Saturday, 9 November 2013

இசை விரும்பிகள் XII- எழுந்த இசை

        
     
    வீழ்ச்சியும் எழுச்சியும் மாற்றமுடியாத  விதிகள் என்னும் வாழ்கையின் யதார்த்தை கடலலைகள் வெகு இயல்பாக நமக்கு உணர்த்துகின்றன.மனித வாழ்கையின் எல்லா அம்சங்களோடும் இதை நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதன்படி பார்த்தால் நாம் அனுபவித்துக் கேட்கும் இசையும் இப்படிப்பட்டதே என்பதை நாம் உணரலாம். தமிழிசையில்  மகத்தான பல இசை மேதைகளின் காலங்கள் எழுந்து ஓய்ந்து அடங்கிய பின் மிகப் பெரிய பேரலையாக நம்  திரையில் எழுந்தவர்தான் இளையராஜா. அவரது அலை பாய்ந்த தொலைவு மிக அதிகம். தமிழ்த்திரையில்  தனி ராஜாங்கம் செய்துவந்த இளையராஜாவின் இசை பல உயரங்களை எட்டிவிட்ட பிறகு  பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்  இயற்கையின் கோட்பாடுகளுக்கேற்ப சரிவை சந்தித்து  வீழ்ச்சியடைந்தந்து. (வணிகம், தரம் என்ற இரண்டு ஆதார அம்சங்களும் இதில் அடக்கம்.) ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. "What goes up must come down". இதை புரிந்து கொள்ள எந்த விதமான சிறப்பான அறிவும் நமக்குத் தேவையில்லை. ஆனால் இதை மறுப்பதற்கு கண்டிப்பாக   தனி மனித ஆராதனை,  நடந்ததை இல்லை  என்று மறுக்கும் முரண்பாடான சிந்தனை,  தான் நம்புவதுதான்  உண்மை என்ற  ஆணவம் போன்ற ஒழுங்கற்ற நம்பிக்கைகள்  அவசியப்படுகின்றன. இவ்விதமான ஆரோக்கியமற்ற அணுகுமுறைகள்   எவ்வகையிலும்     சில  உண்மைகளை மாற்றிவிட முடியாது.

           எழுந்த இசை 


     ரஹ்மான் பற்றிய தொடர் பதிவாக இதை நான் எழுதுவதன் நோக்கம் எந்த விதமான இசை ஒப்பீடுகளை முன்வைக்கவும் , யார் பெரியவர் என்ற மலிவான ஒரு முதிர்ச்சியற்ற  கருத்தை நிலை நிறுத்தவும் அல்ல. நம்முடைய இசை மரபில் தொடர்ச்சியாக வந்த இசையின் பன்முகத் தன்மை எவ்வாறு மாறிக்கொண்டிருக்கிறது என்பதை பதிவு செய்வதும் மேலும் இன்று பலராலும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இளையராஜா மற்றும் ரஹ்மான் போன்றவர்கள் இத்தனை வசதியாக தங்கள் பாதைகளில் பயணிப்பதற்கு நம் பழைய இசை மேதைகள் எவ்வாறு கடுமையான காலகட்டங்களில் நம் தமிழிசையை எடுத்துச் சென்றிருக்கிறார்கள், கரடு முரடான வழியில்லா இடங்களில் தங்கள் இசை மேதமைகளால் சாலைகள் அமைத்தார்கள் என்பதை நினைவூட்டுவதுமே என் எழுத்தின் பின்னணி. இதை ரஹ்மான் The Times Of India நாளிதழின் பேட்டி ஒன்றில் (அக்டோபர் 13,2013) வெகு அடக்கமாக தனக்கே உரிய பணிவுடன் "எங்களைப் போன்றவர்கள் நடப்பதற்கு  ஏதுவாக பாதைகள் அமைத்த பல இசை மேதைகளை இந்தியா  நமக்கு அளித்துள்ளது." என்று குறிப்பிட்டுள்ளார். இந்த உண்மையை உணர்வதோடல்லாமல் அதை பொதுவில் வாய்மொழியாக அறிவிக்கும் முதிர்ச்சி ரஹ்மானிடம் இருப்பது பாராட்டப்படவேண்டியது.

     ரஹ்மானின் இசையில் காணப்படும் புதிய ஒலியமைப்பு, வார்த்தைகளை தேர்ந்தெடுப்பதில் அவர் காட்டும் கவனம் (இதையும் தாண்டி சில சமயங்களில் தரமிழந்த  பாடல்கள் அவரது இசையில் வருவதை மறுக்கமுடியாது), இசையை அடுத்த தளத்திற்கு நகர்த்த அவர் எடுத்துக்கொள்ளும் முயற்சி, உலக இசையின் கூறுகளை அதன் படிமங்கள் சிதையாமல் தமிழுக்கு கடத்தும் நளினம் போன்றவைகள் அவரின் வெற்றியின் பின்னே இருக்கும் சில காரணிகள். ஆங்கில இசையை பிரதி எடுப்பவர் என்று குற்றம் சுமத்தி ரஹ்மானை தள்ளிவிடுவது ஒரு தலைமுறையின் இசை தேர்வையே அவமதிக்கும் செயல் என்று நான் கருதுகிறேன். அவ்வாறு செய்வதின் மூலம் அவரின் விமர்சகர்கள் அவரைப் பற்றிய விவாதங்களிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் சுலபமான தந்திரத்தின் பின்னே ஒளிந்து கொள்கிறார்கள். ரஹ்மான் காலத்தில்தான் நம் இசை தரமிழந்தது என்று சொல்வதும் இதே தப்பிக்கும் முயற்சியே. உண்மையில் ரஹ்மான் வீழ்ந்துவிட்ட நம் தமிழிசையை தன்னால் இயன்ற  அளவுக்கு எழுச்சியடைய பிரயத்தனம் செய்தார். காணாமல் போய்விட நல்ல கவிதையை அவர் கண்டெடுத்தார். தனிமனித துதி பாடும் நாலாந்தர பாடல்களை தூரத்தில் வைத்தார். இசை அமைப்பை அவருக்கு முன் இருந்த வடிவத்திலிருந்து மாற்றி அமைத்தார். இவரது பாதிப்பில்லாமல் இன்றைக்கு எந்த ஒரு இசைஞரும் இசை அமைக்கமுடியாத சூழலை உருவாக்கினார். பலவிதமான இசைஞர்கள் உள்ளே வரும்படியாக கதவுகளைத் திறந்தார்.

     ரஹ்மானின் வரவு ஒரு புதிய எழுச்சியை இனம் காட்டியது. அதே சமயம் எல்லாவற்றிலும் இருக்கும் இரண்டு பக்கம் என்ற விதி பல தரமில்லாத இசை அமைப்பாளர்களுக்கும் ஒரு திறந்த கதவாகவே இருந்தது. ஒருவேளை  இந்த சாத்தியக்கூறுகள் இல்லாமல் இருந்திருக்க வேண்டுமானால் ரஹ்மான் அதிகமான எண்ணிக்கையில் ஆரம்பத்தில் படங்களுக்கு இசை அமைத்திருக்கவேண்டும்.ஆனால்  ரஹ்மானோ வெகு கவனமாக படங்களைத் தேர்வு செய்பவர் என்று அறியப்படுபவர். ரோஜாவின் ராட்சத வெற்றிக்குப் பின்னர் கூட அவர் எல்லா பட வாய்ப்புக்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரின் இத்தகைய காலடியை கவனமாக வைத்து அளந்து நடக்கும் பாணி 92 க்குப்பிறகு தமிழ்த்திரையில்  ஒரு வெற்றிடத்தை உருவாக்கியது. ஏனென்றால் இளையராஜா என்ற மிகப் பெரிய ஆளுமையின் இசை பின்னடைவை அடைந்து சரிவை சந்தித்து விட்ட நிஜமும், ரஹ்மானால் இனம் கண்டுகொள்ளப்பட்ட புதிய இசைவடிவமும், அதை நோக்கியே தமிழ்த் திரையிசை நகர்ந்ததும் இங்கே பல புதியவர்கள் உதிக்க பின்புலம் அமைத்தது . ரஹ்மான் மற்ற வெற்றி பெற்ற இசைஞர்களைப் போல புயல் வேகத்தில் இசை அமைக்காமல் இருந்ததே இந்த சூழலுக்கு அடித்தளமிட்டது. (இதற்காக ரஹ்மானை குற்றம் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.) ரஹ்மானின் வெற்றியும் அவரின் நிதானமும் பல இசை அமைப்பாளர்களை நமக்கு அடையாளம் காட்டினாலும் அவர்களில் எல்லோருமே ஒரு புது இசை வடிவத்தை கொடுக்கக்கூடியவர்களாக இல்லை. 76 ரில் இளையராஜா கொண்டுவந்த  புதுமை, 92 இல் ரஹ்மானின் நவீனம் இரண்டுமே அவர்கள் இருவரோடு முடிந்து விட்ட  இசைப் புரட்சிகள். ரஹ்மானால் இளையராஜாவின் சாயல் இல்லாமல் இசை அமைக்க முடிந்ததைப் போல மற்றவர்களால் ரஹ்மான் நிழல் படாமல் பாடல்கள் அமைக்க இயலாதது அவரை ஒரு புதிய இசையுகத்தின் துவக்கப்புள்ளியாகவும், தூதுவராகவும்  மாற்றியிருக்கிறது. ரஹ்மானின் நிதானமான இசை அமைக்கும் போக்கைப் பற்றிப் பேசும் போது அதை அவரின் பலவீனமாக முன்வைக்கும் விவாதங்களும் உண்டு. உற்று நோக்கினால் இளையராஜாவின் வேகம் ரஹ்மானிடம் இல்லை என்பதை ஒரு குற்றச் சாட்டாக சிலர் வைப்பது கூட பக்குவமற்ற மனோபாவம் என்று தோன்றுகிறது. ஏன் ரஹ்மான் போன்ற  ஒரு புதிய இசைஞர் இளையராஜாவைப் போலவே பணியாற்ற வேண்டும்? அவரைப் போலவே பாடல்கள் அமைக்க வேண்டும்? அவரைப் போலவே செயல் படவேண்டும் ? இது ஒரு குழந்தைத்தனமான சிந்தனை என்பதைத்  தாண்டி இதில் ஆரோக்கியமாக விவாதம் செய்ய எதுவுமில்லை.


      95 ஆம்  ஆண்டில் வெளிவந்த படங்களிலேயே அதிகம் பேசப்பட்ட, விமர்சனம் செய்யப்பட்ட  படமாக இருந்தது மணிரத்தினத்தின் "பாம்பே". ரோஜாவின் இரண்டாம் பதிப்பாக இதை அவர் செய்ததாகக்கூட கருத்துக்கள் உண்டு. அவருடைய சிறந்த படங்களில் ஒன்றாக இப்போது இதை பலர் ஏற்றுக்கொண்டாலும் உண்மையில் இது பல முரண்பாடுகளையும் செயற்கைத்தனத்தையும் உள்ளடக்கிய மற்றுமொரு மணிரத்னதின் படைப்பு என்றே நான் எண்ணுகிறேன்.  ரஹ்மானின் இசை இந்தப் படத்தை இன்னும் அதிகம் பேச வைத்தது. பாடல்கள் பெற்ற மகத்தான வெற்றி ரஹ்மானை இந்தியாவின் எல்லா திசைகளுக்கும்  எடுத்துச் சென்றது. எங்கும் ரஹ்மான் இசையே  கேட்டது என்று சொல்வது மிகையில்லாத வாக்கியம். தமிழ் நாட்டை விட்டு ஆயிரம் மைல்கள் தாண்டி இருக்கும் ஒரு அந்நியப் பிரதேசத்தில் நீங்கள் திடீரென ஒரு தமிழ்ப் பாடலைக் கேட்க நேர்ந்தால் உங்களுக்கு ஏற்படும் உணர்வை எப்படி விவரிப்பீர்கள்? அதை போலியானது என்று மற்றவர்கள் சொன்னால் அதை எப்படி எதிர்கொள்வீர்கள்? ரஹ்மானின் கோடுகளை மீறிய வெற்றியை பொதுவாக அயல் தேசத்தில் இருக்கும் தமிழர்களின் மத்தியில் ஒலிக்கும் தமிழ்ப் பாடல்களோடு ஒப்பிட்டு இரண்டுக்கும் இடையில் காணப்படும் ஒற்றுமையை சுட்டிக்காட்டி முடிச்சு போடுவது முரண்பாடானது.. தமிழையே அறியாதவர்கள் அந்த மொழியின் பாடலை சிலாகித்துக் கேட்கும் நிகழ்வு ஒரு ஆச்சர்யமூட்டும் அனுபவம்.இது உங்களுக்கு நிகழ்ந்திருந்தால் மட்டுமே இதன் உண்மையை நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.

        ஒருமுறை அஸ்ஸாம் மாநிலத்தின் எல்லைக்கருகில் நான் பயணித்த பஸ் இளைப்பாறுதலுக்காக நின்று கொண்டிருந்த ஒரு இரவு நேரத்தில் அங்கேயிருந்த சாலையோர சிற்றுண்டிச் சாலையிலிருந்து ஹம்மா ஹம்மா என்று ரஹ்மான் பாடிக்கொண்டிருந்தார். அதை நான்  ரசித்துக்   கேட்டுக்கொண்டிருந்த வேளையில் அது பாம்பேவின் இந்திப் பதிப்பு என்றே எண்ணினேன். ஆனால் "அந்த அரபிக் கடலோரம்" என்று ரஹ்மான் தமிழில் பாடலைத் தொடர ஒரு கணம் திகைத்துப்போனேன். இந்தியாவின் எதோ ஒரு மூலையில்  எதோ ஒரு பெயரில்லாத உணவு விடுதியில் ஹிந்தியும், பெங்காலியும், அஸ்ஸாமீசும் பேசும் மக்களிடையே சற்றும் தொடர்பில்லாத தமிழ் சொற்கள் துள்ளிக் குதிப்பதைக் கேட்க அலாதியான இன்பமாக இருந்தது. ஒரு விதத்தில் சற்று பெருமையாகக் கூட இருந்ததை நான் அப்போது உணர்ந்தேன்.ரஹ்மானின் இசையில் இது போன்று எல்லைகளைத் தாண்டிய, மொழிகளின் தேவையற்ற இசையின் மகத்துவம் வீரியமாக சில சமயங்களில் வெளிப்படுவது அவருடைய ஆளுமையின் வெற்றிக்கு மிகச் சிறந்த உதாரணம். ரஹ்மான் தன் இசையின் பரிமாணங்களை நேர்த்தியாக வடிவமைத்து வழக்கமான வண்ணங்களிலிருந்து வேறுபட்ட ஒரு  நிறத்தை தன் பாடல்களின் மீது அள்ளித் தெளித்து  அதுவரை நம் காதுகள் கேட்காத தமிழிசையை அளித்தார். (இதை ஒரு அலங்காரமான இசை என்றும் நம் தமிழ் கூறுகளோடு சேராத இசை என்றும் காரணம் சொல்லி  புறம் தள்ளிவிடும் போக்கு பலரிடம் காணப்படுகிறது.) அவரது இசை வெறும் தமிழிசையாக மட்டும் இல்லாமல் பல பண்பாடுகளின் படிவங்களை தனக்குள்ளே சேமித்து வைத்திருக்கும் இசை அடுக்குகளாக இருப்பதால்   மட்டுமே இத்தகைய ஹிமாலய வெற்றி சாத்தியப்பட்டிருக்கிறது.

     பாம்பே படத்தின் கண்ணாளனே, குச்சி குச்சி ராக்கம்மா போன்ற பாடல்களின் வீச்சும் வெற்றியும் ரஹ்மானை 90 களின் இசை எழுச்சியாகவே உருவாக்கின. அந்தப் படத்தின் முகமாக இன்று கொண்டாடப்படும் ஹரிஹரனின் மெழுகுக் குரலில் வந்த உயிரே  மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டப் பாடல். அதிக இசை ஓசைகளோ சப்தங்களோ இல்லாமல் வாத்தியங்கள் சற்று குரலுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்க பாடல் முழுவதும் மனித குரல்கள் அபாரமான கவிதையை மனதுள்ளே பாய்ச்சியபடி முன்சென்று காதலில் துயரத்தை வலியோடு உணர்த்தி சோக கீதங்களே உலகின் சிறந்த கானங்கள் என்ற உண்மையை மற்றொரு முறை நிரூபித்தது. படத்தின் பொருள் இசை (theme music) பரவலாக விமர்சிக்கப்பட்டது. ரஹ்மான் இந்த காலகட்டத்தில் அசைக்க முடியாத இசைசக்தியாக உருமாறிக்கொன்டிருந்தார்.

    பாம்பேவைத் தொடர்ந்து வந்த  இந்திரா படத்தின் நிலா காய்கிறது ரஹ்மானிடம் இருந்த சாஸ்திரிய சங்கீத உணர்வை வெகு அழகாக கொண்டுவந்தது. சிலர் அவர் தன்னையே சுய விமர்சனம் செய்துகொள்வதாக ஏளனம் செய்ய ஏதுவாக  பாடல் வரிகளில் இருக்கும் தன்னிரக்கம் ஒரு ஐரனி (Irony) போல கேட்பவர்களின் ரசனையை கூர்மையாக்கி விடுகிறது. சொல்லப்போனால் செதுக்கப்பட்ட பாடல் என்று தாராளமாக சான்றிதழ் வழங்கக்கூடிய தரமான நல்லிசை. ஓடக்கார மாரிமுத்து பகடிப் பாடல் வகையைச் சார்ந்த ஆனால் அதுவரை கேட்காத விதத்தில் அமைக்கப்பட்டிருந்தது  என்று சொல்லலாம். இனி அச்சம் அச்சம் இல்லை மிக சிறப்பான கவிதையை உள்ளடக்கிய ஒரு வீரமான கானம். பல பள்ளிகளில் இந்தப் பாடல் போட்டிகளில் இடம் பெறத் தவறுவதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். (நம்மவர் படத்தின் சுத்தம் என்பது நமக்கு  என்ற பாடலும் அப்படியே). பகட்டான மின்விளக்குகளைவிட  சமயங்களில் மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சம் நம் மனதை   கொள்ளையடிப்பதுண்டு. அப்படியான ஒரு பாடலே தொடத் தொட  மலர்ந்ததென்ன. நம்மை முழுவதும் வியாபித்து  ஒரு ஆனந்த உணர்வை தூவிச் செல்லும் இசைகோர்ப்பு இந்தப் பாடலில் இருப்பதை நாம் உணரலாம். ரஹ்மானை சாடுபவர்கள் அவர் பாடலில் இசையின் ஆதிக்கம் மூச்சை அழுத்துவதாக இருப்பதாக குற்றம் சாட்டுபவர்கள் அவரின் இது போன்ற  நல்லிசைகளை அங்கீகாரம் செய்யாமல் பாராமுகம் காட்டுவது உண்மையிலேயே ஒருதலைப் பட்சமானது.

   தமிழின் இரண்டு பெரிய ஆளுமைகளுக்கு  ரஹ்மான் முதல் முறையாக இசை அமைத்த முத்து மற்றும் இந்தியன்  படங்கள்  இதன் பின் வெளிவந்தன. ஆரம்பத்தில் முத்து படப்  பாடல்கள் சிறப்பாக இல்லை என்று ரஜினி ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்தாலும் இன்றுவரை ரஜினிகாந்திற்கு  பெரிய அறிமுகப்பாடலாக இருப்பது முத்து படத்தின் ஒருவன் ஒருவன் முதலாளி என்ற பாடலே. சொல்லப்போனால் இளையராஜா ரஜினிக்கு பல அருமையான பாடல்களை அமைத்திருந்தாலும் தேவாவின் அன்னாமாலை பட அறிமுக இசையும்  ரஹ்மானின் முத்து படப் பாடலும் இன்றுவரை  நிலைத்து நிற்கின்றன.  முத்து படத்தின் பாடல்கள்  ஆரம்பத்தில் ரஜினி ரசிகர்களிடத்தில் அவ்வளவாக போய்ச் சேராமல் அதன் பின் வரவேற்பைப் பெற்றன. இந்தியனில் ரஹ்மான் இசை அமைத்த எல்லா பாடல்களும் பெரிய வெற்றி பெற்றன. (கமலஹாசன் ரஹ்மானை அவ்வளவாக விரும்பாதவர் என்று நம்பப்படுபவர். Reasons best kept secrets.) டெலிபோன் மணிபோல் (இதில் Ace Of Base என்ற ஆங்கில இசைக்குழுவினரின் All That She Wants பாடலின் ரிதம் மற்றும் தாளத்தை ரஹ்மான் பயன்படுத்தியிருப்பார். பொதுவாக ரஹ்மான் இதுபோன்ற அதிரும் தாளங்களை தமிழுக்கு நகல் எடுப்பதை முழு காப்பி என்று நாம் கூறிவிடமுடியாது.),பச்சைக் கிளிகள்,மாயா மச்சீந்திரா,தடா போன்ற இந்தியனின் பாடல்கள் அதிரடியாக வெற்றிபெற்றன.


     இதன் பின் ரஹ்மான் இசையில் வந்த சில படங்களைப் பார்ப்போம்.கீழே நான் பட்டியலிடும் படங்களின் பாடல்கள் எல்லாமே சிறப்பானவையோ அல்லது என் விருப்பத்திற்குரியவைகளோ அல்ல. ரஹ்மானின் இசையின் பரிமாணங்கள் எவ்வாறு வேறுபட்டு (சில சமயங்களில் நல்லிசையாகவும், சில சமயங்களில் வெகு சாதாரணமகவும்) ஒலித்தன என்பதை நாம் நினைவு கொள்வதற்காகவே இவற்றை எழுதுகிறேன்.

லவ் பேர்ட்ஸ்- படத்தின் ஒரே கேட்கக்கூடிய பாடல் மலர்களே. நோ ப்ராப்ளம் துடிப்பான இசையாக இருந்ததே அன்றி வேறு எந்த வகையிலும் மனதை தொடவில்லை.

  காதல் தேசம்- ரஹ்மானின்  அதிரடி இசையின் நீட்சி. எனைக் காணவில்லையே மிக ரம்மியமான பாடல். எனிக்மா என்ற ஜெர்மானிய இசை குழுவின் (Michael Cretu  என்பவரின் மூளைக் குழந்தை) மிக பிரபலமான வசீகரப்படுத்தும் போதையேற்றும் தாளத்தை ரஹ்மான் இந்தப் பாடலில் பயன் படுத்தியிருந்தார்.  இந்தப்  பாடல் கேட்ட எல்லோரையும் கொஞ்சம் அசைத்தது என்றே சொல்லலாம்.ரஹ்மானின் அடுத்தடுத்த அதிரடி இசைக்கு முன் தமிழில் எந்த இசைஞரும் போட்டிபோட முடியவில்லை.ரகே இசை எவ்வாறு தமிழில் அதன் அழகு கெடாமல் உருமாற்றம் அடைய முடியும் என்ற கேள்விக்கு விடையாக இருந்தது முஸ்தபா பாடல். கல்லூரிச் சாலை, ஹலோ டாக்டர் இரண்டும் இரைச்சலிசை. இதற்கு மாற்றாக வெண்ணிலா, தென்றலே பாடல்கள்  ஒரு தாலாட்டின் சுகத்தைக் கொண்டிருந்தன.


   மிஸ்டர் ரோமியோ- மெல்லிசை என்ற பாடல் மட்டுமே சற்று சகித்துக்கொள்ளக்கூடியது. மற்ற எல்லாமே வெற்று ஓசைகள்.


    மின்சார கனவு- ரஹ்மானின் நல்லிசை மழையெனப் பெய்தது இந்தப் படத்தின் பாடல்களில். வெண்ணிலவே சந்தேகமில்லாமல் கொண்டாடப்படவேண்டிய  கவிதை கொண்டு ரீங்காரமிடும் ஹரிஹரனின் குரலில் உறுத்தாத தாலாட்டும் இசைக்  கோர்ப்பில்  முனுமுனுக்கவைக்கும் மெலடியில்    நேர்த்தியாக அமைக்கப்பட்டு  சிறப்பாக  புடமிடப்பட்ட   பொன்னிலாவாக ஒளிர்ந்த பாடல். பூ பூக்கும் ஓசை துளிர்ப்பான மலரின் நறுமணத்தை வீசியது. ஊ ல ல லா பல இசை வண்ணங்களின் கலவையாக வானவில்லின் அழகை காதுகளுக்கு மொழிபெயர்த்தது.இப்பாடலில்  ரஹ்மானின் டப்பாங்குத்து இசை வேறு பரிமாணத்தில் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்ததை கொஞ்சம் கவனித்தோமானால் புரிந்து கொள்ளலாம். ஸ்ட்ராபெரி கண்ணே தமிழ் வார்த்தைகளை கொண்ட ஆங்கிலப் பாடல் .எஸ் பி பி யின் இளமை இழக்காத குரலில் தோன்றிய  தங்கத் தாமரை மலரே கண்டிப்பாக மிக வித்தியாசமாக உருவாக்கப்பட்ட அற்புதப் பாடல். (இந்தப் பாடலை கேட்கும் போது எனக்கு ஏனோ தென்றலே என்னைத் தொடு பட  புதிய பூவிது பாடல்  நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.)  இறுதிவரை தாளம் தப்பாமல் இணைந்து வந்து பாடலை மெருகேற்றி கேட்பதற்கு அலாதியான சுகத்தை தந்துவிடுகிறது. இறுதியாக இசைக் கருவிகள் குறைவாக ஒலிக்க அனுராதா ஸ்ரீராம் குரலில் வைரமுத்துவின் அனாசயமான கவிதை வரிகளில் பிண்ணிய அன்பென்ற மழையிலே ஒரு சுகமான ராகம். மாலை நேரத்து  மடங்கும் சூரியனின் அழகை இந்தப் பாடல் தருகிறது.மின்சார கனவின் இசை ரஹ்மானின் ஆளுமைக்கு இன்னொரு வெற்றிச் சான்றிதழ் என எடுத்துக்கொள்ளலாம்.

     ரட்சகன்- அதிகம் கேட்கப்படாத போகும் வழியெல்லாம் பாடல் மிகவும் சிறப்பானது.நெஞ்சே நெஞ்சே, சந்திரனை தொட்டது யார் பாடல்களும் கேட்க ரம்மியமானவை. வழக்கம் போல் ரஹ்மானின் துடிக்கும் இசையாக வந்த  சோனியா, லக்கி லக்கி பாடல்களை விலக்கி வைத்து விடலாம்.

   ஜீன்ஸ்- அதிசயம்(பூவுக்குள் ஒளிந்திருக்கும் பாட்டின் வரிகளை கேட்டுவிட்டு ஒரு நண்பன் அட வைரமுத்து நல்லா கவிதை எழுதுராறப்பா என்று பாராட்டியதை கேட்டு நான் திகைத்தே போனேன்) பாடல் உடனடியாக பிரபலம் ஆனது. ஹைரப்பா, கண்ணோடு காண்பதெல்லாம், வாராயோ போன்ற சுவையில்லாத பாடல்களும் பெருவெற்றி பெற்றன. ரஹ்மானின் மேற்கத்திய பாணி இளையராஜாவின் சலிப்பூட்டும் சுவட்டை கொஞ்சமும் ஒத்திராமல்   துடிப்பாக ஒலிப்பவை.  கொலம்பஸ் பாடல் ஒரு ரஹ்மான் வகை அதிரடி.பாடல் முடிந்ததும் ஒரு பெரு மழை ஓய்ந்ததைப் போல உணரும்படியான துடிக்கும் இசை.  அன்பே அன்பே என்ற பாடல் கேட்கக்கூடிய வகையில்  இருப்பதாக தோன்றுகிறது.


     என் சுவாசக் காற்றே-பொதுவாக சிறப்பாக அமைந்த பாடல்கள் எல்லாம் வெற்றி பெறுவதில்லை. அந்த அபத்தமான நிஜம் இந்தப் படத்தின் பாடல்களுக்கு நிகழ்ந்தது ஒரு வேதனை. ஜும்பலக்கா என்ற ரஹ்மான் பிராண்ட் பாடலை தள்ளி வைத்துவிட்டால் மற்ற எல்லா பாடல்களும் வெகு நேர்த்தியாக செதுக்கப்பட்ட சிலை போன்றவை. சின்ன சின்ன மழைத் துளிகள், தீண்டாய் (அபாரமான இசைக் கோர்ப்பை கொண்ட பாடல்), திறக்காத காடு, என் சுவாசக் காற்றே என்ற அனைத்து பாடல்களும் தேன் சுவையாக தித்தித்தன. இந்தப்  படத்தில் ரஹ்மானின் பாரபடச்சமில்லாத நல்லிசை பெரிதும் கவனத்தை ஈர்க்காமல் நீர்த்துப் போனது ஒரு துயரம்.

      படையப்பா- கிக்கு ஏறுதே ( என்ன ஒரு தங்கத் தமிழ்!) பாடலை  மட்டுமே சற்று ரசிக்கலாம். மற்றவை அலுப்பூட்டும் வெகு சராசரிப் பாடல்கள்.

      காதலர் தினம்- தமிழ்த் திரையுலகில் மூன்று பேருக்கு ரஹ்மான் அதிக சிரத்தையுடன் இசை அமைப்பதாக பலர்  சொல்வதுண்டு. மணிரத்னம், ஷங்கர், பிறகு அதிகம் பேசப்பாடாத கதிர். என்ன விலை அழகே (சிலர் இந்தப் பாடல் எம் எஸ் வியின் தங்கப் பதக்கத்தின் மேலே பாடலின் காப்பி என்று சொல்கிறார்கள். முதல் வரி மட்டுமே ஜோடி சேருகிறது மற்றபடி இரண்டு பாடல்களும் வேறுவேறு பாதைகளில் செல்கின்றன) , காதலென்னும் தேர்வெழுதி , தாண்டியா, ரோஜா ரோஜா போன்ற பாடல்கள் ரசிக்கத் தகுந்த அளவில் இருந்தன. ஒ மரியா பாடலை மன்னித்துவிடலாம்.


      சங்கமம்- ரஹ்மான் முதல் முறையாக மிக சிறப்பாக நாட்டுபுற இசையை அமைத்தது  இங்கேதான். கிழக்குச் சீமையிலே படத்திலேயே இதை அவர் செய்திருந்தாலும் இந்தப் படத்தில்தான் அவரின் கிராமத்து இசை பொலிவடைந்தது என்று தாராளமாகக் கூறலாம். வராக நதிக்கரையோரம்,சௌக்கியமா கண்ணே, மார்கழி திங்கள் போன்ற பாடல்கள் அவரிடம் இருந்த செவ்வியல் கலந்த நாட்டுப்புற இசை பரிமாணத்தை வெளிச்சம் காட்டியது. உயிர்ப்பான பாடலாக வெடித்த மழைத்துளி திடுக்கிட வைத்த அற்புதம்.  எம் எஸ் வி யின் குரலில் கேட்பவர்  மனதில் பூகம்பத்தை உண்டாக்கும்  ஆளான கண்டா  ஒரு வைரம் போல  ஒளிர்ந்தது. வெடிகுண்டாக அதிர்ந்தது. எம் எஸ் வி கேற்ற ஒரு அசாதாரண கானத்தை தேர்ந்தெடுத்து அவர் குரலுக்கேற்ற தளத்தில் அவரை அற்புதமாக பாட வைத்து   ரஹ்மான் அவரை மேலும் சிறப்பித்துவிட்டார் என்றே சொல்லலாம். சந்தேகமில்லாமல் சங்கமம் ரஹ்மானின் இசைப் பயணத்தில் ஒரு அழிக்க முடியாத தங்கச் சுவடு.


    முதல்வன்-  ரஹ்மான் இந்தப் படத்தில் அமைத்த பாடல்கள் பெருத்த வரவேற்பைப் பெற்றன. முதல்வனே ஒரு சரவெடி போன்று சரசரத்தது. குறுக்கு சிறுத்தவளே நாட்டுபுற தாளத்தோடு பீறிட்டுக் கிளம்பியது என்றால் உப்பு கருவாடு ராட்சத ஆட்டம் போட்டது. அழகான ராட்சசியே மெல்லிசை கலந்த அற்புதமான கானம். இந்தப் பாடலை   ரஹ்மான் அதிகம் தொடப்படாத ரீதி கௌளை ராகத்தில் அமைக்க முடிவு செய்ததும் இதே ராகத்தில் இளையராஜா கவிக்குயில்  படத்தில் அற்புதமாக செதுக்கியிருந்த சின்னக் கண்ணன் அழைக்கிறான் பாடலின் சாயல் சற்றும் வராமலிருக்க தான் அதிக சிரமப் பட்டதாக சொல்லியிருப்பதை நினைவில் கொள்ளவேண்டும்.  இந்தப் பாடல் மட்டுமல்ல பொதுவாகவே ரஹ்மான் தன் இசை அமைப்பில் இளையராஜாவின் நிழல் படிவதை வெகு  கவனமாக தவிர்த்து விடுவதாலேயே அவர் இசை ஒரு புதிய தோற்றத்தை தருகிறது என்ற என்னுடைய தனிப்பட்ட கருத்தை இது உறுதி செய்வதைப்  போல இருக்கிறது. ஷக்கலக்க பேபி வழக்கமான குதூகல இசை. பாடல் முடிந்ததும் மறந்து விடுகிறது. இது போன்ற சற்று தரம் குறைந்த பாடல்களை ரசிக்கும் நாட்களை  நான்  கடந்து வந்து விட்டேன்.

   அலைபாயுதே- இந்தப் படத்தில் ரஹ்மான் இசை அடுத்த நிலையை அடைந்ததை சற்று உன்னிப்பாக அதன் பாடல்களைக் கேட்டால் நாம் உணரலாம்.பச்சை நிறமே தரமான கவிதை வரிகள் கொண்ட மனதை வருடும் பாடலாக இருந்தது. இதன் இசை கோர்ப்பும் வெகுவாக மாறுபட்டதாக இருந்ததை காணலாம். யாரோ யாரோடி, காதல் சடுகுடு இரண்டும் அதுவரை நாம் கேட்காத ரஹ்மானை நமக்கு அறிமுகப்படுத்தின. படத்தின் மிகப் பிரசித்தி பெற்ற சிநேகிதனே ஒரு தென்றல் காற்றின் ஆனந்தத்தை கொடுத்தது.எவனோ ஒருவன் ஒரு அற்புதமான ஆச்சர்யம். ஒரு நவீன துயர  இசை அனுபவத்தை அந்தப் பாடல் உள்ளடக்கியிருந்தது. என்றென்றும் புன்னகை அதிகம் ஆர்ப்பாட்டம்  இல்லாத மேற்கத்திய சாயல் பூசிக்கொண்ட நல்லிசை. (செப்டெம்பர் மாதம் என்ற பாடல் மட்டும் ஒரு தலைவலி.ஆஷாவின் குரலில் காணப்படும் கீச்சென்ற ஒலி எலியை நினைவுபடுத்துகிறது .)

       தாஜ்மகால்- ரஹ்மான் காணாமல் போய்விட்டாரோ என்று என்ன வைத்தது இதன் பாடல்கள். எப்படியென்றால் எழுதக்கூடிய அளவுக்கு ஒரு பாடல்கூட என் நினைவில் இல்லை.

    இன்னும் நான்கு படங்கள் பற்றி நாம்  பேச வேண்டும். அவை அனைத்தும் ரஹ்மானின் இசை சிகரத்தின் உச்சங்கள் என்று நான் எண்ணுகிறேன்.


     இருவர் (1997) -  ரஹ்மானின் மிக சிறப்பான வேறுபட்ட இசையை இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களிலும் நாம் கேட்கலாம். எலி என்று நான் வர்ணித்த அதே ஆஷாவின் தேன் மதுரக் குரலில் வந்த வெண்ணிலா ஒரு சுகம். நறுமுகையே பாடல் 50 களின் இசையை அப்படியே பிரதியெடுத்தது. ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி அதிக சலனங்கள் இல்லாத jazz இசையின் படிவங்களை தமிழில் வார்த்தெடுத்தப் பாடல். அதிகம் விரும்பப்படாத ஆனால் அருமையான கானம். சுசீலாவின் உறவினரான சந்தியா என்ற பாடகியின் அற்புதக் குரலில் ஒலித்த பூங்கொடியின் புன்னகை ஒரு இன்னிசை. காலத்தை பின்னோக்கிப் பார்க்க வைத்தப் பாடல் இது. ஆயிரத்தில் நான் ஒருவன் தமிழிசையின் பொற்காலத்தை மீண்டும் நினைவூட்டியது.  ரஹ்மான் இதற்காக அதிகமாக சிரத்தையுடன் உழைத்திருப்பதை நாம் பாராட்டியே ஆகவேண்டும். கண்ணைக் கட்டிக் கொள்ளாதே ராக் இசையின் நிழலில் வெளிவந்த பாடல். பாடலின் இணைப்பிசையில் அதிரும் லீட்  கிடாரின் கிளர்ச்சியூட்டும் இசை தமிழுக்குப் புதியது. இது போன்ற கிடார் இசை இளையராஜாவின் இசையில் சற்றும் நாம் கேட்டிராதது. சில சமயங்களில் இதைப் போன்ற தமிழுக்கு பொருந்தாத ஆங்கில ஓசைகள் ரஹ்மானை ஒரு அந்நியனாக முத்திரை குத்தி விடுகின்றன. இருந்தும் இவ்வாறான மாற்று இசை முயற்சிகள் தமிழில் தேவைப்படுவதை நாம் வரவேற்க வேண்டும். அரவிந்த சுவாமியின் ஆண்மைக் குரலில் வாத்தியங்கள் குறைவாக ஒலித்த உடல் மண்ணுக்கு, மற்றும் வைரமுத்துவின் மிக அபாரமான வரிகளைக் கொண்ட உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித் துளியும் பாடல்கள் ரஹ்மானிடம் இருக்கும் முதிர்ச்சியான இசை அறிவை அடையாளம் காட்டின. தமிழக அரசியல் தொடர்பான கதையை கொண்டிருந்ததால் இருவர் (மணிரத்தினத்தின் மிக சிறப்பான படம் என்று இதைக் கூறலாம்.) வெற்றியை சுவைக்கவில்லை. அதனால் இதன் அபாரமான பாடல்கள் பெரிதும் கவனத்தை கவராமல் போய்விட்டதாகவே தோன்றுகிறது. ஒரு படத்தின் வெற்றியை வைத்து இசையின் தரத்தை தீர்மானிக்கும் நம் ரசனை உண்மையில் பக்குவமற்றது என்று நான் நினைக்கிறேன்.


    உயிரே (1998) - மிக அபாரமாக இசைக்கப்பட்ட பாடல்கள் கொண்ட படம். உண்மையில் ரஹ்மான் சூபி இசையின் படிவங்களை தமிழின் வேர்களோடு பிணைத்து உள்ளதை இறுக்கும் இசையாக இதை அமைத்திருந்தார் என்று கூறலாம். குறிப்பாக என்னுயிரே பாடல் என்னை பிரமிக்க வைத்தது. இதில் மனதை துளைக்கும்  துயர  உணர்வை  வெகு அழகாக கோர்க்கப்பட்ட சுபி இசையுடன்  கலந்து  ஒரு சூனிய உலகத்திற்கு அழைத்துச் சென்றார் ரஹ்மான்.  படத்தின் ஆர்ப்பாட்டமான தையா தையா வெறும் அதிரடிப் பாடலாக மட்டும் இல்லாமல் தமிழில் நாமறியாத வடஇந்திய இசையின் கூறுகளை மிக ரம்மியமாக மொழிபெயர்த்திருந்தார். இந்தப் பாடலே ரஹ்மானுக்கு ஹாலிவுட்டின் கதவுகளை திறந்துவிட்டது.( Inside Man என்ற படத்தின் இறுதியில் சையா சையா என்று ஒலிப்பதைக் கேட்டதும் கொஞ்சம் எனக்குள் இனிப்பான மின்சாரம் பாய்ந்தது .) நெஞ்சினிலே பாடல் காமத்தை சுமந்து வந்த கீதம். கேரள பாரம்பரிய இசையை அதில் இணைத்து ரஹ்மான் அந்தப் பாடலை வேறு தளத்திற்கு உயர்த்தியிருப்பதை நாம் உணரலாம். தனிப்பட்ட விதத்தில் எனக்கு விருப்பமான பூங்காற்றிலே ஒரு மென்மையான கானம். எங்கேயும் சற்றும் அதிராத இசை அமைப்பு, வாத்தியங்கள் வார்த்தைகளை முந்திச் செல்லாத நளினம், கண்ணீரை சீண்டும் குரல் என  காதலின் பிரிவை மனதைப் பிழியும் உணர்வுடன்  பாடலின் அழகை சிதைக்காமல் ஒரு அனாசயமான அனுபவத்தை இந்தப் பாடல் கொடுத்தது. காலத்தை மீறிய கானமாக நான் நினைப்பது சந்தோஷக் கண்ணீரே என்ற பாடலைத்தான். கேட்ட முதல் முறையே இப்பாடல் என்னை உறையச் செய்தது. தமிழில் இப்படியான மிக நவீனமான இசை அமைப்பும் ஒரே கோட்டில் செல்லும் பாடலின் போக்கும் நான் அதுவரை கேட்டறியாதது. உண்மையில் இந்தப் பாடல் சினிமாவின் லட்சணங்களை  அணிந்துகொள்ளாத ஒரு தனி இசைத் தொகுப்பின் கூறுகளை கொண்ட மிக அருமையான பாடல். மேலும் இந்தப் பாடலின் அடிநாதமாக  வந்து தண்ணீர்க் குமிழிகள் போன்று ஒலிக்கும்  bass கிடார் இந்தப் பாடலை இன்னும் ரம்மியமாக மாற்றுகிறது. இதைப் பற்றி நான் ஆராய்ந்து கொண்டிருந்த போது  உலகின் புகழ் பெற்ற pink floyd (without Roger Waters) குழுவினரின் bassist Guy Pratt இதில் bass கிடார் இசைத்திருப்பதை அறிந்து வியப்புற்றேன். (Pink Floyd ஒரு தனிப் பதிவே எழுதக்கூடிய அளவு  மகா பெரிய ஆளுமையைக் கொண்ட இசைக்குழு.)


     கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000) - கண்ணாமூச்சி ஏனடா, ஸ்மையை(அப்படித்தான் நினைக்கிறேன்), கொஞ்சும் மைனாக்களே போன்ற பாடல்களை ஒதுக்கி விட்டு சற்று கவனித்தால் நமக்குக் கிடைப்பது நல் முத்துக்கள். எங்கே எனது கவிதை ஒரு ஆழமான சோக கீதம். மழைத் துளிகளை ரசிக்கும் சுக அனுபவத்தை இப்பாடல் கொண்டிருக்கிறது. கண்டுகொண்டேன் பாடல் அதன் இசைகோர்ப்பிலும், ஒலியிலும், அமைப்பிலும்  மற்ற பாடல்களை விட்டு வேறு தொனியில் இருக்கிறது. ஹரிஹரனின் அரவணைக்கும் மந்திரக் குரல் நம்மை சிந்தனை செய்யவிடாமல் கட்டிப் போட்டுவிடுகிறது. ஷங்கர் மகாதேவனின் பளிச்சிடும் குரலில் வந்த என்ன சொல்லப் போகிறாய் அதிர்வுகள் இல்லாத ஒரு மென்மையான  பூகம்பம். ரஹ்மான்  தன்னிடமிருந்த நல்லிசையை இன்னொரு முறை உரக்கச் சொன்ன பாடல் இது. (அபத்தமான காட்சியமைப்பை மறந்துவிட்டு  கேட்டீர்களேயானால் இந்தப் பாடல் துயர இசையின் இன்பத்தைக் கொடுப்பதை நீங்கள் உணரலாம்.)


      ரிதம் (2000) - ரஹ்மானின் சிறப்பான இசை இறுதியாக வெளிவந்தது இந்தப் படத்தில்தான் என்று எண்ணுகிறேன். இயற்கையின் ஐந்து சக்திகளையும் கருப் பொருளாகக் கொண்டு வைரமுத்துவின் வரிகளில் வந்த இதன் பாடல்கள் (ஒன்றைத் தவிர) வெகு நேர்த்தியானவை  என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. அய்யோ பத்திக்கிச்சு என்ற குப்பையை ஒதுக்கித் தள்ளிவிட்டு மற்ற நான்கு அற்புதங்களையும் நாம் ரசிக்கலாம். நதியை ஒரு பெண்ணாக கண்டெடுத்த நதியே நதியே ஆர்ப்பாட்டமில்லாத நதியின் சலசலப்பை நமக்குள் ஏற்படுத்தும் அருமையான கானம். காற்றே என் வாசல் தெளிந்த நீரின் குளுமையையும் தென்றலின் சுகத்தையும் ஒரு சேர உணர்த்தியது.அன்பே இது பாடல்  வானத்தில் பறக்கும் குதூகலமான சுகத்தை கொண்டிருந்தது. தனியே தன்னந்தனியே ரஹ்மானின் மாறிக்கொண்டு வந்த இசை முதிர்ச்சியை இனம் காட்டியது. இதே பாடலை ரஹ்மான் ஒரு இரண்டு வருடங்களுக்கு முன் அமைத்திருந்தால் அதை வெறும் துள்ளல் இசையாக வடித்திருப்பார் என்று தோன்றுகிறது.

       1995 ஆம் ஆண்டில்   ரஹ்மான் முதல் முதலாக ரங்கீலா என்ற ஹிந்திப் படத்திற்கு இசை அமைத்தார். அந்தப் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு அவரது இசையே பிரதானமாக இருந்தது என்பது மிக உண்மை. ரங்கீலாவின் வெற்றியைத் தொடர்ந்து ரஹ்மான் ஹிந்தியை நோக்கி நகர ஆரம்பித்ததும் (பையர்,தாள்,லகான்,கபி நா கபி,தில் சே...) ஒரு வகையில் அவரது இசையின் ஒருமுகத்தன்மை சிதறத் துவங்கியதாகவே நான் பார்க்கிறேன். இந்தப் பதிவு தமிழ்த் திரையிசையைப் பற்றியே மையம் கொண்டுள்ளதால் ரஹ்மானின் ஹிந்தி மற்றும் ஆங்கிலப் படங்களின் இசையைப் பற்றி இங்கே எழுதுவதற்கு இடமில்லை. மேலும்  அங்கே அவர் சாதனைகள் செய்தார் என்பதும்  (சில வட இந்திய விமர்சகர்கள் ரஹ்மானை ஆர் டி பர்மன் என்ற இசை மேதைக்கு இணையாக ஒப்பீடு செய்வதை நான் ஏற்றுக்கொள்வதில்லை) ஆஸ்கார் விருது, கிராமி விருதுகள் போன்ற அவர் தொட்ட சிகரங்களைப் பற்றி எழுதுவதும்  என்னை அவரின் அபிமானியாக அடையாளம் காட்டக்கூடிய தவறான சிந்தனைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் நான் அவற்றை இங்கே தவிர்க்கிறேன். ரஹ்மானின் இந்த தமிழ் நாட்டைத் தாண்டிய வெற்றி நம்மிசைக்கு என்ன செய்தது என்பதே கேள்வி. அப்படிப் பார்த்தால் ரஹ்மான் அதிக சிரத்தையுடன் பலவிதமான இசைப் படிவங்களை தமிழில் கொண்டுவந்தார். பல பாதைகள் ஏற்பட்டதால் நம் தமிழிசையின் முகம் நமக்கு விருப்பமில்லாத வகையில் உருமாறியது. இரைச்சலும் ராகத்தில் இணையாத பாடல்களுமாக இசை சிதறியது. என் நண்பன் ஒருவன் ரஹ்மானின் இசையைப் பற்றி "இவரது தமிழ்ப் பாடல்கள் ஆங்கிலப் பாடல்கள் போலவும் ஹிந்திப் பாடல்கள் தமிழ்ப் பாடல்கள் போலவும் இருக்கின்றன" என்று கேலி செய்வதுண்டு. எனக்கே சில சமயங்களில் அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.

     ரஹ்மான் புயல் போல் புகுந்து ஒரு பெரிய சூறாவளியாக அவருக்கு முன் இருந்த இசைச் சுவட்டை வாரிச் சுருட்டிச் சென்றார். சொல்லப்போனால் இளையராஜா போன்றே ரஹ்மானின் இன்னிசையும் பத்து வருடங்களுக்குள் ஓய்ந்து போனது. இந்த கால இடைவெளியில் இளையராஜா இசை அமைத்த படங்களின் பட்டியல்  மிக அதிகம் என்ற ஒரு வித்தியாசத்தைத் தவிர இருவரின் இன்னிசைக்கும்  ஆராவாரமாக ஆரம்பித்து சட்டென்று முடிந்து போன ஒற்றுமை உண்டு.இளையராஜாவின் இன்னிசையில் வந்த பாடல்களின் எண்ணிக்கை ரஹ்மானின் சிறப்பான  பாடல்களைவிட அதிகம் என்பது மறுக்க இயலாதது. (இளையராஜா இன்னும் இருக்கிறார் என்று சொல்கிறார்கள் அப்படியானால்  ரஹ்மானும்தான்.ஆனால் இதில் பெருமைகொள்ள எதுவுமில்லை. ) இருவரின் ரசிகர்களும்  நீண்ட பட்டியலை ஆதாரமாகக் காட்டியபடி விவாதங்கள் செய்வதும் யார் பெரியவர் என்ற அர்த்தமற்ற தேடுதல்களை விறைப்பாக செய்ய முனைவதும் வெறும் முதிர்ச்சியற்ற மனோபாவம். இளையராஜாவோ ரஹ்மானோ உலகின் தலை சிறந்த இசை அமைப்பாளர் இவர்தான்  என்று அவர்களின் ரசிகர்கள் அதன் அர்த்தம் உணராமல் எண்ணிக்கொள்வது மட்டுமல்லாது அதை நிலைநாட்டவும் முயல்வது  அற்பத்தனமானது. இதற்காக அவர்கள் எடுத்துக்கொள்ளும் மதியீனமான முயற்சிகளைப் பார்க்கும் போது சற்று அலுப்பாகவும் நிறைய நகைச்சுவையாகவும் இருக்கிறது. இதைச் சொல்ல என்னவிதமான தகுதி ஒருவருக்கு வேண்டும் என்ற நியதியை சிலர் என்னிடம் எதிர்பார்க்கலாம். உண்மையே. இசை என்றால் இதுதான் என்றுதான் நானும் பல காலங்கள் எண்ணிக்கொண்டிருந்தேன். எனக்குப் பிடித்த இசைக் குழுக்கள், அவர்கள் அமைத்த பாடல்கள் என்ற ஒரு சிறிய புள்ளியில் நின்று கொண்டு நான் மற்ற இசை வடிவங்களை ஏளனமாக பார்த்த காலங்கள் உண்டு. ஆனால் வாழ்கையின் பலவித அடுக்குகளை நோக்கி நாம் நகரும் போது இப்படிப்பட்ட பிற்போக்குத்தனமான எண்ணங்கள் தகர்த்தெறியப்படுகின்றன. இசையின் வீச்சை நம்மால் என்றைக்கும் முழுவதும் புரிந்துகொள்ளவே முடியாது. ஏனென்றால் இசை நமக்கு புதிய உலகங்களை வெளிக்காட்டிக்கொண்டே இருக்கிறது.


     ஒருமுறை கவுஹாத்தியில் நான் பயணிக்க வேண்டிய ரயில்  வருவதற்கு பனிரெண்டு மணிநேரத்திற்கு மேல் தாமதமானதால் காலத்தைக் கடத்த  அதே இடத்தில்  உலா வரவேண்டிய நிரப்பந்ததில் மாட்டிக்கொண்டேன். அப்போது என்னுடன் பயணம் செய்த ஒரு காஷ்மீர்  இளைஞனுடன் நான் பாதி நாள்  ரயிலடிக்கு வெளியே  (சிகப்பு ரோஜாக்கள் கமலஹாசன் போன்ற தோற்றத்தில் அவன் இருந்தான்.)  பல இடங்களில் சுற்றித் திரிந்தேன். நான் கசட் கடைகளைத் தேடி அலைந்து எதோ ஒரு கடையில் இரண்டு ஆங்கில இசைத் தொகுப்புகள் ( Door To Door by The Cars and Place Without A Postcard by Midnight Oil) வாங்கினேன். அவனோ அவன் காதல் வயப்பட்ட கதையை என்னிடம் சொல்லியபடி அவ்வப்போது சிகரெட் பிடித்தபடி இருந்தான். மதிய சாப்பாட்டுக்காக நாங்கள்  ஒரு பஞ்சாபி ஹோட்டலில் அமர்ந்திருந்த போது அங்கிருந்த  வானொலியில் ஒரு கானம் ஒலிக்கத் துவங்கியது. ஒரு பெண்ணின்  குரலில் மிக அபாரமாக இருந்த அந்தப் பாடல் கேட்ட ஒரே  நொடியில் என்னைக்  கவர்ந்தது. குரலா  இசையா  என்று பகுத்துப் பார்க்கமுடியாத பலவீனத்தில்  எதோ ஒரு புள்ளியில் நான் என்னை சற்று துறந்து அந்தப் பாடலின் வசீகர வலையில் விழுந்தேன்.வார்த்தைகள் புரியவில்லை. அது என்ன படம், பாடியது யார், இசை அமைத்தது யார் என்று எதுவுமே தெரியாவிட்டாலும் பாடல் உள்ளதை உடைப்பதாக இருந்தது. வெகு சோகமான கீதம் என்பதை மட்டுமே நான் உணர்ந்தேன். அதுவே போதுமானதாக இருந்தது. இருந்தும் என் ரயில் நண்பனிடம் "இது எந்த ஹிந்திப் படத்தின் பாடல்?" என்று கேட்டேன்.என்னைப் பார்க்காமலே  "தெரியவில்லை." என்றவன் தொடர்ந்து,  "ஆனால் ஒன்று மட்டும் தெரியும். இது ஹிந்திப் பாடலே அல்ல." என்றான் தான் புகைத்த சிகரெட்டை கீழே போட்டு மிதித்தபடியே.  எனக்குப்  பிடிபடவில்லை. ஒரு சராசரி தமிழனுக்கு ஆந்திராவை கடந்துவிட்டாலே கேட்கும் மொழி எல்லாமே ஹிந்தியாகத்தான் இருக்கும். என் மொழியறிவின் மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையை அவன் தகர்ப்பது போல உணர்ந்ததால்   "எப்படிச் சொல்கிறாய்?" என்று முட்டாள்தனமாக   அவனைக்  கேட்டேன். அவன் சிரித்துக்கொண்டே "எனக்கு ஹிந்தி தெரியும். அதனால்தான் சொல்கிறேன். இது ஹிந்தி அல்ல. ஒருவேளை அஸ்ஸாமி பாடலாக இருக்கலாம்"  என்றான். அதைப் பற்றி அதற்கு  மேலும் அறிந்து கொள்ள நான் முயலவில்லை.அது முதலில் திரைப்படப் பாடலா என்பதே சந்தேகத்திற்குரியது. ஒருவேளை தனிப் பாடலாகவோ  அல்லது நம் ஊர் நாட்டுப்புற பாடல் போன்று திரையில் வராத பாடலாகவோ இருந்திருக்கலாம்.எவ்வாறாக இருப்பினும்  இசையின் ரசிப்பை உணர்தக்கூடியதாக பாடலாக அது இருந்தது.

    இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால்  அந்த சோகப் பாடல் நம் தமிழிசையின் கூறுகளை கொஞ்சமும் கொண்டிராமல்  வேறு விதமாக வார்க்கப்பட்டு விநோதமாக அழ முடியாத கண்ணீர்த் துளிகளை என்னுள் உண்டாக்கியது. இந்தியாவின் ஒரு எல்லையோர மூலையில் நான் கேட்ட அந்த அஸ்ஸாமிப் பாடல் என் நினைவில் வெகு நாட்கள் நிழலாடியது.  (இன்று நான் அதை என் நினைவடுக்குகளுக்குள் வெற்றியின்றி தேடிக்கொண்டிருக்கிறேன். அந்தப் பாடல் அகப்படவில்லை ஆனால் அது எனக்குள் விட்டுச் சென்ற அந்த  துயரச் சுவை மட்டும் தங்கியிருக்கின்றது.) நாம் எத்தனை விதமான இசையை கேட்கிறோம் என்ற கேள்வி அப்போது எனக்குள் எழுந்தது. ஒவ்வொரு இடத்திலும் அந்தந்த  மக்களின் உணர்சிகளோடும் இசையின் இனிய  வாசத்துடனும்  அங்கிருக்கும் கலாச்சார விழுமியங்களை உள்ளடக்கிக்கொண்டு  நாம்  அறிந்திராத நிறம் கொண்டு இசை எப்படி அழகாக தன்னை  வெளிப்படுத்துகிறது என்று வியப்புடன் உணர்ந்தேன். இசையின் அழகியல் எந்த மொழியின் கோட்பாடுகளுக்கும்   அடங்குவதில்லை. அது  காற்றைப் போன்றது. தமிழைத் தவிர கொஞ்சம் ஹிந்தி, சற்று மலையாளம், தெலுகு, பிறகு ஆங்கிலம் என்ற வட்டங்களைத்  தாண்டி நம் இசை அனுபவம் எந்த அளவுக்கு விஸ்தாரமானது? ஆழமானது? வசிக்கும்  ஒரு நாட்டின் பல வகையான இசைகளில் சற்றும் பரிச்சயம் இல்லாமல் இருக்கும் நாம் எந்த தகுதியை பிரதானமாக வைத்துக்கொண்டு ஒருவரை புகழ்வதற்காக இவரை போல உலகத்திலேயே வேறு யாரும் கிடையாது என்று வீண் பெருமை பேசுகிறோம்? ஒன்றிரண்டு ஸ்பானிஷ், பிரெஞ்ச், அரேபிய இசையை கேட்டுவிட்டால் இவ்வகையான தாறுமாறான முடிவுகள் எடுக்கக்கூடிய தகுதிகள் நமக்கு வந்துவிடுமா ? என்னை பெரிதும் கவர்ந்தவர் உலகிலேயே சிறந்தவராக இருக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? இவ்வாறான எண்ணப் படிவங்கள் என் மீது படர்ந்ததும் எனக்குத் தோன்றியது ஒன்றுதான்.இசையை ரசிப்பதே உகந்தது. அதைப் பற்றி தீர்மானிப்பது நம் வேலையல்ல.அதை காலம் கவனித்துக்கொள்ளும்.

    இங்கேயே நான் நிறுத்திக்கொள்ள விரும்புவதன்  காரணம் ரஹ்மான்  இசையின் இனிமை ரிதம் படத்துடன் முடிந்துவிட்டது என்று நான் ஒருவிதமாக நம்புவதால் மட்டுமல்ல இதன் பிறகு நம் தமிழிசையின் திசை சென்ற பாதை எனக்கு அவ்வளவாக உகந்ததாக இல்லை என்பதாலும் இருக்கலாம். உண்மையில் இதற்குப் பிறகே அவர் பல வியப்பூட்டும் உயரங்களுக்குச் சென்றார். ஹிந்தியின் அசைக்க முடியாத இசை அமைப்பாளராக மாறினார். அவரை  தேடிச் செல்லும் பட வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ரஹ்மான் என்ற பெயர் மட்டுமே போதும் என்ற நிலை உருவானது.அவர் இந்திய திரையிசையின் மிகப் பெரிய ஆளுமையாக அடையாளம் காணப்பட்டார். இத்தனை சிறப்புகள் அவருக்கு கிடைத்தும் இதனால் தமிழிசைக்கு என்ன நேர்ந்தது என்பதை நாம் ஆராய முற்பட்டால் அதன் இறுதி முடிவு நமக்கு கவலையையும்   வேதனையையும் அளிப்பதாகவே இருக்கிறது. ஆனால் ரஹ்மானுடன் நம் தமிழிசை முற்றுப் பெற்றதாக நான் எண்ணவில்லை. அது ஒரு மிகைப் படுத்தப்பட்ட வாக்கியம். ஆனால் ரஹ்மானால் புற்றீசல் போல புறப்பட்ட பலவித இசை வடிவங்கள் நமது பாரம்பரிய மரபுகளோடு தொடர்புடைய இசையை குலைத்து விட்டன என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால் பல இளைய தலைமுறையினர் வேர்களற்ற இவ்வாறான  இசையையே  விரும்புகிறார்கள்.நல்ல இசைக்குரிய எந்த தகுதியும் இல்லாத சிறிது கால அவகாசத்தில் மடிந்து விடும் பூக்களைப் போன்ற இசை நீட்சியற்ற  பாடல்களையே  அவர்கள் பெரும்பாலும் ரசிக்கிறார்கள். அவர்களின் பரவசத்திற்குரிய இசையாக அது இருக்கிறது. அவர்களின் இசை ரசனையை குறை சொல்வது தலைமுறை இடைவெளி என்னும் இடத்தில் என்னை நிறுத்திவிடும் அபாயம் உள்ளது. நான் கண்டிப்பாக அந்த வண்ணத்தை என் மீது பூசிக்கொள்ள என்றுமே விரும்பியதில்லை. நமக்குப் பிடிக்காதது மோசமாகத்தான் இருக்கவேண்டும் என்ற முன்தீர்மானித்தலும்  என்னிடமில்லை.   நம் ரசனைக்குரிய கானங்கள் நம்மிடம்  குறைந்துவருவதை ஒரு குற்றமாக சுட்டிக்காட்டும் அதே  வேளையில் இசையை அதன் மாறிவரும் முகத்தோடு நாம் ரசிக்கக் கற்றுக்கொள்வது அவசியம் என்று தோன்றுகிறது. நமக்குப் பிடித்த பாடல்களோடு  இசை ஓய்ந்துவிட்டது  என்ற ஆரோக்கியமற்ற சிந்தனை நம்மை விடுபடமுடியாத சங்கிலிகளால் கட்டிப்போட்டு இசையோடு நமக்கிருக்கும் தொடர்பை அறுத்து விடும் என்பதால் நாம் இந்த இசைகளற்ற சத்தத்தினுள்ளே தட்டுப்படும் சில அரிய இனிமையான கீதங்களை  தேடுவது அவசியமாகிறது.

அடுத்தது : இசை விரும்பிகள் XIII --மறைந்த கானம்.