Sunday 11 October 2015

நிலவு நிஜமா?





                                                       நிலவு நிஜமா?



இரவு வானத்தில் பளீரென மின்னும் நிலவைக் குறித்து உலகின் எல்லா மொழிகளிலும் கவிதைகள் புனையப்பட்டு விட்டன. எண்ணிலடங்கா பாடல்கள் இயற்றப்பட்டும்  விட்டன. இனி வரும் காலங்களிலும் இது தொடரத்தான் போகிறது.  உலகம் இருக்கும் வரை இது ஓயப்போவதில்லை.

உண்மையில் மனிதனுக்கு நிலவைக் குறித்த ஆர்வமும், அச்சம் கலந்த அதிசயிப்பும், மகா வியப்பும் ஒன்று சேர்ந்து அதை தன் இலக்கியங்களில், கவிதைகளில், இசையில் இழுத்துவரச் செய்வதாக தோன்றுகிறது.  நிலவு குறித்த மர்மமான திகைப்பு அவனை அதை நோக்கிச்  செலுத்துகிறது.

இரவில் நிலவு மிளிர்வது சந்தேகமில்லாமல்  ஒரு காவியக் காட்சி.  முழு நிலவாகத் தோன்றுவதும், வடிவம் மாறுவதும், சுருங்குவதும், பின் பொலிவடைவதும் நாம் தினமும் காணும் ஒரு சாதாரண அபூர்வம். பூமியின் தோற்றத்தைப் பற்றி நாம் ஏறக்குறைய (!) தெரிந்துகொண்டு விட்டோம். ஆனால் அதே சமயத்தில் பூமியின் வெகு அருகே எப்போதும் ஒரே முகத்தைக் காட்டிக்கொண்டு சுற்றிவரும் அந்த விசித்தரமான வெள்ளை உருண்டையைப் பற்றி பலவிதமான கருத்துக்கள் இருக்கின்றன. நிலவு தோன்றியதா அல்லது பூமியின் அருகே மனிதன் இன்னும் அறிந்திராத விஞ்ஞான விதியின் படி தானே வந்து சேர்ந்ததா இல்லை சிலர் சொல்வதுபோல பூமியின் அருகே செயற்கையாக கொண்டுவரப் பட்டதா என்பது குறித்து பல விவாதங்கள் கட்டுரைகள் கருத்துக்கள் முடிவின்றி அலசப்பட்டு வருகின்றன.

அப்படியான ஒரு சதிக்கதையைப் பற்றியே இப்போது பேச இருக்கிறேன். நிலவு நாம் எண்ணி வருவதுபோல இயற்கையான துணைக் கோள் அல்ல அது வேற்று கிரகவாசிகளின் மாபெரும் விண்கலம். இதைப் படிக்கும்போது உங்களுக்கு ஏற்படும் திகைப்பு அல்லது நக்கல் எனக்குத் தெரிந்ததே. ஏனென்றால் நானும் முதன் முதலில் இதைப் படித்தபோது இப்படித்தான் உணர்ந்தேன். ஆனால் இந்த நிலவு ஒரு வேற்றுகிரக  விண்கலம் என்ற தியரி சற்று ஆழமாக நோக்கவேண்டிய கருத்துக்களை ஒட்டியே பேசப்படுகிறது.

70களின் துவக்கத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள் இருவர் எழுதிய ஒரு புத்தகத்தில் இதைப் பற்றிய முதல் சிந்தனை விதை விதைக்கப்பட்டது. மைக்கல் வாஸின், அலெக்சாண்டர் ஷெசெபர்கவ் என்ற இரண்டு ரஷ்யர்கள் இந்தத் தியரியை உலகத்துக்கு அறிமுகம் செய்தார்கள். இதை ஆங்கிலத்தில் ஸ்பேஸ்ஷிப் மூன் தியரி (The spaceship moon theory)  என்று அழைக்கிறார்கள்.

நிலவு குறித்த சந்தேகங்கள்;

1. பூமியின் ஈர்ப்புச் சக்தியைத் தாண்டிய அளவுக்கு நிலவு மிகப் பெரிய அளவினாலான கோள்.  எனவே பூமியின் ஈர்ப்பின்படி நிலவு இங்கே வந்திருக்க முடியாது.

2. பூமி உருவானபோது அதோடு ஒட்டாமல் தனியே பிரிந்த  ஒரு துகளே நிலவு என்ற பொதுவான கருத்து ஒரு  பொய். நிலவிலிருந்து கொண்டுவரப்பட்ட நிலவுக் கற்கள் பூமியை விட பழமையானவை என்றறியப்பட்டுள்ளன.

3. நிலவுக் கற்களின் தனிமங்கள் பூமியில் இல்லாதவைகள்.

4. ஏன் நிலவானது ஒரு புதிர் போல எப்போதும் ஒரே பக்கத்தை பூமிக்கு காண்பித்தபடி சுற்றிவருகிறது?

இதன்படி  வேற்றுகிரகவாசிகள் நிலவை நமது பூமியின் அருகே கொண்டுவந்திருக்கலாம்  என்றும் அல்லது  இயற்கையாக பூமியின் அருகே நிலை கொண்டுவிட்ட நிலவை வேற்று கிரகவாசிகள் தங்களது விண்கலமாக மாற்றிக்கொண்டார்கள் என்றும் நம்பப்படுகிறது. இதற்கு இவர்கள் காட்டும் காரணம் நிலவின் மேல் காணப்படும் பள்ளங்கள்.

கிரேட்டர்கள் எனப்படும் நிலவுப் பள்ளங்கள் மர்மமான முறையில் தட்டையாக தோன்றுவது ஏன் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. உதாரணமாக பூமியில் மில்லியன் வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு விண்கல் மோதலில் உண்டான பள்ளம் மிக மிக ஆழமாக காணப்படுகிறது. (இது அட்லாண்டிக் கடலின் கீழே இருக்கலாம்  சொல்லப்படுகிறது.) இந்த விண்கல் மோதலில்தான் டைனோசர்கள் ஒரேடியாக ஒரே இரவில் மொத்தமாக அழிந்தன என்ற கருத்தும் தற்போது பெரிய அளவில் அங்கீகாரம் பெற்று வருகிறது.

மேலும் பல பள்ளங்கள் நமது பூமியில் விண்கல் மோதலினால் ஏற்பட்டுள்ளன. அவை பல மைல் தொலைவுக்கு ஆழமாக காணப்படும் அதே வேளையில் எந்தவித பாதுகாப்பு வளையங்களும் (ஓசோன் லேயர் போன்று) இல்லாத நிலவில் ஏற்படும் பள்ளங்கள் அதிக ஆழத்தில் இருக்கவேண்டும் ஆனால் வியப்பான வகையில் நிலவுப் பள்ளங்கள் வெகு தட்டையாக தோற்றமளிக்கின்றன. நான்கு அல்லது ஐந்து மைல் அளவிலேயே இவை இருக்கின்றன. இதன் பின்னணியில் என்ன விஞ்ஞான காரணம் இருக்க முடியும் என்று ஆராய்ந்தால் கிடைக்கும் பதில் நம் நிலவு நம்பிக்கையை தகர்த்துப் போடுகிறது.

ஆங்கிலத்தில் Hollow Moon Theory என்றழைக்கப்படும் சதிக்கதையின் படி நிலவின் உட்பகுதி நிஜத்தில் மற்ற கோள்கள் போன்று அடர்த்தியான பாறைகளால் ஆனதல்ல. நிலவின் உட்பகுதி பெரிய குழி போன்றது. மனித இனம் பூமியில் தோன்றும்  முன்னே நிலவில் இறங்கிய வேற்று கிரகவாசிகள் நிலவின் உட்பகுதியில் இருந்த கடிமனான பாறைகளை எதோ காரணங்களுக்காக (வெற்றுப் பகுதியை உருவாக்க அல்லது அந்தப் பாறைகளில் இருந்த தனிமத்துக்காக) முழுவதும் குடைந்து எடுத்துவிட்டதால் உண்டான   பவுடர் போன்ற நுண் துகள்களே   நிலவின் மேலே காணப்படும் நிலவு மண் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு நிலவின் உட்பகுதியை குடைந்து அதைச் சுற்றி மிக மிகத் தடிமனான ஒரு ஏலியன் உலோகத்தால் அதை பூசி அல்லது தடுப்புச் சுவர் அமைத்து உள்ளே அவர்கள் பல சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக சந்தேகர்கள் யூகம் கொள்கிறார்கள். எனவேதான் நிலவின் மீது மோதும் விண்கற்கள் நான்கு ஐந்து மைல் தொலைவைத் தாண்டி ஆழமாக பள்ளங்கள் ஏற்படுத்த முடியவில்லை என்றும்  அந்த தட்டையான பள்ளங்கள் நிலவின் மேற் பகுதியில் உள்ளனதன் காரணம் இதுதான் என்றும் இதன் மர்மத்தை உடைத்துச் சொல்கிறார்கள் அவர்கள்.

எதற்காக வேற்றுகிரகவாசிகள் இப்படியான சோதனைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதற்கான விடை இல்லை. அதை நம்மால் அறிந்துகொள்ள இயலாது. யூகங்கள் மட்டுமே சாத்தியம். மேலும் இந்த சோதனைகள் நடைபெறும் நிலவின் பகுதியானது நம்மால் எப்போதுமே காண முடியாத நிலவின் இருண்ட பகுதி என்றும் (The Dark Side Of The Moon)   நிலவு எப்பொழுதுமே பூமிக்கு தன் ஒரே பக்கத்தையே காண்பித்தவாறு சுற்றிவருவதன் மர்மம் இதுவே என்றும் பொதுவாக நம்பப்படுகிறது.

நிலவில் மனிதன் இறங்கினானா என்ற கேள்வியை சற்று ஒதுக்கிவிட்டு கீழே இருக்கும் கருத்தை ஆராயலாம். நிலவில் அப்போலோ 11 விண்கலம் இறங்கியபோது நீல் ஆர்ம்ஸ்ட்ராங் இந்த வேற்றுகிரகவாசிகளை எதிர்கொண்டாதாக ஒரு கதை நிலவுகிறது.  நீல் ஆர்ம்ஸ்ட்ராங்-ஹூஸ்டனுக்கும் இடையேயான தகவல் தொடர்பு இரண்டு நிமிடங்கள் முற்றிலும் அற்றுப்போனது. அவர் கருத்துப்படி நிலவில் மிக மிகப் பெரிய இரண்டு வேற்றுகிரக விண்கலங்கள் அங்கே ஏற்கனவே இருந்தன.

ஓட்டோ பைண்டர் என்ற ஒரு நாசா விஞ்ஞானியின் கருத்துப்படி அமெரிக்க ஹேம் ரேடியோக்கள் அப்போது நிலவில் நிகழ்ந்த உரையாடலை கிரகித்துக் கொண்டன. அந்த இரண்டு நிமிட வானொலி  அமைதியில் (Radio Silence)  நிகழ்ந்த உரையாடல்:

ஆர்ம்ஸ்ட்ராங்: என்னது அது? அதுதான் எனக்குத் தெரிய வேண்டும்...

மிஷன் கண்ட்ரோல்: அங்கே என்ன? மிஷன் கண்ட்ரோல் அப்போலோ பதினொன்றை அழைக்கிறது...

ஆர்ம்ஸ்ட்ராங்: இந்த இயந்திரங்கள் மிகப் பெரியதாக இருக்கின்றன. மகா பிரம்மாண்டமானவை.. கடவுளே, கண்டிப்பாக நீங்கள் இதை நம்பப்போவதில்லை.. நிலவின் பள்ளங்கள் உள்ள அந்தப் பகுதியில் நான் இன்னும் சில விண்கலங்களை இங்கே பார்க்கிறேன்.. நிலவின் மேலே அவை நின்று கொண்டிருக்கின்றன எங்களை கவனித்தவாறு...

நாசா அப்போலோ 17க்குப் பிறகு தனது நிலவுத் திட்டத்தை திடுமென நிறுத்திக்கொண்டது  வேற்றுகிரகவாசிகளின் எச்சரிக்கையினால்தான் என்று சிலர் நம்புகிறார்கள். லூனா பேஸ் (Luna Base) என்றழைக்கப்படும் இந்த வேற்று கிரகவாசிகளின் சோதனைகள் குறித்து நாசா அறிந்தே இருக்கிறது என்ற கருத்தும் இருக்கிறது.


நிலவு குறித்து மேலும்  பல நம்ப இயலாத கருத்துக்கள் இருக்கின்றன. அதில் ஒன்று டைம் ட்ராவல் சம்பந்தப்பட்டது.  கால பிரயாணம் செய்து பிற்கால நமது சந்ததியினர் ,மனிதன் உருவாகும் முன்னரே இங்கு வந்து நம்முடைய நல் வாழ்வுக்காக நிலவை அமைத்தார்கள் என்ற கருத்தும் பரவலாக எண்ணப்பட்டு வருகிறது.

கொஞ்சம் நிலவு கொஞ்சம் புனைவு என்பதை நிஜமாக்கும் இத்தனை சங்கதிகள் சற்று ஆச்சர்யம் சற்று அதிர்ச்சி அளிப்பவை என்பதை நானறிவேன். ஆனால் இதை நம்புவதும், ஒரேடியாக தூர எறிவதும் அவரவர் விருப்பதிற்க்குரியது.

நிலவைப் பற்றி இன்னும் நாம் பல கவிதைகள் புனைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆனால் நிலவை காணும் பொழுதெல்லாம் இந்த வட்ட வடிவ வெண்ணிற அதிசயம் நம்மை கண்காணிக்கும் ஒரு வான்வெளிக் கண் என்பதை சற்று நினைவில் கொள்வது அவசியம் என்று தோன்றுகிறது.





 இசை விரும்பிகள் XXVIII - எம் எஸ் வி :  தீரா இசை.








13 comments:

  1. ஹலோ காரிகன்

    என்ன இது இதுவரை நான் சற்றும் கேள்விப்படாத சங்கதிகளாக இருக்கிறது. நிலவை பொய் என்று சொன்ன முதல் நபர் நீங்களாகத்தான் இருக்கும் . பிரபஞ்சம் உருவானபோது எல்லாமே உடனடியாக உருவாகவில்லை . கொஞ்சம் கொஞ்சமாகவே பிரபஞ்சம் விரிவடைந்தது. பூமியும் நிலவும் அப்படியே உருவாகி இருக்க முடியும். இரண்டும் சூரியனிலிருந்து உருவானதாக நம்பப்படுகிறது. பூமியும் நிலவும் ஒரே வயதுடையது என்ற நிரூபணமும் உண்டு

    கூலும் விதிப்படியே பிரபஞ்சம் உருவாகி இருக்க முடியும் எனவும் நம்பப்படுகிறது. வானவியலில் பெரிய பொருள் சிறிய பொருளை ஈர்த்து தன்னை நோக்கி சுழல வைக்கும் . இது universal law . இதை மறுதலிக்கும் விதியை யாரும் இதுவரை நிறுவவில்லை.

    செயற்கைக் கோள்களை மனிதன் வான வீதியில் நிலை நிறுத்தி சுழல வைப்பதும் இந்த விதியின் அடிப்படையில்தான்! கெப்ளர் விதி போன்ற ஒரு சில விதிகளின் அடிப்படையில் வான் பொருட்களின் இயக்கம் புரிந்து கொள்ளப்பட்டது.

    சூரிய குடும்பத்தில் அமைந்த இயற்கையான துணைக்கோள் என்று நிலவை மட்டுமே எல்லோரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் . அதையே ஏலியன் கொண்டு வந்து நிலை நிறுத்தியது என்றும் நிலாக்குழிகளுக்குள் ஏலியன் ஆராய்ச்சி செய்கிறார்கள் என்றும் என்ன புதுக் கதை இடுகிறீர்கள் ? யாரோ விட்டிருந்தாலும் அதை நம்பும் அப்பிராணியாக இருக்கிறீர்களே!

    ஏலியன் இருப்பது விஞ்ஞானப் பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. எல்லாமே ஜோடிக்கப்பட்டவைகள் .

    ReplyDelete
  2. இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் சுவாரஸ்யம் என்னவென்றால் விஞ்ஞானிகளின் பற்பல கூற்றுக்களையும் ஏற்றுக்கொள்ளவேண்டியவர்களாக நாம் இருக்கிறோம் என்பது. உலகில் அதிகம் பொய் சொல்லக்கூடியவர்களாக விஞ்ஞானிகள் போன்று தோன்றுபவர்களே இருக்கிறார்கள். விஞ்ஞானத்தில் அதுவும் விண்வெளி விஞ்ஞானத்தில் முற்று முடிவாக இதுதான்விஷயம் என்பது இன்னமும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் நிருபணத்துக்கு வரமுடியாது. அதனால் இம்மாதிரியான சரடுகள் என்றென்றைக்கும் இருந்துகொண்டுதான் இருக்கும்போலும்.

    ReplyDelete
  3. Whether its True or False... But very much intresting to read..
    (Upcoming article is going to create lot of arguments between our friends)

    ReplyDelete
    Replies
    1. Thanks for the comment Mr. Xavier.

      True or not, nothing we can do about it. So let's enjoy the moon.

      Delete

  4. இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. வாங்க யாதவன் நம்பி,

      வாழ்த்துக்கு நன்றி.

      உங்களுக்கும் என்னுடைய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள். என்ன? சற்று தாமதமாகிவிட்டது.

      Delete
  5. வாங்க சால்ஸ்,

    பதிவை ஒழுங்காக படிக்கவே மாட்டேன் என்று ஏதாவது ஆணை எடுத்திருக்கிறீர்கள் போல. இது ஒன்றும் என்னுடைய சொந்த கற்பனை அல்ல. இப்படியும் ஒரு கருத்து இருக்கிறது என்றே குறிப்பிட்டுள்ளேன். உடனே இதையெல்லாம் நம்பும் அளவுக்கு நான் அப்பிராணி என்ற குதர்க்கம் கலந்த விமர்சனம். உங்களுக்கு புதியதாக இருப்பதெல்லாம் இல்லை என்றாகிவிடாது. விஞ்ஞானம் இன்னும் பல அதிர்சிகளை உள்ளடக்கியே வைத்துள்ளது. பல உண்மைகளை உலக அரசாங்கங்கள் சாமானிய மக்களிடமிருந்து மறைத்து வருகின்றன. எதையும் நாம் உறுதியாக கூற முடியாது.

    ReplyDelete
  6. ---இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் சுவாரஸ்யம் என்னவென்றால் விஞ்ஞானிகளின் பற்பல கூற்றுக்களையும் ஏற்றுக்கொள்ளவேண்டியவர்களாக நாம் இருக்கிறோம் என்பது. உலகில் அதிகம் பொய் சொல்லக்கூடியவர்களாக விஞ்ஞானிகள் போன்று தோன்றுபவர்களே இருக்கிறார்கள்.---

    வாங்க அமுதவன்,

    நீங்கள் சொல்வது சரிதான். இந்த விண்வெளி விஞ்ஞானிகள் தினந்தோறும் கண்டுபிடிக்கும் "உண்மைகள்" புரிவதேயில்லை. டைனோசர்கள் மொத்தமாக காணாமல் போனது பற்றி இவர்கள் ஒவ்வொருவரும் சொல்லும் காரணங்கள் இருக்கிறதே படித்தால் டைனோசர் என்று ஒன்று இருந்ததா என்ற சந்தேகமே வரும். இதில் ஹாலிவுட் இயக்குனர்கள் இன்னொரு பக்கம் தங்கள் விருப்பம் போல விஞ்ஞானத்தை வளைத்து,சுருக்கி,நீட்டி, உடைத்து கதை அளப்பார்கள்.

    நிலவு நிஜமில்லை என்ற கருத்து அதிர்ச்சி அளிப்பதாக இருந்ததால் ஒரு சிறிய உந்துதல் ஏற்பட்டது பகிர வேண்டும் என்று. மேலும் இசைக்கு சற்று ஓய்வு கொடுக்கலாம் என்ற எண்ணமும் ஒரு காரணம்.

    ReplyDelete
  7. தொடர்கிறேன். அருமையான பதிவு..நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி.

      தொடருங்கள்.

      Delete
  8. வாழ்வின் சுவாரஸ்யங்களில் ஒன்று...
    விசயங்களை அப்படியே நம்புவது ..
    அறிவியல் நிருபணம் இருந்தாலும் எதிர்கேள்விகள் இல்லாமல் ... எப்படி..
    நியூட்டனை கொண்டாடும் அதே உலகு
    அவர் சொன்னதையெல்லாம் அப்படியே நம்பியதால் இயற்பியல் ஒரு நூற்றாண்டு சவலைப் பிள்ளையாக இருந்தது...

    சரி இசைப் பதிவரே ஏன் இந்தத் திடீர் சிந்தனை மாற்றம்..
    எத்துனை அற்புதமான இசைப் பதிவுகளை தந்தவர் நீங்கள் திடீரென ஓர் மாற்று சிந்தனை ?

    அவப்போது நமது களத்தை மாற்றிக் கொள்ளாவிட்டால் படைப்பாற்றல் மழுங்கிவிடும் என்பதற்காகவா ?

    கடந்த பதிவில் நாசாவும் ஸ்டான்லி குப்ரிக்கும் சேர்ந்து ஒரு ட்ராம செய்தார்கள் என்ற கருத்தையும் நினைவில் வைத்திருக்கிறேன்.

    இந்தப் பதிவில் நிலவின் பிரமாண்ட இயந்திரங்கள்?

    என்னைப் பொறுத்த வரை நிலவு ஒரு துணைக்கோள்தான் ..
    அது ஒரு விண்கப்பலாக இருந்தால் இத்துணை நூற்றாண்டுகள் நிற்க அவசியம் இல்லை.

    நான் இந்தத் தியரியை மருந்துக்குகூட நம்பவில்லை...

    எனி ஹவ் நல்ல பதிவு...சுவாரஸ்யமா இருந்தது..

    ReplyDelete
  9. வாங்க மது,

    நிலவு துணைக் கோள் என்பதில் மாற்றுக்கருத்தைக் கொண்டுவரவது என் எண்ணமல்ல. ஏனென்றால் நானே இதை சீரியஸாக நம்பவில்லை. இருந்தும் நிலவு பற்றிய இது போன்ற நாமறியாத சிந்தனைகளும் உலகில் உலா வருகின்றன என்பதை சொல்ல விரும்பினேன்.

    இசைப் பதிவுகள் எழுதுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. கொஞ்சம் பாதை விலகிச் செல்வதால் அந்த பாசம் மாறிப் போகுமா என்ன? (தாழம்பூவை தூர வைத்தால் வாசம் விட்டுப் போகுமா? என்று எதிர் பாட்டு கேட்கிறதா?) நல்லது. இசை மட்டுமே எனது எழுத்தாக இருப்பதில் உடன்பாடு இல்லை. அவ்வப்போது வேறு பக்கம் பார்ப்பதில் ஒரு சுகம் இருக்கிறது. (மனைவியுடன் வெளியில் போகும் போதும் வேறு பெண்களை நோக்கும் ஆண்களை இங்கே ஒப்பீடு செய்ய வேண்டாம்.) வேண்டுமானால் இப்படி சொல்லலாம். காபியே அருந்திக்கொண்டிருக்காமல் சில சமயங்களில் தேநீர் அருந்துவதில்லையா? அதுபோலத்தான். அடுத்து வருகிறது மீண்டும் இசை.

    ஆணாதிக்கம் பற்றி ஒரு பதிவு எழுத விருப்பம். ஆனால் அதில் நான் சொல்லும் கருத்துக்களுக்கும் எழுத்துக்கும் எந்த விதமான எதிர்வினை இருக்கும் என்று தெரியவில்லை. சரியான தருணத்தில் எழுத இருக்கிறேன். அரசியல், மதம் இரண்டையும் பற்றி எனக்குத் தீவிர எண்ணங்கள் இருந்தாலும் அங்கே செல்வதில் சிறு தயக்கம். அவை இரண்டும் புதைகுழிகள். மற்றபடி எல்லா சாலைகளிலும் பயணிக்க ஆசை.

    வருகைக்கு நன்றி நண்பர் மது. தொடருங்கள்...

    அடுத்த பதிவில் சந்திப்போம்.

    ReplyDelete