(இந்தப் பதிவில் நான் இளையராஜாவின் இசையின் மீது சில கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்திருப்பதால் அவரின் தீவிர ரசிகர்கள் இதைத் தவிர்ப்பது நலம்.படித்துவிட்டு விவாதம் புரிய விரும்பினால் அதை வரவேற்கும் அதே வேளையில் அவை அநாகரீகமாக இருக்கும் பட்சத்தில் அவை பிரசுரிக்கப்படாது என்றுணர்க.)
வீழ்ந்த இசை
இசை பெரியதா?அல்லது அதை கொடுக்கும் இசைஞன் பெரியவனா?.இந்தக் கேள்வியை மேலோட்டமாகப் பார்த்தால் இது catch-22 போன்று தோன்றும். இசை இல்லாவிட்டால் இசைஞன் இல்லை. இசைக்க இசைஞன் இல்லாவிட்டால் இசை இருக்காது. ஆனால் கொஞ்சம் இந்தக் கேள்வியை ஆழமாக ஊடுருவினால் உண்மையில் இது அப்படிப்பட்டதல்ல என்று நமக்குப் புலப்படும் . தான் இசைக்கும் இசையினாலேயே ஒரு இசைஞன் அறியப்படுகிறான். மதிப்பிடப்படுகிறான். அவனுடைய பிரதான முகமாகவும் அவனை இயக்கும் அதீத சக்தியாகவும் இருக்கும் இசை என்னும் அற்புதமே அவனைத் தாண்டிப் பேசப்படுகிறது. அந்த இசையே அவன் காலம் முடிவு பெற்ற பின்னும் நிலைத்து நிற்கிறது. தான் இசைக்கும் இசையை விட தான் உயர்ந்தவன் என்று அவன் நினைப்பது அவனுடைய தெளிவற்ற இசை மதிப்பீடுகளையும் தன் ஆளுமையின் மீதுள்ள கர்வத்தையும் அறிவிக்கிறது. இசை நதியைப் போன்றது. இசைஞனோ அதில் பயணம் செய்யும் படகு போன்றவன். படகு இல்லாவிட்டாலும் நதி இருக்கும் என்ற உண்மையை அவன் மாற்ற முயன்றால் அவன் நதியில் விழுந்து கரைந்து போகும் மழைத்துளி போல காணாமல் போய்விடுகிறான். ஏனென்றால் இசையை அவன் புதிதாக படைக்கவில்லை. கண்டுகொள்கிறான். இசை எப்போதுமே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. மனிதன் இங்கு தோன்றும் முன்பே இசை இங்கே இருந்தது.
அப்சலூடிஸம் (Absolutism) என்று ஆங்கிலத்தில் ஒரு வார்த்தைப் பதம் இருக்கிறது. சர்வாதிகாரத்தின் மறுபெயராக அது பயன்படுத்தப்படுகிறது. நல்ல விதமாக ஆட்சி செய்து கொண்டு வருபவர்கள் ஒரு காலகட்டத்தில் தான் செய்வதெல்லாம் நல்லதே என்று நினைத்துக் கொண்டு அராஜக வழியில் செல்வார்கள். அது அவர்களுக்குத் தோன்றும் ஒரு வித மாயத் தோற்றம் என்று அவர்கள் உணர்வதில்லை. எண்பதுகளின் மத்தியில் இளையராஜாவும் இப்படிப்பட்ட ஒரு மாயச் சுழலில் மாட்டிக்கொண்டு விட்டதாகவே தோன்றுகிறது. ஆரம்பத்தில் தன்னை நிரூபிக்கவும் தன் இசைதாகத்தின் இனிமையான முகமாகவும் சிறப்பான இன்னிசையை தாரளமாக வழங்கியவர் தமிழ்த்திரையிசையின் கடிவாளம் தன் கைகளுக்கு வந்ததும் தான் கொடுப்பதெல்லாம் சிறப்பானவையே என்று தன்னையே ஏமாற்றிக்கொண்டு தன் மனம் போன போக்கில் இசையின் தரத்தை விட தனக்கே முதலிடம் கொடுத்து நேர்த்தியான பாதையில் சென்றுகொண்டிருந்த நமது திரையிசையை தன் விருப்பத்துக்கேற்றாற்போல் வடிவமைத்தார்.வைரமுத்துவுடனான உறவை முறித்துக்கொண்ட பின்னர் அவர் நல்ல கவிதைகள் மீதும் ஈடுபாடு காட்டாமல் பேச்சு வழக்கில் இருக்கும் வார்த்தைகளை அளவில்லாமல் ராகங்களில் இணைத்து அவற்றை பாடல்களாக்கினார். முதலில் அவர் பாடல்களிலிருந்து நல்கவிதை நகன்று நின்றது . கொச்சை சொற்களும் இச்சை ஓசைகளும் அதனிடத்தை நிரப்பின.தமிழ்த்திரையிசையில் களைகள் ஒய்யாரமாக வளர்ந்து நிமிர்ந்தன .நற்பயிர்களுக்கு நீரூற்றிய இளையராஜா களைகளுக்கும் வஞ்சனை இல்லாது உரமேற்றினார். பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்ட இளையராஜாவின் இவ்வாறான தரமில்லாத பாடல்களையும் நேர்த்தியான இசை என்று சொல்வதில் இருக்கும் தந்திரம் என்னவென்பதை நாம் அடையாளம் காணவேண்டும். என்னெவென்றால் இசை, ராகம் என பகட்டாக வெளியே தெரியக்கூடிய இரண்டு விஷயங்களைப் பற்றியே பல பத்திகள் எழுதிவிட்டால் அல்லது பேசிவிட்டால் இளையராஜாவின் பாடல்களில் உள்ள கவிதை வெற்றிடத்தை மூடி மறைத்துவிடக்கூடிய சௌகரியம் கிடைத்து விடுகிறது.கவிதையை எழுதுபவர் இளையராஜா இல்லாததால் இவர்கள் பாடல் வரிகளைப் பற்றிப் பேசுவதை சாமர்த்தியமாக தவிர்த்துவிடும் யுக்தியை கைக்கொள்கிறார்கள். எனது பார்வையில் 80களின் இறுதியிலும் 90 களிலும் வந்த முக்கால்வாசி இளையராஜாவின் பாடல்கள் நல்கவிதையை துறந்துவிட்ட நாலாந்தர வகையைச் சேர்ந்தவை.அவைகளில் சில பாடல்களில் நல்ல மெலடி, ராகத்தீற்றல்கள், இனிமையான இசை ஏனைய பிற இசை கலந்த சங்கதிகள் இருந்தாலும், தரமில்லாத வார்த்தைகள் திடீரென வாய்க்குள் கடிபடும் ஒரு சொத்தைக் கடலை போல எல்லா சுவைகளையும் கெடுத்துவிடுகின்றன.
இதைச் சொல்லும்போது இதைப் படிக்கும் பலருக்கு இதில் உடன்பாடு உண்டாவதில் சிக்கல்கள் இருப்பதை நானறிவேன். இளையராஜாவை இசையின் அவதாரமாகப் பார்க்கும் பல கண்கள் இந்த வாக்கியத்தை சட்டெனெ கடந்து செல்ல விருப்பம் கொள்ளும் அல்லது காண மறுக்கும்.அவரை இசையின் பிரதிநிதியாக நினைப்பவர்கள் அவரைப்பற்றிய எந்தவிதமான எதிர்மறை விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்வது கிடையாது என்பதும் தெரிந்ததே .எல்லாவற்றிற்கும் இரண்டு பக்ககங்கள் உண்டு என்ற விதியை அவர்கள் மறுதலிப்பது அவர்களால் எதிர்வினைகளோடு மோத முடியாத பலமின்மையை பிரதிபலிக்கிறது. விவாதம் என்று வந்தாலும் பதில் சொல்பவர்களில் பலர் அநாகரீக வார்த்தைகள் கொண்டு தனி மனித தாக்குதலுக்கு வரிசை கட்டி நின்று தங்கள் வீரத்தைக் காட்டத் தயங்குவதில்லை. அவரின் சாதனைகள் என்று பல சங்கதிகளை அவர்கள் வரிசையாக பட்டியலிட்டாலும் அவைகளில் பெரும்பான்மை அவரின் முன்னோடிகளால் வெற்றிகரமாக செய்யப்பட்டவையே.குறிப்பாக முன்னிசை, இடையிசை,பின்னிசை,மேற்கத்திய கலப்பு,நாட்டுப்புற இசை,மேற்கத்திய செவ்வியல் இசை, இவற்றின் கலப்பான புதுவித மெல்லிசை போன்ற இசையின் பலவிதமான முயற்சிகள் இளையராஜாவுக்கு முன்பே அரங்கேறிவிட்டன. தன் பங்கிற்கு இளையராஜாவும் சிறப்பான இசையை அளித்தார். இசையை வேறு பாதையில் நகர்த்திச் சென்றார்.புதுவித ஓசைகளை உண்டாக்கினார். நாட்டுப்புற இசையின் நவீன பரிமாணங்களை வீரியத்துடன் இசைத்தார். உண்மையில் இசையில் அவருக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார். இவற்றிக்கெல்லாம் உச்சமாக தமிழ்த் திரையிசையின் முகத்தையே முற்றிலும் மாற்றினார்.இத்தனை காலடிகளை அனாசயமாக எடுத்து வைத்து தமிழிசையின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்வாங்கப்பட்டவர் திடீரென அதே தமிழ்த் திரையிசையின் வீழ்ச்சிக்கு வித்திடும் வகையில் சாலைகளை மாற்றி அமைத்தார்.80 முதல் 92 வரை அவரே ராஜாங்கம் நடத்திக்கொண்டிருந்ததால் அவரால் தான் நினைத்தை எளிதாக செய்யமுடிந்தது. அவருடைய இசையறிவு வேறு பல உயரங்களுக்கு தமிழிசையை எடுத்துச் சென்றிருக்கலாம் தொடர்ந்து அவர் தன் இசையின் தரத்தை வணிக காரணிகளுக்காக விட்டுக் கொடுக்காமலிருந்திருந்தால். இன்றைக்கு தமிழ் திரையிசை வெகுவாக தரமிழந்து காணப்படுவதின் முதல் வித்து இளையராஜாவின் காலத்தில்தான் போடப்பட்டது.
ஒருமுறை என் கல்லூரி நண்பனொருவன் இசை பற்றிய விவாதத்தில் "தமிழ் இசையை கெடுத்ததே இளையராஜாதான்" என்று வெகு காட்டமாக குற்றம் சுமத்தினான்.வீடுகளின் வெளியே கேட்டுக்கொண்டிருந்த சாவுக்கொட்டு என்று சொல்லப்படும் இசையை வீடுகளின் உள்ளேயும் ஒலிக்க வைத்தவர் இவர் என்று அவன் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது இளையராஜா பற்றிய நாட்டம் அதிகம் இல்லாத காரணத்தினால் அதைப் பற்றி நான் மேற்கொண்டு தெரிந்து கொள்ள விரும்பவில்லை.கொஞ்சம் இதை ஆராய்ந்தோமானால் இதில் உண்மை இருப்பதையும், இசையில் வடிக்க முடியாத சில ஓசைகளை இளையராஜா இசையாக மாற்றி இருப்பதையும் உணரலாம்.சாவுக்கொட்டு, படுக்கையறை முனங்கல்கள், விரக தாப முக்கல்கள் இவைகளை நம் வீட்டு வரவேற்பறைக்கு அழைத்து வந்து தாய், தந்தை மற்ற உறவுகள் என்று ஒரு குடும்பமாக ரசிக்கும் நம் அழகான இசை ரசனையை கேலி செய்யும் வகையில் மனிதனின் அடிமட்ட வக்கிர இச்சைக்கு இளையராஜா தன் பல பாடல்களை தீனியாக்கினார். இதுவும் வாழ்கையின் ஒரு அங்கம் தானே என்று சப்பைக்கட்டு கட்டினாலும் இவ்வாறான தரமில்லாத இசையை இவரின் முன்னோடிகள் முயற்சி செய்யாததின் பின்னே இருக்கும் நாகரிக இசை உணர்ச்சியும், சமூக அக்கறையும் இவரிடம் இருந்து விலகிப் போனது ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை.
இளமை ஊஞ்சலாடுகிறது படத்தின் தண்ணி கருத்துருச்சு பாடல்தான் முதன் முதலாக இவரின் இசையில் வந்த ஆபாச பாடல்களின் ஆரம்பப் புள்ளியாக இருக்கக்கூடும்.அந்தப் பாடல் வானொலியில் ஒலிக்க துவங்கும் போதே நான் சட்டென வேறு அலைவரிசைக்கு வானொலியின் குமிழை திருப்பிவிடுவேன். பூட்டாத பூட்டுகள் என்ற படத்தில் வரும் ஆண்டிப்பட்டி மாரியப்பன் பொண்டாட்டி ( என்ன ஒரு "சங்கத்தமிழ் !") என்கிற பாடல் அடுத்த ஆபாசம்.இந்தப் பாடலை ஜானகி எப்படிப் பாடினார் என்பதை விட இதை தமிழின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவரனான மகேந்திரன் எப்படி அனுமதித்தார் என்பதை புரிந்துகொள்வதில் வியப்பே மிஞ்சுகிறது.பாட இயலாத சொற்களைக் கொண்டு பாடல்கள் புனைவதில் இளையராஜா ஒரு புதிய இசை சகாப்தத்தையே ஆரம்பித்து வைத்தார்.
பொதுவாக சரியாக பாடத்தெரியாமல் நளினமில்லாத குரலில் கர்ணகடூரமாக பாட முயற்சிப்பவர்களை கழுதையோடு ஒப்பிட்டு நாம் கிண்டல் செய்வதுண்டு.இந்தக் கேலிப் பேச்சையும் கவனத்தில் கொண்டு அந்த மலிவான ஓசையையும் வலிந்து தன் பாடல்களில் திணித்து கழுதைகள் கத்தும் சத்தத்தை இசையாக வடித்து அடுத்த சாதனையாக தன் இசையில் அதை கொண்டு வந்து இசை ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார் இளையராஜா.(ஆடுகள்,மாடுகள்,நாய்கள் சத்தம் போல இதுவும் ஒரு இசைதானே என்று நாம் சமாதானமடையலாம். நல்லவேளையாக கழுதைகளோடு நிறுத்திக்கொண்டார்.) 16 வயதினிலே படத்திலேயே இந்த மாதிரியான விபரீத விளையாட்டுகளில் தீவிரம் காட்ட துவங்கிவிட்டார் இளையராஜா. ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என்ற ஒரு நல்ல பாடல் ஆரம்பத்தில் நமக்கு தரும் சுகமான உணர்வு பாடலின் இறுதியில் வக்கிரமாக நம்மிடமிருந்து பிடுங்கப்பட்டு ஒரு கழுதையின் காணமே கடைசியாக காதுகளில் தங்குகிறது.சிறுவர்கள் இதை கேட்டு விட்டு குலுங்கிக் குலுங்கி சிரித்தார்கள். இதுவே இதனால் அவர் சாதித்தது. இவ்வாறான நாலாந்தர கலை ரசனை கொண்டவர்களை திருப்தி செய்ய இளையராஜா தேவையில்லை என்பது என் கருத்து.
அடுத்தபடியாக அவர் பாடல்களில் உள்ள கவிதைகளின் தரத்தைப் பற்றி சற்று ஆராயலாம். வைரமுத்துவின் பிரிவிற்கு பின்னே இவர் பாடல்களில் கவிதை கெட்டது என்பது ஒரு புறம் இருக்க அதற்கு முன்பிருந்தே இவரின் பாடல்களில் கொச்சைச் சொற்கள் சுதந்திரமாக உலா வந்தன. எளியவர்களின் பேச்சை இவர் கையாண்டார் என்று சொல்லி நகர்ந்து விட்டு அதற்கடுத்து அடுக்கடுக்காய் வந்து விழுந்த கவிதைக் குப்பைகளை வசதியாக மறந்தும் விடலாம்.ஆனால் இது நம் இசையின் சீரழிவிற்கு அடிகோலியதை உணர்வது அவசியம். "என்ன பாட்டு பாட" என்று பாட இயலாமையையே ஒரு பாடலாக பாடியவர், பிறகு தடம்புரண்டு தறிகெட்டு ஓடும் கவிதைக் குதிரைகளை அவிழ்த்துவிட்டார்.ஓரம்போ என்ற பாடல் தமிழ் வானொலிகளில் தடை செய்யப்பட்டதன் காரணமே அதன் வார்த்தைகள்தான்.பெண்களை இழிவாக கிண்டல் செய்வதெற்கேதுவான பாடலாக அது இருந்தது. இதுவே பரவாயில்லை என்னும் அளவுக்கு அதன்பின்னர் இளையராஜா பல கானங்களை களமிறக்கினார். (இளையராஜாவின் சாதனைகளில் இதற்கு இடம் இருக்கிறதா என்று தெரியவில்லை.) பெண்களை பகடி செய்யும் பல பாடல்கள் ஆரம்பத்திலிருந்தே நம் தமிழ்த் திரையில் கணக்கிலடங்காமல் இருக்கின்றன. ஆனால் அந்தப் பாடல்களின் வரிகள் கேட்பவரை முகம் சுளிக்க வைக்காத நல்லிசையாக இருந்தது. இழிவான வக்கிரத்தை தொடாமல் அவ்வகைப் பாடல்கள் நேர்த்தியாக ரசிக்கத்தக்க விதத்தில் இனிமையும் தரமான கவிதை வரிகளுமாக நம் நினைவுகளில் இடம் பிடித்திருக்கின்றன.
உதாரணத்திற்கு கீழ் உள்ள பாடல்களை பாருங்கள்:
என்ன கோபம் சொல்லு பாமா? (குழந்தையும் தெய்வமும்)
நடையா இது நடையா?(அன்னை இல்லம்)
பொம்பள ஒருத்தி இருந்தாளாம் (அதே கண்கள்)
பறவைகள் பலவிதம் (இருவர் உள்ளம்)
சிங்காரச் சோலையே உல்லாச வேளையே (பாக்யலக்ஷ்மி)
இப்போது இளையராஜாவிடமிருந்து வந்த இதே வகைப் பாடல்கள்.
வாடி எ கப்பங்கிழங்கே (அலைகள் ஓய்வதில்லை)
மைனா மைனா மாம புடிச்ச மைனா (பகல் நிலவு)
கட்டவண்டி கட்டவண்டி (சகலகலாவல்லவன்)
தளுக்கி தளுக்கி (கிழக்கு வாசல்)
ஓரம்போ ஓரம்போ (பொண்ணு ஊருக்கு புதுசு)
ஒரே தராசில் வைத்துப் பார்க்கவேண்டிய அவசியமே இல்லாதபடி பதினைந்து வருட இடைவெளியில் தமிழிசையின் தரம் தடாலடியாக கீழ் நோக்கிப் பாய்வதைப் பார்க்கலாம். வெகு கொச்சையான வார்த்தைகளும் விடலைகளின் இச்சையை சீண்டிப்பார்க்கும் இசையுமாக இவரின் பாடல்கள் உருவம் மாறத்தொடங்கின. "தண்ணி கருத்துருச்சு"என்று துவங்கிய இளையராஜாவின் "இசைப் புரட்சி" அவ்வப்போது பலவித மாற்றங்களோடும் வித்தியாசமான ஒலிகளோடும் படுக்கையறை ஓசைகளோடும் "நிலா காயுது" என்று ஆபாசத்தின் உச்சத்தை தொட்டது. எந்த இசை அமைப்பாளருக்கும் தோன்றாத ஒரு சிந்தனை இவருக்கு மட்டும் 1982 இல் எப்படி உதித்தது என்பது இதுவரை விடை காண இயலாத கேள்வி.
தமிழ்த்திரை பாரதிராஜா, மகேந்திரன், ராபர்ட் ராஜசேகரன், பாரதி வாசு, சக்தி, ருத்ரையா போன்ற பலரின் கைகளில் மெருகேற்றப்பட்டு,ஒரு புதிய சினிமா இங்கே உருவாகிக்கொண்டிருந்த வேளையில் ஏ வி எம் தயாரிப்பில் வந்த இரண்டு படங்கள் தமிழ் சினிமாவின் பாதையை மீண்டும் சாக்கடைகள் இருக்கும் திசைக்கு இட்டுச்சென்றன. இரண்டுமே இரண்டு மிகப் பெரிய ஆளுமைகள் நடித்த படங்கள். ஒன்று 80 இல் வந்த முரட்டுக்காளை. இந்தப் படத்தை வணிக நோக்கத்துக்காக ஒன்று கூடிய ஒரு வறட்டுத் திறமைகளின் சங்கமம் என்று ஒதுக்கிவிடலாம். இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி தமிழ்த்திரையின் போக்கை பதம் பார்த்தது. பாதங்களில் அடிபட்ட தமிழ் சினிமா நொண்டிக்கொண்டிருந்த சமயத்தில் இதை தொடர்ந்து வந்த மற்றொரு படம் ஒரு மாற்று சினிமாவுக்கான அத்தனை முயற்சிகளையும் முற்றிலுமாக முடமாக்கிப் போட்டது அந்த படம் 82 இல் வந்த சகலகலாவல்லவன்.
உண்மையில் இது 63 இல் வந்த பெரிய இடத்துப் பெண் என்ற படத்தின் தழுவல். ஆனால் இரண்டிற்கும் மலை-மடு, கோபுரம்-குப்பை வித்தியாசங்களை காணலாம். வியப்பான வகையில் சகலகலாவல்லவன் பல பழைய வர்த்தக சாதனைகளை உடைத்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால் இன்றைக்கு நாம் இதை நமது நினைவுகளிலிருந்து அகற்றிவிடுமளவுக்கு வெற்றிக்கான எந்த தகுதியும் இல்லாத,எந்தத் தரமும் இல்லாத பல ஆபாச குப்பைகளின் ஒட்டு மொத்தக் குறியீடாகவே இந்தப் படம் தமிழ் சினிமா வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. புதிய எல்லைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த தமிழ் சினிமாவின் போக்கையே தலைகீழாக புரட்டிப்போட்ட படம் என்று இதை சினிமா விமர்சகர்கள் இன்று அடிக்கோடிட்டு குற்றவிரல்களை நீட்டுகிறார்கள். இந்தப் படத்தில் நடித்த பெரிய நடிகரே இதை பார்ப்பதை தவிர்க்கவும் என்று இப்போது அறிவுரை சொல்லும் "கண்ணியமான காவியப்" படம் இது. ஆனால் விமர்சகர்கள் படத்தை மட்டுமே கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். இந்த கீழ்த்தரமான படத்திற்கு அதே "தகுதியில்" இசை அமைத்து பாடல்களையும் வெற்றி பெறச் செய்து, படத்தின் பெரிய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் இளையராஜா. அவரைப் பற்றி ஒரு வார்த்தை கூட யாரும் விமர்சிப்பது கிடையாது. தமிழ்த் திரையை மோசம் செய்த படம் இது என்பதில் மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது அதேபோல் தமிழ்த் திரையிசையை வீழ்ச்சிக்கு இட்டுச் சென்ற பாடல்களும் இதே படத்தில்தான் உள்ளன.
படத்தின் பாடல்கள் இவைகள்;
அம்மன் கோவில் கிழக்காலே- பட எழுத்தின் மீது வரும் பாடல். படத்திற்கு சற்றும் தொடர்பில்லாத ஆனால் கொஞ்சம் சகித்துக்கொள்ளக் கூடிய பாடல்.
இளமை இதோ இதோ- இந்தப் படத்தின் ஒரே சாதனை இந்தப் பாடலே. இன்று வரை புத்தாண்டு என்பதை இந்தப் பாடலே பல தமிழ் எப் எம், டிவி சேனல்களில் தெரியப்படுத்துகிறது. சொல்லப்போனால் மிக அருமையாக இசைக்கப்பட்ட பாடல்.
கட்டவண்டி- ஆபாசக் கூத்தாட்டம். இதற்கு மேலே வேறு எதுவும் சொல்லத் தேவையில்லை.
நேத்து ராத்திரி யம்மா- அடுத்த ஆபாசம். எனக்குப் பிடித்த பாடல் என்று யாரும் பெருமையாக வெளியில் சொல்ல முடியாத குப்பை. ஆனால் அடுத்து வரும் பாடலுக்குமுன் இது சற்று பரவாயில்லை ரகம்.
நிலா காயுது- ஆபாசத்தின் உச்சம்.இதில் எந்த விதமான ராகங்கள் கையாளப்பட்டிருந்தாலும், என்ன விதமான இசை பரிசோதனைகள் செய்யப்பட்டிருந்தாலும் அதனால் எந்தச் சிறப்பும் கிடையாது. இதைப் போல ஒரு ஆபாசப் பாடல் தமிழ்த் திரையில் இதுவரை வரவில்லை. வரவும் முடியாது. A Perfect Porn Music. இளையராஜாவின் ஆபாச பாடல் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் சாக்கடைப் பாடல். ஜானகி என்ற நல்ல பாடகியை முக்கல் ராணியாக்கி பலரின் அபிமானத்திலிருந்து அவரை அகற்றிய முதன்மைப் பாடல். பாடலின் இரண்டாவது சரணத்திற்கு முன் வரும் இடையிசையை இளையராஜா எவ்வாறு உள்வாங்கி எப்படி நோட்ஸ் எழுதி இருப்பார் எண்ணிப்பார்க்கும் போது அருவறுப்பே நமக்கு மிஞ்சுகிறது. உடலுறவின் ஓசையை இந்தப் பாடல்போல வேறு எந்தப் பாடலும் நமக்கு உணர்த்தி இருக்க முடியாது.வீட்டுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக இச்சையை தீர்த்துக்கொள்ளும் அசிங்கத்தின் அடையாளம் இந்தப் பாடல். இதற்குப் பிறகே நான் இளையராஜாவை விட்டு விலக ஆரம்பித்தேன். அவர் பாடல்கள் மீதிருந்த நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. இதைப் பற்றி சமீபத்தில் இணையத்தில் ஒரு பதிவர் 30 வருடங்களுக்கு முன் நம் தமிழ் சமூகம் எப்படி இந்தப் பாடலை ஏற்றுக்கொண்டது என்று வியப்புடன் கேள்வி கேட்டிருந்தார். உண்மைதான். . இளையராஜாவின் இசைதாகத்தால் நம் தமிழிசைக்கு கிடைத்த "கொடையாகிய" இவ்விதமான படுக்கையறைப் பாடல்கள் இன்னொரு பரிமானத்திற்கு தமிழ்த் திரையிசையை இழுத்துச் சென்றன. அனுமதிக்கப்படக்கூடாத அசிங்கங்களை ஆராவாரமாக வரவேற்ற நாம் இதன் பின் புற்றீசல் போல புறப்பட்ட பல ஆபாசப் பாடல்களை குறை சொல்வதில் நியாயம் இல்லை. இயக்குனர்களின் விருப்பத்தின் வெளிப்பாடாக இவை வந்தன என்று ஏற்றுக்கொள்ள இயலாத நியாயம் சொன்னாலும் ஒரு இசைஞருக்கு இருக்கவேண்டிய சமூகம் சார்ந்த பொறுப்பு, அக்கறை இவ்வகையான ஆபாசங்களை தடுத்து நிறுத்தியிருக்கவேண்டும். துரதிஷ்டவசமாக அது நடைபெறவில்லை.
ஒரு முறை என் நண்பர்களின் சிபாரிசின் பேரில் ceronne என்னும் பிரெஞ்ச் இசைஞனின் love in C minor என்ற ஆல்பத்தை கசட்டில் பதிவு செய்தேன். அதுவரை எனக்கு ceronne பற்றி எதுவும் தெரியாது. கசட்டை வாங்கிய போது கடைக்காரர் "வீட்டில் மற்றவர்கள் இருக்கும்போது இதை கேட்டுவிடாதீர்கள். ஹெட் போன் இருந்தால் அதில் கேளுங்கள்." என்றார். திடுக்கிட்டு ஏன் என்றேன்."இல்லை. இதில் சில ஓசைகள் ஒருமாதிரியாக இருக்கும் ." என்று விளக்கம் சொன்னார். வீட்டில் யாரும் இல்லாத ஒரு நேரத்தில் பாடலை கேட்டபோதுதான் ஏன் என் நண்பர்கள் இதை சிபாரிசு செய்தார்கள் என்பதை புரிந்துகொண்டேன். பின்னொரு நாளில் என் நண்பன் ஒருவனுக்கு இதை கொடுத்ததும் கேட்டு விட்டு அவன் சொன்னது: "இதை விட நிலா காயுது பாட்டு அருமையா இருக்கும்". அந்த கசட் கடைக்காராருக்கு இருந்த சபை நாகரீகம், வர்த்தக லாபங்களை மீறிய சமூக அக்கறை எப்படி நிலா காயுது பாடலை உருவாக்கியவருக்கு இல்லாமல் போனது என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி.
ஆண்-பெண் உறவு குறித்து பாடல்களே இயற்றப்படக்கூடாதா அல்லது நம்மிடம் அதை குறிக்கும் பாடல்கள் இல்லவே இல்லையா?இதற்கு இளையராஜாவை மட்டும் குற்றம் சொல்வது ஏன் என்ற கேள்வி எழ முகந்தாரமிருக்கிறது. உண்மை என்னவெனில் ஆம். ஆண் -பெண் உறவு குறித்து பாடல்கள் வராமலிருக்க வாய்ப்பேயில்லை.அது மறுக்க முடியாத வாழ்கையின் பாடம் . இளையராஜாவுக்கு முன்பே இப்படிப்பட்ட கருத்துகள் கொண்ட பல பாடல்களை நம் பழைய இசைஞர்கள் அமைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு
அத்தான் என்னத்தான்-பாவ மன்னிப்பு- எம் எஸ் வி-டி கே ஆர்.
வாராயோ தோழி வாராயோ- பாசமலர்- எம் எஸ் வி-டி கே ஆர்.
இரவினில் ஆட்டம்-நவராத்திரி- கே வி மகாதேவன்
மடி மீது தலை வைத்து- அன்னை இல்லம்-கே வி மகாதேவன்
ஒருநாள் யாரோ- மேஜர் சந்திரகாந்த்- வி குமார்
காதோடுதான் நான் பாடுவேன் -வெள்ளி விழா-வி குமார்
போன்ற பாடல்களில் வரிகளுக்குப் பின்னே சட்டென்று அடையாளம் காண முடியாத உறவு குறித்த பாவங்கள் (tone),வார்த்தைகள் கவிதை நயத்துடன் இணைந்து வாழ்கையின் ஒரு தவிர்க்க முடியாத அம்சத்தை நம் காதுகள் கூசாத அளவுக்கு அழகாக வெளிப்படுத்துகின்றன. ஏன் இளையராஜாவே கூட பகலில் ஒரு இரவு படத்தில் இளமை என்னும் பூங்காற்று என்ற பாடலை மிகவும் அருமையாக இசைத்திருந்தார். ஆனால் இந்த அதிரடி மாற்றம் அவரிடம் வந்தது அவர் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமையாக மாறிய பின்னர்தான். தன் இசைத் திறமையின் மீது அசாத்திய நம்பிக்கை கொண்டிருந்தவர் ரசிகர்களின் இசை வேட்கையை கீழ்த்தரமாக எண்ணிவிட்டாரோ என்று நினைக்கத் தோன்றுவது நியாயமே. என்னைப் பொறுத்தவரை பழைய பாடல்களில் ஆபாசம் என்று நான் குறிப்பது பணமா பாசமா படத்தில் வரும் எலந்த பழம் (இசை கே வி மகாதேவன்) நான் ஏழு வயசில எளனி வித்தவ (நம்நாடு, இசை- எம் எஸ் வி ) என்ற பாடலைகளையே.ஆனால் அவைகள் ஒரு trend-setter வகையை சேர்ந்ததில்லை. அவ்வையான பாடல்களை அவர்கள் தொடர்ந்து அமைக்கவுமில்லை.
திருடன் என்ற படத்தில் வரும் கோட்டை மதில் மேலே வெள்ளைப்பூனை பாடலைக் கேளுங்கள் . "பெட்டைப் பூனை அழைத்தது வெள்ளைப்பூனை அணைத்தது" என்பதற்குப் பின் "ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்" என்று எம் எஸ் வி நாகரீகமாக நகர்ந்துவிடுகிறார். அதே சமயம் இதயக் கோவில் படத்தில் வரும் ஊரோரமா ஆத்துப்பக்கம் பாடலைப் பாருங்கள்.தென்னத்தோப்பில் இருக்கும் ஒரு குருவிக்கூட்டில் வந்து சேரும் இரண்டு குருவிகள் பற்றி இளையராஜா பாடுகிறார்.ஆண் குருவி வெளியே பெண் குருவி உள்ளே என்ற அறிமுகத்திற்குப்பின் "கூட்டுக்குள்ளே குருவி ரெண்டுமே ஒண்ணா சேர்ந்தது" என்று அவர் குரல் குனிகிறது . பிறகு ஒரு அபாரமான ஹம்மிங் கொடுக்கிறார். "ஜும் ஜும் ஜக ஜும் ஜும்".அதாவது அந்த நிகழ்வை குறிப்பாக உணர்த்துகிறார் . குருவிகளை இதுபோல வேறு யாரும் நினைத்துப்பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. கேட்கும் போதே காமரசம் ஊறும், தோண்டியெடுத்த தமிழில்லாத ஓசையைகொண்டு நம்மை வியக்க வைக்கிறார். இதையெல்லாம் எப்படி அவர் யோசித்திருப்பார் என்று எண்ணும்போதே தலைசுற்றுகிறது. (இந்தப் பாடல் இந்த ராகம், இதில் மேற்கத்திய செவ்வியல் இசையை நாட்டுப்புற இசையோடு அப்படி கலந்தார் இப்படிப் பிணைத்தார் என்று எழுதவும் சிலர் இருக்கிறார்கள்.)
ஏதோ ஒன்றிரண்டு மோசமான நலிந்த பாடல்களை வைத்துக்கொண்டு ஒரு இசைஞரின் இசைமேதமையை விமர்சிப்பது சரியா? என்று சிலர் கேட்கலாம். இது அப்படி ஒன்றிரண்டுதானே என்று கண்களை மூடிக்கொண்டு கடந்து போய்விடக்கூடிய சுலபமான விஷயம் அல்ல.எளிதில் உணர்ச்சிவசப் படக்கூடிய நம் சமூகத்தில் நமது சினிமா பாடல்கள் வெறுமனே பாடல்களாக மட்டுமே உள்வாங்கப்படுவதில்லை என்பதை நாம் நன்றாக அறிவோம்.ஒரு அரசியல் களத்தையே தீர்மானிக்கும் வலிமை கொண்டவை நமது பாடல்கள்.பல பாடல்களின் முதல் வரிகளே நமக்கு வீரத்தையும், தத்துவத்தையும்,பொதுவுடைமை கருத்துக்களையும் ,அன்பையும்,காதலையும்,நட்பையும் போதிக்கின்றன. எனவே அடுத்து இளையராஜாவின் பாடல்களின் சில முதல் வரிகளைப் பார்ப்போம். அவைகளில் இருக்கும் கவித்துவத்தை கொண்டாட வேண்டாமா? வாருங்கள்.
வருது வருது விலகு விலகு (அடுத்த வரியை கேட்டால்தான் என்ன சொல்ல வருகிறார் என்பது நமக்குப் புரிபடுகிறது. அப்போதும் சரியாக புரிந்தபாடில்லை)
ஆத்தாடி பாவாட காத்தாட (கேட்கும் போதே கூசுகிறது)
ஆஹா வந்திருச்சு (Ditto)
பொத்துகிட்டு ஊத்துதடி (இரண்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.)
ஆத்து மேட்டில ஒரு பாட்டு கேக்குது ( என்ன சொல்வதென்றே தெரியவில்லை )
சின்ன ராசாவே சிட்டெரும்பு என்ன கடிக்குது (சிட்டெரும்பு ஒரு metaphor?)
ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா (காதலியைத்தான் அப்படிக்கூப்பிடுகிறார். இதுவல்லவோ தமிழ்ப் பண்பாடு ?)
கை வலிக்குது கை வலிக்குது மாமா (மருந்தை குடிக்கும்போது குரங்கை நினைக்கக் கூடாது)
அரிசி குத்தும் அக்கா மகளே (இதில் குத்தும்போது என்று சொல்லிவிட்டு இசையை நிறுத்தி பிறகு அரிசி குத்தும் போது வலிக்கவில்லையா என்று தொடர்வார். என்ன காவியச் சிந்தனை?)
மானே தேனே கட்டிப்புடி (கொஞ்சம் மானே தேனே போட்டுக்க என்று கமலஹாசன் சொல்வது நினைவுக்கு வருகிறது)
சும்மா நிக்காதீங்க (மிகவும் தாராளமான மனசு கொண்டவர் போலும் )
நா பூவெடுத்து வக்கணும் பின்னால (தெளிவான சிந்தனை)
இது ரோசாப்பூவு கொஞ்சம் லேசா நீவு (பூவு-நீவு என்ன ஒரு மகத்துவமான எதுகை மோனை?)
நிலா அது வானத்து மேலே பலானது ஓடத்து மேலே (நிலவை பெண்களுக்கு ஒப்பீடு செய்வதில் இது ஒரு "மாதிரியான" வகை )
பூஜைக் கேத்த பூவிது நேத்துதானே பூத்தது ( இதுவும் ஆன்மீகமே)
எனக்கு சட்டென்று ஞாபகத்துக்கு வந்த சில பாடல்களின் முதல் வரிகளையே இங்கே குறிப்பிட்டுள்ளேன்.கொஞ்சம் நிதானமாக ஆராய்ந்தால் "சங்கத்தமிழ் சொற்களோடு" கூடிய இன்னும் பல கணக்கிலடங்காத பாடல் வரிகள் கிடைக்கும். ஒரு மேதமை கொண்ட இசைஞர் எப்படி நல்ல தமிழை புறக்கணிப்பார் என்று விளங்கவில்லை. பாடல் என்பது இசை மட்டுமல்ல. நல்ல கவிதையும், உருகும் குரலும், இன்பமயமான இசையும் சேர்ந்த ஒரு கூட்டு முயற்சி. ஒரு பாடல் எல்லா விதத்திலும் சிறப்பாக இருப்பதாலேயே சாகாவரம் பெறுகிறது. நல்ல தமிழையும் கவிதையையும் துரத்தியடித்துவிட்டு சமூக அக்கறையின்றி எழுதும் சிலரின் கிறுக்கல்களை இசைகொண்டு மூடிவிட்டால் அது எப்படி சிறப்பானதாகிவிடும்? பாடப்படுவதாலேதானே ஒருவரின் இசை இங்கே நினைக்கப்படுகிறது? மக்களின் பயன்பாட்டில் உள்ள கொச்சை பேச்சுக்களை பாடலாய் மாற்றி பொதுவில் வைத்தால் இசையின் தரம் குப்புற விழும் என்பதை கணிக்க ஆராய்ச்சியாளர்கள் தேவையில்லை. அதுவே இங்கு நிகழ்ந்தது. தமிழ்த்திரையிசை கவிழ்ந்தது. பேசுவது எல்லாமே பாட்டாகிப்போனது நம்முடைய மலிவான இசை ரசனையின் குறியீடு.
ஆனால் ஆச்சர்யமான நிகழ்வு என்னவென்றால் இளையராஜா இப்படியான நாலாந்தர பாடல்களை ஒரு பக்கம் அமைத்துக்கொண்டே மறுபுறம் சில நல்லிசையையும் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே வந்தார். ஒரே சமயத்தில் இரு வேறு முரண்பாடான சாலைகளில் அவரால் வெற்றிகரமாக பயணம் செய்யமுடிந்தது. உதாரணத்திற்கு மூன்றாம் பிறை பாடல்கள். கண்ணே கலைமானே, பூங்காற்று புதிதானது என்று மனதை மீட்டும் இசைக்கோர்வைகள்.கொஞ்சம் இந்தப் பக்கம் பார்த்தால் விரகதாப கீதமான பொன்மேனி உருகுதே என்ற ஆபாசக்கூத்து. இதுதான் இளையராஜாவின் புரிந்து கொள்ள முடியாத இரட்டை முகம். இதற்கு மத்தியில் பாராட்டத்தக்க வகையில் நல்லிசையை கைவிடாத அவரின் முயற்சிகள் தொடர்ந்துகொண்டேதான் இருந்தன. இருந்தாலும் அவரின் ஆரம்பகால இன்னிசையை மறுபடி மீட்டெடுக்க அவரால் முடியவில்லை என்பது கண்கூடு. அவருடைய இன்னிசை ஒரு முடிவுக்கு வந்துவிட்டிருந்தது.
தரமில்லாத பாடல்களை அள்ளி வழங்கிய இளையராஜாவின் பிற்கால -அதாவது 83க்குப்பிறகு வந்த-பாடல்கள் மக்களிடம் வரவேற்ப்பை பெறவில்லையா,மக்கள் அவைகளை கேட்கவில்லையாஅல்லது அவைகள் வெற்றி பெறவில்லையா என்று வினவினால் ஆம் அவர் அதற்குப்பிறகே அதிகமாக வெற்றிபெற்றார். அவருடைய சிம்மாசனம் இன்னும் பலமானது. வைரமுத்துவின் பிரிவுக்குப்பின் ஓய்ந்தது கவிஞர்தானே ஒழிய இசைஞர் அல்ல.சொல்லப்போனால் அதன்பின்னரே இளையராஜா முன்பைவிட அதிகமான படங்களுக்கு இசை அமைத்தார். தமிழ்த்திரையில் அவர் ஒரு நங்கூரம் போல நிலைகொண்டிருந்தார்.அவரை வீழ்த்த வேறு ஒருவராலும் முடியவில்லை. அவரின் வேகம் அதிகரித்துச்சென்றதே தவிர குறைந்தபாடில்லை. இது மக்கள் அவர் இசையை ஏற்றுக்கொண்டதன் அடையாளம் என்று சிலர் கருத்துகொள்கிறார்கள். இந்தக் கூற்று எவ்வளவு தூரம் உண்மை என்பதைப் பார்ப்போம்.
எம் எஸ் வி தான் இசையமைத்த காலம் வரை தனது இசையின் வண்ணத்தை மாற்றிக் கொள்ளாமல் நல்கவிதை கொண்ட இசையை அளித்தபடி இருந்தார்.ஆனால் அவரது இசை ஒரு சார்பான (அதாவது பழைய தலைமுறை நடிகர்களுக்கான) இசை என இளைய தலைமுறையினரால் உள்வாங்கப்பட்டதால் அவர் இந்த இசை ஓட்டத்தில் பின்வாங்கிப்போக நேர்ந்தது. சங்கர்-கணேஷ் இரட்டையர்கள் இந்த காலகட்டத்தில் நிறைய படங்களுக்கு இசை அமைத்து வந்தாலும் தமிழ் படத்தில் பாடல்கள் அவசியம் என்ற சம்பிரதாயத்தை காப்பாற்றுவதற்க்காகவே அவர்கள் இசை பயன்பட்டதே அன்றி இளையராஜாவின் மாற்றாக அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதே காலத்தில் மற்ற சில இசைஞர்களும் அவ்வப்போது நல்லவிதமாக இசையமைத்தார்கள். சிவாஜிராவ் என்பவர் காற்றுக்கென்ன வேலி படத்தில் மிக அருமையான பாடல்கள் கொடுத்திருந்தார். அதே போலே புதியவன் (நரசிம்மன்) ஏழாவது மனிதன்(எல் வைத்தியநாதன்) படத்தின் பாடல்கள் சிறப்பாக இருந்தன.ஆனால் தொடர்ந்து மக்களிடம் வரவேற்பு இல்லாததால் அவர்களால் வெற்றிகளைத் தொடர முடியவில்லை. இறுதியாக அவர்கள் பொது சிந்தனையிலிருந்து காணாமல் போனார்கள்.அவர்களுக்குரிய அங்கீகாரத்தை நாம் தரத் தவறிவிட்டோம் என்பதே உண்மை. சந்திரபோஸ், ராஜ்குமார்,மனோஜ்கியான்,தேவேந்திரன்,ஹம்சலேகா,தேவா போன்றவர்கள் இடையிடையே சில படங்களுக்கு இசை அமைத்தாலும் அவை இளையராஜாவின் ஆலமர இசையின் கீழே முளைத்த சிறு செடிகள் போல தோற்றமளித்தன. மேலும் இளையராஜாவின் பாதிப்பை விட்டு அவர்களால் வெளியே வர இயலவில்லை.( இதில் மனோஜ் கியான் சற்று வேறுபட்ட இசையை அளித்தார்.) ஒருபக்கம் இவ்வாறு சில புதியவர்கள் தட்டுத்தடுமாறி ஊர்ந்துகொண்டிருந்தவேளையில் இன்னொருபக்கம் இளையராஜாவோ எல்லாவிதமான பரிவாரங்களோடும் ஒரு juggernaut ride போய்க்கொண்டிருந்தார். அவரின் காலடியில் மற்ற எல்லா இசைகளும் அடிபட்டு நசிங்கிப் போயின.
இளையராஜாவின் மற்றொரு பலம் அவரது இசை அமைக்கும் வேகம். தான் இசை அமைக்கும் எல்லா பாடல்களுக்கும் எளிதாகவும் விரைவாகவும் இசைக் குறிப்புகள் எழுதி அவற்றை தன் உதவியாளர்களிடம் கொடுத்துவிட்டு மூன்று அல்லது நான்கு நிமிடத்தில் ஒரு பாடலை அவரால் பதிவு செய்யமுடிந்தது. இந்த வேகம் மற்றவர்களுக்கு சாத்தியப்படவில்லை என்று தோன்றுகிறது. ஒரே நாளில் ஒரு படத்தின் பாடல்கள்கள் முழுவதையும் பதிவு செய்யக்கூடிய விரைவு அவரிடமிருந்தது. ஒருவகையில் இளையராஜாவின் பிரசாத் ஸ்டுடியோ ஒரு பாடல் தொழிற்ச்சாலையாகவே மாறிவிட்டதைப் போன்று சீரான இடைவெளியில் காலணிகள் உருவாவதைப் போல அங்கே பாடல்கள் உருவாகிக்கொண்டே இருந்தன. தன் பாடல்களைக்கூட கேட்க அவருக்கு நேரம் இல்லாத வேகத்தில் அவர் இயங்கிக்கொண்டிருந்தார். ஒரு லிட்டருக்கு அதிகபட்ச மைலேஜ் கொடுக்கும் மோட்டார்வண்டியை யார்தான் விரும்பமாட்டார்கள் ? கிராமத்து படமா கூப்பிடு இளையராஜாவை என்று தயாரிப்பளர்களும் இயக்குனர்களும் அவரை நோக்கியே படையெடுத்தனர். அவரின் இசை தரம் என்பதை விட அவரின் வேகம் இதை சாதித்தது என்பதே பொருத்தமானதாக இருக்கும். 87 இல் இளையராஜா இசை அமைத்த படங்கள் 30தை தாண்டி இருக்கிறது. 92இல் இந்த எண்ணிக்கை 52 என்றானது. இந்த வேகத்தில் படம் செய்யும் எந்தஒரு இசை அமைப்பாளரும் தரத்தை அளவுகோலாக வைத்து இசையை முன்னெடுத்துச் செல்வார்களா என்பதை படிப்பவர்களின் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன். இப்படி ஒரே ஒரு மனிதனின் காட்சியை(One Man Show) காண வேண்டிய நிர்ப்பந்தத்தில் தமிழ் இசை ரசிகர்கள் தள்ளப்பட்டிருந்தார்கள்.அவர்களுக்கு வேறு போக்கிடமும் இல்லை. 70 களிலாவது எம் எஸ் வி போரடித்தால் தமிழன் ஹிந்தி இசையை நாடும் வாய்ப்பு இருந்தது. 90 களிலோ அந்த கதவும் அடைபட்டுப் போனது. ஒருவர் மட்டுமே பங்கேற்றும் போட்டிகளில் வெற்றி பெறுவது யார் என்பது பெட்டிங் அவசியப்படாமல் எளிதில் யாராலும் கணிக்கப்படக்கூடியது. விளைவாக தமிழ் ரசிகர்கள் இளையராஜாவையே இசைக்காக சார்ந்திருந்தனர். பிரஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட ஒரு முக்கியமான "no bread ? Then eat cakes" என்ற வாக்கியத்தில் இருந்த அடுத்த வாய்ப்பு கூட இல்லாத ஒரு சராசரி தமிழ் ரசிகன் இளையராஜாவை நம்பியிருந்தது ஒரு நிர்பந்தச் சூழ்நிலையிலேதான் அன்றி வேறொன்றுமில்லை. இது அடிப்பவனிடமே அடைக்கலம் தேடும் ஒரு Stockholm Syndrome வகையைச் சார்ந்தது. இதன் பாதிப்பில் அவரின் பல பாடல்கள் வெற்றி பெற்றன எனபது தெளிவு . வணிக வெற்றியைகொண்டு ஒரு பாடலின் தரத்தையும் சிறப்பையும் தீர்மானிப்பது ஒரு நேர்மையான அணுகுமுறையாக இருக்கமுடியாது. "வெற்றி பெற்ற மனிதெரெல்லாம் புத்திசாலியில்லை".
மொத்தமிருக்கும் நூறில் ஏறக்குறைய ஐம்பது படங்களில் இளையராஜாவின் இசையிருக்கும் பட்சத்தில் மக்கள் அவர் பாடல்களை மட்டுமே கேட்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமிருப்பதை எந்த ஒரு சாமானியனும் கணித அறிவின்றி புரிந்துகொள்வான். 85 லிருந்து 92 வரை தமிழ்நாட்டில் இளையராஜாவின் இசை மட்டுமே ஒலித்தது என்று பொதுவாக சொல்லப்படுவதின் பின்னிருக்கும் காரணிகள் இவை. சீனாவில் சிகப்பு வண்ணம் மட்டுமே பிரதானமாக காணப்படும் தோற்றம் போன்றதுதான் இது. இதில் பெருமான்மையனானவை இன்று மக்களின் நினைவிலிருந்து அகன்று போய்விட்ட பாடல்களே. மேலும் இளையராஜா மேற்கத்திய செவ்வியல் பாதிப்பில் நோட்ஸ் எழுதியது மட்டுமில்லாது தன் இசையில் எவ்விதமான மாற்றத்தையும் அனுமதித்ததில்லை என்று கேள்விப்படிருக்கிறேன். அவர் இசையை தன்னுடைய முகமாகவே பார்த்தார்.அதில் எந்த மாற்றங்களுக்கும் அவர் உடன்படவில்லை. இதுவே அவர் பாடல்கள் இந்த காலகட்டத்தில் ஒரே மாதிரியாக ஒலிக்கத் துவங்கியதன் காரணமாக இருக்கலாம். பல்லவி,இடையிசை, சரணம் என்று கர்நாடக ராகத்தில் வார்த்தெடுத்த முத்துக்கள் போல பல பாடல்களை வித்தியாசமாக கொடுத்த காலம் கரைந்து போய்விட, ஒரே தாளக்கட்டு,சுலபத்தில் கணித்துவிடக்கூடிய இடையிசை, வெகு சாதாரணமான வார்த்தைகள் என இளையராஜாவின் வறண்டு போய்விட்ட இசை அவருடைய அடுத்த மற்றும் இறுதி அத்தியாயத்தை ஆரம்பித்தது. இதுவே அவருடைய பிற்கால இசையின் முகவரியானது. இன்று இளையராஜாவை கொண்டாடும் பலருக்கு அவர் 80 களுக்கு முன்னாள் அமைத்த இசையோவியங்களைப் பற்றி அக்கறையில்லை.ராஜாதி ராஜா, சின்னத்தம்பி, கேளடி கண்மணி, பூவரசன், பொன்னுமணி,வீரா,வண்ணத் தமிழ்ப் பாட்டு, அஞ்சலி,குணா, தளபதி,தேவர் மகன்,காதலுக்கு மரியாதை,நாடோடித் தென்றல், விருமாண்டி, நீதானே என் பொன் வசந்தம் என்று அவருடைய அந்திம காலப் பாடல்களே பெரும்பாலும் பாராட்டப்படுகின்றன. இளையராஜாவின் சிகப்பு ரோஜாக்கள்,அவள் அப்படித்தான், குரு, நினைவெல்லாம் நித்யா,பயணங்கள் முடிவதில்லை, தென்றலே என்னைத் தொடு, அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், சலங்கை ஒலி போன்ற படங்களின் பாடல்களோடு அவரின் 90 களை ஒப்பிட்டால் அவரிடம் ஏற்பட்டிருந்த ஒரு மிகப் பெரிய இசைச் சரிவை நாம் காணலாம். பிரேக் அழுத்தியும் சற்று தூரம் ஓடும் ரயில் போலத்தான் இது. அவரின் இசை 90 களில் பழைய வேகமில்லாமல் வறண்டு போய் மக்களுக்கு அலுப்பைத் தந்தது. எந்த ஒரு சிறப்பான கலைஞனும் கடைசியில் மக்களின் மறுதலிப்புக்கு உட்படும் மாற்ற முடியாத உலக விதி மற்றொரு முறை நிகழ்ந்தது.
இளையராஜாவின் இன்னிசை ஏன் சலிப்பு தட்டியது என்பது புரிந்து கொள்ள முடியாத புதிரோ அல்லது அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சோ அல்ல. மாறிக்கொண்டே வந்த இளையராஜாவின் இசை எண்பதுகளின் இறுதியில் ஒரு சுழலில் மாட்டிக்கொண்டுவிட்ட படகு போல ஒரே வட்டத்தில் சுற்றிச் சுற்றி வரத் துவங்கியது இதற்கு ஒரு முக்கியமான காரணம். இந்தச் சுழலில் அவர் மாட்டிக்கொண்டது எப்படி என்று பார்ப்போம்.
87 இல் எங்க ஊரு பாட்டுக்காரன் என்ற படம் தமிழ் சினிமாவில் சரிந்து வந்த கிராமத்து படங்களின் முதுகெலும்பை மறுபடி நிமிர்த்தியது. இதில்தான் இளையராஜா ஆஷா போன்ஸ்லே என்ற மிகப் புகழ் பெற்ற ஹிந்திப் பாடகியை சென்பகமே என்று தமிழ் பாட வைத்திருந்தார்.ஆஷாவின் தேன் மதுரக் குரலில் அப்பாடல் மிகச் சிறப்பாக வார்க்கப்பட்டு கேட்பவர்களை இனம் தெரியாத இன்பத்துக்கு இட்டுச் சென்றது. நீண்ட நாட்கள் கழித்து நான் மிகவும் ரசித்துக் கேட்ட இளையராஜாவின் பாடல் இது .சொல்லப் போனால் வளையோசை(சத்யா) பாடலை லதாவுக்குப் பதில் ஆஷா பாடியிருந்தால் அந்தப் பாடல் இதைவிட அபாரமாக இருந்திருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.(லதா மங்கேஸ்கரின் குரலில் இழையோடும் கிழத்தன்மை அவர் பாடிய தமிழ்ப் பாடல்களை கெடுத்துவிட்டதாகவே நான் எண்ணுகிறேன்.) 89 இல் வந்த மற்றொரு கிராமத்து படம் இளையராஜாவின் வெற்றிகளிலேயே மிக முக்கியமானது. கரகாட்டக்காரன் என்ற அந்தப் படம் கொடுத்த வெற்றி உண்மையில் இளையராஜாவை ஒரே புள்ளியில் ஆணியடித்து நிறுத்தி வேறுதிசையில் செல்லவிடாமல் முடக்கிவிட்டது.
இளையராஜாவின் இசையை உன்னிப்பாக கவனிப்பவர்கள் கரகாட்டக்காரன் அவரின் வீழ்ச்சிக்கு வித்திட்டதை உணர்வார்கள்.ஆனால் அவர் ரசிகர்களோ அதை ஏற்க மாட்டார்கள். அவருடைய இசை பரிமாணங்கள் இந்தப் படத்தோடு ஏறக்குறைய முடிவு பெற்றன. படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் பாடல்கள் பெரிதும் உதவின என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. மாங்குயிலே பூங்குயிலே, ஊருவிட்டு ஊருவந்து,குடகு மலை காற்று, முந்தி முந்தி, பாட்டாலே புத்தி சொன்னார் போன்ற பாடல்கள் தமிழகம் எங்கும் தொடர்ச்சியாக ஒலித்தன. இந்தப் பாடல்கள் அடைந்த அசுர வெற்றி அவர் தலைக்கேறியத்தை அவரின் நேர்காணல்கள் மூலம் நாம் அறியலாம். இளையராஜாவின் இசையை மட்டுமே இங்கே நான் விமர்சிப்பதால் அவர் கூறிய பல "பணிவான "கருத்துக்களை குறிப்பிடுவது சரியல்ல என்று உணர்கிறேன். இருந்தும் 90களின் துவக்கத்தில் அவர் ஒரு நேர்காணலில் "நான் அமைப்பதுதான் இசை. அதை நீங்கள் கேட்டுத்தானாக வேண்டும். வேறு வழியில்லை உங்களுக்கு" என்ற ரீதியில் கூறி இருக்கும் கருத்தை நினைவு கொள்ளவேண்டும். இசை தன்னிடமிருந்துதான் உற்பத்தி ஆவதைப்போல இளையராஜா கருதுவது ஒன்றும் நமக்குப் புதிதல்ல. 80 இல் வந்த நிழல்கள் படத்தின் மடை திறந்து பாடலில் "புதிய ராகம் படைப்பதாலே நானும் இறைவனே" என்று நல்கவிதையாக சுய புராணம் பாடியவர் பின்னர் "ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா," "ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லே", என்று பள்ளிச் சிறுவர்கள் போல தன்னைப் புகழ்ந்துகொண்டார். இப்படி இசைமேதமையுள்ள ஒருவர் மலிவான சுயபாராட்டுதலுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டது தமிழிசைக்கு எந்தவிதமான நன்மையையும் செய்யவில்லை. அவரின் தற்புகழ்ச்சியை கண்டு மிரண்டுபோன அவரது ரசிகர்களே ஒரு கட்டத்திற்கு மேல் வீண் விவாதங்களுக்குள் செல்ல விரும்பாமல் "கர்வம் கொள்ள அவருக்கு எல்லா தகுதியும் இருக்கிறது "என்று சொல்லி அதைப் பற்றி பேசுவதை தவிர்த்து விட்டு நகர்ந்து வேறு வேலைகளைப் பார்க்கப் போய்விட்டார்கள்.
80களின் இறுதியைத் தொடர்ந்து இளையராஜாவின் இசை எளிதாக யூகிக்ககூடிய சதுரங்க விளையாட்டு போன்று உப்பு சப்பில்லாமல் சுவைகெட்டுப் போனது. கே பாலச்சந்தர்,(சிந்து பைரவி,புதுப் புது அர்த்தங்கள்,உன்னால் முடியும் தம்பி)பாலு மகேந்திரா (ரெட்டைவால் குருவி,மறுபடியும்) மணிரத்னம் (மவுன ராகம்,நாயகன்,அக்னிநட்சத்திரம், இதயத்தை திருடாதே, அஞ்சலி, தளபதி) பாசில் ( வருஷம் 16,அரங்கேற்ற வேளை,காதலுக்கு மரியாதை, )கமலஹாசன் (சத்யா,வெற்றிவிழா,மைக்கல் மதன காமராஜன்,குணா,) போன்ற வி ஐ பி களுக்கு அவர் அதிகமாக சிரத்தை எடுத்துக்கொண்டும் மற்றவர்களுக்கு அந்த அளவுக்கு அலட்டிக்கொள்ளாமலும் இசை அமைத்தார். பொதுவாக ஒரு பாடலுக்கு "அவ்வளவுதான் இது போதும்" என்ற அளவில் ஒரே ஒரு மெட்டை மட்டுமே அவர் அனுமதித்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. இந்த காலகட்டத்தில் வந்த முக்கால்வாசி பாடல்கள் ஒரே விதமான தாளக்கட்டுடன் வெகு சராசரியான வார்த்தைகளுடன் (மானே தேனே ராசா ரோசா எசப்பாட்டு குயிலு மயிலு இன்ன பிற எளிதில் அகப்படும் கவிதை வரிகளுடன் ?) ஏற்கனவே கேட்ட அலுப்பைத் தந்தன. இளையராஜாவின் இசையோடு பிறந்த ஒரு தலைமுறை கடந்துபோய் அடுத்து வந்துவிட்ட புதிய தலைமுறை ரசிகர்களுக்கு ஏற்ப இசையில் வரவேண்டிய மாற்றத்தை அனுமதிக்காமல் ஆயிரம் முறைகள் பயணம் செய்த பாதையிலேயே தொடர்ந்து சென்றுகொண்டிருந்தார் இளையராஜா. அவர் பாடல்களின் பல்லவி மட்டுமே தனித்தன்மை கொண்டதாக இருந்தது. அவரது இடையிசையை மற்றும் சரணங்களை மட்டும் கேட்டால் சட்டென்று இது இந்தப் பாடல்தான் என்று எளிதில் அனுமானிக்க இயலாத வகையில் எல்லாமே இயந்திரம் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் போல ஒரே மாதிரியாகவே ஒலித்தன.பல்லவிக்கு சிரத்தை எடுத்துக்கொண்டு சரணங்களை கவனிக்காமல் விட்டுவிட்டதால் அவருடைய பல பாடல்கள் இப்போது பொதுநினைவுகளிலிருந்து தூரமாகிப் போய்விட்டன. அவருடைய die-hard விசிறிகள் மட்டுமே இவ்வகையானப் பாடல்களை வலிந்து நினைவு கொள்கிறார்கள்.
உதாரணத்திற்கு 90ஆம் ஆண்டு வந்த இளையராஜாவின் படங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.காவலுக்கு கெட்டிக்காரன்,பணக்காரன்,மனசுக்கேத்த மாப்பிள்ளை,என்னுயிர்த் தோழன்,அரங்கேற்ற வேளை,பாட்டுக்கு நான் அடிமை,கவிதை பாடும் அலைகள்,பொண்டாட்டி தேவை,உன்னை சொல்லி குற்றமில்லை,மருது பாண்டி,பகலிலே பவுர்ணமி,பெரியவீட்டு பணக்காரன்,அதிசய பிறவி, மவ்னம் சம்மதம்,ஊரு விட்டு ஊரு வந்து, சிறையில் பூத சின்னமலர்,கேளடி கண்மணி,மை டியர் மார்த்தாண்டன்,தாலாட்டு பாடவா,பாலைவனப் பறவைகள்,மல்லு வேட்டி மைனர்,மைக்கல் மதன காமராஜன்,புதுப் பாட்டு,சிறையில் சில ராகங்கள், ராஜா கைய வச்சா, நீ சிரித்தால் தீபாவளி,நடிகன், உறுதி மொழி, எதிர் காற்று.எத்தனை பேர் இவற்றில் ஒருசில படங்களைத் தவிர மற்றவற்றில் இருக்கும் பாடல்களை சிறப்பானவை என்று கூறமுடியும்? நமது ஞாபகங்களில் அவைகள் இருக்குமா என்பது கூட உறுதியாகத் தெரியவில்லை. அவ்வப்போது சிலிர்த்துக்கொண்டு எழுந்து சில வெற்றிகரமான பாடல்களை கொடுத்ததோடு அவர் மனம் நிறைவு கொண்டுவிட்டது என்று நாம் கணித்துக்கொள்ளலாம். ஆனாலும் அவைகள் அவருடைய ஆரம்பகால பாடல்களின் தரத்தை விட பல படிகள் கீழேதான் இருந்தன. 90களில் என் நண்பர் ஒருவர் "என் இனிய பொன் நிலாவே கொடுத்த ராஜாவை தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைக்கவில்லையே" என்று ஆதங்கத்துடன் சொன்னதை இப்போது நினைவு கூர்கிறேன். உண்மையே.
இன்றைய இன்டர்நெட் யுகத்தில் நம் தமிழ்ப் பாடல்கள் முழுதும் மாறிப்போய் அன்னியமாக ஒலித்தாலும், உலகத்தில் மாறிவரும் இசையை நம் இசைஞர்களும் உடனுக்குடன் அளித்துவருகிறார்கள். நமக்கு (அதாவது பழைய இசைபோல இல்லை என்று வேதனைப்படும் இசை விரும்பிகளுக்கு) இவ்வாறான ஹிப் பாப், ராப், கானா இசை வகைகள் அவ்வளவாக பிடிக்காவிட்டாலும் இன்றைய இளைய தலைமுறையினர் இதையே விரும்பிக்கேட்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இளையராஜா கோலோச்சிய காலத்தில் இப்படிப்பட்ட உலக இசை நம் தமிழுக்கு வந்துசேரவில்லை. அதை அவர் அனுமதிக்கவுமில்லை. இதன் பின்னணியில் இருப்பது அவரின் சமகாலத்து மேற்கத்திய இசை வெறுப்பு என்பதை நாம் அறியலாம். ஷில்லாங் நகரம் முழுவதும் ஒருவரின் பிறந்த நாளை இசைவிருந்தாக கொண்டாடும் பாப் டைலன் என்ற அமெரிக்க நாட்டுப்புற (folk) இசைஞனையும், அமெரிக்க கறுப்பின மக்களின் வலியையும், வேதனையையும், போராட்டங்களையும்,வெற்றிகளையும் பாடல்களாக வடித்து ரகே (reggae) என்கிற ஒரு புதிய இசை இனத்தை பிரபலமாக்கிய பாப் மார்லியையும் இளையராஜா குப்பை என்று அலட்சியமாக ஒதுக்கியது அவருக்கு சமகாலத்து மேற்கத்திய இசையை அறிந்து கொள்ள விரும்பாத ஆணவத்தை காட்டுகிறது.அவற்றை அவர் புரிந்துகொள்ளாமலும் அதன் பாதிப்பை இங்கே அனுமதிக்காமலும் ஒரு சர்வாதிகார இசையாட்சி செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கே பிரபலமாக இருந்த பாப், ராக், ஹெவி மெட்டல், சிந்த்-பாப், ரகே போன்ற பலவகையான இசை வடிவங்கள் தமிழ்க் கரையோரம் ஒதுங்கவேயில்லை. அவற்றின் தீற்றல்கள் கூட நம்மை அணுகவில்லை. மாறிவிட்ட இசை ரசனையை இளையராஜா இனம்காண தவறிவிட்டார் என்பதே உண்மை. ஆரம்பத்தில் அபாரமான மேற்கத்திய கலப்பில் இனிமையான பல தேன் சுவைகொண்ட பாடல்களை கொடுத்தவர் 80களின் மத்திக்குப்பின் எரிச்சலூட்டும் கிடார்,சமையலறை பாத்திரங்களை உருட்டிவிட்டதுபோன்ற ட்ரம் இசை போன்ற கிளிஷே ஒலிகளை வைத்துக்கொண்டு நம்மை பெரிதும் சோதித்தார்.உதாரணம் பம் பம் பம் ஆ"ரம்பம்",ஒரு மைனா மைனா குருவி,சைலென்ஸ், இரண்டும் ஒன்றோடு மற்றும் அஞ்சலி படப்பாடல்கள். இதுவே அவர் அறிந்த மேற்கத்திய இசையாகிப்போனது ஒரு பரிதாபமான நிகழ்வு. ஒரு மாற்றமாக திடீரென அவ்வப்போது ராஜ ராஜ சோழன் நான்,மன்றம் வந்த தென்றலுக்கு போன்ற இனிமையான இன்பங்களை உருவாக்கத் தவறவில்லை. "Every hero becomes a bore in the end.". When this could happen to M.S.V. , Can Ilayarajaa be far behind?
நம் தமிழ்த்திரையிசையில் காலம்காலமாக நாம் அனுபவித்த எல்லாவிதமான மனித உணர்சிகளுக்கும் பொருந்தும் பல காலத்தைவென்ற பாடல்கள் இன்னும் அலுப்புத்தட்டாமல் இசைச்சிற்பங்களாக நம்மிடம் இருக்கின்றன. வீரம், பொதுவுடைமை,தத்துவம்,தமிழ்மொழியின் சிறப்பு, சராசரி மனிதனின் ஆற்றாமை போன்ற பல உணர்சிகளை நம் இசைஞர்கள் அழியா ஓவியங்களாக படைத்திருக்கிறார்கள். அவைகளுக்கிணையான இன்னொரு நவீன பட்டியலை நாம் இனி எந்தகாலத்திலும் தயாரிக்க முடியாது என்பது திண்ணம்.
அச்சம் என்பது மடமையடா,
தூங்காதே தம்பி தூங்காதே,
மூன்றெழுத்தில்என்மூச்சிருக்கும்,
உன்னையறிந்தால்,
திருடாதே,
சின்னப்பயலே சேதி கேளடா,
சட்டி சுட்டதடா,
ஆறு மனமே ஆறு,
படைத்தானே,
வீதிவரை உறவு,
போனால் போகட்டும் போடா,
மனிதன் என்பவன்,
மயக்கமா கலக்கமா,
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்,
ஒன்று எங்கள் ஜாதியே,
ஒரு தாய் மக்கள்,
தரை மேல் பிறக்கவைத்தான்,
அதோ அந்த பறவை போல,
கொடுத்தெல்லாம் கொடுத்தான்,
நான் ஆணையிட்டால்,
கல்லெல்லாம் மாணிக்க,
சிரிப்பு வருது,
புத்தியுள்ள மனிதெரெல்லாம்,
பசுமை நிறைந்த நினைவுகளே,
தேவனே என்னைப் பாருங்கள்,
இரவு வரும் பகலும் வரும்,
சங்கே முழங்கு,
மதுரையில் பறந்த மீன் கொடியை,
தமிழுக்கும் அமுதென்று பேர்,
இத்தனை வேறுபட்ட பலவித மனித உணர்ச்சிகளுக்கேதுவான பாடல்கள் இளையராஜாவின் இசையில் நாம் காண முடிவதில்லை .அவரின் இசையை பொதுவாக அம்மா, காதல், காமம், திருவிழா பாடல்கள் என்று வகைப்படுத்திவிடலாம் .இவற்றில் பெருமான்மையானவை காதல் பாடல்களே. இவற்றைத் தாண்டி அவர் இசை அமைத்த வேறு வகைப் பாடல்கள் வெகு சொற்பமே.தத்துவப் பாடல்கள் என்று எடுத்துக்கொண்டால் தேடிப் பிடித்துத்தான் பட்டியலிடவேண்டும்.ஊரத் தெரிஞ்சுகிட்டேன், எல்லாருமே திருடங்கதான், கூவுங்கள் சேவல்களே,உம்மதமா எம்மதமா, உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி,கனவு காணும் வாழ்க்கையெல்லாம்,(இது அப்படியே உப்கார் என்ற ஹிந்திப் படத்தில் வரும் ஒரு சோகப்பாடலின் அப்பட்டமான பிரதி. ராஜாவின் ரசிகர்கள் இதற்கு இளையராஜாவும் கல்யாண்ஜி-ஆனந்த்ஜியும் தங்கள் பாடல்களை மாற்றிக்கொண்டார்கள் என்று காரணம் சொல்கிறார்கள். உப்ஹாருக்கு பதிலாக இளையராஜாவின் இளைய நிலா பொழிகிறதே பாடலை கல்யாண்ஜி-ஆனந்த்ஜி தங்கள் கலாகர் படத்தில் பயன்படுதிக்கொண்டதாக ஒரு பதிவில் படித்தேன். மற்றொருவரோ இது இயக்குனர் பாலு மகேந்திராவின் விருப்பத்தின் பேரில் அப்படியே கையாளப்பட்டது என்று கருதுகிறார்).அப்படியே ஒன்றிரண்டு பாடல்களை அடையாளம் காட்டினாலும் அவற்றின் கவிதை தரத்தை நாம் பாராட்டிவிட முடியாது. முதலில் நல்கவிதை நலிந்தது. பின்னர் இசையின் ஓசைகள் காதுகள் கூசும் அளவுக்கு மாறின. அதன் பின் சலிப்புதட்டும் தாளம், பரவசப்படுத்தாத இசைகோர்ப்புகள் என இசையின் தரம் கீழிறங்கியது.
இளையராஜாவை விட்டு எனது கவனம் திசை திரும்பியபின் பல வருடங்கள் கழித்து நான் அவர் இசையில் வந்த முத்து மணிமாலை (சின்ன கவுண்டர்)என்ற அற்புதமான பாடலை கேட்க நேர்ந்தது. சந்தேகமில்லாமல் அது ஒரு மிகச் சிறப்பான பாடல்.பாடலின் வரிகளில் சிறிது அவர் கவனம் செலுத்தியிருந்தால் அந்தப் பாடல் இதை விட அலாதியான இன்பத்தை கொடுத்திருக்கும் என்று கருதுகிறேன். இதைப் போலவே இளையராஜா பல அற்புதமான பாடல்களை அற்பத்தனமான கவிதைகளால் சிதைத்துவிட்டார் என்பதே என் ஆதங்கம். எல்லா சொற்களையும் தனது இசையால் போர்த்திவிட்டு பாடலாக்கிவிடலாம் என்று அவர் எண்ணியது இப்போது நாம் அனுபவிக்கும் தரமில்லாத கேடுகெட்ட பாடல்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்தது.அவர் பாடிய இந்தப் பாடலில் தனது ஏக்கங்களை அவர் பதிவு செய்திருப்பதாகவே உணர்கிறேன்.சிலர் இதை அவரின் தற்புகழ்ச்சியாகப் பார்த்தாலும் அவருடைய சுய விமர்சனமாகவே இப்பாடல் தோன்றுகிறது.
பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம் தான்
காளயர்கள் காதல் கன்னியரை
கவர்ந்திட பாடல் கேட்டார்கள்
ஏழைகளும் ஏவல் அடிமைகளாய்
இருப்பதை பாடச் சொன்னார்கள்
கதவோரம் கேட்டிடும்
கட்டில் பாடலின்
மெட்டு போடசொன்னார்கள்
தெருவோரம் சேர்ந்திட
திருவாசகம் தேவாரம் கேட்டார்கள்
நான் படும் பாடுகள் அந்த ஏடுகள்
அதில் எழுதினாலும் முடிந்திடாது
பூஜையில் குத்து விளக்கை ஏற்ற வைத்து
அதுதான் நல்லதென்றார்கள்
படத்தில் முதல் பாடலை பாட வைத்து
அது நல்ல ராசி என்றார்கள்
எத்தனையோ பாடுகளை அதை பாடல்களாய்
நான் விற்றேன் இதுவரையில்
அத்தனையும் நல்லவையா அவை
கெட்டவையா என அரியேன் உண்மையிலே
எனக்குதான் தலைவர்கள் என் ரசிகர்கள்
அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்
நான் விற்றேன் இதுவரையில்
அத்தனையும் நல்லவையா அவை
கெட்டவையா என அரியேன் உண்மையிலே
எனக்குதான் தலைவர்கள் என் ரசிகர்கள்
அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்
அடுத்து : இசை விரும்பிகள் XI - புயலிசை புகுந்தது.