Saturday 2 February 2019

பரவசக் குறியீடு

ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னும் இறப்பில்லா ஆணிகளால் அடிக்கப்பட்ட  அழுத்தமான   ஒரு நினைவு ஒரு உயிர்ப்போடு ஆழ்ந்திருக்கிறது. யோசித்துப்பாருங்கள். ஒரு புகைப் படமோ ஒரு பழைய கடிதமோ ஒரு இசையோ ஒரு முகமோ ஒரு வாசனையோ ஒரு திடீர் இடமோ இவை எல்லாமே நமக்குள் ஒரு அணைந்துவிட்ட ஒரு நெருப்புப் பொறியை மீண்டும் பற்ற வைக்கும். அதன் உக்கிரம் தீவிரம் அக்கினி நம்மை அந்த  பழைய காலத்துக்குள் வாரத்தைகள் இல்லாத உணர்ச்சிகளோடு இணைத்துக் கொள்ளும்.

நமக்கு வெகு நெருக்கமான சில தருணங்கள் நினைவுகளை தாலாட்டும் சில பொக்கிஷ கணங்கள் எங்கோ ஒரு புள்ளியில் புதைந்து போயிருக்கிறன. அவற்றை மீட்டுட்டெடுக்க ஒரு சிறிய இசைத் துணுக்கு போதும். அல்லது ஒரு பெயரே போதும். அப்படியானது தான் 1979 ல் வந்த ஒரு திரைப்படம் எனது பால்ய நினைவுகளின் ஒரு மின்சார குறியீடாக இன்றுவரை எனக்குள் பல இதய அதிர்வுகளை இனிப்பாக பதிவெடுக்கிறது. அது நினைத்தாலே இனிக்கும் என்ற படம்.

இந்தப் படம் வந்த போது நான் எனது நினைவுகளை பிரதி எடுக்கும் பால்ய வயதில் இருந்தேன். இன்றுவரை இப்படம் அளிக்கும் வார்த்தைப் படங்கள்  மறக்க முடியாத அனுபவங்களின் தொகுப்பு. நடிகர்கள் மீதான ஈர்ப்பைத் தாண்டிய ஒரு அடர்ந்த கோடு என்னுளில்  படர்ந்திருந்தது. அது நான் அப்போது கேட்டுக்கொண்டிருந்த எனது சமகால இசையை மீறியது. இளையராஜா எனது விருப்பத்திற்குரியவராக இருந்த காலமது.

எங்கேயும் எப்போதும் என்ற பாடல் கேட்ட எல்லோரையும் அண்டார்டிக்கா குளிர் காற்று போல ஆட்கொண்டது. அப்போது ஒரு பள்ளிக்கூடப் பையனான நான் எம்மாத்திரம். கேட்க மிகவும் பரவசமான பாடல் அது. அதன் பின் சம்போ சிவா சம்போ என்றொரு திகைப்பான பாடல். பின்னர் யாதும் ஊரே யாவரும் கேளிர். கடைசியாக இனிமை நிறைந்த உலகம் இருக்கு என்ற நெருப்புத் தொடுகை. அப்போதுதான் எம் எஸ் வி என்ற ஆளுமையின் விரலிசையில் வெளிப்படும் மரணமில்லா மெட்டுக்கள் புரிய ஆரம்பித்தன.

பாடல்கள் மட்டுமே என்னை அந்தப் படத்தை நோக்கி திரும்ப வைத்தன. இருந்தும் நினைத்தாலே இனிக்கும் அந்த காலத்து இளைஞர்களின் இதயத் துடிப்பாக நிலைத்தது. என் வயது பசங்கள் ஜெயப் பிரதாவை சிலாகித்த போது எனக்கோ நம்ம ஊரு சிங்காரி பாடலின் மீது காதல் உண்டானது.

இப்போது சமீபத்தில் ஒரு டீவி சேனலில் இந்தப் படத்தை மீண்டும் காண நேர்ந்தது. நான் எனது பால்ய நண்பர்களை கண்டுகொண்டேன். அவர்களோடு நான் உரையாடிய சம்பாஷணைகள் மீண்டு வந்தன. எத்தனை ஞாபகங்களை இந்தப் படம் எனக்குள் புதைத்து வைத்திருக்கிறது?

திரும்பிப் பார்க்காமல் கடந்து போன பல படங்களில் இதுவும் ஒன்றாக இருந்தாலும் மிக மென்மையான மேலும் ஆழமான பல ஞாபகத் தடங்களை காற்றுகள் கலைத்த நினைவுகள் போல தோன்றச் செய்யும் ஒரு பரவசக் குறியீடாக இது உயிர் பெற்றிருக்கிறது என்னுள்.  மேலும் என்னைப் போல் பலருள்.

மிகவும் பொருத்தமான தலைப்புதான்.

நினைத்தாலே இனிக்கும்.

நினைத்தாலே இனிக்கக்கூடிய பல வசந்தங்கள் நம் எல்லோரிடமும்  உயிர் பெற காத்திருக்கின்றன.









4 comments:

  1. காரிகன்,
    வெகு நாட்களுக்குப் பின் மீண்டும் ஒரு சிறிய பதிவு.பதிவின் தலைப்பும்,பதிவின் கருவான படத்தின் தலைப்பும் எவ்வளவு அருமையாக பிணைந்திருக்கின்றன.
    #நினைத்தாலே இனிக்கக் கூடிய பல வசந்தங்கள் நம் எல்லோரிடமும் உயிர் பெறக் காத்திருக்கின்றன.#
    உண்மையே.துக்கமாயினும்,சந்தோஷமாயினும் நினைவுகளால் மீட்டெடுக்கப்படும் நிகழ்வுகள் பரவசம் தருபவையாகத் தானிருக்கின்றன.
    நினைத்தாலே இனிக்கும்.தலைப்பைப் போல அதிலமைந்த பாடல்கள் எப்போது கேட்டாலும் திகட்டாத இன்பம் தருபவையே....

    ReplyDelete
  2. வாருங்கள் அருள் ஜீவா,

    நன்றி உங்களின் பாராட்டுக்கு.

    பல பதிவுகள் draft அளவிலேயே இன்னும் இருக்கின்றன. அவற்றை ஒரு முழுமையான பதிவாக மாற்றி வெளியிட போதிய அவகாசம் தேவைப்படுகிறது. பார்க்கலாம். இந்த வருடம் என்னால் இன்னும் சில பதிவுகள் எழுத முடியும் என்று தோன்றுகிறது.

    நினைத்தாலே இனிக்கும் படத் தலைப்பைப் போலவே நினைத்தால் இனிக்கக் கூடிய பல கணங்களை தேக்கி வைத்திருக்கிறது.

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் நிணைத்தாலே இனிக்கும். நிறைய பாடல்கள் இருக்கின்றன. ஒரு தொகுப்பாக எஙுகும் கிடைக்கவில்லை. மெல்லிசை மன்னரின் மிக சிறந்த பாடல்கள் நிறைந்த படங்களில் இதுவும் ஒன்று

    ReplyDelete
  4. Stilletto Titanium Hammer - Tipster Games
    Stilletto is a professional Tipster Games that titanium engagement rings have a mission and dedication ford edge titanium 2021 to providing titanium dioxide sunscreen the best in the best omega titanium sports betting titanium flash mica world.

    ReplyDelete