Tuesday, 4 March 2014

இசை விரும்பிகள் - XIV - பகல் விண்மீன்கள்                                      
     சாலைகளின் பாதையோரங்களில் வண்ணமயமாக படர்ந்திருக்கும் சிறிய பூக்களின் வார்த்தைகளால் வடிக்க  முடியாத அழகு  ஏன் நம்மால் பாராட்டப்படுவதில்லை ? ஒரு உக்கிரமான மழையின் ஆர்ப்பாட்டத்தை அதிசயிக்கும் நெஞ்சங்கள் ஒரு சிறு மழைத்  துளியை அலட்சியம் செய்வது ஏன்?  பிரமிப்பு உண்டாக்கும் ஒரு மிகப் பெரிய ஆலமரத்தின் கீழிருக்கும் சிறிய செடிகள் ஏன் எப்போதுமே கவனிக்கப்படுவதில்லை? வித விதமான ஆடைகளின் செயற்கையான நிறங்களை தேடும் கண்கள் ஏன் ஒரு சிறிய வண்ணத்துப் பூச்சியின் சிறகில் இருக்கும் வியப்பூட்டும் வண்ணங்களை நோக்கிப் பார்ப்பதில்லை?

                        
                           பகல் விண்மீன்கள் 

       சிலோன் வானொலி தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்த எழுபதுகளில் அவர்கள் ஒலிபரப்பும் பாடல்களுக்கு தமிழகத்தில் மிகப் பெரிய ரசிகர் வட்டம் இருந்தது. மெட்ராஸ், திருச்சி, கோவை போன்ற   பல இந்தப் பக்கத்து வானொலிகளை  விட சிலோன் நிகழ்சிகளையே தமிழர்கள் அதிகம் விரும்பியது விசேஷ புனைவுகள் கலக்காத  உண்மை. அதற்குக் காரணங்கள் இல்லாமலில்லை. சிலோன் வானொலியின் பாடல் தொடர்பான எல்லா நிகழ்சிகளும் அன்றைய காலத்தில் புரட்டிப்போடும் புதுமைகளாக  இருந்தன. உடைந்த கண்ணாடித் துண்டுகளிலெல்லாம் ஒரே பிம்பம் தெரிவதைப் போன்ற ஒரே மாதிரியான அலுப்பூட்டக்கூடிய பாடல்களாக இல்லாமல் ஒரு கலைடாஸ்கோப் காண்பிக்கும் வித விதமான வண்ணங்களைப் போன்ற பல சுவை கொண்ட கானங்களை வெவ்வேறு தலைப்புகளின் கீழ் ஒலிபரப்பு செய்துவந்தது சிலோன் வானொலியின் சிறப்பு. என்றைக்கும் எனது நினைவுகளிலிருந்து விழுந்துவிடாமலிருக்கும் சில நிகழ்சிகளை இங்கே  குறிப்பிடுவது அவசியப்படுவதால் இதோ அவைகள்:

      பொங்கும் பூம்புனல் (காலைப் பொழுதின் உற்சாகமான துவக்கத்தை இங்கே கேட்கலாம்.)  , அசலும் நகலும் (இதில் நம் தமிழ் இசைஞர்கள் வேறு மொழிப் பாடலை பிரதி எடுத்ததை விலாவாரியாக சொல்வார்கள்.சில சமயங்களில் நேரடியாக பேட்டி எடுத்து சம்பந்தப்பட்டவரை தடாலடியாக திடுக்கிட வைப்பதும் உண்டு.) இசையும் கதையும் (பொதுவாக காதல் தோல்வி கதைகளே இதில் அதிகமாக சொல்லப்படும். நடு நடுவே இனிமையான துயரப்  பாடல்கள் துணையாக வருவதுண்டு.  நான் பள்ளி விட்டு வீடு திரும்பும் போது  இந்த நிகழ்ச்சியின் முகப்பு இசை சோக வயலின்களுடன் இனிமையாக ஒலித்துக்கொண்டிருக்கும்.), டாப் டென்  (ஒருவேளை பெயர் தவறாக இருக்கலாம். வேறு பெயர் இதற்கு சொல்வார்கள். மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி. புதிய பாடல்ளை வரிசைப் படுத்த  தபால் முறையில் ஓட்டெடுப்பு நடத்தி பாடல்களை இந்தப் பாடல் இத்தனை ஓட்டு என்று அறிவிப்பார்கள். எனக்குத் தெரிந்து நிழல்கள் படத்தின் இது ஒரு பொன் மாலைப் பொழுது பாடல் 23 வாரங்கள் முதலிடத்தில் இருந்தது.அதன் பின் வறுமையின் நிறம் சிகப்பு படத்தின் சிப்பியிருக்குது பாடல் அதன் இடத்தைப் பிடித்தது இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது.) பிறகு   அத்திப்பூ என்ற ஒரு  பாடல் தொகுப்பு வாரம் ஒருமுறையோ இருமுறையோ வருவதுண்டு.  தலைப்புக்கு ஏற்றாற் போல்  இந்தத் தொகுப்பில் மக்கள் மத்தியில் போய்ச் சேராத அல்லது வணிக வெளிச்சம்படாத அதிகம் பிரபலமாகாத (ஆனால் அற்புதமான) பாடல்களை ஒலிபரப்புவார்கள்.  வெறுமனே பாடல்களை மட்டும் இப்போதைய எப் எம் களைப் போல ஒலிபரப்பு செய்யாமல் ஒலிபரப்பப்படும் பாடலின் படத்தின் பெயர், இசை  அமைப்பாளர், கவிஞர், பாடியவர்கள் என்று ஒரு பாடலின் எல்லா தகவல்களையும் மறக்காமல் குறிப்பிடுவார்கள். (ஆரம்ப காலங்களில் பொதுவாக எல்லா வானொலிகளிலும்  இது வழக்கமாக செய்யப்படுவதுதான்.)

       இந்த நிகழ்ச்சியில்தான் முதல் முறையாக சித்திரப்பூ சேலை என்ற பாடலை நான்   கேட்க நேர்ந்தது.  எழுத்தாளர் ஜெயகாந்தனின் இயக்கத்தில் எடுக்கப்பட்ட புது செருப்பு கடிக்கும் என்ற படத்தின் பாடல் அது. படம்  வந்ததா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் அந்தப் பாடல் மனதை தாலாட்டும் சுக கீதமாக இருந்தது என்பதில் மட்டும் சந்தேகமேயில்லை. வாத்தியங்கள் அதிகம் வாசிக்கப்படாமலிருப்பதும்  மிகக்  குறைவான இசையில் எஸ் பி பி யின் குரல் மட்டுமே மனதை ஊடுருவும்  விதத்தில் ஒலிப்பதும்  இதன் சிறப்பு. ஒரு விதமான  A capella வகையைச் சார்ந்த பாடல் இது .  அப்போது பிரபலமாக இருந்த எந்த இசையின்  சாயலையும்  கொஞ்சமும் ஒத்திராமல் எம் பி ஸ்ரீனிவாசன் என்பவரின்  இசை அமைப்பில் வந்த அந்தப் பாடல் கொடுத்த இனிமையான உணர்வு  ஒரு புதிய ரகம்.  எம் பி ஸ்ரீனிவாசனை ஒரு புதிய இசை அமைப்பாளர் என்றெண்ணி இருந்த நான் அவரைப் பற்றிய  சில தகவல்களை அறிந்ததும் திடுக்கிட நேர்ந்தது.

         பலரால் அறியப்படாதவராக இருக்கும் இவர்  எழுத்தாளர் ஜெயகாந்தனின் தேர்வுக்குரிய இசை அமைப்பாளராக இருந்தவர்.   கேரளாவில் மிகவும் புகழ் பெற்றவரான ஸ்ரீநிவாசன்  தமிழில் 60 களிலிருந்தே சிற்சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார். பாதை தெரியுது பார் (60)  என்ற ஜெயகாந்தனின் முதல் படத்தின் இசை அமைப்பாளர் இவரே.  அதே போல இன்று பலரின் அபிமானத்துக்குரிய கே ஜே யேசுதாசை மலையாளத் திரைக்கு அறிமுகப்படுத்தியதும் இவரே. (தமிழில் பொம்மை என்ற எஸ் பாலச்சந்தர் படமே யேசுதாசுக்கு முதல் தமிழ் அறிமுகம்).யாருக்காக அழுதான்? (66),  தாகம் (74), புது வெள்ளம்-(துளி துளி மழைத்துளி, இது பொங்கி வரும் புதுவெள்ளம் பாடல்கள் அப்போது பிரபலமாக வானொலிகளில் ஒலித்தன.)  (75), எடுப்பார் கைப் பிள்ளை (75), மதன மாளிகை (76),  (76),போன்ற சில  படங்களுக்கு இசை அமைத்துள்ள இவரின் இன்னொரு சிறப்பான பாடல் மதன மாளிகை படத்தின் "ஒரு சின்னப் பறவை அன்னையை தேடி" என்கிற எஸ் பி பி பாடிய பாடல். எவ்வளவு உற்சாகமான நறுமணம் வீசும் தென்றலான கானம் இது!  (என் நண்பன் ஒருவன் இந்தப் பாடலை வி.குமாரின் இசை என்று சொல்லியிருக்கிறான். பழைய பாடல்களைப் பொறுத்தவரை இது மாதிரியான தவறுகள் இயல்பாக நிகழக்கூடியதே.)

        நாம் சந்திக்கும் பத்தில் ஏறக்குறைய ஏழு பேர் ஒரு  முறையான இசைத் தொடர்பை அறிந்திருப்பதில்லை. அனிருத், இமான்,ஹேரிஸ் ஜெயராஜ்  என்ற இன்றைய இசை புழக்கத்தில் இருக்கும் பலருக்கு ரஹ்மான் இப்போது போன தலைமுறை இசை அமைப்பாளராகிவிட்டார். இளையராஜா பழையவர் என்று கணிக்கப்படுகிறார். "அவரெல்லாம்  என் அப்பா காலத்து ஆளு" என்றே பலர் குறிப்பிடுகிறார்கள். இளையராஜாவுக்கு முன்  என்று கேள்வி வந்தால் வரும் ஒரே பதில் "எம் எஸ் விஸ்வநாதன்". அதைத் தாண்டி இன்னும் பின்னே இருக்கும் இசையைப் பற்றி  அவர்கள் பெரும்பாலும்  எந்தவிதமான எண்ணமும் கொண்டிருப்பதில்லை.விஷயமறிந்த வெகு சிலரே கே வி மகாதேவன் பெயரை உச்சரிக்கின்றனர். மற்றபடி எ எம்  ராஜா, ஜி ராமனாதன் போன்ற  பெயர்கள் இசை வரலாறு தெரிந்தவர்களின் வாயிலிருந்தே வருகின்றன. இவர்களையும் தாண்டிய சிலரது பெயர்கள் அரிதாகவே உச்சரிக்கப்படுகின்றன.   தமிழ்த் திரையின் நாற்பதாண்டுகள் இசையை வசதியாக பலர்  எம் எஸ் வி இசை என்று குறியீடாக சொல்லிவிடுகிறார்கள். தொலைக்காட்சிகளில் எம் எஸ் வி, இளையராஜா, ரஹ்மான் என்று அதிகம் பேசப்படுவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எம் எஸ் விக்கு முன் யார் என்ற கேள்விக்கு ஒரேடியாக (எம் கே டி) பாகவதர் என்று அறிவித்து விட்டு முற்றுப்புள்ளி வைத்து விடுவது அவர்களது  வழக்கம். அவர்களின் புரிதல் அப்படி.

       ஆனால்  தமிழ்த் திரையிசை கடந்த பாதைகளில் பல இசைச் சத்திரங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. அங்கெல்லாம் நமது முன்னோர்கள் இசையை அனுபவித்திருக்கிறார்கள். காலம் கடந்தாலும் சில இசை மாளிகைகள் நம் நினைவுகளில் தங்கிவிடுவதைப் போல இந்த சிறு சத்திரங்கள் நமது ஞாபகங்களில் வாழ்வதில்லை. வானவில்லின் வசியப்படுத்தும் வண்ணங்களை வியக்கும் நாம் அதே நிறங்கள் ஒரு சிறு தண்ணீர்த் துளியிலும் பிரதிபலிப்பதை ஏனோ மறந்துவிடுகிறோம். இதோ நம்மால் நம் நினைவுகளிலிருந்து தூரமாக விலக்கி வைக்கப்பட்ட சிலரை தெரிந்துகொள்வோம்.

      ஆர்.தேவராஜன்- 60 களில் பெற்றவள் கண்ட பெருவாழ்வு,யார் மணமகன்?, ஸ்ரீ குருவாயுரப்பன், துலாபாரம் படங்களுக்கு இசை அமைத்த இவர் கேரளாவின் இசை ஆளுமைகளில் ஒருவர் என்று சொல்லப்படுபவர்.  நீலக் கடலின் ஓரத்தில் என்ற பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? அல்லது டி எம் எஸ் குரலில் உள்ளதை உடைக்கும் தேவ மைந்தன் போகின்றான் (கண்ணதாசனின் கவிதை)? அல்லது மிக சிறப்பான வானமென்னும் வீதியிலே?  அன்னை வேளாங்கண்ணி என்ற படத்தின் பாடல்கள் அனைத்தும் ஓர் அற்புதம். வியப்பு என்னவென்றால் இந்தப் படத்திற்கு இசை அமைத்து இத்தனை நேர்த்தியான கிருஸ்துவ கானங்களை உருவாக்கிய ஆர் தேவராஜன் உண்மையில் ஒரு நாத்திகர். குமார சம்பவம், பருவ காலம், அந்தரங்கம் (இவரது இசையில்தான் கமலஹாசன் முதன் முதலில்  ஞாயிறு ஒளி மழையில் என்ற அருமையான பாடலைப் பாடியிருக்கிறார்.), சுவாமி ஐயப்பன்,குமார விஜயம், அலாவுதீனும் அற்புத விளக்கும் போன்ற பல படங்களுக்கு இசை அமைத்தவர்.

      ஆதி நாராயண ராவ்- கண்ணாலே பேசி பேசி கொல்லாதே (அடுத்த வீட்டுப் பெண்) என்ற ஒரு பாடல் இவரை எனக்கு அறிமுகம் செய்தது. வழக்கம் போலவே எம் எஸ் வி- டி கே ஆர் இசை என்று எண்ணியிருந்த என் புகை படிந்த இசையறிவை தூசி தட்டிய பாடல். To say it's a wonderful song is an understatement. இதே படத்தில் உள்ள கண்களும் கவி பாடுதே மாற்றொரு ரசனையான கீதம்.  மாயக்காரி, பூங்கோதை,மணாளனே மங்கையின் பாக்கியம் (அழைக்காதே என்ற அற்புதமான பாடல்  உள்ளது), மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் போன்ற படங்களுக்கு இசை அமைத்தவரான இவர் நடிகை அஞ்சலி தேவியின் கணவர். 47 இல் முதல் 80 வரை தமிழ் உட்பட எல்லா தென்னிந்திய மொழிகளில் இசை அமைத்துள்ள இவரின் முதல் படத்தில்தான் இவரைப் போல நமக்கு ஒரு அப்பா இல்லையே என்று பல இளம் பெண்களை ஏங்க வாய்த்த எஸ் வி ரங்காராவும் அறிமுகம் ஆனார்.

      ஆர் சுதர்சனம்- தமிழ்த் திரையை ஒரே வீச்சில் புரட்டிப் போட்ட பராசக்தி படத்தைப் பற்றி நிறையவே எழுதப்பட்டுவிட்டது. சிவாஜியையும், கருணாநிதியையும் வஞ்சகமில்லாது பாராட்டியாகிவிட்டது.ஆனால் அந்தப் படத்திற்கு இசை அமைத்த ஆர் சுதர்சனத்தைதான்  நாம் புகழுரைகளுக்கு  அப்பால் நிறுத்திவிட்டோம்.   என்ன விதமான இசையை சுதர்சனம் இந்த ground breaking movie யில் கொடுத்திருக்கிறார் என்பதை என்னும்போது ஆச்சர்யம் ஒன்றே மிஞ்சுகிறது. சமூக சாடல் வலிந்து ஒலிக்கும்  கா கா கா, 50 களின் காதல் உணர்வை பிரதிபலிக்கும் புது பெண்ணின் மனதை தொட்டு போறவரே போன்ற பல விதமான சூழல்களுக்கு ஏற்றவாறு  பாடல்கள் இதில் இருந்தாலும் உறைந்த பனித்துளிகள்  மென்மையாக தரைமீது விழுவதைப் போன்ற எவர் க்ரீன் கிளாசிக் அழகுடன்  வந்த ஓ ரசிக்கும் சீமானே  கர்நாடக மேற்கத்திய இணைப்பின் துல்லியம். கிழக்கும் மேற்கும் இசையில்  இணையும் அற்புதத்தை ஒரே முடிச்சில் பிசிறின்றி பிணைத்து அதை காலம் தாண்டிய கானமாக உருவாகிய சுதர்சனம் உண்மையில் அதிகம் பேசப்படவேண்டிய ஒரு மகா இசை கலைஞன். Tamil film music came of age and Sutharsanam  turned it  on its head.   52 இல் இப்படி ஒரு நாட்டியப்பாடல் வந்திருப்பது வியப்பான ஒன்று.  2014இல் கூட இப்பாடல் அதே பொலிவுடன் ஒலிப்பது மற்றொரு வியப்பு.  எப்படிப்பட்டப் பாடலிது? வெறும் கிளப் டான்ஸ் பாடல் என்ற சிறிய குதர்க்கமான குழிக்குள் அடையாளம் காணப்படும் நாட்டிய கானங்களுக்கு மத்தியில் இந்தப் பாடல் ஒரு வினோத அற்புதம். மேற்கத்திய இசை கலப்பை இவர் செய்தார் அவர் செய்தார் என்று சொல்வதுண்டு. எம் எஸ் வி- டி கே ஆர் செய்தார்கள் என்று கூட சொல்லப்படுவதுண்டு. ஆனால் அதற்கும் முன்னே  சுதர்சனம் எத்தனை அழகாக இந்த நவீனத்தை நிகழ்த்திக்காட்டிவிட்டு போய்விட்டார்? நதியின் சலனம் போன்ற இசையும்,அதனூடே வளைந்து நெளிந்து நடனமாடும் ராகமும், செயற்கைத்தனமில்லாத குரலும் ரசிக்கும் சீமானை கேட்கும் கனமெல்லாம் ரசிக்கவைக்கிறது. ஆர்ப்பாட்டமில்லாத அழகின் வெளிப்பாடாக இந்தப் பாடலை நான் பார்க்கிறேன்.

    பராசக்திக்கு முன்பே இசையமைக்க ஆரம்பித்துவிட்ட சுதர்சனம்  நாம் இருவர், பூமாலை, வாலிப விருந்து (ஒன்ற கண்ணு டோரியா),வாழ்க்கை, ஓரிரவு, தெய்வப்பிறவி,வேதாள உலகம், வேலைக்காரன்,செல்லப் பிள்ளை, நாகதேவதை,மாமியார் மெச்சிய மருமகள், சகோதரி (நான் ஒரு முட்டாளுங்க) திலகம், மணிமகுடம், பெண், நானும் ஒரு பெண் (கல்யாணம் ஆஹா கல்யாணம்..உல்லாசமாகவே   என்று  எஸ் பாலச்சந்தருக்கு சந்திரபாபு பின்னணி பாடியது),அன்னை (சந்திரபாபுவின் புத்தியுள்ள மனிதரெல்லாம் பாடலை மறக்கமுடியுமா?), களத்தூர் கண்ணம்மா, அன்புக்கரங்கள், பூம்புகார் போன்ற படங்களுக்கும் இசையமைத்துள்ளார். களத்தூர் கண்ணம்மா இவரின் இசை மேதமைக்கு ஒரு சான்று என்று எடுத்துக்கொள்ளலாம்.நீண்ட காலமாக நான் இந்தப் படத்தின் இசை எம் எஸ் வி என்று நினைத்திருந்தேன். கண்களின் வார்த்தைகள், ஆடாத மனமும் ஆடுதே,அம்மாவும் நீயே போன்ற பாடல்களைக் கேட்கும் போது எத்தனை சுலபமாக நாம் சில சாதனையாளர்களை அங்கீகரிக்க தவறிவிடுகிறோம் என்ற எண்ணம் எனக்கு ஏற்படுவதுண்டு. சிறுவன் கமலஹாசனை பாராட்டும் வார்த்தைகளில் ஒன்றையாவது  சுதர்சனத்தின் இனிமையான இசைக்காக விட்டு வைத்திருக்கிறோமா ?

            எஸ் வி வெங்கடராமன்- புராண படங்கள் புற்றீசல்கள்  போல புறப்பட்ட   40 களிலிருந்து இசை அமைத்தவர். தமிழிசையின் பெரிய ஆளுமைகளான ஜி.ராமநாதன், சுப்பையா நாயுடு, டி கே ராமமூர்த்தி, எம் எஸ் விஸ்வநாதன், சி ஆர் சுப்பராமன், இவருடன் இணைந்து பணியாற்றியிருக்கின்றனர். 42 இல் வந்த கண்ணாம்பா நடித்த கண்ணகி, எம் எஸ் சுப்புலக்ஷ்மி நடித்த மிகவும் புகழ் பெற்ற மீரா, பரஞ்சோதி, ஹரிச்சந்திரா, கண்கள், மனோகரா, இரும்புத்திரை, மருத நாட்டு வீரன்,அறிவாளி போன்ற படங்களுக்கு  இசை அமைத்தவர்.

      டி ஆர் பாப்பா- 52 இல் ஜோசெப் தலியெத் மூலம் மலையாளத்தில் அறிமுகம் ஆன டி ஆர் பாப்பா (படம் ஆத்ம சாந்தி, தமிழிலும் இதே பெயரில் வந்தது.)சிட்டாடல் பட நிறுவனத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளராக இருந்தவர். மல்லிகா(வருவேன் நான் உனது மாளிகையின்) , ரங்கூன் ராதா (தலைவாரி பூச்சூடி) , அன்பு, ரம்பையின் காதல்(சமசரம் உலவும் இடமே), ராஜா ராணி, தாய் மகளுக்கு கட்டிய தாலி (சின்னஞ்சிறு வயது முதல்) ,வையாபுரி வீரன்,குறவஞ்சி, நல்லவன் வாழ்வான், எதையும் தாங்கும் இதயம், குமார ராஜா (ஒன்னுமே புரியல உலகத்தில ), விளகேற்றியவள் (முத்தான ஆசை முத்தம்மா) , இரவும் பகலும் (தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய்ஷங்கர் அறிமுகமான படம்),காதல் படுத்தும் பாடு, டீச்சரம்மா (சூடி கொடுத்தவள் நான் தோழி ) , ஏன் (இறைவன் என்றொரு கவிஞன்) , அவசர கல்யாணம் (வெண்ணிலா நேரத்திலே) , மறுபிறவி, வைரம் (பார்த்தேன் ஒரு அழகி) போன்ற படங்களுக்கு இசை அமைத்தார். இரவும் பகலும் படத்தின் உள்ளத்தின் கதவுகள் கண்களடா, இரவும் வரும் பகலும் வரும், இறந்தவனை சுமந்தவனும் என்ற பாடல்கள் சிறப்பானவை.

    டி ஜி லிங்கப்பா-கோவிந்தராஜுலு நாயுடு என்ற பழம் பெறும்   இசை அமைப்பாளரின் மகன்.  இருபதுக்கும் மேற்பட்ட  தமிழ்ப் படங்களுக்கு இசை அமைத்துள்ள லிங்கப்பா 60 களுக்குப்பிறகு கன்னட திரைக்கு சென்றுவிட்டார். சித்திரம் பேசுதடி (சபாஷ் மீனா)அமுதைப் பொழியும் நிலவே (தங்க மலை ரகசியம்) என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே (எல்லோரும் இந்நாட்டு மன்னர்) போன்ற மயக்கம் தரும் பாடல்கள் இவரது முத்திரையாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

       சுப்பையா நாயுடு- தென்னகத்தின் ஒ பி நய்யார் என வர்ணிக்கப்படும் இந்த இசை மேதை பல காலத்தை வென்ற கானங்களை படைத்திருக்கிறார். சுப்பையா நாயுடு என்றாலே  இந்த மாதிரியான பெயரை வைத்துக்கொண்டு என்ன விதமான  பாடல்களைக் கொடுக்க முடியும் என்று எனக்கு சிறு வயதில் ஒரு அலட்சியம் தோன்றியிருக்கிறது. பழைய பாடல்களை தேடிக்  கேட்கும் மன முதிர்ச்சி அடைந்த பிறகு நான் விரும்பிக் கேட்டிருந்த பல பாடல்கள் இவருடையது என்ற உண்மை என்னை பார்த்து சிரித்தது. 40 களில் ஜி ராமநாதன் எஸ் வி வெங்கடராமன் சி ஆர் சுப்புராமன் போன்ற ஜாம்பவான்களுடன் இணை இசையமைப்பு செய்த இவர் தொடர்ந்து தனியாக 80 களின் துவக்கம் வரை தன் இசை பிரவாகத்தை ரசிக்கும்படியாக நடத்தியிருக்கிறார். தமிழ்த் திரையில் முதன் முதலாக பின்னணி பாடும் முறையை அறிமுகம் செய்ததே இவர்தான் என்பது ஒரு சுவையான தகவல். சுப்பையா நாயுடுவின் ஆரம்பகால புராணப் படங்களை சற்று தாண்டி மலைக்கள்ளன், மர்மயோகி, நாடோடி மன்னன் (என் எஸ் பாலகிருஷ்ணன் என்ற இசை அமைப்பாளருடன் இணைந்து), அன்னையின் ஆணை, திருமணம், மரகதம், நல்ல தீர்ப்பு, திருடாதே, கொஞ்சும் சலங்கை, கல்யாணியின் கணவன், ஆசை முகம், பந்தயம், சபாஷ் தம்பி, மன்னிப்பு,தலைவன், தேரோட்டம் என்று வந்து நிற்கலாம். தமிழில் ஏறக்குறைய 50 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ள சுப்பையா நாயுடு 30 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையில் இருந்தவர் என்பது ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கக்கூடியது. பழைய பாடல் விரும்பிகளின் நிரந்தர தேர்வாக இருக்கும் பல பாடல்கள் இவருடையவை. குறிப்பாக எம் எஸ்  வி அல்லது கே வி மகாதேவன் என்று பொது சிந்தனையில் தோய்ந்திருக்கும் பல இனிமைகள் இவர் இயற்றியது.
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை- அன்னையின் ஆணை.
சிங்கார வேலனே தேவா- கொஞ்சும் சலங்கை.
எத்தனை செல்வங்கள் வந்தாலுமே- தாயின் மடியில்

எம் ஜி ஆர் பாடல்கள் என மக்களால் குறிப்பிடப்படும் சமூக நெறி சார்ந்த, தத்துவ,கொள்கைப் பாடல்களில் சிலவற்றை  சுப்பையா நாயுடு சாகாவரம் பெற்றதாக்கியிருக்கிறார்.  உதாரணமாக

திருடாதே பாப்பா திருடாதே, (திருடாதே), எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே (மலைக்கள்ளன் ),தூங்காதே தம்பி தூங்காதே (நாடோடி மன்னன்) எத்தனை பெரிய மனிதருக்கு (ஆசை முகம்) போன்ற பாடல்களை சொல்லலாம்.

மன்னிப்பு படத்தின் நீ எங்கே என் நினைவுகள் அங்கே  மிகவும் சிறப்பான விதத்தில் இசைக்கப்பட்ட பாடல். இந்தப் பாடல் சுப்பையா நாயுடுவின் கை வண்ணம் என்ற உண்மை எனது சிந்தனையில் இவரைப் பற்றிய புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது. மூன்று விதமான தொடர்பில்லாத வேறு வேறு  மெட்டுக்களுடன் இந்தப் பாடலை அவர் அமைத்திருப்பது இதன் மற்றொரு சிறப்பு. இதே போல வேறு ஏதும் பாடல்கள் உண்டா என்று தெரியவில்லை. (ஸ்பரிசம் என்ற படத்தில் ஊடல் சிறு மின்னல் என்ற ஒரே பாடலில்  பல வித மெட்டுக்கள் பின்னியிருக்கும்.) இதே படத்தின் இன்னொரு அற்புத கானம் வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்.

நாம் மூவர் படத்தில் வரும் பிறந்த நாள் என்ற பாடல்  சிலோன் வானொலியின் பிறந்த நாள் நிகழ்ச்சியின் முகவரிப்  பாடலாக  இருந்தது.     (அதை முழுவதும் கேட்க விரும்பிய நாட்கள் உண்டு.)   பிறந்த நாள் பாடல்கள் பல இருந்தாலும் அந்த நிகழ்ச்சிக்கு இத்தனை பொருத்தமான ஒரு பாடல் இதை விட்டால் வேறு இல்லை  என்று தோன்றுகிறது.

      டி கே ராமமூர்த்தி - தமிழ்த் திரையின் சிதிலமடையாத  பல இசை மாளிகைகளை உருவாக்கிய இரட்டையர்களான எம் எஸ் வி- டி கே ஆர் ஒரு மாபெரும் இசை சகாப்தம் என்பது என்றென்றும் மாற்ற உண்மையின் ஒரு சிறிய துளி மட்டுமே. அவர்களருகே மற்றவர்கள் வருவதென்பதே ஒரு தரமான, அழிவில்லாத இசையின் குறியீடு.  பலருக்கு அது ஒரு பகல் கனவாகவே நிலைத்துவிட்டது. தமிழிசையின் பல ஜீவ கீதங்களை படைத்த இந்த இரட்டையர்களின் பிரிவு தனித்தனிப் பாதைகளில் இருவரையும் செலுத்தினாலும் ஒருவர் வெற்றியின் உச்சியை நோக்கியும் மற்றொருவர் வரலாற்றின் மறைந்த பக்கங்களுக்குள்ளும் சென்றது ஒரு bittersweet reality. எம் எஸ் விஸ்வநாதன் புகழ் என்ற சிகரம் தொடர்ந்து சிகரம் தாண்டிச் செல்ல, டி கே ராமமூர்த்தியோ -தரமான நல்லிசையை வழங்கிய போதிலும்- அதே புகழின் எதிர் திசையில் சென்றபடியிருந்தார். பிரிவுக்குப் பின் 19 தமிழ்ப் படங்களுக்கு மட்டுமே இசை அமைத்திருக்கிறார் டி கே ஆர்.அவை :
சாது மிரண்டால், தேன்மழை(கல்யாண சந்தையிலே, நெஞ்சே நீ போ,) மெட்ராஸ் டு பாண்டிச்சேரி(மலரைப் போன்ற,பயணம் எங்கே,)மறக்க முடியுமா (காகித ஓடம் கடலலை மீது) ஆலயம், எங்களுக்கும் காலம் வரும், பட்டத்து ராணி, நான் (போதுமோ இந்த இடம், அம்மனோ சாமியோ,),மூன்றழுத்து (ஆடு பார்க்கலாம் ஆடு) சோப்பு சீப்பு கண்ணாடி,,நீலகிரி எக்ஸ்பிரெஸ்,தங்க சுரங்கம் (சந்தன குடத்துக்குள்ளே, நான் பிறந்த நாட்டுக்கு,), காதல் ஜோதி, சங்கமம், சக்தி லீலை, பிராத்தனை,அவளுக்கு ஆயிரம் கண்கள், அந்த 16 ஜூன், அவள் ஒரு பவுர்ணமி (விண்ணிலே மின்மினி ஊர்வலம்.)

 66ரிலிருந்து 69 வரை கொஞ்சம் பரபரப்பாக இயங்கி வந்த டி கே ஆர் 70 களில் தனது இசைத் தோழன் எம் எஸ் வி யின் அசாதரண வேகத்துக்கு முன் தலை பணிய வேண்டியிருந்தது. அவரது ஒவ்வொரு அடிக்கும் எம் எஸ் வி பத்துப் படிகள் முன்னேறிக்கொண்டிருந்தார். புரிந்து கொள்ள முடியாத வினோத உண்மையாக எம் எஸ் விக்கு சோலையாக இருந்த புகழ் டி கே ராமமூர்த்திக்கு  கடைசி வரை கானல் நீராகவே  காட்சியளித்தது.

   சலபதிராவ்- குறிப்பிட்ட சில படங்களுக்கு மட்டுமே இசை அமைத்திருந்தாலும் இவர் இசை மனதை வருடும் தென்றல் உணர்வை தரக்கூடியது. அமர தீபம் (ஜி ராமநாதனுடன் இணைந்து), மீண்ட சொர்க்கம், புனர் ஜென்மம்(உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதிலே) , அன்பு மகன், நல்வரவு போன்ற படங்களில் இவரது இசை அமைப்பு இருந்தது.

      எஸ் தட்சிணாமூர்த்தி- அலிபாபாவும் 40 திருடர்களும் படப் பாடல்கள் எல்லாமே வெகு சிறப்பானவை. இன்றுவரை ரசிக்கப்பட்டுவரும் அந்த இனிமைகளை உண்டாக்கியவர் இவர். குறிப்பாக மாசிலா உண்மை காதலே பாடல் அற்புதமான கானம். பானுமதியின் ஊடல்,கொஞ்சல், நளினம் எல்லாம் இந்தப் பாடலை கேட்க மட்டுமல்லாது பார்க்கவும் ரசிக்க வைத்துவிடுகிறது. தவிர   சம்சாரம், சர்வாதிகாரி, வளையாபதி, கல்யாணி,வேலைக்காரி மகள், மங்கையர் திலகம்,யார் பையன்,பாக்கியவதி, உலகம் சிரிக்குது, பங்காளிகள் போன்ற படங்களுக்கு இசை அமைத்தார்.


    (வீணை) எஸ்.பாலச்சந்தர்-எந்த விதமான சமரசங்களையும் அனுமதிக்காத தமிழ்த் திரையின் அபூர்வ ஆளுமை.  புராணம், நாடகத்தனம், போலித்தனம், செயற்கைத்தனம் எல்லாம் புரையோடிப்போயிருந்த தமிழ்த் திரையின் 50, 60 களில் அந்தக் காலங்களைத் தாண்டி சிந்தித்தவர் என்பது இவரது அந்த நாள், பொம்மை, நாடு இரவில், அவனா இவன் போன்ற படங்களைப் பார்த்தால்  உணரமுடியும். பெரிய வெற்றி கண்ட பாடல்களை அமைக்காவிட்டாலும் இவரது பின்னணி இசை வெகு சிறப்பானது. குறிப்பாக அவனா இவன் படத்தின் பின்னணி இசைக்கு இணையான இன்னொன்றை தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டும். தமிழ்த் திரையில் பல் முகம் கொண்ட சினிமாத்தனம் அகன்ற ஒருவர் காலூன்ற முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அந்த சாத்தியம் இங்கே ஒரு உறுதிசெய்யப்பட அபத்தம். இந்த அபத்தத்தின் வினோத விதியில் காணாமல் போன சில மேதைகளில் ஒருவராகவே எஸ் பாலச்சந்தர் இருக்கிறார். பணத்துக்கு இசை என்றில்லாமல் மனதுக்கு இசை என்ற கோட்பாடு கொண்டவர் பின் எவ்வாறு இங்கே நீடித்திருக்க முடியும்? Obviously, a  man who deserves  superlative compliments.

       வேதா- மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான இசைஞராக இருந்தவர்.   ஹிந்தி மெட்டுக்களை இந்த அளவுக்கு அழகாக தமிழில் பயன்படுத்தியது இவராகத்தான் இருக்கமுடியும்.  வேதா குறித்த  இந்த விமர்சனம் பொதுவாக அந்த காலத்து தமிழ் ரசிகர்கள் எல்லோருக்குமே தெரிந்தததுதான் என்பதால்  இதை ஒரு குற்றச்சாட்டாக  வைக்காமல் அவர் கொடுத்த பாடல்களை மட்டும் அலசலாம்.  வேதா தமிழுக்குக் கடத்திய கானங்கள் அனைத்தும் மிக அற்புதமானவை. இன்றிருக்கும்  இசை அமைப்பாளர்கள் தமிழுக்குத் தொடர்பில்லாத வேற்று மொழி மெட்டுக்களை  சிரமத்துடன் தமிழில் அமைப்பதுபோல இல்லாமல் வேதாவின் பாடல்கள் வெகு இனிமையாக வார்க்கப்பட்ட இசையோவியங்கள் என்பது என் எண்ணம். (அதே கண்கள் படத்தில் மட்டும் இப்படிச் செய்ய அனுமதி இல்லாததால் சொந்தமாக பாடல்கள் அமைத்தார் என்ற தகவலை கேள்விப்பட்டிருக்கிறேன்.) வேற்று மொழி பாடல்களின் மெட்டுக்கள் மீது தமிழ் வார்த்தைகளை உட்கார வைத்தாலுமே  வேதாவின் இசையில் ஹிந்தியின் சாயல் எட்டிக்கொண்டு தெரியாமல் தமிழ்ச்  சுவை இயல்பாகவே காணப்படும். பல சமயங்களில் அவரது தமிழ் நகல் ஹிந்தியின் அசலைவிட அதிக வசீகரமாக இருப்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். கீழ்க்கண்ட பாடல்களை சற்று ஆராய்ந்தால் இதை  நாம் தெளிவாகக் காணலாம்.
வல்லவன் ஒருவன்- இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால்,தொட்டுத் தொட்டுப் பாடவா,  பளிங்கினால் ஒரு மாளிகை.
வல்லவனுக்கு வல்லவன்- மனம் என்னும் மேடை மேல, பாரடி கண்ணே கொஞ்சம்,  ஓராயிரம் பார்வையிலே (காதல் பாடல்களின் உச்சத்தில் நீங்கள் எந்தப் பாடலை வைத்தாலும் இந்த கானம் அதற்கும் மேலேதான். அதிசயமாக இதன் ஹிந்திப் பதிப்பு தமிழுக்குப் பிறகே வெளிவந்தது.)
நான்கு கில்லாடிகள் - செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் ( சுசீலாவின் அற்புதமான குரலில் ஒலிக்கும் நட்சத்திர கானம்.)
இரு வல்லவர்கள்- ஆசையா கோபமா, காவிரிக் கரையின் தோட்டத்திலே, நான் மலரோடு  தனியாக ( மிக மென்மையான  காதல் கீதம்)
எதிரிகள் ஜாக்கிரதை- நேருக்கு நேர் நின்று.
யார் நீ- நானே வருவேன், பார்வை ஒன்றே போதுமே (லயிக்கச் செய்யும் தாளம்)
சி ஐ டி சங்கர்- பிருந்தாவனத்தில் பூவெடுத்து, நாணத்தாலே கண்கள் (நாட்டியமாடும் வார்த்தைகளும் அதோடு இணைந்த இனிமையான இசையும் இதை ஒரு இசை விருந்தாக மாற்றிவிடுகிறது.)
அதே கண்கள்- பூம் பூம் மாட்டுக்காரன் (நெத்தியடியான நாட்டுப்புற தாளம். ), ஓ ஓ எத்தனை அழகு இருபது வயதினிலே, கண்ணுக்குத் தெரியாதா,பொம்பள ஒருத்தி இருந்தாளாம், வா அருகில் வா,

    எம் பி ஸ்ரீநிவாசன்- இந்தப் பதிவின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்ட அசாதாரமான இசை அமைப்பாளர்.

          வி தட்சிணாமூர்த்தி- புகழ் பெற்ற மலையாள இசை அமைப்பாளரான இவர் எண்ணி விடக்கூடிய சில தமிழ்ப் படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறார். ஒருவேளை கீழே குறிப்பிட்டுள்ள பாடல்களை கண்ணுற்றால் அட இவரா என்ற எண்ணம் உங்களுக்கு வர வாய்ப்பிருக்கிறது. நந்தா என் நிலா(படமும் அதுவே),  நல்ல மனம் வாழ்க (ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது.) இவரையும் எஸ் தட்சிணாமூர்த்தியையும் ஒருவரே அல்லது இவரே அவர் என்ற புரிதல் இணையத்தில் சில இடங்களில் காணப்படுகிறது. அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தின் இசை என்று சில இடங்களில் இவரை அடையாளப்படுத்தியிருப்பது இந்தக்  குழப்பத்தின் வெளிப்பாடு.

     குன்னக்குடி வைத்தியநாதன்- மிகப் புகழ் பெற்ற வயலின் வித்வானாக  அறியப்பட்ட வைத்தியநாதன் (இவரது இசையில்  வயலின் பேசும் என்று சொல்லப்படுவதுண்டு.) சில படங்களுக்கும்  இசை அமைத்திருக்கிறார். வியப்பூட்டும் தகவலாக எம் ஜி ஆர் தனது கனவுப் படமான உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு முதலில் இவரைத்தான் இசை அமைப்பாளராக நியமித்திருந்தார். பாடல்களில் திருப்தி ஏற்பவில்லையோ அல்லது வேறு எதோ காரணங்களுக்காகவோ பின்னர் எம் எஸ் விஸ்வநாதன் அந்தப் படத்தில் இசை அமைத்தார். அதன் பின் நடந்தது வரலாறு. பாடல்களைப்  பற்றி நான் புதிதாக எதுவும் சொல்லவேண்டியதில்லை. வா ராஜா வா என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அவதாரம் எடுத்த வைத்தியநாதன் அகத்தியர், தமிழின் முதல் சினிமாஸ்கோப் படமான ராஜ ராஜ சோழன் முதலிய படங்களுக்கு இசை அமைத்துள்ளார். 80 களில் டி என் சேஷகோபாலன் நடித்த தோடி ராகம் என்ற படத்தை எடுத்தார். படம் படுத்துவிட்டது என்பதை எந்தவிதமான யூகங்களும் இல்லாமல் சொல்லிவிடலாம். வாங்க மாப்பிள்ளை வாங்க படத்தில்  என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி என்ற  இவரது இசையில் வெளிவந்த பாடல் அப்போது பட்டி தொட்டி எங்கும் காற்றில் படபடத்தது.

     ஆர் கோவர்தன்- ஆர் சுதர்சனத்தின் சகோதரர். எம் எஸ் வி இசை அமைத்த பல படங்களில் உதவி கோவர்த்தன் என்று காட்டப்படுபவர் இவரே. தனியாகவும் சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அவற்றில் சில;
       கை ராசி, மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே,பூவும் போட்டும், பட்டினத்தில் பூதம் (கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா, அந்த சிவகாமி மகனிடம் சேதி (இந்தப் பாடலுக்குப் பின்னே கண்ணதாசன்- காமராஜர் கதை ஒன்று உண்டு), உலகத்தில்  சிறந்தது எது ) பொற்சிலை, அஞ்சல் பெட்டி 520 (பத்துப் பதினாறு முத்தம்), தங்க மலர், வரப்பிரசாதம். குறிப்பாக கங்கை நதியோரம் ராமன் நடந்தான்(வரப்பிரசாதம்) என்ற பாடல் ஒரு அற்புதம். சிலர் இதை இளையராஜாவின் இசை என்று சொல்கிறார்கள். எதுவாக இருப்பினும் இந்தப் பாடல் 70களின் மென்மையான நல்லிசைக்கு மிகச் சிறந்த உதாரணம் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது. கேட்பவர்களை உடனடியாக ஆட்கொள்ளும் அபாரமான கானம்.

           ஜி.கே.வெங்கடேஷ்- நமது தமிழ் இசை மரபின் முன்னோடிகளில் ஒருவர். இசை ஜாம்பவான்கள்  எம் எஸ் வி- டி கே ஆர், சுப்புராமன், போன்ற மகா ஆளுமைகளுடன் பணியாற்றிவர். கன்னடத்தில் மிகப் பெரிய புகழ் பெற்ற இவருக்கு தமிழில் ஒரு பதமான இடம் அமையாதது ஒரு வியப்பான வேதனை. 52 இல் நடிகை என்ற படத்துடன் தமிழில் அறிமுகமானவர் தொடர்ந்து மற்ற தென்னிந்திய மொழிகளில் அதிகமான படங்களுக்கு இசை அமைத்துள்ளார். பின்னர் 64 இல் மகளே உன் சமத்து, நானும் மனிதன்தான் என்று மீண்டு வந்தவருக்கு மறுபடியும் பின்னடைவு ஏற்பட, அதன் பின் சபதம் (மிக நவீனமான தொடுவதென்ன தென்றலோ என்கிற பாடலைக்  கேட்டிருப்பீர்கள்.70 களின் இசை முகத்தை இந்தப் பாடலில் காணலாம். ) படத்தில்தான் இரண்டாவது துவக்கம் கைகூடியது. தாயின் கருணை, பொண்ணுக்கு தங்க மனசு(தேன் சிந்துதே வானம்) முருகன் காட்டிய வழி, யாருக்கும் வெட்கமில்லை, தென்னங்கீற்று, பிரியாவிடை (ராஜா பாருங்க ), மல்லிகை மோகினி(எஸ் பி பி பாடிய அற்புதமான மேகங்களே இங்கு வாருங்களேன் இதில்தான் உள்ளது ), போன்ற படங்கள் இவரது இசையில் வந்தவை. அதன் பின் வந்த ஒரு படம் மிகவும் சிறப்பு பெற்றது. அந்து எந்தப் படம் என்பதும் ஏன் என்பதும் கீழே:

கண்ணில் தெரியும் கதைகள்- சரத் பாபு, ஸ்ரீப்ரியா, வடிவுக்கரசி நடித்த இந்தப் படத்தை பழம் பெரும் பாடகர் எ எல் ராகவன் தயாரித்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் பெரிய வீழ்ச்சியடைந்தது. ஆனாலும் தமிழ்த் திரையில் இந்தப் படம் ஒரே ஒரு காரணத்திற்க்காக நினைவு கொள்ளப்படுகிறது. முதல் முறையாக ஐந்து இசை அமைப்பாளர்கள் இணைந்து பணியாற்றிய படம் என்ற சிறப்பை பெற்ற படமாக இது இருக்கிறது. அவர்கள்
கே.வி மகாதேவன்-வேட்டைக்காரன் மலையிலே
டி ஆர் பாப்பா- ஒன்னுரெண்டு மூணு
ஜி.கே.வெங்கடேஷ்,- நான் பார்த்த ரதி தேவி எங்கே.
சங்கர் கணேஷ்- நான் உன்ன நெனச்சேன்
இளையராஜா- நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே

 ஐந்து பாடல்களும் வெகு அலாதியான சுவை கொண்டவை. நான் உன்ன நெனச்சேன், நானொரு பொன்னோவியம் பாடல்கள் பெற்ற வரவேற்பை மற்ற பாடல்கள் பெறாதது ஒரு வேளை தலைமுறை இடைவெளி ரசனையினால் விளைந்த கோளாறாக இருக்கலாம்.(இதன் பிறகே 2002இல் நீ ரொம்ப அழகா இருக்கே என்ற படத்தில் மீண்டும் ஐந்து இசைஞர்கள் பணியாற்றினார்கள்.)

   சின்னஞ்சிறு கிளியே, பெண்ணின் வாழ்க்கை (மாசிமாதம் முகூர்த்த நேரம்), தெய்வத் திருமகள் (மூன்று வெவ்வேறு கதைகள் கொண்ட படமாக இது இருந்ததால் இதில் கே வி. மகாதேவன், எம் எஸ் வி, ஜி கே வி இசை அமைத்திருந்தார்கள் ), நெஞ்சில் ஒரு முள் (நேராகவே கேட்கிறேன்,ராகம் புது ராகம் ), காஷ்மீர் காதலி (காதல் என்பது மலராகும், சங்கீதமே தெய்வீகமே, அழகிய செந்நிற வானம். இதே மெட்டில் இன்று நீ நாளை நான் படத்தின் மொட்டு விட்ட முல்லை கொடி பாடல் இருப்பதை கேட்டால் உணரலாம். ), அழகு, இணைந்த கோடுகள் என அவரது படவரிசை ஒரு முடிவை எட்டியது. இருந்தும் ஒரு மெல்லிசை நாயகனுக்கு வேண்டிய சிம்மாசனம் அவரை விட்டு விலகியே இருந்தது.

         இப்போது ஒரு சிறிய பின்னோக்கிய பார்வை. 60 களின் இறுதியில் ஜி கே வி தன்னிடம் ராசையா என்ற இசை தாகம் கொண்ட இளைஞனை உதவியாளராக சேர்த்துக்கொண்டார். இவரே பின்னாளில் ராஜா என பெயர் மாற்றம் செய்யப்பட்ட 80 களில் தமிழ்த் திரையிசையை ஒரே ஆளாக வழிநடத்திச் சென்ற இளையராஜா.  மனதை வசீகரிக்கும் பல பாடல்களை உருவாக்கி இருந்தாலும் ஜி கே வெங்கடேஷின் இசையை சிலர் இளையராஜாவின் இசையாகவே காண்பதுண்டு. முரணாக உண்மை அப்படியே இதற்கு நேர் எதிராக இருக்கிறது. ஜி கே வி யின் கூடாரத்திலிருந்து வந்த இளையராஜாவின்  இசைதான்  ஆரம்பத்தில் ஜி கே வெங்கடேஷின் இசை பாணியை தன்னிடத்தில் கொண்டிருந்தது. பொண்ணுக்கு தங்க மனசு படத்தின் மிகப் பெரிய பிரபலமான "தேன் சிந்துதே வானம்" பாடலை இளையராஜாவின் ரசிகர்கள் பலர் தங்கள் ஆதர்சன இசை அமைப்பாளரின் பாடல் என்றே கருதுகின்றனர். ஆனால் உண்மையில் ஜி கே வி இந்தப் பாடலை ஏற்கனவே கன்னடத்தில் அமைத்திருந்தார். ஒரு நாள் உன்னோடு ஒருநாள் (உறவாடும் நெஞ்சம்), நான் பேச வந்தேன் (பாலூட்டி வளர்த்த கிளி) கண்ணன் ஒரு கைக்குழந்தை (பத்ரகாளி) போன்ற இளையராஜாவின் பாடல்களில் ஜி கே வெங்கடேஷின் நிழலை நாம் அதிகமாகவே காணலாம். மேலும் வி குமார், எம் எஸ்  வி, ஜி கே வெங்கடேஷ் போன்றவர்களின் இசைபாணி இளையராஜாவிடம் 80 களுக்கு முன்பு வரை இருந்தது அவரது துவக்ககால பாடல்களை கேட்டால் புரிந்து கொள்ளலாம். கன்னடத்தில் ஒரு சிறப்பான இடத்தில் இருந்தாலும் தமிழில் ஜி கே வெங்கடேஷுக்கு  வாய்ப்புக்கள் குறைவாகவே இருந்தன. இளமை ஊஞ்சலாடுகிறது படத்தின் தண்ணி கருத்துருச்சு பாடல் இவர் பாடியதுதான். (அதற்கும் முன்பே பல பாடல்கள் பாடியிருக்கிறார்) அதன் பின் மெல்லத் திறந்தது கதவு படத்தில் நாயகனின் தந்தையாக நடித்தார். அதன் பின் மக்களின் பொது நினைவுகளிலிருந்து  இவர் பெயர் கரைந்து போனது. தனது கடைசி காலங்களில் இளையராஜாவிடம் உதவியாளராக இருந்ததாகத் தெரிகிறது. வினோதம்தான்.

   இன்னும் ஒருவரைப் பற்றி இங்கே பேச வேண்டியது கட்டாயமாகிறது. இவரை ஒரு முடிசூடா மன்னன் என்று ஒரே வரியில் வர்ணித்து விடலாம்.அந்த அவர்- வி.குமார்
   கே. பாலச்சந்தரின் மிகச் சிறப்பான கண்டுபிடிப்பு யார் என்று என்னை கேட்கும் பட்சத்தில் எனது பதில் வி.குமார்.  சில சமயங்களில் ஆடம்பரமான அலங்கார விளக்குகளை விட சின்னஞ்சிறிய அகல் விளக்குகள் நம் மனதை நிரப்புவதுண்டு. பலமான காற்றில் துடித்து அடங்கும் சுடாராக வந்தவர்தான் குமார். பாடப்படாத நாயகனாக, அரியணை இல்லாத அரசனாக, அடர்ந்த காட்டுக்குள் மாட்டிகொண்ட கவிஞனாக, தனித் தீவின் பாடகனாக இவர் எனக்குத் தோற்றமளிக்கிறார். சிறிது எம் எஸ் வியின் பாதிப்பு இருந்தாலும்  இவரின் முத்திரைப் பாடல்கள் வி குமார் என்ற மகத்தான இசைஞரை எளிதில் நமக்கு அடையாளம் காட்டிவிடும். நல்லிசை மற்றும்  மெல்லிசை என்ற சொற்களுக்கு ரத்தமும் சதையுமாக நிமிர்ந்து நின்ற அற்புதக்  கலைஞன். அபாரமான  பல கானங்களை உருவாகியிருந்தாலும் பலருக்கு அவை இவரது இசையில் உருவானவை  என்ற விபரம் தெரியாமலிருப்பது ஒரு சிறந்த இசைக் கலைஞனை நாம் சரியான உயரத்தில் வைக்கவில்லை என்பதை காட்டுகிறது. சில வைரங்களை நாம் கூழாங்கற்கல் என்றெண்ணி நீரினுள் வீசிவிட்டோம் என்ற உண்மையை குமாரின் இசையை கேட்கும் பொழுது புரிந்துகொள்ள முடிகிறது. குமாரின் பல பாடல்கள் பலரால் எம் எஸ் வி அல்லது இளையராஜா என்று முத்திரை குத்தப்படுவது வேதனை முற்களை நெஞ்சில் பாய்சுகிறது.  உண்மையில் அந்த அற்புதமான  இசை மேதை வார்த்தைகளின்றி மவுனமாகவே தன் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். ஆனால் துயர உண்மையாக   அவருக்குத் தகுதியான கிரீடம் அவர் தலை மீது கடைசி வரை சூட்டப்படவேயில்லை.  We salute and honour   you Mr. V. Kumar. Truly,  you deserve a lot more than what you were given in your heyday. Most importantly, we thank you for the music you gave us.

        1965 இல் நீர்க்குமிழி படத்தில் முதன் முறையாக தன் திரையிசை பிரயாணத்தை துவக்கிய குமார் (அவருடைய முதல் படத்துக்கு அவருக்கு மிகுந்த பக்க பலமாக இருந்தவர் ஆர் கே சேகர்- எ ஆர் ரஹ்மானின் தந்தை.) தொடர்ந்து நாணல், இரு கோடுகள், எதிர் நீச்சல், அரங்கேற்றம், வெள்ளிவிழா, நூற்றுக்கு நூறு, மேஜர் சந்திரகாந்த், நவ கிரகம், நினைவில் நின்றவள், தேன்  கிண்ணம், பத்தாம் பசலி, நிறைகுடம், பொம்மலாட்டம், குமாஸ்தாவின் மகள், கலியுகக் கண்ணன்,பெத்த மனம் பித்து, கண்ணா நலமா,தேன் சிந்துதே வானம்,ராஜ நாகம்,தூண்டில் மீன், நாடகமே உலகம், எல்லோரும் நல்லவரே, சதுரங்கம் உட்பட ஏறக்குறைய 35 தமிழ்ப் படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

          இப்போது குமாரின் மென்மையான எங்கும் துருத்திக்கொண்டு தெரியாத இனிமையான மெல்லிசையில் குழைந்து வரும்  சில பாடல்களைப் பார்ப்போம்.
             காதோடுதான் நான் பாடுவேன்- வெள்ளிவிழா. குமாரின் வைர கானம் . எல் ஆர் ஈஸ்வரியை பிடிக்காதவர்கள் கூட கொஞ்சம் தடுமாறித்தான் போவார்கள் இந்தப் பாடலைக் கேட்கும்போது. குழந்தைக்கான தாலாட்டும் கணவனுக்கான அந்தரங்க காதலும் ஒருங்கே பிணைந்த சாகாத பாடல்.
       புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்- இருகோடுகள். அசாத்தியமான ராக நெளிவுகளுடன் வந்த மிகச்  சிறப்பான பாடல்.
      நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்-நூற்றுக்கு நூறு. என்ன ஒரு சுகமான கீதம்! சுசீலாவின் தேன் மதுரக் குரலில் இதை கேட்டு மயங்காத உள்ளங்கள் உண்மையில் இசைச் சாவு அடைந்துவிட்டன என்றே சொல்லலாம்.(காட்சியை மட்டும் பார்த்துவிடாதீர்கள். சற்றும் பொருத்தமில்லாத காட்சியமைப்பு)
   ஆடி அடங்கும் வாழ்க்கையடா-நீர்க்குமிழி. மரணத்தை வர்ணிக்கும் மரணமடையாத பாடல்.
     ஒரு நாள் யாரோ- மேஜர் சந்திரகாந்த். எத்தனை மென்மையாக  ஒரு பருவப் பெண்ணின் மோகத்தையும் விரகதையும் குமார் தன் அழகியல் இசையால் வண்ணம் பூசி செவி விருந்து படைத்திருக்கிறார்! எந்த விதமான படுக்கையறை முக்கல் முனங்கல்கள் இல்லாது இசை எத்தனை தூய்மையாக இருந்தது ஒரு காலத்தில் என்ற பிரமிப்பும் பெருமூச்சும் ஒரு சேர எழுகிறது.
     நேற்று நீ சின்ன பாப்பா- மேஜர் சந்திரகாந்த்.குதூகலமான இசையின் சிறப்பான வடிவம்.
       கண்ணொரு பக்கம்-நிறைகுடம். லேசாக எம் எஸ் வி யின் நிழல் படியும் அழகான கீதம்.
     அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா?- எதிர் நீச்சல். பகடிப் பாடல் என்ற வரிசையில் வந்தாலும் சுய விமர்சனம் செய்துகொள்ளும் தம்பதியினரின் இனிமையான ராகப் போட்டி மற்றும் வார்த்தை விளையாட்டு. இன்றளவும் ரசிக்கப்படும் நல்லிசை.
       தாமரைக் கன்னங்கள்-எதிர் நீச்சல். என்ன ஒரு ராக வார்ப்பு! இசையோடு குழையும் குரல்கள், லயிக்கச் செய்யும் இசை என்று கேட்ட வினாடியே நம்மை உள்ளே இழுத்துக்கொள்ளும் பாடல்.
     வெற்றி வேண்டுமா-எதிர் நீச்சல். ஒரு விதத்தில் குமார் தனக்காகவே அமைத்த பாடலோ என்று எண்ணம் கொள்ளவைக்கும் தன்னம்பிக்கைப் பாடல்.
        ஆண்டவனின் தோட்டத்திலே- அரங்கேற்றம். இளமையின் துள்ளல் அதன் குழந்தைத்தனமான பரிமாணங்களை எல்லோரும் ரசிக்கக்கூடிய வகையில் வெளிப்படுத்தும் கீதம். குதூகலமான பாடல்.
      மூத்தவள் நீ- அரங்கேற்றம். துயர இசையின் சிறப்பான படிவம்.
     தொட்டதா தொடாததா- நினைவில் நின்றவள்.  எத்தனை சிறப்பான பாடல்! எம் எஸ் வி பாடல் என்றே இதை பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன்.
    முள்ளுக்கு ரோஜா சொந்தம்-வெகுளிப்பெண். தாய்மையை நல்லிசையாக வடித்த பாடல். அவ்வளவாக கேட்கப்படாத கானம்.
     நல்ல நாள்- பொம்மலாட்டம். காதலை நளினமாக நாட்டியமாடும் ராக நெளிவுகளுடன் சொல்லும் அருமையான பாடல்.
     வா வாத்தியாரே- பொம்மலாட்டம். முழுதும் சென்னைத் தமிழில் மனோரமா பாடிய அப்போது பெரும் பிரபலமான பாடல்.
     முத்தாரமே உன் ஊடல்- ரங்க ராட்டினம். மகத்தான  கலைஞன் எ எம் ராஜாவின் குரலில் இந்தப் பாடல் ஒரு இனிமையான சுக அனுபவம்.
   தேவன் வேதமும் கண்ணன் கீதையும்- ராஜநாகம். கிருஸ்துவ மற்றும்  சாஸ்திரிய இசை கலப்புடன் துவங்கும் இனிமையான கீதம். இதன் பிறகே அலைகள் ஓய்வதில்லையில் காதல் ஓவியம் வந்தது. ஆனால் மக்கள் இந்தப் பாடலை மறந்துவிட்டது துரதிஷ்டமே.
       உன்னைத் தொட்ட காற்று வந்து- நவகிரகம். நளினமான கானம்.பாடலைக் கேட்கும் போதே நம்மையறியாமல் பாடத்தோன்றும் தூண்டுதலை உண்டாக்கும் இசை அமைப்பு.
      சப்தஸ்வரம்  புன்னகையில் கண்டேன்- நாடகமே உலகம். சிலிர்ப்பான பாடல். நேர்த்தியான இசை. ஒட்டி உறவாடும் குரல்கள்.
    நாள் நல்ல நாள்- பணக்காரப் பெண். நினைவலைகளை தூண்டி விடும் ரம்மியமான கீதம்.
    வாழ்வில் சௌபாக்கியம் வந்தது- தூண்டில் மீன். மிகவும் ரம்மியமான பாடல். பலருக்கு இந்தப் பாடல் அறிமுகம் ஆகியிருக்காத பட்சதில் எனது வேண்டுகோள்  ஒரு முறை இந்தப் பாடலை கேட்டுப்பாருங்கள். ராக தாளங்கள் எப்படி மோகம் கொண்ட காதலர்கள் போல சுகமாக மோதுகின்றன என்று நீங்களே வியப்படைவீர்கள். ராகங்களை வைத்து இத்தனை பின்னல்களை  ஒரு கானத்தில் இணைக்க முடியுமா என்ற வியப்பு உண்டாகும்.
   என்னோடு என்னென்னெவோ ரகசியம்- தூண்டில் மீன். என்ன ஒரு தேவ கானம் ! இதை கேட்கும் போது குமார் என்ற இசை மேதைக்கு நாம் தர மறந்த அங்கீகாரம் கூர்மையாக நமது நெஞ்சுக்குள் வலியோடு ஊடுருவதை உணரலாம்.
     பகை கொண்ட உள்ளம்-எல்லோரும் நல்லவரே. ஜேசுதாஸின் குரலில் என்ன ஒரு துயரத்தின் இசை!
   செவப்புக் கல்லு மூக்குத்தி- எல்லோரும் நல்லவரே. நல்லிசையாக ஒலிக்கும் நாட்டுப்புற கானம்.
   ஓராயிரம் கற்பனை- ஏழைக்கும் காலம் வரும். குமாரின் பியானோ இசையில் வந்த மிக அருமையான கீதம்.
     மதனோற்சவம்-சதுரங்கம். இந்தப் பாடலே ஒரு கனவுலகிற்கான நுழைவுச் சீட்டு என்பதை கேட்கும் போது உணரலாம். ஒரு மலர்ப் பூங்காவிற்குள் நுழைந்துவிட்ட அனுபவத்தை தரும் அருமையான பாடல்.
       உன்னிடம் மயங்குகிறேன்- தேன் சிந்துதே வானம். மெல்லிசையின் மேகத் தடவல். இசை என்னும் அழகியலின் நளினமான ஆர்ப்பரிப்பு! எப்போதோ ஒரு முறை பூக்கும் அதிசய மலர் போன்ற கானம். குமாரின் முத்திரை இசை பாணியான    கர்நாடக ராகத்தில் தோய்ந்த மெல்லிசையும் மேற்கத்திய இசையும் இனிமையாக உறவாடும்  திகட்டாத சுவை இந்தப் பாடல் முழுவதும் பின்னிப் பிணைந்திருப்பதை நாம் உணரலாம். பாடல் முழுவதும் அதை சுகமாக அணைத்தபடியே இசைக்கப்படும் பியானோவின் உன்னத தேவ இசை இந்தப் பாடலை ஒரு எல்லையற்ற கனவுலகில்  நம்மை விட்டுவிடுகிறது. குமார் எப்படிப்பட்ட மிக உன்னதமான நேர்த்தியான இசையின் மீது தீரா காதல் கொண்டிருந்தார் என்பதை கோடிட்டு காட்ட இந்த ஒரு பாடலே போதுமென்று தோன்றுகிறது. ஆஹா அபாரம்! என்ற வார்த்தைகள் உங்களுக்குத் தோன்றாமல் இந்தப் பாடலை கேட்டுவிட்டீர்களேயானால் ஆச்சர்யம்தான். அதற்கு உங்களுக்கு சில வேடிக்கையான அல்லது முரண்பாடான இசை ரசனை வேண்டும். அல்லது இவரைத் தவிர வேறு யாரும் இனிமையான இசை அமைக்க முடியாது என்ற கிணற்றுத் தவளை மனோபாவம்   வேண்டும். இவைகள் இல்லாவிட்டால் இந்த இன்பத்தை சுவைக்க  எந்தத் தடங்கலுமில்லை.

    இவர்களைத் தாண்டி அஸ்வத்தாமா-(நான் கண்ட சொர்க்கம்),சி என் பாண்டுரங்கன்,கே எஸ் பாலகிருஷ்ணன், திவாகர், டி வி ராஜு-(கனிமுத்து பாப்பா),கோதண்டபாணி -(குழந்தையின் உள்ளம்), ஆர் பார்த்தசாரதி இன்னும் பலர் மக்களின் மறந்த பக்கங்களில்  இருக்கிறார்கள். குறிப்பாக திவாகர் என்னும் இசை அமைப்பாளர் 60, 70 களில்  பல படங்களில் பணிபுரிந்திருப்பதை அறிந்து  அவரைப்  பற்றிய தகவல்களை தேடத் துவங்கினேன். எங்கு தேடியும் எழுதக்கூடிய அளவுக்கு தகவல்கள் சிக்கவில்லை (ஒருவேளை என் தேடல் இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாம்.) என்பதால்  அவரை குறித்த செய்திகளை பதிவு செய்யமுடியவில்லை. விபரம் அறிந்தவர்கள் இந்த இடைவெளியை நிரப்பலாம், விரும்பினால்.

      70 களில் இருந்த இன்னும் சிலரைப் பற்றிய- முக்கியமாக சங்கர்-கணேஷ் இரட்டையர்கள்- தகவல்களை அலச வேண்டியிருப்பதால் நீண்டுவிட்ட இந்தப் பதிவை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வது அவசியம் என்றுணர்கிறேன். இறுதியாக சொல்வதற்கு ஒன்றுதான் உள்ளது.  பாடல்களின் எண்ணிக்கையையும்  அதன் வெற்றியையும்  அளவுகோலாக வைத்து ஒரு இசையமைப்பாளரின் சாதனையை வியக்கும் பக்குவமில்லாத மனப்போக்கு நம்மிடம் பலருக்கு இருக்கிறது. அது குற்றமில்லை. ஆனாலும் ஒரு கேள்வி   இங்கே அவசியப்படுகிறது.  ஒன்று பெற்றாலும் பத்து பெற்றாலும் ஒரு தாயின் அன்பில் மாற்றம் இருக்குமா ?

 

  அடுத்து : இசை விரும்பிகள் -XV - திறக்காத ஜன்னல்கள். (பகல் விண்மீன்கள் பகுதி இரண்டு )