Sunday, 9 November 2014

இசை விரும்பிகள் XXII -எழுபதுகள்: நினைவுகளின் நீட்சி.


ஒரு கருப்பு வெள்ளைப்  புகைப்படம், முற்றத்தில் தெறிக்கும் சூரிய வெளிச்சம், தூண்கள் நிரம்பிய வீடு, ரசாயன மாற்றமடைந்து சருகாகிவிட்ட மஞ்சள் நிறம் பூசிக்கொண்ட  புத்தகப் பக்கங்கள், ஒரு இன்லேன்ட் கடிதம், பொத்தான்கள் கொண்ட ஒரு பழைய ரேடியோ,  பின் ஒரு பழைய பாடல்..... இவை நமது மன ஆழத்தில் துயில் கொண்டுவிட்ட துயரமான, களிப்பான, வேதனைச் சுகமான நினைவுகளை நோக்கி நம்மை விரைந்து செலுத்தும்  வியப்புகள்....

                                       

                                              எழுபதுகள்: நினைவுகளின் நீட்சி.


             நீண்ட நாட்கள் கழித்து எனது பழைய நண்பன் ஒருவனைச் சந்திக்க நேர்ந்தது. நண்பர்களின்  சந்திப்பே ஒரு உற்சாக ஊற்றுதான்.  குன்ஹா தீர்ப்பு, சொத்துக் குவிப்பு வழக்கு, ஊழல், தண்டனை என்று அவன் அப்போது நிகழ்ந்தவைகளை  சூடாக விவாதிக்க ஆரம்பித்தான். எனக்கோ இந்த அரசியல் பார்வைகளில் அதிக ஈடுபாடு எப்போதுமே கிடையாது. நீதி, நேர்மை என்பதெல்லாம் நம் நாட்டில் நேர்மையாக இருப்பதாக நான் என்றுமே தீவிரமாக எண்ணியதேயில்லை. மேலும்  என்னிடம் அரசியல் பேசினால்  எனது எதிர்வினை கடைசியில் "அப்படியா? இருந்துவிட்டுப் போகட்டுமே." என்பதாகத்தான்  இருக்கும்.  என் நண்பனோ முன்னை விட முனைப்பாக அரசியல் கட்சிகளை சாடத் துவங்க  நான், "அரசியல் மதம் இரண்டும் பொதுவெளியில் தவிர்க்கப்படவேண்டிய விவாதங்கள்." என்றேன் அவனிடம். "நீ சொல்வது சரிதான்" என்று உடனே ஒத்துக்கொண்டவன் ."வேறு என்ன பேசலாம்?" என்று கேட்டான். "பொதுவாக இசை பற்றி பேசலாம். உனக்குப் பிடித்த ஐந்து பாடல்களைக் குறிப்பிடு" என்று வேறு பாதைக்கு அவனை இழுத்து வந்தேன். இன்னும் துடிப்பாக உடனே என் யோசனைக்கு செவிசாய்த்தான். இரண்டு நிமிடங்கள் செலவழித்து ஐந்து பாடல்களை குறிப்பிட்டான்.  கீழ்க்கண்டவைகள் எப்போதும் ரசிக்கும் அவன் விருப்ப ஐந்து.

நினைவோ ஒரு பறவை-சிகப்பு ரோஜாக்கள்.
ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும்-ஜானி.
காதல் ஓவியம் பாடும் காவியம்-அலைகள் ஓய்வதில்லை.
பூ மாலையே தோள் சேரவா-பகல் நிலவு.
காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரிப் பொட்டுவைத்து-  வயசுப்பொண்ணு.

    நாங்கள் 70-80களைச் சார்ந்தவர்கள் என்பதால் இது எனக்கு வியப்பாக இல்லை. அவன் குறிப்பிட்ட பாடல்கள் எல்லாமே எனக்கும் விருப்பமானவையே. குறிப்பாக நினைவோ ஒரு பறவை என்ற பாடலை நான் அதிகம் நேசித்ததுண்டு. சாலையில் நின்றுகொண்டும் எதோ  கடைக்கருகில் சதைத்தூணாக மாறி செய்யவேண்டிய வேலையைச் செய்யாதும்  வானொலியில் ஒலித்த பல பாடல்களை நான் என் பால்ய பருவத்தில் ரசித்துக் கேட்டவன். அவை பெரும்பாலும் இளையராஜாவின் பாடல்களாகத்தான் இருக்கும். பள்ளிப் பருவத்தில் நாம் கேட்கும் கானங்கள்தானே பசுமையாக நம்மில் துளிர்த்துக்கொண்டிருகின்றன!

    "அதெல்லாம் சரி. அது ஏன்  காஞ்சிப் பட்டுடுத்தி பாடல்? இது உன் தேர்வு போல தெரியவில்லையே?" என்றேன். "எப்படி சரியாக கண்டுபிடித்தாய்?" என்றவன், "எனக்குப் பிடிக்கும் ஏனென்றால் என் ஆளுக்கு ரொம்பப் பிடிக்கும்." என்றான் கண் சிமிட்டியபடி. நான் எதிர்பார்த்ததுதான். "உன் மனைவிக்குத் தெரியுமா இது?" என்று கேட்டேன். ஏனென்றால்  அவன் காதல் கதை நம் சமூகத்திலிருக்கும் ஏராளமான தோல்வியடைந்த அமர காவியங்களில் ஒன்று.

     சற்று நேர மவுனத்திற்குப் பிறகு, "ஆனால் என்ன ஒன்று பார்த்தாயா? இது ஐந்துமே இளையராஜா பாடல்கள்." என்றான் உணர்சிவசப்பட்டவனாக. அது ஒரு தேவையில்லாத உணர்ச்சியாக எனக்குத் தோன்றியது. ஏனென்றால்  அது உண்மையில்லை என்று எனக்குத்  தெரியும். அவன் சொன்னதில்  நான்கு இளையராஜா இசையில் வந்த பாடல்கள். கடைசியில் அவன் குறிப்பிட்ட   காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரிப் பொட்டு வைத்து என்ற பாடல் 78 இல் வந்த வயசுப் பொண்ணு என்ற படத்தில் இடம் பெற்றது. அதற்கு இசை அமைத்தது  எம் எஸ் விஸ்வநாதன். இதை நான் அவனிடம் தெரிவித்த போது இரண்டு முறை நம்பாத சிரிப்பு சிரித்தான். சரிதான். சிலர்  மண்டைகளைத்  திறந்து நேரடியாக கபாலத்தில் உண்மையை ஊற்றினாலும் ஒரு பலனுமில்லை என்று என் முயற்சியை கைவிட்டுவிட்டேன். என் நண்பனைப் போலவே  பலரும் இந்தக் காஞ்சிப் பட்டுடுத்தி பாடலை  இளையராஜாவின் இசை  என்றே கருதுகிறார்கள். இது  நானறிந்த ஒன்றுதான். ஏன் நானே எனது பால்ய வயதில் இந்தப்  பாடலை அப்படித்தான் நினைத்திருந்தேன். படத் தலைப்பும் வயசுப் பொண்ணு என்று பாரதிராஜா வகையறாக்களின் தலைப்பு  போல இருந்ததும்  இந்தப்  பிழை நிகழ்ந்ததற்கு ஒரு முக்கிய காரணம்.

  புதிதாக திருமணமான பெண்ணொருத்தி தன் கணவன் வீட்டில் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்ற மூளை மழுங்கிய ஆணாதிக்க சிந்தனை வரிக்கு வரி தெறித்தாலும்  கேட்பதற்கு மந்திர மயக்கத்தைக் கொடுக்கும் கானம்.  ஒரு இடத்தில் கூட நம் ரசனையை சிதைக்காத வகையில் நளினமாக நடை பயிலும்  மிக அலாதியான பாடல் இது.

      இப்போது பாதியில் விட்டுவிட்டு வந்த என் நண்பனை மீண்டும் பார்ப்போம். "என் பட்டியல் முடிந்தது. இப்போது நீ சொல்." என்று என்னைக் கேட்டான். இதைச் சொல்லிவிட்டு உடனே, "நீ டி ஆர் மகாலிங்கம்  பாட்டையெல்லாம் சொல்லுவியே" என்று கலவரமடைந்தான் . எனக்கு அது சற்று ஆச்சர்யமாக இருந்தது. அடடே என்னைப் பற்றி கொஞ்சமேனும் சரியாகக் கணித்திருக்கிறானே என்று எண்ணினேன்.  "டி ஆர் மகாலிங்கம் வரை போகமாட்டேன்." என்ற உறுதிக்குப் பிறகு நான் சொன்னேன், "சொன்னது நீதானா? பாடல் எனக்குப் பிடித்த ஒன்று."  உடனே , "நான் அடுத்து இதைத்தான் சொல்ல நினைத்தேன்." என்றான் அவன். "ஏன் இதையும்  உன் ஆள் ரொம்பவும் விரும்பிக் கேட்பாளோ?" என்றேன். "அதில்லை. நல்ல பாடல். அப்பறம் பாச மலர் படத்தில் ஒரு அருமையான பாடல்..." அது என்ன பாடல் என்பதை அவன் மறந்துவிட்டான். "மலர்ந்தும் மலராத பாதி மலர்போல.." என்று நான் ஆரம்பித்ததும் "அதேதான். ச்சே சான்சே இல்லை." என குதூகலித்தான்: "கேட்டா அழுகை வந்துரும். இல்ல?" என்றான்.   "உண்மைதான். ஆனால் ஒன்று. இதையும் இளையராஜா பாடல் என்று சொல்லிவிடாதே." என்றேன்.  "அப்ப இல்லியா?" என்று போலியாக வியப்பு காட்டினான். எனக்கு எரிச்சல்தான் வந்திருக்கவேண்டும் மாறாக   சிரிப்பு வந்தது.  " நாம்  அரசியல் பற்றியே பேசியிருக்கலாம்." என்றேன்.

     எழுபதுகளின் நேர்த்தியான இன்னிசை  அதிகம் விவாதிக்கப்படாத ஒன்று. பெரும்பாலும் இந்த காலகாட்டம் ஹிந்தி இசையின் ஆதிக்கம் நிறைந்ததாகவும் தமிழிசை பின் இருக்கைக்கு  போய்விட்டதாகவும் ஒரு நிரூபனமற்ற கருத்து பரவலாக சிலரால் பரப்பப்படுகிறது.  எழுபதுகளின் இன்னிசையை என்னால் முடிந்த அளவுக்கு வெளிப்படுத்தும்  முயற்சியில் நான் எழுதும் ஏழாவது பதிவு இது.  இவற்றில் மொத்தமாக  நான் சேகரித்துச் சொல்லியிருக்கும் பாடல்கள் அப்போது வந்ததில் பாதி அளவு கூட இருக்காது.  இருந்தும் ஒரு சிறிய எண்ணிக்கையையாவது பதிவு செய்வது அவசியம் என்பதைத் தாண்டி சில  முரட்டுக் கருத்துகளுக்கு முடிவு கட்டவும்  சில மூடப்பட்ட கதவுகளை திறக்கவும் தேவைப்படும் ஆயுதம் என்றே நான் எண்ணுகிறேன்.

      மதன மாளிகையில் மந்திர  மாலைகளா உதய காலம்வரை உன்னத லீலைகளா என்ற பாடல் ராஜபார்ட் ரங்கதுரை என்ற படத்தில் இடம்பெற்ற கனவு கானம். அப்போது அதிகம் கேட்டதில்லை. ஏனோ பிடித்ததில்லை.  75ஆம் ஆண்டு  காலில் நடந்த அறுவைச் சிகிச்சை ஒன்று என்னை ஏறக்குறைய ஒரு மாதம் மருத்துவமனையில் முடக்கிப்போட்டது. அம்மா மட்டும் என்னுடன் இருக்க என் சகோதரனும் சகோதரிகளும் தினமும் என்னை வந்து வேடிக்கைப் பார்த்துவிட்டு போவது எனக்குப்  பழகியிருந்தது. அடுத்த வார்டில் தனியாக இருந்த ஒரு வயதான தாய் ட்ரான்சிஸ்டரில் பாடல்கள் கேட்டுக்கொண்டிருப்பார். குறிப்பாக மதன மாளிகையில் என்ற இந்தப் பாடலை அப்போதுதான் முழுமையாகக் கேட்டேன். அதன் மெட்டும் ராக தாள நுணுக்கங்களும்  முழுதும் புரியாவிட்டாலும் எதோ ஒரு வசீகரம்  அந்தப் பாடலை ரசிக்கவைத்தது.  இன்றும் இந்தப் பாடல் எனக்கு நான் தங்கியிருந்த மருத்துவமனையின் வாசனையையும் அந்த நீண்ட தாழ்வாரங்களையும், காலில் தினமும் எதோ ஒரு கூர்மையான கம்பி கொண்டு டிரெஸ்ஸிங் செய்தபோது அனுபவித்த வலியையும் அப்படியே திரும்ப கொண்டுவருகிறது.  நாஸ்டால்ஜ்யா! நினைத்தை முடிப்பவன் படத்தின் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போல ஆடலாம் பாடலாம் என்ற பாடலும் இதே மருத்துவமனை நினைவுகளை என்னுள் புதுப்பிக்கும்.

        நான் உள்ளே இருந்து வெளியே வந்தேன் உலகம் தெரியுதடா  என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு எங்கள் ஊரிலிருந்த  பிரகதாம்பாள் என்ற திரை அரங்கில் இருப்பது போன்ற நினைவே வரும். பட இடைவேளையின் போது மிகப் பொருத்தமாக இந்தப் பாடல் ஒலிக்கும். இது மணிப்பயல் என்ற படத்தில் வந்தது என்று அறிந்தேன். ஆனால் உறுதியாகத் தெரியவில்லை. இசை எம் எஸ் வி யாக இருக்கலாம்.

    பொன்னென்றும் பூவென்றும் தேனென்றும் சொல்வேனோ, நிலவே நீ சாட்சி மன  நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்,  தை மாதப் பொங்கலுக்கு தாய் தந்த செங்கரும்பே - நிலவே நீ சாட்சி படத்தின் இந்தப் பாடல்கள் தரமானவை.  குறிப்பாக பொன்னென்றும் பூவென்றும் பாடலில் எஸ் பி பியின் இளமை துள்ளும் வசீகரக் குரலை ரசிக்கலாம்.

      நீல மலர்கள் ( அனுராக் என்ற ஹிந்திப் படத்தின் நகல்) என்று ஒரு படம் 79 இல் வந்தது. கமலஹாசன்-ஸ்ரீதேவி நடித்தது. இதில் ஒரு காவியப் பாடல் உண்டு. வசியம் செய்யும் இசை கொண்ட தாலாட்டும் மெலடியுடன் எம் எஸ் வி அமைத்த இது இரவா பகலா நீ நிலவா கதிரா என்ற பாடல்தான் அது. பார்வையற்ற பெண்ணொருவள் தன் காதலன் வழியே இந்த உலகைப் பார்க்கும் நெகிழ்ச்சியான அனுபவத்தை இப்பாடல் மிகச் சிறப்பாக நமக்கு உணர்த்தும். எத்தனை அழகான கற்பனை! அதை இன்னும் அழகேற்றும் என்ன அபாரமான காவியக் கவிதை வரிகள்! பல்லவியைத் தாண்டி சரணத்துக்குள் செல்லச் செல்ல பார்வையற்ற உலகின் இருண்ட சோகத்தைக்  கூட ரசிக்கும் இன்ப மனநிலை நமக்கு வந்துவிடக்கூடிய ஒரு இதயமில்லா இன்னிசை.
     
   கல்யாணமே ஒரு பெண்ணோடுதான் இதில் யார் என்ன சொன்னாலும் ஊர் என்ன சொன்னாலும் என் வாழ்க்கை உன்னோடுதான் லலிதா (76) என்ற படத்தில் வந்த இந்தப் பாடல் ரேடியோ நாட்களின் சுவையை பலருக்கு இன்னமும் உணர்த்தக்கூடியது. மரபிசையை விட்டு விலகாத மெட்டும் வாணியின் வெள்ளிக்குரலும் துருத்தாத இசையமைப்பும் எத்தனை அழகாக ஒன்றுசேர்ந்து விருந்து படைக்கின்றன! இதே படத்தில் வரும்  சொர்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது  பாடலும் கேட்பதற்கு சுகமானது.

   நான் சில எம் எஸ் வி பாடல்களை இளையராஜாவின் இசையாக நினைத்ததுண்டு. அதில் ஒன்றுதான்     அடியேனைப் பாரம்மா பிடிவாதம் ஏனம்மா  வணக்கத்துக்குரிய காதலியே என்ற பாடல். வணக்கத்துக்குரிய காதலியே என்ற படத்தில் வரும் பாடலிது. இது மாலைமதி  பத்திரிகையில் (ஆரம்பத்தில் மாலைமதியில் ஆங்கில காமிக்ஸ் கதைகள் வந்ததன.)  எழுத்தாளர் ராஜேந்திர குமார் எழுதிய ஒரு புதினம். இதே படத்தின் அதிகம் கேட்கப்படாத மற்றொரு இனிமையான கீதம் ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான். இந்தப் பாடல் செல்லும் விதமே ஒரு ஊஞ்சலில் ஆடுவதைப் போலிருக்கும். இரண்டும் செழுமையாகச் செதுக்கப்பட்ட இசைச் சிற்பங்கள். 

    79இல் வந்த படம் ஒரே வானம் ஒரே பூமி. ஐ வி சசி இயக்கத்தில் ஜெய்ஷங்கர் நடித்த இந்தப் படம் முக்கால்வாசி அமெரிக்காவில் படமாக்கப்பட்டது. இதற்கு இசையமைத்தது  எம் எஸ் விஸ்வநாதன்.  அந்நிய மண்ணில் எடுக்கப்படும்  படங்களுக்கான  சிறப்பான பொருத்தமான மேலும் இனிமையான  இசையை கொடுப்பதில் எம் எஸ் வியை விட்டால் அப்போது வேறு யார் இருந்தார்கள்? எண்பதுகளில் ஜப்பானில் கல்யாணராமன் என்று ஒரு படம் வந்தது.  அதில் இருக்கும் ஒரு பாடலில் கூட   ஜப்பானை நினைவு படுத்தும் எந்த சங்கதியும் இருக்காது. எதோ அமிஞ்சிகரையில் எடுக்கப்பட்டதைப் போன்ற   உணர்வுதான் வரும்.  ஒரே வானம் ஒரே பூமி படத்தின்  கும்மாள கீதமாக ஒலிக்கும் சொர்கத்திலே நாம்  அடியெடுத்தொம் வெகு சுகமோ சுகமாக என்ற பாடல் குதூகல முத்திரையை கொண்டது. பிரமாண்டமான இசையமைப்பு கொண்ட மிகச்  சிறப்பான பாடல். உலக சகோதரத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் கொஞ்சம் காம்யுனிஸ்ட் சிவப்பு தென்படும்   அட்டகாசமான பாடல் ஒரே வானம் ஒரே பூமி ஒரே ஜாதி ஒரே நீதி.  சொல்லும் கருத்தைக் கொண்டு இது ஏறக்குறைய யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடலின்  தொனியைக் கொண்டது என்று சொல்லலாம். இதிலுள்ள மற்றொரு அழகான பாடல் மலைராணி முந்தானை சரிய சரிய. இதை முதலில் கேட்டபோது இதில் ஜாலி ஆபிரகாம் வாணி ஜெயராமின் ஒவ்வொரு வரிக்கும்  லலல லலலா ( படத்தில் ஒரு அமெரிக்க ஆசாமி நம்மூர் கே ஆர் விஜயாவை காதலிப்பார். இந்த லலல அவர் பாடுவது.) என்று பின்பாட்டு பாடுவது பெருத்த நகைச்சுவையாக இருந்தது.  நயாகரா நீர்வீழ்ச்சியை குறிக்கும் பாடலிது என்று நினைக்கிறேன். அந்த அமெரிக்க காதலன் கே ஆர் விஜயாவை நினைத்து லலலா என்று பாடுவது ஒரு வேடிக்கை. நீர்வீழ்ச்சியின் நீர்த்துளிகள் நம் மீது படியும் சிலிர்ப்பைக் கொடுக்கக்கூடிய பாடல்.

   அவன் அவள் அது என்று எழுத்தாளர்  சிவசங்கரியின் கதை படமானது. இதில் ஒரு தென்றலாக வீசும் கானம் உண்டு. இப்படிப் போகும்  இல்லம் சங்கீதம் அதில் ராகம் சம்சாரம். உண்மையில் தம்பதிகள் இவ்வாறுதான் தங்கள் வாழ்க்கையைப் பற்றி கனவு காண்கிறார்களா என்ற சந்தேகத்தை ஒதுக்கிவிட்டு இந்தப் பாடலை ரசிக்கலாம். மார்கழிப் பூக்களே இளந்தென்றலே கார்மேகமே என்று மற்றொரு அருமையான பாடலும் இதிலுண்டு. அந்தக் காலம் முதற்கொண்டு என்ற பாடல் கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கும். அதிகம் நான் கேட்டதில்லை அப்போது. ஜிஞ்சினக்க சின்னக்கிளி  சிரிக்கும்  பச்சைக்  கிளி  என்ற ராஜபார்ட் ரங்கதுரை பாடலின் மெட்டில் அமைந்த பாடல்.

      76 இல் வந்த ஒரு படம் பேரும் புகழும். இசை எம் எஸ் வி. இதில் அவளே என் காதலி கொடி  நீருக்குள்ளே மலர் மேலே என்ற ரம்மியமான பாடல் இருக்கிறது. வழக்கமான எம் எஸ் வி பாணிப் பாடல். இதுவும் அதிகம் airplay அடையாத பாடல். ஆனால் எத்தனை நளினமான கீதம்!

     நீ வருவாய் என நான் இருந்தேன்- சுஜாதா என்ற படத்தில் வரும் இந்தப் பாடல் மெலடியின் மேகத் தடவல். ஒரு முறை கேட்டுப்பாருங்கள். அசாதரணப் பாடல்.  இதன் ராகமும் மெட்டும் வரிகளும் ஒருசேர துளித்துளியாக கசிந்து மனதை நிரப்பும்.

   அப்போது ஹிட்லர் உமாநாத் படத்தில் வரும் சுருளிராஜனின் வில்லுப்பாட்டொன்று மிகப் பிரபலமடைந்தது. எம் எஸ் வி பலவிதமான இசை வடிவங்களை அளிப்பதில் கைதேர்ந்தவர் என்பதை மீண்டும் நிரூபித்த பாடல். அப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான இசை முயற்சியாக உருவான  இந்தப் பகடிப் பாடல் அப்போது இளவட்டங்களில்  அதிக பிரசித்திப் பெற்றது. பூப்பறிச்சு மாலை கட்டி  ஆமாடி தங்கம்  எனத் துவங்கி ஒரு பாரம்பரிய வில்லுப்பாட்டுக்கான எல்லா விழுமியங்களையும் ஒருங்கே கொண்டு இடையிடையே சுருளிராஜனின் முத்திரை நகைச்சுவையுடன் (பெரியோர்களே தாய்மார்களே உங்க மனைவிமார்களே, தப்பா எழுதினாதானே அழி ரப்பர் தேவை, மகாத்மா காந்தி என்ன சொன்னார் என்ன சொன்னார் டேய் என்னடா சொன்னாரு?, வில்லை எடுத்தவன் வில்லன், புல்லரிக்குதுண்ணே-பாத்து மாடு மேஞ்சிறப்போகுது ) கேட்பதற்கே அதகளமாக இருக்கும். இந்தப் படத்தின் ஒரே saving grace  இந்தப் பாடல்தான் என்று நினைக்கிறேன். இதில் ஒரு நம்பமுடியாத பாடல் உண்டு. நம்பிக்கையே மனிதனது  சாதனம் அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம் என்ற இப்பாடல் குறிக்கும்  நாயகன் யார் தெரியுமா? கொஞ்சம் தயாராகுங்கள் அதிர்ச்சிக்கு. அடால்ப் ஹிட்லர். ஜெர்மனியில் கூட ஹிட்லருக்கு இப்படியொரு வந்தனப் பாடல் இருக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது. கோழையான கணவனுக்கு தன்னம்பிக்கையூட்ட மனைவி ஹிட்லரைக் கொண்டு வீரம் கற்பிக்கும் அபூர்வப் பாடல்.  இந்தப் படத்தைப் பற்றி விகடன்  விமர்சனத்தில்  "ஹிட்லர் என்ன அவ்வளவு நல்லவரா? அவரை  எதோ காந்தி ரேஞ்சுக்கு புகழ்கிறார்கள் இந்தப் படத்தில்! " என்றொரு ஆச்சர்ய வாக்கியம் இருந்தது.

   ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி- 79இல் வந்த நங்கூரம் என்ற படப் பாடலிது. வானொலிகளில் அப்போது  அதிகம் மிதந்தாலும் நிறைய பேருக்கு இப்போது ஞாபகமிருக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது. கைகளில் பிடிபடும் வண்ணத்துப் பூச்சியின்  உணர்வை கொடுக்கும் பாடல்.

       79ஆம் ஆண்டு வில்லன் நடிகர் பி எஸ் வீரப்பாவின் தயாரிப்பில் வந்த ஒரு படம் திசை மாறிய பறவை. இதில் ஒரு அபாரமான கானம் கேட்ட முதல் நொடியிலேயே என்னைக் கவர்ந்தது.  கிழக்குப் பறவை மேற்கே பறக்குது அது கிழக்கு வானை மறக்கப் பார்க்குது என்று பல்லவி துவங்கி ஒரு லயமான வசியப்படுத்தும் தாளக்கட்டுடன் சரணம் சரணமாக பயணித்து ஒரு மோக நிலையை கேட்பவர்க்கு கொடுக்கும் மந்திர கானம். குறிப்பாக காவிரி என்ன கொள்ளிடமென்ன என்று டி எம் எஸ் கணீரென்று பாடும் அந்த இரண்டாவது சரணம் மற்றும் சரணத்தின் முடிவில் வேறு மெட்டுக்குத் தாவும் காரிருள் தேடுது நிலவை அது திசை மாறிய பறவை என்ற இடம் கேட்பதற்கு சுகமான ஆனந்தம். என்ன ஒரு தாளம்! என்ன ஒரு பாவம்! மரபை மீறாத மந்திர இசை.
     
  ரதிதேவி சந்நிதியில் ரகசிய பூஜை ரசமான  நினைவுகளின் இதழ் மணி ஓசை   ஒரு வீடு இரு உலகம் (80)  என்ற படத்தில் வரும் இந்தப் பாடல் எ ல் மகாராஜன்- சசிரேகா பாடியது. எம் எஸ் வி இசையில் இருக்கும் நீர்த்துப் போகாத நமது பாரம்பரிய இசை இழைகள் இந்தப் பாடலை ராக தூரிகை கொண்டு ரம்மியமாக வரைவதைக்  கேட்கலாம். ஒரு ஆழமான ரசிப்பிற்கான மிகப் பொருத்தமான பாடல்.

    குழலும் யாழும் குரலினில் ஒலிக்க கும்பிடும் வேளையிலே  சிறு வயதில் இதை ஒரு திரைப்படப் பாடல் என்று   எண்ணியிருந்தேன். பல அருமையான கிருஸ்துவ கானங்களை படைத்த எம் எஸ் வி யின் பரவசப்படுத்தும் பரலோக கீதம். 

     எண்பதுகளின் துவக்கத்தில் நான் அதிகமாக இளையராஜா பாடல்களைக் கேட்க ஆரம்பித்திருந்த நேரத்தில் ஒரு நாள் வழக்கம்போல சிலோன் வானொலியின் ஒரு நிகழ்ச்சியில் ஒரு புதிய பாடலொன்றைக் கேட்டேன். கேட்டதும் வியப்பு மேலிட்டது. இவர் இப்படியெல்லாம் கூட பாடல்கள் அமைப்பாரா என்ற சந்தேகம் எழுந்தாலும் அதை மீறிய ரசனைக்கான பாடலாக அது என்னைத் தீண்டியது. இன்றும் அதே தீண்டல் என்னை சுகமாக அணைப்பதை இந்தப் பாடலைக் கேட்கும்பொழுதெல்லாம் உணர்கிறேன். அந்தப் பாடல்  உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா. 82இல் வந்த சிம்லா ஸ்பெஷல் என்ற படத்தின் துடிப்பான இசையுடன் கூடிய துயரப் பாடல். எம் எஸ் வியின் இன்னிசை  இன்னும் இளைக்கவில்லை என்ற செய்தியை ரசிகர்களுக்கு உணர்த்திய பாடல். தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம் என்ற வரிகளுக்குப் பிறகு எஸ் பி பியின்  மின்னல் ஆலாபனை மேலிருந்து கீழிறங்குவது ஒரு அழகியலின் நேர்த்தி. இதே படத்தின் தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம் ஒரு  டப்பாங்குத்துப் பாடலாக இருந்தாலும் அப்போது வரிசை கட்டிவந்த அதே வகைப் பாடல்கள் போலில்லாது சற்று நளினமாக இருக்கும். இதை விட லுக் லவ் மீ டியர் லவ்லி பிகர் லாஸ்டிங் கலர் வெண்மேகமே ஓடிவா என்றொரு மிகச் சிறப்பான பாடல் இதிலுண்டு. கண்ணியமான காதல் கானம். மெட்டை உடைக்காத அழகான வார்த்தைகள். தழுவும் இசை. பரவசப்படுத்தும் பாடல். ஒரு பாடலை நம் மனதருகே கொண்டு வருவதற்கு எம் எஸ் வி அமைக்கும் மெட்டுக்கள்தான் எத்தனை நுணுக்கமானவை! ரசனைமிக்கவை! அவைகள்  அற்புதத் தருணங்கள் என்னும் கருத்தோடு  முரண்பட முடிந்தால்  உங்களுக்கு ஒரு நோய் பிடித்த இசை ரசனை இருந்தால் மட்டுமே முடியும்.
     
    பில்லா என்ற ஹிந்தி டான் படத்தின் நகல் 80இல் வந்தது. இதிலிருந்துதான் ரஜினிகாந்த் வேறு அரிதாரம் பூசிக்கொண்டார். அதுவரை எதோ கொஞ்சமாவது இயல்பான நடிப்பை அவரிடம் காணமுடிந்தது. பில்லாவிற்குப்பின் அமிதாப்பச்சனை அப்படியே நகல் எடுக்க ஆரம்பித்தார். பாதை மாறியது. இந்தப் படத்தின் பாடல்கள் பெரிய வெற்றி பெற்றவை. இருந்தும் நான் அடிக்கடி கேட்க விரும்பாத பாடல்களாகவே அவை இருந்தன. நாட்டுக்குள்ள எனக்கொரு பேருண்டு என்ற பாடல் அப்போது ரஜினிகாந்தைப் பற்றி பத்திரிகைகளில் வந்துகொண்டிருந்த சில கறுப்புக் கருத்துக்களை பகடி செய்வதுபோல இருக்கும்.  மை நேம் இஸ் பில்லா சற்று விறுவிறுப்பான நேர்த்தியான பாடல்.

   இதே ஆண்டில் பொல்லாதவன் என்றொரு படம் ரஜினிகாந்த் நடிப்பில் வந்தது. இசை எம் எஸ் வி. இதில் நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன் என்ற பாடல் பரபரப்பாக பேசப்பட்டது.  ரஜினி ரசிகர்கள் இந்தப் பாடலை கொண்டாடினார்கள். நல்ல பாடல்தான். அதோ வாராண்டி வராண்டி வில்லேந்தி ஒருத்தன் என்றொரு காதல் பாடல் இதிலுண்டு. கேட்பதற்கு சுவையாக இருக்கும். வழக்கமான எம் எஸ் வி மெலடி. ஆனால் நான் இவற்றைவிட அதிகம் ரசிப்பது நானே என்றும் ராஜா ஆனால் முள்ளில் ரோஜா என்ற மிக மென்மையான கீதத்தைதான். கேட்கத் திகட்டாத பாடல்.

  82இல் போக்கிரி ராஜா என்ற படம் வெளிவந்தது. ஏ வி எம் முரட்டுக்களைக்குப் பிறகு ரஜினியை வைத்து எடுத்த இரண்டாவது படம் என்று ஞாபகம். கடவுள் படச்சான் உலகம் உண்டாச்சு மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு, நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா பக்கத்துல பட்டுல ரோஜா போன்ற அப்போதைய காலத் தேவைக்கான பாடல்கள் அதில் இருந்தன. எனக்கு சற்றும் பிடிக்காத பாடல்கள்.  இளையராஜாவின் அதிரடியான பொதுவாக எம்மனசு   தங்கம் பாடல் பாணியோடு  எம் எஸ் வியால்  ஈடு கொடுக்க முடியவில்லை என்றாலும் விடிய விடிய சொல்லித் தருவேன் என்ற பாடல் ஒரு குளுமையான நிலவின் சுகத்தையும், ஒரு எரிந்து முடிந்த நெருப்பின்  கதகதப்பையும்  கொண்டது.

      அஞ்சலி என்றொரு படம் மணிரத்னம் இயக்கத்தில் வந்த சமயத்தில் அதிலுள்ள அஞ்சலி அஞ்சலி எங்கள் கண்மணி என்ற பாடலைச் சிலாகித்து என் நண்பர்கள் பேசுவது வழக்கம். நான் அப்போது தமிழ்ப் பாடல்களை கேட்கும் விருப்பங்களை விட்டு வெகு தூரம் வந்திருந்தேன். விரும்பாவிட்டாலும் அந்த அஞ்சலி பாடல்கள்  எதோ ஒரு சந்தர்ப்பத்தில் காதில் விழுந்த வண்ணமாக இருந்தன. ஒரு பாடல்கூட என் ரசனைகேற்றதாகவோ, நவீனமாகவோ அல்லது கேட்கத் தூண்டும்படியாகவோ எனக்குப் படவில்லை. எல்லா பாடல்களும் இளையராஜாவின் வழக்கமான வறட்டு மேற்கத்திய பூச்சு கொண்ட mundane music. இம்மாதிரியான நீர்த்துப்போன சக்கைகளை ரசிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிர்ப்பந்தத்தில் தமிழ் இசை ரசிகர்கள் இருந்ததற்காக சற்று வேதனை கூட வந்தது. அப்போது தமிழ்வாணன் என்றொரு நண்பர் சுசீலா பாடிய மற்றொரு குழந்தைப் பாடலைக்  குறிப்பிட்டு, "இது அதைவிட நன்றாக இருக்கும்." என்றார். அது முன்பு நான் கேட்ட பாடல்தான். ஆனால் என்னால் அப்போது அந்த ஒப்பீட்டை பூரணமாக உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. பல வருடங்கள் கழித்து அவர் சொன்ன அந்தப் பாடலை மீண்டும்  கேட்டபோது  அவர் கூறியது உண்மைதான் என்று உணர்ந்தேன். அது  மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே என்ற 86இல் வந்த நிலவே மலரே படத்தின் பாடல். நமது மரபிசை ராகத்தின் மீது மேற்கத்திய வண்ணம் பூசப்பட்ட ஒரு ஹாண்டிங் மெலடி. துருத்திக்கொண்டு நம்மை துன்புறுத்தும் மேற்கத்திய தாளங்கள் (அதுவும் கூட மிகவும் பாமரத்தனமாக) அலறும் அஞ்சலிப்பட  பாடல்கள் போலன்றி  இந்த கானம்  ஒரு நதியோரத்து நாணலின்  அழகைக்  கொண்டது. சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன், மாலை பொன்னான மாலை இளம் பூவே நீ வந்த வேளை போன்ற கேட்பதற்கினிய பாடல்களும் இதில் இருக்கின்றன.

    கீழே உள்ளது எழுபதுகளில் எம் எஸ் வி அல்லாத பிற இசை அமைப்பாளர்களின் இசையில் வந்த சில ஏகாந்தப் பாடல்கள். இதையும் விட அதிகமான அளவில் பல சுவையான பாடல்கள் இருக்கின்றன. அவற்றை சேகரிப்பதில் இருக்கும் சிரமம் இந்தப் பதிவை இன்னும் நாள் கடத்தும் என்பதால் சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.

பேசு மனமே நீ பேசு பேதை மனமே பேசு- புதிய வாழ்க்கை.இசை-கே வி எம். எஸ் பி பியின் துவக்ககால அற்புதங்களில் ஒன்று.

இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை, கல்யாண ஆசை வந்த காரணத்தைச் சொல்லவா?- எங்கள் தங்க ராஜா. கே வி எம்.

கல்யாண கோவிலின்  தெய்வீக கலசம்- சத்யம்.கே வி  எம். சற்றே தெலுகு சாயல் வீசும் பாடல். ரசிக்கவைக்கும் கானம்.

நதிக்கரையோரத்து நாணல்களே என் நாயகன் அழகைப் பாருங்களேன்- காதல் கிளிகள். கே வி எம். இந்தப் பாடலைப் பற்றி ஒரு ஆச்சர்யமான தகவல் உண்டு. அது தமிழ்த்திரையிசையில் இந்தப் பாடலில்தான் மிக வேகமாக  தபலா இசைக்கப்பட்டிருக்கிறது என்பதே. இரண்டு சரணத்திலும் வரும் தபலா இசையைக் கேட்டால் இந்தத் தகவல் பொய்சொல்லவில்லை என்று நாம் உணரலாம்.

ஆடுவது வெற்றி மயில் மின்னுவது தேவி இதழ் - அக்கா தங்கை. சங்கர் கணேஷ்.

ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே- கனிமுத்து பாப்பா,- டி வி ராஜு. ஷர்மிலி என்ற ஹிந்திப் படத்திலுள்ள Khilte hain gul yahan    பாடலின் நகல். இதற்கு இசை எஸ் டி பர்மன்.

மணிவிளக்கே மாந்தளிரே மதுரசமே ரகசியமே-  உன்னைத்தான் தம்பி. -விஜய பாஸ்கர்.

பொன்னை நான் பார்த்ததில்லை பெண்ணை தான் பார்த்ததுண்டு- கண்ணாமூச்சி வி குமார்.

பனிமலர் நீரில் ஆடும் அழகை ரசிக்கும் மனதில் சுகமே, மிக நவீனமாக அமைக்கப்பட்ட பாடல். ஏறக்குறைய எண்பதுகளின் மேற்கத்திய சாயலைக் கொண்ட பாடல். மோகனப் புன்னகையின் ஊர்வலமே மன்மத லீலையின் நாடகமே - உறவு சொல்ல ஒருவன். விஜய பாஸ்கர்.

ஆவணி மலரே ஐப்பசி மழையே -தொட்டதெல்லாம் பொன்னாகும் விஜய பாஸ்கர். ஆஹா! என்ன ஒரு அற்புதக் கானம்! இதைக் கேட்கையில் மேகத்தில் ஊர்வலம் போவதைப் போன்ற உணர்வைப்  பெறலாம்.

கண்ணெல்லாம் உன் வண்ணம் நெஞ்செல்லாம் உன் எண்ணம்- ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு- வி குமார்.

ஆனந்தம் அது என்னடா அதை காணும் வழி சொல்லடா,தொடவரவோ தொந்தரவோ - இரு நிலவுகள். இசை ராஜன் நாகேந்திரா. இரண்டுமே ஓடை ஒன்றில் பாதம் நனைய நடக்கும் சுகமானவை.

வரவேண்டும் மஹராஜன் தரவேண்டும் சுக ராகம்- பகடை பனிரெண்டு இசை- சக்கரவர்த்தி. அருமையான பாடல். கேட்ட நொடியிலேயே என்னை வீழ்த்திவிட்டது இந்தப் பாடல். இதை எப்படி வர்ணிப்பது என்று தெரியவில்லை. வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். ஜன்னலருகில் அமர்ந்திருக்கையில் திடீரென ஒற்றைக் காற்று ஒன்று  முகத்தை முத்தமிட்டுச் செல்வதைப் போன்ற  ஒரு திடீர் சுகம் இந்தப் பாடல். ஒருமுறை இந்தப் பாடலைக் கேட்டுகொண்டிருந்தபோது அங்கு வந்த என் நண்பனின் மகன் "இதையெல்லாம் எப்படிக் கேட்கிறீர்கள்?" என்று அதிர்ச்சியடைந்தான். "இன்னும் இருபது வருடம் ஆனதும் இதற்கான பதிலை நீயே தெரிந்துகொள்வாய்." என்றேன் நான் அவனிடம்.

    ஒரு முறை  ஒரு சாலையோரக் கடையொன்றில்  இரவு உணவு எடுத்துக்கொண்டிருந்தபோது   அருகிலிருந்த டிபிகல் சென்னைவாசிகள் மூவர் தங்கள் புதிய அலைபேசி பற்றி அளந்துகொண்டிருந்தார்கள். ஒருவன் சொன்னான்; "புதுசா ஒரு ரிங்டோன் வச்சிருக்கேன். கேளுங்கடா". எதோ பாண்டி நாட்டு கொடியின் மேலே தாண்டிக் குதிக்கும் மீனப் போல ரகப் பாடல் ஒலிக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால்  நான் கேட்ட  பாடல் என்னை சற்று திகைக்க வைத்தது. இதையெல்லாம் கூட இந்த அனிரூத் தலைமுறையினர் கேட்கிறார்களா என்ற ஆச்சர்யம் எழுந்தது. அந்தப் பாடல்: இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே. அவன் உற்சாகமாகச் சொன்னான் : "இந்தப் பாட்டு எப்பிடியிருக்கு பாத்தியா? என்னா மீசிக்? இன்னொரு பாட்டு போடுறேன். இந்த பாட்டையும் கேளேன்." சற்று நேரத்திற்குப் பிறகு  ஒலித்தது நான் பாடும் மவுன ராகம் கேட்கவில்லையா. அவனுடைய குதூகலிப்பும் ரசனையும் என்னை மிகவும் வசீகரித்தது. அவன் கண்டிப்பாக ஊதா கலரு ரிப்பனு வகைப் பாடல்களை தனது ரசனையின் அடையாளமாகக் கொண்டவனாக இருக்க அதிக வாய்ப்புகள் இருந்தாலும்  அதைத் தாண்டி இளையராஜாவின் இன்னிசைத்துளிகளைக் கேட்க அவன் காட்டிய ஆர்வம் ஒரு விதத்தில் அவனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வது ஒரு ஆரோக்கியமான நிகழ்வு.  2014இல் ஒரு இளைஞன் 1980களை வியப்புடன் பார்ப்பது ஒரு முதிர்ந்த ரசனைதான்.  ஆனால்   1980களைச் சேர்ந்தவர்கள் அதே எண்பதுகளில் நின்றுகொண்டு எழுபதுகளையும் அறுபதுகளையும் இகழ்ச்சியுடன் நோக்குவது ஒரு வீழ்ந்த ரசனை.

     வாழ்கையின் வழிகளில் சில வெளிச்சங்களைத் தேடும் விருப்பம் சில சமயங்களில்  நமக்கு ஏற்படும் ஒரு கட்டாயம். இந்தத் தேடல்களே நமது அனுபவங்களை செழுமையாகக்குகின்றன. கடந்த கால வண்ணங்களின் வசீகரத்தை நமக்கு நினைவூட்டுகின்றன. இந்தத் தேடல்தான் என்னை வேறு பாதைக்கு இட்டுச் சென்றது. புதிய கதவுகளைத் திறந்தது. எல்லையில்லா வானத்தில் நிலவைத் தாண்டி ஒளிரும் ஏராளமான   இசை நட்சத்திரங்களை அடையாளம் காட்டியது. குளங்கள்தான் எத்தனை பெரியவை என்ற எண்ணம் இயல்பானதுதான். ஆனால் அது கடல்களைக் காணும் வரைதான்.அடுத்து: இசை விரும்பிகள் XXIII - எழுபதுகள்: பாதையெல்லாம் பரவசம்.