Wednesday, 15 July 2015

காலத்தை வென்ற இசை

இது ஒரு மீள் பதிவு.

   





     இசை விரும்பிகள் -  காலத்தை வென்ற இசை 



        24 காரட் சுத்தத்  தங்கத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம்? அதை தூரத்திலோ அருகிலோ  வைத்துக்கொண்டு உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம். ஆனால் அது கழுத்திலோ,காதிலோ, மூக்கிலோ பளபளப்பாக வந்து அமர  சில நகாசு வேலைகள் அவசியப்படுகின்றன. தங்கத்தோடு கொஞ்சம் செம்பு வெள்ளி என்று கலந்தால்தான் அதன் நோக்கம் பூர்த்தி அடைகிறது. இப்படி உருமாறிய 22 காரட் தங்கமே நமது மெல்லிசை. இந்த மெல்லிசை இங்கே வந்த  பிறகுதான் ராகங்கள் மாறின. தமிழிசையின் எல்லைகள் விரிவடைய ஆரம்பித்தன. பலர் இதைப்  பற்றிய புரிதல் எதுவுமின்றி தனக்குப் பிடித்த இசைஞரின் பாடல்களை முன்னிறுத்தி தமிழ்த் திரையிசை இவரிடமிருந்துதான் புறப்பட்டது என்று முரட்டுத்தனமாக நம்புவதோடல்லாமல் மற்றவர்களையும் அப்படி நம்பத் தூண்டுவதால்தான் இங்கே  மெல்லிசையைப் பற்றி அதிகம் பேச வேண்டியதாக இருக்கிறது.

     தமிழ்த் திரையில்  மெல்லிசையை கொண்டுவந்தவர்கள் பொதுவாக எல்லோரும்  நினைப்பதைப் போல விஸ்வநாதன்-ராமமூர்த்தி அல்ல. பல இசைஞர்கள் ஆண்டுகாலமாக புதிய மெட்டுக்களையும் புதிய இசை அமைப்பையும் கொஞ்சம் கொஞ்சமாக இங்கே நிறுவினார்கள் என்பதே உண்மை.இழை இழையாக நெய்யப்பட்ட ஒரு தரமான துணியைப் போல மேற்கத்திய இசை, மேற்கத்திய செவ்வியல் இசை மற்றும் நம் நாட்டுப்புற இசை போன்ற புதிய இழைகளைக் கொண்டு ஒரு நவீன இசைவடிவமாக இந்தப் புதிய இசை அமைப்பு உருவாக்கப்பட்டது.   இதில் பலரின் பங்களிப்பு இருந்தாலும்  மெல்லிசையை தமிழ்த் திரையின் மிகப் பிரபலமான இசையாக உருமாற்றியதன் பெருமை தமிழ்த்  திரையின் உன்னதமான இரட்டை இசைஞர்களான விஸ்வநாதன்- ராமமூர்த்தி அவர்களுக்கே உரியது.

  

    ஆங்கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்து அதிகம் பேசப்படுபவர் அல்லது ஒரு சாதாரணனுக்கு உடனடியாக  நினைவுக்கு வருபவர் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த். அதற்கு காரணம் இருக்கிறது.  அவரும் அவரது நண்பர் சாம்வெல் கோல்ரிட்ஜ்ஜும் இணைந்து ஆங்கில இலக்கியத்தில் ரொமாண்டிக் மூவ்மெண்ட் என்று சொல்லப்படும் ஆங்கில கவிதை உலகை வேறு வட்டத்தில் சுழற்றிய  ஒரு இயக்கத்தை தோற்றுவித்தார்கள். அதற்கு முன் ஆங்கிலக்  கவிதைகள்  கடவுளையும்,  மகான்களையும் சரித்திர நாயகர்களையும், ஐரோப்பிய புராண மாந்தர்களையும் தன் கருப்பொருளாகக் கொண்டு  படித்த மேல்தட்டு "நாகரிக" அடையாளம் கொண்டிருந்த அரச, மற்றும் பிரபு குலத்துக்கே எழுதப்பட்டு வந்தன.கவிதை ஒரு அறிவாளியின் தேர்வு என்றும் அதை புரிந்து கொள்ள ஒரு பாமரன் தன் அறிவை  வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குறியீடாக உணர்த்தப்பட்டு அவனைத் தொடாமல் செல்லும் ஒரு மாயக் காற்று போலவே  அது  செயல்பட்டது.
    
     இந்நிலையில்தான் வோர்ட்ஸ்வொர்த் ஒரு வெற்றுக் காகிதத்தில் தான் உணர்ந்த சில ரம்மியமான உணர்வுகளை கவிதையாகப்  புனைய  தன் பேனாவில் இயற்கையை நிரப்பிக் கொண்டு உட்காருகிறார். அவர் கவிதையின் கரு ஒரு சிறிய மலரை, சுழன்று வீசும் காற்றை, பனி படர்ந்த மலைகளை, ஒய்யாரமாகப் பாடும்  பறவைகளைச்   சுற்றியே இருந்தது. இந்த எளிமையான கவிதைப்போக்கு அவருக்கு முன் யாருக்கும் பொறி தட்டவில்லை. எளிமையும் ரம்மியமும் எல்லோரும் புரிந்துக் கொள்ளக்கூடிய வார்த்தைகளும் கொண்ட அவரது  கவிதைகள்  அவரை ஆங்கில இலக்கியத்தில் அதுவரை இல்லாத ஒரு புதிய சிம்மாசனத்தில் அமர்த்தியது. அவரைப் பின்பற்றியே அதன் பின் வந்த மற்ற கவிஞர்கள் இயற்கையை முன் நிறுத்தி தங்கள் கவிதைகளைப் புனைந்தனர்.வோர்ட்ஸ்வொர்த் மற்றும் கோல்ரிஜ் இருவரின் இந்த சம்பிராதய உடைப்பு எனக்கு விஸ்வநாதன்  ராமமூர்த்தி  இரட்டையர்களை ஞாபகப்படுத்துகிறது. இவர்கள் வேறு வேறு காலங்களில், வேறு வேறு மக்களிடையே, வேறு வேறு படைப்புக்களில்  செயல்பட்டாலும் அவர்களின் கலைகள் வேறுபட்டாலும்  அவர்கள் செய்தது ஒன்றேதான்.  ஒரு கசப்பான மாத்திரையை உடைத்து தேனில் கரைத்துக் கொடுக்கும் யுக்தியையே அவர்கள் செய்தார்கள்.

     முன்பு வானொலியில் முக்கியமான நிகழ்சிகளுக்கு இடைப்பட்ட ஒரு குறுகிய நேரத்தை " இப்போது மெல்லிசை கேட்கலாம்" என்று சொல்லி நிரப்புவார்கள்.இது பொதுவாக ஐந்து முதல் பத்து நிமிடங்கள் நீடிக்கும்.இரண்டு மூன்று இசைக் கருவிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட அவ்விதமான இசை  என் மனதில் மெல்லிசை என்பது சினிமா இசைக்கு முரணானது என்ற எண்ணத்தை விதைத்தது. இந்த எண்ணமே  மெல்லிசை மன்னர்கள் என்று அழைக்கப்படும் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பாடல்களில் ஈடுபாடு காட்டமுடியாமல் செய்து அவற்றை புறக்கணிக்கவும் தூண்டியது.சினிமா இசை, மெல்லிசை என்று எனக்கு நானே இரண்டு கோடுகளைப் போட்டுக் கொண்டு முன்னதையே விரும்பினேன். ஒரு தவறான புரிதல் எப்படி வேறு முடிவுகளுக்கு நம்மை இட்டுச் செல்கிறது என்ற வருத்தம் பின்னர் எனக்கு ஏற்பட்டது.

     ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளாக தமிழ்த் திரையிசையை வெற்றிகரமாக முன் நடத்திச் சென்ற  விஸ்வநாதன்-ராமமூர்த்தியின்  (வி-ரா)இசைத் துவக்கம் ஒரு விபத்து போலவே நிகழ்ந்தது. சி ஆர் சுப்புராமன் 52இல் மரணித்த போது அவருடைய உதவியாளர்களாக இருந்த  இவர்கள்  இருவரும் தடைபட்ட அவரது  இசைப் பணிகளை  தொடர்ந்து செய்து  முழுமையாக்கினார்கள். இந்தப் புதிய உறவு இருவரிடமும் நீடிக்க என் எஸ் கிருஷ்ணன் முக்கிய காரணமாக இருந்தார். அவரே இந்த இரட்டையர்களை சேர்ந்து பணியாற்றும்படி வற்புறுத்தி தன் படத்திலேயே அவர்களை முதன் முதலாக இசைஞர்களாக அறிமுகப்படுத்தினார். 52 இல் பணம் என்ற படத்தில் இவர்கள்  தங்களது திரையிசையை  துவங்கினார்கள் .(எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்? என்ற என் எஸ் கிருஷ்ணனின்  பாட்டு இதில்தான் உள்ளது.)

        50 களில் ஜி ராமனாதனின் ஆளுமை உச்சத்தில்  இருந்தது. இதே சமயத்தில்தான் திரையிசைத் திலகம் என்று அழைக்கப்படும்   கே வீ மகாதேவனும் இங்கே இசைப் பிரவாகம்  செய்து கொண்டிருந்தார். இவற்றுக்கிடையில் ஹிந்துஸ்தானி இசையின் பாதிப்பும் தமிழ்த் திரையிசையை    கட்டிப்போட்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில் வி-ரா  தங்கள் இசையை நிரூபிக்க முயன்றார்கள். சொல்லப்போனால் ஹிந்தி இசையின் பாதிப்பை மீறி அப்போது பாடல்கள் அமைப்பது ஒரு சவாலான காரியம். ஏனென்றால் படத் தயாரிப்பாளர்களும் ஏற்கனவே பிரபலமாக இருந்த ஹிந்தி இசையையே தமிழில் கொண்டுவர பெரிதும் விரும்பினார்கள். அந்தக் காலத்தின் புகழ் பெற்ற பல ஹிந்திப் பாடல்களை தமிழில் உருமாற்றி ஹிந்துஸ்தானி மெட்டில் தமிழ் வார்த்தைகளைப்  பிணைத்து  பாடல்கள் அமைப்பது அப்போது ஒரு சம்பிரதாயமாகவே இருந்து வந்தது. இந்தக் கட்டுகள் தளர  பல புதிய முயற்சிகள் தேவைப்பட்டன.

   கர்நாடக சங்கீதத்தில்  புலமை பெற்ற டி கே ராமமூர்த்தி அடிப்படையில் ஒரு வயலின் வித்வானாக இருந்தாலும், அவருக்கு மேற்கத்திய செவ்வியல் இசையில் மிகுந்த ஈடுபாடு இருந்தது.  விளைவு கர்நாடக ராகங்களும் மேற்கத்திய செவ்வியல் இசையும் பாலும் தேனும் போல கலந்தன. தமிழில் முன்னரே மேற்கத்திய செவ்வியல் இசையின் பாதிப்பும் நவீன மேற்கத்திய இசையின் தொடுதலும் இருந்தாலும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி அவற்றை தங்கள்  பாடலில் சரியான அளவில்  கலந்து  அதேசமயம் நம் nativity அதனால் சற்றும் திரிந்து விடாமல் இந்தப் புதிய  கலப்பிசையை  (fusion)அவர்களின் முத்திரை இசையாக மாற்றிக்காட்டினார்கள். கர்நாடக ராகங்கள் என்னும் சுவற்றின் மீது தங்கள்  மெல்லிசையை மேற்கத்திய இசையின் தீற்றலோடும்  எளிமையும் புதுமையுமான மெட்டுக்களோடும் இழைத்துத்   தங்கள் இசை வண்ணத்தைத்  தீட்டினார்கள். இந்த இசையோவியங்கள்  அறுபதுகள் முழுவதும் அனாசயமாக ஆட்சி செய்தன. இப்படிப்பட்ட இசைப் பரிசோதனைகள் அப்போதே செய்யப்பட்டதாலேயேதான்  அதன் பின் வந்த பல இளம் இசைஞர்களுக்கு பின்னர்  விசாலமான  பாதை கிடைத்தது. அவர்களால்  பெரிய சிரமங்களின்றி பாடல்களும்  அமைக்க முடிந்தது.  இந்த உண்மை தெரியாத பலர் இணையத்தில் உளறிக்கொட்டுவதை படிக்க நேரிடும் போது அசதியாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது..உண்மை   இதுதான் என்று அவர்களுக்கு எழுதினாலும் அவர்கள் அதை வசதியாக தவிர்த்துவிடுகிறார்கள்.

       இதன் தொடர்ச்சியாக  இணையத்தில் உலாவரும் சில தவறான புரிதல்களை நான் நினைத்துப் பார்க்கிறேன்.  அவற்றில் ஒன்று  தமிழில் முன்னிசை(prelude), இடையிசை(interlude) இரண்டும் இளையராஜாவுக்குப்  பிறகே ஏற்பட்டது என்பது.இது ஒரு மகா அபத்தமான சிந்தனை என்பதைத் தாண்டி   எப்படி ஒரு தீவிர இசை ரசனை சில உண்மைகளை மறுக்கிறது என்ற கருத்தை  படிப்பவர்களுக்கு உணர்த்தவே  இதை எழுதுகிறேன். இது போன்ற இன்னும் பல போதையேறிய  கருத்துக்கள் உண்மையான இசைத் தேடலை என்னுள் வலிமையாக்கின.அதன்  விளைவாகவே இந்த இசை விரும்பிகள் என்னும் நீண்ட பதிவை ஆரம்பித்தேன்.

          52 இல் துவங்கி 50 களின் இறுதியில் அதி  வேகம் பிடித்து,  புதிய சாலைகளில் 65 ஆம் ஆண்டு வரை பயணித்த  இந்த இரட்டையர்களின் இசைப் பாய்ச்சல் படத்திற்கு படம் மெருகேறி புதிய   எல்லைகளை தமிழ்த்திரையிசைக்கு அறிமுகம் செய்தது.  மெல்லிசையை ஒரு இனிய இசை அனுபவமாக இவர்களின் பாடல்கள் மாற்றின. இசையின் ரசனையை இந்த இரட்டையர்கள் அடுத்தடுத்த  கட்டத்திற்கு எடுத்துச் சென்றார்கள். 

    குறிப்பாக அறுபதுகளில் வந்த அவர்களின் ஒவ்வொரு பாடலும் வீரத்தை வீரியமாகச் சொல்லும் தன்னம்பிக்கை தரும் தாளங்களாக,  தாய் மொழியைப் போற்றும் தமிழின் தங்கக்குரலாக, பண்பாட்டை வீண் பெருமைகளின்றி பாடும் பண்பட்ட பாட்டாக,குழந்தைகளுக்கு இசையோடும்  தாலாட்டாக, உறவைப் போற்றும் மக்களின் உன்னத  உணர்ச்சியாக ,காதலை அதன் எல்லைகள் தாண்டாது நளினமாகச் சொல்லும் காதலர்களின் கீதமாக, வாழ்க்கையை வாழ்ந்துவிட்ட மனிதர்களின்  தத்துவ கானமாக, வீழ்ந்த  நெஞ்சங்களின் வேதனையை வெளிப்படுத்தும் துயர இசையாக,  தம்பதிகளின் ஆத்மார்த்தமான அன்பை விரசங்களிலாமல்  பண்பாகப் பாடும் பாடல்களாக, எதிர்பாலினரை விகாரங்களின்றி பகடி செய்யும் துள்ளல் இசையாக,இளைஞர்களின் குதூகலத்தை குறைவின்றி கொடுக்கும் கும்மாளப் பாடல்களாக,  பிரிவைச் சொல்லும் மனைதை பிழியும் சோக ராகங்களாக, காதல் தோல்வியை போதையின்றி நாகரீகமாக உணர்த்தும் நல்லிசையாக, காதல் கைக்கூடிய காதலர்களின் உணர்ச்சியை காமமில்லாமல் காட்சிப்படுத்தும்  களிப்பான கானமாக ஒலித்தன.

     மேற்குறிப்பிட்ட பத்தியோடு கீழே உள்ள பாடல்களை பொருத்திப்பாருங்கள்.இது உங்களுக்கே புரியும்.
    
    அச்சம் என்பது மடமையடா- மன்னாதி மன்னன்,60
தமிழுக்கும் அமுதென்று பேர்- பஞ்சவர்ணக்கிளி,65(இது எம் எஸ் வி தனியாக இசை அமைத்தது)
    கண் போன போக்கிலே கால் போகலாமா?- பணம் படைத்தவன்,65
   அத்தையடி மெத்தையடி- கற்பகம்,63
   மலர்ந்தும் மலராத பாதி மலர் போல - பாசமலர்,61
   அனுபவம் புதுமை  அவனிடம் கண்டேன் - காதலிக்க நேரமில்லை,64
   சட்டி சுட்டதடா கை விட்டதடா - ஆலயமணி,62
   மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா - சுமை தாங்கி,62
   வளர்ந்த கலை மறந்துவிட்டாள்-காத்திருந்த கண்கள், 62
 ஆஹா மெல்ல நடமெல்ல நட மேனி என்னாகும்  புதிய பறவை,64,
  ஏய் நாடோடி- அன்பே வா,66     (இசை-எம் எஸ் வி)
   ஆண்டவன் படச்சான் என்கிட்டே கொடுத்தான் - நிச்சய தாம்பூலம்,61
   நினைக்கத் தெரிந்த மனமே- ஆனந்த ஜோதி, 63
   எங்கிருந்தாலும்  வாழ்க- நெஞ்சில் ஓர் ஆலயம், 62
   கொடியசைந்ததும் காற்று வந்ததா- பாரத்தால் பசி தீரும்,62

   இதே போல ஒரு பட்டியலை இவர்களுக்கு பின் வந்த இசைஞர்களின் பெயருக்கு கீழேயும் தயாரிக்கலாம். ஆனால் அவற்றில் எத்தனை கண்ணியமான, தரமான பாடல்கள் என்பது கேள்விக்குரியது. மேலும் அது போன்ற ஒரு ஒப்புமை இவர்களுக்கு நாம் செய்யும் அநீதி என்று நான் கருதுகிறேன்.

      அறுபதுகளில் எப்படி நமது மக்கள் இசையை ரசித்தார்கள் என்பது ஆய்வுக்குரியது. அப்போது ரெகார்ட் பிளேயர் என்று சொல்லப்படும் இசைத் தட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. ஆனால் வெகு சிலரே அதை தங்கள் வீடுகளில் வைத்திருந்தார்கள். வானொலியே பெரிதும் எல்லோரிடமும் இருந்தது. இந்த வானொலியே இசையை எல்லோரிடத்தும் கொண்டு சேர்த்தது. வானொலியில் சினிமாப் பாடல்கள் தற்போதைய எப் எம்  போலில்லாமல் குறிப்பிட்ட கால அளவிலேயே ஒலிபரப்பு செய்யப்பட்டன. கதைப் புத்தகம், வானொலி இசை இது  இரண்டும்தான்  அப்போது பெரும்பான்மையான மக்களிடம் இருந்த பொழுதுபோக்குகள்.பாடல்களை பாக்கெட்டுக்குள் வசதியாக வைத்துக்கொள்ளும் தொழில்நுட்பம் எவரின் கற்பனையிலும் கூட உதிக்காத அந்தச் சூழலில் ஒரு ரசிகனின் ஆவலை சற்று எண்ணிப்பாருங்கள். பலநாட்கள் காத்திருந்து பின் திடீரென வானொலியில் தனக்கு பிடித்த பாடல் ஒலிக்கும் போது அந்த ரசிகன் அடைந்த ஆனந்தம் அளவில்லாதது. திரையிசைப் பாடல்கள் வெறும் மூன்று நான்கு நிமிட கால நகர்ப்பாக (time pass) இல்லாமல் அவை வாழ்க்கையின் ஒரு கூறாகவே   இருந்தன. அவ்விசை அவர்களின் மூச்சில் சுவாசமாக கைகளில் உணவாக  இருந்து அவர்களை வழிநடத்தியது.அவர்கள் அந்தப் பாடல்களில் தங்கள் வாழ்கையின் ருசியையும், வலியையும் ஒரு சேர அனுபவித்தார்கள்.வெறும் விடலைப் பையன்கள் மட்டும் கேட்கும் இசையாக இல்லாமல் ஒரு பொது ரசனைக்கான அழகியலாக எல்லோரும் காதலிக்கும் கலையாக  அவை  ஆட்சி செலுத்தின.  எனவேதான் அப்பாடல்கள் கண்ணியமாகவும்,தரமாகவும், பண்பாகவும் இருந்தன.

    மேலும்  காமத்துக்கான சூழல் இருந்தாலும் விரக தாப முனங்கல்கள் இல்லாமல் மிகவும் கவித்துவமாக பாடல்களை அவர்கள் அமைத்தார்கள். உதாரணத்திற்க்கு " அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்"(பாவமன்னிப்பு ,61) என்ற பாடலை ஆராய்வோம். ஒரு முறை என் நண்பன் ஒருவன் அந்த காலத்துப் பாடல்களிலேயே விரசம் இருப்பதாக் கூறி இந்தப் பாடலை குறிப்பிட்டான்.அப்போதைக்கு நானும் அதை வழி மொழிந்தேன். ஆனால் உண்மையில் இது காமத்தை விரசமின்றி உணர்த்தும் ஒரு எழில் கொண்ட பாடல். சுசீலாவின் குரலில் ததும்பும் மிச்சமிருக்கும் இச்சை இங்கே கேட்பவரை எவ்விதத்திலும் முகம்  சுளிக்க வைப்பதில்லை. "அவர் என்னைத்தான்".. என்று குரலை நீட்டிப்பதிலும் பின் வரும் ஒரு நொடி நிசப்ததிலும் அதன் பின் தொடரும் "எப்படிச் சொல்வேனடி" என்ற வெட்க மறுத்தலிலும்  தெரிவது ஒரு பெண்ணின்  இனிமையான உணர்ச்சியே அன்றி காமம் இல்லை. இந்தத் தரம் இவர்களின் அடுத்த தலைமுறை இசையில் கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கிப் போனதையும் இங்கே நான் நினைவூட்ட விரும்புகிறேன்.காமத்தை வைத்து இதயத்தை வருடும் இசையாக இல்லாமல் இச்சையை தூண்டும் இசையாகவே பின் வந்தவர்களின் பாடல்கள் அமைந்தன.இளையராஜாவின் பிரபலமான "நிலா காயுது"(சகலகலாவல்லவன்,82) இதற்கு மிகச் சரியான உதாரணம்.

       எந்த நதியும் ஒரு இடத்தில் மிக அகலமாக விரிவடைந்து செல்வதைப் போல, எந்த மழையும் ஒரு இடத்தில் அதிகமாகப் பொழிவதைப்போல, எந்த மலையும் ஓரிடத்தில் உயரமாக இருப்பது போல,எந்த விளக்கும் ஒரு சமயத்தில் மிகப் பிரகாசமாக எரிவதைப் போல, எந்தக் கலைஞனுக்கும் ஒரு உயர்ந்த காவியம்   அமைவதைப்போல தமிழ்த் திரையிசையும்  அதன் உச்சத்தைத் எட்டியது.அந்த உச்சம்  நிகழ்ந்தது இந்த அறுபதுகளில்தான்.இசை விமர்சகர்கள் முதல் ஒரு சாதாரன   ரசிகன் வரை இன்றைக்கும் தமிழ்த் திரையிசையின் பொற்காலம் என்று  வர்ணிப்பதும் சுட்டிக்காட்டுவதும்  கே வி மகாதேவன்,விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்ணதாசன்,டி எம் எஸ், சுசீலா,எம் ஜி ஆர், சிவாஜி கணேசன் போன்ற கூட்டணி திரையில் ஆட்சி செய்த இந்த அறுபதுகளைத்தான். It's a very profound statement of truth. இதை மறுப்பதற்கு மனசாட்சியை சற்று மறந்துவிட வேண்டும்.

        வி-ரா தமிழில் கூட்டிசையை(chorus) வெற்றிகரமாக பயன்படுத்தியவர்கள் என்பதை நாம் இங்கே நினைவில் கொள்ளவேண்டும். இதுவும் மேற்கத்திய பாணி இசைதான். பொதுவாக இவர்கள் பாடலின் இடையே வரும் இடையிசையில் (interlude) இவ்விதமான கூட்டிசையை அறிமுகப்படுத்தினர். இதற்கு உதாரணமாகப் பல பாடல்களை சுட்டிக்காட்ட முடிந்தாலும் இரண்டு பாடல்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். முதலாவது  பணம் படைத்தவன்(65) என்ற படத்தில் வரும் "கண் போன போக்கிலே" என்ற பாடல். மேற்கத்திய இசையின் நிழல் அந்தப் பாடல் முழுவதும் படிந்திருந்தாலும், மெல்லிசையை விட்டு அது கொஞ்சமும் மீறிச் செல்லாமல், இரண்டும்  ஒன்றோடொன்று சுகமாக கை கோர்த்துச்  செல்வதை உணரலாம்.இரண்டாவது புதிய பறவை படத்தில் வரும்  "பார்த்த ஞாபகம் இல்லையோ?" பாடல்.இந்தப் பாடலின் மிகப் பெரிய பலமே ஆரம்பத்திலும் இடையிலும்  வரும் கூட்டிசைதான்.

 










இதைத்  தாண்டி இடையிசையை பிரபலமாகிய பெருமையும் இவர்களுக்குண்டு.  இடையிசை  இவர்களின் பாடல்களில் அன்னியமாக ஒலிக்காமல் பாடலின் வேகத்தையும்  நளினத்தையும் குலைத்து விடாமல் பாடலின் போக்குடனே சென்று சரணத்தோடு இணையும்.இந்த இடையிசை இளையராஜாவின் காலத்தில் உச்சத்திற்கு சென்று தற்போது காணாமலே போய்விட்டது.

           இதைத் தவிர இவர்களின் பாடல்களில் வரும் ஹம்மிங் சிறப்பு பெற்றது.நெஞ்சம்  மறப்பதில்லை பாடலின் துவக்கத்தில் ஒலிக்கும் அந்த பிரபலமான  ஹம்மிங் கேட்பவரை ஒரு இசை அனுபவத்திற்கு தயார் செய்துவிடுகிறது. இந்த கோரஸ் மற்றும் ஹம்மிங் ஒரு மேற்கத்திய இசை அமைப்பாக இருந்தாலும் அவற்றை இவர்கள் மெல்லிசையோடு துல்லியமாகக் கலந்து நம் இசைக்கு  இன்னொரு  பரிமாணம் சேர்த்தார்கள்.

    மேலும் விஸ்வநாதன் பாடல்களுக்குள்ளே இனிமையாக மெட்டுக்களை  மாற்றுவதில் கை தேர்ந்தவராக இருந்தார். புதிய பறவை(64) யின் மிகச் சிறப்பான பாடலான "சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து" என்ற பாடலில் சுசீலாவின் குரல் தொட்டுச் செல்லும் பல  ஏற்றங்களும் இறக்கங்களும் கேட்பவரின் மனதில் அந்தப் பாடலை உறையச் செய்துவிடுகிறது. பாடியவர் இதைச்  செய்தாரா அல்லது இசை அமைத்தவர் அப்படிச் செய்யப் பணித்தாரா என்பதை நான் எப்போதும் எனக்குள்ளே கேட்டுக்கொள்வதுண்டு.

       61 ஆம் ஆண்டு இவர்களின் இசைக்கு ஒரு மிக முக்கியமான வருடம். அந்த வருடத்தில் வந்த இவர்களின்  படங்களைப் பாருங்கள்.
பாக்கியலக்ஷ்மி- மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நிச்சய தாம்பூலம்- பாவாடை தாவணியில் பார்த்த உருவமா,
படைத்தானே மனிதனை ஆண்டவன் படைதானே 
பாலும் பழமும்,-ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் ,
என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் , 
காதல் சிறகை,
போனால் போகட்டும் போடா
பாசமலர்,- எங்களுக்கும் காலம் வரும், 
மலர்களைப் போல் தங்கை, 
மலர்ந்தும் மலராத,
யார் யார் யார் அவர் யாரோ, 
வாராயென் தோழி
பாவமன்னிப்பு- எல்லோரும் கொண்டாடுவோம், 
வந்த நாள் முதல், 
அத்தான் என்னத்தான்,
பாலிருக்கும் பழமிருக்கும், 
காலங்களில் அவள் வசந்தம்

   மேற்குறிப்பிட்ட  பாடல்களுக்கு அறிமுகமோ அல்லது விளம்பரமோ தேவையில்லை.பாடலின் முதல் வரியே பலருக்கு அந்தப் பாடல்களின் வழியே அவர்கள் உணர்ந்த பல்வகை உணர்சிகளை ஒரே நொடியில் மீட்டுவிடும்.

         62 ஆம் வருடம் இவர்களின் இசை இன்னும் பல இலக்குகளை எட்டியது.
 
ஆலயமணி,-கண்ணான கண்ணனுக்குஅவசரமா ,
பொன்னை விரும்பும் பூமியிலே,
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா,
சட்டி சுட்டதடா,
பலே  பாண்டியா, -அத்திக்காய் காய் காய் , 
வாழ நினைத்தால்வாழலாம் 
பந்த பாசம், - இதழ் மொட்டு,
காத்திருந்த கண்கள்,-வளர்ந்த கலை மறந்துவிட்டாள் ,
காற்று வந்தால் தலை சாய்க்கும் நாணல்,,
நெஞ்சில் ஓர் ஆலயம்,-நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், 
சொன்னது நீதானா,
முத்தான முத்தல்லவோ
பாதகாணிக்கை,- வீடு வரை உறவு,
உனது மலர் கொடியிலே 
பாசம்,-பால் வண்ணம் பருவம், 
உலகம் பிறந்தது,
என்னருகில் நீ இருந்தால்
படித்தால் மட்டும் போதுமா,-பெண் ஒன்று கண்டேன்
நான் கவிஞனுமில்லை,
பார்த்தால் பசி தீரும்,-யாருக்கு மாப்பிள்ளை யாரோ, 
கொடி அசைந்ததும் காற்று வந்ததா,
போலீஸ்காரன் மகள்,-நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ,
இந்த மன்றத்தில் ஓடி வரும்
சுமைதாங்கி,-மயக்கமா கலக்கமா, 
மனிதன் என்வபன் தெய்வமாகலாம்
வீரத்திருமகன்-ரோஜா மலரே ராஜ குமாரி , 
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் 

        63 ஆம்  வருடம் வந்த படங்களைப் பார்ப்போம்.

ஆனந்த ஜோதி,நினைக்க தெரிந்த மனமே,
ஒரு தாய் மக்கள், 
பனி இல்லாத மார்கழியா
இதயத்தில் நீ,-பூ வரையும் பூங்கொடி ,சித்திரப் பூவிழி,
கற்பகம், -மன்னவனே அழலாமா,
அத்தைமடி மெத்தையடி ஆடி விளையாடம்மா,
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு,
மணியோசை,தேவன் கோவில் மணியோசை,
நெஞ்சம் மறப்பதில்லை,-நெஞ்சம் மறப்பதில்லை, 
அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை 
பார் மகளே பார், -நீரோடும் வைகையிலே, 
அவள் பறந்து போனாளே, 
மதுரா நகரில்
பணத்தோட்டம்,-பேசுவது கிளியா,
ஒருவர் ஒருவராய்
பெரிய இடத்துப் பெண்-கட்டோடு குழலாட,
அன்று வந்ததும், 
பாரப்பா பழனியப்பா

      64 இல் வந்த படங்கள்.

ஆண்டவன் கட்டளை,-அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ,
உள்ளம் என்பது ஆமை, 
அழகே வா அருகே வா ,
ஆறு மனமே ஆறு
தெய்வத்தாய்,-வண்ணக்கிளி சொன்ன மொழி ,
ஒரு பெண்ணைப் பார்த்து, 
இந்தப் புன்னகை
என் கடமை,-ஹலோ மிஸ் எங்கே போறிங்க 
இரவினில் என்ன
கை கொடுத்த தெய்வம்,-சிந்து நதியின் மிசை,
 ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ,
கர்ணன், -  உள்ளத்தில் நல்ல உள்ளம், 
கண்கள் எங்கே,
என்னுயிர் தோழி
கறுப்புப் பணம்,-எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் , 
ஆடவரலாம்
காதலிக்க நேரமில்லை,-நாளாம் நாளாம்,
மலரென்ற முகமொன்று, 
அனுபவம் புதுமை
,நெஞ்சத்தை அள்ளிக்கொஞ்சம் தா,
என்னப் பார்வை, 
உங்கள் பொன்னான கைகள்,
பச்சை விளக்கு,-ஒளிமயமான எதிர்காலம்,
கேள்வி பிறந்து அன்று
படகோட்டி,-தரைமேல் பிறக்க வைத்தான், 
தொட்டால் பூமலரும்,
பாட்டுக்கு பாட்டெடுத்து, 
என்னை எடுத்து
பணக்கார குடும்பம்,- அத்தை மகள் ரத்தினத்தை, 
ஒன்றுஎங்கள் ஜாதியே,
பறக்கும் பந்து பறக்கும் , 
பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம் போக 
புதிய பறவை,- உன்னை ஒன்று கேட்பேன், 
எங்கே நிம்மதி,
பார்த்த ஞாபகம் இல்லையோ , 
சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து
சர்வர் சுந்தரம்,-அவளுக்கென்ன அழகிய முகம் ,
போகப் போக தெரியும்,
சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு 

       65 இல் வந்த படங்கள்.

எங்க வீட்டுப் பிள்ளை,-நான் ஆணையிட்டால், 
நான் மாந்தோப்பில்,
குமரிப்பெண்ணின், 
மலருக்குத் தென்றல் பகையானால்
பணம் படைத்தவன்,-கண் போன போக்கிலே,
மாணிக்கத் தொட்டில்
சாந்தி,-யார் அந்த நிலவு, 
வாழ்ந்து பார்க்கவேண்டும்
வெண்ணிற ஆடை,-அம்மம்மா காற்று வந்து,  
கண்ணன் என்னும் மன்னன்,  
என்ன என்ன வார்த்தைகளோ,
சித்திரமே சொல்லடி
ஆயிரத்தில் ஒருவன்.-உன்னை நான் சந்தித்தேன்,
அதோ அந்த பறவை,
ஓடும் மேகங்களே,
ஏன் என்ற கேள்வி,
நாணமோ இன்னும் நாணமோ ,
பருவம் எனது பாடல்,
ஆடாமல் ஆடுகிறேன்.

                   ஒரு படத்தில் ஒன்றிரண்டு பாடல்கள் சிறப்பாக இருப்பது இயல்பானதே.மாறாக அனைத்துப் பாடல்களையும் அபாரமாக அமைப்பதென்பது ஒரு வரம் என்றே சொல்ல வேண்டும். எந்தப் பாடலை எடுப்பது எதை வைப்பது என்ற குழப்பம் இதை எழுதும் போது எனக்கு ஏற்பட்டது. மேலும் இவர்களின் பல படங்களை இங்கே நான் குறிப்பிடவில்லை. இருந்தும் மேற்குறிப்பிட்ட பாடல்களை வாசிக்கும் போதே அவற்றின் இனிமை நம்மை ஒரு சுகமான வாசம் போல குதூகலிக்கச் செய்கிறது.இந்தப் பாடல்களின் சுகம் தமிழ்த் திரையிசை இருக்கும் வரை இறவாமல் இங்கே தங்கி இருக்கும் என்பது உறுதி. ஒரு பாடல் எத்தனைப் பேரால் கேட்கப்படுகிறது என்ற பொருந்தாத வரைமுறையை வைத்துக் கொண்டு அந்தப் பாடலின் சிறப்பை தீர்மானிக்கும் முட்டாள்தனமான மனப்போக்கு நம்மிடம் வெகு அதிகமாக் காணப்படும் பொது புத்தி. உண்மையில் ஒரு பாடல் எத்தனை காலம் இங்கே கேட்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதைக் கொண்டே நாம் அதன் சிறப்பை வரைய முடியும். அப்படிப் பார்த்தால் 50 களிலும் 60 களிலும் வந்த பல பாடல்களே அந்தச் சிறப்புக்குரியவை என்பது தெளிவு.

      புதிய பறவை, வெண்ணிற ஆடை, காதலிக்க நேரமில்லை, ஆயிரத்தில் ஒருவன், படகோட்டி,ஆனந்த ஜோதி, கர்ணன் போன்ற படங்களை எடுத்துக் கொண்டால் அவற்றின் அத்தனைப் பாடல்களுமே தங்கச் சுவை கொண்டவை. குறிப்பாக (என்னுடைய தனிப்பட்ட விருப்பமான)வெண்ணிற ஆடை படத்தின் எல்லா பாடல்களும் வெகு நேர்த்தியானவை. கேட்பவரை ஒரு கணம் உறைய வைக்கும் குரலும், வியப்பூட்டும் மெட்டும்,தாலாட்டும் இசைக் கோர்ப்பும், பண்பட்ட கவிதை வரிகளும் "கண்ணன் என்னும் மன்னன் பேரை", "அம்மம்மா காற்று வந்து ஆடை", "என்ன என்ன வார்த்தைகளோ", "சித்திரமே சொல்லடி" போன்ற பாடல்களை நோக்கி மீண்டும் மீண்டும் செல்லத் தூண்டுகின்றன. ஒரு ரசிகனின் மனதில் பற்பல வண்ணக் கோடுகளைத் தீட்டி ஒரு வானவில்லின் அனுபவத்தை அவனுக்கு கொடுக்கின்றன.படகோட்டி, ஆயிரத்தில் ஒருவன் படப் பாடல்களை கேட்கும் எவருமே ஒரு மவுனமான தலை அசைப்பின் மூலம் அவற்றின் பெருமையையும் சிறப்பையும் தெரிவித்து விடுகிறார்கள். இங்கே குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு சிறப்பு என்னவென்றால் இத்தனை ஆயிரம் பாடல்களில் எந்த இரண்டு பாடலும்  ஒரே மாதிரி ஒலிப்பதில்லை. ஒவ்வொரு பாடலும் வெவ்வேறான மெட்டில் அமைக்கப்பட்டு ஒரு  புதிய இசை  அனுபவத்தை கேட்பவருக்கு அளிக்கிறது.

   தமிழ்த் திரையிசையின் பொற்காலம் என்று வர்ணிக்கப்படும் 60களை விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசையாக மட்டும் பார்ப்பது முரணானது.மேலும் இது அப்போது தமிழ்த் திரையிசையில் இருந்த பல இசை மேதைகளுக்கு நாம் செய்யும் அநீதி. கே வி மகாதேவன், ஜி ராமநாதன்,எ எம் ராஜா, சுதர்சனம், சுப்பையா நாயுடு இன்னும் பல இசைஞர்களும் இதே பொற்காலத்தைச்  சேர்ந்தவர்கள்தான். வசதியாக அவர்களை நாம் மறந்துவிடலாகாது.

    பணத்தில் துவங்கி ஆயிரத்தில் ஒருவனில் தமிழ்த் திரையிசையின் ஒரு மாபெரும் இசைப் புரட்சி முடிவு பெறுகிறது.விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் பிரிகிறார்கள். இதற்கு பல காரணங்கள் யூகமாக இன்றுவரை சொல்லப்பட்டு வருகின்றன. ஸ்ரீதர் மற்றும் கண்ணதாசன் இருவருமே இந்தப் பிரிவுக்கு காரணம் என்று கூட ஒரு கருத்து உண்டு.  ஆனால் அந்தப்  பதினைந்து ஆண்டுகள் தமிழ்த் திரையிசையில் அவர்கள் எடுத்தவைத்தச் சுவடுகள் எல்லாம் ஒரு தங்க  இசையாக காற்றில் தவழ்கின்றன. இந்தச் சாதனை முறியடிக்கப்பட தமிழ்த் திரையிசை இரண்டாவது பொற்காலத்தை அடையவேண்டும். Good things might recur. But the best things never.

  மற்றொரு கவனிக்கத்தக்க அம்சத்தைப் பற்றி நாம் இங்கே பேசவேண்டும்.அது இவர்கள் தங்கள் இசையை மட்டும் முன்னிலைப் படுத்தாமல் பாடலைப் பாடியவர்களையும், அதை எழுதிய கவிஞனையும் மக்களிடம் கொண்டு சேர்த்தார்கள். ஒரு பாடலை  உருவாக்குவதில் தன் பங்களிப்பைச் செய்யும் எல்லோருக்கும் உரிய  இடம் கொடுத்து அவரவர் தன் பாதையில் பயணிக்கும் உரிமையை பறித்துக் கொள்ளாமல் ஒரு பண்பட்ட நாகரீகத்தை காப்பாற்றினார்கள். இதனாலேயே இன்று பலர் அவர்களின் பாடல்களில்  டி எம் எஸ், சுசீலா, பி பி ஸ்ரீனிவாஸ்,டி ஆர் மகாலிங்கம், எல் ஆர் ஈஸ்வரி, எஸ் பி பி,  பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்,மருதகாசி,கண்ணதாசன்,வாலி, எம் ஜி ஆர்,  சிவாஜி, ஜெமினி, நாகேஷ், சந்திரபாபு போன்றவர்களை அடையாளம்  காண முடிகிறது.அவரவர்க்கு செல்ல வேண்டிய சிறப்பை உரியவர்களுக்கு கொடுத்துவிடுவது ஒரு உன்னதமான இசையின் நற்குணம். அது அவர்களிடம் இருந்தது. இந்த மேன்மையான பண்பாடு அவர்களுக்கு அடுத்து வந்த இசைஞர்களிடமிருந்து விடை பெற்றுச் சென்றுவிட்டது. "இது என் இசை" என்று கர்வம் மிளிர மேடையில் சுயபுராணம் செய்துகொள்ளும் ஒரு புதிய சீர்கெட்ட, தரங்கெட்ட கலாச்சாரம் அதன்பின்  தோன்றியது.

     " பாசம்"(62)படத்தில் வரும் "உலகம்  பிறந்தது எனக்காக"என்னும் ஒரு அற்புதமான பாடலை குறித்து இப்போது பேசலாம். இந்தப் பாடலின் வரிகள் ஒரு சுயநலவாதியின் குரல் போல இருந்தாலும் பாடலை கேட்கும் போது இது சுயநலமில்லை, மாறாக தன்னம்பிக்கை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இந்தப் பாடலில் விஸ்வநாதன் ராமமூர்த்தி மட்டும் நமக்குத் தெரிவதில்லை . கண்ணதாசன் துடிப்பாகத்  தெரிகிறார். டி எம் எஸ் குதூகலமாகத் தெரிகிறார்.எம் ஜி ஆர் பரவசமாகத் தெரிகிறார்.இதுவே ஒரு உண்மையான இசையின் முகம்.

        இன்றோ நாம் எதோ ஒரு இசை அமைப்பாளரின் பெயரை மட்டும் குறிப்பிட்டு இது அவர் பாடல் என்று அழைப்பதோடு நின்றுவிடுகிறோம்.வேறு  சிலரோ  ஒரு பாடலை ஒரு குறிப்பிட்ட இசைஞரின் பாடலாக மட்டுமே பார்க்கவேண்டும் என்று சொல்வதுண்டு.அது உண்மையில்லை.மேலை நாட்டு இசைவிரும்பிகளிடம் இது போன்ற அபத்தமான இசைப் பார்வை கிடையாது. Pink Floyd, Led Zeppelin, The Who, Rolling Stones, Deep Purple, The Beatles, The Cars, Alan Parsons Project,   போன்ற  குழுக்களின்  பாடல்களை  அவர்கள் அந்தக் குழுவினரின் ஒருங்கிணைந்த இசையாகவே  எடுத்துக் கொள்கிறார்கள்.அவர்கள் எப்போதும் ஒரே ஒருவரை மையப் படுத்தி மற்றவர்களை பின்னுக்குத் தள்ளுவதில்லை. இதுதான் நாம் இசையை அணுக வேண்டிய முறை.இசையின் இந்தப் பன்முகத் தன்மையை மறுக்கும் எந்த இசைஞரும் தான் சுவாசிக்கும் இசைக்கு நியாயமாக இருக்கவில்லை என்பதே உண்மை.

Monday, 13 July 2015

மெல்லிசை ஒன்று இன்று மௌனமானது.


என்ன எழுதுவது என்று தெரியவில்லை.































இந்த மௌனம்தான் என் இப்போதைய பதிவு.








சில தூக்கங்கள் துக்கமளிக்கின்றன.






Tuesday, 7 July 2015

விஸ்வநாதன் என்னும் விலையில்லா இசைவிற்பன்னர்.

எம் எஸ் வி பற்றிய பல செய்திகள் கவலையை வேதனையோடு   ஊசி ஊசியாக நமக்குள் இறக்குகின்றன.

எம் எஸ் வி நலம் பெற வேண்டி ஒரு பிராத்தனை செய்வோம்.

எம் எஸ் வி போன்றோர் இல்லாவிட்டால் நாம் இன்று ரசிக்கும் இசைப் பாரம்பரியம் கிடையாது  என்பது நிஜம்.

இசையை ரசிக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் சரி, அது பாகவதரோ கே வி மகாதேவனோ,  இளையராஜாவோ, ரஹ்மானோ, தேவாவோ,, ஹாரிஸ் ஜெயராஜோ, அணிரூத்தோ ...

எம் எஸ் வி இல்லாத இசை உலகம் கற்பனையில் கூட ஒரு வண்ணமில்லாத வானவில்தான்.






Tuesday, 30 June 2015

இசை விரும்பிகள் XXVI - எண்பதுகள்- கவிதைக் காற்று.

 சற்று கற்பனை செய்து  பார்ப்போம்  இவற்றை.  

நிறமில்லா வானவில், 
மணமற்ற   மலர்கள்,
ஒளியிழந்த  விளக்கு, 
தடைகளற்ற வெற்றி, 
சுவையில்லாத  விருந்து, 
நினைவுகளில்லா வாழ்க்கை,
பறவைகள் துறந்த  தோட்டம், 
 மண் வாசனையில்லா  மழை,
மனதைத்  தொடாத மகிழ்ச்சி, 
விரலைத் தீண்டாத நெருப்பு,
 குதூகலமற்ற கேளிக்கை,
     வசீகரமில்லாத ஓவியம்,   
அலைகளற்ற கடல், 
 ஈரமற்ற  பிணைப்பு , 
     கவிதையில்லா  கானம்........


                     
                                             

                                   எண்பதுகள் : கவிதைக் காற்று 



     நண்பரின் நண்பரை சந்திக்கும் நிகழ்வு பல வேளைகளில் ஒரு அவஸ்தையான அனுபவத்திற்கு கிடைக்கும் இலவச டிக்கட். அதிலும் நாம் சந்திக்காத ஒருவரைப் பற்றிய பலத்த முன்னுரைகள் நம் மூளைக்குள் தகவல்களாக அனுப்பப்பட்டபின் அது ஏற்படுத்திவிடும் பிம்பம் ஏகத்துக்கு பிரம்மாண்டமாக மாறி, அந்த எதிர்பார்ப்பு சாத்தியப்படும்  போது நாம் சந்திக்கும் நிஜம் சில சமயங்களில்  எதோ சர்க்கஸ் கோமாளிக் கூத்து போல ஆகிவிடுகிறது.  சமீபத்தில் எனக்கு இது நடந்தது.

         தன் அபிமான நண்பரின் பொது அறிவு மற்றும் கணவான் குணத்தைப் பற்றி (ஜென்டில்மேன் என்பதன் தமிழ்ச்சொல்) என் தோழர் ஒருவர் அடிக்கடி superlative adjective சேர்த்து பல விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வார்.  ("பயங்கரமா தண்ணி அடிச்சா கூட மத்த யாரப் பத்தியும் புரளி பேசமாட்டார். ஏதாவது பொது அறிவு கேள்விதான் கேப்பார். அப்படி ஒரு  ஜென்டில்மேன்") இரண்டு மூன்று  முறைகள் மொபைல் போனில் அவருடன் பேசியிருக்கிறேன் கட்டாயத்தின் பேரில். இந்த முறை நேரமோ  அல்லது வேறு  எதுவோ எங்களை சந்திக்க வைத்து விட்டது. சமீபத்தில் என்னைப் பார்க்க வந்திருந்த  எனது தோழர் என்னிடம், "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. (நண்பரின் பெயரைச் சொல்லி) அவர் வர்றதா சொல்லியிருக்கார்." என்றதும் கொஞ்சம் கலவரமாக உணர்ந்தேன். ஜுராசிக் பார்க் படத்தில் டி ரெக்ஸ் டைனோசர் அறிமுகமாகும் வரை மனதில் எகிறும்  த்ரில் போன்று ஏகப்பட்ட பதை பதைப்புடன் நான் காத்திருந்தேன். சில நிமிடங்களுக்குப் பிறகு  வந்தார் அந்த பொது அறிவுப் புயல்.

       சற்றும் பொருத்தமில்லாத தோற்றம் --- அதாவது நான் கற்பனை செய்திருந்த தோற்றத்தை முற்றிலும் சேதப்படுத்தியது போல  அவர் காட்சியளித்தார். அவரை ஏதோ மாதிரி கற்பனை செய்திருந்தது என் தவறுதான். வந்தவர் சம்பிரதாயமாக  என் கைகளைக் குலுக்கிவிட்டு பரஸ்பர அறிமுகங்களுக்குப் பிறகு சடாரென்று தோழரின்  பால்ய வயது கிரிக்கெட் சாகசங்களை எதோ அன்று காலைதான்  நடந்தது போல விவரிக்க ஆரம்பித்துவிட்டார், (ஆறு பந்துலயும் ஆறு சிக்சர் அடிப்பான்யா இவன்.) நான் எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் இருக்க, நான் காது கொடுத்துக் கேட்க விரும்பாத கிரிக்கெட் தொடர்பான டெக்னிகல் வார்த்தைகள் சரமாரியாக விழுந்தன. கொஞ்சம் நெளிந்த  என் தோழர், "இவருக்கு கிரிக்கெட் பிடிக்காது" என்றார் என்னைச் சுட்டிக்காட்டி. நான் அதை உடனே  மறுத்து இப்படிச் சொன்னேன்: "சுத்தமா பிடிக்காது." வந்தவருக்கு பலத்த ஆச்சர்யம். "ஏன்? விளையாட்டு பிடிக்காதா உங்களுக்கு?" என்றார் பி எஸ் வீரப்பா பாணியில் சிரித்துக்கொண்டே. அவர் தோற்றத்திற்கு அந்த வகை சிரிப்பு கொஞ்சம் அதிகம்தான். அவர் சிரித்து முடிக்கும் வரை காத்திருந்தேன்.  அதன் பிறகு  சொன்னேன்: "கிரிக்கெட்டை நான் விளையாட்டு என்று கருதுவதில்லை."

       அடுத்து நான் எழுதப் போவது சற்று நீண்ட உரையாடல்கள் அடங்கியது. பொறுமை இருந்தால் படிக்கவும். அல்லது  இதை நீங்கள் தாண்டிச் சென்றாலும் பாதகமில்லை.

          "அப்படியா? அப்படியானால் இசை பற்றி பேசலாம்." என்று எனக்கு இனிய அதிர்ச்சி கொடுத்தார். நான் நிமிர்ந்து உட்கார,  அடுத்து  நான் எதிர்பாராத கேள்வியைக்  கேட்டார்: "உங்களுக்கு இளையராஜா பிடிக்குமா?".  உண்மையில்  இந்த மாதிரியான சந்திப்புக்கு நான் தயாராக வந்திருக்கவில்லை. அதுவும் அன்றைக்கு இளையராஜா பற்றியெல்லாம் திடீரென ஒரு திடீர் மனிதருடன் விவாதிப்பேன் என்று சற்றும் கற்பனை செய்திருக்கவில்லை. அதுவும் அவர் கேட்ட தொனியிலிருந்து நாங்கள் பேசப்போவது குறித்து கவலை உண்டானது. சரிதான் இன்றைக்கு எதோ அசம்பாவிதம் நடக்கப்  போகிறது என்று உள்ளுக்குள் மணி அடித்தது. அதேசமயம் இவருடன் பேசினால் இன்னொரு பதிவுக்கான சில தகவல்கள் கிடைக்கும் என்ற எண்ணம் என்னைச் சூழ, "பிடிக்கும்." என்றேன். "அதாவது கொஞ்சம்."

   நண்பர் உடனே கண்களை மூடிக்கொண்டு கைகளை வெட்டி வெட்டி கர்நாடக கச்சேரி ஆலாபனை போல உச்சஸ்தாயில் ம்ம்ம் ம்ம் என்று ஏற்ற இறக்கமாக பாடிவிட்டு , "நான் உனை நீங்க மாட்டேன். நீங்கினால் தூங்க மாட்டேன். இந்த பாட்டு பிடிக்குமா?" என்றார் தன் கழுத்தை வெட்டி தடாலடியாக. அவரது கை அப்போதும் மேலும் கீழும் சென்றபடியேதான்   இருந்தது.

         நான் சொன்ன பதில் அவருக்கு அதிர்ச்சியை  கொடுத்திருக்கவேண்டும். நான் சொன்னது இதுதான்; "இதையெல்லாம் நான் ஒரு பாட்டாகவே எண்ணுவதில்லை." உண்மையில்  தொன்னூறுகளில் வந்த முக்கால்வாசி இளையராஜா பாடல்கள்  வெறும் சக்கைகள் என்ற எண்ணம் கொண்டிருப்பவன் நான். தொன்னூறுகள் என்றில்லை. எண்பதுகளின் மத்தியிலேயே அவர் இசை நீர்த்துப் போய்விட்டதாக எனக்கு ஒரு  எண்ணம் உண்டு. அவர் ஒரு நான்கைந்து  வருடங்கள் அதிகமாக நமது திரையிசையில் தங்கிவிட்டதாக எனக்குத் தோன்றுவதுண்டு.

    "உங்களுக்கு ரஜினிகாந்தைப் பிடிக்காது. அதனால்தான்" என்றார் எதோ ஒரு கொலைக்கான ஆதாரத்தை கண்டுபிடித்த போலிஸ் அதிகாரி  போல.

    "நடிகர்களை முன்னிலைப் படுத்துவது எனக்கு விருப்பமில்லாத ஒன்று. இரண்டாவது ரஜினிகாந்தை எனக்கு எதற்காக பிடிக்கவேண்டும்?" என்று கேட்டேன். தொடர்ந்து," நீங்கள் சொன்னதே தவறு. முதலில் இது ரஜினிகாந்தின் பாடலே அல்ல. இதற்கு இசை அமைத்தது இளையராஜா. பாடியது எஸ் பி பாலசுப்ரமணியம். அவர்களை   விட்டு விட்டு பாடலுக்கு வாயசைத்த நடிகரை சொன்னது சரியல்ல." என்றேன். சற்று நேர தீவிர யோசனைக்குப் பிறகு அவர் சட்டென்று தன் கைகளைத் தட்டி," நீங்கள் சொல்வது சரிதான்." என்றார் நாடக பாணியில்.  அதன் பின்னர், "இந்தப் பாடலை பிடிக்காது என்று என்னிடம் சொன்ன முதல் ஆள் நீங்கள்தான். இப்போது நான் இதை இங்கே (அது ஒரு ஹோட்டல்) பாடினால் எத்தனை பேர் கை தட்டுவார்கள் தெரியுமா?" என்றார். சொன்னவர் உடனே அதை செயல்படுத்தத் தயாராக தன் கைகளை உயர்த்த, நான்  அந்த விபரீத  கேளிக்கையை   காண ஆர்வமில்லாததால், "நீங்கள் பாடாமலே அது எனக்குத் தெரிந்ததுதான்." என்றேன் அவசரமாக.

        "உங்களுக்குப் பிடித்த இளையராஜா பாடல்கள் என்னென்ன?" என்றார் அவர். "சின்னப் புறா ஒன்று பாடல் கேட்டதுண்டா?" என்றேன். உடனே அவர் அந்தப் பாடலை பாட ஆரம்பித்து, " படத்தில் இந்தப் பாட்டுக்கு  பியானோ வாசிப்பது யார் தெரியுமா?" என்றார் புதிர் போல. தெரியாது என்ற பதிலை எதிர்பார்த்திருந்திருப்பார் போலும். நான்  "தெரியும். தேங்காய் சீனிவாசன்" என்றதும் தன் இருக்கையிலிருந்து எகிறிக் குதித்து ,"உங்களுக்கு நிறைய தெரிந்திருக்கிறது" என்று ஆர்ப்பரித்தார். எனக்கோ இது கேலிக்கூத்தாகத்  தோன்றியது. இது ஒரு மிகச் சிறிய முக்கியமில்லாத தகவல்.  என் பள்ளிப் பருவத்து நிகழ்வுகளையும் அப்போது நான் அறிந்திருந்த  சின்னச் சின்ன குறிப்புகளையும்  கொண்டு என் புத்தியைப்  பாராட்டுவது எனக்கு அவமானமாக இருந்தது. அவர் சந்திக்க வேண்டிய நபர்கள் நிறைய இருக்கிறார்கள் என்று மட்டும் நினைத்துக்கொண்டேன். அவரைச் சுற்றியிருக்கும் நண்பர்கள் குறித்து பரிதாபம் ஏற்பட்டது.

           "இளைய நிலா பொழிகிறதே, இது ஒரு பொன் மாலைப் பொழுது, அந்தி மழை, பனி விழும் மலர் வனம்  போன்ற பாடல்கள் எனக்கு இஷ்டமானவை. இளையராஜா விளையாடியிருப்பார்." என்றேன். "அதன் பின் அவருடைய எழுபதுகள் எனக்குப் பிடிக்கும். மற்றபடி நீங்கள் சொன்ன தளபதி படப் பாடல் இத்துடன் ஒப்பிட்டால் ஒன்றுமேயில்லை." என்றேன் முடிவாக.

    எங்களின்  உரையாடலுக்கிடையே  அவர் மொசார்ட், பீத்தோவன் பெயர்களைக் குறிப்பிட்டு, ("உங்களுக்கு இவர்களைத் தெரியாது என்று நினைக்கிறேன் " என்ற பின்குறிப்புடன்.) தன் அபிமானவரைப்  புகழ, நான் ,"அது பீத்தோவன் கிடையாது. பெய்ட்டோவன் என்று அவர் பெயரை உச்சரிக்க வேண்டும்." என்று திருத்தி,  மேலும் பாக், விவால்டி,ஷாபின்,வேக்னர் போன்ற சில  மேற்கத்திய செவ்வியல் இசைஞர்களை அவருக்கு சிபாரிசு செய்தேன், அவர் திடீரென வேறு பக்கம் தாவி, தமிழில் உங்களுக்குப் பிடித்த இசை அமைப்பாளர் யார் யார் என்று கேட்டார்.  எம் எஸ் விக்குப் பிறகு நான் சொன்ன பெயரை அவர் கேட்டேயிருக்கவில்லை. நான் சொன்னது; "வி.குமார்."  "தெரியுமா?" என்ற என் கேள்விக்கு நியாயமாக "இல்லை. இப்போதுதான் வி.குமார் என்ற பெயரையே கேள்விப்படுகிறேன்." என்றார் பலத்த சிந்தனையுடன். "வி குமாரின்  ஒரு பாடல் சொல்லுங்கள்" என்று தீவிரமாக என்னைப் பார்த்து வினவினார். "நிறையவே சொல்லலாம். ஆனால் உங்களுக்குத் தெரிந்ததான  ஒன்று என்றால் காதோடுதான் நான் பாடுவேன் பாடல். எல் ஆர் ஈஸ்வரி பாடிய  வெகு சிறப்பான பாடல்களில் ஒன்று அது." என்றேன். உடனே அவர் அதைப் பாடியபடி ,"நல்ல பாடல்தான்." என்றார்.

       பிறகு  "நானும் பழைய பாடல்கள் நிறைய கேட்பேன்." என்றவர் "கா கா கா பாடல் தெரியுமா?" என்றார். "பராசக்தி படத்தில் வரும் பாடல். அதற்கு இசையமைத்தது யார்?" என்றேன். நான் எதிர்பார்த்ததைப் போலவே, "எம் எஸ் வி?." என்ற ஆம் என்றாலும் இல்லை என்றாலும் இரண்டுக்கும் பாதகமில்லாத சாதுர்யமான கேள்விக்குறி கொண்ட பதில் அளித்தார்.  பழைய பாடல்கள் என்றாலே எம் எஸ் வி என்று பொத்தாம் பொதுவாக மூளைக்குள் ஒரு தகவலை தயாராக வைத்திருக்கும் சிலரின் மடமையை அதே எம் எஸ் வியே உடைத்து விடுகிறார். "இல்லை. அதற்கு இசை சுதர்சனம். களத்தூர் கண்ணம்மா படத்துக்கும் அவர்தான் இசை." என்றேன். கா கா கா பாடலைப் போன்றே  அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாடலும் அவருக்கு  பரிச்சயமாக இருக்கலாம் என்ற எண்ணமே காரணம்.  "நீங்கள் இளையராஜாவை மட்டுமே கேட்கிறீர்கள். அவருக்கு முன்னே இருந்தவர்களையும் கேட்டால் உங்கள் மதிப்பீடு மாறலாம். என்னை கொஞ்சம் புரிந்துகொள்வீர்கள்." என்று சொன்னேன்.  ஆமோதிப்பது போல அவர் தலையசைந்தது.

     ஆனால் என் தோழருக்கு  இந்த உரையாடல் செல்லும் திசை கலவரத்தைக் கொடுத்திருக்க வேண்டும்.  அதிரடியாக ," உங்களுடைய பொது அறிவுக் கேள்விகளைக் கேளுங்கள்." என்று தன் நண்பரை  உசுப்பிவிட, அவரோ அடுத்து என்சைக்ளோபீடியா ரேஞ்சுக்கு (உலகிலேயே அதிகம் பேசப்படும் வார்த்தை எது? போன்ற) சில வினாக்கள்  தொடுத்து, அதன் பின் உடற்பயிற்சி என்ற பெயரில் ஆல்பட்ராஸ் பறவை போல கைகளை விரித்து சில வித்தைகள் காட்டினார்.  பிறகு மேஜிக் செய்வதாக இன்னும் சில கோமாளித்தனங்களைச் செய்துவிட்டு ஒருவழியாக விடை பெற்று தன் காரில் ஏறும் முன்," இன்னொரு முறை நாம் சந்திக்க வேண்டும். உங்களுடன் நிறைய பேச வேண்டும்." என்றார் முகத்தைத் தாண்டிய நீளமான புன்னகையுடன். அவருக்கு சற்று ஒடுக்கமான சிறிய முகம் என்பதை இங்கே சொல்லியாகவேண்டும்.  "ஆம் நிறைய விவாதிக்க வேண்டும்." என்றேன் நான். அவர் சென்றதும் எங்களுடன் இருந்த மற்றொரு நண்பர் என் தோழரைப் பார்த்து கடுமையான பெருமூச்சுக்குப் பிறகு, "எங்கேயிருந்துப்பா  இவரைப் பிடிச்சீங்க?" என்றார் கையால் விசிறிக்கொண்டே. துளித்  துளியாக அவர் முகம் வியர்த்திருந்தது.

    இந்த நண்பர் என்றில்லை. பல இளையராஜா ரசிகர்களிடம் விவாதிக்க நேரும்பொழுது நான் உதாரணம் காட்டும் சில பாடல்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை சேர்ந்தவையாக இருப்பதை நான் அறிவேன். இது எனக்கு மட்டுமே தோன்றக்கூடிய ஒரு வினோத வரைபடம் அல்ல என்று நினைக்கிறேன். என்னதான் சின்னத் தம்பி, கரகாட்டகாரன், அக்னி நட்சத்திரம், தேவர் மகன், தளபதி என்று அவருடைய அந்திம காலப் பாடல்களை ஏகத்துக்கு பாராட்டினாலும், அவரது ஆரம்ப எண்பதுகள் அசாதாரணமானவை. அபாரமான இசை ஊற்று  அப்போது அவரிடமிருந்து புறப்பட்டது.  இன்றும் பலர் உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைத்து ஆராதனை செய்யும் பல இளையராஜா பாடல்கள் எண்பதுகளில் உருவாக்கப்பட்டவையே.என்னைப் போன்றவர்களுக்கு இளையராஜா என்றால் அது எண்பதுகள்தான். என் பார்வையில்  86 ஆம் ஆண்டு வரை என்று சொல்லலாம்.

    சற்று இவற்றின் மீது பார்வை கொண்டால் உங்களுக்கு ஏற்படும் நினைவலைகள் தரும் சந்தன ஒத்தடங்கள் விலைமதிப்பில்லாதவை.

பருவமே புதிய பாடல் பாடு,
நீதானே எந்தன் பொன் வசந்தம், 
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே, 
தோகை இளமயில், 
வனிதாமணி வனமோகினி,  
புத்தம் புது காலை பொன்னிற வேளை, 
காலைத்  தென்றல் பாடிவரும் , 
மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு, 
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே, 
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன், 
பூவே செம்பூவே உன் வாசம் வரும்,
காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்,
பூங்காற்று புதிதானது,
தேனே தென்பாண்டி மீனே 
நானாக நானில்லை தாயே,
நிலவு தூங்கும் நேரம்
நான் பாடும் மௌன ராகம் 
என்ன சத்தம் இந்த நேரம்,

     சற்று கூர்ந்து கவனித்தால் அந்த காலகட்டத்தில் (80களின் பெரும்பான்மை) அவரது இசையில் ஒரு நவீன தரம் சுடர்விட்டதை அவதானிக்கலாம். நெஞ்சத்தைத் தழுவும் இசைக் கோர்ப்பு மட்டுமில்லாமல் ஒலிப்பதிவு நுட்பம், வியப்பூட்டும் பரிசோதனைகள், அபிரிமிதமான மெட்டுக்கள் என அவர் இசை வண்ணத்துப் பூச்சியின் இறக்கைகள் போல நிறம் நிறமாக விரிந்தது. உதாரணமாக  காக்கிச் சட்டை, எனக்குள் ஒருவன், நினைவெல்லாம் நித்யா, மெல்லத் திறந்தது கதவு (எம் எஸ் வி யுடன் சேர்ந்து இசையமைத்தது), தூங்காதே தம்பி தூங்காதே, பகல் நிலவு, இதய கோயில், இளமைக் காலங்கள், உதய கீதம்,  தென்றலே என்னைத் தொடு, குங்குமச் சிமிழ், நான் சிகப்பு மனிதன், விக்ரம், புன்னகை மன்னன்  படப் பாடல்களை நினைவு கூர்ந்தால் அதன் துல்லியத் தொழில் நுட்ப நேர்த்தி அவர் இசைக்கு அளித்த மகத்தான பரிமாணத்தை நாம் உணரலாம்.  82 முதல் 88 வரை இளையராஜாவிடம் பணியாற்றிய எமி என்ற மிகத் திறமையான ஒலிப்பதிவாளர் சாத்தியப்படுத்திய இந்தத் தொழில் நுட்பத் துல்லியம் இளையராஜாவின் எண்பதுகளை ஒரு தனி இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர வைத்திருக்கிறது. (இதே எமிதான் ரஹ்மானின் சின்ன சின்ன ஆசையில் பங்காற்றியவர்.) வரிகளுக்கு நடுவில் வாசிக்கும் திறமை கொண்டவர்கள் இதை தவறாக புரிந்துகொண்டு  நான் இளையராஜாவின்  வளர்ச்சிக்கு எமிதான் காரணம் என்று குறிப்பால் உணர்த்துவதாக திரிக்க வாய்ப்பிருக்கிறது. நான் கூற விழைந்தது  அதுவல்ல.

     எண்பதுகளின் இளையராஜாவின் இசை  ஒரு பூர்த்தியடைந்த முப்பரிமாணத் தோற்றமாக இருந்தது. மரபு வேர்களைத் துறக்காத, கட்டுப்பாடற்ற  நளினமான அவரது  நவீன  இசை, எமியின் ஒலிப்பதிவுத் தரம் என்பதைத் தாண்டி இன்னொரு ரேகையும் இளையராஜாவின் எண்பதுகளில்  ஒளிந்திருந்தது. அந்த மூன்றாவது பரிமாணம் சற்றும் எதிர்பாரா வேளையில் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து, வானம் வெடித்துக் கொட்டும் ஒரு கோடை மழை போல இளையராஜாவின் இசையில் ஒரு இரட்டை வானவில் போன்று அபூர்வமாகத் தோன்றிய கவிதை.  இந்தக் கவிதையின் வருகையை இளையராஜாவின் இசையில் சாத்தியமாக்கியது வைரமுத்து என்ற கவிஞன்.

           80இல் வந்த ஒரு தலை ராகம் என்றொரு  முகமறியா கலைஞர்களின் படைப்பு தமிழ்த் திரையை ஒரு பேரலை போலத் தாக்கியது. அதன் வெற்றிக்கு அதுவரை காண்பிக்கப்படாத கல்லூரி கலாட்டா, கண்ணியமான காதல், அலுப்பு தராத திரைக்கதை போன்ற தகுதிகளுடன் தரமான பாடல்களும் ஒரு சிறப்புக் காரணம். வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது என்ற பாடல் பெருத்த வெற்றி பெற்று பட்டி தொட்டி, மேடைக் கச்சேரிகள், வானொலி, கல்யாண வீடுகள் என எங்கும் இடைவிடாது பாடியது. இதிலுள்ள மற்றொரு பாடலான இது குழந்தை பாடும் தாலாட்டு அதன் முரண்களுக்காகவே பெரிதும் விரும்பப்பட்டது.  (அப்போது என்னைப் போன்ற) பள்ளிச் சிறுவர்கள் கூட இதன் கவிதையை வெகுவாக ரசித்தனர். அதற்கு முன் இத்தனை முரண்களை முன்வைத்து ஒரு பாடல் வந்ததாக நினைவில்லை.

       ஒரு தலை ராகம் படப் பாடல்களுக்குக் கிடைத்த சிகப்புக் கம்பள வரவேற்பு இளையராஜாவின் இசையிலிருந்த   கவிதை வெற்றிடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது.  "பாட்டெல்லாம் எழுதினது யாரோ டி ராஜேந்தராம். என்னாமா எழுதியிருக்கான் பாரு" என்று  இன்றைக்கு டண்டனக்கா டணக்கா என்று பகடி செய்யப்படும்  ராஜேந்தரின் மீது அப்போது பலத்த பாராட்டு மழை பொழிந்தார்கள் பலர்.  இளையராஜாவின் பாடல்களில் மீட்டப்பட்ட புதுமையான இசைக் கோர்வையில் ஒரு சராசரி ரசிகன் லயித்துப் போய் கவிதை வரிகளை அலட்சியம் செய்தான். அவனுக்கு அந்த இசையின் போதையே போதுமானதாக இருந்தது. "என்னய்யா பெரிய கவிதை?" என்ற இகழ்ச்சியினால் தனது அபிமானவரை அவன் பாதுகாக்க முயன்றான். ஆனால் அவனுக்குள்ளும் சின்னச் சின்ன ஆசைகள்  மிச்சமிருந்தன.

      கண்ணதாசன், வாலி, பஞ்சு அருணாசலம், கங்கை அமரன்   போன்றவர்கள் இளையராஜாவுக்காக பாடல்கள் எழுதியிருந்தாலும், அவர்களது கவிதைகளை பை பாஸ் செய்துவிடும்  இசை அவரது பாடல்களில் அதிகாரம் செலுத்தியது. கண்ணதாசனின் மிகச் சிறந்த பாடல்கள் என மடமட வென்று ஒரு பத்து பாடல்களை உங்கள் நினைவுகளிலிருந்து எடுத்துப் போட்டாலோ, அல்லது நிதானமாக ஒரு கப் காபி உறிஞ்சிக் கொண்டு பேப்பர், பேனா சகிதமாக ஆழ்ந்து யோசித்து ஒரு 100 பாடல்களை பட்டியலிட்டாலோ  அதில் கண்ணதாசன் இளையராஜாவுக்கென இயற்றிய பாடல்களில் ஒன்று அகப்பட்டாலே ஆச்சர்யம்தான்.  (நல்லவெர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு என்ற பாடல் எனக்கு இவர்கள் இணைப்பில் அதிகம் பிடித்த பாடல்.) அப்படியான ஆச்சர்யமான அந்த ஒன்று பெரும்பாலும் கண்ணே கலைமானே என்ற மூன்றாம் பிறைப் படப் பாடலாக இருக்கலாம். ஏனென்றால் சிலர் என்னிடம் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் அந்தப் பாடல் நல்ல கவிதை கொண்டது என்பதை விட அதுதான் கண்ணதாசன் சினிமாவுக்கென எழுதிய கடைசிப் பாடல் என்பதால்தான்.

          இளையராஜாவுக்கும், நல்ல   கவிதைக்கும் எட்டாத தூரம் என்று அவரது எதிர்ப்பாளர்கள் ஒரு வித மேதமையான உற்சாக மிதப்பில் இருந்த வேளையில்  இளையராஜாவின் உருவாக்கத்தில் வந்த  ஒரு பாடல் எல்லோரையும் ஒரு சக்தி வாய்ந்த மின்னல் போலத் தாக்கியது. அழகான கவிதையில் மூழ்கி எழுந்த அனாசயப் பாடல்.   இடையே வரும் "வானம் எனக்கொரு போதி மரம், நாளும் எனக்கது சேதி தரும்" என்ற வரிகள் கேட்டவர்களை திகைக்க வைத்தன. வானத்தின் ரகசியங்களையும், மர்மமான கொடைகளையும்  போதி மரத்துக்குள் அடைத்து  புத்தனின் கண்களை  ரசிகனுக்கு அணிவித்த  அபாரமான வரிகள் அவை. பகுத்துப் பார்க்க முடியாத கணத்தில் நிறம் மாறும் மாலை வானத்தை "வான மகள் நாணுகிறாள்,  வேறு உடை பூணுகிறாள்" என்று வர்ணித்த கவிதை பூசிய காந்த வரிகள்  இது ஒரு பொன் மாலைப் பொழுது   பாடலை ஒரு ஆச்சர்ய  அறிமுகம் செய்தன. அதுவரை இளையராஜாவின் இசையில் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்த  உயர் கவிதை ஒரு பொன் மாலைப் பொழுதில் அவரிடம் சரணடைந்தது.  இளையராஜாவின் இசை வானவில்லை அணிந்துகொண்டது.

   இயற்கையை கருப் பொருளாகக் கொண்டு இயற்றப்பட்ட தமிழ்த் திரைப் படப் பாடல்களில் குறிப்பிடத்தக்கவைகள் என்று பார்த்தால் சாந்தி நிலையம் படத்தின் இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி பாடலை தவிர்க்க முடியாது. அதன் இசையும் மெட்டும் வரிகளும் குரலோசையும் ஒரு காவியத்தைப் படைத்தன. அதோடு நீயா நானா என்று போட்டி போடும் மற்றொரு பாடல் இருக்குமானால் அது நிழல்கள் படத்தின் இது ஒரு பொன் மாலைப் பொழுது பாடலாகத்தான் இருக்க முடியும். இது குறித்து எனக்கு ஒரே ஒரு வரி மட்டும் அனுமதிக்கப்பட்டால் நான் எழுதுவது இதுதான்:

        நிழல்கள் வந்தது. இது ஒரு பொன் மாலைப் பொழுது நிகழ்ந்தது.

             அப்துல் ரகுமான், இன்குலாப் (இருவரும் ஒருவர்தானோ? அமுதவன் ஸார்தான் சொல்லவேண்டும்.) போன்ற கவிஞர்கள் தமிழ் மரபுக் கவிதை வடிவத்தை உடைத்து புதிய எழுத்தாக்கங்களை உருவாக்கி புதுக் கவிதை என்ற நவீன எழுத்துக்கு உயிரூட்டிக்கொண்டிருந்த நேரமது.  எந்தப் பத்திரிக்கையானாலும் அங்கே புதுக் கவிதை கோலம் பூண்ட நான்கைந்து வரிகள் படிப்பவர்களை பரவசப்படுத்திவிட்டு சிலிர்ப்புடன் கடந்து செல்லும். எங்கள்  நண்பர்கள் வட்டத்தில் இந்தப் புதுக் கவிதை பைத்தியம் பிடித்து அலைந்த  என் நண்பர்களின் ஒருவன்,  "ஒரு நீளமான வரியை நாலா வெட்டி ஒன்னு கீழ ஒன்னு எழுதினா அதான் புதுக் கவிதை." என்று அதற்கு அருஞ்சொற்பொருள் அளித்துவிட்டு ,
அவன்
வீட்டுக்குள்
வந்து
உடனே
கதவை
சாத்தினான்."
என்று எழுதி தானும் ஒரு கவிஞனாகிவிட்டதாக பெருமை கொண்டான்.
வெளியே
ஒரு
நாய்
குலைத்தது
என்று நான் அதைத் தொடர, எங்கள் நண்பர்கள் வேறு எதோ எழுத புதுக்கவிதை இவ்வளவு சுலபமா என்ற வியப்பில் நாங்கள் ஆழ்ந்துபோனோம். ஆனால் இதுபோன்ற சில்லறைத்தனமான நிகழ்வுகள் சிறிது காலமே. நான் புதுக் கவிதைகளை ஆழ்ந்து வாசித்த நேரம் அதன்பின் வந்தது.  ஏறக்குறைய இதே சமயத்தில்தான் வைரமுத்து என்ற பெயர் வானொலிகளிலும் நண்பர்கள் வட்டத்திலும் உச்சரிக்கப்படத் துவங்கியது.

    82ஆம் ஆண்டின் ஒரு கோடை வெயில் நாளில் நான் தனியாக வானொலியின்   குமிழைத் திருகிக் கொண்டிருந்த வேளையில் ஒரு பாடல் என் மீது ஒரு நெருப்புத் துளி போல தெறித்து விழுந்தது. அதைக் கேட்ட அந்த நொடியிலேயே நான் எதோ வசியத்திற்கு உட்பட்டதைப் போல என் நிலை மறந்தேன். பாடலின் இசையும், பாடகன் அதைப் பாடிய விதமும், அந்தக் கவிதை வரிகளும் ஒரு ஆயிரம் வாட்ஸ் மின்சார பல்பை அப்படியே விழுங்கி விட்டது போல எனக்குள் துடியாக இறங்கின. பாடல் முடிந்ததும் ஒலிபரப்பாளர் சொன்னார்; "இப்போது நீங்கள் கேட்ட பாடலைப்   பாடியது எஸ் பி பாலசுப்ரமணியம், பாடலுக்கு இசை இளையராஜா. பாடலை இயற்றியது வைரமுத்து. படம் நினைவெல்லாம் நித்யா."   அந்த நெருப்புத் துளி  பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்.

        முதல் முறை கேட்டபோது  பனி விழும் மலர் வனம் என்ற அந்த முதல் வரி எனக்குள் வர்ணிக்க இயலாத  கற்பனைவெளிகளை விரித்தது. பாடல் பல்லவி, சரணம் என மலர மலர வார்த்தைகளின்  அழகு வரிக்கு வரி இன்னும் பல காட்சிகளை  என்னில் விதைத்தது.  அது ஒரு புதுக் கவிதையின் ஆனந்த அணைப்பு. கவிஞர் என்றால் கண்ணதாசன் என்றே கேள்விப்பட்டிருந்த எனக்கு அந்த சிறு வயதில் வைரமுத்து  ஒரு நவீன வெளிச்சம். அதுவரை அறிந்திராத ஒரு கவிதைச் சுவை.

        கவிதை என்னைக் கவர்ந்தது என்றால் பாடலின் இசையமைப்பு என்னைக் கைப்பற்றியது. இளையராஜாவின் அற்புதமான மெட்டுக்கு வைரமுத்து எழுதிய சிலிர்ப்பான கவிதை பொருத்தம் என்றால், அந்தக் கவிதைக்கு இளையராஜா அமைத்த இசை, அந்தப்  பாடலை கண்ணாடி காலனி அணிந்த சின்டரெல்லா போல அழகாக்கி விடுகிறது. சிறிய எளிய கிடார் இசையுடன் துவங்கும் பாடல் இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் என்ற வரிகள் வரை  தயங்கித் தயங்கி தலைகாட்ட, அதன் பின் வெடித்துக் கிளம்பும் மேற்கத்திய ட்ரம் இசை ஒரே நொடியில் பாடலின் பாவத்தை (tone) துடிப்பான அசைவுக்கு மாற்றி  வேறு பரிமாணம் கொள்கிறது. என்ன ஒரு ஆர்ப்பரிப்பான இசை!

        இளையராஜா மேற்கத்திய பாணியில் அமைத்த என்னடி மீனாட்சி போன்ற பாமரத்தனமான டிஸ்கோவாகவும் இல்லாமல் பின்னர் கம்ப்யூட்டர் இசை என்ற ஜிகினா பூசிக்கொண்ட காலம் காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்  போன்ற திகட்டும் இசையாகவும் இல்லாமல் அக்னி நட்சத்திரத்தின் பொலிவற்ற நீர்த்துப் போன மேற்கத்திய தடவலாகவும் இல்லாமல் பனி விழும் மலர் வனம்  மேற்கத்திய பாணியின் நீள அகலங்களை கச்சிதமாக உள்வாங்கி, அதன் வடிவத்தை சிதைக்காமல் வரி வரியாக அழகை அணிந்துகொண்டு கேட்பவர்களை வசியம் செய்யும் அபூர்வப் பாடல். இந்தப் பாடலை மனதில் வைத்தே நான் இந்தப் பதிவின் துவக்கத்தில் குறிப்பிட்ட அந்தப் பொது அறிவுப் புயலிடம் "இளையராஜா விளையாடியிருப்பார்" என்று சொன்னேன். உண்மையில் இப்பாடல் சலிப்பின் சாயலை என்றுமே தன்னருகே நெருங்க விடாத இளமையின் ஊற்று.

           இதன் பின் சிறிது நாட்கள் கழித்து ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் என்று மற்றொரு மகரந்தம் என் மீது விழுந்தது.
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன் 
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வீடாவேன் 
பூவிலே மெத்தைகள் தைப்பேன் 
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன் 
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் 
போன்ற காதலின் நெருக்கத்தை இதமாக  பாடும் கவிதை வரிகள் என் நெஞ்சத்தைத் தைத்தன.  பாடல் தரும் போதை ஒரு பக்கம் என்றால் அது மனதுக்குள் காண்பிக்கும் பூந்தோட்டங்கள் இன்னொரு போதை. வைரமுத்து எனக்கு அதிகம் பரிச்சயமானது இந்தப் பாடலில்தான்.  காதலின் அடர்த்தியை இத்தனை மென்மையாக இலைகளாகவும், வசந்தமாகவும் அதைத் தாண்டி சேலையின் நூலாகவும் பார்க்கும் ரசனை எனக்குப் புதிது. மிகப் புதிது.

        தோளின் மேலே பாரமில்லே கேள்வி கேட்க யாருமில்லே என்ற ஒசிபிசா வகைப் பாடல் ஒரு இளைஞனின் கொண்டாட்ட மனநிலையை அப்படியே வெளிக்கொணர்ந்தது. பிரபல பதிவர் ஒருவர்  இந்தப் பாடலையும் அக்னி நட்சத்திரத்தின் ராஜா ராஜாதி ராஜன்  இந்த ராஜா ராஜா  பாடலையும் (இரண்டுமே இளைஞனின் கொண்டாட்டத்தை பதிவு செய்த பாடல்கள்.) ஒப்பிட்டு இரண்டின் கவிதையும் மேற்கோள் காட்டி, எவ்வாறு வைரமுத்துவின் வரிகள்  இளையராஜாவின் பாடல்களுக்கு ஒரு புதிய ஒளியைக் கொடுத்தது என்று எழுதியிருந்தார்.  அது உண்மையே.

    நினைவெல்லாம் நித்யா படத்தின் பாடல்களில்  பனி விழும் மலர் வனத்திற்குப் பிறகு  நெஞ்சத்தில் எழுவது நீதானே எந்தன் பொன் வசந்தம் என்ற தேனூறிய  பூங்காற்று.  பஸ் பயணம் செய்தவன் முதல் முறையாக ரயிலில் செல்லும்போது அவனக்கு ஏற்படும் முதல் பரவச உணர்ச்சி, ஆனந்த அனுபவங்கள், அதை உண்டாக்கும் காட்சிகள் என்று எல்லாமே அவன் நினைவில் படிந்துபோவதுபோல இளையராஜாவின் வழக்கமான இசையமைப்பிலிருந்து தன்னையே புதுப்பித்துக்கொண்ட   ஒரு வைர வசந்தம். மிகச் சிறப்பான இசைகோர்ப்பு. பாடலின் இரண்டாவது சரணதிற்கான இசையில் கிடாரும் வயலினும் ஓடிப் பிடித்து விளையாடுவதுபோல  வெட்டி வெட்டி ஒலிக்கும். எதோ மரங்களின்  இடையே சூரியக்  கதிர்கள் மறைந்து மறைந்து வெளிப்படும் அழகைப்  போன்ற இசையமைப்பு. முதல் முறை கேட்டபோதே பிரம்மித்துப் போனேன். சிலர் சொல்வதுபோல இளையராஜா மீண்டும் தன் இருப்பை உணர்த்திய இசை. இத்தனை அபாரமான தாலாட்டும் பாடல்களுக்கு முரணாக நீங்கள் எப்போதுமே பார்க்கக் கூடாத அல்லது காண விரும்பாத காட்சியமைப்பு கொண்ட பாடல்களில் இது அடக்கம். இன்றைக்கு நினைவெல்லாம் நித்யாவை நமக்கு நினைவூட்டுவது இளையராஜாவின் இசை மட்டுமே.

         அந்தி மழை பொழிகிறது   என்ற அடுத்த இசைத் தீற்றல்  ரசிகர்களின் மனதில் துளித் துளியாக விழுந்து நெஞ்சத்தை ஒரு புதுவித நறுமணத்துடன் நிரப்பியது. அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது என்ற சிந்தனைக்கு கிடைத்த வரவேற்பு தமிழ்த் திரையிசையில் மீண்டும் கவிதையின் ஆட்சிக்கான அங்கீகாரம். இந்திரன் தோட்டத்து முந்திரி, மன்மத நாட்டுக்கு மந்திரி, தண்ணீரில் மூழ்கும் போதே வேர்கின்றது, ரகசிய ராத்திரி புஸ்தகம் போன்ற வியப்பு வரிகள் பாடலை மெருகேற்றின. இடையிசையில் வரும் அந்த திடீர் ராக ஆலாபனை அப்போது ஒரு மிகப் புதிய அனுபவம். தவிர, முதல் முறையாக பாடகர் எஸ் பி பியை திரையில் ரசிகர்கள் கண்டதும் இந்தப் பாடலில்தான்.

      வைரமுத்து தங்க மழை பொழிகிறது என்றுதான் முதலில் எழுதியதாகவும் இளையராஜாவே அதை அந்தி மழை என்று மாற்றியதாகவும் இந்த பாடல் குறித்து ஒரு தகவல் உண்டு. நான் இதை மறுக்கப் போவதில்லை. ஏனென்றால் இது ஒன்றும் புதிதல்ல. இளையராஜா பல சமயங்களில் தனது கவிதைத் திறமையை அவ்வப்போது இவ்வாறு பரிசோதித்துப் பார்த்தவர்தான்.  (பாடல்களைத் தாண்டி இன்னும் பல தளங்களில் அவர் நுழைந்ததுதான் அவருக்கு எதிரான  மனப்பான்மை திரையுலகில் உருவாக காரணமாயிற்று என்று சொல்லப்படுகிறது.) மேலும் வைரமுத்துவின் சில வரிகளில்   இதுபோல இளையராஜா கை வைத்ததுதான் இருவருக்கும் இடையேயான விரிசலின் முதல் புள்ளி என்று சிலர் சொல்கிறார்கள். அடுத்த பதிவின் இறுதியில் இதைப் பற்றிப் பார்ப்போம். (இந்தப் பதிவே  நீண்டுவிட்டதால் இரண்டு பகுதிகளாக வெளியிட எண்ணம்.)

   மற்றொரு நாளில் பள்ளிக்கு அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருந்த வேளையில் வானொலிப்  பக்கம் சற்று ஒதுங்கிய போது  என்னை நனைத்தது ஒரு பரவசம். தகிட ததிமி என்று துவங்கி அதன் பின் வேகம் பெற்று உச்சம் தொட்டது அந்தப் பாடல்.  இருதயம் அடிக்கடி இறந்தது  என்பேனா என் கதை எழுதிட மறுக்குது என் பேனா, கால்கள் போன தூரம் எந்தன் எல்லை, வாழ்க்கையோடு கோபமில்லை காதல் என்னை காதலிக்கவில்லை போன்ற வரிகள் சோக ஓவியம் வரைந்தன. இரவு தோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது என்ற வரிகளில் அழுது என்ற வார்த்தையை எஸ் பி பி ஒரு விரக்தியான  சிரிப்புடன் பாடுவது அழகு. படம் வந்த பிறகு கமலஹாசன்  போதையில் ஒரு கிணற்றில் மீது ஆடும் காட்சிக்கு பலத்த கைத்தட்டல்கள் கிடைத்தன. ஆனால்  அங்கே நடிகனைத் தாண்டி அந்தப் பாடலை உயிர் பெறச் செய்வது  இளையராஜாவின் இசைதான். குறிப்பாக இறுதியில் தோன்றும் அந்த கோரஸ் மனதைத் தீண்டும் ஒரு அற்புதம்.

           இந்த சமயத்தில்தான் எங்கள் வீட்டுக்கு ஒரு "புதியவர்" வந்தார்.  அவரை நாங்கள் வீட்டு வானொலி அறையில் அமர வைத்து, தொடர்ந்து  பாடல்கள் பாட வைத்து, அவரைப் படுத்தி எடுப்போம். அவர் வந்த விஷயம் கேள்விப்பட்டு எங்கள் நண்பர்கள் வேறு இவரைத் தேடி வர ஆரம்பித்தார்கள் பல வேண்டுகோள்களுடன்,  அவரோ பல மொழிகளில் பலவிதமான பாடல்கள் பாடுவார். இளையராஜா பாடுவார். சங்கர் கணேஷ் பாடுவார். ஒசிபிசா பாடுவார், யாதோங்கி பாரத் பாடுவார். திடுமென kraftwerk சிந்தசைசரில் இயந்திரக் குரலில் பேசுவார். ரொம்பவும் அதிகமாக பாடிவிட்டால் சூடாகி விடுவார். மின்சாரத்தை மட்டும் தீனியாக சாப்பிட்டுக் கொண்டு நாங்கள் தூங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் எங்களுக்காகவே சேவை செய்துவந்தார்.  அவர் பெயர் நேஷனல் பேனாசோனிக் ஸ்டீரியோ டேப் ரெகார்டர்.

          என் தந்தைக்குத் தெரிந்த ஒருவர் மூலம் சிங்கப்பூரிலிருந்து விசேஷமாக வாங்கப்பட்டது அந்த டேப்.  சமயப் பாடல்கள், ஹிந்திப் பாடல்களை பதிவு செய்து கேட்டது போக, முதல் முறையாக தமிழ் கசெட் ஒன்று வாங்கினோம். அது இளமைக் காலங்கள் என்ற படத்தின் பாடல்கள். இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம் பிறக்கும்,  பாட வந்ததோ ராகம் பாவை கண்ணிலோ நாணம் போன்ற துடிப்பான பாடல்களை எங்கள் டேப்பில் கேட்டபோது உண்டான ஆனந்தம் ஒரு தனி சுவை கொண்டது. பாடல்களைவிட அவற்றை கேட்ட கணங்கள் அற்புதமானவை. இன்றும்  இந்தப் படத்தின் பாடல்கள் எனக்கு அந்த டேப் ரெகார்டர் நாட்களை நினைவுபடுத்தும். மற்ற பாடல்களை விட என்னை அதிகம் கவர்ந்தது ஜேசுதாஸ் பாடிய ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே.   அது ஒரு நவீனத் தென்றல்! மிக வித்தியாசமான தாளக்கட்டில் இதமாக நம்மை தடவிச் செல்லும் இன்ப கீதம். பாடலை நன்றாக உள்வாங்கினால் இது ஒரு வழக்கமான இளையராஜா பாடல் போன்றில்லாமல் வேறு பரிமாணத்தில் இருப்பதை உணரலாம். பாடலின் பாதையில்  தடங்கலின்றி சற்றே அரை வினாடி நின்று நின்று ஒலிக்கும் தாளம் இந்தப் பாடலுக்குத் தீட்டும் வண்ணம் அபாரம். அதைவிட பாடலின் இடையிசையில்  வழக்கமான தாலாட்டும் குழலிசை, நீளும் வயலின் போன்ற இளையராஜா சங்கதிகள் கிடாருடன் கைகோர்த்துக்கொண்டு வேறு வகையாக முகம் காட்ட,  அது ஒரு புதுவித தோற்றத்தை ஈரமான ரோஜாவுக்கு அளிக்கிறது. தமிழில் விசில் பாடல்கள் என்ற வகையில் எம் எஸ் வி நிறைய பாடல்கள் அமைத்திருக்கிறார். ஆனால் இளயராஜாவின் இசையில் வெகு அரிதாகவே இந்த பாணியைக் காணலாம்.  அரிதான அந்த ஒன்றில் இந்தப் பாடல் ஒரு உன்னதம்.

      இந்தப் பாடலின் கவிதை வரிகள் அலாதியான அழகு.  இந்தப் பாடல் எனக்குள் அமிழ்ந்து கிடக்கும்  ஒரு வேடிக்கையான நினைவை உரசிச் செல்லும். கல்லூரியில் சேர்ந்த புதிதில் வேறு வீட்டுக்கு குடியேறிய நாட்களில் அங்கே வீட்டுக்கு அருகேயிருந்த  ஒரு பெண்ணை என் நண்பர்களோடு சேர்ந்துகொண்டு "விசேஷ பார்வை" பார்த்துக்கொண்டிருந்த நேரம். உண்மையில் அவள் அப்படியொன்றும் அழகில்லை. ஆனால் என்  ஹார்மோன்களுக்கு  அப்போது அது முக்கியமில்லை. அவள் இங்கே அங்கே கண்ணில் பட்டால் ஹார்மோன்கள் இன்னும் அதிகமாக துள்ளும். நான் கொஞ்சம் அடக்கி வாசித்தாலும், என் நண்பர்கள் அடித்த லூட்டியில்  (இதில் ஒரு நண்பன் இரண்டு விரல்களை வாயில் வைத்து எழுப்பும் மகா விசில் ஓசைக்கு நான்கு தெருக்கள் தள்ளி ஓடும் டவுன் பஸ்ஸே நின்றுவிடும்.) அவள் ஏகத்து கலவரமாகி அதிர்ந்துபோக,  அதன் விளைவு  அவளுக்கு என் மீது கொஞ்சமாக  துளிர் விட்டிருந்த ஒரு மிக  மெல்லிய நல்லெண்ணம் நீரைக் காணாத தாவரம் போல சடுதியில் பட்டுப்  போனது. அதன் பின் அவள் கண்களில் புயலையும் நெருப்பையும் அணிந்துகொண்டு என்னைப் பார்ப்பாள். To make matters worse, கடைவீதி, கோவில்,பேருந்து நிலையம் என்று எங்கே சென்றாலும் அவள் வீட்டை நான் கடந்து செல்லவேண்டிய நிர்பந்தம் வேறு. அவ்வாறு செல்கையில் சில சமயங்களில் பட்டென்று ஒரு சத்தம் கேட்கும். என்ன சத்தம் இந்த நேரம் என்று ஆராய்ந்தால், அவள் வீட்டின் ஜன்னல் ஆவேசமாக மூடப்பட்டதன் அடையாளமாக மூடிய ஜன்னலின் கொக்கி மட்டும் ஒரு பெண்டுலம் போல ஆடிக்கொண்டிருக்கும். நண்பர்களிடம் சொன்னதற்கு எனக்குக் கிடைத்த பதில் : "உன்னைப் பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டுப் போகும்."   வியப்புச் சுவை கொண்ட வைரமுத்துவின் ரசனையான வரிகள்! சில சமயங்களில் ஒரு பாடல் கவிதை கொண்டு எத்தனை அழகாக தன்னை அலங்காரம் செய்துகொள்கிறது!

   இதற்கு சற்று முன்தான் இன்னொரு இசை மழை பெய்து ஒய்ந்திருந்தது. பயணங்கள் முடிவதில்லை. அதன் பாடல்கள் அடைந்த மகா வெற்றி மோகன் என்ற நடிகனை உச்சாணிக் கொம்பில் கொண்டு நிறுத்தியது. அன்னக்கிளி, 16 வயதினிலேவுக்குப்   பிறகு இசையால் நிரம்பிய படம். அதனாலேயே  நிமிர்ந்து நின்றது  இது.  ஒரு சிறு குறிப்பு வரைவது போல இளையராஜா என்றாலே இளைய நிலா பொழிகிறதே நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிவதில்லை. ஏற்கனவே நிறம் மாறிய பூக்கள்  என்ற பதிவில் நான்  இந்தப் பாடலைப் பற்றி  பரவசத்துடன் எழுதியிருக்கிறேன். இளையராஜா விளையாடியிருப்பார் என்ற பதத்துக்கு ஏற்ற பாடல்.

  எண்பதுகள் என்றாலே அது இளையராஜாவின் காலமாக புரிந்துகொள்ளப்படுகிறது. இது புனைவு கிடையாது. அந்த காலகட்டத்தில்தான் அவரது இசை ஒரு வினோத அழகுடன் பரிணமித்தது. வைரமுத்துவின் வியக்க வைக்கும் புதுக்கவிதை நனைந்த  மின்சார வரிகள் சுரீரென  அங்கே இங்கே தீண்டிச் செல்ல, இளையராஜாவின் மெட்டுக்கள் புதிய எழுச்சியுடன் மரபுகள்  அனுமதிக்கும் நவீனத்தை எட்டிப் பிடித்து அனாசய அவதாரங்கள் எடுத்தன. ஒரு முழுமையை நோக்கி வேகமாக அவரது இசை நகர்ந்து கொண்டிருந்தது.








அடுத்து : இசை விரும்பிகள் XXVII - வசந்தங்கள் வடிந்தன.

  

Sunday, 24 May 2015

தீவிரத் தலையாட்டல்


               





  சில வருடங்களுக்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரைவாக தாண்டிச் சென்றுகொண்டிருந்த ஒரு சமயத்தில் திடுமென ஒரு சானல் ஒன்றில் நான் நின்றேன். அங்கே ஒரு  இசைக் கலைஞரை     கர்நாடக இசையில் பாண்டித்யம் பெற்ற பெண் ஒருவர் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார். பொதுவாக கர்நாடக இசை என்றால் வயலின், கடம், மிருதங்கம், தம்புரா என்ற சம்பிரதாய வாத்தியக் கலைஞர்கள் இல்லாமல் இங்கே பேசிக்கொண்டிருந்தவர் ஒரு கிடார் இசைஞர். கர்நாடக இசையில் எவ்வாறு கிடார்  ஊடுருவியது என்று எனக்கு மகா வியப்பு. உடனேயே நான் அந்த நிகழ்ச்சியை சுவாரஸ்வத்துடன் பார்க்க ஆரம்பித்து விட்டேன்.

  அந்த கிடார் இசைஞரின் பெயர் ஸ்ரீதர் என்று நினைவு. ஒருவேளை பெயர் தவறாக இருக்கலாம். ஆனால் பார்ப்பதற்கு எதோ மைதா மாவில் உருட்டி எடுத்த வஸ்து போல இருந்தார்.  வெகு இயல்பாக  பல தகவல்கள் அவரிடமிருந்து வந்தன. அவரை பேட்டி கண்ட அந்த கர்நாடக பாடகிக்கு(!) சாஸ்திரீய சங்கீதத்தை எட்டிப் பிடித்துவிட்ட மேற்கத்திய வாத்தியமான கிடாரின் மீது கடுமையான சம்பிரதாய கோபம் இருந்திருக்கவேண்டும்.  எப்படி கர்நாடக ராகங்களுக்கு கிடார் கொண்டு இசைக்க முடியும் என்ற நம்பாத கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்.  அவர் கேள்விகளில் மேற்கத்திய இசையையும்  அதன்  இசைக் கருவிகளையும் இழிவாக எண்ணும் தொனி யூகத்துக்கு இடமில்லாமல் தெறித்து விழுந்தது. (உண்மையில் கர்நாடக சங்கீதத்தில் வாசிக்கப்படும் அதன் ராக வளைவுகளோடு இரண்டற பிரிக்க முடியாத அளவுக்கு கலந்துவிட்ட வயலின் ஒரு மேற்கத்திய இசைக் கருவி.) அவரின் கேள்விகளுக்கு அந்த கிடார் இசைஞர் மிகத் துல்லியமாகவும்  விளக்கமாகவும்  பதில் அளித்தது ஒரு ஆரோக்கியமான விவாதத்தை நோக்கி அவர் நகர விரும்புவதை தெளிவாக நிரூபித்தது.  ஒரு இடத்தில் கேள்வி கேட்ட பெண்மணி சொன்னது இது: "ஆனா ஒரு விஷயம் பாருங்க, மேற்கத்திய இசை கேக்கறவங்க காலைதான்  ஆட்டுவாங்க. நம்ம கர்நாடக இசை கேக்கறவங்க தலைய அசைப்பாங்க. அதாவது மேற்கத்திய இசை காலோடு முடிந்துபோற இசை. கர்நாடக இசையோ தலை வரை போகக்கூடியது. மேன்மையானது. மேற்கத்திய இசை போல கீழ்த்தரமானதல்ல". இதைக் கேட்டதும் என்னைப்போலவே அதிர்ச்சியடைந்த அந்த ஸ்ரீதர்  என்பவர் தன்னோடு  பேசிக் கொண்டிருக்கும் அந்த பாசிஸ்ட் பெண்மணியின் அபத்தமான கருத்தை ஒரு சிறிய புன்னகையோடு உதாசீனம் செய்தார். பின்னர் அவர்கள் பேசியதெல்லாம் இங்கே வேண்டாத சங்கதி.

 நான் எழுத விழைந்தது இந்த பேட்டியைக் குறித்தல்ல. மாறாக அந்தப் பெண்ணின் prejudiced opinion எத்தனை ஆழமாக  நமது பொது சிந்தனையில் ஊறிக் கிடக்கிறது என்பதை இதைப் படிப்பவர்களுக்குப் புரிய வைக்கவே. காலை ஆட்டுவதும்  தலையை அசைப்பதும் ஒரு இசையின் தரத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான  செயலாக ஒருவரால் முன்னிறுத்தப்படுவது எத்தனை மலிவானத்  தீர்ப்பிடல்! ஒரு வெட்டி விவாதத்திற்காக  இதை எடுத்துக்கொண்டாலுமே இதில் சற்றும் உண்மை இல்லை. பொதுவாக நாம் தாளத்துடன் ஒன்றிக்கும் போது நமது கால்கள் இயல்பாகவே அனிச்சை செயலாக தரையில் ரிதமாக இடிக்கத்  துவங்கிவிடும்.  பாடல் அல்லது இசையின் சுவை அதிகரிக்க அதிகரிக்க நம் தலை போதையேறிய உணர்வுக்கு வந்துவிடும். அதன் நீட்சியே அந்தத் தலையாட்டல்.  மேலும் இந்தக் காலாட்டாலும் தலையாட்டாலும் ஒருவரின் விருப்பம் என்ற எளிமையான உடலசைவைத்  தாண்டி வேறு புனிதமான அல்லது மர்மமான குறியீடுகள் கொண்டவையல்ல. சிலர் ஒரு குறிப்பிட்ட இசை அமைப்பாளரின் பாடலில் இரண்டாவது சரணத்தில் வரும் ஒரு சிறிய வயலின் துணுக்கு  தன் உயிர்நாடியை தொட்டுவிட்டுச் செல்லும் என்று  உளறுவதைப் போன்ற நகைச்சுவைதான் இது.

  ஆனால் மேற்கத்திய இசைக்கும் தலையாட்டலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.  சொல்லப்போனால் இந்தத் தலையாட்டல் உண்மையிலேயே மேற்கத்திய இசையின் ஒரு இன்றியமையாத அங்கம்.  ஆங்கிலத்தில் இதை Headbanging என்பார்கள். ஹெட்பேங்கிங் மேற்கத்திய ராக் இசை கொடுத்த ஒரு திடீர் விபத்து. மேற்கத்திய இசை வல்லுனர்களின் கருத்துப்படி Led Zeppelin என்ற பிரிட்டிஷ் இசைக் குழுவினரின் அதிரடி இசையில் தூண்டப்பட்ட ரசிகர்கள் தங்கள் தலைகளை அரங்கத்தின் சுவர்களில் மோதிக்கொண்ட ஒரு நிகழ்வுடன் இந்தத் தலை மோதல் கலாச்சாரம் 1969இல் உருவானது. தொடர்ந்து மேற்கத்திய ஹெவி மெட்டல் இசைக் குழுக்களின் எல்லையற்ற தீரா இடி போன்ற இசையில் ரசிகர்களும் இசைஞர்களும் ஒரு சேர இந்தக்  கலாச்சாரத்தை புதுப்பித்துக்கொண்டே வந்தார்கள். சில வேளைகளில் இவர்கள் தலையை ஆட்டும் வேகமும் ஆவேசமும்    பார்ப்பவர்களுக்கு   மயக்கம் வந்துவிடும் அளவுக்கு ராட்சதத்தனமாக இருக்கும். பொதுவாக ராக் இசையை கேட்கும் ஒருவரால் தலையை ஆட்டாமல் இருப்பது என்பது ஒரு அசாதாரண காரியம். ராக் என்ற அந்த மின்சாரத்  துணுக்கு உங்களுக்குள் செல்லச் செல்ல  உங்கள் தலை எதோ பெயரறியாத  பிசிக்ஸ் விதிக்குட்பட்டு தானாகவே முன்னும் பின்னும்  அசைய ஆரம்பித்துவிடும்.

  இப்போது  பதிவின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்ட  அந்த பாசிஸ்ட் பெண்மணியின் தலையாட்டல் குறித்த கருத்தை ஒரு இசை ரசிகன் எந்த உண்மையின்படி நம்பமுடியும்? அவர் மமதையுடன் சொல்லியது போன்ற பல புரையோடிய அபத்தங்கள் நம்மிடம் நங்கூரமிட்டு  மன ஆழத்தில் தங்கியிருக்கின்றன.

   இறுதியாக ஒரு மருத்துவக்  குறிப்புடன் இந்தச் சிறிய பதிவை முடித்துக்கொள்ளலாம். ஹெட்பேங்கிங் நிஜத்தில் ஒரு ஆரோக்கியமான உடலசைவல்ல. இது ஒரு நல்ல  இசை ரசனையின் அபாயமான வெளிப்பாடு. தொடர்ந்து இதில் ஈடுபடும் இசைஞர்கள், ரசிகர்கள் சில வருடங்களில் தலை, நரம்பு தொடர்பான புதிய வியாதிகளுக்கு தங்களை தயார் செய்துகொள்வதாக மேற்குலகில் தற்போது கண்டுபிக்கப்பட்டுள்ளது. சில சமயங்களில் இது மரணம் வரை கூட செல்லலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் இந்தச் சாத்தியம் இது ஒரு மிகத் தீவிரமான பழக்கமாக மாறும்போதுதான். அதுவரை யாருமில்லா தனியறையில் பதவிசாக உட்கார்ந்துகொண்டோ படுத்துக்கொண்டோ உங்களுக்குப் பிடித்த பாடலைக் கேட்டபடி  தலையாட்டிக்கொண்டிருப்பதில் எந்தவித ஆபத்தும் இல்லை.







அடுத்து: இசை விரும்பிகள் XXVI  -கவிதைக் காற்று.