Monday, 17 June 2013

இசை விரும்பிகள் VIII - மீண்ட இசை.


                 ஒரு நட்சத்திர உணவகத்தின் அனுபவத்தை சில சமயங்களில் சாலையோர கடைகளில் கிடைக்கப் பெறுவது உண்மையில் ஓர் ஆச்சர்யமான நிகழ்வுதான்.ஹிந்தி இசையின் நவீனத்தை கொண்டாடிக்கொண்டிருந்த கொண்டிருந்த தமிழர்கள் 70 களின் மத்தியில் திடீரென நமது மண் வாசனையை நுகரத் துவங்கியது ஒரு மிகப் பெரிய இசை மாற்றத்திற்கான முதல் சுவடு.இவ்வாறு நம் இசை நம்மிடமே திரும்பிவந்ததைப் பற்றி விரிவாக பார்க்கும் முன் நாம் அந்த மிகப் பெரிய மாற்றத்திற்கான காரணிகளை ஆராய்வது அவசியம் என்று தோன்றுகிறது.

           70 களில் எம் எஸ் வி ஏறக்குறைய ஒரு தனிக்காட்டு ராஜாவாகவே வலம் வந்தார். அவருக்கு ஈடாக தடயத்தில் ஓட  அவரின் சமகாலத்து இசைஞர்களால் அவ்வளவாக முடியவில்லை என்பதை நாம் அறிவோம்.இது ஒரு அபூர்வமான சாதனைதான். இருபது ஆண்டுகள் கழித்தும் எம் எஸ் வி யின் இசை வெள்ளம் தடைகளற்று ஓடிக்கொண்டிருந்தது. சங்கர் கணேஷ்,வி குமார்,ஜி கே வெங்கடேஷ்,வேதா,தட்சிணாமூர்த்தி,கோவர்த்தன், ஷியாம்,விஜய பாஸ்கர்  போன்ற இசைஞர்கள் ஆடுகளத்தில் இருந்தாலும் எம் எஸ் வி மட்டுமே துவம்சம் செய்துகொண்டிருந்தார்.அவரின் பாடல்கள் சற்று வீரியம் குறைந்து, இனிமை சற்றே மெலிந்து ஒலித்தாலும் தரத்தில் சுவை குன்றவில்லை.சொல்லப்போனால் எழுபதுகளின் முக்கால்வாசி பிரபலமான பாடல்கள் எம் எஸ் வி யாலே இயற்றப்பெற்றவை.ஆனால் இருபது வருடங்களாக ஆட்சி செய்து வந்த எம் எஸ் வியால் கூட ஹிந்தி இசை என்ற அந்நிய ஊடுருவலை தடுக்க முடியவில்லை.இதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று உளவியல் ரீதியாக பார்த்தோமானால் எம் எஸ் வி "every hero becomes a bore in the end" என்கிற கூற்றின் அடிப்படையில் வந்துவிட்டதைக் காணலாம்.காலத்தைத் தாண்டி நிற்கும் பல பாடல்களை just like that கொடுத்த அவரால் 70களின் மத்தியில் மாறிப்போய்விட்ட இசை ரசனையின் துடிப்பை துல்லியமாக கணிக்க முடியவில்லை என்பது ஒரு முரண். ஆனால் இது நிகழக்கூடியதே.

           இவ்வாறு தடம் மாறிய நாடித்துடிப்பை அறியாத எம் எஸ் வி எந்த விதத்திலும் தன்னை மாற்றிக்கொள்ளாமல் தன் வழக்கமான பாதையிலேயே பயணம் செய்ய அவரின் தாளத்திற்கு தலையாட்டாத ஒரு தலைமுறை தோன்றி  அவரின் இசையினால் ஈர்க்கப்படாமல் சலிப்புற்றிருந்தது .70 களின்   எம் எஸ்வி யின் பாடல்களில் தென்படும் போக்கை ரசிகர்கள் நன்றாகவே   அடையாளம் கண்டு கொண்டிருந்தனர். பல்லவியில் வித்தியாசத்தை காட்டிய எம் எஸ் வி சரணத்தில் தனக்கு வசதிப்படும் தாளத்திலேயே பாடல்களை அமைக்க மூன்றுக்குப் பின் நான்கு  என்ற தீர்மானித்தல் தரும் அலுப்பு ரசிகர்களுக்கு வந்ததில் வியப்பில்லை.(நான் கூட அந்த சமயத்தில்  எம் எஸ் வி யை தவிர்த்ததின் காரணம் இந்த வழக்கமான இசை அமைப்புதான்).

                ஹிந்தி இசை தோய்ந்து போக, மெல்லிசையும் மெலிந்து போக தமிழ் ரசிகன் ஒரு இடைச்சாலையில் (crossroads)திசை தெரியாமல் நின்றுகொண்டிருந்த சமயத்தில் அன்னக்கிளி என்ற படம் வந்தது . 76 இல் வந்த இந்தப் படம் இப்போது  நினைவு கொள்ளப்படுவதின் ஒரே காரணம் அதன்  இயக்குனரோ நடிகர்களோ இன்ன  பிற உதவியாளர்களோ அல்ல. இந்தப்  படத்தின் இசை அமைப்பாளராலேயே  இந்தப் படம் இன்று வரை குறிப்பிட்டுச் சொல்லப்படுகிறது. Infact,  "Annakkili" is a metaphor for its music. இதன் இசை அமைப்பாளர்  ஒரு மிகப் புதியவர். இளையவர். ஞானதேசிகன் என்ற இயற்பெயர் கொண்டு , ராசையா   என்று அழைக்கப்பட்டு, ராஜாவாக மாற்றப்பட்டு திரையில் இளையராஜா என்று தோன்றியவர். எம் எஸ் வி,  கே.வி மகாதேவன், ஜி கே வெங்கடேஷ், தட்சிணாமூர்த்தி, சங்கர் கணேஷ் போன்ற இசை அமைப்பாளர்களிடம் பெற்ற இசைப் பயிற்சி  மற்றும் தன்னிடத்திலேயே  இருந்த இசைதாகம் இரண்டும் இவரை இசையின் புதிய பரிமாணங்களை நோக்கி நகர்த்தியது.

               அன்னக்கிளி ஒரு புதிய அத்தியாயத்தை தமிழ்த்திரையிசையில் ஆரம்பித்துவைத்தது என்பது மிகைப்படுத்தப்படாத உண்மை.படத்தின் பாடல்கள் அனைத்தும் அதுவரை கேட்டிராத வகையில், நேராக சென்று கொண்டிருக்கும் கார் ஒன்று சட்டென்று யு டர்ன் அடிக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தின. "அன்னக்கிளி உன்ன தேடுதே"என்கிற பாடலே முதலில் பதிவு செய்யப்பட்ட பாடல். இந்தப் பாடல் பதிவின் போது மின்சாரம் தடைபட்டுப் போக "நல்ல சகுனம்"என்று ஸ்டூடியோவிலேயே  இகழ்ச்சி செய்யப்பட்ட இளையராஜா அந்தப் படத்தில் அமைத்தது தமிழிசையின் போக்கையே மாற்றிய பாடல்கள். குறிப்பாக அன்னக்கிளியின் உயிர்நாடியான "மச்சானப் பாத்தீங்களா?"பாடல் தமிழகத்தில்  ஏற்படுத்திய அலை இன்றளவும் மறக்கமுடியாதது. அது ஒரு கொண்டாட்டமான பாடல். ஒரு சாதாரண ஹம்மிங் குடன் துவங்கி ஜானகியின் குரலோடு  பின்புலத்தில் ஒற்றை புல்லாங்குழல் ஒலிக்க,இரண்டு வினாடிகளுக்குப் பின் உயிர்ப்பாக உருமாறி, "மச்சான பாத்தீங்களா" என்று பாடல் ஆரம்பிக்கும்போது யாருமே எதிர்பார்க்காத ஒரு கணத்தில்  ஒரு தடாலடியான தாளத்தோடு கேட்பவரை அதிரச் செய்யும் ஒரு அனாசயமான பாடல். எதிர்பாராத  ஒரு சந்தர்ப்பத்தில் நம் தலை மீது திடீரென கொட்டும் ஜில்லென்ற தண்ணீரின் சிலிர்ப்பை இந்தப் பாடல் கொடுத்தது. தமிழகம் நிமிர்ந்து உட்கார்ந்தது."அட யாருடா இந்த ஆளு?"என்று எல்லோரையும் கேட்க வைத்தது இந்தப் பாடல். இந்தப் படத்தின் அனைத்து பாடல்களுமே தமிழகம் முழுவதும் எதிரொலித்தன. மச்சான பாத்தீங்களா,அன்னக்கிளி உன்ன தேடுதே, சொந்தம் இல்லை, முத்து முத்தா பச்சரிசி, அடி ராக்காயி என்று எல்லா பாடல்களும் கிராமத்து வாசனை வீசின. பொதுவாக கூறப்படுவது போல பட்டி தொட்டி எங்கும் அன்னக்கிளியின் பாடல்கள் படபடத்தன. படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் இசையும்  ஒரு காரணம் என்று அப்போது சொல்லப்பட்டது.ஆனால் இன்றோ அந்த இசை மட்டுமே அந்தப் படத்தின் அடையாளமாக நிலைத்திருக்கிறது.

            அன்னக்கிளியின் வெற்றி நமக்கு ஒரு புதிய இசை ஆளுமையை அறிமுகம் செய்தது. அன்றைய  புதிய தலைமுறையின் இசை  அரங்கேற, இளையராஜா இளைஞர்களின் ஆதர்ச இசைஞரானார். அபூர்வமாக இது ஒரே படத்தில் நடந்தது. இது எப்படி நிகழ்ந்தது என்று ஆராய்ந்தோமானால் சில கூறுகளை நாம் புரிந்துகொள்ளமுடியும். 76 இல் வந்த மற்ற படங்களை விட அன்னக்கிளியின் இசை பெருமளவில் வேறுபட்டிருந்தது.(76 இல் வந்த மற்ற சில படங்கள்-சித்ரா பவுர்ணமி,மன்மதலீலை, தசாவதாரம்,குமார விஜயம்,மூன்று முடிச்சு, நீ ஒரு மகாராணி(இதில்தான் அவளொரு பச்சைக் குழந்தை என்றொரு அருமையான பாடல் உள்ளது), ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது,ரோஜாவின் ராஜா, உணர்சிகள்,உழைக்கும் கரங்கள்). இளையராஜாவின் தாளம், இசை கோர்ப்பு இரண்டுமே அதுவரை இல்லாத பாணியில் அமைக்கப்பட்டிருந்தது .நாட்டுப்புற தாளம், கிராமிய வாசம்,சற்றே தென்படும் மேற்கத்திய இசையின் சாயல் என்று இளையராஜாவின் இசையில்  எளிமையான அதே சமயம் மிக நவீனமான ஒரு புதிய வெளிச்சம் ஒளிர்ந்தது.இதுவே அவரை அப்போது வேறுபடுத்திக் காட்டியது. இந்தப் புதிய இசையின் வேகத்தில் எம் எஸ் வி தவிர மற்றவர்கள் தங்கள் அடையாளங்களை துறந்து இளையராஜாவை பின்பற்ற, இசையின் போக்கு மாறத் துவங்கியது.

             அதே ஆண்டில் வந்த இளையராஜாவின் மற்ற படங்கள் இவை; பாலூட்டி வளர்த்த கிளி ,  உறவாடும் நெஞ்சம், பத்ரகாளி. இதில்  பத்ரகாளி தவிர மற்ற இரண்டு படங்களும் தோல்விப்படங்கள். ஆனால் இன்றைக்கு அந்தப் படங்கள் அதன் இசையினால் மட்டுமே  அடையாளப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக நான் பேச வந்தேன் (பாலூட்டி வளர்த்த கிளி),ஒரு நாள் உன்னோடு ஒருநாள் (உறவாடும் நெஞ்சம்) என்ற பாடல்கள் இளையராஜாவின் மென்மையான சிறகைக் கொண்டு  உள்ளத்தை வருடிச் செல்லும் இசை அமைக்கும் திறமைக்கு சான்றாக இருக்கின்றன. இளையராஜாவின் துவக்ககாலப்  பாடல்களில் கொஞ்சம் ஜி கே வெங்கடேஷ், கொஞ்சம் வி குமார் போன்றவர்களின் சாயலை தீவிர இசை விரும்பிகள் அடையாளம் காண முடியும் முடியும். மிகை இல்லாமல் சொல்லவேண்டுமென்றால் இளையராஜா தன் ஆரம்பகால படங்களில்(முதல் ஆறு வருடங்கள்) மிகச் சிறப்பான இசையை அளித்துவிட்டார் என்பதே உண்மை. படங்களின் வெற்றி தோல்வி பற்றி வணிக ரீதியிலான சிந்தனை கொள்ளாமல் அப்போது தான் இசை அமைத்த  எல்லா படங்களிலும் இளையராஜா அருமையான பாடல்களையும், நவீன  இசை அனுபவத்தையும் வஞ்சகமில்லாமல்  கொடுத்திருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.தன்னை நிரூபிக்க இளையராஜா இவ்விதமான நிர்ப்பந்தங்களுக்கு உடன்பட்டார் என்பதை விட அவரின் இசைதாகமே இதன் பின்புலத்தில் இருந்ததாக எண்ணுகிறேன்.

            பத்ரகாளி படத்தின்  வெற்றியே இவரின் இடத்தை  இங்கே  உறுதி செய்தது என்பதை  விவரம் தெரிந்தவர்கள் அறிவார்கள். தெருவெங்கும் "அட வாங்கோன்னா "பாடல் கும்மாளம் போட்டது.அதே படத்தில் வரும் மிக நளினமான "கண்ணன் ஒரு கைக்குழந்தை" ஒரு அழகான தாலாட்டு. இளையராஜாவின் இசைக்கு மயங்கும் ஒரு  ரசிகர்களின் எண்ணிக்கை திரளாக பெருக ஆரம்பித்தது.  சில இசை விமர்சகர்கள் வாங்கோன்னா பாடலை தீவிரமாக  எதிர்த்ததும் தடை செய்யவேண்டும் என்று கோரியதும் கூட இந்தப் பாடலுக்கு சாதகமாகவே அமைந்ததை இங்கே குறிப்பிடவேண்டும்.

         77 ஆம் ஆண்டு இளையராஜா மட்டுமல்லாது தமிழ் சினிமாவுக்கே ஒரு மாபெரும் மாற்றத்தைக் கொடுத்தது. அந்த ஆண்டில் வந்த படங்களில் ஒரே ஒரு படத்தைப் பற்றியே இப்போது பார்க்கப்போகிறோம்.  . பராசக்தி வந்து இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து வெளிவந்த இந்தப் படம் தமிழகத்தையே உலுக்கியது என்று சொல்வது மிகப்பொருத்தமான வாக்கியமாகத்தான் இருக்க முடியும்.. உண்மையான மண்ணின் மைந்தர்களையும் அவர்களின் தாகத்தையும் கோபத்தையும், ஒப்பனை இல்லாத  கிராமத்தையும் திரையில் பிரதி எடுத்து தமிழ்த்திரைக்கு  ஒரு புதிய சகாப்தத்தை  அறிமுகம் செய்த "பதினாறு வயதினிலே" 77 இல் வெளிவந்தது.  தமிழ் சினிமா பராசக்திக்குப் பிறகு  மற்றொரு முறை புரண்டு படுத்தது.

          16 வயதினிலே தமிழ்சினிமாவின் ஒரு மாபெரும் மைல்கல் என்பது ஜோடிக்கப்படாத நிதர்சனம். முதல் முறையாக தமிழ் ரசிகர்கள் ஒரு படத்தின்  கதாபாத்திரங்களின் பெயர்களை வைத்தே படத்தின் நடிகர்களை  அடையாளம் கண்டுகொண்ட புதுமையை இந்தப் படம் தொடங்கி  வைத்தது.மயிலு,சப்பாணி,பரட்டை,டாக்டர் என்று ரசிகர்கள் இதன் நடிகர்களை மிக நெருக்கமாக அழைத்தார்கள். Flashback யுக்தியை மிகச் சிறப்பாக கையாண்ட இரண்டாவது படம் இது.(மற்றொரு  படம் 1954 இல் வந்த அந்த நாள்). 16 வயதினிலே வின் வெற்றியை ஒரு முழுமையானது என்று தாராளமாகக் கூறலாம். ஏனென்றால் இந்தப் படம் அதற்காக உழைத்த எல்லாமனிதர்களையும்இனம்காட்டியது.இயக்குனர்,நடிகர்கள்,இசைஅமைப்பாளர்,வசனகர்த்தா,ஒளிப்பதிவாளர்,தயாரிப்பாளர் என்று  பொதுவாக மக்கள் அவ்வளவாக அங்கீகாரம் அளிக்க மறுக்கும் எல்லோருக்கும்  இந்தப் படம் மரியாதை செய்தது.

         தன் முதல் படத்திலேயே இளையராஜா கிராமத்து இசையின் நாயகனாகிவிட்டார் என்று பலர் சொல்வதுண்டு. உண்மை என்னவெனில்  16 வயதினிலே படமே இவரை நாட்டுப்புற இசையின் பிரதான முகமாக மாற்றியது. ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடலை கேட்டவர்கள் எந்தவித தயக்கமுமின்றி இளையராஜாவை கொண்டாட ஆரம்பித்தார்கள். கதையின் கருவுக்கேற்ற கிராமத்து இசையை இளையராஜா  மிகவும் நவீனமாக அதுவரை யாரும் திரை இசையில் கேட்காத பாணியில்  உருவாக்கி, தன் பெயரை தமிழகத்தின்  எல்லா வீடுகளிலும் உச்சரிக்க வைத்தார். "சோளம் வெதைக்கயிலே"என்று தலைப்புப் பாடல் ஒலிக்கும்போதே  அந்த இசையின் புதிய பரிமாணம் கேட்பவர்களுக்கு சட்டென  பிடிபட்டது."செவ்வந்தி பூ முடிச்ச","மஞ்ச குளிச்சு" என்று வரிசையாக நம் மண்ணின் இசை இயல்பான வாத்தியங்களோடு முழங்கியது..குறிப்பாக "செந்தூரப்பூவே","ஆட்டுக்குட்டி முட்டையிட்டு" பாடல்கள் அமோகமாக பாராட்டப்பட்டன. ஹிந்திப் பாடல்களின் காலம் முடிந்து நம் தமிழ் இசை நம்மிடம் திரும்பியது.  இத்துடன்  தமிழ் இசை பழைய இசை(எம் எஸ் வி), புதிய இசை (இளையராஜா) என்று இரண்டாகப் பிரிய, அப்போதைய இளைய தலைமுறையின்  துல்லிய இசை வடிவமாக இளையராஜா  கொண்டாடப்பட்டார்..  டி எம் எஸ், சுசீலா எல் ஆர் ஈஸ்வரி என்ற கட்டமைப்பு எஸ் பி பி, ஜானகி,சசிரேகா, ஜென்சி,மலேசியா வாசுதேவன் என்று மாறியது.  எம் எஸ் வி பழைய தலைமுறையையும்  இளையராஜா இளைய தலைமுறையையும் பிரதிபலிப்பதாக ஒரு தோற்றம் உருவானது.தமிழ்த் திரையிசையின் கடிவாளம் எம் எஸ் வி யின் கைகளிலிருந்து   இளையராஜாவின் கைகளை நோக்கி திசை மாறத் துவங்கியது.

    பாக் (Bach)என்ற   மேற்கத்திய செவ்வியல் இசை மேதையின்  மீது  இளையராஜா அதீத காதல் கொண்டிருந்ததும் அதன் பாதிப்பை  தவிர்க்க முடியாமல் தன் இசையில் அந்தச்  செவ்வியல் இசையை நிழல் படியச்  செய்ததும் உண்மையே. இந்த மேற்கத்திய நாட்டுபுற கலப்பிசையை  இளையராஜாதான் கொண்டு வந்தார் என்று விபரம் தெரியாத பல இசை விமர்சகர்கள்  சொல்வது அபத்தமானது. காரணம் சுதர்சனம், ஜி ராமநாதன், எஸ் பாலச்சந்தர், எ எம் ராஜா போன்ற பலர்  இப்படிப்பட்ட கலப்பிசையில் கைதேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.  விஸ்வநாதன் ராமமூர்த்தி  இருவரும் இவ்வகையான இசை அமைப்பில் செய்த சாதனைப் பாடல்கள் வெகு அதிகம். இருந்தும் இளையராஜாவின் கலப்பிசை  இவர்களிடமிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. சில சமயங்களில் இவர்  செய்து பார்த்த இசை பரிசோதனைகள் வேறுபல வடிவங்களையும் வண்ணத்தையும் நம் தமிழ் இசைக்கு  கொண்டுவந்து சேர்த்தன என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டும். இளையராஜா நம் தமிழிசைக்கு கிடைத்த மிகச் சிறப்பான இசைஞர் என்பது நிரூபணமான உண்மை. மேலும் இளையராஜாவை ஒதுக்கி விட்டு தமிழ்த் திரையிசைப் பற்றி பேசுவது இயலாத காரியம்.

          77இல் வந்த இளையராஜாவின் சிறப்பான பாடல்களைக் கொண்ட மற்ற சில படங்கள் இவை:
  அவர் எனக்கே சொந்தம்- இதில்தான் "தேவன் திருச்சபை மலர்களே"என்கிற மிக அருமையான பாடல் இருக்கிறது.ராஜாவின் ரசிகர்களுக்கே இப்படிப்பட்ட ஒரு பாடல் இருப்பது தெரியுமா என்பது சந்தேகம்தான் .தேனில் ஆடும் ரோஜா மற்றொரு இனிமையான   மெலடி. குறிப்பாக சுராங்கனி  பாடல் எல்லோரையும் முணுமுணுக்க வைத்தது. (உண்மையில் இது சிலோன் மனோகர்  என்பவரின் புகழ் பெற்ற சிங்களப்  பாடல். அதை இந்தப் படத்தில் பயன்படுத்திகொண்டதாகத் தெரிகிறது.)
  புவனா ஒரு கேள்விக்குறி-"ராஜா என்பார்,விழியிலே மலர்ந்தது" இரண்டுமே இளையராஜாவின் இனிமையான முத்திரைப் பாடல்கள்.
  தீபம்-சிவாஜிக்காக இளையராஜா இசை அமைத்த முதல் படம். பூவிழி வாசலில் யாரடி, அந்தப்புரத்தில் ஒரு மகாராணி, பேசாதே போன்ற பாடல்கள் சிறப்பானவை.
  காயத்ரி-காலைப் பனியில்,வாழ்வே மாயமா(இந்தப் பாடல் யார்  நீ படத்தில் வரும் நானே வருவேன் பாடல் சாயலில் இருப்பதை ஒரு இலங்கை வானொலி அறிவிப்பாளர்  குறிப்பிட்டபோது அந்தப் பாடலை நான் கேட்டதேயில்லை என்று பதில் வந்தது இளையராஜாவிடமிருந்து .)
  கவிக்குயில்-பாலமுரளிகிருஷ்ணா பாடிய "சின்னக் கண்ணன் அழைக்கிறான் சற்றும் சந்தேகமில்லாத ஒரு அபாரமான பாடல்.பாலமுரளி கிருஷ்ணாவே இந்தப் பாடல் அமைக்கப்பட்ட ராகத்தைக்கேட்டு ஒரு கணம் அதிசயித்ததாக கருத்து உண்டு.  புல்லாங்குழல் இசை பாடல் முழுதையும் நளினமாக அரவணைத்துச் சென்று அதன் கருத்தோடு இணையும் அழகான தாலாட்டு இது.

            78 இல் இளையராஜாவின் இசைப் பயணம் புதிய இலக்குகளை எட்டியது என்பது ஒப்பனைக்காக சொல்லப்படும் வாக்கியம் அல்ல. இந்த ஆண்டில்தான் தமிழிசையில் முதல் முறையாக ப்ரியா என்ற படத்தில் ஸ்டீரியோ இசை அமைப்பு பயன்படுத்தப்பட்டது. இந்தப் படத்தின் பாடல்கள் வெகுவாக பிரசித்தி பெற இந்த அறிவியல் தொழில் நுட்பமும் ஒரு காரணம் என்பதை மறுக்கமுடியாது.கீழே உள்ளவை அந்த ஆண்டில் வந்த  இளையராஜாவின் பிரபலமான மற்ற சில படங்கள்:
   அச்சாணி-மாதா உன் கோவிலில்,தாலாட்டு
  இளமை ஊஞ்சலாடுகிறது-ஒரே நாள் உன்னை நான்(மென்மையான பாடல்)
என்னடி மீனாட்சி(இளைஞர்களின் விருப்பமான பாடல்) ) ,தண்ணி கருத்திருச்சு(ஆபாசமான பாடல் என்று பெயர் பெற்றது)நீ கேட்டால், கிண்ணத்தில் தேன்  வடித்து
  சிட்டுக்குருவி-என் கண்மணி(கவுண்டர் பாய்ன்ட் என்ற ஒரு மேற்கத்திய பாணியில் அமைக்கப்பட்டு பெருத்த வரவேற்பை பெற்ற பாடல்) அடடட மாமர கிளியே, ஒன்ன நம்பி நெத்தியிலே(ஒரு கிராமத்து பெண்ணின் காதலை நம் மண்ணின் இசையோடு சொன்ன பாடல்).
  காற்றினிலே வரும் கீதம்-சித்திரை செவ்வானம்,ஒரு வானவில் போலே,கண்டேன் எங்கும்(இந்தப் பாடலுக்கு இளையராஜா அதிகமான இசைக்கருவிகளை கொண்டு இசை அமைத்ததாக பேச்சு உண்டு.)
  கிழக்கே போகும் ரயில்-கோவில் மணி ஓசை, பூவரசம்பூ பூத்தாச்சு, மாஞ்சோலை கிளி,
  முள்ளும் மலரும்-ராமன் ஆண்டாலும்,அடி பெண்ணே,நித்தம் நித்தம் நெல்லுச்சோறு,செந்தாழம் பூவில்(பெருமான்மையானவர்கள் அதிகம் விரும்பும் இளையராஜாவின் பாடல் இது).
  தியாகம்-நல்லவெர்க்கெல்லாம்(ஒரு சிறப்பான பாடல்),வசந்த கால கோலங்கள், தேன்மல்லிப் பூவே.
  வட்டத்துக்குள் சதுரம் -இதோ இதோ என் நெஞ்சிலே.
  கண்ணன் ஒரு கைக்குழந்தை-மேகமே தூதாகவா
  ப்ரியா-ஏ  பாடல் ஒன்று,அக்கரைச் சீமை(சைமன் டூப்ரி என்ற மேற்கத்திய இசை குழுவினரின் கைட்ஸ் என்ற பாடலின் நகல்),டார்லிங் டார்லிங்( மிக பிரபலமான போனி எம் என்னும் இசையினரின் சன்னி என்ற பாடலின் பிரதி),என்னுயிர் நீதானே, ஸ்ரீ ராமனின் ஸ்ரீ தேவியே. சந்தேகமில்லாமல் இந்தப் படத்தின் பாடல்கள் மிகுந்த வெற்றியைப் பெற்றன.பலபேர் ப்ரியா படத்திற்குப் பிறகே இந்தி இசை கேட்பதை நிறுத்திவிட்டதாக சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன்.இருந்தும் சிங்கப்பூர் என்ற அயல் நாட்டில்   நடக்கும்  படத்தின் கதையோட்டத்திற்கு பொருத்தமில்லாத இசையை அமைத்திருந்தார் இளையராஜா. உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் பாடல்களில்  எம் எஸ் வி காட்டிய  அந்த நேர்த்தியை இளையராஜா கொண்டு வரவில்லை என்பது கண்கூடு.

    இதே ஆண்டில் வந்த மேலும் இரண்டு மிக முக்கியமான படங்களைப் பற்றி இங்கே குறிப்பிடுவது அவசியமாகிறது.முதலாவது இவர் இப்படித்தான் என்று பாரதிராஜாவை ஒரு கிராமத்து  ஆசாமியாக முத்திரை குத்திய தமிழ் ரசிகர்களை கலங்கடித்த ஒரு அதி வேக திரில்லரான சிகப்பு ரோஜாக்கள். இரண்டாவது தமிழ் சினிமாவில் அபூர்வமாக வரும் மிகச்  சிறந்த படங்களில் ஒன்றான  அவள் அப்படித்தான்.(இயக்கம்-ருத்தையா).இந்த இரண்டு படங்களுக்கும் இளையராஜாவின் இசை மிக நேர்த்தியாக இருந்தது.அதன் பாடல்கள்  இன்றளவும் இளையராஜாவின் இனிமையான  இசைக்கு  முகவரிகளாக இருக்கின்றன.இளையராஜா தான் உச்சத்தில் இருந்த  எண்பதுகளில் கூட இது போன்ற அற்புதமான  பாடல்களை கொடுக்கவில்லை என்பதை நல்லிசையை நாடுவோர்  அறிவார்கள்.

        ஒரு மின்மினிக்கு கண்ணில், நினைவோ ஒரு பறவை( பாடலைக் கேட்கும் போதே பறக்கின்ற உணர்வு ஏற்படுவது ஒரு சிறப்பு)என்ற இரண்டு பாடல்களும் சிகப்பு ரோஜாக்கள் என்ற படத்தின் மறக்ககமுடியாத பகுதியாகிவிட்ட  அற்புதங்கள்.அவள் அப்படித்தான் படத்தில்  கமலஹாசனின் குரலில் ஒலித்த  பன்னீர் புஷ்பங்களே(இன்னொரு சிறப்பான  பாடல் நாயகனின் தென் பாண்டிச் சீமையிலே ), மற்றும் ஜெயச்சந்திரனின் என்றும் இனிமையான  உறவுகள் தொடர்கதை என்ற பாடல்கள் இளையராஜாவின் இசைச் சிற்பங்கள்.  (உறவுகள் தொடர்கதை  என்னுடைய தனிப்பட்ட விருப்பமாக  இருந்தாலும் இளையராஜாவின்  பெஸ்ட் என்ற பட்டியலில் கண்டிப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்).

         79 இல் தமிழ்த் திரையின் தவிர்க்க  முடியாத இசை அமைப்பாளராக மாறியிருந்தார் இளையராஜா.அவரது இசையின் பரிமாணம் விரிவடைந்துகொண்டே சென்றது.
கண்மணியே காதல் என்பது (ஆறிலிருந்து 60 வரை)
எதோ நினைவுகள்-(அகல் விளக்கு)
கீதா சங்கீதா, சின்னப் புறா ஒன்று -இளையராஜாவை பிடிக்காதவர்கள் கூட விரும்பும் ஒரு நல்லிசை இது.(அன்பே சங்கீதா),
நதியோரம்,அப்பனே அப்பனே(அன்னை ஓர் ஆலயம்),
ஆகாய கங்கை(தர்மயுத்தம்),
பூப்போலே(கவரிமான்),
ஆஹா வந்துருச்சு, காதல் தீபம் ஒன்று-ஒரே மெட்டில்  இருந்தாலும் இந்தப் பாடலே என்னுடைய தேர்வு, இளமை நாட்டிய சாலை (கல்யாணமாம் கல்யாணம் 1974) என்ற பாடலை நினைவு படுத்தும்  மலர்களில் ஆடும் இளமை(கல்யாணராமன்),
மஞ்சள் நிலாவுக்கு-ரயில் ஓசையுடன் ஒலிக்கும் நெஞ்சத்தை கொள்ளைகொள்ளும் பாடல் இது. (முதலிரவு),
எந்தன் பொன் வண்ணமே(நான் வாழ வைப்பேன்),
சிந்து நதிக்கரை, செவ்வானமே செவ்வானமே(நல்லதொரு குடும்பம்),
ஆயிரம் மலர்களே, முதல் முதலாக காதல் டூயட் (நிறம் மாறாத பூக்கள்),
தேவதை, எங்கெங்கோ செல்லும்- நிறைய பேருக்கு தெரியாத மிக அருமையான இளையராஜாவின் பாடல் இது. பாடலுக்கு பொருத்தமில்லாத சிவாஜி, வெற்றி பெறாத படம் என்பதால் மக்களின் பொது எண்ணத்திலிருந்து காணாமல் போய்விட்ட மற்றொரு அபாரமான பாடல்  இது என்பதில் சந்தேகமேயில்லை. (பட்டாக்கத்தி பைரவன்),
ஓரம்போ- பெண்களை கலாட்டா செய்ய வசதியான பாடல் இது. (பொண்ணு ஊருக்கு புதுசு),
தம்தன தம்தன, வான் மேகங்களே (புதிய வார்ப்புகள்),
உச்சி வகுடெடுத்து, என்னுளில் ஏதோ(ரோசாப்பு ரவிக்கைக்காரி),
அழகிய கண்ணே(உதிரிப்பூக்கள்),
அபிஷேக நேரத்தில்,குறிஞ்சி மலரில்,நானே நானா-ஆர்ப்பாட்டம் இல்லாத மேற்கத்திய இசை கலந்து ஓடும் மிக ரம்மியமான மெல்லிசை(அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்).
பொன்னாரம் பூவாரம்,தோட்டம் கொண்ட ராசாவே(வித்தியாசமான டப்பாங்குத்து பாடல்),இளமை என்னும் பூங்காற்று (இளையராஜாவின் மிக அற்புதமான பாடல் இது என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது).-பகலில் ஒரு இரவு.
 
          போன்ற பாடல்களில் இளையராஜா தன் ஆளுமையை நிரூபித்து தமிழிசையின் அடுத்த சாரதி தான்தான் என்பதை எந்தவிதமான நெருடல்கள் இல்லாது உறுதி செய்தார்.தமிழ்த் திரையிசை இப்போது வெகுவாக மாறிவிட்டிருந்தது.இளையராஜா தமிழிசையை வேறு பாதையில் நடத்தி சென்று கொண்டிருந்தார். இசைப் புரட்சி, புதுமைகள் என்று பல விஷயங்கள் இதில் இருந்தாலும் தமிழிசை "பாட்டு பாடவா , நீரோடும் வைகையிலே,அனுபவம் புதுமை" காலத்திலிருந்து அதன் எதிர் திசையில் பயணம் செய்துகொண்டிருந்தது.தமிழிசையின் முகமும் மாறிக்கொண்டிருந்தது.

      80 இளையாராஜாவின் மறுபிறப்பு என்று சொல்லலாம். இந்த ஆண்டில்தான் சற்று தோய்ந்து போயிருந்த இளையராஜாவின் இசை மறுபடி ஒரு அசாத்திய உச்சத்தை எட்டியது.சிலர் தமிழ்த் திரையின் பொற்காலம் என்று தவறாக சொல்லக்கூடிய ஆனால் நிஜத்தில் இளையராஜாவின் பொற்காலம் என்று அழைக்கப்படவேண்டிய இளையராஜா-வைரமுத்து-பாரதிராஜா கூட்டணி பிறந்தது இந்த 1980 இல்தான். வைரமுத்துவின் வரவுக்கு  முன்பேயே இளையராஜா பல படங்களில் தன் திறமையை  மறுக்க முடியாத அளவுக்கு நங்கூரம் போட்டு நிலைநிறுத்தி இருந்தாலும், வைரமுத்துவின் கவிதை பின்புலத்திலேயே அவரின் இசைக்கு ஒரு மிகப் பெரிய மரியாதையும்,அங்கீகாரமும் கிடைத்தது என்பது உண்மை. இதை பல ராஜா அபிமானிகள் இன்றுவரை ஒத்துக்கொள்ளவதில்லை.ஆனால் இளையராஜாவின் வைரங்கள்   என்று அவர்கள் சொல்லும் பல பாடல்கள் 80களை பின்னணியாக கொண்டவையே.கண்ணதாசன், வாலி,பஞ்சு அருணாசலம்,முத்துலிங்கம்,கங்கை அமரன் மற்றும் இன்ன பிற கவிஞர்களின்    கவிதைகளை பாடல்களாக இசைத்த இளையராஜா 80 இல் வந்த பாரதிராஜாவின் முதல் தோல்விப் படமான "நிழல்கள்" மூலம் வைரமுத்து என்னும் அக்னிக் கவிஞரோடு கைகோர்த்தார். நிழல்கள் படத்தின் பாடல்கள் இளையராஜாவின் இசை அத்தியாயத்தில் அழிக்க முடியாத கோலங்கள்.


        வைரமுத்துவுடனான இளையராஜாவின் இசைப் பயணம் அவரின்  அடுத்த பரிமாணம் என்பதை  இளையராஜாவின் இசையை நுணுக்கமாகக் கேட்பவர்கள் உணர்வார்கள். எனவே இந்தப் பதிவை நான் இங்கே நிறுத்திக்கொள்வதே நியாயம் என்றுணர்கிறேன்.


அடுத்து: இசை விரும்பிகள்  IX - நிறம் மாறிய பூக்கள் 


       

Thursday, 30 May 2013

இசை விரும்பிகள் VII- அந்நியக் காற்று 


            நம் தமிழ்த்திரையிசையில் காலம் காலமாக வட இந்திய சாஸ்திரிய சங்கீதத்தின் தீற்றலும் தொடுகையும் பாதிப்பும் எப்போதும்  இருந்துகொண்டே இருக்கிறது.விடுதலைக்கு முன் "மெட்ராஸ் மாகாணத்தில்" படம் எடுத்தவர்கள் பொதுவாக அதை தமிழைத் தாண்டி தெலுகு மற்றும் ஹிந்தி மொழியிலும் எடுப்பதென்பது வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வந்த ஒரு சம்பிரதாயம்.. குரு தத், பிரிதிவி ராஜ் கபூர், நர்கீஸ், ராஜ் கபூர், நூடன், மதுபாலா, திலிப் குமார், தேவ் ஆனந்த் போன்ற ஹிந்தியின் ஆளுமைகள் அப்போது தமிழ்நாட்டிலும் பரிச்சயப்பட்ட பெயர்களாகவே  இருந்தன. மேலும் ஹிந்திப் பாடல்களை அப்படியே தமிழில் மொழிபெயர்த்தது போல ஹிந்துஸ்தானி மெட்டில் தமிழ் வார்த்தைகளைக் கொண்டு பாடல்கள் அமைப்பதும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே வந்தது.  ஐம்பதுகளில் தமிழ் திரையில் பராசக்தி கொண்டு வந்த அந்த கடல் மாற்றத்திற்குப் பின்னும் (sea change) நம் பாடல்களில் எளிமை வந்து சேரவில்லை. இந்த ஹிந்தி இசையின் பாதிப்பை அகற்ற நம் தமிழ் இசைஞர்கள் சிரமமான படிகளைத் தாண்டவேண்டி இருந்ததை நாம் அறிவோம். 

              நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் வந்த பல தமிழ்ப் பாடல்களில் வட இந்திய வாடை வீசியது  நம்மிடம் இசை வெற்றிடம் ஏற்பட்டதின் அடையாளம் அல்ல. மாறாக படத்தின் தயாரிப்பாளர்கள் புதிதாக தமிழுக்கென்று இன்னொரு மெட்டு அமைத்து பாடல்களை அமைப்பதைவிட இப்படி சுலபமாக ஹிந்தி மெட்டையே தமிழிலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று எண்ணியதே  காரணம்.  ஹிந்தி இசையின் ஊடுருவலை நம் இசை முன்னோடிகள் தடுக்க முனைந்தது  தமிழிசைக்கு ஒரு புதிய வடிவத்தைக் கொடுத்தது. அதுவே நம் மெல்லிசை. ஜி.ராமநாதன், கே வி மகாதேவன், எ எம் ராஜா,விஸ்வநாதன் ராமமூர்த்தி, சுப்பையா நாடுயு, சுதர்சனம் டி ஆர் பாப்பா போன்றவர்கள் ஐம்பதுகள் அறுபதுகளில் தமிழ் இசையை வெகுவாக மெருகேற்றி அதை ஒரு சாதாரணனின் ரசனைக்கு உட்படுத்தினார்கள். இந்த காலகட்டத்தில் ஹிந்தி இசையின் தலை நசுக்கப்பட்டு அந்நிய நுழைவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஹிந்திப் பாடல்களின் சாயல் சிறிதுமின்றி நம் தமிழ்ப் பாடல்களை  சிறப்பாக உருவாக்க முடியும் என்று மெல்லிசை மன்னர்கள், இசை மேதை, திரையிசை திலகம் போன்றவர்கள் நிரூபித்துக்  காட்டினார்கள். "அத்தான் என்னத்தான்" பாடலை இந்தியாவின் பாடும் பறவை என்று விளிக்கப்படும் லதா மங்கேஸ்கர் வியந்து பாராட்டும் அளவிற்கு  ஒரு தனி அடையாளம் நமக்கு ஏற்பட்டிருந்தது . ஹிந்தியின் மிகச் சிறந்த பாடகர்களில் ஒருவரான முகமது ரபி அவர்கள் மறைந்த டி எம் எஸ்சின்  சாரீரத்தை அதிசயித்தது ஓர் ஆச்சர்யம்.(டி எம் எஸ் ரபிதான் தன் ஆதர்ச பாடகர் என்று சொல்வதுண்டு).
         தமிழிசை வெள்ளமாகப் பாய்ந்துகொண்டிருந்த சமயத்தில் மாடர்ன் தியேட்டர்சின் ஆஸ்தான இசைஞராக விளங்கிய வேதா மறுபடியும் ஹிந்தி மெட்டுக்களை தமிழில் விதைத்தார்.இவரின்  முக்கால்வாசி பாடல்கள் எதோ ஒரு புகழ் பெற்ற ஹிந்திப் பாடலின் அப்பட்டமான நகலாகவே இருந்தன. ஆனால் பல விதத்தில் வேதாவால் தமிழ்ப் படுத்தப்பட்ட பாடல்கள் அதன் அசலை விட மிக அழகாகவும் அருமையாகவும் அமைந்துவிட்டது ஒரு அழகான முரண்பாடு என்றே சொல்லலாம்.   குறிப்பாக வேதாவின்
பார்வை ஒன்றே போதுமே, நானே வருவேன்-யார் நீ
,தொட்டுத் தொட்டு பாடவா,இன்னும் பார்த்துகொண்டிருந்தால்-வல்லவன் ஒருவன்
பிருந்தாவனத்தில் பூவெடுத்து- சி ஐ டி சங்கர்
நான் மலரோடு தனியாக, ஆசையா கோபமா- இரு வல்லவர்கள்
மனம் என்னும் மேடை மேலே,ஓராயிரம் பார்வையிலே-வல்லவனுக்கு வல்லவன்
போன்ற பாடல்கள் ஹிந்தியிலிருந்து உருவப்பட்ட மெட்டாக இருந்தாலும் கேட்கும் போது முழுவதும் தமிழ்ப் பாடல்களாகவே ஒலித்தன. இதன் அசல்களை கேட்க நேரிட்டால் கண்டிப்பாக வேதாவின் தமிழ் பாடல்களே சிறப்பாக அமைக்கப்பட்டிருப்பதை உணரலாம்.பலரிடம் இதுவெல்லாம் ஹிந்திப் பாடல்களின் தழுவல் என்று நான் சொன்னபோது "சரிதான், ஆனால் கேட்க நன்றாக இருக்கிறதே"என்றே பதில் கிடைத்திருக்கிறது. அதே கண்கள் படத்திற்கு வேதா இசை அமைக்கும் முன் அதன் தயாரிப்பாளர் எ வி மெய்யப்பன் கண்டிப்புடன் இந்தப் படத்தில் ஹிந்தி தழுவல் பாட்டுகள் இருக்கக் கூடாது என்று தெரிவிக்கவே, வேதா (முதல் முறையாக?) இந்தப் படத்தில் நகல் எதுவும் எடுக்காமல் பாடல்கள் அமைத்ததாக படித்திருக்கிறேன். ஒ ஒ எத்தனை அழகு(நேர்த்தியான மேற்கத்திய கலப்பிசைப்  பாடல்),கண்ணுக்குத் தெரியாதா,பொம்பள ஒருத்தி இருந்தாளாம்,வா அருகில் வா மற்றும் அதிரடியான பூம் பூம் பூம் மாட்டுக்காரன் பாடல்கள் சிறப்பாகவே இருந்தன. இருந்தும் ஒ ஒ எத்தனை அழகு, பூம் பூம் பூம் மாட்டுக்காரன் இரண்டும் இத்தாலி, ஆங்கில பாடல்களின் காப்பி என்று  கருதப்படுகிறது. மிகவும் புகழ் பெற்ற எல் ஆர் ஈஸ்வரியின் "பளிங்கினால் ஒரு மாளிகை" (வல்லவன் ஒருவன்)ஒரு பிரெஞ்ச் பாடலின் தழுவலாக இருந்தாலும்  மறுக்க முடியாத அளவுக்கு ஒரு அபாரமான பாடல். மிகச் சிறந்த காதல் பாடல் வரிசையில் மறு பேச்சின்றி  ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓராயிரம் பார்வையிலே  உண்மையிலேயே நம்மை ஆக்ரமிக்கும் ஒரு பாடல்.

        வேதாவின் இசையில் ஹிந்திப் பாடல்கள் தமிழ்ப் படுத்தப்பட்டாலும் தமிழர்கள் நேரடியாகவே ஹிந்தி இசையை விரும்பத் துவங்கியதே இந்தப் பதிவின் அடிநாதம்.இப்போது அது எப்படி இங்கே சாத்தியப்பட்டது என்பதை காணலாம்.

,      40 களிலேயே புகைந்த ஹிந்தி எதிர்ப்பு 60களின் மத்தியில் உச்சம் பெற்று கல்லூரி மாணவர்களின் கைகளில் ஆயுதமாக மாறி ஒரு புது வேகம் அடைந்து ஆபத்தான பரிணாமம்  தொட்டது.ஹிந்திப் படங்கள் நிறுத்தப்பட்டன. ஹிந்தி எழுத்துக்கள் தார் சாயம் பூசிக்கொண்டன. ஹிந்திப் புத்தகங்கள் தீயை ருசித்தன. மாணவர்களின்  இந்த அரசியல் அவதாரம் தமிழ்நாட்டில் ஒரு புதிய ஆட்சியை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட கலவரமான சூழலில்தான் ஆராதனா என்ற ஒரு ஹிந்திப் படம் 1969 ல் வெளிவந்தது.

              ஆராதனாவின் மையப்புள்ளி வழக்கமான தாய்-மகன் பாசம் பற்றியது. (இதுவே 5 வருடங்கள் கழித்து தமிழில் சிவகாமியின் செல்வன் என்று உருமாற்றம் பெற்று வந்தது) அதற்கு முன்பே ராஜேஷ் கண்ணா ஹிந்தியில்   சில படங்களில் நடித்திருந்தாலும்  இந்தப் படம்  இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற ஒளியை அவர் மீது பாய்ச்சியது. ஷர்மிளா தாகூர் -ராஜேஷ் கண்ணாவின் காதல் காட்சிகள், தாய் மகன் பாசப் போராட்டம் போன்ற வழக்கமான அம்சங்கள்  இதில் இருந்தாலும் இந்தப் படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான   ஒரு காரணம்  எஸ் டி பர்மன்  அமைத்த பாடல்கள்.  ஆராதனாவின் பாடல்கள் வட இந்திய குக்கிராமங்களில் கொடி கட்டிப் பறந்ததில் வியப்பொன்றும் இல்லை. வியப்பு என்னவென்றால் ஒரு சராசரி தமிழன் மேரே சப்னோ கி ராணி என்றும் ரூப்பு தேரா மஸ்தானா என்றும் அர்த்தம் புரியாமல் முனுமுனுத்ததுதான். தமிழக வானொலிகளில் இந்தப் பாடல்கள் இடை விடாது ஒலித்தன. ஹிந்தி எதிர்ப்பு வீரியமாக ஒரு ஆட்சி    மாற்றத்திற்கே  அடிகோலிய சமயத்தில் தமிழகத்தில் ஆராதனா பாடல்கள் சத்தமாக ஒலித்தது ஒரு முரண். இதை நான் குறை சொல்லும் நோக்கில் எழுதவில்லை. 

          ஹிந்தியின் சாகாவரம் பெற்ற குரலைக்கொண்ட  முகமது ரபி,கிஷோர் குமார், லதா மங்கேஸ்கர்,ஆஷா போன்ஸ்லே போன்றவர்களின் பாடல்களை இங்கே தமிழ்நாட்டில்  ஒரு ரசிகன் விருப்பு வெறுப்பு எதுவுமின்றி கேட்டதே நாம் இசை மீது கொண்டிருந்த காதலின் அடையாளம். இப்போது சிலர் விவரிப்பதைப்போல ஹிந்திப் பாடல்கள் ஆதிக்கம் செலுத்தியது உண்மையாக இருந்தாலும் அவை இசையிலும் தரத்திலும் மெருகேறி இருந்ததை நாம் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்.

          கிஷோர் குமாரின் ஹை பிட்ச் உற்சாகம்,முகம்மது ரபியின் உள்ளத்தை வருடும் மென்மை , ஆஷா போன்ஸ்லேயின் ஆர்ப்பாட்டமான குதூகலம் தமிழ் நாட்டின்  கரையோரம் கேட்க துவங்கியது.  ஹிந்தியின் பிரபல இசைஞர்களின் காவியப் பாடல்கள்  இங்கேயும் எதிரொலிக்க, ஹிந்தி எதிர்ப்பின்  கோட்டையான தமிழ் நாட்டில் ஒரு அந்நியக் காற்று ஆவேசமாக வீசத் தொடங்கியது. இளைஞர்கள் தங்கள் அடையாளத்தை ராஜேஷ் கன்னாவிடமும் ரிஷி கபூரிடமும் அமிதாப் பச்சனிடமும் கண்டுபிடித்தார்கள். அவர்களின் படங்களில் இடம் பெற்ற பாடல்கள்  வரவேற்பை பெற்றன.

         எஸ் டி பர்மன், (சச்சின் தேவ் பர்மன் ஹிந்தியின் மகா ஆளுமையாக இருந்தவர். இவர் மீது கொண்டிருந்த அபிமானத்தினாலேயே தன் மகனுக்கு சச்சின் என்று பெயர் வைத்தார் ரமேஷ் டெண்டுல்கர்.) ஹேமந்த் குமார், ஆர் டி பர்மன்( ராகுல் தேவ் பர்மன் எஸ் டி பர்மனின் மகன்)கல்யாண்ஜி ஆனந்த்ஜி, லஷ்மிகாந்த் பியாரிலால்,மதன் மோகன், ஒ பி நையர், ரோஷன்,சலில் சவ்திரி என்ற பெயர்கள் தமிழ்நாட்டில் கேட்க ஆரம்பித்தன.

         மதர் இந்தியா,முகல் இ ஆசாம்( இசை-நவ்ஷாத்) ஆவாரா, அந்தாஸ்(ராஜ் கபூர் நடித்தது),பியார் போன்ற பல ஹிந்திப் படங்கள் ஐம்பதுகள் அறுபதுகளில் இங்கே பெரிய நகரங்களில் வெற்றிகரமாக ஓடி இருந்தாலும்,ஆராதனா பெற்ற வெற்றி வேறு விதமானது. ஆராதனா தமிழ்நாட்டின் பல சிறிய திரை அரங்குகளில் ஒரு திருவிழா போல கொண்டாடப்பட்டது.இதை தொடர்ந்து வந்த மேரா நாம் ஜோக்கர், சச்சா ஜூட்டா, கடி படங், ஆனந்த் (சற்றே நீர்க்குமிழி யின் சாயலை கொண்ட ராஜேஷ் கண்ணா அமிதாப் பச்சன் சேர்ந்து நடித்த முதல் படம்),அந்தாஸ், கேரவன், அமர் பிரேம் .ஷர்மிலி,ஹரே ராமா ஹரே கிருஷ்ணா,சீதா ஔர் கீதா(தமிழில் வாணி ராணி),ஜவானி திவானி,ஜுகுனு(தமிழில் கமல் நடித்த குரு),சஞ்சீர் (தமிழில் சிரித்து வாழ வேண்டும்),அபிமான்,பாபி, ஹாத்தி மேரே சாத்தி (நல்லநேரம்) ரொட்டிகபடாஆர்மக்கான்,தீவார்(தீ),ஷோலே,சிட்சோர், , யாதோங்கி பாரத் (நாளை நமதே), சோட்டி  சி பாத் என்று வரிசையாக ஹிந்திப் படங்கள் படை எடுத்தன.


           தமிழ்நாட்டில் ஹிந்தி ஆதிக்கம் உருவாக ஆராதனா, பாபி,மற்றும் ஷோலே  என்ற மூன்று படங்கள் முக்கிய காரணமாக இருந்தன என்பதில் சந்தேகமில்லை. ஆராதனைவை தொடர்ந்து வந்த பாபி மற்றொரு காதல் காவியமாக வர்ணிக்கப்பட்டது.(இதுவே தமிழில் செம்பருத்தி என்று பின்னாளில் வந்து நம்மை இம்சை செய்தது) பாபியின் பாடல்கள் (இசை லஷ்மிகாந்த் பியாரிலால்) மிகவும் புகழ்பெற்றவை என்றாலும் அதைவிட இனிமையானவை என்பதே உண்மை. 75 இல் வந்த ஷோலே (இசை-ஆர் டி பர்மன்) இந்திய வர்த்தக சினிமாவின் உச்சம் என்று கொண்டாடப்படுகிறது.இந்தப் படத்தைப் பற்றி ஒரு பெரிய பதிவே எழுத முடிந்தாலும்  அதை தவிர்க்க வேண்டிய இடத்தில் இருக்கிறேன். இதன் பாடல்களும் எல்லோராலும் ரசிக்கப்பட்டவை.

           70 களில் ஹிந்திப் பாடல்கள் தமிழ் நாட்டில் பரவலாக ஒலித்தன என்று ஒரு கருத்து உண்டு. அதில் உண்மையும் இருக்கிறது. இதுவரை நீங்கள் ஹிந்திப் பாடல்களை கேட்டதில்லை என்றால் கீழ் கண்ட பாடல்களை நான் உங்களுக்காக சிபாரிசு செய்கிறேன். 70 களில் நம் தமிழகத்தில்  பெருவாரியாக கேட்கப்பட்ட பாடல்களில் சில இங்கே:

 "Roop Tera Mastana" ,Chanda Hai Tu Mera Suraj Hai Tu, -"Mere Sapno Ki Rani",
"Gun Guna Rahe Hai Bhanvare"--ஆராதனா ,இசை- எஸ் டி பர்மன் 

Zindagi Kaisi Hai Paheli(மன்னாடே பாடிய மிக அருமையான பாடல்),-ஆனந்த் இசை-சலில் சவுத்திரி

"Hum Tum Ek Kamre Mein Band Ho","Main Shayar To Nahin"(என்னவொரு பாடல்?),"Mujhe Kuchh Kahna Hai"-பாபி இசை- லச்மிகாந்த் பியாரிலால்.

Yaadon Ki Baarat Nikli Hai, Chura Liya Hai Tumne Jo Dil Ko,(பாட்டில் சத்தத்துடன் ஆரம்பிக்கும் இனிமையான கானம். ஆஷாவின் குரலில் தென்படும் இனிமை ஒரு உல்லாச பயணம்) Lekar Hum Dewana Dil,
Ap Ke Kamre Mein Koi,Meri Soni Meri Tammana Jhooth Nahin Hai-யாதோன் கி பாரத் இசை-ஆர் டி பர்மன். இதன் எல்லா பாடல்களும் மிகவும் ரம்மியமானவை.

"Zindagi Ek Safar Hai Suhana"."Re Mama Re Mama Re".-அந்தாஸ் இசை-ஷங்கர்ஜைகிஷன்.


Ab Jo Mile Hain To","Chadhti Jawani Meri","Dilbar Dil Se Pyare"(இதுவே தமிழில் அழகு என்று ஆனது பாட்சா படத்தில்),"Goria Kahan Tera Desh","Hum To Hain Rahi Dil Ke","Kitna Pyara Wada Hai"(அபாரமான பாடல்),"Piya Tu Ab To Aaja"(ஆஷாவின் இன்னொரு வைரம்) -கேரவன்,இசை-ஆர் டி பர்மன்.

Dum Maro Dum,(படத்தில் இந்தப் பாடல் முழுதும் இடம் பெறுவதில் தேவ் ஆனந்த் விருப்பம் கொள்ளவில்லை.காரணம் இந்தப் பாடல் படத்தை விட பிரபலமாகி விடும் என்று அவர் நம்பியதால் பாதி பாடலையே அனுமதித்தார்)"Ram Ka Naam Badnam Na Karo,"Hare Rama Hare Krishna"-ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ,இசை- ஆர் டி பர்மன்.

Jaaneman Jaaneman Tere Do Nayan"(ஜேசுதாசின் குரலில் சலில் சௌத்திரியின் ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான கானம்.  ஒரு முறை மட்டும்  கேட்பது என்பது  சற்று கடினம்) -சோட்டி சி பாத்,இசை--சலில் சவுத்திரி

"Tere Mere Milan Ki Yeh Raina","Meet Na Mila Re Man Ka","Teri Bindiya Re","Loote Koi Man Ka Nagar",-அபிமான்,இசை-எஸ் டி பர்மன் 


"Yeh Dosti Hum Nahin"(திரிசூலத்தில் வரும் இரண்டு கைகள் நான்கானால் பாடல் காட்சி இதன் பாதிப்பே)  ,"Mehbooba Mehbooba",  "Haa Jab Tak Hai Jaan"  
"Koi Haseena"  
-ஷோலே இசை-ஆர் டி பர்மன்.


"Gori Tera Gaon Bada Pyara" ,"Aaj Se Pehle Aaj Se Zyada"  (இந்தப் பாடல் காட்சியின்  சாயல் தமிழில் வந்த செந்தாழம் பூவில் பாடலில் இருப்பதை கானன்லாம் அதே ஜேசுதாஸ்   ,அதே ஜீப் அதே மலைப்பாதை. இது 75இல் வந்த படம்.)சிட்சோர்,இசை-ரவீந்திர ஜெயின். இவர் ஒரு கண் தெரியாத இசைஞர் அமெரிக்காவின் சார்லஸ் ரே,ஸ்டீவி வொண்டர் போன்று.
 
Ek main aur ek tu, Hamne tumko dekha, Khullam khulla pyaar karenge hum dono, Sapna mera toot gaya கேல் கேல் மே இசை-ஆர் டி பர்மன்.

இதன்  பின் 77இல் வந்த ஒரு படம் அதன் பாடல்களுக்காகவே பேசப் பட்டது.தமிழ் நாட்டின் பல சினிமா தியேட்டர்களில் இந்தப் படம் ஆராவாரமாக ஓடி பெரும்  வெற்றியைப் பெற்றது.அந்தப் படம் ஹம் கிஸ்ஸிஸே கம் நஹி. ஆர் டி பர்மனின் இசையில் அனைத்துப் பாடல்களும் கேட்பவரின் மனதில் ரீங்காரமிட்டன. ஹோட்டல் பாடல் என்ற கான்செப்ட் இன்றுவரை இந்தப் படத்தின் பாதிப்பிலேயே எடுக்கப்பட்டு வருவதே இதன்  சிறப்பு. மெட்லி என்று அழைக்கப்படும் இடைவெளி இன்றி பல பாடல்கள் ஒன்றாக வரும் பாணியில்  இந்தப் படத்தில்வரும் 
Chand mera dil", "Äa dil kya", "Tum kya jaano" and "Mil gaya". பாடல்கள் ஒவ்வொன்றும் அலாதியான அழகும் சுவையும் கொண்டவை.முகம்மது ரபி பாடிய கியாகுவா தேரா வாதா பாடல் ஒரு வித ட்ரான்ஸ் மந்திர சக்தி கொண்டது.  ஆர் டி பர்மன் இந்திய திரையிசையின் அசைக்க முடியாத நாயகனாக இருப்பதின் ரகசியத்தை உணர இந்தப்  பாடல்களே சான்று.
"Bachna Ae Haseeno", "Chand Mera Dil", "Dil Kya Mehfil Hai", "Hum Kisi Se Kum Nahin"(இது கவ்வாலி வகையைச் சேர்ந்தது),"Hum Ko To Yaara Teri Yaari", "Kya Hua Tera Wada",(பொதுவாக ஆங்கில இசையில் முடியும் கிடார் இசை  இங்கே பாடலின் ஆரம்பத்தில் இருக்கும் )  "Mil Gaya Humko Saathi", 
"Tum Kya Jano Mohabbat", "Yeh Ladka Hai Allah- ஹம் கிஸ்ஸிஸே கம் நஹி,இசை-ஆர் டி பர்மன்.
          இதற்குப்பின்னும் பல ஹிந்திப் படங்கள் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டாலும், தமிழ் ரசிகர்கள் இந்த காலகட்டத்தில்  மீண்டும் தமிழ் இசைக்கு திரும்பி விட்டனர்.இதற்கு மிக முக்கிய காரணம் ஒரு புதிய இளைய  இசைஞர். 70களின் ஆரம்பத்தில் தமிழ் நாட்டில் ஹிந்தி இசை ஆதிக்கம் செலுத்தியதற்கு பின் புலமாக இருந்த காரணிகளை இப்போது நாம் ஆரோய்வோம்.

          70 கள் நம் தமிழ் திரையிசையின் மிக முக்கியமான கட்டம். அப்போது தமிழின் இரண்டு மிகப் பெரிய ஆளுமைகளான எம் ஜி ஆர், சிவாஜி இருவரும் தங்கள் இளமையை நிலைநாட்டிக்கொள்ள பெரிதும் முயன்ற சமயம்.இருவருமே இருபது வருடங்களாக தொடர்ந்து திரையில் தோன்றி ஒருவிதமான அலுப்பான நிலைக்கு பயணப்பட்டுக் கொண்டிருந்தார்கள். சிவாஜி தன்னுடைய நடிப்பால் வயதாகும் தன்    பருவத்தை ஒரு விதமாக சமாளித்தாலும் எம் ஜிஆர் இந்த கால கட்டத்தில் நடித்த முக்கால்வாசி படங்கள் அவரின் ரசிகர்களுக்கே சங்கடத்தை ஏற்படுத்தின. நவரத்தினம் என்ற படம் அதை பார்த்த எல்லோரையுமே வெகுவாக சோதித்தது. நீதிக்கு தலை வணங்கு என்ற படத்தில் எம் ஜி ஆரும், நம்பியாரும் கல்லூரி மாணவர்களாக நடித்தது ஒரு மாபெரும் அநீதி.(சிவாஜியும் இதே போன்ற தவறை 70களின் இறுதிகளில் செய்தார்). இதயக்கனி, உரிமைக்குரல், ஊருக்கு உழைப்பவன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் போன்ற எம் ஜி ஆரின் அந்திம கால படங்கள் மக்களால் விரும்பப்படவில்லை. (அவை வெற்றிப் படங்களாக இருந்தாலுமே).இந்தப் படங்களில் எம் ஜி ஆரின் ஒப்பனையான இளமை மற்றும் கதாநாயகிகளுடன் அவர் காட்டிய நெருக்கம்  வழக்கமாக  அவரின் படங்களில் இருப்பது போன்று இல்லாமல்   நாகரீகமற்ற முறையில் இருந்தது பெண்கள் மத்தியில் முனுமுனுப்பை ஏற்படுத்தியது. ஆனால்  72 இல் உண்டான அரசியல் மாற்றம் எம் ஜி ஆரை தமிழகத்தின் புதிய சக்தியாக முன்னிறுத்தியது.  இதனால் அவர் படங்கள் அரசியல் அரிதாரம் பூசிக்கொண்டதோடு அவரை ஒரு மக்கள் தலைவராகவும் காண்பிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் மாட்டிக்கொண்டன.இந்த நிர்பந்தம் அவர் படத்தின் தரத்தைத் தகர்த்தன.


         இதே காலகட்டத்தில் சிவாஜியின் படங்களும் அவரது ரசிகர்களைத் தவிர மற்றவர்களுக்கு சலிப்பைத்  தரத்  தவறவில்லை.ஹிந்தியில் இதே சமயத்தில் ஒரு புதிய இளைய நடிகர் கூட்டம் உருவாகி மக்களிடத்தில் அங்கீகாரம் பெற்றிருந்தது. தர்மேந்திரா, ராஜேஷ் கண்ணா, அமிதாப் பச்சன், ரிஷி கபூர் போன்ற அடுத்த தலை முறை நடிகர்கள் அங்கே 70 களில் தலைப்புச் செய்தியை ஆக்ரமிக்க நம் தமிழகத்திலோ அப்படியான எந்த மாற்றமும் கண்ணில் தென்படவில்லை. ஹிந்தியில் அவர்கள் நடித்த படங்கள் தமிழில் எடுக்கப்பட்ட போது அந்த இளமைக்கு ஏற்றவர்கள் இல்லாமல் நாம் ஏற்கனவே இருபது வருடங்களாக பார்த்திருந்த "பழைய" நடிகர்களே ஒப்பனையுடன் வருவிக்கப்பட்ட இளமையை திரையில் காட்டினர்.உதாரணம் நாளை நமதே, நீதி,சிரித்து  வாழ வேண்டும்,வாணி ராணி போன்ற படங்கள்.அப்போது இங்கே இருந்த இளைய தலை முறை நடிகர்களான (ஜெய் ஷங்கர் தவிர) ரவிச்சந்திரன்,சசி குமார், சிவகுமார், விஜய குமார், போன்றவர்களும் தங்களுக்கென ஒரு தனி இடத்தை பிடிக்கத்  தவறிவிட  தமிழ்த்திரை எந்தவித மாற்றமின்றி தத்தளித்தது. ஒரு எதிர்வினையாக இதன் பாதிப்பு இசையிலும் தென்பட்டது.

             வி குமார்,சங்கர் கணேஷ், ஜி கே வெங்கடேஷ் போன்ற இசைஞர்கள் 70களில் தமிழில் வந்தாலும் அவரிகளின் இசையில் எம் எஸ் வி யின் பாதிப்பு அதிகமாக இருந்தது.எம் எஸ் வி என்ற பெரிய ஆல மர நிழலில் இருந்த  அவர்களால் தங்களுக்கென்று  ஒரு தனி பாணியை அமைத்துக்கொள்வதில் சிரமம் இருந்ததாக யூகிக்கலாம். ஒருவேளை ஒரு  நவீன இசைஅமைப்புக்கு அவர்கள் தங்களை தயார் செய்துகொள்ள முன் வரவில்லை என்று அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.. அப்போது கொட்டித் தீர்த்த  எம் எஸ் வி யின் இசை மழையின் சாரலாக இவர்களின் இசை இருந்தது.(இவர்கள் மிக நல்ல அருமையான பல பாடல்களை நமக்கு கொடுத்திருக்கிறார்கள்  என்பதை மறுக்க முடியாது.)  . கீழ்க்கண்ட பாடல்களை கேட்கும் எவருமே இதை எம் எஸ் வி யின் பாடல் என்றே தீர்மானிப்பர்.
        
நான்  உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்- நூற்றுக்கு நூறு,இசை-வி குமார்.
காதோடுதான் நான் பேசுவேன்-வெள்ளி விழா -வி.குமார்.
சித்திரச் சோலைகளே- நான் ஏன் பிறந்தேன்,-சங்கர் கணேஷ்.
உன்னை தொட்ட காற்று -நவகிரகம்-வி குமார்.
தேன் சிந்துதே வானம்-பொண்ணுக்கு தங்க மனசு,இசை-ஜி கே வெங்கடேஷ்.

          (வி குமார்,ஜி கே  வெங்கடேஷ் போன்றவர்களின் சாயலை ஆரம்பகால இளயராஜா இசையில் அதிகமாகவே கேட்கலாம்.)  இசையை அதன் இனிமைக்காகவும் அல்லது இசையை இசையாகக் கேட்கும் மனப்போக்கு பொதுவாக  நம்மிடம் இல்லாத ஒரு வினோத குணம். நடிகர்களை இசைக்கு  முன் நிறுத்தும் நம்முடைய இந்த  இசை ரசனை பல நல்ல இசைஞர்களையும் அவர்கள்  பிரசவித்த அற்புதமான பாடல்களையும் சவக்குழிக்குள் புதைத்துவிட்டது என்பது ஒரு வலிக்கும் உண்மை. 70களின் ஆரம்பத்திலும் மத்தியிலும்  தமிழில் பல சிறப்பான பாடல்கள் வெளிவந்தன. எம் ஜி ஆர் சிவாஜி என்ற இரண்டு சகாப்த நடிகர்களை கேலிபேசும் ஒரு புதிய தலைமுறையினர் இந்த சமயத்தில் தோன்றினர். இந்த ரசிகர்கள் தங்களின் ஆதர்ச நாயகனாக அதுவரை திரையில் இருந்தவர்களை ஏற்றுக்கொள்ள விரும்பாமல்  இன்னும் வராத  ஒரு புதிய நாயகனுக்காகக் காத்திருந்தனர்.பெரும் திரளான இந்த இளையவர்களுக்கு  தமிழ் இசை சலிப்பைத் தந்தது.மெல்லிசையின் காலம் அதன் உச்சத்திலிருந்து தொய்ந்து வந்துகொண்டிருந்த இந்த நேரத்தில்தான் இந்த இளைஞர்கள் ஹிந்தி இசையின் மின்சாரத் துடிப்பில் சட்டென்று கவரப்பட்டார்கள்.


           ஹிந்தி இசையின் பொற்காலமாகச் சொல்லப்படும் 60 மற்றும் 70 களில் வந்த பாடல்கள் மிக இனிமையானவை. அவை எந்த விதத்திலும் தமிழ் மெல்லிசையின் தரத்திற்கு குறைந்தவை அல்ல.ஹிந்துஸ்தானி சங்கீதமும் மேற்கத்திய இசை கலப்பும் அபாரமாக இணைய  ஹிந்தி இசை புதிய பரிமானத்தைத் தொட்ட அதே சமயத்தில்தான் தமிழர்கள் அந்த நவீன இசையில் பால் ஈர்கப்பட்டனர். ஹிந்திப் பாடல்களின் இசை கோர்ப்பு தமிழில் கிடைக்காத ஒரு  அனுபவத்தை கேட்டவர்களுக்கு அளித்தது. மேலும் மேற்கத்திய இசை கலப்புக்கு கர்நாடக சங்கீதத்தைக் காட்டிலும் ஹிந்துஸ்தானி  மிக நெருக்கமானது என்று கருதப்படுவது உண்டு. இதை எஸ் டி பர்மன் , சலில்  சவ்திரி, ஆர் டி பர்மன், கல்யாண்ஜி ஆனந்த்ஜி போன்றவர்கள் தங்கள் இசையின் மூலம் நிரூபித்தனர். குறிப்பாக ஆர் டி பர்மனின்  இசை எந்த காலத்திற்கும் நிலைத்திருக்கும் சாகாவரம் பெற்றது.(தந்தை எஸ் டி பர்மன் நோய்வாய்ப் பட்டதால் பிரபலமான ஆராதனாவின் மேரே சப்னோக்கி ராணி, ரூபுதிரா மஸ்தானா பாடல்களை இவரே உருவாக்கினார்) இந்தியாவின் தலைசிறந்த இசைஅமைப்பாளர்  யார் என்ற கேள்விக்கு  இரண்டாம் சிந்தனை இன்றி பலர் குறிப்பிடும்  பெயர் இவருடையதுதான்.மேற்கத்திய இசைக்கலப்பை அதிகமாக ஹிந்தி இசையில் பயன்படுத்தியவர் என்று இவர் மீது சிலர் ஒரு குற்றச்சாட்டை வைத்தாலும் ஆர் டி பர்மன் இசையில் வந்த பெரும்பான்மையான பாடல்கள் ஹிந்தியின்  அணையா விளக்காக இன்றும் ஒளி வீசுவது புறந்தள்ளமுடியாத உண்மை.(ஆர் டி பர்மனை ஒரு விதத்தில் நாம் நம் எம் எஸ் வி யுடன் ஒரே கோட்டில் வைத்துப் பார்க்கலாம்.இருவருமே தங்கள் இசையை அடுத்து நிலைக்கு எடுத்துச் சென்றவர்கள்) பப்பி லஹரி (தேவா போன்று) வந்த பின் ஹிந்தி இசை தன் பொலிவை இழக்கத் துவங்கியது. ஆர் டி பர்மனை  இருண்ட பக்கத்திற்கு அனுப்பிவிட்ட ஹிந்தி இசை அதன் பின் சரியத் தொடங்கியது வரலாறு.இருந்தும் தன் கடைசி படமான 1942 a love story இல்  ஏக் லடுக்கி கோ தேக்கா  தோ என்ற பாடலின் மூலம் தான் ஒரு இசைஅசுரன் என்பதை மீண்டும் நிலைநாட்டி விட்டுச் சென்றார்.. Infact, R.D.Burman went with a bang.

            ஹிந்தி இசையில் பொதிந்திருந்த அந்த நவீன  இசை அமைப்பு, கிஷோர் குமார், ரபி,ஆஷா போன்றவர்களின் ஆர்ப்பாட்டமும் மென்மையுமான குரல்வளம் போன்றவை அப்போது நம்மை  அந்த இசையின் மீது ஒட்டிக்கொள்ளச் செய்ததை நாம் மறக்கமுடியாது.நம் தமிழ் இசையில் இல்லாத ஒரு அனுபவத்தை பெறுவதற்காகவே இந்த அன்னிய ஈர்ப்பு இங்கே சாத்தியப்பட்டது என்று நாம்  அவதானிக்கலாம்.ஒரு குழந்தை தன் தாயிடமிருந்து சட்டென ஒரு புதியவரிடம் தாவிச் செல்வதைப் போன்ற இந்த திடீர் காதல்  அதேபோல சட்டென முடிவுக்கு வந்தது. தமிழ் இசையில் புதிய ஒளி ஒன்று தோன்றியதே இதற்கு காரணம். இந்த வெளிச்சம் பண்ணைபுரத்திலிருந்து புறப்பட்டது.நம் தமிழக மூலையிலிருக்கும் ஒரு சிறிய கிராமத்திலிருந்து ஒலித்த இந்த குயிலோசை அடுத்த இருபது ஆண்டுகள் தமிழ்த்திரையிசையை ஆக்ரமிக்கப்போவதை யாருமே அப்போது கணிக்கவில்லை.


அடுத்து: இசை விரும்பிகள் VIII-- மீண்ட இசை.