ஒரே வானத்தில்தான் காகங்களும் பறக்கின்றன கழுகுகளும் பறக்கின்றன.
இது மிக சமீபத்தில் நிகழ்ந்தது. அண்மையில் ஒரு பகல் நேர பயணத்தின் பொழுது ஓட்டுனரின் விருப்பங்கள் பாடல்களாக ஒலித்துக்கொண்டிருந்தன. இது போன்ற பயணங்களில் பொதுவாக இளையராஜா பாடல்கள் இல்லாமலிருக்காது. கேட்கிறார்களோ இல்லையோ அது பாட்டுக்கு ஒலித்துக்கொண்டிருக்கும். ஆனால் இப்போது நான் கேட்டதோ பல கலவையான கானங்கள். சற்றும் தொடர்பின்றி, ஒரு குழந்தை வரைந்த ஓவியம் போல ஒலித்தன.
கலைடாஸ்க்கோப்பில் ஓவ்வொரு அசைவிலும் சட்டென வடிவங்கள் மாறுவது போல காக்கை சிறகினிலே நந்தலாலா, பின் பூவே செம்பூவே , பின்னர் ராஜ ராஜ சோழன் நான், பிறகு தெய்வம் தந்த வீடு என பாடல்களின் உருவங்கள் மாறின. ஒருவேளை ஜேசுதாஸ் பாடல்கள் கொண்ட இசைத் தொகுப்பாக இருக்கலாம் என்று நான் தீர்மானித்த கணத்தில் திடீரென வந்தது அந்தப் பாடல்.
காத்திருக்கும் சமயத்தில் வெடிக்காமல் நாம் கடந்துபோகும் போது அதிரடியாக திடுமென வெடிக்கும் தீபாவளி வெடி போல் சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா? பாடல் ஒலிக்கத்துவங்கியது. சரிதான் அரிதான ஏதோஒரு மர்மமான இசை வரிசை போல என்றெண்ணிக்கொண்டேன் நான். முதல் சரணம் முடியும் முன்னரே ஓட்டுநர் என் பக்கம் திரும்பாமலே பேசினார்: "உண்மை சார். எங்க போனாலும் நம்மூர் நம்மூர்தான் சார். அத அடிச்சுக்க முடியாது".
நான் "ஆம்" என்றேன். தமிழ்நாட்டை விட்டு வெகு தொலைவில் இருந்த அந்த வருடங்கள் என் எண்ணங்களில் அமிலங்களாக மிதந்தபடி இருந்தன. எனக்கு மட்டுமல்ல சொந்த ஊரைத் துறந்து சென்ற எல்லோருக்கும் இந்த எண்ணம் வராமல் இருப்பது சற்று இயலாத காரியம். அப்படி சொல்பவர்கள் செயற்கைத்தனம் மிகையாக கொண்டவர்களாக இருக்கலாம்.
புலம் பெயர்ந்த மக்கள் குறித்த பதிவு இது என்ற எண்ணம் உங்களுக்கு இப்போது ஏற்பட்டால் ஒரு சிறிய திருத்தம். இது இசை குறித்த எனது பார்வையின் மற்றொரு துளி.
இந்தியன் என்ற படத்தில் இயக்குனர் சங்கர் ஒரு நவீனத்தை அறிமுகம் செய்தார். அது ஒரே ஒரே பாடல் காட்சிக்கு வெளிநாடுகளுக்கு சென்று படமாக்குவது. டெலிபோன் மணிபோல் பாடல் காட்சி ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டது அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு விஷயம். அதன் பின்னர் இந்த ஒரு காட்சிக்கு மட்டும் ஸ்பெயின், மெக்சிகோ , சைனா செல்லும் நவீனம் தரை டிக்கட் ரேஞ்சுக்கு உருமாறிப்போனது.
ஆனால் எழுபது எண்பதுகளில் வெளிநாடுகளுக்கு சென்று படம் இயக்குவது மிக மிக அரிதான ஒன்று. படத்தை விளம்பரம் செய்வதற்கு இது ஒரு சங்கதியே போதுமானதாக இருந்த காலங்கள் உண்டு. இயக்குனர் ஸ்ரீதர் சிவந்த மண் படத்துக்கு வெளிநாடு சென்று படமாக்கியது தமிழ்த் திரை அதுவரை கண்டிராத புதுமை. அதன் பின்னர் உலகம் சுற்றும் வாலிபன் தமிழ்நாட்டில் ஒரு சூறாவளி போல சுழன்றடித்தது. பின்னர் நினைத்தாலே இனிக்கும், பிரியா போன்ற படங்கள் மேல்நாட்டு மோகத்தை இன்னும் அதிகமாக்கின.
மீண்டும் பயணத்திற்கு வருவோம்.
சொர்க்கமே என்றாலும் என்ற இந்தப் பாடல் ஊர விட்டு ஊரு வந்து என்ற 91ம் ஆண்டில் வந்த படத்தில் இடம்பெற்ற மிகப் பிரபலமான பாடல். இது ஒலிக்காத தென்மாவட்ட பஸ் பயணங்களே அதிகமாக இருக்க முடியாது. மிகவும் எளிமையான வரிகள், அதே எளிமையான மெட்டு, வெகு சாதாரணமான இசை, இயல்பான குரல் என்ற இளையராஜாவின் முத்திரை சற்றும் பிசகிப் போகாத பாடல்களில் இதுவும் ஒன்று. கேட்கும் பலர் ஆஹா என்று சிலாகிக்கும் பாடல்.
பாடல் முடியும் முன் ஓட்டுநர் மீண்டும் என்னிடம் பேசினார்: "நானும் மலேசியா சிங்கப்பூர் போனவன்தான் சார். அங்கெல்லாம் பணம் மட்டும் வரும்." நிறுத்தினார் பேச்சை. இன்னும் எதையோ வெளிப்படுத்த நினைப்பதை போல இருந்தது அந்த இடைவெளி. "இப்ப சொந்த ஊர்ல இருக்கறது நிம்மதியா இருக்கு. என்ன, இப்ப என்கிட்டே அந்த அளவுக்கு பணம் இல்ல. அதான் ஒரே பிரச்சினை".
அவர் சொன்னது சுய மண்ணை துறந்து அயல் நாட்டில் பணி செய்யும் பலரது இதயத்தின் துடிப்பு. என் இதயத்திலும் இதே துடிப்பு ஒரு காலத்தில் இருந்தது. அதைப் பற்றி எழுத நினைத்தாலும் தற்போது எனது சுய சரிதை அவசியமில்லை என்பதால் ஒரு முற்றுப் புள்ளி. இருந்தும் உலகம் குறித்த நமது பார்வை அகலமடைய வேண்டுமானால் நாம் சில அகண்ட அடிகள் எடுத்து வைக்க ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று மட்டும் சொல்ல விருப்பம்.
சொர்க்கமே என்றாலும் என்ற பாடல் என்னை மற்றொரு பாடல் குறித்து சிந்திக்க வைத்தது. அந்த மற்றொரு பாடல் வேறு வகை. இரண்டுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இரண்டும் இரு துருவங்களைச் சேர்ந்த பாடல்கள். Opposite poles attract என்ற விஞ்ஞான விதியின் படி அந்த முரண் ஒன்றே இவ்விரு கானங்களையும் ஒன்றிணைக்கிறது.
முதல் பாடலை குறித்து பேசியாயிற்று. அந்த இரண்டாம் பாடல் இதுதான். அது 1979இல் வெளிவந்த நினைத்தாலே இனிக்கும் படத்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர்.
உலக அன்பின் எல்லைகளற்ற மகிழ்ச்சி பாடலின் ஒவ்வொரு வரியிலும், இசை இழையிழும் ஆர்ப்பாட்டமிலாது வெளிப்படும் ஒரு மறக்க முடியாத மகிமை இந்தப் பாடல். எம் எஸ் வியின் மெட்டுக்கள் குறித்து எழுத ஆரம்பித்தால், எனக்கு ஒரு பதிவு தேவைப்படும். அவரது மெட்டும், இசையமைப்பும் என்னை இன்னும் ஆச்சர்யத்தில் ஆழ ஆழ அழுத்தும் ஒரு அபூர்வம்.
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா,
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்ற இந்த இரண்டு பாடல்களுக்கு இடையே நான் எந்த இணைக்கோடையும் வரையவில்லை. ஒன்று நம் வீடே உலகம் என்ற சிந்தனையின் குழந்தைத்தனமான குதூகலம். மற்றொன்று உலகமே நம் வீடு என்ற பிரபஞ்ச அன்பின் கோட்பாடுகளற்ற மேன்மையான பக்குவம். இரண்டில் ஒன்று கீழே ஒன்று மேலே என்ற முதிர்ச்சியற்ற விமர்சனத்தை நான் முன் வைக்கவில்லை. ஆனால் சற்றே யோசிக்க வைக்கிறது இவ்விரு பாடல்களின் பின்னே இருக்கும் அந்த "அன்பின் உலக தத்துவம்".
நட்சத்திரங்களை நம் காலடியில் தேங்கியிருக்கும் மழை நீரியிலும் பார்க்கலாம். அல்லது மேலே இரவு வானத்திலும் காணலாம்.