Thursday 11 July 2013

இசை விரும்பிகள் IX- நிறம் மாறிய பூக்கள்

இசை விரும்பிகள் IX- நிறம் மாறிய பூக்கள்



          

               எண்பதுகளின் துவக்கத்தில் இளையராஜாவின் இசை தட தடவென்று அதிரடியாக விரையும் ஒரு எக்ஸ்பிரஸ்  ரயில் வேகத்தில்   உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. 76ஆறில் துவங்கிய இளையராஜாவின் இசை வேகம் சட்டென நூறு என்ற எண்ணிக்கையைத்  தொட்டது இந்த எண்பதில்தான். ஐந்தே வருடங்களில் ஒரு இசைஞர் நூறு படங்களுக்கு இசை அமைப்பதென்பது  ஒரு சாதனைதான். இதற்கு இளையராஜாவின் வெற்றியைத்தாண்டி அவர் தனது  இசையின் வண்ணங்களை தொடர்ந்து மெருகேற்றிக்கொண்டே இருந்தது ஒரு மிக முக்கியமான காரணம். சற்று உன்னிப்பாக கவனித்தோமானால் இளையராஜாவின் இசை  ஒரு  சிறிய கால இடைவெளியில் அடுத்த பரிமாணத்திற்கு மாறுவதை  உணரலாம்.பொதுவாக எல்லா இசை அமைப்பாளர்களின் இசையிலும் இப்படிப்பட்ட அடுத்த நிலை இயல்பாக நடக்கக்கூடியதே என்றாலும் இளையராஜாவின் இசையில் இந்த மாற்றம் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் எழுதப்படாத விதி போன்று தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருந்தது. இது அவரின் பலம் என்று நாம் தீர்மானித்தாலும் இவ்வாறான இசைப் பரிசோதனைகளே அவரின் வளர்ச்சிக்கும் பின்னர் வீழ்ச்சிக்கும் காரணமாயின.ஏனென்றால் இவ்வாறாக மாறிக்கொண்டே வந்த அவரது இசை ஒரு கட்டத்தில் நின்றுபோய் விட்டதால் அது அவரின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய  காரணமானது . இளையராஜாவின் வீழ்ச்சி என்ற சொற்றொடரையே பல ராஜா அபிமானிகள் ஏற்றுக்கொள்ளதில்லை.இருப்பினும் அது உண்மையே. இதுபற்றி பின்னர் விரிவாக பார்க்க இருப்பதால் தற்போது இளையராஜாவின் பொற்காலமான 80 களின் இசையை விவாதிப்போம்.(இந்தப் பதிவில் இடம்பெற்றுள்ள சில பாடல்கள் வணிக ரீதியில் வெற்றி பெற்று பிரபலமான  பாடல்களே தவிர கிளாசிக் என்ற அர்த்தத்தில் இங்கே குறிப்பிடப்படவில்லை. மேலும் அவை என் விருப்பப் பாடல்களும் அல்ல என்பதை இங்கே நான் பதிவு செய்கிறேன். சற்று அடர்த்தியான தடித்த எழுத்தில் இருப்பவையே  என்னுடைய தனிப்பட்ட விருப்பப் பாடல்கள்).
    
       படத்துக்கு படம் தன் இசையில் புதிய இழை ஒன்றை உருவாக்கி தனது இசையின் தரத்தை பலபடிகள் உயர்த்திச்  சென்றுகொண்டிருந்தார் இளையராஜா.அவரது இசையில் தென்பட்ட அந்த புதிய இனிமை பழமையையும் நவீனத்தையும் ஒருங்கே கோர்த்திருந்தது.80களை இளையராஜாவின் அதீதப்  பாய்ச்சல் என்று தாராளமாகச் சொல்லலாம்.(என் தனிப்பட்ட கருத்தாக 83வரை என்று வைத்துக்கொள்ளலாம். இந்த ஏழு வருடங்களில் அவர் அமைத்தவைகள் அவர் இசையில் வந்த மிகச் சிறப்பான பாடல்கள்.)  உதாரணமாக நெஞ்சத்தைக் கிள்ளாதே என்ற மகேந்திரனின் படத்தை எடுத்துக்கொள்வோம். (இந்தப் படமே பின்னர் மணிரத்தினத்தின் கைகளில் மவுன  ராகம் என்று உருமாறி வெளிவந்தது). நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தின் நான்கு பாடல்களில் மூன்று வெகு அற்புதமானவை.இந்த ஒரே காரணத்திற்காகவே அந்த நாலாவது தரமில்லாத பாடலை (மம்மி பேரு மாரி)கொஞ்சம் மன்னித்துவிடலாம்.சுசீலாவின் ஏ தென்றலே  மிக ரம்மியமான  பாடல். எஸ் பி பி யின் ஹான்டிங்கான ஹம்மிங்கில் துவங்கும் உறவென்னும் புதிய வானில் பாடல் மறுபேச்சில்லாத மகத்தான பாடல். கேட்கும் போதே  பறக்கும் மனநிலையை நமக்கு கொடுக்கும் விதமாக மெதுவாகவும் மென்மையாகவும்  அமைக்கப்பட்டு நம்மை காற்றைப் போல உரசிச் செல்லும் பாடல் இது. "பருவமே புதிய பாடல் பாடு" என்ற பாடல் படத்தின் முத்திரைப் பாடலாக மட்டுமல்லாது அதன் முகவரியாகவே ஒலித்தது. உறவுகள் தொடர்கதை, இளமை என்னும் பூங்காற்று போன்ற சிறப்பான பாடல்களின் வரிசையில் மறுகருத்தின்றி இணைக்கப் படவேண்டிய அற்புதமான பாடல் இது. ஒரு காலடி ஓசை பாடல் முழுவதும் அரவணைத்து செல்ல, அதற்கேற்றார்போல நளினமான இடையிசை பாலம் அமைக்க இளையராஜாவின் நல்லிசையாக இந்தப் பாடல் ஒலித்தது  என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.
   
      80இல் வந்த இளையராஜாவின்  சிறப்பான பாடல்களைக் கொண்ட  மற்ற சில படங்கள் இவை:
உல்லாசப் பறவைகள்,--ஜெர்மனியின் செந்தேன் மலரே,தெய்வீக ராகம்,(மீண்டும் மீண்டும் நினைவுகளில் தோன்றும் அருமையான பாடல்.ஆனால் ஜென்சியின் nasal tone வழக்கம் போலவே பாடலின் அழகை குலைத்துவிடுகிறது)அழகு ஆயிரம்(பலருக்குத் தெரியாத மிக உற்சாகமான பாடல் ) 
தைப் பொங்கல்,-கண் மலர்களின் அழைப்பிதழ்(இளையராஜாவின் அபூர்வமான மெல்லிசை ததும்பும் இனிமையான பாடல்.இதை வெகு சிலரே கேட்டிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது)       
                                                                               ரிஷிமூலம்,நேரமிது,--ஐம்பதிலும் ஆசை வரும்,(இரண்டுமே டி எம் எஸ்-இளையராஜா கூட்டணியில் வந்த சிறப்பான பாடல்கள்-நல்லவெர்க்கெல்லாம் என்ற தியாகம் படப் பாடல் போன்று)
பூட்டாத பூட்டுக்கள்,--ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது(மகேந்திரனின் மற்றொரு அருமையான ஆனால் தோல்விப் படம்.இந்தப் பாடலை நிறைய பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை)
நதியை தேடி வந்த கடல்,--எங்கேயோ எதோ ,தவிக்குது தயங்குது ஒரு மனது.(ஜெயலலிதா நடித்த கடைசிப் படம் இது)
நான் போட்ட சவால்,--சுகம் சுகமே 
முரட்டுக்காளை,--எந்தப் பூவிலும் வாசம்,புது வண்ணங்கள்(இந்தப் படத்தின் ஒரே நல்ல பாடல் இது),பொதுவாக எம்மனசு(இளையராஜாவின் அதிரடி டப்பாகுத்து முத்திரைப் பாடல்.இதே பாணியில் பல பாடல்களை பின்னர் அவர் கொடுத்தார்.  தெம்மாங்குப் பாடல்களை  டப்பாங்குத்து என்ற தரத்திற்கு கொண்டுவந்த பாடல்.)
மூடுபனி,--(இளையராஜாவின் நூறாவது படம்.)என் இனிய பொன் நிலாவே( பலரின் காதல் கீதமாக கொண்டாடப்படும் ஒரு செம்மையான பாடல்.பாடலின் இடையிசை இதை ஒரு இசை அனுபவமாக மாற்றிவிடுகிறது.)பருவ காலங்களின் கனவு, ஸ்விங் (டாக்டர் கல்யாண் என்பவர் இளையராஜாவின் இசையில் ஆங்கிலப் பாடல்களை பாடியது உண்டு. காளி படத்தில் இவர் ஒரு பாடல் பாடி இருக்கிறார்.)
கரும்பு வில்,--மீன்கொடித் தேரில் மன்மதராஜன் (நவீனமான தாளம் பாடல் முழுவதும் பனித்திரை போல கூடவே வருவது இந்தப் பாடலின் சிறப்பு)
கண்ணில் தெரியும் கதைகள்,--நான் ஒரு பொன்னோவியம் கண்டேன்,(முதல் முறையாக தமிழ்த் திரையில் ஒரு படத்திற்கு ஐந்து இசை அமைப்பாளர்கள் பணியாற்றிய படம். இதில் வரும் சிறப்பான நான் உன்ன நெனச்சேன் என்ற சங்கர் கணேஷின் பாடல் மிகப் புகழ்பெற்றது.)
கல்லுக்குள் ஈரம்-சிறு பொன்மணி 
காளி--அடி ஆடு பூங்கொடியே,வாழ்வு மட்டும் 
ஜானி--சீனொரீடா,காற்றில் எந்தன் கீதம்(மழையின் ஓசையும் ஜானகியின் சோகம் வழியும் குரலும் இந்தப் பாடலை மனதில் தங்கிவிடச் செய்துவிடுகின்றன.),என் வானிலே,ஒரு இனிய மனது(இரண்டுமே நேர்த்தியான இசையுடன் கூடிய  நல்ல பாடல்களே. ஜென்சி பாடி இருக்காவிட்டால் கண்டிப்பாக மிகவும் சிறப்பானதாக  இருந்திருக்கும் என்பது என் எண்ணம். என் வானிலே என்று ஆரம்பித்து ஊர்வலம் என்று பாடகி  மூக்கால் பாடும் போது பாடலே பொலிவை இழந்துவிடுகிறது.) ஆசய காத்தில தூதுவிட்டு(வித்தியாசமான தாளக்கட்டுடன் கூடிய பாடல்.இதே பாணியில் பாலுமகேந்திராவின் மறுபடியும் படத்தில் வந்த பாடல்"ஆச அதிகம் வச்சு")
இளமைக் கோலம்,--வச்சப் பார்வை தீராதடி (சிறுவர்கள் இளைஞர்களிடம் பிரபலமான பாடல்.ஆனால் சிறப்பானது என்று கூற இயலாது)
அன்புக்கு நான் அடிமை,--காத்தோடு பூவுரச(இந்தப் பாடல் வந்த புதிதில் இதைக்  கேட்ட யாருக்குமே பாடகி என்ன சொல்கிறார் என்பது புரியாமலே  இருந்தது.)
ஆயிரம் வாசல் இதயம்,--மகாராணி உனை தேடி,
எங்க ஊர் ராசாத்தி,--பொன்மான தேடி,(நாட்டுப்புற மெல்லிசை.)
கிராமத்து அத்தியாயம்,--ஆத்துமேட்டுல,(இதில் வரும் தாளம் அப்போது புதுமையாக இருப்பதாக சொல்லப்பட்டது.) வாடாத ரோசாப்பூ(சந்தேகமில்லாமல் மிகச் சிறப்பான பாடல். எஸ் பி பி யின் நளினமான குரலும் மனதை பிசையும் இசையும் இந்தப் பாடலை மேலும் அழகூட்டுகின்றன.)
பொன்னகரம்,--முத்துரதமோமுல்லைச்சரமோ,வாழுகின்றமக்களுக்கு 
சாமந்திப்பூ,--கனவுகளே ஊர்கோலம் இங்கே,ஆகாயம் பூமி என்றும் ஒன்றா(நல்ல பாடல்)மாலை வேளை.
குரு,--எந்தன் கண்ணில் ஏழுலகங்கள், பறந்தாலும் விடமாட்டேன், (எஸ் பி பியின் துடிப்பான குரலில் கேட்கும் போதே ஹம் செய்ய வைக்கும் துள்ளலான பாடல்.)பேரைச் சொல்லவா( மிகவும் அருமையான பாடல்.  மூன்றுவிதமான இடையிசையோடு ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் மனதை தாலாட்டும் அற்புதப்  பாடல். இது என் தனிப்பட்ட விருப்பப் பாடல்  என்பதை இங்கே சொல்ல வேண்டும்)ஆடுங்கள் பாடுங்கள்(அதிரடி இல்லாத மென்மையான  ஒரு குழந்தைப் பாடல். இளையராஜாவை சிலாக்கிக்கும் பலர்  இந்தப் பாடலைப் பற்றி வாய் திறப்பதில்லை. இளையராஜாவின் அபூர்வமான நல்லிசை).
       
  இறுதியாக இளையராஜா வைரமுத்துவுடன் கை கோர்த்த நிழல்கள் படத்தைப் பற்றி சில விஷயங்களைப் பேச வேண்டிய இடத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். இந்தப் பதிவின் துவக்கத்தில் குறிப்பிட்டது போல இந்த நிழல்கள் படத்தில்தான் இளையராஜாவின் இசை  அடுத்த பரிமாணம் அடைந்தது. எண்பதுகளின் மத்தியில் வந்த இந்தப் படம் பாரதிராஜாவின் முதல் தோல்விப்படம் என்று முத்திரை குத்தப்பட்டது.(இந்தத் தோல்வி குறித்து என் ரசனைக்கேற்றபடி தமிழ் ரசிகர்கள் வளரவில்லை என்று பாரதிராஜா சொன்னதாக படித்திருக்கிறேன்).இதே சமயத்தில்தான் பாலச்சந்தரின் வறுமையின் நிறம் சிகப்பு படம் வெளிவந்தது. இரண்டுமே வேலையில்லா இளைஞர்களைப் பற்றி சொல்லிய படங்கள். நிழல்கள் ஒரு தோல்விப் படமாக இருந்தாலும் தமிழ்த் திரைஇசைக்கு அது ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுவதன் காரணம் வைரமுத்து என்ற ஒரு  இளைய கவிஞர்.இவரின்  கவிதையான  இது ஒரு பொன் மாலைப் பொழுது இளையராஜாவின் இசையில் சிகரம் தொட்ட பாடலாக பிராகாசித்தது. இந்தப் பாடலின் இரண்டாவது சரணத்தில் வரும்
     "வானம் எனக்கொரு போதி  மரம்
       நாளும் எனக்கொரு சேதி தரும் "
 என்ற இலக்கியத் தரமான  வரிகள் அப்போது பலரை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாடலின் இசைக்கோர்ப்பு, இடையிசை,மெலடி,மெட்டு அனைத்துமே ஐந்து வருடங்களாகக் கேட்டுக்கொண்டிருந்த வழக்கமான இளையராஜாவின் இன்னிசையிலிருந்து விலகிச் சென்று  வேறு விதமான வண்ணத்தை தீட்டியது. பாடலின் ஆரம்பத்தில் வரும் ஹம்மிங், இனிமையான நல்லிசை, தாலாட்டும் எஸ் பி பியின் குரல்,அற்புதமான இடையிசை,மேலும்  அருமையான கவிதை கலந்த வரிகள்  எல்லாம் இந்தப் பாடலை இளையராஜாவின் மாறிவரும் இசையின் முகவரிப் பாடலாக்கியது என்று சொல்வது பொருத்தம்.இந்தப் பாடல் முதன் முதலில் சிலோன் ரேடியோவில் டாப் டென் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டபோதே பலத்த வரவேற்பை பெற்றது. 23 வாரங்கள் தொடர்ந்து முதல் இடத்தில்  இருந்த இந்தப் பாடல் அதன் பின் வறுமையின் நிறம் சிகப்பு படத்தின் சிப்பி இருக்குது பாடல்  முதலிடத்திற்கு வந்தும் இரண்டாம்  இடத்திற்கு தள்ளப்பட்டது. இதன் காரணமாகவே நான்  சிப்பி இருக்குது பாடலை அப்போது வெகுவாக வெறுத்தேன். எம் எஸ் வி போன்றவர்களின் பழைய இசையில் இளையராஜாவின்  அருமையான பாடல் புறந்தள்ளப்படுவதா என்று கோபம் கூட வந்தது. அது ஒரு சிறுவனின் மனநிலை. நான் இப்போது அந்த விருப்பங்களை விட்டு வெகு தூரம் வந்து விட்டாலும் இன்னும் பலர்  இன்றைக்கும் தங்கள் ரசனையில் வளராமல் இருப்பது குறித்து வேதனையே ஏற்படுகிறது.

    துள்ளலான மடை திறந்து மற்றும் மலைச்சாரல் தீண்டுவது போன்ற பூங்கதவே தாழ் திறவாய் என்ற இரண்டு பாடல்களும் நிழல்கள் படத்தின் இசைச் சுவடுகளாகவே மாறிவிட்டன. குறிப்பாக பூங்கதவே பாடல் மிக அபாரமான முறையில் இசைக்கப்பட்டு  இன்னிசையின் சுவை திகட்டாமல் கேட்கும்போதே கண்கள் மூடி ரசிக்கத்தூண்டும் கீதம்.  இளையராஜா வயலின்  இசையை நவீனமாக கையாண்டதும் அதிகமாக பயன்படுத்தியதும் இந்தப் படத்திலிருந்துதான் ஆரம்பித்தது. அவர்  பாக் (Bach) என்ற மேற்கத்திய செவ்வியல் மேதையின் இசையை  தமிழுக்கு தரவிறக்கம் செய்தது  இங்கேதான் துவங்கியது. இதற்கு முன்பே இதை அவர் செய்திருந்தாலும் நிழல்கள் படத்தில்தான் மேற்கத்திய செவ்வியல் இசையை  நம் இசையோடு பிணைத்து தன்புதிய  இசை பாணியை இதுவரை அவர் பயணம் செய்யாத  சாலையில் வெள்ளோட்டம் விட்டார். 

       இந்த இடத்தில்  நாம் இளையராஜாவின் முத்திரை இசையாக கருதப்படும் இடையிசை (interlude) பற்றி பேச வேண்டியது அவசியமாகிறது. சரணங்களுக்கு  இடையில் வந்து, அவைகளை இணைக்கும் ஒரு தொடர்பு  இசையாக (link music ) மட்டும் இல்லாமல்   பாடலின் அகற்றமுடியாத இசைப் பதிப்பாக உறைந்தது இளையராஜாவின் இடையிசை. இங்கேதான் அவர் தன் பாக் (Bach)  பாதிப்பை வெற்றிகரமாக பதிவு செய்கிறார் . என் நண்பர்களில் சிலர் இளையராஜாவை  king of the  interlude என்று அழைப்பதுண்டு. . இப்போது எண்ணிப்பார்க்கையில் இளையராஜாவின் பாடல்கள்  மீது நான் கடுமையான  விமர்சனங்களை  வைத்தாலும், அவரின் இடையிசையைப் பற்றி அதே கடுமையான வார்த்தைகளை சுமத்த முடியுமா என்பது கேள்விக்குரியதே.  ஏனென்றால் interlude என்பதை ஒரு கவனிக்கத் தக்க இசைத் துணுக்காக  மாற்றி அமைத்தார் இளையராஜா. இவருக்கு முன் இருந்த இசை மேதைகள் இதே இடையிசையை வெற்றிகரமாக கையாண்டிருந்தாலும் இளையராஜாவின் இடையிசை தனித்தன்மை வாய்ந்தது. இளையராஜாவின் பல தரமில்லாத பாடல்களை அதன் இடையிசைக்காகவே நான் சகித்துக்கொள்வதுண்டு. என்னைப் பொறுத்தவரை இளையராஜா  தன் இடையிசையை ஒரு தனிப்பட்ட இசையாகவே கருதினார் என்று எண்ணத் தோன்றுகிறது. பல சமயங்களில் பாடலுக்கு தொடர்பில்லாத இசையை அமைத்து நம்மை பாடலில் ஒன்றிணையாது  செய்யவும் செய்திருக்கிறார். இளையராஜாவின் பல பாடல்கள் இந்த தொடர்பில்லாத இடையிசைக் கொண்டு அமைக்கப்பட்டவைதான். உதாரணமாக ஆகாய கங்கை (தர்மயுத்தம்)என்ற பாடலின் இரண்டு  interlude இசையும்   சோகம் நிறைந்தது. இந்தப் பாடலைக் கேட்டபோதெல்லாம் நான் இதை ஒரு  சோகப் பாடலாகவே நினைத்ததுண்டு. மேலும் இளையராஜாவின் interlude அது இயங்கும் பாடல்களின் களத்தை விட்டு சட்டென்று  வேறு உயர்ந்த நிலைக்கு  கேட்கும் நம்மை இழுத்துச் சென்று விட்டு பின்னர் சரணம் துவங்கும் போது சடாரென  கீழே தள்ளிவிடும் வகையைச் சார்ந்தது.சரணத்தோடு முட்டி மோதிக்கொண்டு நிற்கும்  இசையாகவே இவரின் பெருமான்மையான இடையிசை இருக்கிறது.  இளையராஜாவின் பல  பாடல்கள் இந்த வகையை சார்ந்தவையே.  இடையிசையின் நாயகனாக இளையராஜா அடையாளம் காணப்பட்டாலும் பல சமயங்களில் இடையிசையில் அவர் செய்த மேற்கத்திய செவ்வியல் பரிசோதனைகள் பாடலோடு ஒன்றினையாமல் தனிப் பாதையில் பயணம் செய்வதை நாம் உணரலாம். பாடல் சொல்லும் கருத்துக்கும்,பாவத்துக்கும் (tone),அந்த சூழலுக்கும் இணையாமல் அவரின்  இடையிசை சற்றும் தொடர்பில்லாமல் அன்னியமாக ஒலிக்கும். எ எம் ராஜா, கே வீ மகாதேவன், எம் எஸ்  வி-டி கே ஆர் போன்றவர்களின் இடையிசையில் இவ்வாறான அந்நியத் தோற்றம் எப்போதும் வருவதில்லை. அவர்களின் இடையிசை கடலோடு இணையும் நதியைப் போன்று இருந்தது. இளையராஜாவின் முத்திரை இடையிசை ஒரு காட்டாற்று வெள்ளம் போல கரைக்கு அடங்காமல் பீறிட்டுக்கொண்டு பாய்ந்தது. பல சமயங்களில் இந்த இசை பாடலோடு தொடர்பின்றி பாடலை விட இந்த இசையை  மட்டுமே ரசிக்கச் செய்துவிடுகிறது.(இது எனக்குத் தென்பட்ட ஒரு வேறுபாடே தவிர குறை சொல்லும் நோக்கம் அல்ல).  இருந்தும் interlude இசையில் ஒரு முத்திரை பதித்து அதையே தன் முகவரியாக  அமைத்துக் கொண்டவர் இளையராஜா. இவரின் இடையிசை ஒரு தனிப் பகுதியாக வெளியிடப்படக்கூடிய  சிறப்பு பெற்றது.

      
     இளையராஜா-வைரமுத்து இணைப்பு தமிழ்த் திரையிசையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கிவைத்தது. இது இதற்கு முன் தமிழ்த் திரையில் ஆட்சி செய்த எம் எஸ்   வி -டீ கே ஆர்- கண்ணதாசன் கூட்டணி போல சிறப்பானதா அல்லது தரமானதா என்ற கேள்விக்கு நாம் இல்லை என்றே பதில் சொல்லவேண்டியிருக்கிறது. இருந்தும் இளையராஜா-வைரமுத்து கூட்டணி அப்போதைய இசையின் களத்தை வெற்றிகரமாக வழிநடத்திச் சென்றது என்பதில் சந்தேகம் இல்லை. இவர்களின் இணைப்பில் வந்த பல பாடல்கள் மிகச் சிறப்பானவை.மேலும் இன்றுவரை  இளையராஜாவின் வைரங்கள் என்று பலர் சிலாகிக்கும் பாடல்கள் இந்த காலகட்டத்தில் வந்தவைகளே.

      ஆயிரம் தாமரை மொட்டுக்களே (அற்புதமான பாடல்.),காதல் ஓவியம் (இனிமையான பாடல் ஆனால் பாடலுடன்  முழுமையாக ஒன்றிக்க முடியாதபடி  நாசிக்குரல் பாடகி ஜென்சி  இங்கேயும் வந்துவிடுகிறார்).இந்தப் பாடலின் துவக்கத்தில்  வரும் கிருஸ்துவ-பிராமண இசையை இளையராஜாதான் முதன் முதலாக செய்தார் என்று சிலர் பதிவுகளில் எழுதுகிறார்கள்.ஆனால் இவ்வாறான கிருஸ்துவ-பிராமண இசையை ராஜநாகம் என்ற 1974 இல் வந்த படத்திலேயே வி குமார் "தேவன் வேதமும் கண்ணன் கீதையும்"பாடலின் ஆரம்பத்தில் செய்துவிட்டதை பலர் அறியாமல் இருக்கிறார்கள். விழியில் விழுந்து (இளையராஜா பாடி இருக்காவிட்டால் பாடல் இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம்.)பின்னர் வழக்கம்போல இளையராஜாவின் அதிரடியான வாடி எ கப்பக்கிழங்கே. இந்தப் பாடலுக்காகவே  நான் இளையராஜாவை அப்போதே கடுமையாக விமர்சித்தேன்.வீட்டில் எல்லோரும் ஒன்றாக கேட்க முடியாத பாடல்களை நான் எனது சிறு வயது முதலே விரும்பியதில்லை. இளையராஜாவிடம் இதுபோன்ற ஆபாசமான  பாடல்கள்    (கடுமையான வார்த்தையாக இருந்தாலும் இது உண்மையே) கணக்கில் அடங்காமல் நிறையவே உண்டு. இதைப் பற்றி அடுத்த பதிவில் விவரமாக எழுத இருப்பதால் இப்போதைக்கு  இந்த விஷயத்தை தாண்டிச் செல்லலாம்.இறுதியாக இந்தப் படத்தில்இடம் பெறாத   புத்தம் புது காலை என்கிற பாடல்  ஒரு அற்புதமான கானம். என் விருப்பம்  இந்தப் பாடலே.மிக இனிமையாக இசைக்கப்பட்டு நம்மை தாலாட்டும் தரமான பாடல் இது.
      
        பெரிய வெற்றியைப்  பெற்ற      அந்திமழை (ராஜபார்வை), தாலாட்டுதே வானம் (கடல் மீன்கள்), நேற்று இந்த நேரம் ,இது ஒரு நிலா காலம்(டிக் டிக் டிக்),   ஆனந்த ராகம் கேட்கும் காலம், கோடை கால காற்றே,பூந்தளிர் ஆட (பன்னீர் புஷ்பங்கள்)சிலருக்கு மட்டுமே தெரிந்த ஹேய் ஓராயிரம் (மீண்டும் கோகிலா),அள்ளித் தந்த பூமி (நண்டு), பலருக்கு பரிச்சயமே இல்லாத மிக அருமையான ஒரு குங்கும செங்கமலம் (ஆராதனை),ஒ நெஞ்சமே, பனிமழை விழும் (எனக்காக காத்திரு) போன்ற இளையராஜாவின் துடிப்பான  இன்னிசை இந்த ஆண்டில்தான் வெளிப்பட்டது. அந்திமழை பாடலின் ஆரம்ப இசை , இடையிசை மற்றும்  பாடல் வரிகள்(நெஞ்சத்தில்  முள்ளை  வைத்து மோகம் என்பாய், தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்பாய்) எல்லாமே  இந்தப் பாடலை ஒரு உடனடி வெற்றிக்கு இட்டுச் சென்றன.

     82இல் இளையராஜா தமிழ்த் திரையின் இசை சிம்மாசனத்தில் உண்மையில் ஒரு ராஜா போன்றே அமர்ந்திருந்தார். அவர் பங்களிப்பு இலாத படங்கள்  இளைஞர்களின் மத்தியில் வரவேற்ப்பை பெறவில்லை.இளையராஜாவின் பாடல்களை தாகத்தோடு எதிர்பார்க்கும் ஒரு மிகப் பெரிய கூட்டமே இருந்தது.    இந்த  ஆண்டு இளையராஜாவின் இசையில் அடுத்த மாற்றம் வந்தது. இப்போது அவரிடம் 76-80 களின் சாயல் முற்றிலும் காணப்படவில்லை. மிகவும்மாறிவிட்ட  வேறுவிதமான இசை அமைப்புகளை அவர் செய்தார். உதாரணமாக இந்த ஆண்டில் வந்த கோழி கூவுது படத்தின் மிகப் பிரபலமான எதோ மோகம் பாடலை எடுத்துக்கொள்ளலாம்.இந்தப் பாடலின் ஆரம்ப இசை, தண்ணீரின் சலசலப்பு, மெட்டு, மேற்கத்திய செவ்வியல் மற்றும் நாட்டுப்புற இணைப்பின்  இடையிசை போன்ற இசை பரிசோதனைகள் அபாரமாக இருந்தன. (பாடல் வரிகள் சற்றே கொச்சையாக இருப்பது ஒரு முரண்).அண்ணே அண்ணே,பூவே இளையபூவே போன்ற பாடல்கள் அவரின் துவக்ககால இசையை விட்டு வெகு தூரம் வந்து விட்டதை உணர்த்தின.

    இந்த  ஆண்டில் இளையராஜா   ஏறக்குறைய 25 படங்களுக்கு (அதற்கு மேலும் இருக்கலாம்) இசை அமைத்திருந்தார். அவற்றில் சிலவற்றை பற்றி விவாதிக்கலாம்.
ஆனந்த ராகம்-மேகம் கருக்குது,
ஆட்டோ ராஜா-கன்னி வண்ணம் ரோஜாப்பூ, சங்கத்தில் பாடாத கவிதை, மலரே என்னென்ன கோலம் (இளையராஜாவின் மிக அற்புதமான இசை சிற்பம் இது. இன்றுவரை இது இளையராஜாவின் பாடல்தானா என்று எனக்கு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது. இந்தப் பாடலில் நீங்கள் கொஞ்சம்கூட அவரின் சாயலை காண முடியாது. மிகவும் ரம்மியமான பாடல்.இந்தப் படத்திற்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத சிறப்பான பாடல்.)
ஈர விழி காவியங்கள்-காதல் பண்பாடு(இந்தப் பாடல் அவ்வளவாக பிரபலமாகாதது ஆனால் மிக சிறப்பானது)
எச்சில் இரவுகள்- பூமேலே வீசும் பூங்காத்தே,
கோபுரங்கள் சாய்வதில்லை-பூ வாடைக் காற்று(நல்ல பாடல்) என் புருஷன்தான்,
கண்ணே ராதா- மாலை சூட கண்ணே ராதா(இதை நான் சங்கர் கணேஷ் இசை என்று நினைத்திருந்தேன்)
மஞ்சள்நிலா-பூந்தென்றல் காற்றே வா(இந்தப் பாடல் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ராஜாவின் ரசிகர்களுக்கே இது தெரியாமல் இருக்கலாம். ஆனால் சந்தேகம் இல்லாமல் இது ஒரு அபாரமான பாடல்.) இள மனதில்,காற்றே யாழ் மீட்டு
மெட்டி-மெட்டி ஒலி காற்றோடு,
மூன்றாம்பிறை-பூங்காற்று புதிதானது, கண்ணே கலைமானே, நரி கதை, பின்னர் வழக்கம் போல இளையராஜாவின் விரக இசையில் வந்த பொன்மேனி உருகுதே.
தாய் மூகாம்பிகை- ஜனனி ஜனனி
சகலகலா வல்லவன்-இளமை இதோ இதோ, (மற்ற பாடல்கள் அனைத்தும் படு மட்டமான ஆபாச குப்பைகள்.இளையராஜாவை நான் விமர்சிக்க காரணமான படம் இது)
தனிக்காட்டு ராஜா-சந்தனக் காற்றே, ராசாவே உன்ன நா எண்ணித்தான்,நாந்தாண்ட இப்போ தேவதாஸ்,கூவுங்கள் சேவல்களே
தூறல் நின்னு போச்சு-தங்கச் சங்கிலி, ஏரிக்கரைப் பூங்காற்றே,பூபாளம்

       இன்னும் மூன்று சிறப்பான படங்களைப் பற்றி விவாதிப்பது அவசியம் என்று தோன்றுகிறது. அந்தப் படங்களின் சிறப்பே அதன் பாடல்கள் என்பது என் கருத்து.
  காதல்ஓவியம்- சங்கராபரணத்துக்குப் போட்டியாக தமிழில் வந்த முதல் முயற்சி இது. படம் விழுந்தது.ஆனால் பாடல்கள் உயர்ந்து நிற்கின்றன.என் கருத்தின்படி சிந்து பைரவியின் பாடல்களை விட இதில்  இளையராஜா நேர்த்தியாக இசை அமைத்திருந்தார். அம்மா அழகே,குயிலே குயிலே,நாதம் என் ஜீவனே,நதியில் ஆடும்,பூவில் வந்து கூடும்,சங்கீத ஜாதி முல்லை ,வெள்ளிச் சலங்கைகள் என அத்தனை பாடல்களும் கர்நாடக ராக வார்ப்பில் கோர்க்கப்பட்ட முத்துகள் போல ஜொலித்தன.

   நினைவெல்லாம் நித்யா- இயக்குனர் ஸ்ரீதர் தன் படங்களில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். அவரின் படத்தின் பாடல்கள் என்றைக்கும் தனது பொலிவை இழந்தது கிடையாது. எ எம் ராஜா, எம் எஸ் வி- டி கே ஆர், இளையராஜா என்று பலரின் இசையில் அவரின் படப் பாடல்கள் தனித்தன்மையாகயும்,மிக சிறப்பாகவும் இருந்தன என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.(இளமை ஊஞ்சலாடுகிறது படத்திற்காக ஸ்ரீதர் முதல் முறையாக இளையராஜாவிடம் வந்தபோது அவர் தான் குருவாக மதிக்கும் எம் எஸ் வி யை விட்டு தன்னிடம் வந்ததற்காக முதலில் தன்னால் முடியாது என்று ஸ்ரீதரை திருப்பி அனுப்பி விட்டதாக படித்திருக்கிறேன்) நினைவெல்லாம் நித்யா படம் படு தோல்வியைத் தழுவியது.ஆனால் இதில் இளையராஜாவின் இசை அபாரமாக இருந்தது. எல்லா பாடல்களும் தேன் போல இனித்தன என்பது ஒரு சாதாரண உவமை. இன்றைக்கும் நவீனமாக ஒலிக்கும் ரோஜாவைத் தாலாட்டும் தென்றல், இனிமையான இசைவார்ப்பில் வந்த நீதானே எந்தன் பொன்வசந்தம், ஆப்ரிக்க ஒசிபிசா குழுவினரின் பாதிப்பில் அமைந்த தோளின்  மேலே பாரம் இல்லே,நேர்த்தியான மேற்கத்திய கலப்பில் இளையராஜாவின்   வழக்கமான ஆர்ப்பாட்டங்கள் அதிரடிகள் இல்லாமல்   மென்மையான ஒலிக்கும் பனி விழும் மலர் வனம் போன்ற பாடல்கள் இன்றளவும் கேட்க அலுக்காதவை.

   பயணங்கள் முடிவதில்லை- இளையராஜாவின் இன்னிசை மழை என்றே இந்தப் படத்திற்கு விளம்பரம் செய்தார்கள்.அது  உண்மையே என்பதை படத்தின் பாடல்கள்  உரத்து சொல்லிவிடுகின்றன. வாழ்வேமாயம் படத்தின் கதையை ஒட்டியே இந்தப் படமும் இருந்ததால் ஆரம்பத்தில் பெரிதாக போகாமல் பின்னர் மக்களின் வாய்வழி விளம்பரத்தால் அதிரடி வெற்றி பெற்றது. படத்தின்  வெற்றிக்கு சந்தேகமில்லாமல் இளையராஜாவின் இசை ஒரு முக்கியமான காரணம். ராக தீபம் ஏற்றும் நேரம்( இந்தப் பாடலின் இரண்டாவது சரணத்தின் முடிவில் மோகன் மகிழ்ச்சியோடு கைகளை அசைக்கும் பாவனைக்கு  அப்போது எல்லா தியேட்டர்களிலும் விசில் பறந்தது),தோகை இள மயில்(எப்போதும் கேட்கத் தூண்டும் தரமான பாடல்.)சாலையோரம் சோலை ஒன்று( இனிமையான காதல் கானம்)ஏய் ஆத்தா ஆத்தோரமா,மணியோசை கேட்டு எழுந்து,வைகரையில் போன்ற பாடல்கள் வானொலியிலும் வீதியோர டீக்கடைகளிலும் வெடித்துக்கொண்டு  ஒலித்தன. இளையராஜாவின் இசை சிகரமாகவும் இந்தப் படத்தின் விலாசமாகாவும்  வந்த பாடல்:"இளைய நிலா பொழிகிறதே". தனிப்பட்ட விதத்தில் என்னுடைய நெஞ்சத்தில் அமிழ்ந்து விட்ட பாடல் இது. இளையராஜாவின் இன்னிசைக்கு உதாரணமாக ஒரே ஒரு பாடலை மட்டுமே தேர்வு வேண்டிய நிர்பந்தம் ஏறபட்டால் கண்டிப்பாக என் தேர்வு இந்தப் பாடலே. உள்ளதை கொள்ளை கொள்ளும்  இசை,எஸ் பி பியின் நளினமான தாலாட்டுக் குரல்,பாடலோடு பயணம் செய்யும் அழகான நதியைப் போன்ற இடையிசை, திரும்ப திரும்ப நினைவுகளில் சுழலும் ஹான்டிங் டியூன் மற்றும் மிக இலக்கியத் தரமான கவிதை வரிகள் என இந்தப் பாடல் எல்லா விதத்திலும் மிகவும் சிறப்பாக  அமைந்துவிட்டது. பாடல் முழுதுமே கவிதைச் சிதறல்கள்தான்.குறிப்பாக
  "முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தவறியதோ,
   முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ?"
என்ற கவிதை வரிகள் நமக்கு சிலிர்ப்பை உண்டாக்கி விடுகின்றன.வணிக ரீதியாகவும், மக்களின் ரசனை என்ற விதத்திலும் இந்தப் பாடலே இளையராஜாவின் சாதனைப் பாடலாக நான் கருதுகிறேன்.

      இப்போது இளையராஜாவை துதி பாடும் பலர் குறிப்பிடும் பாடல்கள்    இளையராஜா-வைரமுத்து இணைப்பில் வந்தவைகள்.(இதில் தவறுகள் இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே உணர்கிறேன். தெரிந்தவர்கள்  திருத்தலாம்) உதாரணமாக பொத்தி  வச்ச மல்லிக மொட்டு,அரிசி குத்தும்  -மண்வாசனை
கண்ணில் என்ன கார்காலம் -உன் கண்ணில் நீர் வழிந்தால்,
பூங்காத்து திரும்புமா,ஏ குருவி, அந்த நிலாவத்தான்-முதல் மரியாதை,
பேசக்கூடாது,காவிரியே-அடுத்த வாரிசு
சங்கீத மேகம்( இளையராஜா ஒரு ஆர்கெஸ்ட்ரா குழுவினரின் இசையைப் போலவே இந்தப் பாடலை அமைத்திருப்பார்.) உதயகீதம் பாடுவேன், மானே தேனே கட்டிபுடி,எல்லோரும் பாட்டு பாடுங்கள்,தேனே தென் பாண்டி மீனே -உதயகீதம்,
தேவன் தந்த வீணை-உன்னை நான் சந்தித்தேன்,
விக்ரம், வனிதாமணி-விக்ரம்,
அடி ஆத்தாடி, போகுதே-கடலோரக் கவிதைகள்,
எல்லாருமே திருடங்கதான்,வெண் மேகம்,பெண் மானே, காந்தி தேசமே-நான் சிகப்பு மனிதன்,
ஒ வெண்ணிலாவே, ஒரு கிளி உருகுது-ஆனந்தக் கும்மி,
தேவதை இளம், எப்படி எப்படி-ஆயிரம் நிலவே வா,
ஈரமான ரோஜாவே,இசை மேடையில்,பாட வந்ததோ கானம்-இளமைக் காலங்கள்,
காங்கேயம் காளைகளே,மொட்டு விட்ட முல்ல கொடி,பொன் வானம் பன்னீர்-இன்று நீ நாளை நான்,
கீதம் சங்கீதம்-கொக்கரக்கோ,
தென்றல் என்னை முத்தமிட்டது, தலையை குனியும் தாமரையே-ஒரு ஓடை நதியாகிறது,
வான் போல வண்ணம்,மவ்னமான நேரம்,நாத வினோதங்கள்,தகிட திமி-சலங்கை ஒலி,
மேகம் கொட்டட்டும்(வித்யாசமான இசைப் பின்னணியில் வந்த அருமையான பாடல்)-எனக்குள் ஒருவன்,
நானாக நானில்லை தாயே-தூங்காதே தம்பி தூங்காதே,
சோலைப் பூவில் ,ஒ மானே -வெள்ளை ரோஜா,
விழியிலே மணி விழியில் (மெதுவாக உரசும் காற்றின் சுகம் கொண்ட பாடல்), உலகம் முழுதும் -நூறாவது நாள்,
பாடிவா தென்றலே-முடிவல்ல ஆரம்பம்,
நிலவொன்று கண்டேன்-கைராசிக்காரன்,
ரோஜா ஒன்று முத்தம் -கொம்பேறி மூக்கன்,
பாடும் வானம்பாடி,தேவன் கோவில் தீபம்,சீர் கொண்டுவா,பாடவா உன் பாடலை-நான் பாடும் பாடல்,
ஒ  ராஜா, பிள்ளை நிலா, அடியே மனம்,நானே ராஜா, கனவு காணும்-நீங்கள் கேட்டவை,
அலை மீது தடுமாறுதே-அன்புள்ள மலரே
நான் பாடும் மௌன ராகம் , கூட்டத்திலே கோயில்புறா,பாட்டுத்தலைவன்-இதய கோவில்,
ஒரு ஜீவன், துள்ளி எழுந்தது-கீதாஞ்சலி,
பட்டுக்கன்னம்,கண்மணியே பேசு,வானிலே தேனிலா-காக்கிச் சட்டை,
கூட்சு வண்டியிலே,நிலவு தூங்கும் நேரம்-குங்குமச் சிமிழ்,
மயங்கினேன் சொல்ல தயங்கினேன்-நானே ராஜா நானே மந்திரி,
பூமாலையே -பகல் நிலவு,
கண்மணி நீ வர காத்திருந்தேன்,தென்றல் வந்து என்னை,கவிதை பாடு குயிலே,புதிய பூவிது-தென்றலே என்னை தொடு, (இந்தப் படத்தின் பாடல்கள் மிகவும் நவீனமாக இருப்பது ஏன் என்று புரியாமலே இருக்கிறது.இதே சாயலில் இளையராஜா இன்னும் பல பாடல்கள் அமைதிருக்கலாமோ என்று தோன்றுகிறது. குறிப்பாக புதிய பூவிது பாடல் முழுதும் ஒரே தாளக்கட்டு விலகிச் செல்லாமல் கைகோர்த்துக்கொண்டு செல்வது ஒரு புதிய முயற்சி. This song is much ahead of its time like காக்கை சிறகினிலே (ஏழாவது மனிதன்).)
பாடறியேன்,நானொரு சிந்து,மரி மரி நின்னே,பூமாலை வாங்கி-சிந்து பைரவி,
முத்தாடுதே, சிட்டுக்கு, எங்க மொதலாளி - நல்லவனுக்கு நல்லவன்.
காலம் மாறலாம்,மெல்ல மெல்ல-வாழ்க்கை.
கால காலமாக, கவிதை கேளுங்கள்,சிங்களத்து சின்னக் குயிலே,ஏதேதோ எண்ணம், என்ன சத்தம் (இந்தப் படத்தின்  ஒரே சிறந்த பாடல் இதுவே. மனதை அள்ளும்  இசை ஆர்ப்பாட்டம் இல்லாத இனிமையான குரல்,வைர வரிகள் என்று நேர்த்தியாக வந்த பாடல் )-புன்னகை மன்னன்,
இளஞ்சோலை பூத்ததா(அபாரமான மிருதங்க இசையின் தாளத்தில் பின்னிப்பிணைந்த இளமையான இன்னிசை),கண்ணா உன்னை தேடுகிறேன்-உனக்காகவே வாழ்கிறேன்.
எங்கே என் ஜீவனே,காலைத் தென்றல்-உயர்ந்த உள்ளம்,
ஊரத் தெரிஞ்சுகிட்டேன்,-படிக்காதவன்,
அழகு மலராட,இன்றைக்கு ஏனிந்த,காத்திருந்து காத்திருந்து,ராசாத்தி உன்ன -வைதேகி காத்திருந்தாள்,
ஜோடி நதிகள்(துயரத்தின் இன்னிசை) அழகான பூக்கள் -அன்பே ஓடி வா,(இந்தப் பாடல்களை அதிகமானவர்கள் கேட்டதில்லை என தோன்றுகிறது.)
கேளாதோ, செவ்வந்திப் பூக்களில்-மெல்லப் பேசுங்கள்
 யார் தூரிகை தந்த ஓவியம்-பாரு பாரு பட்டணம் பாரு

    வைரமுத்து-இளையராஜா நட்பு 86 இல் வந்த புன்னகை மன்னன் படத்தோடு முறிந்தது.இதில்தான் இளையராஜா முதன் முதலாக டிஜிடல் இசையை அறிமுகம் செய்தார்.அப்போது இது பெரியதாக பேசப்பட்டது.(இதில் ரகுமானின் பங்கும் இருந்ததாக இப்போது சொல்கிறார்கள்). படத்தின் தீம் மியுசிக், காலம் காலமாக போன்ற பாடல்களில் இந்த டிஜிடல் இசை தெளிவாகவே தெரிந்தது.  70  களின் ஆரம்பத்திலேயே மேற்கத்திய இசையில் இப்படிப்பட்ட  கம்ப்யூட்டர் இசை அமைக்கப்பட்டு பிரபலம் ஆகிவிட்டது. Pink Floyd(mettle,The dark side of the moon, Wish You were here, animals),Kraftwerk(man machine) Giorgio Moroder (E=Mc2, From Here to eternity) Depeche Mode (some great reward, construction time again, violator) போன்ற இசை குழுக்கள் இவ்வாறான இசையில் அதகளம் செய்துகொண்டிருந்தன. இவர்களோடு இளையராஜாவை ஒப்பீடு செய்வது அபத்தமானது என்றாலுமே 70 களிலேயே மேற்கில் வந்துவிட்ட ஒரு புதிய இசையை 16 வருடங்கள் கழித்து தமிழுக்கு அறிமுகம் செய்த இளையராஜா அதை 86 க்கு இசைவாக நேர்த்தியாக கொடுக்காமல் ஏனோ தானோ என்று அரைவேக்காட்டுத்தனமாக அமைத்துவிட்டார். His digital music was half-baked and very elementary.  இதை விட சிறப்பாக அவரால் செய்திருக்க முடியுமா என்பதே ஒரு கேள்விக்குறி. ஆங்கில காண்டம்ப்ரரி இசையை அவர் சரியாக தெரிந்திருக்கவில்லையாதலால் (அதை அவர்  விரும்பவில்லை என்பது வேறு) அவரின் டிஜிடல் இசை எந்த புது வித இசை அனுபவத்தையும் அளிக்கவில்லை.அதைவிட இந்த கம்ப்யூட்டர்  தடவல் இல்லாமல் அவர் கொடுத்த என்ன சத்தம் இந்த நேரம் மிக அருமையாக வார்க்கப்பட்ட இசைப்பொன்னொவியம்.
   
         விக்ரம், காக்கிச்சட்டை, படிக்காதவன், புன்னகை மன்னன்,சிந்து பைரவி போன்ற படப் பாடல்களை கேட்கையில் 80க்கு முன் இருந்த இளையராஜாவின் தடம் இப்போது கணிசமாக மாறிப்போயிருப்பதை நாம் உணரலாம்.உதாரணமாக விழியிலே மலர்ந்தது (புவனா ஒரு கேள்விக்குறி-1977) பாடலையும்  விழியிலே மணி விழியில் (நூறாவது நாள்-85) பாடலையும் ஒரே கோட்டில் வைத்தால் இந்த மாற்றத்தை நன்றாகவே காணலாம். இந்த மாற்றம் இயல்பாகவே நிகழ்ந்தது என்றாலும் இளையராஜா இத்தனை வேகமாக தன் இன்னிசையை வேறு திசைக்கு நகர்த்திச் சென்றிருக்க வேண்டாம் என்றே எண்ணுகிறேன்.  மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாடல்கள் சிறந்தவை என்றாலும் இளையராஜா  தமிழ்த்திரையிசையின் போக்கையே வெகுவாக மாற்றிவிட்டார் என்பதே உண்மை. ஒரு மிகப் பெரிய இசைப் பாரம்பரியத்தை எம் எஸ் வி க்குப் பிறகு  தொடர்ந்து நடத்தி சென்றவர் நல்ல கவிதைகளைப் புறக்கணித்தது,கொச்சையான வரிகளை பாடல்களாக மாற்றியது என்று தடம் மாறிப் போனது உண்மையில் வேதனையான நிகழ்வு. அவர் நினைத்திருந்தால் வணிக நோக்கங்களைத் தாண்டி தமிழ் இசையை இன்னும் நேர்த்தியான பாதையில் வழிநடத்திச் சென்றிருக்கலாம். ஏனென்றால் 80 களின் மத்தியில் அவர் ராஜாங்கமே இங்கே நடந்து கொண்டிருந்தது.  மேலும் இளையராஜாவை வீழ்த்தக்கூடிய எந்த ஒரு இசைஞரும் கண்ணில் தென்பட்ட தூரம் வரை காணப்படாத நிலையில்  இளையராஜா  தனக்கு முன்னே இருந்த இசை மேதைகளின் இசைப் பாரம்பரியத்தை இன்னும் செம்மையாகி இருக்கலாம்.அதற்கு அவருக்கு கண்டிப்பாக எல்லா வாய்ப்புக்களும், திறமைகளும்,தகுதிகளும்   இருந்தன.  இருந்தும் 80 களின் மத்தியிலிருந்து அவரது இசையின் தரம் சரியத் துவங்கியது. How to name it? Nothing but wind போன்ற திரையிசை சாராத இசை முயற்சிகளை முயன்றவரால் ஏன் தரமில்லாத இசையை தடுத்து நிறுத்த முடியவில்லை என்பது ஒரு புதிராகவே இருக்கிறது. வைரமுத்துவைப் பிரிந்ததும் அவர் பாடல்களில் ஒரு கவிதை வெற்றிடம் உருவானது இதற்கு காரணமாக இருக்கலாம். அல்லது என் பாடல்களுக்கு கவிதையே தேவை இல்லை என்று அவர் நினைத்ததும் காரணமாக இருக்கலாம். இதைப் பற்றி அடுத்த பதிவில் எழுதப் போவதால் இங்கே நான் நிறுத்துகிறேன். அதற்கு முன் இளையராஜாவின் இன்னிசையின் பரிமாணம் நிறம் மாறியதை குறிப்பதற்காக மட்டும்   நான்  இந்தப் பதிவுக்கு இந்தத் தலைப்பை சூட்டவில்லை என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

அடுத்து: இசை விரும்பிகள் X - வீழ்ந்த இசை.