புயலிசை
எவ்வாறு ஒரு கலைஞன் தன் மனதில் தோன்றும் எண்ணங்களையும்,வடிவங்களையும் எழுத்தாக, கவிதையாக, சிலையாக, ஓவியமாக, இசையாக உருமாற்றுகிறான் என்பது உண்மையில் வியப்பானது.ஒரு தனித்த சிந்தனை கலையாக உயிர் பெறும்போது அதன் செழுமையும் அழகும் மிக உன்னதமாக வெளிப்பட்டு அதை உள்வாங்குவோரின் மனதை ஆனந்தமாக ஆக்கிரமிக்கின்றது. ஒரு தனி மனிதனின் கையசைவில் ஓவியம்,சிலை,கவிதை உருவாவதைப் போலவே இசை காகிதங்களில் குறியீடாக எழுதப்பட்டாலும் அதை உயிர் பெறச் செய்ய மகத்தான இசைஞர்கள் தேவைப்படுகிறார்கள். மேலும் இசை பாடல் என்று உருமாறும் போது அது மூடுபனி போல கவிதை என்னும் இயற்கைக் காட்சியைப் போர்த்தி அந்த ரம்மியமான தோற்றத்திற்கு இன்னும் அழகூட்டுகிறது. ஒரு நேர்த்தியான பாடல் என்பது என்னைப் பொருத்தவரை ஒரு வானவில் போன்றது. அது உருவாக மழைத் துளிகளுக்குள்ளே ஊடுருவிச் செல்லும் வெளிச்சம் தேவைப்படுகிறது. ஈரமும்(இசையும்) வெப்பமும் (கவிதையும்) ஒருங்கே இரண்டற கலப்பதினால் பிறக்கும் வண்ணமயமான அனுபவமே பாடல்.
தமிழ்த் திரைஇசையின் பிதாமகன் என்று சொல்லப்படும் பாபநாசம் சிவன்,
தமிழ்த் திரையை தங்களது மந்திரக் குரல்களால் கட்டிப்போட்டுவைத்திருந்த தியாகராஜ பாகவதர், கிட்டப்பா, பி யு சின்னப்பா, டி ஆர் மகாலிங்கம், கண்டசாலா,
இசைச் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் பல இசைப் புரட்சிகளை தொழில் நுட்பம் பெரிதாக இல்லாத காலத்திலேயே அறிமுகம் செய்து மேலும் தமிழ் திரையில் நாட்டுப்புற இசையை வெற்றிகரமாக அரங்கேற்றிய ஜி ராமநாதன்,
பல இசை மேதைகளுக்கு தன் கூட்டின் கீழ் இடமளித்து அவர்களின் வளர்ச்சிக்கு பாதை அமைத்துக்கொடுத்த சி ஆர் சுப்பராமன்,
பலருக்கு நினைவில் இல்லாத நாம் மறந்துவிட்ட எஸ் வி வெங்கடராமன்,
தமிழ்த் திரையில் இசையின் பலவித பரிமாணங்களை 50 களிலேயே அசாத்தியமாக வார்த்தெடுத்து நம்மை இசையின் அழகை ஆராதிக்க வைத்த சுதர்சனம்,
மேற்கத்திய இசையை நம் ராகங்களோடு திகட்டாமல் கலந்து கொடுத்து சிகரம் தொட்ட பல பாடல்களை உருவாக்கிய எ எம் ராஜா,
இசையின் மேன்மையை அற்புதமான கானங்களால் நம்மால் மறக்க முடியாத வண்ணம் சிற்பம் போல வடித்த சுப்பையா நாயுடு,
கர்நாடக ராகங்களில் கரை கண்ட திரைஇசை திலகம் என்று போற்றப்பட்ட தமிழ்த் திரையின் பொற்காலத்தில் இசைபவனி கண்ட கே வி மகாதேவன்,
திகட்டக்கூடிய சாஸ்திரிய ராகங்களை எல்லோரும் எளிதில் சுவைக்ககூடிய வகையில் கவனமாக படிப்படியாக உருமாற்றி, தேனில் கரைந்த பழத்தைப் போல பல காவியப் பாடல்களை ஜனனித்து தமிழ்த் திரையிசையின் உச்சத்தை அடைந்த எம் எஸ் விஸ்வநாதன் -டி கே ராமமூர்த்தி
போன்ற இணையற்ற இசை ஜாம்பவான்கள் ஆட்சி செய்த தமிழ்த் திரையிசையின் செங்கோல் தன்னிடம் வந்து சேரும் என்பதை இளையராஜாவே கூட கற்பனை செய்திருக்க மாட்டார். ஆனால் அதுவே நடந்தது.
தமிழ்த்திரையிசையின் ஆரம்பகாலங்கள் இரும்புத்திரை உடுத்தப்பட்ட கடுமையான சாஸ்திரிய ராகங்களின் காலமாக இருந்தது. அப்போது இசை அமைத்தவர்கள் அவ்வாறான ராகங்களில் ஊறித்திளைத்தவர்களாக இருந்தார்கள் அவர்களின் இசை ஞானம் பலப்பல இசை அனுபவங்களை நமக்கு வாரிவழங்கி இருந்தாலும் அப்போதைய காலகட்டதில் இசை அமைத்தவர்கள் எல்லோருமே பெரும்பாலும் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். இந்த இரும்புச் சூழ்நிலையில் இசை என்பது ஒரு குறிப்பிட்ட இனத்தின் அடையாளமாக முன்னிருத்தப் பட்டபோது பண்ணைபுரத்திலிருந்து புறப்பட்ட ஒரு கிராமத்து இசை அவர்களின் மேதமையை புரட்டிப்போட்டது. பாரம்பரிய இசை குடும்பத்தின் வேர்கள் இல்லாத அதேசமயம் மக்களின் இசையோடு அதிக உறவு கொண்டிருந்த ஒரு நவீனமான அதிசயம் 76 இல் தமிழ்த் திரையில் தோன்றியது. உண்மையில் இளையராஜாவின் சாதனை என்னவென்றால் தமிழ்த்திரையை ஆட்சி செய்துகொண்டிருந்த ஒரு சமூகத்துப் பெருமையை உடைத்து அங்கே ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு இசைஞன் தன் கொடியை ஒய்யாரமாக நாட்டினான் என்பதே. இதனாலேயே துவக்கத்தில் அவரின் இசை பலவிதமான விமர்சனங்களுக்கு ஆளானது. பறையிசை எனப்படும் மண்ணின் இசையை அவர் திரையில் பதிவு செய்ததை பலர் குற்றம் சொன்னார்கள்.அப்போதே அவரின் "வாத்தியங்கள் வார்த்தைகளை திருடியதாக" குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இளையராஜா தான் அதிர்ஷ்டக் காற்றின் வலிமையால் விழுந்த கனி இல்லை என்பதையும், கோடைமழை போல கொட்டிவிட்டு ஓய்ந்துவிடும் சாதாரணமானவன் இல்லை என்பதையும் அழுத்தமாக நிலைநாட்டினார். 76 இல் துவங்கிய அவரின் இசை 80களில் அருவி போல நிற்காமல் கொட்டியது. நம் மண்ணின் இசையை புதுவிதத்தில் வெளிக்கொணர்ந்தார் இளையராஜா. புதிய பரிமாணங்களை இசையில் அடையாளம் காட்டினார்.இதுவரை எல்லாமே சிறப்பாகவே இருந்தது. இதையே நான் மிகப் பெரிய இசை பாரம்பரியத்தை எம் எஸ் விக்குப் பிறகு வழிநடத்திச் செல்லும் சக்தி படைத்தவர் அதை இன்னும் சிறப்பானதாக ஆக்கியிருக்கலாம் என்று முன்பு ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஏழு வருடங்கள் இளையராஜாவின் இன்னிசை மழை மண்வாசனையோடு ரசிகர்களின் உள்ளதை நனைத்தது. பின்னர் அந்த மழை ஓய்ந்தது. தூறல்கள் மட்டுமே தொடர்ந்தன. அதன்பின் ஒவ்வொரு பசுமையான இலைகளும் அவருடைய இசை என்னும் மரத்திலிருந்து உதிர ஆரம்பித்தன.
இன்னிசையும் நல்லிசையும் மெலிந்தாலும் வணிக ரீதியாக அவர் வெற்றிகளையே சுவைத்தார். 90களின் ஆரம்பம் வரை அவர் வெற்றிகள் மீது பயணம் செய்தாலும், அவரின் இத்தனை வெற்றிகளுக்கு அவருடைய இசையைத் தாண்டி பல காரணிகள் உள்ளன. அவரவர்கள் தங்கள் காலத்திற்கு உட்பட அறிவியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பாடல்களை பதிவு செய்தார்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.அப்படியெல்லாம் இல்லை என்று கண்மூடித்தனமாக நம்புவர்கள் உண்மைக்கு எதிர் திசையில் பயணிக்கிறார்கள். 70 கள் வரை மோனோ ரெக்கார்டிங் முறையே இருந்தது. தொழில் நுட்பம் அத்தனை சௌகரியப்படாத காலத்திலும் நம் இசையில் புதுமைகள் வரத்தவறவில்லை. 80களில் இளையராஜா ஸ்டீரியோ ஒலிப்பதிவு முறையில் பிரியா பாடல்களை அமைத்து ஒரு நவீன இசை அனுபவத்தை ஆரம்பித்து வைத்தார். இத்தொழில் நுட்பம் அவர் பாடல்களில் மறைந்திருந்த பலவிதமான இசை இழைகளையும், நேர்த்தியான இசைக் கோர்ப்பையும் சிறப்பாக வெளிப்படுத்தியது. அதே காலகட்டத்தில் சாலையோர டீக்கடைகள் தெரு வானொலிகளாக உருமாறத் துவங்கி இருந்தன. அங்கே இளைஞர்களை இழுக்கும் இசை இளையராஜாவின் பாடல்களாகவும் வீதிகளல்லாம் இளையராஜாவின் இசையாகவும் இருந்தது.
இந்த காலகட்டத்தில் இளையராஜாவின் இசைப் பரிசோதனைகள் வீரியம் பெறத்துவங்கின. புதிதாக சமையல் கற்றுக்கொள்ளும் ஒரு பெண் எவ்வாறு வித்யாசமான ஒழுங்கில்லாத வரைமுறைகளை மீறிய பரிசோதனைகள் செய்யத் தலைப்படுவாளோ அதே போன்று இளையராஜா சம்பிரதாயங்களை உடைக்கும் iconoclast பாணியில் தமிழிசையில் சோதனைகள் செய்தார். சில சமயங்களில் ஓவியத்தின் வண்ணங்கள் ஓவியத்தை மீறி பளபளப்பாக அமைந்துவிடும் அபாயத்தைப் போல அவருடைய இசையின் வீச்சு பெருமளவில் பாடல்கள் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. வாத்தியங்கள் வார்த்தைகளை விழுங்கின. ரசிகர்கள் அந்த இசையில் தன்னிலை மறந்தார்கள்.இதன் விளைவாக பாடல் வரிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு இசை முன்னிலைப் படுத்தப்பட்டது. இந்தப் புதிய மாற்றம் இளையராஜாவுக்கு புகழ் சேர்த்தாலும் இது ஒரு மெதுவான விஷம் போல திரையிசைக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது என்பது கண்கூடு. பாடலின் ஒரு மிக முக்கிய ஆளுமையான கவிதை குழிக்குள் புதையுண்டு போக அதன் மீது இசை நாட்டப்பட்டது. ஒப்புக்கென வந்து விழுந்த சராசரியான கவிதையிழந்த வார்த்தைகள் இசையின் அழகியலை அழித்து துவம்சம் செய்தன. ராகங்களில் பின்னப்பட்ட பல்லவிகள் மட்டும் பாடலை முன் நடத்திச் செல்ல, அலுப்பான,தொடர்பில்லாத இணையிசையும்,ஆயிரம் முறை கேட்டு சலித்துப்போன வறட்டுச் சரணங்களும் dejavu எண்ணங்களை ஏற்படுத்தத் தவறவில்லை. 90 களில் வந்த பெரும்பான்மையான இளையராஜாவின் பாடல்களை அவரின் ரசிகர்கள் மட்டுமே ரசித்துக்கேட்டர்கள் என்பதே உண்மை. மற்றவர்கள் சகித்துக்கொண்டார்கள். ஏனென்றால் அப்போது தமிழ் ரசிகர்களுக்கு இசையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு காணப்படவில்லை.எது கிடைத்ததோ அதை அவர்கள் எடுத்தார்கள். It was a matter of choice compelled to make.
இப்போது 91ஆம் ஆண்டில் இளையராஜாவின் இசையமைப்பில் வந்த சில படங்களைப் பார்க்கலாம். சாமி போட்ட முடிச்சு,ஈரமான ரோஜாவே, உருவம், கும்பக்கரை தங்கையா,தர்ம துரை,சார் ஐ லவ் யு,புது நெல்லு புது நாத்து, வெற்றி படைகள், வெற்றி கரங்கள், கோபுர வாசலிலே,தங்க தாமரைகள், சின்ன தம்பி,என் ராசாவின் மனசிலே,கேப்டன் பிரபாகரன்,கற்பூர முல்லை,மில் தொழிலாளி,புதிய ராகம், மனித ஜாதி,வசந்தகாலப் பறவை, குணா,பிரம்மா,தளபதி,தாலாட்டு கேட்குதம்மா,தாயம்மா, பாதை மாறிய பயணம். இவற்றில் சுமார் முந்நூறு பாடல்கள் இருக்கலாம். சில பாடல்கள் வெற்றிபெறத் தவறவில்லை. ஆனால் அவரின் அந்த மந்திரத் தொடுகை இப்போது வற்றிப் போயிருந்தது.ஏற்கனவே அவர் கிராமத்து நாயகனாக அறியப்பட்டிருந்தாலும் கரகாட்டக்காரன் படத்திற்குப் பிறகு அவரைச் சுற்றி இந்த கிராமத்து இசை என்னும் ஒளிவட்டம் இன்னும் அதிகமாக பிரகாசித்தது.90 களில் வந்த பெருமான்மையான படங்கள் அவரின் இந்த முகத்தையே வெளிக்காட்டின.
தமிழ்த்திரையின் துவக்கம் இசையாலே சூழப்பட்டிருந்தது. பாடல்களே படங்களின் வெற்றியை தீர்மானித்தன. பாடத்தெரியாதவர்கள் கதாநாயகனாக நடிக்க முடியாத காலகட்டம் என்று ஒன்று இருந்தது.(இந்தச் சூழல் மாறிய பின்னரே சாகாப்தம் படைத்த எம் ஜி ஆர் கதாநாயனாக வெற்றி உலா வரமுடிந்தது). எனவே இசை அமைப்பாளர்கள் சாஸ்திரிய சங்கீதத்தில் கரைகண்டவர்களாக இருந்தார்கள். இந்த இசையறிவு இசைஞர்களுக்கு மட்டுமல்லாது இயக்குனர்களுக்கும் இருந்த காரணத்தினால் பல சமயங்களில் படத்தின் இயக்குனரே தனக்கு வேண்டிய ராகத்தில் பாடல்களை கேட்டுப் பெற்ற கதைகளும் உண்டு. இந்த பாரம்பரியமான இசையின் தொடர்ச்சி ஒரு நூலிழை போல காலம்காலமாக இங்கே நீண்டு வந்தாலும், ஒரு காலகட்டத்தில் -அதாவது பாரதிராஜாவின் வருகையோடு- இந்த இசையறிவு கொஞ்சம் கொஞ்சமாக குன்றத் துவங்கியது. இதை நான் பாரதிராஜாவை அல்லது அவர் கண்ட புதிய கதைகளத்தை குற்றம் சொல்லும் பாங்கில் எழுதவில்லை. பாரதிராஜாவின் வெற்றி தமிழ்த்திரைக்கு பல புதியவர்களை இழுத்து வந்தது. இவ்வாறான இயக்குனர்கள் இசையின் ஆழத்தையும் விசாலத்தையும் கணக்கில் கொள்ளாது வெற்றி அடைந்த பாடல்களைப் போலவே தங்களுக்கும் பாடல் அமைய விரும்பியதால் சாஸ்திரிய ராகங்கள் இசைஞர்களின் கூண்டுக்குள்ளே அடைபட்டுப்போயின. அவற்றை விவாதிக்க கூட இயலாத பல புதிய இயக்குனர்கள் இசையின் கூறுகளையும் அதன் விழுமியங்களையும் விட்டு வெகு தூரம் நிற்க, இசையை நேர்த்தியாக கொடுக்க வேண்டிய கடமை இசை அமைப்பாளர் என்கிற ஒருவரை மட்டுமே சார்ந்திருந்தது. கேட்டு பாடல்கள் வாங்கிய காலம் கனவாகிவிட கொடுக்கும் பாடல்களை வாங்கும் காலம் நிஜமானது. இதையே நான் நிறம் மாறிய பூக்கள் பதிவில்
"அவர் நினைத்திருந்தால் வணிக நோக்கங்களைத் தாண்டி தமிழ் இசையை இன்னும் நேர்த்தியான பாதையில் வழிநடத்திச் சென்றிருக்கலாம். ஏனென்றால் 80 களின் மத்தியில் அவர் ராஜாங்கமே இங்கே நடந்து கொண்டிருந்தது. மேலும் இளையராஜாவை வீழ்த்தக்கூடிய எந்த ஒரு இசைஞரும் கண்ணில் தென்பட்ட தூரம் வரை காணப்படாத நிலையில் இளையராஜா தனக்கு முன்னே இருந்த இசை மேதைகளின் இசைப் பாரம்பரியத்தை இன்னும் செம்மையாகி இருக்கலாம்.அதற்கு அவருக்கு கண்டிப்பாக எல்லா வாய்ப்புக்களும், திறமைகளும்,தகுதிகளும் இருந்தன. இருந்தும் 80 களின் மத்தியிலிருந்து அவரது இசையின் தரம் சரியத் துவங்கியது. How to name it? Nothing but wind போன்ற திரையிசை சாராத இசை முயற்சிகளை முயன்றவரால் ஏன் தரமில்லாத இசையை தடுத்து நிறுத்த முடியவில்லை என்பது ஒரு புதிராகவே இருக்கிறது." என்று குறிப்பிட்டிருந்தேன்.
92 இல் இளையராஜா அதிகபட்சமாக 52 படங்களுக்கு இசைஅமைத்தார். இந்த வேகம் ஆச்சர்யமானது. தேவர் மகன், மீரா, சின்ன கவுண்டர்,நாடோடித் தென்றல், சின்னவர்,செந்தமிழ்ப் பாட்டு போன்ற படங்களில் வர்த்தக அளவில் சிகரம் தொட்ட பாடல்களை அவர் வழங்கினார். o butterfly(மீரா), முத்துமணி மாலை (சின்ன கவுண்டர்), சின்னச் சின்ன தூறல் என்ன(செந்தமிழ்ப் பாட்டு-எம் எஸ் வி யுடன் இணை சேர்ந்த மற்றொரு படம்) போன்ற பாடல்கள் சிறப்பாக இருந்ததை குறிப்பிட்டாக வேண்டும். இது அவருக்கு ஒரு மிக முக்கியமான வருடமாக இருந்தது. 92 இல் அவர் தன் இசை வாழ்க்கையிலேயே அதிகமான படங்களுக்கு இசை அமைத்திருந்தாலும் அவருடைய ராஜ்ஜியத்தின் மீது இருள் படர்ந்ததும் இதே ஆண்டில்தான் என்பது ஒரு irony. போர் மேகங்களோ, படையெடுப்போ எதுவுமின்றி சத்தமில்லாத யுத்தம் போல் ஒரு மலரின் இசையில் தமிழ்த் திரையின் மிகப் பெரிய கோட்டை தகர்ந்தது. கோபுரங்கள் சரிந்தன.அதுவரை தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டிருந்த (காயப்போட்டிருந்த) இளையராஜாவின் இசை முடிச்சு அவிழ்ந்தது. நடக்கவே நடக்காது என்று ஆரூடம் சொல்லப்பட்ட அந்த இசை அற்புதம் 92 ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் அரங்கேறியது. எ ஆர் ரஹ்மான் என்ற ஒரு இளைஞனின் இசையில் "ரோஜா" மலர்ந்தது. தமிழ்த் திரையிசையில் வரலாறு திரும்பியது. ஒரு நவீன இசை யுகத்தின் புது வெளிச்சம் இங்கே படர்ந்தது.
ரோஜா பாடல்கள் பயணம் செய்த பாதை 76 இல் அன்னக்கிளி பாடல்கள் பயணித்த அதே சாலைதான். இரண்டுக்குமே ஒற்றுமைகள் நிறையவே உள்ளன. எப்படி இளையராஜா 76 இல் அப்போது ஒலித்த இசையை விட்டு ஒரு நவீன இசையை அமைத்தாரோ அதையே 92 இல் ரஹ்மான் செய்தார் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. இதை மறுப்பவர்கள் ஒன்று இளையராஜாவின் தீவிர ரசிகர்களாகவோ அல்லது தமிழ் இசையின் வரலாறு தெரியாதவர்களாகவோ மட்டுமே இருக்க முடியும். அன்னக்கிளியின் இசைக்கும் ரோஜாவின் இசைக்கும் நாட்டுப்புற மேற்கத்திய இரு துருவ வேறுபாடுகள் இருந்தாலும், இரண்டுமே ஒரு நவீன யுகத்தின் signature tune போன்று ஒலித்தன. இளையராஜாவின் வருகை தமிழகத்தையே உலுக்கியது என்றால் ரஹ்மானின் வருகையில் இந்தியாவே அதிர்ந்தது.
சிகரங்களைத் தொட்ட ரோஜாவின் பாடல்கள் ஒரு புதிய சகாப்தத்தை படைத்தது நம் கண்ணெதிரே நடந்த ஒரு சமீபத்திய சரித்திரம். ஒரு குதூகலமான அதே சமயம் தமிழ்த்திரையில் பல வருடங்களாக காணாமல் போயிருந்த அழகான இலக்கியத் தமிழில், நல் கவிதை பாடும் வரிகளோடும், ஆப்ரிக்க ரெகே இசையின் தாளத்தில் வெடித்துக்கிளம்பிய "சின்ன சின்ன ஆசை" கேட்டவர்களை எல்லாம் ஒரு கணம் திடுக்கிட வைத்தது. கேட்பவர்களின் உதட்டிலும் மனதிலும் ஒரு சேர அந்தப்பாடல் ஒரு குளிர் காலப் பனி போல உறைந்தது. இசையின் பரிமாணங்கள் இப்படியும் வேறுவிதமாக இருக்க முடியுமா என்ற ஆச்சர்யத்தை அளித்தது அப்பாடல். ரெகே இசையின் தீற்றுகள் நம் தமிழிசையில் ரஹ்மானுக்கு முன்பே இருந்தாலும் (பச்சை மரம் ஒன்று- ராமு, எம் எஸ் வி, நான் நன்றி சொல்வேன்- குழந்தையும் தெய்வமும்,எம் எஸ் வி, பாட வந்ததோ கானம்- இளமைக் காலங்கள், இளையராஜா, வனக்குயிலே-பிரியங்கா,இளையராஜா ) சின்ன சின்ன ஆசை பாடலின் அடிநாதமாக பாடல் முழுதும் பயணித்த ரெகே தாளம் அதுவரை தமிழ் திரையிசையில் கேட்கப்படாத ஒரு நளினமான நவீனம். இது ஒரு பொன் மாலைப் பொழுதுக்குப்பிறகு வைரமுத்து மறுபடி பிறந்தார்.அவர் தன்னை இன்னொரு முறை புதுப்பித்துகொண்டு இரண்டாவது ஜனனம் எடுக்க, பாடலின் சிறகடிக்கும் புதுவித இசை, கவிதை போர்த்திய தரமான வரிகள், உருக்கும் குரல் என சின்ன சின்ன ஆசை ஒரு சூறாவளி போல் இந்தியாவை வாரிச் சுருட்டியது. தமிழகத்தில் இந்தப் பாடல் ஒரு பேரலையாக வந்து அதுவரை கேட்டுகொண்டிருந்த உளுத்துப்போன வறட்டு இசையை கவிழ்த்துப் போட்டது. இளையராஜாவுக்கு மாற்று யார் என்ற நீண்ட நாள் கேள்விக்கு விடையாக வந்திறங்கியது சின்ன சின்ன ஆசை.
"புது வெள்ளை மழை" தமிழில் நீண்ட காலம் உறக்கம் கொண்டுவிட்ட வார்த்தைகளை வாத்தியங்களுக்கு முன்னே உலவ விடும் வடிவத்தை மறுபடி பிரசவித்தது. குரல்களை நெறிக்காமல், கவிதையை இடைஞ்சல் செய்யாத தாளம் இசையின் வண்ணத்தை பளீரென வெளிக்காட்டியது. சந்தேகமில்லாமல் இது அற்புதமாக உருவாக்கப்பட்ட கானம்.
ருக்குமணி பாடல் ஒரு பின்னடைவு. ரஹ்மானின் மிக மோசமான பாடல்களில் இதுவும் ஒன்று. ஆபசாமான பாடல் என்பதில் மாற்றுகருத்தே இல்லை. இப்படியான பாடல்கள் வருவது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டதின் எச்சமே இப்பாடல் என்று நினைக்கத் தோன்றுகிறது. இப்போது ரஹ்மானே கூட இந்தப் பாடலை விரும்ப மாட்டார் என்று நினைக்கிறேன்.(இதை முதல் முறை கேட்ட போதே எனக்குப் பிடிக்காமல்போனது).
தமிழா தமிழா இதுவரை நம் இசை காணாத வேறு தளத்தில் இயங்கியது. மடைதிறந்து கொட்டப்போகும் கன மழை ஒரு சிறிய தூற்றலோடு துவங்குவதைப்போன்று ஹரிஹரனின் ஆர்ப்பாட்டமில்லாத குரலோடு துவங்கி, பாடல் செல்லச் செல்ல அங்கங்கே வந்து இணையும் வாத்தியங்கள் பாடலை வேகமாக நகர்த்த, குரல், இசை,தாளம் எல்லாம் இறுதியில் explosion mode அடைந்து வெடிக்க இநதப் பாடல் கேட்பவர்களுக்கு adrenaline rush அனுபவத்தைக் கொடுத்தது. மேற்கத்திய இசையில் பிரசித்தி பெற்ற crescendo இசை பாணியில் ஒரு சிறியவன் தன் முதல் படத்திலேயே ஒரு பாடலை அமைப்பது சவாலானது.(தமிழில் பொதுவாக சினிமாவில் வரும் சில ஆன்மீகப் பாடல்கள் இவ்விதமான உயரும் இசை பாணியில் அமைக்கப்பட்டிருக்கும்) ரஹ்மான் இதை செய்தார் என்பதை விட மிக சிறப்பாகச் செய்தார் என்பதே அவரின் இசை எல்லைகளுக்கு உதாரணம் காட்டுகிறது.
ரோஜா படத்தின் முகவரியாக சின்ன சின்ன ஆசை ஒலித்தாலும் கேட்டவர்களை சிலிர்க்க வைத்த கானம் காதல் ரோஜாவே. நேர்த்தியாக பின்னப்பட்ட ஆடைபோல, தத்ரூபமாக வரையப்பட்ட ஓவியம் போல, சிறப்பாக செதுக்கப்பட்ட சிற்பம் போல இது ஒரு இசை அற்புதம். ஒரு சாதாரண ஹம்மிங்குடன் துவங்கி, பின்னணியில் கொப்பளிக்கும் bass இசை இணைய யாரும் கணிக்காத கணத்தில் துடிப்பான slow rock ட்ரம் துவங்க எஸ் பி பி யின் வழுக்கும் குரலில் காதல் ரோஜாவே ஆரம்பிக்கும்போதே அது கேட்பவர்களின் உள்ளதை உருக்கிவிடுகிறது. பிரிவின் துயரத்தை நெஞ்சைத் தொடும் வரிகள் உணர்த்த ("முள்ளோடுதான் முத்தங்களா சொல் ") எந்த இடத்திலும் இசை தன் எல்லைகளை மீறாமல் பாடலின் உன்னதத்தை குலைக்காமல் நம் காதுகள் வழியே உள்ளத்துக்குள் நுழைந்துவிடுகிறது. உண்மையில் இந்தப் பாடல் ஒரு புது யுகத்தின் அவதாரமாக அவதரித்தது என்பது மிகை இல்லாத வர்ணனை.
ரோஜாவின் பாடல்கள் அனைத்துமே தமிழ் ரசிகர்களுக்கு இன்னிசை விருந்தை சுவைபட வழங்கியது. புதிய வாசம் நறுமணம் வீச, தன் முதல் படத்திலே இந்தியா முழுவதுக்கும் அறிமுகமானார் ரஹ்மான். அவரின் இசையிலிருந்து புறப்பட்ட பலவித ஓசைகளும் வசீகரப் படுத்தும் இசை கோர்ப்புகளும் ரசிகர்களுக்கு புது யுகத்தின் நம்பிக்கையையூட்டின.இப்படிக் கூட இசை இருக்க முடியுமா என்று ஒரு பாமரன் ஆச்சர்யப்பட்டான். காலி பெருங்காய டப்பா என்று வர்ணிக்கப்பட்ட முந்தைய தலைமுறையினரின் இசைக்கு முடிவு கட்டியது ரஹ்மானின் துள்ளல் இசை. அதுவரை உலக இசையின் இன்பத்தை மறுத்து கதவுகளை மூடியிருந்த இளையராஜாவின் இசைக்கு முற்றுப்புள்ளி வைத்தது ரஹ்மானின் துடிக்கும் இசை. நடக்காத சாத்தியம் நிகழ்ந்தது. புயலிசை என்று பாராட்டப்பட்ட ரஹ்மானின் வரவுடன் நம் இசையின் அடுத்த சகாப்தம் துவங்க இளைய தலைமுறையினர் ஏக்கத்துடன் காத்திருந்த நவீன இசை வடிவம் இறுதியில் தமிழ்த்திரைக்கு வந்து சேர்ந்தது.
Missed at first என்பதுபோல் நான் நழுவவிட்ட ஒரு தருணதில் தமிழகத்தில் ரோஜா பாடல்கள் அதகளம் செய்துகொண்டிருந்த போது, நான் பல ஆயிரம் மைல்கள் தாண்டி இந்தியாவின் இன்னொரு எல்லையில் இருந்தேன். என் தமிழ் நண்பர் சென்னையிலிருந்து அப்போதுதான் அங்கு திரும்பியிருந்தார். வந்தவர் என்னிடம் ஒரு ஆடியோ கசெட்டை கொடுத்து," கேளுங்கள் இதை. இளையராஜாவுக்கு மூட்டை கட்டியாகிவிட்டது." என்றார். "என்ன?" என்றேன் புரியாமல்." ரஹ்மான் என்று ஒரு சின்னப் பையன் வந்திருக்கிறான் ரோஜா என்ற படத்தில். பாடல்கள் அனைத்தும் அதிரடியாக இருகின்றன ."என்று படபடத்தார். எனக்கோ இது ஒரு வழக்கமான பல்லவிதான் என்று தோன்றியது. அவ்வப்போது இப்படி சில புதிய இசைஞர்கள் வந்ததும் அவ்வளவுதான் இளையராஜா காலி என்று சொல்வது வாடிக்கைதான். எனவே கொஞ்சமும் ஆர்வமில்லாமல் ரோஜா பாடல்களை கேட்க ஆரம்பித்தேன்.ஆனால் முப்பது நிமிடங்களுக்குப் பிறகு என் எண்ணங்கள் எதிர் திசையில் சென்றுகொண்டிருந்தன. இருந்தும் அப்போதுகூட என்னால் இளையராஜா என்னும் இருபது வருட இசை மாளிகையை இந்த ரஹ்மான் என்ற சிறிய சுத்தியல் உடைத்துவிடும் என்று நம்ப முடியவில்லை.
ரோஜாவின் அமானுஷ்ய வெற்றிக்குப்பிறகு புதிய முகம் (பொருத்தமான பெயர்) என்ற தன் அடுத்த தமிழ்ப் படத்தில் (yodha என்ற மலையாளப் படமே இரண்டாவது) ரஹ்மான் மீண்டும் தன்னை நிரூபித்தாலும் பாடல்கள் ஏற்கனவே கேட்டது போல இருப்பதாக ஒரு பொதுவான விமர்சனம் எழுந்தது. ஆனால் உண்மையில் அவர் புதிய முகத்தில் நல்லிசையை தொடர்ந்து செய்திருந்தார். நேற்று இல்லாத மாற்றம் பாடல் அருமையாக வார்க்கப்பட்ட சிறப்பான கவிதை கொண்ட ஒரு மென்மையான நல்லிசை. பி சுசீலாவின் குயிலோசையில் வந்த கண்ணுக்கு மை அழகு ஒரு அபாரமான அழகியல் சுவை கொண்ட இசை விருந்து. இப்படியான நல் கவிதை ரஹ்மானின் வரவுக்குப் பிறகேதான் புத்துயிர் பெற்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.ரஹ்மான் முடிந்தவரை மோசமான கவிதைகளை பாடலாக்க மறுப்பவர் என்று அறியப்படுகிறார்.இது அவர் தரமான கவிதைகளை நேசிப்பதாலேயே சாத்தியப்படுகிறது.புதிய முகம் படப்பாடல்கள் சிறப்பாக இருந்தாலும் ரோஜாவின் வெற்றிக்கு முன் அவை நிற்கவில்லை. இதனால் பலர் அவரை ஒரு பட வியப்பு என்று முத்திரை குத்தி "சின்னப்பையன் தேறமாட்டான்" என்று கணித்தார்கள்.
93 இல் ரஹ்மானின் இசையில் வெளிவந்த ஜென்டில்மேன் படத்தின் பாடல்கள் வெடித்துக் கிளம்ப, தமிழகம் இந்த ஆளிடம் எதோ மாயம் இருக்கிறது என்று உணர்ந்துகொண்டது.என் வீட்டுத் தோட்டத்தில், பாக்காதே பாக்காதே (இது ஒசிபிசா குழுவினரின் கிலேலே கிலேலே என்ற பாடலின் நகல்),உசிலம்பட்டி பெண்குட்டி போன்ற பாடல்கள் காற்றில் கலகலத்தன. ஒட்டகத கட்டிக்க பாடல் போகும் வழியெல்லாம் அதிர்ந்தது. அந்தப் பாடலின் ராட்சத தாளம் கேட்டவர்களை மனம் லயிக்கச் செய்தது.அப்படியான ஒரு துள்ளல் இசை திடும் திடும் என துடிக்கும் இளம் இசை அதுவரை நம் தமிழ் திரை அறியாதது. அதே படத்தின் பெரிய வெற்றி பெற்ற சிக்கு புக்கு ரயிலு அடுத்த அதிரடியாக வந்து ரசிகர்களை கிறங்க அடித்தது. மேற்கத்திய பாப் பாணியில் கொஞ்சம் மைக்கல் ஜாக்சன் குரலில் பாடப்பட்ட இந்தப் பாடல் சந்தேகமில்லாமல் அதற்கு முன் இருந்த இசைச் சுவட்டை துடைத்துபோட்டது. இதுவே 90 களைச் சேர்ந்த இளைஞர்கள் விரும்பிய இசை.இவ்வாறான வேறுபட்ட இசையின் வெளிப்பாட்டையே மக்கள் வரவேற்றனர். It was understood that Rahman is here to stay.
அதே ஆண்டில் ரஹ்மானும் பாரதிராஜாவும் கை கோர்த்தது பலருக்கு வியப்பை அளித்தது. ரஹ்மான் ஒரு நவீன யுகத்தின் இசைக் குறியீடாக பார்க்கப்பட்டவர். அவர் மீது நகர் புறத்து சாயல் அதிகமாக இருப்பதாக எல்லோரும் எண்ணினார்கள். இதனாலேயே பாரதிராஜா தன் கிழக்குச் சீமையிலே படத்தில் ரஹ்மானுடன் இணைந்த போது அப்போது அது மேற்கும் கிழக்கும் சந்திக்காது என்ற ரீதியில் இகழப்பட்டது. பாரதிராஜா கம்ப்யூட்டர் குயில் என்று ரஹ்மானை அழைக்க படத்தின் பாடல்கள் வெளிவந்தபோது பலர் ரஹ்மானிடம் இப்படிப்பட்ட கிராமத்து இசை இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த சமயத்தில் சில உளவியல் காரணங்களை நாம் ஆராயவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 80,90 களில் கிராமத்து இசை என்றாலே அது இளையராஜாதான் என்ற பொதுக் கருத்து தமிழகத்தில் இருந்தது. இளையராஜாவின் கிராமத்து இசை நம் மண்ணின் இசையாக உள்வாங்கப்பட்டிருந்தது.இதனால்தான்தேவேந்திரன்,தேவா,ஹம்சலேகா,சந்திரபோஸ்,ராஜ்குமார், போன்ற பலரை ரசிகர்கள் புறக்கணித்தார்கள். ஏனென்றால் அவர்களின் இசையில் இளையராஜாவின் பாதிப்பு அதிகம் தென்பட்டு அவர்களின் தனித்தன்மை மாயமாகி இருந்தது. இதன் பின்னணியில் ரஹ்மான் பாரதிராஜாவுடன் கூட்டு சேர்ந்தபோது அது ரஹ்மானுக்கு ஒரு அமிலத் தேர்வாக அமைந்தது. Rahman had to do the tight rope walking. கிராமத்து இசையை கொடுக்கவேண்டிய கட்டாயமும் அதேசமயத்தில் அந்த இசையில் எந்த விதத்திலும் இளையராஜாவின் சாயல் இல்லாமலிருக்கவேண்டிய மிக சிரமமான ஏறக்குறைய சாத்தியமில்லாத நிர்பந்தமும் ரஹ்மானின் மீது அழுத்தமாக இருந்தது. எனவே கிழக்குச் சீமையிலே பாடல்களை ரஹ்மான் வெகு சிரத்தையுடன் கவனமாக கிராமத்து இசையின் அழகை சிதறடிக்காமல், தனது பாணியில் கொடுத்தார். இது அந்தப் படப்பாடல்களை வேறு பரிமாணத்திற்கு இட்டுச் சென்றது. உதாரணமாக மானுத்து மந்தையிலே பாடலில் இளையராஜாவின் சாயல் சற்றுமில்லாத ஒரு நவீன நாட்டுபுற இசையை நாம் கேட்கமுடியும்.ஆத்தங்கர மரமே மேற்கத்திய மெல்லிசையுடன் கூடிய ரசிக்கத் தக்க வகையில் அமைக்கப்பட்ட சிறப்பான பாடல்.எதுக்கு பொண்டாட்டி என்னைப் பொறுத்தவரை ஒரு கீழ்த்தரமான பாடல். காத்தாழ காட்டு வழி, தென் கிழக்கு சீமையிலே இரண்டும் நேர்த்தியானவை. இருந்தும் பலரால்(அவர்கள் யார் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை) இவை புறக்கணிப்படுவது ஒரு தீவிர வெறுப்பின் வெளிப்பாடேயன்றி வேறொன்றுமில்லை.
இதே ஆண்டில் ரஹ்மான் தன் அடுத்த கிராமத்து இசையை உழவன் படத்தில் மிக அழகாகக் கொடுத்திருந்தார். பெண்ணெல்ல பெண்ணெல்ல ஊதாப்பூ என்ற பாடல் கேட்கும் முதல் கணத்திலேயே நம் உள்ளத்துக்குள் ஊடுருவி விடுகிறது. வார்த்தைகள் இசைக்குள் காணாமல் போகாமல் எஸ் பி பியின் குழையும் குரலில் ரம்மியமான ராக வளைவுகளோடு அபாரமாக இசைக்கப்பட்ட கானம். கண்களில் என்ன ஈரமா அடுத்த நல்லிசை. ரஹ்மான் இவ்வாறு நாட்டுபுற இசையில் தன்னை நிரூபித்தாலும் அவர் அதை வெகு சிரத்தையுடனே செய்யவேண்டியிருப்பது அவருக்கு ஒரு பின்னடைவே.
மணிரத்னத்தின் திருடா திருடா படப் பாடல்கள் மீண்டும் ரஹ்மானின் களத்தை இனம் காட்டின. ரஹ்மானின் பொற்காலப் பாடல்களில் கண்டிப்பாக இடம்பெறக்கூடிய இசையாக இது இருந்தது.புத்தம் புது பூமி வேண்டும் அபாரமான புதுக் கவிதையுடன் இன்னிசை சேர்ந்த அற்புதமான கானம். பாடல் பயணிக்கும் விதம் கேட்பவரை அதற்குள் இழுத்துச் சென்று விடுகிறது.வழக்கமான துள்ளலான ரஹ்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பாடல் அதிவேக ராக் இசையின் கூறுகளை தமிழில் அழகாக வெளிகொணர்ந்தது. இவ்வாறான மேற்கத்திய இசையின் விழுமியங்களை தமிழுக்கு கொண்டுவருவதில் இளையராஜா அதிக அக்கறை காட்டாததினால் ரஹ்மானின் இசையில் அவை சிறப்பு பெறுகின்றன. தீ தீ பாடலில் ரஹ்மான் சைனீஸ் பாடகியான கரோலினை பாட வைத்திருந்தது புதுமை.ராசாத்தி பாடல் வெறும் மனித குரல் மட்டுமே பிரதானமாக ஒலிக்கும் Acappella வகையைச் சார்ந்தது. இவ்விதமான புதிய முயற்சியை ரஹ்மான் தமிழுக்கு அறிமுகம் செய்தது நம் இசையை பல அடுக்குகளுக்கு உயர்த்திச் சென்றது. மிகப் பிரபலமான வீரபாண்டிக் கோட்டையிலே தளபதி படத்தின் ராக்கம்மா கையத் தட்டு பாடலின் ரஹ்மான் வடிவம் போலவே ஒலித்தது. இரண்டிற்கும் ஒரு வினோத ஒற்றுமையை நாம் காணலாம். இறுதியாக இசைஅருவியாக கொட்டிய சந்திரலேகா பாடல் ஒரு அழகான அற்புதம். தமிழில் இதுபோன்ற குரல் கொண்டு யாரும் இதன் முன் பாடியதில்லை என்று தாராளமாகச் சொல்லலாம். அனுபமாவின் ஆச்சர்யப்படுத்தும் மிரட்டும் கவர்ச்சிக் குரலில் கொஞ்சம் நிலவு பாப் இசையின் தாளத்தில் நம்மை இன்பமாக துன்புறுத்திய கானம்.எம் எஸ் வி காலத்தோடு காணமல் போயிருந்த ரம்மியமான கோரஸ் பாணியை ரஹ்மான் மீட்டெடுத்தார்.
ரஹ்மான் விரைவாக படங்களுக்கு இசை அமைப்பதில்லை.அவரிடம் இளையராஜாவின் வேகம் கண்டிப்பாக இல்லை என்பது உண்மையாக இருந்தாலும் 94 ஆம் ஆண்டு ரஹ்மானின் இசை இன்னும் பலவிதமான திகைப்பூட்டும் திசையை நோக்கி நகர்ந்தது.மொத்தமே பத்து படங்களுக்கு மட்டுமே அவர் இசையமைத்தார். அவற்றில் ஏழு தமிழ்ப் படங்கள்.
வண்டிச்சோலை சின்னராசு- செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே, சித்திரை நிலவு, இது சுகம்
மே மாதம்-மார்கழிப் பூவே,என் மேல் விழுந்த மழைத் துளியே,மெட்ராச சுத்திப் பாக்க, மின்னலே
பவித்ரா-செவ்வானம் சின்னப் பெண்,மொட்டு விடாத,
கருத்தம்மா- போறாளே பொன்னுத்தாயி,பச்ச கிளி பாடும், தென் மேற்கு பருவக்காற்று
புதிய மன்னர்கள்-எடுடா அந்த சூரிய மேளம்,நீ கட்டும் சேலை,வானில் ஏணி,ஒன்னு ரெண்டு மூணுடா
மேலுள்ள எல்லா பாடல்களும் என் விருப்பத்திற்குரியவை அல்ல என்றாலும் மின்னலே,இது சுகம் செவ்வானம்,வானில் ஏணி போன்ற பாடல்கள் அருமையானவை.பொதுவாக ரஹ்மான் Acappella பாணியில் அவ்வப்போது சில பாடல்களை அமைப்பது வழக்கம். சித்திரை நிலவு,என் மேல் விழுந்த மழைத் துளி போன்ற பாடல்கள் அந்த வார்ப்பில் வந்த சிறப்பான பாடல்கள். இசையின்றி மனித குரலை மட்டுமே வைத்து பாடல் படைப்பது தமிழுக்கு ஒரு புதிய பாணி.
இன்னும் இரண்டு படங்களைப் பற்றி இங்கே சொல்லவேண்டியது அவசியப்படுகிறது. ஒன்று புயலைக் கிளப்பிய காதலன். அப்படத்தின் பாடல்கள் ரஹ்மானின் ஆளுமையை நங்கூரம் போட்டு நிறுத்தின. இராணி குரதானி என்ற பாடலைத் தவிர மற்ற அனைத்துப் பாடல்களும் நேர்த்தியானவை. ரோஜாவுக்குப் பிறகு ரஹ்மான் இந்திய அளவில் மீண்டும் பேசப்பட்டார்.என்னவளே பாடல் கர்நாடக ராகக் கலப்பில் வந்த சிறப்பான மெல்லிசை. ரஹ்மானை விமர்சிக்கும் பலர் அவரிடமிருந்து வந்த நல்லிசையையும் சேர்த்தே சாடுவது ஒரு விதத்தில் ரஹ்மானின் மீது அவர்கள் கொண்டுள்ள வன்மத்தையே வெளிப்படுத்துகிறது. என்னவளே மிக மென்மையாக காற்றைப் போல உரசிச் செல்ல,காதலிக்கும் பெண்ணின் பாடலோ நவீன தாள ஓசையுடன் நம்மை தொட்டுச் சென்றது.பாடல் முழுவதும் ஒரே தாளக்கட்டு சேர்ந்தே செல்ல இப்பாடல் புதிய இலக்கை அடைந்தது. பேட்ட ராப் தரமான பாடலாக இல்லாவிட்டாலும் தமிழில் அது ஒரு மிகப் புதிய முயற்சி என்பதில் சந்தேகமே இல்லை. இதற்கு முன்பே ராப் பாணி தமிழில் அறிமுகப்பட்டிருந்தாலும் பேட்ட ராப் அடிதடியாக அதிர்ந்தது. ஊர்வசியோ துள்ளல் இசையாக ஒலித்தது. அதன் டெக்னோ பீட் தமிழிசையில் ரசிகர்கள் கேட்காத இசை அனுபவத்தை அளித்தது. ஆனால் இதை இன்னொரு ரஹ்மான் துள்ளல் இசை என்று வசதியாக புறந்தள்ளக்கூடிய சாத்தியம் பலருக்கு இருக்கிறது. தெருவெங்கும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் உதடுகளில் ஊர்வசி உலா வந்தாள். இறுதியாக காதலன் படத்தின் முகவரியான அகில இந்தியாவையும் அதிர வைத்த முக்காப்லா பாடல் ஒரு ஆர்ப்பாட்டமான அற்புதம். பாடலின் இறுதியில் ரஹ்மானின் பின்னிசை தாறுமாறாக துடிக்க,அட இது என்ன புதுவிதமான இசை என்று கேட்டவர்கள் வியந்தார்கள். இளையராஜாவின் அலுப்பூடக்கூடிய மேற்கத்திய இசை பரிசோதனைகள் நமக்கு கொடுத்த துன்பங்கள் காலைப் பனி போல ரஹ்மான் இசை வெளிச்சத்தில் காணாமல் போயின. (உதாரணமாக அக்னி நட்சத்திரம், அஞ்சலி, வெற்றி விழா, என்ற அவரின் பிற்கால மேற்கத்திய மார்க்கப் பாடல்கள் நம் இசைக்கும் மேற்கத்திய இசைக்கும் இடையே மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நின்றன.) ரஹ்மான் வியப்பான வகையில் தமிழ்த் திரையிசையின் போக்கை வேறு பாதையில் கொண்டு சென்று கொண்டிருந்தார்.
காதலன் படத்தில் புயலாக அதிரடி செய்த அதே ரஹ்மான் டூயட் படத்தில் யூ டர்ன் அடித்து ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் தென்றலாக வீசினார். அவரால் இந்த முரண்பாட்டை சிறப்பாக சமன் செய்ய முடிந்தது. தான் ஒரு துள்ளல் இசைஞர் மட்டுமே இல்லை என்பதை ரஹ்மான் இசையின் அழகியல் கூறுகளை சிதைக்காமல் வெகு நளினமாக டூயட் படத்தின் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினார்.கத்திரிக்கா, குளிச்சா குத்தாலம் தமிழில் பகடிப்பாடல் வகையில் வருபவை. அதையும் வழக்கமான நக்கலாக இல்லாமல் வேறு வண்ணம் கொண்டு வரைந்திருந்தார் ரஹ்மான்.வெண்ணிலவின் தேரில் ஏறி,நான் பாடும் சந்தம் இரண்டும் ஒரு ஓடை சல சலக்கும் ரம்மியமான உணர்வை உள்ளடக்கி கேட்டவர்களை தாலாட்டின. படத்தின் பிரதானமாக இசைக்கப்பட்ட அஞ்சலி என்ற பாடல் ஒரு திகட்டாத தேன்சுவை கொண்ட மனதை மென்மையாக ஆக்ரமிக்கும் கானம். பத்ரி கோபால்நாத்தின் சாக்ஸ் ரஹ்மானின் இசையை வேறு பரிமாணத்துக்கு இட்டுச் சென்றது. எஸ் பி பி யின் உருக்கும் குரலில் அழகிய இலக்கிய வரிகள் மெருகூட்ட என் காதலே சந்தேகமில்லாமல் மிக மிக அருமையான பாடல். அதிரும், நெரிக்கும்,இடைஞ்சல் செய்யும் இசை எதுவுமின்றி பாடகனின் குரல் மட்டுமே பாடலை நடத்திச் செல்கிறது. இடையிடையே இணையும் சாக்ஸ் இசை பாடலை கூறு போடாமல் இன்னும் அழகேற்றுகிறது. இவ்விதமான புதுமையான இசை அனுபவம் தமிழ் ரசிகர்களுக்கு அதுவரை எட்டாக்கனியாக இருந்துவந்தது. மேலும் பாடல் என்றாலே அதில் வாத்தியங்கள் விளையாட வேண்டும் என்ற வினோத விதி இவ்வகையான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்தது. ஆனால் ரஹ்மான் மிகத் துணிச்சலாக புதிய நீர்களில் கால் வைத்தார்.(எழுத்தாளர் ஜெயகாந்தனின் இயக்கத்தில் புது செருப்பு கடிக்கும் என்ற படத்தின் சித்திரப்பூ சேலை என்கிற பாடலும் இதே போல மிகக் குறைந்த வாத்திய ஒலிகளோடு எஸ் பி பி யின் குரலில் வந்த சிறப்பான பாடல். ஆனால் படம் வெளி வரவில்லை.பாடல் இன்றுவரை சிலரை மட்டுமே அடைந்திருக்கிறது ). டூயட் படத்தின் ஒரே துடிப்பான இசை கொண்ட பாடல் மெட்டுப்போடு. மிருதங்கமும் ட்ரம்ஸும் ஆங்காரமாக தாளம் போட எளிமையான வரிகள் தெளிவாக ஒலிக்க இந்தப் பாடல் ரஹ்மானின் இசை அடையாளத்தின் மீது வேறு ஒளியைப் பாய்சுகிறது.இன்று பல இசை ரசிகர்கள் டூயட் படப்பாடல்களை ரஹ்மானின் பொற்காலப் பாடல்களாக கருதுவதில் வியப்பேதுமில்லை.
நம்மிசைகும் சமகாலத்து மேற்கத்திய இசைக்கும் இடையே இருந்த சுவர்களை ரஹ்மானின் துடிப்பான இசை உடைத்தது. ரஹ்மானை விமர்சனம் செய்யும் பலரும் சொல்லும் காரணம் இதுவே. அவர்கள் ரஹ்மான் ஆங்கில இசையை நகல் எடுப்பவர் என்று ஒரே குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். இது ஒரு விதத்தில் உண்மையாக இருந்தாலும் இவ்வாறான நகல் எடுக்கும் பாணி இல்லாத இசை அமைப்பாளரை நாம் தமிழ்த்திரையில் காண முடியாது.மேலும் ரஹ்மானை அவர்கள் ஒரு சி ஐ ஏ ஏஜென்ட் ரீதியில் குற்றம் சுமத்துகிறார்கள். உலகமயமாக்கலால் இந்தியாவில் ஏற்பட்ட பல மாற்றங்களில் ஒன்று ரஹ்மானின் இசை என்பது அதில் ஒன்று. சில சினிமா பட முதலாளிகளால் செயற்கையாக உருவாக்கப்பட்டவர் ரஹ்மான் என்றும், பெப்சி,கோக்,பீட்சா போல அவர் ஒரு அந்நிய சக்திகளின் கைப்பாவையாக தமிழ்த் திரையில் முன்னிறுத்தப்பட்டதாகவும் ஒரு புதிய கான்ஸ்பிரசி தியரியை முன்வைக்கிறார்கள். இவ்வாறான மிகவும் சிக்கலான சிண்டிகேட் அமைப்பை போல இந்தியாவின் இசை வணிகத்தை தன் வசம் வைத்திருக்க சில முகம் தெரியாத பண முதலைகள் ரஹ்மானை குத்தகைக்கு எடுத்திருப்பதாக பழி சொல்வது எல்லாமே அபத்தத்தின் வெளிப்பாடேயன்றி வேறொன்றுமில்லை. எப்படி இளையராஜாவின் காலத்தில் தொழில் நுட்பம் மோனோவிலிருந்து ஸ்டீரியோவுக்கு மாறியதோ, எப்படி மக்கள் கைக்கு இலகுவாக அகப்படும் பொருளாக டேப் ரெகார்டர் வந்ததோ அதே போல ரஹ்மான் காலத்தில் தொழில் நுட்பம் அடுத்த கட்டத்திற்கு சென்றது.சி டி க்கள் மிகத் தெளிவான இசையை அளித்தன. இசையின் பன்முகத்தன்மை இன்னும் வீரியமாக வெளிப்பட்டது. (இன்டர்நெட் அனிரூத் இசையை உலகம் முழுவதும் எடுத்துச் சென்றதைப் போல).
அடுத்து ரஹ்மான் வெறும் சவுண்ட் எஞ்சினீயர் அவருக்கு இசை அறிவு கிடையாது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இது இளையராஜாவைவும் ரஹ்மானையும் ஒப்பிடுவதால் உண்டாகக்கூடிய ஒரு தோற்றம்.உண்மையில் ரஹ்மான் இளையராஜாவைப் போன்று இசை மேதமை உள்ளவரா என்பது கேள்விக்குரியதே. இளையராஜா போன்று காலத்தை தாண்டிய பல பாடல்களை ரஹ்மான் அமைக்கவில்லை என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். அப்படியானால் இதே அளவுகோல் கொண்டு நாம் எம் எஸ் வி யையும் இளையராஜாவையும் ஒப்பீடு செய்தால் பின்னவர் கண்டிப்பாக பல படிகள் கீழேதான் இருப்பார். இவ்வாறான அபத்தமான ஒப்பீடுகளை விட அவரவர்கள் அவர்கள் காலத்தில் எவ்வாறு இசை பங்களிப்பு செய்தார்கள் என்று அவற்றை மட்டும் விமர்சனம் செய்வதே உகந்தது என்று தோன்றுகிறது. பழைய இசை ஜாம்பவான்களை இளையராஜா மிஞ்சிவிட்டார், அவர் குருக்களை மிஞ்சிய சிஷ்யன் போன்ற குதர்க்கமான புகழாரங்கள் இளையராஜாவுக்கு எதிராக ரஹ்மானை நிறுத்துகின்றன. ஏனென்றால் வணிக ரீதியாக ரஹ்மான் தொட்ட உயரங்கள் இளையராஜாவை விட அதிகம் என்பதாலும் ரஹ்மான் இளையராஜாவுக்கு சரியான மாற்றாக வந்தார் என்பதாலும் இந்த நிலைப்பாடு உருவாகிறது.
ரஹ்மானின் இசையில் ஓசைகளே அதிகம் அவை வார்த்தைகளை கேட்கவிடுவதில்லை என்பது ஓரளவுக்கு நியாயமானதே. காதல் தேசம் படத்தின் கல்லூரிச் சாலை, டாக்டர் போன்ற பாடல்கள் அப்படியானவைதான். ஆனால் இதே குற்றச்சாட்டு இளையராஜாவின் மீதும் துவக்கத்தில் சுமத்தப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உண்மையில் ரஹ்மான் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வது அவரின் பல பாடல்களை கேட்கும் போது நமக்குப் புரிகிறது. சிலர் ரஹ்மானை கம்ப்யூட்டர் கொண்டு எம் எஸ் வி பாணி பாடல்களை தருபவர் என்று விமர்சிக்கிறார்கள். இளையராஜாவின் காலத்தில் வார்த்தைகள் பின்னடைவை அடைந்தன. இசை பிரதானமானது. ரஹ்மான் இந்த எதிர் சுழற்சியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவந்தார். இதனாலேயே ரஹ்மானின் இசையில் இணைப்பிசை (interlude) சாதாரணமாக இருந்தது. இணைப்பிசையின் பங்கை ரஹ்மான் வெகுவாகக் குறைத்தார்.இல்லாவிட்டால் அவரின் பாடல்கள் இளையராஜா இசையின் தொடர்ச்சியாக அமைந்துவிடக்கூடிய சாத்தியங்கள் இருந்ததால் அவர் இதை வேண்டுமென்றே செய்தார் என்று நாம் கணிக்கலாம். கவிதைக்கு முக்கியத்துவம் அளித்து இணைப்பிசையை பின்னுக்குத் தள்ளி உலக இசையின் பலவித கூறுகளை பயன்படுத்தி இசையை மறுபடி வழக்கமான சுழற்சிக்கு அவர் கொண்டுவந்ததினால் அவர் பாடல்கள் இளையராஜாவின் பாடல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இசை அனுபவத்தை கொடுத்தன.
மேலும் ரஹ்மான் வரவிற்கு பின்னரே தமிழ்த் திரையில் பலவிதமான பாடகர்கள் தோன்ற ஆரம்பித்தார்கள். (தமிழை சரியாக உச்சரிக்காதவர்களும் இதில் அடக்கம். ஜென்சி, எஸ் பி ஷைலஜா வகையறாக்களை இளையராஜா அறிமுகம் செய்ததைப்போல). எஸ் பி பி,ஜானகி, சித்ரா, மனோ என்ற ஆயத்த வரைமுறை வேறுவடிவம் கண்டது. ஹரிஹரன், ஹரிணி, ஸ்ரீநிவாஸ், சுரேஷ் பீட்டர்ஸ்,உன்னி மேனன், உன்னி கிருஷ்ணன்,அனுபமா,நித்யஸ்ரீ, மின்மினி,ஷங்கர் மகாதேவன் போன்ற பல குரல்கள் ஒலிக்கத் துவங்கின. தன் சி டிக்களில் அவருடன் பணியாற்றிய அணைத்து இசை உதவியாளர்களையும் பெயர்களையும் வெளியிட்டு அவர்களை அங்கீகரித்தது பொதுவாக நம் திரையுலகம் அறியாத ஒரு பண்பு. தன்னை மட்டுமே இசையின் முகமாக முன்னிறுத்தும் அகங்காரப் போக்கு ஒரு முடிவுக்கு வந்தது.
ரஹ்மான் இளையராஜாவை விட சிறந்தவரா என்ற கேள்வி இளையராஜாவின் ரசிகர்களால் எழுப்பப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை இந்தக் கேள்வியே அவசியமில்லை என்று தோன்றுகிறது. ஏனென்றால் இளையராஜா நம் தமிழிசையின் வேர்களோடு உறவு கொண்ட ஒரு இசைஞர். நம் மரபிசையின் தொடர்ச்சியாகவும் அதன் இறுதி இழையாகவும் இளையராஜாவின் இசை இருந்தது. அவருடன் ஒரு மிகப் பெரிய இசை சகாப்தம் முடிவு பெறுகிறது. எம் எஸ் வி, இளையராஜா, ரஹ்மான் என்று பொதுவாக நாம் பேசினாலும் ரஹ்மானின் இசை முற்றிலும் வேறுபட்ட களத்தில் பயணம் செய்வதால் அவரை நவீன யுகத்தின் முதல் முகமாகவே நாம் பார்க்க வேண்டும்.
ரஹ்மானின் வரவு ஒரு மகத்தான மாற்றத்தை தமிழ்த் திரையில் கொண்டுவந்தது என்பதை மறுப்பது கடினம். ஒரு மிகப் பெரிய கோட்டையின் மூடிய கதவுகளை அவர் உடைத்துத் திறந்து புதிய காற்றுகளுக்கு அனுமதி கொடுத்தார். Like a catalyst, he has made changes possible. ரஹ்மானின் ரசிகர்கள் அவர் பல சாதனைகளை நிகழ்த்தியிருப்பதாகச் சொல்கிறார்கள்.இருக்கலாம் ஆனால் இதுதான் ரஹ்மானின் மிகப் பெரிய சாதனை என்று நான் கருதுகிறேன்.
அடுத்து: இசை விரும்பிகள் XII - எழுந்த இசை