Tuesday, 30 June 2015

இசை விரும்பிகள் XXVI - எண்பதுகள்- கவிதைக் காற்று.

 சற்று கற்பனை செய்து  பார்ப்போம்  இவற்றை.  

நிறமில்லா வானவில், 
மணமற்ற   மலர்கள்,
ஒளியிழந்த  விளக்கு, 
தடைகளற்ற வெற்றி, 
சுவையில்லாத  விருந்து, 
நினைவுகளில்லா வாழ்க்கை,
பறவைகள் துறந்த  தோட்டம், 
 மண் வாசனையில்லா  மழை,
மனதைத்  தொடாத மகிழ்ச்சி, 
விரலைத் தீண்டாத நெருப்பு,
 குதூகலமற்ற கேளிக்கை,
     வசீகரமில்லாத ஓவியம்,   
அலைகளற்ற கடல், 
 ஈரமற்ற  பிணைப்பு , 
     கவிதையில்லா  கானம்........


                     
                                             

                                   எண்பதுகள் : கவிதைக் காற்று 



     நண்பரின் நண்பரை சந்திக்கும் நிகழ்வு பல வேளைகளில் ஒரு அவஸ்தையான அனுபவத்திற்கு கிடைக்கும் இலவச டிக்கட். அதிலும் நாம் சந்திக்காத ஒருவரைப் பற்றிய பலத்த முன்னுரைகள் நம் மூளைக்குள் தகவல்களாக அனுப்பப்பட்டபின் அது ஏற்படுத்திவிடும் பிம்பம் ஏகத்துக்கு பிரம்மாண்டமாக மாறி, அந்த எதிர்பார்ப்பு சாத்தியப்படும்  போது நாம் சந்திக்கும் நிஜம் சில சமயங்களில்  எதோ சர்க்கஸ் கோமாளிக் கூத்து போல ஆகிவிடுகிறது.  சமீபத்தில் எனக்கு இது நடந்தது.

         தன் அபிமான நண்பரின் பொது அறிவு மற்றும் கணவான் குணத்தைப் பற்றி (ஜென்டில்மேன் என்பதன் தமிழ்ச்சொல்) என் தோழர் ஒருவர் அடிக்கடி superlative adjective சேர்த்து பல விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வார்.  ("பயங்கரமா தண்ணி அடிச்சா கூட மத்த யாரப் பத்தியும் புரளி பேசமாட்டார். ஏதாவது பொது அறிவு கேள்விதான் கேப்பார். அப்படி ஒரு  ஜென்டில்மேன்") இரண்டு மூன்று  முறைகள் மொபைல் போனில் அவருடன் பேசியிருக்கிறேன் கட்டாயத்தின் பேரில். இந்த முறை நேரமோ  அல்லது வேறு  எதுவோ எங்களை சந்திக்க வைத்து விட்டது. சமீபத்தில் என்னைப் பார்க்க வந்திருந்த  எனது தோழர் என்னிடம், "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. (நண்பரின் பெயரைச் சொல்லி) அவர் வர்றதா சொல்லியிருக்கார்." என்றதும் கொஞ்சம் கலவரமாக உணர்ந்தேன். ஜுராசிக் பார்க் படத்தில் டி ரெக்ஸ் டைனோசர் அறிமுகமாகும் வரை மனதில் எகிறும்  த்ரில் போன்று ஏகப்பட்ட பதை பதைப்புடன் நான் காத்திருந்தேன். சில நிமிடங்களுக்குப் பிறகு  வந்தார் அந்த பொது அறிவுப் புயல்.

       சற்றும் பொருத்தமில்லாத தோற்றம் --- அதாவது நான் கற்பனை செய்திருந்த தோற்றத்தை முற்றிலும் சேதப்படுத்தியது போல  அவர் காட்சியளித்தார். அவரை ஏதோ மாதிரி கற்பனை செய்திருந்தது என் தவறுதான். வந்தவர் சம்பிரதாயமாக  என் கைகளைக் குலுக்கிவிட்டு பரஸ்பர அறிமுகங்களுக்குப் பிறகு சடாரென்று தோழரின்  பால்ய வயது கிரிக்கெட் சாகசங்களை எதோ அன்று காலைதான்  நடந்தது போல விவரிக்க ஆரம்பித்துவிட்டார், (ஆறு பந்துலயும் ஆறு சிக்சர் அடிப்பான்யா இவன்.) நான் எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் இருக்க, நான் காது கொடுத்துக் கேட்க விரும்பாத கிரிக்கெட் தொடர்பான டெக்னிகல் வார்த்தைகள் சரமாரியாக விழுந்தன. கொஞ்சம் நெளிந்த  என் தோழர், "இவருக்கு கிரிக்கெட் பிடிக்காது" என்றார் என்னைச் சுட்டிக்காட்டி. நான் அதை உடனே  மறுத்து இப்படிச் சொன்னேன்: "சுத்தமா பிடிக்காது." வந்தவருக்கு பலத்த ஆச்சர்யம். "ஏன்? விளையாட்டு பிடிக்காதா உங்களுக்கு?" என்றார் பி எஸ் வீரப்பா பாணியில் சிரித்துக்கொண்டே. அவர் தோற்றத்திற்கு அந்த வகை சிரிப்பு கொஞ்சம் அதிகம்தான். அவர் சிரித்து முடிக்கும் வரை காத்திருந்தேன்.  அதன் பிறகு  சொன்னேன்: "கிரிக்கெட்டை நான் விளையாட்டு என்று கருதுவதில்லை."

       அடுத்து நான் எழுதப் போவது சற்று நீண்ட உரையாடல்கள் அடங்கியது. பொறுமை இருந்தால் படிக்கவும். அல்லது  இதை நீங்கள் தாண்டிச் சென்றாலும் பாதகமில்லை.

          "அப்படியா? அப்படியானால் இசை பற்றி பேசலாம்." என்று எனக்கு இனிய அதிர்ச்சி கொடுத்தார். நான் நிமிர்ந்து உட்கார,  அடுத்து  நான் எதிர்பாராத கேள்வியைக்  கேட்டார்: "உங்களுக்கு இளையராஜா பிடிக்குமா?".  உண்மையில்  இந்த மாதிரியான சந்திப்புக்கு நான் தயாராக வந்திருக்கவில்லை. அதுவும் அன்றைக்கு இளையராஜா பற்றியெல்லாம் திடீரென ஒரு திடீர் மனிதருடன் விவாதிப்பேன் என்று சற்றும் கற்பனை செய்திருக்கவில்லை. அதுவும் அவர் கேட்ட தொனியிலிருந்து நாங்கள் பேசப்போவது குறித்து கவலை உண்டானது. சரிதான் இன்றைக்கு எதோ அசம்பாவிதம் நடக்கப்  போகிறது என்று உள்ளுக்குள் மணி அடித்தது. அதேசமயம் இவருடன் பேசினால் இன்னொரு பதிவுக்கான சில தகவல்கள் கிடைக்கும் என்ற எண்ணம் என்னைச் சூழ, "பிடிக்கும்." என்றேன். "அதாவது கொஞ்சம்."

   நண்பர் உடனே கண்களை மூடிக்கொண்டு கைகளை வெட்டி வெட்டி கர்நாடக கச்சேரி ஆலாபனை போல உச்சஸ்தாயில் ம்ம்ம் ம்ம் என்று ஏற்ற இறக்கமாக பாடிவிட்டு , "நான் உனை நீங்க மாட்டேன். நீங்கினால் தூங்க மாட்டேன். இந்த பாட்டு பிடிக்குமா?" என்றார் தன் கழுத்தை வெட்டி தடாலடியாக. அவரது கை அப்போதும் மேலும் கீழும் சென்றபடியேதான்   இருந்தது.

         நான் சொன்ன பதில் அவருக்கு அதிர்ச்சியை  கொடுத்திருக்கவேண்டும். நான் சொன்னது இதுதான்; "இதையெல்லாம் நான் ஒரு பாட்டாகவே எண்ணுவதில்லை." உண்மையில்  தொன்னூறுகளில் வந்த முக்கால்வாசி இளையராஜா பாடல்கள்  வெறும் சக்கைகள் என்ற எண்ணம் கொண்டிருப்பவன் நான். தொன்னூறுகள் என்றில்லை. எண்பதுகளின் மத்தியிலேயே அவர் இசை நீர்த்துப் போய்விட்டதாக எனக்கு ஒரு  எண்ணம் உண்டு. அவர் ஒரு நான்கைந்து  வருடங்கள் அதிகமாக நமது திரையிசையில் தங்கிவிட்டதாக எனக்குத் தோன்றுவதுண்டு.

    "உங்களுக்கு ரஜினிகாந்தைப் பிடிக்காது. அதனால்தான்" என்றார் எதோ ஒரு கொலைக்கான ஆதாரத்தை கண்டுபிடித்த போலிஸ் அதிகாரி  போல.

    "நடிகர்களை முன்னிலைப் படுத்துவது எனக்கு விருப்பமில்லாத ஒன்று. இரண்டாவது ரஜினிகாந்தை எனக்கு எதற்காக பிடிக்கவேண்டும்?" என்று கேட்டேன். தொடர்ந்து," நீங்கள் சொன்னதே தவறு. முதலில் இது ரஜினிகாந்தின் பாடலே அல்ல. இதற்கு இசை அமைத்தது இளையராஜா. பாடியது எஸ் பி பாலசுப்ரமணியம். அவர்களை   விட்டு விட்டு பாடலுக்கு வாயசைத்த நடிகரை சொன்னது சரியல்ல." என்றேன். சற்று நேர தீவிர யோசனைக்குப் பிறகு அவர் சட்டென்று தன் கைகளைத் தட்டி," நீங்கள் சொல்வது சரிதான்." என்றார் நாடக பாணியில்.  அதன் பின்னர், "இந்தப் பாடலை பிடிக்காது என்று என்னிடம் சொன்ன முதல் ஆள் நீங்கள்தான். இப்போது நான் இதை இங்கே (அது ஒரு ஹோட்டல்) பாடினால் எத்தனை பேர் கை தட்டுவார்கள் தெரியுமா?" என்றார். சொன்னவர் உடனே அதை செயல்படுத்தத் தயாராக தன் கைகளை உயர்த்த, நான்  அந்த விபரீத  கேளிக்கையை   காண ஆர்வமில்லாததால், "நீங்கள் பாடாமலே அது எனக்குத் தெரிந்ததுதான்." என்றேன் அவசரமாக.

        "உங்களுக்குப் பிடித்த இளையராஜா பாடல்கள் என்னென்ன?" என்றார் அவர். "சின்னப் புறா ஒன்று பாடல் கேட்டதுண்டா?" என்றேன். உடனே அவர் அந்தப் பாடலை பாட ஆரம்பித்து, " படத்தில் இந்தப் பாட்டுக்கு  பியானோ வாசிப்பது யார் தெரியுமா?" என்றார் புதிர் போல. தெரியாது என்ற பதிலை எதிர்பார்த்திருந்திருப்பார் போலும். நான்  "தெரியும். தேங்காய் சீனிவாசன்" என்றதும் தன் இருக்கையிலிருந்து எகிறிக் குதித்து ,"உங்களுக்கு நிறைய தெரிந்திருக்கிறது" என்று ஆர்ப்பரித்தார். எனக்கோ இது கேலிக்கூத்தாகத்  தோன்றியது. இது ஒரு மிகச் சிறிய முக்கியமில்லாத தகவல்.  என் பள்ளிப் பருவத்து நிகழ்வுகளையும் அப்போது நான் அறிந்திருந்த  சின்னச் சின்ன குறிப்புகளையும்  கொண்டு என் புத்தியைப்  பாராட்டுவது எனக்கு அவமானமாக இருந்தது. அவர் சந்திக்க வேண்டிய நபர்கள் நிறைய இருக்கிறார்கள் என்று மட்டும் நினைத்துக்கொண்டேன். அவரைச் சுற்றியிருக்கும் நண்பர்கள் குறித்து பரிதாபம் ஏற்பட்டது.

           "இளைய நிலா பொழிகிறதே, இது ஒரு பொன் மாலைப் பொழுது, அந்தி மழை, பனி விழும் மலர் வனம்  போன்ற பாடல்கள் எனக்கு இஷ்டமானவை. இளையராஜா விளையாடியிருப்பார்." என்றேன். "அதன் பின் அவருடைய எழுபதுகள் எனக்குப் பிடிக்கும். மற்றபடி நீங்கள் சொன்ன தளபதி படப் பாடல் இத்துடன் ஒப்பிட்டால் ஒன்றுமேயில்லை." என்றேன் முடிவாக.

    எங்களின்  உரையாடலுக்கிடையே  அவர் மொசார்ட், பீத்தோவன் பெயர்களைக் குறிப்பிட்டு, ("உங்களுக்கு இவர்களைத் தெரியாது என்று நினைக்கிறேன் " என்ற பின்குறிப்புடன்.) தன் அபிமானவரைப்  புகழ, நான் ,"அது பீத்தோவன் கிடையாது. பெய்ட்டோவன் என்று அவர் பெயரை உச்சரிக்க வேண்டும்." என்று திருத்தி,  மேலும் பாக், விவால்டி,ஷாபின்,வேக்னர் போன்ற சில  மேற்கத்திய செவ்வியல் இசைஞர்களை அவருக்கு சிபாரிசு செய்தேன், அவர் திடீரென வேறு பக்கம் தாவி, தமிழில் உங்களுக்குப் பிடித்த இசை அமைப்பாளர் யார் யார் என்று கேட்டார்.  எம் எஸ் விக்குப் பிறகு நான் சொன்ன பெயரை அவர் கேட்டேயிருக்கவில்லை. நான் சொன்னது; "வி.குமார்."  "தெரியுமா?" என்ற என் கேள்விக்கு நியாயமாக "இல்லை. இப்போதுதான் வி.குமார் என்ற பெயரையே கேள்விப்படுகிறேன்." என்றார் பலத்த சிந்தனையுடன். "வி குமாரின்  ஒரு பாடல் சொல்லுங்கள்" என்று தீவிரமாக என்னைப் பார்த்து வினவினார். "நிறையவே சொல்லலாம். ஆனால் உங்களுக்குத் தெரிந்ததான  ஒன்று என்றால் காதோடுதான் நான் பாடுவேன் பாடல். எல் ஆர் ஈஸ்வரி பாடிய  வெகு சிறப்பான பாடல்களில் ஒன்று அது." என்றேன். உடனே அவர் அதைப் பாடியபடி ,"நல்ல பாடல்தான்." என்றார்.

       பிறகு  "நானும் பழைய பாடல்கள் நிறைய கேட்பேன்." என்றவர் "கா கா கா பாடல் தெரியுமா?" என்றார். "பராசக்தி படத்தில் வரும் பாடல். அதற்கு இசையமைத்தது யார்?" என்றேன். நான் எதிர்பார்த்ததைப் போலவே, "எம் எஸ் வி?." என்ற ஆம் என்றாலும் இல்லை என்றாலும் இரண்டுக்கும் பாதகமில்லாத சாதுர்யமான கேள்விக்குறி கொண்ட பதில் அளித்தார்.  பழைய பாடல்கள் என்றாலே எம் எஸ் வி என்று பொத்தாம் பொதுவாக மூளைக்குள் ஒரு தகவலை தயாராக வைத்திருக்கும் சிலரின் மடமையை அதே எம் எஸ் வியே உடைத்து விடுகிறார். "இல்லை. அதற்கு இசை சுதர்சனம். களத்தூர் கண்ணம்மா படத்துக்கும் அவர்தான் இசை." என்றேன். கா கா கா பாடலைப் போன்றே  அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாடலும் அவருக்கு  பரிச்சயமாக இருக்கலாம் என்ற எண்ணமே காரணம்.  "நீங்கள் இளையராஜாவை மட்டுமே கேட்கிறீர்கள். அவருக்கு முன்னே இருந்தவர்களையும் கேட்டால் உங்கள் மதிப்பீடு மாறலாம். என்னை கொஞ்சம் புரிந்துகொள்வீர்கள்." என்று சொன்னேன்.  ஆமோதிப்பது போல அவர் தலையசைந்தது.

     ஆனால் என் தோழருக்கு  இந்த உரையாடல் செல்லும் திசை கலவரத்தைக் கொடுத்திருக்க வேண்டும்.  அதிரடியாக ," உங்களுடைய பொது அறிவுக் கேள்விகளைக் கேளுங்கள்." என்று தன் நண்பரை  உசுப்பிவிட, அவரோ அடுத்து என்சைக்ளோபீடியா ரேஞ்சுக்கு (உலகிலேயே அதிகம் பேசப்படும் வார்த்தை எது? போன்ற) சில வினாக்கள்  தொடுத்து, அதன் பின் உடற்பயிற்சி என்ற பெயரில் ஆல்பட்ராஸ் பறவை போல கைகளை விரித்து சில வித்தைகள் காட்டினார்.  பிறகு மேஜிக் செய்வதாக இன்னும் சில கோமாளித்தனங்களைச் செய்துவிட்டு ஒருவழியாக விடை பெற்று தன் காரில் ஏறும் முன்," இன்னொரு முறை நாம் சந்திக்க வேண்டும். உங்களுடன் நிறைய பேச வேண்டும்." என்றார் முகத்தைத் தாண்டிய நீளமான புன்னகையுடன். அவருக்கு சற்று ஒடுக்கமான சிறிய முகம் என்பதை இங்கே சொல்லியாகவேண்டும்.  "ஆம் நிறைய விவாதிக்க வேண்டும்." என்றேன் நான். அவர் சென்றதும் எங்களுடன் இருந்த மற்றொரு நண்பர் என் தோழரைப் பார்த்து கடுமையான பெருமூச்சுக்குப் பிறகு, "எங்கேயிருந்துப்பா  இவரைப் பிடிச்சீங்க?" என்றார் கையால் விசிறிக்கொண்டே. துளித்  துளியாக அவர் முகம் வியர்த்திருந்தது.

    இந்த நண்பர் என்றில்லை. பல இளையராஜா ரசிகர்களிடம் விவாதிக்க நேரும்பொழுது நான் உதாரணம் காட்டும் சில பாடல்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை சேர்ந்தவையாக இருப்பதை நான் அறிவேன். இது எனக்கு மட்டுமே தோன்றக்கூடிய ஒரு வினோத வரைபடம் அல்ல என்று நினைக்கிறேன். என்னதான் சின்னத் தம்பி, கரகாட்டகாரன், அக்னி நட்சத்திரம், தேவர் மகன், தளபதி என்று அவருடைய அந்திம காலப் பாடல்களை ஏகத்துக்கு பாராட்டினாலும், அவரது ஆரம்ப எண்பதுகள் அசாதாரணமானவை. அபாரமான இசை ஊற்று  அப்போது அவரிடமிருந்து புறப்பட்டது.  இன்றும் பலர் உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைத்து ஆராதனை செய்யும் பல இளையராஜா பாடல்கள் எண்பதுகளில் உருவாக்கப்பட்டவையே.என்னைப் போன்றவர்களுக்கு இளையராஜா என்றால் அது எண்பதுகள்தான். என் பார்வையில்  86 ஆம் ஆண்டு வரை என்று சொல்லலாம்.

    சற்று இவற்றின் மீது பார்வை கொண்டால் உங்களுக்கு ஏற்படும் நினைவலைகள் தரும் சந்தன ஒத்தடங்கள் விலைமதிப்பில்லாதவை.

பருவமே புதிய பாடல் பாடு,
நீதானே எந்தன் பொன் வசந்தம், 
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே, 
தோகை இளமயில், 
வனிதாமணி வனமோகினி,  
புத்தம் புது காலை பொன்னிற வேளை, 
காலைத்  தென்றல் பாடிவரும் , 
மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு, 
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே, 
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன், 
பூவே செம்பூவே உன் வாசம் வரும்,
காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்,
பூங்காற்று புதிதானது,
தேனே தென்பாண்டி மீனே 
நானாக நானில்லை தாயே,
நிலவு தூங்கும் நேரம்
நான் பாடும் மௌன ராகம் 
என்ன சத்தம் இந்த நேரம்,

     சற்று கூர்ந்து கவனித்தால் அந்த காலகட்டத்தில் (80களின் பெரும்பான்மை) அவரது இசையில் ஒரு நவீன தரம் சுடர்விட்டதை அவதானிக்கலாம். நெஞ்சத்தைத் தழுவும் இசைக் கோர்ப்பு மட்டுமில்லாமல் ஒலிப்பதிவு நுட்பம், வியப்பூட்டும் பரிசோதனைகள், அபிரிமிதமான மெட்டுக்கள் என அவர் இசை வண்ணத்துப் பூச்சியின் இறக்கைகள் போல நிறம் நிறமாக விரிந்தது. உதாரணமாக  காக்கிச் சட்டை, எனக்குள் ஒருவன், நினைவெல்லாம் நித்யா, மெல்லத் திறந்தது கதவு (எம் எஸ் வி யுடன் சேர்ந்து இசையமைத்தது), தூங்காதே தம்பி தூங்காதே, பகல் நிலவு, இதய கோயில், இளமைக் காலங்கள், உதய கீதம்,  தென்றலே என்னைத் தொடு, குங்குமச் சிமிழ், நான் சிகப்பு மனிதன், விக்ரம், புன்னகை மன்னன்  படப் பாடல்களை நினைவு கூர்ந்தால் அதன் துல்லியத் தொழில் நுட்ப நேர்த்தி அவர் இசைக்கு அளித்த மகத்தான பரிமாணத்தை நாம் உணரலாம்.  82 முதல் 88 வரை இளையராஜாவிடம் பணியாற்றிய எமி என்ற மிகத் திறமையான ஒலிப்பதிவாளர் சாத்தியப்படுத்திய இந்தத் தொழில் நுட்பத் துல்லியம் இளையராஜாவின் எண்பதுகளை ஒரு தனி இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர வைத்திருக்கிறது. (இதே எமிதான் ரஹ்மானின் சின்ன சின்ன ஆசையில் பங்காற்றியவர்.) வரிகளுக்கு நடுவில் வாசிக்கும் திறமை கொண்டவர்கள் இதை தவறாக புரிந்துகொண்டு  நான் இளையராஜாவின்  வளர்ச்சிக்கு எமிதான் காரணம் என்று குறிப்பால் உணர்த்துவதாக திரிக்க வாய்ப்பிருக்கிறது. நான் கூற விழைந்தது  அதுவல்ல.

     எண்பதுகளின் இளையராஜாவின் இசை  ஒரு பூர்த்தியடைந்த முப்பரிமாணத் தோற்றமாக இருந்தது. மரபு வேர்களைத் துறக்காத, கட்டுப்பாடற்ற  நளினமான அவரது  நவீன  இசை, எமியின் ஒலிப்பதிவுத் தரம் என்பதைத் தாண்டி இன்னொரு ரேகையும் இளையராஜாவின் எண்பதுகளில்  ஒளிந்திருந்தது. அந்த மூன்றாவது பரிமாணம் சற்றும் எதிர்பாரா வேளையில் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து, வானம் வெடித்துக் கொட்டும் ஒரு கோடை மழை போல இளையராஜாவின் இசையில் ஒரு இரட்டை வானவில் போன்று அபூர்வமாகத் தோன்றிய கவிதை.  இந்தக் கவிதையின் வருகையை இளையராஜாவின் இசையில் சாத்தியமாக்கியது வைரமுத்து என்ற கவிஞன்.

           80இல் வந்த ஒரு தலை ராகம் என்றொரு  முகமறியா கலைஞர்களின் படைப்பு தமிழ்த் திரையை ஒரு பேரலை போலத் தாக்கியது. அதன் வெற்றிக்கு அதுவரை காண்பிக்கப்படாத கல்லூரி கலாட்டா, கண்ணியமான காதல், அலுப்பு தராத திரைக்கதை போன்ற தகுதிகளுடன் தரமான பாடல்களும் ஒரு சிறப்புக் காரணம். வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது என்ற பாடல் பெருத்த வெற்றி பெற்று பட்டி தொட்டி, மேடைக் கச்சேரிகள், வானொலி, கல்யாண வீடுகள் என எங்கும் இடைவிடாது பாடியது. இதிலுள்ள மற்றொரு பாடலான இது குழந்தை பாடும் தாலாட்டு அதன் முரண்களுக்காகவே பெரிதும் விரும்பப்பட்டது.  (அப்போது என்னைப் போன்ற) பள்ளிச் சிறுவர்கள் கூட இதன் கவிதையை வெகுவாக ரசித்தனர். அதற்கு முன் இத்தனை முரண்களை முன்வைத்து ஒரு பாடல் வந்ததாக நினைவில்லை.

       ஒரு தலை ராகம் படப் பாடல்களுக்குக் கிடைத்த சிகப்புக் கம்பள வரவேற்பு இளையராஜாவின் இசையிலிருந்த   கவிதை வெற்றிடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது.  "பாட்டெல்லாம் எழுதினது யாரோ டி ராஜேந்தராம். என்னாமா எழுதியிருக்கான் பாரு" என்று  இன்றைக்கு டண்டனக்கா டணக்கா என்று பகடி செய்யப்படும்  ராஜேந்தரின் மீது அப்போது பலத்த பாராட்டு மழை பொழிந்தார்கள் பலர்.  இளையராஜாவின் பாடல்களில் மீட்டப்பட்ட புதுமையான இசைக் கோர்வையில் ஒரு சராசரி ரசிகன் லயித்துப் போய் கவிதை வரிகளை அலட்சியம் செய்தான். அவனுக்கு அந்த இசையின் போதையே போதுமானதாக இருந்தது. "என்னய்யா பெரிய கவிதை?" என்ற இகழ்ச்சியினால் தனது அபிமானவரை அவன் பாதுகாக்க முயன்றான். ஆனால் அவனுக்குள்ளும் சின்னச் சின்ன ஆசைகள்  மிச்சமிருந்தன.

      கண்ணதாசன், வாலி, பஞ்சு அருணாசலம், கங்கை அமரன்   போன்றவர்கள் இளையராஜாவுக்காக பாடல்கள் எழுதியிருந்தாலும், அவர்களது கவிதைகளை பை பாஸ் செய்துவிடும்  இசை அவரது பாடல்களில் அதிகாரம் செலுத்தியது. கண்ணதாசனின் மிகச் சிறந்த பாடல்கள் என மடமட வென்று ஒரு பத்து பாடல்களை உங்கள் நினைவுகளிலிருந்து எடுத்துப் போட்டாலோ, அல்லது நிதானமாக ஒரு கப் காபி உறிஞ்சிக் கொண்டு பேப்பர், பேனா சகிதமாக ஆழ்ந்து யோசித்து ஒரு 100 பாடல்களை பட்டியலிட்டாலோ  அதில் கண்ணதாசன் இளையராஜாவுக்கென இயற்றிய பாடல்களில் ஒன்று அகப்பட்டாலே ஆச்சர்யம்தான்.  (நல்லவெர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு என்ற பாடல் எனக்கு இவர்கள் இணைப்பில் அதிகம் பிடித்த பாடல்.) அப்படியான ஆச்சர்யமான அந்த ஒன்று பெரும்பாலும் கண்ணே கலைமானே என்ற மூன்றாம் பிறைப் படப் பாடலாக இருக்கலாம். ஏனென்றால் சிலர் என்னிடம் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் அந்தப் பாடல் நல்ல கவிதை கொண்டது என்பதை விட அதுதான் கண்ணதாசன் சினிமாவுக்கென எழுதிய கடைசிப் பாடல் என்பதால்தான்.

          இளையராஜாவுக்கும், நல்ல   கவிதைக்கும் எட்டாத தூரம் என்று அவரது எதிர்ப்பாளர்கள் ஒரு வித மேதமையான உற்சாக மிதப்பில் இருந்த வேளையில்  இளையராஜாவின் உருவாக்கத்தில் வந்த  ஒரு பாடல் எல்லோரையும் ஒரு சக்தி வாய்ந்த மின்னல் போலத் தாக்கியது. அழகான கவிதையில் மூழ்கி எழுந்த அனாசயப் பாடல்.   இடையே வரும் "வானம் எனக்கொரு போதி மரம், நாளும் எனக்கது சேதி தரும்" என்ற வரிகள் கேட்டவர்களை திகைக்க வைத்தன. வானத்தின் ரகசியங்களையும், மர்மமான கொடைகளையும்  போதி மரத்துக்குள் அடைத்து  புத்தனின் கண்களை  ரசிகனுக்கு அணிவித்த  அபாரமான வரிகள் அவை. பகுத்துப் பார்க்க முடியாத கணத்தில் நிறம் மாறும் மாலை வானத்தை "வான மகள் நாணுகிறாள்,  வேறு உடை பூணுகிறாள்" என்று வர்ணித்த கவிதை பூசிய காந்த வரிகள்  இது ஒரு பொன் மாலைப் பொழுது   பாடலை ஒரு ஆச்சர்ய  அறிமுகம் செய்தன. அதுவரை இளையராஜாவின் இசையில் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்த  உயர் கவிதை ஒரு பொன் மாலைப் பொழுதில் அவரிடம் சரணடைந்தது.  இளையராஜாவின் இசை வானவில்லை அணிந்துகொண்டது.

   இயற்கையை கருப் பொருளாகக் கொண்டு இயற்றப்பட்ட தமிழ்த் திரைப் படப் பாடல்களில் குறிப்பிடத்தக்கவைகள் என்று பார்த்தால் சாந்தி நிலையம் படத்தின் இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி பாடலை தவிர்க்க முடியாது. அதன் இசையும் மெட்டும் வரிகளும் குரலோசையும் ஒரு காவியத்தைப் படைத்தன. அதோடு நீயா நானா என்று போட்டி போடும் மற்றொரு பாடல் இருக்குமானால் அது நிழல்கள் படத்தின் இது ஒரு பொன் மாலைப் பொழுது பாடலாகத்தான் இருக்க முடியும். இது குறித்து எனக்கு ஒரே ஒரு வரி மட்டும் அனுமதிக்கப்பட்டால் நான் எழுதுவது இதுதான்:

        நிழல்கள் வந்தது. இது ஒரு பொன் மாலைப் பொழுது நிகழ்ந்தது.

             அப்துல் ரகுமான், இன்குலாப் (இருவரும் ஒருவர்தானோ? அமுதவன் ஸார்தான் சொல்லவேண்டும்.) போன்ற கவிஞர்கள் தமிழ் மரபுக் கவிதை வடிவத்தை உடைத்து புதிய எழுத்தாக்கங்களை உருவாக்கி புதுக் கவிதை என்ற நவீன எழுத்துக்கு உயிரூட்டிக்கொண்டிருந்த நேரமது.  எந்தப் பத்திரிக்கையானாலும் அங்கே புதுக் கவிதை கோலம் பூண்ட நான்கைந்து வரிகள் படிப்பவர்களை பரவசப்படுத்திவிட்டு சிலிர்ப்புடன் கடந்து செல்லும். எங்கள்  நண்பர்கள் வட்டத்தில் இந்தப் புதுக் கவிதை பைத்தியம் பிடித்து அலைந்த  என் நண்பர்களின் ஒருவன்,  "ஒரு நீளமான வரியை நாலா வெட்டி ஒன்னு கீழ ஒன்னு எழுதினா அதான் புதுக் கவிதை." என்று அதற்கு அருஞ்சொற்பொருள் அளித்துவிட்டு ,
அவன்
வீட்டுக்குள்
வந்து
உடனே
கதவை
சாத்தினான்."
என்று எழுதி தானும் ஒரு கவிஞனாகிவிட்டதாக பெருமை கொண்டான்.
வெளியே
ஒரு
நாய்
குலைத்தது
என்று நான் அதைத் தொடர, எங்கள் நண்பர்கள் வேறு எதோ எழுத புதுக்கவிதை இவ்வளவு சுலபமா என்ற வியப்பில் நாங்கள் ஆழ்ந்துபோனோம். ஆனால் இதுபோன்ற சில்லறைத்தனமான நிகழ்வுகள் சிறிது காலமே. நான் புதுக் கவிதைகளை ஆழ்ந்து வாசித்த நேரம் அதன்பின் வந்தது.  ஏறக்குறைய இதே சமயத்தில்தான் வைரமுத்து என்ற பெயர் வானொலிகளிலும் நண்பர்கள் வட்டத்திலும் உச்சரிக்கப்படத் துவங்கியது.

    82ஆம் ஆண்டின் ஒரு கோடை வெயில் நாளில் நான் தனியாக வானொலியின்   குமிழைத் திருகிக் கொண்டிருந்த வேளையில் ஒரு பாடல் என் மீது ஒரு நெருப்புத் துளி போல தெறித்து விழுந்தது. அதைக் கேட்ட அந்த நொடியிலேயே நான் எதோ வசியத்திற்கு உட்பட்டதைப் போல என் நிலை மறந்தேன். பாடலின் இசையும், பாடகன் அதைப் பாடிய விதமும், அந்தக் கவிதை வரிகளும் ஒரு ஆயிரம் வாட்ஸ் மின்சார பல்பை அப்படியே விழுங்கி விட்டது போல எனக்குள் துடியாக இறங்கின. பாடல் முடிந்ததும் ஒலிபரப்பாளர் சொன்னார்; "இப்போது நீங்கள் கேட்ட பாடலைப்   பாடியது எஸ் பி பாலசுப்ரமணியம், பாடலுக்கு இசை இளையராஜா. பாடலை இயற்றியது வைரமுத்து. படம் நினைவெல்லாம் நித்யா."   அந்த நெருப்புத் துளி  பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்.

        முதல் முறை கேட்டபோது  பனி விழும் மலர் வனம் என்ற அந்த முதல் வரி எனக்குள் வர்ணிக்க இயலாத  கற்பனைவெளிகளை விரித்தது. பாடல் பல்லவி, சரணம் என மலர மலர வார்த்தைகளின்  அழகு வரிக்கு வரி இன்னும் பல காட்சிகளை  என்னில் விதைத்தது.  அது ஒரு புதுக் கவிதையின் ஆனந்த அணைப்பு. கவிஞர் என்றால் கண்ணதாசன் என்றே கேள்விப்பட்டிருந்த எனக்கு அந்த சிறு வயதில் வைரமுத்து  ஒரு நவீன வெளிச்சம். அதுவரை அறிந்திராத ஒரு கவிதைச் சுவை.

        கவிதை என்னைக் கவர்ந்தது என்றால் பாடலின் இசையமைப்பு என்னைக் கைப்பற்றியது. இளையராஜாவின் அற்புதமான மெட்டுக்கு வைரமுத்து எழுதிய சிலிர்ப்பான கவிதை பொருத்தம் என்றால், அந்தக் கவிதைக்கு இளையராஜா அமைத்த இசை, அந்தப்  பாடலை கண்ணாடி காலனி அணிந்த சின்டரெல்லா போல அழகாக்கி விடுகிறது. சிறிய எளிய கிடார் இசையுடன் துவங்கும் பாடல் இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் என்ற வரிகள் வரை  தயங்கித் தயங்கி தலைகாட்ட, அதன் பின் வெடித்துக் கிளம்பும் மேற்கத்திய ட்ரம் இசை ஒரே நொடியில் பாடலின் பாவத்தை (tone) துடிப்பான அசைவுக்கு மாற்றி  வேறு பரிமாணம் கொள்கிறது. என்ன ஒரு ஆர்ப்பரிப்பான இசை!

        இளையராஜா மேற்கத்திய பாணியில் அமைத்த என்னடி மீனாட்சி போன்ற பாமரத்தனமான டிஸ்கோவாகவும் இல்லாமல் பின்னர் கம்ப்யூட்டர் இசை என்ற ஜிகினா பூசிக்கொண்ட காலம் காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்  போன்ற திகட்டும் இசையாகவும் இல்லாமல் அக்னி நட்சத்திரத்தின் பொலிவற்ற நீர்த்துப் போன மேற்கத்திய தடவலாகவும் இல்லாமல் பனி விழும் மலர் வனம்  மேற்கத்திய பாணியின் நீள அகலங்களை கச்சிதமாக உள்வாங்கி, அதன் வடிவத்தை சிதைக்காமல் வரி வரியாக அழகை அணிந்துகொண்டு கேட்பவர்களை வசியம் செய்யும் அபூர்வப் பாடல். இந்தப் பாடலை மனதில் வைத்தே நான் இந்தப் பதிவின் துவக்கத்தில் குறிப்பிட்ட அந்தப் பொது அறிவுப் புயலிடம் "இளையராஜா விளையாடியிருப்பார்" என்று சொன்னேன். உண்மையில் இப்பாடல் சலிப்பின் சாயலை என்றுமே தன்னருகே நெருங்க விடாத இளமையின் ஊற்று.

           இதன் பின் சிறிது நாட்கள் கழித்து ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் என்று மற்றொரு மகரந்தம் என் மீது விழுந்தது.
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன் 
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வீடாவேன் 
பூவிலே மெத்தைகள் தைப்பேன் 
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன் 
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் 
போன்ற காதலின் நெருக்கத்தை இதமாக  பாடும் கவிதை வரிகள் என் நெஞ்சத்தைத் தைத்தன.  பாடல் தரும் போதை ஒரு பக்கம் என்றால் அது மனதுக்குள் காண்பிக்கும் பூந்தோட்டங்கள் இன்னொரு போதை. வைரமுத்து எனக்கு அதிகம் பரிச்சயமானது இந்தப் பாடலில்தான்.  காதலின் அடர்த்தியை இத்தனை மென்மையாக இலைகளாகவும், வசந்தமாகவும் அதைத் தாண்டி சேலையின் நூலாகவும் பார்க்கும் ரசனை எனக்குப் புதிது. மிகப் புதிது.

        தோளின் மேலே பாரமில்லே கேள்வி கேட்க யாருமில்லே என்ற ஒசிபிசா வகைப் பாடல் ஒரு இளைஞனின் கொண்டாட்ட மனநிலையை அப்படியே வெளிக்கொணர்ந்தது. பிரபல பதிவர் ஒருவர்  இந்தப் பாடலையும் அக்னி நட்சத்திரத்தின் ராஜா ராஜாதி ராஜன்  இந்த ராஜா ராஜா  பாடலையும் (இரண்டுமே இளைஞனின் கொண்டாட்டத்தை பதிவு செய்த பாடல்கள்.) ஒப்பிட்டு இரண்டின் கவிதையும் மேற்கோள் காட்டி, எவ்வாறு வைரமுத்துவின் வரிகள்  இளையராஜாவின் பாடல்களுக்கு ஒரு புதிய ஒளியைக் கொடுத்தது என்று எழுதியிருந்தார்.  அது உண்மையே.

    நினைவெல்லாம் நித்யா படத்தின் பாடல்களில்  பனி விழும் மலர் வனத்திற்குப் பிறகு  நெஞ்சத்தில் எழுவது நீதானே எந்தன் பொன் வசந்தம் என்ற தேனூறிய  பூங்காற்று.  பஸ் பயணம் செய்தவன் முதல் முறையாக ரயிலில் செல்லும்போது அவனக்கு ஏற்படும் முதல் பரவச உணர்ச்சி, ஆனந்த அனுபவங்கள், அதை உண்டாக்கும் காட்சிகள் என்று எல்லாமே அவன் நினைவில் படிந்துபோவதுபோல இளையராஜாவின் வழக்கமான இசையமைப்பிலிருந்து தன்னையே புதுப்பித்துக்கொண்ட   ஒரு வைர வசந்தம். மிகச் சிறப்பான இசைகோர்ப்பு. பாடலின் இரண்டாவது சரணதிற்கான இசையில் கிடாரும் வயலினும் ஓடிப் பிடித்து விளையாடுவதுபோல  வெட்டி வெட்டி ஒலிக்கும். எதோ மரங்களின்  இடையே சூரியக்  கதிர்கள் மறைந்து மறைந்து வெளிப்படும் அழகைப்  போன்ற இசையமைப்பு. முதல் முறை கேட்டபோதே பிரம்மித்துப் போனேன். சிலர் சொல்வதுபோல இளையராஜா மீண்டும் தன் இருப்பை உணர்த்திய இசை. இத்தனை அபாரமான தாலாட்டும் பாடல்களுக்கு முரணாக நீங்கள் எப்போதுமே பார்க்கக் கூடாத அல்லது காண விரும்பாத காட்சியமைப்பு கொண்ட பாடல்களில் இது அடக்கம். இன்றைக்கு நினைவெல்லாம் நித்யாவை நமக்கு நினைவூட்டுவது இளையராஜாவின் இசை மட்டுமே.

         அந்தி மழை பொழிகிறது   என்ற அடுத்த இசைத் தீற்றல்  ரசிகர்களின் மனதில் துளித் துளியாக விழுந்து நெஞ்சத்தை ஒரு புதுவித நறுமணத்துடன் நிரப்பியது. அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது என்ற சிந்தனைக்கு கிடைத்த வரவேற்பு தமிழ்த் திரையிசையில் மீண்டும் கவிதையின் ஆட்சிக்கான அங்கீகாரம். இந்திரன் தோட்டத்து முந்திரி, மன்மத நாட்டுக்கு மந்திரி, தண்ணீரில் மூழ்கும் போதே வேர்கின்றது, ரகசிய ராத்திரி புஸ்தகம் போன்ற வியப்பு வரிகள் பாடலை மெருகேற்றின. இடையிசையில் வரும் அந்த திடீர் ராக ஆலாபனை அப்போது ஒரு மிகப் புதிய அனுபவம். தவிர, முதல் முறையாக பாடகர் எஸ் பி பியை திரையில் ரசிகர்கள் கண்டதும் இந்தப் பாடலில்தான்.

      வைரமுத்து தங்க மழை பொழிகிறது என்றுதான் முதலில் எழுதியதாகவும் இளையராஜாவே அதை அந்தி மழை என்று மாற்றியதாகவும் இந்த பாடல் குறித்து ஒரு தகவல் உண்டு. நான் இதை மறுக்கப் போவதில்லை. ஏனென்றால் இது ஒன்றும் புதிதல்ல. இளையராஜா பல சமயங்களில் தனது கவிதைத் திறமையை அவ்வப்போது இவ்வாறு பரிசோதித்துப் பார்த்தவர்தான்.  (பாடல்களைத் தாண்டி இன்னும் பல தளங்களில் அவர் நுழைந்ததுதான் அவருக்கு எதிரான  மனப்பான்மை திரையுலகில் உருவாக காரணமாயிற்று என்று சொல்லப்படுகிறது.) மேலும் வைரமுத்துவின் சில வரிகளில்   இதுபோல இளையராஜா கை வைத்ததுதான் இருவருக்கும் இடையேயான விரிசலின் முதல் புள்ளி என்று சிலர் சொல்கிறார்கள். அடுத்த பதிவின் இறுதியில் இதைப் பற்றிப் பார்ப்போம். (இந்தப் பதிவே  நீண்டுவிட்டதால் இரண்டு பகுதிகளாக வெளியிட எண்ணம்.)

   மற்றொரு நாளில் பள்ளிக்கு அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருந்த வேளையில் வானொலிப்  பக்கம் சற்று ஒதுங்கிய போது  என்னை நனைத்தது ஒரு பரவசம். தகிட ததிமி என்று துவங்கி அதன் பின் வேகம் பெற்று உச்சம் தொட்டது அந்தப் பாடல்.  இருதயம் அடிக்கடி இறந்தது  என்பேனா என் கதை எழுதிட மறுக்குது என் பேனா, கால்கள் போன தூரம் எந்தன் எல்லை, வாழ்க்கையோடு கோபமில்லை காதல் என்னை காதலிக்கவில்லை போன்ற வரிகள் சோக ஓவியம் வரைந்தன. இரவு தோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது என்ற வரிகளில் அழுது என்ற வார்த்தையை எஸ் பி பி ஒரு விரக்தியான  சிரிப்புடன் பாடுவது அழகு. படம் வந்த பிறகு கமலஹாசன்  போதையில் ஒரு கிணற்றில் மீது ஆடும் காட்சிக்கு பலத்த கைத்தட்டல்கள் கிடைத்தன. ஆனால்  அங்கே நடிகனைத் தாண்டி அந்தப் பாடலை உயிர் பெறச் செய்வது  இளையராஜாவின் இசைதான். குறிப்பாக இறுதியில் தோன்றும் அந்த கோரஸ் மனதைத் தீண்டும் ஒரு அற்புதம்.

           இந்த சமயத்தில்தான் எங்கள் வீட்டுக்கு ஒரு "புதியவர்" வந்தார்.  அவரை நாங்கள் வீட்டு வானொலி அறையில் அமர வைத்து, தொடர்ந்து  பாடல்கள் பாட வைத்து, அவரைப் படுத்தி எடுப்போம். அவர் வந்த விஷயம் கேள்விப்பட்டு எங்கள் நண்பர்கள் வேறு இவரைத் தேடி வர ஆரம்பித்தார்கள் பல வேண்டுகோள்களுடன்,  அவரோ பல மொழிகளில் பலவிதமான பாடல்கள் பாடுவார். இளையராஜா பாடுவார். சங்கர் கணேஷ் பாடுவார். ஒசிபிசா பாடுவார், யாதோங்கி பாரத் பாடுவார். திடுமென kraftwerk சிந்தசைசரில் இயந்திரக் குரலில் பேசுவார். ரொம்பவும் அதிகமாக பாடிவிட்டால் சூடாகி விடுவார். மின்சாரத்தை மட்டும் தீனியாக சாப்பிட்டுக் கொண்டு நாங்கள் தூங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் எங்களுக்காகவே சேவை செய்துவந்தார்.  அவர் பெயர் நேஷனல் பேனாசோனிக் ஸ்டீரியோ டேப் ரெகார்டர்.

          என் தந்தைக்குத் தெரிந்த ஒருவர் மூலம் சிங்கப்பூரிலிருந்து விசேஷமாக வாங்கப்பட்டது அந்த டேப்.  சமயப் பாடல்கள், ஹிந்திப் பாடல்களை பதிவு செய்து கேட்டது போக, முதல் முறையாக தமிழ் கசெட் ஒன்று வாங்கினோம். அது இளமைக் காலங்கள் என்ற படத்தின் பாடல்கள். இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம் பிறக்கும்,  பாட வந்ததோ ராகம் பாவை கண்ணிலோ நாணம் போன்ற துடிப்பான பாடல்களை எங்கள் டேப்பில் கேட்டபோது உண்டான ஆனந்தம் ஒரு தனி சுவை கொண்டது. பாடல்களைவிட அவற்றை கேட்ட கணங்கள் அற்புதமானவை. இன்றும்  இந்தப் படத்தின் பாடல்கள் எனக்கு அந்த டேப் ரெகார்டர் நாட்களை நினைவுபடுத்தும். மற்ற பாடல்களை விட என்னை அதிகம் கவர்ந்தது ஜேசுதாஸ் பாடிய ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே.   அது ஒரு நவீனத் தென்றல்! மிக வித்தியாசமான தாளக்கட்டில் இதமாக நம்மை தடவிச் செல்லும் இன்ப கீதம். பாடலை நன்றாக உள்வாங்கினால் இது ஒரு வழக்கமான இளையராஜா பாடல் போன்றில்லாமல் வேறு பரிமாணத்தில் இருப்பதை உணரலாம். பாடலின் பாதையில்  தடங்கலின்றி சற்றே அரை வினாடி நின்று நின்று ஒலிக்கும் தாளம் இந்தப் பாடலுக்குத் தீட்டும் வண்ணம் அபாரம். அதைவிட பாடலின் இடையிசையில்  வழக்கமான தாலாட்டும் குழலிசை, நீளும் வயலின் போன்ற இளையராஜா சங்கதிகள் கிடாருடன் கைகோர்த்துக்கொண்டு வேறு வகையாக முகம் காட்ட,  அது ஒரு புதுவித தோற்றத்தை ஈரமான ரோஜாவுக்கு அளிக்கிறது. தமிழில் விசில் பாடல்கள் என்ற வகையில் எம் எஸ் வி நிறைய பாடல்கள் அமைத்திருக்கிறார். ஆனால் இளயராஜாவின் இசையில் வெகு அரிதாகவே இந்த பாணியைக் காணலாம்.  அரிதான அந்த ஒன்றில் இந்தப் பாடல் ஒரு உன்னதம்.

      இந்தப் பாடலின் கவிதை வரிகள் அலாதியான அழகு.  இந்தப் பாடல் எனக்குள் அமிழ்ந்து கிடக்கும்  ஒரு வேடிக்கையான நினைவை உரசிச் செல்லும். கல்லூரியில் சேர்ந்த புதிதில் வேறு வீட்டுக்கு குடியேறிய நாட்களில் அங்கே வீட்டுக்கு அருகேயிருந்த  ஒரு பெண்ணை என் நண்பர்களோடு சேர்ந்துகொண்டு "விசேஷ பார்வை" பார்த்துக்கொண்டிருந்த நேரம். உண்மையில் அவள் அப்படியொன்றும் அழகில்லை. ஆனால் என்  ஹார்மோன்களுக்கு  அப்போது அது முக்கியமில்லை. அவள் இங்கே அங்கே கண்ணில் பட்டால் ஹார்மோன்கள் இன்னும் அதிகமாக துள்ளும். நான் கொஞ்சம் அடக்கி வாசித்தாலும், என் நண்பர்கள் அடித்த லூட்டியில்  (இதில் ஒரு நண்பன் இரண்டு விரல்களை வாயில் வைத்து எழுப்பும் மகா விசில் ஓசைக்கு நான்கு தெருக்கள் தள்ளி ஓடும் டவுன் பஸ்ஸே நின்றுவிடும்.) அவள் ஏகத்து கலவரமாகி அதிர்ந்துபோக,  அதன் விளைவு  அவளுக்கு என் மீது கொஞ்சமாக  துளிர் விட்டிருந்த ஒரு மிக  மெல்லிய நல்லெண்ணம் நீரைக் காணாத தாவரம் போல சடுதியில் பட்டுப்  போனது. அதன் பின் அவள் கண்களில் புயலையும் நெருப்பையும் அணிந்துகொண்டு என்னைப் பார்ப்பாள். To make matters worse, கடைவீதி, கோவில்,பேருந்து நிலையம் என்று எங்கே சென்றாலும் அவள் வீட்டை நான் கடந்து செல்லவேண்டிய நிர்பந்தம் வேறு. அவ்வாறு செல்கையில் சில சமயங்களில் பட்டென்று ஒரு சத்தம் கேட்கும். என்ன சத்தம் இந்த நேரம் என்று ஆராய்ந்தால், அவள் வீட்டின் ஜன்னல் ஆவேசமாக மூடப்பட்டதன் அடையாளமாக மூடிய ஜன்னலின் கொக்கி மட்டும் ஒரு பெண்டுலம் போல ஆடிக்கொண்டிருக்கும். நண்பர்களிடம் சொன்னதற்கு எனக்குக் கிடைத்த பதில் : "உன்னைப் பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டுப் போகும்."   வியப்புச் சுவை கொண்ட வைரமுத்துவின் ரசனையான வரிகள்! சில சமயங்களில் ஒரு பாடல் கவிதை கொண்டு எத்தனை அழகாக தன்னை அலங்காரம் செய்துகொள்கிறது!

   இதற்கு சற்று முன்தான் இன்னொரு இசை மழை பெய்து ஒய்ந்திருந்தது. பயணங்கள் முடிவதில்லை. அதன் பாடல்கள் அடைந்த மகா வெற்றி மோகன் என்ற நடிகனை உச்சாணிக் கொம்பில் கொண்டு நிறுத்தியது. அன்னக்கிளி, 16 வயதினிலேவுக்குப்   பிறகு இசையால் நிரம்பிய படம். அதனாலேயே  நிமிர்ந்து நின்றது  இது.  ஒரு சிறு குறிப்பு வரைவது போல இளையராஜா என்றாலே இளைய நிலா பொழிகிறதே நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிவதில்லை. ஏற்கனவே நிறம் மாறிய பூக்கள்  என்ற பதிவில் நான்  இந்தப் பாடலைப் பற்றி  பரவசத்துடன் எழுதியிருக்கிறேன். இளையராஜா விளையாடியிருப்பார் என்ற பதத்துக்கு ஏற்ற பாடல்.

  எண்பதுகள் என்றாலே அது இளையராஜாவின் காலமாக புரிந்துகொள்ளப்படுகிறது. இது புனைவு கிடையாது. அந்த காலகட்டத்தில்தான் அவரது இசை ஒரு வினோத அழகுடன் பரிணமித்தது. வைரமுத்துவின் வியக்க வைக்கும் புதுக்கவிதை நனைந்த  மின்சார வரிகள் சுரீரென  அங்கே இங்கே தீண்டிச் செல்ல, இளையராஜாவின் மெட்டுக்கள் புதிய எழுச்சியுடன் மரபுகள்  அனுமதிக்கும் நவீனத்தை எட்டிப் பிடித்து அனாசய அவதாரங்கள் எடுத்தன. ஒரு முழுமையை நோக்கி வேகமாக அவரது இசை நகர்ந்து கொண்டிருந்தது.








அடுத்து : இசை விரும்பிகள் XXVII - வசந்தங்கள் வடிந்தன.

  

Sunday, 24 May 2015

தீவிரத் தலையாட்டல்


               





  சில வருடங்களுக்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரைவாக தாண்டிச் சென்றுகொண்டிருந்த ஒரு சமயத்தில் திடுமென ஒரு சானல் ஒன்றில் நான் நின்றேன். அங்கே ஒரு  இசைக் கலைஞரை     கர்நாடக இசையில் பாண்டித்யம் பெற்ற பெண் ஒருவர் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார். பொதுவாக கர்நாடக இசை என்றால் வயலின், கடம், மிருதங்கம், தம்புரா என்ற சம்பிரதாய வாத்தியக் கலைஞர்கள் இல்லாமல் இங்கே பேசிக்கொண்டிருந்தவர் ஒரு கிடார் இசைஞர். கர்நாடக இசையில் எவ்வாறு கிடார்  ஊடுருவியது என்று எனக்கு மகா வியப்பு. உடனேயே நான் அந்த நிகழ்ச்சியை சுவாரஸ்வத்துடன் பார்க்க ஆரம்பித்து விட்டேன்.

  அந்த கிடார் இசைஞரின் பெயர் ஸ்ரீதர் என்று நினைவு. ஒருவேளை பெயர் தவறாக இருக்கலாம். ஆனால் பார்ப்பதற்கு எதோ மைதா மாவில் உருட்டி எடுத்த வஸ்து போல இருந்தார்.  வெகு இயல்பாக  பல தகவல்கள் அவரிடமிருந்து வந்தன. அவரை பேட்டி கண்ட அந்த கர்நாடக பாடகிக்கு(!) சாஸ்திரீய சங்கீதத்தை எட்டிப் பிடித்துவிட்ட மேற்கத்திய வாத்தியமான கிடாரின் மீது கடுமையான சம்பிரதாய கோபம் இருந்திருக்கவேண்டும்.  எப்படி கர்நாடக ராகங்களுக்கு கிடார் கொண்டு இசைக்க முடியும் என்ற நம்பாத கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்.  அவர் கேள்விகளில் மேற்கத்திய இசையையும்  அதன்  இசைக் கருவிகளையும் இழிவாக எண்ணும் தொனி யூகத்துக்கு இடமில்லாமல் தெறித்து விழுந்தது. (உண்மையில் கர்நாடக சங்கீதத்தில் வாசிக்கப்படும் அதன் ராக வளைவுகளோடு இரண்டற பிரிக்க முடியாத அளவுக்கு கலந்துவிட்ட வயலின் ஒரு மேற்கத்திய இசைக் கருவி.) அவரின் கேள்விகளுக்கு அந்த கிடார் இசைஞர் மிகத் துல்லியமாகவும்  விளக்கமாகவும்  பதில் அளித்தது ஒரு ஆரோக்கியமான விவாதத்தை நோக்கி அவர் நகர விரும்புவதை தெளிவாக நிரூபித்தது.  ஒரு இடத்தில் கேள்வி கேட்ட பெண்மணி சொன்னது இது: "ஆனா ஒரு விஷயம் பாருங்க, மேற்கத்திய இசை கேக்கறவங்க காலைதான்  ஆட்டுவாங்க. நம்ம கர்நாடக இசை கேக்கறவங்க தலைய அசைப்பாங்க. அதாவது மேற்கத்திய இசை காலோடு முடிந்துபோற இசை. கர்நாடக இசையோ தலை வரை போகக்கூடியது. மேன்மையானது. மேற்கத்திய இசை போல கீழ்த்தரமானதல்ல". இதைக் கேட்டதும் என்னைப்போலவே அதிர்ச்சியடைந்த அந்த ஸ்ரீதர்  என்பவர் தன்னோடு  பேசிக் கொண்டிருக்கும் அந்த பாசிஸ்ட் பெண்மணியின் அபத்தமான கருத்தை ஒரு சிறிய புன்னகையோடு உதாசீனம் செய்தார். பின்னர் அவர்கள் பேசியதெல்லாம் இங்கே வேண்டாத சங்கதி.

 நான் எழுத விழைந்தது இந்த பேட்டியைக் குறித்தல்ல. மாறாக அந்தப் பெண்ணின் prejudiced opinion எத்தனை ஆழமாக  நமது பொது சிந்தனையில் ஊறிக் கிடக்கிறது என்பதை இதைப் படிப்பவர்களுக்குப் புரிய வைக்கவே. காலை ஆட்டுவதும்  தலையை அசைப்பதும் ஒரு இசையின் தரத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான  செயலாக ஒருவரால் முன்னிறுத்தப்படுவது எத்தனை மலிவானத்  தீர்ப்பிடல்! ஒரு வெட்டி விவாதத்திற்காக  இதை எடுத்துக்கொண்டாலுமே இதில் சற்றும் உண்மை இல்லை. பொதுவாக நாம் தாளத்துடன் ஒன்றிக்கும் போது நமது கால்கள் இயல்பாகவே அனிச்சை செயலாக தரையில் ரிதமாக இடிக்கத்  துவங்கிவிடும்.  பாடல் அல்லது இசையின் சுவை அதிகரிக்க அதிகரிக்க நம் தலை போதையேறிய உணர்வுக்கு வந்துவிடும். அதன் நீட்சியே அந்தத் தலையாட்டல்.  மேலும் இந்தக் காலாட்டாலும் தலையாட்டாலும் ஒருவரின் விருப்பம் என்ற எளிமையான உடலசைவைத்  தாண்டி வேறு புனிதமான அல்லது மர்மமான குறியீடுகள் கொண்டவையல்ல. சிலர் ஒரு குறிப்பிட்ட இசை அமைப்பாளரின் பாடலில் இரண்டாவது சரணத்தில் வரும் ஒரு சிறிய வயலின் துணுக்கு  தன் உயிர்நாடியை தொட்டுவிட்டுச் செல்லும் என்று  உளறுவதைப் போன்ற நகைச்சுவைதான் இது.

  ஆனால் மேற்கத்திய இசைக்கும் தலையாட்டலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.  சொல்லப்போனால் இந்தத் தலையாட்டல் உண்மையிலேயே மேற்கத்திய இசையின் ஒரு இன்றியமையாத அங்கம்.  ஆங்கிலத்தில் இதை Headbanging என்பார்கள். ஹெட்பேங்கிங் மேற்கத்திய ராக் இசை கொடுத்த ஒரு திடீர் விபத்து. மேற்கத்திய இசை வல்லுனர்களின் கருத்துப்படி Led Zeppelin என்ற பிரிட்டிஷ் இசைக் குழுவினரின் அதிரடி இசையில் தூண்டப்பட்ட ரசிகர்கள் தங்கள் தலைகளை அரங்கத்தின் சுவர்களில் மோதிக்கொண்ட ஒரு நிகழ்வுடன் இந்தத் தலை மோதல் கலாச்சாரம் 1969இல் உருவானது. தொடர்ந்து மேற்கத்திய ஹெவி மெட்டல் இசைக் குழுக்களின் எல்லையற்ற தீரா இடி போன்ற இசையில் ரசிகர்களும் இசைஞர்களும் ஒரு சேர இந்தக்  கலாச்சாரத்தை புதுப்பித்துக்கொண்டே வந்தார்கள். சில வேளைகளில் இவர்கள் தலையை ஆட்டும் வேகமும் ஆவேசமும்    பார்ப்பவர்களுக்கு   மயக்கம் வந்துவிடும் அளவுக்கு ராட்சதத்தனமாக இருக்கும். பொதுவாக ராக் இசையை கேட்கும் ஒருவரால் தலையை ஆட்டாமல் இருப்பது என்பது ஒரு அசாதாரண காரியம். ராக் என்ற அந்த மின்சாரத்  துணுக்கு உங்களுக்குள் செல்லச் செல்ல  உங்கள் தலை எதோ பெயரறியாத  பிசிக்ஸ் விதிக்குட்பட்டு தானாகவே முன்னும் பின்னும்  அசைய ஆரம்பித்துவிடும்.

  இப்போது  பதிவின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்ட  அந்த பாசிஸ்ட் பெண்மணியின் தலையாட்டல் குறித்த கருத்தை ஒரு இசை ரசிகன் எந்த உண்மையின்படி நம்பமுடியும்? அவர் மமதையுடன் சொல்லியது போன்ற பல புரையோடிய அபத்தங்கள் நம்மிடம் நங்கூரமிட்டு  மன ஆழத்தில் தங்கியிருக்கின்றன.

   இறுதியாக ஒரு மருத்துவக்  குறிப்புடன் இந்தச் சிறிய பதிவை முடித்துக்கொள்ளலாம். ஹெட்பேங்கிங் நிஜத்தில் ஒரு ஆரோக்கியமான உடலசைவல்ல. இது ஒரு நல்ல  இசை ரசனையின் அபாயமான வெளிப்பாடு. தொடர்ந்து இதில் ஈடுபடும் இசைஞர்கள், ரசிகர்கள் சில வருடங்களில் தலை, நரம்பு தொடர்பான புதிய வியாதிகளுக்கு தங்களை தயார் செய்துகொள்வதாக மேற்குலகில் தற்போது கண்டுபிக்கப்பட்டுள்ளது. சில சமயங்களில் இது மரணம் வரை கூட செல்லலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் இந்தச் சாத்தியம் இது ஒரு மிகத் தீவிரமான பழக்கமாக மாறும்போதுதான். அதுவரை யாருமில்லா தனியறையில் பதவிசாக உட்கார்ந்துகொண்டோ படுத்துக்கொண்டோ உங்களுக்குப் பிடித்த பாடலைக் கேட்டபடி  தலையாட்டிக்கொண்டிருப்பதில் எந்தவித ஆபத்தும் இல்லை.







அடுத்து: இசை விரும்பிகள் XXVI  -கவிதைக் காற்று.

Wednesday, 29 April 2015

இசை விரும்பிகள் XXV - உடைந்த ஒப்பனைகள்



கண்ணாடியில் தெரியும் ஒரு நிஜத்தின் பிரதிபலிப்பு, 
அலங்காரம்  கலைந்த ஒரு உண்மைத்  தோற்றம், 
கொஞ்சம் கொஞ்சமாக உருமாறும் மேகங்கள்,
வானவில் மறைந்த ஒரு  வெற்றிடம், 
தொலைந்துபோன குழந்தைத்தனம். 
வண்ணங்களை  இழந்த  ஓவியம், 
ஒரு கோமாளியின் அழுகை.




                           உடைந்த  ஒப்பனைகள் 

         தொண்ணூறுகளின் இறுதி என்று நினைவு. 96 ஆம் ஆண்டாக இருக்கலாம். மதுரையிலிருந்த ஒரு இசைப் பதிவகம் எனக்கு கொஞ்சம் பழக்கமாகியிருந்தது. சி டிக்கள் பதிவகங்களின் எல்லா வரிசைகளையும் நிரப்பிக்கொண்டிருந்த  கசெட்டுகளின் அந்திம காலம் அது.  ஆங்கிலப் பாடல்களை சற்று ஒதுக்கிவிட்டு மீண்டும்  தமிழ் கானங்களை நோக்கி நகர்த்திச் செல்லும்    ஒரு  புதிய கண்டெடுத்தல் என்னைச்  செலுத்திக்கொண்டிருந்தது.    காரணம்  இதுதான்;   நான் ஐந்து வருடங்கள் வட இந்திய மாநிலத்தில் இருந்தது  என் தமிழ் அடையாளத்தின் மீது என்னை ஆழமாகத் தைத்திருந்தது. என் தமிழ் வேர்களை நான் முதல் முறையாக புதிய கண்கள்  அணிந்துகொண்டு பார்க்க ஆரம்பித்திருந்தேன். கல்லூரி விடுதியில் இருப்பவர்களுக்குத்தான் வீட்டு நினைவு அதிகம் இருப்பதாக பொதுவாக கூறுவார்கள். அதைப் போன்றதொரு  உளவியலே இது. அதன் விளைவாக எனது பால்ய தினத்து தமிழ்ப் பாடல்கள் மீது நான் ஒரு நாஸ்டால்ஜிக் காதல் கொண்டு அவைகளை சிறை பிடித்துக்கொண்டிருந்தேன்.

       எனக்குப் பழக்கமாகியிருந்த அந்த பதிவகத்தை ஒரு முதியவர் --- ஏறக்குறைய 60 வயது இருக்கலாம். அனுமானம்தான். அவரைக் கேட்டதில்லை---- நடத்திக்கொண்டிருந்தார். அந்த ஒலிப்பதிவின்  நேர்த்தியும் தரமும் எனக்குப் பிடித்துப்போய் விட்டதால் அடிக்கடி அங்கே சென்று பாடல்கள் பதிவு செய்வது வழக்கம்.    என் பள்ளிக் கல்லூரி தினங்களில் நான் கேட்டு ரசித்திருந்த பழைய பாடல்கள் பற்றிய எண்ணம் என்னில் அதிகமாகி என்னை தொந்தரவு செய்த  நாஸ்டால்ஜிக் போதையேறிய ஒரு சந்தர்ப்பத்தில், என் நினைவடுக்குகளிலிருந்து தேடிக் கண்டுபிடித்த 40,50  பாடல்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை தயாரித்து எடுத்துக்கொண்டு  உற்சாகமாக  அந்த கடைக்குச் சென்றேன். "புது படம் எதுவும் வரலியேப்பா"  என்றார் அவர்.  "தெரியும். கொஞ்சம் பழைய பாடல்கள் வேண்டும்" என்றேன்  குதூகலத்துடன். அவருக்கு இது கொஞ்சம்  அதிர்ச்சியாக  அல்லது வியப்பாக இருந்திருக்க வேண்டும். (எப்போதும் ரஹ்மான் பாடல்களைப்  பதிவு செய்யும்) என்னை அவர் சற்று விநோதமாகப் பார்த்துவிட்டு  ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தை  எடுத்து நீட்டினார்.  மிகத் தடியாக இருந்த அந்த நோட்டை ஆவலுடன் பிரித்தேன். அடுத்த வினாடி எனக்கு    நூடுல்ஸ்சுக்குப் பதிலாக எதோ ஒரு மின்சார வயரை கடித்து விட்ட  அதிர்ச்சி ஏற்பட்டது.

     ஏனென்றால் நான் கேட்ட கொஞ்சம் ரொம்பவாக மாறியிருந்தது. படகோட்டி, ஆயிரத்தில் ஒருவன், ஆலய மணி, சாந்தி நிலையம், பார்த்தால் பசி தீரும், நெஞ்சில் ஓர் ஆலயம், வெண்ணிற ஆடை என்று பெயர்கள் வரிசையாக என் கண்களில் விழுந்தன. அச்சத்துடன், "இத்தனை பழசு வேண்டாம்." என்றேன் கலவரமாக. "பின்ன?" என்றார் அவர். "கொஞ்சம் பழசு." என்றேன். முதலில் கூறிய கொஞ்சத்திற்க்கும் இப்போது சொன்னதற்கும் வித்தியாசம் இருந்தது. இரண்டாவது முறை சற்று அந்த வார்த்தையை அழுத்திச் சொன்னேன். சொல்லும்போதே இது எத்தனை அபத்தமாக இருக்கிறது  என்ற எண்ணம் வரவே, சுதாரித்துக்கொண்டு இப்படிச் சொன்னேன் : "இளையராஜா காலத்துப் பாடல்கள்."  அவர் என்னை முன்பை விட இன்னும் தீர்க்கமாக --கொஞ்சம் சலிப்பாக-- பார்த்துவிட்டு இன்னொரு நோட்டை என் கைகளில் திணித்தார். சரியான  வேட்டைதான் என்று எண்ணிக்கொண்டே அதைப் புரட்டிப் பார்த்தேன். உடனே திடுக்கிட்டேன். காரணம்  அதில் எழுதியிருந்த தலைப்பு. படித்தால் உங்களுக்கூட அதே திடுக்கிடல் நடக்கலாம். அதில் இப்படி எழுதப்பட்டிருந்தது: நடுத்தரப் பாடல்கள்.  கொஞ்சம் குழப்பம், கொஞ்சம்  அதிர்ச்சியாக இருந்தது. "ஏன் இப்படி எழுதியிருக்கிறீர்கள்? இளையராஜா பழைய பாடல்கள் வரிசையில் வரவில்லையா?" என்றேன் வழக்கமான சுதந்திரம் எடுத்துக்கொண்டு.   அவரிடம் நிறைய இசை பற்றி விவாதித்திருக்கிறேன். ஆனால் இளையராஜாவைப்  பற்றி எனக்கு இன்றிருக்கும் ஆழமான விமர்சனங்கள் அப்போது என்னிடமில்லை. அப்போது அவர் சொன்னது இன்னும் என் நினைவிலிருக்கிறது. "இதை எப்படி பழசுன்னு சொல்றது?" என்று அவர் என்னைக் கேட்டுவிட்டு  சில மவுனமான வினாடிகளுக்குப் பிறகு, " இதை புதுசிலயும் சேக்க முடியாது. அதான்." என்றார் வெகு சாதாரணமாக.

         சற்று சிந்தித்துப் பார்த்தால் அது உண்மைதான் என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை. பழைய பாடல்கள் என்றதும் மக்களின் நெஞ்சத்தில் வண்ணம் வண்ணமாக வலம் வருவது அறுபதுகளின் இசையே.  எம் ஜி ஆர், சிவாஜி பாடல்கள் , கண்ணதாசன், வாலி பாடல்கள் அல்லது விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே வி மகாதேவன் பாடல்கள், டி எம் எஸ்- சுசீலா பாடல்கள், பி பி ஸ்ரீனிவாஸ் பாடல்கள்  என அவை வித விதமாக  பகுக்கப்பட்டாலும் ஒரு ஆல மரம் போன்று தமிழ் சமூகத்தின் மன ஆழத்தில் வேரூன்றி இருப்பது அந்தப்  பொற்கால இசைதான். நவீனம் என்றால் ரஹ்மானிலிருந்து துவங்குவதில் பெரிய ஆட்சேபனைகள் யாருக்கும் இருக்கப் போவதில்லை. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவர் இசையை நாம் ஒரு கால கட்டத்தின் அவசியம் கருதியாவது நவீன இசை என்ற குடையின் கீழ் கொண்டுவரத்தான் வேண்டும். இப்போது எழும் ஒரு இயல்பான கேள்வி இளையராஜாவின் இசையை நாம் எந்த காலத்தில் வைப்பது என்பதுதான்.

   மத்திய எழுபதுகள் தொடங்கி எண்பதுகள் வரையான நமது இசைப் பாரம்பரியத்தை(!) எந்த முத்திரை கொண்டு அழைப்பது? இளையராஜாவின் இசையை பழைய இசை என்று குறிப்பிட முடியாது , புதிய நவீன இசை என்று சொல்வதும் இப்போது முரணாக இருக்கிறது. சிலர் இடைப்பட்ட பாடல்கள் என்று எழுதுவார்கள். அதாவது எம் எஸ் விக்கும் ரஹ்மானுக்கும் இடையில் வந்தவர் என்ற அர்த்தத்தில். இது ஒரு நிரப்பு இசை என்ற தொனியை அளிக்கிறது. எனவே  நான் இதை விரும்பவில்லை.  சில தீவிர ரஹ்மான்மேனியாக்கள் என்னிடம் இதுபோன்று ஒரு முறை   கூறியபோது, நான் சொன்னேன் ,  "இளையராஜாவைப் பாராட்டுவது வேறு: ஆனால் அவரை விமர்சிப்பதாக இருந்தால் நீங்கள் அவரது இசையை கேட்டு வளர்ந்தவர்களாக இருக்க வேண்டும்."  நிரப்பு இசை என்ற பதம் ஏறக்குறைய பதினைந்து வருடங்களாக தமிழ்த் திரையில் ராஜாங்கம் நடத்திக்கொண்டிருந்த ஒருவரின் மிக அகலமான இசைச் சாலையை கருணையின்றி குரூரமாக சுருக்கிவிடுகிறது. இது  கண்டிப்பாக உண்மையில்லை. பழைய இசை, புதிய இசை, இடைப்பட்ட  இசை என்ற எந்த கோட்டுக்குள்ளும்  அடக்கிவிட முடியாததாக இருப்பதால் இளையராஜாவின் இசையை அந்த மதுரை முதியவர் தனது நோட்டுப் புத்தகத்தில் எழுதியிருந்தது போன்று நடுத்தரப் பாடல்கள் என்று அழைப்பதுதான்  பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. அவர் அந்த காலத்தை மனதில் கொண்டு இப்படி எழுதியிருந்தாலும் நமது தமிழிசையின் தரம் எண்பதுகளில் எப்படிப்  "பட்டொளி வீசிப் பறந்தது"  என்பதை அசை போடும்போது நடுத்தரம்  என்ற வார்த்தையின் உண்மையை எண்ணி சற்றேனும் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை.

     இப்போது எவ்வாறு எழுபதுகளின் இறுதியில் நமது தமிழிசையின் போக்கு மாறியது என்பதை குறித்துப்   பேசுவோம் .    தமிழ் சினிமாவை சற்று உற்று நோக்கினால் ஒவ்வொரு பத்து வருட இடைவெளியில் நம் திரையிசையின் வடிவம் மாறிவருவதை அறியலாம். சில உண்மைகள் உறங்குவதை உணரலாம்.  ஐம்பதுகள் புராணம் பாடும் சரித்திர கதைக் களங்கள் கொண்டதாகவும் (பாரம்பரிய ராகங்கள் சூழ்ந்த சாஸ்திரிய இசை),  அறுபதுகள் குடும்பம்  சார்ந்த மிகைப்படுத்தப்பட்ட நாடகத்தனமான திரைப்படங்களின் காலமாகவும் (மெல்லிசை மற்றும்  அதோடு கலந்த திகட்டாத மேற்கத்திய இசை)  இருந்தன. இது இந்த காலகட்டத்தைக் குறித்த பார்வை மட்டுமே தவிர இதில் எது உயர்ந்தது என்ற நாட்டாமைத்தனம் எனக்கில்லை. எழுபதுகளையும்  அறுபதுகளின் நீட்சியாக குடும்பம் சூழ்ந்த களங்கள் ஆட்சி செய்தன. எனவே  காட்சிகள் நவீனத்தின் பக்கம் சாயாத ஒளியிழந்த சாயல் கொண்டிருந்தன. இது ஒரு மிகத் தொய்வான காலகட்டம் என்பதை எளிதாக சொல்லக்கூடிய அளவில் அப்போது தமிழ்த் திரை ஒரு சரிவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. எ வி எம், விஜயா-வாஹினி  போன்ற பெயர் பெற்ற  பெரிய திரைப்பட நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பை நிறுத்திவிட்ட காலகட்டம் அது. சிறிய தயாரிப்பாளர்கள், சிறிய முதலீடு, எளிமையான கதை போன்ற திடீர் விதிகள்  புதியவர்களும், இளைஞர்களும்,  நவீன கதை சொல்லிகளும்,  திரைக்குப் பின்னே வெகுவாக படையெடுக்க உதவி செய்தன.  இருந்தும்  திரையில் தோன்றியதோ   அதே விக் வைத்து பென்சில் மீசை கொண்ட, கேமராவைப் பார்த்துப் பேசும்  பத்தாயிரம் முறை பார்த்துப் பார்த்து சலித்துப்போன முகங்கள்தான்.  அது எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன், ஜெய் ஷங்கர், ரவிச்சந்திரன், விஜயகுமார், சிவகுமார் என யாராக இருந்தாலும்  எல்லா முகங்களுமே பார்வையாளர்களுக்கு எந்த வித சலனத்தையும்  கொடுக்கவில்லை. "இதே  மூஞ்சிகள்தானா?" என்ற சலிப்புதான் மிஞ்சியது.

      அதே சமயத்தில் இன்னொரு பக்கம் கதாநாயகிகள் தேவிகா, சரோஜா தேவி, கே ஆர் விஜயா என்பதிலிருந்து லதா, மஞ்சுளா, ஸ்ரீப்ரியா, ஜெயசித்ரா, சுஜாதா என மாறியிருந்தார்கள். கதாநாயகர்கள் நரை தட்டிப் போய், எல்லாம் அடங்கிய பின்னும், ஐ சி யு விலிருந்தே  திரும்பி வந்தாலும் திரையில் முகத்தோடு முகம் வைத்து உரசி பெண்வாசனை பிடிக்கவும் , பார்பவர்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தும் ரொமாண்டிக் புன்னகையுடன் அவளது சேலையை பிடித்து இழுக்கவும்,  ஒரு இளமையான நடிகை ------அவள் தனது பேத்தி வயதை ஒத்திருந்தாலும்---- தேவைப்படும் இந்த அருவருப்பான வினோதம் தமிழுக்கு ஒரு புதிய சங்கதி அல்ல. எம்ஜிஆர் இதயக்கனி படத்தில் ராதா சலூஜாவோடு அடித்த கூத்தும், சிவாஜி லாரி டிரைவர் ராஜாக்கண்ணு படத்தில் ஸ்ரீ ப்ரியாவுடன் செய்த சில்மிஷங்களும், ரஜினிகாந்த் லிங்கா என்ற கருமத்தில் சொனாக்ஷி சின்ஹாவை காதல் வீரியத்துடன் அனைத்ததும், கமலஹாசன் தசாவதாரத்தில் அசினோடு "அற்புதக்" காதல் லீலைகள் புரிந்ததும் இந்த அசிங்கத்தின் அடுத்தடுத்த அத்தியாயங்களே.

    எழுபதுகளில்  ஹிந்தியில்  பிரபலமான  யாதோங்கி பாரத் என்ற படத்தை தமிழில் எடுத்தபோது  அதில் எம். ஜி. ஆர். இரண்டு வேடங்களில் நடித்தார். (இதெல்லாம்  மிக மலிவான  ரசிகமனப்பான்மையின் வெளிப்பாடு) மூன்றாவதாக கமலஹாசன் நடிக்க இருந்தார் . எதனாலோ அவர் அப்புறப்படுத்தப்பட்டு ஒரு தெலுங்கு நடிகர் சந்திர மோகன் (பெயர் தவறாக இருக்கலாம்) அங்கே வந்தார். இவ்வாறு 70கள் முக்கால்வாசி நமது பொலிவிழந்த கதாநாயகர்களால் நிரப்பப்பட்டிருந்தது.  சிவாஜியைப் பற்றி கேட்கவே வேண்டாம். 70களின் மத்தியிலிருந்து அவர் நடித்த படங்களைப் பார்க்காமல் தவிர்ப்பதே நாம் அவருக்குச் செய்யும் மரியாதை என்று நினைக்கிறேன். இதைத் தவிர கதைக்களம் எந்த புது அனுபவத்திற்கும் பார்ப்பவர்களை அழைத்துச் செல்லாத அவலம் இன்னொரு பக்கம்தமிழ் சினிமாவுடன் கூடவே வந்துகொண்டிருந்தது.

    உண்மையில் 70களில்  நமது திரைப்படங்களில் இருந்த ஒரே ஒரு பாராட்டிற்குரிய அம்சம் the only saving grace --எந்தவித சந்தேகமுமின்றி-- அதன் பாடல்கள் மட்டுமே.  உதாரணமாக 70களின் மத்தியில் வந்த மாலை சூட வா என்ற படத்தில் கே ஜே ஜேசுதாஸ் பாடிய யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா? எனக்கென்றும் நீயே சொந்தம் என்ற பாடலை சற்று நினைவுக்கு இழுத்துவருவோம். இணையத்தின் பல இடங்களில் இதன் இசை அமைப்பாளரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. சில இடங்களில் ஓல்ட் என்ற ஒரு ஒற்றைச் சொல் இதை அமைத்தவரை இழிவு செய்கிறது. உண்மையில் இது விஜய பாஸ்கர் என்ற இசை அமைப்பாளரின் இசை வண்ணம். மிக அருமையான கீதம். நான் அப்போது பிரபலமாக இருந்த எம் எஸ் வி, வி குமார், ஷங்கர் கணேஷ் போன்றவர்களின் பாடல்களைக் குறிப்பிடாமல் அதிகமாக அறியப்படாத விஜய பாஸ்கரின் பாடல் ஒன்றை இங்கே அடிக்கோடிடுவதின் காரணம் இதன் பின்னே இருக்கும் அந்த மறைந்த நிஜம் நாம் அசட்டை செய்த பல அபாரமான  பாடல்களை பெரிய எழுத்துகளில் நம் நினைவுச் சுவர்களில் எழுதட்டும்  என்பதற்காகத்தான். மேலும் சில அற்புதத் தேன்துளிகளை random வகையில் கீழே கொடுத்துள்ளேன்.  எப்படி நம் இசை குதூகலமாக நம்மைக் கொண்டாடியது என்பதன் சுவடுகள் அவை.

சப்தஸ்வரம் புன்னைகையில் கண்டேன்- நாடகமே உலகம் - வி குமார்.
அவளொரு பச்சைக் குழந்தை  பாடும் பறவை- நீ ஒரு மகாராணி- சங்கர் கணேஷ்.
சம்சாரம் என்பது வீணை சந்தோஷம் என்பது ராகம் - மயங்குகிறாள் ஒரு மாது- விஜயபாஸ்கர்.
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்- தேன் சிந்துதே வானம்- வி குமார்.
கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம் -மேயர் மீனாட்சி-எம் எஸ் வி.
கங்கை நதியோரம் ராமன் நடந்தான்- வரபிரசாதம்- கோவர்த்தனம்.
மயங்குகிறாள் இந்த மதுரை மீனாட்சி- பிராயச்சித்தம்- எம் எஸ் வி.
உள்ளத்தில் நூறு நினைத்தேன்- மாப்பிள்ளை அழைப்பு- சங்கர் கணேஷ்.
நான் பாடிய முதல் பாட்டு நீ பேசிய தமிழ் கேட்டு - ஐந்து லட்சம்- கே வி மகாதேவன்.
ஜில்லென்ற காற்று வந்ததோ- நில் கவனி காதலி- எம் எஸ் வி.
குயிலாக நானிருந்தென்ன குரலாக நீ வரவேண்டும்- செல்வமகள்- எம் எஸ் வி.
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்- நான்கு கில்லாடிகள்- வேதா.
ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவை இது- கௌரி கல்யாணம்- டி கே ராமமூர்த்தி.
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு- வசந்தத்தில் ஓர் நாள்-  எம் எஸ் வி.
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது- பிராப்தம்- எம் எஸ் வி.
நினைத்துப் பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது- அவள் தந்த உறவு- எம் எஸ் வி.
திருக்கோவில் தேடி ரதி தேவி வந்தாள்-  தெய்வம் தந்த வீடு- எம் எஸ் வி.
திருமகள் தேடி வந்தாள்- இருளும் ஒளியும்- கே வி மகாதேவன்.
இளமை நாட்டிய சாலை- கல்யாணமாம் கல்யாணம்- விஜய பாஸ்கர்.
என்னோடு என்னன்னவோ ரகசியம் - தூண்டில் மீன்- வி குமார்.

        எழுபதுகளின் பாடல்கள் குறித்து நான் பல பதிவுகள் எழுதியிருப்பதன் ஒரே நோக்கம் நமது இசை எத்தனை பொலிவாக இருந்தது என்பதை படிப்பவர்களுக்கு உணர்த்தவே.  அப்போது வானொலிகளிலும் சாலையோர தேநீர்க்கடைகளிலும், திருமண மண்டபங்களிலும் ஒலித்துக்கொண்டிருந்த மேற்குறிப்பிட்ட ரம்மியமான பாடல்களை   திடுமென வந்து வாரிச் சுருட்டிச் சென்ற ஒரு புதிய இசையலை நமது இசை அனுபவத்தை ஒரேடியாக முற்றிலும் மாற்றிப்போட்டதன் விளைவாக பலர் இந்தப் புதிய இசை வசந்தத்தை போற்றிக் கொண்டாடி அதற்கு முன் வீசிய இளந்தென்றல் போன்ற எழுபதுகளின் ஏகாந்தத்தை அசட்டை செய்து, நடந்த நிகழ்வை மாற்றிச் சொல்லும் புனைவுகளை உருவாக்கி ஒரு இல்லாத வரைபடத்தை தயார் செய்கிறார்கள். ஹிந்தி இசை என்னும் ஒரே பதத்தை வைத்துக்கொண்டு தமிழர்கள் தங்கள் தமிழ்த்தனத்தையே இழந்து விட்டதாகவும், ஹிந்தி இசைக்கு தங்களை விற்று விட்டதாகவும் தங்கள் மனம்போன போக்கில் கடுகு போன்றதொரு உண்மைக்குள் பொய் காற்று செலுத்தி பெரிய பலூன் ஒன்றை இணையத்தில் பறக்க விடுகிறார்கள்.   ஒரு வசந்தத்தின் தீற்றலாய் பொழிந்த  இந்த இசையலை கொடுத்த அதிர்ச்சி ஒரு பக்கம், ஆனந்தம் இன்னொரு பக்கம், இவை இரண்டுமில்லாத மற்றொரு உணர்ச்சி  மற்றொரு பக்கம் என தொடர,  போகிற போக்கில் இந்த  இசை வசந்தத்தின் தூரிகை வேறு ஓவியம் வரைய, எண்பதுகள் வந்தபோது  நமது தமிழ்த் திரையிசையின் முகம் முழுவதும் உருமாறிப்போயிருந்தது.  அதன் பாய்ச்சல், வேகம், தொனி, குரல்கள், இசையமைப்பு, பாடல் பேசும் களம் என எல்லாமே வேறு திசையில் நகர்ந்து கொண்டிருந்தது. எந்தப் புள்ளியில் இந்த திடீர் முக மாற்றம் சாத்தியமானது என்று நூல் பிடித்துச்  சென்றால்  ஒரு இடத்தில் நாம் நிற்கவேண்டி வருகிறது.   அதை அறிவது அவசியம்.

    தமிழ்த்திரையில் ஒரு அசுர  மாற்றம் கொண்டுவந்தது என்று  இரண்டு படங்களை சுட்டிக்காட்டுகிறார்கள் திரை விற்பன்னர்கள். முதல் மாற்றம் 52இல் வந்த பராசக்தி. பாடிப் பாடி  நம்மை பரவசப்படுத்திய அல்லது படுத்திய படங்களை பராசக்தி ஆயிரம் மெகா டன் குண்டு வைத்து ஒரே நொடியில் காலி செய்தது.  பராசக்திக்குப் பிறகு தமிழ்த் திரையை புரட்டிப் போட்ட படமாக பொதுவாக பலர் கருதுவது 77வந்த பதினாறு வயதினிலே. நாடகத்தனமாக  கதை சொல்லும் விதத்தை இந்தப் படம் சப்பாணி, பரட்டை, மயிலு மூலம் ஒரே விழுங்கில் கபளீகரம் செய்தது. ஒரு மகா அலைபோல மீண்டுமொரு முறை  தமிழ்த் திரை புரண்டு படுத்தது- பராசக்திக்குப் பிறகு.

   ஏகப்பட்ட கட்டுரைகள் எழுதப்பட்ட, காட்சி காட்சியாக விமர்சிக்கப்பட்ட, எண்ணில்லா புகழாரங்கள் சூட்டப்பட்ட படம் இது. பாரதிராஜா என்ற மண் வாசனையும், மாற்று சினிமா வேட்கையும்  கொண்ட ஒரு சாமானியனின் முதல் படைப்பு தமிழ் சினிமாவின்  போக்கையே  திசை திருப்பியது ஒரு வியப்பான  நிகழ்வு. தமிழ்த் திரை கட்டிவைத்திருந்த பல பிம்பங்களை சரேலென்று ஒரே வீச்சில் உடைத்த விசித்திரமாக வந்தது 16 வயதினிலே. சட்டென்று மாறியது தமிழ் சினிமா. அலட்சியம் செய்யக்கூடியதாக  இல்லாமல்  இந்த மாற்றம் பெரிய அளவில் நடந்தது. தமிழ் சினிமாவின் போக்கு என்பது வெறும் நடிகர்களை குறிக்கும் ஒரு சொல் அல்ல. மாறாக கதை சொல்லும் விதம், ஒளிப்பதிவு கோணம், வசனம்,மற்றும் இசையமைப்பு எல்லாம் சேர்ந்ததே. 16 வயதினிலே குளிர் காலத்திற்குப் பிறகு ஒரு மரம் புதிய இலைகளால் தன்னை முழுதும் வேறுவிதமாக அலங்கரித்துக்கொள்ளும் ஒரு புத்துயிர்ப்பு. 70களின் சூழலில் அந்தப் படம் ஒரு மகா ஆச்சர்யம். கிராமத்தை அதற்கு முன் இத்தனை உயிரோட்டமாக , ரத்தமும் சதையுமாக வரைந்த படம் எதுவுமில்லை. கதைமாந்தர்கள் பேசிய வசனங்கள், பின்னணி காட்சிகள், அந்த இயல்பான தெருக்கள் எல்லாமே ஒரு புதிய ஒளியால் தமிழ்த் திரையை நிரப்பின

     இருந்தும்  வெறும் காட்சி என்பது உண்மைக்கு வெகு அருகே நிற்கும் ஒரு நிழல்தான். அதோடு பொருத்தமான இசையும் இணையும் போதுதான் அந்தக் காட்சியின்  ஆன்மாவை நம்மால் உணர முடியும். அவ்விதமான கிராமத்து சூழலுக்கான மண் மனம் கமழும் நாட்டார் இசை அதே மண் சார்ந்த பாடல்களையும் மெட்டுக்களையும் தன் சுவாசத்தில் உள்வாங்கியிருந்து, அந்த மண்ணின் மரபுகளோடு தனது  பிறப்பிலிருந்து இரண்டறக் கலந்திருந்த ஒருவரால்தான் எந்தவித ஒப்பனைகளுமின்றி மனதோடு  தைக்கும்படி கொடுக்க முடியும். அது இளையராஜாவிடமிருந்தது. அன்னக்கிளி படத்தில் ஒரு கேள்விக்குறியாக அறிமுகம் ஆன இளையராஜா 16 வயதினிலேவில் ஒரு ஆச்சர்யக்குறியாக மாறினார். நாட்டுப்புற இசைக்கு  ஒரு மகத்தான அங்கீகாரம் கிடைத்ததே   இளையராஜாவின் இசை தொட்ட உச்சம் எனலாம். வயல் காடுகளிலும், நீர் நிலைகளிலும், பயிர்த் தோட்டங்களிலும் உலா வந்த நாட்டுப்புற இசையின் குரல்  தமிழகம் முழுவதும் உரத்து ஒலிக்கச் செய்த   மெட்டுகள், கானங்கள் அவரது இசையின் மையப்புள்ளியாக   இருந்தது.  இந்த மண் முடிச்சு அவர் இசைக்கு மகுடம் சூட்டியது.

     16 வயதினிலேவுக்குப் பிறகு தமிழ்த் திரைக்குக் கிடைத்த புதிய கருப்பொருளான கிராமத்து சூழல்தான் அவரின் இவ்வாறன இசை வேட்கைக்கு ஒரு களம்  அமைத்துக் கொடுத்தது  .  பகட்டாக அலங்கரிப்பட்ட வரையப்பட்ட செயற்கை மரங்கள் வீசும் மின் காற்றாடி தென்றல்கள் கொண்ட கிராமங்கள் மறைந்து, கிராமத்தை அதன் வாழ்வியலின் அழகோடும் அழுக்கோடும் காட்சிபடுத்தும் ஒரு "வேறுமாதிரி"யான சினிமா பிறந்தது.  பாரதிராஜாவின் வருகை ஒரு புதிய அத்தியாயத்தை தமிழ்த் திரையில் ஆரம்பித்துவைத்தது என்று பொதுவாக சொல்லப்படுகிறது. அது உண்மைதான். பாரதிராஜா படைத்த இந்த வேறுமாதிரியான சினிமா அதே வேறுமாதிரியான இசையால் மட்டுமே பூர்த்தியானது.  ஒரு புதிய இசை பாணிக்கான முதல் விதையை பாரதிராஜா நட்டார். இவ்வாறு பாரா அமைத்த அஸ்திவாரத்தில் பலரால் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு இசை வண்ணம் பூசினார் இரா. பதினாறு வயதினிலே பாதிப்பின் நீட்சியாக வந்த ஏராளமான கிராமத்துப் படங்கள் இளையராஜாவின் இசைக்கான மைதானமாக மாறின. அவரது  இசையினால் அவை பலம் பெற்றன. மைதானம் முழுதும் அவர் விளையாடினார். படத்துக்குப் படம் அவர் இசை இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்தது.  பாரதிராஜா துவக்கிய இந்தப்   புதிய பாதை அப்போது அமைந்திராவிட்டால்  இளையராஜா தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இன்னும் கடுமையாக போராடவேண்டியதாக இருந்திருக்கும். தன் கையெழுத்து இசையை  அவர் பதிப்பதற்குள் சடுதியில் பல திருப்பங்கள் நிகழ்ந்திருக்கலாம். இளையராஜாவின் வருகையில் வி குமார் என்ற மகத்தான இசை மேதை திடீரென காற்றில் கரைந்துபோன விசித்திரம் போல..

    எவ்வாறு மணிரத்னம் என்ற முத்திரை ரஹ்மானின் வளர்ச்சிக்கு அடிநாதமாக இருந்ததோ அதேபோல பாரதிராஜாவின் வருகையில் இளையராஜா இரண்டாம் முறை பிறந்தார்.  பல டை ஹார்ட் இளையராஜா விசிறிகளால் இந்த வாக்கியத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இளையராஜா யாரை பிரிந்தாலும் இவர்களது விரல் சுட்டுவது அப்படிப் பிரிந்தவர்களைத்தான். எனவே பாரதிராஜா- இளையராஜா வர்த்தக வெற்றிகளுக்குள் இவர்கள் ஒருவரை மட்டுமே காண்கிறார்கள். விந்தையான பார்வை. இவரால் அவரா அல்லது அவரால் இவரா என்பதெல்லாம் முடிவின்மையை நோக்கி நகரும் அர்த்தமற்ற  பேச்சு. இருவரும் சேர்ந்து தமிழ் சினிமாவின் திசையை மாற்றி அதன் வரைபடத்தை புதுப்பித்தார்கள். (அவர்கள் படைத்ததெல்லாம் நல்ல படங்களா  நல்ல பாடல்களா என்ற கோட்டுக்குள் இப்போது செல்லவேண்டாம்.) இருவரும்   வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றார்கள். இவ்வாறு நட்பின் அடையாளமாக இணைந்திருந்த  இருவரும் பின்னர் சில மறைமுகக் காரணங்களினால் பிரிந்தார்கள். பிறகு மீண்டும் இணைந்து பிறகு  மீண்டும்  பிரிந்து... மற்றொரு 16 வயதினிலே படைப்பதற்குள்   தமிழ் சினிமா பல மைல்கள் வனாந்திரங்களையும், பாலைவனங்களையும், ஓடைகளையும், சோலைகளையும், புல்வெளிகளையும், பூந்தோட்டங்களையும்,     இராவையும் பாராவையும்  தாண்டி வந்துவிட்டது.

    பாரதிராஜாவினால் உருவான கிராமத்து சினிமா பல முகமில்லாதவர்களை தமிழ்த் திரைக்கு அழைத்து வந்தது. வந்தவர்களில்  ஒரு சிலரைத் தவிர பலர் ஒரே வார்ப்பில் பாரதிராஜாவைப் பின்பற்றி தங்கள் சுவடுகளை எடுத்து வைத்தார்கள். ஒரு படமோ ஒரு பாடலோ வெற்றி பெற்றுவிட்டால் அதன் நீட்சியாக பல பிரதிகள் வரும்  தமிழ் சினிமாவின் பாரம்பரியம்  இங்கேயும் தொடர்ந்தது. இந்த மாற்றத்தில் பெரிதும் பயன் அடைந்தது இளையராஜாதான். இந்தப் புதிய சாலையில் அவர்  இசைக்கு மிகப் பெரிய அங்கீகாரமும் அதைத் தாண்டிய ஒரு ஒளிவட்டமும் கிடைத்தது என்பது புனைவுகளற்ற ஒரு வாக்கியம்.  நாட்டுபுற நாயகன் என்ற பட்டம் இளையராஜாவுக்கு மக்களின்  மனதில் அப்போதே  கொடுக்கப்பட்டுவிட்டது.

    கிரௌண்ட் ப்ரேகிங் 16 வயதினிலேவுக்குப் பிறகு பாரதிராஜா  கிழக்கே போகும் ரயில்,புதிய வார்ப்புகள் என்று தன் ராஜபாட்டையில் நடை போட்டார். அவர் காட்டிய கிராமம் அவரைத் தொடர்ந்து வந்தது. கோவில் மணி ஓசை தனை கேட்டதாரோ, மாஞ்சோலை கிளிதானோ, பூவரசம்பூ பூத்தாச்சு, இதயம் போகுதே, தந்தனநம்தன தாளம் வரும்  என்று தமிழ் இசை அடுத்த பரிமானத்திற்குத்  தயாரானது.  புதிய வார்ப்புகளின் தந்தனநம்தன  பாடலின் கோரஸ்  பிரசித்திபெற்ற ஒன்று.   ஒரு கடலலை போல பாடல் மீது படர்ந்து சென்றாலும் சரணத்தில் இந்த கோரஸ் செயற்கையாக திணிக்கப்பட்டிருப்பதை போல ஒலிக்கும். வசீகரமான மெட்டுடன் கூடிய அனாசயமான பாடல்.

    பாரதிராஜா தனது  சப்பாணி கதாபாத்திரத்திற்கு ஆரம்பத்தில் நடிகர் சிவகுமாரைதான் தேர்வு செய்திருந்ததாகவும் கோவணம் அணிந்து நடிக்கவேண்டிய சங்கடத்தை விரும்பாத அவர் மறுத்துவிட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.  கமல் வந்து அந்த இடத்தை தமிழ் சினிமா மறக்க முடியாத அளவுக்கு நிரப்பினார்.  அதன் பின் எந்த வெகுளித்தனமான கதாபாத்திரம் தமிழில் வந்தாலும் அது சப்பாணியின் நிழலாகவே மக்களால் பார்க்கப்பட்டது.  இதற்கிடையில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்ற தனது 100 வது படத்தில்,  திடீரென விழித்துக்கொண்ட சிவகுமார் அதே சப்பாணி வேடத்தை தன் மீது பூசிக்கொண்டு நடித்தார். படம் நன்றாகவே ஓடியது. ஆனாலும் " சப்பாணி மாதிரி  வராது" என்றே மக்கள் பேசிக்கொண்டார்கள். படம் நடக்கும் காலம் இந்திய சுதந்திரத்திற்கு முன். ஆனால் பாடல்களைக் கேட்டால் அப்படியான எந்த உணர்வும் நமக்கு வராது.  என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்  என்று வாணியின் குரல்  விரக வேதனையை வெளிப்படுத்தியது. உச்சி வகுடெடுத்து ஒரு சோகத் தாலாட்டு. இதன் தாளம் மனதை வசப்படுத்தக்கூடியது. இதைத்தவிர இன்னும் இரண்டு பாடல்கள் இருக்கின்றன. கேட்க சகிக்காது.

       இந்த சமயத்தில் வெளிவந்த  பொண்ணு ஊருக்குப் புதுசு என்ற படத்தின் பாடல்கள் பெரிதாக பிரபலம் அடைந்தன. சாமக் கோழி கூவுதம்மா, ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டிவருது போன்ற பாடல்கள் இளையராஜாவின் இசை வேறு விதமாக உருமாறிக் கொண்டு (சிதைந்து!)  கொண்டு வருவதை அறிவித்தன. தனிப்பட்ட விதத்தில் நான் விரும்பிக் கேட்காத பாடல்கள் இவை. எஸ் பி ஷைலஜா பாடிய முதல் தமிழ்ப் பாடலான   சோலைக் குயிலே காலைக் கதிரே இதிலுண்டு. கேட்க நன்றாகவே இருக்கும். இதே அலைவரிசையில் வந்த சக்களத்தி (என்ன ஒரு பெயர்?) படப் பாடல்களும் இதே ரகம்தான். என்ன பாட்டு பாட என்ன தாளம் போட, வாட வாட்டுது என இளையராஜா தனது "காந்தக்"  குரலில் பாடிய பாடல்கள் சிலரை வெகு தூரம் ஓட வைத்தன. என்ன பாட்டு பாட என்ற குழப்பத்தையே இளையராஜா ஒரு பாடலாக பாடிவிட்டார் பாரேன் என்று சொன்ன நண்பர்களும் எனக்கு அப்போது இருந்தார்கள்.

      79 இல் கல்யாணராமன் என்ற படம் சக்கைப் போடு போட்டது. இதில் ஆஹா வந்துருச்சு (எதை என்று கேட்காதீர்கள்.) என்று பெரிய ஹிட் அடித்த ஒரு பகடிப்பாடல் அதன் இயல்பான நகைச்சுவைக்காக பெரிய அளவில் புகழ் பெற்றது. அப்போது சிறுவர்களான எங்களுக்கு இந்தப் பாடல் ஒரு உல்லாசம்தான். காதல் தீபமொன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன், மலர்களில் ஆடும் இளமை புதுமையே போன்ற பாடல்கள் அடிக்கடி கேட்டவை.

    உல்லாசப் பறவைகள் படப் பாடல்கள் என்னைப் போன்றவர்களுக்கு என்றைக்கும் ஒரு மறக்க இயலாத நாஸ்டால்ஜிக் உணர்வின் ஊற்று.  ஜெர்மனியின் செந்தேன் மலரே, தெய்வீக ராகம் ( தேனிசை கோரஸ், ஹான்டிங் மெலடி. ஜென்சியை சற்று மன்னித்துவிட்டால் இது ஒரு அபாரமான பாடல்தான்.) போன்றவை  சலிப்பில்லாத சுவை கொண்டவை. 

     தனிப்பட்ட விதத்தில் எனக்கு குரு  படப் பாடல்கள் மிகவும் பிடித்தவை. படம் வந்த புதிதில் பறந்தாலும் விடமாட்டேன் பாடலை எஸ் பி பி போன்று ஸ்டைலாக பாட முயன்று கேலிச் சித்திரமாக மாறிய கதையெல்லாம் உண்டு. அதில் எஸ் பி பி கொஞ்சலோடு சொல்லும் " Senorita, how you feel about me now I say?" போன்ற ஆங்கில வரிகள் அப்போது எனக்கு பெரிய பிரம்மிப்பை கொடுத்தன. மேற்கத்திய இசையை கேட்பதற்கு முன் இதைதான் நான் ஆங்கிலப் பாடல்களுக்கு இணையான ஒரு பாடலாக கருதினேன்(!).  இப்போது சில பிம்பங்கள் உடைந்து விட்டாலும் இந்தப்  பாடல் அளிக்கும் சுகம் சிதைந்து விடாமல் இருக்கிறது. ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன்வண்டுகள் என்றொரு குழந்தைப் பாடல் இருக்கிறது. அப்போது அவ்வளவாக பிடிக்காத பாடல் இப்போது நிறையவே பிடிக்கிறது. எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் என்ற பாடலில் ஸ்ரீதேவி போதையில் ஆடிப்பாடி வர,  அது பிடிக்காத  கமலஹாசன்  நாயகியின் விலகும் முந்தானையை சரி செய்துகொண்டே ரொம்ப நல்ல பிள்ளையாக நடிப்பார்.  பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா என்று ஸ்ரீதேவி தன் காதலன் பெயரைச் சொல்லாமல் தமிழ்ப் பண்பாட்டை  காக்கும் ஒரு  பாடலும்  இதில் உண்டு. இசையும் மெட்டும் ஏகத்துக்கு உற்சாகம் ஏற்றும் மிக அருமையான பாடல். நான் இன்றுவரை விரும்பிக் கேட்கும் அதிசய ராகம். இளையராஜாவின் இசையில் ஒளிந்திருக்கும் திடீர் ஆச்சர்யங்களில் இது ஒன்று.

     குருவின் அதிரடி பாய்ச்சலில் அதோடு  வெளிவந்த மகேந்திரனின் ஜானி வந்த சுவடே தெரியாமல் காணாமல் போனது.  இரட்டைவேடத்தில் ரஜினிகாந்த் என்ற விளம்பரம் படத்துக்கு பல மடங்கு எதிர்பார்ப்பை செலுத்திவிட, மகேந்திரனோ  "உங்க நெனெப்பெல்லாம் எங்கிட்டே ஆவாது" என்கிற ரேஞ்சில் இரண்டு ரஜினியை வைத்து ஒரு காதல் கதையை கண்ணில் காட்ட (எந்த நம்பிக்கையில் என்று இன்றுவரை தெரியவில்லை),  காசு கொடுத்து ரஜினியின் கோமாளித்தனத்தையும், ஆக்ரோஷ அடி தடியையும், சிகரெட் வித்தையையும்  காண வந்த ரசிகர் கூட்டம் எதிர்பார்த்த எதுவும் இல்லாததால், (ஸ்ரீதேவி கூட  போர்த்திய புடவையோடு  படம் முழுவதும் நடித்திருப்பார்.) நரி போல ஊளையிட்டு படத்தை இரண்டே நாளில்  காலி செய்தது. படத்தில் துப்பாக்கி, திருட்டு,கொலை, போலிஸ் துரத்தல் என ஒரு ரஜினி படத்திற்கான  எல்லாமே உண்டு- சுவாரஸ்யம்  தவிர. கலைப் படம் எடுப்பவர் கையில் கொலைப் படத்தை கொடுத்தால் அவர் என்ன செய்வார்? இருந்தும் இன்றைக்கு ரஜினிகாந்த் சற்றேனும் ஒழுங்காக நடித்த படங்களில்  ஒன்று என்ற நல்ல பெயரும், சில மென்மையான காதல் காட்சிகளும்,  அருமையான பாடல்களும் அதைவிட கவர்ச்சி நாயகியாக பெயர் எடுத்த ஸ்ரீதேவி புடவை  நாயகியாக மிக கண்ணியமாக  நடித்த ஒரே படம் என்ற பெயரையும் பெற்றுள்ளது.

     காற்றில் எந்தன் கீதம் ஒரு ராக உலா என்றால், என் வானிலே ஒரே வெண்ணிலா ஐஸ் க்ரீம் சுவை. ஒரு இனிய மனது இசையை அலைத்துச்  செல்லும்,(ஜென்சி அழைத்து என்பதை அலைத்து  என்றுதான் பாடியிருப்பார்.) ஒரு வெண்மேகம்  என்றால் ஆசைய காத்துல தூது விட்டு ஒரு இடி மின்னல். இது தவிர சிநோரீடா ஐ லவ் யு என்று ஒரு உற்சாக கானம் உண்டு. இப்போது காற்றில் எந்தன் கீதம் தாண்டி மற்ற எதுவும் மனதில் தங்கவில்லை.

           ஏறக்குறைய இதே வரிசையில் வந்த ஒரு படம் ப்ரியா. எப்படி ஒரு கறுப்பின பையனான மைக்கல் ஜாக்சன் ஒரு வெள்ளைப் பெண்ணாக மாறினாரோ அதுபோல சுஜாதாவின் சுவாரஸ்யமான கதைக்கு ஏகப்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரி செய்து எதோ அமிஞ்சிக்கரையில் இரண்டு கோஷ்டிகளுக்குள் நடக்கும் ஒரு கைகலப்பு ரேஞ்சுக்கு கதையை  மாற்றியிருப்பார்கள். ப்ரியா என்ற ஒற்றைப் பெயருக்காக கதை சுஜாதா என்று டைட்டில் கார்டு காண்பித்து அவருக்குப்  பெருமை செய்திருப்பார்கள்.  பாடல்கள், இசை எல்லாமே மெட்ராஸை தாண்டாத வெகு லோக்கல் பாணியில் இந்தப் படத்தை சிங்கப்பூரிலா எடுத்தார்கள் என்று நினைக்கவைக்கும். அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே என்றொரு பாடல் மட்டும் ஒரு சுகம். (ஆனால் இதன் நதி மூலத்தை ஆராய்ந்தால் இது ஒரு மேற்கத்திய தழுவல் என்ற உண்மை நம்மைப் பார்த்து சிரிக்கும்.) மற்ற எல்லா பாடல்களும் வெகு எளிமையான வண்ணம் கொண்ட yet another typical mundane stuff  from Ilayaraajaa. டார்லிங் டார்லிங் டார்லிங் என்று ஒரு மேற்கத்திய வகைப் பாடலை நான் மிகவும் ரசித்துக் கேட்பதுண்டு இரண்டு வருடங்களுக்குப் பிறகு போனி எம் இசைக் குழுவினரின் sunny என்ற பாடலைக் கேட்கும் வரையில். இளையராஜாவினால் எம் எஸ் வி யின் மேற்கத்திய பாணி இசைக்கு ஈடு கொடுக்க முடியாத இயலாமையை இந்தப் படத்தில் அறிமுகம் செய்யப்பட்ட  ஸ்டீரியோ போனிக் என்ற கிம்மிக் சமன் செய்துவிட்டது.  ஸ்டீரியோ போனிக் என்றால் என்னவென்றே தெரியாத சில ஜென்மங்கள் இந்தப் புதிய தொழில் நுட்பத்தைப் பற்றி என்னென்னமோ கதை அளக்க, ("ரெண்டு ஸ்பீக்கர்ல ரெண்டு குரல் தனித் தனியா கேக்குது பாரு. அதான் ஸ்டீரியோ போனிக்.") சிறுவர்கள் வாய் பிளந்ததுதான் மிச்சம். அந்த போதையிலேயே ப்ரியாவின் பாடல்கள் உச்சத்திற்குப் போயின. இதைவிட உலகம் சுற்றும் வாலிபன், நினைத்தாலே இனிக்கும், சிவந்த மண் படப் பாடல்கள் அந்தந்த  மண்ணின் வாசத்தை  இசைப்  பிரதி எடுத்து அவைகளுக்கு அழகூட்டிய மந்திர கானங்கள். இதை நான் ஒரு சவால் போன்றே சொல்கிறேன். உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் எந்த ஒரு பாடலின்  அருகே கூட ப்ரியா படப் பாடல்கள் சற்றும் மழைக்குக் கூட ஒதுங்க முடியாது. 

    இது எப்படி இருக்கு? என்ற இந்தப் படத்தில் வரும் எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ  காயத்ரியின் காலைப் பனியில் ஆடும் மலர்கள் போன்ற பாடல்கள் மெல்லிய மேகம் ஒன்று முகத்தை உரசும் மெல்லிசைத் துளிகள். காயத்ரி படத்திலுள்ள வாழ்வே மாயமா வெறும் கதையா  பாடலின்  தாளம், சசிரேகாவின்(!) மிரட்சியூட்டும் குரலோடு இணைந்துகொண்டு நம் திகில் செல்களுக்கு  தீனிபோடும்.

    தர்ம யுத்தம் படத்தின் பாடல்கள் அடுத்து பெரிய வெற்றி பெற்றன. என் நினைவில் ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு, ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி இரண்டும் அந்தப் பழைய  ரேடியோ நாட்களை மீட்டுக்கொண்டுவரும் பல பாடல்களில் அடக்கம். ஆகாய கங்கையை  அதிக முறை ரேடியோக்களில் கேட்ட நினைவிருக்கிறது. ஆனால் புரியாத ஒன்று என்னவென்றால் ஒரு காதல் பாடலுக்கு எதற்காக மிக சோகமான இசையை பாடலின் ஆரம்பத்திலும் இடையிலும் கொடுக்க வேண்டும்? பாடல் சொல்லும் கருத்துக்கு ஏதுவான இசையை விட தனக்கு தோன்றியதை இசையாக படைப்பதே இளையராஜாவின் சிறப்பு. அவரது பல பாடல்களில் வரும் இடையிசைக்கும் சரணத்திற்கும் எந்தவித தொடர்பும் இருக்காது என்பதை அவர் பாடல்களை உன்னிப்பாக கேட்பவர்கள் அறிவார்கள். அவரது இடையிசையை நன்றாக கவனித்தால் முதலில் ஒரு குழல் அதைத் தொடரும் வயலின்கள் பிறகு சில கிடார் ஓசைகள் பின் மீண்டும் குழல் அல்லது வயலின் இசையோடு சடாரென்று சரணத்திற்குள் பாடல் அதிரடியாக படையெடுக்கும். சில சமயங்களில்  இந்த வயலின், குழல், கிடார் வாத்தியங்கள் அவ்வபோது இடம் மாறும். வெகு சில பாடல்களைத் தவிர இதுவே அவரது இசையின் வரைபடம்.

       ஹிந்தியில் மா என்று தர்மேந்திரா நடித்த படத்தை தமிழில் தேவர் பிலிம்ஸ் அன்னை ஓர் ஆலயம் என்று எடுக்க, ஜீப்பில் பெரிய துப்பாக்கியோடு உட்கார்ந்துகொண்டு ரஜினிகாந்த் காட்டு மிருகங்களை சினிமா வீரத்துடன் வேட்டையாடுவார். அதிலும் அவர் இரண்டு புலிகளை பிடிப்பதையெல்லம் இன்றைக்குப் பார்த்தால் படு தமாஷாக இருக்கும். இளையராஜாவின் இசை ஒன்றே சற்று சகித்துக்கொள்ளக்கூடிய அம்சம். நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியமாடுது என்றொரு அருமையான பாடல் இருக்கிறது. எஸ் பி பியின் அத்தனை மென்மையான குரலுக்கும்  அதற்கு ரஜினிகாந்த் காட்டும் முக பாவனைகளுக்கும் நீயா நானா என்று ஒரு போட்டியே நடக்கும்.  நந்தவனத்தில் வந்த குயிலே என்று  நாயகியை நாயகன் பகடி செய்யும் தமிழ் சினிமாவின் காதல் பாரம்பரியத்தை மீறாத பாடல் ஒன்று உண்டு.  டி எம் எஸ்  பாடிய அம்மா நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை என்ற பாடல் கொஞ்சம் நெஞ்சத்தை உருக்கும். இளையராஜாவின் முத்திரையான அம்மா பாடல்களுக்கு இதுவே முதல் விதை என்று நினைக்கிறேன்.  இதிலுள்ள இன்னொரு நல்ல பாடல் அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே. ரஜினியும் ஸ்ரீ ப்ரியாவும் குட்டி யானையை (உண்மையில் யானையைத்தான் குறிப்பிட்டேன்) சுற்றி வந்து பாடுவார்கள். படம் வந்த புதிதில் மதுரையில் சில கோவில் திருவிழாக்களில் காலை நேரங்களில் இந்தப் பாடலை அம்மன் பாடல்கள் ரேஞ்சுக்கு  சத்தமாக ஒலிபரப்பிய வேடிக்கையெல்லாம்  நடந்திருக்கிறது.   மேற்கத்திய இசை பின்னிப் பிணைந்த இளையராஜாவின் ஆரம்பகால  அதிரடி. சுசீலாவின் குரல் கேட்க வெகு சுகம். அவருக்காகவே நான் இந்தப் பாடலை பலமுறை ரசித்திருக்கிறேன். 

     காளி என்ற படம் சினிமாஸ்கோப்பில் எடுக்கப்பட்டு மண்ணைக் கவ்வியது. இதில் இரண்டு பாடல்கள் கேட்க நன்றாக இருக்கும். வாழும்  மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் என்று விஜயகுமார் ஓடும் காரில் பலவித சர்க்கஸ் குதியாட்டம் போட்டுக்கொண்டு பாடுவார். ரஜினியோ ரொம்ப சாந்தமாக உதடு பிரியாமல் புன்னகைத்துக்கொண்டே காரை ஓட்டிக்கொண்டிருப்பார்.  ரஜினியின் இந்த அலட்சியம் அப்போது எங்களை கவர்ந்தது. மற்றொரு பாடல் டாக்டர் கல்யாண், எஸ் பி பி இணைந்து பாடிய  ஆங்கிலத்தமிழ் பாடல். பெய்பி ஷேக்கிட்  பெய்பி என்று அதிரடியாக கல்யாண் ஆரம்பிக்க ஆர்ப்பாட்டமான மேற்கத்திய கிடார், ட்ரம்ஸ் வாத்திய இசைக்குப் பிறகு தித்திக்கும் முத்தம் ஒன்று அள்ளிக்கொடு என எஸ் பி பி பின் தொடர, வெட்டி வெட்டி ஆட வேண்டிய டிஸ்கோ நடனத்திற்கேற்ற  சரியான இசை.  சரணம் முடிந்து பல்லவிக்கு பாடல் திரும்பும் அந்த கணம் ஒரு உற்சாகத் தடவல். இதே படத்தின் அடி ஆடு பூங்கொடியே என்ற ஒரு பாசப் பாடல் அப்போது சற்று வெளிச்சம் கண்டது. 

 கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ என்ற மென்மையான கீதம் ஆறிலிருந்து அறுபதுவரை படத்தில் வந்தது. வானொலிகளில் அதிகம் கேட்கப்பட்ட பாடல்களில் ஒன்று.

   மீண்டும் கோகிலாவின் சின்னஞ்சிறு வயதில்  எனக்கோர் சித்திரம், ராதா என் ராதா என்ற இரண்டு பாடல்களும் பிரபலம் அடைந்தாலும் எனக்கு ஹேய் ஓராயிரம் ....மலர்களே மலர்ந்தது என்ற எஸ்  பி பி குழைந்து கொண்டு பாடும் அந்தப் பாடல்தான் விருப்பம்.

     அழகே உன்னை ஆராதிக்கிறேன் என்ற படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ஒலிப்பெருக்கிகளில் ஓயாது உரத்து ஒலித்தவை. அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க, குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை, சிறுசு ரொம்ப சிறுசு எளசு அம்மாடி எளசு (நான் படம் பார்த்ததில்லை. எனவே எதைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. அப்போதே ஆரம்பித்துவிட்டார் இளையராஜா தனது இசைப் "புரட்சியை".) பாடல்களைவிட நானே நானா யாரோதானா, என் கல்யாண வைபோகம் உன்னோடுதான் போன்ற பாடல்கள் தரமான இசை வடிவங்கள்.  தனிமையில் யார் இவள் என்றொரு பாடல் இருக்கிறது. பாடலின் துவக்கத்தில் வரும் சில ஓசைகளை வெட்டிவிட்டால் பாடலின் அருமையை எந்தவித தடங்கலுமின்றி ரசிக்கலாம். ஒரு நல்ல பாடலுக்கு எதற்காக தேவையில்லாத கேட்கவே கூசும் prelude என்று புரியவில்லை. ஆச்சர்யமாக இந்தப் படத்தில் வாணிஜெயராமை முழுமையாக பயன்படுத்தியிருந்தார் இளையராஜா.

      தைப் பொங்கல் படத்தில் இடம் பெற்ற கண் மலர்களின் அழைப்பிதழ், பனிவிழும் பூ நிலவே, தீர்த்தக்கரைதனிலே செண்பக புஷ்பங்களே பாடல்கள் கேட்க இனிமையானவை.

     சாமந்திப் பூவின்  ஆகாயம் பூமி என்றும் ஒன்றா? பாடல் அடிக்கடி சிலோன் வானொலியில் உலா வரும். பொன் மான தேடி நானும் பூவோட வந்தேன் பாடலோடு இதை தாராளமாக குழப்பிக்கொள்ளலாம்.

    ருசி கண்ட பூனை என்றொரு படத்தில்  அன்பு முகம் கண்ட சுகம் என்று இளையராஜா கொஞ்சம் நன்றாகவே பாடியிருக்கும் பாடல் ஒன்று இருக்கிறது. இதில்தான்  எஸ் ஜானகியை ஒரு  மிமிக்ரி பாடகியாக மாற்றிய  கண்ணா நீ எங்கே வா வா நீ இங்கே என்ற பாடல் உள்ளது. ஜானகி ஒரு குழந்தை போல பாடி அப்போது பலரது பாராட்டைப் பெற்றாலும் அவர் குரலில் துருத்திக்கொண்டு வெளியே தலைகாட்டும் செயற்கைத்தனம் இவருக்கு இதெல்லாம் தேவையா என்று எண்ணவைக்கும். பலர் இந்தப் பாடலை விரும்பவில்லை. இதே ஜானகி போடா போடா பொக்க (என்ன அரிதான தமிழ்!) பாடலில் ஒரு கிழவி போல  பாடியிருப்பார். இளையராஜாவின் இசையில் இவர் பாடியதோடு நின்றுவிடாமல், இப்படி மிமிக்ரி வேலைகள் செய்தும், முக்கி முனகி, விசேஷ சத்தங்கள் கொடுத்தும், கீச் என்று கத்தியும் பல புதுமைகள் செய்திருக்கிறார்.

     ஒரே முத்தம் என்ற ஓடாத படத்தில் அதிகம் அறியப்படாத ஒரு பாடல் இருக்கிறது. பாவையர்கள் மான் போல காவிரியின் நீர் போல. கவ்வாலி பாணியில்  இளையராஜா இசை அமைத்த ஒரே பாடல் இதுவாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. 65இல் வெளி  வந்த வல்லவனுக்கு வல்லவன் படத்தில் வேதா இசையமைத்த  பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம் பாடலின் சாயல் இதில் தெரியும்.

    இளையராஜாவின் 100வது படமாக வந்தது மூடுபனி. பாலுமஹேந்திரா சிகப்பு ரோஜாக்களையும், சைக்கோ என்ற ஹிட்ச்ஹாக்கின் படத்தையும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றாக கொட்டிக் கலந்து ரசிகர்களுக்கு ஒரு திர்ல்லர் விருந்தை வைத்தார். சிகப்பு ரோஜாக்கள் போலில்லாது  சற்று subtle லாக கதையின் போக்கு நகரும். சிகப்பு ரோஜாக்களை ரசித்த நம்ம ஊர் பெண்களுக்கு ஏனோ இந்தப் படம் பிடிக்கவில்லை. படத்தின் இறுதியில் நாயகன் பிரதாப் கிடாரை வைத்துகொண்டு  ஷோபாவை பார்த்து கிறங்கிப் போய் என் இனிய பொன் நிலாவே என்று பாடும் அந்தப் பாடல் இன்று வரை பலரது நினைவுகளில் ஒரு ரசாயன மாற்றத்தை உண்டாக்கி,  பல ஞாபகங்களை மீட்டிவிட்டுப் போகிறது. மறுபேச்சின்றி கிளாசிக் என்ற முத்திரை குத்திவிடலாம். பருவ காலங்களின் கனவு என்ற பாடல் அதிகமாக ஒலிபரப்பப்படாவிட்டாலும்  கேட்க நன்றாகவே இருக்கும்.

    கண்ணில் தெரியும் கதைகள் என்றாலே ஷங்கர் கணேஷின் நா ஒன்ன நெனச்சேன் என்ற பாடல்தான் முதலில் எட்டிப் பார்க்கும். கொஞ்சம் பின்னே பார்த்தால் நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே என்ற இளையராஜாவின் பாடலையும் காணலாம். படத்தின் அடையாளமாக இந்த இரண்டு  பாடல்கள்தான் இன்று நிலைத்திருக்கின்றன.

   நான் போட்ட சவால் என்றொரு படம் வந்து, உடனே யு டர்ன் அடித்து காணமல் போனது. சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தான் என்று ஒரு சுமாரான பாடல் உண்டு. அதைவிட நெஞ்சே உன் ஆசை என்ன? என்ற பாடல் கேட்க அமர்களமாக இருக்கும். அருமையான தடதடக்கும் இசையமைப்பில் டி எல் மகாராஜனின் குரலில் இந்தப் பாடல் ஒரு இனிமை. இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்திலும் இளையராஜா தனது பாணியை விட்டு விலகிய வேறு  இசையை கொடுத்திருப்பார்.

      நதியை தேடிவந்த கடல்  என்றொரு படம் எண்பதுகளில் வந்தது. ஜெயலலிதா நடித்த கடைசிப் படம் இது. இதில் தவிக்குது தயங்குது ஒரு மனது என்று ஜெயச்சந்திரன் பாடிய பாடல் உண்டு. படத்தில் ஜெயலலிதா காலை உடற்பயிற்சி செய்ய, நாயகன் சரத்பாபு ( அவர்தான் இவருக்கு ஜோடி! இப்போது இதை நினைக்கவே தயங்குது நம் மனது.) அவர் மீது மையலோடு பாடுவதாக காட்சி போகும்.

       இப்போது மிக முக்கியமான கட்டத்திற்கு வந்துவிட்டோம். எவ்வாறு நமது இசையின் ஒப்பனைகள் கலைந்தன என்பதை கீழே உள்ள ஒரு குறியீட்டுப் பாடல்  உங்களுக்கு விளக்கிவிடும்.

        பிரியமான பெண்ணை ரசிக்கலாம் என்ற வரியை பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம் என்று தவறாக பாடி உறவு முறைகளை கொச்சைப் படுத்தியதாக சில வருடங்களுக்கு முன் ஒரு பாடகர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதற்கும் முன் கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா இல்ல ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா என்ற பாடல் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டது. தமிழ்க் கலாச்சாரத்தை சிதைக்கும் பாடல்கள் என பல குரல்கள்  அப்போது கேட்டன. ஆனால் இதுபோன்ற சீரழிவின் முதல் வித்து எப்போது ஊன்றப்பட்டது என்று சற்று ஆராய்ந்தால், அந்தக்  கோடு நம்மை இளையராஜாவிடம் இழுத்துச் செல்கிறது.  இளையராஜாவின் இசையில்தான் இந்த ஆபாசம் அரங்கேறியது. இதை அவர் ஒரு பரிசோதனை என்ற அளவில் வைத்துக்கொள்ளாமல் ஒரு பாணியாகவே மாற்றிக்கொண்டார். இந்த ஆபாச டிரெண்ட் செட்டர் பாடல்கள் தமிழிசையின் ஆத்மாவை கேலி செய்து, எச்சில் துப்பி, புதைக்குழிக்குள் தள்ளி, அதன் மீது கல் நட்டு இனி என் ராஜ்யம்தான் என்று நாம் அறிந்திருந்த தரமான இசையை துவம்சம்  செய்தது.

            இளையராஜா அமைத்த adult songs அதாவது ஆபாச பாடல்கள் அவை வந்த சமயத்தில் பெருத்த கலாச்சார அதிர்வை கொடுத்ததும், ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு உட்பட்டதும் இன்றைக்கு பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. இன்று அவர் ஒரு சாமியார் தகுதிக்கு வந்துவிட்டதாலும் அவர் மீது பாய்ச்சப்படும் இந்த பாசாங்கான ஒளி வட்டமும் அவரை காட்டமாக விமர்சிப்பதிலிருந்து ஒருவரை தள்ளி நிற்க வைத்து விடுகிறது.  பலவிதமான மேற்பூச்சுகளுடன் அவரது ரசிகர்கள் அவ்வாறான பாடல்களுக்கு புதுவண்ணம் அடித்தாலும், புற்கள் பூண்டுகள் முளைத்த பழந்தமிழ் வார்த்தைகளைக் கொண்டு அந்த ஆபாசங்களை அழகுபடுத்தி அவற்றை குறித்து பத்தி பத்தியாக பொழிப்புரைகள்  எழுதினாலும் சில நிகழ்வுகளை காலம் பதிவு செய்தே இருக்கிறது.  அதன் மீது ஆயிரம் புல்டோசர்களை விட்டு ஓட்டினாலும் அது அழியப்போவதில்லை. அது போன்ற பல இழிவான பாடல்களிலிருந்து உதாரணத்திற்கு நான் ஒரு பாடலை மட்டுமே இங்கே குறிப்பிட இருக்கிறேன். மற்றவை மற்றொரு பதிவில் படையெடுக்கும்.

       1982இல் வந்த ஒரு திரைப் படம் கடல் மீன்கள். கமலஹாசன் இரட்டை வேடங்களில் வழக்கமான  அதிகப்பிரசங்கித்தனத்துடன் நடித்த yet another crap. இதில் தள்ளாடுதே வானம் என்றொரு நல்ல பாடல் இருக்கிறது. இதே படத்தில் இளையராஜா ரசிகர்கள் வசதியாக மறந்துவிட்ட   "கலாச்சார பெருமை" கொண்ட பாடல் ஒன்று உள்ளது.  இதை நான் என் நண்பனிடம் தெரிவித்தபோது ,"அப்படியா?" என்றான். அவனைப் போலவே இதைப் படிக்கும் பலருக்கும் தோன்றலாம். அது என்ன பாடல் என்ற கேள்வி எழும். பாடலின் முதல் வரி ஆண் குரலில்  இப்படி;"மதனி மதனி," உடனே பெண் ,"கொழுந்தா கொழுந்தா" ஆண் "மதனி மதனி மச்சான் இல்லையா இப்ப வீட்டுல?" பெண் "கொழுந்தா  கொழுந்தா எதுக்கு கேக்குற எதுவும் வேணுமா?"  அடுத்து வரும் வரி  நம் சமூகம் அறிந்திருக்கும்  உறவு முறைக்குள்  அதிர்ச்சி ஊசி செலுத்தும்.  " நா ராத்திரிக்கு துணையாக  வரலாமா?"  எதற்கு என்ற கேள்விக்கு இங்கே இடமில்லை. Pretty straight. உடனே அவள் சொல்வாள்; " ஹே உளறாத எனக்கொன்னும் பயமில்ல" ரொம்பவும் தைரியம். Highly adventurous.  ஆஹா இதுவல்லவோ தரமான நல்லிசை! நம்  பண்பாட்டைச் சொல்லும் அதி அற்புதப் பாடல்! சரணத்தில் பாடல் இன்னும் கொஞ்சம் அசைவமாக போகும்.

   மதனி என்ற பெயரையே அப்போதுதான் நான் முதல் முறையாகக் கேட்டேன். கேட்டதும் மதனி என்பது  தலையில் பானையைச்  சுமந்து பதனி விற்கும் ஒரு பெண்னைக் குறிக்கும் ஒரு சொல்  என்றுதான்  நினைத்தேன். அன்றைய சமயங்களில் சிறிய ஊர்களில் தினமும்  காலை வேளையில் சில  பெண்மணிகள்  பதனி விற்றபடி வருவது அன்றாட நிகழ்வுகளில் ஒன்று. மேலும் மதனிக்கும் பதனிக்கும் இயல்பாக இருக்கும் எதுகை மோனை சத்தம் என் புரிதலின்  மீது புகுந்து விளையாடிவிட்டது. வீட்டில் இதைச் சொன்னதும் புரையேறிய சிரிப்பலை  அடங்குவதற்குள் எனக்கு எரிச்சலைத் தாண்டி கோபம் வந்துவிட்டது. "சில இடங்கள்ள அண்ணியத்தான் மதனிம்பாங்க" என்ற விளக்கம் இன்னும் அதிகமாக  என் தலையை  சுற்ற வைத்தது. "அது எப்படி?" என்று குழம்பிப்போனேன். காதலர்கள் பாடும் ஒரு டப்பாங்குத்து பாடலுக்கு எதற்காக மதனி - கொழுந்தன் tag என்று எனக்குப் புரியவில்லை. என் குழப்பத்திற்கு பதில் வந்தது;  "கன்றாவிக் கழிசடையெல்லாம் கேக்கறத மொதல்ல நிறுத்து".

    கீழே இந்தப்  பாடலின் "கவிதை" உள்ளது. படித்துப் பாருங்கள். எழுதியது பஞ்சு அருணாசலம் என்ற "அரிதான" கவிஞர்.

மதனி மதனி,     கொழுந்தா கொழுந்தா
மதனி மதனி மச்சான் இல்லையா இப்போ வீட்டுல
கொழுந்தா கொழுந்தா எதுக்கு கேக்குற எதுவும் வேணும்மா
நா ராத்திரியில் துணையாக வரலாமா
ஹே உளராத எனக்கொன்னும் பயமில்லே

ஊரும் ஒலகம் எல்லாம் இதை பார்த்தா ஏதோ சொல்லும்
வாயு மனக்கும் பேசி பல வார்த்தையாலே கொல்லும்
யாரு சொன்னா என்ன
எங்க மதினிய போல இல்ல
யாரு சொன்னா என்ன
எங்க மதினிய போல இல்ல
ஊரு எல்லாம் ஹ ஹ ஹ ஹ ஊரு எல்லாம் தேடி பார்த்தேன்
உங்கள போல யாரு
ஓடி யாடும் சின்ன வயசு ஒரு குறையாச்சும் கூறு
ஆமாங்க எனக்கு ரொம்ப வெவரம் தெரியாத போதே மனமாச்சு
மதனி மதனி     கொழுந்தா கொழுந்தா
மதனி மதனி மச்சான் இல்லையா இப்போ வீட்டுல
கொழுந்தா கொழுந்தா எதுக்கு கேக்குற எதுவும் வேணும்மா

நாளும் மூணும் ஏழு ஆமா நமக்கும் நல்ல நாளு
நானும் உங்க ஆளு ஆமா எல்லாத்துக்கும் மேலு
அண்ணன் வீட்டு நெல்லு
எங்க அண்ண பொண்டாட்டி கையு
அண்ணன் வீட்டு நெல்லு
எங்க அண்ண பொண்டாட்டி கையு
ஹ ஹ எனக்கு ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
எனக்கு உன்ன பார்த்தா ஏதோ போல ஆச்சு
அள்ளி கட்டி நானும் சேர்க்க ஆசை மீறி  போச்சு
ஹ ஹ ஹ நெஜமா எனக்கும் ஒன்னு நெனப்பா இருக்குது சிரிக்காதீங்க
மதனி மதனி  கொழுந்தா கொழுந்தா
மதனி மதனி மச்சான் இல்லையா இப்போ வீட்டுல
கொழுந்தா கொழுந்தா எதுக்கு கேக்குற எதுவும் வேணும்மா
நா ராத்திரியில் துணையாக வரலாமா
ஹே உளராத எனக்கொன்னும் பயம்மில்லே
மதனி மதனி 
கொழுந்தா கொழுந்தா 


    இளையராஜா எதை கணக்கில் கொண்டு இந்தப் பாடலை அமைத்தாரோ தெரியவில்லை. மேலே மேலே சென்ற  வணிக வெற்றியின்  உற்சாகத்தில் அவருக்கு  வானமே வசப்பட்டு விட்டதைப் போல ஒரு உணர்வு வந்திருக்கலாம்.  இல்லாவிட்டால் இதுபோன்ற ஆபாசக் குப்பைகளுக்கு இளையராஜாவின்  முத்திரை கிடைத்திருக்காது. பாடல் வந்த சில நாட்களிலேயே இதற்கு  பலத்த எதிர்ப்பு கிளம்பியது. (நல்லவேளையாக எதிர்ப்பு வந்தது.  இல்லாவிட்டால் இளையராஜா இன்னும் பலவிதமான உறவு முறைகளுக்கு புரட்சி  மெட்டு போட்டிருப்பார். இதேபோல பயணங்கள் முடிவதில்லை படத்தின் ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா? பாடலுக்கும் மக்கள் மத்தியில் சலசலப்பு உண்டானது.) நெருக்கமான உறவு முறைகளை இளையராஜா கொச்சைப் படுத்துவதாக கண்டனக் குரல்கள் உக்கிரமான  டெசிபெலில்  ஒலிக்க, இந்தக் கலாச்சார எதிர்ப்பில் மதனி "மயிலு"வானாள். கொழுந்தா "குமரா" ஆனான். வேடிக்கையாக திரையில் மட்டுமே மயிலு, குமரா. ஆனால் வானொலிகளில் மதனியும் கொழுந்தனும் கலாச்சாரத்தை காலில் மிதித்து துவசம்சம் செய்தபடிதான் இருந்தார்கள். இப்போது கூட யு டியூபில் நீங்கள் அவர்களைத்தான் காண முடியும்.

       இதற்கு எப்படி இளையராஜாவை குற்றம் சொல்ல முடியும் பாடலை எழுதிய கவிஞர்தான் culprit என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம். உண்மைதான். பாதி உண்மை. ஆனால் வசதியாக இன்னொரு பாதியை மறந்துவிடுகிறோம். ஒரு பாடலில் எதை அனுமதிக்கவேண்டும் என்பது இசையமைப்பாளரின் முடிவில் இருக்கிறது. பாடமுடியாது என்று பாடகர்கள் மறுக்க அதனால் மாற்றப்பட்ட கவிதை வரிகள், மெட்டுக்குப் பொருந்தாத வரிகளை அங்கே இங்கே வெட்டி ஒட்டி அமைத்த பாடல்கள் போன்றவைகளைத் தாண்டி, இயல்பாக ஒரு இசையமைப்பாளருக்கு இருக்க வேண்டிய சமூக அக்கறை அல்லது  எதை பொதுவில் வைக்கவேண்டும் என்ற வியாபார நோக்கமற்ற சிந்தனை இளையராஜாவிடம் இல்லாதிருந்தது தமிழ் திரையிசையின் வீழ்ச்சிக்கு பாதை அமைத்தது. அதேசமயம்  நகைமுரணாக இளையநிலா பொழிகிறதே, அந்தி மழை பொழிகிறது  போன்ற பாடல்களுக்கு  பெரும்பான்மையானவர்கள் இளையராஜாவை மட்டுமே  பாராட்டுகிறார்கள்.  எழுதிய வைரமுத்துவை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இளையராஜா என்று வந்துவிட்டால் பாராட்டு மட்டும் அவருக்கு. திட்டு என்றால் இருக்கவே இருக்கிறார்கள் கவிஞர்கள், இயக்குனர்கள்.

       இசை என்ற ஒரு முழுமையான உணர்வின் சுவையை அம்மா அப்பா சகோதர சகோதரிகளுடன் ஒரே அலைவரிசையில்  அறியும் அந்த ஒருங்கிணைந்த மேலான அனுபவத்திற்கு இளையராஜா  தடுப்பான்கள் அமைத்தார். அவரின்  பல பாடல்களில் இந்தச் சுவர் நம் இசையின்பத்தை கூறு போட்டு அந்த மகத்தான  இசைப் பகிர்வை   தனித்தனித்  தீவுகளாக மாற்றியது. "இதெயெல்லாம் எப்படி வீட்டில சத்தமாக வெச்சுக் கேக்க முடியும்?" என்ற புதிய வகை இசை உண்டானது. "சீ இந்த கருமத்தையா கேக்கிற?" என்று பெரியவர்கள் சிறியவர்கள் மீது சீறி விழுந்த  பாடல்கள் உண்டாயின. இந்தப் பிரிவின் கீழ்  இளையராஜாவின் எண்ணிலடங்காப் பாடல்கள் வரிசை கட்டி நின்றன. அவற்றை நான் இங்கே குறிப்பிட்டால் பதிவின் சாராம்சம் திசை விலகிப் போய்விடும்.  மேலும் அது இப்போது எனது நோக்கமல்ல.

     கடலோர கப்சாக்கள் என்ற தலைப்பில் திரு சேட்டைக்காரன் என்பவர் இந்தப் பாடல்  பற்றி எழுதியிருக்கிறார். கீழ் வருவது அவருடைய எழுத்து.

இந்தப் படத்தில் ‘மதனி மதனி மச்சான் இல்லையா இப்போ வீட்டுலே? கொழுந்தா கொழுந்தா எதுக்குக் கேட்குறே?‘ என உடைபட்ட உறியடிப்பானைபோல இலக்கியரசம் சொட்டிய பாடலும், அதற்குக் கமல் ஆடிய விறுவிறு ஆட்டமும். அதிலும் ‘ஆஹா எனக்கு உங்களைப் பார்த்தா ஏதோ போல ஆச்சு’ என்ற வரிகளுக்கு உலகநாயகன் பிடிக்கிற அபிநயத்தைப் பார்த்துவிட்டு, அப்பாலிக்கா விஸ்வரூபம்கதக் டான்ஸ் பத்திப் பேசுங்கப்பா! இந்தப் பாடல் தமிழ்க் கலாச்சாரத்துக்கே இழுக்கு என்று அனைவரும் அல்சர் வந்தது போல ஆவேசமாகக் கத்தவே, நெல்லை, குமரி மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் மட்டும் ‘மயிலு மயிலு மச்சான் இல்லையா இப்போ வீட்டுலே?என்று பல்வலி, அதாவது பல்லவி மாற்றப்பட்டது.


     அதே சமயத்தில் இதே கடலோரப் பின்னணியில்   சில வருடங்களுக்கு முன் வந்த ஒரு படப்  பாடலை கீழே கொடுத்துள்ளேன்.  எம் ஜி ஆர் நடிப்பில் ஸ்ரீதர் இயக்கிய மீனவ நண்பன் என்ற படத்தின் பாடல் அது. பொதுவாக இந்தப் படத்தில்  தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து, நேரம் பவுர்ணமி நேரம் என்ற இரண்டு பாடல்கள் அதிகம் பிரசித்திபெற்றவை. நான் குறிப்பிடுவது அலைகளின் மீது ஆடிச் செல்லும் படகில் பயணம் செய்யும் தாலாட்டின்  உணர்வை கொடுக்கும் பாடல். இசை என்ற மந்திரத்தின் புரிந்துகொள்ள முடியாத வினோத அழகை மனதில் காட்சியாகக் காணும் ஒரு அற்புதப் பாடல். பொங்கும் கடலோசை தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே கொஞ்சும் தமிழோசை  என்று  வாணியின் குரலில் நம் நெஞ்சத்தை  அருவியின் தண்ணீர்த் துளிகள் போல நனைக்கும் கானம். இந்தப் பாடலின் இசையை ஒரு மகா இசைக் கலைஞனின்  வறண்டு போகாத கற்பனை ஒன்றே படைத்திருக்க முடியும். வேறு யார்? எம் எஸ் விஸ்வநாதன்தான்.  ஜலதரங்கம்  மற்றும் Xylophone வாத்தியங்களைக் கொண்டு எம் எஸ் வி ஒரு கடல் காட்சியை அதன் வனப்பு குறையாமல் இசையாக வடித்திருக்கிறார்  என்று தாராளமாக சொல்லலாம்.  தமிழில் இந்த Xylophone வாத்தியம் அதிகம் இசைக்கப்பட்டதில்லை. தண்ணீர்த் துளிகளின் ஓசைக்கு  இணையாக  இந்த இரண்டு வாத்தியங்களைக் கொண்டு எம் எஸ் வி பாடலில் வரவேண்டிய  சம்பிரதாயமான தபலா தாளக்கட்டை வியப்பான முறையில் சமன் செய்துவிடுகிறார். அதிகம் ஆராவாரம் இல்லாத பாடல். குளிர்ந்த நீர்த்துளிகள் மேனியின் மீது சிதறும் போது நமக்குக் கிடைக்கும் சிலிர்ப்பை  இதன் இசையில் நீங்கள் உணரலாம்.

    எழுபதுகளின் முடிவு மற்றும் எண்பதுகளில் இளையராஜாவின் graph மேல்நோக்கி எகிறிச்  சென்றுகொண்டிருந்தது. வர்த்தக வெற்றியைக் குறிக்கும் இந்தக் கோடு அவருக்கு கிரீடம் அளித்தது.  அவரது ராஜாங்கம் துவங்கியது. ஒரு தலைமுறையை மயக்கும் இசைக்கான  ஆயத்தங்கள் தென்பட ஆரம்பித்தன. இசையின் புதிய அத்தியாயங்கள் எழுதப்பட காத்திருந்தன. எல்லாம் இருந்தும் நமது இசையின் இந்த முக மாற்றம் ஒரு ஆழ்ந்த பெருமூச்சை நம்மிடம் உருவாக்குகிறது.  பழைய புகைப்படங்களை பார்க்கும்போது நமக்குத் தோன்றும் அந்த துயர உணர்வைப் போல. மீண்டும் பெற முடியாத நாம் இழந்துவிட்ட குழந்தைத்தனத்தை விரும்பும் உணர்வின் வலியைப்  போல.

    இளையராஜா மேலேதான் சென்றுகொண்டிருந்தார். ஆனால் கூடவே நமது தமிழிசையின் தரத்தையும் எடுத்துச் செல்ல மறந்துவிட்டாரோ என்று தோன்றுகிறது.
   








அடுத்து : இசை விரும்பிகள் XXVI  - எண்பதுகள்-  கவிதைக் காற்று.



Sunday, 29 March 2015

எதிர்பாராதவர்கள் -II

இசை விரும்பிகளின் இடையே இதுபோன்ற எதிர்பாராத பதிவுகளில் நான் சந்தித்த அல்லது கேள்விப்பட்ட ஆச்சர்யமான மனிதர்களைப் பற்றி எழுதுகிறேன். இதில் இசை கிடையாது. ஆனால் இசை தரும் அந்த உன்னதமான அனுபவம் உண்டு.




                      எதிர்பாராதவர்கள் -II 

     சில சமூக விழுமியங்கள் நமக்குக் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. அவை நம் மன ஆழத்தில் நமது டி என் ஏ அமிலங்களில் அமிழ்ந்திருந்து பிறகு ஏதோ சில   சந்தர்ப்பங்களில்  திடீரென்று தோன்றுவதற்காகக்   காத்திருக்கின்றன - ஒரு வானவில் போன்று
   
   இது நடந்தது வெகு சமீபமாகத்தான். கடந்த முறை மதுரை சென்றிருந்தபோதுதான் இது நிகழ்ந்தது. இதை விவரிக்கும் முன் இன்னொரு சம்பவத்தை குறிப்பிடவேண்டும். அது கீழே வருகிறது. பொதுவாக  நாம் சிலரைப் பற்றிய முன் முடிவுகளை சுத்தமான பொய்யினால் தயாரித்து வைத்துக்கொண்டு  "ஒன்னப் பத்தி எனக்குத் தெரியாதா?" என்ற திமிருடன் இருப்போம். ஆனால் நம் வாழ்வின் இயல்பான நகர்வில் தினமும் நாம் கவனிக்க மறந்த அல்லது விரும்பாத உண்மைகள்  கடந்து செல்லும்போது அவை நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. 

      ஒரு முறை சாலையோர அங்காடி ஒன்றில் நின்றிருந்தேன். அங்கே பொருட்கள் வாங்கியபடி இருந்த ஒரு பள்ளிச் சிறுமி தன் பின்னே சற்று தூரத்தில் நின்றுகொண்டு பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு தெரு ஓரத்து அழுக்கான பெண் குழந்தையை திரும்பித் திரும்பிப் பார்ப்பதும் சற்று அவசரப்படுவதாகவும் இருக்க இது எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது. தொடர்ந்து கவனித்தேன்.  சிறுமியின் முகத் தோற்றம் அந்தக் குழந்தை தன்னருகே வந்துவிடும் அந்த நிகழ்வை விரும்பாததைப் போலவே எனக்குத் தோன்றியது. "கொஞ்சம் மேட்டுக்குடி வகையறா போல" என்று எண்ணினேன். அந்தச் சிறுமி எதோ கான்வென்ட் ஒன்றில் படிக்கும் பெண் போலவே இருந்ததும் இதற்கு ஒரு காரணம். சிறிது நேரம் கழித்து  எல்லாவற்றையும் வாங்கிய பின் கடையைவிட்டு வெளியே நகர்ந்து சென்ற சமயத்தில்  அந்தச் சிறுமி செய்தது என் எண்ணங்கள், மதிப்பீடுகள் எல்லாவற்றையும் ஒரே நொடியில் தகர்த்துப் போட்டது.   சிறுமி தன் கையிலிருந்த ஒரு பார் சாக்லேட் ஒன்றை அந்தக் குழந்தையிடம்  கொடுத்துவிட்டு, "இந்தா வச்சுக்கோ" என்று தனது  கனிவான  குரலில், ஒரு தாய் போல சொல்லிவிட்டுச்   செல்ல, என் மனதில் ஆயிரம் ஆனந்த ஏவுகணைகள் பாய்ந்தன.  யதார்த்தத்தின் திடீர் சுகம். Compassion at its best.

       போன முறை மதுரை சென்றிருந்தபோது  இன்னொரு மனதைத்  தொடும் சம்பவம் என்னை உலுக்கியது. தினமும் மாலை மழை பெய்துகொண்டிருந்த ஒரு நாளில்  எதோ ஒரு காரணத்திற்காக பந்த் அறிவிக்கப்பட்டு பஸ்களின்  ஓட்டம் முடக்கப்பட்டிருந்தது.  மஞ்சள் ஆட்டோக்கள்தான் ஹாரிஸாண்டலாக சீறிப் பாயும் தீபாவளி ராக்கெட்டுக்கள்  போல பறந்துகொண்டிருந்தன. அதிலும் எப்படி உட்கார்ந்தாலும் உடலின் எதோ ஒரு பாகத்தில் வலியை உணரும்  உபத்திரவமான ஆனால் பத்து ரூபாய் கொடுத்து எங்கும் ஏறி இறங்கக்கூடிய வசதியான ஷேர் ஆட்டோக்கள் என்ற வஸ்துக்கள் அதிகம் தென்பட்டன. 

     மாலை நேரம். வீடு திரும்பவேண்டிய சம்பிரதாயம் என்னை கண்ணில் சிக்கும் வாகனங்களை நிறுத்தச் செய்தது. ஆனால் எந்த ஆட்டோவுக்கும் இரக்கமில்லை. கருணை மாதா துணை என்று பெரிய எழுத்துக்களில் பவனி வந்த ஒரு வாகனம் கூட என்னைக்கண்டு கருணையில்லாமல்   தெறித்து ஓடியது.  அப்போது   நான் நின்றுகொண்டிருந்த டீக்கடையருகே அசந்தர்ப்பமாக ஒரு ஷேர் ஆட்டோ வர, நான் அந்த ஓட்டுனரை "சவாரி உண்டா?" என்று கேட்டேன். அவன் சொல்லக்கூடிய பதிலை நானே மனதில் தயாரித்துவைத்திருந்தேன். ஆனால் நடந்தது வேறு.  "எங்க?" என்றான் அவன். என்னை விட சிறியவன்தான். சொன்னேன். "கொஞ்சம் இருங்க. ஒரு தம் போட்டுட்டு வந்துர்றேன்.. காலைல இருந்து ஒரே சவாரி" என்று அலுத்துக்கொண்டான்.  ஒரு டீ சொல்லிவிட்டு   அந்த கடையில் ஒரு நீள் வெண்  குழல் வாங்கி அந்தக் கடைக்காரரிடம் புகை, புகையாக பேச ஆரம்பித்தான். எனக்கும் விரைவாகச் செல்லவேண்டிய அவசரமோ, அவசியமோ இல்லை என்பதால் அவர்கள் பேசியதை கேட்டுக்கொண்டிருந்தேன். ஏன் பந்த் என்ற புள்ளியிலிருந்து   அவர்கள் அரசியல் கட்சிகளைச் சாடி சினிமா என்று தாவி, பிழைப்பு என்ற யதார்த்தத்துக்கு வர ... 

      ஒரு வயதானவர் தன் குடும்பம் சகிதமாக நிழற் குடையின் கீழ் வந்து நின்றார். நின்றவர்  புகையையும் தேநீரையும் ஒரு சேர விழுங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்து ," ஆரப்பாளயத்துக்கு இங்கேருந்து எவ்வளவு ஆகும்?" என்றார். "ஒரு 120 ரூபா." என்றார்  கடைக்காரர். "அதுவும் இன்னைக்கு பந்த்னால 150 ரூபா கூட கேப்பானுக" என்றான் அந்த ஆட்டோக்காரன். "சரிதான். இவனும் என்னை கை கழுவப் போகிறான்" என்று என் உள்ளுணர்வு என்னக்கொரு அவசர  குறுஞ்செய்தி அனுப்பியது. 

      "சும்மா தெரிஞ்சுக்கறதுக்காகத்தான் கேட்டேன். அதிகமா குடுத்துறக் கூடாதுல்ல?" என்றார் அந்தப் பெரியவர் மிக முன்னெச்சரிக்கையாக. அடுத்து நடந்தது நானே எதிர்பார்க்காதது. அந்த ஆட்டோக்காரன் அவரிடம் சொன்னான்:"அதோ அங்க எதுத்தாப்ல ஒரு ஆட்டோ நிக்குது பாருங்க அதுல ஏறிக்கங்க. எனக்கு வேற சவாரி இருக்கு." இதைச் சொல்லிவிட்டு அவன் அந்த வெண் குழலை  இறுதியாக ஒரு இழுப்பு இழுத்துவிட்டு பணம் கொடுத்துவிட்டு,... "போடா முட்டாப்பயலே" என்ற கடைக்காரரின் குரல் அவனை சற்றும்  பாதிக்கவில்லை.  என்னைப் பார்த்து ,"வாங்க போலாம்." என்றான் எதோ திருமண விருந்துக்கு செல்லும் நண்பனைப் போல. 

       எனக்குத்  திகைப்பாக இருந்தது. "நீயே போகவேண்டியதுதானே? 150 ரூபாய வேணாம்ன்னு போறியே?" என்று அந்த கடைக்காரர் அவனைத் திட்டினாரா இல்லை வியந்தாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தேன். அவனிடம் கறாராக சொன்னேன்:"பத்து ரூபாதான்." அவன் என்னைப் பார்த்து, "ஆமா.பத்து ரூபாதான்" என்று எதிரொலித்தான்.  வண்டி கிளம்பியது.

        மற்ற ஷேர் ஆட்டோக்கள் போலில்லாமல் இது பிய்ந்து போகாத குஷன் சீட்டுகள், பிடிக்கும் கையை என்னைத் தொடாதே என்று கிழிக்காத இரும்பு கம்பிகள் என வேறு தரத்தில் இருந்தது. அவன் டேப் போன்ற எதோ ஒன்றில் ஒரு பட்டனைத் தட்ட, "நீ காற்று நான் மரம் நீ என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்" என்று ஹரிஹரன் அந்தச் சூழலுக்குப்   பொருத்தமில்லாமல் மனதுருகினார். நல்ல கவிதையான கானம்தான். சிறப்பான மெல்லிசை. ஆனால் அதை ரசிக்க முடியாத குலுங்கல்கள். 

        அடுத்து வந்த இரண்டு நிறுத்தங்களில் அவன் வண்டியை நிறுத்திவிட்டு அது போகுமிடத்தைச்  சொல்லி, இன்னும் சில ஆட்களை அழைத்தான். யாரும் ஏறவில்லை. அவன் செயல் எனக்கு  ஆச்சர்யம் அளித்தது. கடைசியில் அந்த ஆட்டோவில் என்னைத்தவிர வேறு எந்த நபரும் பயணம் செய்யவில்லை. எனக்குள் அந்தக் கேள்வி குடைந்தது.  அவனைக் கேட்டேன்: 
 "எதுக்கு அந்த ஆரப்பாளயம் சவாரிய வேணாம்னு சொன்னீங்க? 150 ரூபாய விட்டுட்டு வெறும் பத்து ரூபாய்க்கு என் இப்படி?"

     என் பக்கம் திரும்பாமலே வண்டியை ஒட்டிக்கொண்டே அவன் பேசினான்: "ஷேர் ஆட்டோ வந்ததுக்கப்பறம் எல்லாருமே எங்க வண்டியிலதான் ஏற்றாங்க. சாதாரண ஆட்டோல யாரும் போறதில்ல. இன்னைக்கு பாருங்க. பந்த். இன்னக்கும் எங்க ஆட்டோதான் ஓடுது. பாத்தீங்கல்ல எனக்கே சவாரி கிடைக்கல.  இன்னக்கு ஒரு நாளாவது மத்த ஆட்டோகாரங்க ஏதாவது சம்பாதிச்சுக்கட்டுமே. இன்னக்கு நாள் பூரா ஓடி பத்து பத்து ரூபாயா சம்பாரிச்சு அதுக்கு மேலயும் 150 ரூபாய்க்கு நான் ஆசப்பட்டா அது சரியா?" எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஆச்சர்யம் மின்சாரம் போலத் தாக்கியது. பொதுவாக ஆட்டோக்காரர்களின் அட்டூழியங்கள் என்றே போதிக்கப்பட்டு வந்த நடைமுறை உலகில் அவன் சொன்னதும்  செய்ததும்  மிகக் கனமான போற்றுதலுக்குரியவை. இதையே சினிமாவில் நமது கதாநாயகர்கள் ஏகப்பட்ட ஆயத்தங்களுகுப் பிறகு எந்தவித மனித நேயமுமின்றி அந்த வாரத்தைகளின் பின்னாலிருக்கும் கைத்தட்டல்களை கணக்கிட்டு வரவிருக்கும் தங்களின் வணிக வெற்றியின் போதையில் சொல்லும்போது அவர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பை எண்ணிப்பார்த்தேன். 

    "வெரி குட்." என்றேன். அவனை மேலும்  பாராட்ட நான் வார்த்தைகளை சேகரிக்கும் முன்  அவன் சொன்னான்;  "அவங்களும்தான் பொழச்சுக்கட்டுமே சார்."

Compassion at its best. Life is made of small things, they say. No, not just small things but small good things.

    என் இடம் வந்ததும் இறங்கும்போது மேகம் சூழ்ந்த வானம் என் கண்ணில் பட்டது. அந்த பயணத்திற்கான பத்து ரூபாயை அவனிடம் தரும்பொழுது சொன்னேன்: "உங்களைபோல ஆளுங்களாலதான் இன்னும்  மழை  பெய்யுது."  மிக சம்பிரதாயமான வார்த்தைகள்தான். ஆனால் அதுதான் அப்போதைக்கு மிகவும் அர்த்தமுள்ளதாகத் தெரிந்தது எனக்கு. 



          
அடுத்து: இசை விரும்பிகள் XXV - உடைந்த ஒப்பனைகள்.