Saturday, 16 January 2016

இசை விரும்பிகள் XXIX: கரையாத கானம்

  புத்தாண்டு கோலாகலங்கள் மேற்கத்திய நாகரிக சாயம் பூசிக்கொண்டுவிட்டன. மது பாட்டில்களும், பீப் வார்த்தைகளும், விரைவு பைக்குகளும், மரியாதை தொலைத்த  விபரீத  வாழ்த்துக்களும், சில திடீர் மரணங்களும் நம் மண்ணின் தற்போதைய நச்சுக் கலாச்சாரமாக உருமாறி  அசுர முகத்துடன் ஆபத்தான  ஆர்ப்பாட்டங்களோடு புத்தாண்டை வரவேற்கின்றன. இந்த பெருநகர் கலாச்சாரம் உலகமெங்கும் அவரவர் மொழிகளில் பிரதியெடுக்கப்படுகிறது.  மெட்ரோபோலிஸ் நகரங்களுக்கு வெறும் நவீன கட்டிடங்களும், திடமான சாலைகளும், வேகமான கார்களும் மட்டும் போதாது. இரவு வாழ்க்கையும், அதைக் கொண்டாடும் போலி நியாயங்களும், பாசாங்கான மேதாவித்தனமும் கூடவே அவசியப்படுகின்றன. சுமார் பத்து வருடங்களாக நாம் கொண்டாடும் புத்தாண்டுக் களியாட்டத்தில் இதன் கூறுகளை நம்மால் அதிக சிரமங்களின்றி  காண முடியும். இந்த வகை கொண்டாட்டங்கள் வேக ஓட்டத்தில் ஏற்பட்ட மற்றொரு கலாச்சார விபத்து.  இன்னொரு   பண்பாட்டுப் பலி.

   ஏறக்குறைய எல்லாமே மாறிவிட்டது. வணிக நிர்ப்பந்தங்கள், விடலைத் துடிப்புகள், அர்த்தமில்லாத ஆர்ப்பாட்டங்கள், கண நேர அபத்த சந்தோஷதிற்காக  உயிரை விலை பேசும் விபரீதங்கள்,  இனக்  கவர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் இச்சைக்கான புதிய வழிகள் என  நமது புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் வெறும் துள்ளல்களாகவே   துடிக்கின்றன. இது ஒரு இன்னொரு தினம் என்ற எண்ணம் எனக்கு மட்டும்தான் இருக்கிறதா என்று தெரியவில்லை.

    ஆனால் சில சங்கதிகள் இன்னும் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. அவை அப்படியே நிலைகொண்டுவிட்டன. எத்தனை காலங்கள் ஆனாலும்  எப்படி வாராயோ என் தோழி வாராயோ   ஒரு திருமணத்தில் ஒலிப்பதும், மானுத்து மந்தையிலே சகோதர சீர் வரிசை கொண்டாட்டத்தில் பாடப்படுவதும் மாறாதோ அதேபோல புத்தாண்டு என்றாலே இந்தப் பாடல்தான் என்றாகிவிட்டது.

    இந்தப் புத்தாண்டில் மீண்டும் அதே பாடலை நான் கேட்டேன். 25 வருடங்கள் காற்றில் கரைந்த பின்னரும் புத்தாண்டை இன்றும் அதே இளமையுடன் இனிமையுடன் வரவேற்கும் அந்தப் பாடலை மீண்டுமொருமுறை கேட்டேன். அது என்ன பாடல் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

  புத்தாண்டை வரவேற்க நம் தமிழ்த் திரை வெகு சில பாடல்களையே அளித்துள்ளது.

    நூற்றுக்கு நூறு படத்தின் நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும், சங்கிலியின் நல்லோர்கள் வாழ்வைக் காக்க நமக்காக நம்மைக் காக்க என கைவிரல்கள் எண்ணிக்கையிலேயே புத்தாண்டுப் பாடல்கள் நம்மிடம் உண்டு. இதன் நீட்சியாக 82இல் வந்த ஒரு பாடல் புத்தாண்டின் மின்சாரத் துள்ளலை இழை இழையாக கேட்பவருக்குள் துடிக்கச் செய்யும்.  அந்தப் பாடல் இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ. 

  நகை முரணாக இளையராஜாவை நான் கடுமையாக விமர்சிக்கும் சகலகலாவல்லவன் என்ற குப்பையில் கிடைத்த ஒரே ஒரு அசந்தர்ப்பமான, அதிரடியான   பாடல்தான் இந்த  இளமை இதோ இதோ. சொல்லப் போனால் அந்தக் கண்றாவிப் படத்தின் ஒரே ஒரு saving grace இந்தப் பாடலே.

   எண்பத்தியிரண்டிலிருந்து ஏறக்குறைய 25 வருடங்களாக நமது ஒவ்வொரு புத்தாண்டின் துவக்கமும் இந்தப் பாடலின்றி அமைந்ததில்லை. இதை சமன் செய்யும் மற்றொரு பாடல் இன்றுவரை கானல் நீர்தான்.  இளையராஜாவின் இசையில்  அரிதாக அகப்படும் விரைவான எல்லையற்ற கொண்டாட்டம் இதில் ஏகத்துக்கும் இரைந்திருக்கும். அதைவிட மிக முக்கியமாக இன்றைய நவீன இசைக்கு சற்றும் குறையாத  பொலிவுடன் இன்றும்  இது ஒலிப்பது ஆச்சர்யம்தான்.

  பாடல் வரிகள் வழக்கம்போலவே சராசரி வகை. குத்துவேன் வெட்டுவேன் பூ சுத்துவேன் குஸ்தி போடுவேன் என்று வாலித்தனம் (காலித்தனம்!) வரிக்கு வரி தெறிக்கும் முரட்டுத் தற்பெருமை பேசும் பாடல். அதிலும் ஆரம்பத்தில் வரும் புத்தாண்டு வாழ்த்துக்குப் பிறகு எந்த இடத்திலும்  ஒரு புத்தாண்டுப் பாடலுக்கான எந்தவித தனித்துவமும் இல்லாத ஒரு டெம்ப்ளேட் ஹீரோயிஸம் துடிக்கும்  நடனப் பாடல். இருந்தும்  இளையராஜாவின் குதூகல இசையில் இந்தப் பிழைகள் கரைந்துபோய் விடுகின்றன.

   பாடலின் துவக்கத்தில் வரும் அந்த டெம்போ எகிறும் டிரம் இசை போனி எம் மின் நைட் பிளைட் டு வீனஸ் பாடலின் பிரதியாக இருந்தாலும் அதன் பின் இளையராஜா பாடலை தமிழ் பாணிக்கு கொண்டுவந்துவிடுகிறார். ஏகத்தும் கிடார், டிரம்பெட், டிரம்ஸ் என அந்த இளம் வயதில் அசுர அதிரடியாக இப்பாடல் என் செவிகளை நிரப்பியது. எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் காட்டிய  ஆனந்த உணர்வை இளமை இதோ வில் மீண்டும் கண்டேன்.

   பாடல் வந்த புதிதில் இதை நானும் எனது நண்பர்களும்  கொண்டாடியது என் நினைவில் நிழலாடுகிறது. இதே போன்று இன்னொரு பாடல் எப்போது வரும் என்ற என் ஆவல் எனக்குள் ஒருவன் படத்தின் மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு பாடலில்தான் நிறைவேறியது.  அதற்குள் எனது பாதையில் மேற்கத்திய மலர்கள் பூத்துவிட்டன.

 அதே சமயத்தில் இதே படத்தின் மற்ற அனைத்துப் பாடல்களும் இளையராஜா பற்றிய எனது பார்வையை முற்றிலும் மாற்றியதும், அவரது இசையை விட்டு நான் கொஞ்சம் கொஞ்சமாக விலகி வந்ததும்  என் நினைவுக்கு வருகிறது.

  இருந்தும் இளமை இனிமை கொண்ட இன்னொரு புத்தாண்டுப் பாடல் நம் இசையில் பிறக்கும் வரை.....  ஒவ்வொரு புத்தாண்டும் கொண்டாடும் பாடலாகவே  இது இருக்கப் போகிறது.
அடுத்து: இசை விரும்பிகள் XXX :  எண்பதுகள் - இசையுதிர்காலம்.

14 comments:

 1. வானொலிக்காரர்களோ, டிவி நிலையத்தினரோ அவர்களும் என்னதான் செய்வர்? அந்தக் குறிப்பிட்ட நாளை நினைவு படுத்தும் பாடல் எது இருக்கிறதோ அதனைத்தான் ஒலி\ஒளி பரப்பச் செய்வர். முன்பெல்லாம் தீபாவளி என்றால் கல்யாணபரிசு படத்தில் வந்த 'உன்னைக்கண்டு நான் ஆட என்னைக்கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி' பாடல்தான். ஒருமுறை கமலஹாசன் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி நடத்த வந்தவர் ஆரம்பத்திலேயே "இந்த நிகழ்ச்சியில் நான் உன்னைக்கண்டு நான் ஆட பாடலைப் போடப்போவதில்லை" என்று அறிவித்தபடியேதான் நிகழ்ச்சியைத் தொடங்கினார் என்பதும் ஞாபகம் வருகிறது.

  ReplyDelete
 2. #மிக முக்கியமாக இன்றைய நவீன இசைக்கு இணையாக சற்றும் பொலிவு மாறாமல் இன்றும் இப்பாடல் ஒலிப்பது ஆச்சரியமாகத்தானிருக்கிறது #
  இசைஞானியின் இசை இன்றல்ல.நேற்றல்ல .என்றும் ஒலிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. இளையராஜாவின் இசை மட்டுமல்ல, நிறையப்பேரின் இசை அப்படித்தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் இங்கு சொல்லவருவது. ஒருவரை மட்டுமே தூக்கிப்பிடிக்கும் கலாச்சாரத்தைத்தான் இன்றைய தமிழ்ச் சமூகம் யோசித்துப் பார்க்கவேண்டும் என்பதுதான் இங்கே சொல்லப்படும் செய்தி.

   Delete
  2. அமுதவன் ஸார்,

   கிடைத்த கேப்பில் சைக்கிள் ஓட்டுவது என்பார்களே அதுபோலத்தான் இது. நல்ல பதில் சொல்லியிருக்கிறீர்கள்.

   Delete
 3. இது உங்கள் ப்ளஸ்
  ரசிக்கிற விசயங்ககளை எங்கிருந்தாலும் பகிர்வது என்பது பெரிய விசயம்
  உங்களின் நிலைப்பாட்டை அறிந்தவன் என்கிற முறையில் இந்தப் பதிவு எனக்கு மிகவும் பிடித்தமானது.

  நிகில் குறித்து சில செய்திகள்

  ReplyDelete
 4. வணக்கம் காரிகன்

  நீண்ட பதிவாயிருக்கும் என நினைத்து மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்து வாசிக்க ஆரம்பித்தால் இப்படி பொசுக்கென்று முடித்து விட்டீர்களே!

  முதல் முறை கொஞ்சம் நியாயமாக இளையராஜாவின் பாட்டை ஒப்புக் கொண்டுள்ளீர்கள் . ஆனாலும் ஒரு ' க் 'கன்னா வைக்காமல் இளையராஜா வசை பாடாமல் முடிப்பதில்லை என்ற உங்களின் நேர்மை எனக்குப் பிடிக்கிறது . ஏனென்றால் அதுதானே காரிகன்.

  புத்தாண்டு பாடல்கள் சினிமாவில் அதிகமாக வரவில்லை . இளையராஜாவின் இன்னொரு புத்தாண்டு பாடல் இருக்கிறது. 1991 ல் வெளிவந்த வெற்றிக் கரங்கள் என்னும் பிரபு நாயகனாக நடித்த படத்தில்
  ' நள்ளிரவு மெல்ல மெல்ல ' என்ற பாடல்தான் அது! பாடல் கேட்பதற்கு நன்றாகவே இருக்கும் . ஆனாலும் பிரபலம் அடையாத பாடல் . 'இளமை இதோ இதோ ' வை முறியடிக்க ராஜாவாலேயே முடியவில்லை.

  ReplyDelete
 5. அருமையான விமர்சனம். மிக அபூர்வமாக ஏதாவது ஒரு பாடல் இப்படி அமைந்துவிடுகிறது. எனக்கென்னவோ சகலகலாவல்லவனில் எதுவுமே பிடிக்கவில்லை. 'சங்கிலி'யில் வரும் நல்லோர்கள் வாழ்த்து சொல்ல நல்ல பாடல். இன்னும் விரிவாக நுணுக்கமாக சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

  ReplyDelete
 6. வாருங்கள் அமுதவன்,

  வருகைக்கு நன்றி. சில இணைய சிக்கல்களால் நிறைய எழுத முடியவில்லை.

  புது வருடப் பாடல்கள் நம்மிடம் அதிகம் கிடையாது. எனவே இருப்பதை வைத்துக்கொண்டு ஆட்டம் போட வேண்டியதுதான். அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். உண்மையில் இந்தப் பாடல் ஒரு புத்தாண்டுப் பாடலே அல்ல. கமல் என்ற நடிகனின் சினிமாத்தன சாகசங்களை விவரிக்கும் பாடல். ஆனால் துவக்கத்தில் புதுவருட வாழ்த்து சொல்வதால் இதற்கு ஒரு புத்தாண்டு சிறப்பு ஒட்டிக்கொண்டுவிட்டது. அவ்வளவுதான். இது போன்ற அபத்தங்கள் நமக்கு ஒன்றும் புதிதல்ல.

  நீங்கள் தீபாவளிப் பாடல்கள் பற்றி சொல்லியிருந்தீர்கள். உண்மைதான். கல்யாணப் பரிசின் "உன்னைக்கண்டு நான் ஆட என்னைக்கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி" நான் முன்பு தீபாவளி நாட்களில் கேட்டதுண்டு. பிறகு "பட்டாச சுட்டு சுட்டு போடட்டுமா" என்றொரு பாடல் பூவே பூச்சுடவா படத்தில் வந்து சில ஆண்டுகள் தீபாவளி தலைவலி தந்தது. படத்தில் எந்த சூழலில் வருகிறது என்ன கருத்தைச் சொல்கிறது என்றே புரிந்துகொள்ளாமல் நாயகன் படத்தின் "நான் சிரிச்சா தீபாவளி" யைக் கூட தீபாவளி பாடல் என்று ஒலிபரப்பிய பயங்கரம் எல்லாம் நடந்ததை நீங்களே அறிவீர்கள். அதே போல அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே என்ற பாடலை கோவில் திருவிழாக்களில் ஆன்மீகப் பாடல் வரிசையில் ஒலிபெருக்கிகளில் பாடவிட்டதும் உண்டு. இந்த அபத்தங்களோடு இதுவும் ஒன்று.

  செந்தில்குமார் என்ற நண்பர் சங்கிலி படப் பாடல் இதை விட பரவாயில்லை என்று சொல்லியிருக்கிறார். நானும் முன்பு ஒரு பதிவில் அதே கருத்தையே எழுதியிருந்தேன்.

  கமலஹாசனுக்கு எ எம் ராஜா மீது என்ன காண்டோ தெரியவில்லை. அது அவருடைய மேதாவித்தனம். அவர் இளையராஜாவை கொண்டாடும் அளவுக்கு பழைய இசையமைப்பளர்களை மனதார பாராட்டுவதே கிடையாது. இளமை இதோ இதோ பாடல் மீதும் இதே தடையை அவர் விதித்தால் அவரது நேர்மையை நாம் பாராட்டலாம்.

  ReplyDelete
 7. வாருங்கள் அருள் ஜீவா,

  புத்தாண்டுக்கு இளையராஜா பாடல் போலவே பலவிதமான நிகழ்வுகளுக்கு எம் எஸ் வி, கே வி மகாதேவன், எ ஆர் ரஹ்மான் என பாடல்கள் உண்டு. உடனே வழக்கமான உங்கள் கோரஸை ---இசைஞானியின் இசை இன்றல்ல.நேற்றல்ல .என்றும் ஒலிக்கும்.----- ஆரம்பித்துவிட்டீர்கள். நான் சொன்னது எல்லா விதமான இசையையும் ரசிப்பவன் என்ற நோக்கில்தானே ஒழிய அவர் மட்டுமே சிறந்தவர் அவர் பாடல்களுக்கு மட்டுமே இனிமை இருக்கிறது என்ற தொனியில் அல்ல.

  இன்னமும் பாட்டு பாடவாவும் அனுபவம் புதுமையும் அதே இளமை பொலிவு குலையாமல் ஒலிப்பது உண்மைதானே? நீங்கள் அதையெல்லாம் கேட்டிருப்பீர்களா என்று சந்தேகமாகத்தான் இருக்கிறது.

  ReplyDelete
 8. வாங்க மது,

  சிறு வயதில் ரசித்துக் கேட்ட பாடல்கள் தந்த சுகமே தனிதான். பள்ளி காலங்களில் கிரிக்கெட் என்ற கருமாந்திரத்தை பிடித்துப் பார்த்ததை இப்போது நினைத்தால் கேவலமாக இருக்கிறது. ஆனால் இளையராஜாவின் இசையில் நான் ரசித்த பாடல்களை நினைத்து நான் வருத்தப் பட்டதே கிடையாது. ஏனென்றால் அப்போதே நான் அவருடைய சிறப்பான பாடல்களை மட்டுமே ரசித்திருக்கிறேன் என்பது இப்போதுதான் தெரிகிறது.

  ReplyDelete
 9. வாங்க சால்ஸ்,

  நீங்கள் என் பெரிய பதிவுகளை முழுதும் படிப்பதேயில்லை. பிறகு அதைப் பற்றி என்ன அக்கறை?

  இளமை இதோ இதோ பாடலின் இசை அலாதியானது. இன்றும் கேட்கத் தூண்டும் அது. ரொம்ப ஆழமான இசை அனுபவம் இல்லாவிட்டாலும் மழை காலத்து மாலை நேரங்களில் சூடாக எதையாவது சாப்பிடும் சுகம் கொண்டது இந்தப் பாடல்.

  நீங்கள் குறிப்பிட்ட அந்த நள்ளிரவு மெல்ல மெல்ல என்ற பாடலை நான் கேட்டதேயில்லை. கேட்கவும் விருப்பமில்லை. தொண்ணூறுகளில் இராவின் இசையில்தான் எல்லாமே வற்றிப் போயிருந்ததே?

  ReplyDelete
 10. வாங்க செந்தில் குமார்,

  பாராட்டுக்கு நன்றி.

  சங்கிலி படத்தின் நல்லோர்கள் வாழ்வைக் காக்க பாடல் புத்தாண்டுக்குரிய செய்தியை சொல்லும் சிறப்பான பாடல். ஆனால் இளைய தலைமுறையினரிடம் அந்தப் பாடல் எடுபடாமல் போனதன் காரணம் அதில் நடித்த சிவாஜி. மேலும் நமக்குத்தான் அர்த்தமில்லாத பாடல்கள் மீதுதானே காதல் உண்டாகும்?

  சகலகலாவல்லவன் என்ற குப்பையை விமர்சிக்க எனக்கு மிக நீண்ட பதிவு தேவைப்படும். நம் தமிழ்த் திரையின் போக்கை ஒரேடியாக ஒரு சாக்கடைக்குள் தள்ளிய "உன்னதமான" திரைப்படம் அல்லவா அது?

  ReplyDelete
 11. காரிகன்.. இளமை இதோ இதோ பாடல் மிகவும் பெரிதாக ஹிட் ஆனாலும் நான் அதை ரசித்தது இல்லை. அந்த கால கட்டத்தில் நான் நான் ஆங்கில பாடல்களை அதிகம் விரும்பி ரசித்ததால் இருக்கலாம். இந்த பாடல் மேற்கத்திய இசையோடு வந்தது. மேற்க்கத்திய இசைக்கு நான் எதற்கு இளையராஜாவிடம் வரவேண்டும்.. அந்த நேரத்தை .. Beegees, Status Quo, Beatles, Eagles கேட்டு ரசித்தேன்.

  இந்த படத்தின் ஆரம்பத்தில் ஒரு கிராமத்திய பாடல். அம்மன் கோவில் கிழக்காலே என்று நினைக்கின்றேன். அந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  மற்றும் .. நேத்து ராத்திரி யம்மா என்ற பாடல்.. பாடல்களின் வரிகள் கொச்சையாக இருந்தாலும் அது ஒரு Catchy Tune.

  ReplyDelete
 12. வாங்க விசு,

  வருகைக்கு நன்றி.

  உண்மைதான். நான் இந்தப் பாடலை ரசித்த போது கிராப்ட்வர்க் என்ற ஜெர்மானிய சிந்தசைசர் இசைக்குழுவின் பாடல்களை மட்டுமே கேட்டிருந்தேன். என்னுடைய பால்ய வயதில் இந்த இசை அப்போது எனக்கு பேரிசையாகத் தோன்றியது. மற்றபடி status quo, eagles அருகேயெல்லாம் தமிழில் வந்த மேற்கத்திய பாணி இசை வரவே முடியாது. அதே சமயம் இதே இளையராஜா பின்னாட்களில் மேற்கத்திய இசை என்று அமைத்த அக்னி நட்சத்திரம், அஞ்சலி படப் பாடல்களைவிட இது தேவலாம் என்பது என் எண்ணம்.

  இதே படத்தில் வந்த அம்மன் கோவில் கிழக்காலே என்ற பாடல் 16 வயதினிலே படத்தின் சோளம் வெதைக்கயிலே என்ற பாடலின் பிரதி. இரண்டுக்கும் இராதான் இசை. இதேபோல நிறைய தன் பாடல்களையே பிரதி எடுத்திருக்கிறார் இரா. குறிப்பாக 90களில் அவர் இசையில் வந்த பாடல்கள் பெரும்பான்மை இதுபோன்று பிரதி எடுக்கப்பட்ட சக்கைகள்தான்.

  ReplyDelete