Monday 25 March 2013

                            யுவதிகள்-அறிமுகம் 


    அது ஒரு அட்டை இல்லாத  மிகப்பெரிய புத்தகம். தலைப்போ எனக்கு புரியாத வார்த்தையில் இருந்தது. "யுவதிகள்". பத்து,பனிரெண்டு வயதில் இருந்த எனக்கு இது எதோ ஒரு குதிரையை குறிக்கும் சொல் என்று தோன்றியது. அலமாரியில் இருக்கும் பல கதைகளை  தீண்டும் போதும் இந்தக் "குதிரைக்"கதையை மட்டும் கவனமாக தாண்டி செல்லும் லாவகம் என் விரல்களுக்கு இருந்தது. என் வீட்டில்அதிகம் பேசப்பட்ட,விவாதிக்கப்பட்ட கதையாக யுவதிகள் இருந்தாலும்  எனக்கோ  காதல் கதைகளில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு  என்  காமிக்ஸ் கதாநாயகர்கள் அனாசயமாக அதிரடி செய்து கொண்டிருந்தபடியால்  இந்த கதை  என் ரசனைக்கு உட்பட்டது இல்லை  என்பது மட்டும் புரிந்தது.

     துப்பாக்கி சண்டை, கார் துரத்தல்கள்,  ஹெலிக்காப்டர் குண்டு வீச்சு, விமான சாகசங்கள் என்பது போன்ற சிறுவனுக்குரிய ஆர்வங்களில் எனது தேடல்கள் பெரும்பாலும் முத்து காமிக்ஸ் கதைகளோடு முடிந்து போய் விட்டாலும், ஒரே ஒரு பெரிய ருஷ்ய புதினத்தை படித்து விடுவதே என் கதை வாசிப்பின் முற்றுப்புள்ளி என்று தீவிரமாக சிந்தனை கொண்டிருந்தேன் நான். "தந்தையும் தனயர்களும்" எனக்கு  கொடுத்திருந்த பாதிப்பினால் எந்த பெரிய   ருஷ்ய புத்தககமும் என்னை கதிகலங்கச் செய்தது. இருப்பினும் நடைபெற வேண்டியது நடைபெற்றது.

     யுவதிகளை படிக்க எத்தனிக்கும் பொழுதெல்லாம் அது எங்கள் வீட்டின் எதோ ஒரு   சகோதரியின்  கைகளில் பாதியாக விரிந்த நிலையில் இருப்பதை காண்கையில் அது ஒரு பிரார்த்தனை புத்தகம் போலவே எனக்கு காட்சி அளிக்கும். புத்தகமோ மியுசியத்தில்  இருக்கவேண்டிய எல்லா தகுதிகளுடனும் காகிதம் காகிதமாக கைகளில் நில்லாது விழுந்துகொண்டே இருக்கும். அந்த புத்தகத்தின் அட்டையையே  வெகு நாட்கள் கழித்துத்தான் (அதாவது கல்லூரி நாட்களில் மறுபடியும் அந்த புத்தகத்தை விலை கொடுத்து வாங்கியபோது)  பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் வாய்த்தது. இவ்வாறு ஒரு காகித கலவையாக இருந்த  ஒரு புதினத்தை படித்து புரிந்துகொள்வது என் புத்தக வாசிப்பிற்கு  ஒரு   அமிலத் தேர்வாக  இருந்தது.

     இன்னொரு சங்கதியும் உண்டு; யுவதிகளை படித்து விட்டாயா என்றெல்லாம் எங்கள் வீட்டில் யாரிடமும் கேட்கமுடியாது.  உண்மையை சொல்வதானால் யுவதிகளை எத்தனை முறை படித்தாய் என்று வேண்டுமானால் கேட்கலாம். இந்த சூழ்நிலையில்தான் நான் இப்போது ஞாபகம் இல்லாத ஒரு நாளின் மாலையில் இந்த தடித்த கதையை கையிலெடுத்தேன். எங்கள் வீடே சிலாகித்த ஒரு கதையை படிக்கப்போகும் அந்த  எண்ணமே எனக்கு ஒரு ராட்சத குதூகலத்தை கொடுத்தது.

     முதல் பக்கத்தில் பெரிய எழுத்துக்களில் யுவதிகள் என்ற தலைப்பு அதன்கீழ் போரிஸ் பெட்னி என்ற அந்நிய பெயர்.தொடர்ந்து தமிழில் கஜினி என்ற புனை பெயர். கீழே ராதுகா பதிப்பகம் அதன் விலாசம்.அதன் பின்   என் விரல்கள் யுவதிகளை தீண்டின. முதல் பக்கத்திலேயே கதையின் நாயகி  டோசியா ஒரு  புகை கக்கும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் காட்சி ஒரு நீண்ட அடர்த்தியான வர்ணனைகளோடு விவரிக்கப்படிருக்கும். படிப்பதற்கு கண்டிப்பாக பொறுமை வேண்டும். எனக்கு அந்த வயதில் அது இல்லை.
 
      ஆரம்பமே இப்படி தலைக்குள் சுத்தியல் அடிக்கிறதே என்ற எண்ணம் மேலும் இதை போய் எப்படியெல்லாம்தலை மேல்  தூக்கிவைத்துக்கொண்டு  கொண்டாடினார்கள் என் வீட்டில் என்று அலுப்பு கலந்த கோபம் வேறு. இரண்டு பின்னர் நான்கு பக்கங்கள் என்று தாவல்  தாவலாக புத்தகத்தை புரட்டினேன்.அதாவதுபடித்தேன்(என்றுநீங்கள்அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டும்).
 
     முடிவில் எனக்கு புரிந்ததெல்லாம் இதுதான்; காம்சாத்கா என்னும் நகரில் இருக்கும் கட்டுமர தொழிலாளர்களின் கும்மாளம் ,காதல், வேடிக்கை, துக்கம் கலந்த வாழ்கையை விவரிப்பதே இந்த புதினத்தின் மையக்  கோடு.  டோசியா என்ற ஒரு   குறும்புக்கார,அழகில்லாத பெண்ணை இலியா என்னும் வசீகர வாலிபன் காதலிக்கிறான்.எதனாலோ இருவருக்கும் திடீரென பிரிவு வர, இவன் இவளை தொடர, அவள் மறுக்க கடைசியில் டோசியாவும் இலியாவும் மீண்டும் காதலிக்கிறார்கள். இதன் நடுவில் இரண்டோ மூன்றோ கிளைக் கதைகள். என்னால் இதை தாண்டி வேறு எதுவும் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த ஒரு மிகச் சாதாரணமான கதையை உலக மகா அபாரம் என்று புகழ ஒரு அபத்தமான கலை ரசனை இருக்கவேண்டும் என்று எண்ணினேன். இதை படிக்கும் உங்களுக்குமே இப்படித்தான் தோன்றும்.அது இயல்பானதே. ஆனால் இந்த கதையை சில வருடங்கள் கழித்து  இரண்டாம் முறை படித்த போதுதான் என் முன்னாள் ரசனை எவ்வளவு அபத்தமானது என்று எனக்கு உறைத்தது. இந்த முறை நிதானமாக வரி வரியாக வாசித்தேன். இந்த கதையை கொண்டாடுவதில் இருந்த உண்மை எனக்கு புரிய ஆரம்பித்தது. சாதாரண துப்பறியும் மர்ம கதைகளை விட்டு என் ரசனை வேறு  ஒரு மேலான அடுக்குக்கு செல்வதை உணர்ந்தேன்.

     மேலும் இன்னொன்றும் எனக்கு புலப்பட்டது அதாவது யுவதிகள் போன்ற ரஷ்ய புதினங்களை   புரிந்து கொள்வது என்பது  ஒரு நிலைதான்.அதோடு அந்த  வாசிப்பு முழுமை அடைந்து விடுவதில்லை . அதை விட   முக்கியமானது அந்த  கதையை  வரி வரியாக ரசிப்பது. படிக்கும் போதே கற்பனைக்கு சுதந்திரம் அளித்து , அந்த வார்த்தைகளுக்குள்  உயிர் பெற காத்திருக்கும் இலியா, டோசியா, அன்பிஸ்ஸா, பில், காத்யா, போன்ற மனிதர்களையும் மற்றும் அந்த முழு காம்சாத்கா நகரத்தையும் நமக்கு வெகு அருகே  உணரும் அந்த ஆக்சிஜன் அனுபவமே இந்த கதை வாசிப்பை நமக்குள் முற்றுப்பெற செய்யும்.அதுவே  இந்த யுவதிகள் புதினத்தை படிப்பவர்களுக்குள் ஒரு பரவச  வடுவை வலிகள் எதுவுமின்றி ஏற்படுத்துகிறது. இதுவே எனக்கு நிகழ்ந்தது. அந்த நிகழ்வே என்னை பல வருடங்கள் கடந்த   பின்னும் அதே வலிமையான சந்தோஷத்தோடு  இந்த புதினத்தை பற்றி இந்த இரவில் எழுத வைக்கிறது. எளிமையாக சொல்வதானால் யுவதிகள்  ஒரு அனுபவம் .ஆனால்  அப்படி உணர்ந்த கடைசி வாசகன்  நானாக   இருக்கக்கூடாது  என்று ஆத்மார்த்தமாக விரும்புகிறேன்.

      அடுத்தது ; இசை விரும்பிகள்.

 

 
     
     
     
     

Monday 11 March 2013

                    தூரத்து இலக்கியங்கள் 
     
     காமிக்ஸ் கதைகளோடு நெருக்கமாக இருந்த என் பள்ளி  நாட்களில் எங்கள் வீட்டில் என் சகோதரிகள் இடை விடாது எனக்கு புரியாத பெயர்களை குறித்து விவாதித்துக்கொண்டிருப்பார்கள். "பசாரவ் கடைசியில் செத்து விடுவானா?, டிராவ்கின் யாரை கல்யாணம் செய்து கொள்வான்?"போன்ற விவாதங்களில் நான் ஆரம்பத்தில் அவ்வளவாக அக்கறை காட்டாவிட்டாலும், போகப்போக இவர்கள் யார் என்று கேள்வி முளைத்தது. பிறகே தெரிந்தது அவர்கள் ரஷ்ய புதினங்களை பற்றித்தான் இவ்வாறு அதீத ஆனந்தத்துடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது. ஜானி  நீரோ, ரிப் கெர்பி, லாரன்ஸ் டேவிட், இரும்புக்கை மாயாவி, காரிகன், என்று காமிக்ஸ் குளத்தில் கும்மாளம் அடித்துக்கொண்டிருத எனக்கு ருஷ்ய கதைகள்  என் தலையை தாண்டிய ஒரு சங்கதியாகவே இருந்தது.

     ஆர்வமிகுதியால் கதையை கேட்டால் "நீயே படித்துக்கொள் அப்போதுதான் புரியும்"என்று பதில் கிடைக்கும். எனவே ஒரு நாள் அந்த புத்தகத்தை எடுத்தேன்.தலைப்பு "தந்தையும் தனையர்களும்".(இவான் துர்கனேவ் எழுதியது என்று ஞாபகம்) நாலு பக்கம் படித்திருப்பேன். அவ்வளவே. அப்போது நான் படித்த தமிழ் கதைகளின் பாணிக்கும் இந்த ருஷ்ய கதையின் தமிழ் நடைக்கும்  மிகப்பெரிய இடைவெளியை கண்டேன்.  புத்தகத்தின் எடையையும் பருமனையும் கண்டு மிரண்டு போய் ஒரே தாவலில் கடைசி பக்கம்வந்து பசாரவ் என்ன ஆனான் என்பது தெரியாமலேயே என் முதல் ருஷ்ய நாவல் வாசிப்பு இனிதே முடிவு பெற்றது. அந்த வர்ணனைகளும் தமிழ் சொற்களும் என்னை தெறித்து ஓடச் செய்தன. பின் வழக்கம் போலவே ஜானி ஸ்டெல்லாவுடன் போடும் விவாதங்களுக்குள்ளும் லாரன்ஸ் டேவிட்டின் அநாசய சாகசங்களிலும் காரிகனின் மிரட்டல் அதிரடிகளிலும் என் கவனம் சென்றது. இருந்தும் என்னால் ஏன் ஒரு ருஷ்ய புதினத்தை படிக்க முடியவில்லை என்ற எண்ணம் ஒரு live wire போல துடித்துக்கொண்டிருந்தது.

     "இப்படிப்பட்ட கதைகளை படிக்காமல் சுலபமான கதைகளிலிருந்து தொடங்கு "  என்ற அறிவுரைகேற்ப ஒரு  முதல் ருஷ்ய கதையை முழுதும் படித்தேன். காணாமல் போன தந்தி என்கிற கதை அது. போர்முனையில் பணி புரியும் ஒரு தந்தை தன்  குடும்பத்தை காண வரும் முன் சில அலுவலக காரணங்களினால் ஏற்கனவே முடிவு செய்த படி வர முடியாது என்று தன் மனைவிக்கு அனுப்பும் தந்தி  அவளின் இரண்டு குறும்புக்கார பையன்களால் பனியில் தூக்கி வீசப்படுகிறது ஒரு சிறுபிள்ளை சண்டையின் போது. தந்தி தொலைந்து போனது கண்டு அச்சம் கொள்ளும் இருவரும் அம்மாவிடமிருந்து இதை மறைக்க, அம்மாவோ இரண்டு மகன்களையும்  அழைத்துக்கொண்டு நீண்ட  தூர ரயிலில் தன்னுடைய கணவனை காண பிரயாணம் செய்கிறாள். அப்பா வராததைகண்டு சிறுவர்களுக்கோ குற்றம் கலந்த துக்கம். மனைவியோ உண்மை தெரியாமல் பலவித இன்னல்களை சிரமத்துடன் கடந்து கடைசியில் தன் கணவனை காண்கிறாள். தந்தியை தொலைத்த இரண்டு சிறுவர்களும் இறுதியில் தந்தையுடன் ஒன்று சேர்வதுடன் கதை முடிவு பெறும். கதையின் இடையில் இருக்கும் படங்கள் நம்மை அந்த ரஷ்ய கிராமத்துக்கே கை பிடித்து கொண்டுசென்று விடும். அந்த சிறுவர்களின் வேடிக்கை பேச்சும் இயல்பான சண்டைபோடும் குணமும் வெகு நேர்த்தியாக தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கும்.  சிறுவர்கள் கதை என்று படிப்பவர்களால் ஒருவித அலட்சிய சிரிப்புடன் ஒதுக்கித்தள்ள முடியாதபடிக்கு இறுதிவரை படிக்க வைக்கும் மந்திர வாசனை கொண்டது இந்த கதை. படித்து முடித்த பின்னும் நீங்கள் சற்றேனும் "நான் ஒரு சிறுவர்களின் கதையை  படித்து விட்டேனே?"என்று உணராத வகையில் எழுதப்பட்ட சிறப்பான கதை இது.

     ஒரு விஷயம்: இது போன்ற கதைகளை படிப்பது என்பது முதலில் அங்கே வரையப்பட்டிருக்கும் ஓவியங்களை நம் கண் வழியே இதயத்துக்குள் இழுத்துச்செல்வதுதான். கவலை வேண்டாம் அதை நீங்கள் செய்யத்  தேவையில்லை  .அந்த ஓவியங்களே அதை செய்துவிடும்.

     பள்ளிப்பருவத்தில் படித்த இந்த கதையை பின்னாளில் கல்லூரி நாட்களில் மீண்டும் படித்த போது அதே சுகம்,அதே களிப்பு என்னிடம் திரும்பி வந்தது. இதையே நான் விரும்பினேன் என்றும்  தோன்றுகிறது. நான் ரசித்து படித்த பல கதைகள் என் ஞாபக அடுக்குகளிலிருந்து காணாமல் போய்விட ருஷ்ய கதைகள் மட்டும் என்னுள்ளே உயிரோடு நெருப்பு கங்குகள் போல அணையாமல் இருப்பது ஒரு வியப்பான உண்மை. இது உங்களில் பலருக்கும் நேர்ந்திருக்கலாம். நாம் எதை விரும்புகிறோமோ அது நம்மிடமிருந்து  விலகிச் செல்லாது. இரும்பு பெட்டிக்குள் கீழே பத்திரமாக வைத்திருக்கும் ஒரு பழைய புகைப்படம் போல, இப்போது இல்லாத நண்பன் எழுதிய ஒரு கடிதம் நம்மிடம் இருப்பது போல, ஒரு இனிமையான மணம் போல, ஒரு ஆனந்த ஞாபகமாக அது நம்மை விட்டு அகலுவதில்லை  என்றைக்கும்.
   
     இங்கிருந்தே என் தூரத்து இலக்கிய தேடல் துவங்கியது. கதையை மட்டுமே என்னால் சொல்ல முடியும் அந்த கதை படிப்பவர்களிடம் கொடுக்கும் குழந்தைத்தனமான உவகையை என்னால் கண்டிப்பாக உங்களிடம் செலுத்த முடியாது. அதை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும். அதுவே நீங்கள் இது போன்ற இலக்கியங்களுக்கு செய்யும்  முறையான மரியாதை.

 என்னுடைய அடுத்த பதிவு; யுவதிகள் என்னும் மகா ருஷ்ய புதினம். ஒரு அறிமுகம்.