Monday, 13 January 2014

இசை விரும்பிகள் XIII -- மறைந்த கானம்

     
 
          ( பதிவை துவங்கும் முன் ஒரு சிறிய விளக்கம்: கானம் என்பதை பாடல் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டாம் ஆங்கிலத்தில் மெலடி எனப்படும்எளிதில்எந்தவிதமான வரைமுறைக்கும் உட்படாத அந்த  பரவசமான  உணர்ச்சியையே   நான்  இங்கே கானம் என  குறிப்பிடுகிறேன்.)

     காலத்தின் வலுவான ஓட்டத்தில்  தொலைந்து போய்விட்ட பல அபாரங்களில் ஒன்று இப்போது  நமக்கு அரிதாகக் கிடைக்கும் இனிமையான இசை. "The golden era is always the past"  என்று குறிப்பிடுவதைப் போல,  மனதை வசீகரிக்கும்  ஒரு வானவில் தோன்றி மறைவதைப் போல, திடீரென வரும் கோடை மழை கொட்டிவிட்டு ஓய்வதைப் போல, ரயிலில் பயணம் செய்யும் போது தோன்றும்  மிக ரம்மியமான ஒரு இயற்கைக் காட்சி சட்டென்று காணமல் போவதைப்  போல, கனவில் காணும்  ஒரு அழகான முகம் சடுதியில் கரைவதைப் போல, நாம் வரையும்  நீர்க் கோலங்கள் போல தமிழின் உன்னதமான நல்லிசை தற்போது ஏறக்குறைய தொலைந்தே போய்விட்டது. ஆனால் முரண்பாடான உண்மையாக தமிழின் தொன்மையான ராகங்களில்தான் இன்னும் பல  பாடல்கள் இயற்றப்பட்டு வருகின்றன. அதில்  இசையும் இருக்கிறது.வார்த்தைகள்   காதுகளில் விழுகின்றன. இவை எல்லாமே இருந்தும் ஒரு பாடலுக்கு உயிரூட்டி  கேட்பவரை முணுமுணுக்கச் செய்து   மெய் மறக்கச் செய்யும் வசீகரமான   அந்த கானம் எங்கே?  நெஞ்சத்தை நனைக்கும்  சில்லென்ற முதல் பனி  போல, ஒரு  முதல் மழையின் சிலிர்ப்பைப்  போல வார்த்தைகளை இசையாக மாற்றும் அந்த மந்திர கானம், பாடலின் உயிரலையாக உள்ளத்துக்குள் ஊடுருவி  நம்மை சிறை பிடிக்கும் அந்த இன்பம் எங்கே? காற்றில் கரைந்த சுவடுகளை போல அந்த இனிமையான கானங்களும் காணாமல் போய்விட்டனவா?                      மறைந்த கானம் 

      எத்தனை வகையான சுவையான  பாடல்களை    பொக்கிஷ அனுபவங்களாக  நாம் பெற்றிருக்கிறோம் தமிழ்த்திரையின் மூலம்!  சற்று திரும்பிப் பார்க்கும் போது நாம் கடந்து வந்த இசைச் சாலையில் என்னென்ன இனிமையான பாடல்கள் நம்மை அரவணைத்து வந்திருக்கின்றன என்ற வியப்பு ஏற்படுகிறது. நாடகத்தின் நீட்சியாக மலர்ந்த  திரையிசை அந்தந்த காலத்தின் சுவடுகளை நமது மரபின் எழுச்சியான  ராகங்களைக் கொண்டு நம்மை வசியப் படுத்தியிருந்தது. எந்த விதமான தொழில் நுட்பம் வசப்பட்டதோ அதைக் கொண்டு இசை தன் பரிமாணங்களை இன்னும் விரிவாக்கியது. நம்  இசையின் முன்னோடிகள் மிகுந்த சிரமத்திற்கிடையே கடினமான சாலைகளில் இசையை வழிநடத்திச் சென்று இன்றைக்கு பெரிய அளவில் பேசப்படும் பல இசை அமைப்பளர்களின் சுலபமான பயணத்திற்கு பாதை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

        அதிகமான ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் நளினமாகவும் இனிமையாகவும் இசை சிறப்பாக இருந்த காலங்களில் (அதாவது 50 களிலிருந்து அறுபதுகளின் இறுதி வரை ஏறக்குறைய இருபது வருடங்கள்) வெளிவந்த பாடல்கள் பெரும்பாலும் சாகாவரம் பெற்றவைகளாக இருப்பதின் பின்னே காணப்படும் மர்மம் என்ன என்று ஆராய்ந்தால்  நமக்கு அகப்படும் பல காரணிகளில் சிலவற்றை குறிப்பிடலாம். நேர்த்தியான தொழில் பக்தி, சமூகத்தின் மீது இருந்த அக்கறை, தரமான கவிதையின் பால் இருந்த காதல், தான் என்ற அகந்தை இல்லாமை, மற்றவர்களையும் அனுமதிக்கும் நாகரீகம், இசை முன்னோடிகளை மதிக்கும் பண்பாடு, ராகங்களையும் வார்த்தைகளையும் தொல்லை செய்யாத இசை,  கவிஞர்களுக்கும் பாடகர்களுக்கும் அவர்களுக்குரிய இடத்தை அளித்து அவர்களின் வெற்றியையும் சாத்தியமாக்கியது என  பல இவற்றில் அடக்கம்.


           இருந்தும் வரலாறு அறியாத சில இசை ரசிகர்கள் இவ்வாறான சவாலான சாதனைகளைச் செய்தவர்களை அறியாமலும் அவ்வாறு அறிந்திருந்தாலும் அவர்களை எளிதாக ஒதுக்கிவிட்டு  தங்களுக்கு விருப்பமானவர்களை எல்லை மீறிப் புகழ்கிறார்கள். இதை நான்  ஒரு மிகப் பெரிய மோசடி என்றே கருதுகிறேன். இணையத்தில் தென்படும் இந்த இசை வெற்றிடத்தின் முகத்தை பலர்  எத்தனை விதமான முகச் சாயம் கொண்டு பூசினாலும் அது இயல்பாக இருப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் இப்போது என்ன இருக்கிறது என்பதையும் தங்களுக்கு என்ன நேர்ந்தது என்பதையுமே அளவுகோளாக வைத்துக்கொண்டு பத்திகள் பத்திகளாக எழுதி ஒரு இனிமையான இசை அனுபவத்தை தவறவிடுகிறார்கள்.

       பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை என்பது உலக உண்மை. அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டிய அவசியம் இருக்கும் அதே வேளையில் நம் மனதோடு ஒன்றிப் போன கானங்களையும் மறந்துவிடாமலிருப்பது முக்கியமானது. நாம் பற்றிகொண்டிருக்கும் இனிமையை உதறிவிட்டு, அல்லது அந்த சிந்தனையை அகற்றிவிட்டு ஒரு புதிய ரசனையை  நம்முள் நிரப்பிக்கொள்வது ஆரோக்கியமற்ற செயல். வேர்களை துறந்துவிட்டு  புதிய பசுமை இலைகளை தேடுவது மதியீனம்.

         தமிழ்த்திரையில் ஏற்பட்ட இசை மாற்றங்கள் இப்போது  நாம் கேட்கும் பாடல்களை அழைத்துச் செல்லும் பாதை குறித்து சிந்திக்கும் போது  நம் மனதில்  வேதனை பாய்வதை உணர முடிகிறது.   80 களில் சரியத் துவங்கிய நமது நல்லிசையின் மீது  90 களில் ஒரு நவீன வெளிச்சம் படர்ந்தாலும் வேர்களற்ற இசையை விரும்பும் மனங்கள் அதிகரித்து வரும் இந்த காலச் சூழலில் ரம்மியமான கானங்கள் நம்மிடையே கலைந்து போன கனவுகளாகவே காட்சியளிக்கின்றன. இசையின் அழகியல் மெலிந்து ஆபாச கூத்தாட்டங்களும், நம் மண் சாராத இசை வடிவங்களும், நமது இசை மரபின் நீட்சியை கொண்டிராத பாடல்களும் நம்மை மூச்சடைய வைக்கின்றன. இந்தப் பாடல்தான் என்று குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியாதபடி ஏறக்குறைய அனைத்து பாடல்களும் இதே வார்ப்பில் இருப்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். இசையின் உயிர்நாடியான வாத்தியங்கள் அந்தந்த மண்ணைச் சார்ந்திருக்கவேண்டிய அவசியத்தை இன்றைய இசை அமைப்பாளர்கள் குழிதோண்டிப் புதைத்துவிட்டதாகவே தோன்றுகிறது. மேற்கத்திய இசையின் படிவங்கள் நம்முடைய இசையில் படர்வது ஒரு வகையான புதுமையாக இருந்தாலும்  அதை எங்கே நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற எல்லையை நாம் மீறிவிட்டதாகவே நான் உணர்கிறேன்.

          நம்முடைய  மண் சார்ந்த பாரம்பரிய  இசைக் கருவிகளை துறந்து விட்டு கீபோர்ட் உதவியுடன்   செயற்கையான ஒலிகளை உருவாக்கி நமக்கு பழக்கப்படாத தொனியில் பாடி ராகங்களை மீறும் மெட்டுக்களைப் போட்டு தொடர்பில்லாத பல்லவி சரணங்களோடு ஆங்கில இசையை தமிழ்கொண்டு போர்த்தி   ஒரு விதமான குழப்பமான இசையை சுடச் சுட தட்டில் வைத்து பரிமாறுகிறார்கள் தற்போதைய இசை அமைப்பாளர்கள்.  உதாரணமாக உச்சத் தொனியில் பாடுவது ஒரு பாடும் முறை. இதை பலர் செய்திருந்தாலும், ரஹ்மான் வந்த பிறகே இவ்வகையான high -pitch singing இங்கே காலூன்றியது. ரஹ்மான் குரலின் ஏற்ற இறக்கங்களை அடித்து உடைத்து  உச்ச ஸ்தானியில் பாடியது 90 களின் இசை மாற்றத்தின் அடையாளமாக இருந்தது. அது ஒரு exceptional device அல்லது ஒரு பரிசோதனை முயற்சியாக இல்லாமல் அவருக்குப் பின் வந்த இசை அமைப்பாளர்கள் அந்த பாணியை எல்லைமீறி  கையாள்வது நம் இசை மரபுக்கு சாவு மணி அடிக்கிறது. நாம்  காலணிகளை படுக்கையறை வரை கொண்டு வந்துவிட்டோம் என்று தோன்றுகிறது.

     ரஹ்மானை குற்றம் சொல்லும் பலர் இதையும் கருத்தில் கொண்டேதான் அவரை விமர்சிக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். மேற்கத்திய கலப்பை ரஹ்மான் செய்தார் என்று சிலர் சொல்வது அபத்தமான கருத்து. நம் இசையில் மேற்கத்திய பாணி ஜி ராமநாதன் காலத்திலேயே வந்துவிட்டது. 80 கள் வரை இந்த கலப்பு வெகு இனிமையாகவும் இயல்பாகவும் நம் இசை மரபோடு முட்டிக்கொள்ளாமலும் துணி மீது வரையப்பட்ட அழகான ஓவியம் போல இருந்தது. 80 களின் மத்தியில் இந்த இசைச் சித்திரம் உருமாறத் துவங்கியது. ரஹ்மானின் வருகை அவருக்கு முன்னே ஆறு வருடங்கள் தொலைந்து போயிருந்த இந்த மேற்கத்திய இசை இணைப்பை மீண்டும் கொண்டுவந்தது என்பதே உண்மை. அதுவே அவர் இசை பெரிதும் வித்தியாசமானதாகவும் புதுமையானதாகவும் இருப்பதாக   மக்களால் ஏற்றுகொள்ளப்பட்டதின் காரணம். ஆனால் இப்போது அது முன்பை விட இன்னும் ஆழமாக நம் இசையை பாதித்தது. எந்த புதிய இசையையும், பாணியையும், இசை வடிவத்தையும் வரவிடாமல் தடுத்துக்  கொண்டிருந்த இளையராஜாவின்  இசைச் சுவர்  ரஹ்மானின் எழுச்சியான இசையில் உடைந்து நொறுங்கியது. இளையராஜாவின் இசைப் பாரம்பரியத்தை முடிவுக்கு கொண்டுவந்த ரஹ்மானின் வருகையினால் தமிழ்த்திரையில் பல கதவுகள் புதியவர்களுக்குத் திறந்தன. இங்கேதான் நம் இசையின் சரிவு மறுபடி உண்டானது.  இதை நாம் பாரதிராஜாவின் வருகையோடு ஒப்பிடுவது பொருத்தமானது.  எப்படி பாராதிராஜாவின் நுழைவு தமிழ்த்திரையில் யார் வேண்டுமானாலும் நடிகராகலாம் என்ற புதிய இலக்கணத்தை உண்டாக்கியதோ அதே போல ரஹ்மானின் வரவு  ஒரு இசை அமைப்பாளருக்குரிய தகுதிகளை மாற்றியமைத்தது. இதன்  விளைவாக   நமது பொற்காலத்தின் (60கள்) சுவடுகளே இல்லாத பாடல்கள் தலைக்காட்டத் துவங்கின. மாறிவிடக் காலமும் இந்த தலைமுறை ரசனையை அங்கீகரித்து தமிழில் நீண்ட ஆயுளோடு இருந்த கானத்தை புதைத்துப் போட்டது. ரஹ்மானை மட்டும் இந்த சீரழிவிற்க்கு பொறுப்பாளியாக்குவது அநீதி என கருதுகிறேன். மேலும்  இது  ஒரு விதத்தில் தந்திரமான யுக்தி. இதைச் செய்பவர்கள் பெரும்பாலும் இளையராஜாவின் ரசிகர்களாக இருப்பதில் வியப்பேதுமில்லை. அவர்கள் இளையராஜாவை நமது பாரம்பரிய இசை மரபின் பாதுகாவலானகவும் ரஹ்மானை அதை அழிக்கவந்த தீய சக்தியாகவும் உருவகப்படுத்திக் கொள்கிறார்கள்.

       தமிழ்த் திரையின் இசை பாரம்பரியத்தை தொடர்ச்சியாக கொண்டு சென்றவர்களில் ரஹ்மான் இளையராஜாவுக்குப்  பிறகு வருகிறார். எம் எஸ் வி யின் நீட்சியை இளையராஜா தன் வசீகர இசையினால் புதிய பரிமாணங்களுக்கு இட்டுச் சென்றதுபோல இளையராஜாவுக்குப் பின் ரஹ்மான் தமிழ்த் திரையிசையை இன்னும் பல உயரங்களுக்கு எடுத்தச் சென்றார் என்பதும் உண்மையே.எம் எஸ் வி, இளையராஜா போன்ற தமிழ்த் திரையின் இசை சகாப்தங்களுடன் பணியாற்றிய   ரஹ்மானுடன் நம் மரபின் இசை முற்றுப்புள்ளிக்கு வந்துவிட்டது. ரஹ்மானின் வருகை தமிழிசையை பழைய இசை, புதிய இசை என்று பிரித்தது. இருந்தும் அவர்  பழமைக்கும் புதுமைக்கும் இடையே ஒரு பாலமாக இருந்தார். ஆனால்  அவருக்குப் பின் வந்தவர்களால் ஒரு தலைமுறையை பாதிக்கும்  இசைமரபை உருவாக்க முடியவில்லை. தேவா, வித்யாசாகர்,கார்த்திக் ராஜா, மணி ஷர்மா, ஆதித்யா,பால பாரதி,பரத்வாஜ் போன்ற ரஹ்மான் காலத்தை ஒட்டி வந்தவர்களும் ஹாரிஸ் ஜெயராஜ், இமான், தமன் ,தேவி ஸ்ரீ பிரசாத், யுவன் ஷங்கர் ராஜா, விஜய் ஆண்டனி, ஜி வி பிரகாஷ், அனிருத், சத்யா என்று இன்றைய இசைஅமைப்பாளர்களும் புதுப்பித்துக்கொண்ட  ஒரு  நவீன இசை பாரம்பாரியத்தை படைக்கவில்லை.ஆச்சர்யமாக சில பாடல்கள் நம் கவனத்தை ஈர்க்கத் தவறுவதில்லை என்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும். எனினும் "இந்த" சில பாடல்கள் ரசிக்கும்படியாக இருப்பது ஒன்றே அதை சாகாவரம் பெற்றதாக்கிவிடுவதில்லை. ஒரு பாடல் அது உருவான தலைமுறையைத் தாண்டியும் தொடர்ந்து ரசிப்புடன் கேட்கப்படுவதே அதை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. கிளாசிக் எனப்படும் இந்த புனிதமான  வட்டத்திற்குள் (The holy circle) வரக்கூடிய  தகுதியை எல்லா பாடல்களும் அடைந்துவிடுவதில்லை.அதே சமயம் ஒரு பாடலின் வணிக வெற்றியும் அதற்கு அந்தத்  தகுதியை கொடுத்துவிடுவதில்லை.  வேண்டுமானால் அவ்வையான பாடல்களை நாம் cult classic என்ற  முத்திரை குத்தி ஒரு ஓரத்தில் வைத்துவிடலாம். They do nothing better than feeding our nostalgia.

          இளையராஜாவின்  காலத்திலேயே நம் இசை சிதையத் துவங்கியது. நல்ல தரமான கவிதையை புறக்கணித்த அவரின் இசை மரபு தொடர்ச்சியாக கைக்கொள்ளப்பட்டு வருவது வருந்ததக்கது.  ரஹ்மானின் காலத்தில் நம் இசை முகம் வேறு சாயம் பூசிக்கொண்டது.அந்த ஒப்பனை ஆரம்பத்தில் நம்மை பரவசப்படுத்தினாலும் போகப் போக திகட்டத் தொடங்கியது. காலம் தாண்டிய கானங்கள்  இசைக்கப்படாமல் விரைவு உணவு போல இப்போது  பாடல்கள் ஒரு தற்காலிக திருப்தியை அளிக்கின்றன. அவைகளை நினைவில் வைத்திருக்கவேண்டிய அவசியமும் நமக்கு இல்லாமல் போய்விட்டது. இசை என்னும் மகத்துவத்தை உணர்த்தும் அனுபவங்களைக் கொடுப்பதில் இன்றைய இசை அமைப்பாளர்கள் அதிக அக்கறை காண்பிப்பதில்லை என்பது அவர்களின் பாடல்களை ஒரு முறை கேட்கும் போதே நமக்கு அதிக சிரமங்களின்றி புரிந்துவிடுகிறது. மேலும் ஆபாசக் கூத்தான ஒரு கருமாந்திரப் பாடல் வெற்றி பெற்று விட்டால் அந்த ஆபாசம் தொடர்ந்து செய்யப்படும் அபத்தமும், சமூக நெறியின்மையும், கீழ்த்தரமான வக்கிர புத்தியும்,மலிவான  வணிக நோக்கமும் நம் இனிமையான கானங்களை மீண்டு வரமுடியாத குழிக்குள் இன்னும் ஆழமாக புதைத்துக்கொண்டே இருக்கின்றன.  வேர்களற்ற இசையையும், சுவையில்லாத பாடல்களும் நம்மை திடுக்கிட வைக்கின்றன. என் இசை ஏன் இப்படி கெட்டுப் போனது என்ற வேதனையான கேள்வி நல்லிசை நாடிகளின் நெஞ்சங்களில் ஒரு  எடுக்கப் படாத முள்ளாக குத்திக் கொண்டிருக்கின்றது.

       இன்றைய இசை என்கிற  வெற்றிடத்தில் நின்றுகொண்டிருக்கும் நாம் சற்று நம்முடைய 60 மற்றும் 50  களை நோக்கிப் பார்த்தோமானால் எவ்விதமான இசை அபாரங்களை நாம்  பெற்றிருந்தோம்  என்பதையும் எவ்விதமான இசை இன்பங்களை இழந்திருக்கிறோம் என்பதையும் எளிதில் அடையாளம் காணலாம்.
எத்தனை விதமான ராகங்கள் (யாரடி நீ மோகினி?),
மனதை பிழியும் துயர கீதங்கள் (சொன்னது நீதானா?),
வெற்றியை கொண்டாடும் சாதனைப் பாடல்கள் (அச்சம் என்பது மடமையடா), இளமை துள்ளும் இனிமையான இசைக் கோலங்கள் (என்ன என்ன வார்த்தைகளோ),
காதலை கண்ணியப்படுத்தும் காவிய கானங்கள் (அன்புள்ள மான் விழியே),
மனிதத்தை மதிக்கும் பாடல்கள்(அதோ அந்த பறவை போல)
 என பலவித இசை ஆச்சர்யங்கள் நம்மிடம் உண்டு. இன்றோ காதல் மட்டுமே பிரதானமாக இருக்கிறது. அதுவும் கூட வக்கிர சிந்தனையின் உச்சமாக பெண்களை இழிவு செய்யும் இச்சையின் இசையாக வெடித்துத் தெறிக்கிறது. Oh, how green once my valley was!

   கானம் என்பதை நாம் எளிதில் புரிந்துகொள்கிறோம். இன்பமாக  ரசிக்கிறோம். ஆர்ப்பாட்டமாக ஆராதிக்கிறோம். இருந்தும்  அதன் வரைபடத்தை நம்மால் எந்த மொழி கொண்டும் எத்தனை முயற்சித்தும் வரைய முடிவதில்லை. தமிழ்த் திரையிசையின் தேன்சுவை கொண்ட பல பாடல்களைக் கொடுத்த இசைச் சிகரங்களான எம் எஸ் விஸ்வநாதன்- டி கே ராமமூர்த்தி இரட்டையர்களின் இனிப்பான இன்னிசையில் காட்டாற்று வெள்ளமாக   ஆக்ரோஷமாக பீறிட்ட பாடல்கள் நம் தமிழ்த் திரையின் நிரந்தர இசைச் சிற்பங்களாக நிலை பெற்றிருக்கின்றன.  அந்தக் காலச் சூழ்நிலையில் வெளிப்பட்ட அந்த  இன்ப இசையை விட மேன்மையானதை  இனி எந்த காலகட்டத்திலும் எந்த இசையாலும் உருவாக்க  முடியாது என்பது மாற்ற முடியாத நிஜம்.  அத்தகைய இசைச்  சிற்பிகள் படைத்த பாடல்களை மற்ற இசை அமைப்பாளர்களின் பாடல்களோடு இணை வைத்தால் தென்படும் வித்தியாசம் இனம் காணக்கூடியது. இயல்பானது. உதாரணமாக
 ஓ ரசிக்கும் சீமானே (படம்-பராசக்தி, இசை- சுதர்சனம்) (காலத்தை தாண்டிய மிக அற்புதமான பாடல்),
பாட்டு பாடவா (தேனிலவு - எ எம் ராஜா), (அடுத்த அற்புதம்),
வாழ்ந்தாலும் ஏசும் (நான் பெற்ற செல்வம்- ஜி ராமநாதன்),
அமுதை பொழியும் நிலவே (தங்க மலை ரகசியம்- டி ஜி லிங்கப்பா) (பழைய பதிவு ஒன்றில் இதன் இசை ஜி ராமநாதன் என்று எழுதியிருந்ததை விடாமல் சுட்டிக்காட்டிய இணைய  நண்பர்களுக்காக  இறுதியாக என் தவறை திருத்திவிட்டேன்.),
 நீ எங்கே என் நினைவுகள் அங்கே (மன்னிப்பு- சுப்பையா நாயுடு),
 காவேரிக் கரையிருக்கு (தாயைக் காத்த தனயன்- கே வி மகாதேவன்),
வந்த நாள் முதல் (பாவ மன்னிப்பு- எம் எஸ் விஸ்வநாதன்-டி கே ராமமூர்த்தி), கண்ணாலே பேசி பேசி ( அடுத்த வீட்டுப் பெண்- ஆதி நாராயண ராவ்).

    போன்ற பாடல்களில்  தென்படும் தனித்தன்மை வெவ்வேறான இசை அமைப்பாளர்களின் சிறப்பை அழுத்தமாக அடையாளம் காட்டுவதை நாம் உணரலாம். இசையை உன்னிப்பாக கவனிக்கத் தவறுபவர்களுக்கு இவை எல்லாமே ஒரே இசை அமைப்பாளர்தான் செய்தார் என்ற எண்ணம் ஏற்படுவதில் தவறில்லை. அதே சமயத்தில் எம் எஸ் வி-டி கே ஆர் இரட்டையர்கள் இணைந்து கொடுத்த பாடல்களுக்கும் அந்த இசைக் கூட்டணி பிரிந்த பிறகு எம் எஸ் விஸ்வநாதன் தனியாக அமைத்த பாடல்களுக்கும் இருக்கும் அந்த இனம் தெரியாத யாராலும் இதுதான் அது என்று பகுத்துப் பார்க்க முடியாத வேற்றுமை இசையின் புரிந்துகொள்ள முடியாத வசீகரத்தை நமக்கு உணர்த்துகிறது.   ஒப்பீடுகள்  பல சமயங்களில் அர்த்தமற்றதாக இருந்தாலும் ஒரு சரியான திசைக்கு மற்றவர்களை வழி காட்டும் நோக்கத்திற்காக அவை அவசியப்படுகின்றன. உதாரணத்திற்கு கீழ்க்கண்ட பாடல்களை பாருங்கள்.

       ஒன்று எங்கள் ஜாதியே (பணக்கார குடும்பம்- எம் எஸ் வி- டி கே ஆர் ) , கொடியில் இரண்டு மலருண்டு (உயிரா மானமா- எம் எஸ் வி  ) நீரோடும் வைகையிலே (பார் மகளே பார்- எம் எஸ் வி- டி கே ஆர்) எங்கிருந்தோ ஆசைகள் (சந்ரோதயம் - எம் எஸ் வி )பாடல்களை ஒப்பீடு செய்தால் இந்த "புரிந்து  கொள்ள முடியாத வசீகரத்தை" நாம் அடையாளம் காணலாம். (இங்கே நான் குறிப்பிட்டுள்ள பாடல்கள் எல்லாமே தரமான நல்லிசையின் அழகான வடிவங்கள்  என்பதில் சந்தேகமேயில்லை.) சில தீவிர இசை விரும்பிகள் இந்த இரட்டையர்களின் பாடல்களை மட்டுமே அனுமதிப்பதுண்டு. எம் எஸ் வி தனியாக படைத்த பாடல்களை அவர்கள் "என்ன இருந்தாலும் அது மாதிரி இல்லை" என்று தள்ளி வைத்துவிடுவதை நான் அறிந்திருக்கிறேன்.

          அவ்வாறான  ஒருவரை  மிக சமீபத்தில் நான் வழக்கமாகச் செல்லும் முடி திருத்தும் கடையில் சந்தித்தேன். என் முறைக்காக காத்திருக்க வேண்டியிருந்ததால் எப் எம்மில் ஒலித்துக்கொண்டிருந்த புதிய பாடல்களை வேறு வழியின்றி  கேட்டுக்கொண்டிருந்தேன். வழக்கமான சென்னைத்  தமிழில் வள வள பேச்சு, அதன் பின் படத்தின் பெயரைக்கூட சொல்லாமல் பாடல் என்று நிகழ்ச்சி போய்க்கொண்டிருந்தது. ஒலித்த பாடல்கள் ஏறக்குறைய எல்லாமே ஒரே வார்ப்பில் வெட்கமில்லாது பிரதி எடுக்கப்பட்ட ஆங்கிலப் பாடல்கள்  போன்று இருந்தன. அனைத்துப் பாடல்களிலும் ஒரே மாதிரியான குரலோடு  பாடகர்களும் உச்சத் தொனியில் கிரீச்சிட்டுக் கொண்டிருந்தார்கள். "சரி அடுத்த பாடலாவது தேறும்" என்று பொறுமையோடு இருந்தால் போனதே தேவலை என்ற ரீதியில் சத்தத் தொல்லை தொடர்ந்தது. நல்லவேளையாக சிறிது நேரத்தில் அடுத்த நிகழ்ச்சி ஆரம்பிக்க புதிதாக வந்த வானொலி ஜாக்கி சற்று எண்பதுகளை நோக்கி நகர்ந்தார். இளையராஜாவின் இசையில் வந்த 'கடலோரம் கடலோரம் அலைகள் வந்து விளையாடும்' என்ற ஆனந்த ராகம் படப் பாடல் ஒரு திடீர் புத்துணர்ச்சியை கொடுத்தது. பொதுவாக இந்தப் பாடலை நான் வேறு ஒரு சூழலில் கவனிக்காமல் கடந்து போயிருப்பேன். ஆனால் இன்றோ இந்தப் பாடல் 2013 ஆண்டின்  இசைச் சத்தங்களிலிருந்து வேறு தளத்திற்கு என்னை இட்டுச் சென்றது. அதுவரை கேட்ட ஓசைகளுக்கு மத்தியில் இதில் இசை இருந்தது. எனவே அந்த நேரத்திற்கு அந்தப் பாடலை என்னால் ரசிக்க முடிந்தது.
 
       "நான் எப் எம் சானல்களை வெறுக்கிறேன். ஒரு பாடல் கூட ஒழுங்காக இல்லை" என்று ஆரம்பித்தார் என் அருகில் இருந்த அந்த மனிதர். "ஏன் இந்தப் பாடல் நன்றாகத்தானே இருக்கிறது." என்றேன் நான். அம்மா கடலம்மா  என்று ஜேசுதாசும் இளையராஜாவும் இணைந்து பாடிக்கொண்டிருக்க  அவர் என்னை இளையராஜாவின் ரசிகன் என்றே  எண்ணியிருக்க வேண்டும். எனக்கும் அவர் அவ்வாறு என்னைப் பற்றி எண்ணுவதே அப்போதைக்கு தேவைப்பட்டது .

    "நான் இவைகளை பாடல்களாகவே மதிப்பதில்லை." என்றவர், "நீங்கள் பழைய பாடல்கள் கேட்பதுண்டா?"என்று என்னைக்  கேட்டார்."உண்டு. இதுவே பழைய பாடல்தானே?" என்றேன் அவரை சீண்டும் விதத்தில்.  அவர் முகம் சற்று உறைந்தது. பின்னர்,"பழைய பாடல்கள் என்றால் கருப்பு வெள்ளைப் படப் பாடல்கள்." என்று தீர்மானமாகச் சொன்னார்.

       பொதுவாக தமிழ்நாட்டில் இவ்வகையான பாடல்களை மக்கள் எம் ஜி ஆர் பாடல்கள், சிவாஜி பாடல்கள் என்று சொல்வதே வழக்கம்.எனவே இந்த மனிதர் கொஞ்சம் விஷயமுள்ளவர்தான் என்றுணர்ந்தேன்.இவரிடம் பேசினால் நிறைய தகவல்களை அபகரித்துக்கொள்ளலாம் என்ற சுயநலத்தில் பேச்சை தொடர்ந்தேன்."நீங்கள் சொல்வது அறுபதுகளில் வந்த பாடல்கள். அதையும் நான் கேட்பதுண்டு. குறிப்பாக ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ என்ற பாடல் எனக்கு மிக விருப்பம்" என்றேன். விருப்பம் என்று ஒரு பாடலை குறிப்பிடுவது எவ்வளவு சிரமம் மற்றும் அபத்தம் என்று அப்போது எனக்குப் புரிந்தது. நான் இப்படிச் சொன்னதும் அவர் முகத்தில் ஒரு சிலிர்ப்பான புன்னகை மலர்வதைக் கண்டேன். ."மிக அருமையான பாடல். அது போன்ற பாடல்கள் இனி வரப்போவதில்லை, அதுதான் உண்மையான இசை." என்று அமைதியாக பேசியவர்,"விஸ்வநாதன்- ராமமூர்த்தியுடன் இசை முடிந்துவிட்டது. அதன் பிறகு எங்கே வந்தன நல்ல பாடல்கள்? எல்லாமே விரசம்." என்று கடுமையான குரலுக்கு மாறினார். "வார்த்தைகள்  புரியவில்லை. அப்படி புரிந்தாலோ அவை படு கேவலமாக இருக்கின்றன ராகங்கள் என்றால் என்னவேன்றே  தெரியாதவர்கள் இசை அமைக்கிறார்கள்." என்று இன்றைய இசையை பிய்த்துப் போடத் துவங்கினார். ஒருவேளை இவர் அமுதவனாக இருப்பாரோ என்று கூட சற்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.

         " விஸ்வநாதன் ராமமூர்த்தி கூட்டணிக்குப் பிறகு விஸ்வநாதன் அதன் பின் இளையராஜா, பின் ரஹ்மான் வந்தார்களே? அவற்றில் உங்களுக்கு எதுவுமே பிடிக்கவில்லையா?" எனக் கேட்டேன் நான்."விஸ்வநாதன்-ராமமூர்த்தி கூட்டணியின் இனிமை விஸ்வநாதனிடம் இல்லை. அவர் தனியாக இசை அமைத்த பாடல்களில் பழைய இனிமை குறைந்திருந்தது. விஸ்வநாதனிடமே இல்லை என்னும்போது  இளையராஜா இவர்கள் பக்கத்தில் வரவே முடியாது. அவர் நாட்டுபுற இசையை பிரபலமாக்கினார். ஒரே மெட்டில் ஆயிரம் பாடல்கள் போட்டார்.  விஸ்வநாதன்-ராமமூர்த்தியிடம் இருந்த இசை நுணுக்கங்கள் அவரிடம் இல்லை." என்றவர், "ரஹ்மானை ஒரு இசை அமைப்பாளர் என்றே நான் எண்ணுவதில்லை. அவர்  ஒரு இசை கலப்பு செய்பவர். பெரும்பாலும் nativity இல்லாத பாடல்களாக அமைப்பவர் அவர்.    இளையராஜாவிடமாவது ஒரு பத்துப் பாடல்கள் தேறும். ரஹ்மானிடம் அதுவுமில்லை." என்று ரஹ்மானை கண்டபடி ஏசினார். அந்த பத்தும் அவர் என்னை இளையராஜா ரசிகன் என்று எண்ணியதால் வந்த an offer of compromise  என்பதும் எனக்குப் புரிந்தே இருந்தது. அதற்குள்  என் தலைக்கு மேல் வேலை வந்து விட்டதால்  அந்த விவாதத்தை துண்டிக்கவேண்டியிருந்தது. அது எனக்கு வருத்தமே.ஏனென்றால் நிறைய கேள்விகள் என்னிடம் மீதமிருந்தன அவரிடம் கேட்பதற்கு.

        அவரைப் போன்றவர்கள் நம் சமூகத்தில் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களை இணையத்திலோ அல்லது வெளிப்படையாகவோ காட்டிக்கொள்வதில்லை. தங்களுக்குள் தங்கள் விருப்பங்களை புதைத்துக் கொள்கிறார்கள். இணையத்தில் நான் என்ன விதமாக எழுதிக்கொண்டு வருகிறேன் என்று அவருக்கு தெரிந்திருக்காது. அதற்கு அவருக்கு அவசியமுமில்லை. இருப்பினும் நானும் அவரும் ஒரே பாதையிலேயே சென்றுகொண்டிருக்கிறோம் ஒரே ஒரு வித்தியாசத்தைத்தவிர.

     பழைய பாடல்களை வானொலியில் கேட்டிருந்த அனுபவம் இருந்தாலும் தனிப்பட்ட விதத்தில் என் இதயத்திற்கு அருகே அவற்றை  கொண்டு வந்தது தொண்ணூறுகளுக்குப் பிறகுதான். முன்பு அவற்றை கேட்கும் சமயத்தில் ரசிப்பதுண்டு. இப்போதோ ரசிப்பதற்காகவே கேட்கிறேன். சதீஷ் கண்ணன் என்ற ஒரு நண்பரைப் பற்றி இங்கே நான் குறிப்பிடுவது அவசியம் என்று உணர்கிறேன். அவர் ஒரு கூரியர் சர்விஸ் நடத்திக் கொண்டிருந்தார். நான் மாதம் ஒரு முறையேனும் அவர் அலுவலகம் செல்வதுண்டு. அவ்வாறு சென்ற பொழுதுகள் எல்லாமே அவர் அறையில் பழைய பாடல்கள் வெகு சத்தமாக ஒலித்துக்கொண்டிருப்பதை கேட்டிருக்கிறேன். இதில் வியப்பு என்னவென்றால் அவர் ஒரு இளைஞர். இருபதுகளின் இறுதியில் இருந்தவர்.நீண்ட நாட்களுக்குப் பிறகு கடைசி முறையாக அங்கே சென்றிருந்தபோது வழக்கம்போலவே  டி எம் எஸ் "பனியில்லாத மார்கழியா" என்று காதல் மொழி இசைத்துக்கொண்டிருந்தார். நண்பரோ என்னை சற்று காத்திருக்கச் சொல்லிவிட்டு எதோ விண்ணப்பங்களை பூர்த்தி செய்துகொண்டிருந்தார். பாடல் ஓய்ந்தது. "கேள்வி பிறந்தது அன்று"  என்று அடுத்த பாடல் துவங்க, என்னிடமிருந்தும் ஒரு கேள்வி பிறந்தது; '" உங்களுக்கு பழைய பாடல்கள் என்றால் ரொம்பவும் பிடிக்குமோ?" என்று அவரைக் கேட்டேன். இதற்கு என்னவிதமான பதிலை ஒருவர் சொல்லியிருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என்ன விதமான பதிலை நீங்கள் தயார் செய்து வைத்திருந்தாலும்  அவர் கூறியது நான் சற்றும் எதிர்பாராதது.  நண்பர் என்னை நிமிர்ந்து பார்த்தார். அவர் முகத்தில்  உதடு பிரியாத புன்னகை ஒன்று தோன்றியது. பின்னர் இப்படி சொன்னார்: "உயிர்". அவ்வளவே. பின் மறுபடி குனிந்து எழுதுவதை தொடர்ந்தார். நான்தான் அதிர்ந்து போனேன். அவர் அறையை விட்டு வெளியே வந்த போது எனக்குள் இருந்த போலித்தனம்  உடைந்திருந்தது. அதுவரை நான் பழைய பாடல்களை மிகவும் மெல்லிய சத்ததிலேயே கேட்டுக் கொண்டிருந்தேன். அதாவது என் வயதுக்கு பழைய பாடல்களை கேட்பது பொருத்தமானதில்லை என்ற பகட்டுச் சிந்தனை என்னிடம் இருந்தது. எனக்கு விருப்பமானதை என் விருப்பபடி கேட்பதில் எனக்குத் தயக்கங்கள் இருந்தன. சதீஷ் கண்ணன் அதை ஒரே நொடியில்  ஒரே சொல்லில் நொறுக்கி விட்டார்.  இப்போது அவரை நான் சந்திக்க வேண்டிய காரணங்கள் எதுவும் இல்லை. ஆனால் நன்றி சொல்ல வேண்டிய காரணம் ஒன்று இருக்கிறது.

     

அமெரிக்க இசைக் குழுவான   ஹூட்டர்ஸ் "இசையை திருப்பிக் கொடு" என்ற மிக அருமையான பாடல் ஒன்றை  பாடியிருக்கிறார்கள். பாடலின் கருத்து கரைந்துபோன  கானத்தை உள்ளம் தாங்காத வேதனையுடன்  நோக்கும் ஒரு இசை விரும்பி தன்  துயரத்தை அற்புதமாகப் பாடியிருப்பதாக இருக்கும்.  பாடலின் வரிகள் அவர்களுக்கு  மட்டுமல்லாது நமக்கும்  ஏற்புடையதாக இருப்பது இசைக்கு எல்லைகள் கிடையாது என்பதை நமக்கு உணர்த்துகிறது.


They took the beat away, replaced it with machines
They took the words away and threw 'em on a screen
They turned the switches on and handed us the phones
They blasted out our ears with endless monotones

Can you feel it, can you feel it
From a million miles away?
Can you hear it, can you hear it
Gettin' louder every day?

Give the music back, give the music back
Give the music back before it's gone
Give the music back, give the music back
Put the music back into the song

They drove the blues away and banished Rock 'n' Roll
They cut away the heart and sacrificed the soul
They closed the disco's down and shut off MTV
They locked the music up and threw away the key

And now a silence fills the rooms where once we sang
And all is quiet where the chimes of freedom rang
Somewhere a pirate ship is crashing through the waves
Sending a signal out, a ballad to the brave

Give the music back, give the music back
Give the music back before it's gone
Give the music back, give the music back
Put the music back where it belongs

Give the music back
(Oh, give it back)
Give the music back
(Oh, give it back)

Give the music back before it's gone
Give the music back, give the music back
Put the music back into the song
Before it's gone

 -"Give The Music Back' by Hooters from the album "Zig Zag" released in 1989.


     நல்ல இசையின் மீது  காதல் கொண்டிருப்பவர்கள் ஒரு விதத்தில் இசைத் தீவிரவாதிகள் என்று எண்ணத் தோன்றுகிறது. அவர்கள் விரும்பும் நறுமணம் பாடல்களில் சற்று குறைந்தால்கூட  அவர்கள் அதை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் சில சமரசங்கள் செய்துகொள்வது  நமது இசை ரசனையை கூர்மையாக்குகிறது என்பது என் எண்ணம்.  அவ்வாறில்லாவிட்டால் நாம் கண்டிப்பாக விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையை விட்டு வெளியே வரவே இயலாது.  அவ்வாறு வெளி வரவேண்டிய நிர்பந்தம் ஒன்றே நல்லிசையை நாம் புரிந்துகொள்ள உதவுகிறது. ஏனென்றால் தாகம் என்பதே தண்ணீரின் தேவையை நமக்கு உணர்த்துகிறது. தகிக்கும் வெப்பமே நம்மை நிழல் தேடி நகர வைக்கிறது. அதே நேரத்தில் நல்ல இசை என்ற மையப்புள்ளியை விட்டுவிடாலோ எல்லாவிதமான விரசங்களையும் இரைச்சல்களையும் நாம் வரவேற்கத்  தயாராகிவிட்டோம் என்று அர்த்தமாகிறது. இருந்தும் ஒரு குறிப்பிட்ட காலத்தை தாண்டி நாம் நமக்குப் பிடித்த இசையுடனே வாழ விரும்புகிறோம் அது எவ்வளவு பழையதாக இருந்தாலும். அப்போது சமரசங்களுக்கு கண்டிப்பாக இடமில்லை. Let it all be  music, precisely My music.அடுத்து: இசை விரும்பிகள் XIV --- பகல் விண்மீன்கள்.