Friday 21 August 2015

இசை விரும்பிகள் - Exclusive 2: ​ நிசப்தமான நிஜங்கள்









       கடந்த  ஐந்து வருட காலத்தில் சென்னையில் பல மாற்றங்கள் சடுதியில் சத்தமில்லாமல் நிகழ்ந்து முடிந்து விட்டன.  சுரங்க ரயில், பறக்கும் ரயில், சுழல்  பாலங்கள், நவீனமான மரீனா கடற்கரை என மாற்றம் கண்ட அனைத்தையும் குறித்து எழுதமுடியாவிட்டாலும் என்னை பாதித்தவைகளை (குறிப்பாக இப்போது இல்லாமல் போய்விட்ட இசையகங்கள்) பற்றியே சொல்கிறேன்.

    ஸ்பென்சர்ஸ் பிளாஸா ஏறக்குறைய  நடைபாதைக் கடைகளின் அடுக்குமாடி  போல மாறிவிட்டது. அங்கிருந்த மியுசிக் வேர்ல்ட் இப்போது காணவில்லை. எக்ஸ்பிரஸ் அவென்யூ, பீனிக்ஸ் மால் என்று துடிக்கும் இளமைகளின் சங்கமம் வேறு இடம் பெயர்ந்துவிட்டது. நுங்கம்பாக்கத்தில் இயங்கி வந்த லேண்ட்மார்க் எனக்குத் தெரியாத ஒரு "நல்ல சுபயோக" தினத்தில் இழுத்து மூடப்பட்டுவிட்டது. அண்ணா நகரின் இருந்த இப்போது பெயர் மறந்துவிட்ட மற்றொரு சிடி கடையும், ஷாப்பர்ஸ் ஸ்டாப்பில் இருந்த இன்னொரு கடையும், சைட் எபக்ட்ஸ், ஆடியோ போர்ட், ஆழ்வார்ப்பேட்டையில் நான் அடிக்கடி செல்லும் ஒரு சிடி கடையும்   வெயில் கண்ட பனித்துளிகள்  போல மரணித்து விட்டன. சில வருடங்கள் வரை ஒளிர்ந்து கொண்டிருந்த சிடி விற்பனையகங்களின் நியான் விளக்குகள் நிரந்தரமாக அணைந்து விட்டன. 5 ரூபாய் காபி  10 ரூபாய்க்கு விற்கப்படும் இன்றைய  சூழலில்  இது பலருக்கு பெரிய விஷயமில்லைதான்.  ஆனால் மேற்குறிப்பிட்ட அனைத்து இடங்களிலும் அலைந்து திரிந்து ஆடியோ சிடிக்களாக வாங்கியபடி இருந்த எனக்கு இது மிகப் பெரிய இழப்பு.

   இரண்டாயிரத்தின் துவக்கத்தில்  கம்ப்யூட்டர் என் வீட்டுக்குள்  வந்தது,  அது இசையை நான் அணுகிய விதத்தை  முற்றிலும் மாற்றிப் போட்டது. கணினி என்ற அந்த விஞ்ஞான வியப்பு  வந்த  இரண்டு வருடங்களுப் பிறகு எனக்குத் தேவையான அனைத்து ஆங்கில இசைத் தொகுப்புக்களையும்  டாரென்டாக பதிவிறக்கம் செய்து அதை எம்பி 3 யாக எனது ஹார்ட் டிஸ்கில் பதிவு செய்துகொண்டேன்.  ஏறக்குறைய 5000க்கும் மேலான இசைத் தொகுப்புக்கள். எனக்குத் தேவையான அனைத்து ஆங்கில இசைத் தொகுப்புக்களும் என் வசம் வந்துவிட்ட நிம்மதி, களிப்பு,  திருப்தி  எனக்கு உண்டு.  இருந்தாலும் வசீகரம் குறைந்த அழகான ஓவியம் போல எங்கோ எதோ ஒன்று இல்லாத உணர்வு இருக்கிறது.

    எம்பி 3 என்று  ஒரு ஜிபி கொண்ட நினைவகத்தகட்டில்  ஐநூறு  பாடல்களை வெட்டி ,உடைத்து,  வதைத்து சிறகொடித்து மடக்கி குறுக்கி வைத்திருக்கும் அந்த புதிய இசை வடிவம் என் மனதில் நீண்ட நாட்கள் தங்கவில்லை. அற்புதமான பல பாடல்கள் தட்டையாக ஒலிக்கும்  இந்த திடீர் தொழில் நுட்பம் இசையை சிதைத்து  விடுகிறது. ஆனால் இந்த எண்ணம் எனக்கு வரும் முன் பெரும்பாலானவர்களைப் போலவேதான் நானும் இருந்தேன். விரல் நுனியில் மூன்று நிமிடத்தில் எனக்குத் தேவையான ஒரு பாடலை சட்டென களவாடிக் கொள்ளும் அறிவியல் நேர்த்தியை அதிசயித்தபடியே.

     ஒரு காலத்தில் உயர்ந்த வானத்தில் மிளிரும்  நட்சத்திரங்கள் போன்றிருந்த பல கனவுகள்  இன்றைக்கு நம் கை விரல்களின் நுனியில் மெய்ப்படக் காத்திருப்பது விஞ்ஞான வளர்ச்சியின் அசுர சாதனை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை  இசையைக் கேட்க வேண்டுமானால் ஒருவருக்கு  ஓப்ரா  ஷோ (Opera) ஒன்றுதான் ஒரே வழி. குரல்களை பதிவு செய்ய  முடியும் என்கிற சிந்தனையும் அதன் செயல் வடிவமும்   போனோக்ராபி (phonography ) வந்த பிறகே சாத்தியமாயின. தாமஸ் ஆல்வா எடிசனின் இந்த அற்புத கண்டுபிடிப்பு ஒரு ஆச்சர்யமான  மகா மகத்துவம். ஒருவரது இசை என்  ஆன்மாவுக்குள் சென்று எதோ செய்கிறது என்று இன்று பதிவுகளில் எழுதும் பலர் முதலில் நன்றி சொல்லகூடிய ஒரே நபர் தாமஸ் ஆல்வா  எடிசன்தான். ( தனிப்பட்ட விதத்தில் எனக்கு எடிசனை விட நிகோலஸ் டெஸ்லாவை அதிகம் பிடிக்கும்.) இவ்வாறாக கண்டுபிடிக்கப்பட்ட "இசையை பதிவு செய்து பிறகு கேட்கும் விஞ்ஞான வளர்ச்சி" பெற்ற பரிமாணங்கள் மனித சிந்தனை பெற்ற இறக்கைகள் எனலாம். வந்த புதிதில் மக்கள் அலையலையாக படையெடுத்து, பணம் கொடுத்து வரிசையில் நின்று கேட்டு ரசித்த  பதிவு செய்யப்பட்ட குரல்கள் பெரும்பாலும் தெளிவற்ற ஒரு மாதிரியான பிசிறடிக்கும் வகையையானவை. ஆனாலும் அந்த அதிசயம் மக்களை மெகா சைஸில்  கவர்ந்தது.

       முதலில் பதிவு செய்யப்பட்ட மனிதக் குரல்  Mary had a little lamb என்ற நர்சரி ரைம்ஸ். முதல் பாடல் என்று கூட சொல்லலாம். இது நிகழ்ந்த ஆண்டு 1877. இதை எடிசனே பாடினார். இன்றுவரை இது அமெரிக்காவில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு  வருகிறது. 2012இல் இதன் மற்றொரு நவீன வடிவம் வெளியிடப்பட்டது. துவக்கத்தில் இசைப் பதிவு என்பது துல்லியமற்றதாக இருந்தது.  பதிவு செய்யப்பட்ட குரல்கள் நாம் இன்று கேட்கும்படியான  தெள்ளத் தெளிவானவை அல்ல. பாடல்களுக்கு இடையே பயங்கர மழை பெய்யும் இரைச்சல் ஒரு கண்டிப்பான அம்சம்.

    கையால் லீவர் ஒன்றை சுழற்றினால் மேலே உள்ள அகன்ற ஸ்பீக்கரில் பாடல்கள் கேட்கும் படியான விஞ்ஞானம் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில்  வந்தது. இந்த இசை முழுவதும் மோனோ எனப்படும் ஒரே  பக்கத்தில்  இசையை பதிவு செய்யும் பழைய யுத்தி.  1931ஆம் வருடத்திலேயே ஆலன் ப்ளம்லைன் என்பவரால்  ஸ்டீரியோ அப்போதைய ஹாலிவுட் படங்களில் அறிமுகம் செய்யப்பட்டாலும்  1958 ஆம் ஆண்டில்தான் முதல் ஸ்டீரியோ எல் பி ரெகார்ட் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. ஸ்டீரியோ இசையின் தரத்தை பன்மடங்கு உயர்த்தியது. அறுபதுகளில் மேற்குலகில் உண்டான இசைப் புரட்சி அந்த சமூகத்தின் வேர்களை தகர்த்தது. புதிய  சிந்தனைகளுக்கான நடைபாதையை இசை அமைத்துக்கொடுத்தது. இசையின் வீச்சு அதுவரை இல்லாத தூரங்களை அனாசயமாகக் கடந்து சென்றது.

      பெரிய அளவான கசெட் டேப் போன்ற ஸ்பூல், பிறகு எல் பி ரெகார்ட், கசெட் என உருமாறிய இசை எண்பதுகளின் இறுதியில் சி டிக்களாக டிஜிடல் அவதாரம் எடுத்தது. அப்போது அதை மிகத் தெளிவான இசை என்றார்கள். பத்து வருடத்தில் இசையின் அடர்த்தியை அங்கே இங்கே வெட்டி, அதை குட்டையாக மாற்றி இதுதான் புதிய இசை வடிவம் இதன் பெயர் எம் பி த்ரீ என்றார்கள்.  இசை இறந்தது.

       தீப்பெட்டி போன்ற வஸ்து ஒன்று  இன்றைக்கு வயர் மூலம் தொடர்ச்சியாக நூறு பாடல்களை நம் காதுகளுக்குள் அனுப்பிக்கொண்டிருகிறது. பாடலின் துவக்கத்திலேயே பிடிக்காவிட்டால் அடுத்த பாடலுக்கு தாவி விடக்கூடிய சௌகரியம், பாடலை முழுமையாக கேட்காமலேயே முழுவதும் கேட்டுவிட்ட திருப்தி, இசையைத் தேடிச் சென்ற காலங்கள் கரைந்துபோய் பாக்கெட்டுகளில் எடுத்துச் செல்லும் எளிமை  போன்ற வசதிகள் இந்த எம் பி த்ரீயின் கொடைகள்.  சுருக்கமாக சொல்வதென்றால் விரைவு இசை.

       ஆணும் பெண்ணுமாக இருவர் ஒரே ஹெட்போனை  ஒன்றை அவனும் மற்றொன்றை அவளும் காதில் பொருத்திக்கொண்டு பாடல்களை ரசித்துக் கேட்பது போல தற்போது சில விளம்பரங்களில் காண நேரும்போது, எனக்கு எழும் இயல்பான கேள்வி: "இவர்கள் ரசிப்பது இசையைத்தானா?"  டி வி விளம்பரம் என்றல்லாது பயணம் செய்யும் ரயில்களில், மாநகர பேருந்துகளில், நடைபாதைகளில் என இளமை ததும்பும் பல இடங்களில் இந்த இசைச் சேட்டை ஒரு இலவச காட்சி. இந்த மாதிரியான சமப் பகிர்வு ரசிப்பில்  எனக்கு இச்சை கிடையாது. ஆதரவும் இல்லை. ஒரே சமயத்தில் இரண்டு ஆசாமிகள் ஒரே பாடலை  சமமாகப் பிரித்துக் கொண்டு ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம்போல பாதி இசையை  கேட்பதை நான் ஒரு பொருட்டாகவே  எடுத்துக்கொள்வதில்லை.  இதெல்லாம் பதின்ம வயதின் உடல் நெருக்கத்திற்கான ஒரு புதிய தேடல்.  இது மட்டுமல்லாது இன்றைய சூழலில் பல இளைஞர்களும் நாகரிக நங்கைகளும் எப்போதும் ஒரு வெள்ளை அல்லது கருப்பு நிற வயரை காதில் சொருகிக்கொண்டு தங்களுக்குப் பிடித்த பாடல்களை கேட்டபடியே சாலையோரங்களில், சாலைக்கு குறுக்கே, ரயிலடிகளில், மழை நேரத்து மங்கலான மரத்தடிகளில், வீட்டு மொட்டை மாடிகளில் ஒரு விழா போல உலா வருவது இனிமேல் இப்படித்தான் நாம் இசையை மதிக்கப் போகிறோம் என்ற அபாய சங்கு.

    "ஏன்? நீ அப்படி கேட்டதில்லையா?" என்று என்னை வினவினால் எனது பதில் : "ஆம். உண்டு." ஒருமுறை சென்னையிலிருந்து மதுரை வரும் வரை இரவு நேர பேருந்து பயணத்தின்போது ஒரு சிறிய பேட்டரி அளவு  எம் பி த்ரீ ப்ளேயரில் ஏறக்குறைய 180 பாடல்களை விடாது கேட்டுக்கொண்டே வந்தேன். அப்போதுதான் முதல் முறையாக Outlaws என்ற எழுபதுகளைச் சேர்ந்த அமெரிக்க  கண்ட்ரி  ராக் இசைக் குழுவினரின் Ghost Riders In The Sky என்ற அபாரத்தைக் கேட்டேன். அப்போது திருச்சி பாலக்கரையில் பஸ் சென்றுகொண்டிருந்தது என் நினைவிலிருக்கிறது. 180 பாடல்களுக்கு மேலேயே கேட்டிருப்பேன். அதற்குள் மதுரை மாட்டுத்தாவணிக்குள் பஸ் நுழைந்து விட்டது. காதிலிருந்து அந்த பொத்தான் ஹெட்போனை நீக்கியபோது காதுக்குள்  மழை பெய்தது.

       ஐ பாட் போன்ற நவீனங்கள் ஒரு பாடலின் உள் இழைகளை அசாத்திய விதத்தில் விரித்து இசைக்குள் நாம் நடந்து செல்லும் போதையான கனவுகளை உயிர்ப்பிக்கின்றன.  காதுக்குள் இசை என்ற 1979 ஆம் ஆண்டின் சோனி வாக்மன் அதிசயத்தை ஆப்பிள் ஐ பாட் அட்லாண்டிஸ்  விண்கலம் விண்ணில் செங்குத்தாக பாய்வது போன்று ஒரே நொடியில் வேறு பரிமானத்திற்கு மாற்றிவிட்டது.  நீங்கள் ஒரு உண்மையான இசை விரும்பியாக இருக்கும் பட்சத்தில் வாழ்கையில் ஒரு முறையேனும் ஐ பாட் சாதனத்தில் உங்களுக்குப் பிடித்த பாடலை கேளுங்கள்.  எம் பி த்ரீ ப்ளேயர் போன்ற சக்கைகளுக்கு மத்தியில் ஐ பாட் ஒரு கனிந்த பழம். இசை இத்தனை அழகானதா என்ற பெரு வியப்புக்கான சாதனம்.

         இன்றைய தலைமுறையினர்  இவ்வாறான ஐ பாட் இசையையே பெரிதும் விரும்புகிறார்கள் என்கிறது ஒரு மேற்கத்திய ஆராய்ச்சி முடிவு. அவர்களிடம்  எழுபதுகளின் எல் பி ரெகார்ட் எனப்படும் இசைத்தட்டுக்கள், எண்பதுகளின் ஆடியோ கசெட்டுகள், தொண்ணூறுகளின் சிடிக்கள், இரண்டாயிரத்தின் ஐ பாட் வகை எம் பி த்ரீ இசை என விதவிதமாக போட்டுக் காண்பித்ததில் பெரும்பான்மையானவர்கள் '"இதான் எனக்குத் தேவை." என்று குறிப்பிட்டது ஐ பாட் இசையே. அவர்கள் பிறந்ததிலிருந்து அறிமுகமான இந்த தட்டை இசை (flat music) அவர்களுக்குப் பிடித்துப் போவதில் பெரிய ஆச்சர்யங்கள் எதுவுமில்லை.




      ஆனால் இவ்வாறு காதுக்குள் இசை கேட்பவர்களுக்கு  விரைவில் காதுக்குள் இரைச்சல் கேட்கக்கூடிய  ஆபத்து நிகழக்  காத்திருக்கிறது. ஒரு முறை காதுகள் பாதிக்கப்பட்டால் அதன் பின் உங்களால் மீண்டும் கேட்கும் சக்தியை திரும்பப் பெறவே முடியாது. இரண்டு வருடங்களுக்கு முன் என் காதுக்குள் சங்கு இல்லாமலே கடலோசை  கேட்டது. ஒரு விதமான உயர் ஒலி ஓசை. இதை டினைடஸ் (Tinnitus) என்பார்கள். சற்று அலட்சியமாக இருந்துவிட்டால், அதன் பின் நீங்கள் மற்றவர்களின்  உதட்டசைவை கவனித்துத்தான்    அவர்கள்  சொல்வதை அனுமானிக்க வேண்டும்.  அதுவரை நான்கு நிமிட நடையாக   தெரு திருப்பத்திலுள்ள மெஸ் ஒன்றுக்கு செல்ல நேரிட்டாலும் நான் ஐ பாட் கேட்டபடியேதான் நடைபயிலுவேன். ஒரு முறை அந்தக்  கடைக்காரர் என் மீது கொண்ட அக்கறையினால், "கொஞ்சம் அத எடுத்துடுங்க சார். காது போயிடும். என் தம்பிக்கு அப்பிடித்தான் ஆச்சு. அவனும் உங்கள மாறியே எப்பவும் காதுல வயற சொருகிகிட்டு பாட்டு கேட்டுகிட்டு இருப்பான்." என்று சொல்ல, எனக்கு காய்ந்துகொண்டிருந்த  அந்த அடுப்பின் தீக்கங்குகளை தோசைக்கு நடுவே மாசாலா போல வைத்து முழுங்கியது போலிருந்தது. இது ஒன்றும் புதிய செய்தியல்ல எனக்கு. அந்தக் கடைக்காரரின் அறிவுரைக்கு முன்னரே எனக்கு இது தெரிந்ததுதான். படித்திருக்கிறேன். ஆனால் இந்த அபாயத்தை ஒரு விதத்தில் நெருக்கமாக உணர்ந்த ஒரு அனுபவஸ்தர்  சொல்லும்போது உண்டாகும் அச்சம் நாம் அந்த கருத்துக்கு செய்யும் மரியாதை என்று நினைக்கிறேன்.

        டினைடஸ் என்ற அபாயத்தின் முதல் படியிலேயே நான் சற்று விழித்துக் கொண்டு, செவிக்குள் ஒலிக்கும்  இசைக்கு செவிசாய்ப்பதை அத்துடன் நிறுத்திக்கொண்டேன்.  இதைப் படிப்பவர்களில் யாரேனும் இந்த செவிக்குள் கேட்கும் இசைக்கு அடிமையாக இருந்தால் என் அறிவுரை இதுதான். நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் இசையை ரசிக்கவேண்டும் என்றால் இதைச் செய்யாதீர்கள். நாள்தோறும்  தொடர்ச்சியாக  இரண்டு மணிநேரம் உச்சஸ்தாயில் காதுக்குள் பாடல்களைக் கேட்டால் ஐந்து வருடத்திற்குள் ஐந்தடி தூரத்தில் வரும் கண்டைனர் லாரியின் அலறும்  ஹார்ன் கூட உங்களுக்குக் கேட்காது. அதிர்ஷ்டம் இருந்தால் அந்த லாரி ஓட்டுனர் உங்களைப் பார்த்து , "செவிட்டுக்...." என்று ஆரம்பித்து தமிழ் அகராதியில் தேடினாலும் கிடைக்காத "புனித" வார்த்தைகள் கொண்டு உங்களை அர்ச்சிப்பதோடு  நீங்கள் பிழைக்கலாம்.

      இசையின் உண்மையான தோற்றத்தை நீங்கள் அனுபவிக்க விரும்பினால் அதை கண்டிப்பாக  இந்த எம் பி த்ரீ சமாச்சாரங்களில் தேடாதீர்கள்.  ஏனென்றால் அது அங்கே இல்லவேயில்லை. எத்தனைதான்  மயக்கம் கொடுத்தாலும் ஐ பாட் இசையில் கூட இசையின் அசாதாரண அனுபவம் அதன் உண்மையான தோற்றத்தில் நமக்குக் கிடைக்காது. வேறு எங்கே என்கிறீர்களா?  இருக்கிறது. ஆடியோ சிடிக்கள் மற்றும் மேற்குலகில் இப்போது புத்துயிர்ப்பு பெற்றுள்ள எல்  பி ரெகார்ட் என்னும் இசைத் தட்டுக்களில் இன்னும்   இசையின் அந்த  மாயாஜாலம் மறைந்திருக்கிறது.

     Denon, Yamaha, Marantz, Onkyo  போன்ற ஒரு தரமான ஆடியோ ப்ளேயரில் (குறிப்பாக சிங்கிள் சிடி ப்ளேயர். நோ டிவிடி, எம் பி த்ரீ, எட்செட்ரா) அதே தரத்திலுள்ள ஆம்ப்ளிபையரில்  Polk audio, Denon, Klipsch, Pioneer போன்றதொரு டவர்   ஸ்பீக்கர்களில் (floor standing speakers) ஒரு  கம்பெனி ஆடியோ சிடியை ஓடவிட்டுக் கேளுங்கள். இசை துளித் துளியாக உங்கள் மீது  தெறிக்கும். அதன் பிறகு எம் பி த்ரீயை இசை என்றே சொல்ல மாட்டீர்கள்.



 ஒரு லட்சம் அல்லது அதற்கும் மேலே பணம் செலவழிக்க நீங்கள் தயார் என்றால் இத்தகைய சாதனங்களை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வரலாம். விரல் நுனியில் எனக்குத் தேவையான பாடல்கள் காத்திருக்கும் போது இவ்வளவு பணம் கொடுத்து இசையை ரசிக்க நானென்ன முட்டாளா என்ற கேள்வி உங்களுக்கு ஏற்பட்டால் --கெடுதி இல்லை. இருக்கவே இருக்கிறது. கம்ப்யூட்டர் ஸ்பீக்கர்கள், யூ டியூப்.

     பொதுவாக என் வீட்டிற்கு வரும் நண்பர்கள் நான் வைத்திருக்கும் சிடிக்களைக் கண்டு என்னிடம் வழக்கமாக கேட்கும் கேள்வி "இதெல்லாம் என்ன சினிமா படங்களா?" கேட்கும் போதே பென் டிரைவ் வந்துருச்சு இப்ப போய் டிவிடியை வாங்கிட்டு இருக்கான் பாரு இந்த முட்டாள் என்ற தொனியை நான் புரிந்துகொள்வேன்.

  நான் சொல்லும் பதில் அவர்களை இன்னும் மிரள வைக்கும். "இதெல்லாம் டிவிடி இல்லை.ஆடியோ சிடி. வெறும் பாட்டு மட்டும்தான். படம் கிடையாது."

  "பாட்டா?" என்று அவர்கள் அதிர்ந்துபோய் என்னைப் பார்ப்பதில் நிறைய செய்திகள் உண்டு.

   "அதான் கம்ப்யூட்டரில் எம் பி த்ரீயா  எல்லாமே கிடைக்குதே? எதுக்கு சிடி வாங்கிகிட்டு?"

     "அப்படியா? எனக்குத் தெரியாதே."

எல்லோரிடமும் எதற்காக ஒரே பதிலை சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்?
     

     




அடுத்து; கொஞ்சம் நிலவு கொஞ்சம் புனைவு. 




23 comments:

  1. I always listen to the MP3 but this is the first time I realize its setback.
    Yes it is a crammed version. A forty mb songs will be stored in 2mb!
    But I could not feel the difference as u do!
    Perhaps for a long while u have been hearing top quality CDs...
    Thanks for the insight.
    U r rocking as always
    keep rocking
    kudos

    ReplyDelete
  2. செம....

    இதைப் படித்தவுடன், அல்லது நீங்கள் கூறியவுடன் உடனடியாக ஒரு ஐபாட் வாங்கி இசையில் நனைய வேண்டும் போல் இருக்கிறது...

    ReplyDelete
  3. காரிகன், வழக்கம்போல் உங்களின் தமிழ் அழகுற விரிந்திருக்கிறது. அங்கங்கே தெறிக்கும் வார்த்தைகள் உங்கள் கவி மனதை வெளிச்சமிடுகின்றன. நான் இந்தியில் ஓ.பி.நய்யரின் ரசிகன். இந்த சிடிக்கள் வந்தபுதிதில் எங்கெங்கு இந்திப் பாடல்கள் கிடைக்குமோ அந்த பகுதிகளுக்கெல்லாம் சென்று தேடித்தேடி ஓ.பி.நய்யரின் பாடல்கள், மற்றும் பழைய ஹேமந்த் குமார், சலீல்சௌத்ரி,மதன்மோகன், ரோஷன் ஆகியோரின் சிடிக்களை வாங்கினேன். போட்டுக் கேட்டபோதுதான் 'அட இது நாம கேட்டமாதிரி இல்லையே' என்ற உண்மை புரிந்தது. இதில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என்ற தடயம் கிடைத்தது. அப்போதிருந்து மறந்தும் அவற்றைப் போட்டுக் கேட்பதில்லை. இதற்கான பதிலைத் தேடிக்கொண்டிருந்தபோதுதான் ஒரு பத்திரிகையில் ஷாஜி எழுதியிருந்த கட்டுரையைப் படித்துத் தெளிந்தேன். அப்போதிருந்தே எம்பி3, 4 இதன்பக்கமெல்லாம் போவதில்லை. யூடியூப் பாடல்களை ஐபேடில் பதிந்துகொண்டு (காட்சிகளில்லாமல்) பயணங்களின்போது மட்டும் கேட்டுக்கொண்டுபோவதுதான் இப்போதைய வழக்கம்.
    சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் வருகிறவர்கள் பாடுவதைக் கேட்கும்போது ஏதோ ஒன்று குறைவது வெளிப்படையாகத் தெரிகிறது. காரணம் எம்பி3 போட்டு அதிலிருந்து பாடப்பழகுகிறார்கள் என்பது வெளிப்படை. ஏதோ ஒவ்வொரு பாட்டையும் பாடி முடிக்கும்போது ரயிலைப் பிடிக்க ஓடுகிறவர்கள் போல் அத்தனை அவசரம். அவ்வளவு கச்சிதமாக பிரதியெடுத்து ஒப்பிக்கிறார்கள். இவர்களாவது பரவாயில்லை. நிகழ்ச்சியை நடத்தும் அனந்தும் சரி, அதற்கு நீதிபதிகளாக வரும் (ஜட்ஜ் - தயவுசெய்து இந்தப் பெயரை மாற்றுங்கள் ஐயா!) பிரபலங்களும் ஒன்றுமே கண்டுகொள்ளாமல் எழுந்துநின்று கைதட்டுவதும் பிரமாதம் அபாரம் என்று புகழ்வதையும் கேட்கும்போதுதான் முட்டிக்கொள்ளலாம்போல் தோன்றுகிறது.
    வழக்கமான தொகுப்பிலிருந்து மாறுபட்டு எழுதியிருந்தபோதிலும் சுவாரஸ்யம் குன்றாத பதிவு.

    ReplyDelete
  4. நல்ல இசையை கேட்க ஒரு லட்சம் செலவு செய்த பின்னரும் அந்த சிடிக்களை வாங்கவும் நூற்றுக் கணக்கில் செலவிட வேண்டிவரும்!! எளிய மாற்று வழி இல்லையா?!! :(

    Raaga போன்ற இணைய தளங்களிலும் உண்மையான தரம் கிடைக்காதா காரிகன்?

    செவித்திறனை காத்துக் கொள்ள அபாயச் சங்கு ஊதியிருக்கிறீர்கள், இது குறித்து ரொம்ப நாட்களுக்கு முன்னரே கேள்விப் பட்டு நான் நிறுத்திவிட்டேன்!! நன்றி.

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி மது,

    MP 3 மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒரு அவசர உலகத்துக்கான இசை வடிவம். முழுமையான இசையின் அனைத்து ஓசைகளும் இதில் கேட்காது. மனித செவிகளுக்கு கேட்கும் பிரதானமான குரல், தாளம்,டெசிபெல் கூடிய இசை மட்டுமே இதில் உண்டு. பல நுணுக்கமான இசை இழைகள் எம் பி 3இல் இருக்காது. நான் ஆரம்பத்தில் எம்பி த்ரீ யை மினிமைஸ் செய்யப்பட பாடல் என்றே எண்ணியிருந்தேன். எனவே ஹெட்போனில் கேட்டபொழுது எந்த வித்யாசமும் அகப்படவில்லை. பிறகு எம் பி த்ரீ யின் உண்மையான டெக்னாலஜி என்னவென்பதை அறிந்தபோது மிக அதிர்ச்சியாக இருந்தது. ஆடியோ சிடிக்களில் இருக்கும் துல்லியம் இதில் இல்லை என்பதை போகப் போகவே உணரத் துவங்கினேன். மேலும் பரவலாக சொல்லப்படுவது போல ஆடியோபைல் (audiophile ) என்ற தீவிர இசை வெறியர்கள் இந்த எம் பி த்ரீ இசையை காலால் போட்டு மிதிக்கிறார்கள். நீங்கள் எம் பி 3 இசையையே கேட்டுக் கொண்டிருந்தால் அது பிடித்துப் போவது இயல்பானதே. ஆனால் அதை விட்டு வெளியே வந்தால்தான் உண்மையான இசை என்னவென்பதை அனுபவிக்க முடியும். மேலும் தொடர்ந்து ஹெட்போனில் கேட்பது ஆபத்தான பழக்கம். அதற்காகவாவது சிடி அல்லது கம்ப்யூட்டர் ஸ்பீக்கர் என மாறிவிடுவது உத்தமம்.

    ReplyDelete
  6. வாங்க சீனு,

    ரொம்ப நாளைக்குப் பிறகு உங்கள் வருகை. நன்றி.

    கிளாசிக் வகை (சுழற்றும் வகை) ஐ பாட் சாதனங்கள் இப்போது கிடைப்பதில்லை. இருந்தாலும் மற்ற சிறிய ஐ பாட் இப்போதும் வருகிறது என்று நினைக்கிறேன். track listing இல்லாமல் என்ன பாடல் ஒலிக்கிறது என்றே தெரியாமல் கேட்கலாம். எனக்கு என்ன பாடல் என்ன ஆல்பம் எந்தக் குழு என்ற விபரங்கள் ஒரு பாடலோடு கண்டிப்பாக தேவை. இல்லாவிட்டால் ஒரு முழுமை கிடைக்காது.

    கண்டிப்பாக ஒரு ஐ பாட் வாங்கி உங்கள் விருப்பமான பாடலை கேட்டு ரசியுங்கள். ஆனால் ஐ பாடுக்குள் பாடல்களை ஏற்றுவது மகா சிரமமான காரியம்.

    ReplyDelete
  7. நிசப்தமான நிஜங்கள் அருமை

    ReplyDelete
  8. காரிகன் . இசையை இரைச்சலாக (ஹெட்போனிலாயினும்)கேட்காதவரை காதுகளுக்கு எவ்வித பாதிப்பும் வரப்போவதில்லை .இதனால் காதுகளுக்கு ஏற்படும் பாதிப்பு ஒரு புறமிருக்க மனித உறவுகள் மறக்கப்பட்டும் ,மறுக்கப்பட்டும் கொண்டிருக்கின்றன என்பதே உண்மை .வயது வித்தியாசமில்லாமல் ஆண் பெண் பேதமின்றி எல்லோரும் காதுகளில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு இசையை ரசிப்பதாக எண்ணி இசையின் மகத்துவத்தை அநேகர் சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள் .இசையை எந்த வடிவத்தில் கேட்டாலும் இதமளிப்பதாயிருக்க வேண்டுமேயொழிய இம்சையாக இருத்தல் கூடாது .

    ReplyDelete
  9. வாங்க அமுதவன்,

    பாராட்டுக்கு நன்றி.

    ஒ பி நய்யார் இசையை எனது முதல் சகோதரி ரசித்துக் கேட்பதுண்டு. ஒ பி நய்யார் இசையில் வரும் குதிரை ஓசை கொண்ட ஒரு பாடலை அடிக்கடி வியந்து பாராட்டும்போது அமர்களமாக இருக்கும். அது எந்தப் பாடல் என்று ஞாபகமில்லை. நீங்கள் அவரைக் குறிப்பிட்டதும் எனக்கு அந்த நினைவுகள் வருகின்றன. ஹிந்தி இசையில் இருக்கும் அற்புத மெலடி நம்மை ஒரு அந்நிய மொழியின் பாடலைக் கேட்கிறோம் என்ற உணர்வையே கொஞ்சம் கூட தராது.

    எம் பி 3 பற்றி ஒருமுறை உங்கள் தளத்தில் நான் பின்னூட்டமிட்டது ஞாபகம் வருகிறது. ஐ பேட் ஐ பாட் போலத்தான். ஹெட்போனில் கேட்க அருமையாக இருக்கும். காட்சிகள் இல்லாமல் பாடல்கள் கேட்பது இசையை உண்மையாக ரசிப்பதன் குறியீடு. நானும் அப்படித்தான்.

    சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் யார் எதைப் பாடினாலும் அதை வியந்து பாராட்டுவது ஒரு புதிய டிரெண்ட் போலிருக்கிறது. என்னதான் சிறப்பாக பாடினாலும் நிஜப்பாடலை கேட்கும் சுகமே தனிதான்.

    ReplyDelete
  10. வாங்க ஜெயதேவ்,

    முதல் முறையாக இங்கே வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். வருகைக்கு நன்றி.

    இரண்டாயிரம் ரூபாய் செலவழித்து ஷூ வாங்கும்போது நூறு ரூபாய் சாக்ஸ் வாங்குவதற்கு இத்தனை யோசிக்கலாமா?

    மேலும் லட்சம் செலவு செய்து வாங்கும் அதி நவீன மியூசிக் பிளேயர்களில் தரமான கம்பனி சிடிக்களைப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம். இல்லாவிட்டால் எதற்காக நீங்கள் இத்தனை செலவழித்தீர்களோ அந்த நோக்கம் முழுமையடையாது. மேலும் சிஸ்டம் பாதிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு. சிடிக்கான மாற்றுவழி அதை யாரிடமிருந்தாவது நீங்கள் பதிவு செய்துகொள்வதுதான். இல்லையென்றால் ஐ டியூன்ஸ் ஸில் பணம் செலுத்தி பாடல்களை டவுன்லோட் செய்துகொள்ளலாம். அது சற்று தரமானது. அது எம் பி 3 பார்மட் கிடையாது என்பதால் தரத்தைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை.

    ராகா போன்ற தளங்களில் அவர்கள் உபயோகிக்கும் பார்மட் என்னவென்று தெரியவில்லை. வெறும் எம் பி 3 யாக இருக்கும் பட்சத்தில் உங்கள் கேள்விக்கான பதில் :இல்லை என்பதே. சில பார்மட் வகைகள் (FLAC போன்றவை) கொஞ்சம் தரமானவை. நான் கம்பியூட்டர் ஸ்பீக்கர்களில் அவ்வப்போது எல்லா வகை பார்மட் இசையையும் கேட்பேன். ரசித்துக் கேட்கவேண்டுமென்றால் சிடி ப்ளேயர், டவர் ஸ்பீக்கர்கள் தான் எனது சாய்ஸ். status quo என்ற குழுவினரின் In the army now என்ற பாடலை ஒருமுறை முதலில் யு டியூபில் கேட்டுவிட்டு உடனே எனது ஸ்பீக்கரில் ஒரு பரிசோதனை முயற்சியாகக் கேட்டேன்.

    Big things have a class of their own.

    ReplyDelete
  11. வாங்க அருள் ஜீவா,

    பாராட்டுக்கு நன்றி.நீங்கள் சொல்வது உண்மைதான். தற்போதைய தொழில் நுட்பம் மனித உறவுமுறைகளின் இடைவெளியை அதிகப்படுத்தியிருக்கிறது. அதேபோலே ரசிப்பதாக எண்ணிக்கொண்டு நாம் காதுக்குள் ஹெட்போனை சொருகி, இசையை கேவலம் செய்கிறோம். ஆனால் சில சமயங்களில் தனிமையான இசை ரசனைக்கு இது தேவை என்றாலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் இப்படியே இசையை கேட்பது முறையல்ல என்பது என் எண்ணம்.

    ReplyDelete
  12. வழக்கம் போல் அருமையான பதிவு! இசையை எப்படி கேட்கவேண்டும் என்று விரிவாக சொன்னதற்கு நன்றி! பல தகவல்களை தெரிந்து கொண்டேன். நானும் ஒன்க்யோ-வில் இசைக் கேட்டிருக்கிறேன். அற்புதமாக இருந்தது. ஆனால், அதன் விலை ஒரு லட்சத்துக்கு மேல் என்று கேள்விப்பட்டதும். இசை ஆசையே விட்டுப் போனது. அதிலும் அதற்கான குறுந்தகடில் தான் கேட்கவேண்டும். அதன் விளையும் மிக அதிகம். நமக்கு கட்டுபடியாகாது என்று விட்டுவிட்டேன். எனக்கும் தரமான முறையில் இசைக் கேட்பதுதான் பிடிக்கும்.

    நேரம் இருந்தால் எனது இந்த பதிவை படித்துப் பாருங்கள்.

    http://senthilmsp.blogspot.com/2015/02/92.html


    ReplyDelete
  13. Nice article sir.. its a warning for the youngsters

    ReplyDelete
    Replies
    1. Thanks for your comment Mr. Xavier,

      It's not a warning. Rather a concern....

      Delete
  14. ஹலோ காரிகன்

    நிசப்தமான நிஜங்கள் அருமை . அவசர உலகத்தில் இசையைக் கூட அவசரமாக கேட்க வைக்கும் யுக்தியாகவோ , கொஞ்சமான உழைப்பில் நிறைந்த பலனை எதிர்பார்க்கும் மனிதனின் மனப்பான்மைக்கு போடப்படும் தீனியாகவோ , குறைந்த செலவில் நிறைத்துக் கொடுக்கும் வணிகப் பார்வையாகவோ மாறிப் போனதின் அவலம் இசையின் தரம் கெட்டுப் போனது. எம்.பி 3 வடிவம் இசையின் தரத்தை மட்டுமல்ல அதன் இயல்பான வேகத்தையும் கூட்டி விடுவதால் அசல் அழிந்து போனது போன்றே தோற்றமளிக்கும் . உண்மையான இசைப்பதிப்பை செராக்ஸ் எடுத்தது போலவும் இருக்கும்.

    சில இசைக் கருவிகளின் துல்லியமும் அழிந்து போவதால் உயிர் அழிந்த கூடு போன்ற இசையாகத்தான் கேட்க வேண்டியிருக்கிறது. கேசட்டில் பதிந்து வைத்து கேட்ட பாடல்களில் இருந்த தரம் இப்போது காணாமற் போனது. தரமான இசை கேட்க நீங்கள் சொல்லியிருக்கும் யோசனை அதிக செலவு பிடிப்பதாக இருக்கும் . வேறு சில யோசனைகள் இருந்தால் சொல்லுங்கள்.

    ReplyDelete
  15. அருமை... தரமான இசை கேட்க தாங்கள் சொல்லியிருக்கும் யோசனைகள் சரியானவைதான் என்றாலும் அதற்கான செலவுகள் எல்லாருக்கும் கட்டுபடியாகுமா என்பதையும் யோசிக்க வேண்டும்...

    ReplyDelete
  16. வாருங்கள் செந்தில்,

    உங்களின் அந்தப் பதிவை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன். 5.1, 7.1, 9.1 போன்ற அதி நவீன இசை சாதனங்கள் காட்சியாக காண்பதற்கான அசர வைக்கும் ஆச்சர்யங்கள். ஆனால் பாடல், இசை என்றால் இரண்டு ஸ்பீக்கர்கள் என்ற ஸ்டீரியோ முறையே எப்பொழுதும் மிகச் சிறந்தது. நானும் ஒரு 5.1 சோனி மியுசிக் சிஸ்டம் வைத்திருக்கிறேன். ஆனால் அதில் இப்போது பாடல்கள் கேட்பதில்லை. ஒரே மாதிரியான தும் தும் ஓசை கேட்டு எல்லா பாடல்களும் ஒரே மாதிரியாகவே தோன்ற ஆரம்பித்ததால் ஸ்டீரியோ வகைக்கு வந்துவிட்டேன்.

    ReplyDelete
  17. வாங்க சால்ஸ்,

    வருகைக்கு நன்றி.

    ---சில இசைக் கருவிகளின் துல்லியமும் அழிந்து போவதால் உயிர் அழிந்த கூடு போன்ற இசையாகத்தான் கேட்க வேண்டியிருக்கிறது. ----

    மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். இதை புரிந்துகொண்டால் வேறு பரிமாணத்தில் இசையை ரசிக்கலாம். வெறும் எம் பி 3 வகை இசைக்கு வந்தனம் சொல்லிவிடலாம். நான் சொல்லியிருக்கும் கருத்துக்கள் அதிக செலவானவைதான். ஆனால் எப்போதுமே ஒரு மாற்று இருக்கிறது. 25 ஆயிரம் முதல் கொண்டு இந்த வகையான மியுசிக் ப்ளேயர் நம் பாக்கெட்டுக்கு ஏற்ற மாதிரி கிடைக்கும். கொஞ்சம் அதிகம் செலவழித்தால் இன்னும் கொஞ்சம் துல்லியம் என்று போகும். நமக்கு எது தேவையோ அங்கே நின்றுகொள்ள வேண்டியதுதான்.

    ReplyDelete
  18. வாங்க பரிவை சேகர்,

    வருகைக்கு நன்றி.

    அதிக செலவுதான். ஆனால் சற்று கீழிறங்கி வந்தால் 50 ஆயிரம் அதற்கும் கீழே என்று நம் விருப்பதிற்கேற்றவாறு சாதனங்கள் உண்டு. அதிகம் செலவழிக்க முடிந்தால் இசை இன்னும் துல்லியமாக இருக்கும். சென்னைக்கு வந்தால் அண்ணா சாலையில் உள்ள ப்ரோ எக்ஸ் கடைக்கு சென்று ஒரு வெள்ளோட்டம் விடுங்கள். கட்டுப்படியாகாது என்றால் இருக்கவே இருக்கிறது கம்யூட்டரில் இசை.

    ReplyDelete
  19. பல நினைவலைகளை தூண்டி விட்ட அற்புதமான பதிவு, காரிகன். எனது இளமைக்காலத்தில் பல அருமையான பாடல்களை கிராமஃபோன் ரெகார்டுகளில் தான் கேட்டிருக்கிறேன். 33, 45, 78 என்று மூன்று விதமான ரெகார்டுகள் அப்போது கிடைத்தன. முள்ளை ரெகார்டின் மேல் வைத்தவுடன் அதிலிருந்து வெளிவரும் இசையை ஆச்சரியத்துடன் பார்த்த நாட்கள் அவை.

    அதன் பிறகு காஸெட்டுகள் வந்ததால் ரெகார்டுகளுக்கு மவுசு குறைந்து விட்டது. இப்போது காஸெட்டே பார்க்க முடிவதில்லை.

    கடந்து விட்ட ஒரு அருமையான கால கட்டத்தை இவ்வளவு அழகாக நினைவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  20. வாங்க குரு,

    பாராட்டுக்கு நன்றி.

    தொன்னூறுகளில் பிறந்த என் நண்பனின் மகன் ஒருவன் நான் உங்கள் காலத்தில் பிறக்கவில்லையே என்று உண்மையாக வருத்தப்படுவான். எனக்கோ நான் அறுபதுகளில் பிறக்கவில்லையே என்ற வருத்தம் உண்டு. நிறைய நல்ல அம்சங்களை நாம் இழந்துகொண்டிருக்கிறோம். நல்ல வேளையாக எல் பி ரெக்கார்ட், கசெட் டேப் இத்யாதிகளுடன் உண்மையான இசையை தரமாக கேட்ட திருப்தி இருக்கிறது.

    ReplyDelete
  21. வணக்கம் இசைப்பதிவரே நலம்தானே ...
    சிலரின் இசை அனுபவங்கள் என்னை பல்வேறு உணர்வுக் குவியலில் தள்ளியிருக்கின்றன
    நான் ரொம்ப ரசித்த பாடல் ஒன்றை உங்களுடன் பகிரவே வந்தேன் ...
    இப்படி ஒரு குழு இருந்ததே தெரியாது எனக்கு...
    உங்களுக்கு தெரிந்திருக்கும்...
    இதோ இணைப்பு கார்பெண்டர்கள் மனதை செதுக்குகிறார்கள்
    https://www.youtube.com/watch?v=YTaWayUE5XA

    ReplyDelete
  22. மது,

    நன்றி. கார்பெண்டர்ஸ் அமெரிக்க சகோதர-சகோதரி இசைக் குழு. நசியா ஹுசைன் என்ற பாகிஸ்தானிய இசைக் குழு போன்று. (குர்பானி படத்தின் ஆப் ஹெயசா என்ற மிகப் புகழ் பெற்ற பாடலைப் பாடியவர்) இவர்களின் ஹேய் மிஸ்டர் போஸ்ட்மேன் என்ற பாடல் சற்று கேட்க நன்றாக இருக்கும். மாஸ்குரெய்ட் என்ற பாடலும் ரசிக்கத் தகுந்ததே.எழுபதுகளில் கொஞ்சம் அதிக அளவில் பெயர் பெற்றவர்கள். ஆர்ப்பாட்டமில்லாத இசை. ஒரு கப் காபியுடன் ரசிக்கலாம்.

    ReplyDelete