக உணர்ந்த ஒரு பொழுதில் பழைய கசெட்டுகளில் ஒன்றை எதேச்சையாக கேட்க நேர்ந்தது. அப்போது நான் கேட்ட ஒரு பாடல் எனக்கு ஒரு நதியின் ஆனந்த அலைகளின் மீது பயணம் செய்யும் உணர்வை கொடுத்ததோடு  என் வாழ்க்கையில் அந்த சமயங்களில்  அறுபட்டுப் போயிருந்த என் பழைய உணர்வுகளின் உயிர்ப்பை உறுதி செய்தது. அந்தப் பாடல் ஆண்டவன் கட்டளை படத்தின் இசைச் சிற்பம் என நான் வர்ணிக்கும் அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் என்ற பாடல்.  இதைக் கேட்ட நேரத்தில் என்னிடம் திரும்பி வந்த பல விவரிக்க முடியாத நினைவலைகள் உணர்வுகளின் சங்கமமாக என்னை வசப்படுத்தின. இதே உணர்வு உங்களுக்கும் பல பாடல்களைக் கேட்கும் சமயத்தில் வருவது இயற்கையே. ஆனால் இதில் கவனிக்கத்தக்க ஒரு அம்சம் என்னவென்றால் இந்தப் பாடல் வெளிவந்த போது நான் பிறக்கவேயில்லை. பள்ளிப் பருவத்தில் ஒன்றிரண்டு முறைகள் வானொலியில் கேட்டதோடு எனக்கும் இப்பாடலுக்கும் இடையே உள்ள உறவு அதிகமில்லை. இருந்தும் இந்தப் பாடல் எனக்குள் செலுத்திய உணர்வுகள் எண்ணங்கள் வெறும் நாஸ்டால்ஜிக்  என்பதையும் மீறி காலத்தைத் தாண்டிய ஒரு அனுபவமாகவே எனக்குத் தோன்றுகிறது. இதையே நான் ஒரு காவியப் பாடலுக்கான முதன்மையான தகுதியாகப் பார்க்கிறேன்.

          இணையத்தில் உலா வந்தபோது ஒரு "இசை வித்தகர்" சொன்னதை படிக்க நேர்ந்தது. இவர் அன்னக்கிளியே தமிழில் வந்த முதல் படம், அதற்கு முன் தமிழர்கள் தமிழ்ப் பாடல்களையே கேட்காதவர்கள், 76 க்குப்பிறகுதான் தமிழ் பாடல்கள் வந்தன என்று புரட்டு செய்யும் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்பது அவர் சொல்லியிருக்கும் கருத்தைப் படித்தாலே உங்களுப் புரியும்.

------------அடுத்து பொதுவாவே ஏ.ஆர் புதுமையாகவும் ஒன்றும் செய்ய வில்லை.. எப்போதும் 40/100 மார்க் மாணவர்தான் .மேலோட்ட ரசிகர்களுக்கு அவர் இசை புயல் .பெரிய பெரிய கருவிகளை வைத்துக்கொண்டு “மெல்லிசை” போட்டுக்கொண்டிருக்கிறார்... 
அல்லது யூஸ் அண்ட் த்ரோ இசை.
இது தவிர ஏ.ஆர்.ஐ Digitalised MSV என்று சொல்லலாம் Digitalised MSV . என்று சொல்லும் போது எம்.எஸ்.வியை குறைவாக மதிப்பிடவில்லை (ஆனால் MSVன் கடைசி பத்து ஆண்டு இசை துரு பிடித்துதான் போயிற்று)
(”காற்றுக்கென்ன் வேலி” பாட்டு (படம்-அவர்கள்) MSVன்
அமர்க்களமான இசை.அந்த டிரெண்டை தொடர்ந்த்திருந்தால்
டிரெண்டு மாறி இருக்கும்.)
இது தவிர ஏ.ஆர்ன் சில பாடல்கள் , எம்.ஸ்.வி.ன் பழைய பாடல்களுக்கு ”பில்டு அப்” கொடுத்து போடப்படடது. சொந்த சரக்கு இல்லை.-------------

          இதைச் சொல்வது ஒரு இளையராஜா ரசிகராகத்தான் இருக்க முடியும் என்பது  எந்த விதமான யூகத்தையும்  தாண்டிய நிதர்சனம். மெல்லிசை என்பதை மிகச் சாதாரணமான அதிகமான வாத்தியங்கள் இசைக்கப்படாத வெறும் இசை எனவும் , மெல்லிசையை மெலிந்த இசை என குதர்க்கமாக திரிக்கவும்  முயலும் இந்தச் சிந்தனை ஒரு பலத்த ஆய்வுக்கு உட்பட்டது. முதலில் இவர் பகடி செய்யும் மெல்லிசை என்ன என்பதை நாம் சற்று ஆராய்வோம்.

             ஒரு வட்டத்திற்குள் சுழன்று கொண்டிருந்த நமது பாரம்பரிய கர்நாடக இசை அறுபதுகளில் பாமரர்களும்  சுலபமாக  ரசிக்கும் எளிமையின் வடிவம் பெற்றது ஒரு ஆச்சர்யம். பின் அது  மெல்லிசையாக மாறி நமது இசை தாகத்துக்கான நீரூற்றுகளாக பொங்கிப் பிரவாகமெடுத்தது ஒரு வியப்பான காவிய நிகழ்வு. இது  அணையில்லாத வேகத்தில்  புதுவெள்ளமாகப் பாய்ந்தது
ஒரு இசைச் சரித்திரம்.  இதன் நீட்சியாக  எழுபதுகளில்  இந்த மெல்லிசை புதிய சாலைகளை அமைத்துக்கொண்டது ஒரு மகத்துவம். இந்த மெல்லிசை எப்படி சாத்தியமானது என்பது பாதைகளில்லாத இடங்களில் சாலைகளை அமைத்தவர்களின் ஆண்டாண்டு காலமான உழைப்பே.

       மெல்லிசை என்பது திடமான அடர்த்தியான கர்நாடக ராகத்தின் எளிமையான வடிவம். ஒரு சாராருக்கு மட்டுமே ஏதுவாகவும் அவ்வாறான இசைப் பண்டிதர்களின் இசை உணர்ச்சிக்கு உணவாகவும் அடிமைப்படுத்தப்பட்டு   ஒரு வட்டதிற்குள்  சிக்கிக்கொண்டுவிட்ட கர்நாடக இசையை (தமிழிசையே கர்நாடக இசையாக உருமாறியது என்ற கருத்தும் உண்டு.)  அதன் அழகுணர்ச்சி சிதையாமல்  அதைக் கேட்டு  பாமரனும் தலையாட்டும் இசை ரசனைக்கான புதிய நவீனத் தோற்றமே மெல்லிசை.  இது எப்படியென்றால் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மிகப் புகழ் பெற்ற எளிதில் யாருக்கும் புரியாத Theory Of Relativity என்ற விஞ்ஞான விதியை "நீ உன் காதலிக்காகக் காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாகவும் காதலியுடன் இருக்கும்போது ஒவ்வொரு யுகமும் ஒரு நிமிடமாகவும் மாறிப்போகும்" என்று சாமானியர்களுக்கும் புரியும் விதத்தில் சொல்வதைப் போன்றது.  இன்னும் சுலபமாக சொல்வதென்றால் குழந்தைகளுக்கு கசப்பு மருந்தை ஊட்டும் போது அதில் தேனைக் கலந்து கொடுக்கும் தந்திரம் போன்றது இது.  ஐம்பதுகள் முதல் அறுபதுகளின் ஆரம்பம் வரை இந்த இசைச் செதுக்கல்  படிப்படியாக நமது தமிழ்த் திரையிசையில் முன்னெடுக்கப்பட்டு செங்கல் செங்கலாக உருவாக்கப்பட்ட இசை மாளிகைதான் இந்த மெல்லிசை.  இந்த மகத்தான பணியை சிறப்பாகச் செய்த பல இசை அமைப்பாளர்களின் இசை மேதமையையும் அவர்களின் சிரத்தையான உழைப்பையும் சட்டென காலில் போட்டு மிதித்துவிட்டு, இவ்வாறான கட்டுமானங்கள் முடிந்து இசைக் கோவில்கள் கட்டப்பட்ட பின்னர் எதோ ஒரு சிலையை உள்ளே திணித்து இதுதான் இசைக் கடவுள் என்று உண்மையை உடைப்பது ரொம்பவும் முதிர்ச்சியற்ற போக்கு இன்னும் அழுத்தமாக சொல்வதென்றால் ..மடத்தனமானது.

     மேற்கத்திய இசை பாரம்பரியத்தில் இவ்வாறான மெல்லிசை எனப்படும் light music 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே தன் பரிமாணத்தை வெளிக்காட்ட ஆரம்பித்து விட்டது.  ஐரோப்பாவின் ஆணவம் மிக்க மேல்தட்டு மக்கள் ஆராவாரமாக ரசித்துக்கொண்டிருந்த சிம்பனி என்னும் மேற்கத்திய பாரம்பரிய இசையின் நுட்பத்தை, இசை மேதமையினால் விளைந்த இசைக் குறிப்புகளின் மீது கட்டப்பட்ட  சிம்பனியின் மகத்துவத்தை சிறிய இசைத்  துணுக்களாக மாற்றி   every Tom Dick and Harry யும் விரும்பும் வண்ணத்தில்  அதை சாமானியர்களின் அருகே கொண்டு சென்றது மேலே உள்ள சிலர் பகடி செய்யும்  light music எனப்படும்  மெல்லிசையே. ஒரு சமூகத்து  மேட்டுக்குடியின் பாரம்பரிய இசை ரசனையையும்  அதே சமூகத்தின் பெரும்பான்மையான மக்களின்  நடைமுறை இசை ரசனையையும் எதுவும் எதையும் மீறாத அளவில் சரியான விகிதத்தில் கலந்து ஒரு மேன்மையான இசையனுபவதிற்காக உருவாக்கப்பட்டதே இந்த மெல்லிசை என்னும் அற்புதம். இது நடந்திருக்காவிட்டால் மேற்கத்திய உலகில் என்ன மாறியிருக்கும் என்று  துல்லியமாக வரையறுக்க முடியாவிட்டாலும் நமது தமிழ்த் திரை இசையைப் பொருத்தவரை இந்த மெல்லிசையின் நிகழ்வு சாத்தியமாகியிருக்காத பட்சத்தில் இங்கே இளையராஜாவும் இல்லை ரஹ்மானும் இல்லை என்பதே உண்மை. பாதைகளே இல்லாத வெளிகளில் சாலைகள் அமைத்தவர்களை ஒரு நாலாந்தர நக்கலுடன் ஓரங்கட்டிவிட்டு   அவ்வாறான சாலைகள்  உருவாகி அதில் பயணம் செய்து காலம் காலமாக தமிழ் நெஞ்சங்களை காதலுடன் கட்டியணைக்கும் கணக்கில்லா பல கானங்கள் இன்றளவும் இறவாமல் தங்களின் இருப்பை அமைதியாக உணர்த்திக்கொண்டிருக்க இதன் பின் வந்தவர்கள்  தங்கள் வண்டிகளை அதே சாலைகளில் இலகுவாகவும் ஒய்யாரமாகவும்  ஓட்டிச் செல்ல அவர்களை  அளவுக்கு மீறிப் புகழ்வது எனது பார்வையில் நலிந்த  செயல். இசையின் பன்முகத்தன்மை நம்மை அதிசயத்திலும், ஆச்சர்யத்திலும், வியப்பிலும், திகைப்பிலும் சில சமயங்களில்  அதிர்ச்சியிலும் ஆழ்த்தக்கூடியது. அதன் மாற்றம் நமது புலன்களுக்கு தெரியாத வண்ணமாகவும்  சமயத்தில்   புரிபடாத  ஒரு திடீர் காட்சி  போலவும் வெளிப்படக்கூடியது. 

    மெல்லிசையின் ஆத்மாவை  அறியாமல் இதைப்போன்ற புரையோடிய கருத்துக் குப்பைகளை தாராளமாக அள்ளிவீசுபவர்களின் பக்குவமில்லாத  அடுத்த வெற்றுக்கூச்சல் எம் எஸ் வியின் இன்னிசையின் இனிமை  அவருடைய அந்திம காலங்களில் சோடை போனது என்பது. மேலே இப்படியான ஒரு கருத்தைச் சொன்னவர் பொத்தாம்பொதுவாக எம் எஸ் வி யின் கடைசி பத்து வருடங்கள் என்று ஆதாரமில்லாத அபத்தத்தை உதிர்த்துவிட்டு உடனே  ரஹ்மானை துவைத்துப்போட சென்றுவிடுகிறார். அது எந்த பத்து வருடங்கள் என்பதை மட்டும் நம்முடைய அனுமானத்திற்கே விட்டுவிடுகிறார். இது வழக்கம்தான். 70களின் எம் எஸ் வி யின் இசை எவ்வாறு ராக அலைகளாக சுழன்றடித்தது என்பதை தமிழகமே அறியும். ஒருவேளை அன்னக்கிளி வந்த 76ஆம் ஆண்டிலிருந்து இந்த கணக்கை எடுத்துக்கொண்டாலும் அதுவுமே உண்மைக்கு முரணானது. வெற்று ஓசைகளிலும், கண நேரத்திற்கு நமது கவனத்தை கவரும் துடிப்பான இசையை  தருவதையும்   தவிர்த்து தான்  அதுவரை கடந்துவந்த பாரம்பரியத்தின் வேர்களை இழக்காத இசையை இறுதிவரை எந்தவித சமரசங்களுக்கும் உட்படாமல் கொடுத்துவந்த ஒருவரை கேட்கவே கூசும்  நாலாந்தர இசை வடிவங்களை   பிரபலமாக்கி தமிழிசையின் வீழ்ச்சிக்கு வித்திட்ட ஒருவருடன் ஒப்பிட்டு பேசுவது அபத்தமானது. இருந்தும் அவருக்குப் பின் இவர் வந்த ஒரே காரணத்திற்காக  இந்த ஒப்பீடு சாத்தியமாகிறது என்று தோன்றுகிறது. 

           இப்போது நாம் பார்க்க இருப்பது 1972இல்  பட்டி தொட்டியெங்கும் வெடி போல ஒலித்த ஒரு படத்தின் பாடல்களை. அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு  என்று ஆரம்பித்தாலே அந்தப் பாடலின் துடிப்பான தாளம் நம்மை உடனே ஆட்கொண்டுவிடுகிறது. ஒரு நண்பர் மச்சானைப் பார்த்தீங்களா பாடல்தான் முதல் முதலாக நாட்டுப்புற இசையின் குதூகலத்தை தமிழர்களுக்கு உணர்த்தியது என்று சொல்லப்போக அந்த மதீயீனமான  கருத்தின் மீது ஆணியடித்தது இந்தப் பாடல். பட்டிக்காடா பட்டணமா படத்தின் அனைத்துப் பாடல்களும் தமிழ் ரசிகர்களின் உள்ளத்தில் குதித்து உற்சாக கும்மாளம் போட்டவை என்பதை இங்கே நினைவில் கொள்வது அவசியம். உதாரணமாக எம் எஸ் வி அனாசயமாக மேற்கத்திய இசையை நமது நாட்டுப்புற தாளத்துடன் சேர்த்து அதகளம் செய்த கேட்டுக்கோடி உருமி  மேளம் என்ற பாடலை கொஞ்சம் அசைபோட்டுப் பார்த்தால் அதில்  அவர் செய்திருக்கும் நவீனம் நம்மை வியக்க வைக்கும். கிராமத்து நாயகன் தன் மண் சார்ந்த பெருமையை பாடத்துவங்க அந்தப் பல்லவிக்கு எம் எஸ் வி கிடார் மற்றும் ட்ரம்ஸ் என தடதடக்கும் மேற்கத்திய இசையை பின்னணியில் அமைத்து நகரத்து நாயகி We shall meet at the garden gate என்று ஆங்கிலத்தில் ஆரம்பிக்க பின்னணியில் நம் நாட்டுபுற வாத்தியங்கள் ஆர்ப்பாட்டமான  தாளத்துடன் அந்த மேற்கத்திய உருவத்தை அப்படியே வாரிச் சுருட்டி விழுங்கி விட எஞ்சி நிற்பது ஆனந்த வியப்பே. இந்த மரபை மீறும் பாணி அல்லது இசைப் புரட்சி பாடல் முழுதும் நம்மை தொந்தரவு செய்யாமல் ரசிப்புடன் மானசீகமாக குதித்து ஆடவைக்கிறது. M.S.V's choice of musical layers is not disturbingly dominant but subtly sensuous.  மேலை நாடுகளில் டப்பாங்குத்து பாடலைப் பாடும் அலங்காரமான வெளிப்பூச்சு எதுவுமில்லாத ஒரு உன்னதமான இசை ரசனைக்கான பாடலிது. இதே படத்தின் நல் வாழ்த்து நான் சொல்லுவேன் நல்லபடி வாழ்கவென்று என்ற பாடல் மற்றொரு மனதை கவரும் கானம். இதில் இசைக்கப்படும் கிடாரின் இன்னிசை கேட்பதற்கு அலாதியானது. 
         
   பால்ய வயதில் நண்பர்கள் சூழ வாழ்ந்த தினங்களில் எத்தனை இன்பங்கள் அருவி போல பருகக் கிடைத்தாலும் அவற்றை நாம் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. Abundance and availability make us feel regret the moments we failed to cherish when they were around. 78 இல் வந்த அவள் தந்த உறவு என்ற படத்திலுள்ள இந்தப் பாடல் இதை எத்தனை அழகாகச் சொல்லிவிடுகிறது. நினைத்துப் பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது. நமது ஞாபக மண்ணில் புதைந்துபோன பொக்கிஷப் பாடல். காதலிக்கு பதில் இசை என்று வைத்துக்கொண்டால் இது சரியே என்று தோன்றுகிறது. எஸ் பி பியின் இளமை துள்ளும் குரலும் அப்போது ஆர்ப்பரிப்பைக் கொடுத்த அவரது ஒ ஒ ரிமெம்பர் என்ற ஆங்கில உச்சரிப்பும் ஒரு பசுமையான இலையாக நெஞ்சத்தில் துடிக்கிறது.  ஏன் இதுபோன்ற இசை முத்துக்களை மறந்தோம் என்ற சுய ஊசிகள் நம்மைக் குத்துவது இவைகளுடன் நமக்குக் கிடைக்கும் வலிகள்.

      இதே உணர்வை அளிக்கும் மற்றொரு வைர கீதம் என் மனது ஒன்றுதான் உன்மீது ஞாபகம் வான் நிலவு ஒன்றுதான் வான் மீது சத்தியம் என்ற மிக மகத்துவமான இனிமையை இசையாக கொட்டிய பாடல். எழுபதுகளின் முத்திரை என்ற பட்டியலிட்டால் அதில் தவிர்க்கமுடியாத ஒன்றாக இந்தப் பாடல் இருக்கும் என்பது நிச்சயம். ஒரு முறை இதைக்  கேட்டுவிட்டால் பிறகு நாள் முழுதும் மனதில் அணையாத விளக்காக எரிந்துகொண்டே இருக்கும் பாடல்.  கேட்கும் முதல் நொடியிலேயே கானக் குயில் சுசீலாவின் மந்திரம் போர்த்திய குரலும் எம் எஸ் வியின் ராகத்தை விட்டு விலகாத தாளமும் நம்மை வசியம் செய்துவிடுகின்றன. பிறகு டி எம் எஸ் பாடத்துவங்கியதும் நாட்டுபுற தாளத்துக்கு மாறும் பாணி பின் சுசீலா மீண்டும் தொடரும் போது எந்தவித இடைஞ்சலில்லாமல் மேற்கத்திய தாளம் போட்டுக்கொள்வது அபாரமான இசைச்  சுழற்சி. இந்தப் பாடல் அவன் ஒரு சரித்திரம் என்ற படத்தில் வருவதாக ஒரு தவறான தகவல் இணையத்தில் இருந்தாலும் உண்மையில்  இது1977 இல் வந்த பெருமைக்குரியவள் என்ற  படத்தின் பாடல். 

     இது பெய்ட்டோவன் (தமிழில் பீத்தோவன் என்பார்கள் தவறுதலாக.) என்ற இசை அதிசயத்தின் Fur Elise என்ற இசைத் துளியின் நகல் என்ற தகவல் இருக்கிறது. உண்மையில் பாடலின் துவக்கத்தில் வரும் ஒரு சிறிய துணுக்கே இந்த அற்புதப் பாடலை ஒரு மேற்கத்திய நகல் என்று சொல்லத்தூண்டுகிறது. மற்றபடி இந்தப் பாடல் செல்லும் திசையே வேறு. கண்டிப்பாக இது ஒரு பிரதியெடுக்கப்பட்ட பாடலல்ல. இங்கே சில உண்மைகளை வெளிச்சத்துக்கு அழைத்துவருவது அவசியம் என்றுனர்கிறேன்.  யாதோங்கி பாரத் என்ற ஹிந்திப் படம் நாளை நமதே என தமிழில் எடுக்கப்பட்டபோது அதில் எம் எஸ் வி இசையமைக்க மறுத்துவிட்டார். பொதுவாக எம் ஜி ஆர் படங்களில் யாரும் மறுப்பே கூற முடியாது. ஆனாலும் எம் எஸ் வி இசையமைக்க விரும்பாததின் காரணம் மூலப் படத்தின்  ஹிந்திப் பாடல்களையே தமிழில் அமைக்கும்படி தான் நிர்பந்த்திக்கப்படுவோம்  என்ற எண்ணமே. ஆனால் அவ்வாறில்லாமல் தமிழில் புது மெட்டுகள் அமைக்கலாம் என்ற உறுதிமொழிக்குப் பிறகே எம் எஸ் வி இதில் இசையமைத்தார். ஆச்சர்யமாக நாளை நமதே படத்தின் பாடல்கள் ஒன்றுகூட அந்த ஹிந்திப் படத்தின் சாயலைக் கொண்டிருக்காது என்பதை இந்த இரண்டு படத்தின் பாடல்களைக் கேட்டவர்கள் உணர்வார்கள். மேலும் ஆராதனா என்ற ஹிந்திப் படம் சிவகாமியின் செல்வன் என்றானபோதும், பிரமச்சாரி எங்க மாமாவாக வந்தபோதும் பாடல்களில்  எம் எஸ் வி தன் சுய முத்திரையையே பதித்தார். இதில் பில்லா, தில்லு முல்லு, தீ போன்ற படங்களும் அடக்கம். பட்டியல் நீளும் சாத்தியம் இருக்கிறது. எனவே இங்கேயே நிறுத்திக்கொள்கிறேன்.

      72 இல் வெளியான  சுடரும் சூறாவளியும் என்ற படத்தில் வரும் அன்பு வந்தது என்னை ஆள வந்தது என்ற சுகமான கீதம் எஸ் பி பி யின் ஆரம்பகாலத் தேன் துளிகளில் ஒன்று. இதைக் கேட்டவர்கள் அல்லது இப்போது கேட்பவர்கள் இதை உணர்வார்கள். இதைக் கேட்கும்போது உங்களுக்கு அந்த கால வானொலி தினங்கள் ஞாபகம் வராவிட்டால் நீங்கள் சில முதல் அனுபவங்களை  இழந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள்  என்று அர்த்தம்.

     73இல் மணிப்பயல் என்றொரு படம் வந்தது. இதில்தான் தங்கச் சிமிழ் போல் இதழோ அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ என்ற அலாதியான கானம் இருக்கிறது. பாடகர்  ஜெயச்சந்திரனின் ஆரம்பகாலப் பாடல்களில் ஒன்று. டேப் ரிகார்டர் வந்த பிறகு  இந்தப் பாடலை மட்டும் ஒரு கசெட் முழுதும் பதிவு செய்து சலிக்காமல் கேட்ட ஒரு உறவினர் எனக்குண்டு. சிலருடைய இசை விருப்பங்கள்தான் எத்தனை வினோத வடிவங்கள் பெறுகின்றன? தவிர்க்க முடியாத கானம்.  இதை பலமுறை கேட்டிருந்தாலும் படத்தில் ஏ வி எம் ராஜன் பாடுவார் என்று சற்றும் எண்ணவில்லை.

     74இல் ஜெயலலிதாவின் 100வது படம் திருமாங்கல்யம் வெளிவந்தது. படம் ஓடியதா இல்லையா என்ற விபரம் தெரியவில்லை.  பொன்னான மனம் எங்கு போகிறது சொல்லுங்கள் மேகங்களே என்றொரு நளினமான கீதம் இதிலுண்டு. ஒன்றிரண்டு முறைகள் வானொலியில் கேட்டதோடு சரி. இதன் பின் தற்போதுதான் மீண்டும் இந்தப் பாடல் என் செவிகளில் விழுந்தது. இதே படத்தின் மற்றொரு நல்லிசை கேட்டதெல்லாம் நான் தருவேன் எனை நீ மறக்காதே என்ற பாடல். அருமையான ராக வார்ப்பு.

         76இல் வந்த ஒரு படம் முத்தான முத்தல்லவோ. படம் வெற்றி பெற்றதாக எனக்கு நினைவில்லை.  ஏனென்றால்  இந்தப் படம் வந்த சுவடே அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இருந்தும் இதிலுள்ள சில பாடல்களை குறிப்பிட்டால் இந்தப் படம் பற்றிய ஒரு திடீர் ஞாபகம் உங்களுக்கு வரலாம். நான் குறிப்பிடும் முதல் பாடலைக் கேட்டபோது 70களின் வானொலி தினங்கள் மனதில் மறுபடி உயிர்பெற்றன. எஸ் பி பி பாடிய மார்கழிப் பனியில் மயங்கிய நிலவில் ஊர்வசி வந்தாள் என்ற பாடலை  யு டியூபில் காண நேர்ந்தது. பாடலே ஒரு சுகம் என்றால் இதில் நடித்த தேங்காய் சீனிவாசனின் முக பாவனைகளும் சேஷ்டைகளும் அற்புதம்.இப்படியொரு பாடல் அப்போது வந்தது என்ற நினைவே இதை கேட்கும்போதுதான் மீண்டும் எழுந்தது. இதே படத்தின்  பாலபிஷேகம் செய்யவோ உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ பாடல் வெகு நேர்த்தியாக இசைக்கப்பட்ட கான  ஊற்று. பாடலை முழுதும் உள்வாங்கினால் இதன் வசீகரத்தை உணரந்துகொள்ள முடியும். இதே படத்தின் சிறப்பான மற்றொரு பாடல் எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள். இதை ஒரு ராஜா ரசிகர் முன்பு ஒருமுறை எனக்கு வந்த பின்னூட்டத்தில் கடுமையாக சாடியிருந்தது என் நினைவுக்கு வருகிறது. இந்தப் பாடல் வந்தபோதே எங்கள் நண்பர்கள் குழுமத்தில் தேங்காய் சீனிவாசன் பாடும் பாட்டு இது என்ற அறிமுகத்துடன் நாங்கள்  இதை நக்கல் செய்வதுண்டு. அந்த சிறுபிள்ளைத்தனத்தைத் தாண்டி யோசித்தால் எம் எஸ் வி மற்றும் எஸ் பி பி சேர்ந்து பாடிய அபூர்வமான பாடல் இது என்ற நிறம் இதற்க்கிருப்பதைக்  காணலாம். பகடி செய்யப்பட்டாலும் இசையின் அழகு குலையாமல் கரகரப்பான குரலில் எம் எஸ் வி சிறப்பாக பாடியிருப்பது இதனை இன்னும் மெருகேற்றுகிறது.

     1978 இல் வந்த ஒரு திரைப்படம் அதுவரை நாயகனாக வலம் வந்த ஒரு நடிகரை  ஒரே நொடியில் கீழே வீழ்த்தியது. அது வண்டிக்காரன் மகன் என்ற கருணாநிதியின் கைவண்ணத்தில் வந்த திரைப்படம். நீண்ட நாட்களுக்குப் பின் கருணாநிதியின் வசனத்தில் வந்த இந்தப்படம் (எம் ஜி ஆர்  முதல்வராக பொறுப்பேற்றதற்குப் பின் கருணாநிதி கலைத் துறைக்கு மீண்டும் வந்த படம் இது.)  150 படங்கள் கதாநாயகனாக சிம்மாசனத்தில் இருந்த ஜெய் ஷங்கர் என்ற மனிதாபிமானம் மிக்க ஒரு  நடிகரின் நடிப்புல வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. வினோதம் என்னவென்றால் வண்டிக்காரன் மகன் படம் பெரிய வெற்றி பெற்றது என்பதுதான். எம் ஜி ஆர் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபின் மக்கள் மத்தியில் அவர் கதாநாயகனாகவும் அவரை எதிர்த்தவர்கள் எதிரிகளாகவும் (பெரும்பான்மையானவர்களால்) பார்க்கப்பட்டார்கள்.   எம் ஜி ஆர் ஆட்சியில் கருணாநிதி மீண்டும் திரைப்படத் துறைக்கு வந்த முதல் படம் வண்டிக்காரன் மகன். கருணாநிதி தன் எழுத்தின் வலிமையால்  எம் ஜிஆர் என்ற தன் நண்பதெரியை (ஆங்கிலத்தில் frenemy (friend+enemy) என்று இப்போது அழைக்கப்படும் ஒரு பதத்தின் உறுதிசெய்யப்படாத தமிழாக்கம்.) வசைபாடும் பல சாட்டையடி வசனங்கள் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் என்று கருத்தப்படுகிறது. எனவே இதில் நடிக்க பல நடிகர்கள் அப்போது தயங்கியதாக நான் படித்திருக்கிறேன். இதில் துணிச்சலாக நடித்த ஜெய்ஷங்கர் ஒரு மிகப் பெரிய விலையை இதற்காக கொடுக்கவேண்டியதாக இருந்தது. அது இதுதான்: இதன் பின் ஜெய் ஷங்கரின் திரையுலக வாழ்வு ஒரு முடிவுக்கு வந்தது. பல அரசியல் காரணங்கள் அவரின் திரையுலக பயணத்தை மீண்டும் எழ விடாது செய்தாலும் அவர் இந்தப் படத்தில் நடித்ததை கொஞ்சம் பலத்த ஆலோசனைக்குப்பின் ஏற்றிருக்கலாம் என்ற ஒரு எண்ணம் அவரது ரசிகர்களுக்கு உண்டு. இந்தப் படத்தில்  ஒரு நாடகம் நடக்குது நாட்டிலே அதை நான் சொல்ல வந்தேன் பாட்டிலே என்ற பாடல் தி மு க பார்வையில் அன்றைய எம் ஜி ஆர் ஆட்சியை பரிகாசம் செய்தது. இதை எம் ஜி ஆரின் பல கொள்கைப் பாடல்களை எழுதிய வாலி எழுதியதும் அதற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்ததும் ஒரு வியப்பான உண்மை. கொஞ்சம் அரசியலை தூரவைத்துவிட்டு இந்தப் படத்தில் வைரம் போல் ஜொலித்த அருமையான மெலடியான ஒரு பாடலைப் பார்ப்போம். அது மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே  என்ற மிகச் சிறப்பான பாடல்.  எஸ் பி பி- வாணி ஜெயராம் இருவரின் குரல்களும், மனதை கொள்ளைகொள்ளும் பல்லவியும், நேர்த்தியான செதுக்கப்பட்ட இசையும் இந்தப் பாடலை நிரந்தரமாக நம் நெஞ்சில் உட்காரவைத்துவிடுகின்றன.

     70களில்  வந்த பல கானங்கள் அற்புதம் கலந்த ஆனந்த அனுபவங்கள். அவற்றை நான் முதலில் கேட்ட சமயத்தில் எழுந்த சிலிர்ப்பு பிறகு எனக்கு உண்டான  வேறு இசை நாட்டத்தினால் சட்டென அடங்கிவிட்டாலும் அவை நெருப்புக் கங்குகள் போல என்னுள் உயிருப்புடனிருப்பதை எந்தப் புதிய இசையாலும்  அணைக்க முடியவில்லை. குறிப்பாக எம் எஸ் வி - சிவாஜி இணைப்பு ஒரு மேகத்தீண்டல்.  
    
        அலங்காரம் கலையாத சிலையொன்று கண்டேன்- ரோஜாவின் ராஜா என்ற படத்தில் வரும் இந்தப் பாடல் மென்மையின் மறுவடிவம். அலங்காரம் கலையாத அற்புத இசை. இதுபோன்று மெழுகு போல உருகும் பல கீதங்கள் எம் எஸ் வி யின் இசை ஆச்சர்யங்களில் அடக்கம்.

    அடுத்து வருவது மிகப் பெரிய புகழடைந்த, அப்போது வானொலிகளில் அதிகம் ஒலிபரப்பான  சுவையான டாக்டர் சிவா படத்தின்  மலரே குறிஞ்சி மலரே தலைவன் சூட நீ மலர்ந்தாய்.   எத்தனை முறை   என்ற கணக்கில்லாது தினமும் எதோ ஒரு அலைவரிசையில் இது ஒலித்துக்கொண்டே இருக்கும். ஜேசுதாஸின் வெற்றி நோக்கிய பாதையில் அவருக்குக் கிடைத்த அடுத்த ஏணிப்படி இப்பாடல். பாடல் வந்த சமயத்தில் என் நண்பனொருவன் தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் என இடைவிடாது மந்திரம் போல உச்சரித்துக் கொண்டேயிருப்பான். அதன் அர்த்தம் அப்போது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

    77இல் அவன் ஒரு சரித்திரம் என்ற படம் வந்தது. எதோ ஓடியது என்று ஞாபகம். ஆனால் இதன் பாடல்கள் அனைத்தும் மிகச் சிறப்பானவை. அம்மானை என்ற பாடல் ஒரு இசைத் தாலாட்டு.  அம்மானை அழகு மிகும் கண்மானை ஆடி வரும் பெண்மானை தேடிவரும் பெருமானை எனத் துவங்கி பின் ராக தாளங்களில் குதித்து வாணி ஜெயராமின் வெள்ளிக்குரலில் இந்தப் பாடல் ஓடுவதைக் கேட்டால்  ரம்மியமான அமைதி கிடைப்பது நிச்சயம். மாலையிட்டான் ஒரு மன்னன் அங்கு  மயங்கி நின்றாள் ஒரு அன்னம் என்ற பாடலும் சிறப்பாக வார்க்கப்பட்டது. படத்தின் உயிர்நாடியான வணக்கம் பலமுறை சொன்னேன் சபையினர் முன்னே எல்லோரின் உதடுகளிலும்  உட்கார்ந்த பாடல். நெஞ்சத்தை நிரப்பிய கானம். வானொலியில் வெற்றி உலா வந்த பாடலிது.
    
         அன்பைத் தேடி என்ற படத்தின்  சித்திர மண்டபத்தில் சில முத்துகள் கொட்டி வைத்தேன் என்ற பாடல் கேட்டவுடனே நாற்பது  வருடங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துச் சென்றுவிடுகிறது. அதேபோல் சித்ரா பவுர்ணமி படத்தின் வந்தாலும் வந்தாண்டி ராஜா பாடலும் சிறப்பாக அமைக்கப்பட்டது. இந்தப் படம் வந்த புதிதில் சிவாஜியின் சிகை அலங்காரம் எங்கள் வட்டத்தில் அதகளமாக பகடி செய்யப்பட்டது. என் நண்பன் ஒருவன்  சிவாஜியின் தீவிர ரசிகனாக இருந்தான். அது அவன் தந்தை ஒரு தீவிர காங்கிரஸ் அனுதாபி என்பதால் அவனுக்குள் செலுத்தப்பட்ட ரசனை. நாங்கள் செய்த ரகளையில் தெறித்து ஓடியவன் சில நாட்களில் ரஜினி ரசிகனாக மாறிவிட்டான்.

    77இல் வந்த ஒரு படம் ஏறக்குறைய இருபது ஆண்டுகள் கழித்து பெரும்பாலானவர்கள் அறியாதவண்ணம் உருமாறி அசல் பெறாத வெற்றியை ருசித்தது. அது நாம் பிறந்த மண் என்ற சிவாஜி-கமல் நடிப்பில் வந்து காணாமல் போன படம். இதுவே 1996இல் ஷங்கரின் கைவண்ணத்தில் இந்தியன் என முகமாற்றம் செய்யப்பட்டு தமிழகத்தின் தலைப்புச் செய்தியானது. சுட்டதா சுடாததா என்ற விவாதம் தேவையற்றது. மேலும் அது எனது நோக்கமல்ல. நாம் பிறந்த மண் படத்தில் ஒரு பாடல் உண்டு ஆசை போவது விண்ணிலே கால்கள் போவது மண்ணிலே என்ற இந்தப் பாடல் அப்போதைய கமலஹாசனின் மேடைப் பாடகன் இமேஜுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். இதன் பிறகே என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு  என்று மறுபடி மேடையில் தோன்றி கமல் பாடினார்.

    இதே ஆண்டில் வெளிவந்த இன்னும் இரண்டு சிவாஜியின் படங்கள் பெரிய வெற்றி பெற்றன. அதன் பாடல்களும் பிரபலமடைந்தன. அண்ணன் ஒரு கோவிலென்றால் தங்கை ஒரு தீபமன்றோ என்றாலே  பாசமலர் பாதிப்பில் சிவாஜியை வைத்துக்கொண்டு நமது இயக்குனர்கள் கொத்து பரோட்டா போட்ட பல படங்களில் ஒன்றான அண்ணன் ஒரு கோவில் நமது ஞாபகத்துக்கு வந்துவிடும்.  படத்தின் நிறைவே இதன் பாடல்கள்தான் என்பது என் எண்ணம். இந்தப் படத்தை நான் அப்போது பார்க்கவிரும்பவில்லை. மல்லிகை முல்லை பொன்மொழி கிள்ளை என்ற பாடல் மனதை வருடிச் செல்லும் மயிலிறகு போன்ற மென்மையானது. மிகவும் சுவையாகப்  படைக்கப்பட்ட இசை உணவு. நாலுபக்கம் வேடருண்டு  என்றொரு பாடல் இதிலுள்ளது. இரண்டாவது அந்தமான் காதலி என்ற படம். இளையராஜா என்ற புதியவர்  தனது வேறுபட்ட  இசை பாணியால் வெற்றியை சுவைத்துக் கொண்டிருந்த சமயத்திலும் எம் எஸ் வியின் இசை வீச்சு எத்தனை நளினமாகவும் அலங்காரமில்லாமலும் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியின் இனிமையை விட்டுவிலகாமல் ஒலித்தது! அந்தமானைப் பாருங்கள் அழகு என்ற பாடல் ஒரு உவகை. நமக்குப் பிடித்தவர்களின் முகத்தை ஆழ்ந்து நோக்கும் அனுபவம். வாணிஜெயராமின் குரல் அந்த அற்புதத்திற்கு வடிவம் கொடுக்க, ஜேசுதாஸ் இன்னொரு பக்கம் இதன் அழகை அடர்த்தியாக்க எம் எஸ் வி யின் ராக தாளங்கள் மற்றும் ஹான்டிங் டியூன் என்று எல்லாமே இதை ஒரு சாகாவரம் பெற்ற நிலைக்கு எடுத்துச் சென்றுவிடுகின்றன. அடுத்த அபாரம்  நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா  . இந்தப் பாடல் அப்போது வெகுவாக பிரசித்தமானதன் ஒரு சிறிய காரணம் ஜேசுதாஸ் திருக்கோவிலே ஓடிவா என்பதை தெருக்கோவிலே ஓடிவா என்று பாடியதால் இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நான் அந்த தெருக்கோவிலே  என்ற அம்சத்திற்காகவே இந்தப் பாடலை கேட்டதுண்டு. இந்தப் பாடல்  ஜேசுதாசை  எங்கள் வீட்டில் ஒரு விவாதப் பொருளாக்கிவிட்டது.  பணம் என்னடா பணம் பணம் குணம்தானடா நிரந்தரம் என்றொரு பாடல் டி எம் எஸ் சின் சீறும் குரலில் சிவாஜிக்குப் பொருத்தமான பாடலாக அமைந்தது.

   இலங்கையின் இளங்குயில் என்னோடு இசை பாடுதோ? என்ற இந்த ராகத் தீற்றல்  அப்போது இந்திய இலங்கை கூட்டுத் தயாரிப்பில் வந்த பைலட் பிரேம்நாத் படத்தில் உள்ளது. மென்மையாக  மனதை வருடும் கீதம். Who is the black sheep  அது யார் யார் யார் என்றொரு பாடல் இதில்தான் இருக்கிறது என்று நினைவு.(அல்லது ஜெனெரல் சக்கரவர்த்தியாக இருக்கலாம்.)

    இமயம் கண்டேன் என்ற இமயம் படத்தின் பாடல் மிகவும் நளினமான காதல் கானம். ஆனால் அதைவிட அதிக உள்ளங்களை கொள்ளைகொண்டது கங்கை யமுனை இங்குதான் சங்கமம் ராகம் தாளம் மோகனம் மங்களம் என்ற பாடலே. துடிப்பான இசை துவங்க பின் ஜேசுதாஸ் கங்கை என்று முதல்புள்ளி வைக்க வாணிஜெயராம் யமுனை என்று பின்பாட்டு பாட அதுவரை துடித்து ஓடக் காத்திருந்த  தபேலா தடாலென்று ஒரு மோகன வசீரகத்துடன் தன் தாளக்கட்டை ஆரம்பிப்பது கேட்பதற்கு ஆனந்தம்.

    80இல் சிவாஜி நடிப்பில் மோகனப் புன்னகை என்றொரு ஓடாத படம் வெளிவந்தது. இதில் ஒரு அபாரமான பாடல் உண்டு. தலைவி தலைவி என்னை நீராட்டும் ஆனந்த அருவி என்ற இந்தப் பாடல் எம் எஸ் வி யின் இசை இன்னும் இனிமை சிதையாமல் இருக்கிறது என்பதைச் சொன்னது. உண்மையே. இது ஒரு இசை தெளிக்கும் ஆனந்த அருவிதான். கேட்டிருக்காவிட்டால் ஒருமுறை கேட்டுப்பாருங்கள். திகட்டாத தேன்சுவை கொண்ட பாடல். தென்னிலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை என்ற பாடலும் சிறப்பானது

       இதே ஆண்டில் சிவாஜி நடிப்பில் விஸ்வரூபம் என்ற படம் வந்து சடுதியில் காணமல் போனது. இதில் ஒரு மிக அபூர்வமான பாடல் ஒன்று உண்டு. ராஜாதி ராஜனுக்கு ராணி மேலே காதலடி என்ற இந்த அற்புதப் பாடல் சற்று கவனம் ஈர்த்தது அப்போது. இருந்தும் இளையராஜாவின் அதிரடி டப்பாங்குத்து வீச்சுக்கு முன் களையிழந்து போனது.  நான் பட்ட கடன் எத்தனயோ பூமியில் பிறந்து என்று வழக்கமான சிவாஜிக்கான பாடலும் இதில் உள்ளது. இது அருமையான மேற்கத்தியப்  பூச்சு கொண்ட பாடல்.

     எம் எஸ் வி  மேற்கத்திய பாணியில்  படைத்த  என் உள்ளம் என்கின்ற வானத்திலே பொன் மேகம் தவழ்கின்றது என்ற பாடல் ரத்த பாசம் என்ற படத்தில் இடம்பெற்றது. ஒரு சுவையான நேர்த்தியான மேற்கத்திய இசைச் சாயல் படிந்த பாடல். சமீபத்தில் இந்தப் பாடலைக் கேட்டபோது அந்த இசை மிக நவீனமாக இருப்பதை உணர்ந்து சற்று வியப்படைந்தேன்.  பாடலின் பல்லவியின் பின்னே துடிப்பாக ஒலிக்கும் ட்ரம்ஸ் ஒரு ஆச்சர்யக் குறியை எனக்குள் விதைத்தது.

   அடுத்து நான் குறிப்பிடுவது இப்போது மக்களின் பொது ஞாபகத்தில் இல்லாத ஒரு அபூர்வமான அற்புதப்  பாடலையே. இப்பாடல் வந்தபோது சிவாஜி பாடல் என்று எனது நண்பர்கள் பகடி செய்தததில் கவனமின்றி கேட்டு உடனே மறந்தும்விட்ட ஆனால் இப்போது என் உள்ளத்தின் ஆழத்தில் இறங்கிவிட்ட ஒரு மேகத் தீண்டல். அது 81ஆம் ஆண்டு வெளியான அமர காவியம்  என்ற காணாமல் போன ஒரு படத்தின்  செல்வமே,ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும் ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும் என்ற பாடல்தான். 2014 ஆம்  ஆண்டிலும் எத்தனை நவீனமாக ஒலிக்கிறது இப்பாடல் என்ற மின்சார உணர்வு மின்னல் போல தாக்குகிறது. எண்பதுகளில் எம் எஸ் வி தன் பொலிவை இழந்து விட்டார் என்று சொல்லும் மட மனங்களே இதை ஒரு முறை கேட்டுப்பாருங்கள். நீங்கள் சிலாகிக்கும் இசையை விட இது எத்தனை மகத்துவமானது என்பதை உணர்வீர்கள்.

       கீழ்வானம் சிவக்கும் என்ற படம் இதே ஆண்டில் வந்து நன்றாகவே பேசப்பட்டது. வழக்கம்போல சிவாஜிக்கான எல்லா அம்சங்களும் கொண்ட நாடகத்தனமான படம். போட்டிக்கு சரிதா வேறு. பிறகு கேட்கவா வேண்டும்? படம் பூராவும் ஒரே உணர்ச்சிக் குவியல்தான். இதில் இன்றைக்கும் நான் நினைவில் வைத்திருப்பது புதுமணத் தம்பதியினரை வாழ்த்திப்பாடுவதாக வரும் கடவுள் படைத்தான் மணநாள் கொடுத்தான் வாழ்க்கை உண்டானதே கலைமகளே நீ வாழ்கவே என்ற மிக நல்ல பாடலைத்தான். டேப் ரெகார்டர் வாங்கிய புதிதில் என் குரலைக்  கேட்க  விரும்பி ஒரு முறை ரொம்பவும் ரகசியமாக கீழ் தொனியில் இந்தப் பாடலைத்தான்  பாடி (!) பதிவு செய்தேன். "ரெகார்டிங்" முடிந்து போட்டுப்பார்த்தால் எதோ பிராண வாயுவுக்கு போராடும் ஐ சி யு நோயாளி போல என் குரல் ஒரே மூச்சுக்  காற்றாக  ஒலிக்க, இந்தக் கடுந்துயரை போக்கும் வழி தெரியாது நான் விழிக்க, என் அண்ணன் இதை எப்படியோ கேட்டுவிட்டு "அட பாட்டெல்லாம் பாடுவியா?" என்று நமட்டுச் சிரிப்பு சிரிக்க....அதன் பின் அந்த சிகப்பு பொத்தனை அழுத்தி எந்தவித பரிசோதனைகளையும்  செய்யத் துணியவில்லை நான் . Once bitten twice shy.

     புது வருடம் பிறந்தாலே  வேறு நாதியில்லாமல் ஒரே ஒரு பாடலைத்தான் நாம் கேட்டாகவேண்டும்.  அது சகலகலாவல்லவன் என்ற கேடுகெட்ட கீழ்த்தரமான படத்தின் ஒரே சகித்துக்கொள்ளக்கூடிய அம்சமான இளமை இதோ இதோ  இனிமை இதோ இதோ பாடல்தான். பாடலின் துவக்கத்தில் ஹேப்பி நியு இயர் என்று வரும்  ஒரே வார்த்தையை வைத்துக்கொண்டு இதை புது வருடப் பாடல் என்ற  சான்றிதழை நமது விருப்பமின்றி சில  தொலைக்காட்சிகளே தீர்மானித்துவிட்டது ஒரு துரதிஷ்டம்.  இந்த அபத்தமான பாடலைவிட பாலைவனைச்சோலை படத்தின் பவுர்ணமி நேரம் பாவை ஒருத்தி என்ற பாடல் இந்தச்  சூழலுக்கு பொருத்தமானது என்பது என் எண்ணம். இதையும் விட இன்னொரு புது வருடப் பாடல் நம்மிடம் இருக்கிறது. அது 82ஆன் ஆண்டு வெளியான (காளிச்சரன் என்ற ஹிந்திப் படத்தின் தமிழ்ப் பதிப்பான) சங்கிலி என்ற படத்தின்   நல்லோர்கள் வாழ்வைக் காக்க நமக்காக நம்மைக் காக்க ஹேப்பி நியுயியர் என்ற எம் எஸ் வி யின் இசையில் வந்த பாடலே. ஒரே ஒரு முறை இதைக் கேட்டால் நான் சொல்வதின் நியாயத்தை நீங்கள் உணர்ந்துகொள்ள முடியும். ஆர்ப்பாட்டமான மேற்கத்திய இசை. அருமையான நம்பிக்கை துள்ளும் வரிகள். மிகச்  சிறப்பான மெட்டின் மீது வரையப்பட்ட ஒரு இசை ஓவியம். இது  பலரால் அப்போது விரும்பப்பட்டது. சிலோன் வானொலியில் பல வாரங்கள் முதலிடத்தில் இருந்தது. சொல்லப்போனால் இளமை இதோ பாடலின் கொச்சையான குத்துவேன் வெட்டுவேன் வீரன் சூரன் போன்ற வரிகளைவிட சிறப்பான கவிதை  கொண்ட நல்லோர்கள் வாழ்வைக் காக்க என்ற இந்தப் பாடலே  ஒரு புதிய ஆண்டின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் களிப்பையும் கொடுப்பது. இதுவே  ஒரு புத்தாண்டு கொண்டாட்டத்தின் எல்லா தகுதிகளையும்  கொண்டது. மேலும்  புத்தாண்டை வரவேற்ப்பதற்க்கான ஒரு சிறந்த பொருத்தமான பாடலாகவும்  எனக்குத் தோன்றுகிறது.


      சிவாஜிக்கும் எம் ஜி ஆருக்கும் பல சாகா வரம்பெற்ற காவிய கானங்களைக் கொடுத்து தன் சுயத்தை இழந்தவராகவே எம் எஸ் வி எனக்குத் தோற்றமளிக்கிறார். அவர்கள் அடைந்த புகழ் ஒரு வரலாறு. அதற்கு எம் எஸ் வி யும் ஒரு காரணம் என்பதை பல நேரங்களில் நாம் உணர்வதேயில்லை. அவருக்கு வேண்டிய புகழ் வெளிச்சம் வெறும் மேடை அலங்காரமாகவே இருக்கிறது. இத்தனை அற்புதங்களை அள்ளிவீசிய அவரின் இசையறிவை  பாராட்டுவதற்கு கூட சில வார்த்தைப் போர்  புரியவேண்டியதிருக்கிறது என்பதே நமது இசை வரலாறு செல்ல வேண்டிய திசையில் பயணிக்கவில்லை  என்ற சீரழிவின் அறிகுறி.

       ஒரு முறை முத்துக் குளிக்க வாரீகளா மூச்சையடக்க வாரீகளா என்ற தூத்துக்குடி வட்டார தொனியை வைத்து எம் எஸ் வி அட்டகாசம் செய்த அனுபவி ராஜா அனுபவி பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த போது ஒரு பெங்காலி நண்பன் "இது ஹிந்திப் பாடலின் நகல்." என்றான் என்னிடம். நான் "இல்லை. இது முதலில் தமிழில் வந்த பாடல்." என்றேன். எதிர்பார்த்தைபோலவே அவன் அதை நம்பவில்லை. ஒருவேளை ஒரு தமிழ்ப் பாடல் ஹிந்தியில் நகல் செய்யப்படுவதை அவன்  தங்கள்  ஆளுமை கசங்கும் நிகழ்வாகப் பார்த்திருக்கலாம். இதில் தவறேதுமில்லை.  நம் மண்ணைச் சார்ந்திராத ஒரு சமூகத்திலிருந்து வந்தவன் அவன். ஆனால் அரை நூற்றாண்டாக  நம் சமூக பாரம்பரியத்தில் நிலை கொண்டுவிட்ட என்றுமே துறந்து விட முடியாத இசை மாளிகைகளை எழுப்பியவர்களை நம்மில் சிலர் எத்தனை எளிதில் இகழ்ச்சியுடன்  மிகச் சாதாரணமான பாராட்டுக்கான வார்த்தைகளைக் கூட உதிர்க்காமல்   கடந்து செல்கிறார்கள்! இன்று ஐம்பதாயிரம் விலை கொண்ட ஸ்மார்ட் போன் நம்மிடமிருந்தாலும் நமது தந்தைகள் வைத்திருந்தது விரல் வைத்து சுற்றும் அந்த கறுப்பு நிற டெலிபோன்தான். என் தந்தை போன்ற பலரிடம்  அதுவும் கிடையாது. நேற்றைய நிகழ்வை மறந்துவிடத் துடிக்கும் இந்த அற்பத்தனமான மனோபாவம் இன்று நிகழ்வதையும்  அதே  தராசில்தான் வைக்கப்போகிறது. எம் எஸ் வி போன்ற மகத்தான இசை கோபுரங்களே தூசிபடிந்து சிதிலமடைந்து சரிந்து போகக்கூடிய  சாத்தியங்களிருந்தால் இளையராஜாவும் ரஹ்மானும் இன்ன பிற திடீர் இசை மழைகளும்  பாவம்தான்!



அடுத்து: இசை விரும்பிகள் XXII -எழுபதுகள்: நினைவுகளின் நீட்சி.


   

Sunday 17 August 2014

இசைவிரும்பிகள் XX - எழுபதுகள்: வாடாத வசந்தம்.

மரங்கள் கடுமையான குளிருக்கு தங்களை தயார் செய்துகொள்ளும் முன் எத்தனை அபிரிமிதமான வண்ணங்கள் கொண்ட  மலர்களால் தங்களை அலங்கரித்துக்  கொண்டு அழகின் எல்லையை விரிவுபடுத்துகின்றன! அவ்வழகை ஆனந்தமாக ஆராதிக்கும் அதேவேளையில் அதன்  பின்னாலிருக்கும் செய்தியை வெகு சிலராலே கணிக்க முடிகிறது. அது  அடுத்து வரப் போகும் மலர்களற்ற காலம் என்ற அழகின் வறட்சி.  இந்த வண்ணங்களும் வசீகரங்களும் வசந்தமும் நம்மை வசப்படுத்திவிட்டு எழிலோவியங்களாக  மறைந்து விடுகின்றன. எஞ்சியிருப்பது  அந்த அழகியலின் சுகந்த வாசமே. இதுவே 
     
                                         
                                  
                   வாடாத வசந்தம்: எழுபதுகளின் வாசம் 


      வட மாநிலத்திலிருந்து சென்னை வந்துகொண்டிருந்த ஒரு சமயத்தில் ஆந்திராவை தாண்டியதும்  நம் ஊர் வாசனை இதமாக என்னைத்  தாக்கக் தொடங்கியிருந்த வேளையில், ரயிலில் பாடல்கள் பாடிக்கொண்டு வந்த ஒரு கண்ணிழந்த கையேந்துபவர் (பிச்சைக்காரர் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.) திடுமென ஒரு பழைய தமிழ்ப்  பாடல் ஒன்றைப்  பாட ஆரம்பித்தார். அது நான் மிகச் சிறிய வயதில் கேட்ட ஒரு துயரத்தின் இசை. பாடலை அவர் பாடி முடிக்கும் வரை பல நினைவலைகள் என்னை ஆட்கொள்ள ஒருவித சோகமான இன்பத்துடன் அதைக்  கேட்டுக்கொண்டிருந்தேன். சிறு வயதில் அந்தப் படம் பார்த்ததும் அந்தப் பாடலை ஒருவித மன நெருக்கத்துடன் கேட்டதும் உடனே என் நினைவுக்கு வந்து என்னை இடையூறு செய்தது. குறிப்பாக  அந்தப் பாடலை எங்கள்  வீட்டில் யாரும் விரும்பியதேயில்லை. அப்பாடல் ஒலிக்க ஆரம்பித்தாலே "திருப்பு. திருப்பு" என்ற அலறல் குரல்தான் கேட்கும். அந்தப் பாடலின்  அடர்த்தியான  சோகத்தை எதிர் கொள்ளமுடியாத வலிமையின்மையே  என் சகோதரிகளை அவ்வாறு அப்பாடலை விட்டு வெகு தூரம் ஓட வைத்திருக்கிறது என்பதை பின்னர் புரிந்துகொண்டேன். 1973 ஆம் ஆண்டில் வந்த அன்புச் சகோதர்கள் என்ற படத்தின் கே வி மகாதேவன் இசையில்  உன்னதப் பாடகர்  கண்டசாலாவின்  "முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி இணைத்திருந்தோம் ஒன்றுக்கு ஒன்றாக" பாடலே அது. இதுவே கண்டசாலாவின் கடைசிப் பாடல் என்று நினைக்கிறேன்.  இது இரண்டு வடிவங்களில் படத்தில் உண்டு. மகிழ்ச்சியானதாகவும் பிறகு படத்தின் இறுதியில் மிக சோகமாகவும் ஒலிக்கும். கேட்கும்போதே நம் மனதை எதோ ஒன்று வலி ஏற்படுத்தும் வகையில் பிசைவதைப் போல ஒரு உணர்வு தோன்றும். என்ன ஒரு  மேதமை பீறிடும் துயரத்தின் கண்ணீர் இசை இது! சில பாடல்கள்தான் நமக்குள் என்னென்ன விதமான நினைவலைகளை உருவாக்கி விடுகின்றன! சற்று ஆழமாக சிந்தித்தால் சில கானங்களுக்கு வயதே ஆவதில்லை என்பது மட்டும் புரிகிறது.

      எழுபதுகள் ராகங்களின் ராஜ்ஜியமாக இருந்ததை நாம் இங்கே நினைவு கொள்வது மிக அவசியப்படுகிறது.  கே வி மகாதேவன், ஷங்கர்-கணேஷ், வி. குமார், ஜி கே வெங்கடேஷ், ஷ்யாம், விஜய பாஸ்கர், திவாகர், போன்ற பலர் சிறப்பான இசையின் படிவங்களை தொடர்ச்சியாக வழங்கியபடியே இருந்தார்கள். 70கள் முழுவதும் நம் தமிழிசை மெல்லிசையின் கூறுகளையும் கூர்மையையும் தனது இன்னிசையின் மூலம் மெருகேற்றிக்கொண்டே வந்தது.  மேற்குறிப்பிடவர்களுடன்  70களை தன் ராகத்தின் மந்திர சக்தியினால் செழுமையாக செதுக்கிய   இன்னொரு மிக தவிர்க்க முடியாத  மகத்தான இசைஞர் என நான் கருதுவது எம் எஸ் விஸ்வநாதன்.  டி.கே ராமமூர்த்தியை விட்டுப் பிரிந்த எம் எஸ் வி. பலர் அவரைப் பற்றி கணித்து வைத்திருந்த யூகங்களை அடித்து நொறுக்கி சாதனைச் சாலையில் சென்றுகொண்டிருந்தார். இந்தப் பதிவு  பெரும்பாலும் எம் எஸ் வி எழுபதுகள் மற்றும் எண்பதுகளின் ஆரம்பம் வரை இசை அமைத்திருந்த  பாடல்களைப் பற்றியது. தமிழ்த்திரையிசையை விவாதிப்பவர்கள் பெரும்பாலும்  70களைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வது கிடையாது. அப்படியே விவாதித்தாலும் 76 என்று ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை கையில் எடுத்துகொண்டு ஒரு சார்பான கருத்துக்களை வடிவமைப்பார்கள். ஆனால் ஒரு நேர்கோட்டில் இந்த விவாதத்தை வைத்தால் பல உண்மைகள் முடக்கப்பட்டிருப்பதைக்  காணலாம்.அதில் ஒன்று எம் எஸ் வியின் பெயரை இன்றளவும் இசைக்கும் ஏராளமான பாடல்கள் எழுபதுகளில் வந்தன என்பது. அவைகளில் சிலவற்றை ஒரு சிறிய முயற்சியாக பதிவிடுவதின் வழியே அந்த காலகட்டத்தைப் பற்றிய ஒரு மாற்று சிந்தனை உருவாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தோன்றுகிறது. ஏனென்றால் எம் எஸ் வி யின் தேனிசை குளுமையான மழையாகக் கொட்டிய எழுபதுகள் சற்று அதிகமான ஆய்வுக்குட்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.

        சிலர் எம் எஸ் வியின் இசை 70களில் தன் பொலிவை இழந்திருந்தது என்று மேம்போக்காக ஒரு அர்த்தமற்ற கருத்தை வீசிவிட்டு அதனால்தான் அப்போது புதிதாக வந்த இளையராஜாவின் இசை  மக்களை ஒரு காந்தம் போல ஈர்த்தது  என்று சொல்கிறார்கள். 76இல் இளையராஜாவின் வருகையுடன் எம் எஸ் வியின் காலம் முடிந்துவிட்டது என்றொரு மிகையான  கருத்தும் பரவலாகப் பேசப்படுகிறது. இதிலிருக்கும் உண்மைத்தன்மை ஒவ்வொருவரின் இசை சார்பைப் பொறுத்தது. நீங்கள் இளையராஜாவின் ரசிகராக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு சுலபமாக அகப்படும் காரணம் இதுவாக இருக்கலாம். ஆனால் இளையராஜாவின் இசையை நாடாதவர்களுக்கும் அவர் இசையின் பால் ஈர்கப்படாதவர்களுக்கும் இது ஒரு உண்மையற்ற உளறல். 80களின் துவக்கம் வரை எம் எஸ் வி நலிந்துவிடவில்லை என்று நாம் தாராளமாக எந்தவித தயக்கங்களின்றி  அழுத்தமாகவே சொல்லலாம். மேற்கூறிய எம் எஸ் வி-இளையராஜா விவாதத்தைப் பற்றி என்னைக் கேட்டால் இதில் ஒரு பாதியே உண்மை என்பேன்.  மறுபாதி ஒரு புனைவு. உண்மை- இளையராஜாவின் இசை நிஜத்தில் நம் தமிழ்த் திரையிசைக்கு ஒரு புதிய வெளிச்சம் கொடுத்தது. புனைவு- எம் எஸ் வி யின் நலிந்த  இசையின் எதிர்வினையே இது என்பது. ஏனென்றால் எம் எஸ் வி யின் இசை இறுதிவரை தன்  நறுமணத்தையும், இனிமையையும், பொலிவையும் சற்றும்  இழக்கவே இல்லை. அவர் பாடல்களை அப்போதைய இளைய தலைமுறையினர் நாடவில்லை என்பது உண்மையே. இருந்தாலும் அது பாடலின் தரத்தை குறித்த ரசனையின் வெளிப்பாடல்ல. அது  மாறி விட்ட இசை பாணியின் மீது ஏற்பட்ட மோகத்தின் தாக்கம். இருந்தும் எல்லோரும்  எம் எஸ் வியை விட்டு வேறுபக்கம் வந்துவிட்டதாகச் சொல்லமுடியாது. 70களின் பிற்பகுதியில் தோன்றிய ஒரு தலைமுறை 25 ஆண்டுகளாக இசை அமைத்துக்கொண்டிருக்கும் ஒருவரின் இசையின் பால் சலிப்பு கொள்வது ஒரு இயல்பான கால மாற்றம். மேலும்  53 இலிருந்து தன் இசை மூலம் இரண்டு தலைமுறைகளை  அரவணைத்துத் தாலாட்டி  வந்த ஒருவர் 25 ஆண்டுகளுக்குப் பிறகு உருவான ஒரு  புதிய  இளைஞர் கூட்டத்தின் நாடித் துடிப்பை துல்லியமாக கணிக்கக் கூடிய சாத்தியம் வெகு தூரமானது. இந்த தேக்க நிலை எல்லா இசை அமைப்பாளர்களுக்கும் நிகழக்கூடிய அபாயம். (90களில் இதே வட்டத்தில்தான் இளையராஜாவும் மாட்டிக்கொண்டார்.) இருந்தும் இளையராஜா உச்சாணிக் கொம்பில் இருந்த சமயத்திலும் எம் எஸ் வி உண்டாக்கிய இனிமையான இசையலைகள்  இசை அற்புதங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதைப்  பற்றி பின்னர் விரிவாக விவாதிக்க இருப்பதால் 70களின் இசை பாணியை எவ்வாறு எம் எஸ் வி நேர்த்தியாக கட்டமைத்து வந்தார் என்பதை குறித்து பேசலாம்.

    இப்பொழுது எப்படி நம் எழுபதுகளின் இசை தரமானதாக இசை விரும்பிகளின் ரசிப்பிற்குரியதாக இருந்தது என்பதை உணர்த்த  ஒரு பாடலைக் குறிப்பிட விரும்புகிறேன். இது அன்னக்கிளி படம் வந்த அதே  76இல் வந்த பாடல்.  படம் மிக சாதாரணமானதுதான். ஆனால் இப்பாடல் ஒரு அசாதரணப் பாடல்  என்று கண்டிப்பாகச் சொல்வேன். படத்தைக் கொண்டு பாடலின் தரத்தையும் சிறப்பையும் தீர்மானிக்கும் பொதுபுத்தியின் முதிர்ச்சியற்ற போக்கில் காணமல் போன மிக நல்ல பாடல்களில் இதுவும் ஒன்று.  கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்  என்ற பாடலே அது. மேயர் மீனாட்சி என்ற படத்தில் இடம் பெற்றது இப்பாடல். இதைக் கேட்கும்போது இதில் நடித்த ஜெய் சங்கரோ கே ஆர் விஜயாவோ நம் சிந்தனையில் தோன்றாமல் வெறும் இசை மட்டுமே பலவித வண்ணங்களில் நம் மனக்கண்களில் ஒரு கலைடாஸ்கோப் காண்பிக்கும் காட்சிகள் போன்று வித விதமாக உருமாறுகிறது. இசையின் ஆளுமைதான் எத்தனை ஆழமானது என்ற வியப்பும் கூடவே பின்தொடர்ந்து வருகிறது. சந்தேகமே இல்லாமல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் கானம். இதைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் அதே அடர்த்தியான ரசனை சற்றும் குறையாமல் இருக்கிறது.

        எழுபதுகளில் அதிகம் விரும்பப்பட்ட மற்றொரு பாடலைப் பற்றி விவாதிக்கலாம். இந்தப் பாடல் மல்லிகையின் நறுமணத்தை இசையோடு வானொலி அலைகளில் வீசச் செய்தது.  போதைகொள்ளச் செய்யும் திரவ இசை போல இது கேட்பவர்களை மதிமயங்க வைத்தது. வாணிஜெயராம் என்ற பாடகிக்கு ஒரு முகவரி கொடுத்து, ரசிகர்களின் மனதில் ஒரு ஒய்யாரமான இடத்தில் அவருக்கு ஒரு அரியாசனம் அமைத்துக்கொடுத்தது இந்தப் பாடல். அது தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் உயிர் ரேகையான மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என்ற தெய்வீக கானம். ஒரு பாடலை என்னும்போதே அது நம் காதுகளில் ஒலிக்கும் அற்புதம் சிலவற்றிக்கே சாத்தியம். இது சந்தேகமேயில்லாமல் அவ்வகையைச் சார்ந்தது. பாடலின் முதல் வரியை நினைக்கும்போதே அப்பாடல் முழுவதும் நம் காதுகளுக்குள் ரீங்காரமிட்டு ஒலிப்பது போல ஒரு உணர்வு வருகிறது.  இப்பாடல் அது பாடும் மல்லிகையின் சுகந்த நறுமணம் போல நம் நெஞ்சத்தை நிரப்புகிறது. வாணி ஜெயராமை ஒரே பாடலில் புகழின் எல்லைக்கு கொண்டுசென்ற சுகந்த மனம் வீசும் சுகமான சங்கீதம்.  இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் எனக்குத் தோன்றுவது இதுதான்: சில பாடல்களை நம்மால் வெறுக்கவே முடியாது. Absolutely an epic song.

        அடுத்து கொஞ்சம் வேகமான தாளத்துடன் விறுவிறுப்பாக ஓடும் ஒரு பாடல் ஒன்றைப் பற்றி குறிப்பிடவேண்டும். இதை ஒரு கவனிக்கப்படாத கற்பூர கானம் என்று சொல்லலாம்.  அப்பாடல் அத்தையா மாமியா படத்தின் மறந்தே போச்சு ரொம்பநாள் ஆச்சு மடிமேல் விளையாடி நாம் மனம் போல் உறவாடி . இதை மறுபடி கேட்டபோது காணாமல் போயிருந்த ஒரு பழைய புகைப்படத்தை எதிர்பாராமல் காண நேரிடும் சந்தோஷம் கிடைத்தது. சிறு வயதில்  மறந்தே போச்சு ரொம்ப நாள் ஆச்சு என்று அடிக்கடி பாடிக்கொண்டிருந்தது அப்போது நினைவுக்கு வந்தது. இதே பாடலின் சாயலை அன்னை ஓர் ஆலயம் படத்தின்  அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே பாடலில் கேட்க நேர்ந்தது ஒருவேளை எனக்கு மட்டுமே தோன்றிய எண்ணமாக இருக்குமா என்று தெரியவில்லை. (இதே போல வி குமாரின் உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது பாடலின் நிழல் இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் என்ற இளையராஜாவின்  பாடலில் இருப்பதும் என் கற்பனையோ?)

      மற்றொரு இனிமையான கீதம்  செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று என்ற வைர நெஞ்சம் படத்தில் வரும் பாடல். இந்தப் பாடல் தரும் சுகமும் ஒரு ஏகாந்தமே. மிகுந்த ரசனைக்குரிய மிக நல்ல பாடல் இது. வரிவரியாக பாடல்களை வர்ணிக்க ஆசை இருந்தாலும் அது எனது பாணியில்லை என்பதால் ஒரு அறிமுகத்துடன் நான் நிறுத்திக்கொள்கிறேன். எழுபதுகளில் நம்மை குதூகலப்படுத்திய மற்ற சில கானங்களை கீழே பட்டியலிட்டுள்ளேன்.  என்ன ஒரு நளினமான நல்லிசையாக நம் தமிழிசை அப்போது இருந்தது என்ற ஏக்கப் பெருமூச்சு இதனுடன் வரும் இலவச இணைப்பு.

வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ, முள்ளில்லா ரோஜா முத்தாட பொன்னூஞ்சல் கண்டேன். (மூன்று தெய்வங்கள்.)

வேலாலே விழிகள் இன்று ஆறோரம்(!) இசைக்கும், தங்கங்களே நாளைத் தலைவர்களே நம் தாயும் மொழியும் கண்கள், மௌனம் கலைகிறது மயக்கம் வருகிறது, ( என்னைப் போல் ஒருவன்.)

கண்ணனை நினைக்காத நாளில்லையே (சீர்வரிசை.) -இது ஒரு அருமையான பாடல் என்பதைவிட மனதினுள் விழும் இசை என்று சொல்லலாம்.

அடுத்து வருவது மயிலிறகினால் வருடும் சுகமான பாடல். எஸ் பி பி மற்றும் ஜெயலலிதாவின் குரலில் வந்த  நானென்றால் அது அவளும் நானும். இதே படத்தின் இன்னொரு அபாரமான கானம் பலரால் மறக்க முடியாதது. வாழ்கையின் ஆழமான தத்துவதை இத்தனை எளிமையாக சொல்வது கண்ணதாசனுக்கு எத்தனை சுலபமாக வருகிறது என்று பாருங்கள்.இதை இசை உடுத்தி ராக மரியாதை செய்த எம் எஸ் வியை நம்மால் சட்டென மறந்துவிட முடியுமா?  பரமசிவன் கழுத்திலிருந்து  பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா (சூரியகாந்தி.)

தென்றலுக்கு என்றும் வயது பதினாறு, பயணம் பத்து மாத சித்திரமொன்று ஜனனம் - (பயணம்.) அதிகம் பேசப்படாத படங்களில் இருக்கும் சில நல்ல பாடல்களில் இவைகள் அடக்கம். எம் எஸ் வி யின் கரகரப்பான குரலில் பயணம் பயணம் என்று ஒலிக்கும் இப்பாடலை நாங்கள் அப்போது வீட்டில் பகடி செய்வதுண்டு. ரயில் பாடல்கள் என்றால் எம் எஸ் வி ஒரு தனி அக்கறை எடுத்துக்கொள்வார் போல. பச்சை விளக்கின் கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று, ராமன் எத்தனை ராமனடி யின் சித்திரை மாதம் பவுர்ணமி நேரம் பாடல்கள் போன்ற இதுவும் ஒரு ரயில் குதூகலத்தை அள்ளி வீசும் பாடல்.

இக்கரைக்கு அக்கரைப் பச்சை, அரசன பாத்த கண்ணுக்கு புருஷன பாத்தா புடிக்காது-  (அக்கரைப் பச்சை.) அர்த்தம் தெரியாமல் என் பால்ய தினங்களில் இந்தப் பாடலின் பல்லவியை அடிக்கடி முணுமுணுத்துக்கொண்டிருந்ததை எண்ணும்போது வேடிக்கையாக இருக்கிறது.

என் காதல் மகாராணி, யானையின் பலமெதிலே தும்பிக்கையிலே-(இதயம் பார்க்கிறது.) நடிகர் ஜெய் ஷங்கரின் நூறாவது படம். மிக அரிதான பாடல். முத்துக் குளித்து எடுத்த ஒரு பொக்கிஷம் போல உணர்கிறேன் இதை மீண்டும் கேட்கும் போது.

வாய்மையே வெல்லுமடா- நேர்வழி.(இசை பி எஸ் திவாகர்) 50களின் எம் ஜி ஆர் பாணி பாடல். கவ்பாய் என்ற நம் பண்பில் இல்லாத ஒரு கதைக்களத்தின் பின்னணியை வெகு சிறப்பாக வெளிக்கொணர்ந்த பாடல்.

முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி இணைந்திருந்தோம்- அன்புச் சகோதரர்கள். கே வி எம்.பதிவின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வேதனையை உணர்த்தும் கானம்.

        76இல்  ஜெய் ஷங்கர் நடிப்பில் மசாலா இயக்குனர் எஸ் பி முத்துராமனின் இயக்கதில் வந்த  படம் துணிவே துணை. இது  திகில் படம் என்று அப்போது விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் அப்படி சொல்ல முடியாதபடி ஒரு மாதிரியான தமிழ் களத்திற்கு தொடர்பில்லாத  கதையமைப்பைக் கொண்ட மர்மப் படமாக இது இருந்தது .  இதில் துவக்கத்தில் வரும் திகில் பாடலொன்று வெகு பிரசித்திப் பெற்றது.   ஆகாயத்தில் தொட்டில் கட்டும்  என்று துவங்கும் அந்தப் பாடலில் இசைக்கப்பட்டிருக்கும் பல ஓசைகள் பிரமிப்பானவை. மிக நவீனமான இசையமைப்பு கொண்ட பாடல். இப்போது கேட்டால் கூட 76இல் இருந்த  வெகு சில வாத்தியங்களைக் கொண்டு ஒரு  பிரமாண்ட திகில் இசையைப் படைத்திருக்கும் எம் எஸ் வியை எண்ணி வியக்காமலிருக்க முடியாது. இது ஒரு அமானுஷயப் பாடல்.  வாணி ஜெயராமின் தெளிவான கணீர்க் குரல், காற்றடிக்கும் ஓசை, அமானுஷ்ய சூழலை இயல்பாக கொண்டுவரும் அசாதரணமான இசை என்ற விசேஷங்கள் நேர்த்தியாகப்  பிணைய விளைவு திகிலும் தித்திப்பும் கலந்த இந்த கானம்.  பாடலின் காட்சியமைப்பு இப்படிச் செல்லும். சி ஐ டி (இப்போது இந்த வார்த்தை கோமாளித்தனமாக இருக்கிறது.) விஜயகுமார் ரகசியமாக  துப்பு துலக்க ஒரு புதிரான ஊருக்கு பயணிப்பார். பல மர்மமான நிகழ்வுகளுக்குப் பிறகு ஒரு மாட்டுவண்டியில் அவர் செல்கையில் ஆகாயத்தில் தொட்டில் கட்டும்  மங்கை உன்னை கண்டாள்  என்று பாடிக்கொண்டே ஒரு பெண் பேய்(!) அந்த மாட்டு வண்டியின்  முன்னும் பின்னும் ஆடி ஆடி செல்வதைக் கண்டு பயத்தில் திடுக்கிடுவார். அவர் அந்தப் பேயைக் கண்டு அச்சத்தில் உறைந்துபோய் இறந்தே விடுவார். (வேடிக்கை என்னவென்றால் அவர் மட்டுமே பயப்படுவார். படம் பார்க்கும் நமக்கோ வெள்ளை  சேலை கட்டி  தலை மீது மல்லிகைப்பூ வைத்துகொண்டு மிக அருமையான பாடல் ஒன்றை பாடிக்கொண்டு நடந்து செல்லும் அந்தப் பேயைக் பார்க்கும் போது பயத்தைத் தவிர மற்ற எல்லா உணர்சிகளும் வரும்.)

     இதே அமானுஷ்ய பின்னணியில் எம் எஸ் வி அமைத்த இன்னொரு பாடல் வெண்மேகமே வெண்மேகமே கேளடி என் கதையை என்ற ஆயிரம் ஜென்மங்கள் படப் பாடல். இதிலும் அதே வெள்ளைச் சேலை, தனியாக நடந்து செல்லும் ஒரு பெண், (தலையில் மல்லிகைப்பூ சற்று சந்தேகமாகயிருக்கிறது.)  என ஒரு பேய்ப்  பாடலுக்குரிய எல்லா அம்சங்களும் உண்டு.  இதுவும் மிக அருமையான பாடல்தான். இரண்டு கானங்களிலும் பயங்கரமின்றி ஒரு வித மென்மையான சோகம் இழையோடுவதை இனம் காணலாம். இதே படத்தில் உள்ள மற்றொரு சிறப்பான பாடல்  கண்ணன் முகம் காண காத்திருந்தாள் ஒரு மாது. எம் எஸ் வி 70களில் அதிகமாக வாணி ஜெயராமை பயன்படுத்தி இருப்பது கண்கூடு.

     எம் எஸ் வி பாடிய சில பாடல்கள் இசைச் சிற்பங்கள் என்பது என் எண்ணம். எழுத்தாளர் ஜெயகாந்தனின் (பூகம்ப நாவல் என்றழைக்கப்படும்) சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் எம் எஸ் வியின் கரகரப்பான கணீர்க் குரலில் வந்த கண்டதைச் சொல்லுகின்றேன் எந்தன்  கதையை சொல்லுகின்றேன் என்ற பாடல் இதற்கு ஒரு உதாரணம்.  எம் எஸ் வி பாடிய பாடல்களை ஒரு நூலிழை போல தொடர்ந்தால் அவர் குரல் நடித்த நடிகர்களைவிட அந்த சூழலுக்கு மிகப் பொருத்தமானதாக இருப்பதை உணரலாம். பொதுவாக  சில இசை அமைப்பாளர்கள் அவர்கள் படைத்த சில நல்ல பாடல்களை தங்கள் ராகமில்லாத தவளைக் குரல் கொண்டு பாடுவதாக நினைத்துக்கொண்டு குதறி எடுத்து அலங்கோலம் செய்திருப்பதைப் போலன்றி எம் எஸ் வி அசரீரி வகையான பாடல்களையே பெரிதும் பாடியிருப்பது அவரது இசை முதிர்ச்சியை காட்டுகிறது. மேலும் பெரிய நடிகர்களுக்கு பாடும் பாணியும்  அவரிடமில்லை. விதிவிலக்காக நினைத்தாலே இனிக்கும் படத்தில் ரஜினிகாந்த்துக்கு சம்போ சிவசம்போ பாடலை அவர் பாடியிருக்கிறார். அவர் குரல் பகடி செய்யப்படுவதற்கான பல அம்சங்களை கொண்டிருந்தாலும் தன் பாடல் அந்த நிலைக்கு வரும் அபாயத்தை அவர் சாதுர்யமாக  தாண்டியே சென்றிருக்கிறார். உதாரணத்திற்கு அவள் ஒரு தொடர்கதை படத்தின் அபாரம் என்று பலர் எண்ணும் தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு பாடலை எம் எஸ் வி பாடவே இயக்குனர் விரும்பியதாக தெரிகிறது. ஆனால் அவர் அதை தவிர்த்தது நமக்கு கே ஜேசுதாஸ் என்ற ஒரு காவியப் பாடகனை வெளிச்சம் காட்டியது. இதற்கு முன்னே ஜேசுதாஸ் பாடல்கள் பாடியிருந்தாலும் தெய்வம் தந்த வீடு பாடலே  அவரை தமிழகத்தின் எல்லா வீதிகளுக்கும் எடுத்துச் சென்று அவருக்கு ஒரு நட்சத்திர தகுதியை அளித்தது. இது ஜேசுதாஸ் இளையராஜாவின் இசையினால் பெரிய புகழ் அடைந்தார் என்ற பலரின் எண்ணத்திற்கு  முற்றிலும் முரணானது. ஏனென்றால் எம் எஸ் வி ஜேசுதாசை ஏற்கனவே புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

       இப்போது மிக முக்கியமான ஒரு இசைக் கூட்டணியைப் பற்றி எழுத வேண்டியதிருக்கிறது. இந்த இசைக் கூட்டணியை பலர் அறிந்திருந்தாலும் பொதுவெளியில் அதை அங்கீகரிக்கத் தவறுகிறார்கள். 65லிருந்து படங்களை இயக்கி வந்த ஒருவர்  வணிக மற்றும் மாற்று சினிமாவின் கூறுகளை சரியான விகிதத்தில் கலந்து 70களில் தமிழ்த்திரையின் நம்பிக்கையூட்டும் இயக்குனராக பரிணாமம் அடைந்தார். உண்மையில் எழுபதுகளில்  வணிக ரீதியான படங்கள் புற்றீச்சலைப்போல வெளிவந்து நம் கழுத்தை நெரித்த சமயத்தில் இவரது படங்கள் மட்டுமே தமிழில் வர இருந்த ஒரு மாற்று சினிமா என்ற நெருப்பை   அணையாது பாதுகாத்து வந்தது. சொலப்போனால் இவரது தரமான, இயல்பான கதைக் களங்கள் மற்றும் நட்சத்திர நடிகர்களின் நிர்பந்தத்தை தவிர்த்த கதாபாத்திரங்கள் தமிழுக்கு ஒரு நவீன சினிமாவின் வண்ணத்தை அடையாளம் காட்டின. பாரதிராஜா, மகேந்திரன் , ருத்ரையா (அவள் அப்படித்தான் என்ற படத்தை எடுத்தவர்)  போன்றவர்கள் எழுபதுகளின் திரைப்பாணியை மாற்றி  தமிழ் சினிமாவை  அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றதின் மிக முக்கிய காரணம் அதற்கான சாலையை ஒருவர் ஏற்கனவே அமைத்துவிட்டார் என்பதே. அவர் கே. பாலச்சந்தர். ஆரம்பத்தில் எனக்கு கே பி யின் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் அவரை மிகக் கடுமையாக நான் விமர்சித்தாலும்  இன்று கொஞ்சம் எழுபதுகளைத் திரும்பிப் பார்க்கும்போது பாலச்சந்தர் என்ற ஒருவர் அப்போது இல்லாதிருந்தால்  நம் சினிமாவின் முகம் ரசிக்கமுடியாத வகையில் அலங்கோலமாக மாறியிருக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் தமிழ்த்திரையின் புரட்சி இயக்குனர் என்று சொல்லப்படும்   ஸ்ரீதர் கூட எழுபதுகளில் தன் அடையாளத்தை இழக்கும்  வணிக நெரிசலில் சிக்கிக்கொண்டு உரிமைக்குரல், மீனவ நண்பன், வைரநெஞ்சம்  என்று தன் பாதையை மாற்றிக்கொள்ள பாலச்சந்தரோ நாடகத்தனமான தனது பாணியை விட்டு விலகி சற்று யதார்த்தத்தை நோக்கி நகர்ந்தார். இதுவே அவரது வெற்றியின் பின் உள்ள உண்மை என்று நான் கருதுகிறேன். அவரது பாணி தனித்தன்மை பெற்றிருந்தது. இதை யாரும் மறுக்கவே முடியாது. இதைத் தவிர நான் மிகப்  பிரதானமாகக் கருதுவது  அவரது படங்களின் பாடல்களையே. எந்தவித இரண்டாம் சிந்தனையுமின்றி அவரது படப் பாடல்கள்  கேட்பவரை வீழ்த்தும்  தகுதி பெற்றவைகளாக இருந்தன. 

    நீர்க்குமிழியில் வி.குமாரை அறிமுகம் செய்து தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வழங்கிவந்த   கே பாலச்சந்தர் இடையிடையே (பாமா விஜயம், அனுபவி ராஜா அனுபவி, நான்கு சுவர்கள் ) எம் எஸ் வி யையும் சேர்த்துக்கொண்டார். மர்மமான முறையில் அரங்கேற்றம் படத்திற்குப் பின் அவரது படங்களிலிருந்து  வி குமார்  மறைந்துபோக, பாலச்சந்தரின் ஆஸ்தான இசையமைப்பாளரானார் எம் எஸ் வி. இடையில் 70இல் வந்த எதிரொலி படத்தில் கே வி மகாதேவன் பணியாற்றிய (இது ஒரே படத்தில்தான் கே வியும் கே பியும் சேர்ந்தார்கள்) அதிசயமும் நடந்தது. 73இல் வந்த சொல்லத்தான் நினைக்கிறேன் படத்திலிருந்து 83இல் வந்த பொய்க்கால் குதிரை வரை (இடையில் தப்புத் தாளங்கள் படத்திற்கு விஜயபாஸ்கர் இசை அமைத்திருந்தார்) எம் எஸ் வி- கே பி கூட்டணியிலிருந்து அலையலையாக புறப்பட்டு நம்மை இசை வெள்ளத்தில்  மூழ்கடித்த முத்துப் பாடல்கள் ஏராளம். இசைக் கூட்டணியைப் பற்றி விவாதிக்கும்  பலர் அடிக்கடி குறிப்பிடுவது பாரதிராஜா-இளையராஜா (வைரமுத்து) கூட்டணியைத்தான். ஏனிந்த ஒரு சார்பான நிலையை பலர் விரும்புகிறார்கள் என்பது புதிரானது. எனது பார்வையில் இதே போன்ற...ஏன்  இதை விட என்று கூட சொல்லக்கூடிய ஒரு வலுவான சிறப்பான இனிமையான இசைக் கூட்டணி இவர்களுக்கு முன்பே பாலச்சந்தர்- எம் எஸ் விஸ்வநாதன் (கண்ணதாசன்) இணைப்பில் சாத்தியமாகிவிட்டது. ஆனால் பலர் இது பற்றி வாய் திறப்பதில்லை. என்னென்ன இனிமையான மனதை நெகிழச் செய்யும் கானங்கள் இந்தக் கூட்டணியிலிருந்து நம் வசப்பட்டிருக்கின்றன என்பதை  ஒரு விரிவான ஆய்வுக்கு உட்படுத்துவது  அவசியம் என்று தோன்றுகிறது. அறிந்தவர்கள் மவுனியாக இருப்பதும் அறியாதவர்கள் அறியாமலே இருப்பதும் சில அபாரங்கள் எளிதில் அலட்சியப்படுத்தப்படுவதின் முதற்  புள்ளி. இந்த அலங்கோலத்தை  சீர் செய்ய என் எழுத்து கொஞ்சமேனும் உதவினால் அது எனக்கு மகிழ்ச்சியே.

  சொல்லத்தான் நினைக்கிறேன்(73)- சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன் (வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி  தவிக்கிறேன்) -  படத்தின் முகவரிப் பாடல். எம் எஸ் வி பாடிய பாடல்களில் உச்சாணியில் இருக்கும் பாடல். எந்தப் பாடலை தான் பாடினால் அது தன் படைப்பை பாதிக்காது என்பதை நேர்த்தியுடன்  அறிந்த இசை மேதமை அவரிடம் இருப்பதன் கண்கூடு இந்தப் பாடல். அவர் குரலில் இந்தப் பாடலைக் கேட்பதே ஒரு நல்ல கவிதையை படிக்கும் சுகத்தைக் கொடுக்கிறது.   இதன் வரிகளும், இசையும், இடையிசையும், அந்த ராக நுணுக்கங்களும்  மனதுக்குள் நீர்த்துளி போல ஊடுருவிச்  செல்கின்றன. இந்தச்  சுகத்தை அனுபவிக்க ஒருவருக்கு வெறும் இசை மட்டும் தெரிந்தால் போதும். ஒரே முறை கேட்டுப் பாருங்கள். எம் எஸ் வி என்ற மகத்தான இசைஞனை  வியக்காமலிருக்க மாட்டீர்கள். கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே வேடிக்கை நமக்கு அதில் வேறென்ன இருக்கு-  ஆயிரம் காலத்துப் பயிர் என்று நம் சமூகம் கட்டிக்காத்துவரும் திருமணத்தை டேக் இட் ஈசி என்று பகடி செய்யும் துள்ளல் பாடல். பாடலுக்கு ஆடுபவர் இதைச் சொல்ல  மிகப் பொருத்தமானவர்தான் - கமலஹாசன்.பல்லவி என்று மன்னன் கேட்க பாடுவேனடி- இப்பாடலில் பாடுவேனடி என்றும் பாடுவேனடி என்று ராகம் உருமாறுவது கேட்பதற்கு சுகமானது. ராகங்களை நேர்த்தியாக கையாளும் எம் எஸ் வியின் இசை மேதமைக்கு இது ஒரு சிறிய சான்று  என்று தோன்றுகிறது.

        அவள் ஒரு தொடர்கதை(74)- நடுத்தரவர்கத்து இயலாமையையும், காவியமாகப் புனையப்படாத தியாகங்களையும், மத்தியதர பெண் ஒருவளின் (ஒருத்தி என்பது சற்று மரியாதை குறைவான சொல் என நான் கருதுகிறேன்)கலைந்துபோகும் கனவுகளையும் அப்பட்டமாகச் சொன்ன படம். தமிழின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படும் இப்படம் பெண்களை ஈர்த்ததில் வியப்பொன்றுமில்லை. இது   மாற்று சினிமாவின் பிதாமகன் என்றழைக்கப்படும் வங்கமொழி இயக்குனர் ரித்விக் கட்டக்கின் magne dhaka tara என்ற படத்தின் தழுவல் என்றறிந்து அந்தப் படத்தை தரவிறக்கம் செய்து பார்த்தேன். கதையின் கரு, தளம் தவிர பாலச்சந்தர் இந்தப் படத்தை வேறு எங்கும் தொடவில்லை என்று சொல்லலாம். தழுவல் என்பதை ஏற்றுக்கொண்டாலும் மிக கண்ணியமாக செய்யப்பட்ட மரியாதை என்பது சற்று பொருத்தமானது. எம் எஸ் வி இதில் அசாதாரண இசையை கொடுத்திருப்பார். ஒவ்வொன்றாகப்  பார்க்கலாம். அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெருங்கவலை - எல் ஆர் ஈஸ்வரியின் வழக்கமான அனுக்கல்கள் கொண்ட ரம்மியமானப் பாடல். இதில் வரும் படாபட் என்ற அடைமொழி இதில் நடித்த ஜெயலக்ஷ்மிக்கு முகவரியாகிப் போனது. ஆடுமடி தொட்டில் இங்கு ஐந்து திங்கள் போனால் - கலகலப்பான கானம். யதார்த்தம் எத்தனை குதூகலமானது என்பதை உணர்த்தும் பாடல். கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும் கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்  என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்?- உடைந்து போகும் காதலை புன்னகையுடன் எதிர்கொள்ளும் ஒரு பெண்ணின் மன வலியை சொல்லும் கீதம். இதில் வரும் நான் அணைக்கின்ற நெருப்பு என்ற வரியில் ஒரு  புதுக்கவிதையின் தீண்டலைக்  காண்கிறேன். அபாரமான கவிதை. அடுத்தது கே ஜே ஜேசுதாஸின் அற்புதப் பாடல்களில் ஒன்று.   உண்மையில் நான் ஜேசுதாசை அதிகம் விரும்பிக் கேட்பவனல்ல. அவர் குரலில் அடிநாதமாக ஒலிக்கும் சோகம் அவரின் பல பாடல்களை ரசிப்பதற்கு ஒரு இடையூறு  என்பது என் எண்ணம். (ஆனால் காக்கைச் சிறகினிலே நந்தலாலா பாடலை என் மனதிற்கருகே வைத்திருக்கிறேன்.) பலரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் இருக்கும் பாடலிது. தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே- கவிதை வரிகளை இன்னும் தொடர வேண்டுமென்ற துடிப்பு அடங்கவில்லை. அடடா நம் பாடல்கள்தான் ஒரு காலத்தில் எத்தனை சிறந்த கவிதைகளை உள்ளடக்கிய இசைச் சித்திரங்களாக இருந்தன! கவிஞரின் சிந்தனையை தன்  நேர்த்தியான இசையினால் கேட்டதும் மெய்மறக்கச் செய்யும் விதத்தில் பாடலாக வடித்த எம் எஸ் வி யின் மேதமையை என்னவென்பது!  இறுதியாக எம் எஸ் வி என்ற மகத்தான இசை மேதையின் உச்சம் தொட்ட பாடல்களில் ஒன்றென நான் கருதும் கடவுள் அமைத்து வைத்த  மேடை இணைக்கும் கல்யாண மாலை பாடலைப் பார்ப்போம். படம் வெளிவந்த புதிதில் கல்யாண மண்டபங்களிலும் வானொலிகளிலும் தொடர்ச்சியாக ஒலித்தது இந்த மந்திரப் பாடல். பாடலைக் கேட்கும் போதே நம் கற்பனைச்  சிறகுகள் எப்படி ஓயாரமாக விரிகின்றன! இது ஒரு புதுமண தம்பதியரை வரவேற்கும்  கானமாக இருந்தாலும் குழந்தைகளை குதூகலப்படுத்தும் இசை கொண்டிருந்தாலும் கார்ட்டூன் கதை கவிதையாக சொல்லப்பட்டாலும் இத்தனை கும்மாளத்தின் பின்னே இருக்கும் ஒரு  அதீத துயரத்தைப் புரிந்துகொள்ள கொஞ்சம் முதிர்ச்சியும் வாழ்கையின்  கசப்பை ருசித்த சிலவேதனையான அனுபவங்களும்    அவசியப்படுகின்றன.  பாடலின் சிறப்பு என்னவென்பதை நான் சொல்லவேண்டியதில்லை. சதன் என்ற பலகுரல் கலைஞனுக்கு எம் எஸ் வி தன் இசை மூலம் கவுரவம் செய்த பாடல். இது வெளிவந்த ஆண்டான 1974லை கணக்கில் கொண்டால் என்னென்ன வித்தியாசமான அதுவரை தமிழ்த் திரையிசை கேட்டிராத பிரமிப்பூட்டும் ஓசைகள் கொண்ட பாடல்!  இதைப் போன்ற ஒரு பாடல் இதுவரை தமிழில் வந்ததேயில்லை  என   மிக உறுதியாக என்னால் சொல்ல முடியும். (வேறு எந்த மொழியிலும் ஏன் உலகத்திலேயே இல்லை போன்ற வெற்றுக் கூச்சல்கள் எம் எஸ் விக்கு தேவையில்லை என்று நினைக்கிறேன்.) இதே பாடலை வேறு ஒருவர் அமைத்திருந்தால் (அது முடியாது என்று தோன்றுகிறது. )  ரசிகர்கள் இதைக்  கொண்டாடும் விதமே தனி. சில அற்புதங்கள் கவனிக்கப்படாவிட்டாலும் உண்மைகள் தெளிவானவை. நிலைத்து நிற்கக்கூடியவை. எம் எஸ் வியின் இசை மேதமை ஆர்ப்பாட்டமில்லாத அலங்காரமில்லாத ஒரு ஆச்சர்யம். 

     நான் அவனில்லை(74)-மந்தார மலரே மந்தார மலரே நீராடி முடித்தாயோ. இந்தப் பதிவுக்கென மீண்டும் தேடியெடுத்துக் கேட்டபோது ஒரு காலத்தில் அடிக்கடி வானொலியில் இப்பாடல் ஒலித்தது நினைவுக்கு வந்தது. அடடா இதுதானா அந்தப்பாடல் என்ற எண்ணமும் கூடவே வந்தது.

   அபூர்வ ராகங்கள்(75)- அரங்கேற்றம் படம் உண்டாக்கிய  மகா அதிர்ச்சி அலைக்குப் பின் பாலச்சந்தர் அடுத்த பூகம்பத்தை  தமிழ்த் திரைக் களத்தில் உருவாக்கியது இந்தப் படத்தில்தான். நம் சமூகம் நினைக்கவே  அஞ்சும் ஒரு நெறிமுறையற்ற இனக் கவர்ச்சியை பாலச்சந்தர் நாகரிக கோட்டின் மீது நின்றுகொண்டு சமூக பண்பாட்டின் கூறுகளை வேட்டையாடாமல் வெகு லாவகமாக எல்லோரும் விரும்பும் வகையில் சொல்லியிருப்பது பாராட்டிற்குரியது. இதே களம் வேறு இயக்குனர்களிடம் சிக்கியிருந்தால் கண்டிப்பாக அது ஒரு மன்னிக்கப்பட முடியாத படமாகவே மாறியிருக்கும் . படத்தின் தலைப்புக்கேற்றார் போல இந்தப் படத்தில் எம் எஸ் வி கர்நாடக ராகங்களைக் கொண்டு அசாத்தியமாக விளையாடியிருப்பார். தனிப்பட்ட முறையில் கர்நாடக ராகங்களை கண்டு வெகு தூரம் ஓடிய என்னை அதனுள்ளே இழுத்தது இந்தப் படப் பாடல்கள்தான். (இருந்தும் நான் ராகங்களில் கரை தேர்ந்தவனல்ல என்பதையும் சொல்லியாக வேண்டும்.) நமது மண் சார்ந்த ராகங்களின் பெருமையை பல பாடல்கள் பதிவு செய்திருக்கின்றன. மறுக்கவில்லை. ஒருநாள் போதுமா நான் பாட இன்றொரு நாள் போதுமா என்றொரு பாடலே போதும் நம் ராகங்களின் அழகைச் சொல்ல.



       அபூர்வ ராகங்கள் படப் பாடல்களில் முதலில் எனக்கு பரிச்சயம் ஏற்பட்டது கை கொட்டிச் சிரிப்பார்கள் ஊரார் சிரிப்பார்கள் விளையாட்டுக் கல்யாணமே என்ற ஷேய்க் முகமதுவின் குரலில் வரும் பாடலே.  அதன் காரணம் பாடகரின் பளீர் என்று முகத்தில் அறையும் குரலே. வெகு வித்தியாசமான இந்த குரலுக்காகவே சிறிய வயதில் இந்தப் பாடலை பகடி செய்வதுண்டு. ஆழமான அர்த்தம் பொதிந்த பாடல் இது என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை. பின்னர்   வாணி ஜெயாராமின் பொன் குரலில் வந்த  ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல் என்ற பாடல் என்னை மதிமயங்கச் செய்தது. நமது மரபிசையின் ஆழ்ந்த வேர்களை ஓட்டிச் செல்லும் அபாரமான பாடலிது. ராக மாலிகை என்ற வகையில் இப்பாடலை நேர்த்தியான வடிவமாக பிசிறின்றி ராகங்கள் முட்டிக்கொள்ளாது இனிமையாக  அமைத்திருப்பார் எம் எஸ் வி. இதே போலே கேள்வியின் நாயகனே இந்தக்  கேள்விக்கு பதிலேதைய்யா  என்ற பாடலும் ஒரு மிக உயர்ந்த ரசனைக்காக உருவாக்கப்பட்ட கீதம். பாடலின் காட்சியும் சற்று நாடகத்தனம் கொண்ட அழகானது. இந்த ஒரே பாடலில் நெறியற்ற பாலுணர்ச்சிக்கு  நாயகி முற்றுப் புள்ளி வைப்பதும், தன்  கணவனைக் காண்பதும், வெறுத்துச் சென்ற தன் மகளை தன்னோடு சேர்த்துக்கொள்வதும் நாயகன் விலகியிருந்த தன் தந்தையுடன் இணைவதும் காட்சிகளாக விரியும். இத்தனை ஆழமான காட்சியமைப்பை எம் எஸ் வி தன் அற்புதமான இசை மூலம் கேட்பதற்கு பரவசமாக்கியிருப்பார்.   பாடகி சசிரேகாவின் முதல் பாடல் இது என்று நினைக்கிறேன். ஒரு குடும்பத்தின் கதை படத்தின் மலைச் சாரலில் இளம் பூங்குயில் என்ற பாடலும் இதே ஆண்டில் வந்தது என்பதால் இதில் எது அவருக்கு முதல் பாடல் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எங்கள் வீட்டில் இந்தப் பாடலுக்கென மிகப் பெரிய அபிமானமே இருந்தது. நான் அப்போதெல்லாம் இந்தப் பாடலை அலட்சியமாக கடந்துபோயிருக்கிறேன். என் இசை  ரசனை என் இசை அனுபவங்களை மேருகேற்றியபின் இந்த அற்புதத்தைக் கேட்ட ஒரே நொடியில் இப்பாடலுக்குள் ஈர்க்கப்பட்டேன். சில அபஸ்வரங்கள் நம் கழுத்தை நெறிக்கும் போதுதான் சில அருமைகளை நாம் புரிந்து கொள்கிறோம். சசிரேகா போன்ற இனிமையான குரல் வளம் கொண்டவர்களை நாம் அதிகம் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது ஒரு மனதைத் தைக்கும் முரண். இறுதியாக ஒரு மகத்தான கானம் ஒன்றைப் பற்றி பேசவேண்டும். அது அபூர்வ ராகங்கள் என்றாலே சட்டென்று  நினைவில் தோன்றும் பாடல். அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம் என்ற கர்நாடக ராகங்களை வைத்து எம் எஸ் வி யும் ஜேசுதாசும் நம்மை பிரமிப்பூட்டிய பாடல்தான்.  இந்தப் பாடலை வியப்பின்றி கேட்பது அவ்வளவாக நடக்காத காரியம். மிக சமீபத்தில் இதை நான் கேட்டபோது அதன் ராக ஆச்சர்யங்கள் என்னைச்  சூழ்ந்தன. என்ன ஒரு இசை மேதமை பொங்கும் கானம் இது! ராக மாலிகையின் உச்சம் தொட்ட வெகு சில பாடல்களில்  ஒன்று.  இறுதி சரணத்தில் வரும் அந்தப்  புதிரான குறிப்பை  எம் எஸ் வி இசைத்த நேர்த்தி கேட்பவர்களை மெய்மறக்கச் செய்துவிடும். அதை ஜேசுதாஸ் பாடும் அழகில் மயங்காத உள்ளங்கள் இருக்கமுடியும் என்று தோன்றவில்லை. கே பாலச்சந்தர்-கண்ணதாசன்-எம் எஸ் வி கூட்டணியில் வந்த காவியப் பாடல்களின் மகுடம்  அதிசய ராகம்.

  மன்மத லீலை(76)- திரை விமர்சகர்களையும் ரசிகர்களையும்   அதிர்ச்சியூட்டிய பாலச்சந்தரின்  அடுத்த ஏவுகணை.  A movie ahead of its time என்று இப்போது வர்ணிக்கப்படும் இந்தப் படத்தின் துணிகர திரைக்கதை  2000த்தில்தான் இங்கே  சாத்தியமானது. பல பெண்களோடு தொடர்பு வைத்துக்கொள்ளும்--அல்லது விரும்பும்--ஆண்களின் இயல்பான குணத்தை பாலச்சந்தர் சமரசங்கள் செய்துகொள்ளாது point blank ஆக சொல்லியிருந்தது அப்போது--ஏன் இப்போதுகூட--ஒரு வியப்பான பிரமிப்பே. மேலும்  ஒற்றைக் கோடு போன்று வரைந்த மீசையுடன் ஒய்யாரமாக வலம் வந்துகொண்டிருந்த தமிழ்க் கதாநாயகர்களின் அடையாளத்தை  உடைத்து கதாநாயகனை அடர்த்தியான மீசையுடன் அறிமுகம் செய்து ஒரு புதிய மரபை உண்டாக்கினார். கமலஹாசனின் அந்த நவீன தோற்றம் அன்றைய இளைஞர்களின் மத்தியில் மிகப் பிரபலமானதும்  விவாதப் பொருளானதும் இப்போது வேடிக்கையாக இருக்கிறது. கதாநாயகனின் மீசையின் அகலம் ஒரு புதிய பாணியை துவக்கியது இதன் பின்னே தொடர்கதையானது.  துணிச்சலான இந்தக் கதைக்குப் பொருத்தமான  ஆழமான பாடல்களை எம் எஸ் வி அனாசயமாக அளித்திருந்தார். ஹலோ மை டியர் ராங் நம்பர் என்ற பாடல் இளைஞர்களிடத்தில் அமோகமாக வரவேற்பைப் பெற்றாலும் அவ்வளாக பெண்களிடத்தில் பாராட்டு பெறாததின் காரணம் அதன் கதையமைப்பே என்று தோன்றுகிறது. (இதில் நடித்த ஒய் விஜயாவை இன்றுவரை என் சகோதரிகள் மன்னிக்கவில்லை.) காமம் இதன் கருப்பொருளாக இருந்தாலும் எம் எஸ் வி தேவையில்லாத விரக தாப  ஓசைகளை அறிமுகம் செய்யாமல் முடிந்தவரை நளினமாகவே இந்தப் பாடலை அமைத்திருந்தார். மன்மத லீலை மயக்குது ஆளை என்ற பாடல் வழக்கமான எம் எஸ் வி- எஸ் பி பி கானம். துடிப்பான இசையுடன் கூடிய ஜாலியான சூழலுக்கானது. ஜேசுதாஸ் பாடிய மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்  காலத்தை கடந்த ஒரு கானம். இப்பாடலில் கண்ணதாசனின் சிறப்பான கவிதையை வியாக்காதவர்கள் வெகு குறைவு.  இதில் வரும் கணவனின் துணையோடுதானே காமனை வென்றாக வேண்டும் என்ற வரியை  என் நண்பரொருவர் வெகுவாக சிலாகித்துப் பேசுவார். கணவனுக்குப் பதில் மனைவி என்று மாற்றிவிட்டால் பெண்ணுக்கு புத்தி சொல்லும் ஆணுக்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறேன். இன்றைக்கும் ஒரு பல ஆண்கள் இந்தப் பாடலின் பல்லவியை ஒரு பழமொழி போல  குறிப்பிடுவது இதன் ஹிமாலய வெற்றியின் நீட்சி. அவ்வளவாக பேசப்படாத நாதமென்னும் கோவிலிலே ஞான விளக்கேற்றி வைத்தேன் பாடலை தற்போது கேட்டபோது எப்படி இத்தனை நாள் இந்தப் பாடலை விட்டுவைத்திருந்தோம் என்று கேள்வி எனக்குள் எழுந்தது. 70களில் எம் எஸ் வி கர்நாடக ராகங்கள் மெல்லிசையுடன் பலமாகக் கலந்த பல பாடல்களை வாணி ஜெயராமுக்கு கொடுத்திருக்கிறார்.  சுசீலாவின் நீட்சி என்ற சொல்ல முடியாவிட்டாலும் வாணி ஜெயராமின் குரல் ஒரு அற்புதம் என்றே சொல்வேன். அதற்குக் காரணம் அவர் பாடிய பல தேன் சொட்டும் பாடல்களே. எம் எஸ் வி யின் காலத்திற்குப் பிறகு இளையராஜாவினால் அதிகம் பயன்படுத்தப்படாமல் (அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தின் நானே நானா யாரோதானா என் ரசனைக்குட்பட்ட மிக அழகிய பாடல் என்பதையும் இங்கே சொல்லியாகவேண்டும்.)  பின்னர் இவர் ஷங்கர்-கணேஷின் ஆஸ்தான பாடகியானார். வணிக வெற்றிகள் அதிகம் அண்டாததால்  அவரது பாடல்கள் மக்களின் சிந்தனையில் தங்கவில்லை.  இது ஒரு கசக்கும் நிஜம்.

         மூன்று முடிச்சு(76)- அவள்  ஒரு கதாநாயகி என்ற சராசரிப் பாடலை சற்று கடந்து வந்தால்  வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள் என்ற அந்தாதி வகைப் பாடலை அடையலாம். அட்டகாசமான பாடல். இதன் பாடல் வரிகள் அபாரமானவை. நாடகத்தனம் மேலோங்கிய இந்த காட்சியமைப்புக்கு எம் எஸ் வியின் இசை இன்னொரு பரிமாணம் சேர்த்தது. ஒரு மென்மையான ஹார்மோனிகாவின் இசையுடன் பாடல் துவங்கும் போதே அது நம் மனதை கொள்ளைகொண்டு விடுகிறது. அதன் பின் இசை தவழ்ந்து சென்று வசந்த கால நதிகளிலே என்று ஜெயச்சந்திரன் பாடத் துவங்க எத்தனை ரம்மிய உணர்வு வருகிறது! வரிகள் தொடர்ந்து நதியலைப் போல நழுவ இறுதியில் ரஜினிகாந்த் வெறுப்புடன் "மணவினைகள் யாருடனோ மாயவனின் விதி வகைகள்.விதிவைகையை முடிவு செய்யும் வசந்தகால நதியலைகள்" என்று பாடலின் முதல் வரியோடு பாடலை முடிப்பது இசையும் கவிதையும் ஒரு தாம்பத்யம் போன்று இணைந்திருக்கவேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. இறுதி வரிகளில் துருத்திக்கொண்டு தெரியும்   அத்தனை  வெறுப்பையும்   எம் எஸ் வி தனது குரலில் கொண்டுவந்திருப்பது ஒரு திகைப்பூட்டும் பயங்கரம். இதுபோன்று  கவிதையின் சிறப்பையும் இசையின் ஆளுமையையும் ஒருங்கே கொண்ட பாடல்கள் எம் எஸ் வி இசையில் ஏராளமுண்டு. "இசையறிவு  ஏகத்துக்கும் கொண்ட சில ஞானிகளிடம்" இதுபோன்ற சிறப்பான கவிதைகளை சுமந்த பாடல்களை எங்கே என்று மைக்ராஸ்கோப் வைத்து    நாம் தேடவேண்டியிருப்பது வினோதம்தான்.  நல்ல கவிதையை தூர விரட்டிய இசைக் கோமாளிகளுக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைக்கிறது இங்கே. நான் எழுபதுகளில் எம் எஸ் வியின் இசை பங்களிப்பைப் பற்றி எழுதவேண்டிய எண்ணத்தை என்னிடம் விதைத்த  பல பாடல்களில்  ஆடி வெள்ளி  தேடி உன்னை நான் அடைந்த நேரம் என்ற பாடலும் ஒன்று. சொல்லப்போனால் சமீபத்தில் அந்தப் பாடலைக் கேட்டபோது அந்த மெட்டும் மெலடியும் என்னுள் ஆழமாக வேரூன்றி எழுபதுகளின் இசைப் பாரம்பரியத்தை வேறு கண் கொண்டு ஆய்வு  செய்யவேண்டிய விருப்பத்தை வரவழைத்தன. மழைத் தண்ணீர் அடித்துக்கொண்டு ஓடும் சாலையோரங்களில்  சிறுவர்கள் காகிதக் கப்பல் செய்து மிதக்க விட்டு  அது அந்த மழை நீரின் வேகத்தில் இழுத்துச் செல்லப்படும் அழகை  அதை தொடர்ந்து ஓடி அந்தச்  சிறிய ஆனால் விலையற்ற இன்பத்தை  ரசிப்பதைப் போன்றதொரு அனுபவத்தை  இந்தப் பாடல் எனக்குக் கொடுத்தது. அதிகம் புகழடையாத ஒரு பாடலாக இது இருந்தாலும் ( அதுதானே நமது மேம்பட்ட ரசனை. கேட்டேளா இங்கே அத பார்த்தேளா அங்கே போன்ற பாடல்களுக்கு நாம் அளித்த மரியாதை எத்தனை அழகியல் கொண்ட பாடல்களை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டது!) தரமான பாடல்கள் வரிசையில் இதற்கு இடமுண்டு. வசந்தகால நதிகளிலே போன்றே இந்தப் பாடலும் அந்தாதி வகையைச் சேர்ந்ததே. இசைப் புரட்சி பற்றி பேசும் பல இசை விமர்சகர்கள் தங்களுக்கு தேவையானவரை புகழ்வதில் காட்டும் சிரத்தையை உண்மையிலே புரட்சி செய்திருக்கும் மற்ற  இசை அமைப்பாளர்களிடத்திலும் செலுத்தினால்  ஒரு ஆரோக்கியமான தகவல் பரிமாற்றத்திற்கும் நமது இசை வரலாறின் உண்மைத் தன்மைக்கும் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

     அவர்கள்(77)- ஒரு பெண்ணின் சுதந்திர உணர்வை தமிழில் பல பாடல்கள் சொல்லியிருக்கின்றன. சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு முதல் சின்னச் சின்ன ஆசை வரை நாம் பல கொண்டாட்ட கீதங்களை கேட்டிருக்கிறோம். பலர் சின்னச் சின்ன ஆசை பாடலை இவ்வகையான பாடல்களில் முதலிடத்தில் வைக்கிறார்கள். ஏனெனில் அதன் கவிதை நம்மை பிரம்பிப்பில் ஆழ்த்துவது.  ஆனால் சின்னச் சின்ன ஆசை பாடலையே   கொஞ்சம் தள்ளி நிற்கச் சொல்லும் கானம்  காற்றுக்கென்ன வேலி  கடலுக்கென்ன மூடி (கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே புகுந்து விடாது மங்கை உள்ளம் பொங்கும்போது விலங்குகள் ஏது). நல்தமிழை நல்லிசையுடன்   விருந்து படைக்க  எம் எஸ் வி-கண்ணதாசனை   விட்டால் வேறுயார் இருக்கிறார்கள்? மொத்தப் பாடலும் அபாரமான கவிதை வரிகள் போர்த்திக்கொண்ட குளுகுளுப்பானது. ரம்மியமான கோரஸ் பாடல் முழுதும் ஒரு இணைப்பிசையாக வந்து நம்மை பரசவப்படுத்துகிறது. பலர் இந்தப் பாடலின் சிறப்பே அந்த அற்புதமான கோரஸ்தான் என்று சொல்கிறார்கள். உண்மைதான்.  இந்தப் பாடலின் ஆதார நாடியே அதுதான் என்று எண்ணுகிறேன். ஒருமுறை கேட்டுப்பாருங்கள். இதுபோன்றதொரு அழகியல் மிகுந்த குரலிசை கொண்ட பாடல்கள் நம் தமிழில் வெகு குறைவே. புதிய பறவை படத்தின் பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற பாடலை இதே அலைவரிசையில் வைத்தாலும் இந்தப் பாடலில் உள்ள குரலிசை நம் மண் வாசனை கொண்டது. மயக்கம் தருவது. சரணத்தில் இந்தக் குரலிசை ஒரு இடையிசை போல தொடர்ந்துவந்து  பாடலை இன்னும் கூராக்குகிறது. நான் அடிக்கடி சொல்வதுபோல தமிழில் இதுபோன்ற ஆற்றல் மிக்க குரலிசையை எம் எஸ் வி அளித்த அளவுக்கு வேறு எவரும் செய்யவில்லை. எம் எஸ் விக்குப் பின் வந்த பிற இசையமைப்பாளர்களின்  குரலிசை வேறு வகையானது. மேலும் அவை  இந்த அளவுக்கு தரமானதா என்பதும்   கேள்விக்குரியதே. காற்றுக்கென்ன வேலி பாடலின்  தேர் கொண்டுவா தென்றலே  இன்று நான் என்னை கண்டேன் சீர் கொண்டுவா சொந்தமே இன்றுதான் பெண்மை கொண்டேன் என்ற வரிகள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுபவை. அதை ஜானகி பாடும் அழகே ஒரு வித சுகமானது. ராகங்களுக்குள் ஒரு ரகசிய குறியீடுபோல புதைந்திருக்கும் புதிரான  வளைவுகளையும் நீட்டல்களையும் மிகச் சரியாக கண்டுபிடித்து  அதன் மூலம் பாடகர்களின் குரலில் இருக்கும் இனிமையை வெளிக்கொண்டு வருவதில் எம் எஸ் வி மேதமை கொண்டவர். (சுசீலாவின் பல பாடல்கள் இவரது இசையினாலே அழகுபெற்றன என்பது என் எண்ணம்.) அடுத்த பாடல் ஒரு நவீனம். இசைப்  புரட்சி என்று தயக்கமில்லாமல்  சொல்லிவிடக்கூடிய இருமனம் கொண்ட திருமண வாழ்வில் இடையினில் நீயேன் மயங்குகிறாய்.  கமலஹாசன் இந்தப் படதிற்கென ventriloquism எனப்படும் தன் குரல் வேறு பக்கத்திலிருந்து வருவது போன்று பேசும்   யுக்தியை கற்றுக்கொண்டார் என்று ஒரு தகவல் இருக்கிறது. காரணம் இந்தப் படத்தில் வரும் ஜூனியர் என்ற கதாபாத்திரம். மேற்குறிப்பிட்ட இருமனம் கொண்ட பாடலில்  இடையிடையே ஜூனியர் சேர்ந்துகொண்டு நாயகிக்கு காதல் பட்டம் விடுவார். இந்த வித்தியாசமான களத்தை எம் எஸ் வி அமர்க்களமாக தன் இசையால் அழகுபடுத்தியிருப்பார். கடவுள் அமைத்துவைத்த மேடை பாடலைப் போன்ற இதுவும் தமிழில் இதுவரை செய்யப்படாத இசை முயற்சி. மெல்லிசை மன்னர் என்ற தன் தகுதியை தரமாக நிரூபித்த பாடல்.  அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்தப் பக்கம் என்ற பாடல் ஒரு பெண்ணின் ஊசலாடும் மனநிலையை படம்பிடிக்கும் பாடல். இதைப் பற்றி ஒரு சுவையான தகவல் இருக்கிறது. எதோ ஒரு விழாவில் (அல்லது நிகழ்ச்சியில்)  எம் எஸ் வியும் கண்ணதாசனும் கலந்துகொண்டபோது ஒருவர் (கே பாலச்சந்தர்?) திடுமென அவர்கள் இருவரும் மக்கள் முன்னிலையில் ஒரு புதிய பாடலை  கம்போஸ் செய்வார்கள் என்று அறிவிக்க, எந்த வித பகட்டுமின்றி சில நிமிடங்களில் கவிதை உருவாகி இசை அமைக்கப்பட்டு எஸ் பி பி (அவரும் அங்கிருந்ததால்) அங்கேயே  பாடியதாக ஒரு forum ஒன்றில் படித்தேன்.  இதன் முதல் சரணத்தில் வரும் கல்லைக் கண்டாள்  கனியைக் கண்டாள் கல்லும்  இன்று மெல்ல மெல்ல கனியும் மென்மைக் கண்டாள் என்ற வரிகள் மிகச் சிறப்பானவை. என்ன எளிமை ஆனால் எத்தனை ஆழம்! பாமரத்தனமாக சொல்வதென்றால் "தமிழ் விளையாடுது".

      பட்டினப் பிரவேசம்(77)- ஒரு முறை என் இசை நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் வழக்கமான இசையுத்தம் வெடித்தது எங்களுக்குள். "இளையராஜா ஒவ்வொரு வாத்தியத்திற்கும் ஒரு பாடலை படைத்திருக்கிறார்" என்றார் அவர்.   "அப்படியா?" என்றேன் சுவாரஸ்யமின்றி. இதுபோன்று எத்தனயோ கேட்டாயிற்று என்ற எண்ணம் இதைப் படிக்கும் உங்களுக்கே இந்நேரம் வந்திருக்கும். " கிடாருக்கு  இளைய நிலா பொழிகிறதே. புல்லாங்குலலுக்கு சின்னக் கண்ணன் அழைக்கிறான். பியானோவுக்கு என் வானிலே ட்ரம்பெட்டுக்கு மன்றம் வந்த தென்றலுக்கு ட்ரம்ஸ்க்கு ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா." என்று தொடர்ந்து அடுக்கினார். இப்படியெல்லாம் கூட புகழுரை பாடமுடியுமா  என்ற வியப்பு எனக்கு ஏற்பட்டது. "அதெல்லாம் சரிதான். வயலினை விட்டுவிட்டீர்களே" என்று நான் அவருக்கு ஞாபகப்படுத்தினேன். "வயலின்..." என்று மூன்று புள்ளி வைத்தவர், "அதுக்குதான் ஏகப்பட்ட பாடல் இருக்கிறதே" என்று முற்றுப்புள்ளி வைத்தார். நான் "நீங்கள் மறந்துவிட்ட ஒரு பாடல் இருக்கிறது." என்றேன். "வான் நிலா அது நிலா அல்ல உன் வாலிபம் நிலா என்ற பாடல். ஆனால் இது உங்களுக்குத்  தோன்றாது. ஏனென்றால் இது எம் எஸ் வி இசை அமைத்தது." என்று அடுத்து சொல்லவும் "அது.." என்று ஆரம்பித்து  வேறு வாத்தியத்தைத்  தேட ஆரம்பித்துவிட்டார்.  வேடிக்கை என்னவென்றால் அந்த இசை நண்பர் ஒரு வயலின் இசைஞர். கிடார் என்றால் இளையராஜாவின் இளைய நிலா பொழிகிறதே மற்றும் என் இனிய பொன் நிலாவே இரண்டும் நமக்கு நினைவுக்கு வருவது உண்மைதான். மறுக்கவில்லை. நான் நினைத்தாலே இனிக்கும் படத்திலுள்ள  காத்திருந்தேன் காத்திருந்தேன்  என்ற பாடலை அதன் அதிரும் கிடார் இசைக்கென ரசிப்பதுண்டு.  ஆனால் பியானோ இசை என்றாலே நம் சிந்தனையில் முதலில் உதிப்பது வெண்ணிற ஆடையின் என்ன என்ன வார்த்தைகளோ பாடல்தானே. சிலரது  இசை ரசனைகள்தான் எப்படி மூளைச்  சலவை செய்யப்பட்டிருக்கின்றன! வான் நிலா பாடலின் சிறப்பே அதன் வயலின் இசையும் அந்த   "லா" ஓசையும்தான்.  ஆச்சர்யப்படுத்தும்  அற்புதக் கவிதை கொண்ட பாடல்.  குறிப்பாக இன்பம்  கட்டிலா அவள் தேகக் கட்டிளா என்ற கண்ணதாசனின் வரிகளை கடக்கும்போது நீங்கள் ஒருமுறை அதிர்வது நிச்சயம். கண்ணதாசன்-எம் எஸ் வி கூட்டணியோடு பாலச்சந்தர் சேர்ந்தால் அதன் தாக்கம் எத்தனை வியக்கத்தக்கது   என்ற உண்மைக்கு இதுபோன்று  பல காவியப் பாடல்களே  சான்று.  இந்தப் பாடலை முதலில் வானொலியில் கேட்டபோது இதன் இசை எம் எஸ் வி என்றறிந்து சற்று வியப்புற்றேன். இதிலுள்ள மற்றொரு பாடல்  தர்மத்தின் கண்ணைக்  கட்டி (நகரத்தில் ஆடவிட்டு இதுதானே நாகரீகம் என்றான்) . அதிகம் கேட்கப்படாத சிறப்பான பாடல் இது.

      நிழல் நிஜமாகிறது(78)- சில பாடல்கள் நமது எண்ண அடுக்குகளில் உட்புகுந்து பல இனிமையான கதவுகளை ஒரே நொடியில் இலகுவாக திறந்துவிடுகின்றன. ஆங்கிலத்தில் நாஸ்டால்ஜியா எனப்படும் இந்த பழையதை மீட்டெடுக்கும் உணர்ச்சிக்கு அடிமைப்படாதவர்கள் இந்த உலகில் இருக்கவே முடியாது. அது எதோ ஒரு பாடல் அல்லது சிறிய இசைத் துணுக்ககக் கூட இருக்கலாம். எனக்கு அப்படிப்பட்ட பல பாடல்கள் இருந்தாலும் இந்தப் படத்தின் பாடல்களை  எப்போது கேட்டாலும் எனது பால்ய தினங்கள் எனக்குள் உயிர் பெறுவதை நான் ஒரு வித துயர சுகத்துடன் அனுபவித்திருக்கிறேன். முதலில் இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ இதுவரை நடித்தது அது என்ன வேடம் இது என்ன பாடம்  என்ற பாடலை ஆராய்வோம். என்ன ஒரு காவியக் காதல் கானம்! இரும்புத் திரை கொண்டு இயல்பான மனித உணர்சிகளில் முதன்மையான காதலை எத்தனை காலம்தான்  மறுக்கமுடியும்! இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ என்ற பல்லவியின் முதல் வரியிலேயே கண்ணதாசன் மூடிய கதவுக்குள் வழியும் மழைத் துளி போன்ற காதலை அழகாக கவிதைத் தமிழில் சொல்லிவிடுகிறார். என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன் உன் நெஞ்சில் எதோ கறை ஒன்று கண்டேன் என்ற வரிகளாகட்டும் அதைத் தொடரும் புரியாததால்தானே திரை போட்டு வைத்தேன் திரை போட்டபோதும் அணை போட்டதில்லை என்ற வரிகளாகட்டும்..வர்ணிக்க என்னிடமிருப்பது  ஒரே வார்த்தைதான்.. அட்டகாசம்... காலத்தை வென்ற கண்ணதாசனின் கவிதை வரிகளை தன் இறவா இசையால் தேன் சுவையான  பாடலாக்கிய    எம் எஸ் வி யின் கற்பனையை என்னவென்று சொல்வது!  ஒரு சிறந்த பாடலுக்கு கவிதைகளே தேவையில்லை என்ற எண்ணம் உங்களுக்கிருந்தால் இந்தப் பாடலை ஒரு முறை கேளுங்கள். ஒரு தரமான கவிதையும் சிறந்த இசையும் ஒன்று சேரும்போது பிறக்கும் கானம் எட்டும் உயரம்  நம்மை பரவசப்படுத்தக்கூடியது. நல்ல கவிதையை விவாகரத்து செய்த எந்தப் பாடலும் என் பார்வையில் இறந்து போனதே.  கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலரென்றானே கற்பனை செய்தானோ என்ற அடுத்த பாடல் அடுத்த ஒரு ஆனந்தத் தாலாட்டு. இந்தப் பாடல் என்னக்குள் ஏற்படுத்தும் வண்ண அலைகள் ஏராளம். ஆர்ப்பரிப்பில்லாத அமைதியான அற்புதம் இப்பாடல். எம் எஸ் வியின் இசை 76க்குப் பிறகு தன் பொலிவை இழந்தது என்ற கருத்தை சிதைக்கும் பாடல். இதில் மெல்லிசையின் ஆதார  நுணுக்கங்களை எம் எஸ் வி  தன் இசைக்குள்ளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கொண்டுவருவதை கேட்டு ரசிப்பதே ஒரு ஏகாந்தம்தான். அலங்காரமாக மிளிரும் நியான் விளக்குகள் போலில்லாமல்  ஆடம்பரமில்லாத சிறிய அகல் விளக்கின் அழகாய் ஒளிர்ந்த பாடல்.

ஒரு படத்தின் எல்லா பாடல்களும் கேட்கும் எவரையும் ஒரு ஏகாந்த உலகுக்கு அழைத்துச் செல்ல முடியுமா?
25 வருடங்களுக்குப் பிறகும் ஒரு பழைய தலைமுறை இசை அமைப்பாளரால் நவீன பாணியை அச்சு பிறழாமல் பிரதியெடுக்க முடியுமா?
தேனிசை மழை என்ற முத்திரையுடன் பல படங்கள் உள்ளன. உண்மையில் தேனிசை மழை என்றால்..?
இது எல்லாவற்றிக்கும் ஒரே பதில்: நினைத்தாலே இனிக்கும். (79)



     இந்தப்  படம் Old school என்று இகழ்ச்சியாக பேசி  வேறு பக்கம் தாவிய இளைய தலைமுறைக்கு எம் எஸ் வி அளித்த இசை அதிர்ச்சி. தான் இன்னும் மன்னன்தான் என்று தன் மெல்லிசை மூலம் அழுத்தமாகத் தெரிவித்த  இன்னிசைச் செய்தி. தளர்ந்து விட்டார் என்று அலட்சியம் செய்தவர்களுக்கு கொடுத்த கும்மாங்குத்து. வறண்டுபோன இசை என நக்கலடித்தவர்களை கதிகலங்கடித்த அதிரடி. எம் எஸ் விஸ்வநாதன் என்ற பெயருக்குப்  பின் முற்றுப்புள்ளி வைத்தவர்களை கிடுகிடுக்கச் செய்த இசை பூகம்பம். படத்திற்கு மிகப் பொருத்தமான பாடல்கள் மட்டுமல்லாது பின்னணி இசையிலும் பிரமாதமாப்படுத்தியிருப்பார் எம் எஸ் வி. இதன் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமானது. இதுபோன்ற இன்னிசைக் கதம்பம் தமிழில் அபூர்வமே. இதன் பிரம்மிப்பூட்டும் சிறப்பு என்னவென்றால் கொண்டாட்டம், குதூகலம், களிப்பு, வேடிக்கை, காதல், பிரிவு, துயரம், நட்பு என எல்லா மனித உணர்ச்சிக்குமான வடிகால்கள் பாடல்களாக இதில் உண்டு.  நினைத்தாலே இனிக்கும் : அறுசுவை இசைவிருந்து. எல்லா பாடல்களையும் ஆராய்ந்தால் பிடிபடும் பிம்பம் சொல்லும் செய்தி என்னவென்பதை பிறகு பார்க்கலாம். இப்போது தேன் துளிகளாக நம் இதயத்தில் விழுந்த இப்படத்தின் பாடல்கள் பற்றிய சிறு குறிப்பு.

எங்கேயும் எப்போதும்  அடைந்த வெற்றியின் உயரத்தை  79இல் வேறு எந்த பாடலும் அடையவில்லை  என்பதே உண்மை. இளைஞர்களின் எல்லையில்லா உற்சாகத்தின் முகவரியானது  இந்தப் பாடல். கண்ணதாசனின் இன்பத் தத்துவ வரிகளுக்கு எஸ் பி பி உயிர் கொடுக்க எம் எஸ் வி அதன் ஆன்மாவை இசை மூலம் இயக்க விளைவு எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் தானே.

காதல் கவி பாடும் பாரதி கண்ணம்மா கேளடி சின்னம்மா ஒரு தென்றல் கீதம்.முதலில் ஒரு அதிரடி என்றால் அடுத்து என்ன ஒரு அரவணைப்பு! இந்தப் பாடல் ஒரு மோக முத்தம்.

அடுத்து வருவது படத்தின் சிறப்பான பாடலாக இல்லாவிட்டாலும் என்னைக் கவர்ந்த ஒரு பாடல். எம் எஸ் வியின் ஜலதோஷக்  குரலில் உற்சாக வெள்ளமாக பீறிட்ட ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் எந்திரம் சிவசம்போ பாடல் கேட்பவர்களை திக்குமுக்காட வைத்துவிடுகிறது. எம் எஸ் வி ஒரு நிர்பந்தத்தின் பேரிலேயே இதைப் பாட ஒப்புக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் ஆச்சர்யமூட்டும் பாடல். கதைக் களத்திற்கேற்ப மேற்கத்திய பாணியில் எம் எஸ் வி வாத்தியங்களை வைத்துக்கொண்டு அதகளம் செய்த பாடல். இரண்டாம் சரணத்தில் அவர் குரலின் டெம்போ ஏறிக்கொண்டு போக, கல்லைத் தின்றாலும் செரிக்கின்ற நாளின்று காலங்கள் போகாதே பின்னாலே என்பார்கள் என்று உச்சம் சென்று பின் இன்றைய ராப் இசைக் கூறுகள் கொண்ட மணமுண்டு பெண்ணுண்டு சோறுண்டு சுகமுண்டு மனமுண்டு என்றாலே  சொர்க்கத்தில் இடமுண்டு என்ற வரிகளை அபாரமாக பாடுவார். இதன் தொடர்ச்சியாக டியிங்க் டியிங்க் என்று   வினோத ஒலிகள் எழுப்பி, பரவசமான ஓசைகளைக் கொண்டு ஒரு நவீன ஆலாபனை செய்துவிட்டு பின்னர் சட்டென ஒரு யு டர்ன் அடித்து  ஜகமே தந்திரம்  என பல்லவிக்குத்   தாவும் போது தியேட்டர்களில் விசில்கள் ஏவுகணைகள் போலப் பறந்தன. இப்போதும் சிலிர்ப்பைக் கொடுக்கும் சரணம் அது.

அடுத்து நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் என்று துவங்கி சடசடவென இசை ஊர்வலமாக நகரும் இனிமையான பாடல். மனதை அள்ளும் மந்திர இசைகோர்ப்பு. டக் டக் என்ற தாளம் பாடல் முழுதும் நடைபயில இசைக் கருவிகளின் இனிமை தெறிக்கும் மிக நேர்த்தியான இசையமைப்பு. இதில்  வரும் எஸ் பி பியின் இயல்பான வார்த்தை அனுக்கல்கள்  (மன்மதன் வந்தானா என்று அவர் பாடும் விதம் ) மிகவும் புகழ் பெற்றது.

படத்தின் மிகச் சிறப்பான பாடல் எனது பார்வையில் யாதும் ஊரே யாவரும் கேளிர்(அன்பே எங்கள் உலக தத்துவம்) என்ற கானமே. டடன் டடன் என்று துவங்கும் முன்னிசையே  ஒரு இசை நீர்வீழ்ச்சிக்கு நம்மை ஆயதப்படுத்திவிடுகிறது. ட்ரம்பெட்டின் இனிமையான இசை அடுத்த பரிமாணத்தை அளிக்க பின்னர் நிதானமாக ஆரம்பிக்கும் தாளம் நம் இதயத் துடிப்பை எகிற வைக்கிறது. பள்ளிப் புத்தகத்தில் படித்த யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலகளாவிய தத்துவ வார்த்தைகள்  ஒரு அழகான பாடலாக நம் காதுகளில் ஒலிக்கும் போது அப்போது ஒரு பள்ளிச் சிறுவனாக இருந்த என் போன்றவனுக்கு அது எந்த விதமான கற்பனைக்கு உயிர் கொடுத்திருக்கும் என்பது அனுபவித்திருக்கவேண்டிய ஒன்று. நம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான நீராறும் கடலுத்த என்ற கவிதைக்கு அழகு சேர்த்த எம் எஸ் வி இதற்கு மட்டும் என்ன வஞ்சகமா செய்வார்? (இங்கே  ஒரு செய்தி: எம் எஸ் வி கேரளாவில் பிறந்தவர். ஆனால் அவரை கேரளர்கள் தமிழன் என்றே சொல்கிறார்கள். நினைக்கிறார்கள். அடையாளப்படுத்துகிறார்கள்.) யாதும் ஊரே  பாடலின் அடுத்த அபாரமான அம்சம் சரணத்தில் சரமாரியாக மின்னல் போல சரசரவென்று ஏறி இறங்கும் வயலின் கீற்று. இந்த இடத்தில்தான்  எம் எஸ் வி யின் இசை மேதமை எத்தனை அழகாக வெளிப்படுகிறது! சரணத்தின் இறுதியில் ஒவ்வொரு வரிக்கும் இடையில் இசைக்கப்படும் சிங்கப்பூரின் அடையாளமான அந்த மண்ணின் இசை பாடலுக்கு  வேறு பரிமாணம் அளிக்கிறது. தடையின்றி நளினமாக அரவணைக்கும் தாளம் கொஞ்சம் தயங்கி சரணத்தின் முடிவில் பல்லவியை நாடும் சமயத்தில் உயிர் பெறுவது ஒரு அழகு. இதை ரசிப்பதே ஒரு ஆனந்த அனுபவம் என்பேன். It's one of the most soul-stirring songs of the decade. Simply a mesmerising melody.

ஆனந்த தாண்டவமோ போதையேறிய கானம். கதைப்படி நாயகி போதை ஊசி ஏற்றப்பட்டு சிங்கப்பூர் ரோடுகளில் மனம்போன போக்கில் பாடிக்கொண்டே போவதுபோன்ற காட்சியமைப்பு. இது போன்ற பாடல்களை பாட எல் ஆர் ஈஸ்வரியை விட வேறு ஒருவரை கற்பனை செய்ய முடியுமா?

படத்தில் கைத்தட்டல்களை அள்ளிச் சென்ற பாடல் இனிமை நிறைந்த உலகமிருக்கு இதிலே உனக்கு கவலை எதுக்கு. காரணம் அதன் சூழல். புற்றுநோய் பீடித்த நாயகி தன் மரணம் வெகு அருகில் என்று உணர்ந்ததும்   நாயகனிடத்தில் சொல்லும் "சாகும் வரை பாட்டு பாட்டு பாட்டு" என்ற புகழ் பெற்ற வசனத்தை தொடர்ந்து கும் என்று குதிக்கும் பாடல்.

ஹிந்தியில் அப்போது வெளிவந்த ஹம் கிஸிஸே ஹம் நஹி படத்திற்குப்  போட்டியாகவே பாலச்சந்தர் இந்தப் படத்தை எடுத்தார் என்று அப்போது ஒரு பேச்சு எழுந்தது. இதை உறுதி செய்வதுபோல அப்படத்தின் மில்கயா பாடலின் சாயலைக் கொண்டது சோகமான  சயோனரா வேஷம் கலைந்தது என்ற பாடல். இதை எம் எஸ் வி தவிர்த்திருக்கலாம் என்ற எண்ணம் எனக்குண்டு. இதே பாடலின் துடிப்பான வடிவம்தான்   வானிலே மேடை அமைந்தது. கேட்டபோது என்னைத் திடுக்கிட வைத்த  ஒரு வரி இதிலுண்டு. அது ஆகாயத்தில் பூகம்பம் அற்புதங்கள் ஆரம்பம்.

கசெட்டுகளிலும் இசைத் தட்டுகளிலும் இடம் பெறாத பாடல் தட்டிக் கேட்க ஆளில்லைன்னா. இது ஒரு வேடிக்கைப் பாடல். படத்தில் ரஜினிகாந்த் சில ஆசாமிகளை அடித்துக்கொண்டே பாடுவதுபோல வரும். என் நண்பன் ஒருவன் (ரஜினி ரசிகன்) இந்தப் பாடலே அற்புதம் என்று சொல்லி என்னை கலங்கடித்தான்.

இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஒலிக்கும் நானநனாநனனா நன நனனா நன நனனா (நினைத்தாலே இனிக்கும்)  ஒரு சம்பிரதாயமான பாடல் போன்றில்லாமல் வெறும் ராக ஆலாபனைகள் மட்டுமே கொண்டது. இதை ஒரு புதிய முயற்சி என்ற சொல்லலாம். அல்லது இசைப் புரட்சி என்றும் கொள்ளலாம். (நீ பாதி நான் பாதி படத்தின் நிவேதா பாடல் போன்று.) ஒருவேளை எம் எஸ் வி என்பதால் இதை இசைப் புரட்சி என வர்ணிக்க சிலருக்கு தோன்றவில்லை போலும். அருமையான இசை பொங்கும் பாடல்.

What a waiting (காத்திருந்தேன் காத்திருந்தேன் காதல் மனம் நோகும்வரை) கசெட்டில் இல்லாதது. தற்போது இணையத்தில் கண்டெடுத்தேன். என்ன ஒரு மகத்துவமான இசை! இப்பாடலில் ஒலிக்கும் கிடுகிடுவென ஓடும் கிடார் இசை மிகவும் இனிமையாது.  கேட்பதற்கு அலாதியானது.  எம் எஸ் வி கிடார் இசை தனித்துத் தெரியும் பாடல்கள் எதுவும் படைக்கவில்லை  என்று நம்பும் சிலர் இந்தப் பாடலைக்  கேட்டிருக்க வாய்ப்பில்லை போலும். (கேட்டிருந்தாலும் அவர்களின் முடிவுகள் மாறப்போவதில்லை.) நான் மிகவும் ரசிக்கும் பாடல். பாடலை முழுதும் உள்வாங்கும் முன் சட்டென்று முடிந்துவிடுகிறது. அதுவே நம்மை இன்னும் கொஞ்சம் என ஏங்க வைக்கிறது.

You are like a fountain, your life is so uncertain  இசைத் தட்டில் இருந்ததா என்று தெரியவில்லை. இதுவும் இணையத்தில் கிடைகிறது. இசைக் குழு என்பது மேற்கத்திய பாணி என்பதால் சில நிர்ப்பந்தங்கள் இவ்வாறான பாடல்கள்  மீது விழுகின்றன. இப்பாடல்  நம்மீது ஊர்ந்து செல்லும் ஒரு துயரத்தின் தடம்.

     நினைத்தாலே இனிக்கும் படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை என்ற கருத்து இருக்கிறது. இந்தப் படமே கமல்-ரஜினி இருவரும் இணைந்து நடித்த கடைசிப் படம். இதன் பின் அவர்கள் வேறு பாதைகளில் பயணித்தது, அவர்கள் பெற்ற வெற்றிகள் எல்லாமே எழுதப்பட்ட வரலாறுகள். நானோ இந்தப் படத்தின் பாடல்களை குறித்தே பேசுகிறவன்.  அடுத்து நான் எழுதப் போவது சிலருக்கு கடுமையான கோபத்தை கொடுக்கலாம். இருந்தாலும் படிப்பது நலம். படிப்பதை தவிர்ப்பது அதைவிட நலம்.   நினைத்தாலே இனிக்கும், பிரியா என்ற இரண்டு படங்களுக்கும்  நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றுணர்கிறேன். நினைத்தாலே இனிக்கும்  படத்தில் எம் எஸ் வி இசைத்த பாடல்கள் பெற்ற இமாலய வெற்றி அப்போது வளர்ந்து கொண்டிருந்த   புதிய இசை அமைப்பாளர் ஒருவருக்கு கடும் சிரமத்தை கொடுத்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இந்தப் படம்  வந்த அடுத்த ஆண்டில் வந்த படம்தான் பிரியா. இதுவும் சிங்கப்பூரிலேயே முழுதும் படமாக்கப்பட்டது. எம் எஸ் வி யின் சிவந்த மண், உலகம் சுற்றும் வாலிபன், நினைத்தாலே இனிக்கும் படங்களின் (இவைகள் எல்லாமே வெளிநாடுகளில் படமாக்கப்பட்டவை.) நெருங்க முடியாத இசை அமைப்பை எதிர் கொள்ள இயலாத  அல்லது  பிரியா படத்தின் பாடல்கள் என்ன தரத்தில்  இருக்கும் என்பதை நன்கு அறிந்தவர்கள் எம் எஸ் வியின் இந்த இசை மேன்மையை பை பாஸ் செய்ய  கண்டுபிடித்த ஒரு புதிய தந்திரம்தான்  ஸ்டீரியோ போனிக் சவுண்ட் என்ற அந்த  அலங்கார வெளிப்பூச்சு.  உண்மையில் ஸ்டீரியோ ரெகார்டிங் நம் தமிழில் ஏன் ப்ரியா என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்படவேண்டும் என்று எண்ணிப்பார்த்தீர்களேயானால் நான் சொல்லும் அனுமானம் உங்களுக்கு ஒரு புதிராகவே இருக்காது. வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட படங்களின் இசையின் தரத்தை தீர்மானிக்கும் அந்த அளவுகோல்  எழுபதுகளில் ஒருவரிடமே இருந்தது. அது எம் எஸ் வி மட்டுமே .  இவரது இசையில் சிவந்த மண் 69 இல் வந்து அதன்  பாடல்கள் பெருத்த வரவேற்பைப் பெற்றன.  உலகம் சுற்றும் வாலிபன் 73இல் வந்தது. அதன் பாடல்கள் பெற்ற வெற்றி அழிக்க முடியாத வரலாறு.  இதன் தொடர்ச்சியாக  79 இல்  வந்த நினைத்தாலே இனிக்கும் படப்பாடல்கள் எத்தனை ஆழமாக ரசிகர்களைப் பாதித்தன என்பதையும் இங்கே விளக்கத் தேவையில்லை. எம் எஸ் வியின் மகத்தான இசைவீச்சை   கண்கூடாகக் கண்டதன் எதிர்வினையே (அச்சம்?) ப்ரியா படத்தில்    ஸ்டீரியோ போனிக் சவுண்ட் என்ற புதிய தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்ய வேண்டிய நிர்பந்தத்தை பிரியா படக் குழுவினருக்கு ஏற்படுத்தியிருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.  இந்தப்  புதிய தொழில் நுட்பம் அப்போது மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. தவிர அதுவே பாடல்களின் வெற்றிக்கு ஒரு  முக்கிய காரணியாகவும் இருந்தது. இந்த ஸ்டீரியோ என்ற பகட்டுப் பூச்சு ரசிகர்களை அதன் பாடல்களை அதற்கு முன் வந்த made in a foreign land வகைப் படப் பாடல்களோடு ஒப்பீடு செய்வதை ஓரம் கட்ட  உதவியது  என்றே நினைக்கிறேன்.  நீங்கள் எந்தவித முடிவுகளுமின்றி ப்ரியா படப் பாடல்களை ஸ்டீரியோ என்ற ஜோடனை  இல்லாமல் கேட்டீர்களேயானால் அந்தப் பாடல்கள் வெகு சாதாரணமானவை என்பதை உணர்வீர்கள். இந்த ஸ்டீரியோ முத்திரை இல்லாவிட்டால் அவை அனைத்துமே இன்னுமொரு இளையராஜா ஓசைகள்தான். Just mundane as they always are.

         நூல்வேலி(79)-பாலச்சந்தர் படங்களின் மற்றொரு சிறப்பு தன் படங்களில் அவர் சூட்டும் படத்தலைப்புகள். தமிழில் வெகு சில இயக்குனர்களே படத் தலைப்புகளில் சிரத்தை எடுத்துகொள்கிறார்கள் என்பது என் எண்ணம். தமிழ் படத் தலைப்புகள் பற்றி ஒரு தீவிர ஆய்வு செய்யப்படும் பட்சத்தில் நாம் பாலச்சந்தரின் தரத்தை அறியலாம். நூல்வேலி என்ற தலைப்பே வியக்கவைக்கிறது. கர்நாடக இசையின்  மிகப் பெரிய ஆளுமையான  பாலமுரளி கிருஷ்ணா பாடிய மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே மனதைத்  தீண்டும் அற்புதப் பாடல்.  முன்பு நான் தவிர்த்து இப்போது விரும்பும் பாடல்.அடுத்தது  நான் மிகவும் ரசிக்கும் நானா பாடுவது நானா நானும் இளவயது மானா என்ற மெல்லிசையின் முத்தாய்ப்பு. இதில் இசைக்கப்படும் தாளம் நமக்குள் ஒரு கொண்டாட்ட உணர்வைத்  தரும்.  பாடலின் பல்லவியே ஒரு தென்றலின் தீண்டல். பாடல் நகர்ந்து  சரணத்தை அடையும்போது  ஒரு இசைச் சோலைக்குள் நுழைந்த  அனுபவம் கிடைக்கிறது. இதன் சுவையே அலாதியானது. அழகை அழகாய் பாடுவதில்தான் எத்தனை அழகு இருக்கிறது.

   வறுமையின் நிறம் சிவப்பு(80)- சிலோன் வானொலியின் இசைச் சித்திரம் நிகழ்ச்சியில் பல வாரங்கள் முதலிடத்தில் இருந்த நிழல்களின் இது ஒரு பொன் பொழுது பாடலை வீழ்த்தியது  சிப்பி இருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி பாடல். (நான் இதை முதன் முதலில் கேட்டது இந்த சந்தர்ப்பத்தில்தான் என்பதால் இதைச் சொல்கிறேனே தவிர இந்த இரண்டு அருமையான கானங்களையும் ஒப்பீடு செய்வதற்காக அல்ல.) அதற்காகவே அப்போது நான் இந்தப் பாடலை வெறுத்தேன். இசையே இல்லாத பாடலிது என்று பகடி செய்வேன். ஆனால் கல்லூரி காலத்தில் இதைக் கேட்டபோது இதன் பரிமாணம் என்னவென்று புரிந்தது.  எம் எஸ் வி தன் விரல்களில் பாதுகாத்து வைத்திருக்கும் ராக ரகசியங்கள் மற்றும் இசை தேர்ச்சி இந்தப் பாடலில் சட்டென்று ஒரு பறவை போல சிறகை விரித்து உயரே பறக்கிறது.  எத்தனை நளினமான பாடல் இது. வழக்கம்போலவே இசைக்கும் கவிதைக்கும் இடையே நடக்கும் ராக யுத்தம் இது என்று சொல்லலாம். பாடலின் இறுதியில்  சிப்பியிருக்கு முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது என்று இந்த இசையுத்தம் காதல் முத்தத்தில் முடியும்போது ஒரு முழு நாவலைப்  படித்த திருப்தி உண்டாகும்.  இப்படி ஒரு சூழலை கற்பனை செய்த பாலச்சந்தரை ஒரு வரியாவது பாராட்டவேண்டும் என்று தோன்றுகிறது. ஆர்ப்பாட்டமில்லாத மென்மையான இசையும் கொஞ்சும் கவிதையும் வசீகரமான குரல்களும் இதை புதிய உச்சங்களுக்கு எடுத்துச் செல்கின்றன.இன்றைக்கு இந்தப் பாடலை கேட்க நேரும் ஒவ்வொரு சமயத்திலும் இதை முழுவதும் கேட்கத் தவறுவதில்லை.  பாட்டு ஒன்னு பாடு தம்பி பசிய கொஞ்சம் மறந்திருப்போம் ஒரு அடாவடிப் பாடல். ஆனாலும் கன்னாபின்னாவென்று பாடலைக் கடித்துக் குதறும் கடுமையான கவிதை இதில் இல்லை.  நல்லதோர்  வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ  பாடல் தமிழ்த் திரையில் இசைக்கப்பட்ட பாரதியார் பாடல்களில்  முக்கியமானது. மிகத் தரமாக உருவாக்கப்பட்ட பாடல். பலரின் ரசிப்புக்கு உணவானது. ஆனாலும்  நாம் சில நல்ல பாடல்களை சாலையோரத்தில் வீசிவிட்டோம் என்ற உணர்வு இதைக் கேட்கும்போது எனக்கு வருவதுண்டு.

    தில்லு முல்லு(81)- இளையராஜா உச்சத்தை நோக்கி சரசரவென்று நகர்ந்துகொண்டிருந்த வேளையில் வந்ததால் எனக்கு அப்போது இப் படத்தின் பாடல்கள் மீது பிடிப்பு அவ்வளவாக இல்லாமல் இருந்தது. எல்லோரையும் போல என் சமகாலத்து இசையை ரசித்துக்கொண்டிருந்த நான் அதன் மோகம் வடிந்த பின்  ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா  என்ற பாடலைக் கேட்டதும் என் இசை ரசனை என்னை பரிகாசம் செய்தது. கும் கும் என்று டப்பாங்குத்து தாளத்தை வைத்துக்கொண்டு பாடல் என்ற பெயரில் பேயாட்டம் போட்டு வக்கிரமான இசை பாணியை உருவாக்கிய  சில நாலாந்தர இசை அமைப்பாளர்கள் மத்தியில்  நம் மரபிசையின் வேர்களான சாஸ்திரிய ராகங்களை அதன் அழகு குலையாமல் அதன் வேருடன் மெல்லிசை கலந்து பாடல்கள் படைத்த ஒரு மகா இசைஞனின் மேதமையை நாம் எவ்வளவு எளிதாக "அறுவை" என்று நினைத்திருந்தோம் என்று வருந்தினேன். ஆஹா! ராகங்கள் பதினாறு என்று எஸ் பி பி துவங்கும்போதே நமக்கு  மேகத்தை முத்தமிடும் உணர்வு வருகிறது. கேட்டதும் பாடத் தோன்றும் இசையையே நான் கானம் என்பேன். இது அதுபோன்றொரு கானம்தான். எத்தனை அழகாக இந்தப் பாடல் ராகத்தின் மீது நழுவிச் செல்கிறது! தில்லுமுல்லு தில்லுமுல்லு உள்ளமெல்லாம் கல்லுமுள்ளு என்ற பாடல் ஒரு சுகவாசியின் துள்ளல் பாடல். ஒரு இளைஞனின் கட்டுப்பாடில்லாத மனநிலையை பாடலாக்கும்போது அதில்  இருக்கும் சில இச்சைகளை நீக்கிவிட்டால் நமக்குக் கிடைப்பது ஒரு தரமான பாடல் இது போன்று. இல்லாவிட்டால் வாடி என் கப்பக் கிழங்கே போன்ற விடலைகளின்  அடாவடி அபத்தங்களும் காது கொடுத்து கேட்கமுடியாத கருமாந்திரங்களும்தான் அகப்படும்.

    47 நாட்கள்(81)- சில சமயங்களில் வீதிகளில் ஆர்ப்பாட்டமாக வரும் ஊர்வலங்களை பிரம்பிப்புடன் பார்க்கும் நாம்  அருகேயிருக்கும் வண்ண மலர்களை கவனிக்கத் தவறிவிடுகிறோம். அது போன்றதொரு மறக்கப்பட்ட கவிதை போல  அதிகம் பேரை சென்றடையாத அருமையான பாடல் இந்தப் படத்தில் இருக்கிறது அது மான் கண்ட சொர்கங்கள் காலம் போகப் போக  யாவும் வெட்கங்களே என்ற  பாடல். எட்டு நிமிடங்கள் நீடிக்கும் இந்தப் பாடல் படத்தில் இடையிடையே ஒலிக்கும். வானொலிகளில் எப்போதாவது ஒலிபரப்புவார்கள். அந்நிய சூழலில் சிக்கிக்கொண்ட ஒரு தமிழ்ப் பெண்ணின் சூறாவளி மன உணர்வுகளை ஒரு ஆணின் குரல் கொண்டு பாடும் அற்புதப் பாடல் இது.  எம் எஸ்  வி யின் மாறுபட்ட இசை வர்ணத்தை இதில் நாம் கேட்கலாம். இதன் இடையிசையும் வாத்தியங்களின் இனிமையான பவனியும், பொருள் புதைந்த கவிதை வரிகளும், எஸ் பி பியின் பால் நிலவுக் குரலும் கேட்பவரை மெய்மறக்கச் செய்துவிடுகின்றன. 81இல் இளையராஜாவின் காட்டாற்று வேகத்தில்  அடித்துச் செல்லப்பட்ட  பல வைர கீதங்களில் இதுவும் ஒன்று.

    அக்னி சாட்சி(82)- மனநோய் பீடித்த மனைவியை குழந்தை போல பாவிக்கும்  கணவனின் துயரத்  தாலாட்டு  கனா காணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல என்ற பாடல். எம் எஸ் வியின் இசை சோகத்தின் சாறை பிழிந்து பாடலுக்குள் ஊற்ற  மனதுக்குள் அந்தத் துயரத்தின் துளிகள்  சொட்டு சொட்டாக இறங்குவதையும்  கண்ணீரின் ஓசை எதிரொலிப்பதையும்   கேட்கலாம். பாடலின் இடையே நடிகை சரிதாவும் கவிதை வரிகளை பாடி(!) இருப்பது இந்தப் பாடலின் இருக்கும் வித்தியாசம். ஆழமான கானம். எம் எஸ் வி என்ற அற்புதக் கலைஞனின் இசை  நமக்கு கொடுத்த கணக்கற்ற காவியப் பாடல்களில் இதுவும் ஒன்று.

      இந்த இசைக் கூட்டணியில் விடுபட்ட சில படங்கள் இருக்கின்றன. மேலும் இந்த காலகட்டத்தில் எம் எஸ் வி மற்ற பல படங்களுக்கும் தன் சிறப்பான இசையை கொடுக்கத் தவறவில்லை. இதன் அடர்த்தி கருதி தொடரும் பதிவில் அவற்றை ஆராயலாம் என நினைக்கிறேன்.  ஒரு சார்பாக கட்டமைக்கப்பட்ட புனைவை  உடைப்பதோ  அல்லது மூளைச் சலவை செய்யப்பட்ட சிலரின்  கருத்துக்களை மாற்றி அமைப்பதோ என் எண்ணமில்லை. அது சாத்தியமுமில்லை.  நான் சில தேன் கூடுகளை மட்டுமே உங்களுக்கு அடையாளம் காட்டுகிறேன்.  அதன் தேன் துளிகளை ருசிப்பது உங்களின்  விருப்பம். ஆனாலும் இறுதியாக எழும் ஒரு   கேள்வி இதுதான் : இசையை சுவைக்க நமக்கு என்ன தடை இருக்கிறது?
 


அடுத்து: இசை விரும்பிகள் XXI -- எழுபதுகள்: அலங்காரம் கலையாத அழகு.