Thursday, 26 January 2017

கண்டேன் காமிக்ஸை

 
   தொடர்ந்து வருடாவருடம் என்றில்லாவிட்டாலும் மெட்றாஸில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு நான் புதியவனல்ல.   ஒரு சில முறைகள் சென்றிருக்கிறேன். அத்தகைய தருணங்களில் கைகளும் பைகளும் கொள்ளாமல்  நிறைய புத்தகங்கள் வாங்கியதாக நினைவில்லை. மூன்று வருடங்களுக்கு முன்பு ஏறக்குறைய நான்காயிரம் ரூபாய்க்கு பதினெட்டு ரஷ்ய இலக்கியங்கள் வாங்கியதுதான் ஒரே நேரத்தில் நான் புத்தகங்களுக்காக செலவு செய்ததின்  உச்சம் என தோன்றுகிறது. மற்றபடி ஒரு விபத்து போல மனதில் தோன்றும்போது புத்தகங்கள் வாங்குவதோடு சரி. இது  நான் வாசிப்பதை நிறுத்திவிட்டேன் என்ற அர்த்தம் கிடையாது.

          வாசிப்பு ஒரு தியானம் போல என்பார்கள். அதிலும் இலக்கிய வாசிப்பு ஒரு காலால் நின்றுகொண்டு தியானம் செய்வதுபோல மகா சிரமமான காரியம். நானோ அத்தனை தூரம் வார்த்தைகளின்  உலகத்துக்குள் தற்போது செல்ல விரும்புவதில்லை.  ஜியாமெட்ரி கோடுகள் போல என் வாசிப்பு மிக மிக மெலிதாக  மாறிவிட்டது.  (மெல்லியதாக  என்றால் கூட ஒரு அழுத்தம் வந்துவிடுகிறது). அடர்த்தியான இலக்கியங்கள் எனக்கு இப்போது கொஞ்சம் அலர்ஜி கொடுக்கின்றன. பள்ளி, கல்லூரிக் காலங்களில் தேடித் தேடி படித்த தமிழ் மற்றும் பிற மொழி இலக்கியங்களின் வெட்டு  என் எழுத்தின் கூர்மையை தீர்மானித்தது என்னையறியாமல் நிகழ்ந்த ஒன்று. அத்துடன் நான் கடுமையான இலக்கியங்கள் பக்கம் நகர்வதை சற்று நிறுத்திக்கொண்டேன். ஆதலால் கதைகள் என்னும்  ஒரு தனி மனிதனின் கற்பனைகளில் எனது நேரம் செலவழிவது  படிப்படியாக குறைந்திருக்கிறது.

      இருந்தும் புத்தக வாசிப்பு இசை போல என்னில் உறைந்துபோன ஒரு இதயத் துடிப்பு.  கொஞ்சம் இசை கொஞ்சம் வாசிப்பு என்பதே என் வழக்கம். எனவேதான்.....  சென்றேன் புத்தகத் திருவிழாவுக்கு.

      இந்தமுறை செயின்ட் ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் வழக்கம் போல பரபரப்பு, சுறுசுறுப்பு, விறுவிறுப்பு இன்ன பிற இத்யாதிகளோடு வேகமாக இயங்கிக்கொண்டிருந்த புத்தக கண்காட்சிக்கு என் நண்பர் ஒருவரோடு செல்ல நேர்ந்தது. நண்பரோ நாளிதழ் தலைப்புச் செய்திகளை   தீவிரமாக வாசித்துவிட்டு ,"பேப்பர் படிச்சாச்சு" என்று ஏக பெருமையுடன் சொல்லும் இன்டர்நெட் யுக அதிநவீன வாசகர்களில் ஒருவர். 

       "ஒவ்வொரு கடையா போகப் போறிங்களா?" என்று திகிலோடு  கேட்டார் என்னை. அப்படியானால் நான்கு அல்லது ஐந்து மணிநேரம் ஆகலாம் என்பது அவர் கணக்கு. "இல்லை. ஒரே கடைதான்." என்றேன். "முத்துக் காமிக்ஸ். அங்கே மட்டும் போனால் போதும்."

        கடை எண் 625 (என்று நினைக்கிறேன்). தேடிப் பிடித்தாயிற்று. காமிக்ஸ் புத்தகங்கள் வரிசையாக வரவேற்க, அந்த சிறிய இடத்தில் நுழைந்ததும் எதோ கால எந்திரத்தில் ஏறியது போல தோன்றியது.  அங்கிருந்த மக்கள்  காமிக்ஸ் கதைகளுக்குள் தங்கள் பால்ய வயது உலகத்தை மீண்டும் கண்டுபிடித்துக்கொண்ட களிப்புடன்   தோன்றினார்கள். எல்லோரிடமும் ஒரு குழந்தைத்தனமான ஆர்வம், வேகம், கொஞ்சம் துள்ளல் தொற்றியிருந்தது.

        "Those good old days!" என்றார் என்னருகில் நின்றிருந்த யாரோ ஒருவர். பார்க்க எதோ ஒரு பிசினஸ் கான்பிரன்ஸை முடித்த கையேடு நேர சடாரென்று முத்துகாமிக்ஸ் கடைக்கு  வந்திருப்பவர் போல தோன்றினார். அவர் சொன்னதை ஆமோதிக்கும் விதமாக தலையசைத்துவிட்டு, என் தேடலில் இறங்கினேன். இதற்கிடையில் என் நண்பர் டெக்ஸ் வில்லர், மாய மனிதன் மார்ட்டின், மாடஸ்டி பிளைசி, ஸ்பைடர், லக்கி லுக் என்று தன் கையில் அகப்பட்டதையெல்லாம்   எனக்கு  சிபாரிசு செய்தார். நானோ கொஞ்சம் பழமை விரும்பி. என் காமிக்ஸ் விருப்பம் எண்பதுகளில் நான் படித்த கதைகளைத்  தாண்டி ஒரு அங்குலம் கூட வெளியே எட்டிப் பார்க்காது. நான் நேர கிளாசிக் மறுபதிப்புகளை நாடிச் சென்றேன். ஜானி & ஸ்டெல்லா , லாரன்ஸ் &டேவிட் பிறகு இரும்புக்கை மாயாவி புத்தகங்களில் என்னிடமிருந்து காலம் பறித்துச் சென்ற கதைகளை முத்துக்குளித்து எடுத்தேன்.  அப்போது என்னிடம் தென்பட்ட அதீத ஆனந்தம்  என் நண்பருக்கு வேடிக்கையாக இருந்திருக்க வேண்டும்.

      எட்டு புத்தகங்கள். என் தேடல் முற்றுப் பெற்றது. பணம் செலுத்தவேண்டிய இடத்தில் அந்த பண இயந்திரம் கொஞ்சம் தாறுமாறு செய்ய, கிடைத்த அவகாசத்தில் என்னால் அங்கே வந்த மற்றொரு காமிக்ஸ் விரும்பிக்கு ஒரு சிறு உதவி செய்ய முடிந்தது. அவர் கண்களில் தென்பட்ட உவகை அவர் கையைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்த அவரது நான்கு வயது மகளின் உற்சாகத்துக்கு இணையாக இருந்தது.

        புத்தக கண்காட்சி என்பது பல லட்சக் கணக்கான மக்கள் வந்துபோகும் இடம் என்றாலும் இதில் ஒரு குறிப்பிட்ட வகையினர் தங்களை மற்றவர்களிடமிருந்து தனியே பிரித்து வைத்துப் பார்க்கும் ஒரு ஆணவத்தின்  மனித வெளிப்பாடாக எனக்கு தோன்றுவதுண்டு. ஏதோ  ஒரு ஐந்து நட்சத்திர உணவு விடுதிக்குள் இருப்பது  போன்ற அணுகுமுறையை அவர்களிடம் காணலாம். யாரும் யாருடனும் ஆத்மார்த்தமாக பேசிக்கொள்ள விருப்பம் கொள்ள மாட்டார்கள். "நான் ---- படிக்கிறேன். நீ வெறும்  --- படிக்கிறாய். உன்னை விட  நான் பெரிய ஆள்."  என்ற எண்ணம் பலரது முகத்தில் படிந்திருப்பதை நானே பலமுறை கண்டிருக்கிறேன். அங்கே யாருமே தங்களுக்குப் பிடித்ததை  மற்றவர்களுக்கு இதை படியுங்கள் என்று சிபாரிசு செய்வதை நான் அறிந்ததேயில்லை.  ஒருவிதமான மேல்தட்டு மனோபாவம் அவர்களின் முகத்தில் துவங்கி கைவிரல்கள் வரை பாய்வதைப்  பார்க்கலாம்.

   தங்களை பிறரிடமிருந்து தனிமைப்படுத்திக்கொள்ளும் வசதியை தந்தருளும் "மாபெரும்" இலக்கிய மாந்தர்களின் கதைகளை  விற்பனை செய்யும் கடைகளுக்கு மத்தியில் காமிக்ஸ் கடை ஒரு வினோத அழகாகத்  தெரிகிறது. அங்கே செயற்கையான பெருமிதங்களோ, அறிவு ஜீவித்தனமான அலட்டல்களோ, "என் லெவெலே  வேற" என்ற ஆணவத்தை குறியீடாக  உணர்த்தும் உடலசைவுகளோ, இன்னபிற பம்மாத்து பகட்டுகளோ இல்லாமல்  அந்த இடம் யதார்த்தமான மகிழ்ச்சியும், குழந்தைத்தனமான குதூகலமும், இயல்பான அன்னியோன்யமும்,  தொலைந்துபோன பால்யத்தின் வசீகரத்தை மறுபடியும் வசப்படுத்திக்கொண்ட சந்தோஷமும் ஒரு சேர இழையோடும் ஒரு மகிழ்ச்சித் தோட்டம் போல தோன்றுகிறது.

       நாமெல்லாம் ஒரே இனம் என்ற அந்த காமிக்ஸ் பிணைப்பு மட்டுமே அதை சாத்தியப்படுத்துகிறது.

         காமிக்ஸ் கதைகள் தொலைந்து போன நாட்களின் ஏகாந்த எச்சங்கள்.  அந்த நாட்களின் மகிழ்ச்சியின் மிச்சங்கள்.


       

                                   (ஜானி நீரோவின் காணாமல் போன கைதி )
           

Wednesday, 18 January 2017

ஒரு பண்பாட்டின் மிச்சம்.

   ஜல்லிக்கட்டு மிருக வதையா, வீர விளையாட்டா என்ற விவாதங்களைத் தாண்டி  யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஒரு இளைஞர் போராட்டம் இன்று எழுந்து நிற்கிறது. இதன் போக்கு என்னவாக மாறும், எந்த இலக்கில் இது முற்றுப் பெறும் என்பது இப்போது சற்று புலப்படாமல் புகை போல தோன்றினாலும், ஒரு இனத்தின் அடையாளத்தின் மீது  அரசியலும் அந்நியர்களும் கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாம் என்று நினைத்தால் அவர்கள்  சில அதிர்ச்சியான உண்மைகளுக்கும் எதிர்வினைகளுக்கும்  தயாராகவேண்டியதுதான். 

       என்னைக் கேட்டார்கள் சிலர்; "நீ எந்தப் பக்கம்? ஜல்லிக்கட்டா அல்லது பீட்டாவா?"

       "எப்போதுமே ஒரே பக்கம்தான்". என்றேன் நான். 

     ஒரு பண்பாட்டின் மிச்சத்தை  காப்பாற்றியாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் யாருக்கும் நான் சொன்ன ஒரே பக்கம் என்ன என்பது புரியும்.