Saturday, 12 July 2014

இசை விரும்பிகள் XIX - எழுபதுகள்: ஏகாந்தக் காற்று      70 களில் நமது திரையிசை ஜி ராமநாதன், கே.வி மகாதேவன்,விஸ்வநாதன்-ராமமூர்த்தி போன்ற  மகத்தான இசைச்  சுழலின் ஆதிக்கத்தை விட்டு வெளியேறி ஒரு நவீன இசை பாரம்பரியத்தை படைக்கத் துவங்கியிருந்தது. இது நமது மரபிசையின் தொடர்ச்சியாகவும்  அதே சமயத்தில் ஒரு நவீனத்தின் துவக்கமாகவும் இருந்தது. அதாவது பச்சையிலிருந்து நிறம் மாறி  மஞ்சள் வண்ணம் தோன்றும் விதமாக   நளினமான, இயல்பான முரண்பாடில்லாத மாற்றமாக  இருந்தது. அறுபதுகளின் வசந்தம் ஓய்ந்து விட்டது  என்றாலும் After glow எனப்படும் இன்பத்தின் அனுபவத்தை அது முடிந்தபின் நாம் அசைபோடும் ஒரு ஏகாந்தத்தின் நீட்சியாகவே  எழுபதுகள் இருந்தன. 

                                     

                   எழுபதுகள்:  ஏகாந்தக் காற்று
 
       பொதுவாக தமிழ்த் திரையிசை விவாதிப்பவர்களில்   அல்லது அதைப் பற்றி எழுதுபவர்களில் பலர்  தமிழின் காவிய கானங்களைப் பற்றிச் சொல்லும் வேளையில் ஆனந்த ஐம்பதுகளையும்  அற்புதமான அறுபதுகளையும் சிலாகித்து தென்றலாக வீசிய எழுபதுகளின் மீது மவுன அஞ்சலி செலுத்துவார்கள். நல்ல இசையின்றி நம் தமிழ் சமூகம் ஒரு ஐந்து வருடங்கள் இருந்தது என்ற எண்ணத்தை விதைக்கும் இந்த மவுனம் ஒரு வழக்கமான பிழை. காலத்தால் அழியாத பல இனிமையான காவியப் பாடல்களை நாம் வேற்றுமையின்றி ரசித்தாலும் எம்ஜியார், சிவாஜி, ஜெமினி, எம் எஸ் வி, கே வி மகாதேவன், ஜி ராமநாதன்,பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம், கண்ணதாசன்,வாலி  பாடல்கள் என்று பெயரிட்டு அவைகளை நாம் அலங்கரித்து அகமகிழ்ந்தாலும் எழுபதுகளின் தாலாட்டும்     சுகமான கீதங்களை வழங்கிய பல இசை மேதைகளின் சாதனைகளை giant leap போல தாண்டிச் செல்வது  என்னைப் பொருத்தவரை ஒரு  முரண்பாடான இசை ரசனை . சரியான தகவல்களில்லாத ஒரு இருண்ட பிம்மமும்,  இருந்ததை உள்ளதுபடியே பிரதியெடுக்காத   பொய்த்  தோற்றமும், சாதனைகளை வசதியாக மறந்துவிடக்கூடிய நமது பண்பாடற்ற அணுகுமுறையும் எழுபதுகளை ஒரு களப்பிரர் காலம் போல உருமாற்றிவிட்டன.

       ஆனால் உண்மையிலேயே எழுபதுகளின் திரை இசைப் பாடல்கள் எவ்வாறு இருந்தன என்று சற்று ஆராய்ந்தோமானால் நமக்கு வியப்பே  ஏற்படுகிறது. 70 -75 காலகட்டங்களை ஒரு வித சில்லறைத்தனமான அலட்சியத்துடன் பார்க்கும் அந்தப் பொது பிம்பம் உடைபடுகிறது.  ஏனென்றால் நிஜத்தில் இவ்வாறன  பொய்யுரைகளை பொடிப் பொடியாகும் பொன்னான பாடல்கள் எழுபதுகளை வழி நடத்திச் சென்றிருக்கின்றன என்று நாம் அறிகிறோம்.  ஒன்றா இரண்டா? கணக்கில்லாமல் ஏகத்துக்கு ஏராளமான பாடல்கள் எழுபதுகளின் இசை பாணியை மிக நளினமாக செதுக்கி நமது இசைப் பாரம்பரியத்தின் நீட்சியை வேரற்றுப் போகவிடாமல் பாதுகாத்து வந்திருக்கின்றன. மழை ஓய்ந்ததும் காற்றில் பரவி நம் மனதை நிரப்பும்  மண் வாசனை போல் இவை நம்மை தொடர்ந்து பரவசப்படுத்தி வந்திருக்கின்றன. அறுபதுகளின் அந்த ஆனந்தத்  தொடுகை தொலைந்து போகவில்லை மாறாக  தொடர்ந்தது. இதோ ஓய்ந்துவிட்டார் என்று எண்ணப்பட்ட எம் எஸ் வி எழுபதுகளை அனாசயமாக ஆட்சி செய்தார். ஒரு புதிய இசை வடிவத்தை நோக்கி நகர்ந்த  நம் தமிழ்த் திரையிசை எழுபதுகளில் மரபும் நவீனமும் ஒருங்கே கலந்த ஒரு ஆச்சர்ய அவதாரம் எடுத்தது. இந்த அரிதாரத்தின் வண்ணங்கள் அபாரமானவை. அற்புதத்தின் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்தது.

    கொஞ்சம் 1970இல் வந்த சில படங்களின் மறக்கமுடியாத பாடல்களை மீண்டும் நினைவுக்கு கொண்டுவருவோம். பட்டியலைப் படித்ததும் மேகத்தை அனைத்துக் கொண்ட உணர்வு உங்களுக்கு உண்டானால் எனக்கு மகிழ்ச்சியே.

எங்க மாமா- செல்லக் கிளிகளாம் பள்ளியிலே, என்னங்க சொல்லுங்க, எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்,(குறிப்பாக எல்லா பாடல்களுமே சிறப்பானவையே)
சி ஐ டி ஷங்கர்- நாணத்தாலே கண்கள் மெல்ல மெல்ல,
நவகிரகம்- உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது.
ராமன் எத்தனை ராமனடி- அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு.(எங்கேயோ நம்மை  அழைத்துச் செல்லும் கானம். இதிலுள்ள இன்னொரு காவியப் பாடலைப் பற்றி பிறகு ஒரு பத்தி வருகிறது.)
எங்கிருந்தோ வந்தாள்- நான் உன்னை அழைக்கவில்லை, ஒரே பாடல் ,
கண்ணன் வருவான்- பூவிலும் மெல்லிய பூங்கொடி.(மெல்லிசையின் மென்மையை இதுபோல அனுபவித்துச் சொன்ன பாடல்கள் வெகு குறைவே.)
மாணவன்- கல்யாண ராமனுக்கும், (சங்கர் கணேஷின் இசையில் டி எம் எஸின் குரலுக்கு பொருத்தமில்லாத கமலஹாசன்   குதித்து ஆடிப் பாடும் விசிலடிச்சான் குஞ்சுகளா என்ற பாடல் இதில் இருக்கிறது. இதுவே வெகு வருடங்கள் கழித்து வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்று பிரதி எடுக்கப்பட்டது.)
சொர்க்கம்- பொன் மகள் வந்தாள் (எ ஆர் ரஹ்மானின் ரீமிக்ஸ் இதன் அருகே சற்றும் நெருங்க முடியாது.), ஒரு முத்தாரத்தில் முப்பது முத்துக்கள், சொல்லாதே யாரும் கேட்டால்.
வியட்நாம் வீடு- உன் கண்ணில் நீர் வழிந்தால்,
வீட்டுக்கு வீடு- அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம், அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ,( அற்புதமான பாடல். 70களின் துவக்கத்தில் கல்லூரி விடுதிகளில் அதிகம் விரும்பப்பட்ட அல்லது பாடப்பட்ட பாடல் இது என்று என் உறவினர் ஒருவர் சொல்லக்கேள்வி. சாய்பாபா என்ற எம் எஸ் வி யின் குழுவில் இருந்த ஒரு கிடாரிஸ்ட் பாடிய பாடல்.இதை ஒரு நகைச்சுவைப் பாடல் என்று கருதி பலர் கடந்து செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஒரு முறை கேட்டுத்தான் பாருங்களேன்.)

      மேற்கண்ட பாடல்கள் just the tip of the iceberg வகையே. இன்னும் ஏராளமிருக்கின்றன. 71, 72 என்று ஆண்டு வாரியாக  பட்டியலிட ஆரம்பித்தால் எழுபதுகள் பற்றிய நம்முடைய  முட்டாள்தனமான கண்ணோட்டத்தை நாம் மாற்றிக்கொள்வோம்- நிச்சயமாகவே.

       எழுபதுகளின் மத்தி வரை எம் ஜி ஆர், சிவாஜி என்ற இரண்டு மகா ஆளுமைகளின் ஆதிக்கம் குறைந்தபாடில்லை. இவர்களைச் சுற்றியே திரையுலகம் பெரும்பாலுமிருந்தது. இவர்களின் இரண்டு குறிப்பிட்ட படங்கள் எழுபதுகளின் குரல்களாக ஒலித்தன. முதலாவது  72இல் கே வி மகாதேவனின் இசையில் வந்த சிவாஜியின் வசந்த மாளிகை. அதன் பாடல்கள் பெருத்த வெற்றியைப் பெற்றன என்று சொல்வது ஒரு மிக சாதாரண வாக்கியமாக இருக்கும். நான் 77,78ஆம்  ஆண்டுகளில் கூட அப்பாடல்களை மிக சத்தமாக ஒலிபெருக்கிகளில் தொடர்ந்து கேட்டதுண்டு- நிறைய அலுப்புடன். எல்லா பாடல்களும் மக்களால் ரசிக்கப் பட்டாலும் தனிப் பட்டவிததில் கலைமகள் கைப் பொருளே உன்னை கவனிக்க ஆளில்லையோ  பாடலை இப்போது நான் அதிகம் ரசிக்கிறேன். இரண்டாவது  73இல் அரசியல் தலையீட்டால் தட்டுத் தடுமாறி வெளிவந்து பின் ஒரு புலியின் வேகத்துடன் தமிழகம் முழுதும் பாய்ந்த எம் எஸ் விஸ்வநாதனின் இசையில் வந்த எம் ஜி ஆரின் உலகம் சுற்றும் வாலிபன். இதன் பாடல்கள்  பட்டி தொட்டி மூலை முடுக்கெங்கிலும் படையெடுத்து மக்களை பரவசப்படுத்தின. என்ன பாடல்கள்! எம் எஸ் வி யின் இசை வாழ்வில் இது ஒரு மைல் கல் என்று தயக்கமில்லாமல் சொல்லலாம். அவளொரு நவசர நாடகம், லில்லி மலருக்கு கொண்டாட்டம், சிரித்து வாழ வேண்டும், பச்சைக் கிளி முத்துச்சரம், பன்சாயீ, உலகம் உலகம் அழகு கலைகளின் சுரங்கம், தங்கத் தோனியிலே தவழும் பெண்ணழகே, நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ எதை சேர்ப்பது எதை விடுவது? படத்தின் பாடல்கள் மட்டுமில்லாது பின்னணி இசையும் ஒரு வசீகரம்தான். இதற்கு முன்னரே தமிழில் முதன்முறையாக வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட சிவந்தமண் படத்திலும் எம் எஸ் வி மிகச் சிறப்பான இசை அமைத்திருந்ததை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

     இங்கே கொஞ்சம் நின்றுவிட்டு அப்போது இடைவிடாது ஒலித்த மற்ற சில பிரபலமடைந்த பாடல்களைப் பார்ப்போம்.

கடலோரம் வாங்கிய காற்று புதிதாக இருந்தது நேற்று, அழகிய தமிழ் மகள் இவள் - ரிக்ஷாக்காரன்.
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போல-நினைத்ததை முடிப்பவன்.
திருவளர்ச்  செல்வியோ நான் தேடிய தலைவியோ, நல்லது கண்ணே கனவு கனிந்தது நன்றி உனக்கு- ராமன் தேடிய சீதை.
காதல் என்பது காவியமானால் காதாநாயகி வேண்டும், நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது, நாளை நமதே, அன்பு நானொரு மேடைப் பாடகன், என்னை விட்டால் யாருமில்லை - நாளை நமதே.
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே, -உரிமைக்குரல்.
நேரம் பௌர்னமி நேரம்- மீனவ நண்பன்.
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை, அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ, பாடும் போது நான் தென்றல் காற்று - நேற்று இன்று நாளை. (எல்லா பாடல்களும் தேன்சுவை வழியும் மெல்லிசை கீதங்கள்)
ஒன்றே குலமென்று பாடுவோம், போய்  வா நதி அலையே - பல்லாண்டு வாழ்க. கே வி எம்.
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் - சிரித்து வாழ வேண்டும்.
யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே,  நீயும் நானுமா கண்ணா, மெழுகுவர்த்தி எரிகின்றது- கெளரவம்.
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ கண்ணா, மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று -அவன்தான் மனிதன். உள்ளதை உருக்கும் இந்த தத்துவப்  பாடலை   என் கல்லூரி நாட்களில் கேட்டபோது பாடலின் ஊடே ஓடும் துயர ரேகையும் வாழ்ந்து வீழ்ந்த மனிதனின் வேதனைச் சுவடுகளும் என்  மனதை கலைத்தன.
       தந்தை தவறு செய்தான்.
      தாயும் இடம் கொடுத்தாள் 
     வந்து பிறந்துவிட்டோம் 
     வெறும் பந்தம் வளர்த்து விட்டோம் 
  என்ற வரிகள் என்னுள் மின்னல் போல இறங்கின. முன்பு எப்போதோ வானொலியில் கேட்ட இப்  பாடலை தொன்னூறுகளில் ஞாபகமாக பதிவு செய்து கேட்குமளவுக்கு என் மன ஆழத்தில் இது துடித்துக் கொண்டிருந்தது.  70களின் ஏகாந்ததைச் சொல்ல இது ஒரு சிறிய துணுக்கு என்றே எண்ணுகிறேன். இன்னும் எத்தனை இருக்கின்றன ஆராய்வதற்கு.

      கீழே உள்ளவைகள்  நம் பொது சிந்தனையில் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ள சில அபாரமாக  புனையப்பட்ட அபத்தங்கள்.

எழுபதுகள் மத்தி வரை தமிழர்கள்   தமிழ்ப் பாடல்களையே கேட்கவில்லை.
ஏனெனில் அப்போது எந்தவிதமான சிறப்பான பாடல்களுமே நம்மிடம் உருவாக்கப்படவில்லை.
இதனால் தமிழர்கள் ஹிந்தி கானங்களை  வீதிக்கு வீதி வீட்டுக்கு வீடு கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
அன்னக்கிளி படத்திற்குப் பிறகே தமிழ் திரையிசை பொலிவடைந்தது.
அதன் பின்னரே  நாம் தமிழ்ப் பாடல்களை கேட்க ஆரம்பித்தோம்.

     இதில் சிலவற்றில் கொஞ்சமாக உண்மைகள்  இல்லாமலில்லை. அந்நியக் காற்று என்ற  ஹிந்தி இசை பற்றிய என் பதிவில் இந்த மையப் புள்ளியை  நான் சற்று தொட்டிருக்கிறேன்.(விரிவாக என்று சொல்லமாட்டேன்.) தங்களுக்குப் பிடித்த ஒரு குறிப்பிட்ட இசை அமைப்பாளரை முன் நிறுத்த வேண்டிய ஒரு  இல்லாத அவசியத்தின் மீது கட்டப்பட்டு  உண்மைக்கு எதிராக வெடித்த புனைவுகள் மேற்கூறப்பட்டவைகள். இந்த கருப்பு வண்ணம் நமது எழுபதுகளை வெளிச்சத்திற்கு வருவதிலிருந்து தடுக்கிறது என்பது என் எண்ணம்.  எழுபதுகளின் மீது படர்ந்திருக்கும் இந்தத்  தூசிகளை துடைத்துவிட்டு நோக்கினால் நமக்குக் கிடைக்கும் பிம்பம் வேறு கதையை நமக்குச் சொல்கிறது.

       பல பாடல்களைக் குறித்து இங்கே பேசினாலும் சில மறையாத கானங்களைப் பற்றி சற்று அதிகம் ஆராய்வது  அவசியமாகிறது. உதாரணமாக சுசீலாவின் அற்புதக் குரலில் நான் என் சிறு வயதில்  ஒரு இளந்தென்றல் காற்று   உரசிய உணர்வைக் கொடுத்த பாடல் ஒன்றைக்  கேட்டிருக்கிறேன். எழுபதுகளில் எல்லா வானொலி அலைவரிசைகளிலும் ஒய்யாரமாக நடைபயின்றது   அப்பாடல். அந்தப் பாடலை  நான் குறிப்பிட்டால் பலரும்   சட்டென்று "அடடா ஆமாம். இந்தப்  பாடலுக்கு இணையே இல்லை." என்று சொல்லி என்று என் கருத்தை வழிமொழிவார்கள் . இத்தனை அழுத்தமாக நான் குறிப்பிடுவது  ராமன் எத்தனை ராமனடி (1970) என்ற படத்தின்  "சித்திரை மாதம் பவுர்ணமி நேரம் முத்துரதங்கள் ஊர்வலம் போகும்" என்ற பாடலே. இந்தப் பாடலில்தான் எத்தனை விதமான ராக வளைவுகள் தோன்றி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன! பாடலின் அற்புதமான இசையமைப்பை தன் குரலினால் சுசீலா ஏறக்குறைய பின்னுக்கு தள்ளிவிடுகிறார். பாடலின் பிண்ணனியில் தொடர்ச்சியாக ஒலிக்கும் ரயில் ஓசையும், அற்புதமான இடையிசையும் எவ்வளவு நவீனமாக இருக்கின்றன என்ற ஆச்சர்யத்தைத் தருகின்றன. தேரில் வந்த ராஜ ராஜன் என் பக்கம் என்ற வரிகளைத் தொடர்ந்து வரும் தட தடக்கும் இடையிசையின் துவக்கம் ஒரு அற்புதமான மேற்கத்திய கலப்பு. கண்ணதாசனின் கவிச் சுவை கொண்ட வரிகளும், சிவாஜி என்ற அபார நடிகனின் இணையில்லாத முகபாவணைகளும், எம் எஸ் வி என்ற இசைச் சிகரத்தின் சிலிர்ப்பான இசையும், பி சுசீலா என்ற இசை இன்பமும்  இந்தப்பாடலை ஒரு விண்ணிலிருந்து வந்த கானமாக மாற்றிவிடுகின்றன. மேற்கத்திய இணைப்பை தமிழில் "இவர்தான்" செய்தார் என்று கூப்பாடு போடும் கூட்டத்தாருக்கு இந்தப் பாடல் மட்டுமல்ல இதைப் போன்ற பல எம் எஸ் வி யின் கானங்கள் கசக்கவே செய்யும்.

   பள்ளிநாட்களில் அப்போது பிரபலமாக ஒலித்துக்கொண்டிருந்த இனிமை குன்றிய  தரமில்லாத சில பாடல்களை நான் விரும்பிக்கேட்ட தினங்களில் எங்கள் வீட்டில் இசை விவாதங்களுக்கு குறைவே இருக்காது. நான் எனது வயதின் இயல்பான ஈர்ப்பின்படி  புதிய பாடல்களை பாதுகாத்துப்  பேச, என் சகோதரிகள்  பழைய பாடல்களின் இனிமையை ஏற்றுக்கொள்ளாத என் மனதில் திணித்திருக்கிறார்கள்.   அப்போது அவர்கள் மேற்கோள் காட்டி சொன்ன ஒரு பாடல் இந்த சித்திரை மாதம் பாடல். பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஒரு எதிர்பாராத தருணத்தில் இப்பாடலை கேட்க நேர்ந்த போது எம் எஸ் வி போன்ற இசை மேதைகள் நமக்கு கொடுத்திருக்கும் இசைப் புதையல்களை நாம் எவ்வளவு இலகுவாக அலட்சியம் செய்திருக்கிறோம்  என்ற குற்ற உணர்ச்சி எழுந்தது.

      இசைக்கு மட்டுமே நாம் முதல் முறையாக ஒரு பாடலைக் கேட்ட கணத்தின் நிகழ்வை மீண்டும் உயிர் பெறச் செய்யும் சக்தி இருக்கிறது. நம் மூளைக்குள் சிறைப்பட்டுக்கிடக்கும் பழைய ஞாபகங்களின் ஒரு குறிப்பிட்ட கதவை ஒரு பாடல் சட்டென திறந்து விடுகிறது. நாம் மீண்டும் காலத்தில்  பின்னோக்கி பயணம் செய்து மறைந்த தினங்களுக்குள் புகுந்து கொண்டு  முடிந்துவிட்ட  ஒரு சில சம்பவங்களை மறுபடியும் ருசி பார்க்கிறோம்.  சவாலே சமாளி படத்தின் சிட்டுக் குருவிக்கென கட்டுப்பாடு என்ற பாடல் எனக்கு இதை செய்யத் தவறுவதில்லை. இதே போல் இதே படத்தின் நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே பாடலும் என்னை என் பால்ய தினங்களுக்குள் அடைத்துவிடுகிறது ஒரே நொடியில். எனது தந்தையின் தோளின் மீது சாய்ந்துகொண்டு இந்தப் பாடலை வானொலியில் கேட்ட அந்த நினைவை இந்தப் பாடல் இன்னமும் உயிரோடு வைத்திருக்கிறது.
 
        72இல் வந்த ஒரு படம் கண்ணா நலமா? பெற்றடுத்த உள்ளமென்றும் தெய்வம் தெய்வம் என்றொரு மனதை பிழியும் பாடல் இதில் இருக்கிறது. வானொலிகளில் இதை எத்தனை முறைகள் கேட்டிருக்கிறேன்! என்ன ஒரு காவியப் பாடல் இது! பாடலே படத்தின் கதையை நமக்குச் சொல்லிவிடும். வி குமாரின் அசாத்திய இசை மேதமையை வெளிக்கொணர்ந்த பாடல்களில் இது மிக முக்கியமானது. ஒரு குழந்தை இரு தாய்கள்  என்ற கிளாசிக் சாலமன் கதையை டி எம் எஸ் தன் மந்திரக் குரலில் மனம் உருகும் விதத்தில் பாடும்போது கேட்பவர்கள் நெஞ்சுக்குள் கண்ணீர்த் துளிகள்   நிச்சயம்.

         இதே சமயத்தில் வந்த மற்றொரு பாடலும் அப்போது மிகப் பிரபலமாக வானொலிகளில் உலா வந்த ஞாபகமிருக்கிறது. அது திக்குத் தெரியாத காட்டில் என்ற படத்தின் பூப்பூவா பறந்து போகும் பட்டுபூச்சி அக்கா என்ற குழந்தையின் குதூகலத்தை கேட்பவர்களிடத்தில் உண்டாக்கும் அருமையான பாடல். எம் எஸ் வி யின் இசை என்ன ஒரு மாயாஜாலத்தை நடத்திக்காட்டி விடுகிறது இப்பாடலில் என்ற ஆச்சரியம் இதைக் கேட்கும்பொழுதெல்லாம் எனக்கு அடங்குவதேயில்லை. இந்தப் பாடல் ஒரு ஆழமான ஆனந்தத்தை நமக்குள் செலுத்திச் செல்லும் வலிமை கொண்டது. குழந்தைகளின் பாடலை அவர்களின் குரலில் அவர்களின் உலகத்தை அவர்களின் கண் கொண்டே  பார்க்கும் அற்புத இசையமைப்பு.

   எம் எஸ் வி தனியாக இசை அமைத்த காலங்கள் நம் தமிழிசையில்  வசந்தத்தின் நீட்சி  என்பதை உணர்த்தும் பல கானங்கள் இன்னும் நம்மிடம் துடித்தபடியே இருக்கின்றன. பிராப்தம்  படத்தில் வரும் "சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது" என்ற பாடல் ஒரு இனிமையான தாலாட்டின் சுகம் கொண்டதை யாரால் மறுக்க முடியும்? இப்பாடல் எங்கிருந்தோ வந்தாள் படத்திலுள்ள சிரிப்பினில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே பாடலின் மறுவடிவமாக இருந்தாலும் கேட்கும்போது ஒரு புதுவித இன்பத்தை தருகிறது.   இப்படியான இரட்டை கானங்களை எம் எஸ் வி யின் இசையில் வெகு அரிதாகவே கேட்கமுடியும்.

    இதற்கு முன்பே 69 இல் எம் எஸ் வி நில் கவனி காதலி படத்தில் ஒரு அபாரத்தை அரங்கேற்றியிருப்பதை இங்கே கொஞ்சம் அடிக்கோடிடுவது மிக அவசியம் என்றுனர்கிறேன். ஜில்லென்ற காற்று வந்ததோ என்ற அப்பாடல் ஒரு இசைத் தென்றல். உண்மையில் ஜில்லென்ற உணர்ச்சி  இதைக் கேட்கும்போது நம்மை உரசிச் செல்வதைப் போன்றே  தோன்றும். ரம்மியத்தை தேனுடன் குழைத்துக் கொடுத்ததைப் போல ஒரு இன்னிசை இது. இதேபோல இதே ஆண்டில் ஒளி பிறந்தபோது மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா, பவுர்ணமி நிலவில் பனிவிழும்  இரவில் கடற்கரை மணலில் இருப்போமா  என்ற ரம்மியமான பாடல்கள் கன்னிப்பெண் படத்தில் இடம்பெற்றிருந்தன.  மற்றொரு வைர கானம் வேதாவின் இசையில் ஒளிர்ந்தது. அது செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் சிரித்தது எனைப் பார்த்து என்ற பாடல். சுசீலாவின் குரல்தான் என்னென்ன மாயங்கள் நிகழ்த்துகிறது! சுசீலா என்ற இந்த இசை தேவதையின்  தேன்மதுரக் குரலில் வந்த ஏறக்குறைய அனைத்துப் பாடல்களும் மென்மையான  சுகத்தைத்  தரக்கூடியவை. இசைக் குயில் என்ற பெயர் அவரைத் தவிர வேறு எவருக்கும் இத்தனை பொருந்தியதேயில்லை. என்னைப் பொருத்தவரை நைடிங்கேல் ஆப் இண்டியா என்ற பதம் லதா மங்கேஷ்கரை விட சுசீலாவுக்கு அதிக நெருக்கமானது.   இப்படி எண்ணுவது நான் மட்டுமாக இருக்கமாட்டேன் என்பதும் எனக்கும் தெரியும். கீழுள்ள பாடல்களின் பட்டியலைப் பார்த்தாலே என்ன ஒரு பரவசம் பீறிடுகிறது!
சொன்னது நீதானா, 
மன்னவனே அழலாமா?
அத்தையடி மெத்தையடி ஆடி விளையாடம்மா,
தமிழுக்கும் அமுதென்று பேர், 
மலர்கள் நனைந்தன பனியாலே, 
ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்,
வெள்ளிக்கிழமை விடியும் நேரம் வாசலில் கோலமிட்டேன், 
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி, 
நினைக்கத் தெரிந்த மனமே, 
கங்கைக்கரை தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம், 
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே,
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
   போன்ற கானங்கள் சுசீலாவின் குரலினில் இருக்கும் இனிமையைத் தாண்டி வேறொரு உலகத்துக்கு கேட்பவரை அழைத்துச் சென்று விடுகின்றன. குரலிலேயே அவர் தாயாக சகோதரியாக தோழியாக துணைவியாக தோற்றம் கொள்கிறார். இந்த அற்புதத்தை நிகழ்த்தும் சுசீலாவின் குரலுக்கு இசைக் குயில் என்ற அடைமொழி மிகப் பொருத்தமானதுதான். இருந்தும் சில தலைவலி ஏற்படுத்தும் கதவுக்கடியில் சிக்கிக்கொண்ட எலி போன்று கிறீச்சிடும் சில அவஸ்தைகளை  மக்களில் சிலர் சின்னக் குயில், பெரிய குயில் என்று பெயரிட்டு அழைப்பதைப்  பார்க்கையில் இதுவெல்லாம்  நம் தமிழிசைக்கு நேர்ந்த கொடுமை என்ற எண்ணம் வலுப்பெறுகிறது . இந்தக் குயில் புராணம் போதாதென்று எண்பதுகளை நமது தமிழிசையின் பொற்காலம் என்று சொல்லும் ஒரு புரட்டும் இணையத்தில் அரங்கேறிவருகிறது. மக்கள் கொஞ்சம் மவுனியாக இருக்கும் பட்சத்தில் இளையராஜாவின் வருகைக்கு   முன் நம் தமிழ்நாட்டில் மக்கள் ரசனைக்குரிய பாடல்களே வரவில்லை என்று சொல்லும் அற்பத்தனமும் மோசடித்தனமும்  கூட விற்பனை செய்யப்படும் ஆபத்து நம் கதவினருகே காத்திருக்கிறது.

  செயின்ட் ஜோசப் கல்லூரி விடுதியில் கட்டிடங்களுக்கு இடையே  அவ்வப்போது பெரிய திரை கட்டி தமிழ்த் திரைப்படங்கள் காட்டுவது உண்டு. இரண்டாம் ஆண்டில் அப்படி நான் விடுதித் தோழர்களோடு இரவில் கூட்டமாக சேர்ந்து கும்மாள உணர்வுடன் பார்த்த ஒரு படம் காதலிக்க நேரமில்லை. ஆங்கில இசைக்குள் நான் மூழ்கிக்கிடந்த அவ்வேளையில் அந்தப் படத்தின் பாடல்கள் என்னை ஆச்சர்யப்படுத்தின. குறிப்பாக அனுபவம் புதுமை என்ற பாடலை  கேட்டபோது வார்த்தைகளில் வடிக்க  முடியாத எதோ ஒரு வசீகரம் என் மனதை தொந்தரவு செய்துகொண்டே இருந்தது. மேற்கத்திய இசைக்கும் நமது பாரம்பரிய இசைக்கும் இடையே இருக்கும் தூரத்தை அப்பாடல் எத்தனை அனாசயமாக தாண்டி வந்திருக்கிறது! மேற்கத்திய பாணியில் இருந்தாலும்  இப்பாடல் நம் மண்ணுக்குரிய  இயல்பான உணர்சிகளை சற்றும் நெருடலின்றி நமக்குப் புரிய வைத்து  விடுகிறது. இன்றைக்கும் புதுமையாக ஒலிக்கும் இந்தப் பாடல் ஒரு வியப்பே.  மேற்கத்திய இசையும் நமது மரபின் இசையும் ஒரே குரலில் ஒரு சேர ஆரத் தழுவிக் கொண்டு பிணைந்தது எம் எஸ் வி என் மகத்தான இசைஞனிடம்தான். Fusion என்ற இவ்வைகையான கானங்களை அவரைப் போன்று சிறப்பாக அமைத்தவர்கள் வெகு குறைவே.

       திரையிசை சாராத ஆன்மீகப் பாடல்களில் நான் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. காரணங்கள் பல இருந்தாலும் மிக முக்கியமாக  இவைகளில் சொல்லப்படும் கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லாததால் இவ்வகைப்  பாடல்களை  நான்  எட்டவிரும்பாத   தூரத்திலேயே வைத்திருக்கிறேன்.  பெருவாரியான ஆன்மீகப் பாடல்கள் ஒரே இரைச்சலாக பாடகர்கள் பெருங்குரலெடுத்து உச்ச ஸ்தானியில் பாடுவதைக் கேட்கும்போது ஒரு சலிப்பான உணர்வு வருவதை தவிர்க்கமுடிவதில்லை. ஆனால் இம்மாதிரியான மிகை  உணர்சிகளின்றி மிக நளினமாகவும் இயல்பாகவும் பாடப்பட்ட கேட்கும் போதே நம்மைத் தாலாட்டும் ஒரு கானத்தை நான் என் பள்ளிநாட்களில் கேட்டிருக்கிறேன். இன்றும் அப்பாடல் என்னை தாலாட்டத் தவறுவதில்லை. அது ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான்  என்ற மிக அருமையான பாடல். தென்றல் போன்ற குரலால் வருடும் எஸ் பி பியா அல்லது எந்த இடத்திலும் தறிகெட்டு ஓடாமல் ஒரு குழந்தையின் துயிலை கொஞ்சமும் இடைஞ்சல் செய்யாமல் மிருதுவாக ஒலிக்கும் இசையமைப்பா அல்லது அந்த துயில் கொள்ளும் ராகத்தை வார்த்தைகளிலும் இசையிலும் துல்லியமாக வடித்தெடுத்த இசைக் கோர்ப்பா? பாடலின் சிறப்பு என்று எதைக் குறிப்பிடுவது என்ற குழப்பம் வருகிறது. இதற்கு இசை அமைத்தது எம் எஸ் வி என்று வெகு தாமதமாகத்தான் அறிந்தேன். கண்டிப்பாக வியப்பே ஏற்படவில்லை. பின் வேறு யாரால் இவ்வாறான தேவ கானங்களைத் தர முடியும்?

     கண்ணனை தாலாட்டிய அதே எம் எஸ் வி ஞான ஒளி படத்தில் தேவனே என்னைப் பாருங்கள் என்ற பாடலில்  கிருஸ்துவ மதத்தின் விசுவாக வேர்களை  எத்தனை  அருமையாக கொண்டுவந்திருக்கிறார் என்று பாருங்கள். இதிலுள்ள மற்றொரு அபாரமான கானம் மணமேடை மலர்களுடன் தீபம் என்ற காதல் கானம். இதன் இசைகோர்ப்பும் நேர்த்தியானது.  காமம் மேலோங்கிய ஒரு  பெண்ணின் காதலை எத்தனை நேர்த்தியாகவும் கண்ணியமாகவும் எல்லோரும் கேட்கும் விதத்தில் முகம் சுளிக்காதவாறு எம் எஸ் வி படைத்திருக்கிறார் என்று பாருங்கள். இவருக்குப் பின் வந்தவர்களிடம் நாம் இந்த பண்பாட்டு முதிர்ச்சியை காணமுடியாது போனது ஒரு விதத்தில் தமிழிசைக்கு ஏற்பட்ட இழப்பே. இதைத் தவிர புனித அந்தோனியார் (1976) படத்தில் வரும் மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் என்ற பாடல் விண்ணிலிருந்து  மண்ணில் இறங்கிய தேவ இசையின் ஒரு துளி. மேற்கத்திய தேவாலய கோரஸ் இசையையும் கர்நாடக ராகத்தையும் ஒரே புள்ளியில் இணைத்த அற்புதப் பாடல். வாணி ஜெயராமின் நளினமான குரல்  கண்ணதாசனின் எளிமையான வரிகளின் உள்ளே இருக்கும்   ஆழமான உணர்வை நமக்குள் கொண்டுவர, எம் எஸ் வி யின் மிகச் சிறப்பான இசையமைப்பு கேட்பவரை கண்மூடி அமைதி கொள்ளச் செய்துவிடுகிறது. ஆர்ப்பாட்டமான ஆன்மீகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி. Dear M.S.V. You're a legend.

    1971இல் முகம்மது பின் துக்ளக் என்ற படம்  பெருத்த சிக்கல்களைச் சந்தித்தப் பின் வெளிவந்தது. படத்தின் இயக்குனர் நடிகர் சோ இதைப் பற்றிய நினைவூட்டலில் ஒரு தகவலை வெளியிட்டார். அப்போதைய அரசியல்வாதிகள் இந்தப் படத்தை ஒடுக்குவதில் தீவிரமாக இருந்து, படம் எல்லா பிரச்சினைகளையும் தாண்டி வெளிவரவேண்டிய நேரத்தில் இது இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று ஒரு புதிய திரியை பற்ற  வைக்க, படத்தை எதிர்க்க வந்த சிலர் படத்தின் ஆரம்பத்திலேயே கை தட்டி ரசிக்கத்  துவங்கிவிட்டார்களாம். காரணம் ஒரு பாடல். அதுதான் எம் எஸ் வி பாடிய  அல்லா அல்லா நீ இல்லாத இடமே இல்லை நீதானே உலகின் எல்லை என்ற பாடல். உலகில் சமாதானத்தை கொண்டுவர இசையைத் தவிர வேறு  சக்திகளும் உபயங்களும்   நம்மிடம் இல்லை என்று எண்ணத் தோன்றுகிறது. நெற்றி முழுவதும் திருநீறு பூசிக்கொண்ட ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்த ஒரு ஆத்திகவாதி எவ்வாறு மற்ற சமயங்களின் இசைப் பாரம்பரியங்களுக்குள்  புகுந்து கொள்ளும் மந்திரத்தை கற்றார் என்ற  திகைப்பும்,  இதைத் தவிர நாத்திகம், இன்பம், காதல், மோகம், நட்பு, வேதனை, தியாகம், விரக்தி, துன்பம், தத்துவம், வேடிக்கை என பல வாழ்வியல் கூறுகளையும்  எத்தனை நேர்த்தியாக அதன் உருவங்கள்  விகாரப்படாமல் கொடுத்திருக்கிறார் என்ற வியப்பும் எம் எஸ் வி இசையோடு வரும்  இலவச (விலையில்லா?) ஆச்சர்யங்கள்.

      மீண்டும் கேட்கும்போது வெறும் நாஸ்டால்ஜிக் உணர்வைத் தாண்டிய சுவை கொண்ட பாடல்கள் கீழே உள்ளன. எம் எஸ் வி இசையமைக்காத பாடல்களுக்கு அதன் இசை அமைப்பாளர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளேன்.

    ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு, மங்கையரில் மகாராணி மாங்கனிபோல் பொன்மேனி, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், மலர் எது என் கண்கள்தான் என்று சொல்வேனடி -அவளுக்கென்று ஓர் மனம்.
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே- பாபு. மனதை நெகிழச் செய்யும் கானமிது.
எங்கே அவள் என் தேவதை-குமரிக்கோட்டம்.
ஒ மைனா ஒ மைனா- நான்கு சுவர்கள்.
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா - பொன்னூஞ்சல். இந்தப் பாடல் ஒரு அதிசயம்தான். இதைக் கேட்கும்போது தோன்றும் எண்ணங்கள் மிக ரசனையானவை. என்ன ஒரு இசை!
வானிலே மண்ணிலே நீரிலே பூவிலே, திருமகள் தேடிவந்தாள் - இருளும் ஒளியும்   கே வி எம். வானொலியில் திருமகள் தேடிவராத நாட்களே இல்லை அப்போது.
பார்த்தேன் பார்க்காத அழகை கேட்டேன் கேட்காத இசையை,தேன் சொட்ட சொட்டச் சிரிக்கும் ஒரு திருமண வேளை - கெட்டிக்காரன். சங்கர் கணேஷ்.
அம்பிகை நேரில் வந்தாள் - இதோ எந்தன் தெய்வம்.
தன்னந்தனியாக  நான் வந்த போது - சங்கமம். இதில் என்னமோ செய்யுங்கள் தள்ளியே நில்லுங்கள் என்று சுசீலா பாடும் அழகே தனி.
உலகில் இரண்டு கிளிகள்- குலமா குணமா? கே வி எம்.
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ - உத்தரவின்றி உள்ளே வா. காவிய கானம். மென்மையின் இசை இலக்கணம் இது என்று தாராளமாக சொல்லலாம். இதில் ஒலிக்கும் கிடாரின் இசைதான் எத்தனை மயக்கத்தை தருகிறது!
மெல்லப் பேசுங்கள் பிறர் கேட்கக்கூடாது, இன்று வந்த இந்த மயக்கம்- (பொருத்தமில்லாத நடிகர்கள் கொண்ட அருமையான பாடல்கள் வரிசையில் இதுவும் ஒன்று. இன்னொன்று அடுத்து வருகிறது.) -காசேதான் கடவுளடா.
காதலின் பொன்வீதியில்- பூக்காரி. என்ன நேர்த்தியான காதல் கானம். காட்சியை காணாது பாடலைக் கேட்பது உத்தமம்.
மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமன்றோ - பிள்ளையோ பிள்ளை. காண சகிக்காத காட்சியமைப்பு இந்த நல்ல பாடலை ரசிக்கவிடாமல் செய்துவிடுகிறது.

         மிக சமீபத்தில்  பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே என்றொரு அருமையான பாடலைக்  கேட்க நேர்ந்தது.  பல வருடங்களுக்கு முன்னே இதைக் கேட்டிருந்தாலும் மீண்டும் கேட்கும் போது இனந்தெரியாத இன்பம் அதிலிருப்பதை கண்டுகொண்டேன். இது 1973இல் ஸ்ரீதரின் இயக்கத்தில் வந்த அலைகள் என்ற படத்தின் பாடல். பாடகர் ஜெயச்சந்திரன் முதல் முறையாக தமிழில் பாடிய இந்த சிறப்பான பாடலை அமைத்தவர் எம் எஸ்  வி.  இது போன்று உயிர்ப்பான நம் மரபின் ராகங்களை இசையின் மீது வண்ணங்கள் போல தெளித்து ஒரு நளினமான இசையோவியத்தை படைப்பதில் எம் எஸ் வி மேதமை கொண்டவர். இதற்கு சான்றுகளாக பல பாடல்கள் இருக்கின்றன. எண்பதுகள் வரை எம் எஸ் வி யின் இசைத் தென்றல்  வீசிக்கொண்டிருந்ததின் அடையாளமாக அவை  ஆர்ப்பாட்டம் விளம்பரங்களின்றி மவுனமாக நிற்கின்றன நம்மிடையே. வாடிய வசந்தம் போலில்லாமல் எழுபதுகளின் இனிமையை இசையாக வடித்த  கானங்கள் பல இன்னமும் பலரால் அறியப்படாமலே இருக்கின்றன. விளைவு  எழுபதுகளின் வசீகரம் சற்று திசை மாறிப் போனது போல ஒரு தோற்றம் இப்போது உருவாகியிருக்கிறது.

    இந்தப் பதிவில் நான் குறிப்பிட்டுள்ளது எழுபதுகளின் மத்திவரை உள்ள பாடல்களில் சில மட்டுமே. 75ஐ தாண்டிய பாடல்களை அவ்வளவாக இங்கு நான் தொட்டுச் செல்லவில்லை. என் அடுத்த பதிவில் அது  தொடரும்.  எழுபதுகளை இசை வறட்சி என்று வர்ணிக்கும் இசையறிவு பக்குவப்படாதவர்களின் பிழையான கருத்தை நாம் முற்றிலும் உடைத்துப் போடுவது அவசியம். வி குமார், ஷங்கர் கணேஷ், ஆர்.தேவராஜன், ஷ்யாம், எம் பி ஸ்ரீநிவாசன், விஜய பாஸ்கர் போன்றவர்களின் பாடல்கள் குறித்து நான் எழுதியுள்ள பதிவுகளையும் எழுபதுகள் பற்றிய இந்த சிறிய அறிமுகத்தையும் படித்த பின்னும் உங்களுக்கு எழுபதுகள் ஒரு இசை இருட்டு என்ற எண்ணம் மாறாமல் இருந்தால் உங்களின் இசையறிவும் இசை ரசனையும் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்கிறது என்பதன் கவலை கொள்ளச் செய்யும் அறிகுறி.


அடுத்து: இசை விரும்பிகள் XX --- வாடாத வசந்தம்.