பொதுவாக அரசியல் பற்றி விவாதங்கள் எழுந்தால் நான் விலகிச் செல்வதே வழக்கம். ஆனால் இது இணையத்தில் மட்டுமே. நேரில் என் அரசியல் கண்ணோட்டம் மிகவும் அழுத்தமானது. இப்போது நான் அதைப் பற்றி விவாதிக்கவில்லை.
தற்போது தமிழகத்தில் புதிதாக ஒரு கேலிக்கூத்து வடிவம் பெற்றுவருகிறது. அதன் நாயகர்கள் ஒரு காலத்தில் நாம் ரசித்த, விரும்பிய, பாராட்டிய, புகழ்ந்த இருவர்கள். ஒருவர் உச்ச நட்சத்திரம், மற்றவர் உலக நாயகன். இணையத்தில் நான் சில நெறிமுறைகளை கடைபிடிப்பதால் இந்த இரண்டு கோமாளிகள் பற்றி தரம் தாழ்ந்து பேச முடியாத நிலையில் இருக்கிறேன். வெளிநாட்டில் ஒளிந்துகொண்டு மனப்பிறழ்வு நோயில் உழன்று கொண்டிருக்கும் சில பயித்தியங்கள் போல ஆங்கில ஆவேசம் கொண்டு f ... என்று எல்லோரையும் திட்டுவது போன்று எழுத முடிந்தால் இந்தப் பதிவும் அதே தரத்தில் இருக்கும். எனக்கோ அதில் நாட்டமில்லை.
கருணாநிதி ஜெயலலிதா என்ற இரண்டு ஆளுமைகள் இருந்தவரை சங்கி மங்கி களாக இருந்த இந்த கோமாளிகள் தற்போது அரசியல் போதை கொண்டு தினம் தினம் எதை எதையோ உளறுவது இவர்களையா நாம் அப்போது பெரிதாக நினைத்தோம் என்று நம்மையே குற்றவாளிகள் போல எண்ண வைக்கிறது.
ஆஸ்கார் நாயகன் என்று தன்னையே போற்றிக்கொண்டவர் ஆஸ்கர் விருதின் உண்மை தெரிந்தபின்பு உலக நாயகன் என்று அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தவர் எனக்கு அரசியல் வராது என்று மேதாவித்தனமாக கதைத்தவர், நடிப்பு மட்டுமே எனது வாழ்க்கை என்று நடித்தவர் இன்றைக்கு மிக மலிவான யூ டர்ன் அடித்து பிக் பாஸ் போன்ற அலங்கார மேடைகளில் உலா வந்தபடி நடிப்பும் அரசியலும் பேசுவதைப் பார்க்கையில் நான் எனது காலணியை யோசிக்கிறேன்.
இந்த மேதாவி ஒரு புறம் இப்படி நம்மை வதைக்க அடுத்த கோமாளி என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் எதை எதையோ ஆதாரம் என்று சொல்லி தேவையில்லாத பாதைகளில் பயணம் செய்கிறார். ஆன்மிக அரசியல் என்று புதிதாக பேசுவதாக இவர் எண்ணிக்கொண்டாலும் அரசியலில் ஆன்மிகம் செய்யும் ஆட்களுக்கும் இவருக்கும் நூலிழை கூட வித்தியாசம் இல்லை.
வரும் நாட்களில் இந்த இரண்டு கோமாளிகளும் இன்னும் அதிகமாக நம்மை வியக்க வைக்கப் போகிறார்கள். ரஹ்மானின் ஒரு பாடல் போன்று "என் மீது விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?" என்று இவர்களைப் பார்த்து கேட்கத்தோன்றுகிறது.
எதோ ஒரு படத்தில் கவுண்டமணி மற்றவரைப் பார்த்து சொல்வார். "தெரிஞ்சத செய்ங்கடா". சரியான வார்த்தைகள். உச்சத்திற்கும் உலகத்திற்கும் இதை நாம் சமர்ப்பணம் செய்யாலாம் என்று தோன்றுகிறது....