Monday, 13 January 2014

இசை விரும்பிகள் XIII -- மறைந்த கானம்

     
 
          ( பதிவை துவங்கும் முன் ஒரு சிறிய விளக்கம்: கானம் என்பதை பாடல் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டாம் ஆங்கிலத்தில் மெலடி எனப்படும்எளிதில்எந்தவிதமான வரைமுறைக்கும் உட்படாத அந்த  பரவசமான  உணர்ச்சியையே   நான்  இங்கே கானம் என  குறிப்பிடுகிறேன்.)

     காலத்தின் வலுவான ஓட்டத்தில்  தொலைந்து போய்விட்ட பல அபாரங்களில் ஒன்று இப்போது  நமக்கு அரிதாகக் கிடைக்கும் இனிமையான இசை. "The golden era is always the past"  என்று குறிப்பிடுவதைப் போல,  மனதை வசீகரிக்கும்  ஒரு வானவில் தோன்றி மறைவதைப் போல, திடீரென வரும் கோடை மழை கொட்டிவிட்டு ஓய்வதைப் போல, ரயிலில் பயணம் செய்யும் போது தோன்றும்  மிக ரம்மியமான ஒரு இயற்கைக் காட்சி சட்டென்று காணமல் போவதைப்  போல, கனவில் காணும்  ஒரு அழகான முகம் சடுதியில் கரைவதைப் போல, நாம் வரையும்  நீர்க் கோலங்கள் போல தமிழின் உன்னதமான நல்லிசை தற்போது ஏறக்குறைய தொலைந்தே போய்விட்டது. ஆனால் முரண்பாடான உண்மையாக தமிழின் தொன்மையான ராகங்களில்தான் இன்னும் பல  பாடல்கள் இயற்றப்பட்டு வருகின்றன. அதில்  இசையும் இருக்கிறது.வார்த்தைகள்   காதுகளில் விழுகின்றன. இவை எல்லாமே இருந்தும் ஒரு பாடலுக்கு உயிரூட்டி  கேட்பவரை முணுமுணுக்கச் செய்து   மெய் மறக்கச் செய்யும் வசீகரமான   அந்த கானம் எங்கே?  நெஞ்சத்தை நனைக்கும்  சில்லென்ற முதல் பனி  போல, ஒரு  முதல் மழையின் சிலிர்ப்பைப்  போல வார்த்தைகளை இசையாக மாற்றும் அந்த மந்திர கானம், பாடலின் உயிரலையாக உள்ளத்துக்குள் ஊடுருவி  நம்மை சிறை பிடிக்கும் அந்த இன்பம் எங்கே? காற்றில் கரைந்த சுவடுகளை போல அந்த இனிமையான கானங்களும் காணாமல் போய்விட்டனவா?



                      மறைந்த கானம் 

      எத்தனை வகையான சுவையான  பாடல்களை    பொக்கிஷ அனுபவங்களாக  நாம் பெற்றிருக்கிறோம் தமிழ்த்திரையின் மூலம்!  சற்று திரும்பிப் பார்க்கும் போது நாம் கடந்து வந்த இசைச் சாலையில் என்னென்ன இனிமையான பாடல்கள் நம்மை அரவணைத்து வந்திருக்கின்றன என்ற வியப்பு ஏற்படுகிறது. நாடகத்தின் நீட்சியாக மலர்ந்த  திரையிசை அந்தந்த காலத்தின் சுவடுகளை நமது மரபின் எழுச்சியான  ராகங்களைக் கொண்டு நம்மை வசியப் படுத்தியிருந்தது. எந்த விதமான தொழில் நுட்பம் வசப்பட்டதோ அதைக் கொண்டு இசை தன் பரிமாணங்களை இன்னும் விரிவாக்கியது. நம்  இசையின் முன்னோடிகள் மிகுந்த சிரமத்திற்கிடையே கடினமான சாலைகளில் இசையை வழிநடத்திச் சென்று இன்றைக்கு பெரிய அளவில் பேசப்படும் பல இசை அமைப்பளர்களின் சுலபமான பயணத்திற்கு பாதை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

        அதிகமான ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் நளினமாகவும் இனிமையாகவும் இசை சிறப்பாக இருந்த காலங்களில் (அதாவது 50 களிலிருந்து அறுபதுகளின் இறுதி வரை ஏறக்குறைய இருபது வருடங்கள்) வெளிவந்த பாடல்கள் பெரும்பாலும் சாகாவரம் பெற்றவைகளாக இருப்பதின் பின்னே காணப்படும் மர்மம் என்ன என்று ஆராய்ந்தால்  நமக்கு அகப்படும் பல காரணிகளில் சிலவற்றை குறிப்பிடலாம். நேர்த்தியான தொழில் பக்தி, சமூகத்தின் மீது இருந்த அக்கறை, தரமான கவிதையின் பால் இருந்த காதல், தான் என்ற அகந்தை இல்லாமை, மற்றவர்களையும் அனுமதிக்கும் நாகரீகம், இசை முன்னோடிகளை மதிக்கும் பண்பாடு, ராகங்களையும் வார்த்தைகளையும் தொல்லை செய்யாத இசை,  கவிஞர்களுக்கும் பாடகர்களுக்கும் அவர்களுக்குரிய இடத்தை அளித்து அவர்களின் வெற்றியையும் சாத்தியமாக்கியது என  பல இவற்றில் அடக்கம்.


           இருந்தும் வரலாறு அறியாத சில இசை ரசிகர்கள் இவ்வாறான சவாலான சாதனைகளைச் செய்தவர்களை அறியாமலும் அவ்வாறு அறிந்திருந்தாலும் அவர்களை எளிதாக ஒதுக்கிவிட்டு  தங்களுக்கு விருப்பமானவர்களை எல்லை மீறிப் புகழ்கிறார்கள். இதை நான்  ஒரு மிகப் பெரிய மோசடி என்றே கருதுகிறேன். இணையத்தில் தென்படும் இந்த இசை வெற்றிடத்தின் முகத்தை பலர்  எத்தனை விதமான முகச் சாயம் கொண்டு பூசினாலும் அது இயல்பாக இருப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் இப்போது என்ன இருக்கிறது என்பதையும் தங்களுக்கு என்ன நேர்ந்தது என்பதையுமே அளவுகோளாக வைத்துக்கொண்டு பத்திகள் பத்திகளாக எழுதி ஒரு இனிமையான இசை அனுபவத்தை தவறவிடுகிறார்கள்.

       பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை என்பது உலக உண்மை. அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டிய அவசியம் இருக்கும் அதே வேளையில் நம் மனதோடு ஒன்றிப் போன கானங்களையும் மறந்துவிடாமலிருப்பது முக்கியமானது. நாம் பற்றிகொண்டிருக்கும் இனிமையை உதறிவிட்டு, அல்லது அந்த சிந்தனையை அகற்றிவிட்டு ஒரு புதிய ரசனையை  நம்முள் நிரப்பிக்கொள்வது ஆரோக்கியமற்ற செயல். வேர்களை துறந்துவிட்டு  புதிய பசுமை இலைகளை தேடுவது மதியீனம்.

         தமிழ்த்திரையில் ஏற்பட்ட இசை மாற்றங்கள் இப்போது  நாம் கேட்கும் பாடல்களை அழைத்துச் செல்லும் பாதை குறித்து சிந்திக்கும் போது  நம் மனதில்  வேதனை பாய்வதை உணர முடிகிறது.   80 களில் சரியத் துவங்கிய நமது நல்லிசையின் மீது  90 களில் ஒரு நவீன வெளிச்சம் படர்ந்தாலும் வேர்களற்ற இசையை விரும்பும் மனங்கள் அதிகரித்து வரும் இந்த காலச் சூழலில் ரம்மியமான கானங்கள் நம்மிடையே கலைந்து போன கனவுகளாகவே காட்சியளிக்கின்றன. இசையின் அழகியல் மெலிந்து ஆபாச கூத்தாட்டங்களும், நம் மண் சாராத இசை வடிவங்களும், நமது இசை மரபின் நீட்சியை கொண்டிராத பாடல்களும் நம்மை மூச்சடைய வைக்கின்றன. இந்தப் பாடல்தான் என்று குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியாதபடி ஏறக்குறைய அனைத்து பாடல்களும் இதே வார்ப்பில் இருப்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். இசையின் உயிர்நாடியான வாத்தியங்கள் அந்தந்த மண்ணைச் சார்ந்திருக்கவேண்டிய அவசியத்தை இன்றைய இசை அமைப்பாளர்கள் குழிதோண்டிப் புதைத்துவிட்டதாகவே தோன்றுகிறது. மேற்கத்திய இசையின் படிவங்கள் நம்முடைய இசையில் படர்வது ஒரு வகையான புதுமையாக இருந்தாலும்  அதை எங்கே நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற எல்லையை நாம் மீறிவிட்டதாகவே நான் உணர்கிறேன்.

          நம்முடைய  மண் சார்ந்த பாரம்பரிய  இசைக் கருவிகளை துறந்து விட்டு கீபோர்ட் உதவியுடன்   செயற்கையான ஒலிகளை உருவாக்கி நமக்கு பழக்கப்படாத தொனியில் பாடி ராகங்களை மீறும் மெட்டுக்களைப் போட்டு தொடர்பில்லாத பல்லவி சரணங்களோடு ஆங்கில இசையை தமிழ்கொண்டு போர்த்தி   ஒரு விதமான குழப்பமான இசையை சுடச் சுட தட்டில் வைத்து பரிமாறுகிறார்கள் தற்போதைய இசை அமைப்பாளர்கள்.  உதாரணமாக உச்சத் தொனியில் பாடுவது ஒரு பாடும் முறை. இதை பலர் செய்திருந்தாலும், ரஹ்மான் வந்த பிறகே இவ்வகையான high -pitch singing இங்கே காலூன்றியது. ரஹ்மான் குரலின் ஏற்ற இறக்கங்களை அடித்து உடைத்து  உச்ச ஸ்தானியில் பாடியது 90 களின் இசை மாற்றத்தின் அடையாளமாக இருந்தது. அது ஒரு exceptional device அல்லது ஒரு பரிசோதனை முயற்சியாக இல்லாமல் அவருக்குப் பின் வந்த இசை அமைப்பாளர்கள் அந்த பாணியை எல்லைமீறி  கையாள்வது நம் இசை மரபுக்கு சாவு மணி அடிக்கிறது. நாம்  காலணிகளை படுக்கையறை வரை கொண்டு வந்துவிட்டோம் என்று தோன்றுகிறது.

     ரஹ்மானை குற்றம் சொல்லும் பலர் இதையும் கருத்தில் கொண்டேதான் அவரை விமர்சிக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். மேற்கத்திய கலப்பை ரஹ்மான் செய்தார் என்று சிலர் சொல்வது அபத்தமான கருத்து. நம் இசையில் மேற்கத்திய பாணி ஜி ராமநாதன் காலத்திலேயே வந்துவிட்டது. 80 கள் வரை இந்த கலப்பு வெகு இனிமையாகவும் இயல்பாகவும் நம் இசை மரபோடு முட்டிக்கொள்ளாமலும் துணி மீது வரையப்பட்ட அழகான ஓவியம் போல இருந்தது. 80 களின் மத்தியில் இந்த இசைச் சித்திரம் உருமாறத் துவங்கியது. ரஹ்மானின் வருகை அவருக்கு முன்னே ஆறு வருடங்கள் தொலைந்து போயிருந்த இந்த மேற்கத்திய இசை இணைப்பை மீண்டும் கொண்டுவந்தது என்பதே உண்மை. அதுவே அவர் இசை பெரிதும் வித்தியாசமானதாகவும் புதுமையானதாகவும் இருப்பதாக   மக்களால் ஏற்றுகொள்ளப்பட்டதின் காரணம். ஆனால் இப்போது அது முன்பை விட இன்னும் ஆழமாக நம் இசையை பாதித்தது. எந்த புதிய இசையையும், பாணியையும், இசை வடிவத்தையும் வரவிடாமல் தடுத்துக்  கொண்டிருந்த இளையராஜாவின்  இசைச் சுவர்  ரஹ்மானின் எழுச்சியான இசையில் உடைந்து நொறுங்கியது. இளையராஜாவின் இசைப் பாரம்பரியத்தை முடிவுக்கு கொண்டுவந்த ரஹ்மானின் வருகையினால் தமிழ்த்திரையில் பல கதவுகள் புதியவர்களுக்குத் திறந்தன. இங்கேதான் நம் இசையின் சரிவு மறுபடி உண்டானது.  இதை நாம் பாரதிராஜாவின் வருகையோடு ஒப்பிடுவது பொருத்தமானது.  எப்படி பாராதிராஜாவின் நுழைவு தமிழ்த்திரையில் யார் வேண்டுமானாலும் நடிகராகலாம் என்ற புதிய இலக்கணத்தை உண்டாக்கியதோ அதே போல ரஹ்மானின் வரவு  ஒரு இசை அமைப்பாளருக்குரிய தகுதிகளை மாற்றியமைத்தது. இதன்  விளைவாக   நமது பொற்காலத்தின் (60கள்) சுவடுகளே இல்லாத பாடல்கள் தலைக்காட்டத் துவங்கின. மாறிவிடக் காலமும் இந்த தலைமுறை ரசனையை அங்கீகரித்து தமிழில் நீண்ட ஆயுளோடு இருந்த கானத்தை புதைத்துப் போட்டது. ரஹ்மானை மட்டும் இந்த சீரழிவிற்க்கு பொறுப்பாளியாக்குவது அநீதி என கருதுகிறேன். மேலும்  இது  ஒரு விதத்தில் தந்திரமான யுக்தி. இதைச் செய்பவர்கள் பெரும்பாலும் இளையராஜாவின் ரசிகர்களாக இருப்பதில் வியப்பேதுமில்லை. அவர்கள் இளையராஜாவை நமது பாரம்பரிய இசை மரபின் பாதுகாவலானகவும் ரஹ்மானை அதை அழிக்கவந்த தீய சக்தியாகவும் உருவகப்படுத்திக் கொள்கிறார்கள்.

       தமிழ்த் திரையின் இசை பாரம்பரியத்தை தொடர்ச்சியாக கொண்டு சென்றவர்களில் ரஹ்மான் இளையராஜாவுக்குப்  பிறகு வருகிறார். எம் எஸ் வி யின் நீட்சியை இளையராஜா தன் வசீகர இசையினால் புதிய பரிமாணங்களுக்கு இட்டுச் சென்றதுபோல இளையராஜாவுக்குப் பின் ரஹ்மான் தமிழ்த் திரையிசையை இன்னும் பல உயரங்களுக்கு எடுத்தச் சென்றார் என்பதும் உண்மையே.எம் எஸ் வி, இளையராஜா போன்ற தமிழ்த் திரையின் இசை சகாப்தங்களுடன் பணியாற்றிய   ரஹ்மானுடன் நம் மரபின் இசை முற்றுப்புள்ளிக்கு வந்துவிட்டது. ரஹ்மானின் வருகை தமிழிசையை பழைய இசை, புதிய இசை என்று பிரித்தது. இருந்தும் அவர்  பழமைக்கும் புதுமைக்கும் இடையே ஒரு பாலமாக இருந்தார். ஆனால்  அவருக்குப் பின் வந்தவர்களால் ஒரு தலைமுறையை பாதிக்கும்  இசைமரபை உருவாக்க முடியவில்லை. தேவா, வித்யாசாகர்,கார்த்திக் ராஜா, மணி ஷர்மா, ஆதித்யா,பால பாரதி,பரத்வாஜ் போன்ற ரஹ்மான் காலத்தை ஒட்டி வந்தவர்களும் ஹாரிஸ் ஜெயராஜ், இமான், தமன் ,தேவி ஸ்ரீ பிரசாத், யுவன் ஷங்கர் ராஜா, விஜய் ஆண்டனி, ஜி வி பிரகாஷ், அனிருத், சத்யா என்று இன்றைய இசைஅமைப்பாளர்களும் புதுப்பித்துக்கொண்ட  ஒரு  நவீன இசை பாரம்பாரியத்தை படைக்கவில்லை.ஆச்சர்யமாக சில பாடல்கள் நம் கவனத்தை ஈர்க்கத் தவறுவதில்லை என்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும். எனினும் "இந்த" சில பாடல்கள் ரசிக்கும்படியாக இருப்பது ஒன்றே அதை சாகாவரம் பெற்றதாக்கிவிடுவதில்லை. ஒரு பாடல் அது உருவான தலைமுறையைத் தாண்டியும் தொடர்ந்து ரசிப்புடன் கேட்கப்படுவதே அதை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. கிளாசிக் எனப்படும் இந்த புனிதமான  வட்டத்திற்குள் (The holy circle) வரக்கூடிய  தகுதியை எல்லா பாடல்களும் அடைந்துவிடுவதில்லை.அதே சமயம் ஒரு பாடலின் வணிக வெற்றியும் அதற்கு அந்தத்  தகுதியை கொடுத்துவிடுவதில்லை.  வேண்டுமானால் அவ்வையான பாடல்களை நாம் cult classic என்ற  முத்திரை குத்தி ஒரு ஓரத்தில் வைத்துவிடலாம். They do nothing better than feeding our nostalgia.

          இளையராஜாவின்  காலத்திலேயே நம் இசை சிதையத் துவங்கியது. நல்ல தரமான கவிதையை புறக்கணித்த அவரின் இசை மரபு தொடர்ச்சியாக கைக்கொள்ளப்பட்டு வருவது வருந்ததக்கது.  ரஹ்மானின் காலத்தில் நம் இசை முகம் வேறு சாயம் பூசிக்கொண்டது.அந்த ஒப்பனை ஆரம்பத்தில் நம்மை பரவசப்படுத்தினாலும் போகப் போக திகட்டத் தொடங்கியது. காலம் தாண்டிய கானங்கள்  இசைக்கப்படாமல் விரைவு உணவு போல இப்போது  பாடல்கள் ஒரு தற்காலிக திருப்தியை அளிக்கின்றன. அவைகளை நினைவில் வைத்திருக்கவேண்டிய அவசியமும் நமக்கு இல்லாமல் போய்விட்டது. இசை என்னும் மகத்துவத்தை உணர்த்தும் அனுபவங்களைக் கொடுப்பதில் இன்றைய இசை அமைப்பாளர்கள் அதிக அக்கறை காண்பிப்பதில்லை என்பது அவர்களின் பாடல்களை ஒரு முறை கேட்கும் போதே நமக்கு அதிக சிரமங்களின்றி புரிந்துவிடுகிறது. மேலும் ஆபாசக் கூத்தான ஒரு கருமாந்திரப் பாடல் வெற்றி பெற்று விட்டால் அந்த ஆபாசம் தொடர்ந்து செய்யப்படும் அபத்தமும், சமூக நெறியின்மையும், கீழ்த்தரமான வக்கிர புத்தியும்,மலிவான  வணிக நோக்கமும் நம் இனிமையான கானங்களை மீண்டு வரமுடியாத குழிக்குள் இன்னும் ஆழமாக புதைத்துக்கொண்டே இருக்கின்றன.  வேர்களற்ற இசையையும், சுவையில்லாத பாடல்களும் நம்மை திடுக்கிட வைக்கின்றன. என் இசை ஏன் இப்படி கெட்டுப் போனது என்ற வேதனையான கேள்வி நல்லிசை நாடிகளின் நெஞ்சங்களில் ஒரு  எடுக்கப் படாத முள்ளாக குத்திக் கொண்டிருக்கின்றது.

       இன்றைய இசை என்கிற  வெற்றிடத்தில் நின்றுகொண்டிருக்கும் நாம் சற்று நம்முடைய 60 மற்றும் 50  களை நோக்கிப் பார்த்தோமானால் எவ்விதமான இசை அபாரங்களை நாம்  பெற்றிருந்தோம்  என்பதையும் எவ்விதமான இசை இன்பங்களை இழந்திருக்கிறோம் என்பதையும் எளிதில் அடையாளம் காணலாம்.
எத்தனை விதமான ராகங்கள் (யாரடி நீ மோகினி?),
மனதை பிழியும் துயர கீதங்கள் (சொன்னது நீதானா?),
வெற்றியை கொண்டாடும் சாதனைப் பாடல்கள் (அச்சம் என்பது மடமையடா), இளமை துள்ளும் இனிமையான இசைக் கோலங்கள் (என்ன என்ன வார்த்தைகளோ),
காதலை கண்ணியப்படுத்தும் காவிய கானங்கள் (அன்புள்ள மான் விழியே),
மனிதத்தை மதிக்கும் பாடல்கள்(அதோ அந்த பறவை போல)
 என பலவித இசை ஆச்சர்யங்கள் நம்மிடம் உண்டு. இன்றோ காதல் மட்டுமே பிரதானமாக இருக்கிறது. அதுவும் கூட வக்கிர சிந்தனையின் உச்சமாக பெண்களை இழிவு செய்யும் இச்சையின் இசையாக வெடித்துத் தெறிக்கிறது. Oh, how green once my valley was!

   கானம் என்பதை நாம் எளிதில் புரிந்துகொள்கிறோம். இன்பமாக  ரசிக்கிறோம். ஆர்ப்பாட்டமாக ஆராதிக்கிறோம். இருந்தும்  அதன் வரைபடத்தை நம்மால் எந்த மொழி கொண்டும் எத்தனை முயற்சித்தும் வரைய முடிவதில்லை. தமிழ்த் திரையிசையின் தேன்சுவை கொண்ட பல பாடல்களைக் கொடுத்த இசைச் சிகரங்களான எம் எஸ் விஸ்வநாதன்- டி கே ராமமூர்த்தி இரட்டையர்களின் இனிப்பான இன்னிசையில் காட்டாற்று வெள்ளமாக   ஆக்ரோஷமாக பீறிட்ட பாடல்கள் நம் தமிழ்த் திரையின் நிரந்தர இசைச் சிற்பங்களாக நிலை பெற்றிருக்கின்றன.  அந்தக் காலச் சூழ்நிலையில் வெளிப்பட்ட அந்த  இன்ப இசையை விட மேன்மையானதை  இனி எந்த காலகட்டத்திலும் எந்த இசையாலும் உருவாக்க  முடியாது என்பது மாற்ற முடியாத நிஜம்.  அத்தகைய இசைச்  சிற்பிகள் படைத்த பாடல்களை மற்ற இசை அமைப்பாளர்களின் பாடல்களோடு இணை வைத்தால் தென்படும் வித்தியாசம் இனம் காணக்கூடியது. இயல்பானது. உதாரணமாக
 ஓ ரசிக்கும் சீமானே (படம்-பராசக்தி, இசை- சுதர்சனம்) (காலத்தை தாண்டிய மிக அற்புதமான பாடல்),
பாட்டு பாடவா (தேனிலவு - எ எம் ராஜா), (அடுத்த அற்புதம்),
வாழ்ந்தாலும் ஏசும் (நான் பெற்ற செல்வம்- ஜி ராமநாதன்),
அமுதை பொழியும் நிலவே (தங்க மலை ரகசியம்- டி ஜி லிங்கப்பா) (பழைய பதிவு ஒன்றில் இதன் இசை ஜி ராமநாதன் என்று எழுதியிருந்ததை விடாமல் சுட்டிக்காட்டிய இணைய  நண்பர்களுக்காக  இறுதியாக என் தவறை திருத்திவிட்டேன்.),
 நீ எங்கே என் நினைவுகள் அங்கே (மன்னிப்பு- சுப்பையா நாயுடு),
 காவேரிக் கரையிருக்கு (தாயைக் காத்த தனயன்- கே வி மகாதேவன்),
வந்த நாள் முதல் (பாவ மன்னிப்பு- எம் எஸ் விஸ்வநாதன்-டி கே ராமமூர்த்தி), கண்ணாலே பேசி பேசி ( அடுத்த வீட்டுப் பெண்- ஆதி நாராயண ராவ்).

    போன்ற பாடல்களில்  தென்படும் தனித்தன்மை வெவ்வேறான இசை அமைப்பாளர்களின் சிறப்பை அழுத்தமாக அடையாளம் காட்டுவதை நாம் உணரலாம். இசையை உன்னிப்பாக கவனிக்கத் தவறுபவர்களுக்கு இவை எல்லாமே ஒரே இசை அமைப்பாளர்தான் செய்தார் என்ற எண்ணம் ஏற்படுவதில் தவறில்லை. அதே சமயத்தில் எம் எஸ் வி-டி கே ஆர் இரட்டையர்கள் இணைந்து கொடுத்த பாடல்களுக்கும் அந்த இசைக் கூட்டணி பிரிந்த பிறகு எம் எஸ் விஸ்வநாதன் தனியாக அமைத்த பாடல்களுக்கும் இருக்கும் அந்த இனம் தெரியாத யாராலும் இதுதான் அது என்று பகுத்துப் பார்க்க முடியாத வேற்றுமை இசையின் புரிந்துகொள்ள முடியாத வசீகரத்தை நமக்கு உணர்த்துகிறது.   ஒப்பீடுகள்  பல சமயங்களில் அர்த்தமற்றதாக இருந்தாலும் ஒரு சரியான திசைக்கு மற்றவர்களை வழி காட்டும் நோக்கத்திற்காக அவை அவசியப்படுகின்றன. உதாரணத்திற்கு கீழ்க்கண்ட பாடல்களை பாருங்கள்.

       ஒன்று எங்கள் ஜாதியே (பணக்கார குடும்பம்- எம் எஸ் வி- டி கே ஆர் ) , கொடியில் இரண்டு மலருண்டு (உயிரா மானமா- எம் எஸ் வி  ) நீரோடும் வைகையிலே (பார் மகளே பார்- எம் எஸ் வி- டி கே ஆர்) எங்கிருந்தோ ஆசைகள் (சந்ரோதயம் - எம் எஸ் வி )பாடல்களை ஒப்பீடு செய்தால் இந்த "புரிந்து  கொள்ள முடியாத வசீகரத்தை" நாம் அடையாளம் காணலாம். (இங்கே நான் குறிப்பிட்டுள்ள பாடல்கள் எல்லாமே தரமான நல்லிசையின் அழகான வடிவங்கள்  என்பதில் சந்தேகமேயில்லை.) சில தீவிர இசை விரும்பிகள் இந்த இரட்டையர்களின் பாடல்களை மட்டுமே அனுமதிப்பதுண்டு. எம் எஸ் வி தனியாக படைத்த பாடல்களை அவர்கள் "என்ன இருந்தாலும் அது மாதிரி இல்லை" என்று தள்ளி வைத்துவிடுவதை நான் அறிந்திருக்கிறேன்.

          அவ்வாறான  ஒருவரை  மிக சமீபத்தில் நான் வழக்கமாகச் செல்லும் முடி திருத்தும் கடையில் சந்தித்தேன். என் முறைக்காக காத்திருக்க வேண்டியிருந்ததால் எப் எம்மில் ஒலித்துக்கொண்டிருந்த புதிய பாடல்களை வேறு வழியின்றி  கேட்டுக்கொண்டிருந்தேன். வழக்கமான சென்னைத்  தமிழில் வள வள பேச்சு, அதன் பின் படத்தின் பெயரைக்கூட சொல்லாமல் பாடல் என்று நிகழ்ச்சி போய்க்கொண்டிருந்தது. ஒலித்த பாடல்கள் ஏறக்குறைய எல்லாமே ஒரே வார்ப்பில் வெட்கமில்லாது பிரதி எடுக்கப்பட்ட ஆங்கிலப் பாடல்கள்  போன்று இருந்தன. அனைத்துப் பாடல்களிலும் ஒரே மாதிரியான குரலோடு  பாடகர்களும் உச்சத் தொனியில் கிரீச்சிட்டுக் கொண்டிருந்தார்கள். "சரி அடுத்த பாடலாவது தேறும்" என்று பொறுமையோடு இருந்தால் போனதே தேவலை என்ற ரீதியில் சத்தத் தொல்லை தொடர்ந்தது. நல்லவேளையாக சிறிது நேரத்தில் அடுத்த நிகழ்ச்சி ஆரம்பிக்க புதிதாக வந்த வானொலி ஜாக்கி சற்று எண்பதுகளை நோக்கி நகர்ந்தார். இளையராஜாவின் இசையில் வந்த 'கடலோரம் கடலோரம் அலைகள் வந்து விளையாடும்' என்ற ஆனந்த ராகம் படப் பாடல் ஒரு திடீர் புத்துணர்ச்சியை கொடுத்தது. பொதுவாக இந்தப் பாடலை நான் வேறு ஒரு சூழலில் கவனிக்காமல் கடந்து போயிருப்பேன். ஆனால் இன்றோ இந்தப் பாடல் 2013 ஆண்டின்  இசைச் சத்தங்களிலிருந்து வேறு தளத்திற்கு என்னை இட்டுச் சென்றது. அதுவரை கேட்ட ஓசைகளுக்கு மத்தியில் இதில் இசை இருந்தது. எனவே அந்த நேரத்திற்கு அந்தப் பாடலை என்னால் ரசிக்க முடிந்தது.
 
       "நான் எப் எம் சானல்களை வெறுக்கிறேன். ஒரு பாடல் கூட ஒழுங்காக இல்லை" என்று ஆரம்பித்தார் என் அருகில் இருந்த அந்த மனிதர். "ஏன் இந்தப் பாடல் நன்றாகத்தானே இருக்கிறது." என்றேன் நான். அம்மா கடலம்மா  என்று ஜேசுதாசும் இளையராஜாவும் இணைந்து பாடிக்கொண்டிருக்க  அவர் என்னை இளையராஜாவின் ரசிகன் என்றே  எண்ணியிருக்க வேண்டும். எனக்கும் அவர் அவ்வாறு என்னைப் பற்றி எண்ணுவதே அப்போதைக்கு தேவைப்பட்டது .

    "நான் இவைகளை பாடல்களாகவே மதிப்பதில்லை." என்றவர், "நீங்கள் பழைய பாடல்கள் கேட்பதுண்டா?"என்று என்னைக்  கேட்டார்."உண்டு. இதுவே பழைய பாடல்தானே?" என்றேன் அவரை சீண்டும் விதத்தில்.  அவர் முகம் சற்று உறைந்தது. பின்னர்,"பழைய பாடல்கள் என்றால் கருப்பு வெள்ளைப் படப் பாடல்கள்." என்று தீர்மானமாகச் சொன்னார்.

       பொதுவாக தமிழ்நாட்டில் இவ்வகையான பாடல்களை மக்கள் எம் ஜி ஆர் பாடல்கள், சிவாஜி பாடல்கள் என்று சொல்வதே வழக்கம்.எனவே இந்த மனிதர் கொஞ்சம் விஷயமுள்ளவர்தான் என்றுணர்ந்தேன்.இவரிடம் பேசினால் நிறைய தகவல்களை அபகரித்துக்கொள்ளலாம் என்ற சுயநலத்தில் பேச்சை தொடர்ந்தேன்."நீங்கள் சொல்வது அறுபதுகளில் வந்த பாடல்கள். அதையும் நான் கேட்பதுண்டு. குறிப்பாக ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ என்ற பாடல் எனக்கு மிக விருப்பம்" என்றேன். விருப்பம் என்று ஒரு பாடலை குறிப்பிடுவது எவ்வளவு சிரமம் மற்றும் அபத்தம் என்று அப்போது எனக்குப் புரிந்தது. நான் இப்படிச் சொன்னதும் அவர் முகத்தில் ஒரு சிலிர்ப்பான புன்னகை மலர்வதைக் கண்டேன். ."மிக அருமையான பாடல். அது போன்ற பாடல்கள் இனி வரப்போவதில்லை, அதுதான் உண்மையான இசை." என்று அமைதியாக பேசியவர்,"விஸ்வநாதன்- ராமமூர்த்தியுடன் இசை முடிந்துவிட்டது. அதன் பிறகு எங்கே வந்தன நல்ல பாடல்கள்? எல்லாமே விரசம்." என்று கடுமையான குரலுக்கு மாறினார். "வார்த்தைகள்  புரியவில்லை. அப்படி புரிந்தாலோ அவை படு கேவலமாக இருக்கின்றன ராகங்கள் என்றால் என்னவேன்றே  தெரியாதவர்கள் இசை அமைக்கிறார்கள்." என்று இன்றைய இசையை பிய்த்துப் போடத் துவங்கினார். ஒருவேளை இவர் அமுதவனாக இருப்பாரோ என்று கூட சற்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.

         " விஸ்வநாதன் ராமமூர்த்தி கூட்டணிக்குப் பிறகு விஸ்வநாதன் அதன் பின் இளையராஜா, பின் ரஹ்மான் வந்தார்களே? அவற்றில் உங்களுக்கு எதுவுமே பிடிக்கவில்லையா?" எனக் கேட்டேன் நான்."விஸ்வநாதன்-ராமமூர்த்தி கூட்டணியின் இனிமை விஸ்வநாதனிடம் இல்லை. அவர் தனியாக இசை அமைத்த பாடல்களில் பழைய இனிமை குறைந்திருந்தது. விஸ்வநாதனிடமே இல்லை என்னும்போது  இளையராஜா இவர்கள் பக்கத்தில் வரவே முடியாது. அவர் நாட்டுபுற இசையை பிரபலமாக்கினார். ஒரே மெட்டில் ஆயிரம் பாடல்கள் போட்டார்.  விஸ்வநாதன்-ராமமூர்த்தியிடம் இருந்த இசை நுணுக்கங்கள் அவரிடம் இல்லை." என்றவர், "ரஹ்மானை ஒரு இசை அமைப்பாளர் என்றே நான் எண்ணுவதில்லை. அவர்  ஒரு இசை கலப்பு செய்பவர். பெரும்பாலும் nativity இல்லாத பாடல்களாக அமைப்பவர் அவர்.    இளையராஜாவிடமாவது ஒரு பத்துப் பாடல்கள் தேறும். ரஹ்மானிடம் அதுவுமில்லை." என்று ரஹ்மானை கண்டபடி ஏசினார். அந்த பத்தும் அவர் என்னை இளையராஜா ரசிகன் என்று எண்ணியதால் வந்த an offer of compromise  என்பதும் எனக்குப் புரிந்தே இருந்தது. அதற்குள்  என் தலைக்கு மேல் வேலை வந்து விட்டதால்  அந்த விவாதத்தை துண்டிக்கவேண்டியிருந்தது. அது எனக்கு வருத்தமே.ஏனென்றால் நிறைய கேள்விகள் என்னிடம் மீதமிருந்தன அவரிடம் கேட்பதற்கு.

        அவரைப் போன்றவர்கள் நம் சமூகத்தில் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களை இணையத்திலோ அல்லது வெளிப்படையாகவோ காட்டிக்கொள்வதில்லை. தங்களுக்குள் தங்கள் விருப்பங்களை புதைத்துக் கொள்கிறார்கள். இணையத்தில் நான் என்ன விதமாக எழுதிக்கொண்டு வருகிறேன் என்று அவருக்கு தெரிந்திருக்காது. அதற்கு அவருக்கு அவசியமுமில்லை. இருப்பினும் நானும் அவரும் ஒரே பாதையிலேயே சென்றுகொண்டிருக்கிறோம் ஒரே ஒரு வித்தியாசத்தைத்தவிர.

     பழைய பாடல்களை வானொலியில் கேட்டிருந்த அனுபவம் இருந்தாலும் தனிப்பட்ட விதத்தில் என் இதயத்திற்கு அருகே அவற்றை  கொண்டு வந்தது தொண்ணூறுகளுக்குப் பிறகுதான். முன்பு அவற்றை கேட்கும் சமயத்தில் ரசிப்பதுண்டு. இப்போதோ ரசிப்பதற்காகவே கேட்கிறேன். சதீஷ் கண்ணன் என்ற ஒரு நண்பரைப் பற்றி இங்கே நான் குறிப்பிடுவது அவசியம் என்று உணர்கிறேன். அவர் ஒரு கூரியர் சர்விஸ் நடத்திக் கொண்டிருந்தார். நான் மாதம் ஒரு முறையேனும் அவர் அலுவலகம் செல்வதுண்டு. அவ்வாறு சென்ற பொழுதுகள் எல்லாமே அவர் அறையில் பழைய பாடல்கள் வெகு சத்தமாக ஒலித்துக்கொண்டிருப்பதை கேட்டிருக்கிறேன். இதில் வியப்பு என்னவென்றால் அவர் ஒரு இளைஞர். இருபதுகளின் இறுதியில் இருந்தவர்.நீண்ட நாட்களுக்குப் பிறகு கடைசி முறையாக அங்கே சென்றிருந்தபோது வழக்கம்போலவே  டி எம் எஸ் "பனியில்லாத மார்கழியா" என்று காதல் மொழி இசைத்துக்கொண்டிருந்தார். நண்பரோ என்னை சற்று காத்திருக்கச் சொல்லிவிட்டு எதோ விண்ணப்பங்களை பூர்த்தி செய்துகொண்டிருந்தார். பாடல் ஓய்ந்தது. "கேள்வி பிறந்தது அன்று"  என்று அடுத்த பாடல் துவங்க, என்னிடமிருந்தும் ஒரு கேள்வி பிறந்தது; '" உங்களுக்கு பழைய பாடல்கள் என்றால் ரொம்பவும் பிடிக்குமோ?" என்று அவரைக் கேட்டேன். இதற்கு என்னவிதமான பதிலை ஒருவர் சொல்லியிருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என்ன விதமான பதிலை நீங்கள் தயார் செய்து வைத்திருந்தாலும்  அவர் கூறியது நான் சற்றும் எதிர்பாராதது.  நண்பர் என்னை நிமிர்ந்து பார்த்தார். அவர் முகத்தில்  உதடு பிரியாத புன்னகை ஒன்று தோன்றியது. பின்னர் இப்படி சொன்னார்: "உயிர்". அவ்வளவே. பின் மறுபடி குனிந்து எழுதுவதை தொடர்ந்தார். நான்தான் அதிர்ந்து போனேன். அவர் அறையை விட்டு வெளியே வந்த போது எனக்குள் இருந்த போலித்தனம்  உடைந்திருந்தது. அதுவரை நான் பழைய பாடல்களை மிகவும் மெல்லிய சத்ததிலேயே கேட்டுக் கொண்டிருந்தேன். அதாவது என் வயதுக்கு பழைய பாடல்களை கேட்பது பொருத்தமானதில்லை என்ற பகட்டுச் சிந்தனை என்னிடம் இருந்தது. எனக்கு விருப்பமானதை என் விருப்பபடி கேட்பதில் எனக்குத் தயக்கங்கள் இருந்தன. சதீஷ் கண்ணன் அதை ஒரே நொடியில்  ஒரே சொல்லில் நொறுக்கி விட்டார்.  இப்போது அவரை நான் சந்திக்க வேண்டிய காரணங்கள் எதுவும் இல்லை. ஆனால் நன்றி சொல்ல வேண்டிய காரணம் ஒன்று இருக்கிறது.

     

அமெரிக்க இசைக் குழுவான   ஹூட்டர்ஸ் "இசையை திருப்பிக் கொடு" என்ற மிக அருமையான பாடல் ஒன்றை  பாடியிருக்கிறார்கள். பாடலின் கருத்து கரைந்துபோன  கானத்தை உள்ளம் தாங்காத வேதனையுடன்  நோக்கும் ஒரு இசை விரும்பி தன்  துயரத்தை அற்புதமாகப் பாடியிருப்பதாக இருக்கும்.  பாடலின் வரிகள் அவர்களுக்கு  மட்டுமல்லாது நமக்கும்  ஏற்புடையதாக இருப்பது இசைக்கு எல்லைகள் கிடையாது என்பதை நமக்கு உணர்த்துகிறது.


They took the beat away, replaced it with machines
They took the words away and threw 'em on a screen
They turned the switches on and handed us the phones
They blasted out our ears with endless monotones

Can you feel it, can you feel it
From a million miles away?
Can you hear it, can you hear it
Gettin' louder every day?

Give the music back, give the music back
Give the music back before it's gone
Give the music back, give the music back
Put the music back into the song

They drove the blues away and banished Rock 'n' Roll
They cut away the heart and sacrificed the soul
They closed the disco's down and shut off MTV
They locked the music up and threw away the key

And now a silence fills the rooms where once we sang
And all is quiet where the chimes of freedom rang
Somewhere a pirate ship is crashing through the waves
Sending a signal out, a ballad to the brave

Give the music back, give the music back
Give the music back before it's gone
Give the music back, give the music back
Put the music back where it belongs

Give the music back
(Oh, give it back)
Give the music back
(Oh, give it back)

Give the music back before it's gone
Give the music back, give the music back
Put the music back into the song
Before it's gone

 -"Give The Music Back' by Hooters from the album "Zig Zag" released in 1989.


     நல்ல இசையின் மீது  காதல் கொண்டிருப்பவர்கள் ஒரு விதத்தில் இசைத் தீவிரவாதிகள் என்று எண்ணத் தோன்றுகிறது. அவர்கள் விரும்பும் நறுமணம் பாடல்களில் சற்று குறைந்தால்கூட  அவர்கள் அதை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் சில சமரசங்கள் செய்துகொள்வது  நமது இசை ரசனையை கூர்மையாக்குகிறது என்பது என் எண்ணம்.  அவ்வாறில்லாவிட்டால் நாம் கண்டிப்பாக விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையை விட்டு வெளியே வரவே இயலாது.  அவ்வாறு வெளி வரவேண்டிய நிர்பந்தம் ஒன்றே நல்லிசையை நாம் புரிந்துகொள்ள உதவுகிறது. ஏனென்றால் தாகம் என்பதே தண்ணீரின் தேவையை நமக்கு உணர்த்துகிறது. தகிக்கும் வெப்பமே நம்மை நிழல் தேடி நகர வைக்கிறது. அதே நேரத்தில் நல்ல இசை என்ற மையப்புள்ளியை விட்டுவிடாலோ எல்லாவிதமான விரசங்களையும் இரைச்சல்களையும் நாம் வரவேற்கத்  தயாராகிவிட்டோம் என்று அர்த்தமாகிறது. இருந்தும் ஒரு குறிப்பிட்ட காலத்தை தாண்டி நாம் நமக்குப் பிடித்த இசையுடனே வாழ விரும்புகிறோம் அது எவ்வளவு பழையதாக இருந்தாலும். அப்போது சமரசங்களுக்கு கண்டிப்பாக இடமில்லை. Let it all be  music, precisely My music.



அடுத்து: இசை விரும்பிகள் XIV --- பகல் விண்மீன்கள்.

         

51 comments:

  1. வாங்க காரிகன்

    மறுபடியும் சந்திக்கின்றோம் ! இந்தப் பதிவு அழகான எழுத்து நடையோடு நன்றாகத்தான் எழுதி இருக்கிறீர்கள் . புதிய இசை அமைப்பாளர்கள் யாருமே சோபிக்கவில்லை என்ற உண்மையை தெளிவாகவே சொல்லி இருக்கிறீர்கள் . அதையெல்லாம் நானும் ஏற்றுக் கொள்பவன்தான் !

    ஆனால் இளையராஜா காலத்திலேயே தமிழ்த் திரை இசை சீரழிய ஆரம்பித்து விட்டதாக நீங்கள் சுட்டிக் காட்டுவது தவறு என்று நினைக்கிறேன். யாரும் தொடாத அல்லது தொடத் தயங்குகின்ற ராகங்களிலும் தாளங்களிலும் பாடல்களை படைத்தவர் அவர் ஒருவரே இந்த உண்மையை மட்டும் ஏற்க மறுக்கிறீர்கள் . அது ஏன்?

    ReplyDelete
  2. நீண்ட அருமையான பதிவு. நன்றான அலசல். வாழ்த்துக்கள் காரிகன். அது சரி, எம் எஸ் வி, இளையராஜா, ரஹ்மான் படங்கள் லார்ஜ் மீடியம் ஸ்மால் என்று இருப்பதின் பின்னே எதுவும் பின் நவீனத்துவ குறியீடு இல்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. //மூச்சடைய வைக்கின்றன// மூர்ச்சையடைய என்றுதானே இருக்க வேண்டும், இல்லை எனக்கு இந்த வரி புரியவில்லையா ?

    // துணி மீது வரையப்பட்ட அழகான ஓவியம் போல இருந்தது.// உங்கள் பதிவு முழுவதும் கையாளப்படும் உவமைகளில் இது உச்சம் :-)

    // அதற்குள் என் தலைக்கு மேல் வேலை வந்து விட்டதால் // ஹா ஹா ஹா... தலைக்கு மேல் வேலையை பார்த்துக் கொண்டே கேட்கலாம் இல்லையா :-)

    சற்றே நீண்ட பதிவு என்றாலும் அருமையான பதிவு காரிகன்

    ReplyDelete
  4. "மேலும் ஆபாசக் கூத்தான ஒரு கருமாந்திரப் பாடல் வெற்றி பெற்று விட்டால் அந்த ஆபாசம் தொடர்ந்து செய்யப்படும் அபத்தமும், சமூக நெறியின்மையும், கீழ்த்தரமான வக்கிர புத்தியும்,மலிவான வணிக நோக்கமும் நம் இனிமையான கானங்களை மீண்டு வரமுடியாத குழிக்குள் இன்னும் ஆழமாக புதைத்துக்கொண்டே இருக்கின்றன. வேர்களற்ற இசையையும், சுவையில்லாத பாடல்களும் நம்மை திடுக்கிட வைக்கின்றன."- காரிகன்.

    மிகச் சரியான கருத்து காரிகன் அவர்களே, இந்த ஒரு கருத்துக்காகவே நான் உங்களைப் பாராட்டுகிறேன். உங்களைப் போல இணையத்தில் எழுதும் பதிவர்களை நான் படித்ததில்லை. Hats off to you.

    ReplyDelete
  5. சால்ஸ்,
    வருகைக்கு நன்றி. பாராட்டுக்கும் நன்றி. இன்றைய இசையைப் பற்றி இன்னும் காட்டமாக எழுதக் கூடிய அளவுக்கு எனக்கு கோபம் உண்டு. இருந்தும் அடக்கியே வாசித்திருக்கிறேன் சில காரணங்களுக்காக. இளையராஜாவின் மேதமையைப் பற்றி நீங்கள் சொல்வது ஒன்றும் புதிதல்ல. சிறப்பான பாடல்களை யார் கொடுத்தாலும் ரசிப்பதே என் பாணி. அதில் இளையராஜாவும் உண்டு. அதைத் தாண்டி அவரை உயர்த்திப் பிடிப்பது என் பழக்கம் இல்லை.

    ReplyDelete
  6. திரு அனானி,
    நன்றி. நீங்கள் குறிப்பிட்ட பின்னர்தான் நானே அந்த வடிவத்தை கவனித்தேன். கண்டிப்பாக பின் நவீனத்துவ குறியீடு எதுவும் இல்லை. அப்படி இருந்தாலும் அது சரியானதே என்று தோன்றுகிறது.இசை அமைப்பிலும், இன்னிசையிலும், நல்ல பாடல்களிலும் அவர்கள் வந்த காலங்களிலும் எம் எஸ் வி, இளையராஜா, ரஹ்மான் என்ற வரிசையே பொருத்தமானது. காலமே இதை தீர்மானித்துவிட்டதாகவே நினைக்கிறேன்.

    ReplyDelete
  7. திரு சீனு,
    வருகைக்கு நன்றி. மனம் திறந்த உங்களின் பாராட்டு குறித்து மகிழ்ச்சி. என் எழுத்து வேறு பாணியைக் கொண்டது. ஆனால் இசை பற்றிப் பேசும்போது சில சம்பிரதாயங்களை எழுத்தில் கொண்டுவர வேண்டி இருக்கிறது.இல்லாவிட்டால் அதன் தீவிரம் படிபவர்களுக்குப் போய்ச்சேராது. எனவேதான் உவமைகள். நீங்கள் சொன்னபடி மூர்ச்சடைய என்பதே சரி. ஆனால் இரண்டுக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை.

    ReplyDelete
  8. அட அட. கை குடுங்க காரிகன். சம்மட்டி அடி போல சரியான சூட்டை கிளப்பும் கட்டுரையை எழுதியிருக்கீங்க.ரகுமானை குட்டியும் பாராட்டியும் சரியாக எழுதியது உண்மையிலேயே சிறப்பு. நீங்க சொல்றது சரிதான். இப்ப எங்க மனசுல நிக்கிற பாட்டு வருது? ஒரு தடவ கேக்கறதுக்கே பொறும இல்ல.

    ReplyDelete
  9. இந்தக் கட்டுரையை மட்டும் தனியாகப் பாராட்டினால் மற்ற கட்டுரைகள் என்னாவது என்ற கேள்வி வரும். பிரமாதமான கட்டுரைகள் வரிசையில் வந்துள்ள மிக மிக நல்ல கட்டுரை. ஆனால் மற்ற கட்டுரைகளுக்கு அதுபாட்டுக்குத் தலைப்பிற்கு ஏற்றமாதிரி எழுதிக்கொண்டே போகலாம். ஆனால், 'மறைந்த கானம்' என்று தலைப்பு கொடுத்துவிட்டு அந்தத் தலைப்பின் கீழ் எழுதுவதற்கு மிகுந்த சாமர்த்தியம் தேவை. கத்திமேல் நடப்பது போன்ற சாகசம் தேவை. இதனை சரியாகவும் எவ்வித பாகுபாடும் இன்றியும் சொல்லும் நேர்மை தேவை. இது அத்தனையும் கொண்ட ஆற்றல் உங்களிடம் உள்ளது. ஆகவே மீண்டும் கூறுகிறேன்- மிக அற்புதமான பதிவு.

    எத்தனை மணி மணியான கருத்துக்கள் வந்து விழுந்திருக்கின்றன பாருங்கள்.....

    \\எத்தனை வகையான சுவையான பாடல்களை பொக்கிஷ அனுபவங்களாக நாம் பெற்றிருக்கிறோம் தமிழ்த்திரையின் மூலம்!\\

    \\சற்று திரும்பிப் பார்க்கும் போது நாம் கடந்து வந்த இசைச் சாலையில் என்னென்ன இனிமையான பாடல்கள் நம்மை அரவணைத்து வந்திருக்கின்றன என்ற வியப்பு ஏற்படுகிறது.\\

    \\நம் இசையின் முன்னோடிகள் மிகுந்த சிரமத்திற்கிடையே கடினமான சாலைகளில் இசையை வழிநடத்திச் சென்று இன்றைக்கு பெரிய அளவில் பேசப்படும் பல இசை அமைப்பளர்களின் சுலபமான பயணத்திற்கு பாதை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.\\

    \\(அதாவது 50 களிலிருந்து அறுபதுகளின் இறுதி வரை ஏறக்குறைய இருபது வருடங்கள்) வெளிவந்த பாடல்கள் பெரும்பாலும் சாகாவரம் பெற்றவைகளாக இருப்பதின் பின்னே காணப்படும் மர்மம் என்ன என்று ஆராய்ந்தால்\\

    இந்த ஆராய்ச்சிக்குத்தான் வரமறுத்து ஓடி ஒளிகிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள். கூவிவிட்டு ஓடிவிடுவதும், சொல்லவந்த எந்தக் கருத்திற்கும் பதிலளிக்காமல் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பதும், அல்லது ஏதாவது ஒரு ஒற்றை வரியைப் பிடித்துக்கொண்டு அந்த வரியிலிருந்து மொத்த விஷயத்தையே வேறு திசைக்கு எடுத்துப் போவதுமாய் அவர்களின் பரிதாப ஜாலங்கள் சாயம்போய்க்கொண்டு இருக்கின்றன.
    மிக விரிவாக எல்லாவற்றையும் பற்றி அலசியிருக்கிறீர்கள் காரிகன், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. \\இளையராஜாவை நமது பாரம்பரிய இசை மரபின் பாதுகாவலானகவும் ரஹ்மானை அதை அழிக்கவந்த தீய சக்தியாகவும் உருவகப்படுத்திக் கொள்கிறார்கள்.\\
    இளையராஜாவை நமது பாரம்பரிய இசை மரபின் பாதுகாவலனாகச் சொல்லிவிட்டுப் போகிறார்கள் என்றால்தான் நமக்கு வேலை இருக்காதே. இசையின் கடவுளே இவர்தான் என்றுதானே சொல்கிறார்கள். இவருக்கு முன்பு இசையோ திரைப்பாடல்களோ இருந்ததில்லை என்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதையே அல்லவா வெவ்வேறு தொனிகளில் பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.....
    நீங்கள் சொல்லியிருக்கும் சோகம், பரிவு, பாசம், பிரிவு,தாலாட்டு போன்ற அடிப்படையான மனிதம் சார்ந்த உணர்வுகளையெல்லாம் இசையில் கொண்டுவந்த கடைசி இசையமைப்பாளர் எம்எஸ்விதான். அதன்பிறகு இளையராஜாவின் காலத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக ஏதோ ஒரு சில பாடல்கள் வந்திருக்கின்றன. ஆனால் அவை எதுவும் பழைய பாடல்களுக்கு இணையாகிவிட முடியாது. எல்லா மனித உணர்வுகளுக்கும், ஒவ்வொரு பிரிவுகளிலும் எண்ணற்ற பாடல்களைத் தந்தவர்கள் எம்எஸ்வியும் கண்ணதாசனும்தாம்.
    நீங்கள் சொல்லியிருக்கும், விஸ்வநாதன்- ராமமூர்த்திக்கு இணை தனியான விஸ்வநாதன்கூடக் கிடையாது என்ற கருத்துக்கொண்ட கூட்டமே நிறைய இருக்கிறது. அவர்கள் இருவருடைய கருத்தும்கூட இதுதான். வெளிப்படையாக அதனை எம்எஸ்வி சொல்லியிருக்கிறாரா தெரியாது. ஆனால் தனிப்பட்டவர்களுடனான சந்திப்புகளில் சொல்லியிருப்பதாகச் சொல்வார்கள்.
    நிறைவாக மிகச்சரியான முத்தாய்ப்பு வைத்திருக்கிறீர்கள். அந்த ஆங்கிலப் பாடல் மூலம். Give the music back என்ற கதறல் இங்கேயும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது பலருடைய மனங்களில் நிசப்தங்களாக!

    ReplyDelete
  11. அரவிந்த்,
    நன்றி. என்னை விட அதிக நுணுக்கங்களுடன் பலர் இணையத்தில் எழுதிகொண்டிருக்கிறார்கள் உதாரணத்திற்கு திரு சவுந்தரின் படைப்புக்களை படியுங்கள். என் எழுத்து கொஞ்சமேனும் சிலரை சென்றடைந்தால் மகிழ்ச்சியே. மீண்டும் வருக.

    ReplyDelete
  12. கிருபாகர்,
    வருகைக்கு நன்றி. யாரையும் அளவுக்கதிகமாகப் புகழ்வதோ இகழ்வதோ சில உண்மைகளை மூடி மறைத்துவிடும் என்ற எண்ணம் எனக்குண்டு. இளையராஜாவைப் போலவே ரஹ்மானும் பாராட்டப்படவேண்டியவர் மேலும் அவரைப் போலவே குற்றம் சாட்டப் படவேண்டியவர். இதில் எந்த முரணும் இல்லை. சிலர் என்னை எப்போதுமே இளையராஜாவை மட்டுமே குறை சொல்வதாக தவறாக எண்ணிக்கொள்வது வழக்கம்.

    ReplyDelete
  13. அமுதவன் அவர்களே,
    உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் மறைந்த கானம் என்ற தலைப்பிற்கு ஏற்றபடி எழுதுவது சிரமமாகத்தான் இருந்தது. அதை நீங்கள் மிகச் சரியாக கணித்தது கண்டு எனக்கு வியப்பேற்ப்பட்டது. இன்றைய இசையை முற்றிலும் தாக்கி எழுதுவது சரியான அணுகுமுறையாக இருக்காது என்று தோன்றியதால், நம்மிடம் இருந்த இனிமையான கானங்கள் என்னவாயின என்ற கேள்விக்கு விடை தேடும் படலமாக இந்தப் பதிவை திசை திருப்பிக்கொண்டேன். அதற்குக் காரணம் ஒரு முறை வெண்ணிற ஆடை படத்தின் பாடல்களை ரம்மியமாக கேட்டுக்கொண்டிருந்தபோது உதித்த சிந்தனையின் நீட்சியே. ஏன் சில பாடல்கள் மட்டும் அதுவும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சிறப்பாக இருந்தன என என்னையே கேட்டுக்கொண்டதன் விளைவே "மறைந்த கானம்".

    எம் எஸ் வி- டி கே ஆர் இசைக்கு இணையான இசை தமிழ்த் திரையில் என்றைக்கும் வரப்போவதில்லை. இது இளையராஜாவை ஆராதிக்கும் பலருக்கும் "ராஜா தன் குருக்களை மிஞ்சியவர்"என்று வெற்றுப் பேச்சு பேசும் சில அதி மேதாவி பதிவர்களுக்கும் தெரியும். நானும் கூட இளையராஜாவின் பாடல்கள் வானொலில் ஒலிக்கும் காலத்தில் வளர்ந்தவன்தான் . இவர்களின் நியாயப்படி எனக்கு இளையராஜாவின் இசையே பிடித்திருக்க வேண்டும்.இருந்தும் என் காலத்திற்கு முன்னே இருந்த இனிமையை இனம் கண்டு கொள்ளும் ரசனையையும் இசை முதிர்ச்சியையும் படிப்படியாகப் பெற்றேன். இதுவே உண்மையான இசைத் தேடல் என்று உணர்கிறேன்.

    பழைய இசை அமைப்பாளர்களின் இசையைப் பற்றி எழுதினால் உடனே இவர் அந்த காலத்து ஆள் என்று முத்திரை குத்தும் ஆயத்த மனோபாவம் பலருக்கு இருக்கிறது. ஆனால் உண்மையில் பல இளைய தலைமுறையினர் 60 களின் பாடல்களை விரும்புகிறார்கள். .............

    ReplyDelete
  14. வாழ்வின் எல்லா சந்தர்ப்பங்களுக்கும் ஏதுவான கானங்களை உருவாக்கியவர்கள் எம் எஸ் வி- டி கே ஆர். இளையராஜாவிடம் பெரும்பான்மை காதலும், ஏகத்துக்கு விரசமும் காமமும், கொஞ்சம் அம்மாவும், இன்னும் கொஞ்சம் தாலாட்டும், நிறைய வக்கிரமான கிண்டலும், பின்னர் எதிலும் சேர்த்துக்கொள்ள முடியாத சங்கடங்களும் தலைவலிகளும் தான் உண்டு. அதையும் ஆஹா ஓஹோ என்று புகழ சில இசைச் சூனியங்கள் இங்கே சுற்றிக்கொண்டிருக்கின்றன. கோழிக் கூட்டங்கள் புழுக்களை உண்கின்றன. சில பறவைகளோ தேனை சுவைக்கின்றன.

    ReplyDelete
  15. இளையராஜாவின் கடலோரம் பாடலை ரசித்ததாக எழுதி உள்ளீர்கள். அதன் பின் அவரை பாராட்ட மனம் வரவில்லையா?ஏன் இத்தனை கோபம்?

    ReplyDelete
  16. அனானிக்கு,
    இந்தக் கேள்வி வரும் என்று தெரியும். இன்றைய இசை என்னும் கூச்சல்களுக்கு மத்தியில் இளையராஜாவின் சில பாடல்கள் எவ்வளவோ தேவலை என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை. இளையராஜா இசை ஞானம் இல்லாதவர், அவருக்கு இசையைப் பற்றி ஒன்றுமே தெரியாது, அவர் அமைத்த பாடல்கள்லெல்லாம் மோசம் என்று நான் எங்காவது எழுதியிருப்பின் அதை சுட்டிக்காட்டவும். மேலும் நான் சொல்லியிருப்பதில் உண்மை இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
    கோபம் ஏன் என்றால் அவரும் மற்றவர்களைப் போல ஒரு இசை அமைப்பாளர் என்பதோடு இல்லாமல் அவரை விமர்சனங்களுக்கு அப்பாற்ப்பட்டு தூக்கி வைக்கும் ஒரு கூட்டத்தின் பக்குவமில்லாத போக்கினால்தான்.இவரை மிஞ்ச ஆளில்லை, இந்தப் பிரபஞ்சத்தின் ஒரே இசை அமைப்பாளர் இவர்தான் என்று முதிர்ச்சியில்லாமல் வீண் பகட்டுப் புகழ் பாடும் சிலரின் எழுத்தே இதற்குக் காரணம். இளையராஜாவை ஓரம் கட்டிய பாடல்கள் நம் தமிழ்த் திரையில் ஏகத்துக்கு உண்டு. இளையராஜாவும் தன் பங்குக்கு நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கிறார். அவ்வளவே.

    ReplyDelete
  17. Great post. Wonderful way of writing. Thoroughly enjoyed reading.Keep it up buddy.

    ReplyDelete
  18. ஹலோ காரிகன்

    சோகம், பரிவு, பாசம், பிரிவு , தாலாட்டு போன்ற மனிதம் சார்ந்த உணர்வுகளை பாடல்களில் கடைசியாக கொடுத்தவர் எம். எஸ். வி மட்டுமே என்று ஒரு பொய்யை உண்மை போல் பகிர்ந்திருக்கும் அமுதவன் அவர்களும் , இளையராஜாவிடம் பெரும்பான்மை காதலும், ஏகத்துக்கு விரசமும் காமமும், கொஞ்சம் அம்மாவும், இன்னும் கொஞ்சம் தாலாட்டும், நிறைய வக்கிரமான கிண்டலும், பின்னர் எதிலும் சேர்த்துக்கொள்ள முடியாத சங்கடங்களும் தலைவலிகளும் தான் உண்டு என்று நீங்கள் அரங்கேற்றி இருக்கும் அபத்தமும் ஒரே மாதிரியான சிந்தனைகளை உள்ளடக்கியிருக்கின்றன .

    நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்வதும் இசை மேதமைகளாக காட்டிக் கொள்வதும் அலுத்துப் போன விசயங்கள்தான்!

    தனது முன்னோர்கள் அமைத்தப் பாதையையும் மாற்றாமல் புதிய பாணிகளையும் புகுத்தியதோடு அவர்கள் கொடுத்த மனித உணர்வு சார்ந்த அதே வகை பாடல்களையும் அழகுற கொடுத்தவர் இளையராஜா .

    ' சொந்தமில்லை பந்தமில்லை ' - சோகம்
    ' இதயம் போகுதே ' - பிரிவு
    ' பிள்ளை நிலா ' - பாசம்
    ' ராசாவே உன்னை நம்பி ' - பரிவு
    ' கண்ணே கலைமானே ' - தாலாட்டு

    மேற்சொன்ன பாடல்கள் எல்லாம் மிக குறைவான உதாரணங்கள். இன்னும் மனித உணர்வுகளை வெளிபடுத்தக்கூடிய அற்புத பாடல்கள் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம் . தனது முன்னோடிகள் வெளிப்படுத்தாத உணர்வுகளைக் கூட இளையராஜா பாடல்களில் சுவைபட கொடுத்திருக்கிறார் . 'சோல பசுங்கிளியே ' என்று ஒப்பாரிப் பாடல் கூட கொடுத்திருக்கிறார் . வேறு இசை அமைப்பாளர் அப்படி ஒரு பாடல் கொடுத்ததாக சுட்டிக் காட்ட முடியாது .

    எப்போதும் உங்களுக்கு ஒரே சிந்தனை - இளையராஜா வக்கிரப் பாடல்கள்தான் அதிகம் இசை அமைத்திருக்கிறார் என்று!
    ஒன்று புரிகிறது. நீங்கள் அறுபது முதல் எழுபது கால கட்டத்தில் நின்று கொண்டே இருக்கிறீர்கள். இன்னும் பத்து வருடங்கள் கழித்துதான் இளையராஜாவின் பாடல்களில் உள்ள மகிமையை உணர ஆரம்பிப்பீர்கள் . பத்து வருடம் கழித்துதான் உணர்வுக்கே வருவீர்கள்.





    ReplyDelete
  19. சார்லஸ்,
    அப்படியே இந்த லிஸ்டையும் சேர்த்துக்கொள்ளவும்.
    ஓரம்போ- சில்லுவண்டுகளின் கீதம்.
    வாடி எ கப்பக்கிழங்கே- விடலைத் துள்ளல்.
    பொன்மேனி உருகுதே- விரக தாபம்
    நிலா காயுது- புணர்ச்சி
    ஊரோமா ஆத்துப்பக்கம் - குருவிகளின் இச்சை
    கை வலிக்குது மாமா- செல்லச் சீண்டல்;
    இப்படி இன்னும் எத்தனை உணர்சிகளுக்கு பாடல் கொடுத்திருக்கிறார் ராஜா. விட்டு விட்டீர்களே.

    ReplyDelete
  20. சார்லசுக்கு,
    தேவையா இது? பதிவின் நோக்கமே இன்றைய இசையை துவைத்துப் போடும் படி இருக்கும்போது தேவையில்லாமல் இளையராஜாவை பற்றி ஏன் இந்த வீண் பேச்சு?

    ReplyDelete
  21. ஹலோ பரத்

    நான் உணர்ச்சி பற்றி பேசினால் நீங்கள் புணர்ச்சி பற்றி சிந்திக்கிறீர்கள் . சந்தோசமே !

    இச்சை , விரகம் , புணர்ச்சி இல்லாத வாழ்க்கை நீங்கள் வாழ்வதாக சொன்னால் அது பொய். இல்லையா? ஆக அந்த வித உணர்வுகளுக்கும் தீனி சினிமாவில் தேவைப்படுகிறது . அந்த தீனியையும் பாங்குற படைத்தவர் இளையராஜா . அதில் குறையும் இல்லை. எல்லா இசை அமைப்பாளர்களும் செய்ததைத்தான் அவரும் செய்தார் .

    ஊரோரமா என்ற பாடல் குருவிகளின் இச்சையா..? புது வித உணர்வாக இருக்கிறதே! அது கல்லூரி மாணவர்களின் ஆர்ப்பரிப்பு குதூகலம் . இச்சை பிச்சை என்று எதுவுமில்லை . அது காரிகனின் கண்டுபிடிப்பு . உங்களின் எதிரொலிப்பு !

    ReplyDelete
  22. ஹலோ அனானிமஸ்

    காரிகனின் எல்லா பதிவுகளையும் படித்துப் பார்த்து விட்டு பேசுங்கள் . நிறைய சித்து விளையாட்டு விளையாடுவார் - இளையராஜா என வரும்போது ! கானம் மறையாது . அவரின் ரசனைக்கு ஏற்ற பாடல்கள் வரவில்லை என்று வேண்டுமானால் அவர் சொல்லிக் கொண்டு போகட்டும் . இப்ப உள்ள பசங்க இந்த காலத்து பாடல்களை
    ரசிக்கிறார்கள் .மனப்பாடமாய் பாடுகிறார்கள் . கானம் மறைந்துவிட்டது என்பது பதிவின் நோக்கமானால் அது தவறான பதிவே!

    காற்றடிக்கும் திசையில் இசை நகர ஆரம்பித்து விட்டது . நாம்தான் நங்கூரமிட்டுக் கொள்கிறோம் .

    ReplyDelete
  23. காற்றடிக்கும் திசையில் இசை நகர ஆரம்பித்து விட்டது . நாம்தான் நங்கூரமிட்டுக் கொள்கிறோம்.. well said..

    ReplyDelete
  24. வாருங்கள் பரத் மற்றும் அனானி,
    சால்ஸ் என்பவர் ஒரு இளையராஜா பக்தர். அவரிடமிருந்து என்ன விதமான வார்த்தைகள் வந்து விழும் என்பது தெரிந்ததே. நான் எதை எழுதினாலும் அதிலிருந்து நூல் பிடித்து அவர் இளையராஜாவிடம் போய்சேர்ந்து விடுவார். அதன் பின் கவிதைத்தனமாக கதகளி ஆடுவார். பரத் நீங்கள் கொடுத்துள்ள இளையராஜா பாடல்கள் தொகுப்பு அபாரம். ரசித்தேன்.

    ReplyDelete
  25. சால்ஸ்,
    என் பதிவின் நோக்கம் தவறு என்று நீங்கள் கருத்துகொள்வது உங்கள் விருப்பம். ஆனால் அதற்கு நீங்கள் கூறும் காரணம்தான் பொருந்தவில்லை. இன்றைய சிறுவர்கள் இந்த காலத்துப் பாடல்களை ரசிக்கிறார்கள், மனப்பாடமாக பாடுகிறார்கள். எனவே இன்னும் கானம் இருக்கிறது என்று சொல்வது எவ்வளவு அபத்தமானது! அந்தந்த காலத்து இசையை அந்த காலத்தைச் சேர்ந்தவர்கள் ரசிப்பது எல்லா காலத்திலும் இயல்பாக நடக்கக்கூடிய நிகழ்வே. இதை அளவுகோலாக வைத்துக்கொண்டு ஒரு பெரிய வரைபடத்தை வரைவது முட்டாள்தனம். எது சிறப்பானது என்பதே இங்கு கேள்வி. அங்கொன்றும் இங்கொன்றுமாக மாலை நேரத்து நட்சத்திரங்கள் போல் ஒளிரும் சில பாடல்கள் எந்தவிதத்திலும் உங்கள் கருத்தை உண்மையாக்காது.

    "காற்றடிக்கும் திசையில் இசை நகர ஆரம்பித்து விட்டது . நாம்தான் நங்கூரமிட்டுக் கொள்கிறோம் ."

    மிகவும் அழகான வரிகள். ஆனால் நாம் ஏன் அப்படி நங்கூரமிட்டுக் கொள்கிறோம் என்பதற்கு நம்மிடம் நிறைய காரணங்கள் இருக்கின்றன. அவை உங்களுக்கும் பொருந்தும்.இல்லாவிட்டால் நீங்களும் இளையராஜாவையே பிடித்துக்கொண்டிருக்க மாட்டீர்கள். இல்லையா? சற்று எந்தவிதமான வண்ணங்களையும் உங்கள் மீது பூசிக்கொள்ளாமல் இருந்தால் சில உண்மைகளை நீங்கள் உணரலாம்.

    ReplyDelete
  26. நல்ல பண்பட்ட இசையை தேடிச் செல்லும் உள்ளங்களின் குமுறலாக இந்தக் கட்டுரை இருக்கிறது. இன்று வரும் இசையில் நாம் கேட்பதெல்லாம் நீங்கள் சொல்லும் கருமாந்திரங்கள்தான். சரியான அவதானிப்பு. நீளம் என்று சிலர் நீட்டி முழக்கினாலும் மனதில் சுலபத்தில் ஒட்டிக்கொள்ளும் விதத்தில் வர்ணனைகளோடு சிறப்பாக எழுதி வருகிறீர்கள். இசை என்றாலே இவர்தான் என்ற ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனையை தகர்ப்பதாக இருக்கிறது உங்கள் கட்டுரைகள். வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு
    s. அமிர்தராஜ்.

    ReplyDelete
  27. பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை என்பது உண்மையே. அதற்காக எல்லோரும் பழைய பாடல்களையே கேட்டுகொண்டிருக்க முடியுமா காரிகன் அவர்களே? என்ன சொல்ல வருகிறீர்கள்? உங்களைப் போல எல்லோரும் இருக்கவேண்டும் என்று நீங்கள் எப்படி நினைக்க முடியும்?

    ReplyDelete
  28. அமிர்தராஜ்,
    வருகைக்கும் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி. இசை என்றால் இவர் என்று ஒருவரை நோக்கி சுட்டுவிரல் நீட்டும் மனமுதிர்ச்சியற்ற அணுகுமுறை பலரிடம் இருக்கிறது. உண்மை என்னவெனில் அவ்வாறு சுட்டிக்காட்டப்படும் ஆட்களையும் தாண்டி இசை வாழ்ந்துகொண்டிருக்கிறது. சரியாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  29. அனானிக்கு,
    பள்ளிக்கூட சீருடை போல எல்லோரும் ஒரேவிதமான இசையை கேட்க ஆரம்பித்துவிட்டால் அது தேசிய கீதம் போல மாறிவிடாதா? நான் என் ரசனையை மற்றவர்களிடத்தில் திணிப்பதாக நீங்கள் குற்றம் சாட்டுவது என் எழுத்தை நீங்கள் அதன் நேர்கோட்டில் பார்க்கவில்லை என்பதை காட்டுகிறது. பள்ளிகூட சிறுவர்கள் "என் அருகே நீ இருந்தால்" பாடலை தங்கள் ஸ்மார்ட் போனில் கேட்கும் அபத்தத்தை நீங்கள் என் மீது சுமத்துகிறீர்கள். அவரவர் காலதைச் சேர்ந்த பாடல்களை அந்தந்த தலைமுறையினர் கேட்பதே இயல்பானது. ஆனால் அதுவே சிறந்த இசை ரசனை ஆகிவிடாது. சிறிது மனமுதிர்ச்சி அடைந்ததும் சற்று பின்னோக்கிச் செல்வதும் அவசியம் என்பதே எனது கருத்து.பழைய பாடல் என்ற ஒரே காரணத்தினால் எத்தனை வைரங்களை அவர்கள் இழக்கிறார்கள் என்பது வேதனைக்குரியது. டைட்டானிக் படத்தில் ஜாக் ரோஸ்ஸிடம் கேட்கும் " You want to see the real party?" என்பதைத்தான் நான் கேட்கிறேன். அதை உணர்வதும் உதறுவதும் அவரவர் விருப்பம்.

    ReplyDelete
  30. "நான் இவைகளை பாடல்களாகவே மதிப்பதில்லை." என்றவர், "நீங்கள் பழைய பாடல்கள் கேட்பதுண்டா?"என்று என்னைக் கேட்டார்."உண்டு. இதுவே பழைய பாடல்தானே?" என்றேன் அவரை சீண்டும் விதத்தில். அவர் முகம் சற்று உறைந்தது. பின்னர்,"பழைய பாடல்கள் என்றால் கருப்பு வெள்ளைப் படப் பாடல்கள்." என்று தீர்மானமாகச் சொன்னார்.

    திரு காரிகன்,
    நீங்கள் சந்தித்த அந்த நபர் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். நானும் இப்படி எண்ணுபவன்தான். என் நண்பர் என் சிபாரிசின் பெயரில் சில பழைய பாடல்களைக் கேட்டுவிட்டு "அடடா இத்தனை காலம் இது தெரியாம போச்சேப்பா!" என்று பிரமிக்கிறார். சிலர் இசையைப் பற்றி எழுதும் பொழுது ஒரே மாதிரியாக stereo type ஆக எழுதுவார்கள். உங்கள் கட்டுரைகளில் இடைஇடையே அருமையான காலத்தை வென்ற பழைய பாடல்களைப் பற்றிய குறிப்புகளை எழுதி வருவது உண்மையிலயே மிக அருமை. அதிலும் பழையது புதியது என்ற ஒப்பீடு செய்ய நீங்கள் கொடுக்கும் பாடல் வரிசை சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். இணையத்தில் நிறைய பதிவர்கள் இப்படி எழுதுவதில்லை.

    ReplyDelete
  31. அழகப்பன்,
    வருகைக்கும் தங்களின் மனம் திறந்த பாராட்டுக்கும் நன்றி. பழைய பாடல்களை வெறும் பாடல்களாக யாரும் பார்ப்பதில்லை. அவைகளை தங்கள் வாழ்கையின் ஒரு பகுதியாகவே மக்கள் நினைப்பதே அதன் சிறப்பு. Generally old songs are considered "family".

    ReplyDelete
  32. www.nakkheeran.in-ல் சினிமா பகுதியில் 'இளையராஜா பற்றிய விமர்சனம்- சாருவுக்கு பதிலடி' என்ற பெயரில் same old கதைகள் same old pattern-ல் ஓடிக்கொண்டிருப்பதை நேரம் கிடைத்தால் பாருங்கள்..

    ReplyDelete
  33. அமுதவன் அவர்களே,
    படித்தேன். பதிவு கூட கொஞ்சம் ஒழுங்காகத்தான் இருக்கிறது. அதற்கு வந்திருக்கும் பின்னூட்டங்கள்தான் எரிச்சலைத் தருகின்றன-வழக்கம்போலவே. இந்த "ராஜா ராஜாதான்" என்ற படு மொக்கையான தரை டிக்கெட் கருமாந்திரத்தை என்றைக்கு இந்த ரசிக சிகாமணிகள் விட்டொழிப்பார்களோ? நானும் சாருவின் கனவுகளின் நடனம் படிக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டேயிருக்கிறேன். புத்தகம் கிடைத்தபாடில்லை. ஏதாவது லிங்க் தெரிந்தால் உதவவும்.
    இதோ தமாஷான இந்த ராஜா புராணத்தைப் படித்து கொஞ்சம் இளைப்பாறுங்கள்.
    http://www.yarl.com/forum3/index.php?showtopic=114386

    ReplyDelete
  34. Dear Kaarigan,
    Sorry I'm late to arrive. What a write up! Great is the word I choose to describe your writings. It's not only Tamil songs that have lost the soul of music but Western music,too. You have rightly pointed out the well- deserving lines from the Hooters song. I think I've heard that song. They came out with All you zombies and Johnny-B some time earlier,right? I don't much listen to new Tamil songs of late. My choice of songs is always the old as yours. Keep it up. Looking forward to your post on Rock music.

    ReplyDelete
  35. Mr. Oliver,
    Pleasure to have you on my blog. Why formalities? Apologies are uncalled for. Thanks for your regular visit. And yes, All You Zombies, Johnny-B, Satellite, Nervous Night, 500 miles are some of Hooter's best. Worth a listen. As for your comment on the change in the Western music scenario, it's because rock musicians have explored all the genres and aspects of rock and rock is done to death.So, anything new has to sound "un-rock". When we listen to Pink Floyd's "Shine On You Crazy Diamond" and any of the modern rock the difference is terribly obvious. And it's slapping on our faces. Wait for a while Mr. Oliver. Probably my next post will be on music beyond the walls.Not many will be interested to read it, though.

    ReplyDelete

  36. நான் வீழ்ந்த இசை என்ற பதிவில் நமது தமிழிசை தரம் தாழ்ந்தது இளையராஜாவினால்தான் என்று பதிவு செய்திருந்தேன். அதற்கு வந்த எதிர் வினைகள் அதிகம். அப்போது சொற்போர் புரிந்த அந்த ராஜா ரசிக சிகாமணிகள் இப்போது கீழே உள்ள லிங்கை தட்டி படிக்கவும். என்ன ஒரு இசை ஞானியப்பா உங்க ஆளு!

    http://kuttipisasu.blogspot.in/2014/02/09022014.html?showComment=1392034846590#c3526286484098056169

    ReplyDelete
  37. வணக்கம்...

    நல்லதொரு பகிர்வு...

    1-காலத்தை வென்ற இளையராஜா பாடல்கள்… - தளம் மூலம் உங்கள் தளம் வருகை... Followers ஆகி விட்டேன்... தொடர்கிறேன்...

    ReplyDelete
  38. திண்டுக்கல் தனபாலன்,
    வருகைக்கு நன்றி. நீங்களும் நல்ல பாடல்களை ரசிப்பவர் என்று அறிந்திருக்கிறேன். பொதுவாகவே நீங்கள் நீண்ட பின்னூட்டங்கள் கொடுப்பதில்லை. அதுவே உங்களின் சிறப்பு.

    ReplyDelete
  39. ஆகா காரிகன்
    ரொம்பவே அருமை எழுத்து பாணி...
    எத்துனை மெனக்கெடல்..
    நல்ல பதிவு காரிகன்..

    பாதி நாட்கள் உங்கள் தளம் அணுகமுடியாது இருகிறதே ஏன்?
    http://www.youtube.com/watch?v=T730kB-JQmY இப்போது ஒலித்துக்கொன்டுஇருக்கிறது..
    இப்படி இருக்கணும் எழுத்து என்று தோன்றவைத்த நடை...

    ReplyDelete
  40. நண்பர் மது எஸ்,
    மனம் திறந்த உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி. வஞ்சகமில்லாமல் பாராட்டுவதற்கும் ஒரு நல்ல மனம் வேண்டும். என் தளம் அனுகமுடியாததாக இருப்பதாக நீங்கள் சொல்வது எனக்குப் புதிய விஷயமாக இருக்கிறது. ஏன் அப்படி என்று தெரியவில்லை. சரி அது போகட்டும். உங்களுடன் நான் சிறிது பேசவேண்டும். என்ன காரணம் என்றால், உங்களின் கூகிள் ப்ளஸ் ஐடியை கண்ணுற்றேன். நீங்கள் புதுக்கோட்டையில் இருப்பதாக அறிந்ததும் அதுவும் டி இ எல் சி பள்ளியில் படித்தவர் என்பதும் சுகமான நினைவலைகளை என்னுள் ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால் நானும் அதே பள்ளியில் சிறிது காலம் படித்தவன். கண்டிப்பாக எந்த வருடம் நீங்கள் படித்தீர்கள் என்பதையும் இப்போது எங்கே இருக்கிறீர்கள் என்பதையும் தெரியப்படுத்துங்கள். புதுக்கோட்டையின் கீழ ராஜ வீதி, புதுக்குளம், சீரான வீதிகளின் அமைப்பு, புவனேஸ்வரி கோவில், ராணி பெண்கள் பள்ளி, பழனியப்பா, வெஸ்ட், சாந்தி தியேட்டர்கள்,மச்சுவாடி, பழைய பஸ் ஸ்டாண்ட் என பல அனுபவ அடுக்குகள் எனக்குள் உயிரோடு உலவுகின்றன. ஒருவேளை நாம் இருவரும் சந்தித்திருக்கலாம் என்றுகூட தோன்றுகிறது. ஒரே ஊர்காரர்கள் என்பதும் மிக்க மகிழ்ச்சியை தருகிறது. மீண்டும் வருக.

    ReplyDelete
  41. ரிம்போச்சே23 February 2014 at 08:58

    //ஓரம்போ- சில்லுவண்டுகளின் கீதம்.
    வாடி எ கப்பக்கிழங்கே- விடலைத் துள்ளல்.
    பொன்மேனி உருகுதே- விரக தாபம்
    நிலா காயுது- புணர்ச்சி
    ஊரோமா ஆத்துப்பக்கம் - குருவிகளின் இச்சை
    கை வலிக்குது மாமா- செல்லச் சீண்டல்;
    இப்படி இன்னும் எத்தனை உணர்சிகளுக்கு பாடல் கொடுத்திருக்கிறார் ராஜா. விட்டு விட்டீர்களே.//

    பரத்,

    அந்த உணர்வுகளைச் சரியாக ரசிகனுக்குக் கடத்தியிருப்பதில் இளையராஜாவின் வெற்றி அமைந்திருக்கிறது. அந்த உணர்வை சப்பையாகக் கொடுத்திருந்தால் பாடல் வெற்றி பெற்றிருக்காது. இந்தக் குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்காது.

    ஏன் அவ்வாறான பாடல் படத்தில் இடம்பெறவேண்டும் என்று கேட்டால் அது கதையாசிரியரையும், இயக்குநரையும், தயாரிப்பாளரையும் கேட்க வேண்டிய கேள்வி. என் பார்வையில் சினிமாவோ, அனைத்து படங்களுமோ ஒழுக்க, நீதி போதனை செய்யும் மீடியமாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

    ReplyDelete
  42. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : சீனு என்ற ஸ்ரீனிவாசன் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : திடங்கொண்டு போராடு

    வலைச்சர தள இணைப்பு : நானும் பதிவுலகமும் - 2

    ReplyDelete
  43. என்னுடைய புரிதலில், அனேகமாக,தமிழ் இசை உலகு மட்டும் இன்றி, மற்ற எல்லா மொழிகளிலுமே , இசையின் பங்கு குறைந்து , பக்க வாத்தியங்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. 1990க்குப்பின் வந்த சினிமா பாடல்களும் பின்னணி இசையின் மேலும் அதற்குத் துணை போகும் கணினியிலும் தான் இருக்கிறது.

    ஒரு பாடல் அதன் வரிகள் எழுதப்படும் நயத்தில் தான் காலூன்றி காலம் காலமாக நிற்கும் சக்தி முதற்கண் பெறுகிறது.

    எந்தரோ மானு பாவோ என்னும் தியாகராஜா க்ருதியாக இருந்தாலும் சரி,

    மலர்ந்தும் மலராத கண்ணதாசன் பாடலாகட்டும் ,

    ஆக,இலக்கியத்திற்கு ஐம்பது விழுக்காடு மதிப்பெண் கொடுத்தால்,
    அடுத்தது அதற்கான இசை இன்னொரு ஐம்பது விழுக்காடு.

    ஒரு ஆர்மோனியத்தை மட்டும் வைத்துக்கொண்டு எம். எஸ்.வி. படைத்த இசை இன்னமும் நிற்கிறது.

    ஒரு நூறு இசைக்கருவிகளுடன் படைக்கப்படும் திரைப்பாடல்கள் நெஞ்சில் நிற்பதில்லை.

    எனினும் சில எக்சப்சன்ஸ் இருக்கின்றன. மறுப்பதற்கில்லை.

    தெளிவாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    சுப்பு தாத்தா.

    பி.கு. உங்கள் வலைக்கு வந்திட வழி காட்டிய சீனு அவர்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  44. வாருங்கள் டி டி,
    தகவலுக்கு நன்றி. அங்கேயிருந்துதான் வருகிறேன். இணையத்தில் இப்படி எல்லோரிடமும் புன்முறுவலுடன் பழகும் முதல் நபர் நீங்கள்தான்.

    ReplyDelete
  45. வாருங்கள் சூரி சிவா, (அல்லது சுப்பு தாத்தா?),

    (ஒரு பாடல் அதன் வரிகள் எழுதப்படும் நயத்தில் தான் காலூன்றி காலம் காலமாக நிற்கும் சக்தி முதற்கண் பெறுகிறது.
    எந்தரோ மானு பாவோ என்னும் தியாகராஜா க்ருதியாக இருந்தாலும் சரி,
    மலர்ந்தும் மலராத கண்ணதாசன் பாடலாகட்டும் ,
    ஆக,இலக்கியத்திற்கு ஐம்பது விழுக்காடு மதிப்பெண் கொடுத்தால்,
    அடுத்தது அதற்கான இசை இன்னொரு ஐம்பது விழுக்காடு. )

    சரியான கருத்து. நான் சொல்வதும் இதுவேதான். கவிதையை புறக்கணித்துவிட்டு இசையை முன்னிறுத்தியதால் வந்த சீரழிவே தற்போதைய பாடல்கள். (எல்லாமே அல்ல.)

    (ஒரு ஆர்மோனியத்தை மட்டும் வைத்துக்கொண்டு எம். எஸ்.வி. படைத்த இசை இன்னமும் நிற்கிறது.
    ஒரு நூறு இசைக்கருவிகளுடன் படைக்கப்படும் திரைப்பாடல்கள் நெஞ்சில் நிற்பதில்லை.)

    100% உண்மை.
    தெளிவான உங்களின் கருத்துக்கு நன்றி. முடிந்தால் மற்ற பதிவுகளையும் படிக்கவும்.உங்களைப் போன்றவர்களின் விமர்சனங்கள் எனக்கு தேவைப்படுகின்றன.

    ReplyDelete
  46. அருமையான படைப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சேகர்,
      வருகைக்கு நன்றி. விரிவான பதிலை உங்களுக்கு தயாரிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். விரைவில்....

      Delete
    2. இளையராஜாவுக்கும் , அவருடைய ரசிகர்களுக்கும் விமர்சனத்தைத் தைரியமாக ஏதிர் நோக்கும் பக்குவம் இல்லை. விமர்சனத்தை உள்வாங்காத எவரும் சிறந்தவர் அல்ல.

      Delete
    3. என் கடந்த இருவது வருட ஆதங்கம் உங்கள் எழுத்தில் பார்க்கிறேன்.எனக்கு உங்களுடைய எழுத்து மன ஆறுதலைத் தருகிறது . மிக்க நன்றி

      Delete
  47. சேகர்,
    உங்களின் கருத்துக்காக உங்களைப் பாராட்டுகிறேன். என் பழைய பதிவுகளையும் படியுங்கள். குறிப்பாக வீழ்ந்த இசை என்னும் பதிவை கண்டிப்பாக படிக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கண்டிப்பாக படிக்கிறேன்

      Delete