காற்றுக்காக கதவுகளை விரியத் திறக்கும் நாம் மூடப்படிருக்கும் சிறிய சாளரங்களை பெரும்பாலும் ஏனோ மறந்து போகிறோம்.

சிலோன் வானொலியின் எதோ ஒரு நிகழ்ச்சியில் அந்தப் பாடல் ஒரு நாள் ஒலித்த போது ஒரு தாலாட்டின் சுகம் அதிலிருந்ததை உணர முடிந்தது. காதில் இசையும் வார்த்தைகளும் ஒருசேர விழுந்த அந்த ஒரே கணத்திலேயே அப்பாடல் ஒரு மழை நேரத்து மண் வாசம் போல மனதை ஆக்கிரமித்துக்கொண்டது. சந்தேகமேயில்லாமல் மிக சிறப்பான வார்க்கப்பட்ட இசையோவியம் அது என்பதை கேட்ட ஒரே கணத்தில் சொல்ல முடிந்தது . அது : "மழையே, மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா" என்கிற அம்மா என்ற படத்தில் இடம் பெற்ற பாடல். பாடலைக் கேட்கும் போதே மனதில் மழைச் சாரல்கள் படிய மானசீகமாக நாம் மழையில் நனைவதைப் போன்ற உணர்வு தரும் சிறப்பான பாடல். அப்போது மிகவும் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்றாக இது இருந்தது. அதற்கு இசை அமைத்திருந்த சங்கர்-கணேஷ் ஏற்கனவே எனக்கு பரிச்சயமான பெயர்தான். 79 இல் வந்த கன்னிப்பருவத்திலே படத்தின் பிரசித்திப் பெற்ற பட்டு வண்ண ரோசாவாம் பாத்த கண்ணு மூடாதாம் (ரோசாப்பூ ரவிக்கைக்காரியின் உச்சி வகுடெடுத்து பாடலின் நகல் ) என்ற பாடல், நீயா படத்தின் "நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா" என்ற ஒரு பாடல், அதற்கும் முன்னே தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் குதூகலித்த ஆட்டுக்கார அலமேலுவின் "பருத்தி எடுக்கையிலே" போன்ற பாடல்கள் மூலம் நான் சங்கர்-கணேஷ் இரட்டையர்களைப் பற்றி இதற்கு முன்பே அறிந்திருந்தாலும், அதிகமாக அவர்களை அறிய முனைந்ததில்லை. அப்போது வானொலிகளில் இசைக்கப்படும் ஐந்தில் ஒன்று இவர்களது பாடலாக இருக்கும். அதே சமயத்தில் சங்கர்-கணேஷை அறிந்திராத காலங்களில் நான் கேட்ட அவர்களின் சில பாடல்கள் இன்னும் அதே சுக கீதங்களாக என் மனதை சிலிர்க்கச் செய்கின்றன. உதாரணமாக "என் காதலி யார் சொல்லவா?", "பூவிலும் மெல்லிய பூங்கொடி", "அவளொரு பச்சைக் குழந்தை", "செந்தாமரையே செந்தேனிதழே" போன்ற பாடல்களைச் சொல்லலாம்.
வியப்பான நிகழ்வாக 80களில் இளையராஜா உச்சத்தில் இருந்தபோது சங்கர் கணேஷுக்கும் ஒரு கவனிக்கக்தக்க ரசிகர் குழுமம் இருந்தது. "நடைய மாத்துன்னு ஒரு பாட்டு. சங்கர்-கணேஷ் என்னாமா விளையாடிருக்கான் தெரியுமா?" என்று குதூகலித்த நண்பர்களை நானறிவேன். (சங்கர்-கணேஷை ஒருவராகவே பாவித்து இப்படிச் சொல்வது அன்றைய காலகட்டத்தில் வழக்கமானதுதான்.) பாலைவனச் சோலையின் "பவுர்ணமி நேரம் பாவை ஒருத்தி மின்னல் போல முன்னால் போனாள்..." பாடல் அப்போது அதகளப்பட்டது. (ராப் வகையின் கூறுகளை கொண்டிருந்த பாடல் இது.) பாடலின் பல்லவியை எதோ மந்திரம் போல மனப்பாடம் செய்து அதில் சிறிது வார்த்தைத் தவறு ஏற்பட்டாலும் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் பாட முயன்ற நண்பர்கள் எனக்கு இருந்தார்கள். எங்கள் ஊரின் புகழ்பெற்ற டீ கடையாக இருந்த மோகன்ஸ் கபேவில் பெரும்பாலும் இவர்களின் பாடல்களைத்தான் கேட்கமுடியும். அவ்வப்போது வாடிக்கையாளர்களின் விருப்பதிற்க்காகாவும் வியாபார நோக்கத்திற்காகவும் இளையராஜாவின் பாடல்களும் ஒலிப்பதுண்டு.(70, 80 களில் இவ்வாறான டீ கடைகளே தமிழகத்தின் நிறுவப்படாத வானொலி நிலையங்களாக இருந்தன. இவைகளின் மூலமே பல பாடல்கள் பெரு வெற்றி அடைந்தன என்பது புனைவுகள் இல்லா சரித்திரம்.)
சங்கர்-கணேஷுக்கு இத்தனை தூரம் ஆழமான அறிமுகம் தேவையா என்றால் எனது பதில் ஆம் என்பதே. ஏனென்றால் இவர்களும் மற்ற எந்த தமிழ்த் திரை இசையமைப்பாளர்களைப் போலவே சாதித்தவர்கள்தான். பெரியதாக விளம்பரப்படுத்தப்படும் ஆடம்பரமான வணிக வசீகரங்களையே எப்போதும் நாம் கவனித்துக்கொண்டிருக்க வேண்டுமா என்ற கேள்விக்கான விடையே சங்கர்-கணேஷ் இரட்டையர்களைப் பற்றிய இப்பதிவு. தமிழ்த்திரையிசையின் இரட்டையர்கள் என்றால் அது விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்ற உண்மை நம் நெஞ்சங்களில் உறைந்து போயிருக்கிறது. இருப்பினும் அவர்களிடம் பணியாற்றிய சங்கர்-கணேஷ் இரட்டையர்களையும் (குறிப்பாக 60களின் ஆலயமணி, பாலும் பழமும் காலகட்டம்) நாம் நினைவில் கொள்வது ஒரு நல்ல, தேர்ந்த இசை ரசனையின் வெளிப்பாடு. அவர்கள் போல இவர்கள் இல்லை என்ற சம்பிரதாயமான கூற்றை சற்று தள்ளிவைத்து விட்டு இவர்களை அணுகுவது உகந்தது . ஏனென்றால் மற்றவர்களைப் போலவே சங்கர்-கணேஷ் இரட்டையர்களும் தாங்கள் அறிமுகமான புதிதில் பல அருமையான பாடல்களைப் படைத்திருக்கிறார்கள். அந்த இனிமையான கானங்கள் இன்று வரை நறுமணம் வீசிக்கொண்டிருக்கின்றன.

சங்கர்-கணேஷ் என்றால் எனக்குத் தோன்றும் ஒரு முத்திரைப் பாடல் பட்டிக்காட்டு ராஜா படத்தில் மேற்கத்திய சங்கீத ஆர்ப்பரிப்பாக ஒலிக்கும் "உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்" என்ற பாடல்தான். சிறிய வயதில் இதை முதல் முறையாக கேட்ட பொழுதும் பின்னர் கல்லூரி நாட்களில் இந்தப் படத்தைக் காண நேர்ந்த துர்பாக்கிய நிலையிலும் இந்தப் பாடல் எனக்கு ஊஞ்சலிலாடும் ஒரு உற்சாக உணர்வையூட்டியது. அபாரமான பாடல். துவக்கத்தில் வரும் அந்த ஹம்மிங், அதை தொடரும் எஸ் பி பி யின் நாட்டியமாடும் குரல், தடதடக்கும் தாளம் என்று ஒரு சரியான கலவையில் ஊறிய இனிப்பான கானம். குறிப்பாக அந்த பபப்பா பபப்பா ஹம்மிங் அந்தப் பாடலுக்கு ஒரு அற்புதமான அலங்காரம். ஒரு சிறுவனின் மனநிலையில் நான் பல வருடங்கள் இந்தப் பாடலையே தமிழில் வந்த மேற்கத்திய இசையின் அளவுகோலாக வைத்து பல பாடல்களை இதனுடன் ஒப்பிட்டு "இருந்தும் அந்தப் பாடல் மாதிரியில்லையே" என முற்றுப்புள்ளி வைத்ததுண்டு. என்னடி மீனாட்சி (இளமை ஊஞ்சலாடுகிறது), எங்கேயும் எப்போதும் (நினைத்தாலே இனிக்கும்) போன்ற பாடல்கள் கூட எங்கோ தடுமாறி சற்று தள்ளியேயிருந்தன. இப்போது அந்த அளவுகோல் மாறிவிட்டாலும் ஒரு சிறப்பான ஆங்கில இசையின் அனுபவத்தை கேட்கும் ஒவ்வொரு முறையும் இந்தப் பாடல் எனக்கு இன்றைக்கும் அளிக்கத் தவறுவதில்லை.
சங்கர்-கணேஷ் ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்திருப்பதாக (1053) இணையத்தில் ஒரு தகவல் இருக்கிறது. தமிழில் மட்டும் 418 படங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது சாதரணமாக கடந்து போகக்கூடிய சாதனை அல்ல. இருந்தும் இத்தனை படங்களுக்கு இசையமைத்தவர்கள் இன்று ஏன் தமிழ்த்திரை வரலாற்றின் இருண்ட பக்கங்களுக்குள் புதைந்து போயிருக்கிறார்கள் என்பது விளங்காத ஒரு புதிர். இது வசதியான மேலும் இலகுவான நமது இசை விருப்பங்களின் கோளாறு என்று புரிந்துகொள்ளலாம். எப்படி வி குமாருக்கு சொந்தமான பாராட்டுகள் பல சமயங்களில் எம் எஸ் வி க்கும் இளையராஜாவுக்கும் சென்றதோ அதே போல் சங்கர்-கணேஷின் இசையை இளையராஜாவுக்கு தாரை வார்க்கும் மனோபாவமும் காணப்படுகிறது. சிவப்பு மல்லி படத்தின் ஒரே saving grace என்று சொல்லத்தக்க "ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்" பாடலை பலர் இளையராஜாவின் இசை என்று நினைத்துகொண்டிருப்பதை யு டியுபில் இந்தப் பாடலை தேடிய போது அறிந்துகொள்ள முடிந்தது. (வழக்கம் போல புளித்துப்போன ராஜா ராஜாதான் பல்லவி வேறு!) இதைச் சொல்லும்போது பல ராஜா ரசிகர்களுக்கு இது எவ்வளவு கசக்கும் என்று தெரியும். நானும் இதே போன்ற தவறுகளை செய்தவன்தான். ஆனால் அதை உணரும் அதே கணத்திலேயே என் மதிப்பீடுகளையும் தீர்மானங்களையும் புதுப்பித்துக் கொள்வதில் நான் தயக்கங்கள் காட்டுவதில்லை.
சங்கர்-கணேஷின் பாடல்களைப் பற்றி விரிவாக பேசும் முன் அவர்களைப் பற்றிய பொதுவான குற்றச்சாட்டை சற்று விவாதிக்கலாம் என்று தோன்றுகிறது. இணையத்தில் ஆராய்ந்த போது மையமாக ஒரே ஒரு குற்றச்சாட்டு இவர்கள் மீது வைக்கப்படுகிறது. அது இவர்கள் எம் எஸ் வி, இளையராஜா மேலும் ஹிந்தி ஆங்கில இசையை நகல் எடுப்பவர்கள் என்னும் தடாலடியான தாக்குதல். இந்தப் பார்வை ஒரேடியாக மறுக்கப்படக்கூடியதல்ல என்பதை நான் நன்கறிவேன். இருந்தும் சங்கர்-கணேஷ் இவ்வாறான நகல்களில் தங்களின் ஆளுமையையும் முத்திரை இசையையும் ரசிக்கத்தக்க விதத்தில் கலந்து அவற்றுக்கு வேறு வடிவம் கொடுத்தார்கள் என்று சொல்ல விரும்புகிறேன். உதாரணமாக உச்சி வகுடெடுத்து பாடலைப் பின்பற்றி பட்டுவண்ண ரோசாவாம், ஒ ப்ரியா (இதயத்தை திருடாதே-இசை இளையராஜா) பாடலின் அச்சில் ஒ மை லவ் (இதய தாமரை) பாடல்கள் அமைக்கப்படிருந்தாலும் சரணங்களும் இசை அமைப்பும், வாத்திய ஒலியும் வேறுவிதமாக இருப்பது கண்கூடு. மேலும் புகழ் பெற்ற வேற்று மொழிப் பாடலின் பல்லவியை தமிழில் பயன்படுத்துவது இங்கே காலம்காலமாக செய்யப்படுவதுதான். அதையும் தாண்டி எவ்வாறு அந்தப் பாடலின் இசைக் கோர்ப்புகள் இசைக்கப்படுகின்றன, எப்படி அப்பாடல் வேறு தளத்தில் பயணிக்கிறது என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். தாய் வீடு படத்தின் பாடல்களை சங்கர்-கணேஷின் நகல் இசைக்கு ஆதாரமாகச் சொல்கிறார்கள். உண்மையில் அப்படப்பாடல்கள் முழுவதும் ஹிந்தியில் பப்பி லஹரியால் உருவாக்கப்பட்டவை.(இந்த பப்பி லஹரி நகல் இசை அமைப்பதில் கில்லாடி என்று பெயர் பெற்றவர்.) படத் தயாரிப்பாளர்கள் வணிக வசதிகளுக்காக அவற்றை தமிழில் அப்படியே பயன்படுத்திக்கொண்டார்கள். சங்கர்-கணேஷ் வெறுமனே படத்தின் பின்னணி இசை மட்டுமே செய்தார்கள். இதுவே அபூர்வ சகோதரிகள், பாடும் வானம்பாடி படப் பாடல்களிலும் நிகழ்ந்தது. அதே சமயத்தில் மங்கம்மா சபதம் (கமலஹாசன் நடித்தது) படத்தின் சொர்கத்தின் வாசல் இங்கே மைக்கல் ஜாக்சனின் உலகப் புகழ் பெற்ற பில்லி ஜீன் பாடலின் தழுவலாகவும் நான்தானே ஒரு புதுக்கவிதை (ஆணிவேர்) பாடல் பிரசித்தி பெற்ற போனி எம்மின் ரஸ்புடின் பாடலின் தமிழ்ப் பிரதியாகவும் அமைத்திருந்தார்கள். ஆனாலும் வாத்திய இசையில் வேறு வடிவங்களை இவர்கள் முயன்றிருப்பது கவனிக்கத்தக்கது.
இவர்களது மேற்கத்திய இசை பாணி எம் எஸ் வி, இளையராஜா போன்றவர்களின் பாதையிலிருந்து விலகியிருப்பதை சில பாடல்களின் பல்லவி மற்றும் இடையிசையிலிருந்து நாம் தெளிவாக காண முடியும். சொல்லப்போனால் இளையராஜாவின் (மேற்கத்திய) பாணியை விட சங்கர்-கணேஷின் இசையில் நாம் இன்னும் அதிகமாகவே மேற்கத்திய இசையின் தாக்கத்தையும் ஆளுமையையும் உணரலாம். (இளையராஜாவை விட) சங்கர்-கணேஷின் நவீன இசை மேற்கத்திய இசைக்கு வெகு அருகிலும் அதேவேளையில் அந்த அந்நிய வாசம் தூக்கலாக தெரியாத வகையிலும் மிக சிறப்பான விதத்தில் சமரசம் செய்யப்பட்டிருக்கும். syncopated drum beat இவர்களின் இசையில் ஆர்ப்பாட்டமாக துடித்துக்கொண்டு தாளமிடும். (இவ்வகையான syncopated பீட் இளையராஜாவின் இசையில் வெகு அபூர்வமாகவே கேட்கக் கிடைக்கும். (மன்றம் வந்த தென்றலுக்கு இதற்கொரு உதாரணம்.) உலகின் பிரபாலமான drum beat என்று சொல்லப்படும் ஆமென் பிரேக் (Amen Break) ட்ரம்ஸ் இசையை அதிகமாக இவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். மேலும் மயக்கம் தரும் கிடார் கார்ட்ஸ் மற்றும் guitar riffs எனப்படும் lead கிடாரின் நீட்டிக்கப்பட்ட அதிர்வு இவர்களிசையின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம். இளையராஜாவைக் காட்டிலும் சங்கர்-கணேஷ் மேற்கத்திய கலப்பிசையை வெகு அனாசயமாக, அபாரமாக, அதே சமயத்தில் நமக்கு தொல்லை தராத, அலுப்பூட்டும் பாமரத்தனமான வெற்று காலி டப்பா ஓசைகளாக இல்லாமல் இனிமையான தாலாட்டாக வழங்கியிருக்கிறார்கள்- சித்திரமே உன் விழியில், பால் நிலவு காய்ந்தது (கிடார் மற்றும் ட்ரம்ஸ் இந்தப் பாடலில் துடிப்பாக ஒலிப்பது இப்போது மறக்கப்பட்டுவிட்ட அபாரம்.), தேவி கூந்தலோ பிருந்தாவனம், சந்தன புன்னகை, சித்தர் கூட புத்தி மாறி தத்துவங்கள் சொல்லலாம், கேட்டது கிடைத்தது கோடிக் கணக்கில், எங்கள் கதை இது உங்களின் கதை, நானூறு பூக்கள், அலை அலையாக போன்ற பாடல்களைக் கேட்டால் அவர்களின் மென்மையான மேற்கத்திய இசை வடிவங்களையும், முரண்படாத விதத்தில் அவைகள் தமிழை தழுவிக்கொண்ட ஆச்சரியங்களையும் அறியலாம்.
புரிந்து கொள்ளமுடியாத வினோத விதிகளின் (கோட்பாடுகள்) துயர ரேகைகள் நம் வாழ்வில் படிவதைப் போல சங்கர்-கணேஷின் இசை எவ்வளவு இனிமையானதாக இருந்தாலும் அந்த இசைப் புதையல்கள் எடுப்பாரற்று இன்னமும் தேங்கியே கிடக்கின்றன. இளையராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் பிரபலங்களின் நிழல்கள் கூடவே வந்தன. அவர்கள் இளைப்பாற சோலைகள் இருந்தன. சங்கர்-கணேஷுக்கோ இது போன்ற ஆயத்த வெற்றிகள் கடைசிவரை கைகூடவில்லை. அவர்களுக்கு ஒரு பிராண்ட் நேம் எனப்படும் ஒரு முத்திரை முகம் அமையவில்லை. ஒரே ஒரு ஆறுதலாக சின்னப்பா தேவர் (தேவர் பிலிம்ஸ்) இவர்களை அறிமுகம் செய்ததோடு நிற்காமல் தான் உயிரோடு இருந்தவரை தன் படங்களில் இவர்களை தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டு வந்தார். (அதற்கு முன் தேவர் படங்கள் என்றால் அது கே வி மகாதேவன் இசையாகத்தான் இருக்கும். ஒரு மாற்றத்திற்காக தேவர் எம் எஸ் வி யை அணுகியபோது அவரும் ஒத்துக்கொண்டு முன் பணம் வாங்கியிருக்கிறார். கே வி மகாதேவன் மீது பெருத்த அபிமானம் கொண்டிருந்த எம் எஸ் வி யின் தாய் இதை விரும்பவில்லை . மேலும் வணிக காரணங்களுக்காக இன்னொருவரை தேடி வரும் போக்கும் அவருக்கு பிடிக்கவில்லை. முதலில் குருவை மதிக்க கற்றுக்கொள் என்று தன் மகனுக்கு அவர் போதிக்க தன் தாயின் வேண்டுகோளுக்கினங்க எம் எஸ் வி தேவர் படங்களுக்கு இசை அமைத்ததில்லை என்று ஒரு செய்தி உண்டு. இதன் காரணமாக சங்கர் கணேஷ் அறிமுகப்படுத்தப்பட்டார்களா என்று என்னால் உறுதியாக சொல்ல இயலாது.) தேவரின் மறைவுக்குப் பின் தேவர் பிலிம்ஸ் இளையராஜாவை அணுகியது. அன்னை ஓர் ஆலயம், அன்புக்கு நான் அடிமை போன்ற படங்களில் இளையராஜா இசை அமைத்திருந்தார். தேவரைத் தவிர பசி பட இயக்குனர் துரை, பாஸ்கர் (தீர்ப்புகள் திருத்தப்படலாம் ), ராஜ் பரத் (உச்ச கட்டம்) என வெகு சிலரே சங்கர்-கணேஷுக்கு தங்கள் படங்களில் தொடர்ச்சியாக வாய்ப்பளித்து வந்தார்கள். மற்றபடி இவர்கள் பெரும்பாலும் B-movies என்று சொல்லப்படும் இரண்டாம் கட்ட (இரண்டாம் தரம் அல்ல) படங்களுக்கே அதிகமாக இசை அமைக்க வேண்டியிருந்தது. இருந்தும் அந்தப் படங்களில் இவர்கள் கொடுத்திருக்கும் பாடல்கள் சந்தேகமில்லாமல் தித்திப்பான சுவை கொண்டவை. படங்களும் பாடல்களும் அவ்வளவாக வணிக அளவில் வெற்றி பெறாவிட்டாலும் மனதை மயக்கும் மெலடிகள் அவைகளில் பல உண்டு.
எம் எஸ் வியின் காலத்தில் அவருக்கு அடுத்த இடத்திலும் பின்னர் இளையராஜாவின் தனிக்காட்டு ராஜாங்கதிலும் அதே இரண்டாவது இடத்திலும் இவர்கள் இருந்தார்கள். இளையராஜாவுக்கு மாற்றாக இவர்களைச் சொல்ல முடியாதென்றாலும் பல தயாரிப்பாளர்களின் இரண்டாவது தேர்வு இவர்களே. ஆனாலும் எந்தவிதமான வஞ்சனைகளுமின்றி சிறப்பான இசையை வழங்கியதே இவர்களின் பாணியாக இருந்தது. ஒரு முறை கங்கை அமரன் ஒரு பேட்டியின் போது "உங்கள் இசையில் உங்கள் அண்ணனின் தாக்கம் அதிகமாக இருக்கிறதே?" என்ற கேள்விக்கு "ரத்த சம்பந்தம் இல்லாதவர்கள் எல்லாம் என் அண்ணனை காப்பியடிக்கும்போது நான் செய்வதில் என்ன தவறு?" என்று குறிப்பாக சங்கர்-கணேஷை மனதில் வைத்து சொன்னதாக படித்திருக்கிறேன். உண்மையே. இளையாராஜாவின் இசைக் கூறுகள் சங்கர்-கணேஷின் இசையில் தென்படவே செய்தன. ஆனாலும் ஒரேடியாக அவை அவர்களின் தனித்தன்மையை ஆக்கிரமிக்கவில்லை என்று சொல்லலாம். உதாரணமாக மாம்பூவே சிறு மைனாவே என்ற பாடலை பலர் இளையராஜாவின் பாடல் என்றே கருதுகின்றனர். அந்த அளவுக்கு அப்பாடல் இளையராஜாவின் சாயலை அடர்த்தியாக ஒத்திருக்கும். உண்மையில் மச்சானப் பாத்தீங்களா படத்தில் அப்பாடலை அமைத்தது சந்திரபோஸ். அது அவருடைய முதல் படம். சங்கர்-கணேஷின் இசையிலோ இதுபோன்ற தனி அடையாளம் முழுதும் தொலைந்து போகும் அபாயமான இடையூறுகள் இருக்காது. மற்ற இசை அமைப்பாளர்களின் பாணியை கொஞ்சம் இங்கே அங்கே தொட்டுக்கொன்டாலும் அது அவர்களின் பாடல்களை கொடூரமாக நெரித்து ஆதிக்கம் செலுத்தாமல் அரவணைத்துச் செல்லும் அழகைக் காணலாம்.
எம் எஸ் விக்கு டி எம் எஸ்-சுசிலா, இளையராஜாவுக்கு எஸ் பி பி -ஜானகி போல சங்கர்-கணேஷின் ஆஸ்தான பாடகர்களாக ஜெயச்சந்திரனும் வாணி ஜெயராமும் இருந்தார்கள். ஜெயச்சந்திரன் இவர்களது இசையில் அதிகமான பாடல்களைப் பாடியிருப்பதாக ஒரு தகவல் உள்ளது. எனக்கு இன்றுவரை வாணி ஜெயராமின் பாடல் எதைக் கேட்டாலும் அது சங்கர்-கணேஷின் இசையாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் அனிச்சையாக தோன்றும். பல நேரங்களில் அது உண்மையாகவும் இருக்கும். பால் நிலவு காய்ந்தது மற்றும் யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது என்ற இரண்டு வைர கானங்களை மறக்கத்தான் முடியுமா?
சங்கர்-கணேஷின் டப்பாங்குத்து இசை(தற்போதைய கானா இசையின் முன்னோடிகளில் ஒன்று), மேற்கத்திய பாணி இசை, ஆங்கில மற்றும் ஹிந்திப் பாடல்களின் நகல் எல்லாவற்றையும் கேட்ட பிறகே நான் ஏன் பிறந்தேன், இதய வீணை என்ற இரண்டு எம் ஜி ஆர் படத்திற்கும் இவர்கள் இசை அமைத்திருக்கிறார்கள் என்ற செய்தியை அறிந்தேன்.(!). குறிப்பாக நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் , தம்பிக்கு ஒரு பாட்டு, உனது விழியில் எனது பார்வை (மனதை வசீகரிக்கும் மந்திரப் பாடல் ), நான் ஏன் பிறந்தேன் போன்ற மிகவும் சிறப்பாக இசைக்கப்பட்ட கானங்கள் என்றும் பசுமையானவை. இதே படத்தில் உள்ள அபாரமான பாடல் என்று நான் எண்ணுவது சித்திரைச் சோலைகளே பாடலைத்தான். பாரதிதாசனின் சிறப்பான கவிதையை மிக அழகாக நல்லிசை என்ற வண்ணம் தீட்டி காலத்தால் அழியாத ஒரு கானமாக அதை உருமாற்றியிருப்பதை இங்கே பதிவு செய்வது அவசியம். அதேபோல இதயவீணை படத்தின் திருநிறைச்செல்வி, ஆ...னந்தம் இன்று ஆ..ரம்பம், காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர் (ஹேப்பி இன்று முதல் ஹேப்பி என்ற பாடலை லேசாக நினைவூட்டும் ஆரம்பம் ), பிறகு படத்தின் சிறப்பான பொன் அந்தி மாலைப் பொழுது போன்றவைகள் மிகப் பெரிய வெற்றி பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. பாடல்களில் மிகுந்த ஈர்ப்புடன் கவனம் செலுத்தும் எம் ஜி ஆர் சங்கர் கணேஷிடமிருந்து அவர்களின் மிகச் சிறப்பான பாடல்களை தேர்வு செய்திருப்பதை இதிலிருந்து நாம் உணரலாம்.
அதியச தகவலாக இவர்கள் இருவரும் இசை அமைப்பளர்களாக அறியப்படும் முன்பே ஒரு புகழ் பெற்ற படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்திருக்கிறார்கள். காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் தன் கனவுப் படத்திற்கான பாடலை அமைக்க அழைத்து வரும் இரண்டு இசை அமைப்பாளர்கள் இவர்களே. விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் சிபாரிசின் பேரிலேயே சங்கர்-கணேஷ் இதில் நடித்தார்கள் என்று அப்போதே கேள்விப்பட்டிருந்தாலும் அதை பெரிதாக நினைக்கவில்லை. இந்தப் பதிவை எழுதத் துவங்கியபின் சமீபத்தில் எதேச்சையாக இந்தப் படத்தை காண நேர்ந்தது. அப்போது குறிப்பிட்ட அந்தக் காட்சியை எதோ ஒரு neck and neck ரேஸின் முடிவைப் பார்ப்பதுபோல உன்னிப்பாக கவனித்து இந்தத் தகவலை உறுதி செய்துகொண்டேன். அது அவர்களேதான். குறிப்பாக சங்கரை (இப்போது அவர் இல்லை.) எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. (கொஞ்சம் சேட்டு போன்ற தோற்றத்தில் வருபவரே சங்கர் .)
60களின் இறுதியில் கவிஞர் கண்ணதாசனால் சாண்டோ சின்னப்பா தேவருக்கு அறிமுகம் செய்யப்பட்டு, தேவரின் ஆஸ்தான இசை அமைப்பாளர்களாக இருந்த சங்கர்-கணேஷ் தங்களின் நன்றியை எப்போதும் "கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ்" என்றே திரைப்படங்களில் தெரிவிப்பது வழக்கம். (சங்கர் புகழ் பெற்ற பழம்பெரும் இசை அமைப்பாளர் சி ஆர் சுப்புராமனின் சகோதரர்.) மகராசி என்ற படத்தில் (ஒரு தகவல் இவர்களின் முதல் படம் நல் வரவு என்று சொல்கிறது.) அறிமுகமான இவர்கள் 70களில் பல உயிர்ப்பான கானங்களை என்றும் நீங்கா நினைவுகளாக, கரையாத வண்ணங்களாக நம் நெஞ்சங்களில் வரைந்திருக்கிறார்கள்.
எம் எஸ் வி யின் காலத்தில் துவங்கி, அந்த இசையின் சுவடுகளை கொஞ்சம் தொட்டுக் கொண்டு வந்த இவர்களின் இசை பாணி பின்னர் 80களில் இளையராஜாவின் இசைக் கூறுகளையும் உள்வாங்கிக்கொண்டது. சிலர் இவர்களை ஒரேடியாக காப்பி இசை அமைப்பாளர்கள் என்று முத்திரை குத்தி புறம்பே தள்ளிவிடுகிறார்கள். இதில் பாதியளவு உண்மை இருப்பதாகவே நான் நினைக்கிறேன். நகல் இசை என்ற குற்றச்சாட்டை சற்று தவிர்த்து விட்டு அவர்கள் அளித்த அசல்களை ஆராய்ந்தால் அவர்கள் இசையின் படிமானங்களை வியப்புறும் வகையில் நம்மால் உணரமுடியும். (ஒரு விதத்தில்) சங்கர் கணேஷின் இசை ஆர்ப்பரித்துக்கொண்டு பீறிட்டுப் பாயும் காட்டாறு வெள்ளத்தின் ஆக்ரோஷ அழகைப் போலில்லாமல் அமைதியாக சலசலக்கும் ஓடையின் இனிமையை கொண்டிருந்தது. எத்தனை ரம்மியமான கீதங்கள் இவர்களிடமிருந்து புறப்பட்டிருகின்றன! கீழே இருக்கும் பட்டியலைப் பார்த்தால் இந்த எளிமையான உண்மையை சட்டென பிடித்துவிடலாம். (இதில் சில அதிரடிவகைப் பாடல்களும் அடக்கம்.)
சங்கர்-கணேஷின் துவக்க கால படைப்புகளின் மீது ஒரு பார்வை வீசுவோம்.(வெளிவந்த வருடங்கள் குறித்து என்னால் உறுதியாக கூறமுடியவில்லை. ஒரு அனுமானமாகவே பாடல்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.)
சின்ன கண்ணனே நான் தந்தையென-தாய்க்கு ஒரு பிள்ளை.
எதைக் கேட்பதோ எதை சொல்வதோ- பத்து மாத பந்தம்,
செந்தாமரையே செந்தேனிதழே - புகுந்த வீடு. (அபார கலைஞன் எ எம் ராஜாவின் இனிமையான குரலில் வந்த இந்த மூன்று பாடல்களும் மிகவும் சிறப்பானவை .)
பால் நிலவு நேரம்-அன்பு ரோஜா,
என் காதலி யார் சொல்லவா - தங்கத்திலே வைரம். (சந்தேகமேயில்லாமல் பலரின் விருப்பப்பாடல் இது.)
அவளொரு பச்சைக் குழந்தை- நீயொரு மகாராணி. (இனிமையின் இன்னொரு பெயர்.)
பூவிலும் மெல்லிய பூங்கொடி- கண்ணன் வருவான். (டி எம் எஸ் எம் ஜி ஆர், சிவாஜி இருவரின் குரல் பிரதிநிதியாக இருந்தாலும் அவர் அதிக எண்ணிக்கையில் பாடல்கள் பாடியது ஜெய் ஷங்கருக்குத்தான். அதிலும் இப்பாடல் ஜெய் ஷங்கரே பாடியது போல ஒரு தோற்றம் தருகிறது. கேட்டதும் விரும்பக்கூடிய வெகு சில பாடல்களில் இதுவும் ஒன்று. )
கண்ணே தேடி வந்தது யோகம்-வாக்குறுதி,
அன்புத் தெய்வம் நீ- கோமாதா எங்கள் குலமாதா,
எங்கெங்கும் உன் வண்ணம்- கண்ணம்மா,
கல்யாண ராமனுக்கும்- மாணவன்,
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை- சினிமா பைத்தியம். (இது கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது. வி குமாரா அல்லது சங்கர் கணேஷா என்று.)
ஜிலு ஜிலு குளு குளு, தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது.(70 களின் மென்மையான ஞாபகங்களை உயிர் பெறச் செய்யும் ரம்மியமான பாடல். தரமான நல்லிசை. பலர் இந்தப் பாடலை கேட்டு உணர்ச்சி வசப்படுவதை நான் கண்டிருக்கிறேன். அதுவே இப்பாடலின் வெற்றி. இப்படம் சங்கர்-கணேஷுக்கு வணிக அளவில் பெரிய வெற்றியை கொடுத்தது.)-வெள்ளிக்கிழமை விரதம்.
இனி 70 களின் இசை அழகை சற்றும் சிதைக்காமல் அவர்கள் அமைத்த சில பாடல்கள்.
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை- என்னடி மீனாட்சி, (மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் கீதம்.)
என் காதல் கண்மணி-மஞ்சள் குங்குமம்.
சங்கீதம் மலர்கின்ற நேரம்- கைவரிசை.
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்- உயர்ந்தவர்கள். (உயர்ந்த கானம்.)
சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு - சொர்க்கம் நரகம். (Tamil tongue twister!)
நானூறு பூக்கள்-உறவுகள் என்றும் வாழ்க. (அபூர்வமான அழகியலின் அற்புத இசை அவதாரம் என்று சொல்லலாமா? Really a very rare gem.)
நீ (ர்) மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே - தாயில்லா குழந்தை. (சிலோன் வானொலியின் தங்க தினங்கள் நினைவுக்கு வருவதை தவிர்க்கவே முடியாது .)
எதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போல -சொன்னதைச் செய்வேன், (இது சங்கர்-கணேஷின் பாடலா அல்லது எம் எஸ் வி யின் பாடலா என்ற குழப்பம் ஒரு பக்கம். இறுதியில் இவர்கள் இருவருமல்ல. வி குமாரின் இசையில் வந்த பாடல் இது என்று தெரிகிறது. இதை நான் சங்கர்-கணேஷின் இசை என்று எண்ணியதால் இங்கே சேர்த்திருக்கிறேன்.எவரின் படைப்பாக இருந்தாலும் இது ஒரு மிக அருமையான பாடல் என்பதை மறுபேச்சின்றி ஏற்றுக்கொள்ளலாம் .)
நடிகனின் காதலி, வடிவேலன் மனசு வச்சான்- தாயில்லாமல் நானில்லை,
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு -தாய் மீது சத்தியம்,
என் கண்ணின் மணியே இளம் கன்னித் தமிழே (சகோதர பாசத்தை பண்பட்ட வகையில் சொல்லும் மனதை உருக்கும் பாடல்.) - காலைப் பொழுது விடிந்தது என் நெஞ்சத்தைப் போல (ஜானகி பாடிய மிக சிறப்பான விடியல் பாடல்.) -ராஜராஜேஸ்வரி,
மலைச் சாரலில் ஒரு பூங்குயில் (ரசிக்கவைக்கும் தட தடவென்ற தாளம். ஜேசுதாஸின் குரலில் வந்த வைரங்களில் ஒன்று.) - ஒரு குடும்பத்தின் கதை.
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா,ஒரே ஜீவன், ஒரு கோடி-நீயா?
70 களின் இறுதியில் ஏற்பட்ட ஒரு திடீர் இசை பூகம்பம் இளையராஜா. அவரின் இசைச் சாயலை ஒட்டி தங்களை புதுப்பித்துக்கொண்ட இசை வடிவத்தில் சங்கர்-கணேஷ் படைத்த சில பாடல்கள்.
பருத்தி எடுக்கையிலே-ஆட்டுக்கார அலமேலு.( சங்கர்-கணேஷின் முத்திரைப் பாடல்களில் ஒன்று. அவர்களுக்கு பெரிய வெற்றியை கொடுத்த பாடலும் இதுவே என்று நினைக்கிறேன். இந்தப் படத்தில்தான் சங்கர் கணேஷ் பாபி படத்தின் கிடார் இசைத் துணுக்கு ஒன்றை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பயன்படுத்தியிருப்பார்கள். அது படத்தின் 'ஹீரோவான" ஆடு "கெட்டவர்களை" துரத்தும் காட்சி என ஞாபகம். டிடிங் டிடிங் டிங் என்று அந்த கிடார் துவங்கும் போது அரங்கு முழுதும் விசில்கள் பறந்தது நினைவு இருக்கிறது. ஒரு ஆட்டுக்கு இத்தனை ஆரவாரமா என நான் அதிர்ந்தே போனேன்.)
ஆவாரம் பூமேனி, பட்டு ரோசாவாம், நடைய மாத்து. (இளையராஜா கூட இது போன்ற street music செய்ததில்லை என்று சிலர் சொல்கிறார்கள். உண்மையோ என தோன்றுகிறது. கேட்காவிட்டால் கொஞ்சம் கேட்டுவிட்டு பிறகு உடன்படுவதையோ அல்லது எதிர்ப்பதையோ செய்யுங்கள்.)-கன்னிப்பருவத்திலே
கொஞ்ச ஒதுங்கு நா தனியா பேசணும் உன்னோடதான்-வசந்த காலம். (சுருளிராஜனின் குரலில் எஸ் பி பி பாடியது. சுருளிராஜனுக்கென்றே படங்கள் ஓடிய காலங்கள் உண்டு. ரசிக்ககூடிய பகடிப் பாடல். அப்போது இது ஒரு கொண்டாட்டமான பாடலாக வானொலியில் உலா வந்து மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. இதற்கு சுருளிராஜன் மற்றும் சுமித்ரா நடித்திருப்பார்கள். கம்பன் ஏமாந்தான் என கமல் நக்கலடிக்கும் அதே சுமித்ராதான். )
பொன்மான தேடி- எங்க ஊர் ராசாத்தி. (இளையராஜாவின் நிழல் அதிகமாக இதில் படிந்திருப்பதை காணலாம்.)
நா ஒன்ன நெனச்சேன்- கண்ணில் தெரியும் கதைகள். (மிக அபூர்வமான கானம். கேட்ட ஒரே கணத்தில் நெஞ்சத்தை நொறுக்கும் சக்தி வாய்ந்த இசையின் புரிபடாத மர்மங்களின் மறு வடிவம். ஐந்து பெரிய இசை ஆளுமைகள் இதில் இருந்தாலும் போட்டி என்னவோ நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே (இளையராஜா) என்ற பாடலுக்கும் இந்தப் பாடலுக்கும்தான். இறுதியில் வென்றது யார் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா? சங்கர்-கணேஷின் அதிகபட்ச வெற்றிகளில் இந்தப் பாடலுக்கு ஒரு மிக முக்கியமான இடம் என்றைக்கும் உண்டு. ஒரு விதத்தில் சங்கர்-கணேஷின் முத்திரைப் பாடல் இதுவே என்று தோன்றுகிறது. )
எரிமலை எப்படிப் பொறுக்கும், ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம் ( என்ன ஒரு வசீகரமான கானம்! மெல்லிசையின் மிக மென்மையான மழைத் தூறல். இந்தப் பாடலை விரும்பாதவர்கள் இருக்க முடியுமா என்று தெரியவில்லை.) - சிவப்பு மல்லி,
ரோசா மலரே அழுவக் கூடாது-ராஜாங்கம்.
செந்தமிழோ - புதியவர்கள்,
ஐ லவ் யு பனி தேன் மழையே -மாம்பழத்து வண்டு,
எ உன்னத்தான் (செப்புக்குடம்)-ஒத்தையடி பாதையிலே,
நாக்கிலே மூக்கில நாத்து பல்லாகிலே (தள தளன்னு வளந்த பொண்ணு)-சின்ன சின்ன வீடு கட்டி. விரசங்களில்லாமல் குதூகலிக்கும் கும்மாளமான நாட்டுப்புற கானம். பாடலின் துவக்கத்தில் அங்கே இங்கே என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டமான அந்த அதிரடித் தாளம் தள தளன்னு வளந்த பொண்ணு தண்ணி மொள்ளும் போதிலே என்ற இடத்தில் வெடித்துக்கொண்டு ஆர்ப்பரிப்பதை கேட்கும் போது அந்த தண்ணீர்க் குடம் நம் தலையில் கவிழும் சிலிர்ப்பை நீங்கள் உணர முடியும். மேலும் தமிழில் வந்த மிக நீண்ட பல்லவி கொண்ட பாடல்களின் ஒன்று என்ற சிறப்பை பெற்றது இது. (இன்னொன்றும் இவர்கள் இசையிலேயே வந்தது. அது பவுர்ணமி நேரம் என்ற பாலைவனச்சோலை படப் பாடல்.) சற்று இந்த பல்லவியைப் பாருங்கள்:
நாக்கிலே மூக்கில
நாத்து பல்லாக்கிலே,
தோப்பு பராக்கிலே,
தாழ்வாரத்திலே,
தோளோரத்திலே,
சிங்காரத்தில,
தள தளன்னு வளந்த பொண்ணு
தண்ணி மொள்ளும் போதிலே
தாவி வந்து அணச்சுகிட்டேன்,
கையிரண்டும் போதல,
(இந்தப் பாடல் வானொலியில் ஒலிக்கும் சமயங்களில் தெருக்களில் இளம் பெண்கள், குறிப்பாக குடத்துடன் பெண்கள் தண்ணீர் எடுக்க செல்ல நேரிட்டால் அவர்கள் காட்டும் முக பாவணைகளைக் கண்டு அவர்கள் கோபப்படுவதாக எண்ணியிருந்தேன். அது அப்படியல்ல என்று இப்போது தோன்றுகிறது.)
ஆல மரத்துக்கிளி,மச்சானே அச்சாரம் போடு- பாலாபிஷேகம்,
முத்து முத்து தேரோட்டம், நான்தானே ஒரு புதுக்கவிதை - ஆணிவேர், (ரஸ்புடின் என்ற போனி எம் பாடலின் பிரதியாக இருந்தாலும் மிக சிறப்பாக இசைக்கப்பட்ட ட்ரம்ஸ் இசை சரணம் வரும் போது வேறு பரிமாணத்துக்குச் செல்கிறது. அருமையாக வாத்தியங்கள் இசைக்கப்பட்ட கானம். )
தேவி வந்த நேரம்- வண்டிச் சக்கரம். (மெல்லிசை என்ற தென்றல் வீசும் பாடல்.)
இனிக்கும் இளமை என்னிடம் - இனிக்கும் இளமை.
80 களின் துவக்கத்தில் சங்கர்-கணேஷின் இசை வேறு தளத்தை எட்டியது. ஆர்ப்பாட்டமான ஆங்கில இசையின் அடிப்படையான உட்கூறுகளை தமிழுக்கேற்றவாறு இசை மொழி பெயர்ப்பு செய்து வெகு சிறப்பாக அவற்றை நமது மெல்லிசையின் மீது வைத்து கர்நாடக ராகத்தையும் சேர்த்துத் தைத்து மிக அருமையான பாடல்களை இவர்கள் உருவாகினார்கள்.
அவள் ஒரு மேனகை - நட்சத்திரம். (இது தெலுகு படத்தின் பாடல் என்று தெரிகிறது. எஸ் பி பி சிவரஞ்சனி என்று உச்சஸ்தானியில் நீண்ட நேரம் ராக ஆலாபனை செய்தது அப்போது பெரிதாக பேசப்பட்டது .)
தனிமையிலே ஒரு ராகம்- சட்டம் ஒரு இருட்டறை. (சுரேந்தரின் தேன் சிந்தும் குரலில் இந்தப் பாடல் ஒரு மேகத் தாலாட்டு. தனிப்பட்ட விதத்தில் இப்பாடல் அப்போது எங்கள் வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர்களையும் இந்தப் படத்தைப் பார்க்கச் சென்ற ஒரு கோடை காலத்தின் வெயிலடிக்கும் மதிய நேரத்தையும் எனக்கு நினைவூட்டும்.) Nostalgia at its best.

தேவி கூந்தலோ பிருந்தாவனம் - என் ஆசை உன்னோடுதான். (The Turtles என்ற 60களைச் சேர்ந்த ஆங்கில இசைக் குழுவினரின் happy together பாடலின் தமிழ் வடிவம். இருப்பினும் அருமையாக தமிழில் வார்க்கப்பட்ட பாடல்.)
வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி-பொன்னகரம்.
மலர்களே இதோ இதோ- தீராத விளையாட்டுப் பிள்ளை. (என்ன ஒரு தரமான மேற்கத்திய இசையின் தமிழ்ப் படிவம்! இணையத்தில் சிலர் இதையே சங்கர்-கணேஷின் சிறப்பான பாடல் என்று சொல்கிறார்கள். எனக்கு இதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் இது ஒரு அருமையான கானம் என்பதில் இரண்டாம் சிந்தனை கிடையாது ).இதே படத்தில் தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற ஒரு அதிரடி பாடல் உண்டு.
பனியும் நீயே மலரும் நானே- பனிமலர். ( நளினமான பாடல்.)
தேவி நீயே - ஆசைகள். (இது கொஞ்சம் அபூர்வமான பாடல். எப்போதோ கேட்ட நினைவு மறுபடியும் கேட்கையில் தோன்றுகிறது.)

இந்த இரவில் நான் பாடும் பாடல்,மனம் உன்னை நினைத்தது, பால் நிலவு காய்ந்தது (kraftwerk (Album: The Man Machine) என்னும் ஜெர்மானிய சிந்தசைசர் இசை குழுவின் The Model என்ற பாடலின் நிழல். ஆனால் சங்கர்-கணேஷின் ட்ரம்ஸ் இங்கே நவீன தாளம் போடுகிறது. kraftwerk கையாண்ட சிந்தசைசர் இசை இங்கே கிடார் மற்றும் அதிரடி ட்ரம்ஸ் இசையால் சமன் செய்யப்பட்டு பாடல் வேறு வடிவம் பெறுகிறது. அருமையான கவிதை கொண்டு உடைந்த காதலின் வலியை வர்ணிக்கும் கானம் இது. கண்டிப்பாக கேட்கப்படவேண்டிய பாடல்களில் ஒன்று.) - யாரோ அழைக்கிறார்கள்,
நானொரு கோவில் நீயொரு தெய்வம்- நெல்லிக்கனி. (நட்பை நல்லிசையாக வடித்த பாடல். இது வெளிவந்த புதிதில் இதில் நடித்த சிவகுமார். சிவச்சந்திரனை விட இதைப் பாடிய எஸ் பி பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவனுக்காகவே இந்தப் பாடல் அதிகம் விரும்பப்பட்டது. அப்போதைய இரண்டு முக்கியமான பாடகர்கள் (முதன் முதலாக?) இணைந்து பாடியிருந்ததே இதன் சிறப்பு.)
சித்திரமே உன் விழியில்- நெஞ்சிலே துணிவிருந்தால். (இது எதோ ஒரு ஆங்கிலப் பாடலை நினைவு படுத்துகிறது. துல்லியமாக அதை சுட்டிக்காட்ட முடியவில்லை இப்போதைக்கு. சங்கர்-கணேஷின் முத்திரையான தடதடக்கும் ட்ரம்ஸ் இந்தப் பாடலை ஒரு சுகமான ரசனைக்கு இட்டுச் செல்கிறது. .)
மரியா மை டார்லிங்- மரியா மை டார்லிங்,
ஒரு ஊரில் ஊமை ராஜா, ராகம் தாளம் பல்லவி (அது காதல் பூபாளமே) - தீர்ப்புகள் திருத்தப்படலாம்,
சரணம் சரணம் தலைவா சரணம், நிழல் தேடி வந்தேன் - பவுர்ணமி அலைகள்,
ரோஜாவில் முள்ளுமில்லை- காதல் காதல் காதல்.
மங்கல குங்குமம்- தீர்ப்பு என் கையில்,
ஆகாயம் பூப்பூக்கும் நேரம்-சாட்சி,
எல் ஒ வி இ லவ்தான், வாடி மச்சி -விதி,
நான் இரவில் எழுதும்- சுப முகூர்த்தம்,
ஒ மேகமே ஓடும் மேகமே (காதல் தோல்வியின் வலியை சொன்ன பல அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று. மிக மென்மையான கானம்).- அந்தஸ்து.
எனக்கொரு மணிப் புறா ஜோடியென்று இருந்தது. (அதே காதல் தோல்வி ஜெயச்சந்திரனின் குரலில்.)- ஜோடிப் புறா.
பட்டுக்கோட்டை அம்மாளு- ரங்கா. ( மலேசியா வாசுதேவனும் எஸ் பி பி யும் இணைந்து பாடிய ஜாலியான பாடல். பொதுவாக எஸ் பி பி க்கு மேற்கத்திய பாணியும் மலேசியா வாசுவுக்கு நாட்டுபுற பாணியும் தான் வழக்கம். இதில் சங்கர்-கணேஷ் அந்த சம்பிரதாயத்தை தலைகீழாக மாற்றியிருப்பார்கள்.)
80 களில் ராஜ் பரத் என்று ஒரு அறிமுக இயக்குனர் ஒரு திடீர் காளான் போல தமிழ்த் திரையில் தோன்றி நான்கு படங்களைக் கொடுத்தார். அவை: உச்சகட்டம், சொல்லாதே யாரும் கேட்டால், சின்ன முள் பெரிய முள், தொட்டால் சுடும். (கே பாலச்சந்தரின் தில்லு முல்லு படத்தின் இறுதிக் காட்சியில் தொட்டால் சுடும் பை ராஜ் பரத் என்று ஒரு பேனர் காண்பிக்கப்படும். ராஜ் பரத் பாலச்சந்தரின் மீதிருந்த அபிமானத்தால் உடனே அதே பெயரில் தனது அடுத்த படத்தை இயக்கினார் என்று சொல்லப்பட்டது. தொட்டால் சுடும் என்ற தலைப்புக்கு ஏற்றவாறு திரைக்கதையை அமைத்திருப்பார் இயக்குனர்.) அனைத்துமே திர்ல்லர் வகையைச் சேர்ந்தவை. அவைகளில் அதிகபட்சமாக இரண்டு பாடல்கள் மட்டுமே இருக்கும். இவரது படங்களில் ஒரே கதை சீரான நேர்கோட்டில் செல்லும் ஆங்கில திரைக்கதை யுக்தி பிரமாதமாக கையாளப்பட்டிருக்கும். பாடல்கள் கூட அந்த காலகட்டத்தின் அவசியம் கருதியே இடம் பெற்றிருந்தன. சங்கர்-கணேஷின் இசை இவரின் படங்களுக்கு ஒரு சரியான பற்றை (grip) கொடுத்தது. இது போன்ற த்ரில்லர் வகைப் படங்களுக்கு சங்கர்-கணேஷின் இசை மிகப் பொருத்தமாக இருக்கும். பாமரத்தனமாக பிண்ணனியில் மர்ம இசை என்ற பேரில் எதையோ உருட்டி உடைத்து கதற வைத்து நம் செவிகளை பதம் பார்க்கும் கிறீச்சிடும் கண்றாவிகள் இவர்களிடம் பொதுவாக இருக்காது. சங்கர்-கணேஷின் பிண்ணனி இசையையும் கவனத்தில் கொள்ளும் ஒரு ரசனை மிக்க ரசிகர் கூட்டம் 80கள் வரை இருந்ததை நான் அறிவேன். "எங்கள் இசைத் தலைவர்கள் சங்கர்-கணேஷ் படம் காண வந்த ரசிகர்களுக்கு நன்றி" என்று படத்திற்கு முன் சிலைட் (இதற்கு தமிழில் என்ன சொல்வதென்று தெரியவில்லை.) தோன்றும் அபூர்வங்களை நான் பார்த்திருக்கிறேன்.
இதழில் தேன் பாண்டி முத்துக்கள், சித்தர் கூட புத்தி மாறி- உச்சகட்டம்,
பூவாகி இரவு நேரம், கேட்டது கிடைத்தது கோடிக்கணக்கில் (செவிகளை தொந்தரவு செய்யாத genuine ட்ரம்ஸ் இசை) - சொல்லாதே யாரும் கேட்டால்,
ராமன் போல தோற்றம்- தொட்டால் சுடும்,
மாலை சூட கண்ணே ராதா நாள் வராதா -கண்ணே ராதா.
சொல்லாதே யாருக்கும்- ஜிகு ஜிகு ரயில்,
சம்சாரம் அது மின்சாரம்- சம்சாரம் அது மின்சாரம். (பெரிய புகழடைந்த பாடல்.)
அழகிய விழிகளில் அறுபது கலைகளும், ஒ நெஞ்சே நீதான் பாடும்- டார்லிங் டார்லிங் டார்லிங் ,
கெண்ட சேவல் கூவும் நேரம்- எங்க சின்ன ராசா. (இதே பாடல் பின்னாட்களில் ஹிந்தியில் அணில் கபூர் படமொன்றில் கையாளப்பட்டது.)

80கள் தமிழ்த் திரையில் பல புதிய இயக்குனர்களையும், நவீன சிந்தனைகளையும், வேறுபட்ட திறமைகளையும் அடையாளம் காட்டின. ஒரு தலை ராகம் என்ற சராசரிப் படத்தின் பிரமாண்ட வெற்றி தமிழ்த் திரையின் கதை களத்தை அதிரடியாகத் தாக்கியது. இதன் தொடர்ச்சியாக வந்த பல படங்கள் அன்றைய இளைய தலைமுறையினரின் எண்ண ஓட்டங்களை ஏறக்குறைய கச்சிதமாக காட்சிப்படுத்தின. அதில் குறிப்பிடதக்க ஒரு படம் என்று நான் கருதுவது 81இல் வந்த பாலைவனச் சோலை என்ற ராபர்ட் ராஜசேகரின் படத்தையே. (நிழல்கள் படத்தின் அபாரமான, வைரமுத்துவின் முதல் திரைப் பாடலான, இளையராஜாவின் வைரமாக ஒளிர்ந்த இது ஒரு பொன்மாலைப் பொழுது பாடலுக்கு "அற்புதமாக" நடித்த அதே ராஜசேகர்தான்.) பாலைவனச்சோலை மிகப் பெரிய உச்சத்தை தொட்டது. பொதுவாக எல்லோரும் பாராட்டிய படமாக இது இருந்தது. அதிகமான வர்த்தக சமரசங்கள் செய்து கொள்ளப்பட்டாத திரைக்கதை, இயல்பான வசனங்கள்,போலித்தனமில்லாத நடிப்பு, விரசமில்லாத காட்சிகள் மேலும் சிலிர்ப்பூட்டும் இசை, சிறப்பான பாடல்கள் போன்றவைகள் இதை 80 களின் முத்திரைப் படங்களில் ஒன்றாக மாற்றிவிட்டது. இப்போது சங்கர்-கணேஷின் இசையில் வந்த இப்படத்தின் பாடல்களைப் பார்ப்போம்.
எங்கள் கதை இது உங்களின் கதை- இளைஞர்களின் "புகை"படிந்த, கவலைகள் துறந்த நிலையை சொல்லும் பாடல்.
ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு- மணப் பெண்ணை பகடி செய்யும் பாடல். இறுதி சரணத்தில் வரும் "முதல் முதலாக பார்க்கும் போது அச்சமாக இருக்கும், ஆனா விடியும் போது விளக்கில் எண்ண மிச்சமாக இருக்கும்." என்ற வரிகள் வெகுவாக ரசிக்கப்படவை.
மேகமே மேகமே- வாணி ஜெயராமின் அற்புதமான பாடல்களில் ஒன்று. ஹிந்தி கஸல் இசையின் சுடப்பட்ட தமிழ் பிரதி இது என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இருப்பினும் தரமான நல்லிசை.
பவுர்ணமி நேரம்- இதுவும் ஒரு பகடிப் பாடல்தான். பாடலின் இறுதிச் சரணம் புத்தாண்டை வரவேற்பது போல அமைந்திருக்கும். தமிழின் மிக நீண்ட பல்லவி கொண்ட பாடல் இது என்று சொல்லப்படுகிறது. சற்று ஆராய்வோம்:
பவுர்ணமி நேரம்
பாவை ஒருத்தி
மின்னல் போல
முன்னால் போனாள்
பின்னல் கண்டு
பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்கு
புதுசோ என்றேன்
காலில்
உள்ளது
புதுசு
என்றாள்
ஓ மேலே கேட்காதே!
நாம் ஏறக்குறைய சங்கர்-கணேஷின் சிறப்பான பாடல்கள் பட்டியலின் இறுதிக்கு வந்துவிட்டோம். பல பாடல்களை நான் இங்கே குறிப்பிடவில்லை. ஆனால் கீழே இருக்கும் பாடல்கள் கண்டிப்பாக உங்கள் பார்வைக்கு உகந்தவை. They do deserve an honest listen.
கடலோடு நதிக்கென்ன கோபம்- அர்த்தங்கள் ஆயிரம். (இதை எண்ணும் போதே சிலோன் வானொலி நினைவலைகளில் ஆனந்த தாண்டவம் ஆடுவதை உணர்கிறேன். மிகையின்றி சொல்லவேண்டுமானால் சங்கர்-கணேஷின் அபாரமான ஆனந்தங்களில் ஒன்று. எஸ் பி பி யின் தாலாட்டும் குரலும், போதையூட்டும் அந்த ராக வளைவுகளும் நம்மை ஒரு உன்னதமான அமைதிக்கு அழைத்துச் சென்று விடுகின்றன. )
சந்தன புன்னகை சிந்திய கன்னிகை- நாடோடி ராஜா. (திடு திடுக்கும் தாள நயத்துடன் ஒலிக்கும் இனிமையான ராக அழகுடன் வந்த மிக சிறப்பான கானம். மிக மிக அரிதான பாடல். எப்போதோ சிலோன் வானொலியின் தயவில் இப்பாடலை ரசித்திருக்கிறேன். மீண்டும் கேட்கும் போதுதான் எத்தனை இன்பம் உண்டாகிறது! )
அதி கலையில் பனி காற்றுகள் வீசிட- கல்யாண காலம். (அபூர்வமான பாடல். தேடித் தேடி இறுதியில் cool toad மூலம் இந்தப் பாடலை கண்டுபிடித்தேன்.)
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது- நெஞ்சமெல்லாம் நீயே. (மற்றொரு கஸல் பாடலின் தமிழ் வடிவம். அதே சங்கர் கணேஷின் ஆஸ்தான பாடகி வாணி ஜெயராமின் இனிமையான குரலில்.)
கண்ணோடு கண்ணும், எனை தேடும் மேகம், அலைஅலையாக -கண்ணோடு கண்.
குறிப்பாக கண்ணோடு கண் படத்தின் பாடல்கள் நம் நெஞ்சத்தை தழுவும் வார்த்தைகளுக்குட்டபடாத மாயச் சுவையை கொண்டவை. அலை அலையாக மிக சிறப்பாக இசை கோர்க்கப்பட்ட கானம். பாடலின் ராக அமைப்பும் மெட்டும் இசையின் மென்மையும் இதை கேட்கும் போதே நாம் எதோ ஒரு கடலலையின் மீது தவழ்வது போன்ற fantasy உணர்வை கொடுத்துவிடுகின்றன. மிகவும் அபாரமான வகையில் உணர்வின் இசையாக மீட்டப்பட்ட இப்பாடல் கேட்பவர்களின் மனதில் ஆனந்த அழகின் அலைகளை அழைத்துவந்துவிடுகிறது . சங்கர்-கணேஷின் பல பாடல்களை நீங்கள் கேட்டிருந்தாலும் அலை அலையாக பாடலை நீங்கள் கேட்கவில்லை என்றால் எங்கோ உங்கள் இசை வட்டம் முற்றுப்பெறவில்லை என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். இது எப்படியென்றால் இளைய நிலா பொழிகிறதே பாடலைக் கேட்காமல் எப்படி ஒருவரின் இளையராஜா அனுபவம் துண்டிக்கப்பட்டு நிற்குமோ அதைப் போன்றது. இந்தப் பாடலை நான் சங்கர் கணேஷின் முத்திரைப் பாடலான "நா உன்ன நெனச்சேன்" பாடலோடு ஒப்பிட்டு, ஒரு தராசின் இரண்டு தட்டுகளிலும் இவற்றை வைக்கிறேன். The verdict is both are etherially beautiful. No more words to describe.
ஒரு காதல் தேவதை- இதய தாமரை. (இளையராஜாவின் பாடல் போலேவே தோன்றும் இசை. ஆனால் அவர் பாடல்களில் இல்லாத அளவுக்கு மிக நவீனமாக இசைக்கப்படுகிறது கிடார். இந்தப் பாடலை நான் அவ்வளவாக விரும்புவதில்லை. ஒருவேளை அவர்களின் முத்திரை இதில் சமரசம் செய்துகொள்ளப்பட்டதாக நான் எண்ணுவது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். சங்கர் கணேஷ் இசை அத்தியாயத்தின் இறுதிப் பக்கம் இந்தப் படம்தான். இதன் பின் அவர்களின் பெயர் எங்கும் தோன்றவில்லை.)
பெரிய பிம்பங்களும், அலங்கார விளக்குகளும், ஆடம்பரமான அணிவகுப்புகளும் நம் கவனத்தை உடனே ஈர்ப்பது இயல்பானதே. ஆனால் அதே வேளையில் வானில் சீராக பறந்து செல்லும் பறவைகளையும், மழை நேரத்தில் தங்கள் இருப்பிடங்களை மாற்றிக்கொள்ளும் எறும்புகளின் அழகான அணிவரிசையையும், சூட்டப்படாமல் செடிகளிலேயே தயங்கி நிற்கும் வசீகரமான மலர்களையும் கொஞ்சம் ரசிப்பதில் தவறில்லை. மண்வீடோ மாளிகையோ எழுந்ததோ விழுந்ததோ எதுவாக இருப்பினும் ரசிப்பதற்கு அழகு என்ற ஒன்று மட்டுமே நம் ரசனையின் அடிப்படை கோட்பாடாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.
சங்கர்-கணேஷ் பற்றி இணையத்தில் அதிகம் எழுதப்படவில்லை என்பது ஒரு வருத்தம் தரும் நிஜம். நான் தேடியவரை 110 பதில்களுடன் ஒரு forum இவர்களைப் பற்றி உள்ளது. பின்னர் ஓசை..ஓயாத அலைகள் என்ற தளத்தில் நண்பர் ஓசை (அவர் பெயர் தெரியவில்லை.) சங்கர் கணேஷ் பற்றி இரண்டு சிறப்பான பதிவுகள் எழுதியுள்ளார். இதில் கவனிக்கத்தக்க சிறப்பு அல்லது வியப்பு என்னவென்றால் இவர் ஒரு தீவிர இளையராஜா ரசிகர். நல்லிசையின் மீது கொண்டிருக்கும் காதல் மட்டுமே சிலருக்கு தங்களின் சொந்த அபிமானங்களையும் தாண்டி வேறுபட்ட விருப்பங்களை வளர்க்கும். இவர் அப்படிப்பட்டவர் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தே இல்லை. கீழே அவரது தளத்தின் சுட்டி உள்ளது.
http://oosssai.blogspot.com/2013/09/blog-post_20.html
அடுத்து: இசை விரும்பிகள் XVI -- இசைச் சாரல்கள்.
திறக்காத ஜன்னல்கள்

சங்கர்-கணேஷின் இசையை இப்போது கேட்கும் போது இத்தனை அருமையான, கலை ரசனைக்குட்பட்ட ( சில சமயங்களில் ஆர்ப்பாட்டமான ) பாடல்களைக் கொடுத்தவர்களை நாம் எத்தனை எளிதில் மறந்துவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சி ஒரு கூரான கத்தி போல நெஞ்சில் பாய்கிறது. இந்தப் பொது புத்தியின் பின்னாலிருக்கும் மடத்தனமான ஆட்டுமந்தை அணுகுமுறையை விட்டு நாம் அகலவேண்டும் என்பதே என் விருப்பம். நமது குறுகிய இந்தப் பார்வை எத்தனை இசை இன்பங்களை நம்மிடமிருந்து அந்நியப்படுத்தியிருக்கிறது என்ற உண்மை தரும் குற்ற உணர்ச்சி வலி மிகுந்தது. இந்தப் பதிவை படித்தபின் உங்களுக்கு நாடகத்தனமாக சங்கர்-கணேஷின் மீது ஈர்ப்பு வந்துவிடும் என்றோ அவர்களின் பாடல்களை நீங்கள் உடனே கேட்க ஆரம்பித்துவிடுவீர்கள் என்றோ நான் எண்ணவில்லை. அதற்க்கான ஆயத்தங்களும் வாய்ப்புகளும் வெகு குறைவே. ஆனாலும் சங்கர் -கணேஷ் பாடல்களை நீங்கள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு சிறிய பொறியாக உங்களுக்குத் தோன்றினாலோ அல்லது ஒருவேளை எப்போதோ நீங்கள் கேட்டிருந்து இப்போது துறந்துவிட்ட அந்தப் பாடல்களைக் குறித்து மனதில் மவுனமாக அசை போட்டாலோ அதுவே இந்தப் பதிவின் நோக்கத்தை பூர்த்தியடையச் செய்துவிடுகிறது.