Saturday 25 October 2014

Sunday, 19 October 2014

எதிர்பாராதவர்கள்


(இசை விரும்பிகள் XXII வருவதற்கு சற்று தாமதம் ஆகலாம் என்பதால் ஒரு திடீர் பதிவாகத் தோன்றியதே இந்த எதிர்பாராதவர்கள். இது ஒரு கதை. 70களின் துவக்கத்தில் அரசாங்க அலுவலராக இருந்த ஒரு செக்கிங் இன்ஸ்பெக்டரின்  கதை. )


                                  
                                          எதிர்பாராதவர்கள் 
                                 

             உயர்மட்ட உத்தரவு ஒன்று தன்னை இத்தனை தூரம் இழுத்துக்கொண்டு வரும் என அந்த அதிகாரி நினைத்திருக்கமாட்டார்.  அயர்ச்சியைத் தரும் கரடு முரடான   பயணத்தின் இறுதியில் அவர் வந்து சேர்ந்த இடம் அவரை சற்று திடுக்கிட வைத்தது. ஏனென்றால் அவர் நின்று கொண்டிருந்த இடமும்   அவர் செல்ல வேண்டிய இடமும் இன்னும் சந்திக்கவேயில்லை. விசாரித்தபோது கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த ஒரு மாட்டுவண்டிக்காரன் சொன்னான்:  "அய்யா அதுக்கு இன்னும் ரொம்ப தொலவு போகனுங்க."

       காத்திருந்தவருக்கு சிறிது நேரத்தில்  ஒரு பஸ் கிடைத்தது.  எந்தவிதமான அராஜகங்களுக்கும், அநியாயங்களுக்கும்  உடன்படாத நேர்மை அவரை அந்த பஸ்ஸில் அமர்த்த  மற்றொரு சிரமமான பயணம் தொடர்ந்தது. முடிவில் உத்தரவில் இருந்த அந்த ரைஸ் மில்லுக்கு அருகே இறங்கி சற்று தூரம் நடந்த பின் அந்த இலக்கை  அடைந்தார். அது ஒரு சாயந்திர நேரம். பொதுவாக வேலைகள் முடிந்துகொண்டிருந்த ஒரு மாலை நேரம்.இருந்தும் அந்த ரைஸ் மில் துரிதமாக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

   மில்லுக்குள் புகுந்த  அந்த அதிகாரி  உடனே தன் அதிகாரக்  குரலில் அங்கிருந்தவர்களை அதட்டத் துவங்க,  அங்கிருந்த வேலையாட்கள் ஒன்றும் புரியாது திகைத்தனர்.  ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தனர். "போய் உங்கள் முதலாளியை அழைத்துக்கொண்டு வாருங்கள்." என்றார் அதிகாரி அதட்டலுடன். சற்று நேரத்தில் அங்கே மிகக் கடுமையான தோற்றம் கொண்ட ஒரு மனிதன் வந்தான்.  அவன் தோற்றமே அவனின் அதிகார மற்றும் பண பலத்தை துல்லியமாகச் சொன்னது.

    "நீதானா இந்த மில்லின் ஓனர்?" என்றார் அதிகாரி கடுமையாக. அவர் பயப்படவில்லை. 

     "ஆமாம்.  சார் நீங்க...? " என்றான் அவன் மிக பவ்யமாக. அவன்  நடிக்கவில்லை. 

   " நான் ஒரு செக்கிங் இன்ஸ்பெக்டர்.  நான் உன் மில்லில் என்ன நடைபெறுகிறது என்று ஆராய வந்திருக்கிறேன். உன் மில்லில் சட்டவிரோதமான காரியங்கள் நடப்பதாக  எங்களுக்கு தகவல் வந்திருக்கிறது."  என்றார் அவர் மிகவும் கோபமாக. 

    "அப்படியெல்லாம் இல்ல சார்.  இருந்தால் திருத்திக்கிறேன்." என்றவன் உடனே "டேய் சாருக்கு ஏதாவது குடிக்க கொண்டுவாங்க" என்று தன் பணியாளர்களை நிர்பந்தித்தான்.

  "அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்" என்றவர் தொடர்ந்து "இந்தக் கதையெல்லாம் என்னிடம் வேலைக்காகாது. உனது ரெகார்டுகளைப் பார்க்கவேண்டும். கொண்டுவா." என்றார்.

       சிறிது நேரத்தில் இரண்டு மூன்று பெரிய நோட்டுப் புத்தகங்கள் அவரிடம் கொடுக்கப்பட்டன. அதிகாரி அவற்றை கவனமாக ஆராய்ந்தார். நீண்ட நேரத்திற்குப் பிறகு காகிதங்களிலிருந்து கண்ணை எடுத்தவர்  அவனை நோக்கி," உனது ரெகார்டுகளில் நேர்மை இல்லை. இதில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்கின்றன. நீ எதையோ மறைக்கப் பார்க்கிறாய் என்று மட்டும் புரிகிறது. மேலும் மாலையே மூடவேண்டிய மில்லை இரவு வரை நீ திறந்து வைத்திருப்பது சட்டவிரோதம். அது தெரியுமா உனக்கு?" என்று கறாராக வினவினார்.

        "இனிமே இப்படிச் செய்யமாட்டேன் சார். இந்த ஒருதடவ மட்டும் கொஞ்சம் பெரிய மனசு பண்ணி விட்டுருங்க." என்று அவன் பரிதாபமாகக் கேட்டான். வேண்டினான் என்று கூட சொல்லலாம்.

   "அப்படியெல்லாம் விடமுடியாது. நான் உன் மில்லை இப்போதே மூடப்போகிறேன். சாவியை நீ நாளை கோர்டில் தண்டனையாக பணம் செலுத்தி வாங்கிக்கொள்." என்றவர் அடுத்தே அதை  செயல்படுத்த ஆரம்பித்தார்.   அந்த மில் முதலாளியோ  அதிகாரியை தொடர்ந்து வந்து கெஞ்சியபடி இருந்தான். அவரோ மிகக் கண்டிப்பாக அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் தன் பணியை சிரத்தையாக செய்து முடித்துவிட்டு சாவியை தன்னிடம் பத்திரப்படுத்திக்கொண்ட பின்னர்   அவனைப் பார்த்து," நாளை நீ இதற்கான தண்டனையை செலுத்திவிட்டு உன் மில்லை திறந்துகொள். ஆனால் மீண்டும் இப்படிச் செய்யாதே." என்றார் கறாராக. இப்படிச் சொல்லிவிட்டு உடனே அந்த மில்லை விட்டு வெளியே வந்துவிட்டார் வேகமாக. 

     வெளியே வந்தவருக்கு அப்போதுதான் உறைத்தது அந்த இரவில்அந்த இடத்தில்  எந்த பஸ் வசதியும் கிடையாது என்பது. இப்போது அவர் சேரவேண்டிய இடத்திற்கான பஸ் நிலையம் வெகுதூரத்தில் இருந்தது. அதை அடைய அவர் மூன்று அல்லது நான்கு கிலோ மீட்டர்கள் நடக்கவேண்டும். எப்படியும் நடுஇரவாகிவிடும். அதன் பின் பஸ் கிடைத்து வீடு அடைய ... நினைக்கவே ஆயாசமாக இருந்தது அந்த கறார் அதிகாரிக்கு.  அவர் பின்னாலே வந்த அந்த மில் முதலாளி அவரைப் பார்த்து ,"சார்,  நீங்க நடந்துபோற தூரமில்லை. கொஞ்சம் இருங்க" என்றவன் சற்று நேரத்தில் தடதடக்கும் புல்லெட்டில் அங்கு வந்து சேர்ந்தான். குழப்பமாக அவனைப் பார்த்த அவரை நோக்கி அவன் சொன்னான்:" ஏறிக்கங்க. நான் உங்களை பஸ் ஸ்டாண்ட்டுக்கு கொண்டுபோய் விடுறேன். இப்பவே ராவாயிடுச்சு"

   அந்த கறார் அதிகாரிக்கு வேறு வழியில்லை என்று தோன்றியிருக்கவேண்டும்.  எந்தவித மறுயோசனையுமின்றி அல்லது தயக்கமின்றி அந்த  மனிதனின் வண்டியின் பின்னே அவர் உட்கார்ந்து கொள்ள அவன் உடனே தன் புல்லெட்டை வேகமாகச் செலுத்த ஆரம்பித்தான். அதே  சிரமமான பாதையில் இப்போது அந்த இரவில் தான் தண்டித்த மனிதனுடன் அவனுடைய வண்டியில் சென்று கொண்டிருக்கும் வியப்பு கலந்த விபரீதத்தின் முதல் சுவடு கூட அவரைத் தொடவில்லை. கருமையான இரவில் அந்த வினோத புல்லெட் பயணம் தொடர்ந்தது. நீண்ட தொலைவு சென்றதும் ஒரு மூடப்பட்ட சிறிய கடையின் முன்  அவன் வண்டியை நிறுத்தினான். பின் சொன்னான், "சார், உங்க நல்ல காலம். அதோ ஒரு பஸ் நிக்குது.  அதில ஏறிக்கங்க.  உங்க ஊருக்கு சீக்கிரம் போயிரலாம்."

      முன்னால்  சற்று தொலைவில் ஒரு பேருந்து நின்றுகொண்டிருந்தது. ஒருவேளை அதுதான் அன்றைய தினத்தின் இறுதி பேருந்தாக இருக்கலாம்.

      அதிகாரி தங்களுக்கு முன் சற்று தூரத்தில் நின்றுகொண்டிருந்த அந்தப்  பேருந்தை கண்டு அதில் அவசரமாக  ஏறிக்கொள்ள அவன் கீழே நின்றபடி,"போயிட்டு வாங்க சார். நாளைக்கு நான் பணம் கட்டிர்றேன்." என்றான். "இனிமே இப்படி நடக்காது." என்று முடிவாகச் சொன்னான். பஸ் ஐந்து நிமிடங்களுக்குப்பிறகு கிளம்பும் வரை அவன் அங்கேயே நின்றபடியிருந்தான். பஸ் கிளம்பி அந்தப் பக்கம் செல்ல, பின்னர் அந்த புல்லெட் தடதடக்கும் ஓசையுடன் அதற்கு எதிர்த் திசையில் விரைந்து சென்று  சடுதியில் ஒரு புள்ளியாக மறைந்தது.

      இந்தக் கதை எனக்குள் ஒரே ஒரு கேள்வியைத்தான் விதைத்தது. இப்படி நடக்க சாத்தியமா? காந்தி கொல்லப்பட்ட போது ஐன்ஸ்டைன் ," ரத்தமும் சதையுமாக இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதையே பிற்கால சந்ததிகள் நம்பமாட்டார்கள்." என்று குறிப்பிட்டார். அதைப்போலவே இதை என்னால் நம்பமுடியவில்லை. 2014இலிருந்து 1970ஐப் பார்க்கும்போது சில விந்தையான உண்மைகளும் இப்போது காலாவதியாகிவிட்ட நேர்மைகளும், மலிந்துவிட்ட அதிகாரம் கொண்டவர்களின் அராஜாகங்களும்  இதை ஒரு வியப்புச் செய்தியாக பார்க்கவைக்கிறது. எதற்காகவும் தன் நேர்மையை சமரசம் செய்துகொள்ளாத அந்த அதிகாரியைப் போல் இன்றைக்கும் சிலர்   இருக்கிறார்கள் என்பது நம்பிக்கை தரும்  ஒரு வெளிச்சத்தின் வேர்.

     தன் பணியைச் சரியாக  நியாயமாகச் செய்த அந்தத் துணிச்சலான அரசு அதிகாரி  நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்தான். ஆனால்  என் மனதில் நிழலாடும் நபர் அந்த நேர்மையான கறார் செக்கிங் இன்ஸ்பெக்டர் அல்ல. மாறாக அந்த முரட்டு மில் முதலாளிதான்.   அதற்கான காரணத்தை நான் விவரிக்க வேண்டியதில்லை. அது புதுக்கவிதை ஒன்றுக்கு  விளக்கம் தருவது போன்று அபத்தமானது.  ஆனாலும் ஏதாவது  சொல்வதென்றால் இப்படிச் சொல்லலாம்:

   அந்த அதிகாரி செய்தது அவருடைய பணி. அவன் செய்தது யாருமே எதிர்பார்க்காத மனிதாபிமானம்.

     மறைந்து போன அந்த மனிதம் இன்று ஒரு  வினோதம். ஒரு அபூர்வம். ஒரு தலைப்புச் செய்தி. அல்லது  "அவன் கூட போன  அந்த ஆளு ஒரு முட்டாளுனா அவர   பத்திரமா கொண்டு போய் சேர்த்த இவன் அவர  விட பெரிய முட்டாளா இருப்பான் போல" என்று இன்று நாம் செய்யும் ஒரு நகைச்சுவை. 

      இப்போது ஒரு சிறிய திருத்தம். பதிவின் துவக்கத்தில் இது ஒரு கதை என்று சொல்லியிருந்தேன். இல்லை. இது ஒரு நிகழ்வு. இதை நான் அறிந்தது வெகு சமீபமாகத்தான். இதில் சம்பந்தப்பட்ட அந்த அரசு அதிகாரியே  என்னிடம் இதை பகிர்ந்துகொண்டார். இத்தனை நேர்மைக்கும் நியாயத்திற்கும் அவருக்கு  கிடைத்த வெகுமதி இன்றுவரை அவர் ஒரு வாடகை வீட்டில்தான்  வசிக்கிறார் என்ற  முரண்  ஒன்றே.  அந்த செக்கிங் இன்ஸ்பெக்டர் எனது தந்தை.


24 comments:

  1. Amudhavan has left a new comment on your post "எதிர்பாராதவர்கள்":

    திடீரென்று எதிர்பார்க்கமுடியாத ஒரு பதிவு. ஆனால் படிக்க ஆரம்பித்தவுடனேயே இது உங்களுடன் தொடர்புள்ள ஒரு சம்பவமாகத்தான் இருக்கமுடியும் என்ற எண்ணத்துடன்தான் படித்தேன். அந்த எண்ணம் வீண் போகவில்லை.

    தங்கள் தந்தையாரைப் போல் உயர்பதவியிலிருப்பவர்கள் நேர்மையுடனும் நியாயத்துடனும் நடந்துகொள்வது என்பது மிக மிக அரிதாகிப்போன ஒன்றாக இருக்கிறது.

    தற்சமயம் அப்படி ஒரு நேர்மையான மனிதரைப் பற்றிக் கதை கதையாகச் சொல்லப்பட்ட சம்பவங்கள், நாம் இந்த நூற்றாண்டிலா இருக்கிறோம், அதுவும் இந்தியாவிலா இருக்கிறோம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இருந்தன.

    நீங்கள் சொல்லியிருப்பதுபோல் இந்தச் சம்பவத்தில் உங்கள் தந்தையார் மட்டுமல்ல, அந்த மோட்டார் பைக் மனிதனும் ஒரு மறக்கக்கூடாத கேரக்டர்தான்.

    ReplyDelete
  2. சார்லஸ் has left a new comment on your post "எதிர்பாராதவர்கள்":

    காரிகன்

    உங்களின் எதிர்பாராதவர்கள் பதிவில் கடைசி வார்த்தை என் நெஞ்சைத் தொட்டது . இது அழகான கதையா அல்லது கவிதையா ? சில நிஜங்கள் நெஞ்சைத் தொடும் ...சில நிஜங்கள் நெஞ்சைச் சுடும் ..

    ReplyDelete
  3. sekar has left a new comment on your post "எதிர்பாராதவர்கள்":

    இன்றும் மனிதம் வாழ்கிறது என்பதை இந்தச் சம்பவம் உலகுக்குச் சொல்கிறது.

    ReplyDelete
  4. yathavan nambi has left a new comment on your post "எதிர்பாராதவர்கள்":

    கருத்து சொல்ல வரவில்லை
    கற்கண்டு தரும் சுவைமிகு வாழ்த்து
    சொல்லவே யாம் வந்தோம் யாதவன் நம்பியாக!

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர்உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும்
    அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
    புதுவை வேலு

    ReplyDelete
  5. காரிகன் has left a new comment on your post "எதிர்பாராதவர்கள்":

    வாருங்கள் அமுதவன்,

    கருத்துக்கு நன்றி. முதல் கருத்து உங்களுடையதாகத்தான் இருக்கும் என்று எண்ணினேன்.

    எனது தந்தையின் நேர்மை குறித்து நானே கண்ட பல சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால் அவற்றை நான் எழுதாமல் நான் கேட்ட இந்த சம்பவத்தை எழுத விரும்பியதன் நோக்கமே அந்த மில் முதலாளிதான். அவனுக்கு அந்த இரவு நேர புல்லெட் பயணத்தின் போது வேறு சிந்தனைகள் வராதது ஆச்சர்யமே.

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த நேர்மையானவரைப் பற்றி எழுதுங்கள். தெரிந்துகொள்வோம். மீண்டும் சந்திப்போம். நன்றி.

    ReplyDelete
  6. காரிகன் has left a new comment on your post "எதிர்பாராதவர்கள்":

    சால்ஸ்,

    முரண்படாத உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

    ---சில நிஜங்கள் நெஞ்சைத் தொடும் ...சில நிஜங்கள் நெஞ்சைச் சுடும் ..--

    என்ன ஒரு கவிதைத்தனமான வார்த்தையமைப்பு!

    சில சமயங்களில் எனக்குத் தோன்றுவது தவறுகள் செய்யத் தேவையான துணிச்சல் இல்லாத கோழைத்தனமே நம்மை நல்லவர்களாக வைத்திருக்கிறதோ?

    ReplyDelete
  7. காரிகன் has left a new comment on your post "எதிர்பாராதவர்கள்":

    வாருங்கள் சேகர்,

    கடவுள் என்றொருவர் இல்லாவிட்டால் அவரை உருவாக்கவேண்டிய தேவை கண்டிப்பாக ஏற்படும் என்று சொல்வார்கள். நான் இதில் கடவுள் என்பதை மனிதமாகப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  8. காரிகன் has left a new comment on your post "எதிர்பாராதவர்கள்":

    வாருங்கள் யாதவன் நம்பி,

    உங்களுக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. விசுAWESOME has left a new comment on your post "எதிர்பாராதவர்கள்":

    அது என்னமோ தெரியவில்லை. இந்த கதையை முடிபத்தர்க்கு முன்னாலே இது ஒரு உண்மையான நிகழ்ச்சி என்று மனதில் பட்டது. அதுவும் இல்லாமல் இந்த அதிகாரி இன்னும் வாடகை வீட்டில் இல்லையேல் நொந்து பொய் இருப்பார் என்று நான் நினைத்தேன். உண்மையாகி விட்டது. அருமையான நிகழ்வை அட்டகாசமான பாணியில் கொடுத்தீர்கள். நன்றியும் வாழ்த்துகளும். தொடர்ந்து வருகின்றேன்.

    ReplyDelete
  10. காரிகன் has left a new comment on your post "எதிர்பாராதவர்கள்":

    வாருங்கள் விசு,

    கருத்துக்கு நன்றி. தொடருங்கள்.

    ReplyDelete
  11. Amudhavan has left a new comment on your post "எதிர்பாராதவர்கள்":

    காரிகன்
    \\நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த நேர்மையானவரைப் பற்றி எழுதுங்கள். தெரிந்துகொள்வோம். \\
    நான் குறிப்பிட்டிருக்கும் அந்த நேர்மையானவர் பற்றித்தான் ஊர் உலகமே பேசிக்கொண்டிருக்கிறதே. ஆனால், பின்னணித் தகவல்களை யாரும் பேசுவதில்லை. ஊடகத்தில் ஒருவரோ இரண்டுபேரோ மட்டும்தாம் பேசியிருக்கிறார்கள். சம்பவங்கள் நடைபெறும் போக்கிற்கு ஏற்ப பேசமுடிகிறதா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  12. காரிகன் has left a new comment on your post "எதிர்பாராதவர்கள்":

    அமுதவன் அவர்களே,

    உங்கள் பதிலில் எதோ புரிகிறது. எதோ புரியவில்லை. ஆனால் யாரோ ஒரு அரசியல்வாதியையோ அல்லது நடிகரையோ பற்றிச் சொல்கிறீர்கள் என்று தெரிகிறது. (ஒருவேளை இதுவும் கூட தவறாக இருக்கலாம்.)

    ReplyDelete
  13. Amudhavan has left a new comment on your post "எதிர்பாராதவர்கள்":

    அவர் ஒரு நீதிபதி

    ReplyDelete
  14. காரிகன் has left a new comment on your post "எதிர்பாராதவர்கள்":

    புரிவதுபோல இருக்கிறது.

    ReplyDelete
  15. காரிகன்,

    வழக்கம் போலவே நான் லேட்... !

    முதலில் இரண்டு விசயங்கள்...

    ஒன்று... ஏனோ தெரியவில்லை, இரண்டு ஆரம்ப பாராக்களை படித்தவுடனேயே இது கற்பனை கதையாக இருக்க முடியாது என தோன்றிவிட்டது !

    இரண்டாவது... இந்த பதிவில் முற்றிலும் வேறு ஒரு பாணியினாலான எழுத்தை கையாண்டிருக்கீறீர்கள் ! ஒருவிதமான அமானுஷ்யம் கலந்த, அந்த அதிகாரிக்கு ஏதாவது ஆகிவிடுமோ என கடைசி வரையிலும் பதறும்படியான பாணி ! ஒரு சிறுகதையின் வெற்றிக்கு தேவையான குறுகதரித்த அளவில், மிக அவசியமான வார்த்தைகளை மட்டுமே கொண்டு படைத்திருக்கிறீர்கள். இதை படித்த போது எனக்கு சட்டென ஆங்கில சிறுகதை இலக்கியத்தின் மேதைகளில் ஒருவரான ஒ. ஹென்றியின் ஒரு கதை ஞாபகம் வந்தது ! இரு பால்ய நண்பர்கள் பல்லாண்டுகளுக்கு பிறகு ஒரு இரவில் சந்திக்கும் சிறுகதை... கதையின் பெயர் மறந்துவிட்டது !

    உண்மையை சொல்லவேண்டுமானால், அந்த அதிகாரி உங்கள் தந்தை என்று தெரிந்த பின்னரும் நான் வியந்தது அந்த முதலாளியை பற்றிதான் !

    காரிகன்,

    நாகரீக மனிதன் இத்தனை முன்னேற்ற பாய்ச்சலுக்கு பிறகும் ஏங்கி நிற்பது அன்புக்கும் ஆதரவுக்கும்தான் ! மனித நேயமும் மனிதாபிமானமும் முற்றிலும் மறையும் நாளில் மனிதனின் எந்த கண்டுபிடிப்பும் அவனை காப்பாற்றாது ! அன்று மனிதனின் உலகம் அழியும் !!!

    ஆனால் உங்கள் தந்தையை வேறு ஒரு விசயத்துக்காக வியக்கிறேன் காரிகன் ! அது அவரது துணிச்சல் ! தன்னால் தண்டிக்கப்பட்டவனின் வண்டியில், நள்ளிரவில் பயணிப்பதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும் ?! இல்லை துணிச்சல் என்பதைவிட அவர் அவரது நேர்மையின் மீதுகொண்ட நம்பிக்கை ! இன்னொன்று... அதிகாரியாய் தண்டித்தாலும், கடமை முடிந்ததும் மனிதனாய் சகமனிதனின் மேல் கொண்ட அபிமானம்... மனிதாபிமானம் ! உங்கள் தந்தையின் மனிதாபிமானமும் அந்த முதலாளிக்கு குறைந்ததல்ல காரிகன் !

    நல்லவர்கள் இருந்தார்கள்... நல்லவர்கள் இருக்கிறார்கள்... நாளையும் இருப்பார்கள் !!!

    ( இன்னும் குழந்தைகள் பிறப்பதே கடவுள் மனிதனை கைவிடவில்லை என்பதற்கான சாட்சி ! - ரவீந்திரநாத் தாகூர். )

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
  16. சாம்,

    நினைத்தேன் வந்தாய் நூறு வயது என்று சொல்ல முடியாது. நீங்கள் சற்றுத் தாமதமாகத்தான் வருவீர்கள் என்று தெரியும். வருகைக்கு நன்றி.

    கதை என்று ஆரம்பித்தாலும் இது கதையில்லை என்று படிப்பவர்கள் ஆரம்பத்திலேயே உணரக்கூடிய அளவில் என் எழுத்து படு "திடமாக" இருக்கிறது போலும். என்ன செய்வது?

    நான் சிறுகதைகள் பெருங்கதைகள் நாவல்கள் என்று கலந்து கட்டி அடித்தவன் என் கல்லூரி தினங்கள் வரையில். அதன்பின் வேலை என்று ஒன்று கிடைத்ததும் எப்போவதாவது சிறுகதைகள் கிறுக்குவதுண்டு. அவை எல்லாமே என் பார்வைக்கு மட்டுமே. என் பாணி நான் முன்பே சொன்னது போல வேறு வடிவம் கொண்டது. இசைக்காக சற்று பாரம்பரிய விதத்தில் சில பழைய சொற்கள் (அமிர்தம். தேன், மதுரம், போன்று) கொண்ட இந்த பாணியை அமைத்துக்கொண்டேன். எனவேதான் உங்களுக்கு இந்த எதிர்பாராதவர்கள் வித்தியாசமாக இருக்கிறது என்று தோன்றுகிறது. மற்றபடி எல்லாம் சாதாரண எழுத்துதான்.

    நீங்கள் குறிப்பிட்ட அந்த ஒ ஹென்றி யின் கதையை நான் விரும்பிப் படித்ததுண்டு. அது "After 20 years" என்ற அருமையான கதை. இரண்டு நண்பர்கள்.ஒருவன் காவல் அதிகாரி. மற்றவன் காவல் துறை தேடும் மகா திருடன். இருபது வருடங்கள் கழித்து இருவரும் ஒருவரையொருவர் யார் என்று அறியாமலே சந்திக்கும் வினோதம் என்று பரபரப்பாக சென்று படிப்பதற்கு படு சூடாக இருக்கும். ஆனால் என்னுடைய இந்தக் கதை எப்படி உங்களுக்கு ஒ ஹென்றியை ஞாபகப்படுத்தியது என்று ஆச்சர்யமாக இருக்கிறது. அவர் எப்பேர்பட்ட எழுத்தைக் கொண்டவர்? இருந்தும் அதற்காக உங்களுக்கு எனது நன்றி.

    ----மனித நேயமும் மனிதாபிமானமும் முற்றிலும் மறையும் நாளில் மனிதனின் எந்த கண்டுபிடிப்பும் அவனை காப்பாற்றாது ! -----

    திடீரென வந்து திகைக்கவைக்கும் வார்த்தைகள். பாராட்டுக்கள். ஏனென்றால் இது உண்மையே.

    ----துணிச்சல் என்பதைவிட அவர் அவரது நேர்மையின் மீதுகொண்ட நம்பிக்கை ! -----

    இந்தக் கோணம் எனக்குத் தோன்றவில்லை. இருக்கலாம்.

    ரபிந்திரநாத் தாகூர் குழந்தைகள் பற்றி கூறியதை குறிப்பிட்டுள்ளீர்கள். நல்ல பொருள் பதிந்த சொற்கள். நான் யாரோ சொன்னதை சொல்கிறேன். ( சிலர் இது வில்லியம் ஆர்த்தர் வார்ட் என்ற அமெரிக்கர் கூறியது என்று சொல்கிறார்கள்.)

    "Every sunrise is a greeting from God, and every sunset , His signature."

    ReplyDelete
  17. தங்கள் பதிவைப்படித்து முடிக்க நேரமாகும் என்று நினைத்தேன்.நல்ல வேளை சீக்கிரம் முடிந்துவிட்டது .இதை ப்போன்று சிறு. சிறு பகுதியாக பதிவைத் தொடருங்கள் .கதை நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  18. சாரி காரிகன்,

    உங்கள் தளத்தை பொறுத்தவரை தாமதம் நானே விரும்பி ஏற்பது ! அனைத்து தளங்களிலுமே பதிவை முழுவதும் படிக்காமல் நான் பின்னூட்டமிடுவது கிடையாது என்றாலும் உங்கள் தளம் அதற்கும் மேலே ! படித்து, உள்வாங்கி, அசைபோட்ட பின்னரே பின்னூட்டம் ! ஏனோ ஆரம்பம் முதலே அப்படி அமைந்துவிட்டது !

    " ஆனால் என்னுடைய இந்தக் கதை எப்படி உங்களுக்கு ஒ ஹென்றியை ஞாபகப்படுத்தியது என்று ஆச்சர்யமாக இருக்கிறது... "

    " நான் சிறுகதைகள் பெருங்கதைகள் நாவல்கள் என்று கலந்து கட்டி அடித்தவன் என் கல்லூரி தினங்கள் வரையில். அதன்பின் வேலை என்று ஒன்று கிடைத்ததும் எப்போவதாவது சிறுகதைகள் கிறுக்குவதுண்டு. அவை எல்லாமே என் பார்வைக்கு மட்டுமே. "

    பதிலையும் நீங்களே கொடுத்துவிட்டீர்கள் காரிகன் ! உங்களுக்காகவே வைத்துகொண்டாலும் நீங்கள் கதைகள் எழுதுபவர், அதுவும் சிறப்பாக ! புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர்கள் தங்கள் கதைகளை பாராவின் அளவிலோ அல்லது பக்கங்களின் அளவிலோ படைப்பதில்லை ! அவர்கள் வார்த்தைகளை எண்ணியே எழுதுவார்கள். விரயமான வார்த்தைகளுக்கு அங்கு இடமில்லை !

    " என்றார் அதிகாரி கடுமையாக. அவர் பயப்படவில்லை.
    என்றான் அவன் மிக பவ்யமாக. அவன் நடிக்கவில்லை. "

    போன்ற வரிகளில் அந்த professionalism கண்டதினாலேயே குறிப்பிட்டேன் !

    ( அப்பாடா ! வெறும் ஜால்ரா அல்ல என்பதை நிருபித்துவிட்டாயடா என் கண்மணி ! )

    " திடீரென வந்து திகைக்கவைக்கும் வார்த்தைகள்... "

    நீங்கள் திகைத்தீர்கள்... நான் எழுதும்போது என்னையும் அறியாமல் வந்து விழும் இது போன்ற வரிகளை கண்டு நான் திடுக்கிட்டதும் உண்டு !!! ரிவீதிரநாத் பொன்மொழியும் அப்படி விழுந்ததுதான் !

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
  19. வாருங்கள் அருள் ஜீவா,

    கருத்துக்கு நன்றி. பெரிய பதிவுகளைப் படிப்பதில் உங்களுக்கு ஒரு சோர்வு. எனக்கோ சிறிய பதிவுகள் எழுதுவதில் அவ்வளவாக விருப்பம் கிடையாது. நான்கு பத்திகள் எழுதி அதை வெளியிடுவதில் உடன்பாடு இல்லை. இது ஒரு உண்மை நிகழ்ச்சி என்பதால் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு நகர்ந்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் இது சிறியதாக போய்விட்டது. மீண்டும் வாருங்கள்.

    ReplyDelete
  20. சாம்,

    எதற்கு இந்த சம்பிரதாயமெல்லாம்? நான் கூட சில பதிவுகளுக்கு அதற்கு வரும் பின்நூட்டங்களைக் கண்ட பிறகே தாமதமாக அங்கே போவதுண்டு. இதில் என்ன ஸாரி?

    ஒரு விதத்தில் நீங்கள் சொல்வது உண்மைதான். சில அபாரமான ஆங்கிலக் கவிஞர்கள் ஒரு வரிக்கு பல நாட்கள் செலவழிப்பதைப் படித்திருக்கிறேன்.

    ,தேங்காய் பாம் இரண்டு எப்போது வெடிக்கப்போகிறது?

    ReplyDelete
  21. the real story reminds of many fathers who unfortunately are not given equal recognition likemothers i have come across many fathers great sacrifices there are older men who are reluctant to reveal their acute problems of their health..... i salute those heroes

    ReplyDelete
  22. Fathers are the underdogs all over the world. They are mostly underestimated, unnoticed, sidelined and treated with scant respect unlike mothers. Thank you for the comment Mr. Nat Chander.

    ReplyDelete
  23. உண்மையில் சற்றே யோசிக்கவும், வெட்கப்படவும் வைத்தது. நான் நினைக்கிறேன் அந்த முதலாளி கண்டிப்பாக ஒரு படிக்காத கிராமத்தானாக இருப்பார் என்று. ஏனென்றால் அவர்கள் மட்டும்தான் இன்னும் மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் இருப்பர். கண்டிப்பாக அந்த கண்டிப்பான அரசு அதிகாரிக்கு, வண்டியில் இருந்து இறங்கி பஸ்ஸில் ஏறும் வரை சந்தேகம் தீர்ந்திருக்காது. அது மட்டுமன்றி, படித்த அரசு அதிகாரிக்கு முழு மரியாதை கொடுத்து (லஞ்சம் கொடுக்க முயற்சிக்காமல்) இருக்கிறார்.

    இன்னும் சற்றே நம்முடைய இன்றைய தலைமுறை பாணியில் சொல்லப் போனால், "பொழைக்க தெரியாத ஆளுங்களா இருக்காங்களே?"

    ReplyDelete
  24. வருகைக்கு நன்றி அரவிந்த்,

    இதை நான் எழுதியதே அந்த மில் ஆசாமிக்காகத்தான். அது போன்றவர்கள் இன்று வெகு அரிது.

    ReplyDelete