தற்போது அதிகமாக விவாதிக்கப்பட்ட கருத்தாக்கங்களில் ஒன்றான இசைக்கான உரிமை பற்றி நிறையவே வாசித்தாயிற்று. இப்போது எழுந்திருக்கும் ராயல்டி விவகாரங்களோ, பாடலின் உரிமை குறித்த வழக்குகளோ வணிக அம்சங்கள் கொண்டவை. அவை முற்றிலும் பாடலை உருவாக்குபவர்களுக்கும் அதை உபயோகிப்பவர்களுமான வியாபார யுத்தம். இசையின் இன்னொரு பக்கத்தில் இருக்கும் ஒரு சராசரி இசை ரசிகனுக்கு இதில் பங்கில்லை. ஒரு பாடல் யாருக்கு சொந்தம் என்பது குறித்த சந்தேகங்கள், விவாதங்கள், நியாயங்கள் இன்னும் நம் தமிழிசையில் ஒரு தெளிவான வரையறுத்தலுக்கு உட்பட்டு விவரிக்கப்படவில்லை. எல்லாமே ஆங்கில இசைப் பாரம்பரியத்தின் நீட்சியாக தொடர்கிறது.
அதே சமயம் மேற்கத்திய சங்கீதத்தின் பின்புலம் குறித்த போதிய அறிவு நம்மிடம் பெரிதும் இல்லை என்ற உண்மையை மறுக்க முடியாது. தமிழிசை மேற்கத்திய இசையின் வணிக அம்சங்களை தற்போது சுவீகாரம் எடுத்துக்கொண்டாலும் நமது சங்கீதப் பாரம்பரியத்தில் இது ஒரு பொருந்தாத வடிவமாகவே காட்சியளிக்கிறது. அதற்கான காரணங்கள் பல.
முதலில் இசை என்னும் மகத்துவம் ஒரு தனி ஆளுமையாக நம்மிடம் பொதுவாக இல்லை. அவ்வாறு நிலைபெற்றிருக்கும் இசையின் மீது பலருக்கு மோகம், ஈர்ப்பு போன்ற இத்யாதிகள் கிடையாது. இந்த வாக்கியம் சற்று துருத்தலாக தெரிந்தாலும் இதுவே உண்மை. பெரும்பாலும் நமக்கு இசை என்பது மற்றொரு மிகப் பிரம்மாண்ட விருட்சத்தின் நிழல். அந்த விருட்சம் என்னவென்று நான் குறிப்பு வரையாமலே உங்களால் எளிதில் புரிந்துகொள்ளமுடியும். இசைக்கான தனிப்பட்ட சாலைகளை பெரிய அளவில் நாம் இதுவரை அமைக்கவில்லை. அப்படி உருவான சாலைகளும் சாமானியர்களை சென்றடையாது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் மேட்டுக்குடி மனோபாவத்திற்கு அடிகோலின.
ஆனால் மேற்கத்திய நாடுகளில் இசை என்பது அவ்வாறதானதல்ல. இசையின் பல்வேறு கூறுகள் அங்கே காலம் காலமாக சிறிது சிறிதாக ஊன்றப்பட்டு, நூற்றாண்டுகளாக ஆழமாக, அழுத்தமாக வளர்த்தெடுக்கப்பட்டு, எதையும் சாராத இசைக் கோட்பாடுகள் வழியே அங்கே மேற்கத்திய சங்கீதம் ஒரு தனியான, மேன்மையான தகுதிக்கு உயர்ந்துள்ளது. அங்கேயும் மேட்டுக்குடியினரின் இசை, சாமானியர்களின் இசை என்ற பகுப்புகள் உண்டு. இசை என்பது மிக மிகப் பிரதானமான ஒன்றாக அங்கே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை யாராலும் மாற்றியமைக்க இயலாது.
ஒப்பீடடளவில் நம் தமிழிசை முழுதும் எதிர்மறையான இன்னொரு புள்ளியில் நிற்கிறது. மார்கழி கால சாஸ்திரீய சங்கீதங்களையும் , ரிமோட் கருவியில் பொத்தான்களை அழுத்தும்போது திரையில் சில வினாடிகளில் தோன்றி கடந்து போகும் பொதிகை டீவி போன்றவைகளில் ஒலிக்கும் கானங்களையும் இங்கே நினைவில் கொள்ளவேண்டாம். மேற்கத்திய இசை போன்றே ஒரு தனி ஆளுமையாக உயர்ந்திருக்க வேண்டிய நமது தமிழிசை, முப்பது நாற்பதுகளில் ஏற்பட்ட சினிமா என்ற காட்சி வடிவத்தின் முன்னே வீழ்த்தப்பட்டுவிட்டது. இன்று நமக்கு இசை அல்லது பாடல் என்றால் அது எந்தப் படத்தைச் சார்ந்தது என்ற கேள்வியே பிரதானம். சினிமா என்ற அந்தக் கவர்ச்சி நாகம் நமது இசையை விழுங்கியதன் விளைவு ஒரு மகத்தான பாடல் தனக்கான சுயத்தை முழுதும் இழந்து ஒரு நடிகனின் முகமாக வார்க்கப்பட்டு சிதைக்கப்படுகிறது.
இங்கே ஒரு பாடலின் வெற்றி என்பது வெறும் இசை மட்டுமல்லாது அது அடையாளப்படுத்தும் திரைப்படத்தின் வெற்றியை சார்ந்தும் இருக்கிறது. ஒரு படத்தின் வெற்றி அதனுடன் தொடர்புடைய பலரை உச்சியில் நிறுத்திவிடுகிறது. பாடல்களுக்காக ஓடிய படங்கள் என்பது வெகு சில உதாரணங்களே. "பாட்டு நல்லாயிருந்தது என்ன பிரயோசனம்? படம் ஓடலியே!" என்ற விமர்சனம் நம்மிடம் மிகப் பொதுவானது.
இசையை இசைக்கெனெ விரும்பும் மனோபாவம் நம் பொதுபுத்தியில் இன்னும் ஒரு முக்கிய இடத்தைப் பெறவில்லை.
உதாரணமாக புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்க்காக தோழா ஏழை நமக்காக என்ற பாடலை பெரும்பான்மையினோர் "எம் ஜி ஆர் பாடல்" என்று தீர்மானிப்பதில் எந்தவித குற்றயுணர்ச்சியும் கொள்வதில்லை. பாடலை எழுதிய வாலி என்ற கவிஞனும் அதற்கான மனதை மயக்கும் மெட்டு அமைத்து அதை ஒரு மரணமில்லா கானமாக்கிய எம் எஸ் வி யையோ யாரும் பொருட்படுத்துவதேயில்லை. இதேபோல் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே என்ற பாடலும் வெறும் சிவாஜி பாடல் என்ற குறிப்புடன் பலரை திருப்தி செய்துவிடுகிறது. அதற்கு உழைத்த மாபெரும் ஆன்மாக்களை நாம் சடுதியில் கலைத்துப் போட்டுவிடுகிறோம். என்னடி மீனாட்சி அது கமலஹாசன் பாடும் பாட்டலாவா என்ற முற்றுப்புள்ளியும் சம்போ சிவசம்போ ரஜினிகாந்த் அதகளம் பண்ணிய பாடலாகவும் நிலைபெற்றுவிட்டன. இந்த அநீதியான அபத்தத்தின் முடிச்சுகளில் நியாயத்தை தேடுவது மிக சிக்கலான காரியம்.
இந்த நிலைமை மாறவேண்டிய நிர்ப்பந்தம் எண்பதுகளில் நிகழ்ந்தது. இந்த மாற்றத்தின் பின்னே இருந்தது நவீன இசையின் முகமாக அப்போது அறியப்பட்ட ஒருவர்.
எண்பதுகளில் திரையில் நடிகர்கள் தாண்டி இன்னொருவரின் பெயருக்கு அரங்கங்கள் அதிர்ந்தன. விசில்கள் விளையாடின. அது இளையராஜா. அன்னக்கிளி, பதினாறு வயதினிலே, இளமை ஊஞ்சலாடுகிறது, பிரியா போன்ற அவரது துவக்ககால அணிவகுப்புகளுக்கு மக்கள் அளித்த பாராட்டாக அந்த கைத்தட்டல் பொருள் கொண்டது. அவருக்கு முந்தின தலைமுறை இசை ஜாம்பவான்களுக்கும் கிடைத்திருக்க வேண்டிய இந்த அங்கீகாரம் எண்பதுகளில்தான் இசையமைப்பாளர்களுக்கு சாத்தியமானது.
ஒரு திரைப்படத்தில் வரும் பாடலோ பின்னணி இசையோ வெறும் ஜிகினா வேலை கிடையாது. அது ஒரு படைப்பின் ஆழமான சுவடு.
நடிகர்கள் மற்றவர்களை விட வெகு எளிதாக மக்களின் மனதை ஆக்ரமித்துக்கொள்ள முடியும். அவர்கள் அழுதாலோ, வீரம் காட்டினாலோ, காதலித்தாலோ, நையாண்டி செய்தாலோ அவை யாவுமே பார்ப்பவர்களை ஒரு உடனடி பாதிப்புக்கும் எதிர்வினைக்கும் இட்டுச் சென்று விடும். கைத்தட்டலோ, கல்வீச்சோ இதன் ஆயத்த பரிசுகள். ஆனால் ஒரு இசைஞன் தனது முகம் காட்டாது தன் மேதமையை மக்களிடம் கொண்டுசேர்ப்பது அவ்வளவு சுலபமல்ல.
அவனது ஒரே முகம் இசை மட்டுமே. இசைக்கருவிகள் கொண்டு அவன் படைக்கும் ஒரு இணை சினிமா கண்களுக்குத் தெரியாதது. ஆனால் அது நாம் காணும் காட்சிகளின் ஆன்மாவாக இருக்கிறது. மனதை துளைக்கிறது. நெருடுகிறது. நெஞ்சத்தை வருடுகிறது. கண்ணீருக்கும் புன்னகைக்கும் ஏதுவான களம் அமைக்கிறது. இசை இல்லாவிட்டால் நமது சினிமா இறந்துபோய்விடும்.
இன்றைய சூழலில் இளையராஜாவைத் தொடர்ந்து ரஹ்மான் போன்றவர்களுக்கு கிடைத்திருக்கும் மரியாதையும் அதன் விளைவாக எழுந்திருக்கும் ஏகமான எதிர்ப்பார்ப்புகளும் இசை என்னும் அந்த பிரமாண்டத்தை நாம் பார்க்கும் பார்வை மாறிக்கொண்டு வருவதை குறிப்பதாக தோன்றுகிறது. ஒரு விதத்தில் இது மிகவும் ஆரோக்கியமானதும் கூட.
சில மரபுகள் மாறத்தான் வேண்டும். தவறில்லை.