Friday 26 April 2013

இசை  விரும்பிகள் IV - புதிய உச்சங்கள்.

           
   ஐம்பதுகளின் இறுதியில் தொடுவானத்தில்  ஒரு புதிய வெளிச்சமாக தோன்றிய மெல்லிசை அறுபதுகளில் அஸ்தமிக்காத சூரியனைப் போல சுடர்விட்டது. படத்திற்கு படம் இந்த இசை நிற்காத நதியைப் போல கரை புரண்டோடியது. இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாத எந்தத்  தமிழ் உள்ளமும் இருக்கமுடியாது.

      விஸ்வநாதன்-ராமமூர்த்தி  இரட்டையர்களைத் தவிர அதே காலகட்டத்தில் தன் இசைப் பயணத்தை ஆரம்பித்த கே வி மகாதேவன், ஏ எம் ராஜா போன்றவர்களும் மிக உன்னதமான திரையிசைப் பாடல்களை கொடுத்து மெல்லிசையை தமிழ்த் திரையின் இறவா இசையாக மாற்றி இருக்கிறார்கள்.

   

  திரையிசைத் திலகம் என்று அழைக்கப்பட்ட கே வீ  மகாதேவன் நாற்பதுகளில் ஒரு படத்திற்கு இசை அமைத்திருந்தாலும் ஐம்பதுகளில் வந்த "அவன் அமரன்" என்ற படத்தில்தான் அறிமுகம் ஆகிறார். மகாதேவன் கர்நாடக சங்கீதத்தில் அபாரமான தேர்ச்சி பெற்றவர். அவரது பாடல்களில் இந்த ராகங்கள் முன்னிறுத்தபட்டும்  தாளக்  கட்டு மிக உறுதியாகவும் பாடலுக்கு ஆதாரமாகவும் இருப்பதை அவற்றை   கேட்கும் போதே  நாம் புரிந்துகொள்ளலாம்.
    திருவருட்ச் செல்வர்(67) படத்தில்  கே வீ எம்மின் இசையில் வந்த ஒரு அபாரமான பாடல் "மன்னவன் வந்தானடி தோழி" இந்தப் பாடலில் கர்நாடக சங்கீதத்தின் வீச்சு வலிமையாக இருந்தாலும் அதை தாண்டிய இனிமை இருப்பதை உணரலாம் . 68இல் வந்த தில்லானா  மோகனாம்பாள் படத்தின் பாடல்கள் அனைத்தும்  மிகப் புகழ் பெற்றவை.அதில் ஆண் குரலே இல்லாத பாடல்களாக அமைத்தார் கே வீ எம். அந்தப் பாடல்கள் இன்றுவரை நம்மை சற்று ஒரு கணம் தாலாட்டி விட்டுப் போகத் தவறுவதில்லை. அதன் பின் வந்த வியட்நாம் வீடு(70) படத்தில் இடம் பெற்ற "உன் கண்ணில் நீர் வழிந்தால் " பாடல் கேட்பவரை ஆணியறைந்து உட்கார வைத்துவிடும். வயதான ஒரு தம்பதியினரின் ஆழமான காதலை இந்தப் பாடல் வேதனையுடன் உணர்த்தியது(இந்தப் பாடலின் இறுதியில் வரும் "என் தேவைகளை யாரறிவார்? உன்னைப்போல் தெய்வம் ஒன்றே தானறியும்"என்ற வரிகள் என்னை ஸ்தம்பிக்க வைத்தன) .கே வீ எம்மின்  கர்நாடக இசை ஞானத்திற்கு  சான்றாக வந்த ஒரு பாடல் திருவிளையாடல்(65)  படத்தில் இடம் பெற்ற மிகப் பிரசித்தி பெற்ற பாடலான "ஒரு நாள் போதுமா?". இந்தப்  பாடலின் ஒவ்வொரு வரிகளும் வெவ்வேறான கர்நாடக ராகங்களின் மீது கட்டப்பட்டது   என்பது  இன்றைய காலத்தில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.

         இதையும் தாண்டிய ஒரு மகத்தான இசைப் பிரவாகத்தை கே வீ எம் 1979 இல் அரங்கேற்றினார். இந்திய மொழிகளில் வந்த இசை பற்றிய படங்களிலேயே முதன்மையான படம் என்று சொல்லக்கூடிய சங்கராபரணம் வெளிவந்தது இந்த ஆண்டில்தான்.  கே  வீ எம்மின் இசையே அந்தப் படத்தை இன்றும் சாஸ்திரிய ராகங்களில் ஊறித்திளைத்தவர்கள் கொண்டாடும் படமாக மாற்றியது .அதன் அத்தனை பாடல்களையும் மொழி வேறுபாடின்றி தமிழர்கள் ரசித்தார்கள். இந்த படத்திற்கு வேறு யாரேனும் இசை அமைத்திருந்தால் இத்தனை வெற்றியை அந்தப் படம் பெற்றிருக்குமா என்பது சந்தேகமே. கர்நாடக ராகங்களின் மேன்மையை சொல்லும் இந்தப் படம் கே வீ எம்மின்  முத்திரையாலே சிறப்பு பெற்றது என்பது மறுக்க முடியாத உண்மை.
     கே வி மகாதேவனின் இசை வீச்சு விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் காலகட்டத்திலேயே நடந்தது. இவர்களின் நேர்த்தியான, இனிமையான இசையில் வந்த பாடல்கள் இது இவருடையதா அல்லது   அவருடையதா என்று கேட்பவரை குழப்பக்கூடிய அளவில் ஒரே கோட்டில் நூலிழை போல பின்னப்பட்டு மெல்லிசையின் புதிய பரிமாணங்களை கோடை மழை போல கொட்டித் தீர்த்தன. இவர்களின் ஒவ்வொரு பாடல்களும் புதிய திருப்பங்களை அறிமுகம் செய்து கேட்பவர்களின்  உள்ளத்தின் உள்ளே பயணித்து  அவர்களின் மென்மையான இசை ரசனையை இன்னும் மெருகேற்றி மேன்மையாக்கி அறுபதுகளை ஒரு அனாசயமான காலமாக மாற்றின. உதாரணத்திற்கு கீழே கே வி எம் மின் சில ரம்மியமான பாடல்களை தொகுத்துள்ளேன். அவற்றை படிக்கும் போதே உங்களுக்குள் ஒரு மின்சார உணர்ச்சி பாயும் என்பதில் சந்தேகமே இல்லை. நீங்களே பாருங்களேன்.
          சிட்டுக் குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா?   (டவுன் பஸ்-55),
         ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா, மணப்பாறை மாடுகட்டி,சொன்ன பேச்சை கேட்டுக்கணும் (மக்களைப் பெற்ற மகராசி-57), இங்கே கே வி எம் நமது நாட்டுபுற இசையை எந்த வித வெளிப்பூச்சும் இல்லாமல் அபாரமாக கையாண்டிருப்பதை காணலாம். மணப்பாறை மாடு கட்டி பாடல் இன்று வரை நாட்டுப்புற இசையின் அடையமுடியாத உச்சத்தில் வீற்றிருக்கிறது.  இதன் பின் வந்த வண்ணக்கிளி நாட்டுப்புற இசையின் முழு ஆளுமையையும் தமிழ்த் திரையிசைக்கு அர்ப்பணம் செய்தது.  இந்தப் படத்தின் பாடல்களே பின்னர் வந்த பல நாட்டுபுற இசைக்கு அடித்தளமிட்டன என்பது தெளிவு. அந்தப் படத்தின் பாடல்களை சற்று பாருங்கள்;
        காட்டு மல்லி பூத்திருக்க,அடிக்கிற கைதான் அணைக்கும்,வண்டி உருண்டோட அச்சாணி, மாட்டுக்கார வேலா, ஆத்திலே தண்ணி வர, சித்தாடை கட்டிக்கிட்டு, (வண்ணக்கிளி-59) இந்தப்  பாடல்கள் எல்லாமே நாட்டுப்புற இசையும் மெலிதான மெல்லிசையும் கலந்து உருவாக்கப்பட்ட ஆச்சர்யங்கள். 59 லேயே கே வி எம் நாட்டுப்புற இசையை வெற்றிகரமாகவும் வீரியமாகவும் கொண்டு வந்துவிட்டார். நாட்டுப்புற இசையை பலமாக திரையில் ஒலிக்கச் செய்தவர்  இவர். உண்மை இப்படி இருக்க   இசை ஞானமில்லாத சில உள்ளங்கள் எண்பதுகளில் வந்த பாடல்களை (அவை பெரும்பாலும் டப்பாங்குத்து வகையைச் சேர்ந்தவை ) பெரிய எழுத்தில் எழுதி யும்,பெருங்குரலெடுத்து  கத்தியும் அவற்றை நாட்டுப்புறப்  பாடல்களின் உச்சம் என்று முழங்குவது  நகைப்புக்குரியது.  நாட்டுப்புற இசையைப் பொருத்தவரை ஜி ராமநாதன், கே வி மகாதேவன் இவர்களுக்கு அடுத்தே  மற்ற யார் பெயரையும் நாம் இங்கே சொல்லமுடியும். இதை விஷயம் அறிந்தவர்கள் ஒத்துக்கொள்வார்கள். கே வீ எம் மின் மற்ற பிரபலமான பாடல்கள்;
      கொஞ்சி கொஞ்சி பேசி (கைதி கண்ணாயிரம்-60),
      வண்ணத் தமிழ்ப் பெண்னொருத்தி , காவியமா (பாவை விளக்கு-60),
       கட்டித் தங்கம், நடக்கும் என்பார்,(தாயைக் காத்த தனயன்-60)
     எண்ணிரெண்டு பதினாறு வயது,   மடிமீது தலை வைத்து, நடையா  இது நடையா, (அன்னை இல்லம்-61), மேற்கத்திய இசையின் தீற்றலை இங்கே நாம் உணரலாம்.
         ஒரே ஒரு ஊரிலே, சீவி முடிச்சு, சிலர் அழுவார் (படிக்காத மேதை-61),
     சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய் ,பாட்டு ஒரு பாட்டு, போயும் போயும் ,காட்டுக்குள்ளே திருவிழா (தாய் சொல்லைத் தட்டாதே-61)
    மெல்ல மெல்ல அருகில், ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால், கண்ணானால் நான் (சாரதா-62)
   பசுமை நிறைந்த நினைவுகளே (ரத்தத் திலகம்-63),
   சின்ன சிறிய வண்ணப்பறவை (அருமையான பாடல்),பூந்தோட்டக் காவல்காரா, மயக்கம் எனது தாயகம், தூங்காத கண்ணொன்று ஒன்று (குங்குமம்-63),
     உன்னைச் சொல்லி குற்றமில்லை, இரவுக்கு ஆயிரம் கண்கள், ராதே உனக்கு கோபம் (குலமகள் ராதை-63),
       கங்கை கரைத் தோட்டம் (கர்நாடக ராகங்கள் பிசிறின்றி ஒலித்து  அவைகள் தெரியாதவர்களும் தலையாட்டும் பாடல் இது), ஏட்டில் எழுதி வைத்தேன் (வானம்பாடி-63),
      நதி எங்கே போகிறது, பறவைகள் பலவிதம், அழகு சிரிக்கின்றது, இதய வீணை  (இருவர் உள்ளம்-63)
       உன்னை அறிந்தால்- வேட்டைக்காரன் (64)
       உன்னைக் காணாத கண்ணும் (இதயக் கமலம்-65),
    கல்வியா செல்வமா வீரமா?,தெய்வம் இருப்பது எங்கே? (சரஸ்வதி சபதம்-66),
         கன்னத்தில் என்னடி காயம், உழைக்கும் கைகளே, ஒரே முறைதான் (தனிப்பிறவி-66),
     என்றும் பதினாறு(கன்னிப்பெண்-66) இந்தப் பாடல் மெல்லிசை-மேற்கத்திய இசை கலப்பின் உன்னதம் என்று சொல்லலாம். பாடும் குரல்களை தாண்டிச் செல்லாமல் பேஸ் கிடார் ஒரு அடிநாதமாக பாடல் முழுதும் பாய்ந்து வந்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
      நல்ல நல்ல நிலம் பார்த்து, கடவுள் என்னும் முதலாளி (விவசாயி-67),
    ஆயிரம் நிலவே வா, தாயிலாமல் நானில்லை, ஏமாற்றாதே,அம்மா என்றால் அன்பு,காலத்தை வென்றவன் நீ (அடிமைப் பெண்-69)
      ஓடி ஓடி, நீ தொட்டால், ஆகட்டுண்டா தம்பி, டிக் டிக் (நல்ல நேரம்-72)
      அன்னமிட்ட கை, பதினாறு வயதினிலே பதினேழு (அன்னமிட்ட கை-72)
  யாருக்காக, ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்,குடிமகனே,மயக்கம் என்ன,கலைமகள் கைப்பொருளே (வசந்த மாளிகை-73). வசந்த மாளிகை என்ற மகா வெற்றிக்குப் பிறகு  கே வி எம் வணிக ரீதியாக  சற்று சரிவை நோக்கி நகரத் துவங்கினார். அவரால் அறுபதுகளை மீட்டெடுக்க முடியவில்லை.   எழுபதுகளின் மத்தியில் தமிழ்த் திரையிசையில் ஒரு அதிரடி மாற்றம் ஏற்பட்டு பழைய இசை புதிய இசை என்று இரண்டு வகைகள் தோன்றின. இதைப் பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம். இருப்பினும் சில நல்ல பாடல்கள் "பழைய" இசையிலிருந்து வந்தவண்ணம் இருந்தன.
      கேளாய் மகனே (உத்தமன் -76),
     பூந்தேனில் கலந்து(ஏணிப்படிகள்-79),
     நதிக்கரை ஓரத்து நாணல்களே (காதல் கிளிகள்-80),
  இதய வாசல் திறந்த போது, நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம் (தூங்காத கண்ணொன்று ஒன்று -83) இதன் பின் கே வி எம் மின் பெயர் திரையில் அரிதாகவே தோன்றியது.
    சரிவில்லாத பயணம் யாருக்கும் கைக்கூடுவதில்லை.



    ஐம்பதுகளில் தமிழ்த் திரையிசையில் மற்றொரு   மகா பெரிய ஆளுமை மையம் கொண்டது. மிகச் சிறப்பான இசை ஞானம் கொண்ட அவர் பிடிவாத போக்கினாலும்,எதற்கும் முரண்படாத தன் சுய தீர்மானித்தலாலும்,பிற வணிக அவசியங்களுக்கு உட்படாத தன்னுடைய வளையாத முடிவுகளாலும் பிற்பாடு ஓரம் கட்டப்பட்டு அதன் பின் பொதுநினைவுகளில் இருந்து மறக்கடிக்கப்பட்டார்.அவரே நம் திரையிசையில்  உள்ளதை உருக்கும்  பல பாடல்களுக்கு உரியவரான திரு ஏ எம் ராஜா அவர்கள்.  திரையிசையில் ராஜா போன்றவர்கள் மிகவும் அரியவர்கள்.(எனவேதான் அவர்கள் அறியப்படாமல் இருக்கின்றார்கள்).இந்த பத்தியில் நான் ராஜா என்று அழைப்பது ஏ எம் ராஜா அவர்களையன்றி வேறு எந்த ராஜாவையும் அல்ல என்பதை தெளிவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.
     
 ராஜா ஒரு  பாடகராகவே இப்போது எல்லோருக்கும் அறிமுகப்படுத்தப்படுகிறார்.அதில் தவறே  இல்லை. பல அருமையான பாடல்களை தன் வசீகர குரலினால் வடிகட்டி அவைகளை இறவா தன்மை அடையச் செய்தவர் இவர். என்றாலும் இவர் ஒரு மேதமையான இசைஞர்.சாஸ்திரிய ராகங்களும் மேற்கத்திய இசையும் இவரிடத்தில் ஒருசேர அலட்டிக்கொள்ளாமல் அமர்ந்தன. நான் என் பள்ளி நாட்களில் அபூர்வமாகக் கேட்டசில "பழைய" பாடல்கள் இவருடையது.அப்போதே இந்தக் குரல் என் நரம்புகளை எல்லாம் வெட்டிவிட்டு இசையால் என்னை நிரப்பியது.உணமையைச் சொல்லவேண்டுமென்றால்  ஏ எம் ராஜாவை விரும்பாதவர்கள்  உண்மையில் இசை ஏழைகள்.

       ராஜா தெலுகிலும் மலையாளத்திலும் ஹிந்தியிலும் மற்றும் தமிழிலும்  பலப் பாடல்களைப் பாடியவர். இருந்தும் அவர் ஒரு இசைஞராக மாற பெரிதும் விரும்பினார் என்று தெரிகிறது. எம் ஜி ஆர் நடித்த ஜெனோவா படத்திற்கு முதலில் ராஜாவைத்தான் ஒப்பந்தம் செய்ததாகவும்  அதன் பின் அந்த வாய்ப்பு எம் எஸ் வி க்கு சென்றுவிட்டதாகவும்  அறிகிறோம்.(சிலர் இந்த ஜெனோவா தான் எம் எஸ் வி யின் முதல் படம் என்று சொல்வதுண்டு). அப்போது ரத்த பாசம் படத்தில் வசனம் எழுதிய   ராஜாவின் நெருங்கிய தோழனாகிய அந்த இளைஞர் தான் எடுக்கப்போகும் முதல் படத்தில் ராஜாவையே இசைஞராக போடப் போவதாக உறுதி அளித்ததோடு தனக்கு அந்த வாய்ப்பு வந்த போது அதைச் செய்யத் தயங்கவில்லை..அந்தப் படம் தமிழ்த் திரையின் மாறிவரும் முகத்தை முன்னிறுத்தி காதல் என்ற கருப்பொருளை ஒரு  மூன்றுமணிநேரப் படத்தின் முதன்மை நாயகனாக  நம் திரைக்கு அறிமுகம் செய்தது.  கல்யாண பரிசு என்ற அந்தப் படம் அந்த காலத்து இளைய தலைமுறையினரின் இதயத் துடிப்பைத் துல்லியமாக பிரதிபலித்தது. ராஜாவை திரைஇசைக்கு அழைத்து வந்த அந்தத்  தோழன் ஸ்ரீதர்.

       ராஜாவின் முதல் இசைப் பயணம் 59 இல் துவங்கியது. கல்யாண பரிசு படத்தின் பாடல்கள் தீபாவளி வெடிகளைப் போல தமிழகம் முழுவதும் அதிர்ந்தன. பாடல்களைப் பாருங்களேன்; துள்ளாத மனமும் துள்ளும் ,ஆசையினாலே மனம், காதலிலே தோல்வியுற்றான் , உன்னைக் கண்டு நானாட, வாடிக்கை மறந்ததும் ஏனோ. எல்லாப் பாடல்களும் நம் மனதை ஆக்ரமிக்கும் வலிமை கொண்டவை. ராஜா தன் இசை மேதமையை தன் முதல் படத்திலேயே நிரூபித்துவிட்டார் என்று தோன்றுகிறது.  "பழைய" இசை என்று ஒரு மேம்போக்கான ஆயத்த காரணத்தைக் காட்டி இந்தப் பாடல்களை ஒதுக்கித் தள்ளலாமே ஒழிய வேறு எந்த குற்றமும் இவைகளில் காணமுடியாது என்பது திண்ணம்.  60இல் ராஜா-ஸ்ரீதர் இணைப்பில் விடிவெள்ளி என்ற படம் வெளிவந்தது. அடுத்த வருடம் ராஜாவின் இசை இன்னொரு உச்சத்தைத் தொட்டது. தேன் நிலவு (61) படம் ராஜாவின் இசையை வேறு பரிமானத்திற்கு கொண்டுசென்றது. மட்டுமல்லாது தமிழ் இசை ரசிகர்களின் ரசனையையும் மெருகூட்டியது. நிலவும் மலரும் ,காலையும் நீயே, போன்ற பாடல்கள் பெருத்த வரவேற்பைப் பெற்றன. இன்னும் இரண்டு மகத்தான பாடல்கள் இங்கே இருக்கின்றன. ஒன்று ஓஹோ எந்தன் பேபி இன்னொன்று இன்றைக்கும் இளமையாக இருக்கும் பாட்டுப்பாடவா. 

       பாட்டுப்பாடவா பாடல் ஒரு அற்புதம்.இந்தப் பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம் எனக்கு வானவில்லை முதலில் பார்த்த திகைப்பும், ரயிலில் ஜன்னலோரம் பயணம் செய்யும் ரசிப்பும், மழையில் நடக்கும் மகிழ்ச்சியும், கவிதை எழுதிய களிப்பும், அரவணைக்க கைகள் இருந்த ஆனந்தமும் ஒரு சேர உண்டாகத் தவறுவதில்லை. பொதுவாக நான் பாடல்களை பிரித்து மேய்ந்து ஆராய்பவன் கிடயாது. அது முட்டாள்தனம் என்ற எண்ணம் எனக்குண்டு. ஆனால் இது  மேற்கத்திய இசையும் மெல்லிசையும்  சுகமாக உறவு கொண்ட   ஒரு அரிதான பாடல். ராஜாவின் குரலோடு பாடல் முழுவதும் நிழலாக வரும் குதிரை ஒலியும், குரல் இல்லாத இடத்தை அழகாக நிரப்பும் மேற்கத்திய பாணி  இசையும், பாடலின் இறுதியில் மனதை மயிலிறகால் வருடுவதைப் போன்ற  சீழ்க்கை ஓசையும் இந்தப் பாடலை மெல்லிசையின் முகமாகவே தோற்றம் கொள்ளச் செய்கிறது.மேலும் பாடலின் முடிவில் இசை சிறிது சிறிதாக மறையும் fade out என்ற மேற்கத்திய யுக்தியை காணலாம். அந்த காலத்தில் வெகு சில பாடல்களே இப்படி fade out முறையில் கையாளப்பட்டிருக்கும்.இதற்கு மேலும் எழுதினால் இது  மனதைக்  கவர்ந்த  ஒரு பாடலை சிலாகிக்கும் ஒரு வழக்கமான பதிவாகிவிடக்கூடிய அபாயம் இருப்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

     ராஜாவுக்கும் ஸ்ரீதருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு அதன் பின் ஸ்ரீதரே அவரிடம் தன் அடுத்த படத்திற்கு இசை அமைக்க கேட்டும் ராஜா மறுத்துவிட, ராஜாவின் ரம்மியமான இன்னிசைக்கு முதல் சுவர் எழுப்பப்பட்டது. இந்த காலகட்டத்தில் அவர் பல அருமையான பாடல்களைப் பாடி தன் ஆளுமையை நிலை நிறுத்திக்கொண்டாலும் அவரால் நீண்ட காலங்கள் போரிட முடியவில்லை. இறுதியில் பி பி ஸ்ரீனிவாஸின் குரலில் ராஜாவின் மாற்று கண்டுபிடிக்கப்பட, ராஜாவுக்கு தமிழ்த்  திரையின் கதவுகள்  அடைக்கப்பட்டு அவர்  தனித்து விடப்பட்டார்.  வணிக    சமரசங்களுக்கு உடன் படாத ராஜா தன் வழியே தனியே பயணம் செய்யத் துவங்கினார். அவர் மீண்டும் திரும்பி வந்த போது இசை வெகுவாக மாறி இருந்தது. ராஜாவின் இசை அமைப்பில் வந்த படங்களையும் அவர் பாடிய சில  பாடல்களையும் இப்போது பார்ப்போம்;
 
           ராஜாவின் இசை அமைப்பு சில படங்களுக்கே இருந்தது.    கல்யாண பரிசு -59, விடிவெள்ளி-60, தேன் நிலவு-61, ஆடிப்பெருக்கு-62,வீட்டு மாப்பிள்ளை -73,எனக்கொரு மகன் பிறந்தான்-75. அவர் ஒரு அபாரமான பாடகர். பொதுவாக ராஜா எல்லா இசைஞர்களின் படங்களிலும்  பாடல்களைப்  பாடி இருக்கிறார். இருந்தும் ஐம்பதுகளிலேயே  எம் எஸ் வி ராஜாவை தவிர்த்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இதற்கும் ராஜாவின் வழக்கமான கண்டிப்பான போக்கே காரணமாக இருக்கலாம். ராஜா பாடிய  அத்தனை இனிமையான பாடல்களையும்  இங்கே பட்டியலிடுவது  தேவையில்லாதது  என்பதால் சிலவற்றை மட்டும் கீழே கொடுத்துள்ளேன்.

  காதல் வாழ்வில்-எதிர்பாராதது(54)
  மயக்கும் மாலைபொழுதே நீ -குலேபகாவலி (55)
  வாராயோ வெண்ணிலாவே,பிருந்தாவனமும் -மிஸ்ஸியம்மா (55)
  மாசிலா உண்மை காதலே-அலிபாபாவும் 40 திருடர்களும்(56)
  கண்மூடும் வேளையிலும் -மகாதேவி (57)
  தென்றல் உறங்கிய போதும் -பெற்ற மகனை விற்ற அன்னை (58)
 கண்களின் வார்த்தைகள் தெரியாதா, ஆடாத மனமும் ஆடுதே-களத்தூர்    கண்ணம்மா (59)
  துயிலாத பெண் ஒன்று, கலையே என் வாழ்கையின்- மீண்ட சொர்க்கம் (60)  
  தினமிதுவே -கொஞ்சும் சலங்கை(62)
  காவேரி ஓரம் கவி சொன்ன-ஆடிப்பெருக்கு (62)( இதை நினைவு படுத்திய திரு அமுதவன் அவர்களுக்கு நன்றி.)
 தெரியுமா-பாசமும் நேசமும் (64)
 சின்னக் கண்ணனே- தாய்க்கு ஒரு பிள்ளை(72)
 ராசி நல்ல ராசி-வீட்டு மாப்பிள்ளை (73)
       ராஜாவின் தொடர்ச்சியாக ஒலித்த பி பி  ஸ்ரீனிவாசின் குரல் பல அருமையான பாடல்களை  நமக்கு வழங்கி இருக்கிறது. ஸ்ரீனிவாசின் தொடர்ச்சியாகவே எஸ் பி பாலசுப்ரமணியம் எம் ஜி ஆரால் வரவைக்கப்பட்டார் என்று ஒரு கருத்து உண்டு. இவர்கள் மூவரிடமும் ஒரு ஒற்றுமையை நாம் காணலாம். இந்த மூவரும் பெண் தன்மை கொண்ட தங்கள் குரலினால் அதிக ஆர்பாட்டம் இல்லாமல் மிக நளினமாகப் பாடியவர்கள். (பின்னாட்களில் எஸ் பி பி வேறு பாணியில் பாட ஆரம்பித்தது தனிக் கதை).

      டி ஆர் பாப்பா இப்போது அதிகம் அறியப்படாத மற்றொரு சிறந்த இசைஞர். இவர் ஐம்பதுகளில் அறிமுகம் ஆகி அறுபதுகளில் சிறப்பான பல பாடல்களை கொடுத்துள்ளார்.  இரவும் பகலும்(65) (ஜெய்ஷங்கர் அறிமுகம்)படத்தின் பிரபலமான இரவும் வரும் பகலும் வரும், உள்ளத்தின் கதவுகள் கண்களடா, இறந்தவனை சுமந்தவனும் பாடல்களை அமைத்தவர். குமார ராஜா (61) படத்தில் சந்திரபாபு பாடிய ஒண்ணுமே புரியலே உலகத்திலே, சமரசம் உலவும் இடமே (ரம்பையின் காதல்-56), வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கு (மல்லிகா -57)சின்னசிறிய வயது முதல் (தாய் மகளுக்கு கட்டிய தாலி-56) போன்ற பாடல்கள் இவரிடமிருந்து உருவானவை. அதிகப் படங்களுக்கு இசை இவர் அமைக்கவில்லை என்று தெரிகிறது. சீர்காழி கோவிந்தராஜனுடன் சேர்ந்து இவர் நிறைய ஆன்மீகப் பாடல்களை அமைத்துள்ளதை அறிய முடிகிறது.

      மெல்லிசை வந்த பிறகே நம் தமிழ்த் திரையிசை வளம் பெற்றது. புதிய எல்லைகளும்,புதிய திருப்பங்களும், புதிய உச்சங்களும் இங்கே சாத்தியமாயின. இந்த வாக்கியம் சாஸ்திரிய சங்கீதத்தின் மேன்மையை இழித்துக் கூறுவதாக கண்டிப்பாக  நான் எண்ணவில்லை.சபாக்களில் பாடும் பாடல்களை மட்டுமே இசை என்று அங்கீகரிக்கும் "மேதாவித்தனமான" ரசனை எல்லோருக்கும் இருப்பதில்லை.அப்படிப்பட்ட உயர்ந்த ரசனை நம்மை பாமரர்களிடமிருந்து தனிமைப் படுத்திவிடக் கூடியது.இசையின் பண்முகத்தன்மையை மறுக்கக்கூடியது. வளர்ச்சிகளுக்கு வழி காட்டாதது. இசை உயர்ந்த இடங்களில் மட்டுமே இருக்கும் ஒரு விலை மதிப்பில்லா  ஆபரணமல்ல. அது எளிமையானது .  சிரமங்களின்றி புரிந்து கொள்ளக்கூடியது . ஒரு டிஜிட்டல் கைக்கடிகாரம்  சுலபமாக  நமக்கு நேரத்தை உணர்த்துவதைப் போன்று.


     அடுத்து: இசை விரும்பிகள் V -  வென்ற இசை.




 
 
 
 
      

Friday 19 April 2013

இசை விரும்பிகள் III - மெல்லிசை மலர்ந்தது.

     தமிழ்த் திரையிசை 1931 இல் துவங்கி இன்று வரை   ஏறத்தாழ எண்பது ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. ஆரம்பத்தில் கடினமானதாகவும் மாற்றங்களுக்குத் தடுப்புச்சுவராகவும்  இருந்து  வந்த இந்த இரும்பு இசை இருபது ஆண்டுகள் கழித்து முதல் முறையாக  மெல்ல  வடிவம் மாறத்துவங்கியது. ஏனெனில் இந்த மாற்றத்திற்கான அவசியம் ஏற்பட காலம் கனிந்தது அப்போதுதான். இதில் கவனிக்கத் தக்க   ஒரு விஷயம் என்னவென்றால் மேலை நாடுகளில் 1950 களை  இசை மாற்றத்திற்கான பருவமாகவும் ஒரு குறியீடாகவும்  இசை  விமர்சகர்கள் கூறுவதுண்டு. இது நமக்கும் பொருந்தும்.
          1952 இல் தமிழ் திரையிலும்  ஒரு மகா மாற்றம் ஏற்பட்டது. அல்லது இப்படிச் சொல்லலாம்: பராசக்தி  நிகழ்ந்தது.  இந்த ஆண்டில்தான் சமூக கதைக்களம் கொண்ட  ஏ வி எம் மின் "பராசக்தி" வெளி வந்து மிகப்பெரிய அலைகளை உருவாக்கியது. இதற்கு முன்பே சில சமூக படங்கள் (ஏழை படும் பாடு-1950, ஓர் இரவு-1951, வேலைக்காரி மேலும் சில வீணை பாலச்சந்தரின் படங்கள் ) வந்திருந்தாலும் ,அவைகள் சாதிக்கமுடியாத ஒன்றை இந்தப்படம் செய்தது.அது இதுதான்: பராசக்தி  தமிழ்த் திரையை ஒரேடியாக புரட்டிப்போட்டது. அதன் வீச்சு வெகு ஆக்ரோஷமாக ராட்சத அளவில் இருந்தது. அதுவரை தமிழ்த் திரையுலகம் காணாத ஒரு மாற்றத்திற்கான முதல் புள்ளி அங்கே வைக்கப்பட்டது. அதன்  மூச்சு முட்டும் வெற்றி முகவரி இல்லாத ஒரு நடிகனை ஒரே இரவில் தமிழகத்தின் தலைப்புச்  செய்தியாக்கியது. ஒரே  வரியில் சொல்ல வேண்டுமென்றால் அதுவரை பாடல்கள் மூலம் வசனங்களை படம் முழுவதும்  பாடிக்கொண்டிருந்த அன்றைய உச்ச நடிகர்கள் சிவாஜியின் கூர்மையான தமிழ் உச்சரிப்பின்  சூடு தாங்காது ஒரே நொடியில் பஸ்பமாகிப் போனார்கள்.தமிழ் திரைஉலகம் ஒரு புதிய களத்தை அடையாளம் கண்டுகொண்டது.  பராசக்தியின் ராட்சத வெற்றி தமிழ் ரசிகர்கள் மனதின் ஆழத்தில் கொண்டிருந்த மாற்றத்தின் விருப்பத்தை வெடித்து உணர்த்தியது. இதுவே அன்றைய மக்கள் விரும்பிய மாற்றம். இருபது ஆண்டுகள் ஒரு பாமரனை இதிகாச புராண மற்றும் அவன் வாழ்ந்த காலத்திற்குப்  பொருந்தாத அரச கதைகளை வைத்தே கட்டிப்போட்டிருந்த தமிழ் திரையுலகத்தின்  துடிக்காத இதயத்தில் பராசக்தி முதல் ஆணியை அடித்தது.  சில திரை  விமர்சகர்கள் சொல்வதுபோல அப்போது பராசக்தி நிகழாமல் போயிருந்தால் அல்லது சிவாஜிக்குப் பதில் வேறொருவர் அதில் நடித்திருந்தால் (முதலில் எம் கே ராதா மற்றும் கல்கத்தா விஸ்வநாதன் அந்த பாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார்கள் ) தமிழ்த் திரையின் வளர்ச்சி இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் தள்ளிப் போயிருக்கும்.

     பராசக்தி என்ற  படத்தின் அசுர வெற்றி தமிழ்த் திரையிசைக்கு  பெரிதும் உதவியது என்பதை சொல்வதற்காகவே மேற்கண்ட பத்தி எழுதப்பட்டது. (உண்மையில் பராசக்தி தமிழில் நாடகத்தனமான படங்கள் வர பாதை அமைத்துக்கொடுத்தது என்பது என் தனிப்பட்ட எண்ணம்). பராசக்தி உடைத்த பல  சம்பிரதாயங்கள்  ஒரு புதிய சிந்தனைக்கு விதை தூவின. சமூக கதைக்களம் தமிழ்த் திரையின்  ஒரு முக்கிய அங்கமாக முன்மொழியப்பட்டது. இந்த மாற்றம் இசை அமைப்பிலும் பிரதிபலிக்க ஆரம்பித்தது. முதல் முறையாக திரையிசை பக்தி,சமயம், சிம்மாசனம், கோட்டை, போர்வாள்,வீரம்   போன்ற ஆயத்தமான சங்கதிகளைஒதுக்கி  விட்டு மக்களிசையை நோக்கி திசை மாற ஆரம்பித்தது. பராசக்தி படத்தில் வரும் மேற்கத்திய பாணியோடு ஒலிக்கும்  "ஒ ரசிக்கும் சீமானே"(இசை சுதர்சனம்) பாடலின்  அமைப்பு, இசை வாத்திய முழக்கம் போன்றவை  அந்த காலத்து இசையை விட்டு சற்று வேறுவிதமாக இருப்பதை நாம் உணர முடியும். கருப்பொருள் மற்றும் கதைக்களம் மாறியதால் இசையும் அதற்கேற்றார்போல் மாற வேண்டியதாக இருந்தது. இதற்காகவே  நாம் பராசக்தியை தாராளமாகப் பாராட்டலாம். கரு மேகங்கள் சூழ்ந்தன. ஆனாலும் மழை பொழியவில்லை.ஏனென்றால் மெல்லிசையின் காலம் இன்னும் கனியவில்லை.

       மக்கள் விரும்பிய அந்த மழையை கொண்டுவந்த  மிக முக்கியமான  இசைஞர்களைப் பற்றி இங்கே நாம்  சொல்லியாக வேண்டும். அவர்கள்  ஜி. ராமநாதன்,சுப்பையா நாயுடு, ஆர்  சுதர்சனம்,   சி ஆர் சுப்புராமன்,  டி  ஆர் பாப்பா, ஏ எம் ராஜா, கே வி மகாதேவன்,  டி  கே ராமமூர்த்தி, மற்றும் எம் எஸ் விஸ்வநாதன். இவர்களின் இசை பங்களிப்பு மெல்லிசைக்கு ஆதாரமான முதல் படியை ஆரம்பித்து வைத்தது என்பதில் மறுப்புக் கருத்து இருக்கவே முடியாது. கடின இசைக்கும்  மெல்லிசைக்கும் இடையே இவர்கள் தங்கள்  இசையை மிகவும் கவனமாக நகர்த்திச் செல்ல வேண்டி இருந்தது. இப்போது இந்த மிக சிக்கலான காலகட்டத்தை திரும்பிப் பார்க்கும்போது இந்த மாறுதல்ஒரு திடீர் மாற்றமாக இல்லாமல்  ஒரு பூ மலர்வதைப்போல மிகவும் நளினமாக  இருந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஐம்பதுகள் முழுவதும் இந்த முகமாற்றம் நடைபெற்றது. ஐம்பதுகளின் இறுதியில் மெல்லிசை என்ற மழை பீறிட்டுப் பெய்து, தமிழ் ரசிகர்களை சொட்டச் சொட்ட நனைத்தது.

          இசை மேதை என்று அழைக்கப்படும் ஜி. ராமநாதன் நாற்பதுகளிலேயே வந்துவிட்டாலும் அவரின் கை ஓங்கியது ஐம்பதுகளில்தான்.தமிழ்த் திரையிசையை மக்கள் விரும்பும் வடிவத்துக்கு மாற்ற இவர் நிறைய முயற்சிகள்  செய்திருப்பது தெளிவு. முதல் முறையாக நாட்டுப்புற இசையை திரையிசை மூலம் வெளியுலகுக்கு கொண்டுவந்த சிலரில் ஜி ராமநாதன் மிக முக்கியமானவர். சாஸ்திரிய ராகங்கள் பலமாக ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில்  நாட்டுப்புற இசையை கலந்து பாடல்கள் கொடுத்தவர். 53 இல் வந்த "திரும்பிப்பார்  படத்தில் வரும் "கலப்படம், கலப்படம் எங்கும் எதிலும் கலப்படம்" பாடலை இதற்கு உதாரணமாக சொல்லலாம்( என் எஸ் கிருஷ்ணன் இந்த வகைப் பாடல்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் பெரும் பங்கு வகிக்கிறார். ) தமிழ் சினிமாவில் நடந்த  அதிசயமான எம் ஜி ஆர் , சிவாஜி  என்ற இரண்டு மகா ஆளுமைகள் நடித்த ஒரே படமான "கூண்டுக்கிளி" படத்திற்கு இசை அமைத்த பெருமை பெற்றவர் ஜி ராமநாதன் . அதில் வரும் மிக புகழ் பெற்ற பாடல் "காயாத கானகத்தே". தொடர்ந்து வந்த எம் ஜி ஆர்   நடித்த "மதுரை வீரன்" (56) படத்தில் வரும் இன்னொரு அனாசயமான நாட்டுப்புற பாடல் "வாங்க மச்சான் வாங்க". இதில்தான் "நாடகமெல்லாம் கண்டேன்" என்ற மற்றொரு பிரபலமான பாடல் இடம் பெற்றது. 56 இல் சிவாஜி நடிப்பில் வந்த "நான் பெற்ற செல்வம்" படத்தில்   "நான் பெற்ற செல்வம்","வாழ்ந்தாலும் ஏசும்" பாடல்கள் மக்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்றன. 58 இல் வந்த உத்தம புத்திரன்  படத்தின் பாடல்கள் அத்தனையும்  சிகரம் தொட்டவை என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை . அவரின் மற்ற சில புகழ் பெற்ற பாடல்கள் இதோ;
    "மாசிலா நிலவே நம் காதலில்"(அம்பிகாபதி,57) வெகு இனிமையான பாடல்.
    "அமுதை பொழியும் நிலவே" (தங்கமலை ரகசியம்,57) அபாரமான பாடல்.
    "யாரடி நீ மோகினி"(மேற்கத்திய இசையும் சாஸ்திரிய இசையும் நேர்த்தியாக இழைந்த ஒரு ஆச்சர்யமான பாடல். மிக நவீனமாக இன்றைக்கும் ஒலிக்கும் பாடல் இது.),"முல்லை மலர் மேலே","உன்னழகை கன்னியர்கள் கண்ட","காத்திருப்பான கமலக்கண்ணன்" (உத்தம புத்திரன்,58)
     "இன்பம் பொங்கும் வெண்ணிலா" (வீரபாண்டிய கட்ட பொம்மன்,59)
     "சின்னப்பயலே சின்னப்பயலே " (அரசிளங்குமரி,61) இந்தப்  பாடலைப் பற்றி நான் என்ன சொன்னாலும் அது அபத்தமாகவே இருக்கும்
    இன்னும் பல அபாரமான பாடல்கள் இங்கே இடம் பெறவில்லை.மேற் குறிப்பிட்ட பாடல்கள் ஜி ராமநாதன் என்னும் இசை மேதையின் ஆளுமையை இதுதான் இசை என்று எண்பதுகளை சுட்டிக்காட்டும் சில அறிவிலிகளுக்கு உணர்த்தவே பிரத்தியேகமாக எழுதப்பட்டது .  ஜி.ராமனாதனின் இசை பயணம் 63 இல் முடிவு பெற்றது.  அதற்குள் அவர் தமிழ் திரையிசையின் சாகாவரம் பெற்ற பல பாடல்களை பிரசவித்து விட்டார். அவரின் பாடல்கள் எப்படி ஒரு கடின இசையை எளிமைப்படுத்தி நம் ரசனைக்கு அவற்றை உட்படுத்தின என்பதை அரைவேக்காட்டுத்தனமான இசை அறிவு உள்ள பலரின் புரிதலுக்கு விட்டுவிடுகிறேன். இன்னும் அவரின் இப்படிப்பட்ட அருமையான பாடல்களை அசட்டை  செய்யும் நபர்கள் கொஞ்சம் தள்ளி இருப்பது நல்லது. அவர்களின் இசை ரசனை வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்.
   
         படங்களில் பிண்ணனி பாடல் என்கிற புதிய யுக்தியை  (playback singing) தமிழ் திரையிசைக்கு அறிமுகம் செய்தவர் சுப்பையா நாயுடு.அதுவரை நடிகர்களே பாடியபடி நடித்ததே வரலாறு.(பாட முடியாதவர்கள் அன்று கதாநாயகனாக இருக்க முடியாது என்பதை எம் ஜி ஆர்  நாயகனாக மாற பத்து வருடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டி இருந்ததை வைத்தே கணிக்கலாம்.) 1947 இல் வந்த எம் ஜி ஆர்   முதல் முறையாக கதாநாயனாக நடித்த ராஜகுமாரி படத்தில் திருச்சி லோகநாதன் எம் என் நம்பியார்க்காக பாடிய "காசினிமேல் நாங்கள்" என்ற பாடலே தமிழ் திரையிசையில் பதிவு செய்யப்பட்ட முதல் பிண்ணனி பாடல். சுப்பையா நாயுடு ஜி ராமநாதனுடன் சேர்ந்து ஆரம்பகாலத்தில் பல படங்களில் இசை அமைத்திருக்கிறார்.தமிழ் திரையின் ஒ பி நையர் (ஹிந்தி யில் புகழ் பெற்ற இசை அமைப்பாளர்) என்று அழைக்கப்பட்டவர். இவரிடம் உதவியாளராக இருந்தவர்தான் எம் எஸ் விஸ்வநாதன். இவரிடமிருந்தே இசையை தான் கற்றுக்கொண்டதாக எம் எஸ் வி  எல்லா சந்தர்ப்பங்களிலும் சொல்வதுண்டு. சுப்பையா நாயுடு பல இனிமையான பாடல்களை நமக்கு  அளித்தவர். இவரின் பெயரை கேள்விப்பட்டிருந்தாலும் அவரின் பெயரை வைத்தே  என்ன பெரியதாக சாதித்திருக்கப் போகிறார் என்று ஒரு காலத்தில் இகழ்ச்சியாக எண்ணியவன் நான்,  அவருடைய சில புகழ் பெற்ற பாடல்களை கீழே  கொடுத்துள்ளேன். (இதை எழுதும்போது  எனக்கே குற்ற உணர்ச்சி உண்டாகிறது).

  "கலங்காதிரு மனமே "(படம்: கன்னியின் காதலி, ஆண்டு: 1949, கண்ணதாசனின் முதல் பாடல் இது)
      "எத்தனை காலந்தான் ஏமாற்றுவார்" (மலைக்கள்ளன், 1954)
      "தூங்காதே தம்பி தூங்காதே" (நாடோடி மன்னன், 1958)
      "குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே" (மரகதம், 1959)
      "திருடாதே பாப்பா திருடாதே" (திருடாதே, 1961)
      "சிங்கார  வேலனே தேவா " (கொஞ்சும் சலங்கை, 1962)
      "ஆசை கொண்ட மனம்", (கல்யாணியின் கணவன், 1963)
      "எத்தனை பெரிய மனிதருக்கு" (ஆசை முகம்,1965)
     "பிறந்த நாள்" (நாம் மூவர், 1966- நீண்ட நாட்களாக இது எம் எஸ் வி யின் பாடல் என்று நினைத்திருந்தேன்)
      "நீ எங்கே என் நினைவுகள் அங்கே" (மன்னிப்பு, 1969- மிக மென்மையான பசுமையான பாடல். மூன்றுவிதமான வித்தியாசமான மெட்டுக்களோடு இதே பாடலை அமைத்திருப்பார் சுப்பையா நாயுடு.) இன்றைக்கு பலர் (நானும் கூடவே சில சமயங்களில்)  பெரும்பாலும் பழைய பாடல்கள் என்றாலே ஒன்று எம் எஸ் வி அல்லது கே வி மகாதேவன் என்று குறிப்பிடும் பல பாடல்கள் இவரின் இசைச் சிதறல் என்பது வியப்பான உண்மை.

     தமிழ்த் திரையின் திசையை  மாற்றிய பராசக்தி படத்தின் இசை அமைப்பாளர் ஆர் சுதர்சனம். 1945 இல் இருந்தே  தமிழ்த் திரையிசையில் இருந்தாலும்  தன் தகுதிக்கான  அங்கீகாரத்தை இவர் அடையவில்லை என்பது  ஒரு வருத்தமான உண்மை.இவர் ஆரம்பத்தில் ஏ வி எம் மின் ஆஸ்தான இசை அமைப்பாளராக இருந்திருக்கிறார். ஸ்ரீ வள்ளி என்ற படத்தில் அறிமுகம் ஆனவர்.(தகவல் தவறாக இருப்பின் திருத்தலாம்) 47இல் வந்த மிகவும் புகழ் பெற்ற படமான நாம் இருவர் என்ற இந்திய சுதந்திரத்தை போற்றும் படத்தில் இவர் கொடுத்த பாடல்கள் அப்போது எங்கும் ஒலித்ததாக படித்திருக்கிறேன். "மகான் காந்தி மகான்" என்ற பாடலை குறிப்பிட்டால் சட்டென பலருக்கு புரியும்.தொடர்ந்து வேதாள உலகம்(48),வாழ்க்கை (49),ஓர் இரவு (51),பராசக்தி (52),பெண், (54),குல தெய்வம் (56), சகோதரி (59), தெய்வப் பிறவி (60), களத்தூர் கண்ணம்மா (62),அன்னை (62), நானும் ஒரு பெண் (63), பூம்புகார் (64), அன்புக்  கரங்கள்(65),கார்த்திகை தீபம் (65), மணிமகுடம் (66) போன்ற படங்களுக்கு இசை அமைத்தார் சுதர்சனம்.
        கல்யாணம் ஆஹா கல்யாணம் - பெண் ,
        நான் ஒரு முட்டாளுங்க,  - சகோதரி.
       அன்பிலே தேடிய என் அறிவு செல்வம்- தெய்வப் பிறவி.
      ஆடாத மனமும் ஆடுமே, கண்களின் வார்த்தைகள் புரியாதோ, அம்மாவும் நீயே அப்பாவும் நீயே -களத்தூர் கண்ணம்மா.
       புத்தியுள்ள மனிதரெல்லாம், அழகிய மிதிலை நகரிலே- அன்னை (முழுவதும் ஒரு வித மந்திரச் சுவை இழைந்து ஓடும் மிக அருமையான பாடல் இது. இதை விரும்பாதவர்கள்    கண்டிப்பாக இருக்க முடியாது என்று எண்ணுகிறேன். ஒருவேளை ....அப்படிப்பட்ட ரசனை குன்றிய  மனிதர்கள் இருக்கலாம்.)
      ஏமாறச்  சொன்னது நானோ, கண்ணா கருமை நிற கண்ணா, பூப்போல பூப்போல பிறக்கும்- நானும் ஒரு பெண்.
         ஒன்னா இருக்க கத்துக்கணும்,இரவு  முடிந்து விடும், காகிதத்தில் கப்பல் செய்து - அன்புக் கரங்கள்.
     
         மேலே குறிப்பிட  பாடல்களை கேட்டால் நாம்   தமிழ்த் திரையிசை கடின இசையை தாண்டி அடுத்த கட்டத்திற்கு வந்து விட்டதை நன்றாகவே புரிந்துகொள்ள முடியும். சுதர்சனம் பல  அருமையான பாடல்களை நமக்குக் கொடுத்தவர் என்பதில் எந்த விதமான மறுப்பும் இருக்க முடியாது என்பதும்  புரியும்.மெல்லிசைக்கான ஒரு புதிய பாதையை அமைத்தவர்களில் சுதர்சனம் ஒரு முக்கியமான, குறியீடான இசைஞர்.  ஆனால் இன்றைக்கு சுதர்சனம் என்றால் பலருக்கு மறந்துவிட்ட அல்லது ஒரு புதிய பெயராகவே இருப்பது நாம் சிலரையே நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறோம் என்ற உளவியலை உறுதிப்படுத்துகிறது.

      சி ஆர் சுப்புராமன் கர்நாடக ராகங்களில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தவர். எம் கே டி இவரின் இசையை கேட்டு விரும்பி இவரை தன்னுடைய "உதயணன்"(1945) படத்திற்கு  இசை அமைக்க சொல்லி இருக்கிறார். ஆனால் படம் வெளிவரும் முன்பே அந்த காலத்தின் அதிரடிச்  செய்தியாக இருந்த லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் சிறை சென்றுவிட, படம் கைவிடப்பட்டது. சுப்புராமனை தமிழ்த்திரை உலகம் அதிர்ஷ்டசாலி இல்லை என்று பட்டம் கட்டியது. இதன் நடுவே  சுப்பையா நாயுடுவின் ஆலோசனையின் படி ஒரு இளைஞனை(எம் எஸ் விஸ்வநாதன்) இவர் தன்னுடைய உதவியாளராக  சேர்த்துக்கொண்டார். சுப்புராமன் இசைக்குழுவில் ஏற்கனவே இருந்த  டி  கே ராமமூர்த்தியும் விஸ்வநாதனும் இணைந்தது இங்கேதான். இந்த இருவரின் சந்திப்பு தமிழ்த் திரையிசையின் மிக முக்கியமான கட்டம் என்பதை பின் வந்த அறுபதுகள் ஆணித்தரமாக நிரூபித்தன. 43 லிருந்து 53 வரை 37 படங்களுக்கு சுப்புராமன் இசை அமைத்திருக்கிறார். அவர் இசை அமைப்பில் வெளிவந்த   சில முக்கியமான படங்கள்  இவை:
       ரத்னமாலா(47), அபிமன்யு(48), ராஜமுக்தி(48),கன்னியின் காதலி(49,சுப்பையாநாயுடுவுடன்சேர்ந்துபணியாற்றியது), பாரிஜாதம்(50), மர்மயோகி(51), ராணி(52),  மருமகள்(53).

        53 இல் சி ஆர் சுப்புராமன் திடீரென மரணித்துவிட, அவரது  இசைப் பணிகள் தடைபட்டன. சுப்புராமனின் திடீர் மரணம் தமிழ்த் திரையிசைக்கு மறக்கமுடியாத இருவரை முகம் காட்டியது. அவர்கள்தான் மெல்லிசை மன்னர்கள் என்று அழைக்கப்படும் திரு எம் எஸ் விஸ்வநாதன் மற்றும் திரு டி கே ராமமூர்த்தி. என் எஸ் கிருஷ்ணனின் அறிவுரைப்படி இந்த இருவரும் விஸ்வநாதன் ராமமூர்த்தி என்று திரையில் தோன்ற ஆரம்பித்தார்கள். இவர்களின் காலம் ஒரு தனியான பதிவுக்கு இசைவாக இருப்பதால் இப்போதைக்கு இங்கேயே முற்றுப்புள்ளி வைத்துவிடுவது நல்லது என்று தோன்றுகிறது.

       இவர்களைத் தாண்டி தமிழ்த் திரையிசைக்கு ஊட்டம் அளித்த ஆனால்  இப்போது மறக்கப்பட்டுவிட்ட  சில இசை அமைப்பாளர்களைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. அவர்கள்  எஸ் வி வெங்கடராமன் மற்றும் டி ஜி லிங்கப்பா.

       எஸ் வி வெங்கடராமன் ஜி ராமநாதன் காலத்தில் இருந்து இருப்பவர். 1938 முதல் 1963 வரை அவரது இசைப் பயணம் தொடர்ந்தது. இவர் ஹோணப்ப பாகவதர், பி யு சின்னப்பா, டீ ஆர் மகாலிங்கம் போன்ற தமிழ் திரையின் பெரிய ஆளுமைகளோடு பணிபுரிந்தவர்.மீரா என்ற படத்தில் எம் எஸ் சுப்புலக்ஸ்மி யுடன் சேர்ந்து பாடல்கள் அமைத்த பெருமை பெற்றவர். எ, எஸ் விஸ்வநாதன் டி கே ராமமூர்த்தி ஜி கே வெங்கடேஷ் போன்ற பிரபல திரை இசை அமைப்பாளர்கள் இவரிடம் துணை செய்துள்ளார்கள். அவரின்  சில குறிப்பிடத்தக்க படங்கள்:
        நந்த குமார் (38), காமதேனு (41), கண்ணகி (42),ஸ்ரீ கிருஷ்ண விஜயம் (50), பாரிஜாதம்  (50), பணக்காரன் (53), மனோஹரா (54), இரும்புத் திரை (60),மருத நாட்டு வீரன் (61), அறிவாளி (63).

         டி ஜி லிங்கப்பா  கர்நாடக சங்கீதம் மட்டுமல்லாமல் மேற்கத்திய இசையிலும் அதீத  ஈடுபாடு கொண்டவராக இருந்தார். பிரபலமான "சித்திரம் பேசுதடி"(படம்: சபாஷ் மீனா) பாடலைக்  கொடுத்தவர்.  இவர் மவுத் ஆர்கன், மண்டலின் கிடார் போன்ற மேற்கத்திய வாத்தியங்களை எளிதாக வாசிக்க முடிந்த காரணத்தினால் ஜி ராமநாதன் எஸ் வி வெங்கடராமன் மற்றும் கே வி மகாதேவன் போன்றவர்களிடம் வாத்திய இசையாளராக பல படங்களில் பனி புரிய முடிந்தது.  சுப்பையா நாயுடு இசை அமைப்பில் வெளிவந்த சந்திரபாபு பாடிய பிரபலமான குங்குமப் பூவே பாடல் உண்மையில் லிங்கப்பாவின் இசை அமைப்பில் உருவான பாடல் என்றும் பின்னர் அது சில காரணங்களினால் சுப்பையா நாயுடுவின்  பெயரில் வெளிவந்ததாகவும்   ஒரு கருத்து நிலவுகிறது. மேலும் ஜி ராமனாதனின் பிரபலமான அமுதை பொழியும்  நிலவே பாடல் இவர் இசையில்தான் முதலில் பதிவு செய்யப்பட்டதாகவும் பின் இவர்  பெயர் மறுதலிக்கப்பட்டு ஜி ராமனாதனின் பெயர் இடம் பெற்றதாகவும் இன்னொரு ஆதாரமில்லாத கருத்து உண்டு.  இது நிகழ்ந்திருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் சாத்தியமே.  சுப்பையா நாயுடுவின் மிகப் புகழ்பெற்ற ஒரு பாடல்  நிஜமாகவே எம் எஸ் வி யால் உருவான தகவல் நம்மிடம் உண்டு.(அது என்ன பாடல் என்பது  இப்போது என் நினைவில் இல்லை). இது போன்ற விபத்துக்கள் நேரக்கூடிய சாத்தியங்கள் திரைஉலகில் அதிகம் உண்டு. (ஊரு சனம் தூங்கிருச்சு என்ற பாடலை இன்று வரை இளயராஜாவின் பாடல் என்றே எல்லோரும் நினைக்கிறார்கள். உண்மையில் அது எம் எஸ் வி யின் பாடல் என்பதே பலருக்குத்  தெரியாது).

       முப்பதுகளில் தோன்றிய தமிழ்த்திரை இசை நாற்பதுகளின் முடிவுவரை  கடினமாகவே இருந்தது. ஐம்பதுகளில் மேலே குறிப்பிட்ட இசை மேதைகளின் கண்காணிப்பிலும், கை அசைவிலும் அது மெதுவாக உருமாறி  மெல்லிசை என்ற முகத்தை அணிந்துகொண்டது.ஐமபதுகளின் இறுதியில் தமிழ்த்திரையிசை பெரும்பான்மையான மக்கள் விரும்பிய இசையின் திசையை நோக்கி நகர்ந்தது. இதை நாம் பதிவு செய்தாக வேண்டும். இதுவே மெல்லிசையின் காலம். இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து தமிழில் மெல்லிசைக்கான பாதை அமைந்தது. இந்த காலகட்டத்தில் வந்த இசையையே இன்றும் பெருமபான்மையான மக்கள் தினமும் கேட்க விருப்பம் கொள்கிறார்கள்.  ஏனெனில்  இதுவே மக்களின் இசை. இதை சொல்வதில் நாம் பெருமை  கொள்ள வேண்டும். ஏனென்றால் இது நம் இசை. ராகங்களும் பாவங்களும் சாஸ்திரிய சங்கீதத்தின் மேன்மையான மர்மங்களும் தெரியாத பாமரர்களான நமக்கான இசை. இங்கிருந்தே தமிழ்த் திரையிசையின் வளர்ச்சியும், புதிய முயற்சிகளும், எதிர்பாராத திருப்பங்களும் ஆரம்பிக்கின்றன.  இதை  இல்லை என்பவர்கள்  வேறு பாதையில் பயணிப்பது நல்லது. இங்கேதான்  இசைவிரும்பிகளும் இசைக் கோமாளிகளும் வேறுபடுகிறார்கள்.

          அடுத்தது: இசை விரும்பிகள்  IV - புதிய உச்சங்கள்.

    

Thursday 11 April 2013

இசைவிரும்பிகள்  II-    தடித்த  இசை.

                  பிறப்பு முதல் இறப்பு வரை நம் தமிழ் சமூகம் இசையினாலே    நிறைந்ததாக சிலர் சொல்வதுண்டு.யோசித்துப்பார்த்தால் இது ஒரு மடமையான கருத்து. இசை ஒரு சமூகத்துக்கு மட்டுமே சொந்தம் என்று சொல்வது உண்மையில் சிறுபிள்ளைத்தனமானது. உலகில் உள்ள அத்தனை மனித குழுக்களிடமும் தாலாட்டு (Lullaby) முதல் ஒப்பாரி(Lament) வரை எல்லாவிதமான மனித உணர்சிகளையும் வெளிப்படுத்தக்கூடிய பிரதிபலிப்பாக இசை இருக்கிறது.

      இருப்பினும்  துவக்கத்தில் இசை கடவுளர்களை துதி பாடும் ஒரு மத சம்பிரதாயத்துக்கு உட்பட்டு, ஆட்பட்டு, இன்னும் பல துன்பங்களுக்கு இரையாகி ஒரு மிகச்சிறிய வட்டத்தில் சுற்றிச் சுற்றி சுழன்று கொண்டிருந்தது.ஆனால் மேற்குலகில்  பதினைந்தாம்  நூற்றாண்டிலேயே  (மறுமலர்ச்சி காலம்) இசை மதத்தை விட்டு மனிதத்துக்கு வரத் துவங்கி விட்டது .மதயிசை  மற்றும் மக்களிசை( Sacred music and Secular music ) என்ற பிரிவு அங்கே  உருவாகி பல மக்களிசை பாடல்கள் அங்கு பெருத்த வரவேற்ப்பை பெற்றிருந்தன. அதே போல மக்களிசை பாடல்களை மதம் தடை செய்த வரலாறும்  உண்டு. மேற்கத்திய செவ்வியல் இசையின் (Western classical) ஆரம்பமும் இப்படித்தான் இருந்தது. ஆனால்  வெகு விரைவிலேயே அது  தேவாலய கதவுகளை விட்டு வெளியேறி    மதமில்லாத இசையை மக்களின் ரசனைக்கு விருந்தாக  அளித்தது. பீத்தோவன், மொசார்ட், பாக், விவால்டி, ஷாப்பின் போன்ற மேற்கத்திய செவ்வியல் இசைக் கலைஞர்கள் மக்களிசையின் நாயகர்களாக வரையறுக்கப்படுவதும் இதனால்தான்.

     இங்கே வந்தோமானால் ,  நம் தமிழ்ச் சமூகத்தில் மதத்தின் தாக்கம் இல்லாத கலைகளை காண்பதரிது. மேலும் மக்கள் ரசனைக்குரிய கலைகள் பெரும்பாலும் மதத்தை  உள்ளடக்கியே இருந்து வந்திருக்கின்றன. மேற்குலகில்  மக்கள் மனிதத்தை விரைவாக அறிந்துகொண்டது போலல்லாமல் நாம் இந்த சமயம் சார்ந்த விஷயங்களை விட்டு வெளியே வர நீண்ட காலம் பிடித்தது.   இப்படியான ஒரு மதம் என்னும்  பின்புலத்தை   பின்னணியாக கொண்டிருந்த கால கட்டத்தில் இருந்துப் புறப்பட்ட படங்களிலிருந்தே நாம் தமிழ் திரை இசையை  ஆராய  வேண்டி இருக்கிறது.தமிழ் திரையில் 1918 இல் கீச்சய வதம்  என்ற ஊமை படம் நடராஜ முதலியார் என்பவரால் எடுக்கப்பட்டது . தமிழின் முதல் பேசும்  படம் காளிதாஸ்(அதில் ஏறக்குறைய ஐம்பது பாடல்கள் இருந்தன)  1931 இல் வந்தது. அது முதற்கொண்டு  வந்த ஏறக்குறைய அறநூறு படங்கள் (அவற்றில் சில சமூக சிந்தனை கொண்டிருந்தாலும்) எல்லாமே புராண , இதிகாச, அரச  கதைகளையே களமாகக்  கொண்டவை.அவ்வாறான கதைக் களத்தை ஒட்டியே தமிழ்த்  திரை பாடல்களும் அமைக்கப்பட்டன . ராகங்கள் எங்கிருந்து எவ்வாறு தோன்றின என்பது குறித்து இன்னும் பலத்த சர்ச்சை இருக்கிறது. நாட்டுப்புற பாடல்களில் இருந்தே ராகங்கள் தோன்றின என்று ஒரு கருத்து இருந்தாலும்,சாஸ்த்ரிய ராகங்கள் பிரதானமாக கடவுளர்களை வழிபடவே உருவாக்கப்பட்டதற்கான  வரலாறு நம்மிடம்  உண்டு. இதன் பாதிப்பை நாம் ஆரம்பகால தமிழ்த்திரை இசையில் வெகுவாக காணலாம். 

      பாபநாசம் சிவன் தமிழ் திரையின் புகழ் பெற்ற  முதல் இசை அமைப்பாளராக கருதப்படுகிறார். அவர்  சாஸ்திரிய சங்கீதத்தில் அகலமான புலமை உள்ளவராக  அறியப்பட்டவர். ஜி ராமநாதன்(ஐம்பதுகளில் இவரின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது), ராஜா சந்திரசேகர், ஜனார்த்தனம், சி ஆர் மூர்த்தி, சி எஸ் ஜெயராமன்,டி கே முத்துசுவாமி ,அண்ணாஜி ராவ், மோடி பாபு, எம் ஜி பார்த்தசாரதி, சுப்பையா நாயுடு, சுதர்சனம், அஸ்வத்தாமா,  இன்னும் பல இசை அமைப்பாளர்களுக்கு மத்தியில் பாபநாசம் சிவன் நிறைய படங்களுக்கு  இசைப் பங்களிப்பு செய்திருப்பதைக் கொண்டே நாம் அவரின் முக்கியத்துவத்தை  அறியலாம். கர்நாடக சங்கீதத்தின் வேர்களை கொண்டு அவர் படைத்த பல பாடல்கள் சிறப்பானவை .அவரை பின்பற்றி வந்த பலரும் சாஸ்திரிய சங்கீதம் இழைந்த பாடல்களை  கொடுக்க தலைப்பட்டனர். இவ்வாறு சாஸ்திரிய ராகங்களின் மீது கட்டப்பட்ட  பாடல்களை முன் வைத்தே தமிழ் திரையிசை வளர்ந்து வந்தது ஒரு மறுக்க முடியாத வரலாறு.

       இப்படி கர்நாடக ராகங்கள் நம் திரையிசையை தங்கள் தோள்களின்   மீது சுமந்து கடந்த வந்த தூரங்கள் அதிகம்.மேற்கத்திய இசைக் கலப்பு அப்போது அபூர்வமாகவே நிகழ்ந்தது.நாற்பதுகளிலேயே அப்படிப்பட்ட இணைப்பிசை (Fusion) தமிழ் திரையில் சாத்தியமானது. அப்படி இரண்டும் கலந்தாலும் மேற்கத்திய சாயலை சற்றேனும்  கேட்பவர்கள்  உணர முடியாதபடி இம்மண்ணின்  ராகங்கள் ஆட்சி செலுத்தின.மேல்நாட்டு  வாத்தியங்கள் மற்றும் இசை அமைப்பு முறை ,கூட்டிசை(Chorus) போன்ற மேற்கத்திய பாணி சற்றே தென்பட்டாலும் முற்றிலும் மேற்கத்திய பாணியை கொண்ட பாடல்கள் தலைகாட்டவில்லை. சாஸ்திரிய இசையின் தாக்கம் அதீத வீரியமாக இருந்த  நிலையில் தமிழ்த் திரையிசை  பாடல்கள்  பெரும்பாலும் சமய சார்புடனும்,ஆலய கீதங்கள் போலவும்தான்   ஒலித்தன.அப்போது வெளிவந்த படங்களிலிருந்து  இதை நாம் மிகத்தெளிவாக உணர முடிகிறது.அந்த காலகட்டத்தில்   வெகு சொற்பமாகவே மக்களிசை இருந்தது. ராகங்களை கொண்டு சமய சார்பில்லாமல் பாடல்கள் அமைக்க முடியும் என்ற எண்ணவோட்டம் கொண்ட புரட்சிகரமான   இசை அமைப்பாளர்களுக்கு இன்னும் பாதை அமையவில்லை . அவர்களின் வருகைக்கான காலம் பருவமடையவில்லை.

      இந்தச்  சூழலில் வெளிவந்த பாடல்கள் முழுவதும் சாஸ்திரிய சங்கீதத்தில் தோய்த்து எடுக்கப்பட்ட, பாமரர்களுக்கு புரியாத சங்கீத ஞானத்தில்  முழுதும்  நனைந்த,கர்நாடக ராகங்களின்  அடர்த்தியான வீரியத்துடன், திகட்டும் சாஸ்திரிய  சுவையோடு ஒரு  தடித்த இசையாகவே இருந்தன. மக்களிசை புறந்தள்ளப்பட்டு கர்நாடக சங்கீதத்தின் வீச்சு ஓங்கி இருந்தது.   அதற்கு காரணம் ராகங்களில் கரை கண்டவர்கள் இசை அமைக்க வந்ததுதான்.இந்த இடத்தில் நான் விமர்சிப்பது அந்த காலத்தைய இசையின் தன்மையை அன்றி அதன் தரத்தை அல்ல. (இப்போது ராகங்கள் தெரியாமலே ஏன் அந்த ஞானம் இல்லாமலே  ஒருவர் இசை அமைப்பாளராக இருக்க முடியும்! பரிதாபமான கால சுழற்சி). உதாரனத்திற்க்கு  பவளக்கொடி (இசை பாபநாசம் சிவன், ஆண்டு 1934)படத்தில் வரும் "கண்ணா கரியமுகில் வண்ணா", "வனிதைக்குள் உயர்வான" போன்ற பாடல்களை ரசிக்க நமக்கு பொறுமை அவசியம்.

     அன்றைய காலகட்டத்தில் தூய கர்நாடக இசைக்கும் தமிழ் திரையிசைக்கும் இடையே  மிகப்பெரியப் பனிப்போரே நிகழ்ந்து வந்தது என்று நாம் அறிகிறோம்.தமிழ் திரை இசையின் ஆரம்ப காலத்தில் பல கர்நாடக மேதைகள் இந்த இரண்டின் இணைப்பையும் விரும்பவில்லை.அவர்களின் கருத்துப்படி திரையிசை என்றைக்கும்  கர்நாடக இசைக்கு அருகே வர முடியாது. ஜி ராமநாதன் முறையாக படிக்காத ஆனால்  காதில் கேட்ட ராகங்களை கொண்டே கர்நாடக சங்கீதத்தில் புலமை பெற்றவர்.  அவரின் இசையில்  1944 இல் வெளிவந்த  எம் கே தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ் படத்தில் வரும் "மன்மத லீலையை வென்றோர் உண்டோ?" என்ற மிகப் பிரபலமான பாடல் மக்களிசையை நோக்கி தமிழ்த்திரை இசை நகர்வதை குறிப்பாக உணர்த்தியது. அதை தொடர்ந்து  வந்த பல படங்களிலும்  தமிழ்த் திரையிசை அடுத்த பரிமாணத்தை நோக்கி பயன்பட்டாலும் மக்களிசை வெகு தொலைவிலேயே இருந்தது. கர்நாடக சங்கீதத்தின் கட்டு பலமாக பின்னப்பட்டு பாடல்களின் குரல்வளை நசுக்கப்பட்டுக் கொண்டிருந்தது என்று கூடச் சொல்லலாம். முப்பதுகளில் துவங்கிய தமிழ்த் திரையிசை அடுத்த பத்து ஆண்டுகளில் பாமரர்களின் ரசனையோடு இணையாமல் ராகங்கள் அறிந்த, புரிந்த மக்களின் இசை தாகத்தை தீர்க்க,உயர்ந்த ராகங்களில் ஊறிய  பலப்பல சம்பிரதாயமான பாடல்களை வழங்கி வந்தது. நாற்பதுகளில் இன்னும் பல புதிய இசை அமைப்பாளர்கள் களத்தில் குதித்தாலும் சாஸ்திரிய சங்கீதத்தின்  பலமான,கெட்டியான  முடிச்சை அவிழ்க்கும் கலை யாராலும் அறியப்படாத மர்மமாகவே நீடித்தது. அதன் அடர்த்தி சற்றேனும் குறைந்தபாடில்லை.

    பாரிஜாத புஷ்பஹாரம், ராமாயன்,கோவலன்,வள்ளி திருமணம்,சகுந்தலா, சீதாவனவாசம்,அல்லிஅர்ஜுனா, ஞானசவவுந்தரி, நளதமயந்தி, பட்டினத்தார், ராஜா தேசிங்கு,யயாதி,சௌபாக்யவதி,தியாக பூமி,பிரஹலாதா, ரம்பையின் காதல் போன்ற படங்கள் 1931 இல் இருந்து 1940க்குள் வந்தவை.இவற்றில் வெகு சில படங்கள்  மட்டுமே இப்படியான இதிகாச அரச கதைக்களங்களை பின்புலங்களாக கொள்ளாமல் சமூக களங்களை கொண்டவை.நியாயமாக நாம் சிந்தித்துப்பார்த்தால்  இப்படியான கதைகளை சொல்லும் படங்களில் 1940களுக்கு முந்தைய காலத்தில் நாம் எந்த விதமான இசையை எதிர்பார்க்கமுடியும்?இயல்பாகவே அன்றைய காலத்து இசை ஒரு வட்டத்துக்குள் இருந்ததில் வியப்பொன்றும் இல்லை. ஒன்றை நாம் புரிந்து கொள்வது அவசியம்: தமிழ்த் திரையிசையின் வளர்ச்சி ஒரே இரவில் நடந்துவிடவில்லை.

     ஆனால்   அதே சமயம் மேற்குலகில் முப்பதுகளிலேயே அறிவியல்,  சமூகம் சார்ந்த படங்கள் வெளிவர ஆரம்பித்துவிட்டன. அங்கே பாடல்களையும் படங்களையும் பிரித்துப்பார்க்கும் ஆரோக்கிய மனநிலை அப்போதே இருந்தது. நமக்கோ தமிழ் பாடல்கள் என்றாலே தமிழ் சினிமா பாடல்கள்தான். படத்தின் பிண்ணனி எந்த விதமான மாறுபட்ட இசைக்கும் இடம் தராத சூழ்நிலையில் நம் தமிழ் திரையிசை ஒரு இடுக்கமான பாதையிலேயே செல்ல வேண்டியதாக இருந்தது. ஒரு பக்கம் கர்நாடக ராகத்தில் தேர்ந்தவர்கள் அங்கீகாரம் செய்ய மறுத்த நாட்டுப்புற இசை மறுபுறமோ பெரும்பான்மை மக்களை சென்றடையாத மக்களிசை. இரண்டுக்கும் இடையில் இருந்த ஆனால் யார் கண்ணுக்கும் புலப்படாத ஒரு மாய முடிச்சு என்று தமிழ் திரையிசை ஊசலாடிக்கொண்டிருந்தது. ஐம்பதுகள் வரை தமிழ் திரையில் வந்த இசையையே மக்கள் நம் இசை என்று நம்ப வைக்கப்பட்டனர் என்பதே தெளிவு.இடையில் விதிவிலக்காக சில மக்களிசை பாடல்கள் வந்தது உண்மைதான்.இருந்தும் இசை ஒரு பாமரனை வெகு தூரம் தள்ளியே வைத்திருந்தது.(இதற்கு நம்மிடையே இசை பற்றிய புரிதல் இல்லாததும் ஒரு காரணம்).

        தமிழில் நாட்டுப்புற இசையை வெகு ஜன மக்களிடம் கொண்டு சேர்த்தவர்களில் ஜி ராமநாதனும் கே வி மகாதேவனும் மிக முக்கியமானவர்கள். இவர்கள் ஆரம்பித்த இந்த பாதையில்தான் பிற்பாடு பல இசைஅமைப்பாளர்கள் தங்கள் வண்டிகளை ஒட்டினார்கள். இதை அறியாமல் நாட்டுபுற நாயகன் என்று வேறு சிலரை அழைப்பது வேடிக்கையான அபத்தம்.தமிழ் திரையிசை சிலர் எண்ணுவதைப்போல எண்பதுகளில் ஆரம்பிக்கவில்லை என்பதை இங்கே நான் மிகுந்த வேதனையுடன் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. எத்தனை இசை அமைப்பாளர்கள் இப்போது நாம் ரசிக்கும் இந்த எளிமையான பாடல்கள் அமைய பாதை அமைத்துக்கொடுத்தார்கள் என்பதை கிஞ்சித்தும் எண்ணாமல் இசை என்றால் இவர்தான் அல்லது அவர்தான் என்று நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு வந்தவர்களை சுட்டிக்காட்டுவது ஒரு மாபெரும் மோசடி. தொடரும் பதிவுகளில் தமிழ் திரையிசை நளினமடைந்தது பற்றி விரிவாக எழுத எண்ணி இருப்பதால் இத்துடன் நான் என்னுடைய இரண்டாவது அத்தியாயத்தை முடித்துக் கொள்ள விரும்புகிறேன்.   
        
       தமிழ் திரையிசை பயணித்த பாதையை நாம் இப்போது திரும்பிப் பார்க்கும் போது ஒரு காலத்தில் எப்படி ஒரு கடினமான இசை  ரசனைக்கு நாம் உட்படுத்தப்பட்டோம்  என்ற கருத்தை முன்வைக்கவே இந்த இரண்டாம் பதிவுக்கு நான் தடித்த இசை என்ற தலைப்பை வைத்தேன். இந்தப் பதிவில் நான் சொல்லி இருப்பதில் எந்த விதமான குற்றச்சாட்டும் இல்லை. முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் நம் தமிழிசை சந்தித்த மாறுபடும் அடையாளத்திற்க்கான  போராட்டமே இங்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இருந்தும் அந்த காலகட்டத்தில் புதிய முயற்சிகள் செய்யப்படாமலில்லை. கொஞ்சம் கொஞ்சமாகவே இந்த சிரமான பணி கையாளப்பட்டது. ஒரு தந்தைக்கும் மகனுக்கும் உள்ள இசை ரசனை வேறுபட காலம் ஒரு முக்கியமான காரணியாக இருக்கிறது. இந்த ரசனை மாறுபாடு  இருவரின் இசை விருப்பங்களையும் குறைத்தோ அல்லது இழித்தோ மதிப்பிடுவதற்கு ஒரு அளவுகோல் அல்ல என்பதே என் புரிதல். எம் எஸ் சுப்புலட்சுமி,எம் கே டி, பி யு சின்னப்பா, டி  ஆர் மகாலிங்கம், கண்டசாலா, எல் வசந்தகுமாரி,ஜிக்கி,  இன்னும் பல இசைக் கலைஞர்கள் ஆண்ட திரை இசையை பின்னாளில் வந்தவர்கள் இகழ்வாக பேசுவதற்கான சந்தர்ப்பங்கள் இங்கு அதிகம்.அப்படி பேசுபவர்களுக்கு  ஒரு முறையான புரிதல் கொடுக்கப்படவேண்டும் மேலும் அவர்களுக்கு ஒரு நேர்மையான இசை பற்றியத்  தெளிவு அளிக்கப்படவேண்டும். நம்முடைய விருப்பங்களையும்,  மதிப்பீடுகளையும்  சற்று ஓரம் வைத்துவிட்டு  உண்மைகளை பதிவு செய்வதின் மூலமே இதை நாம் செய்யமுடியும். என்னுடைய இந்தப் பதிவு இதில் சற்றேனும் செய்திருந்தால் அதுவே எனக்கு மிக்க மகிழ்ச்சி.


     அடுத்தது : இசை விரும்பிகள் III - மெல்லிசை மலர்ந்தது.
    

Saturday 6 April 2013

இசைவிரும்பிகள் I-காலமும்கானமும்           

           இசை என்பது மாறிவரும் கலாச்சார நுட்பங்களை தனக்குள் உள்வாங்கிக்கொண்டு அது சார்ந்த மண்ணின் தன்மையை பிரதிபலிக்கும் ஒரு மிக  வலிமையான  ரசனை. ஒரு நதி ஓடுவது போன்று  இயல்பான நிகழவேண்டிய மாற்றங்களுக்கு உட்பட்டு இசை தன்னை மாற்றிக்கொண்டே வருகிறது. ஒரு பண்பாட்டின் பலகூறுகளில் இசை மிக  மைய்யமானது. ஏனென்றால்  ஒவ்வொரு மனித சமூகமும் இசையால் சூழப்பட்டிருக்கிறது. ஓவியங்களும், சிற்பங்களும், கவிதைகளும், இலக்கியங்களும் இசை என்னும் இந்த ராட்சத ரசனையின் முன் பலமற்று போய்விடுகின்றன. ஒரு உடையோ, உணவோ, அல்லது மொழியோ ஒரு பண்பாட்டை மற்றவர்களுக்கு உடனே அடையாளம் காட்டுவதை போல இசை இயங்குகிறது.  எனவேதான் பேக் பைப்  ஸ்காட்லான்ட்டையும் , போங்  சீனாவையும், கிடார் ஸ்பெயினையும், சந்தூர் இரானையும், மாண்டலின் இத்தாலியையும்.போங்கோ ஆபிரிக்காவையும்,வீணை இந்தியாவையும் அந்த இசையை கேட்ட மாத்திரத்தில் நமக்கு ஞாபகப்படுத்துகின்றன. ஒரு மனித குழுவின் எல்லாவித உணர்சிகளின் வெளிப்பாடாகவே இசை  நமக்கு அறிமுகம் ஆகிறது.
     ஒரு பண்பாட்டின் பிரதான முகமாக இருக்கும் இசையை  புரிந்து கொள்வது மிக முக்கியமானதாக இருந்தாலும்   இசையை புரிந்து கொள்வதைவிட  அதை ரசிப்பதே ஒரு நல்ல ரசனையாக இருக்க முடியும்.
 "எது நல்ல இசை?"
"நல்ல இசை என்பது  நான்  சிறுபிள்ளையாக இருந்த  போது  கேட்ட இசை."
 "எது மோசமான இசை?".
 "மோசமான இசை என் பிள்ளைகள்  கேட்கும் இசை."
           இப்படி  ஒரு நகைச்சுவைத் துணுக்கை நான் முன்பு  ஒரு புத்தகத்தில் படித்தேன். படிக்கும் போதே இதில் இருக்கும் பகடி (satire) என்னை  கூர்மையாகத் தாக்கியது. இது என்னை யோசிக்கத் தூண்டியது.
            உண்மையில் இது ஒரு மிக முரண்பாடான  சிந்தனையே. நாம் எல்லோருக்குமே இந்த மறந்துவிட்ட அல்லது மீண்டும் என்றுமே காண முடியாத  நம் சுவடுகளை தேடுவதில் சுகம் கிடைக்கிறது. ஒரு குறிப்பிட்ட இசையை நாம் ஆழமாக நேசிப்பதன் பின்புலத்தில் இதே நாஸ்டால்ஜியா ஒரு உயிர்கோடு போல இயங்குகிறது.  (நாஸ்டால்ஜியா என்ற வார்த்தையை மீட்க முடியாத பழமை என்று தமிழ் படுத்தலாம்).
       பொதுவாக ஒரு  பாடலில் இருப்பவை:  இசை, கவிதை, குரல். ஆனால் இவை மூன்றையும் தாண்டி இன்னொரு ஆளுமை பாடலை  முழுமையாக்குகிறது. அதுவே காலம். ஒவ்வொரு பாடலும் அது நிகழ்ந்த  அந்த காலத்தை தனக்குள்ளே புதைத்துகொண்டு, நம் காதுகளை எட்டும்போது, கடந்து போன அந்த பழமையை நமக்குள் உயிர்த்தெழ வைத்து,  கேட்பவனையும் அவன் இழந்துவிட்ட காலத்தையும் ஒரே கோட்டில் இணைக்கிறது.  காலம் என்ற மணலின் மீது நாம் விட்டுச்சென்ற காலடித்தடங்களை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாகவே நாம் பழைய கானங்களை கேட்க விருப்பம் கொள்கிறோம்.
        எனது நண்பர் ஒருவர் என்னை பார்க்க வரும்  பொழுதெல்லாம் ஒரு குறிப்பிட்ட பட பாடல்களை இசைக்க சொல்லி கேட்பது வழக்கம். நானும் அதை தவறாமல் செய்து கொண்டிருக்கிறேன்.  அது அவர் கல்லூரி நாட்களில் பார்த்த படம். அதன் பாடல்களை கேட்கும் போது அந்த நாட்கள் மீண்டும் அருகே வருவது போன்ற ஒரு எண்ணம் அவருக்கு ஏற்படுவதை    அவர்  கண்களில் தெரியும் ஒருவித மயக்க நிலையை கொண்டே நான்  புரிந்து கொள்வதுண்டு.  இதை அவர் என்னிடம் ஒவ்வொரு முறையும்  சொல்லி " ஒரே பாட்டில இருபது வருஷம் பின்னால போயாச்சே "என்று களிப்புடன் சொல்வது உண்டு.குறிப்பாக வானிலே தேனிலா, கண்மணியே பேசு, பட்டுக்கன்னம்  என்ற காக்கி சட்டை பட பாடல்கள்தான் அவை.(ஒரு விஷயம்; அவர் ஒரு தீவிர ரஜினி ரசிகர்). இதுதான் நாம்  நாம் சிறு வயதில் கேட்ட பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்க விரும்புவதின் உளவியல்.

          "செந்தமிழ் தேன்  மொழியாள்", "தூங்காதே தம்பி தூங்காதே ", "அச்சம் என்பது மடமையடா ","மாசிலா உண்மை காதலே", "முல்லை மலர் மேல""பாட்டு பாடாவா","காலங்களில் அவள் வசந்தம்",  "நினைப்பதெல்லாம்  நடந்துவிட்டால்" "பாடாத பாட்டெல்லாம்"  "அனுபவம்புதுமை", "நான்ஆணையிட்டால்" ,ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" ,"ஒரு  நாள் போதுமா?" "வீடுவரை உறவு", "அதிசய ராகம்","அன்னக்கிளி உன்ன தேடுதே","உறவுகள் தொடர்கதை", "காதல் ரோஜாவே" போன்ற பாடல்கள் மீண்டும் மீண்டும் ரசிக்கப்படுவதன் ரகசியமும் இதே உளவியல்தான். ஒவ்வொரு தலைமுறை எழும்போதும் அதற்கு  முன் இருந்த இசையை பழையது என்று சொல்லி புதிய இசையை வரவேற்கும்   மனப்பாங்கு உலகம் முழுவதும் காணப்படும் ஒரு இயல்பான நிகழ்வே. "பழையவர்கள்" புதிய இசையை கேலியுடன் அசட்டை செய்வதும்  புதிய இசைக்கு உடனடி அங்கீகாரம் தர மறுப்பதும் எங்கும் நடக்கக்கூடியதே.
            ஆங்கில இசையின் பசுமை நாயகர்களாக இன்று மறு பேச்சின்றி ஏற்றுக்கொள்ளப்படும்  தி பீட்டில்ஸ் குழுவினரின் துவக்க காலங்களில் அவர்களின் இசை வெகுவாக விமர்சிக்கப்பட்டது. "ஒரு மலிவான சிறுவர்களின் இசை" என்று பெருமான்மையால் தீர்மானிக்கப்பட்டு பீட்டில்ஸ் அன்றைய பெரியவர்களால் (பழையவர்கள்) ஏறக்குறைய புறந்தள்ளப்பட்டது.உண்மையை சொல்லவேண்டுமானால் பீட்டில்சை வெறித்தனமாக,பைத்தியங்கள் போல ரசித்தவர்கள் அந்தகாலத்து இளைய தலைமுறையினர்தான். இதே போல்தான் பிரபல அமெரிக்க ராக் அண்ட் ரோல் பாடகர் எல்விஸ் பிரஸ்லி மிக கடுமையாக அப்போதைய பழமைவாதிகளால் குற்றம் சாட்டப்பட்டு ஏளனம் செய்யப்பட்டார்.  முரண்பாடாக இளம் பெண்கள் அவரை போதை வடியும் கண்களோடும்  தாறுமாறாக துடிக்கும் இதயத்தோடும் வரவேற்றனர்.
           பழமைக்கும் புதுமைக்கும் இடையில் உள்ள வேறுபாடு வெறும் ரசனை மாற்றம்  மட்டுமல்ல. "இது எங்கள் இசை" என்று தாங்கள் வாழும் காலத்தின் மீதான காதலை பதிவு செய்யும் ஒரு கர்வம், ஒரு பெருமை மேலும் இதை தாண்டிய ஒரு அடையாளம் இதில் இருக்கிறது. ஒவ்வொரு பாடலும்  காலத்தை சுற்றியே பின்னப்பட்டு, ஒரு குறியீடாக அல்லது வெளிப்படையாக நமக்கு  அதை உணர வைக்கிறது. இசை மீதான நம் ரசனையை வலிமையாக்கும் இந்த காலம் கலந்த அடிநாதமே நம்மை திரும்ப திரும்ப குறிப்பிட்ட சில பாடல்களை கேட்கத்தூண்டுகிறது.  It's so subtle yet highly addictive.

         காலத்தையும் கானத்தையும் பிரித்துப்பார்க்க முடியாதென்பது தெளிவு. நாம் கேட்கும் எந்த இசையுமே வேறொரு காலத்திற்கு செல்லும் ஒரு பாதையாகவே எனக்குத் தெரிகிறது.  உதாரணமாக   நாயகன் படத்தில் வரும் "நான் சிரித்தால் தீபாவளி" என்ற பாடலை சொல்லலாம். இந்த படம் வந்த ஆண்டு 1987. ஆனால் இந்த பாடல் 1950 களை சுற்றிய காலங்களை கேட்பவர் மனதில் பதிவு செய்கிறது. இந்த பாடலின் வெற்றிக்கு முக்கிய காரணம் இசை அமைத்தவரா அல்லது படத்தின் இயக்குனரா என்பது விவாதத்திற்குறியது. ஏனென்றால் அதே இசை அமைப்பாளர் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு  முன் நடந்த  கதையை களமாக கொண்ட 1979 இல் வெளியான ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்ற  படத்திற்கு போட்ட பாடல்கள் எல்லாமே எழுபதின் குரலாகவே ஒலித்தனவே அன்றி 1947க்குமுற்பட்ட கால கட்டத்தை உணர்த்தவில்லை. இதே வரலாற்றுப்பிழை பல (வாகை சூட வா, பரதேசி, சுப்பிரமணியபுரம், ஆட்டோகிராப், பொக்கிஷம், போன்ற பீரியட் )படங்களுக்கு நடந்ததுதான்.        
        உலக இலக்கியங்களை பெறுத்தவரை ஒன்று சொல்வதுண்டு. ஆங்கிலேயர்கள் 19ஆம் நூற்றாண்டை சேர்ந்த ருஷ்ய கதைகளை மொழிபெயர்த்தபோது அந்த காலத்தில் நிலவிய ஆங்கில சொற்களையே பயன்படுத்திக்கொண்டார்கள். ஏனென்றால் அப்போதுதான் கதை  குறியீடாக காட்டும் காலத்திற்கு ஒரு வாசகன் செல்ல முடியும்.  Otherwise  the reader is stranded in the highway of time between the feel of the past and the vocabulary of   the present.  இவ்வாறு கதையின் காலத்திற்கும் அதை ஒட்டிய இசைக்கும் தொடர்பில்லாமல் (அதை பற்றிய சிறிது ஞானமும் இன்றியே) பல படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக என்னுள்ளில் ஏனோ, உச்சி வகுடெதுத்து  போன்ற பாடல்களை கேட்கும் போது  நமக்கு சுதந்திரத்திற்கு முன்னைய இந்தியா நினைவுக்கு வராமல் அந்த பாடல்கள் வந்த எழுபதுகளே ஞாபகம் வருவதுண்டு. ஆனால் அதே இளையராஜா நாயகன் படத்தில் அந்தத் தவறை செய்யவில்லை. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் நான் சிரித்தால் தீபாவளி  என்ற பாடல் மட்டுமல்ல நீ ஒரு காதல் சங்கீதம் என்ற பாடலுக்குமே அவர் எண்பதுகளின்  இசையை தவிர்த்திருப்பார்.  ஆனால் ஹே ராம் என்ற படத்தில்  மீண்டும் பழைய தவறையே அவர் செய்தார்.
            Composing music for period films is nothing but an adventure. பெரும்பாலும் எல்லா இசை அமைப்பாளர்களும் இந்த  நெருப்பை தாண்டும் தேர்வில் வெற்றி பெறுவது இல்லை. எப்படி  1939 ஆம் வருடத்தை குறியீடாக சொல்லும் ஒரு கிராமத்து  படத்தில் அப்போது நமக்கு பழக்கமே இல்லாத கிடார் அல்லது டிரம்ஸ் இசையை கொண்டு ஒரு காட்சியை நிரப்ப முடியும்?அவ்வாறான ஒரு படத்தின் பாடல்களில் நவீன கவிதை வரிகளை கேட்கையில்  உண்மையில் அவ்வாறான வார்த்தைகள் அப்போது புழக்கத்தில் இல்லாததால் பழைய  துணியில் உள்ள கிழிசலை மறைக்க பட்டுத்துணி வைத்து ஒட்டு போட்ட அபத்தமே மிஞ்சும்.

             இப்படி முரண்பாடாக இருக்கும்  பாடல்களுக்கிடையே அந்த காலத்தை தாண்டி   ஒலித்த பாடல்களும் உண்டு. இவற்றை ahead of their times என்று குறிக்கலாம். உதாரணத்திற்கு சில பாடல்களை பட்டியலிட்டிருக்கின்றேன். அவை தான் சார்ந்த காலத்தையும் தாண்டி இன்றைக்கும் மிக நவீனமாகவும் இளமையாகவும் இருப்பதே அவைகளின் சிறப்பு.

      "கண்ணாலே பேசி பேசி கொல்லாதே" படம்-அடுத்த வீட்டுப்பெண், ஆண்டு 1960 (இசை- ஆதி நாராயண ராவ்)
        "பாட்டு பாடவா?"- தேன் நிலவு ,1961.(எ எம் ராஜா)
        "தெரியுமா?"- பாசமா நேசமா(எ எம் ராஜா) (இந்த பாடலை உங்களுக்கு தெரியுமா?)
    "சொன்னது நீதானா?"-நெஞ்சில் ஓர் ஆலயம்,1962 (விஸ்வநாதன் ராமமூர்த்தி)
     "பாடாத பாட்டெல்லாம்", வீரத் திருமகன் ,1962 (விஸ்வநாதன் ராமமூர்த்தி)
      "என்னை எடுத்து "-படகோட்டி,1964,(விஸ்வநாதன் ராமமூர்த்தி)
        "நீயும் பொம்மை நானும் பொம்மை" -பொம்மை ,1964 (எஸ் பாலச்சந்தர்)
       "யார் அந்த நிலவு?",சாந்தி,1965 (விஸ்வநாதன் ராமமூர்த்தி)
   "காதல் காதல் என்று பேச"-உத்தரவின்றி உள்ளே வா, 1972 (எம் எஸ் விஸ்வநாதன்)
        " உறவுகள் தொடர்கதை",-அவள் அப்படித்தான்,1978 (இளையராஜா
        "இது ஒரு பொன் மாலை பொழுது" நிழல்கள் ,1980(இளையராஜா)
        "பனிவிழும் மலர் வனம்"- நினைவெல்லாம் நித்யா,1982 (இளையராஜா)
        "காக்கை சிறகினிலே"- ஏழாவது மனிதன்,1982 (எல்.வைத்தியநாதன்)
        "புதிய பூவிது"- தென்றலே என்னை தொடு ,1987(இளையராஜா)
         "கொஞ்சம் நிலவு"-திருடா திருடா,1993 (எ ஆர் ரகுமான்)
         "சந்தோஷக் கண்ணீரே" -உயிரே,1998 (எ ஆர் ரகுமான்)
     
            எல்லா பாடல்களுமே ஒரு குறிப்பிட்ட காலத்தை நமக்குஉணர்த்தத் தவறுவதில்லை. இருந்தும் நாம் எப்படி பாடல்கள் காட்டும் காலத்தை உள்வாங்கிக்கொள்கிறோம் என்பதில்தான் நமது ரசனைகள் வேறுபடுகின்றன.  சிலருக்கு சில பாடல்கள் இனியவை. ஆனால் பலருக்கோ அவை பழையவை.
             எடுத்துக்காட்டாக அமுதை பொழியும் நிலவே என்ற பாடலில் உள்ள மெலடி, இனிமை, ஒன்றிணைந்து ஒலிக்கும் குரல்கள், அந்த பாடல் தரும் மயக்க நிலை, இவற்றை "இதெல்லாம் பழைய பாட்டு" என்ற ஒரே முகச் சுழிப்பின் மூலம் புறந்தள்ளுவது மிக எளிதானது. சொல்லப்போனால் பழசு என்று முத்திரை குத்தி பல மேன்மையான இசையை நாம் ரசிக்கத் தவறுகிறோம். ஒரு பாடலின் காலத்தை வைத்து அதை மதிப்பீடு செய்யும் இந்த அரைவேக்காட்டுத்தனமான ரசனை ஒரு குறிப்பிட்ட வயது வரை எல்லோர்க்கும் இயல்பாக இருக்கும் குணமே. ஆனால் நாம் கண்டிப்பாக  மாற வேண்டியஇடத்திற்கு ஒருநாள் வருவது நிச்சயம்.  நம் இசை ரசனையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நாம் இந்த காலம் என்கிற தடையைத் தாண்டி பயணிக்க வேண்டியதாக இருக்கிறது.பொதுவாக வெகு சிலரே இசையின் எல்லா பரிமாணத்தையும் எந்த வித முன்தீர்மானித்தலும் (prejudice) இன்றி ரசிக்க கற்றுக்கொள்கிறார்கள்.  இவர்களே உண்மையான இசை விரும்பிகள். நான் அப்படிப்பட்ட ஒருவனாகவே இருக்க விருப்பப்படுகிறேன்.
              
           அடுத்தது:இசை விரும்பிகள்II- தடித்த இசை