Saturday, 19 December 2015

இசை வசை

நூற்றாண்டு மழையை நாம்  கடந்து விட்டோம் என்று தோன்றுகிறது. காலையில் நான் நடந்து சென்றுகொண்டிருந்தபோது  "நீ ஏன்டா நேத்து லீவு போட்ட?" என்று ஒருவர் மற்றொருவரை கடுமையாக விளாசிக்கொண்டிருந்தார். கொஞ்சம் நகர்ந்ததும் இன்னொருவர் போனில், "நீ என்ன பெரிய **** ?" என்று மிக மென்மையாக குசலம் விசாரித்தபடி தென்பட்டார். அடுத்து இருவர் சாலையில் எதிர் எதிராக நின்றபடி ஒரு கைகலப்புக்குத் தயாராகிக்கொண்டிருந்தார்கள். மழை உணர்த்திய மனிதத்தையும், அது கரைத்துவிட்ட பிழைகளையும் நாம் வழக்கம்போலவே மறந்துவிட்டோம். உண்மைதான். சென்னை தன் இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. 

மக்களின் துயரங்களும் கண்ணீர்த்துளிகளும் வடியும் முன்னே பல செய்திகள் மழையை பின்னுக்குத் தள்ளி நாளிதழ்களின் முதல் பக்கத்தில் வந்து உட்கார்ந்துவிட்டன. அரசியல் வசவுகள், பேரிடர் அறிவிப்புகள், விசாரணை விபரங்கள், இந்த அசாதரணமான கண்ணீர் நிகழ்விலும் ஆதாயம் தேடும் அரசியல் காய் நகர்த்தல்கள் என வரிசையான அபத்தமான அதிரடிகள் தலைப்புச் செய்திகளாக நாம் படிக்கப்படக்  காத்திருக்கின்றன.

இந்த வேளையில்  ஆண் தினவெடுத்த இருவர் பாடல் என்ற பெயரில் எதையோ பேசி, அதற்கு சில வாத்தியங்களை வைத்து இசை என்று ஒரு கருமத்தை அமைத்து பிரசித்தி பெற்ற ஒலியுடன் வெளியிட, அந்த ஒலிப் பாடல் உண்டாக்கிய அலையில் சென்னை வெள்ளமே மூழ்கி விட்டது. நம் தமிழ் இசை இத்தனை தூரம் ஒரு "உயரிய" இடத்திற்கு செல்லும் என்ற எண்ணம் எனக்கு நீண்ட நாட்களாகவே உண்டு. தடை செய்யவேண்டிய கருமாந்திரங்களை நாம் அப்போதே பாரபட்சமில்லாமல் தூர  தூக்கி வீசி எறிந்திருந்தால் இத்தனை ஆவேசத்திற்கு இப்போது அவசியம் ஏற்பட்டிருக்காது.

தடை செய் கைது செய் போன்ற ஆர்ப்பாட்டங்கள் பெண்களால் தற்போது முன்னிறுத்தப்படுவது இதற்குத் தேவையான எதிர்வினையே.   ஆண் திமிர் கொண்ட வசனங்கள் பெரிய பெரிய நடிகர்களால் பேசப்பட்டு, ஆராவாரமான கைத்தட்டல்கள் பெறப்பட்டு, பெண் எப்படி இருக்கவேண்டும் என்ற ஒரு சார்பான சிந்தனையை பொதுவானதாக கட்டமைத்த நமது சினிமா அதன் அடுத்த பரிணாமமாக பாடல்கள் மூலம் பெண்களின் மீது வன்முறை நடத்தியது. இந்த இசை வசை ஏறக்குறைய முப்பது வருட பாரம்பரியம் கொண்டது. இன்று விமர்சனக் கோட்டுக்கு மேலே உட்கார வைக்கப்பட்டிருக்கிற சிலரால் போடப்பட்ட  இந்த ஆபாசத்தின் வித்து புயலில் சிக்கிக்கொண்ட மரம் போன்று தற்போது தலைவிரித்து ஆடுகிறது. எனவே  இந்த இருவர் மட்டுமே குற்றவாளிகள் என்று நம்ப நான் தயாராக இல்லை. அவர்களுக்கு  ஏதுவான இந்தப் "புனிதப் பாதையை" அமைத்துக் கொடுத்த பல "புண்ணியவான்களை" நாம் மறந்துவிட்டு, அவர்களைப் பற்றிப் பேசாமல் இவர்களை  நோக்கி சாட்டையை சுழற்றுவதில் அர்த்தமில்லை.

இந்தப் பாடலை எதிர்த்த பலரில் ஒருவரது கருத்து என்னை கடும் கோபம் கொள்ளச் செய்தது. "இது போன்ற ஆபாசப் பாடல்களை ஆரம்பத்திலேயே தடுக்கவேண்டும்" என ஒரு காராசாரமான கருத்தை அவர் சொல்லியிருந்தார். படித்தபோது எனக்கு வியப்பு வரவில்லை. ஏனென்றால் சிம்பு, அனிரூத் போன்றவர்களுக்கு எந்தவிதமான தண்டனை சரியோ அது அவருக்கும் பொருந்தும். அவர் வேறு யாருமல்ல. இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன்தான் அந்த ஆவேசமான "திடீர் புனிதர்".

பள்ளி நாட்களில் நான் எழுத நினைத்த  ஒரு கதையின் தலைப்பு: "திருடுவது மகா குற்றம் என்றான் கொலைகாரன்."  க அ வின் கருத்தைக் கண்டதும் எனக்கு ஏனோ அந்த தலைப்புதான் நினைவுக்கு வந்தது. கொஞ்சம் எண்பதுகளைத் திரும்பிப் பார்த்தால், அலைகள் ஓய்வதில்லை என்றொரு படத்தை அடையாளம் காணலாம். அதில் வரும் ஒரு பாடல் அப்போது விடலைகளை அதிரடித்தது. அந்தப் பாடலைப் பாடாத உதடுகள் வெகு சிலவே. வாடி எ கப்பக்கிழங்கே என்ற அந்த கருமாந்திரம்  அப்போது போட்ட ஆபாசக் கூத்து இன்டர்நெட், யூ ட்யூப் இல்லாமலே சமூகத்தை அதிர்ச்சியடையவைத்தது. ( பொதுவாக அழகான பெண்களை கிழங்கு மாதிரி இருக்கா என்பார்களாம். கப்பக்கிழங்கு கேரளாவில் பிரசித்தி பெற்றதாம். மேலும் படத்தின் நாயகி ராதா கேரள தயாரிப்பு என்பதால்  வாடி எ கப்பக்கிழங்கே என்று தான் எழுதியதாகவும் இதே க அ பெருமை பொங்க விளக்கம் வேறு அளித்தார்! அதே சமயம் இதே படத்தில் இடம் பெறாத மிக அருமையான புத்தம் புது காலை பொன்னிற வேளை என்ற பாடலையும் இவர்தான் எழுதினார்.)

தமிழ் சினிமாவில் பெண்கள் மீதான வார்த்தை வன்முறை காலம் காலமாக எந்தவித எதிர்ப்புகளையும் சந்திக்காமல் திடமாக வளர்ந்துவந்தது. 70கள் வரை மரபு என்ற சொல்லுக்குள் புகுந்துகொண்டு திரைப்படத் துறையினர் பெண்களை ஆண்களுக்கான மற்றொரு உப பொருளாக மூளைச் சலவை செய்துவந்தார்கள். ஆணை எதிர்த்துப் பேசுவது, வேலைக்குச் செல்வது, ஆணை விட அதிகம் சம்பளம் வாங்குவது, அவன் காலை காலை வேளையில் தொட்டுக் கும்பிட்டாமல் இருப்பது போன்ற அம்சங்கள் ஒரு குடும்பப் பெண் தவிர்க்கவேண்டிய குணாதிசியங்களாக ஒரு அரைவேக்காட்டுச் சிந்தனை கட்டமைக்கப்பட்டது. இரண்டு திருமணம் செய்வதே ஒரு பெண்ணின் "கற்பு" சார்ந்த விஷயமாக பார்க்கப்பட்டது. அப்படி எட்டாவது அதிசயமாக அவள் இரண்டாம் திருமணம் செய்துகொண்டாலோ அவள் தன் முதல் கணவனுடன் உடல் ரீதியாக எந்தவித தொடர்பும் கொண்டிராதவளாக இருக்கவேண்டிய நிர்பந்தமும் அந்தப் பெண்ணின் மீது திணிக்கப்பட்டிருந்தது. 2000த்தில் கூட இந்த மக்கிப்போன எண்ணம் மாறவில்லை. ரிதம் என்ற படத்தில் திருமணமான அன்றே தன் புது  மனைவியை  தொடக்கூட நேரமில்லாமல் கணவன் அவரச வேலையாக அவளை  விட்டுப் பிரிந்து செல்லும் சமயத்தில் விபத்தில் சிக்கி உயிர் இழப்பதாக திரைக்கதை அபாரமாக பின்னப்பட்டிருக்கும். என்ன ஒரு புனிதமான கற்பனை நமது திரைத்துறையினருக்கு! ஆனால் தினவெடுத்த ஆணோ ஆயிரம் திருமணங்கள் செய்வதை கண்டு  மக்கள் அட்சதை போடாத குறையாக களி கூர்ந்து பரவசமடைந்தார்கள். ஆனால் பெண் என்றால் ஒரே முறைதான். கல்யாணம் மட்டுமல்ல. காதலும்தான். இரண்டாம் காதல் கூட  ஒரு பெண்ணுக்கு திரையில் அனுமதிக்கப்படவில்லை. இந்த புழுத்துப் போன ஆண் வர்கத்து அகம்பாவம் பெண்ணை தனக்கு விருப்பம்போல வரையறுத்தது மட்டுமில்லாது பெண்களையே அதுதான் உண்மை என நம்பவும் வைத்துவிட்டதுதான் கொடுமை.

இதன் நீட்சியாக வெளிப்பட்டதுதான் இசை வசை. பெண் பற்றிய ஒரு கருத்தியல் அடிமைத்தனம் கட்டமைக்கப்பட்டவுடன் அடுத்த கட்டத்திற்கு தமிழ்த்திரை நகர்ந்தது.   60களிலும் 70களிலும் கொஞ்சம் கவிதை கலந்த இச்சையுடன் சீண்டிய ஆண், எண்பதுகளில் கோவில் காளை போல அடங்காது அடாவடியாக பெண்ணை தன் பாடல்களால் இம்சித்தான். ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும், நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது என்றெல்லாம் பெண்ணை பகடி செய்தவன், பாரதிராஜா வகையறாக்களின் வருகைக்குப் பிறகு வாடி என் கப்பக்கிழங்கே என்று துணிந்து அவளது முந்தானையை பிடித்து இழுத்தான். மைனா மைனா மாமா புடிச்ச மைனா என்று நாலந்திரமாக சீண்டினான். வாட வாட்டுது என்று பாலியல் தொந்தரவு செய்தான். பொன்மேனி உருகுதே என்று பெண்ணை வெறும் போகத்துக்காக ஆயத்தம் செய்தான்.

இதன் உச்சமாக நிலா காயுது பாடலில் அவனும் அவளும் சேர்ந்து அடித்த கூத்து மிக மிக ஆபாசமான, அருவருப்பானது. அத்தனை அருவருப்பான பாடல் தமிழில் அதுவரை வந்ததில்லை. இனிமேலும் வரப்போவதில்லை. அந்தப் பாடலுடன் தற்போதைய பிரச்சினைக்குரிய ஒலிப் பாடலை ஒப்பிட்டால் யார் அதிகமாக நம் சமூகத்தை அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள் என்று புரியும். தடை செய்திருக்கப் படவேண்டிய பாடலாகிய நிலா காயுது வை அப்போது தமிழர்கள் ரசித்தது இன்றைய தினத்தில் மிகவும் வெட்கப்படவேண்டிய ஒன்று. இதைத்தான் இணையத்தில் ஒரு  பதிவர் நாம் நிலா காயுது பாடலையே ரசித்தோம் என்று நக்கலாக குறிப்பிட்டிருந்தார்.


பாரதிராஜாவின் வருகை ஒரு திருப்பத்தை தமிழ்த் திரையில் கொண்டுவந்தது என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு. ஆனால் அவரோடு வந்த மாற்றம் தமிழ்த் திரை மற்றும் திரையிசையை சீரழிக்க பெரிதும் துணைபோனது பற்றி யாரும் பேசுவது கிடையாது. இந்த பாரதிராஜா- இளையராஜா வகையறாக்கள் வந்த பின்னர்தான் நம் இசை இத்தனை தூரம் கேடு கெட்டு நாற்றமடிக்க ஆரம்பித்தது. முதலாமவர் தன் முதல் படத்திலேயே கதாநாயகியை தண்ணீரில் உடை நனையாமல் ஒரு நதியை கடக்க வைத்து ஆண் வர்க்கத்துக்கே  சேவை செய்தார். பதினாறு வயதினிலே அப்படி வெறியாட்டம் போட்டதற்கு பாரதிராஜா விஷம் போல கொஞ்சமாக  செலுத்தியிருந்த பாலியல் காட்சிகளுக்கும் பங்குண்டு.  அதன் பின் சிகப்பு ரோஜாக்கள் என்று பெண்களை கொலை செய்வதை பெருமிதத்துடன் காட்சிபடுத்தினார். அதில் வரும் ஒரு வசனம் மிகப் புகழ் பெற்றது. அது பெண்களை எத்தனை தூரம் மனதளவில் காயப்படுத்தியிருக்கும் என்ற சிந்தனையே இல்லாமல் நான் உட்பட சிறுவர்கள், இளைஞர்கள் எல்லோரும் உரக்க பகிர்ந்து கொண்டதை நினைத்தால் இப்போது வலிக்கிறது. அந்த வசனம் இதுதான்;"இந்த பொம்பளங்களே இப்படித்தான். குத்துங்க எஜமான் குத்துங்க. நல்லா குத்துங்க". (திருமணம் ஆகாத நாதாரிகள் இப்படி எழுதினால் போடா என்று விட்டு விடலாம். ஆனால் பெண் மூலம் கிடைக்கும் அனைத்து சுக போகங்களையும் அனுபவித்துவிட்டு பணத்துக்காக அவளை இந்த அளவுக்கு காலில் போட்டு மிதிக்கும் ஆண் மனப்பான்மையை மன்னிக்கவே முடியாது.) இது பாரதிராஜா தமிழ் சமூகத்துக்கு அளித்த இரண்டாவது கொடை.

நிழல்கள் என்ற சகித்துக்கொள்ளக்கூடிய படம் எடுத்து கையை சுட்டுக்கொண்ட பிறகு சிலிர்த்துக்கொண்டு அவர் கொடுத்த அடுத்த ஆபாசம்தான் அலைகள் ஓய்வதில்லை. இன்றைக்கு நம் திரையில் பள்ளிச் சிறுவர்கள் சிறுமிகள் காதல் செய்வது  அந்தப் படத்தின் நீட்சியே.  காதல் ஒரு புனிதம் என்ற புரட்டை கடை விரித்து பள்ளிக்கூடப் பருவத்தில் காதல் செய்வது காதலின் மகத்துவம் என்ற புதிய "புரட்சியை" அலைகள் ஓய்வதில்லை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தது.

தற்போதைய ஒலிப்பாடல் கூட ஒரு மோசமான கெட்ட வார்த்தையையோடு முடிந்துவிடக் கூடியது. அதை நீக்கிவிட்டால் அது மற்றொரு காதல் தோல்விப் பாடல்தான். ஆனால் வாடி எ கப்பக்கிழங்கே போன்ற இளையராஜா அமைத்த பல பாடல்கள் முழுவதும் ஆபாசத்தில் முக்கி எடுக்கப்பட்ட கடைந்தெடுத்த கருமாந்திரங்கள். பள்ளிச் சிறுவர்கள் பெண்களை குரூரமான வக்கிரத்தோடு இழிவு செய்ய ஏதுவான பாடல்கள் பலவற்றை  அவர் வெகு அலட்சியமாக அமைத்ததோடு மட்டுமில்லாது அந்த ஆபாச பாணியை தன் புதிய இசை வடிவமாக சுவீகரித்துக்கொண்டார். ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா பாடல் வந்த புதிதில் சில இடங்களில் பெரு உஷ்ணத்தை சந்தித்தது.அதே போலவே கடல் மீன்கள் படத்தின் மதனி மதனி மச்சான் இல்லயா இப்ப வீட்டுல பாடலும் சர்ச்சைகளில் சிக்கி தன் பல்லவியை மயிலு குமரா என்று மாற்றிக்கொண்டது.

இணையத்தில் ஒரு இராவாசி சின்ன வீடு படத்தில் வரும் ஒரு கண்றாவிப்பாடலை (பாக்கியராஜ் என்ற பாரதிராஜாவின் அடுத்த உருவாக்கம் இதில் பெண்களை நான்குவிதமாக பகுத்து அதை வைத்து கேவலமாக ஒரு பாட்டு வேறு பாடுவார்!) குறித்து சிலாகித்து (வழக்கம் போல முதல் சரணத்தில் இரண்டரை செகண்டுக்கு வரும் புல்லாங்குழல் ...வகை சிலாகிப்பு) எழுத ஒரு பெண் பதிவர் வெகு அலட்சியமாக "நாங்களெல்லாம் இது போன்ற பாடல்களை கேட்பதேயில்லை. முதல் வரியைக் கேட்டதுமே கடந்து போய்விடுவோம்" என்று சொல்லியிருந்தார். அப்படியானால் இளையராஜாவின் நிறைய பாடல்களை நம் பெண்கள் இது போலத்தான்  கடந்து சென்றிருப்பார்கள் என்று தோன்றுகிறது.  ஏனென்றால் வீட்டுக்குள் நிலா காயுது, நேத்து ராத்திரி யம்மா, பொன்மேனி உருகுதே, போன்ற பல பாடல்களை அம்மா அப்பா சகோதர சகோதரிகள் சகிதமாக கேட்பதற்கு இளையராஜா ரசிகர்களே விரும்பமாட்டார்கள்.

எங்கே நிம்மதி என்ற புதிய பறவை படப் பாடலில் கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே என்ற ஒரு வரி என்னை கேட்ட முதல் நொடியிலேயே அதிர்சிக்குள்ளாக்கியது. என்ன ஒரு அராஜக மனப்பான்மை! ஆணாக இருப்பதாலேயே தமிழ் சினிமா அவனுக்கு பெண்களை இழிவுபடுத்தும் எல்லா சுதந்திரங்களையும் கொடுத்துவிடுகிறது என்ற எண்ணமே என்னை திடுக்கிடவைத்தது.

கண்ணதாசன் சற்று கவிதை நயத்துடன் குறியீடாக உணர்த்திய ஆணாதிக்க அகம்பாவத்தை வாலி வைரமுத்து போன்றவர்கள் வெளிப்படையாகவே கவிதையாக வடித்தார்கள். எப்படி எப்படி சமஞ்சது எப்படி? பொத்தி வச்ச மல்லிக மொட்டு போன்ற பாடல்கள் பெண்களை இழிவு செய்த பாடல்கள் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது.

பெண்களை பாடல்கள் மூலம் வன்முறை செய்யும் இசையை தமிழில் வெற்றிகரமாக அறிமுகம் செய்தவர் இளையராஜா. வாங்கோன்னா வில் விதைத்த இந்த விஷ வித்து பின்னர் ஆபாச மரமாக வளர்ந்து கிளை விட்டது மறுக்க இயலாத உண்மை. இதை நான் துணிந்து வெளிப்படையாகவே சொல்கிறேன். சொல்ல நினைப்பவர்கள் சற்று தயங்குகிறார்கள். அதுவே வித்தியாசம்.

இளையராஜா ஆரம்பித்துவைத்த இந்த இசைச் சீரழிவை எண்பதுகளில் யாரும் மிகத் தீவிரமாக எதிர்க்காததால் (தன் தலையைச் சுற்றி தானே ஒரு ஒளிவட்டம் போட்டுக்கொண்டதால்) தெருக்களில் சிதறும் ஆபாச வார்த்தைகள் தமிழ்ப் பாடல்களுக்குள் எந்தவித சிரமமுமின்றி புகுந்துகொண்டன. நல்ல கவிதை இலக்கியத்தரமான வார்த்தைகள் என்ற பேதமெல்லாம் இளையராஜாவின் இசைக்கு ஒரு பொருட்டே அல்ல. வெறும் பத்து வார்த்தைகளைக் கொண்டே எந்தவித கவிதை அனுபவமும் தராத சக்கைகளை அவர் தயாரித்து வெளியிட்டுக்கொண்டேயிருந்தார். தமிழிசையின் தரம் அதி வேகமாக படு பாதாளத்திற்கு சென்றுகொண்டே இருந்தது. பெண்களை வக்கிரமாக சீண்டும் இசை இளையராஜாவின் தவிர்க்க முடியாத இசை வடிவமாக  நிலைபெற்றது.

இளம் பெண்கள் என்றில்லை குடும்பத்து பெண்களைக் கூட இவரது இசை விட்டுவைக்கவில்லை. இசைக் குயில் சுசீலாவை வாங்கோன்னா என்று கண்ணியமில்லாமல் பாடவைத்து அவர் மீது இருந்த வஞ்சத்தை தீர்த்துக்கொண்டார். சுசீலா அப்படி பாடியது அப்போது பலரின் புருவத்தை உயர்த்தியது. ஜானகி பற்றி கேட்கவே வேண்டாம். அவரை மிமிக்ரி பாடகியாகவும் , கட்டில் பாடகியாகவும் அவருக்கு அபாரமாக புதிய அரிதாரம் பூசினார். ஜானகி இவரது இசையில் பாடிய "அந்த ஓசை" கொண்ட பாடல்கள் எண்பதுகளின் மத்தியில் அனேகமாக அனைத்துப் படங்களிலும் இடம்பெற தவறியதேயில்லை. அதையெல்லாம்  வீட்டிற்க்குத் தெரியாமலோ, தெரு டீக்கடைகளிலோ, வாக் மேன்  வசதியோடோதான் கேட்கவேண்டும்.  வீட்டில் தப்பித் தவறி கேட்டாலோ செருப்படிதான் கிடைக்கும்.

 வெள்ள நிவாரண நிகழ்ச்சிக்காக இளையராஜா சென்றிருந்தபோது தற்போதைய ஒலிப் பாடல் குறித்து ஒரு நிருபர் அவரின் கருத்தைக் கேட்க இளையராஜா தன் ட்ரேட்மார்க் ஆணவத்துடன் "ஒனக்கு அறிவிருக்கா?" என்று நிருபரை விலாச, பொது இடங்களில் எப்படி பேசவேண்டும் என்ற சபை நாகரிகம் அறியாத இந்த மனிதரைக் குறித்து பலர்  வெடித்து எழுதியிருப்பதை படித்து ஆச்சர்யப்பட்டேன். இளையராஜா என்ற தனக்குத் தானே ஒளி வட்டம் போட்டுக்கொண்ட இந்த அகம்பாவத்தின் ஊற்றை நாம் மிகையாகப் புகழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் இப்போதும் நமக்கு வராவிட்டால் சிம்பு, அனிரூத் வகையறாக்களை குறை சொல்வதில் பயனில்லை.

கீழே இருப்பது சுரேஷ்  கண்ணன் என்ற பதிவர் தனது  ஃபேஸ் புக்கில் எழுதியிருப்பது. நான் எனது பதிவுகளில் இளையராஜாவை காட்டமாக விமர்சிப்பதாக வரிந்து கட்டிக்கொண்டு முஷ்டியை மடக்கும் இராவசிகள் இதைப் படிக்கவும். இதுதான் நல்லிசை நாடும் இசை விரும்பிகளின் ஆதங்கம் கருத்து எல்லாமே.

ஆயிரம் முக்கல் முனகல்களுடன் பல அருவருப்பான பாடல்களை தம்முடைய தொழிலுக்காக செய்திருக்கும் ஓர் இசையமைப்பாளர் தன்னை ஒரு சுத்த ஒழுக்கமானவனாக உருவகித்துக்கொண்டு சீ சீ என்று அருவருப்பு காட்டும் அந்த போலித்தனம்தான் அருவருப்பூட்டுகிறது.

இதை மேலும் படிக்க கீழ் கண்ட தொடர்புகள்  உதவும்.

http://avargal-unmaigal.blogspot.com/2015/12/ilayaraja-answering-beep-song.html

http://anbanavargal.blogspot.in/2015/12/blog-post_19.html


இத்தனை அருவருப்பான சாக்கடைப் பாடல்களை அமைத்தவரிடம் போய் அவருடைய கோடிட்டிற்கு கீழே உள்ள ஒரு ஆபாச பாடலைப் பற்றிக் கேட்டால் அவரால் என்ன பதில் சொல்ல முடியும்? அதனால்தான் தன் மீது எந்த வித குற்றச்சாட்டும் விழாதவகையில் அவர் கோபம் ஆணவம் என்ற போர்வை கொண்டு தன்னை பாதுகாத்துக்கொண்டார் என்று தோன்றுகிறது. வழக்கம் போலவே இராவாசிகள் இதை அந்த நிருபருக்கு என்ன திமிர் என்று விமர்சனம் செய்கிறார்கள். பாவம் இப்படியெல்லாம் அபத்தமான போலி கேடயங்கள் அவர்களுக்குத் தேவைப்படுகிறது குறித்து பரிதாபம்தான் ஏற்படுகிறது.

இளையராஜா ஆரம்பித்த இந்த இசைச் சீரழிவே இன்றைய என்ன ***** லவ் பண்றோம் நிலைக்கு வந்திருக்கிறது. இன்றைய அறிவியல் விரைவு யூ டியூப் என எண்பதுகளில் சாத்தியப்பட்டிருந்தால் இளையராஜாவுக்கும் சிம்பு அனிரூத் கதிதான் ஏற்பட்டிருக்கும்.  கொஞ்சம் பிழைத்துகொண்டார்.  இந்த ஆபாசம் பற்றி பேச கங்கை அமரனுக்கோ, இளையராஜாவுக்கோ பாரதிராஜாவுக்கோ, வைரமுத்துவுக்கோ  கொஞ்சமும் அருகதை கிடையாது. சிம்பு மற்றும் அனிரூத் இருவரும் இந்த ஆபாச இசைச் சாக்கடையின் மற்றொரு துளி. அவர்களை மட்டுமே  தண்டனைக்கு உட்படுத்துவதில் நாம் ஒரு நல்ல இசை பாரம்பரியத்தை காப்பாற்றிவிட்டதாக வீண் கற்பனை செய்துகொள்ளவேண்டாம். அவர்கள் இந்த அசிங்கமான பாரம்பரியத்தை வளர்த்துவரும் கிளைகள்.  நான் வேர்களை குறித்துப் பேசுகிறேன். நம் இசையின் இன்றைய சீழ்  பிடித்த அருவருப்பின் ஆணிவேர் இளையராஜா.

என் கருத்துடன்  ஒன்றிக்க முடியாதவர்கள்  நிலா காயுது பாடலை தங்கள் வீட்டு வரவேற்பறையில் அம்மா மனைவி மகள் சகிதமாக உட்கார்ந்து கேட்கக்கூடிய அராஜக தைரியம் கொண்டவர்களாகத்தான் இருக்கமுடியும்.

என்னை எதிர்ப்பதற்கு முன் அந்த அசிங்கத்தையும் செய்துவிட்டு வாருங்கள்- மனசாட்சி என்று ஒன்று உங்களுக்கிருந்தால்.